Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 414

Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை !

Job near me – என்னருகில் வேலை ஏதும் இருக்கிறதா?

“கூகிளாண்டவர்” இது தமிழ் வலை உலகில் பதிவர்கள் செல்லமாக அழைக்கும் ஒரு வார்த்தை. அந்த அளவுக்கு கூகிள் தேடுபொறி மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்டது. எதையும் எப்போதும் எங்கும், தேடலாம் என்ற ’நம்பிக்கை’யை இணையப் பயன்பாடும் கூகிளும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது சரியா தவறா என்பது இங்கே விவாதப் பொருளல்ல.

கூகிள் தேடுபொறியில் எந்த வாரத்தை அதிகம் தேடப்படும் என்பது அடிக்கடி செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. இந்தியா என்றல்ல உலகளவில் சினிமா, பொழுது போக்கு, மருத்துவம், உடல்நலம், உணவு, நுகர்வுப் பொருட்கள், போர்னோ போன்றவை முன்னணி தேடலில் இருக்கும். செய்தி – அரசியலைத் தேடுவோர் 2 அல்லது 3 சதவீதம் வந்தால் அதிகம். தேர்தல் போன்ற பரபரப்பான காலத்தில் அது 5 அல்லது பத்து சதவீதத்தை தொடலாம்.

கூகிள் ஆண்டவர்

தற்போது வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் “Job near me” (என்னருகில் வேலை) எனும் வார்த்தையே அதிகமாக தேடப்படுகிறது. இந்த வார்த்தைதான் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படுகின்ற வார்த்தைகளில் பல மடங்கு வளர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கூகிள் தேடுபொறியில் வார்த்தைகள் அதிகம் தேடப்படுவதை எப்படி மதிப்பிடுகிறார்கள்?  ஒரு வார்த்தையை லட்சக்கணக்கானோர் தேடும் போது அது நூறு எனும் மதிப்பை அடையும். ’நூறு’ எனும் மதிப்பை அடையும் பட்சத்தில் அதன் பிரபலம் மிக அதிகம் எனப் பொருள். இதை தேடுபொறியின் மென்பொருள் அமைப்பே கண்டுபிடித்து சொல்லி விடும். அதே வார்த்தை 50 எனும் மதிப்பைப் பெற்றால், அது பாதியளவில்தான் பிரபலமாகியிருக்கிறது என்று பொருள். பிரபலமற்ற வார்த்தையின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது அதை சிலரே தேடுகிறார்கள் என்பதால்.

இந்தியாவைப் பொருத்தவரை கூகிள் தேடுபொறியில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தைதான் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வார்த்தை தேடுபொறியில் மிக அதிகமாக தேடப்படுகிறது.

தேடுபொறியில் பிரபலமாகும் வார்த்தைகளை அந்தந்த வகையில் வைத்து மதிப்பிடுகிறார்கள். சான்றாக டீசர் (Teaser) எனும் தேடல் சினிமா எனும் வகையில் வரும். அது போல ’என்னருகில்’ (Near ME) என்ற இணைப்போடு தேடப்படும் வார்த்தைகள் தனி வகையாக மதிப்பிடப்படுகிறது. இந்த வகையில் ’என்னருகில் வேலை’ (Jobs Near Me) என்பதும் சேர்கிறது. 2018-ம் ஆண்டில் இந்த “என்னருகில்” வகையில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல் வார்த்தைகளில் “என்னருகில் வேலை” எனும் தேடல் வார்த்தை இடம் பிடித்திருக்கிறது.

2004 ஜனவரியிலிருந்து 2014 மே வரை என்னருகில் வேலை என்ற வார்த்தை அவ்வளவு அதிகமாக தேடுபொறியில் வரவில்லை. அதன் பிறகு அதன் தேடல் சூடு வைத்த மீட்டர் போல அதிவேகமாக வளர்ந்திருக்கிறது.

படிக்க:
♦ வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா
♦ வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

மே மாதம் 2014 -ம் ஆண்டில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தையின் மதிப்பு ஒன்றாகும். ஜூன் மாதம் 2014-ல் இரண்டாகவும், ஏப்ரல் 2017-ல் அதன் மதிப்பு 17 ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 2018 -ம் ஆண்டில் அதன் மதிப்பு 88-ஆகவும், ஜூலை 2018-ல் அதன் மதிப்பு 100 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

உள்ளூர் அளவில் தகவல்களை தேடுவது இணையத்தில் மிகவும் பிரபலம். அதில் என்னருகில் வேலை என்ற வட்டார தேடல் நகரப் பகுதிகளிலும் தொழில்துறை மண்டலங்களிலும் பிரபலமாக இருந்திருக்கிறது. குறிப்பாக செகந்திராபாத், தானே, மும்பை, ஃபரிதாபாத், காஸியாபாத், பிம்ப்ரி சிஞ்ச்வாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குர்கான் நகரங்களில் இந்த தேடல் அதிகம் நடந்திருக்கிறது.

பொதுவில் கடந்த நான்கு ஆண்டுகளாக ’என்னருகில்’ என்ற தலைப்பில் தேடுகின்ற பழக்கம் அதிகரித்திருக்கிறது. சான்றாக என் அருகில் இருக்கும் செல்பேசி கடைகள், என் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், என் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் என்பதாக அந்த தேடல் வழக்கம் அதிகரித்திருக்கிறது.

இதை அடுத்து கூகிள் நிறுவனம் ஏப்ரல் 2018-ம் ஆண்டில் அதன் இணையதளத்தில், வேலை தேடுவதற்காக தனியான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்த உடன் நடந்த மாற்றத்தை கூகுள் நிறுவனமே தெரிவிக்கிறது. அதன்படி 2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் வேலை தேடுகின்ற இந்த தேடல் முயற்சி முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 45% வளர்ந்திருக்கிறது. அதிலும் 50 % மேற்பட்ட வேலை தொடர்பான விசாரணைகள் செல்பேசியிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வருடத்தை முழுமையாக வைத்துப் பார்த்தால் 90 % வேலை தேடுகின்ற விசாரணைகள் செல்பேசியில் மட்டும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் செல்பேசி மூலமாகவே செய்கிறார்கள் என்பதால் இது ஆச்சரியம் இல்லை.

இந்த சொற்றொடரின் தேடல் கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 4, 5 ஆண்டுகளாக அதிகரித்திருப்பது, வெறுமனே தேடல் அதிகரித்திருப்பதை மட்டும் நமக்குத் தெரிவிக்கவில்லை. நாட்டில் அதிகரித்திருக்கும் கைபேசி மற்றும் இணைய பயன்பாடு வளர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி செப்டம்பர் 2018 வரையிலுமான நாட்டின் ஒட்டுமொத்த தொலைதொடர்பு அடர்த்தி, 89.51%-ஆக உயர்ந்துள்ளது.  இது 2013-ம் ஆண்டில் இருந்த 70.63%-ஐ விட அதிகமாகும்.  கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அதிகரித்திருக்கும் தொலைதொடர்புப் பயன்பாடே இந்த உயர்வுக்கு அடிப்படையாகும்.

ஜூம்லாக்களை அள்ளி விடும் மோடிஜி

சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்த ஆய்வு முடிவிலிருந்து என்ன தெரிகிறது? செல்பேசி பழக்கம், மக்களிடம் இணையப் பழக்கம், தேடுபொறியை அதிகம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என்கிறீர்களா? இல்லை. மோடியின் ஆட்சியில் இங்கே வேலையில்லாத பட்டாளம் பெருமளவு சேர்ந்ததையே இது காட்டுகிறது. அனைவரும் வேலையில் இருந்தால் இந்த தேடல் என்னருகில் சினிமா தியேட்டர், என்னருகில் உணவகம், பொழுதுபோக்கு என்றிருந்திருக்கும். ஆனால் என்னருகில் என்ன வேலை இருக்கிறது என்பதே இளைஞர்களின் கவலை!

ஆக என்ன வேலை, என் அருகே எதாவது வேலை இருக்கிறதா என்ற கவலையோடுதான் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு ஃபோனோடு திரிகிறார்கள். ஒருவேளை மோடி சொன்ன டிஜிட்டல் இந்தியா என்பது இதுதானோ?

மதன்
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !

சென்னை பாரீஸ் கார்னர் ஆண்டர்சன் மற்றும் மலையபெருமாள் வீதியின் உள்ளே நுழைந்தால் பெண்கள் கூடையிலும், தரையிலும் மலைபோல் அடுக்கிய பழங்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்… கடுமையான நெரிசல்.. அந்த நேரத்தில் ஏதெனும் வாகனம் வந்து விட்டால் கூடையில் உள்ள பழங்களை எல்லாம் கையில் தூக்கி வைத்துக் கொண்டு வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். தப்பித்தவறி அந்தச் சூழலை புகைப்படம் எடுத்தால் அவர்கள் தடுமாறி விடுகிறார்கள்.

“ஏற்கனவே இந்த இடத்தில் கடை போட்டு பிழைப்பது இங்கே இருப்பவர்களுக்கும் போலிசுக்கும் பிடிக்க வில்லை… நீங்கள் எதாவது எழுதி விட்டால் நாங்கள் வேறு எங்கு செல்வது?” என்று உடன் கேட்கிறார்கள். ஏற்கனவே சாலையோர கடைகளை எல்லாம் தூக்கி வீசியிருக்கிறது அரசு. அவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்பது நமக்கு தெரியாது.

இந்த பாதை வியாபாரிகளை கடந்து உள்ளே சென்றால் கடைகளுக்கு செல்ல முடியாதவாறு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பார்கள். மற்றொருபுறம் கடைகளே தெரியாத வண்ணம் பல பொருட்களை மாட்டியும், கீழே கொட்டியும்  வைத்திருக்கிறார்கள்.

படிக்க :
♦ சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
♦ கண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க !

திருமண அழைப்பிதழ் கார்டுகள், எழுதுபொருட்கள், ப்ளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பைகள், கட்சிக்கொடிகள், திருமண பைகள், அலங்கார  பிளாஸ்டிக் பூக்கள் என்று விதவிதமாக கண்ணில்படும். மொத்த விற்பனையிலிருந்து சில்லரை விற்பனை வரை உண்டு. இன்றைக்கு 3டி ப்ரிண்டிங் வளர்ச்சி, சமூக வளைதளங்கள் மூலம் அழைப்பு விடுப்பது, பிளாஸ்டிக் மீதான தமிழக அரசின் தடை, ஜி.எஸ்.டி என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச்சூழலில் இதனையெல்லாம் எப்படி சமாளிக்கிறார்கள்…?

ஜேம்ஸ், ஹிந்துஸ்தான் பேப்பர் ஸ்டேசனரி.

நாங்க இங்க 1964-இல் இருந்து கடை வைத்துள்ளோம். அப்பொழுதிருந்தே ஒலிம்பிக் மற்றும் ஸ்டார் போன்ற கடைகள் இங்கு பிரபலம்தான். ஆரம்பத்தில் இங்கே ஸ்டேசனரி பொருட்கள்தான் பிரபலம். இப்பொழுதுதான் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் பாக்கிஸ்தான் மற்றும் சிந்தி ஆட்கள் வந்து கடை வைத்திருந்தார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்பொழுது எல்லாம் மாறி விட்டது. ஸ்டேசனரி கடைகள் அதிகம் இருப்பதால் விற்பனை மந்தமாக இருந்ததால் 1988 -க்கு பிறகு நானும் தொழிலை மாத்தி விட்டேன். பேக்கிங் மெட்டிரியல் அயிட்டதிற்கு மாறிவிட்டேன். இங்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்த 1500 பொருட்களுக்கு மேல் உள்ளது. இதனை எல்லாம் திருச்சி, செங்கல்பட்டு, வேலூர், போன்ற ஊர்களில் இருந்து வந்து மொத்தமாக வாங்குவார்கள். ஆனால் முன்புபோல் இப்பொழுது யாரும் வருவதில்லை. ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு தொழில் பாதிப்படைந்துள்ளது.

முன்பு ரூ.15,000 வரும் என்றால் இப்பொழுது ரூ.10,000 மட்டுமே வருகிறது. ஒரு காலத்தில் இங்கே மட்டுமே கிடைத்த பொருட்கள் இப்பொழுது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதற்காக பாரீஸின் மதிப்பு குறைந்து விடவில்லை…

சித்திக், வெட்டிங் கார்டு. (புகைப்படம் தவிர்த்தார்)

“வெட்டிங் கார்ட் ஒரு பாரம்பரிய வியாபரம். இது வருஷத்துல ஒரு முறை பன்னுற செலவு. எல்லோரும் பாத்துபாத்துதான் செய்வாங்க. பழகுன இடத்துக்குதான் வருவாங்க. இங்க வரும்போதே, எங்க அப்பா இங்க தான் கார்டு அடிச்சார்… நானும் வறேன்னு சொல்லுவாங்க. பொண்ணு, பேத்தி, என்று வழி வழியா வரவங்கதான் என் கஸ்டமர். என்கிட்ட 2 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வெட்டிங் கார்டு இருக்கு. இருந்தாலும் பாக்சு டிசைன் தான் இப்ப லெக்சுரியா வாங்குறாங்க… அதுதான் பேஷன். உலகம் வேற மாதிரி மாறி போயிடுச்சி..

டிஜிட்டல், 3டி ப்ரிண்டிங்’னு வேகமா முன்னேறி கிட்டே போகுது. அதுக்கு ஏத்த மாதிரி நாங்களும் அப்டேட் பன்னிக்கிறோம். அடாப்ட் ஆயிடுறோம். பிசினஸ் எப்பவுமே வெளியே போவுதுன்னா அடுத்தவன் சரியா இருக்கான்னு அர்த்தம் இல்ல. நாம சரியா செய்யலன்னுதான் அதுக்கு அர்த்தம். கஸ்டமர் சர்விஸ் தான் இந்த பிசினசுக்கு ரொம்ப முக்கியம். சமூக வலைத்தளம் வந்தாலும் இதனோட மதிப்பு குறைவதில்லை. அதன் மூலம் அழைப்பு கொடுக்கிறவங்களோட நிகழ்ச்சிக்கு யாரும் போக மாட்டாங்க. இதுதான் உண்மை. அதேமாதிரி, அமேசான். பிளிப் கார்டு எது வந்தாலும்  இந்த பிசினசை எதுவும் பன்ன முடியாது.” என்கிறார்.

ராம்நாத்

“திருமண அழைப்பிதழை எங்கயோ வாங்குற சாதாரண பொருள் இல்ல. ஒரு மரியாதைக்குறிய பொருள்…. இது மரியாதைக்குறியவங்களுக்கு கொடுக்கிற அயிட்டம். அதால இந்த பிசினஸ் நிக்கிது. எங்களுக்கு தமிழ்நாடு முழுக்க கஸ்டமர் இருக்காங்க. இங்க இருந்து மதுரை, திருவனந்தபுரம் கூட அனுப்புறோம். வெட்டிங் கார்டுல நாங்க ஸ்பெசலிஸ்ட். எங்க டிசைன நீங்க வேற எங்கயும் பார்க்க முடியது.”

வசந்த் மாலே, பிளாஸ்டிக் தட்டுகப் விற்பனை.

“இங்க பிளாஸ்டிக் அயிட்டமான கப், பிளேட், டிஸ்யு பேப்பர், கல்யாணம், பார்ட்டி எல்லாத்துக்கும் தேவையானது கிடைக்கும். ஆனா, பிசினஸ்தான் டல்லா இருக்குது, காரணம் இந்த அமேசான், பிளிப் கார்ட் இவனுங்க தான். இவனுங்களை அடக்கி வைக்கனும். இவனுங்க நேரா கஸ்டமருக்கு பொருள் கொடுப்பதை மோடி நிறுத்தனும். எங்களைப் போன்ற டீலர் ஷிப்புக்கு தான் பொருட்கள் தரனும். அப்ப தான் வியாபரிங்க பொழக்க முடியும். நானும் பத்து பேருக்கு வேலை கொடுக்க முடியும். இப்ப என்ன நடக்குது? மொத்தமா அவனே சுருட்டிக்கிறான். குறுக்க எவனும் இல்ல. பணம் இங்க ரொட்டேசன் ஆகவே இல்ல.

வியாபாரிங்ககிட்ட வந்தா, சின்ன வியாபாரில இருந்து பெரிய வியாபாரிங்க வரைக்கும் கை மாறும். பணம் புரளும். எல்லாருக்கும் வேலை கிடைக்கும். ஆனா அதுவா நடக்குது…? அவனோட கொள்ளைதான் நடக்குது. எப்படி இருந்தாலும் அடுத்த வாட்டி மோடிஜி தான் ஆட்சிக்கு வரனும்.

இந்த ஆட்சியில கஸ்டம் இருக்கத்தான் செய்யுது.. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் இதனால பாதிப்பு இருக்கதான் செய்யுது. அதெல்லாம் மோடி திருத்திக்கனும். திருத்திக்குவாரு. நாட்டுக்கு ஒரு மரியாதை இருக்குன்னா அது மோடியால தான். நம்ம நாட்ட வெளி நாட்டுகாரன்கிட்ட தூக்கி நிறுத்திட்டாரு. இப்ப நம்மளப் பார்த்தாலே எல்லாம் பயப்படுறாங்க.”

மிட்டாலால், பிளாஸ்டிக் தட்டுகப் விற்பனை.

“15 வருஷமா இங்க கடை போட்டிருக்கேன். இப்ப மாதிரி கஸ்டம் எப்பவும் இல்ல. இதுக்கே லைன் பிசினசுக்குத்தான் நான் பொருள் கொடுக்கிறேன். சிறு வியாபாரிங்க தான் என்  கஸ்டமர். அவங்களுக்கு வியாபரம் இல்லன்னு வாங்குறதை குறைக்கிறாங்க.

இன்னொருபக்கம் வேலைக்கு ஆள் பிரச்சனை பெரிசாகி விட்டது. யாரும் வேலைக்கு கிடைக்கிறது இல்ல. எல்லாரும் லைட் வெயிட் வேலைக்கு போயிடுறாங்க. துணிக்கடை, மொபைல் கடைன்னு போறாங்க. மூட்ட தூக்க யாரும் ரெடி இல்ல. இந்த வேலை கொஞ்சம் கஸ்டம்தான். உள்ள நின்னா உடம்பு கொதிக்கும். சூடு… ஆஸ்துமா பிரச்சனை வரும். அதனாலயே பசங்க வந்த பத்து நாள்ல போயிடுறாங்க. பேஜாராக்கீது.”

அப்பாஸ், பை கடை.

“எங்க பிசினஸ் எல்லாம் ரொம்ப சின்ன பிசினஸ் சார். 50,100,150 இந்த ரேஞ்சிக்குதான் விக்கிறோம். வேற எந்த பொருளும் இல்ல. இது கிஃப்டு பேக்… மொத்தமா வாங்கிக் கொடுக்கும் போது, பரிசு பொருள் போட்டு கொடுக்க இந்த பை வாங்குவாங்க. விக்கிற விலைவாசியில உள்ளதையே வாங்க முடியல. இதுல கிஃப்டு எங்க வாங்குறது. ஜனங்க தடு மாறுராங்க. வியாபரிங்க நாங்களே இன்னும் கொஞ்ச நாள்ல பிச்ச எடுக்க தான் போவனும்.

மோடி எங்க கிட்ட எதையும் மிச்சம் வைக்க மாட்டார்போல. நம்மளுக்கு பேங்குல போடுரேன்னு நம்ம பணத்தையே அபராதம்னு கோடி கோடியா வாங்கிக்கிறானுங்க… ஊரெல்லாம் கொள்ளை பெருகி போச்சின்னு சொல்லுறோம். ஆனா இதைவிட மோடி அடிக்கிற கொள்ளைதான் பெரிசா ஆயிடுச்சி. அதுவும் சவுத் இண்டியன்னா சுத்தாமா ஒதுக்குறாங்க…. அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் தாங்கனும்னு தெரியல. அடுத்த எலக்சன் வரைக்குமா..?”


நீங்களும் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்:

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை !
தேநீர்க் கடைகளில் தொழிலாளிகள், முதலாளிகள், உணவு பதார்த்தங்கள், வாடிக்கையாளர்கள், கடையின் வடிவமைப்பு, அரட்டை, என பல அம்சங்கள் இருக்கின்றன. அனுப்புங்கள், காத்திருக்கிறோம்!

என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 35 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
சாப்பாடு முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக் கொடுத்தான். அவர்களுக்குப் பின்னால் இருள் திரைபோலத் தொங்கி, வானத்தையும் தோப்பையும் மறைத்து நின்றது. அந்த நோயாளி தனது அகன்று விரிந்த கண்களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இடைவிடாது இருமினான். அவனது உடம்பே குலுங்கியது. நோயினால் பாழ்பட்டுப்போன உடம்பிலிருந்து அவனது வாழ்வின் மிச்ச சொச்சங்கள் அனைத்தும் பொறுமையிழந்து விடுபெற முயன்று போராடுவதுபோல இருந்தது. நெருப்பின் ஒளி அவனது முகத்தில் விளையாடியது. எனினும் அவனது உயிர்ப்பற்ற சருமத்தில் அந்த ஒளி எந்த உணர்ச்சியையும் உருவேற்ற இயலவில்லை. அவனது கண்கள் மட்டும் அணையப்போகும் நெருப்பைப்போல் பிரகாசித்தன.

”சவேலி, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொள்வது நல்லது” என்று அவன் பக்கமாகச் சாய்ந்தவாறு சொன்னான் யாகவ்.

“ஏன்?” என்று அந்த நோயாளி சிரமத்தோடு கேட்டான். ”நான் இங்கேயே இருக்கிறேன். மனிதர்களோடு இருப்பதற்கு எனக்கு அதிக காலமில்லை.”

அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். சிறிது நேரம் கழித்து வெளுத்துப்போன புன்னகையுடன் பேசினான்:

“உங்களோடு இருப்பதே எனக்கு நல்லது. உங்களைப் பார்க்கும்போது, பேராசையின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களுக்காக, கொள்ளையிடப்பட்டவர்களுக்காக நீங்கள் பழிக்குப்பழி வாங்குவீர்கள், வஞ்சம் தீர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.”

அவனுக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவனது தலை பலமற்றுச் சோர்ந்து மார்பின் மீது சரிந்தது. சீக்கிரமே அவன் தூங்கிப் போய்விட்டான். பின் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகக் சொன்னான்.

”இவன் எப்போதும் இங்கே வந்து உட்கார்ந்து இதையே, இந்த மனிதனின் ஏமாற்றத்தைப் பற்றியே பேசுவான். அவனது இதயம் முழுவதிலும் இந்த ஏமாற்றம்தான் நிரம்பியிருக்கின்றது. அந்த உணர்ச்சி அவனது கண்களையே திரையிட்டுக் கட்டிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றுகிறது. அதைத் தவிர வேறு எதையுமே அவன் பார்ப்பதில்லை உணர்வதில்லை.”

“அவன் வேறு என்னத்தைத்தான் பார்க்க வேண்டும்?” என்று ஏதோ சிந்தித்தவளாய்க் கேட்டாள் தாய். ”தங்களது முதலாளிகள், மானாங்காணியாகவும் துராக்கிரமமாகவும் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்காக, தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் உழைத்து உழைத்து, அந்த உழைப்பினாலேயே கொல்லப்பட்டுச் சாகிறார்கள் என்றால், இதைவிட உனக்கு வேறு என்ன விஷயம்தான் வேண்டும் என்கிறாய்?”

“ஆனால் இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது எரிச்சலாயிருக்கிறது” என்றான் இக்நாத். “இவன் பேச்சை ஒரு தடவை கேட்டுவிட்டாலே அதை மறக்க முடியாது; மறக்க முடியாத அதே விஷயத்தையே அவன் திருப்பித் திருப்பித் தினம் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறானே.”

”ஆனால், இந்த ஒரே விஷயத்தில் சகல விஷயங்களுமே, வாழ்க்கை முழுவதுமே அடங்கிப் பொதிந்திருக்கிறது!” என்று சோகத்தோடு கூறினான் ரீபின். ”அதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நானும் இந்தக் கதையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும்கூட, எனக்குச் சமயங்களில் சில சந்தேகங்கள் கூடத் தோன்றுவதுண்டு. பணக்காரர்களையும் ஏழைகளையும், – எல்லோரையுமே ஒரு மாதிரியாகவே எண்ணிப் பார்ப்பதற்கும், மனிதனது தீய குணங்களையும் முட்டாள்தனங்களையும் நம்ப விரும்பாதிருப்பதற்கும் சில சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். பணக்காரர்கள்கூடத் தம்மை மறந்து செல்ல முடியும். சிலர் பசியால் குருடாகிப் போகிறார்கள். சிலர் தங்கத்தால் குருடாகிப் போகிறார்கள். அதுதான் சங்கதி! ‘ஓ மனிதர்களே, சகோதரர்களே! உதறியெழுந்து வாருங்கள். தன்னலம் கருதாது நேர்மையோடு சிந்தியுங்கள்’ என்று நினைக்கத் தோன்றும்.”

அந்த நோயாளி அசைந்து கொடுத்தான், கண்களைத் திறந்தான், பிறகு தரையில் படுத்துவிட்டான். யாகவ் வாய் பேசாது எழுந்திருந்து வீட்டிற்குள் சென்று ஒரு கம்பளிக்கோட்டைக் கொண்டுவந்து அந்த நோயாளியைப் போர்த்தி மூடினான்; மீண்டும் சோபியாவுக்கு அருகில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன.

குதூகலம் நிறைந்து கும்மாளியிடும் நெருப்பு தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த கரிய உருவங்களை ஒளிரச் செய்தது. நெருப்பின் இரைச்சலோடும், வெடிக்கும் சத்தத்தோடும், அந்த மனிதர்களின் குரல்களும் சேர்ந்து கலந்து ஒலித்துக்கொண்டிருந்தன.

உயிர் வாழும் உரிமைக்காகச் சகல தேசத்திலுமுள்ள மக்கள் அனைவரும் நடத்துகின்ற போராட்டங்களைப் பற்றியும், ஜெர்மனி தேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றியும், அயர்லாந்து நாட்டு மக்களின் பஞ்ச நிலையைப் பற்றியும், இடைவிடாது அடிக்கடி நடத்தப்படும் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் சுதந்திரப் போராட்டங்களைப் பற்றியும் சோபியா அவர்களுக்கு எடுத்துச் சொன்னாள்.

இருள் திரை படிந்து கவிந்த அந்தத் தோப்பு வெளியிலே, மரங்கள் அடர்ந்து செறிந்த அந்த வெட்ட வெளியிலே, இருண்ட வானமே மேல் முகடாக விளங்கும் அந்த அத்துவானப் பிரதேசத்தில், நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன. சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட வீரர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டன. போராட்டங்களால் களைத்து, போராட்டங்களால் ரத்தம் சிந்தித் தோய்ந்த ஒவ்வொரு நாட்டு மக்களும் வரிசை வரிசையாக அங்கு வந்து சென்றார்கள்.

அந்தப் பெண்ணின் அடங்கிய குரல் மெதுவாக ஒலித்தது. கடந்த காலத்தின் எதிரொலி போன்ற அந்தக் குரல் அவர்களது நம்பிக்கைகளைக் கிளறிவிட்டது; தீர்மானங்களைத் தூண்டிவிட்டது. பிற தேசங்களிலுள்ள தங்கள் சகோதரர்களைப் பற்றிய கதைகளைக் கேட்டவாறே அந்த மனிதர்கள் அசையாது வாய் பேசாது உட்கார்ந்திருந்தனர். உலகத்தின் சகல மக்களும் எந்த ஒரு புனித லட்சியத்துக்காகப் போராடுகிறார்களோ, அந்த லட்சியம் – சுதந்திரத்துக்காக நடைபெறும் இடையறாத முடிவற்ற போராட்டம் – அவர்களுக்கு வரவரத் தெளிவாகியது. அந்தப் பெண்ணின் மெலிந்த வெளுத்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அந்தப் போராட்டமும் போராட்ட லட்சியமும் அவர்களுக்குப் புரிந்து வரலாயின. அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களையும், விருப்பங்களையும், தம்மால் அறிய முடியாத வேற்று இன மக்களிடம் கண்டார்கள். அந்த மனிதர்களிடமிருந்து தங்களை ஒரு கரிய ரத்தம் தோய்ந்த கடந்த காலத்தின் இருள் படிந்த திரை பிரித்து நிற்பதாகவும் கண்டார்கள்; தங்களது மனத்தாலும் இதயத்தாலும் அவர்கள் இந்தப் பரந்த உலகம் முழுமையோடும் தொடர்பு கொண்டார்கள்.

ஒரு புதிய ஒளி நிறைந்த ஆனந்த வாழ்க்கைக்காக, தங்களது ரத்தத்தையே சிந்தி அர்ப்பணித்து, உலகத்திலே சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதியான கொள்கைக்காக, வெகுகாலமாக ஒன்றுபட்டு நின்று, அந்த லட்சியத்தின் வெற்றிக்காக சகலவிதமான பெருந்துன்பங்களையும் தாங்கிச் சகித்து நின்ற பல்வேறு நாட்டு மக்களினத்திலும் அவர்கள் தங்கள் தோழர்களைக் கண்டார்கள். சகல மக்கள் மீதும் உளப்பூர்வமாகத் தோன்றும் ஒரு புதிய பந்தபாச உணர்ச்சி சுடர்விட்டு எழுந்தது. உலகத்துக்கே ஒரு புதிய இதயம் – எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீராத ஆவலுணர்ச்சியால் துடிதுடிக்கும் ஒரு புதிய இதயம் – பிறந்துவிட்டது!

“சர்வ தேசங்களிலுமுள்ள சகல தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்று, “போதும் போதும் இது போன்ற வாழ்க்கை இனி எமக்குத் தேவையில்லை’ என்று கோஷித்து விம்மும் காலம் ஒருநாள் வரத்தான் போகிறது” என்று நிச்சய தீர்க்கத்தோடு கூறினாள் சோபியா. “தங்களது பேராசையின் பலத்தைத் தவிர, வேறு எந்தவிதமான நிஜ பலத்தையும் பெற்றிராத இன்றைய உலகின் ‘பலசாலிகள்’ அன்றைய தினத்தில் அழிக்கப்படுவார்கள். இந்த உலகம் அவர்களது காலடியை விட்டு நழுவி மறையும். அவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்கு எந்த உதவியும், எந்த மார்க்கமும் இருக்கவே இருக்காது!”

“அவ்வாறு நேரப்போவது உறுதி!” என்று தலைதாழ்த்திச் சொன்னான் ரீபின். “நாம் மட்டும் நம்மிடமுள்ள சகலவற்றையும், நம்மையுமே கொடுக்க, தியாகம் செய்யத் தயாராயிருந்தால், நம்மால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்க முடியாது!”

தாய் தன் புருவங்களை உயர்த்தி, உதடுகளிலே வியப்பு நிறைந்த ஆனந்தப் புன்னகை தவழ, அந்தப் பேச்சைக் கேட்டாள். இயற்கைக்கு முற்றும் பொருந்தாதது போலத் தோன்றிய சோபியாவின் குணம் – எதையுமே அளவுக்கு மீறிய அநாயாசத்தோடு வெடுக்கென்று தூக்கியெறிந்து வெட்டிப் பேசுவதாகத் தோன்றிய அவளது குணம் – அவள் கூறிய ஆர்வமிக்க, தங்கு தடையற்ற கதையின் போக்கிலே அழிந்து மறைந்துபோய்விட்டது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். அன்றைய இரவின் அமைதியும், நெருப்பின் விளையாட்டும், சோபியாவின் முகமும் அவளுக்குப் பிடித்துப்போய்விட்டன; ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்துப்போன விஷயம், அந்த முஜீக்குகள் அனைவரும் காட்டிய பரிபூரணமான ஈடுபாட்டு உணர்ச்சிதான்! அவர்கள் அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள். சர்வதேசங்களோடும் தங்களை இணைத்துப் பிணைக்கும் பட்டுக்கயிறு போன்ற அந்தக் கதை. இடையிலே அறுந்துவிடக்கூடாதே என்ற பயமும் அந்த இடையறாத கதையின் போக்குத் தடைப்பட்டு நின்றுவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்புமே அவர்களை அப்படி அசையாதிருக்கச் செய்தன. இடையில் மட்டும் அவர்களில் யாராவது ஒருவன் எழுந்திருந்து அரவமே இல்லாமல் ஒரு விறகுக்கட்டையை எடுத்து நெருப்பில் மெதுவாகப் போடுவான். உடனே தீப்பொறிகள் தெறித்துச் சிதறும்; புகைச் சுழல் மண்டியெழும்பும். உடனே அவன் தன் கைகளை வீசி அந்தத் தீப்பொறிகளை விலக்குவான். அந்தப் பெண்கள் பக்கமாகப் புகை மண்டாதபடி விசிறிவிடுவான்.

இடையிலே யாகவ் எழுந்திருந்து அமைதியாகச் சொன்னான்:

“கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி வையுங்கள்.”

இப்படிக் கூறிவிட்டு அவன் வீட்டுக்குள்ளே ஓடிப்போய் சில துணிமணிகளைக் கொண்டு வந்தான், பிறகு அவனும் இக்நாதுமாக, அந்தத் துணிகளைத் தங்கள் விருந்தாளிகளின் தோள்மீதும் கால்மீதும் போர்த்தி மூடினார்கள். பிறகு சோபியா மீண்டும் பேசத் தொடங்கினாள். தங்களது வெற்றி தினத்தைப் பற்றிய நினைவுச் சித்திரத்தை வருணித்தாள்; தமது சொந்த பலத்தின்மீது அவர்கள் நம்பிக்கை விசுவாசம் கொள்ளும்படி தூண்டிவிட்டாள்; உண்டு கொழுத்து மதர்த்துப்போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைப்பதற்காக, தங்களது உழைப்பையும் வாழ்வையும் விழலுக்கு இறைத்துக்கொண்டிருக்கும் உலக மக்களோடு, இவர்களும் ஒன்றுகலந்து ஏகத்தன்மை பெற வேண்டும் என்ற அந்தரங்க உணர்ச்சியைக் கிளறித் தூண்டிவிட்டாள். சோபியாவின் வார்த்தைகளால் தாய் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. ஆனால், அவள் சொல்லிய விவரங்களால் அவர்கள் அனைவரது உள்ளத்திலும் எழும்பிய ஆழ்ந்த உணர்ச்சி தாயின் உள்ளத்திலும் நிறைவைப் பொழிந்தது. அன்றாட உழைப்பினால் அடிமைப்பட்டுத் தளையிட்டுக் கிடக்கும் மக்களுக்கு நேர்மையான சிந்தனையையும், சத்தியத்தையும், அன்பையும் பரிசாகக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற காரணத்துக்காக, தங்களது வாழ்க்கையையே துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கி அர்ப்பணித்தவர்களின்மீது ஒரு மனப்பூர்வமான நன்றியுணர்ச்சி அவள் உள்ளத்திலே நிரம்பி நின்றது.

”கடவுள் அவர்களுக்கு அருள் செய்யட்டும்” என்று தன் கண்களை மூடித் தனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டாள் தாய்.

அருணோதயப் பொழுதில் தான் களைத்து ஓய்ந்துபோன சோபியா தன் பேச்சை நிறுத்தினாள். நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி சிந்தனையும் பிரகாசமும் தோன்றும் முகங்களோடு இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

”நாம் புறப்படுவதற்கு நேரமாகிவிட்டது” என்றாள் தாய்.

“ஆமாம்” என்றாள் சோபியா.

அந்த இளைஞர்களில் ஒருவன் உரத்துப் பெருமூச்செறிந்தான். ”நீங்கள் போவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” என்று வழக்கத்துக்கு மாறான மெல்லிய குரலில் சொன்னான் ரீபின்; ”நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். அது ஒரு பெரிய விஷயம் – மக்களுக்கு ஒருமையுணர்ச்சியை ஊட்டுவது பெரிய விஷயம்! லட்சோப லட்சமான மக்களும் நாம் என்ன விரும்புகிறோமோ, அதையே விரும்புகிறார்கள் என்பதை அறிய நேரும்போது, அந்த உணர்ச்சி நம் இதயத்தில் அன்புணர்ச்சியே ஒரு மாபெரும் சக்திதான்!”

“ஆமாம். நீ அன்பு செய். அவன் உன் கழுத்தை வெட்டட்டும்” என்று கூறிச் சிரித்துக்கொண்டே எழுந்தான் எபீம். “சரி, மிகயீல் மாமா, யார் கண்ணிலும் படுவதற்கு முன்பே இவர்கள் போய்விடுவதுதான் நல்லது. அப்புறம் நாம் இந்தப் பிரசுரங்களைப் பரப்பிவிடத் தொடங்கியவுடனேயே அதிகாரிகள் இவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முனைவார்கள். ‘இங்கே வந்தார்களே, அந்த இரு யாத்திரிகர்கள், ஞாபகமிருக்கிறதா?’ என்று பிறகு யாராவது கண்டவர்கள் சொல்லித் தொலைக்கப் போகிறார்கள்……”

“அம்மா, நீ எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி” என்றான் ரீபின். “உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவெலைப் பற்றியே ஞாபகம் வருகிறது; நீ எவ்வளவு நல்ல சேவை செய்கிறாய்!”

இப்போது ரீபின் சாந்த குணத்தோடு இருந்தான். மனம்விட்டுப் புன்னகை புரிந்தான். காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான். அவனது பெரிய தோற்றத்தைப் பார்த்தவாறே தாய் அன்போடு கூறினாள்.

“நீ உன் உடம்பில் ஏதாவது போர்த்திக்கொள். ஒரே குளிராயிருக்கிறது.”

“என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே” என்றான் அவன்.

அந்த மூன்று இளைஞர்களும் நெருப்பைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்; அவர்களது காலடியிலே அந்த நோயாளி கம்பளிக் கோட்டினால் போர்த்தப்பட்டுக் கிடந்தான். வானம் வெளிறிட்டது. இருட்படலம் விலகிக் கரைந்தது. சூரியனின் வரவை நோக்கி இலைகள் படபடத்தன.

“நல்லது. நாம் விடை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே தன் கரத்தை சோபியாவிடம் நீட்டினான் ரீபின். ”சரி, நகரில் உங்களை எங்கு கண்டுபிடிப்பது?”

”நீ என்னைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள் தாய்.

அந்த இளைஞர்கள் மூவரும் மெதுவாய் சோபியாவிடம் வந்து, அசடு வழியும் நட்புரிமையோடு அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அருமையான, அன்பான, அந்தரங்கமான இன்ப உணர்ச்சிக்கு ஆளானார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த உணர்ச்சி அதனது புதுமையினால் அவர்களைக் கலங்கச் செய்வது போலத் தோன்றியது. அந்த இளைஞர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தூக்கம் விழித்துச் சிவந்துபோன தன் கண்களால் சோபியாவைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்.

“போவதற்கு முன்னால், கொஞ்சம் பால் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டான் யாகவ்.

”பால் இருக்கிறதா?” என்றான் எபீம்.

“இல்லை” என்று கூறிக்கொண்டே, தலையைத் தடவினான் இக்நாத்: ”நான் அதைச் சிந்திவிட்டேன்.”

அவர்கள் மூவரும் சிரித்தார்கள்.

அவர்கள் பாலைப் பற்றித்தான் பேசினார்கள். என்றாலும் அவர்கள் வேறு எதைப்பற்றியோ சிந்தித்துக்கொண்டிருப்பதாக, தன் மீதும் சோபியா மீதும் மனம் நிறைந்த பரிவோடும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது. இந்த நிலைமை சோபியாவின் உள்ளத்தைத் தொட்டுச் சிறு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. அவளும் அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க முடியாமல், குன்றிப்போனாள். அவளால் பின்வருமாறுதான் சொல்ல முடிந்தது.

“நன்றி, தோழர்களே!”

அந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவள் தங்களைப் பார்த்துச் சொன்ன அந்த வார்த்தை ஓர் ஊஞ்சலைப் போன்று கொஞ்சங் கொஞ்சமாக ஆகாயத்தில் தூக்கிச் செல்வதுபோல் அவர்களுக்குப் பட்டது.

அந்த நோயாளி திடீரெனப் பலத்து இருமினான். அணைந்து கொண்டிருந்த நெருப்பில் கரித்துண்டுகள் கனன்று மினுமினுக்கவில்லை.

“போய்வாருங்கள்” என்று அமைதியாகக் கூறினார்கள் முஜீக்குகள். அந்தச் சோகமயமான வார்த்தை அப்பெண்களின் காதுகளில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.

அவர்கள் மீண்டும் அந்தக் காட்டுப்பாதை வழியாக அருணோதய காலத்தின் பசப்பொளியில் அவசரமேதுமின்றி நிதானமாக நடந்து சென்றார்கள்.

“இங்கு, எல்லாம் எவ்வளவு அருமையாயிருந்தது!” என்று சோபியாவுக்குப் பின்னால் நடந்து கொண்டே வந்த தாய் சொன்னாள்!” எல்லாம் சொப்பனம் மாதிரி இருக்கிறது. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்! உண்மையைத் தெரிந்து கொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய திருநாளன்று மக்களெல்லாம் அதிகாலைப் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்தில் கூடியிருப்பது போலவும், மதகுரு இன்னும் வராதது போலவும், எங்குமே இருளும் அமைதியும் சூழ்ந்திருப்பது போலவும், அப்போது நம் உடம்பு தவியாய்த் தவிப்பது போலவும், மக்கள் வந்து நிறைந்து கொண்டே இருப்பது போலவும் தோன்றுகிறது. அந்தத் தேவாலயத்திலுள்ள விக்ரகத்தின் முன்னால் யாரோ விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள்; கடவுளின் இல்லத்துக்கு ஒளி வருகிறது. இருள் கொஞ்சங் கொஞ்சமாக விலகியோடுகிறது.”

படிக்க:
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

”எவ்வளவு உண்மை என்று உவகையோடு சொன்னாள் சோபியா. “இங்கு மட்டும்தான் கடவுளின் இல்லம் உலகம் முழுவதையுமே தழுவி நிற்கிறது!”

“உலகம் முழுவதையுமா?” என்று தலையை அசைத்துச் சிந்தித்துக்கொண்டே சொன்னாள் தாய். “நம்புவதற்கே முடியாத அவ்வளவு பெரிய உண்மை இது. சோபியா! நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள். அருமையாயிருந்தது. உங்களை அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்திருந்தேன்.”

சோபியா ஒரு கணம் மெளனமாக இருந்தாள்; பிறகு அமைதியோடும் சோர்வோடும் சொன்னாள்.

“அவர்களோடு இருந்தாலே நாமும் எளிமை பெற்றுவிடுகிறோம்.”

அவர்கள் இருவரும் ரீபினைப் பற்றியும் அந்த நோயாளியைப் பற்றியும், கவனம் நிறைந்த மெளனமும், விருந்தாளிகளுக்கு வேண்டிய சின்னஞ்சிறு சேவைகளில்கூட மிகுந்த ஈடுபாடும் நன்றியுணர்ச்சியும் கொண்டிருந்த அந்த இளைஞர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். அவர்கள் காட்டுப் பிராந்தியத்தைக் கடந்து வயல்வெளிக்கு வந்தார்கள். சூரியன் அவர்களுக்கு எதிராக மேலெழுந்தது. எனினும் சூரியனின் முழு உருவமும் வெளியே தெரியவில்லை. செக்கச் சிவந்த கதிர்களை மட்டும் விசிறி மாதிரி வான மண்டலம் முழுவதும் விரிந்து ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தது. புல் நுனிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பனித்துளிகள் சூரிய கிரணம் பட்டவுடன் வானவில்லின் வர்ண ஜாலம் சிதறி, வசந்தத்தின் கோலாகலத்தோடு புன்னகை புரிந்தன. பறவைகள் விழித்தெழுந்து உற்சாகமயமான கீதக் குரலை எழுப்பி, அந்தக் காலை நேரத்துக்குக் களிப்பூட்டி ஜீவனளித்தன. பெரிய பெரிய காக்கைகள் தங்களது இறக்கைகளைப் பலமாக அடித்து வீசிக்கொண்டும், ஆர்வத்தோடு கத்திக்கொண்டும் வான மண்டலத்தில் பறந்து சென்றன. எங்கிருந்தோ ஒரு மஞ்சலாத்திக் குருவியின் சீட்டிக் குரல் ஒலித்தது. தூரவெளிகள் கண்ணுக்குத் தெரிந்தன. குன்றுகளின் மீது படிந்திருந்த இருட்திரைகள் சுருண்டு மடங்கி மேலெழுந்து மறைந்தன.

”சமயங்களில் ஒருவன் பேசிக்கொண்டே இருப்பான்; அவன் எவ்வளவுதான் வளைத்து வளைத்துப் பேசினாலும் அவன் சொல்லுகின்ற விஷயம் புரிபடுவதேயில்லை. திடீரென அவன் ஒரு சாதாரண வார்த்தையைக் கூறிவிடுவான். உடனே எல்லாமே விளங்கிவிடும்” என்று ஏதோ நினைத்தவளாய்ப் பேசினாள் தாய். அதுபோலத்தான் அந்த நோயாளியின் பேச்சும் இருந்தது. நானும் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். எவ்வளவோ பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படித் தொழிலாளர்களைத் தொழிற்சாலைகளிலும், வேறிடங்களிலும் விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள் என்பதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால், சிறுவயதிலிருந்தே இதெல்லாம் பழகிப்போய்விடுவதால், அதைப் பற்றிய சுரணையே நம் மனத்தில் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அத்தனை வேதனையையும் அவமானத்தையும் தரும் அவன் சொன்ன அந்த விஷயம் இருக்கிறதே! கடவுளே! தங்களது முதலாளிகளின் சில்லறை விளையாட்டுகளுக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்க முடியுமா? அதிலே என்ன நியாயம் இருக்கிறது?”

அந்த மனிதனின் நிலையைப் பற்றியே அவளது சிந்தனைகள் வட்டமிட்டன. இந்த மனிதனின் வாழ்க்கையைப் போலவே ஒரு காலத்தில் அவளுக்குத் தெரிந்திருந்த பலபேருடைய வாழ்க்கைகளைப் பற்றிய நினைவுகளும் அவள் மனத்தில் மங்கித் தோன்றின.

படிக்க:
போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

“அவர்களிடம் அனைத்தும் இருக்கிறது. எல்லாம் திகட்டிப்போய் உமட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு கிராம அதிகாரியைத் தெரியும். அவன் தனது குதிரை கிராமத்து வழியாக எப்போதெப்போது சென்றாலும், கிராம மக்கள் அந்தக் குதிரைக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தான். வணங்காதபேர்களை அவன் கைது செய்து கொண்டுபோய்விடுவான். இந்த மாதிரிக் காரியங்களை அவன் எதற்காகச் செய்ய வேண்டும்? இந்த மாதிரியான செய்கையிலே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?”

அருணோதய வேளையைப் போலவே குதூகலம் தொனிக்கும் ஒரு பாட்டை மெதுவாகப் பாட ஆரம்பித்தாள் சோபியா……

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?

பாஜக-வின் தோல்வியை சிறுபான்மையினருக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா? கேள்வி பதில்
– ஷாஜகான்.

ன்புள்ள ஷாஜகான்,

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சட்டீஸ்கர் ஆகியவற்றில் பாஜக தோல்வி அடைந்திருப்பது முக்கியமானது. இந்த தோல்வியின் அடிப்படை என்ன?

இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரான கட்சிகள், மக்கள் அனைவரும் இந்தத் தோல்வி குறித்து மகிழ்கின்றனர். ஆனால் இந்த தோல்வி உண்மையிலேயே முற்போக்கு பிரிவினரின் கொள்கையால் கிடைத்த ஒன்றா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியாவின் மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநிலமும் மக்கள் தொகையில் ஐந்தாவது பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் வாழ்கின்றனர். 70% அளவுக்கு கல்வியறிவுள்ள இம்மாநிலத்தில் இந்திதான் ஆட்சி மொழி

மாநில மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். அதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கிறார்கள். 2011 சென்சஸ் கணக்குப்படி மத்திய பிரதேச மக்கள் தொகையில் ஆதிவாசி மக்களின் விகிதம் ஏறக்குறைய 21% இருக்கிறது. இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதை எதிர்த்து தலித் மக்கள் நடத்திய போராட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகித்தது.

பொதுவில் பழங்குடி மக்கள் மதம் என்ற அளவில் இந்து மதத்திற்குள் வரமாட்டார்கள். பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாடு பார்ப்பனிய சடங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், இவர்களையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்துக்கள் என்ற வகையில் மோசடியாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தை பொருத்தவரை அரசு தந்திருக்கும் புள்ளிவிவரப்படி மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் இந்துக்கள். முஸ்லிம்கள் 6.5% இருக்கின்றனர். மற்ற மதங்கள் சொல்லிக்கொள்ளும் விகிதத்தில் இல்லை.

பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான். மக்கள்தொகையில் ஏழாவது பெரிய மாநிலமும் ஆகும். ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் வாழும் ராஜஸ்தானில் இந்திதான் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி. கல்வியறிவு சதவீதம் 66. மக்கள் தொகையில் மதத்தை பொருத்தவரை இந்து மதத்தினர் 88.1 சதவீதம், முஸ்லிம்கள் 9%, சீக்கியர்கள் 1.27 சதவீதம் என வாழ்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டில் இருந்து பிரிந்தது சட்டீஸ்கர் மாநிலம். இம்மாநிலத்தில் இரண்டரை கோடி மக்கள் வாழ்கின்றனர். மின்சாரம் மற்றும் இரும்பு உற்பத்தியில் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் சுமார் 50 சதவீத அளவுக்கு இருக்கின்றனர். அவர்களையும் இந்துக்களாக கணக்கில் கொண்டு, 2011 சென்சஸ் கணக்கின் படி இந்துக்கள் 93 சதவீதமும், முஸ்லீம்கள் 2 சதவீதமும், கிறித்தவர்கள் 2 சதவீதமும் வாழ்கின்றனர்.

அடிப்படையில் மூன்று மாநிலங்களும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாநிலங்கள்தான். அதாவது மாநில மக்களில் பெரும்பான்மையினர் விவசாய வேலைகளால்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். கனிமவளத்திற்கு பெயர் போன சட்டீஸ்கரில் கூட வேலை வாய்ப்பு என்பது விவசாயத்தில்தான்.

இந்தி மாநிலங்கள் மற்றும் பசு மாநிலங்களின் படுகை என்றழைக்கப்படும் இம்மாநிலங்களில் பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்ப்பனியம் வலுவாக இருக்கிறது. அதாவது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பும் அது சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள், தண்டனைகளும் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. பெண்ணடிமைத்தனம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை, முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறி போன்றவற்றில் இந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இத்தகைய பின்னணியில்தான் பாரதிய ஜனதா இங்கே வலுவாக காலூன்றியிருக்கிறது. இம்மாநிலங்களில் ஆட்சியில் இல்லாத முந்தைய ஆண்டுகளில் கூட பாரதிய ஜனதா இங்கே பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்கிறது. சங்க பரிவாரங்களின் அத்தனை உறுப்புகளும் இங்கே பீடு நடை போட்டு வளர்ந்திருக்கின்றன. 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி ஏற்ற பின்னர் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் கணிசமான அளவு இந்த மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

மேலும் இங்கே இந்துத்துவ பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக எவரும் அவ்வளவு சுலபமாக பிரச்சாரம் செய்து விட முடியாது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது ராகுல்காந்தி என்ன சொன்னார் நினைவிருக்கிறதா? ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக மக்களை மோடி அரசு ஒடுக்குகிறது என்று அவர் டிவிட்டரில் சொன்னார். அதே ராகுல் காந்தி இந்த தேர்தலின் போது இம்மாநிலங்களில் கோவில்களுக்கு சென்று வந்தார்.  காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளிலும் சில பார்ப்பனியக் கொள்கைகளை ஆதரிக்கும் வாக்குறுதிகள் உள்ளன.

சட்டீஸ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா 15 ஆண்டுகளாக ஆண்டதற்கு பிறகு இங்கே இந்துத்துவா அமைப்புகள் மேலும் வலுவாக இருக்கின்றன. இந்நிலையில் இம் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றாலும் அதை முற்றிலும் பின்னடைவு என்று கூறிவிட முடியாது

பதிவான வாக்குகளை வைத்துப் பார்த்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 38.8% வாக்குகளை பா.ஜ.க-வும், காங்கிரஸ் கட்சி 39.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. வேறுபாடு மிகவும் சொற்பம். அதே போன்று மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 41.3 ஆகும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 41.4. இங்கே கிட்டத்தட்ட இரு கட்சிகளும் ஒரே அளவில்தான் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தின் பொருத்தவரை பாரதிய ஜனதா 32.9 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.2 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இதை வைத்து பார்க்கும்போது சத்தீஸ்கர் மாநிலத்தை தவிர ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம அளவில்தான் வாக்குகளைப் பெற்று இருக்கின்றன.

கடந்த கால தேர்தல் வரலாறுகளைப் பார்த்தால் ராஜஸ்தானில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் மாறி மாறி வென்றிருக்கின்றனர். அதன்படி பார்த்தால் இப்போது பாரதிய ஜனதாவின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் சொல்லலாம். மத்தியப் பிரதேசத்திலும் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதாவிற்கு எதிரான போக்கு மக்களிடையே இருந்திருக்கும்.

மத்திய பிரதேசத்தில் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டது வெளிப்படை. இரண்டாவதாக மத்திய பிரதேசத்தில் நடந்த விவசாயிகளது போராட்டங்களும் அதை ஒடுக்க மாநில அரசு நடத்திய துப்பாக்கி சூடு வன்முறைகளும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

படிக்க:
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

வர்க்கம் என்ற அளவில் விவசாயிகள், வணிகர்கள் போன்றோர் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர். தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களும் பாஜகவின் மீதான கோபம் ஒரு நிதர்சனம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது அம்மக்களிடையே ஒரு எதிர்ப்பை கண்டிப்பாக உருவாக்கியிருக்கும்.

இத்தகைய காரணங்களால் பாஜக இதற்கு முன்னர் வாங்கிய வாக்கு சதவீதத்தை இழந்திருக்கின்றது. அதே நேரம் இந்த எதிர்ப்பு வாக்குகள் அலை அலையாய் காங்கிரசிற்கும் கிடைத்து விடவில்லை. மாற்று ஏதுமில்லை என்பதால் வேறு வழியின்றி மக்கள் காங்கிரசை ஆதரித்திருக்கின்றனர்.

ஆகவே இந்த தேர்தல் முடிவுகளால் பாஜக தோல்வி அடைந்தது என்பதை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

மேலும் இந்தியத் தேர்தல்களில் சிறுபான்மை மக்கள் தமது எண்ணிக்கையின் படியும் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. இந்துக்களில் ஊரகப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் பாஜகவை எதிர்ப்பது போல நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர வர்க்கம் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறது.

தேர்தல் முறைகளை தாண்டி பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும்.

தமிழகம் போல இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை இந்த இந்தி மாநிலங்களில் யாரும் நடத்தி விட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் பார்ப்பனியத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்தது பாஜக. அதற்கு பின்னர் வந்த உ.பி தேர்தலில் தெளிவாக மதவெறியை பிரச்சாரம் செய்தது. அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவர்கள் இப்போதே ராமன் கோவில் என்று பேரணிகளை நடத்த துவங்கியுள்ளனர்.

மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள். மேலும் ஆத்திரத்தில் உள்ள வணிகர்கள், தொழிலாளிகள், விவசாயிகளை தணிப்பதற்கு நிச்சயம் முயல்வார்கள். அதன்படி பார்த்தால் அடுத்த தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்று அறுதியிட்டு சொல்லும் நிலைமை இல்லை.

மேலும் தேர்தல் முறைகளை தாண்டி வலுவாக இருக்கும் பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும். பொருளாதார அடக்குமுறைகளில் இருந்து திசை திருப்பும் வண்ணமே இங்கு ராமன் கோவில், பசுவதை போன்றவை பேசப்படுகின்றன என்பதையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த போராட்டங்கள் நாடாளுமன்ற – சட்ட மன்றங்களுக்கு வெளியே எவ்வளவு அதிகமாய் நடக்கிறதோ அந்த அளவுக்கு பாஜக தனிமைப்படும்.

ஆகவே இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் வெல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். இந்தப் பாதையில்தான் சிறுபான்மை மத மக்களும் பாதுகாப்பாக சமத்துவமாக வாழும் நிலை ஏற்படும். இந்தப் பாதையை உடைப்பதுதான் பாஜக-வின் குறி!

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !

சலம்பல் 1        இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் !

நேற்று 11.12.2018 அன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்தார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது; மேலும் பாரதிய ஜனதா செல்வாக்கை இழந்திருப்பதைது இந்த முடிவுகள் காட்டுகின்றன என அவர் கூறினார்.

உடனே ஊடகங்கள் அனைத்தும் பாஜகவின் ஆதரவு நிலையிலிருந்து ரஜினி பின்வாங்கியதாக தொலைக்காட்சி விவாதங்களில் எடுத்துவிட்டனர். அது உண்மையா என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில் இங்கே ரஜினி கூறியிருப்பது வெறுமனே தேர்தல் முடிவுகள் பற்றிய எதார்த்தமான நிலவரத்தை மட்டுமே. அதில் அவர் கருத்து எதையும் கூறவில்லை. பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்தந்த பிரச்சனைகள் என்று அவர் எதையும் பட்டியலிட்டு சொல்லவில்லை. அந்த அளவு அவருக்கு அறிவில்லை என்பது வேறு விசயம்.

சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறது என்று கூறுவதெல்லாம் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றியதல்ல. அவை இயற்கை குறித்த உண்மை மட்டுமே. விமான நிலையத்தில் கேட்ட கேள்வியை சற்று நீட்டித்து பாரதிய ஜனதா ஏன் தோல்வி அடைந்தது என ரஜினியிடம் கேட்டால் அவர் என்ன கூறுவார்? இன்றைக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக ஆதரவாளர்கள் எப்படி புதிது புதிதாக காரணங்களை கண்டுபிடித்து கூறுகிறார்களோ அதைப் போன்று அவரும் கூற முயற்சிப்பார். அதுவும் கூட அவருக்கு யாராவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் மண்டப டிப்ஸ் இல்லையென்றால் இதெற்கெல்லாம் கருத்துக் கூற முடியாது, நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்று எஸ்கேப் ஆவார்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர் என்ன கூறினார்? 10 பேர்கள் இணைந்து ஒருவரை அடிக்கிறார்கள் என்றால் பலசாலி யார்? அந்த 10 பேரா? அடிகளை துணிவாக எதிர்கொள்ளும் அந்த ஒருவரா? இதன்படி அவர் வெளிப்படையாகவே மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறார்.

இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம் ஆனால் இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் ஒருபோதும் பாரதிய ஜனதாவை விட்டுக்கொடுக்க மாட்டார். மேலும் இது மாநில பிரச்சினைகள் சார்ந்து மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு என நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சில பாஜக ஆதரவாளர்கள் கூறுவது போல அவரும் கூறலாம்.

சலம்பல் 2     தேர்தல் முடிவு குறித்து வாய் திறக்காதாம் அதிமுக !

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனர் தமிழக அமைச்சர்கள். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியார் படத்திற்கு மலர் தூவினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். தோல்வியை வைத்து பாஜகவிற்கு பின்னடைவா என்பதை கணிக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி, அதிமுக-விற்கு மாமனோ மச்சானோ கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தலைமை முடிவு செய்யும். எதிர்க்கட்சிகள் என்னதான் ஒரு வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக-தான் வெற்றி பெறும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்பதற்கு கூட பதிலளிக்க முடியாத அடிமை நிலையில் அதிமுக இருப்பது ஆச்சரியம் இல்லை. சில ஊடகங்கள் ஆனானப்பட்ட ரஜினிகாந்த் கூட பாரதிய ஜனதாவிற்கு பின்னடைவு எனக் கூறியிருக்கும்போது அதிமுக ஏன் வாய் திறக்க மறுக்கிறது என கேட்கின்றனர். ஜெயலலிதா இறந்த பிறகு முதலில் ஓபிஎஸ் பிறகு எடப்பாடி என்று அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும் இவர்களை பாரதிய ஜனதா இயக்குகிறது என்பது உலகறிந்த உண்மை.

அவ்வப்போது அதிமுக-அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்யும். இதையே வேறு வேறு வார்த்தைகளின் மூலம் பாஜக-வினர் அதிமுகவை செல்லமாக மிரட்டுவார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக-வை விட்டால் ஆள் இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கேட்காமலேயே தங்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்த அதிமுக இங்கே பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு சொல்லைக்கூட கூறாது.

நேற்று தேர்தல் முடிவு தொடர்பாக நடந்த விவாதங்களில் அவ்வப்போது அதிமுகவினர் வந்தாலும் வரும் வாய் திறக்கவில்லை ஜெயக்குமார் போல நாங்கள் ஏன் கருத்துரைக்க வேண்டும் என தப்பிக்கப் பார்த்தார்கள். விடாமல் கேட்டீர்களென்றால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் புரட்சித்தலைவி அம்மா செய்த சாதனைகள் இன்னும் தொடர்கின்றது எங்களை யாரும் வெல்ல முடியாது என்பதையே கிளிப்பாட்டு போல பாடுகிறார்கள்.

அடிமை என்பதால் ஒரே மாதிரிதான் இந்த இத்துப் போன பாட்டு வருகிறது. என்ன செய்வது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தாலும் அதை படிப்பதற்கு கூட அதிமுகவில் யாருக்கும் தைரியம் இல்லையே?

சலம்பல் 3   பாஜக-வின் இளைய பங்காளி சிவசேனா கேலி செய்கிறது.

பாரதிய ஜனதாவின் தோல்வியை அதன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கொண்டாடுகிறது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் நாட்டுக்கு புதிய பாதையை காட்டிவிட்டனர். தங்களுக்கு வேண்டாதவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் துணிந்து விட்டனர். மக்களின் துணிச்சலான இந்த முடிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே.

மேலும் இந்த 5 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சர்ச்சைகள், வாக்காளர்களுக்கான பண விநியோகம், குண்டர்கள் அச்சுறுத்தல் போன்ற எந்த ஒரு காரணத்தையும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் ஆளுங்கட்சியை நிராகரித்துள்ளனர். இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், அடக்கு முறையை கையாளும் அரசின் முகத்தில் விழுந்த அடியாகும். தனி மனிதராக இருந்து போராடி பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

படிக்க:
ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

சிவசேனாவை பொறுத்தவரை அக்கட்சி பாரதிய ஜனதாவின் இயல்பான இந்து மதவெறி கருத்துடைய இளைய பங்காளி ஆகும். காலஞ்சென்ற பால்தாக்கரே இந்து மதவெறியின் தளபதியாக பணியாற்றினார். அப்போது அரசியலில் செல்வாக்கை அதிகரித்து வந்த பாரதிய ஜனதா மெல்ல மெல்ல மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவின் இடத்தைக் காலி செய்தது. அப்போதைய தேர்தல்களில் அதிக இடங்களில் சிவசேனாவும் குறைவான இடங்களில் பாஜக-வும் போட்டியிடும். பின்னர் இது தலைகீழாக மாறியது.

பால் தாக்கரேர இறந்த பிறகு சிவசேனா இரண்டாக உடைந்தது. அதன்பிறகு சிவசேனாவிற்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று ஆனது. இப்படித்தான் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவசேனா தலைவர்கள் இப்படி புலம்பியவாறு தங்களது அவல நிலையை சமாதானம் செய்து கொள்கின்றனர்.

– மதன்

5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது ஏன் ? கருத்துக் கணிப்பு

ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. இதை வெற்றிகரமான தோல்வி என திருவாய் அருளியிருக்கிறார் தமிழிசை. பா.ஜ.க ஆதரவாளர்களோ இந்த தோல்வியில் இருந்து மோடியை காப்பாற்றுவதற்கு ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

இம்மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக-வின் ஓட்டு வங்கி சரிந்திருக்கிறது. பொதுவில் விவசாயம் முதன்மையாக உள்ள இம்மாநிலங்களில் ஊரகப் பகுதிகளில் பாஜக கணிசமாக தோற்றிருக்கிறது. ஆதித்யநாத் போன்ற இந்துமதவெறியர்களை இறங்கி மதவெறியை பிரச்சாரம் செய்தாலும் பெரிய பலனில்லை.

இன்றைய கேள்வி:

பாஜக-வின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன?
* மோடி அலை வீழ்ச்சி
* காங்கிரசின் எழுச்சி
* விவசாயிகளின் கோபம்
* எடுபடாத இந்துமதவெறி

(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்.)

 

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !

பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாகவும் உடல்ரீதியாகும் துன்புறுத்திய சம்பவத்தில் ஒரு புதிய செய்தி. ‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா என்பவர் இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ‘மேலிடத்து’ அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் பேசுகையில், நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார். வழக்கமாக பணியிலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அருகில் உள்ள வீதியில் தனது கூட்டாளி ஒருவனுடன் அனிருத்தா நின்று கொண்டிருந்ததாகவும், அவ்வழியே தாம் செல்கையில் கத்தியை தன் கழுத்தில் வைத்து மிரட்டி, பலவந்தப்படுத்தி அவரது வீட்டிற்கு தன்னை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா

மேலும் இது குறித்துக் கூறுகையில், “வீட்டிற்குள் இழுத்துச் சென்றதும் எனது கைகளை நாற்காலியில் கட்டி வைத்து என்னை தாக்கத் தொடங்கினார் அனிருத்தா. அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததும், பாலியல் ரீதியாக என் மீது தாக்குதலைத் தொடுத்தார். அவரது தாயாரும் அந்த வீட்டில் அனிருத்தாவுக்கு உடந்தையாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரது பெயரையும் நான் புகாரில் சேர்த்திருக்கிறேன்.

சில நேரத்துக்கு பின் எனது கைகள் விடுவிக்கப்பட்டன. அச்சமயத்தில் நான் உடனடியாக எனது பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு தகவலை கூறினேன். அவர்கள் பிரதான வாயில் வழியாக வந்து ஒரு வழியாக என்னை மீட்டனர்” என்கிறார், அந்த பத்திரிகையாளர்.

அதன் பின்னர், அருகில் உள்ள திஸ்பூர் போலீசு நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அசாம் உள்ளூர் ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி இந்திய தண்டனை சட்டம் 354, 341, 392, 323, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளரை விசாரிக்க, கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு. ஆனால் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி அவரை வெளியே விட்டது.

புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசுகையில், “போலீசு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தாமல், விடுவித்திருக்கிறது.” என்றார்

படிக்க:
♦ அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
♦ பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை முறையாக நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக போலீசார் அவரை விடுத்திருக்கின்றனர். முறையாக பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

புகார் கொடுப்பதில் போலீசு தமக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர். மேலும் அவர் கூறுகையில், “என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், அன்று இரவு என்னை அனிருத்தா வீட்டிலிருந்து மீட்ட பிறகு நாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்தோம். நான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்தேன். புகார் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் நான் இல்லை. ஆகவே எனக்கு பதிலாக என்னுடன் பணிபுரியும் நண்பரை புகார் எழுதுமாறு போலீஸ் நிலையத்தில் கேட்டுக் கொண்டனர்.

அனிருத்தா தனது கூட்டாளியுடன் சேர்ந்து என்னை கத்திமுனையில் கடத்தியதை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. என் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்த வழக்கை பலவீனப்படுத்தி இருக்கிறது போலீசு.” என்றார்.

மேலும், அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு தவறான வழக்கு எண்ணை கூறியிருக்கின்றனர். 3637 என்ற எண்ணிற்கு பதிலாக 3636 என்ற எண்ணை கூறியிருக்கின்றனர்.

திஸ்பூர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி பிரேன் பருவா இது குறித்துக் கூறுகையில், “சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அனிருத்தாவை திங்கள் கிழமை அன்று விடுவித்துவிட்டோம். அவரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தவில்லை. அவர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பார். நாங்கள் அவரை போலீஸ் நிலையத்திற்கு வரக் கூறியிருக்கிறோம்.” என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறிய தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். குறிப்பான ஏதேனும் தேதியில் அவர் போலீஸ் நிலையத்திற்கு வருவாரா என தி வயர் இணையதளம் கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் விசாரணை அதிகாரி மட்டுமே அதை அறிவார் என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

“விசாரணை அதிகாரி, இதுகுறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார். மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மேலதிக தகவல்கள் எதுவும் தர முடியாது என்றும் அவர் கூறினார்.” என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

இதுவரையிலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை போலீசு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

மோடியின் ஆட்சியில், மதவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஊடகங்களுக்குள் அனிருத்தாக்கள் நிறைந்திருப்பதிலும், அவர்களைக் காப்பதற்கு ‘மேலிடத்து’ அழுத்தங்கள் வருவதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


 நந்தன்
செய்தி மூலம் : The wire

இது பல்லாயிரம் மக்களுடைய பாடல்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 35

மாக்சிம் கார்க்கி
ந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.

அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டு விட்டது. அவள் எழுந்திருந்து, புன்னகை செய்து கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.

“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப் போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.

“அதற்காக உன்னை மன்னித்து விடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆட்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.

”இக்நாத்! கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் இங்கே, எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச் செய்கிறோம். சாப்பாடும் தேநீரும் தயாரிப்பது இன்று இக்நாத்தின் வேலை, அவனது முறை.”

“இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோஷமாக விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவன் அடுப்பு மூட்டுவதற்காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான்.

இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது.

”நமது விருந்தாளிகளோடு இருப்பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்பவில்லை” என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்.

“நான் உனக்கு உதவுகிறேன், இக்நாத்” என்றான் யாகவ். அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து, துண்டு துண்டாக நறுக்கி மேஜை மீது வைத்தான்.

”கேட்டாயா? யாரோ இருமுகிறார்கள்” என்றான் எபீம்.

ரீபின் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக்கொண்டான்.

“அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது” என்று சோபியாவிடம் சொன்னான் அவன். “என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்களும் கேட்கும்படி செய்வேன்; அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்க வேண்டிய பேச்சு.”

மஞ்சள் வெயில் கறுத்தது; அமைதியும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்ல மெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜீக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப்போன உருவம் கம்பை ஊன்றிக்கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.

“வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன். அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.

அவன் ஒரு பழங் கந்தையான நீளக்கோட்டை அணிந்திருந்தான்/ அந்தக் கோட்டு கால் வரையிலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது அமுங்கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜூரத்தில் பிரகாசித்தன.

”நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.

“ஆமாம்” என்றாள் அவள்.

“ரொம்ப நன்றி – எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”

அவன் பரபரவென்று சுவாசித்தான். அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.

படிக்க:
வானொலி : இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

”இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல்நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.

“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு சொன்னான் அவன், “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது!”

அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று. அவனது தோற்றம் முழுவதும் ஓர் அத்தமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதானமாக மடக்கினான், அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல் உயிரற்றிருந்தது.

நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது. எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.

”நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்….. இங்கே, என்னைப் பாருங்கள்….. இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ – இதுதான் என் அந்திம காலம், என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள்; என்னுடைய வாழ்நாளின் நாற்பது வருஷ காலத்தை, நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்!”

“இதுதான் அவன் பாடுகிற பாட்டு!” என்றான் ரீபின்.

மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது. மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈர விறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன, வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.

“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிக்சாவு சாகிறார்கள்…..” அவன் மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.

யாகவ் மேஜை மீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டுவந்து வைத்தான்.

”சவேலி, இங்கே வா. நான் உனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கை கொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.

“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்? அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.

“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் – நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்!”

“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே” என்றாள் சோபியா.

ரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்.

“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும் கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்………”

தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்:

”சரி, சரி. இது போதும்.”

மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்.

“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி – நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன் – ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான், அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான். என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கி கொடுத்தான்!”

”கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம். அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா?” என்று கசந்து போய்ச் சொன்னான் எபீம்.

“பின்னே, சும்மா இராதே’ என்று தன் கையை மேஜை மீது தட்டி, அறைந்து கொண்டே சொன்னான் ரீபின்.

”அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.

இக்நாத் ஒரு சிரிப்புச் சிரித்தான். பின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசி கொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காது கொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது. அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

”அவன் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.

“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. ”இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”

”ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை” என்று சோர்ந்துபோய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து, அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும்! ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும். தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள்! அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான் அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான்! எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.

‘குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.

அவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைப்பதற்கு யாகவ் உதவி செய்தான்.

இப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது. உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். பின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு சோபியாவிடம் பேசத் தொடங்கினான்.

”இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல் விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கம் கிடையாதாம்! ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள்? அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு; தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கும் பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான்! “நீ பாட்டுக்கு வேலையைச் செய். கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்! என்கிறார்கள் அவர்கள்.”

தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிரகாசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் வேண்டுமா ?

புதிய ஜனநாயகம் இதழின் ஆண்டுத் தொகுப்புகள் விற்பனைக்கு உள்ளன.

34 ஆம் ஆண்டாக வெளிவரும் மார்க்சிய – லெனினிய அரசியல் பத்திரிக்கையான புதிய ஜனநாயகம் தமது சேகரிப்பில் உள்ள இதழ்களைத் தொகுத்து ஆண்டுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறது.

தனிச்சிறப்பாக முதலாம் ஆண்டிலிருந்து 22-ஆம் ஆண்டுகள் வரையிலான இதழ்கள் தற்போது தொகுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இருப்பிலுள்ள ஆண்டுத் தொகுப்புகளின் விவரம்: 1, 3, 7, 9, 10,11, 13,16,18, 19, 20, 21 மற்றும் 22- ஆம் ஆண்டு. முதல் 20 ஆண்டுகளில் வெளியான இதழ்களின் தொகுப்புகள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம். மிகக்குறைவான பிரதிகளே கைவசமிருக்கின்றன.

தனியொரு ஆண்டுத் தொகுப்பின் விலை ரூ 200.00 (அஞ்சல்/கூரியர் கட்டணம் தனி)

ஆண்டுத் தொகுப்பு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய ஜனநாயகம்,
கடை எண்.110, மாநகராட்சி வணிக வளாகம் (இரண்டாம் தளம்),
63, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
கைபேசி எண்: 94446 32561

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

9

ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்றன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின்  தோல்வி உறுதி. பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்

பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம். புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது ஒரு உச்சத்தை எட்டிவிட்டது. விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல் தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும் மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
♦ பாஜக-வின் நெருங்கிய கூட்டாளி ஜனார்த்தன ரெட்டி தப்பி ஓட்டம் !

நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும் வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும், அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான் நகர்ப்புறங்களின் நிலைமை.

பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.

வாய் திறந்தாலே ஜூம்லாக்கள்தான். பின்னர் வெற்றி வராதா என்ன?

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு இப்போது செல்லாது என்று தெரிந்துதான்,  அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ் துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும், 2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.

ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள். விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது. இருப்பினும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா? புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ்  உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ இயங்கப்போவதில்லை.

புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை. இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.

வீழ்ச்சியின் விளிம்பில் சந்தை

அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் – செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது. இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக மட்டுமே செயல்பட முடியும்.

ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்” மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான் தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது. அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக் கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம் கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான் ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது. “அயோத்தியில் கோயில் கட்ட சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி  நிரலை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.

படிக்க:
♦ பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
♦ குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் : ஜனநாயகத்தின் மீது இந்துத்துவ மூத்திரம் !

கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன் ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள். நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவருகிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும் தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.

அனைத்துக் கட்டுமானங்களுக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கும் பார்ப்பன பாசிசம்

தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர் வரலாம். பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி. பார்ப்பன பாசிசம், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல் பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு. அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு. புதிய தாராளவாதக் கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள் ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக-வின் பார்ப்பன பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள் இதற்கொரு சான்று.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக் கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு. மேலை நாடுகளில் நிறவெறியாகவும், இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும், அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு – பார்ப்பன பாசிசம்.

புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம். இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

சூரியன்

வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஐ.எல்.எஃப்.எஸ்.) என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகக்கூடிய நிலையில் இருக்கும் உண்மை அம்பலமானதையடுத்து, செப்டம்பர் மாத இறுதியில் மும்பய்ப் பங்குச் சந்தையும் தேசியப் பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்தன.

“வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (Non Banking Financial Companies) நாங்கள் கைவிடமாட்டோம்” என மைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாக்குறுதி அளித்த பிறகுதான், அப்பங்குச் சந்தைகளில் படுத்த வியாபாரம் சற்றே நிமிர்ந்தது.

ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தலைமையகம் : பளபளப்பின் பின்னே மறைந்திருக்கும் மோசடிகள்.

இந்தியாவில் ஐ.எல்.எஃப்.எஸ். போன்று 11,174 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒரேயொரு நிறுவனம் திவாலாகப் போகிறது என்ற செய்தி வெளிவந்தவுடன் பங்குச் சந்தை ஏன் சரிவடைகிறது? நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களையும் பங்குச் சந்தையையும் கைதூக்கிவிட ஏன் துடிக்கிறார்?

ஐ.எல்.எஃப்.எஸ். உள்ளிட்ட பல்வேறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மட்டும் 4,73,500 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கின்றன. இதில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பங்கு மட்டும் 40,000 கோடி ரூபாய். ஐ.எல்.எஃப்.எஸ்.- ஐத் திவாலாக அனுமதித்தால், அது தனியொரு நிறுவனத்தின் சரிவாக இருக்காது, இருக்கவும் போவதில்லை. அந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் மற்றும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் எல்.ஐ.சி., உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்கள், ஓய்வூதிய மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் அனைத்தும் நட்டம் என்ற கருந்துளைக்குள் புதைந்து போகும்; ஐ.எல்.எஃப்.எஸ். போன்ற மற்ற மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் யோக்கியதையும் அம்பலப்பட்டு போகும் என அஞ்சுவதால்தான், அதனைக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு.

‘‘அமெரிக்க நிதி நிறுவனமான லேமேன் பிரதர்ஸின் வீழ்ச்சி உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கப் புள்ளியாக அமைந்ததைப் போல, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்திற்கு அமையக் கூடும்” என ஒப்பிடுகிறார், பொருளாதாரப் பத்திரிகையாளர் ஆண்டி முகர்ஜி.

ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீக்கத்தையும், வீழ்ச்சியையும் அறிந்தவர்களுக்கு இந்த ஒப்பீடு அதிர்ச்சி அளிப்பதாக அமையாது. மேலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் திறமை, நேர்மை, நிபுணத்துவம் பற்றிப் பொதுவெளியில் சிலாகித்துப் பேசப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது, ஐ.எல்.எஃப்.எஸ். – இன் வீழ்ச்சி.

*****

ந்தியாவில் தனியார்மயம் – தாராளமயத்தின் தொடக்கமும், ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவப்பட்டதும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடந்தன. சாலைகள், துறைமுகங்கள், மேம்பாலங்கள், மின்சாரக் கட்டமைப்பு, தொலைத் தொடர்பு, சுரங்கங்கள் உள்ளிட்ட அடிக்கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்வதுதான் இந்த நிறுவனத்தின் வர்த்தகக் கொள்கை.

ஐ.எல்.எஃப்.எஸ். தனியார் நிறுவனம் என்றபோதும், இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் எல்.ஐ.சி.தான். ஐ.எல்.எஃப்.எஸ். – இன் 25.34 சதவீதப் பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருக்கிறது. எல்.ஐ.சி.யைத் தொடர்ந்து ஜப்பானைச் சேர்ந்த ஓரிக்ஸ் கார்ப்பரேஷன் 23.54 சதவீதப் பங்குகளையும், அபுதாபி நிதி ஆணையம் 12.56 சதவீதப் பங்குகளையும் ஹெச்.டி.எஃப்.சி., சென்ட்ரல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆகியவை முறையே 9.02, 7.67, 6.42 சதவீதப் பங்குகளையும் வைத்திருக்கின்றன.

இந்நிறுவனத்தின் மூலதனத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அளித்திருந்தாலும், திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிதியைப் பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்துதான் கடனாகப் பெற்றிருக்கிறது. இந்த வகையில், கடந்த மார்ச் 2018 நிலவரப்படி ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் மொத்த கடன் பாக்கி 1,250 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் தோராயமாக 91,000 கோடி).

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தனியொரு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஐ.எல்.எஃப்.எஸ்., இன்று 23 நேரடி சார்பு நிறுவனங்கள், 141 மறைமுக சார்பு நிறுவனங்கள், ஆறு கூட்டு நிறுவனங்கள், நான்கு இணை நிறுவனங்களைக் கொண்ட கார்ப்பரேட் குழுமமாக வளர்ந்திருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டியே, வீழ்ச்சியைச் சந்திக்க வாய்ப்பில்லாத நிறுவனமாக (too big to fail) ஐ.எல்.எஃப்.எஸ்.இன் தரம் (rating) நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

நிலம் மற்றும் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகள் அபகரித்துக் கொள்ளவும்; வங்கி, காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில் சேமிப்பாக இருக்கும் பொதுமக்களின் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கடன் என்ற பெயரில் சூறையாடவும் அளிக்கப்பட்ட தாராள அனுமதிதான் 2004-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்ததற்குக் காரணம். ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வளர்ச்சிக்கும் இவைதான் – இந்தக் கொள்ளையும் சூறையாடலும்தான் காரணம்.

ஐ.எல்.எஃப்.எஸ். பகற்கொள்ளையடிப்பதில் எந்தளவிற்கு இரக்கமற்ற நிறுவனம் என்பதற்கு ஒரேயொரு உதாரணம், டெல்லி – நொய்டா விரைவுச் சாலை. இச்சாலையில் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வழிப்பறியை நடத்தி வந்தது ஐ.எல்.எஃப்.எஸ். இந்த அநியாய கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தச் சாலையைச் சுங்கக் கட்டணமில்லா சாலையாக அறிவித்தது, உச்ச நீதிமன்றம்.

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனத்தின் பகற்கொள்ளைக்கு உதாரணமான டெல்லி-நொய்டா விரைவுச்சாலை (கோப்புப் படம்)

தனியார்மயத்தை ஆதரிக்கத் தயங்காத உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், ஐ.எல்.எஃப்.எஸ். எந்தளவிற்கு அச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவோம்.

வளர்ச்சி, வளர்ச்சி என மெச்சிக் கொள்ளப்பட்ட இந்த வீக்கம் 2008-க்குப் பின் உடைந்து போனதையடுத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-ம் சரியத் தொடங்கியது. ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் வரை தன்னை மீசையில் மண் ஒட்டாத வீரனாகவே நிதிச் சந்தையில் காட்டி வந்தது, ஐ.எல்.எஃப்.எஸ். குறிப்பாக, நட்டமனைத்தையும் சார்பு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் வரவு-செலவு அறிக்கையில் காட்டிவிட்டு, இலாபத்தைத் தாய் நிறுவனத்தின் வரவு-செலவு அறிக்கையில் காட்டும் மோசடியை நடத்தி வந்தது. இம்மோசடிக்கு ஐ.சி.ஆர்.ஏ., கேர் ரேட்டிங்ஸ் ஆகிய இந்தியத் தர நிர்ணய நிறுவனங்களும் ஒத்தூதி, கடந்த செப்டம்பருக்கு முன்பு வரை அதனின் நிதி நிலை நன்றாக இருப்பதைக் குறிக்கும் “ஏஏஏ” தரச் சான்றிதழை ஐ.எல். எஃப்.எஸ்.-க்கு வழங்கி வந்தன.

ஐ.எல். எஃப்.எஸ். நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டிய ரிசர்வ் வங்கியோ, ஐ.எல். எஃப்.எஸ். – ஐ இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவே மெச்சி வந்தது.

எனினும், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து பெற்றிருந்த 1,000 கோடி ரூபாய் பெறுமான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவணை கேட்ட பின், ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ ஜாக்கி கொடுத்துத் தூக்கி நிறுத்தும் மோசடியைத் தர நிர்ணய நிறுவனங்களால் கடந்த செப்டம்பருக்குப் பிறகு தொடர முடியாமல் போனது. மேலும், அடுத்த ஆறு மாதங்களில் 50 கோடி அமெரிக்க டாலர் பெறுமான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலுள்ள இந்நிறுவனத்திடம் வெறும் 2.7 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே பெட்டியில் இருப்பதாகவும், இதனின் சொத்துக்களை விற்றால்கூடக் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்குப் பணத்தைத் திரட்ட முடியாதென்றும் வணிகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.

*****

டந்த முப்பது ஆண்டுகளாக ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐ நிர்வகித்து வந்த தலைகள் யாரும் அரசியல்வாதிகளின் சிபாரிசால் பதவியில் திணிக்கப்பட்டவர்கள் கிடையாது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசங்கடந்த வர்த்தக வங்கியான சிட்டி பேங்கில் பணியாற்றிய அனுபவமிக்க ரவி பார்த்தசாரதி, ஐ.எல். எஃப்.எஸ். தொடங்கப்பட்டபொழுதே, அதன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1989-இல் ஐ.எல்.எஃப்.எஸ்.இன் மேலாண் இயக்குநராகவும், 1994-இல் துணைத் தலைவராகவும், 2004-இல் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகும்கூட, அந்நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராகப் பதவி வகித்தார்.

1987-இல் இந்த நிறுவனத்தில் இணைந்த ரவி பார்த்தசாரதி, 2018-இல் ஜூலையில், அதாவது இந்த நிறுவனம் திவாலாகிவிட்ட செய்தி வெளியாவதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான், உடல் நலக்குறைவைக் காரணம்காட்டி நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் உள்ள ஹரி சங்கரன், கடந்த 28 ஆண்டுகளாக இதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தலைமைச் செயல் அதிகாரியாகவும் இணை மேலாண் இயக்குநராகவும் பணியாற்றி வரும் அருண்குமார் ஸாஹா 1988-ஆம் ஆண்டிலிருந்தே இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இம்முழுநேர அதிகாரிகளுக்கு அப்பால், மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆர்.சி.பார்கவா, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் நிறுவனம் சாராத இயக்குநராக (Independent Director) 1990-ஆம் ஆண்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். முன்னாள் அரசு அதிகாரியான மைக்கேல் பிண்டோ ஜூலை 2004-ஆம் ஆண்டிலும், முன்னாள் எல்.ஐ.சி. தலைவரான சுனில் மாத்தூர் 2005-ஆம் ஆண்டிலும், சிட்டி பேங்கின் முன்னாள் அதிகாரியான ஜெய்தீர்த்த ராவ் 2012-ஆம் ஆண்டிலும் இயக்குநர் குழுவில் இணைந்தார்கள்.

பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என மெச்சப்படும் இத்துணை பேர் இருந்தும் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதோடு, நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு இந்த இயக்குநர் கும்பலும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் மூளையாகவும் இதயமாகவும் செயல்பட்ட ரவி பார்த்தசாரதி, நிறுவனத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது மாதத்திலேயே நிறுவனம் திவால் நிலையில் இருப்பது அம்பலமாகிறது என்றால், இயக்குநர் குழு மொத்தமுமே கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கூற முடியும்.

உதாரணமாக, ஒவ்வொரு வங்கியல்லாத நிதி நிறுவனத்திலும் அதன் நிதி ஆதாரங்களையும், முதலீடுகளையும், அம்முதலீடுகளின் வருவாயையும், சந்தையின் ஏற்ற இறக்கங்களையும் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு சுதந்திரமான கண்காணிப்புக் குழு இருக்க வேண்டும் என்று கார்ப்பரேட் நிறுவனச் சட்ட விதி கூறுகிறது. ஐ.எல்.எஃப்.எஸ்.-இலும் இப்படிப்பட்ட கண்காணிப்புக் குழு இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அக்குழு சோளக்காட்டு பொம்மையைப் போலக்கூட இயங்கவில்லை.

குறிப்பாக, இந்தக் குழு கடந்த நான்காண்டுகளில் ஒருமுறைகூட கூடவேயில்லை. இந்த நான்காண்டுகளாகத்தான் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் கடுமையான தேக்கத்தில் சிக்கியிருக்கிறது என்பதோடு இணைத்துப் பார்த்தால்தான், ஐ.எல்.எஃப்.எஸ்.கண்காணிப்புக் குழுவின் கிரிமினல்தனத்தை (Criminal negligence) புரிந்துகொள்ள முடியும்.

இதுவொருபுறமிருக்க, ஐ.எல்.எஃப்.எஸ்.இன் இயக்குநர் குழுமத்தில் செயல்பட்டு வந்த ஆர்.சி.பார்கவா, மைக்கேல் பிண்டோ, அருண்குமார் ஸாஹா ஆகியோர் கண்காணிப்புக் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். எனில், இதன் பொருள், பாலுக்குப் பூனை காவல் என்பது தவிர வேறென்ன?

நிறுவனத்தின் தலைவர் தொடங்கி அதன் இயக்குநர்கள் ஈறாக உள்ள உயர்மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கும், அவர்களது செயல்திறனை மதிப்பிடுவதற்கும் நியமனம் மற்றும் சம்பள நிர்ணயக் குழு என்றொரு கமிட்டியும் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தக் குழு நிர்வாக இயக்குநர்களின் செயல்திறனை மதிப்பிட்டதோ இல்லையோ, வருடம் தவறாமல் இயக்குநர்களின் சம்பளத்தையும் சலுகைகளையும் பல மடங்கு உயர்த்திக் கொடுக்கும் காரியத்தை மட்டும் திறம்படச் செய்துவந்திருக்கிறது.

கம்பெனியின் இயக்குநர் குழுவைச் சேர்ந்த மைக்கேல் பிண்டோவும், சுனில் மாத்தூரும், ஹரி சங்கரனும் செயல்திறன் மதிப்பீடு மற்றும் சம்பள நிர்ணயக் கமிட்டியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். எனில், இதன் பொருள், திருடனும் நானே, போலீசும் நானே, நீதிபதியும் நானே என்பது தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
கம்பெனி இயக்குநர்களின் இந்த மூன்று முகம் காரணமாக, கம்பெனி நட்டத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருந்த வேளையில், அவர்களின் சம்பளங்களும் சலுகைகளும் விண்ணை நோக்கிப் பாய்ந்தன.

2015 ஆம் ஆண்டில் 7.28 கோடி ரூபாயாக இருந்த ரவி பார்த்தசாரதியின் ஆண்டு சம்பளம், 2017 ஆம் ஆண்டில் 10.8 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2018-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ரவி பார்த்தசாரதி தனது உடல் நலத்தைக் காரணமாக வைத்து முழுமையாக நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். அந்த ஏழு மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம், இதர சலுகைகள் மற்றும் ஓய்வுகால நிதி ஆகியவற்றின் மொத்த மதிப்பு 20.4 கோடி ரூபாய்.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய ஹரி சங்கரின் மொத்த சம்பளம் கடந்த நான்காண்டுகளில் 4.8 கோடி ரூபாயிலிருந்து 7.7 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது போல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிய அருண்குமார் ஸாஹாவின் மொத்த சம்பளம் 5.8 கோடி ரூபாயிலிருந்து 6.9 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இதேகாலக்கட்டத்தில் ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் நிதிநிலையும், அதனின் செயல்பாடும் எப்படி இருந்தன? 2015- ஆம் ஆண்டில் 80 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியதாகக் கூறப்பட்ட அந்நிறுவனம் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே 2,000 கோடி ரூபாய் நட்டமடைந்தது. 2015-ஆம் ஆண்டில் 68,000 கோடி ரூபாயாக இருந்த அந்நிறுவனத்தின் மொத்தக் கடன், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 90,000 கோடி ரூபாயைத் தொட்டது.

ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் இயக்குநர் குழு ஒட்டுண்ணிக் கும்பலாக நடந்து கொண்டிருப்பதை இந்த விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இது மட்டுமின்றி, திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தை ஊதிப் பெருக்கிக் காட்டியே (Gold plating) கடனை வாங்கிக் குவித்து நிறுவனத்தைத் திவாலாக்கிவிட்டதாகப் பழைய இயக்குநர் குழு மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. அதாவது, அதீதமாகப் பெற்ற கடன்களைத் தின்று தீர்த்த ஊழல் பெருச்சாளியாக இயக்குநர் குழு இயங்கி வந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

மேலும், அரசியல் சார்ந்த நியமனமாக அல்லாமல், நிபுணர்களைக் கொண்டு நிறுவனங்களை நடத்தினால், அவை நட்டமடையாது, அதில் மோசடிகள், ஊழல்கள் நடைபெறாது என்றொரு மாற்றை முதலாளித்துவவாதிகள் பரப்பி வருகிறார்களே, அதுவொரு மூடநம்பிக்கை என்பதையும் அம்பலப்படுத்திவிட்டது, ஐ.எல்.எஃப்.எஸ். இயக்குநர் குழு.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தில் ஒரு புதிய முதலீட்டு நகரை உருவாக்கும் திட்டத்தை ஐ.எல்.எஃப்.எஸ். – இடம் ஒப்படைத்து, அதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு ரூபாய் விலையில் விற்று, இச்சலுகையின் மூலம் அந்நிறுவனத்திற்கு 440 கோடி ரூபாய் அரசுப் பணத்தை மொய்யாகத் தூக்கிக் கொடுத்தார். அதே மோடி இப்பொழுது பிரதமர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யிலிருந்து 4,000 கோடி ரூபாயை ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கொடுத்து, அதனைக் காப்பாற்றிவிடத் திட்டமிட்டிருக்கிறார்.

ஜப்பான், அபுதாபி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் பங்குதாரர்களாக இருந்தாலும், அவைகளெல்லாம் தப்ப வைக்கப்பட்டு, எல்.ஐ.சி. மட்டும் பலியிடப்படுகிறது. இலாபத்தைத் தனியார் பங்கு போட்டுக் கொள்ள, நட்டத்தை இந்திய மக்களின் மீது சுமத்தும் அயோக்கியத்தனம் இது.

மேலும், கார்ப்பரேட் அதிபர்கள், அதிகாரிகளைக் கொண்ட புதிய இயக்குநர் குழுவை அமைத்து, ஐ.எல்.எஃப்.எஸ்.-இல் இனி எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது, மைய அரசு. பழைய பெருச்சாளிகளுக்குப் பதில் புதிய பெருச்சாளிகள் என்பதைத் தாண்டி, இந்த மாற்றத்திற்கு வேறு பொருள் கொள்ள முடியாது.

*****

‘‘நான் உமி கொண்டு வருகிறேன், நீ அவல் கொண்டு வா” என்ற சூதுதான் அடிக்கட்டுமான வளர்ச்சித் திட்டங்களில் நடைபெற்று வருகிறது. பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டுப் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 90,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் வாங்கியிருக்கும் ஐ.எல்.எஃப்.எஸ். மட்டுமல்ல, அடிக்கட்டுமானத் திட்டங்களைக் குத்தகைக்கு எடுக்கும் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் தமது மடியிலிருந்து மூலதனத்தைப் போடுவதில்லை. மாறாக, அடிமாட்டு விலையில் நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் அளித்து, கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கும் நிபுணர் கூட்டத்துக்கும் அரசு ஏற்பாடு செய்து கொடுக்கும் கறி விருந்துதான் வளர்ச்சித் திட்டங்கள்.

பொருளாதார மந்தம் நிலவும் நேரங்களில், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தொழிலையும் இலாபத்தையும் காப்பாற்றிக் கைதூக்கிவிடும் நோக்கில்தான் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற பெயர்களில் இந்தச் சூதும் திருட்டும் மூடிமறைக்கப்படுகிறது.

இன்று பொதுத்துறை வங்கிகள் எதிர்கொள்ளும் வாராக் கடன் சுமையும், அவை திவாலாகிவிடும் அபாயமும் அடிக்கட்டுமானத் திட்டங்களுக்குக் கோடிகோடியாய்க் கடனாகக் கொடுத்ததன் விளைவுதான் என்பது தெரியவந்துள்ள நிலையில், ஐ.எல்.எஃப்.எஸ். இல் நடந்துள்ள தில்லுமுல்லுகள் அம்பலமாகி வருகின்றன. இதற்குக் காரணமான கனவான்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மேலும் மேலும் பொதுப்பணத்தை வாரியிறைத்து ஐ.எல்.எஃப்.எஸ். ஐக் காப்பாற்றிவிடத் துடிக்கிறது, மோடி அரசு. நட்டத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிட வேண்டும் எனக் கறாராக வாதிட்டு வரும் நிபுணர் கூட்டமோ, ஐ.எல்.எஃப்.எஸ். விவகாரத்தில் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது.

மேலும், 2013-இல் இயற்றப்பட்ட விவசாயிகளுக்குச் சாதகமான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தினால்தான், ஐ.எல்.எஃப்.எஸ். -இன் திட்டங்கள் அனைத்தும் சிக்கலுக்குள்ளாகி, அது நட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது என்ற சாக்கைச் சொல்லி, ஐ.எல்.எஃப்.எஸ்.-ஐச் சேர்ந்த அதிகார வர்க்கத்தைத் தப்பிக்க வைக்க முயலுகிறார்கள்.

குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, “ஐ.எல்.எஃப்.எஸ்.-இன் பிரச்சினை வாராக் கடனுக்குள் வராது” என ஒரேபோடாகப் போட்டு, ஐ.எல்.எஃப்.எஸ்.-க்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்டுள்ள அபாயத்தைப் பூசிமெழுகிவிட முயலுகிறார்.

இத்தகைய கும்பலிடமிருந்து பொதுத்துறை வங்கிகளையும் எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிதி நிறுவனங்களையும் காப்பாற்றுவதுதான் இப்பொழுது நம்முன் உள்ள மிகப்பெரிய சவால்.

-செல்வம்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

தெலுங்கானா மாநிலத்தில் இன்று 11.12.2018 தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. டிஆர்எஸ் கட்சி பெரும் வெற்றியடைந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று. இதே டிஆர்எஸ் கட்சி மாநிலத்தை சென்ற முறை ஆண்டது. இவர்களோடு மத்தியில் பாஜக அரசு ஆள்கிறது. மத்திய மாநில அரசுகளின் கீழ் வாழும் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள்? வறிய மாநிலமான தெலுங்கானாவின் விவசாயிகள் அவர்களில் பலர் பெண்கள் -தற்கொலை செய்வது அதிகரித்திருக்கிறது. தேர்தல் பரபரப்பில் இந்த தற்கொலைகள் மறக்கப்படலாம். ஆனால் ஒரு விவசாயி தற்கொலை என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றா?

ல்கொண்டா (Nalgonda ) மாவட்டம், விஞ்சாமுர் (Vinjamur) கிராமத்தில் அந்த ஒரு அறை மட்டுமே கொண்ட அச்சிறிய வீட்டை வெளிச்சம் கொண்டு தீர்க்க முடியா ஒரு இருள் கவ்வியிருந்தது. அங்கு தான் நகிலா யாதம்மா 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

யாதம்மா ஒரு விவசாயி. அவரிடம் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் 20,000 ரூபாய் செலவிட்டு பருத்தி பயிரிட்டிருந்தார். 2016-17-ம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.4,160 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டில் அது ரூ.3,000-ஆக குறைந்து விட்டது. விளைந்த இரண்டே குவிண்டால் பருத்தியை வைத்து போட்ட முதலீட்டில் பாதியை கூட அவரால் எடுக்க முடியவில்லை. கடனைத் திருப்பி செலுத்த வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் ஒரு கொடிய காலைப்பொழுதில் ஆர்கனோ – பாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

யாதம்மாவின் மகன் யாதம்மா.

அவரது 26 வயது மகனான சங்கர் 80 கிலோமீட்டருக்கு அப்பால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது அம்மாவை உடனடியாக கூட்டிச் சென்றார். எனினும் சிகிச்சை பலனில்லாமல் எட்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 28-ம் தேதி அவரது இன்னுயிர் ஓய்ந்து போனது.

நீண்ட நாள் நோயாளியான சங்கரின் தந்தை நிரஞ்சன் 2013-ம் ஆண்டில் இறந்து போனார். அவருக்கான சிகிச்சை செலவு குடும்பத்தை மேலும் கடனுக்குள் தள்ளியது. தனது தாயின் மரணத்திலிருந்து சங்கரால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. “குடும்பத்தை என் தாயார் கவனித்துக் கொண்டார். நோயாளியான என்னுடைய அப்பா இறந்த பிறகு எங்களுடைய நிலத்தையும் சேர்த்து அவர் பார்த்துக்கொண்டார்” என்று அவர் கூறினார். “அவர் இந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாவார் என்றோ தற்கொலை செய்து கொள்வார் என்றோ நாங்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை” என்றார்.

இந்தியாவில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆறு மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தெலுங்கானாவில்தான் பெண் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டில் 232 பெண் விவசாயிகளும் 2015-ம் ஆண்டில் 159 பெண் விவசாயிகளும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

இந்த ஆண்டின் ஜூன் 2 முதல் இன்றுவரையில் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

யாதம்மாவின் வாழ்வும் மரணமும் அவரது மாவட்டத்தின் தனிச்சிறப்பான குணாம்சங்களில் ஒன்று. வானம் பார்த்த பூமியான யாதம்மாவின் நான்கு ஏக்கர் நிலத்திற்கு 300 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று ஒத்தாசையாக இருந்தது. மோசமான பாசன உட்கட்டமைப்பு கொண்ட தெலங்கானா மாநிலத்தில் இப்படி நிலத்தடி நீரை நம்பி இருப்பது பொதுவான ஒன்று. மகபூப் நகருக்கு (Mahabubnagar) அடுத்ததாக நல்கொண்டா மாவட்டத்தில்தான் அதிக அளவில் கிணற்று பாசன முறை இருக்கிறது. கெடு வாய்ப்பாக, மாநிலத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்யும் முதலிரண்டு மாவட்டங்களும் இவைதான்.

யாதம்மாவிற்கு தனியாரிடம் 3 இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. யாதம்மாவை போலவே கிராமப்புறங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான கடனை கந்து வட்டிக்காரரர்களிடம் இருந்துதான் வாங்குகிறார்கள் என்று 2017-ம் ஆண்டிற்கான தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.

படிக்க:
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !

யாதம்மாவிற்கு படிப்பு கிடையாது. ஆனால் அவரது மகள் இரஞ்சிதா 12-ம் வகுப்பு முடித்துள்ளார். எனினும் வேலை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. திருமணம் முடித்து இல்லதரசியாகவே இருக்கிறார்.

மழையை மட்டுமே நம்பியிருக்கின்றனர் தெலங்கானா விவசாயிகள்.

யாதம்மாவின் இரண்டு மகன்களில் ஒருவரான சீனு ஒன்பதாவது வகுப்பு முடித்துவிட்டு தொழிலாளியாக இருக்கிறார். இன்னொரு மகனான சங்கர் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவர்களது குடும்பம் விவசாயம் சாரா வருவாயின் மூலமாகத்தான் வாழ்ந்து வருகிறது. விவசாயம் அவர்களை மென்மேலும் கடனுக்குள் மட்டுமே தள்ளிவிட்டதாக சங்கர் கூறினார்.

“இங்கே பாசனத்திட்டம் எதுவும் கிடையாது. மழையை நம்பி மட்டுமே பயிர்கள் உள்ளன. இருக்கின்ற நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பதற்கு வேறு ஏதாவது வழியை பார்ப்பதுதான் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி” என்று அவர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளும் தெலங்கானா விவசாயிகளை களைப்படைய செய்து விட்டது.

தேர்தல் வாக்குறுதிகளும் அவரை களைப்படைய செய்து விட்டது. “கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்” என்று சங்கர் கூறினார். “ஆந்திராவுக்கு மடைமாறி கொண்டிருக்கும் அத்தனை நிதியும் எங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது பிரச்சினைகள் தீரவுமில்லை வேறு எந்த தீர்வுகளும் இல்லை ” என்று அவர் கூறினார்.

யாதம்மா விவசாயத்தை மையப்படுத்தியே குடும்பத்தை நடத்தினார். மேலும் குடும்பத்தினரை விவசாயிகளாகவே அடையாளப்படுத்தினார். அவரது தலைமை இல்லாமல் தடுமாறிய அந்தக் குடும்பம் அக்கிராமத்திலிருந்தும் விவசாயத்திலிருந்தும் வேரோடு கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பிடுங்கப்பட்டு விட்டது.

அவரது மரணம் வீழ்ச்சியல்ல, அது ஒரு போராட்டம்:

வானபர்த்தி (Wanaparthy) மாவட்டத்தில் ஒரு மலையின் நிழலால் மூடப்பட்டிருக்கும் கானாபுரம் கிராமத்தில் 45 வயதாகும் ஜோகு சவரம்மா தன்னுடைய கணவர் பக்கண்ணாவுடன் வாழ்ந்து வந்திருந்தார். சவரம்மாவின் பெயரில் ஒரு அரை ஏக்கர் நிலமும் அவரது கணவர் பெயரில் ஒரு மூன்று ஏக்கர் நிலமும் இருந்தன.

அவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. “வெள்ளாமை பயிர்கள், வயல் வேலைகள், வீடு மற்றும் குழந்தைகள் என அனைத்தையும் அவளே பார்த்து வந்தாள்” என்று பக்கண்ணா கூறினார். “அவளை போல சிறப்பாக நான் வேலை செய்ததில்லை. எங்களது நிலம் வானம் பார்த்த பூமி. எங்களிடம் கிணறோ வேறு எந்த பாசன வசதியோ கிடையாது. மிகக் கடினமான சமயங்களை சமாளித்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

சில ஆண்டுகள் கழித்து பக்கண்ணா நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது சிகிச்சைக்காக அவர்களின் ஆடுகளை 1 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டி இருந்தது.

சவரம்மாவின் கணவர் பக்கண்ணா.

2015-ம் ஆண்டு வாக்கில் அவர்களது கடன் தொகை 12 இலட்சமாக இருந்தது என்று பக்கண்ணா கூறினார். “பல ஆண்டுகள் நாங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. எங்களுக்கு வெள்ளாமை செய்யவும், குழந்தைகளுக்கு திருமணம் செய்யவும், வீடு கட்டவும் பணம் தேவைப்பட்டது. சில பருவங்களில் நல்ல மகசூலை எடுத்து கடனை திருப்பிக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நல்ல மகசூல் ஒருபோதும் எங்களுக்கு கிடைத்ததில்லை” என்று கூறினார்.

சென்ற ஆண்டு (2017) செப்டம்பர் மாதத்தில் பருத்தியை பயிரிடுவதில் சவரம்மா ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து வயலை பார்த்து வந்த பிறகு ஒரு காலையில் சவரம்மாவை காணவில்லை.

படிக்க:
இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்
சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !

“நான் அவளை எங்கும் தேடிப்பார்த்தேன்” சொல்லும் போதே அவரது கண்கள் பனித்தன. “பிறகு யாரோ அவளை பார்த்ததாக சொன்னார்கள். நான் அங்கு சென்ற போது முன்பே இறந்துவிட்டாள் என்று எனக்கு தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாள் என்று கூட என்னால் கேட்க முடியவில்லை. என்ன விசம் குடித்தாள் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

வெள்ளாமை வீடு வந்து சேராததாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 6 இலட்சம் ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது. சவரம்மா இறந்த பிறகு வந்து சேர்ந்த அந்த இழப்பீடு கடன் கொடுப்பதற்கே செலவானது. மேலும் ஒரு 40,000 ரூபாய் கடன் இன்னமும் சவரம்மாவின் பெயரில் உள்ளது.

தற்கொலை செய்து மாண்டு தெலங்கானா பெண் விவசாயியின் உடலைப் பார்த்துக் கதறியழும் உறவினர்கள்.

அவர்கள் இருவரும் நெசவாளர் குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அதிலும் சவரம்மா நூல்நூர்ப்பு கொண்டு கொங்காலிஸ் (gongalis) எனும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் தரை விரிப்புகளை செய்யும் ஆற்றல் படைத்தவர். குளிர் காலங்களில் 800-900 ரூபாய் மதிப்பில் மாதம் மூன்று விரிப்புகளை செய்வார்கள். அந்தத் தறி இப்பொழுது அமைதியாக இருக்கிறது. “அவளை போல நூல்நூற்பு இனி யார் செய்வார்கள்?” என்று பக்கண்ணா கேட்கிறார். அந்த நூற்பு கருவியை கையில் பிடித்திருக்கும் அவர் சவரம்மா தொடுவது போலவே இன்னும் உணர்கிறார். அவரது நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். “அவள் இல்லாமல் என்னால் விவசாயம் பார்க்க முடியாது” என்று அவர் கூறினார்.

அவரது மரணம் ஒரு பிரியாவிடை :

மன்னே சென்னம்மா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக திகழ்ந்து வந்தார். அவரது மரணம் ஒரு வீழ்ச்சியல்ல. அது ஒரு போராட்டம்.

லக்ஷ்மிபாலி (Laxmipally) கிராமத்தில் குடிநீர் குழாயருகே பெண்கள் சூழ்ந்து இருக்கின்றனர். ஒரு கொள்கலனில் தண்ணீர் நிறைய ஒரு மணி நேரம் பிடிக்கிறது. தாங்கொணா துயரங்களைச் சந்தித்த சென்னம்மாவின் வலிமையை பற்றி அவர்கள் கூறுகிறார்கள்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த சென்னம்மாவிற்கு படிப்பறிவு கிடையாது. நிலமும் அவரது பெயரில் இல்லை. ஆயினும் எப்படியாவது விவசாயம் செய்வதற்கான பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்தார். அவர் ஆறு ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து நிலக்கடலை பயிரிடுவதற்காக வட்டிக்கு கடன் வாங்கினார்.

தண்ணீர் பற்றாக்குறையால் குத்தகை மலிவாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் 180 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. இப்போதோ 230 ஆழம் சென்று விட்டது. கணவன் மனைவி இருவரும் கிணற்றை ஆழப்படுத்த 35,000 ரூபாய் செலவிட்டனர். “அதற்கு பிறகும்கூட குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க அதிக மின்சக்தியை எடுத்துக்கொண்டது” என்று அவரது கணவர் கிருஷ்ணய்யா கூறினார்.

55 வயதான தனது மனைவி வினோதாவை பறிகொடுத்தத் துக்கத்தில், அவரது கணவன்.

நீர்ப் பாசன திட்டம் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. பாசனத்திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசையே தெலங்கானா தணிக்கை அதிகாரிகள் கை காட்டியுள்ளனர். மேலும் ரிது பந்து (Rythu Bandhu) போன்ற ஒரு நேரடி பணப்பட்டுவாடா திட்டங்களும் (ஏக்கருக்கு 4000 ரூபாய்) பெரிய விவசாயிகளுக்கு தான் பயன்பட்டதே தவிர தடுமாறிக்கொண்டிருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.

“நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பிற்பகலில் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டோம். எனக்கு அது புதிராக இருந்தது. ஏனெனில் முன்பு நாங்கள் அப்படி செய்ததில்லை. அது ஒரு பிரியாவிடை போல இருந்தது” என்று அவர் கூறினார்.

படிக்க:
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் !

“மோசமான நிலையில் பயிர் இருந்ததும் மிக குறைவான மகசூலையே அது தரும் என்பதும் எங்களுக்கு முன்னரே தெரியும்” என்று கிருஷ்ணய்யா கூறினார். 1.5 இலட்சத்தை திருப்பி அடைக்க முடியாது என்றும் மேலும் கட்டவே முடியாத அளவிற்கு அது வளர்ந்து விடும் என்பதும் சென்னம்மாவிற்கு தெரியும்.

வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடிக்க கிருஷ்ணய்யா கிளம்பிச் சென்றார். சென்னம்மா வீட்டிலேயே அதை குடித்துவிட்டார்.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: The wire

மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டுவிழா கருத்தரங்கம் !

நாள் : 16.12.2018, ஞாயிறு மாலை 5.00 மனி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கம்(சோகோ அறக்கட்டளை)
14., ஏரிக்கரை சாலை, கே.கே. நகர், மதுரை-20. (அப்போலோ மருத்துவமனை அருகில்)

தலைமை :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

வரவேற்புரை :

திரு. அ. சீநிவாசன்,
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்துரை :

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! என்றதலைப்பில் கருத்துரை:
வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.

சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும் – ஆய்வுரை:
தோழர் எஸ். பாலன், பெங்களூரு.

கலை அரங்கம் :

தோழர் கோவன் ம.க.இ.க. கலைக்குழு

நேருரை :

களப் போராளிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.

நன்றியுரை :

திரு. ம. லயனல் அந்தோணி ராஜ், செயலாளர், ம.உ.பா. மையம் மதுரை

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம் – சென்னை
முற்போக்கு நூல்களின் முகவரி

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை 384-(மாடி),
கிழக்கு 8வது தெரு, கே.கே. நகர், மதுரை-20.
அலைபேசி : 73393 26807

*****

VINAVU LIVE தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

ந்திய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நமது அரசமைப்பு இறையாண்மையுடைய ஜனநாயகக் குடியரசு என்று வகுக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார, சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக அடைவதே நமது அரசமைப்புச் சட்டத்தின் இலக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜனநாயகத்தின் மீது வெறுப்புக் கொண்ட பழமைவாத சனாதன சக்திகள் இந்து மதத்தின் பெயரால் மனுவின் தருமத்தை நமது அரசமைப்புச் சட்டத்தில் அங்கங்கே புகுத்துவதில் அன்றே வெற்றி பெற்று இருந்தனர்.

இந்திய ஜனநாயகம் என்பது அனைத்து மக்களுக்குமான ஜனநாயகமாக இல்லாவிட்டாலும் கூட முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் போராட்டத்தில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் அதிகாரத்தில் இருந்து வரும் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சங்கப் பரிவாரங்கள் நேரடியாக அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் அதனை மோடி அரசு ஆதரித்து ஊக்கமளிப்பதும் வேகமாக வளர்ந்து வருகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மோடியின் பாசிச அரசு தனது அனைத்து அரசியல் சமூகப் பொருளாதார நடவடிக்கைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் மதவெறியை ஆயுதமாகத் தரித்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வருகிறது.

வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பின்பும் இன்று வரை அதை அமல்படுத்தவிடாமல் ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

நீதிமன்றங்களை மிரட்டிப் பணியவைக்கும் போக்கில் மோடி அரசு முன்னேறி வரும் சூழலில் கூட மண வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கான வழிபாட்டு உரிமை போன்றவற்றில் தனிநபர் உரிமை சார்ந்த முற்போக்கான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆனால் மத நம்பிக்கை, மத உரிமை, மத நிறுவனங்களின் உரிமை என்ற போர்வையில் “தீட்டு, தீண்டாமை” என்ற மனுவின் நீதியை அமல்படுத்தக்கோரி போராடி வருகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாரதிய ஜனதா கட்சியினர்.

அரசமைப்புச் சட்டத்துக்கு மேலே சனாதனச் சட்டங்களை ஏற்றி வைக்கின்றனர். தனிநபர் சுதந்திரம், உரிமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கைகளை ஏற்க மறுக்கின்றனர்.

ஆர். எஸ் . எஸ் . இந்துமத  ெவறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

மோடியை விமர்சிக்கும் அல்லது அவர்களின் ஊழல் முறைகேடுகளை அம் பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ‘சொல் பேச்சைக் கேட்க மறுக்கும்’ லோயா போன்ற நீதிபதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.யில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகப் புரளி செய்து அக்லக் என்ற இஸ்லாமியரைக் கொலை செய்த வழக்கை விசாரித்த நேர்மையான காவல் அதிகாரி சுபோத்குமார் சிங் சில நட்களுக்குமுன் பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். அவ்வாறே உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறைகளும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்றும் உறுதியளிக்கப்படலாம்.

பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.

தமிழ்நாட்டில் மோடியின் பினாமியாக ஆட்சி நடத்தும் அதிமுக அரசு ஸ்டெர்லைட்டில் 14 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் ஆலையைத் திறக்க அப்பட்டமாகத் துணை போகிறது. தமிழ் இனத்தின் மீது பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் மீது நேரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. 8-வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டம் அண்மையில் கஜா புயல் பேரிடர் நிவாரணம் மறுப்பு மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியும் புதிய சட்டங்களை இயற்றியும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமாகவும் தீர்ப்புகள் முரண்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்த மறுத்து கலவரம் செய்தும் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்தாக வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி

மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார். இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம். வயர் போன்று பல ஊடகங்கள் சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.

முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்? இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடக்கும்?

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில், பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம், அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது.  அதுபோல பங்குச் சந்தைகளும் எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது. ரூபாயின் மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.

படிக்க:
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும்.  பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு, தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.

ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில் தெரிவிக்கிறார்.  ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல். தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது. அந்த வகையில் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.  மோடி அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.

1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என தெரிவித்தது.

3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.

5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.

படிக்க:
ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !

ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.

ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.

உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப் பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார். ஆனால், நாட்டு மக்கள் தப்பிக்க என்ன வழி?


கலைமதி
செய்தி ஆதாரம்: The wire,
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?

இந்தியா எதை நோக்கி? ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – இந்துத்துவா

டந்த பாராளுமன்றத் தேர்தலுக்குமுன், 2014 பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு பரபரப்புச்செய்தி புதுடெல்லியை அல்லோல கல்லோலப்பட வைத்தது. ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம், ‘உங்கள் ஒப்புதலின்பேரில்தான் சம்ஹுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு முதலான ஐந்து குண்டுவெடிப்புக்கள் நடைபெற்றன என்று சுவாமி அசீமானந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டனர். ‘அது பொய். அம்பாலா சிறையில் இருப்பவர் எப்படி பேட்டி அளித்திருப்பார்? அப்படி ஒருபேட்டி நடக்கவே இல்லை’ என்று பகவத் மறுத்தார். உடனே சங்பரிவாரங்கள் அந்தப் பேட்டியை வெளியிட்ட ‘தி கேரவன்’ ஆங்கில இதழின் அலுவலகத்தைச் சூறையாடப் புறப்பட்டன. ஆனால், தி கேரவன் நிர்வாகமோ அசீமானந்தாவை பேட்டிகண்ட ஆதாரங்களை அவரது கையெழுத்துடன் வெளியிட்டது. அவ்வளவுதான் சங்பரி வாரங்கள் அடங்கிப்போய்விட்டன. குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது வெகுண்டெழுந்து மறுப்பதும், ஆர்ப்பரிப்பதும், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் போது வாலைச் சுருட்டிக்கொள்வதும் அவர்களுக்குக் கைவந்த கலை. இந்த நிகழ்வுகளைத் தமிழக ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவே இல்லை .

எனவே, இத்தகைய நிகழ்வுகளைத் தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். ஒருகருத்து பல ஆயிரக் கணக்கான நெஞ்சங்களைக் கௌவிப்பிடிக்கும்போது அது ஒரு பௌதீகசக்தியாக மாறுகிறது. இந்த நோக்கத்தில்தான் இந்த நூலில் உள்ள (ராமச்சந்திர குஹா, லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ள) கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூலை தொகுத்து மொழிபெயர்த்துவருமான ஆசிரியர் செ.நடேசன் உரையிலிருந்து… பக்.09)

அசீமானந்தா, பிரக்யாசிங் இருவரும் என்னிடம் கும்ப மேளாவை எதிர்நோக்கியிருந்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாகக் கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசிமானந்தா கருதிய முஸ்லீம் மக்கள் தொகை நாட்டில் பெருகி வருவது பற்றி விவாதித்தார்கள். ‘கிறிஸ்தவர்களோடு நாம் எப்போதும் இணைந்து நிற்கமுடியும்; அவர்களை அச்சுறுத்தவும் முடியும். என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்: ‘ஆனால் முஸ்லீம்கள் வேகமாகப் பெருகிவருகிறார்கள் என்ற அவர், ‘தலிபான்கள் மக்களை வெட்டிக்குவிக்கும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம். நான் இதைப் பற்றிக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன், முஸ்லீம்கள் இவ்வாறு பல்கிப்பெருகினால் அவர்கள் சீக்கிரமே இந்தியாவை ஒரு பாகிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். இங்கு உள்ள இந்துக்கள் அதேபோன்ற சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்’ என்ற அவர் தொடர்ந்து, ‘அதைக்கட்டுப்படுத்துவதற்கான வழியை இந்தக்குழு கண்டுபிடித்துவிட்டது” என்றார். அவர்கள் குஜராத்தில் கங்காநகரில் உள்ள அக்சர்தாம் கோவில் போன்ற இந்து வழிபாட்டுத்தலங்களில் முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதல்களால் ஏற்கனவே ஆத்திரம் கொண்டிருந்தார்கள், 2002-ல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தப்பிரச்சனைக்கான அசீமானந்தாவின் தீர்வும், அவர் அடிக்கடி வலியுறுத்திவந்ததும், ‘அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் பழிவாங்கவேண்டும்’ என்பதுதான், அவர் கூறுவது, ‘குண்டுக்குப் பதில் குண்டுதான்’ – (பாம் கா பத்லா பாம்) (தி கேரவன் ஆங்கில இதழின் ஆசிரியர் லீனாகீதா  ரெகுநாத் எழுதியுள்ள ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – நம்பிக்கையாளர் அசீமானந்தா’’ கட்டுரையிலிருந்து பக்.59)

படிக்க:
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

இந்திய தேசிய உணர்வை வளர்த்தெடுக்க – குறிப்பாக காந்திக்கு – இந்து -முஸ்லீம் ஒற்றுமைதான் அடிப்படையாக இருந்தது. முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகள் அவரது கருத்தைச் செல்லாததாக ஆக்கவில்லை , 1910-ல் ‘Hind Swaraj’ என்ற நூலில்:

“இந்தியா ஒற்றைக் கலாச்சார நாடாக மிளிர முடியாது. ஏனெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். வெளிநாட்டினர் இங்கு வந்ததால் இந்த தேசம் அழிந்து விடவில்லை, மாறாக அவர்கள் இதில் கலந்துவிட்டார்கள். அத்தகைய நிலை உருவாகும்போது ஒருநாடு முழுவதும்தான் ஒரு தேசமாக இருக்கும். இந்தியா எப்போதும் அத்தகைய நாடாகவே இருந்து வருகிறது.”

காந்தி இந்து – முஸ்லீம் முரண்பாட்டை செயற்கையானதாக, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக உருவாகி ஆழப்படுத்தப்பட்டதாகப் பார்த்தார். படையெடுப்பின் முதல் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் பிற தேசியவாதிகள் ‘கலாச்சாரக் கலப்பு’ பற்றிப் பேசும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுசேர்ந்து நாட்டை ஆண்டார்கள். மகத்தான கலைப்படைப்புக்கள், கட்டடக்கலை என எல்லாவற்றிலும் இந்திய சாஸ்திரிய சங்கீதம் உட்பட – எல்லாவற்றையும் படைத்தார்கள். இந்தப் பண்பாட்டு இணைப்பு வடஇந்தியா முழுவதும் பரவியது. ‘Ganga Jamni tehzeeb’ என கங்கை – யமுனை ஆற்றுநீர் பாயும் பூமியெங்கும் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த கலாச்சாரம் மலர்ந்தது.

இந்தக் கொள்கையின் மீதான மிக விரிவான அறிக்கை 1940-ல் ராம்கரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை உரையில் இடம்பெற்றது.

“பல்வேறு மனித இனங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் இந்தியத் தாய்க்குள் பாய்ந்து அவளது ஆதரவளித்து வரவேற்கும் பூமியில் தங்களுக்கு ஒரு வீட்டைக் கண்டன. பல்வேறு வணிகர்களின் கூட்டங்கள் இங்கே இளைப்பாறின. இதுதான் இந்தியாவின் வரலாற்றின் நிகழ்வு. வரலாறு துவங்குவதற்கு முன்பேகூட இத்தகைய வணிகர் குழாம்கள் இந்தியா வழியாக வந்து சென்றன, அலை. அலையாகப் புதிய மனிதர்கள் வந்தார்கள். இந்தப் பரந்துவிரிந்த செழிப்பான பூமி எல்லாரையும் வரவேற்றது. அவர்களைத் தனது மார்பில் அணைத்துக் கொண்டது. இந்தத் தடத்தின் வழியாகத் தங்கள் முன்னோரைப் பின்பற்றிக் கடைசியாக வந்த வணிகர் குழுவினர் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள், இந்தக்குழு இங்கு வந்தது: இங்கேயே நிலை கொண்டுவிட்டது. எல்லாம் நன்மைக்காக”.

“அதற்குப்பிறகு பதினோரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்துயிஸத்தைப் போலவே இந்த இந்திய மண்ணில் இப்போது இஸ்லாத்துக்கும் உரிமை உண்டு. இங்குள்ள மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துயிஸம் ஒரு மதமாக இருப்பதைப்போல இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மதமாக இருந்து வருகிறது. ஒரு இந்து பெருமையுடன் ‘நான் ஒரு இந்தியன்’ என்றும் ‘நான் இந்து மதத்தைப் பின் பற்றுபவன்’ என்றும் சொல்வதைப்போல நாங்களும் கூடப் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்: “நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்”. இந்த வட்டத்தை நான் இன்னும் விரிவுபடுத்துகிறேன். இந்தியக் கிறிஸ்தவர்களும் நமக்குச் சமமாக, “நாங்கள் இந்தியர்கள்: தாங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள்” என்று சொல்லிக்கொள்ள உரிமை படைத்தவர்கள்”.

“பதினோரு நூற்றாண்டுகள் கொண்ட பொதுவரலாறு நமது பொதுச்சாதனைகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியிருக்கிறது, நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரங்கள், நமது கலைகள், நமது ஆடைகள், நமது பாங்குகள், பழக்க வழக்கங்கள், நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் எண்ணற்ற நிகழ்வுகள் – இவை ஒவ்வொன்றும் நமது ஒன்றுபட்ட முயற்சிகளின் முத்திரைகளைத் தாங்கி நிற்கின்றன.”

படிக்க:
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு

“இந்தக் கூட்டுச்சொத்து நமது பொது தேசியத்தன்மையின் மரபுரிமை, நாம் இதை விட்டுவிட்டுக் கூட்டு வாழ்க்கை துவங்கப்படாத பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கே நம்மிடையே உள்ள ஏதாவது ஒரு இந்து, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள், அதுபோலவே ஏதாவது ஒரு முஸ்லீம் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்த தங்களது கடந்தகால நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கக் கனவு காண்பாரானால், அவர்களும்கூட விரைவில் விழித்துக்கொள்வது நல்லது”. (ராமச்சந்திர குஹா எழுதியுள்ள, “காணாமல் போன… இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?” என்ற கட்டுரையிலிருந்து… பக்கம் 156-158)

நூல்: இந்தியா எதை நோக்கி ?

ஆசிரியர்கள்: லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், ராமச்சந்திர குஹா, வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்.
தமிழில்: செ.நடேசன்.

வெளியீடு: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
பேச: 04259-226012, 99425 11302

பக்கங்கள்: 190
விலை: ரூ.150.00

இணையத்தில் வாங்க: பனுவல் | உடுமலை

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277