Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 199

4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவு ஒரு கண் துடைப்பா? | எஸ்.சிவக்குமார்

4-ஜி சேவைக்காக CDOT/TCS நான்-குவாலிஃபைடு ட்ரயல் 4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள கண்துடைப்பு உத்தரவு, நீண்ட காலமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட BSNL நிறுவனத்தின் வளர்ச்சி மாற்றத்தை நிச்சயமாகச் சிக்கலில் (இறுதியான வாட்டர்லூ போரில்) ஆழ்த்தப் போகிறது.
BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் – விருப்ப ஓய்வுத் திட்டம் 2019 மற்றும் 4-ஜி உள்ளிட்ட – ரூ.70 ஆயிரம் கோடி BSNL புத்துயிர்ப்பு தொகுப்புத் திட்டத்தை 2019 அக்டோபரில் ஒப்புக்கொண்டனர். லாபம் ஈட்டும் ஆரோக்கியமான பொதுத்துறை நிறுவனமாக (எதிர்காலத்தில்) BSNL தழைக்கும் என்றும், அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 3-வது ஊதிய மாற்றத்தைப் பெறுவார்கள் என்றும் ஒவ்வொருவரும் நம்பினர். துரதிருஷ்டவசமாக விருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ரூ.8500 கோடி அளவுக்கு BSNL-க்கு (அரசின்) இறையாண்மை உத்தரவாதம் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.
இப்போதும் கூட நிறுவனம் மிகவும் கடினமான காலத்தைக் கடந்து வருகிறது, கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புத்துயிர்ப்புத் திட்டத்தால் கிடைத்த ஒரே ஆதாயம், நிதியாண்டு 2019 – 2020-ல் நிறுவனம் அடைந்த ரூ.15,000 கோடி நட்டத்திலிருந்து 2020 – 2021 நிதியாண்டில் நட்டம் ரூ.7,500 கோடி எனப் பாதியாக குறைந்ததுதான். நட்டத்தின் இந்த மேஜிக் வீழ்ச்சி, விருப்ப ஓய்வு திட்டம் 2019-ன் காரணமாக நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் பாதி, அதாவது 78,569 ஊழியர்கள், விருப்ப ஓய்வைத் தேர்வு செய்ததே ஆகும். அப்படி அந்த 50% ஊழியர்கள் விருப்ப ஓய்வு குறித்து முடிவு செய்யாது இருந்திருப்பின், இந்நேரம் நிறுவனம் ஒரேயடியாக மூடப்பட்டிருக்கும்.
படிக்க :
பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !
ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்கான நான்கு அளவுகோல்கள் 1) லாபம்/நட்டம்  2) வருவாய்  3) நிறுவனத்தின் நிகர மதிப்பு மற்றும் 4) அதன் கணக்கில் உள்ள கடன். அந்த வகையில் மதிப்பிட, மிகக் கடுமையாக ரத்தம் வடிக்கும் நிலையில் BSNL இருப்பதைச் சுட்டிக் காட்டுவதுடன் BSNL எதிர்காலமும் நம்பிக்கை தருவதாக இல்லை.
(1) நட்டம் : நிறுவனம் நாள் தோறும் 20 கோடிக்கு மேல் நட்டத்தில் நடக்கிறது; வி.ஆர்.எஸ் அமலாவதற்கு முன் தினசரி நட்டம் ரூ.40-லிருந்து ரூ50 கோடிக்கு மேல் இருந்தது.
(2) வருவாய் : நிறுவனத்தின் செயல் இயக்கங்களிலிருந்து வருமானம் (ஆப்பரேஷனல் ரெவின்யு) நிதியாண்டு 2019 – 2020-ன் வருமானமான ரூ.18,906.56 கோடியை ஒப்பிட, நிதியாண்டு 2020 – 2021-ன் வருவாய் மாதம் தோறும் 1500 கோடியுடன், 1.6% குறைந்து ரூ.18,595.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு 2021 – 2022-ன் வருவாய் ரூ.17 ஆயிரம் கோடி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இது அபாயகரமான அளவு குறைவானதாகும்.
(3) நிகர மதிப்பு : BSNL நிறுவனத்தின் நிகர மதிப்பு அதற்கு முந்தைய நிதியாண்டில் இருந்த ரூ.59,139.82 கோடியிலிருந்து கீழே இறங்கி 2021 நிதியாண்டின்போது ரூ.51,686.8 கோடியாக குறைந்துள்ளது. நிறுவனத்திற்குப் புதிய மூலதனம் செலுத்துதல் எதுவும் இல்லை என்பதால், நிறுவன நிகர மதிப்பு நிதியாண்டு 2022-ன் இறுதியிலும் கூட மேலும் கீழிறங்கவே செய்யும்.
(4) கடன் : 2019 – 2020-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடன் ரூ.21,674.74 கோடி. இக்கடன் 2020 – 2021-ம் நிதியாண்டில் அதிகரித்து ரூ.27,033.6 கோடியாகியுள்ளது. இப்போது கடன் ரூ.32 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4-ஜி தொழில்நுட்ப சேவை:
இந்தியாவில் முதன் முதலாக 4-ஜி தொலைத்தொடர்பு வலைப்பின்னல் ஏர்டெல் நிறுவனத்தால் 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் நெட்ஒர்க்கில் 4-ஜி கிடைப்பதற்கு மேலும் இரண்டாண்டு ஆகி, ஏர்டெல் நிறுவனம் 2014-ல் 4-ஜி மொபைல் நெட்ஒர்க்கைத் தொடங்கியது. செய்தி நிறுவனங்களின் தகவல்களின்படி, நமது அரசு 5-ஜி அலைக்கற்றை ஏலத்தை 2022-ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது; மேலும், அடுத்த தலைமுறை கம்பியில்லா பிராடு பாண்டு நெட்ஒர்க்ஸ் 5-ஜியை பின்னர் 2023-ல் வெளிவிடவும் திட்டமிட்டுள்ளது. (இந்தியாவில்தான் டெட்டா மிகவும் குறைவான கட்டண விகிதத்தில் கிடைக்கிறது என நமது பிரதமர் வெளிநாடுகளில் பெருமிதத்துடன் கூறினார்.)
இந்நிலையில் இந்தக் காட்சி நகைமுரணாகத் தோன்றலாம், இந்தியாவில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்த பிறகும், இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு 4-ஜி சேவை அளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை – அதே நேரம் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வெளிநாட்டு மொபைல் கேரியர்கள் இந்தியாவிற்கு 5-ஜியை திணிக்க தயாராக இருக்கிறார்கள். (ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு?)
உலகம் முழுமையும் 5-ஜி மற்றும் அதற்கு மேல் உள்ள தொழில்நுட்பங்களுக்கு மாறி நகர்ந்து வரும்போது, 4-ஜி என்பது காலம் கடந்த, வழக்கொழிந்த பழைய தொழில்நுட்பமாகி விடும். எனினும் 4-ஜி, BSNL நிறுவனத்திற்கு லாபம் அளிக்கும் செயல்பாட்டிற்குரிய களமாகவே இருக்கும்; ஏனெனில் இன்றைய நிலையில் 3-ஜி சேவையுடன் ஒப்பிட, சி.எம் வெர்ட்டிகல் சேவையிலிருந்து BSNL 15 மடங்கு வருவாயை பெற முடியும்: காரணம் 3-ஜி மாதிரியான தொலைபேசியால் இணைய தளத்தை அதிகபட்சம் 21Mbps வேகத்தில் மட்டுமே இணைக்க முடியும்; அதுவே 4-ஜி போன், தியரிபடி அதிகபட்சம் 300 Mbps வேகத்தில் இணைக்க முடியும்.
தற்போது BSNL 6 ஆயிரம் 4-ஜி BTS (பேஸ் டிரான்ஸ் – ரிசிவர் ஸ்டேஷன்) வாங்குவதற்காகப் பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் (PO) வெளியிட்டுள்ளது. இந்த BSNL உத்தரவு வெறும் கண் துடைப்பு என்பதைத் தவிர வேறில்லை? மார்ச் 2020-ல் டெலிகாம் கருவிகள் வாங்க ரூ.9,300 கோடி மதிப்புள்ள 4-ஜி டெண்டர் வெளியிட்டது; பின்னர் இந்த 4-ஜி டெண்டர் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சாய்ந்து இருப்பதாகக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.
அதிகாரத்தில் உள்ள சில தன்னலக் குழுக்கள், அரசு பொதுத்துறை நிறுவனம் 4-ஜிக்காக வெளிநாட்டு கருவிகளை நாடி செல்ல முடியாது என்ற கருத்தை முன்வைத்தன; அது நமது நாட்டிற்கு எதிரான மோசமான வணிகச் செயல்பாடு; சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக நமது நாட்டின் நலனைப் பாதுகாக்க… என்றெல்லாம் கதைத்த அதே அதிகார வர்க்கத் தன்னலக் குழு நமது நாட்டின் எல்லைகளில் 4-ஜிக்காக வெளிநாட்டுக் கருவிகளை வைத்துக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை அனுமதித்தது – அதுவும், யூ.எஸ்.ஓ நிதியிலிருந்து அரசு நிதி வழங்கி. இது, ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவான, அரசு பொதுத்துறை நிறுவனத்தின் நலன்களுக்கு எதிரான தன்னலக் குழுவின் அப்பட்டமான இரட்டை நிலைபாடு.
அடுத்து, 2020 அக்டோபர் 31-ல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 4-ஜி சேவைக்காக, 57 ஆயிரம் சைட்களுக்குக் கருவிகள் வாங்க டெண்டர் வெளியிட்டது; அதில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் என்ற வகையில் (கோர் ஸ்விட்சுக்காக) CDOT, (மென் பொருளுக்காக) TCS மற்றும் (டிரான்ஸ்போர்டேஷனுக்காக) Tejas நிறுவனங்களிடமிருந்து ‘‘ஆத்மநிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா) திட்டத்தின்கீழ் டெண்டர் கோரப்பட்டது. இப்படி ‘‘ஆத்மநிர்பார் பாரத்” கீழ் 4-ஜி சேவை தருவதற்குக் கால்கோள் நடத்தப்பட்டதிலிருந்து நல்லது நடக்க வேண்டும் என நாம் நம்புவோம், அதற்காகப் பெருமையுடன் காத்திருப்போம்!
4–ஜிக்கான பர்ச்சேஸ் ஆர்டர் குறித்து நமது சில சந்தேகங்கள்
1. எலெக்ட்ரானிக் தொலைபேசியகங்களின் சகாப்தத்தின்போது, CDOT-டுடன் BSNL-ன் அனுபவம் பாராட்டும்படி இருந்தது, அதன் காரணமாகவே நாம் OCB 283, 5ESS போன்ற வெளிநாட்டு ஸ்விட்ச்களுக்காக சென்றோம். திறனற்ற CDOT NGN, ஹுவாய் மற்றும் யுடிஸ்டார்காம் போன்றவற்றை விட செயல்திறனில் பின்தங்கியே இருந்தது. வெளிநாட்டு ஸ்விட்ச்களுடன் ஒப்பிட CDOT ஸ்விட்ச்களின் மின் பயன்பாட்டு நுகர்வு மிகவும் அதிகம்.
2. உடனடியாக 6000 டவர்களுக்கும், பின்னர் மேலும் 6000 டவர்களும் BSNL உத்தரவிடும் நிகழ்முறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். இப்படி இறுதியில் மொத்தம் ஒரு லட்சம் டவர்களுக்கும் அதிகமாக – அதாவது, 1.12 லட்சம் டவர்களுக்கான 4-ஜி பி.டி.எஸ்.கள் பெறுவதற்காக உத்தரவு வழங்கப்படும் எனத் தெரிய வருகிறது. (இவ்வாறு 1.12 லட்சம் 4-ஜி பிடிஎஸ்-கள் வாங்க உள்ள) BSNL-ல், அறிக்கைகளின்படி, சுமார் 70 ஆயிரம் டவர்கள் மட்டுமே உள்ளன. தேவைக்கும் அதிகமாக மீதம் உள்ள 4-ஜி பிடிஎஸ்களை என்ன செய்யப் போகிறோம், அவற்றைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கான திட்டம் குறித்தும் எதுவும் தெரியவில்லை.
3. 4-ஜி சேவை அளிக்கும் டவர்கள் ஃபைபர்மயமாக்கப்படுவது கட்டாயமாகும். பெரும்பான்மையான BSNL டவர்கள் ஃபைபர் கேபிள் (கண்ணாடி இழை கேபிள்) இணைப்பு பெறாதவை மற்றும் ஒர்க் ஆன் இ-1 அல்லது மைக்ரோ வேவ் டவர்களாகும். அதற்கான மூலதனம் மற்றும் செயல் திட்டம் தற்போதைய திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
4. தேவையான அடிப்படை கட்டமைப்பின் பற்றாக்குறை / குறைபாட்டின் காரணமாக நமது சில பிடிஎஸ்கள், மின்சாரம் தடைபடும்போது, ஏற்கனவே அணைக்கப்பட்டு விடுகின்றன; இதே நிலை 4-ஜி சேவைக்குப் பிறகும் தொடர்ந்தால், அது BSNL நிறுவனத்திற்கு அழகன்று, வாய்ப்புள்ள வருங்கால வாடிக்கையாளர்களும் BSNL-ஐ விட்டு விலகி விடுவர். அடிப்படை கட்டமைப்பு தர-மேம்பாட்டிற்குத் தேவையான மூலதனம் குறித்த யோசனை எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
5. சண்டிகார் / அம்பாலா நகர்களில் பரிசோதனை முயற்சியாக நிறுவப்பட்டுள்ள CDOT/TCS தொழில்நுட்பத்தின்  4-ஜி ப்ரோடோ டைப் பிடிஎஸ் களிலிருந்து நூற்றுக் கணக்கான தொழில்நுட்ப / செயல்திறன் குறைபாடுகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குறைபாடுகளில் எவ்வளவு குறைபாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டன என்பது யாருக்கும் எதுவும் தெரியாது.
6. CDOT/TCS சிஸ்டத்தில் CISCO ரௌட்டர்களுக்கான சிப்-கள் பெறுவதற்குச் சுமார் ஒரு வருடம் காத்திருப்புக் காலம் (வெயிட்டிங் டைம்) இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
பல காரணங்களால் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தற்போதைய BSNL சேவையில் அதிருப்தி அடைந்துள்ளர்; இந்நிலையில் 4-ஜிக்கு ஆர்வமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4-ஜி சேவையை அனுபவிக்கத் தயாராக உள்ளபோது, BSNL தரமான 4-ஜி சேவையை வழங்க வேண்டும்; தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கும் 4–ஜி (சஸ்டைன்டு 4-ஜி), BSNL நிறுவனம் நிலைத்து நிற்கவும், BSNL வளர்ச்சி மாற்றத்திற்கும் நல்லது.
படிக்க :
பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !
4-ஜி சோதனை சைட்டுகளுக்காகப் பர்ச்சேஸ் ஆர்டர் சமர்ப்பித்துள்ள BSNLன் செயல்பாடு புரிந்து கொள்ளக்கூடியது. 4ஜி/ 5ஜி மிகவும் நுட்பமான மேம்பட்ட தொழில்நுட்பம். எனவே CDOT/TCS 4G சிஸ்டங்களின் சேவைத் தரத்தை (க்வாலிட்டி ஆஃப் சர்வீஸ்) பரிசோதிக்காமல், தற்போது நெருக்கடியான காலத்திலும், 4-ஜிக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டுமிருக்கும் BSNL, பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் வழங்கி இருக்கக் கூடாது. சாதாரணமாக BSNL போன்ற எந்த அமைப்பும் தேசிய அல்லது சர்வதேசிய முகமைகளால் பரிசோதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் தரமான உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே பர்ச்சேஸ் ஆர்டர்கள் வழங்கும். (ஆனால் BSNLல் தற்போது அவ்வாறு நடக்கவில்லை)
BSNL டவர்களுடன் BSNL கட்டமைப்பைப் பயன்படுத்தி தங்களின் பரிசோதனைகளை நடத்த CDOT/TCS நிறுவனங்களை அனுமதிக்கலாம்; அப்படிச் செய்வதற்குத் தேவையான காலத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு, 4-ஜியுடன் நிலைப்படுத்தி, தங்களின் 4-ஜி சிஸ்டம் தரமான உற்பத்திப் பொருள்தான் என நிரூபித்து அவற்றை BSNL-ல் புகுத்தலாம். சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் ’CDOT/TCS நிறுவனங்களால் நடத்தப்படும் 4-ஜி பரிசோதனை’ என்ற பெயரைத் தவிர BSNL-ன் பெயர் எங்கும் பயன்படுத்தப்படக் கூடாது. (இந்தப் பரிசோதனை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தரமான சேவையாக இல்லாது போகுமானால் அதனால் ஏற்படும்) வாடிக்கையாளர்களின் அதிருப்தி BSNL நிலைத்திருப்பதற்கு கேடு நேர்வதாகிவிடும்; BSNL பெயரில் அவர்கள் அளிக்கும் இந்த 4-ஜி சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர்களின் கோபம் அதிகரிக்கத் தொடங்கும். பர்ச்சேஸ் ஆர்டர்களால் கிடைக்கும் தரமில்லாத 4-ஜி சிஸ்டத்தைப் பயன்படுத்தி அடுத்து BSNL அளிக்கும் 4-ஜி சேவை, எதிர்காலத்தில் நம்மை நாடிவர நினைக்கும் வாடிக்கையாளர்களையும் மேலும் அதிருப்தியுறச் செய்யும்.
மேலே விவரித்த காரணங்களால், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்படுத்துநர்களான CDOT/TCS நிறுவனங்கள், பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!
கட்டுரையாளர் : எஸ்.சிவக்குமார்
மேனாள் பொதுச் செயலாளர், AIBSNLEA
தமிழாக்கம் : நீலகண்டன்
என்.எப்.டி.இ, கடலூர்.

திராவிட மாடலின் இந்துராஷ்டிரா | கருத்துப்படம்

மிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடத்தும் ஆட்சியை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவாதங்களில் தேசிய மாடலாக ஒரு தரப்பினரும் திராவிட மாடலாக ஒரு தரப்பினரும் பிரிந்து விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் கஞ்சா வியாபாரி, சத்குரு நடத்திய சிவராத்திரி போட்டியாக சென்னை மயிலாப்பூரில் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட சிவராத்திரி விழா, தருமபுர ஆதீன விவகாரத்தில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி அளித்தது, சென்னை ஆவடி அருகே பசுமடம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்தது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி ஹிஜாப் அணிந்து 11-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி மறுத்தது போன்றவை சங் பரிவாதத்தின் திட்டங்கள் நடைபெற்றுள்ளது.
திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்த கருத்து படம்.

‘திராவிட மாடல் ஆட்சி’யில் அரங்கேறும் சங் பரிவாரின் திட்டங்கள் ! | கருத்துப்படம்


கருத்துப்படம் : வேலன்

தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !

2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதை நுட்பமாக செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். 2025-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டாகும். அதற்குள் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
மோடி ஆட்சியின்கீழ் போலீசு, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் – பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதுவரை காணாத அளவிற்கு நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கடந்த 2018-ல் பீகாரில் நடந்த கூட்டமொன்றில், “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களைத் தயார்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை இராணுவமாகத் தயார்படுத்திவிடுவோம் அதுதான் நம்முடைய திறமை” என்று பேசினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
படிக்க :
எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம் !
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சிக் காலத்திலிருந்தே இராணுவத்திற்குள் ஊடுருவி அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமாக இருந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களுள் ஒருவரான மூஞ்சே, 1935-ம் ஆண்டிலேயே இராணுவத்தை இந்தியமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பெயரில், மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை நாசிக்கில் நிறுவினார். 1937-ம் ஆண்டு பொன்சாலா இராணுவப் பள்ளியை நிறுவினார்.
போலி சுதந்திர காலத்திற்கு பின்பு, பல தருணங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்திய இராணுவத்தின் ஒரு துணைப்பிரிவாகவே கருதி நடத்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் போரில் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு இராணுவம் பயிற்சியளித்திருக்கிறது. 1962-ல் நடைபெற்ற இந்திய – சீனப் போர் மற்றும் 1965-ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சிவில், இராணுவ வேலைகளில் பங்குபெற்றிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பேரிடர் கால பணிகளின்போது இராணுவத்துடன் இணைந்து வேலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மூஞ்சே தொடங்கிய இராணுவப் பள்ளியைப் போல, கடந்த 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் ஆர்.எஸ்.எஸ் புதிதாக தனது இராணுவப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறது. கீழ்நிலை வீரர்களிலிருந்து இராணுவத் தளபதிகள் வரை ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போது அடுத்த நிலைக்குச் சென்று, அலையலையாக இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
நாடு முழுவதும் புதிதாக 100 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதல்கட்டமாக, இந்தியா முழுவதும் புதிதாக 21 இராணுவப் பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று அனுமதியளித்துள்ளது.
பொன்சாலா இராணுவப்பள்ளி மாணவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் மூஞ்சே.
1961-ம் ஆண்டிலிருந்து இந்திய இராணுவத்திற்குரிய அதிகாரிகளை உருவாக்குவதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நாடு முழுவதும் இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 194 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகத்தால் (Sainik Society) நிர்வகிக்கப்படுகிறது.
 ஆனால், தற்போது புதிதாகத் தொடங்கப்படும் இராணுவப் பள்ளிகள் இதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பழைய பள்ளிகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும் என்று கூறியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம். இப்புதிய பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகம் தொடங்கி நடத்தப்போவதில்லை. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில மாநில அரசுகளின் கைகளில் இப்பணியை ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
முதல் கட்டமாக அனுமதியளிக்கப்பட்டுள்ள 21 பள்ளிகளில் 12 பள்ளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது சமூகக் குழுக்களும், 6 பள்ளிகளை தனியார் பள்ளிகளும் மீதமுள்ள 3 பள்ளிகளைக் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவப் பள்ளிகளை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ். சார்பு நிறுவனங்கள்.
அவை, கேரளாவில் சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்படும் ஆதி சங்கரா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்ரீ சாரதா வித்யாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் வித்யா மந்திர், குஜராத்தில் பிரம்மச்சாரி பகவதி நந்த்ஜி அறக்கட்டளை, ஹிமாச்சலப் பிரதேசத்தில் சாத்வி ரிதம்பராவால் நடத்தப்படும் ராஜ்லட்சுமி குருகுலம், பஞ்சாபில் வித்யா பாரதியின் (ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனம்) கிளை நிறுவனமான தயானந்த் பள்ளி மற்றும் உத்தரகாண்ட்டில் குரு ராம்தாஸ் பள்ளி ஆகியவைகளாகும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.
படிக்க :
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
நாகாலாந்து படுகொலை : இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள்
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலையலையாக ஆர்.எஸ்.எஸ் மயமாக உள்ளது.
2002 குஜராத் இனப்படுகொலை போல, நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்த ஆர்.எஸ்.எஸ் எத்தனித்தால், இம்முறை அதை இராணுவமே அரங்கேற்றும். அது இந்துராஷ்டிரத்திற்கான இராணுவமாக இருக்கும்.
பாசிச எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் நாம் மக்கள் இராணுவத்தைக் கட்டினால் மட்டுமே காவி பாசிஸ்டுகளை மோதி வீழ்த்த முடியும். களப்போராட்டங்களே நமது பயிற்சிப் பள்ளிகள். இந்துராஷ்டிரத்திற்கான இராணுவம் தயாராகிவருகிறது. நாமும் தாமதிக்காமல் தயாராவோம்!

அப்பு

இளையராஜாவின் மூலம் தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் !

0
புளு ஃகிராப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், வெளியிட்டு இருந்த மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கு இளையராஜா தான் எழுதியதாக கூறும் அணிந்துரையில் மோடியோடு அம்பேத்கரையும் ஒப்பீட்டு மோடியை பாராட்டி எழுதி இருப்பது கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது அணைவரும் அறிந்ததே.
இளையராஜா என்பவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, இசையில் ஆற்றலுள்ளவர். இசை ஞானியும் கூட. எனவே இவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், மேற்கண்ட நூலுக்கு அணிந்துரை எழுதியது நான் தான் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது என்பதை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.
ஏனெனில், ஒரு நூலுக்கு அணிந்துரையோ, முன்னுரையோ எழுதுவதற்கு முன்பு குறிப்பிட்ட நூலை முழுமையாக ஒரு முறைக்கு பலமுறை படித்துவிட்டு, அதிலிருந்து அந்த நூலைப் பற்றி ஒரு மதிப்பீட்டிற்கு வந்து, அதனடிப்படையில் தனது சொந்த கருத்தை, சொந்த எழுத்து பாணியில் எழுதுவதுதான் அணிந்துரை. ஆனால், இளையராஜாவின் அணிந்துரை அந்த அடிப்படையில் இல்லை.
நூலை எழுதியவரின் கருத்துகள் அடிப்படையிலேயே எழுத்து பாணியிலேயே அணிந்துரை அமைந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். இளையராஜாவின் பெயரில் அணிந்துரை இல்லாமல் (இசையமைப்பாளர் என்ற பிரபலத்தின் அடிப்படையில் இல்லாமல்) வெளியிடப்பட்டிருந்தால் இந்த நூல் பற்றிய விவாதம் பொது வெளியில் வந்திருப்பதற்கே வாய்ப்பு இல்லை என்ற சமூக ஆர்வலர்களின் அரசியல் பிரமுகர்களின் கருத்துகள் ஏற்புடையதே.
படிக்க :
எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளர்கள் இருக்க தமிழக இசையமைப்பாளர் இளையராஜாவை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கான காரணம் என்னவெனில், தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க மீதான எதிர்ப்பு என்பது வலுவாக உள்ளது. இவற்றை உடைக்க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டத்தின், நோக்கத்தின் அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் இருந்து தனக்கான சில கோடாரிக் கொம்புகளை உருவாக்கி களமிறக்கி வருவதுபோல, ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்ற சினிமா பேர்வழிகளை தெரிவு செய்து களமிறக்குகின்றன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
இதனடிப்படையில் தான் முதலில் ரஜினியை எப்படியாவது வளைத்துப் போட பாசிஸ்டுகளுக்கே உரிய பாணியிலான சாம, பேத, தான, தண்டம் என்ற முறையை கையாண்டுள்ளதை, அதாவது குறிப்பாக அரசின் அடியாள் படையான அமலாக்கத் துறையை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு பணிய வைத்ததை, சங்க பரிவாரங்களின் மூலம் மிரட்டி பணிய வைத்ததை பல்வேறு ஊடகங்கள் அமல்படுத்தி விட்டன.
இவை ரஜினியிடம் நிறைவேறாமல் போகவே, மேற்கண்ட பணியை இளையராஜாவிடம் நடைமுறைப்படுத்தி மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கான அணிந்துரை மூலம் சாதிக்க முயன்றது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விளைவை எட்ட இயலவில்லை. இருப்பினும் இவற்றை பேசும் பொருளாக, விவாதப் பொருளாக இன்று மாற்றிவிட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.
முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம், குழந்தைகள் காப்போம், கற்பிப்போம் போன்ற திட்டம், இலவச கேஸ் இணைப்பு, வங்கியில் பணம் போன்ற திட்டங்கள் குறித்து, இவற்றில் பாசிச மோடியின் நோக்கம் குறித்து எவ்வித புரிதலும், அறிதலும், பரிசீலனையும் இல்லாமல், இதன் உண்மை நிலவரத்தை உணராமல் அணிந்துரை மூலம் பாராட்டுவது என்பது மோடியின் பாசிச நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமம்.
ஏனெனில், பாராட்டு என்பது ஒருவரின் (பாராட்டப்படக் கூடியவரின்) உண்மை முகத்தை, உண்மை குணத்தை, உண்மையான நோக்கத்தை சொல்லும். மோடியின் திட்டங்களாலும், சட்டங்களாலும் அதன் உண்மையான முகமும், குணமும், நோக்கமும் அன்றாடம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு நாறி வரும் நிலையை புரிந்துக்கொள்ள துப்பில்லாத – விரும்பாத – இளையராஜாவின் பாராட்டு என்பது பாசிஸ்டுகளுக்கு போடப்படும் புகழ் மாலையே.
இளையராஜா இசையில் ஞானியாக இருக்கலாம். ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நோக்கம் குறித்தும், அவர்களின் நம்பகமான, விசுவாசமான பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக, மோடி போன்ற கைக்கூலிகள் போடும் திட்டங்கள் குறித்தும் ஞானம் இருந்தால் தான் இவற்றைப் பற்றி கருத்தையோ, அணிந்துரையோ, முன்னுரையோ வழங்க முடியும் என்பதை இளையராஜா எழுதியதாகக் கூறும் அணிந்துரையே அம்பலப்படுத்தி விட்டது.
தமிழகத்தில் நிரந்தரமாக காலூன்ற சினிமா பேர்வழிகளான ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதுபோல, இன்னும் பல்வேறு துறையினரையும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது சதி வலையில் சிக்க வைக்க நெருக்கடி கொடுப்பது, கோடாரிக் கொம்புகளாக உருவாக்குவது, மிரட்டி பணிய வைப்பது போன்ற அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மலைப்பாம்பைப் போல தமிழகத்தை வளைத்து இறுக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை ஓயாது.
படிக்க :
வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !
மோடியின் பொய் உரைகள் : கூட்டாட்சி தத்துவம், பெட்ரோல் டீசல் வரிகுறைப்பு, மாநில அரசு மீதான குற்றசாட்டு !
இப்பாசிச கும்பலை தமிழகத்தில் வேறூன்றாமல், போராடி மண்ணோடு பிய்த்து எறிவது பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்ற சட்டத்தையும், தேர்தலை மட்டும் நம்பியிராமல் களத்தில் இறங்கி போராடுவது காலத்தின் கட்டாயம்.
ஏனெனில், பாசிஸ்டுகள் களமிறங்கி விட்டனர். சான்றாக, கடந்த ஏப்ரல் 14 அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுகிறோம் என்ற பெயரில் வி.சி.க.வுடன் மோதலில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கினர். இந்த கலவரத்தை சென்னை சேத்துப்பட்டில் உருவாக்க முயன்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை மக்கள் அதிகாரமும், இதர கட்சிகளுடன், பகுதி மக்களுடன் இணைந்து விரட்டியடித்தனர்.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பாசிச கும்பலின் எடுபிடியாக, ஊதுகுழலாக செயல்படும் பேர்வழிகளை விரட்டியடிப்பதோடு, இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கும் படியான நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்களின் ஆதரவால் பிரபலமடைந்து, பின்பு பாசிஸ்டுகளுக்கு துணைபோகும், துதிபாடும் பேர்வழிகளின் புகழை – பெருமையை – செல்லா காசாக்க வேண்டும்.
இவர்களுக்கான சமூகப் பரப்பை பிடுங்கி எறிய, இவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதை தொடர்ச்சியாக இடைவிடாமல் மேற்கொள்வது அவசியம். இவை மூலமே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் காலூன்றாமல் தடுக்க முடியும்.

கதிரவன்

உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?

12.05.2022
உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு
பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?
கண்டன அறிக்கை !
கொரோனா கொடுந்தொற்றில் மக்கள் ஆக்சிஜன் இன்றி தவிக்கும்போது மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாசிச செயல்பாடுகள் மக்களால் காரி உமிழப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஆளுகின்ற மாநிலங்களில் பசு மடங்கள் அமைப்பது, அசைவ உணவுக்கு தடைவிதிப்பது, சாமி சிலைகளுக்கு வைத்தியம் பார்ப்பது போன்ற பைத்தியக்காரத்தனமான, மூடத்தனமான வேலைகளை அரசே முன்னின்று செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு என பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் இருக்கிறது. தந்தை பெரியாரின் வாரிசாக திராவிட மாடலாக கருதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் இந்த திமுக அரசு, பசுமடம் அமைப்பதற்கு ஆவடி அருகில் 25 ஏக்கர் தேடும் பணியில் ஈடுபடும் செய்திகள் படத்துடன் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, மனிதனை மனிதன் சுமக்கும் இழிவான பட்டினப் பிரவேசத்துக்கு   ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் கடும் எதிர்ப்பின் காரணமாக அனுமதி அளித்து  பணிந்து போனது திமுக அரசு. வாயளவில் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டாலும், செயலளவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பணிந்து போவதே வழக்கமாக இருக்கிறது.
சென்னையின் உழைக்கும் மக்கள் பல இடங்களிலும் நகரத்தை விட்டு அராஜகமாக துரத்தப்படுகிறார்கள். அதற்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளும் எரிந்து போன கண்ணையாவும் சமீபத்திய சாட்சி.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு  மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் மாநிலங்களில் மக்களை பார்ப்பனிய மயமாக்க செய்துவரும் வேலைகளை திராவிட மாடல் என்ற பெயரில் செய்வதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. எனவே,  பசுமடம் அமைக்கும் வேலையை  தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

இந்துப் பண்டிகைகளில் மதவெறித் தாக்குதல்கள் : காவி பயங்கரவாதத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சல் !

டமாநிலங்களில் கொண்டாடப்படும் இந்துப் புத்தாண்டு (நவ் சம்வத்ஸர்), இராம நவமி, அனுமன் ஜெயந்தி என வரிசையாக அடுத்தடுத்து வந்த இந்துப் பண்டிகைகளைப் பயன்படுத்தி, இசுலாமியர் மக்களுக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பாசிச வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இராஜஸ்தானின் கரோலி நகரில் இந்துப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட கலவரமானது, வரிசையாக நடைபெற்ற வெறியாட்டங்களின் தொடக்கமாக அமைந்தது. அன்றைய நாள் இசுலாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் குறிவைத்து காவி குண்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியொன்றை நடத்தினர். அப்போது கற்களை வீசியதாகக் கூறி இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ள காவி கும்பல், அப்பகுதியிலிருந்த இசுலாமிய மக்களின் கடைகள் மற்றும் வாகனங்களைக் தீயிட்டு கொளுத்தியது.
இதே பாணியில், ஏப்ரல் 10-ம் தேதி இராம நவமி நாளையொட்டி உத்தரகாண்ட், டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா எனக் குறுக்கும் நெடுக்குமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஏப்ரல் 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்றும் டெல்லி ஜஹாங்கீர் புரியில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம் அரங்கேற்றப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நடந்த கலவரத்தில் 20 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 30 வயது மதிக்கத்தக்க இப்ரிஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொன்றுள்ளது காவி கும்பல். மேலும் 24-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கலவரத்தில் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கம்பத் நகரத்திலும், சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரத்திலும் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதோடு, அங்குள்ள கடைகளுக்கும் தீவைத்துள்ளார்கள். இக்கலவரத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் நடந்த கலவரத்தில், 10 இசுலாமியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகா மாவட்டத்தில் நடந்த கலவரத்தில், ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டுள்ளார். 12 இசுலாமியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படிக்க :
அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !
’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !
சங்கப் பரிவாரக் கும்பல், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பெரும்பாலும் ஒரே மாதிரியான வழிமுறைகளையே கையாண்டுள்ளது. “ஜெய் ஸ்ரீராம்” என சத்தமிட்டபடியே கத்தி, வாள், துப்பாக்கி போன்ற கொலைகார ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். அந்த ஊர்வலங்கள் அனைத்தும் திட்டமிட்டே இசுலாமியர்கள் திரட்சியாக வசிக்கக் கூடிய பகுதிகளுக்குள் செல்கிறது. அங்குள்ள மசூதிகளுக்கு முன்பாக ஒன்றுகூடி நின்றுகொண்டு, ஒலிபெருக்கியில் இசுலாமிய மக்களை வசைபாடுகிறார்கள், வன்முறையைத் தூண்டும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். இதன் உச்சத்தில், அவர்களே ஏற்பாடு செய்த ‘இந்துவிரோதிகள்’ ஆர்ப்பாட்டங்களின் மீது கற்களை வீசினார்கள். அதன்பின் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கப்பட்டது.
கலவரங்களை அரங்கேற்றுவதற்காக காவி கும்பல் மேற்கொள்ளும் வழமையான வழிமுறையே இது. இவை நமக்கு இரத யாத்திரைகளையும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களையும் நினைவுபடுத்தலாம். ஆனால், இதுவரை எந்த இராம நவமியிலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்ததாக வரலாறு இல்லை. இது புதிய போக்கு.
000
கலவரங்களை அரங்கேற்றும் முறையில் புதிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் இந்துப் புத்தாண்டு, இராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற காவி வெறியாட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளில் இதுவரை காணாத பண்புநிலை மாற்றமாக உள்ளது.
காவி பாசிஸ்டுகள் காலூன்றியுள்ள மாநிலங்களில் அடிக்கடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக, பல சிறிய அளவிலான கலவரங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், இரதயாத்திரைகள் போன்றவற்றின் மூலம் நாடெங்கும் பரவலாக கலவரங்களை – பாசிசப் படுகொலைகளை அரங்கேற்றுவது அவ்வப்போது அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் இனி சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிரான பாசிச வெறியாட்டங்களும் படுகொலைகளும் தொடர் நிகழ்வுகளாகும் போக்கு தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளையும் அதற்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் போகின்றது காவி கும்பல்.
காவி பயங்கரவாதிகளின் பண்பாட்டுத் திணிப்பு
இராம நவமி அன்று டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் காவேரி விடுதியில், “இறைச்சி சமைக்கக் கூடாது” எனக் கூறி ஏ.பி.வி.பி. குண்டர்கள் தகராறு செய்துள்ளனர். இறைச்சி எடுத்து வந்த கடைக்காரரை அடித்து உதைத்தது மட்டுமின்றி, விடுதிச் செயலாளரையும் அசைவ உணவு சமைக்கக் கூடாது என மிரட்டியுள்ளது ஏ.பி.வி.பி. கும்பல்.
இரவு 7:30 மணியளவில், அசைவ உணவு சாப்பிட்டதாகக் கூறி விடுதி மாணவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில், சில கற்களை அடுக்கி இராமர் கோயிலை உருவாக்கியுள்ளது ஏ.பி.வி.பி. அதன் மேல் காவிக் கொடியை ஏற்றி, இராமன் மற்றும் ஹனுமன் படங்களை வைத்து பூஜை நடத்தியுள்ளார்கள். பல்கலைக்கழக வளாகத்தின் குருபக்ஷ் சிங் மைதானத்தில் ஏ.பி.வி.பி. ஏற்பாடு செய்த இராம நவமி பூஜையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் கலந்து கொண்டுள்ளார்.
ஏ.பி.வி.பி. குண்டர்களால் தாக்கப்பட ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து கல்வி நிலையங்கள் காவி பயங்கரவாதிகளின் கூடாரமாகிவரும் அபாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இராம நவமியன்று இறைச்சி சாப்பிடக்கூடாது என்று காவிகள் தாக்குதல் நடத்தியது பெரும்பான்மை மக்களின் உணவு உரிமை மீதான தாக்குதலாகவே அமைந்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்களை விட்டுவிடலாம், இந்துக்களில் பெரும்பான்மையினரே இராம நவமியில் இறைச்சியைத் தவிர்க்கிறார்களா என்றால் இல்லை.
அவ்வாறிருக்க, டெல்லியின் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இராம நவமிக்கு இறைச்சி விற்கத் தடை விதித்துள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
நாம் எதை உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், பேச வேண்டும், விரும்ப வேண்டும் என்பதை ஒரு கும்பல் தீர்மானிப்பது தனியுரிமை மீதான கொடூரத் தாக்குதல். பார்ப்பனப் பண்பாட்டை ‘இந்துப் பண்பாடு’ என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மீது திணிப்பதைக் காலங்காலமாகவே காவிகள் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். தாக்கப்பட்ட ஜே.என்.யு. மாணவர்கள் இந்துக்களே; இந்துராஷ்டிரம் ஆகப் பெரும்பான்மை இந்துக்களுக்கே எதிரானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஜனநாயக மாயைகளை தரைமட்டமாக்கிய புல்டோசர்
பண்டிகைகளையொட்டி நடைபெற்ற தொடர் கலவரங்களில் காவி குண்டர்கள் மட்டும் இசுலாமிய மக்கள் மீது வெறியாட்டங்களை நிகழ்த்தவில்லை. அரசு நிர்வாகமும் தன் பங்கிற்கு ‘கரசேவை’ செய்துள்ளது.
இராம நவமி கலவரம் நடைபெற்ற மறுநாளே (ஏப்ரல் 11) அதிகாலை 3 மணி அளவில், கார்கோன் பகுதியைச் சேர்ந்த இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க ‘ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை’ என்று கூறி, புல்டோசர் உடன் வந்திறங்கியது உள்ளூர் நிர்வாகம். 50-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகள், கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.
முதலாவதாக, அங்கிருந்த பிலால் மசூதியின் வாயிலை அவர்கள் உடைக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த மசூதிக்கு அருகில் வசித்து வந்த மூதாட்டி அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, வயதானவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்கள் காக்கி குண்டர்கள் (போலீசு).
“எங்களது பொருட்களையாவது எடுத்துக் கொள்கிறோம், குறைந்தபட்சம் குரானையாவது வீட்டில் இருந்து எடுக்க விடுங்கள்” என கெஞ்சிய இசுலாமியர்களுக்கு சிறிதும் செவிமடுக்கவில்லை.
உள்துறை அமைச்சர் நரோத் மிஸ்ரா “எங்கிருந்து கற்கள் வீசப்பட்டதோ, அந்த வீடுகள் கற்குவியலாக மாற்றப்படும்” என்று வெளிப்படையாக வெறுப்பு நஞ்சைக் கக்கினார். ஆனால், கார்கோன் மாவட்ட நிர்வாகமோ இது சட்டப்படி நடக்கிற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைதான்; கலவரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியது. இடிக்கப்பட்ட சில வீடுகள் மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை. இதிலிருந்தே ‘ஆக்கிரமிப்பு’ என்பது வெறும் சாக்கு – பொய் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும்.
ம.பி.யைத் தொடர்ந்து குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும் இசுலாமியர்களின் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. ம.பி. ஆட்சியர் சொன்னதைப் போலவே ஆனந்த் மாவட்ட ஆட்சியரும் இது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைதான் என்று சாதித்தார்.
டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, ஜகாங்கீர்புரியில் உள்ள ‘கலவரக்காரர்களின்’ கட்டுமானங்களைக் கண்டறிந்து அவற்றை இடித்துத் தள்ளுமாறு வடக்கு டெல்லி முனிசிபலுக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி, அப்பகுதி இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.
வீடுகளை இடித்துக் கொண்டிருக்கும்போதே வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் அவசரமாக இப்பிரச்சினைகளை முன்வைத்து தடை ஆணை வாங்கினார். அதைச் சுட்டிக்காட்டி, இடிப்பதை நிறுத்தச்சொன்னபோது ‘எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை’ எனக் கூறி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை இடித்துத் தரைமட்டமாக்கியது முனிசிபல். காவி குண்டர்களின் தாக்குதல் ஒருபுறம் பாசிசமயமாகும் அரசு நிர்வாகத்தின் தாக்குதல் மறுபுறம். சிறுபான்மை மக்கள் இரட்டைத் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது கடைந்தெடுத்த பொய். இசுலாமியர்களின் வீடுகளைக் குறிவைத்து இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசியது மட்டுமில்லை, சமூக வலைதளங்கள் முழுக்கவும் “கல்லெறிந்தால், வீடுகளுக்கு புல்டோசர் வரும்” என்ற வாசகத்தை சங்கிகளும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.
பா.ஜ.க. சொல்வதுபடி கலவரக்காரர்களாகவே இருந்தாலும் அவர்களின் வீடுகளையே தரைமட்டாக்கி, அகதிகளாகத் துரத்திவிடுங்கள் என்றா சட்டம் சொல்கிறது. இவை செரித்துக் கொள்ளவே முடியாத ஜனநாயக விரோத செயல், மனித உரிமை மீறலாகும். சொல்லிக்கொள்ளப்படும் ‘ஜனநாயக நாட்டின்’ உண்மை முகம் இது.
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கெதிராக போராடியவர்களின் வீடுகளை இடித்து இப்பயங்கரவாத நடவடிக்கையைத் தொடங்கிவைத்தது யோகி ஆதித்யநாத். அந்த மாடலை தற்போது ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கையிலெடுத்துள்ளார். அதனால் சங்கப் பரவாரத்தினர் யோகியை ‘புல்டோசர் பாபா’ எனவும் சிவராஜ் சிங் சவுகானை ‘புல்டோசர் மாமா’ என்றும் அழைக்கிறார்கள்.
புல்டோசர் என்பதே சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பாசிச பயங்கரவாதிகளின் சின்னமாகிவிட்டது. புல்டோசர்கள் இடித்துத் தள்ளியது கட்டிடங்களை மட்டுமில்லை, ஜனநாயக மாயையினையும்தான்.
கட்சிகளின் இரட்டைநிலை பாசிஸ்டுகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பே
நாடெங்கும் பாசிசப் போக்கு மேலெழும்பிவரும் நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் அதன் இந்துத்துவா கொள்கையை மென்மையாகக் கடைப்பிடிக்கும் போக்கை நாம் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறோம். இராமநவமி கொண்டாட்டங்களிலும் பல கட்சிகளிடம் அது தீவிரமாக வெளிப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் நகரில், இசுலாமிய மக்களின் வீடுகளை புல்டோசரால் இடித்துத் த்ரைமட்டமாக்கும் காட்சி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக்கொண்டு இராமநவமி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழமையானதாகும். இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது. மே.வங்கம் முழுவதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி ஆகிய அமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய பேரணிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட கூத்தும் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சார்பில் இராம நவமி விழா ‘மிகச் சிறப்பாக’ கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ‘இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டம்’ என்ற பெயரில் அரசு சார்பில் சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது வசித்ததாகச் சொல்லப்படும் சதீஷ்கர் மாநிலத்திலுள்ள ஒன்பது இடங்களைப் புதுப்பித்து, அப்‘புனித’ யாத்திரைத் தளங்களை இணைப்பதே இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டத்தின் நோக்கமாம்.
இத்திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ள ஷிவ்ரி நாராயணன் கோயிலை இராம நவமியன்று திறந்துவைத்துப் பேசிய பூபேஷ் பாகல், ஷிவ்ரி நாராயணன் கோயிலை அயோத்தியைப் போலவே மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ்.ஐ விமர்சித்துப் பேசுவது வரவேற்கத்தக்க விசயம் என நம்மில் சிலர் சிலாகித்துவருகின்றனர். ஆனால் அவர் ஏன் சதீஷ்கர் முதல்வரைக் கண்டிக்கவில்லை என்பது நாம் எழுப்பும் கேள்வி.
இக்கலவரங்களுக்குப் பிறகு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம் உட்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள், மத வன்முறைகளை மோடி அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது குறித்துக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கை வெளியிட்டார்களே தவிர இசுலாமிய மக்கள் மீது கலவரங்கள் அரங்கேற்றப்படும்போதும் வீடுகள் இடிக்கும்போதும் எந்தத் தலைவரையும் களத்தில் பார்க்க முடியவில்லை.
சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் பிருந்தா காரத், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஹன்னன் மொல்லா ஆகியோரே ஜஹாங்கீர் புரி வீடு இடிப்பின்போது களத்திற்கு வந்து எதிர்த்து நின்றனர். அதுதான் உண்மையான எதிர்ப்பு. மற்ற கட்சிகளின் மென்மையான இந்துத்துவமும் கலவரத்திற்குப் பின்பு பேச்சளவிலான எதிர்ப்பும் பாசிஸ்டுகளுக்கு வழங்கும் மறைமுக ஒத்துழைப்பே.
இசுலாமிய இனப்படுகொலைகளை நோக்கி
இந்துப் பண்டிகைகளை ஒட்டி நடைபெற்ற கலவரங்களை, பா.ஜ.க. வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே நடத்திவருகிறது என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளில் பெரும்பான்மையினரும் கூறிவருகின்றனர். ஒவ்வொரு முறை மதவெறிக் கலவரங்கள் நடைபெறும்போதும் இதையே மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, சிந்தனைப் போக்கு முதலியவற்றை எல்லாம் இந்துராஷ்டிரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கலவரங்களின் போது உருக்கி வார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சமூகத்தைச் சிதைத்து உருமாற்றம் செய்துகொண்டிருக்கும் நிகழ்வுப்போக்கை தேர்தல் வரம்போடு சுருக்கிப் பார்ப்பது மிக மோசமானதாகும். மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் வெற்றிகளே அனைத்துமாக இருக்கலாம். ஆனால், இந்துராஷ்டிரக் கனவுடைய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கு தேர்தல் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததும் மூலமுதலானதும் அல்ல.
யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முதல்படிநிலையில் ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்’ (ghettoisation) என்ற முறையைக் கையாண்டான். யூதர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) வாழும்படி தள்ளினான். இதன்மூலம் அவர்களை பொது சமூகத்திலிருந்துப் பிரித்து தனிமைப்படுத்தினான்.
படிக்க :
ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !
இங்கு வாழ்ந்த யூதர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் இல்லாத கெட்டோக்களில் வயதானவர்களும் குழந்தைகளும் நோய் வாய்ப்பட்டு மடிந்தார்கள்.
கெட்டோமயமாக்கலுக்கு ஒத்த போக்கையே காவி பாசிஸ்டுகள் நமது நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், திருவிழாக்களில் முசுலீம்கள் வியாபாரம் செய்யத்தடை, மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை என அண்மைக்காலமாக காவிகள் முன்தள்ளிவரும் நிகழ்ச்சிநிரல்கள் அதை நோக்கியே செல்கின்றன. ம.பி.யில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளைத் தரைமட்டமாக்கிய பிறகு, நான்கு இசுலாமியக் குடும்பங்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மாட்டுக்கொட்டையில் குடியேறினார்கள் என்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். சில இசுலாமியக் குடும்பங்களுக்கு நடந்தவை நாளை பெரும்பகுதி இசுலாமியர்களுக்கு நடத்தப்படலாம்.
இவையெல்லாம் பெரும்பான்மை இந்துக்களின் மத நம்பிக்கையின் பெயரால் நடத்தப்படுகிறது. சகோதரர்களைப் போல ஒன்றாக வாழ்ந்த இசுலாமியர்களைக் காவிக் கும்பல் இதுபோன்ற கொடூர நிலைக்கு ஆளாக்குவதை அமைதியாக சகித்துக் கொண்டிருத்தல் தகாது. இசுலாமிய மக்களின் இரத்தவாடைக்கு மத்தியில், இந்துக்கள் தங்கள் மதப் பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது மனிதத்தன்மையும் அல்ல.
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது. அந்நோக்கத்தில், மக்களை அணிதிரட்டுவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் பொறுப்பு.

பழைய ஓய்வூதியத் திட்டம் – தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு!

0

மிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது விவாதப் பொருளாகி உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவானது தனது தேர்தல் அறிக்கையின் 84-வது பக்கத்தில் 309-வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஏப்ரல் 1, 2022 முதல் தனது மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்ததிலிருந்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற விவாதம் சூடுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் மே 7 அன்று நடந்த நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். மேற்கூறியவாறு தமிழக நிதி அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

படிக்க :

♦ மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !

♦ மோடியின் தேர்தல் ஜூம்லா 2019 : முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் !

குறிப்பாக அமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த முடியாததற்கு இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

  1. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு தனி நபரின் பணம் மற்றும் அரசின் பங்களிப்பு தனிநபரின் பெயரில் தனியாக கணக்கு வைக்கப்படுகிறது. அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது.
  2. இந்த ஆண்டு ஓய்வூதியத் திட்டத்திற்காக 39,500 கோடி செலவிடப்படுகிறது. நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார்.

மேற்கண்ட அவர் கூறிய இரண்டு காரணங்களை நாம் பரிசீலிப்பதற்கு முன்னால் பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன என்பதை நாம் பார்ப்போம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் :

2003-க்குள் முன்னால் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பணி நிறைவு பெற்ற பிறகு கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில், 50 சதவீத ஓய்வூதியம் அரசால் உத்தரவாதமாக வழங்கப்பட்டது.

அரசானது ஓய்வூதியத் திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் ஏதும் செய்யவில்லை. ஓய்வூதியம் முழுவதும் அரசால் வழங்கப்பட்டது. பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத் திரண்ட தொகை ஆகிய பலன்கள் உண்டு. இப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான பொருப்புகள் அனைத்தும் அரசிடமே இருந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டம் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது மற்றும் அரசிடம் நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி, வாஜ்பாய் தலைமையிலான அரசு 2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது.

இத்திட்டத்தின் படி, ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசு தனது பங்காக 14 சதவீதம் செலுத்தும். மொத்த 24 சதவீத தொகை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதைப்போல, அரசின் கணக்கில் அல்லாமல் தனிநபர் கணக்கில் சேரும்.

இப்பணமானது காப்பீடு நிறுவனங்களின் மூலம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு பெருக்கப்படும். ஓய்வு வயதை எட்டியவுடன் வட்டியுடன் சேர்ந்திருக்கும் பணத்தில் 60 சதவீதம் ஊழியர்களிடம் கொடுக்கப்படும், மீதி 40 சதவீதம் மீண்டும் கட்டாயம் மறுமுதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் வரும் வட்டி பணத்தில் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என புதிய ஓய்வூதியத் திட்ட விதி கூறுகிறது.

இத்திட்டத்தில் ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்படுகிறது. இச்செயலானது தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது.

மேலும் இவ்வோய்வூதிய திட்டத்தில், நிரந்தர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடையாது. ஓய்வூதியம் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தனியார் காப்பீடு நிறுவனங்களை தான் தொடர்பு கொள்ள வேண்டும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு ஊழியர்களுக்கு பணி முடிந்தவுடன் ஓய்வூதியம் மூலம் சமூகப் பாதுகாப்பை கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசானது விலகுகிறது மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்க திறந்துவிடுகிறது என்பதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இவ்வளவு அபாயங்கள் இருப்பதால்தான், அரசு ஊழியர்கள் 19 ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையானது செவிடன் காதில் ஊதிய சங்கைப்போலதான் உள்ளது.

***

மேற்கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்ட விளக்கத்தின் படி, அமைச்சர் சொன்ன முதல் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ஓய்வூதியத் திட்டமானது அரசு பொறுப்பில் இருந்து, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பிற்கு சென்றுவிட்டது. எனவே அந்த நிதியை மீண்டும் அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது என்பதுதான்.

அமைச்சர் கூறிய இரண்டாவது காரணம் மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டி சுருக்க, எல்லா அரசுகளும் கூறும் வழமையான காரணம்தான், “நிதிப்பற்றாக்குறை”. இவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும்போது மட்டும் நிதிப்பற்றாக்குறை வந்துவிடும், ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும்போது நிதிப்பற்றாக்குறை வராது.

புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்த பிறகு, ஓய்வூதிய திட்ட வரம்பிற்குள் நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த நாடு தழுவிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.

ஏன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்புதிய ஓய்வூதிய திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்றால்? அவர்களுடைய ஓய்வூதிய பணத்தையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கதான்.

அதாவது கார்ப்பரேட்டுகள் தங்களுடைய கொள்ளை அடிக்கும் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். அதற்கு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்ற மாதிரி சட்டங்களை மாற்றி கொடுக்கிறது.

ஆனால், மத்திய அரசானது தன்னுடைய அடியாள் படையான இராணுவம், நீதித்துறையை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை. அரசின் ஏவல் நாய்களை மக்கள் பணத்தில் குளிப்பாட்ட வேண்டும் அல்லவா?

நிதிப்பற்றாக்குறை என்றால், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக, தனியார் கார்ப்பரேட்டுகள் மீது போடும் வரியை அதிகரித்து ஈடுகட்டலாமே? ஏன் செய்ய மாட்டிக்கிறார்கள்? மக்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்கும் திமுக அரசுக்கு, கார்ப்பரேட்டுகள் மீதான தொழிற்வரியை அதிகரிக்க துப்பு இருக்கா?

ஏனென்றால் மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகள். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்வார்கள்! மக்களுக்கு அல்ல! திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

படிக்க :

♦ புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

♦ பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

ஆகவே, இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதை நிறைவேற்றுவோம், இதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கார்ப்பரேட் சேவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் மத்தியிலும் தங்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அதனால் நாட்டின் பிற பிரச்சனைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணம் உள்ளது. அது தவறானது.

அரசின் எல்லா துறைகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் போது, அது அரசு ஊழியர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்வு, எங்கும் காண்ட்ராக்ட்மயம் என தொழிலாளர்கள் உரிமைகள் அனைத்தும் நசூக்கப்படும் சூழலில் அரசு ஊழியர்கள் தன்னை தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமாக கருதி, ஒடுக்கப்படும் எல்லா தொழிலாளர் பிரிவுகளுடன் ஒன்றினைந்து தொழிலாளி வர்க்கமாக போராடும் போது தான், மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை பணிய வைக்க முடியும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியும்.

அமீர்

ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !

3
ந்திய சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பது பற்றி ஒரு அலசல் செய்ததில் நமக்கு பல தகவல்கள் அரசின் புள்ளிவிவரங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நம் நாட்டில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் கூட பெண்களின் பெயர்களிலே இருக்கும். நாம் பேசும் மொழியை கூட தாய்மொழி என்று தான் கூறுவோம். நமது நாட்டை தாய்நாடு என்றுதான் அழைப்போம். அப்படி பார்க்கும்போது இந்திய நாட்டில் பெண்களுக்கான மதிப்பு என்பது பெரிய அளவில் இருப்பதாக தான் நாம் எல்லோரும் நம்புகிறோம். ஏன் சமூக வலைதளங்களில் பெருமிதமாக சொல்லிக்கொண்டும் உள்ளோம்.
ஆனால், சற்று நிதானித்து உண்மைகளை பரிசீலிக்க தவறுகிறோம். அதனால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்மந்தமான செய்திகளை பார்த்தால் கூட கடந்து செல்கிறோம் அல்லது ஒரு கருத்தை (கமெண்ட்) மட்டும் பதிவு செய்து எதிர்ப்பை காட்டுவதோடு கடமையை முடித்து விடுகிறோம். அதிலும் பலர் பெண்கள் தான் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்; ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக்கூடாது, உடையை சரியாக போட வேண்டும் என்று கருத்து பதிவிடுகின்றனர். ஏதோ பெண்களுக்கு வெளியில் உள்ளவர்களால் மட்டுமே ஆபத்து இருப்பதுபோல கருத்து நிலவுகிறது. இது மிக ஆபத்தானது.
பாலியல் ரீதியிலான வன்முறை:
திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 82 சதவீதம் நடக்கிறது. திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 39.3 சதவீதம் நடக்கிறது. உறவுகளுக்கு அடுத்தபடியாக ஆண் நண்பர்களால் 16.1 சதவீதமும், குடும்ப நண்பர்கள் மூலம் 11.7 சதவீதமும் நடக்கிறது என தேசிய குடும்பநல ஆய்வின் 2021-ம் ஆண்டின் அறிக்கையின் புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படியானால் பெண்கள் யாரிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.
படிக்க :
ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின் படி, 1971 மற்றும் 1991-ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்டிற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன் பிறகு 1992 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் 1,54,664 ஆக பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டிற்கு 15,466.4 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதன் பிறகு 2012-ல் 24,923 பாலியல் வல்லுறவுகளும், 2013-ல் 33,707 பாலியல் வல்லுறவுகள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதில் 94 சதவீதம் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே இந்த வன்கொடுமை அறங்கேறி உள்ளது. இதே போல் தமிழகத்தில் மட்டும் 2012-ல் 737 ஆக இருந்த எண்ணிக்கை 2013-ல் 923 வழக்காக அதாவது ஓராண்டில் 19 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 பதிவாகியுள்ளது.
குடும்ப வன்முறை:
இந்தியாவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர் கொள்கின்றனர். அதில் பெரும்பாலானவை உடன் இருக்கும் வாழ்க்கைத் துணையால் ஏற்படுகின்றன. தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் (NFHSS) சமீபத்திய புள்ளி விவரங்கள் சொல்வது தான் நம்மை திடுக்கிட செய்கிறது. அதாவது குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளில் மாமியாரை ஒரு மனைவி அவமதிப்பது, சாப்பாடு சரியாக செய்யாமல் இருப்பது, குழந்தைகள்

பராமரிப்பு முறையாக இல்லை, உடலுறவுக்கு கணவனிடம் மறுப்பு தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளுக்காக மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும், 38 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும் அரசு கணக்கெடுப்பாளர்களிடம் கருத்து தெரிவித்து உள்ளனர். நான்கு மாநிலங்களில் 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களே மனைவியை கணவன் அடிப்பதை நியாயப்படுத்தி உள்ளனர்.

அதாவது உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை கொன்றதாக 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் பல சம்பவங்கள் அறங்கேறி கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் மனைவியை கணவன்மார்கள் அடித்தல் என்பது மிகவும் குறைவாகவே பதிவாகிறது. இதற்கு காரணம் சொல்லும் பலர் வீட்டில் நடக்கும் பிரச்சினை வீட்டு உள்ளேதான் இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படியானால் பெண் என்பவள் தன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கும் ஒரு அடிமை என்பதுதான் அவர்கள் சிந்தனையில் உள்ளது. அப்படியே பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறினாலும் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இந்த சமூகத்தில் இல்லை.
பொருளாதார ரீதியான வன்முறை:
இந்தியாவில் உள்ள இந்த பொருளாதார நெருக்கடி சூழலில் ஒரு குடும்பத்தில் ஆண், பெண் என அனைவரும் வேலைக்கு சென்றதால் வாழ முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண்கள் தங்களின் குடும்ப நலனுக்காகவும், தன்னை பார்த்துக் கொள்ளவும் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் 2017 மற்றும் 2022-ம் ஆண்டுக்கு இடையில் சுமார் 2.1 கோடி பெண்கள் நிரந்தரமாக தங்கள் வேலையை விட்டுள்ளனர். (வேலை தேடாமலே இருக்கின்றனர். நாட்டில் ஒட்டு மொத்த தொழிலாளர் பங்கேற்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதில் இதன் பங்கும் உள்ளது.
சி.எம்.ஐ.இ. (CMIE) அறிக்கை, 2017-ம் ஆண்டில் 46 சதவீதத்தில் இருந்து 2022-ம் ஆண்டில் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 6 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் படி, (PLFS) 2018 – 2019-ம் ஆண்டில் இளம் நகர்புற பெண்களிடையே வேலையின்மை விகிதம் 25.7 சதவீதமாக இருந்தது. ஆண்களுக்கு வேலையின்மை விகிதம் 18.7 சதவீதமாக இருந்தது. ஜனவரி – ஏப்ரல் 2016-ல் 2.8 கோடி பெண்கள் வேலையில்லை ஆனால் வேலை செய்ய தயாராய் இருந்தனர். ஆனால் டிசம்பர் 2021-ல் வேலை செய்ய தயாராய் உள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக குறைந்தது.
2011 மற்றும் 2017-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட மாநிலங்கள் அளவிலான குற்றத் தரவுகளில் செய்த பகுப்பாய்வு, பீகார், டெல்லி போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேலையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளதையும் காட்டுகிறது.
இதற்கான முக்கிய காரணம் என்பது குடும்ப வேலைகளில் பெண்கள் அதிகம் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணி நேரம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியமில்லாமல் உழைக்க வேண்டி உள்ளது. புள்ளியல் அமைச்சகத்தின் ஆய்வுப்படி ஆண்கள் வெறும் 25 நிமிடங்களே ஊதியம் செலுத்தப்படாத வேலையை செய்கின்றனர். இந்த நெருக்கடி சூழல்தான், குடும்ப வேலைச்சுமை தான் பெண்களை வெளியில் சென்று நிதியீட்டும் வேலையில் பங்கேற்பை குறைக்கிறது.
படிக்க :
பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
இதனால் சமூக பணிகளிலும், தான் விருப்பப்பட்ட துறைகளில் சிறந்தோங்குவது என்பதை கூட இந்த வீட்டு வேலை சுமைதான் தடுக்கிறது. இது பெண்கள் அவர்களே ஏற்படுத்திக் கொள்வது இல்லை. அவர்களின் சுற்றத்தார்களினாலும், கணவனாலும் ஏற்படுகிறது. வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையாக எல்லோரின் சிந்தனையிலும் ஊறிபோய் உள்ளது. குறிப்பாக இந்த ஆணாதிக்க சிந்தனைக்கு அதிகமாக ஆளாகி இருப்பது பெண்கள்தான். இது சரிதான் என்று ஏற்றுக் கொண்டும் உள்ளனர். இந்த நிலைமாற வேண்டும் என்றால் பெண்கள் சமூகமாற்ற பங்களிப்பில் ஈடுபட வேண்டும். அதற்கு பெண்கள் மட்டுமே முயற்சி செய்ய முடியாது குடும்பத்தின் வன்கொடுமையின் பிடியில் பெண்கள் வெளியே வர சமூகம் உதவி கரம் நீட்ட வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனைக்கு பெண்கள் அதிகமாக அடிமையாவதற்கு காரணம் இந்த சமூகம்தான். அதனால்தான் ஆண், பெண்ணை தன்னுடைய போகப்பொருளாக பார்க்கிறான். அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஏன் முற்போக்கு பேசும் பலரே பெண்களை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவது என்பதும் நடக்கிறது. அதற்கான முக்கிய காரணம் அவரவர்களிடத்தில் ஊறிபோய் உள்ள  சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க சிந்தனைதான். பெண்கள் மீதான இதுபோன்ற எந்த வன்கொடுமையாக இருந்தாலும் சட்டத்தின் மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு பிற்போக்கான ஆணாதிக்க சமூக அமைப்பை தகர்த்தெறியும் களப்போராட்டமே இன்றைய தேவை. சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!

ஓவியா

மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !

துரையில் கடந்த மே 10 அன்று 600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினக் கூலி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.625 ஊதியம் வழங்க வேண்டும் (தினக்கூலி அடிப்படையில் ரூ.250 வரை தற்போது வழங்கப்படுகிறது), கொரோனா காலத்தில் முன்களப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15,000 நிவாரண உதவியை உடனடியாக வழங்கிட வேண்டும். விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அதிமுக ஆட்சியின் போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்பவும் பணியில் அமர்த்துவதாகவும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவதாகவும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது மதுரை மாநகராட்சி நிர்வாகம் 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கி இருப்பதாகவும், 1999-க்கு பின் யாரையும் சரிவர பணிநிரந்தரம் செய்வதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரூ.15,000 – ரூ.16,000 மாத ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த தொழிலாளர்களின் சம்பளம் தற்போது ரூ.10,000ஆக (பிஎஃப் வேறு இல்லை) குறைக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் கூறினார்கள்.
படிக்க :
சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !
பெத்தேல் நகர் : உழைக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு!
பேட்டரி வண்டியில் குப்பை சேகரிக்க செல்வோர் தினசரி 250 – 300 கிலோ வரை காய்கறி குப்பையை சேகரிக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். இதுவே டாடா ஏசி என்றால் 500 கிலோ இலக்காக மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குப்பையை சேகரிக்கும் போதே காய்கறி குப்பையை தனியாக பிரித்து வேறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முறையாக கையுறைகள் கூட வழங்கப்படுவதில்லை.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, 389 தினக் கூலித் தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி உயர் நீதிமன்றம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இதை நடைமுறைப் படுத்தவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் கசிகின்றன என்று அரசை சாடுகிறார்கள்.
ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பணப்பலன்களும் முறையாக வழங்கப்படுவதில்லை. பலமுறை அலைந்து திரிந்த பின் தவணைமுறையில் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் சுய மரியாதையுடன் நடத்தப் படுவதில்லை. அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை; முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணியை விட்டு நீக்கி விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இவ்வளவு பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில், அரசின் கவனமோ தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாலையில் யோகா பயிற்சி அளிப்பதில் இருக்கிறது.

This slideshow requires JavaScript.

தூய்மைப் பணியாளர்கள் மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்-ஐ நேரடியாக குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகத்தை முறைபடுத்துவதாக கூறிக்கொண்டு தொழிலாளர் விரோதமாக நடந்து கொள்வதாகக் கூறுகின்றனர்.
ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கே கான்ட்ராக்ட்கள் சப்-கான்ட்ராக்ட்கள் வழங்கப்படுவதாகவும், இந்த கான்ட்ராக்டர்கள் தொழிலாளர்களை சுரண்டும் போது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அமைதியாக இருந்து விடுகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூக்குரலிடுவதும், ஆளுங்கட்சியான பின்பு பெட்டிப்பாம்பாக அடங்கிக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. (ஒப்பந்த முறை என்பது தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதாக இருக்கிறது)
ஒப்பந்த முறையை விடுத்து நிரந்தரமாக மட்டுமே தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்; பணிக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட அனைத்து உபகரணங்களையும் அரசு முறையாக வழங்கிட வேண்டும்; சரியான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு முறையாக வழங்கப்படல் வேண்டும்.
அதிமுக – திமுக அரசாங்கங்களிடம் மாறி மாறி கெஞ்சி கூத்தாடி எந்த பயனும் இல்லை. தொழிலாளர் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி, சமரசமின்றி ஒரு தொடர் போராட்டத்தை நடத்துவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
வினவு செய்தியாளர்
மதுரை

மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் சம்புகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

டந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்த தோழர் சம்புகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த மே 10-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் கதிரவன் தலைமை ஏற்று தோழர் சம்புகன் நினைவுகளை பகிர்ந்தார். 1983-ம் ஆண்டில் பகத்சிங் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் இணைந்து வேலை செய்ததை பகிர்ந்தார். கோவையில் தொழிலாளர் மத்தியில் தோழர் சம்புகனுடன் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்ததையும், லட்சுமி மில், கணபதி, PSG பகுதிகளில் ஆலை நுழைவாயில்கள் முன் நள்ளிரவு கூட்டங்கள், வெண்மணி நாடகம் நடத்தியதையும், தனது குடும்பத்தை அரசியல் படுத்தி கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் தோழர் சம்புகன் என்று நினைவுகூர்ந்தார்.
மக்கள் அதிகாரம் கோவை மண்டல செயலாளர் தோழர் சங்கர் பேசுகையில், சாதிய, மத பின்புல உள்ள பகுதியில் தோழர் சம்புகன் பணி முக்கியமானது, பகுதி வேலைகளாகட்டும், மைய வேலைகளாகட்டும் எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் அங்கு மக்கள் மத்தியில் ஐக்கியமாவது, பாடல் பாடுவது என உற்சாகத்துடன் வேலை செய்வார். அறுவை சிகிச்சை செய்த கால் வலியைக்கூட பொருட்படுத்தாமல் கடைசியாக மே தின நிகழ்ச்சிகள் வரை கலந்து கொண்டார். அமைப்பு பிளவின் போது உறுதியாக நின்று போராடியவர். அமைப்பு முறைகளை பின்பற்றியும், கற்றுக்கொடுத்தும் சென்றவர் தோழர் சம்புகன் என்று நினைவுகூர்ந்தார்.
மக்கள் அதிகாரம் கோவை கிளை செயலாளர் தோழர் ராஜன் பேசுகையில், மனித வாழ்வு பற்றியும், உழைக்கும் வர்க்கத்தை சிந்திக்க வைப்பது கம்யூனிஸ்டுகள் தான், கம்யூனிச கொள்கை தான். மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தில் ஈர்க்கபட்டு வாழ்நாள் முழுவதும் மக்களிடையே வர்க்க அரசியலை கொண்டு சென்றவர் தோழர் சம்புகன். முதலாளித்துவ சுரண்டலையும் அதற்கு சேவை செய்யும் அரசு பற்றியும் அம்பலப்படுத்த வேண்டும். மக்களுக்கு வர்க்க அரசியலை கற்று கொடுக்க வேண்டும். தீர்வை முன் வைப்பது நமது அரசியல் தான் என எப்போது முழங்குவார் தோழர் சம்புகன் என்று தனது நினைவுகளை பகிர்ந்தார்.

This slideshow requires JavaScript.

புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் வள்ளுவராசன் பேசுகையில், பகத்சிங் கூறியது போல “போராட்டம் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்ல எங்கள் வாழ்நாளோடு முடிவதுமில்லை” என்பதை போல அமைப்பை தனது வாழ்வில் உயர்த்தி பிடித்தவர் தோழர் சம்புகன். தனது மனைவியை பங்கேற்க வைத்தும், மகள், மருமகன் ஆகியோரை அமைப்பில் கொண்டுவந்தவர் தோழர் சம்புகன்.
தனது வறுமையான வாழ்க்கையிலும் அமைப்பு வேலையில் உள்ள தோழர்களுக்கு உணவை ஏற்பாடு செய்தவர். இளைஞர் போல சுறுசுறுப்பான அமைப்பு வேலைகளை செய்தவர். தோழர் சம்புகன் என்றவுடன் புதிய ஜனநாயகம், துண்டறிக்கைகள் தான் மக்களுக்கு நியாபகம் வரும். அமைப்பு வேலை என்றவுடன் சொந்த வேலைகளை விட்டுவிட்டு வந்துவிடுவார். 1980-களில் பிற்போக்கும், பழமையிலும் மக்கள் இருந்த சூழலில் மக்களுக்கு, நாட்டுக்கு எது முக்கியம் என புரிந்துகொண்டு இறக்கும் காலம் வரை ஊன்றி நின்றவர். அரசு நமக்கானதாக ஏன் இல்லை என பிரச்சாரம் செய்தும், GST, பணமதிப்பிழப்பு  வரை அம்பலபடுத்தியும், ஒரு அமைப்பின் கீழ் கட்டுபாட்டுடன் இருந்து உறுதியாக போராடியவர். தோழர் சம்புகன் நினைவுகளை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
காவி – கார்ப்பரேட் பசிசத்தை முறியடிக்க வேண்டுமென்றால் தோழர் சம்புகன் ஏற்றுக் கொண்ட அரசியல் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம் !

♦ தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி

♦ தோழர் சம்புகனிடம் கற்போம் |ம.க.இ.க.

மக்கள் அதிகாரம் உடுமலை பகுதி தோழர் சூர்யா பேசுகையில், அப்பா என்பதையும் கடந்து தோழராக நடத்தியவர், அரசியல் கற்று கொடுத்தவர். கலைப்புவாதம், பிளவுவாதம் உருவான போது அதற்கு எதிராக போராடி கடைசிவரை கம்யூனிச பண்புடன் வாழ கற்றுக் கொடுத்தவர். இன்றைய அரசியல் பொருளாதார மாற்றம், கல்வி, கலை, கலாச்சார மாற்றம் போன்றவற்றில் அரசின் பிரச்சாரம், செயல்பாட்டை அம்பலப்படுத்தி போராட வேண்டும் என்று பேசினார்.
தோழர் சம்புகன் குடும்பத்தினர், உறவினர்கள், தோழர்கள்  கலந்துகொண்டனர் இறுதியாக  தோழர் சம்புகன்-க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம். 9488902202

இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

லங்கையில் போராட்ட தீ பற்றி எரிகிறது. போராட்டங்களை தீர்ப்பது என்று இல்லாமல், போராடிய மக்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கும் விதமாக செயல்பட்ட இராசபக்சே குடும்பம் தற்போது மக்களுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே பாசிசம் என்பது மக்கள் போராட்டங்களுக்கு முன் நிற்க முடியாது என்பதை, இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.
மேலும் அவர்களின் போராட்டம் தற்போது எப்படி பார்க்க வேண்டும். அப்போராட்டம் மேலும் எப்படி சென்றால் வெற்றியடையும் என்பதை பற்றி இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்

10.05.2022
இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் !
சிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் (மே 9) பாசிச ராஜபக்சே ஆதரவு கும்பல் போராடுகின்ற மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராஜபக்சேவின் வீடு உட்பட அவனது கூட்டாளிகள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காணும்போது கடும் வெயிலை போக்கிய மழையால் மனம் குளிர்ந்ததுபோல நம்முடைய மனம் எல்லாம் நிறைந்து போகிறது.
மக்கள் தங்கள் மீதான வன்முறைக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால், மக்களோ கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென்று போராட்டங்களைத் தொடர்கின்றனர். 1500-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய தொடர் போராட்டங்கள் உச்சத்தை எட்டி இருக்கின்றன.
இலங்கையை மொத்தமாக விற்பதைத் தவிர வேறுவழியில்லை என்றாலும் அந்த நாட்டை வாங்குவதற்கும் ஆளில்லை என்ற மிக மோசமான நிலைதான் இன்று உலகளவில் நிலவுகிறது.
படிக்க :
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், அவரவர் நாடுகளில் மக்கள் வழியில்லாமல் இருந்தாலும் கூட கடனாக இலங்கைக்கு நிதியை வாரி வழங்குகிறார்கள். இதன் மூலம் இலங்கையை கடனாளியாக்கி தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
எவ்வளவு கடன் கொடுத்தாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் ஆகவே இருக்கின்றது. மக்கள் பல மணி நேரம் மினசாரம் இல்லாமல், அரிசி, பருப்பு, பால் என அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிப்பொருள்கள் என எதையும் வாங்கக் கூட முடியாத அளவு விலைவாசி என்பது உச்சத்திற்கு போய் வாழவே வழியில்லாமல் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.
இனக்கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கடும் வன்முறைகள் மூலம் கொன்றொழித்த ராஜபக்சே கும்பல், தப்பிப்பதற்கு இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.
எனினும் கோத்தபய தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதற்கெதிரான போராட்டங்கள் ஒருபோதும் நிற்க போவதுமில்லை. ஒரு நாட்டில் என்னதான் இனவெறி, மொழிவெறி, மதவெறியைக் கிளப்பி மக்களிடம் மிகப் பெரிய பிளவினை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்திற்கு எதிராக வர்க்க ரீதியாக ஒன்று திரண்டு களம் இறங்குவர் என்பதுதான் இலங்கை காட்டும் உண்மை.
இலங்கையின் பொருளாதார நிலைமையை நோக்கி படுவேகமாக சென்று கொண்டிருக்கிறது இந்தியா. இலங்கை அரசு கூட சொந்தமாக லங்கன் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும்போது, இந்தியா தனக்கென்று சொந்தமாக விமான நிறுவனம் இல்லாத நாடாக இருக்கிறது.
அனைத்து பொதுத் துறைகளையும் தனியார்மயமாக்கி, காடு, மலை என இயற்கை வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த பாசிச கும்பலிடம் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தியாவை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி, சாதி – மத வன்முறைகளை மேற்கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – மோடி அமித்ஷா – அம்பானி – அதானி போன்ற காவி – கார்ப்பரேட் பாசிச கும்பல் வீழ்த்தப்பட்டே தீரும் என்பதற்கு மாபெரும் நம்பிக்கையாக இலங்கை திகழ்கிறது.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த பிரச்சினைக்கு காரணமான ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களாக பரிணமிப்பதை நோக்கிப் பயணிக்க வேண்டும். அத்தகைய தமிழ், சிங்கள, முஸ்லீம் என அனைத்து தரப்பு மக்களும் போராடிவரும் போராட்டங்களுக்கும் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும். அந்த வகையில் அம்மக்களின் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் !
♦ பாசிஸ்டுகள் வீழ்வர் !
♦ மக்களே வெல்வர் !

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள் | கருத்துப்படம்

தக்கலவரத்தைத் தூண்டி இடிக்கப்பட்ட டெல்லி ஜகாங்கிர்புரி முஸ்லீம் வீடு – கடைகள்; சிங்காரச் சென்னை – ஆக்கிரமிப்பின் பெயரால் இடிக்கப்பட்ட சென்னை ஆர்.ஏ.புரம் ஏழைத் தொழிலாளர்களின் குடியிருப்புகள்.

திராவிட மாடல் – ஆரிய மாடல் : இடிக்கப்படும் முஸ்லீம்கள், உழைக்கும் மக்களின் வீடுகள்

கருத்துப்படம் : வேலன்

தீக்குளித்தால் தான் திமுக அரசு செவி சாய்க்குமா? | தோழர் மருது | வீடியோ

திராவிட மாடல், சமூக நீதி என்பது இந்த நகரத்தை உருவாக்கிய மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவதில்தான் போய் முடிகிறது. இது ஏதோ ஆர்.ஏ புரத்தில் மட்டும் கிடையாது. பெத்தேல் நகர் கொளத்தூர் என பல்வேறு இடங்களில் நடக்கிறது.
ஊமை மக்களுக்கு குரல் கொடுக்க, தன் உயிரை மாய்த்துக் கொண்ட கண்னையன் போன்ற நபர்கள்தான் உழைக்கும் மக்களுக்கு காவல் தெய்வங்களாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்றமே நீர்நிலை ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. இங்கிருக்கக் கூடிய எம்.ஆர்.டி.எஸ் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு பணக்காரர்களும், பார்ப்பனர்களும், கோடீஸ்வரர்களும் கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பெயர் திராவிட மாடல், சமூகநீதி அரசு என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டு போக வேண்டும். மக்களுக்கு நீதி வேண்டும் என்றால் ஒருவர் தீக்குளித்து சாகவேண்டும் என்று ஒரு கட்டாயம் இருக்கிறது. அப்போதுதான் இந்த திராவிட மாடல் அரசு, சமூக நீதிஅரசு கொஞ்சம் செவி சாய்க்கும் என்ற ஒரு மோசமான சூழல் இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
எம்.எல்.ஏ வீட்டுகளுக்கும், எம்.பி. வீடுகளுக்கும், அமைச்சர்கள் வீடுகளுக்கு நாம் குடியேறுவோம் அப்போதுதான் இந்த அரசு இறங்கி வரும். கண்னையன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கண்டனங்களை ரெட் பிக்ஸ் செய்தி ஊடகம் ஆர்.ஏ.புரத்தில் நேரடியாக சென்று எடுத்து வெளியிட்ட இந்த காணொலியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள் !!

தூசான் நிர்வாகத்தில் சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !

தூசான் நிர்வாகத்தின் சட்டவிரோதப் போக்கினை கண்டித்து தூசான் தொழிலாளர்கள் சங்கம் மே 6- அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் தோழர் ஜி.உதயகுமார் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சந்திரமோகன், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா, ஆக்சிஸ் கிளைத்தலைவர் தோழர் பழனிவேல், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சக்திவேல், SRF எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் தோழர் தேவராஜ் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் கண்டன உரையாற்றினார். துணைத்தலைவர் தோழர் இளவரசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது.
தூசான் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசின் நடவடிக்கை தேவை என்பது ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. தங்கள் உரிமையை நிலைநாட்டும் வரை ஓயப்போவதில்லை என தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் உறுதியாக உள்ளனர்.

This slideshow requires JavaScript.


தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர் , காஞ்சி மாவட்டக்குழு.