Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 201

என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

ருடம்தோறும் மார்க்ஸ் பிறந்தநாள் அன்று அவரின் ஆளுமை பற்றி, அவரது தத்துவ கோட்பாடுகள் பற்றி, பாட்டாளி வர்க்க விடுதலைக்கு அவர் செய்த பங்களிப்பு பற்றி அதிகம் கட்டுரைகள் எழுதப்படும்‌.

இவ்வளவு ஏன் மூலதனம்  நூலில் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் பகுப்பாய்வு செய்து சொன்னது எங்களுக்கு இன்று முதலாளித்துவ நெருக்கடிகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கிறது என்று முதலாளித்துவவாதிகளே மார்க்ஸ் பற்றி பாராட்டுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி மார்க்ஸ் என்னும் ஆசான், தனிப்பட்ட மனிதன் என்ற அளவில் என் சிந்தனையில், வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தியுள்ளார் என்பதை நான் பேச விரும்புகிறேன். நான் இங்கே மார்க்ஸ் பற்றியோ அவரது தத்துவம் பற்றியோ பருண்மையான பகுப்பாய்வை செய்யப்போவதில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் மீது அவர் செலுத்திய தாக்கம் பற்றி பேசுவதால் இதில் என்னுடைய தன்னிலை அனுபவங்களே அதிகம் இருக்கும் என்று முதலிலே சொல்லிக்கொள்கிறேன்.

இப்படி ஒரு தன்னிலை வயப்பட்ட  கட்டுரையை ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே. தான் வாழும் சமூக சூழல் பற்றிய, வாழ்க்கை பற்றிய எவ்வித அனுபவ அறிவும் இல்லாத, ஊசலாட்டமுடைய ஒரு பதின்பருவ மாணவன் மீது மார்க்ஸ் என்னும் ஆளுமை செலுத்திய ஆக்கப்பூர்வமான தாக்கம் எப்படி பின்னாளில் அவனை புரட்சிகர அரசியலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதை இந்த கட்டுரை முடிவில் உங்களால் கண்டுகொள்ள முடியும். அதன் முக்கியத்துவம் உணர்ந்தே இந்த முற்றிலும் தன்னிலை வயப்பட்ட கட்டுரையை எழுதுகிறேன்.

படிக்க :

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

அப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்திருந்தேன். அதன் பிறகு மூன்று மாத கோடை விடுமுறை என்பதால் என்னை எனது மாமா ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் ஒரு தேர்தல் அரசியல் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் என்பதால் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அந்த வீட்டில் என்னைத் தவிர எல்லோரும் பெண் பிள்ளைகள் என்பதால் எனக்கு தனிமை உணர்வு அதிகம் ஏற்பட்டது. அதனை போக்கிக்கொள்ளவே ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருப்பேன். எதையும் முழுமையாக படிக்கமாட்டேன். நுனிப்புல் தான் மேய்வேன். அப்படி ஒரு நாள் ஒரு புத்தகத்தின் அறிமுக உரையை படிக்கக் நேர்ந்தது.

அதில் 1999-ம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் (Millenium) அதாவது கடந்த பத்து நூற்றாண்டுகளில் தலை சிறந்த சிந்தனையாளர் யார் என்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை கார்ல் மார்க்ஸ் பிடித்துவிட்டார் என்பதை பற்றி எழுதியிருந்தது. இதைப்படிக்கும் போது எனக்கு வெறும் 17 வயதுதான். மேலும் எனக்கு அறிவியல் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பதால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனக்கு மிகவும் அதர்ச்சமான மனிதர். அவரை விட யாரோ ஒருவர் சிறந்த சிந்தனையாளர் என்று அந்த முன்னுரையில் எழுதப்பட்டிருந்தது எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.

நான் அந்த முன்னுரையை முழுமையாக படிக்காமலே புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஆனால் யார் இந்த கார்ல் மார்க்ஸ்? பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிப்படிப்பில் ஒருமுறை கூட இவர் பெயரை கேள்விப்பட்டதில்லை. இவர் தலை சிறந்த சிந்தனையாளரா? என்ற கேள்வி மட்டும் அப்போது என்னுள் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கார்ல் மார்க்ஸ் என்னும் பெயரை நான் கண்டெடுத்தது என் வாழ்வின் ஒரு அதிசயமான தருணம் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. பின்பு அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த பெயரை நான் மீண்டும் கேட்கவோ வாசிக்கவோ இல்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது, வகுப்பறை விவாதத்தில் கார்ல் மார்க்ஸ் பெயர் மீண்டும் அடிபட்டது. அவர் மூலதனம் என்னும் நூலின் ஆசிரியர் என்றும், ஏங்கெல்ஸ் என்பவரின் இணைபிரியா நண்பர் என்றும், உலக வரலாற்றில் அவர்கள் இருவரையும் “இரட்டையர்கள்” (Duo) என்று அழைப்பார்கள் என்றும் நண்பன் ஒருவன் சொல்லக் கேள்விபட்டேன்.

அதன் பிறகு தற்செயலாக என் மாமா வீட்டில் ஏங்கெல்ஸ் எழுதிய “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” புத்தகம் இருப்பதை பார்த்தேன். அதைப்படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் எப்போதும் ஒரு கேள்வி என்னை சுற்றிக்கொண்டே இருக்கும். அது என்னவென்றால், “இந்த உலகம் இயற்கையாகவே படைக்கப்பட்டிருந்தாலும் அல்லது கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், இன்னாருக்கு இந்த நிலம் இந்த சொத்து சொந்தம் என்று பிரித்து படைக்கப்பட்டிருக்காது என்பது உறுதி. அப்படியானால் இந்த சொத்துப் பிரிவினையின் தோற்றம் என்ன?”. ” குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோன்றும்” என்னும் இந்த புத்தகத்தை படித்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதனால் மூன்றாம் ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் அந்த புத்தகத்தை படித்தேன். அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்லமுடியவிட்டாலும் சாராம்சமாக புரிந்து கொண்டேன். அந்த புரிதல் இந்த உலக வாழ்க்கை பற்றிய என் சிந்தனைகளையே தலைகீழாக மாற்றிவிட்டது.

இந்த புத்தகம் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் என்னும் “இரட்டையர்கள்” பற்றி தெரிந்து கொள்ள மேலும் உந்துதல் தந்தது. மாமா வீட்டின் புத்தக அலமாரியில் தேடி அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” என்ற புத்தகத்தை எடுத்தேன். முழு மூச்சாக மூன்றே நாளில் அந்த புத்தகத்தை படித்துவிட்டேன். நான் அந்த புத்தகத்தை வாசிக்கும் போது பலமுறை என்னையறியாமல் அழுது விட்டேன். அந்த புத்தகத்தை மூடி வைக்கும் போது மார்க்ஸ் என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டார்.

அப்போது எனக்கு வயது இருபது. அப்போதும் எனக்கு மார்க்ஸின் தத்துவம் முழுமையாக புரிந்துவிடவில்லை. ஆனால் மார்க்ஸிய தத்துவம் ஒரு கடல் என்று புரிந்தது. அருணன் எழுதிய “கார்ல் மார்க்ஸ்; வாழ்வும் சிந்தனையும்” புத்தகம் மார்க்ஸின் சிந்தனைகள் பற்றி மிகத்துல்லியமாக இல்லாவிட்டாலும் தெளிவாகவே சொல்லியிருந்தது. மார்க்ஸ் “கம்யூனிஸ்ட் லீக்” என்னும் அமைப்பில் வேலை செய்த போதும், சர்வதேச தொழிலாளர் நிறுவனமான முதல் அகிலத்தில் வேலை செய்த போதும் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு அதற்கென ஒரு சொந்த நிறுவனம் வேண்டும் என்ற கோட்பாட்டில் ஊன்றி நின்றார் என்பது தெளிவாக தெரிகிறது.

மார்க்ஸ் தன்னை ஒருபோதும் “மண்டைவீங்கி சிந்தனையாளராக” கருதிக்கொண்டதில்லை. மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த அந்த சிந்தனையாளர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு கட்டுப்பட்டுதான் இருந்தார். தன்னை ஒரு நிறுவனத்தின் ஒழுங்கிற்கு உட்படுத்தி அதன்கீழ் தான் தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார். “கம்யூனிஸ்ட் லீக்”ல் வரலாற்று சிறப்புமிக்க ஆவணமான “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் போதும், முதல் அகிலத்திற்காக கொள்கை வரைவுகளை முன்வைக்கும் போதும் தன்னை ஒரு நிறுவனத்தின் பகுதி என்ற அளவில்தான் அவர் பார்த்தார்.

ஆனால் மார்க்ஸ் காலத்து “அராஜகவதிகள்” முதல் இன்றைய காலத்து “மண்டைவீங்கி சிந்தனையாளர்கள்” வரை தாங்கள் தான் கட்சி என்றும், அவர்கள் இல்லாமல் இந்த உலகத்தின் சிந்தனை இயக்கம் நின்றுவிடும் என்றும் எண்ணும் அளவிற்கு சுயமோகிகளாக (Narcissists), தன்புகழ் பாடும் தாசர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் மார்க்ஸ் ஒரு பன்பட்ட கோட்பாடுகள் உடைய நிறுவனத்திற்கு கட்டுப்பட்டவராக இருந்தார். இதற்கு சிறந்த உதாரணம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” சமர்ப்பிக்கும் சம்பவத்தை சொல்லலாம். “கம்யூனிஸ்ட் லீக்” அறிவித்திருந்தபடி அடுத்த கூட்டத்தில் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை சம்பிக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் ஏங்கெல்ஸ் முக்கிய வேலையாக பாரிஸ் போய் விட்டதால் மொத்த வேலையும் மார்க்ஸ் மீது விழுந்தது. இதனால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனே “கம்யூனிஸ்ட் லீக்” மார்க்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை செய்தி அனுப்பியது.

“கடந்த மாநாட்டில் தான் ஒப்புக்கொண்டபடி கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 செவ்வாய்க்கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு பிரஜை மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவருக்கு தெரியப்படுத்துமாறு பிரஸ்ஸெல்ஸ் மாவட்டக் குழுவிற்கு மத்திய குழு உத்திரவிடுகிறது. பிரஜை மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின் போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாக திரும்பியனுப்ப வேண்டும் என்றும் மத்திய குழு கேட்டுக்கொள்கிறது” என்ற செய்தி மார்க்ஸை வந்து சேரும்போது அந்த உலகப்புகழ் மிக்க கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, “கம்யூனிஸ்ட் லீக்”ன் தலைமை இருக்கும் லண்டனிற்கு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்தது.

அதாவது இந்த எச்சரிக்கை செய்தி மார்க்ஸை வந்து சேரும் முன்பே மார்க்ஸ் அறிக்கையை அமைப்புக்கு அனுப்பிவிட்டார். ஆனால் ஒருவேளை அவ்வாறு செய்ய முடியாமல் போயிருந்தால் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இருவரும் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டிருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மார்க்ஸின் இப்படிப்பட்ட வாழ்வை தெரிந்துகொண்ட நொடியில் இருந்து நாமும் மார்க்ஸ் போல் சிறந்த கம்யூனிஸ்டாக ஒரு அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் மாமா சார்ந்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியோ ஓட்டுப் பொறுக்கி தேர்தல் கட்சி. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்திற்கு பெயர்போன கட்சி அது. அதனால் அதில் சேர விரும்பவில்லை.

அப்போது தான் 2016-ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடைபெற்றது. அதில் எனது உறவினர்கள் இரண்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செய்தி ஊருக்கு தெரியவந்தது. அவர்களை சந்தித்து  மக்கள் அதிகாரம் அமைப்பு எத்தகைய போர்க்குணம் மிக்கது, கொள்கைப்பிடிப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆனால் நான் இருந்தது ஒரு குக்கிராமம் என்பதால் அவர்கள் இருவரை தவிர எனக்கு எந்த தோழர்களையும் தெரியாது. ஆனால் 2017-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக நகரத்திற்கு சென்றபோது தோழர்களின் அறிமுகம் கிடைத்து அமைப்பில் இணைந்து பயணிக்க தொடங்கினேன். அமைப்பில் இணைந்த சில நாட்களிலே சித்தாந்தப் பயிற்சி தொடங்கிவிட்டதால் மிக விரைவிலே நான் எப்பேர்ப்பட்ட “கற்றுக்குட்டி” என்பதையும், புத்தகங்கள் படிப்பதுடன் நடைமுறை பணி எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கற்றுக்கொண்டேன்.

இன்றளவும் நான் அமைப்பில் பயணிக்கிறேன். நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அப்போது 17 வயது பையனாக நான் கார்ல் மார்க்ஸ் பெயரை அந்த புத்தகத்தின் முன்னுரையில் படித்த அற்புத தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். அது நடந்து 10 ஆண்டுகள் கழித்துவிட்டது. ஆனால் இன்றும் மார்க்ஸ் என்னும் மானசீக ஆசானின் வழிகாட்டுதலில் இருந்துதான் சமூக வாழ்க்கை, அமைப்பு வாழ்க்கையில் பயணிக்கிறேன். ஆனால் என் ஆசான் மார்க்ஸ் என்னிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்கவில்லை. என்னை புரட்சி செய்யச் சொன்னார்.

மார்க்ஸின் தத்துவம் அதன் இன்றைய காலகட்ட பொருத்தப்பாடு பற்றிய பருண்மையான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுவதில் இருந்து நழுவிக்கொண்டு, மார்க்ஸ் என்னும் ஆசான் பற்றிய என்னுடைய இந்த தன்னிலை வயப்பட்ட கட்டுரைக்கு என்ன நியாயம் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம்.

பதில் மிக எளிமையானது. இன்றைய நவ தாராளவாத உலகில் நுகர்வு வெறிதான் கலாச்சாரமாக இருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மிக ஆரம்ப காலங்களிலே எல்லா வகையான நுகர்வு வெறிக்கும் ஆட்ப்பட்டு அவர்கள் வாழ்வை அதிலே தொலைத்து விடுகிறார்கள். இந்த நுகர்வு வெறி நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் மக்களின் அனைத்து தரப்பினர் மீது திணிக்கப்படுகிறது. அதிலிருந்து தப்பித்து சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலர் அரசியல் பயில வந்தாலும், அவர்களையும் பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், அடையாள அரசியல் என பல வண்ணக்கோட்பாடுகளை அவர்கள் மீது கொட்டி அவர்கள் அரசியல் உணர்வை காயடிக்கிறார்கள் (Political Castration). அதற்காகவே அரசு சாரா நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து சமூகத்தை வெவ்வேறு கருத்தாக்கங்களின் கீழ் பிரித்து வைத்திருக்கிறது.

மார்க்ஸியத்தையே கூட மேலைநாட்டு மார்க்ஸியம், கிழக்கிந்திய மார்க்ஸியம், ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், மண்ணுக்கு ஏற்ற மார்க்ஸியம் என்று பலவகைகளில் பிரித்து மார்க்ஸியத்தை திரிபு செய்கின்றனர். பல மார்க்ஸிசய இயக்கங்களும், கட்சிகளும் கூட இந்த அரசு சாரா நிறுவனங்களின் ஏகாதிபத்திய கைக்கூலிதனத்தை கண்டுகொள்ளாமல் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கும் அவலம் நடக்கிறது.

இப்படி மார்க்ஸியத்தை பல வண்ணங்களில் கூறுபோட்டு அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களையும், மார்க்ஸிய இயக்கங்களையும் திசை திருப்பிவிட ஏகாதிபத்திய  நிறுவனங்களிடம் கூலி பெற்றுக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள் கல்விப்புல அறிவுஜீவிகள் மற்றும் கல்விப்புலம் சாராத அறிவுஜீவிகள்.

படிக்க :

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !

ஆனால் நமது ஆசான் மார்க்ஸ் ஒரு கல்விப்புல அறிவுஜீவி அல்ல. இந்த உலகத்தை சுரண்டலற்றதாக மாற்றும் தத்துவத்தை வளர்த்தெடுத்தவர். அவர் உலகத்தை மாற்றும் நோக்கத்தில் உலகத்தை விவரிக்கும் மொழியைக்கூட மாற்றியமைத்தார். முதலாளிகள் லாபம் என்றதை மார்க்ஸ் சுரண்டல், உபரி மதிப்பு என்றார். அரசு என்பதை ஆளும் வர்க்கத்தின் வன்முறை கருவி என்றார். அதனால்தான் மார்க்ஸை கற்றுக்கொள்ள மார்க்ஸியத்தை எந்தவித திரிபுவாதமும் இன்றி உயர்த்திப் பிடிக்கும் அமைப்பின் நடைமுறை வேலைகளின் மூலமே கற்றுக்கொள்ள முடியும் என்று சொல்கிறேன்.

இன்றைய இந்திய அரசியல் சூழலில் மதவாதம் பாசிசத்தின் வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசியல் வானில் சூழ்ந்திருக்கும் பாசிச மேகங்களை அகற்றி ஒளி பாய்ச்சும் சக்தி மார்க்ஸியத்திற்கு மட்டுமே உண்டு. நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் பெயரை ஒரு புத்தகத்தின் முன்னுரையில் கண்டுகொண்டதை போல நீங்களும் இந்த கட்டுரையின் வழி மார்க்ஸிய தத்துவம் பற்றி கண்டுகொண்டு பாசிசத்திற்கு எதிரான அணியில் மார்க்ஸியத்தின் பெயரால் நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த மார்க்ஸின் மேற்கோளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன். இந்த வரிகள் மார்க்ஸ் வாலிபனாக இருந்தபோது எழுதியது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு இந்த வரிகள் பொறுத்தமாக இருக்கும். “மனிதகுலத்தின் பெரும்பான்மைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தீர்மானித்துக் கொண்டால் எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. காரணம், அவையெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது. நமது மகிழ்ச்சி கோடான கோடி மக்களுக்கு சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும், என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் சூடான கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்”.

ராஜன்

மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ்-ன் 204-வது பிறந்த நாள் !

மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ் 204-வது பிறந்த நாள் !

லக முதலாளித்துவம் உழைக்கும் மக்களைச் சுரண்டி, பல்வேறு நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்து, சந்தை பிடிக்கும் போட்டியும், போரையும் தீவிரப்படுத்தி வருகிறது.

உலக இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அழிக்கப்படுவதும், புவி வெப்பமயமாதல் மற்றும் புதிய காலநிலை மாற்றங்கள் போன்ற பேரழிவுகள் அதிகரிப்பதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்த பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட மார்க்சியம் எனும் ஆயுதத்தை உலக பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து கையிலேந்த வேண்டிய சூழ்நிலையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்துவோம்!

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் !

ஓவியம் : மு.துரை

***

ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

***

இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு !

1
இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு –
இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமைகள் என்ன?
மே 1 என்றால் தொழிலாளர் தினம், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். அப்படிப்பட்ட மே தினம் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தான், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சென்னையில் தான் முதல்முறையாக 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த வருட மே தினத்துடன் இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.
1923-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் தோழர் சிங்காரவேலு ஆவார்.
தோழர் சிங்காரவேலு 1923-ம் ஆண்டு மே தின விழாவை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் சிங்காரவேலுவும், தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும் பங்கேற்று பேசினர்.
தென்சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, எம்.பி.எஸ்.வேலாயுதம், சங்கர்லால் ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் என்று அன்றைய இந்து மற்றும் சுதேசமித்ரன் ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
படிக்க :
♦ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !
”மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்பவை தோழர் சிங்காரவேலு மே 1 தின பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகள்.
அக்காலகட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கமானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து முழுமையான அரசியல் விடுதலை எனும் முழக்கத்தோடும், பொருளாதார சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி எனும் கோரிக்கையோடும் தனது போராட்டங்களை முன்னெடுத்தது. (டி.கே.ரங்கராஜன், CPIM)
குறிப்பாக தமிழகத்தில் நாகை மற்றும் திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம், சென்னை, கோவை, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், கிராமப்புறங்களில் நடைபெற்ற ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, குத்தகைதாரர் உரிமை போராட்டங்கள், விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டங்கள், சென்னையில் டிராம்வே போராட்டம் என மாநிலம் முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அன்றைய காலகட்டத்தில் வெடித்து எழுந்தன. தமிழகத்தை போல் இந்தியா முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தன.
மேற்கூறிய சூழல் நிலவும் போது தான் தோழர் சிங்காரவேலு இந்திய தொழிலாளி வர்க்கம் ஒரு பலமான சக்தியாக மாற வேண்டும் என்பதையும், உலகத் தொழிலாளர்களோடு ஒரே வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.
அன்று இந்தியாவானது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. உலக ஏகாதிபத்தியங்களுக்கிடையே பிரிட்டிஷ் கை மேலோங்கி, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் மூலம் உலகை மறுபங்கிட புதியதாக உருவாகிய ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபத்தியங்கள் போட்டி போட்டன. 1917 ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஆதரவாக ரஷ்யா தலைமையில் சோசலிச முகாம், முதலாளித்துவ நாடுகளுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய முகாம் என உலகம் இரு முகாம்களாக பிரிந்து இருந்தது.
அதன் பிறகு சோவியத் ரஷ்யாவானது சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து பல நாடாக உடைந்து சீரழிந்தது. ஆகையால் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கமானது தலைமை தாங்கி செல்லக்கூடிய சோசலிச முகாம் இல்லாமல் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்க ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய முகாமானது ஏறித் தாக்கும் நிலைமையில் இருந்தது. அதனால் அமெரிக்க தலைமையின் கீழ் இருந்த எல்லா நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் என அழைக்கப்படும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறானது. அமெரிக்க ஒற்றை துருவ மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்க – ரஷ்யா மற்றும் அமெரிக்க – சீனா மேலாதிக்க போட்டியானது வளர்ந்து வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரானது அமெரிக்க – ரஷ்ய மேலாதிக்க போட்டிக்கு உதாரணம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் அமெரிக்க – சீன மேலாதிக்க போட்டிக்கு உதாரணம்.
இப்படிப்பட்ட உலக மேலாதிக்க போட்டி மற்றும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக உலகம் முழுவதிலும் ஒரு பொதுப்போக்காக பாசிச இயக்கங்கள் எல்லா நாடுகளிலும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றன.
அப்படித்தான் இந்தியாவில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் தன்னுடைய நிகழ்ச்சி நிரலான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லீம் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரம் ஏற்படுத்துவதற்கான பண்டிகைகள் என்பதை தாண்டி, இந்துக்கள் பண்டிகைகள் என்றாலே முஸ்லீம் மீதான தாக்குதல் என்ற புதுப்பண்பு உருவாகி உள்ளது. ராமநவமி கலவரம் இதற்கு சமீபத்திய உதாரணம்.
தலித்துகள் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் முன்பை விட பன்மடங்கு அதிகரித்த போதும், தலித்துகள் உட்பட பிற சாதிகள் மத்தியில் நாம் இந்துக்கள் என்ற உணர்வு முன்பை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நாம் இந்துக்கள் என்ற உணர்வு தான் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஒருபுறம் பாஜக – ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிரத்தை அமல்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது.
படிக்க :
♦ மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ
♦ மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
மறுபுறம் இந்தியாவானது உள்நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்களின் வேட்டைக்காடாக மாற்றப்படுகிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு வளர்ச்சி என்ற பெயரில் விற்கப்படுவதும், கார்ப்பரேட்டுகள் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மானியங்கள் என மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பதும், அதற்கு எதிர்மாறாக மக்களை பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் மற்றும் ஜி.எஸ்.டி என்ற பெயர்களில் வரியை போட்டு கசக்கி பிழிவதும் அன்றாட நிகழ்வாகி, மக்கள் மீதான வரிச்சுமை மேலும் மேலும் தீவிரமாகி வருகிறது.
மேற்கூறிய விதத்தில் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல பிரிக்க முடியாத வகையில் தீவிரமாக அமல்படுத்துகிறது.
ஆகவே தற்போது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள கடமை, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு விரோதமான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதும், ஏகாதிபத்திய முதலாளித்துவதை முறியடித்து சோசலிச சமூகத்தை நிறுவ சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நிறுவதும் ஆகும். இவற்றை நிறைவேற்ற தம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதே இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்டு 100-வது ஆண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.
இறுதியாக தோழர் சிங்காரவேலுவின் வார்த்தைகளிலே கூறுவதானால்,
“நம் நாட்டில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் இரக்கமற்ற அயல்நாட்டு ஆட்சியாளர்களின் விலங்குகளிலிருந்து மட்டிமின்றி, வர இருக்கும் இந்திய முதலாளிகளின் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டால் தான் உண்மையான சுதந்திரத்தோடு இருக்க முடியும்”.

அமீர்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !

டைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்கின்ற விதத்தில் 2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசைதான் இந்த ஆட்சி என்று அடித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார் அல்லது ‘அருமையான நகைச்சுவை’ என்றுதான் நாம் அவற்றைக் கருதியிருப்போம். ஆனால் ஒரு அடிமைக்கு தனது எஜமானன் மேலுள்ள ஆழமான நம்பிக்கையையே அது பிரதிபலித்தது.
மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தனது இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதானைகளை செய்துவருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தலை நடத்துவதுதான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையாக சொல்லப்படுகிறது.
படிக்க :
♦ இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
இதைக் கொண்டுவருவதற்காக தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்திருக்கிறது. இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தில் பேசிய  மோடி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது விவாதப் பொருள் அல்ல; அது இன்றைய காலக்கட்டத்திற்கான தேவை; அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் ‘வளர்ச்சிக்கு’ முட்டுக்கட்டையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
2014-ல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017-ம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது. 2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையுடன் இணைந்ததுதான் ஒரே வாக்காளர் பட்டியல் கொண்டுவரவேண்டும் என்பதும். இதை நடைமுறைப்படுத்துவதன் முதல்படியாகவே கடந்த ஆண்டு இறுதியில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மோடி அரசு.
000
இந்நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதியன்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பிரதமர் அலுவலகத்துடனான இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா (இடையில்) மற்றூம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுப் சந்திரா பாண்டே, ராஜிவ் குமார்.
ஏனெனில், மோடி அரசு இதை பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோதிலிருந்து, பா.ஜ.க. எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இதனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக இயங்கும் ஒரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ‘அப்படி ஒரு கற்பனையெல்லாம் தேவையில்லை’ என்று கருதச் செய்யும்படி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சு அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தால் இன்னும் சட்டமாக்கப்படாத ஒரு திட்டத்தைப் பற்றி, ஒரு அரசின் உயர் அதிகாரி ஆளும்கட்சிக்கு சாதகமாக தனது கருத்தை தெரிப்பது ஜனநாயக அமைப்பு முறைக்கு விரோதமானதாகும்.
இதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிரதமரின் முதன்மைச் செயலாளர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணையவழிக்கூட்டம் நடத்திப் பேசியதும் பெரும் விவாதப் பொருளானது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வின் கைப்பாவைதான் என வெளிப்படையாக தெரிந்திருப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
000
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை ஏன் கொண்டுவரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் பல காரணங்களைச் சொல்லிவருகிறார்கள். “நாட்டில் ஆண்டுதோறும் ஏதாவதொரு தேர்தல் நடந்துகொண்டே உள்ளது. இந்த தேர்தல்களை நடத்துவதற்கு அரசு அதிகளவு செலவழிக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளும் பாதிப்படைகிறது. அடிக்கடி தேர்தல் நடப்பதால்தான் தேர்தலில் மக்கள் பங்கேற்பு முழுமையாக இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தேர்தல் நடந்தால் மக்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்” என நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவிற்கு பொய்களை அடுக்குகிறார்கள்.
முதலில், தேர்தல்களை நடத்துவதற்கு அதிகளவு செலவாகிறது என்று கூறுவது எப்படி அப்பட்டமான பொய் என்பதை பார்ப்போம்.
‘செண்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்’ என்ற அமைப்பு தேர்தல் செலவுகளை பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த செலவு என்பது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என அனைவரும் இணைந்து செய்த மொத்த செலவு. இதில் அரசு செய்த செலவு வெறும் 3 ஆயிரத்து 500 கோடி. அதாவது மொத்த செலவில் 11 சதவிகிதம் மட்டுமே.
இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமானதுதான் என்றபோதும், இதிலிருந்து மொத்த தேர்தல் செலவில் அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவானதே என்பதை அறியலாம்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன்களின் மொத்த தொகை 10 இலட்சத்து 72 ஆயிரம் கோடி. இவர்களுக்கு தேர்தல் நடத்துவதால்தான் கஜானா காலியாகிறதாம்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இதில் 45 சதவிகிதம், அதாவது 27 ஆயிரம் கோடியை பா.ஜ.க. என்ற ஒரு கட்சி மட்டுமே செலவழித்துள்ளது. ஒருவேளை இதனால்தான் தேர்தல் அதிகம் செலவு பிடிக்கிறது என்று சொல்கிறார்களா தெரியவில்லை.
அடுத்து, ‘வளர்ச்சிப் பணிகள்’ பாதிக்கப்படுவதைப் பார்ப்போம். இந்த விசயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்குமுன் பா.ஜ.க. எதை ‘வளர்ச்சிப் பணிகள்’ என்று சொல்கிறது என்பதை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், சிறுதொழில் அழிப்பு என மோடி ஆட்சி உழைக்கும் மக்களுக்கு நரகமாகவே இருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு, பாரத்மாலா, சாகர்மாலா, மீத்தேன் எரிவாயுத் திட்டம், அணு உலை விரிவாக்கம், வேளாண் சட்டதிருத்தம், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கம், பல லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி, வரிச்சலுகைகள் என கார்ப்பரேட் முதலாளிகள் குதுகலிக்கும் வகையிலான பணிகளைத்தான் மோடி ஆட்சி சிரமேற்கொண்டு செய்துவருகிறது. இதைத்தான் அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகள்’ என்கிறார்கள்.
புள்ளிவிவரம் ஒன்றின்படி, 2020-2021-ல் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 261 சதவிகிதம் உயர்ந்தது. அதேபோல, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிதமாக உயர்ந்துள்ளது. அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் இந்த ‘வளர்ச்சிப் பணிகளில்’ சீரான வளர்ச்சி இல்லாமல் போகலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் வருத்தம்.
சான்றாக வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை எடுத்துக் கொள்வோம். கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க, இந்திய விவசாயித்தை கூறுபோட்டு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டன வேளாண் சட்டங்கள். இதை எதிர்த்து விவாசாயிகள் ஓராண்டுகாலம் போராடினார்கள். இப்போராட்டத்தில் 750 விவசாயிகள் தியாகியானார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் பணியாத மோடி, ஐந்து மாநிலத் தேர்தல் வரவே (இது ஒரு காரணம் மட்டுமே என்றாலும்) வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறார். இதனால் அவரது நண்பர்கள் (அம்பானி, அதானி) மோடியிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றது. எனவேதான் அடிக்கடி நடக்கும் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவது பா.ஜ.க.விற்கு தேவையாக இருக்கிறது.
000
அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், தங்கள் புரவலர்களான பார்ப்பன – பனியா கார்ப்பரேட் கும்பலின் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘பாரத தேசம்’ என்ற வரையறைக்கும் அது ஒத்திசைவானதாக இல்லை.
நம் நாட்டில் அதிகார மாற்றத்திற்குப் பிறகு, மொழி வரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநில அரசுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அவர்களின் தலைவர் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனை கொத்து’ என்ற நூலில் “நமது புனிதத் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு, ஒரே நாடு – ஒரே சட்டமன்றம் – ஒரே நிர்வாக மையம்தான் தேவை” என்று கூறியுள்ளார்.
பல்வேறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய, தங்கள் கைகளில் வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை வைத்துள்ள மாநில அரசுகள் இந்துராஷ்டிர அதிகார மையத்திற்கு எதிரானதாகும். வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு, இந்நிலப்பரப்பு பல்வேறு சமஸ்தானங்களாக இருந்ததைப் போல மீண்டும் மாற வேண்டும்; கிராம அளவிலான உள்ளூர் அதிகாரம் நிலவ வேண்டும். அனைத்து கிராம அதிகாரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரே பேரரசு இருக்க வேண்டும் என்பதுதான் இந்துராஷ்டிர அரசு வடிவம். இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பார்ப்பனிய சாதிக் கொடுங்கோன்மையும் நிலப்பிரபுத்துவ சுரண்டலும் இந்த வடிவத்தில்தான் பாதுக்காக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்று கூறினாலும் மொத்தமாக தேர்தல்களையே ஒழித்துக்கட்டி தனது பாசிச சர்வாதிகாரத்தை – இந்துராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இலக்கு. அதற்கான தொடக்கமாக அவர்களுக்குப் பயன்படப்போவதுதான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’.
ஐ.டி.ஃப்.சி என்ற அமைப்பின் ஆய்வுப்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 77 சதவிகிதம் ஒரே கட்சியே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது. ஏனெனில் நாடு தழுவிய தேர்தலின்போது, தேசியப் பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படும். அதில் மட்டுமே மக்கள் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று பல அறிஞர்களும் கூறிவருகிறார்கள்.
56 இன்ச் மார்பு கொண்ட மோடி மட்டுமே, உள்நாட்டில் ‘முசுலீம் பயங்கரவாதிகளிடமிருந்தும்’ வெளியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களை முறியடித்து, நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தவர் என்ற கருத்தை தொடக்கம் முதலே தங்களது பிரச்சாரத்தின்மூலம் பெரும்பான்மையினரின் மனதில் ஆழமாக ஊன்றி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
படிக்க :
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
மேலும், மோடிக்கு சவால்விடக்கூடிய ஒரு ‘மீட்பர்’ பிம்பம் தற்போதுவரை எந்த கட்சித் தலைவருக்கும் இல்லை. மேற்சொன்ன அதே காரணத்தால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். புல்வாமா தாக்குதல் அப்போது பா.ஜ.க.விற்கு நன்கு பயன்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைப்போல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கிளப்பிவிடும் தேசவெறி, மதவெறியை தேர்தலிற்குள்ளேயே நின்று முறியடிப்பது சாத்தியமில்லை.
சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமான வகையிலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தனது கனவான இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிறுவுவதில் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதில் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல்.
எப்பொழுது வேண்டுமானால் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்படலாம் என்ற அபாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எப்படி வீழ்த்தலாம்’ என்று வியூகம் வகுத்துக்கொண்டிருக்கும் தேர்தல் கட்சிகளும் ‘அரசமைப்புச் சட்டத்தை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது’ என்று போலி ஜனநாயகத்தை நிலையானது என கருதிக் கொண்டிருப்பவர்களும், கனவை உதறியெழ வேண்டிய தருணம் இது !

மதி

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – வஞ்சிக்கும் தமிழக அரசு !

0
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளை சேர்ந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை கட்டச் சொல்வதை கண்டித்து கடந்த மார்ச் 31 அன்றிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2020 – 2021-ம் ஆண்டுக்கு முன்பு சேர்ந்த மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரிக்கான பழைய கட்டணத்தை மார்ச் 30-க்குள் செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் வகுப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களை மிரட்டியுள்ளது.
இதைக் கண்டித்து மார்ச் 31, 2022 அன்று அனைத்து நிலை மருத்துவ மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில், நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரம் அவகாசம் வழங்குவதாகவும், அரசுடன் கலந்து பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாகவும் நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை குறைக்காததால் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஏப்ரல் 10-ந்தேதி மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 11-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.
படிக்க :
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?
ஏப்ரல் 21 முதல் இன்று வரை மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2,3,4-ம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
***
2013-ம் ஆண்டு தமிழக அரசானது அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்த பிறகும், தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் வசூலிக்க சொல்லி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.
2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020 டிசம்பர் 9 முதல் 57 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்தால் தமிழக அரசானது ஜனவரி 28, 2021 அன்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதாக அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் இக்கல்லூரியானது இனிமேல் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கல்விக் கட்டணம் சம்மந்தமாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பிப்ரவரி 4, 2021 அன்று தமிழக அரசானது கட்டணக் குறைப்பு சம்மந்தமாக அரசாணையை வெளியிட்டது.
பிப்ரவரி 4 அன்று தமிழக அரசானது வெளியிட்ட அரசாணையை அப்படியே நடைமுறைப்படுத்தி இருந்தால், தற்போது மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருக்காது.
ஆனால் பிப்ரவரி 26 அன்று அரசாணை 122-யை தமிழக அரசானது வெளியிட்டது. அதில் 2020 – 21-ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும்தான் அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அதற்கு முன்பாக சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
கடந்த பிப்ரவரி 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்டோபர் 26-ம் தேதி மேலும் ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில் 2016 – 2018 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 5.44 லட்சம், 2018 – 2020 ஆண்டுகளில் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம், அதன் பிறகு சேர்ந்த மாணவர்களிக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. தற்போது மேற்கூறிய கட்டணத்தை கட்ட சொல்லிதான் நிர்வாகமானது மாணவர்களை நிர்பந்திக்கிறது. அதை எதிர்த்துதான் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியானது, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக கடந்த ஆண்டே மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் 2020 – 2021 ஆண்டுக்கு பிறகு சேர்ந்தவர்கள்தான் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள், அதற்கு முன் சேர்ந்தவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது 2020 – 2021 முன்பு சேர்ந்தவர்கள் உயர்கல்வித் துறையின் கீழும், அதற்குப் பிறகு சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வித்துறையின் கீழும் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான் மாணவர்களிடையே இந்த கட்டண வேறுபாடு.
“ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துச் சென்றுவிட்டார்கள். 2020 – 2021 ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசுக் கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும். அவர்களுக்குக் கூட அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்க வேண்டியிருக்கும். இதற்காக அரசுக்கு பெரும் தொகை செலவாகாது” என்று அண்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2020 டிசம்பர் மாதத்தில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக “ஆட்சி மாறியதும், கட்டணத்தை மாற்றுவோம்” என்று மாணவர்களுக்கு உறுதியளித்தது.
மேற்கூறியவாறு 2018, 2019-ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டியிருந்தும், ஆட்சிக்கு வந்த திமுக அரசானது ஒரு மாதமாக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியானது 2016 முதல் கட்டணக் குறைப்புக்கான மாணவர்களின் தொடர் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல், 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன், தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது.
திமுகவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்கு வந்தால் கட்டணத்தை மாற்றுவோம் என்று கூறியது, ஆனால் தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டது.
மேற்கூறியவைதான் திமுக, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு மாணவர்கள் மீது எல்லாம் அக்கறை கிடையாது. அதனால்தான் இரு கட்சிகளும் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் கண்டுகொள்வது இல்லை. நிர்வாகம் மற்றும் போலீசை வைத்து ஒடுக்கவே செய்கின்றனர்.
ஆனால் மாணவர்கள், நிர்வாகம் மற்றும் போலீஸ் ஒடுக்குமுறைக்கு எல்லாம் அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பதை அவர்களின் போராட்ட பாரம்பரியமே நிருபிக்கிறது.
குறிப்பாக 2020 டிசம்பர் முதல் கிட்டதட்ட இரண்டு மாத காலமாக மாணவர்கள் கட்டணக் குறைப்பை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க நிர்வாகமானது முதலாம் ஆண்டு மாணவர்களிடம் மதிப்பெண்ணில் கைவைப்போம், ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டியது. ஆனால் அதை மீறி முதலாம் ஆண்டு மாணவர்கள், பிற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.
படிக்க :
விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
அதன்பிறகு நிர்வாகம் குடிநீர், உணவு, மின்சாரம் என அனைத்தையும் நிறுத்தியது, மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற சொல்லியது, கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தது. ஆனால் அதை மீறியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உணவு, தண்ணிரை மாணவர்கள் தங்கள் கைக்காசுகளை போட்டு வாங்கிய போதும், போலீசை வைத்து மாணவர்களை நிர்பந்தித்தது.
மேற்கூறிய கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளை எல்லாம் மீறிதான், கல்லூரி மாணவர்கள் நெஞ்சுரமிக்க போராட்டம் நடத்தினர். அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் உரிமைக்காக, எவ்வளவு அடக்குமுறை வந்தாலும், நெஞ்சுரமிக்க போராட்ட பாரம்பரியத்தின் வழியில் விடாப்பிடியான போராட்டத்தை கட்டியமைக்க கூடியவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள பிற மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் அவர்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டியது நம் கடமை.

அமீர்

டாஸ்மாக்கினால் பெருகிவரும் குற்றங்கள் : கடையை மூடாமல் கல்லாக் கட்டும் திமுக !

தீபாவளி, பொங்கல் பல்வேறு பண்டிகை நாட்களின்போது, செய்தித்தாளில் இரண்டு விஷயங்களை தவறாமல் காண முடியும். ஒன்று விடுமுறையின் முந்தைய நாள் கோடிக்கணக்கில் டாஸ்மாக் விற்பனை சாதனைகள். இரண்டாவது, போதையில் கணவன் மனைவியை கொன்றது, நண்பரையே வெட்டிக் கொன்றது போன்ற செய்திகள். இச்செய்தியைப் படித்துவிட்டு தனிநபர்களின் பிரச்சினை என்று நாம் கடந்து செல்வதும் உண்டு.
ஆனால், டாஸ்மாக்கினால் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதும், பல தாய்மார்கள் தமது கணவரையும் பிள்ளைகளையும் இழந்து நிர்கதியாய் நிற்பதும், தனிநபர் பிரச்சினை அல்ல; இந்த சமூகத்தை பாதிக்கின்ற பிரச்சினை; இந்த அரசு மக்களை திட்டமிட்டே சீரழிக்கும் பிரச்சினை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
தமிழகம் முழுவதும் 5,380 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் தினந்தோறும் சுமார் 90 முதல் 100 கோடி வரை வருமானம் வருகிறது. பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அதிக அளவில் மது விற்பனை நடப்பது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 1, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.52.2 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடி வசூல் அடைந்துள்ளது. இதில் கள்ளத்தனமாக விற்பதற்கு பெட்டி பெட்டியாகவும், கோணிப் பைகளிலும் வாங்கி சென்று, போலீசுக்கு மாமுல் கொடுத்துவிட்டு அதிக விலைக்கு விற்போர் பட்டியல் தனிக்கதை.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
மூடு டாஸ்மாக்கை ! வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் வசூலைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். அந்த டாஸ்மாக்கினால் குடித்து சீரழிந்து தமது வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கடந்த மே 2-ம் தேதி பத்திரிகையில் வந்த செய்திகளை சற்று கவனிப்போம்.
சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் என்கிற பாபு, அருண், அதே பகுதியை சேர்ந்த தினேஷ், குமார், கார்த்தி, லோகேஷ், பாபு ஆகியோர் நண்பர்கள். இவர்கள் தினமும் திருவான்மியூர் கடற்கரையில் குடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துக் கொண்டிருந்தபோது போதை தலைக்கு ஏறியதும் தினேஷ் மற்றும் அருணுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது சண்டையில் போய் முடிந்திருக்கிறது.
அதே கும்பல் மீண்டும் மே 1 அன்று குடித்துவிட்டு அவர்களுடைய செட்டில் உள்ள குமார் என்பவரது தாயாரின் 16-ம் நாள் காரிய நிகழ்விற்கு சென்றபோது குடிபோதையில் அருண் என்ற இளைஞன் தனது செருப்பை தூக்கி வீசியுள்ளார். அது தினேஷ்-ன் சாப்பாட்டு இலையில் வந்து விழுந்துள்ளது. இதில் இருவரும் போதையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அருணுக்கு ஆதரவாக சதீஷ் குமார் என்ற இளைஞர் வந்து தினேஷை தாக்கியுள்ளான். இதனால் வேகவேகமாக வீட்டிற்கு சென்ற தினேஷ் தமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்க்கும் விதமாக தமது சொந்த நண்பர்களையே கொல்வதற்காக தேடிச் சென்றுள்ளான்.
சதீஷ்குமார், அருணும் அவரது கண்ணில் பட்டனர். இதில் தினேஷ் கையில் கத்தியை பார்த்தவுடன் அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி மடக்கி பிடித்த தினேஷ் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.  அதில் இருவரும் இறந்துவிட்டனர்.
இதேபோல், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த முகிலன் என்ற இளைஞருக்கும் பிரதாப் என்ற இளைஞருக்கும் ஒரு ஆண்டிற்கு முன்பாகவே ஒரு நிகழ்சியில் சண்டை ஏற்பட்டுள்ளது.
தற்போது டி.எம்.எல் காலனியில் உள்ள ஒரு பெட்டிக் கடைக்கு போதையில் போன முகிலன், பிரதாப்புடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரதாப்பும் அவரது உறவினரும் முகிலனை வெட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து முகிலன் தப்பித்து சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பிரதாப்பின் அண்ணனும், அவரது உறவினர்களும் முகிலனை தேடிவந்து, சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகிலன் உயிரிழந்தார்.
இதேபோல் சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த தியாகராஜன் ஆட்டோ டிரைவர். இவர் ஒழுங்காக வேலைக்கு போகாமல் தினந்தோறும் குடித்துவிட்டு வந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டையில், அவரது மனைவியை சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறு நாள்தோறும் டாஸ்மாக் போதையினால், கனவன் – மனைவி, நண்பர்களுக்கு இடையே நடக்கும் படுகொலைகளும், சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. பெருவாரியான மக்களின் வாழ்வை சீரழிக்கும் இந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த கட்சிகளோ, இந்த டாஸ்மாக் வசூல் மூலம் கல்லாக் கட்டுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வு துறை குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில், டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை என்று திமிர்த்தனமாக பேசினார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பெருவாரியான கட்சிகள் பூரண மதுவிலக்கு என்று முன்வைத்தனர். ‘மூடு டாஸ்மார்க்கை’ என்ற இயக்கம் சூராவளியாய் சுழன்றடித்த காலம் அது.
படிக்க :
டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்
மது ஒழிப்புப் போராளி, ஐயா சசிபெருமாள் மரணத்தை ஒட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தை ஒடுக்கியது, மாணவ, மாணவிகளை கடுமையாக தாக்கியது போலீஸ். மாணவர் போராட்டங்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டங்களும் பெருவாரியான மக்களிடத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கருத்தை விதைத்தது.
மக்களிடம் ஓட்டு வாங்க இந்த கோரிக்கையை வைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்துதான் பாசிஸ்ட் ஜெயலலிதா கூட படிப்படியாக நாங்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று பேச வைத்தது மக்கள் போராட்டங்கள்.
அன்று அதிமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பேசிய திமுக, இன்று நாங்கள் டாஸ்மாக்கை மூடுகிறோம் என சொல்லவில்லை என்று திமிராக பேசுகிறது. இனியும் அரசை நம்பி பயனில்லை, உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலமே டாஸ்மாக் கடைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.

சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு

0
சாதிக் கயிறு
02.05.2022
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு!
திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது!
பத்திரிகை செய்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடிப்படையாக கையில் சாதியைக் குறிப்பிடும் கயிறு கட்டி இருந்ததாக செய்திகள் வருகின்றன.
இந்தத் தகராறில் ஒருவரை ஒருவர் பெல்ட்டால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு மாணவன் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 30 அன்று உயிரிழந்தான்.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலகட்டத்தில் மாணவர்கள் தமது கைகளில் சாதிய அடையாளம் கொண்ட கயிறுகளைக் கட்டக் கூடாது என பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதை  ஆசிரியர்களும் பேராசிரியர்களும், பல்வேறு முற்போக்காளர்களும் வரவேற்றபோது, சங்கி கும்பல் குறிப்பாக, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அடிவருடிகள் அனைவரும் ஒரே குரலில் அதை எதிர்த்தனர். உடனே அடிமை எடப்பாடி அரசு பின்வாங்கிக் கொண்டது.
அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கருத்து சொன்ன தி.மு.க எம்.பி கனிமொழி,  கையில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பை வரவேற்பதாக பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ஏன் மௌனம் காக்கிறது? இந்த மௌனம், சாதிய – மதவாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நடவடிக்கைக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழக அரசே!
♦ மாணவர்கள் மத்தியில் புழங்கும் சாதிக்கயிறுகள் உள்ளிட்ட அனைத்து சாதிய அடையாளங்களையும் தடை செய்!
♦ பள்ளி – கல்லூரிகளில் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்க, மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் வழங்கு?

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.

பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!

ட்டுமொத்த இசுலாமியர்களையும் படுகொலை செய்துவிட்டு, நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவியது காவி பயங்கரவாதிகளின் உத்தரகாண்ட் தர்ம சன்சத் மாநாடு.
அப்போதே ஜனவரி மாத புதிய ஜனநாயகம் இதழில், “இவற்றையெல்லாம் ‘வெற்று மதவெறிப் பேச்சுக்கள்’ அல்லது ‘உளறல்கள்’, ‘வழக்கமாகப் பேசுவதுதான்’ என நாம் இருமாந்திருக்க முடியாது. பாசிஸ்டுகள் ஒவ்வொன்றையும் முன்னறிவித்து செய்பவர்கள் என்ற கடந்தகால உண்மைகள் நம்மை எச்சரிக்கை செய்கின்றன” என்று எழுதியிருந்தோம். இன்று ஆய்வாளர்களே அறுதியிட்டு கூறுகிறார்கள் நாடு பாசிச இனப்படுகொலைக்கு பக்குவப்பட்டுவிட்டது என்று.
“இனப்படுகொலைக்கான பாதையின் விளிம்பில் உள்ள இந்தியா” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான இணையவழி உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜெர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை சரக்கு இரயில்களில் ஏற்றிச் சென்று, வதைமுகாம்களில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்றான் பாசிசக் கொடூரன் ஹிட்லர். இசுலாமிய மக்களைக் குறிவைத்து, அத்தகையதொரு பாசிசப் படுகொலை நம் நாட்டிலும் ஆயுதமேந்திய அரசுப்படைகளாலோ அல்லது தனியார் படைகளாலோ நடத்தப்படலாம் என்று எச்சரிக்கிறார்கள் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச வல்லுநர்கள்.
படிக்க :
இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கம்போடியாவில் உள்ள இனப்படுகொலைக்கான ஆவண மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மவுங் ஜர்னி, இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப்போக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் மதத்திற்கு அச்சுறுத்தலானவர்களாக சித்தரிப்பது குறித்து குறிப்பிடும் அவர், இன்னும் வெளிப்படையானதொரு இனப்படுகொலை நடக்காவிட்டாலும் மனிதநேயத்தை இழக்கத்தொடங்கிவிட்டதே (Dehumanisation) இனப்படுகொலைக்கான நிகழ்ச்சிப் போக்குதான் என்கிறார்.
வெறுப்புப் பேச்சுகளிலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதிலும் மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான குணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் மிதாலி ஜெயின்.
ஐ.நா சபையின் இனப்படுகொலைத் தடுப்பு சிறப்பு ஆலோசகரான அடாமா டியாங், நீண்ட மற்றும் போற்றத்தக்க சமாதான சகவாழ்வு வரலாறு கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால் சகிப்புத்தன்மையின்மையும் பாகுபாடும் அதிகரித்திருக்கிறது என்று தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்கள், நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் இசுலாமிய வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் இனப்படுகொலைக் குற்றவாளியாகவும் குற்றவாளிகளின் பாதுகாவலனாகவும் இருக்கிற இந்திய அரசால் இனப்படுகொலை அரங்கேறுவதை தடுக்க முடியாது என்கின்றனர்.
மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்திற்கு நிகரானது என்று அவர்கள் வரையறுக்கின்றனர்.
வெறுப்பு பேச்சுகள், பொய்ப் பிரச்சாரங்கள், சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினருக்கு அச்சுறுத்தலாக காட்டுவது, மனிதநேயத்தை இழந்துவரும் போக்கு ஆகியவைதான் இனப்படுகொலைக்கான அறிகுறிகள் என மேற்கூறிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியவர்கள், அந்நியர்கள், தேசவிரோதிகள் – தீவிரவாதிகள், சட்டவிரோத குடியேறிகள் என்று முசுலீம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரத்தை கிட்டத்தட்ட நூற்றாண்டுகளாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல். எந்தவொரு இனப்படுகொலையும் திடீரென நடந்துவிடுவதில்லை. இத்தகைய நிகழ்ச்சிப் போக்கின் வளர்ச்சியில்தான் நடந்தேறுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தர்ம சன்சத் மாநாட்டில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்துவிட்டு நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்க அறைகூவும் காவி பயங்கரவாதிகள்.
இசுலாமியர்களுக்கு எதிராக 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேற்சொன்ன அத்தனை அறிகுறிகளும் இப்படுகொலைகக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் உருவாக்கப்பட்டன.
2014-ல் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 1130 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்கிறது என்.டி.டிவி-இன் அறிக்கை. வெறுப்புப் பேச்சுகளுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட 58 எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்கிறது, ஜனநாயக மறுசீரமைப்பிற்கான கூட்டமைப்பின் அறிக்கை.
முசுலீம்களது உடை, தொழுகை முறை, தாடி, குல்லா, குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வீதம், மாட்டுக்கறி உணவு என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் பொது சமூகத்திலிருந்து அவர்களை விலக்கி வைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறது காவி பாசிச கும்பல். இதன் உச்சம்தான் கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்.
இசுலாமியர்களை மனிதர்களாக நடத்த மறுப்பது, அவர்களது உரிமைகளை நசுக்குவது, சட்டவிரோத ஊடுருவலாளர்கள் என்று வகைப்படுத்துவது, பொய் வழக்குகளில் துன்புறுத்துவது, பாகுபாட்டுடன் நடத்துவது ஆகியவை அரசாங்கங்களாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
ஆட்டிறைச்சி வைத்திருந்ததை மாட்டிறைச்சி என சந்தேகித்து கொலைசெய்யப்பட்ட அக்லக், மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக கொல்லப்பட்ட பீகாரின் கலீல் ஆலம் ரிஸ்வி, பசுப்பாதுகாப்புக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லூகான், லவ்ஜிகாத் எனும் நச்சுப் பிரச்சாரத்தால் முசாபர் நகரில் நடத்தப்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம், திரிபுராவில் மசூதிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவற்றை வெறும் கும்பல் வன்முறைகளாக சுருக்கிப் பார்க்க முடியாது. இத்தகைய கும்பல் வன்முறைகள்தான் மிகப்பெரிய இனப்படுகொலைக்களுக்கான கருவடிவம்.
அனைத்து வகைகளிலும் நம் நாடு பாசிசப் படுகொலைகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு நிற்கிறது. பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். பரிவரங்கள் நாடு முழுக்க இத்தகைய சூழலை உருவாக்குவதற்காக வேலைசெய்திருக்கிறார்கள். இன்று உலகின் மிகப் பெரிய கொடிய பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான்.
இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது அதனை வெறும் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது முதல்சுற்றுதான். பாசிசம் என்பது அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்குமே எதிரானது.
ஜெர்மனியில் பாசிசக் கொடுங்கோலன் ஹிட்லர் யூதர்களை மட்டுமல்ல. தன்னுடைய சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத ஜெர்மானியர்களையுமே கொன்றொழித்தான். ஆர்.எஸ்.எஸ்.இன் பார்ப்பன பாசிச சித்தாந்தம் ஜெர்மன் நாஜி சித்தாந்ததைவிட கொடியது. ஆயிரக்கணக்கான சாதிகளாய் மக்களை துண்டுபோட்டு தங்களுக்குள்ளாகவே வெட்டி மடிந்து சாக, நம்மை இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பயிற்றுவித்துள்ளது பார்ப்பனியம்.
படிக்க :
டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !
முசுலீம்களுக்கு எதிராக தலித்துகளையும் இந்துக்களாக சேர்த்துக் கொள்ளும் காவி பாசிஸ்டுகள், தலித்துகளை ஒடுக்க ஆதிக்க சாதியினரிடம் கூட்டு சேருக்கிறார்கள். ஆதிக்க சாதிகளுக்குள்ளாகவே ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொரு பிரிவை தூண்டிவிடுகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கத்தினை பாதுகாக்க ஆதிக்க சாதியினரையும் பலியிடுகிறார்கள்.
நாடு; நாட்டுக்காக கட்சி; கட்சிக்காக தலைவன். இம்மூன்றுக்காக யாரையும் பலியிடலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் சித்தாந்தம். நாட்டு வளர்ச்சிக்காக ஒரு மாநிலத்தையும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு ஊரையும் பலியிடலாம் என்று இல.கணேசன் சொன்னதை இந்நேரம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என அனைத்துவகையான உரிமைப் போராட்டங்களிலும் நமக்கு எதிராக நின்றது காவி பாசிச சித்தாந்தம்தான்.
எனவே சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக பெருகி வரும் பாசிசத் தாக்குதல்களை பெரும்பான்மையைச் சேர்ந்த மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உச்சுக்கொட்டி இறக்கப்படுவதோடு கடந்துசென்றாலோ, ‘நமக்கு பிரச்சினை இல்லை’ என்று ஒதுக்கிச் சென்றாலோ, பாசிசத்தில் பலிபீடத்தில் அடுத்த சுற்று தங்கள் உடலும் கிடத்தப்படுவதைத் தடுக்க முடியாது.

அப்பு

மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ

ன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில் நடைபெற்றது.

பேரணி, முழக்கம், தோழர்கள் உரை என ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலியை இங்கு பதிவிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!

அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !

தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, வழக்கறிஞர் தோழர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியனர்.  புரட்சிகர  பாடலுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தோழர் செல்வம் நெல்லை மண்டல செயலாளர் தலைமை உரையில் மே தினம் வரலாறு பற்றியும், மேதினம் கொண்டாட்டத்திற்கு  நாள் அல்ல,  நம்ம உரிமைகளை போராடி மீட்டெடுக்க வேண்டிய நாள் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
தோழர் வழக்கறிஞர் சிறப்புரை பிரபாகரன் தனது உரையில் மோடி ஆட்சி எந்த வந்த பின்னர் தொழிலாளர்கள் பெற்ற உரிமை அனைத்தும் இவ்வாறு கழிப்பறை காகிதமாக  வீசப்படுகிறது என்பதையும் தொழிலாளர்களுக்கான சட்டமாக நான்காக சுருக்கி  எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கிறது. அதை நாம் எவ்வாறு செங்கொடி ஏந்தி போராடி மீட்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறை கூவினார்.
ஆதித்தமிழர் கட்சி இரா.ராமமூர்த்தி மாவட்டச் செயலாளர் :  உழைக்கும் மக்களை பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் தங்களதுபிழைப்புக்காகபயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியும் அதை முறியடிக்க மக்கள் அதிகாரம் போன்ற புரட்சிகர இயக்கங்களுடன் பயணிக்க வேண்டி உள்ளது என்பதையும் தனது உரையை ஆற்றினார்.
தமிழ் புலிகள் கட்சி தமிழரசு மாவட்ட செயலாளர், துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையும் அவர்களை இந்த அரசு அதிகார வர்க்கம் சுரண்டுவதை பற்றியும் பல கட்டமாக மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. இந்த மே நாளில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவது ஒன்றே தீர்வு என்று உரையாற்றினார்.
தோழர் கின்ஷன்  நெல்லை மண்டல இணை செயலாளர் மக்கள் அதிகாரம். ரஷ்யா அமெரிக்கா பனிப்போர் சீன அமெரிக்க மேலாதிக்க போட்டியாகும் மொத்த உலகமே எப்படி அபாயத்தில் சேர்க்க வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிசம் எப்படி முன்னுக்கு வருகிறது என்பதைப் பற்றியும் இந்தியாவில் பார்ப்பன பாசிச அபாயத்தை பற்றியும் உரையாற்றினார்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை கட்டி அமைப்பது இந்த மண்ணிலும் காவி கார்ப்பரேட் பாசித்தை வேறோடு பிடுங்கி எறிவது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்பதை இந்த மே நாள்  நமக்கு நினைவு படுத்துகிறது என்று பதிவு செய்தார்.
தோழர் பொன் மாடசாமி நெல்லை மண்டலப் பொருளாளர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து : நம்பிக்கையற்ற சூழலில் நம்பிக்கை அளிப்பதற்காக அங்கு இருக்கும் கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை பற்றி தெரிவித்தனர்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605
000
தஞ்சை மண்டலம், மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக திருவாரூர், அம்மையப்பன் பகுதியில்,  மே தினத்தையொட்டி கொடியேற்றப்பட்டது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம் என்று தியாகத்தைப் போற்றும் வகையில் மே தின, நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல், தஞ்சையிலும்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது, மே நாளில் தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்!  என முழக்கமிட்டு மே தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் : 
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம், திருவாரூர் – தஞ்சை
000
மே நாள்  பேரணி ஆர்ப்பாட்டம்!
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர்வெறியை முறியடிப்போம்!
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் மதுரை, உசிலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி  மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  தோழர்கள் இணைந்து உசிலை பேருந்து நிலையம் அருகில் மாலை 4 மணி அளவில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.
இதில் மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது இந்த சமூகம் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தான் என்பதை விளக்கி காவி கார்ப்பரேட் பாசிசமும் எப்படி மேலேறி தாக்கி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை சூறையாடுகிறது எப்படி இங்கு இந்தியாவில் மக்கள் பசியிலும் பட்டினியிலும் வறுமையிலும் இருக்கிறார்கள் இதற்கு இந்த கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை மக்கள் மத்தியில் ஊன்றி நின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி அமைப்பதன் மூலமே காவி கார்ப்பரேட் பாசிசத்தை தூக்கி எறிய முடியும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக தோழர். கணேசன்,மக்கள் அதிகாரம்,போடி கம்பம். அவர் பேசும்போது ” பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கேஸ் விலை ஏற்றம், மக்களை வாட்டி வதைக்கிறது. சட்டசபையின் அருகிலேயே ஏதும் அற்றவர்கள் பிளாட்பாரங்களில் தெருக்களிலும் அலைகிறார்கள். மக்கள் நன்றாகவா வாழ்கிறார்கள்? நரிக்குறவர் வீட்டுக்கு போய் முதல்வர் வேஷம் போடுகிறார். என்பதை தெளிவாக இன்றைய நடப்பு மக்கள் பிரச்சனைகளிலிருந்து பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் பேசும்போது இன்று கல்வி பறிக்கப்படுகிறது கலாச்சாரம் என்ற பெயரில் குப்பைகளை திணிக்கிறார்கள் மதக் கலவரங்களைத் தூண்டுகிறார்கள்.   இத்தனையும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மறைப்பதற்காக தான் செய்கிறார்கள்.
இன்று மக்கள் மத்தியில் வேர்விட்டு வளர்ந்து உள்ளார்கள் இவர்களை திமுகதான் வீழ்த்துமா? மக்கள் மத்தியில் அடித்தளத்தைக் கொண்டுள்ள ஒரு மார்க்சிய லெனினிய அமைப்புதான் இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு பேசும்போது தொழிலாளர்களும் விவசாயிகளும் நாடு முழுவதும் விசிறி யடிக்கப்படுகிறார்கள். விவசாயம் எப்படி கார்ப்பரேட் மயமாக மாறும் என்பதையும் எப்படி நாம் உரிமையிலந்து அடிமையாக வாழப்போகிறோம் என்பதை பல்வேறு விஷயங்களுடன் எளிமையாக எடுத்து வைத்தார்.
இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் ரவி பேசும்போது எப்படி நம் நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம்  வீரியமாக செயல்படுகிறது.
அது எப்படி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாக பல்வேறு நாடுகளிலும் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. மேலும் அமெரிக்க ரஷ்ய பதிலிப்போர், அமெரிக்கா-ரஷ்யா சீனா இடையிலான  மேலாதிக்க போட்டி, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை பதிவு செய்தார். இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது. இதில் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 60 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர் வெறியை முறியடிபோம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிபோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து மே நாள் ஆர்ப்பாட்டம் காலை  11 மணிக்கு மஞ்சக்குப்பம் கார் ஸ்டாண்டில்  மக்கள் அதிகாரம் தோழர்.கோ.பெருமாள் தலைமையில் மே நாள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்  மு.பெரியாண்டவர், மாவட்ட தலைவர் தமிழ்நாடு மின் வாரிய அலுவலர் தொழிலாளர் முன்னணி (வி.சி.க), தோழர் சி.குமார் (கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு), தோழர் மு.கார்திகேயன் (மக்கள் அதிகாரம்), தோழர் கஜேந்திரன் (மாநில செயலாளர் தமிழ்நாடு மீனவர் பேரவை), தோழர் வி.செல்வம் (அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் சங்கம் கடலூர்), தோழர் M.சண்முகம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) தோழர் கோ.சாய்ராம் (சமூக நீதி பாசறை) தோழர் சுகுமார் (கடலூர் பேருந்து  நிலைய உட்புற சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் பரிதிவாணன் (கடலூர் வெள்ளி கடற்கரை சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் திருவரசு (கடலூர் பொது நல சங்கம்) ஆகியோர் மே நாள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.
தோழர் இராமலிங்கம் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) மற்றும் தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் மே நாள் வரலாற்றையும், இந்திய  தொழிலாளி வர்க்கம் இழந்திருக்க கூடிய தொழிலாளர் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்கள் சாதிரீதியாக பிளவுபடுத்துவதை அம்பலபடுத்தியும், உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தேவையை பற்றியும், அதனுடன் அணிதிரள வேண்டிய காலத்தின் கட்டாயத்தையும் உணர்த்தும் வகையில் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் முதலாளித்துவதையும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி உணர்ச்சி மிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இறுதியில் தோழர் பஞ்சாச்சரம் (மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரை நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
000
மே 1 மே நாள் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர் வெறியைத் முறியடிப்போம் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்  இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் தோழர். ராஜன் தலைமை தாங்கினார்.
உடுமலை பகுதி தோழர் சூர்யா உரையாற்றினார். கோவை மண்டல செயலாளர். தோழர்.சங்கர் உரையாற்றினார் மற்றும் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம், 9488902202.
000
136வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கி வரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலை சங்கத்தின் தலைவரும், பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளரும் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி  உரையாற்றினார்.
தகவல் :
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி.
000
புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி கிருஷ்ணகிரி – தருமபுரி-சேலம் மாவட்டம் சங்கத்தின் சார்பாக ஓசூர் மாநகரில் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் மே நாள் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிளை சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மே நாள் வரலாற்றை விளக்கி அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் பரசுராமன் கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து பாகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஒசூர் பழைய நகராட்சி ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். தோழர்.சின்னசாமி புஜதொமு, தோழர் சந்தோஷ் ததொமு, தோழர் ரவிச்சந்திரன் மக்கள் அதிகாரம், தோழர் பரசுராமன் புஜதொமு, தோழர் சரவணன் மக்கள் அதிகாரம் ஆகியோர் ஆர்ப்பட்டத்தில் உரையாற்றினர்.
இறுதியாக தோழர் வெங்கடேஷ் புஜதொமு, நன்றியுரையாற்றினார்.
உலகத் தொழிலாளர் வர்க்கம் 8 மணிநேர வேலை உரிமைக்காக 80 ஆண்டுகள் போராடி, உயிர்த்தியாகம் செய்து உரிமையை நிலைநாட்டியது. காவி-கார்ப்பரேட் கும்பலோ 8 ஆண்டுகளில் இந்திய தொழிலாளர்களின் மொத்த சட்ட உரிமைகளையும் பறித்துவிட்டது.
குறிப்பாக இந்தியாவில் 36 ஆம் ஆண்டு மே நாளிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு 8 வேலை நேரம், பணி நிரந்தரம், நியாயமான ஊதியத்திற்கு எந்த உத்திரவாதமுமில்லை.
பொதுமக்களுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, GST வரிக் கொள்ளை, பொதுமக்களின் சொத்திற்கு கூட வரி உயர்வு, குடிநீருக்குக் கூட கட்டணம் என கழுத்து நெரிக்கப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம், சர்வதேச அரங்கில் இலங்கை திவால், பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பு, பிரிட்டனில் 25% பணத்தின் மதிப்பு வீழ்ச்சி, உக்ரைன் மீதான போர் என உலகம் முழுவதும் கார்ப்பரேட்களின் இலாபவெறிக்கு மக்கள் உயிர், உடமை இழந்து படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் குறிப்பாக அண்டை மாநிலத்தில் ஹூஜாப் அணியத்தடை என அரசி சூழலை மடைமாற்ற காவி பாசிசத்தை தூண்டிவிடுகிறது, RSS-BJP தலைமைகள்.
மொத்தத்தில் உலக உழைக்கும் மக்கள் முதலாளித்துவ சுரண்டல், அதன் வழியிலான சொத்துக்குவிப்பினை முறியடிக்காமல் தீர்வில்லை. அதேசமயம், இந்நிலைமைக்கு தீர்வுகாண உழைப்பினால் உண்டாகும் உபரியை பொதுவில் வைத்திடக் கோரி ரும் கம்யூனிஸ்டுகளிடமே தீர்வு உள்ளது சாரமாக தோழர்கள் பேசினர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
அன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப்  போர்வெறியை முறியடிப்போம்! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில்  நடைபெற்றது.
இதில் பேரணியை துவக்கி வைத்து தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளர்) உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவங்கியது. பேரணியின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தோழர் ஆ.கா.சிவா (மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர்) தலைமை ஏற்று உரையாற்றினார். தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மற்றும் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தை சேர்ந்த தோழர் புவனேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள் இடையிடையே முழக்கம் முழங்கப்பட்டது.
அடுத்து பு.ஜ.தொ.மு.- வின் சென்னை,திருவள்ளூர், காஞ்சி, வேலூர் மாவட்ட செயலாளர் தோழர் ம.சரவணன் மே நாள் உரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் ப.சக்திவேல் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என  சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள அதிகாரம்.
000
அன்பார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கும் மேதின தியாகிகளுக்கும் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் மே 1 அன்று மாலை 4.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சுந்தர் தலைமை உரையாற்றினார்.
இன்றைய சூழலில் தொழிலாளிகள் முதலாளித்துவத்திற்கு அடிமையாகவும் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தொழிலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான் என்றும் இதை தடுக்க வேண்டும், வேரறுக்க வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தீர்வு என்றும் இந்து பாசிச கட்டமைப்பை தவிர்க்க வேண்டுமென்றால் ஜனநாயக அமைப்புகள் பாசிச ஏதிர்ப்பு ஐக்கிய முன்னணி கூட்டமைப்பை உருவாக்குவது போன்ற நிகழ்ச்சிகளில் நாம் முன்னெடுத்தால் மட்டுமே இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று தன்னுடைய தலைமையில் உரையாற்றினார்.
அடுத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது முழக்கத்திற்கு பிறகு ஆக்சில் இந்தியா கிளை பொருளாளர் தோழர் கே சௌந்தரராஜன் அவர்கள்  இன்றைய சூழ்நிலையில் தொழிலாளி வர்க்கம் என்ற தலைப்பில் இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு மே தினம் என்றால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது பேஸ்புக்கில் லைக் போடுவது ஷேர் செய்வது என்றுஆன்லைனில் ஆழ்ந்து மூழ்கி போவதும் தொழிலாளி உரிமை என்றால் என்ன என்ற விவரம் கூட இல்லாமல் இன்று இருப்பதாகவும் மேலும் இனி நவீன கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கம் மாற்றப்படுகிறது சட்டத்திருத்தம் என்ற பெயரில் 12 மணிநேர வேலை நேரமாக மாற்றுவது உரிமையை கேட்டால் வேலை நீக்கம் செய்வது என்று தொழிலாளர்களுடைய நிலைமையை பற்றி தோழர் விளக்கினார்.
பிறகு மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் தோழர் சரவணன் தொழிலாளி வர்க்கத்திற்காக  ஒரு பாடலை பாடினார் அவரே இயற்றி பாடினர்.
அதன்பிறகு மேதின சூளுரையை தோழர் வெற்றிவேல்செழியன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தமிழ்நாடு கண்டன உரை பதிவு செய்தார். உக்ரைன் ரஷ்யா போர் எதற்காக நடத்தப்படுகிறது இன்றைய சூழ்நிலையில் முதலாளி வர்க்கத்தின் மற்றொரு தாக்குதல் என்பதையும் அதற்கும் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி கருத்து சொல்வதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வேற வேலை இல்லை என்ற ஒரு பார்வை உள்ளது. ஏன் அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் உலகம் முழுக்க முதலாளி வர்க்கம் தன்னுடைய வர்த்தகத்தை வைத்துள்ளான் அவன்  நினைப்பதும் நடப்பதும் தான் நடக்கிறது என்றும் ஊடகங்கள் முதல் அரசு அலுவலகங்கள் உயர்மட்ட ஆணைகள் அனைத்தும் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்ப இன்று செயல்படுகிறது.
இன்று ரஷ்யா உக்ரைன் போர் மட்டுமல்ல உலகம் முழுக்க இன்று போர்கள் அங்கங்கு நடப்பதும் அங்கு இருக்கிற இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதும் தான் முதலாளி வர்க்கத்தின் முதல் வேலை இந்தியாவில் தனியார்மயம் தாராளமயம் வந்தபிறகு வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிய அரசு இன்று நிலைமை என்ன ஹூண்டாய் போர்டுநிறுவனம் வந்துவிட்டது   தொழிலாளி வர்க்கம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றும் ஆனால் ஒரு தலைமுறை 20 வருடங்கள் கூட ஆகவில்லை போர்டு நிறுவனம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அது நிறுவனம் மூடினால் அதில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் அல்ல அதை சுற்றி இயங்கக்கூடிய துணை நிறுவனங்கள் மற்றும் அதை சுற்றி இருக்கிற உழைக்கும் மக்கள் வியாபாரிகள் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்துவிடும் இது ஏதோ ஃபோர்டு நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனை தான் இந்த முதலாளித்துவம் தனியார் மயம் தாராளமயம் என்ற கொள்கையை மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்து தொழிலாளி வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக வைப்பது தான் முதல் வேலையாக உள்ளது அதற்கு இந்த காவி கும்பல் எடுபிடியாக வேலை செய்கிறது இது போதாதென்று இன்று இந்தியாவின் பொது துறைகள் முதலாளிக்கு தாரைவார்க்க படுகிறது பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கிறது டெல்லி விவசாயிகள் போல, விவசாய போராட்டம் போல, ஜல்லிக்கட்டு போராட்டம் போல இங்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய வர்க்கத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு சாவுமணி அடிக்கும்போது தான் தீர்வாக இருக்கும் என்று தோழர் அவர்கள் கண்டன உரையை பதிவு செய்தார் அதைத்தொடர்ந்து முழக்கமிட்டு நன்றியுரையை தோழர் மோகன் அவர்கள் மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கணைப்புக்குழு)
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் வட்டக்குழு உறுப்பினர் தோழர் சி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக பறையிசையும் அதனை தொடர்ந்து தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.
தலைமை உரையில் தோழர் வெங்கடேசன் மே தின வரலாற்றை விளக்கி பேசினார்.  ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரம் தருமபுரி மாவட்டத்தின் கலைக்குழுவினர் கோடானு கோடி மக்களுக்காக என்ற தியாகிகளுக்கான வீரவணக்கப்பாடலை இசைத்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் . பென்னாகரம் நகர செயலாளர் தோழர் இலட்சுமன் சனாதன பாசிசத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்.
இதன் பின்னர் உரையாற்றிய பென்னாகரம் வட்ட இணைச்செயலாளர் தோழர் சிவா தனது உரையில் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் மது, கஞ்சா போன்ற போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதையும், இதற்கு போலிசு மாமுல் வாங்கிக்கொண்டு அனுமதிப்பதையும் பொறுப்பற்ற அரசு நிர்வாகத்தையும், தனியார்மயம், தாராளமயம் உலகமயம்தான் இலங்கையை திவாலாக்கியுள்ளது. அதை நோக்கிதான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது என்றும் இதற்கு ஒரே தீர்வு இந்த முதலாளித்துவ ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதுதான எனப்பேசினார்.
இதன் பின்னர் சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல செயலாளர் தோழர் கோபிநாத், நாம் அணிந்திருக்கிற சிவப்பு உடை என்பது வெறும் நிறம் மட்டுமல்ல, அது இரத்தத்தில் தோய்ந்த தியாகத்தின் அடையாளம் என்பதையும், அவ்வாறுதான் மேதினம் உருவானது. ஆனால், இன்று அந்த உரிமைகள் எல்லாம் பறிபோய்கொண்டிருக்கிறது, நாடு முழுதும் கார்ப்பரேட் நலனிற்காக போலிசு அடியாள் வேலை செய்வதையும், இதனால் உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்துவருவதையும் எடுத்துக்காட்டி பேசினார். இதை மறைக்க காவி பயங்கரவாதத்தை பாசிச பாஜக தீவிரமாக அமுல்படுத்தி வருவதையும், எனவே, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டவேண்டும் என்பதையும் விளக்கி பேசினார்.
இடையிடையே வேலை வேணுமா வேலை வேணுமா என்ற இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கும் பாடலையும் ஏலையா ஏலோலையா எலையா ஏலோலையா ஏழ்மையை விரட்டிடவே ஏந்துவோம் துப்பாக்கியை என்ற பாடலையும் பாடினர். இறுதியில் சர்வதேச பாட்டாளி வர்க்க கீதத்தை தோழர்கள் பாடினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இபொக மா-லெ(விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் மற்றும் பல அமைப்பினர், திரளான பொதுமக்கள் என சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், 9790138614.

000

மே – 1 தொழிலாளர் தினத்தில் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த சூளுரைப்போம் என்று சேலம் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர் கந்தம்மாள் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.

000
136 வது மே நாளையொட்டி  தூசான் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புஜதொமு மாநில ஒருங்கிணைப்புக் குழு) சார்பாக கொடியேற்றப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கொடியேற்றத்தில் சங்கத்தின் செயலாளர் ம.செ.சந்திரமோகன் உரையாற்றினார். சங்கத்தின் சிறப்புத்தலைவரும், பு.ஜ.தொ.மு முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் விஜயகுமார் தூசான் நிர்வாகம் நட்டக்கணக்கு காட்டி ஆலையை மூட முயற்சி செய்வதோடு, ஏப்ரல் 2022 மாதத்துக்கான சம்பளத்தை வழங்காமல் தொழிலாளர்களை பட்டினிப் போட்டு பணிய வைக்க முயற்சி செய்வதை முறியடிக்க அறைகூவல் விடுத்தார்.மேதின போராட்டங்களுக்கான தேவை முதலாளித்துவம் நீடிக்கும் வரை தொடரும் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தியும், நம்பிக்கையூட்டியும் பேசப்பட்டது.
தகவல் :
தூசான் தொழிலாளர்கள் சங்கம்,
பூவிருந்தவல்லி.
000
136 வது மே நாளையொட்டி ஏ சி என் ரெப்ரோகிராப் கிளையில் மாவட்டத் தலைவர் தோழர் ம. சரவணன் கொடியேற்றி இன்றைய சூழலில் தொழிலாளர்களின் நிலை குறித்து உரையாற்றினார்.
தகவல்:
ஏ சி என் ரெப்ரோகிராப் கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு வின் இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி உரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் தலைமை தாங்கினார்.
தகவல் :
டி ஐ மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
சென்னை, திருவள்ளூர், காஞ்சி,வேலூர் மாவட்டங்கள்
000
136 வது மே நாளில் TPI ஆலை ஆவடியில் மே நாள் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.
தகவல் :
தொழிலாளர் ஜனநாயக அமைப்பு,
ஆவடி.
000
136வது மே நாளையொட்டி சாய்மிர்ரா கிளையில் மாவட்டத் தலைவர்
தோழர் ம. சரவணன் கொடியேற்றி உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார்.
தகவல் :
சாய்மிர்ரா கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( மாநில ஒருங்கிணைப்புக்குழு ) தோழர் பா.விஜயகுமார் அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் TPI IBP தொழிலாளர் சங்கம், ஆவடியில் இன்று காலை 6.15 மணிக்கு மேதின கொடியேற்றி உரையாற்றப்பட்டது.
தகவல்:
TPI IBP தொழிலாளர்கள் சங்கம்
ஆவடி
000
மே தின பிரசுரம் திருச்சியில் புஜதொமு மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக வீடு வீடாக சென்று மே தினத்தால் தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் எல்லாம் இன்று மோடி அரசால் பறிக்கப்படுவது பற்றி திருவெறும்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் :
புதிய தொழிலாளி
000

புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

0
ரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையக் குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு தற்போது நடைமுறையிலுள்ள 29 மத்திய தொழிலாளர் நல சட்டங்களை உள்வாங்கி கீழ்கண்ட 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தயாரித்து அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊதிய சட்ட தொகுப்பு – 2019
தொழில் உறவு சட்ட தொகுப்பு – 2020
சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு – 2020
பணியிட பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு – 2020
ஜூலை 01-ல் புதிய தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக இதில் கூறப்படும் தகவல் என்னவென்றால் தொழிலாளிகளுக்கு பணிநேரம் அதிகரிக்கப்பட்டு, கூடுதல் வாரவிடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் நாட்டில் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறுகிறது. குறிப்பாக இந்த புதிய சட்டத்தின் படி நிறுவனங்கள் ஊழியர்களின் 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேர வேலை என மாற்றியமைக்க வழிவகை செய்யும். அதை ஈடு செய்ய வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்புநிதி போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் ஊழியர்கள் வாங்கும் அடிப்படை சம்பளம் என்பதில் 50 சதவீதம்தான் கையில் தரப்படும் மீதம் வருங்காள வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும். அப்படியானால் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் என்பது அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது அரசு.
படிக்க :
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்
இவை ஒவ்வொன்றிலுமே நாம் கவனமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் வெளியிலிருந்து கேட்கும்போது மிக இனிப்பாக இருக்கும். ஆனால் உண்மை என்ன? ஒட்டுமொத்த தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தொழிலாளிகளையும் முழு அடிமைகளாக மாற்றி, குறைவான ஊதியத்தை கையில் கொடுத்து, பல மணி நேரம் உழைப்பை சுரண்டுவது என்பதுதான் முதலாளியின் நோக்கம். அதை சட்டத்தின் படி நிறைவேற்றுவதுதான் இந்த அரசின் பணி.
எப்படி இது முதலாளிக்கு இலாபம் என்று உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம்? ஏனென்றால் ஏற்கனவே வேலை செய்த அதே நேரம் தானே செய்யப்போகிறோம். 12 மணி நேர வேலை கொடுத்தாலும் வாரத்தில் 4 நாள் தான் வேலை மீதி 3 நாள் விடுமுறை தானே கொடுக்கிறார்கள். இதில் தொழிலாளுக்கு தானே இலாபமாக உள்ளது என்று நீங்கள் யோகிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் உள்ளே போய் யோசித்து பாருங்கள்.
4 நாள் வேலையும் ஒன்றாக செய்யப்போவதில்லை. முதல் நாள் வேலை 12 மணி நேரம் அதற்கான உங்களின் தயாரிப்புக்கான நேரம், போக்குவரத்து நேரம் நீங்கள் தூங்கும் நேரம் இவற்றை கணக்கிட்டு பாருங்கள் எவ்வளவு நேரம் தொழிலாளிகள் தங்கள் பணிக்காக செலவிடுகிறார்கள் என்பது புரியும். 3 நாள் விடுமுறை என்பதை நீங்கள் (தொழிலாளிகள்) அனுபவிக்க முடியுமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் சம்பளம் உயர்கிறதா? அதுவும் இல்லை. வைப்பு நிதிக்கான பிடித்தத்தை அதிகப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே உள்ள வைப்பு நிதி (PF) எப்படி கிடைக்கிறது என்று நமக்கு தெரியும். அப்படியானால் இந்த 50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.
அரசு நிறுவனங்களிலே இதுதான் நிலை எனும்போது தனியார் நிறுவன ஊழியர்களின் நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். கையில் வாங்கும் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் குறையும். வேலைக்கும் உத்திரவாதம் கிடையாது. அவர்களின் குடும்பம் என்னவாகும். தொழிலாளிகளை நேரடியாக தற்கொலைக்கு தூண்டுவதையே இந்த ஒன்றிய அரசு செய்கிறது.
குறிப்பாக 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பது சர்வ சாதாரணாக நமக்கு கிடைத்த உரிமை கிடையாது பல இலட்ச கணக்கில் தொழிலாளிகள் இந்த உரிமையை பெற இரத்தம் சிந்தி உள்ளனர். பலர் உயிர் தியாகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி தொழிலாளர்களின் குருதியால் கிடைத்த உரிமையை ஒரு பாசிச அரசு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒரே அடியாக 29 சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்றால் இந்த அரசின் நோக்கம் என்பது முதலாளிகளை வாழ வைப்பது மட்டும்தான். ஏனென்றால் இது முழுமையாக கார்ப்பரேட் நல அரசாக உள்ளது. ஆனால் இந்த சட்ட திருத்தத்திற்கு பெயரோ தொழிலாளர் நல சட்டம்.
கடந்த மே 1, அன்று தொழிலாளர் தினம் பல நாடுகளில் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் நாமும் தொழிலாளர் தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கும் வகையில் நமது பறிக்கப்பட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து போராடினோம். ஆனால் அரசு ஏதேனும் செவி சாய்த்ததா, இல்லை. ஏனென்றால் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நாம் அப்படி செய்யாமல் சிதறி கிடக்கிறோம். உழைப்பை மட்டுமே பலமாக கொண்டிருக்கும் உழைப்பாளிகளான நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை. இந்த ஒற்றுமையின்மைதான் அரசின் பலமாக உள்ளது.
அரசு முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலன் சார்ந்த அரசாக உள்ளது எனும்போது, தொழிலாளிகளின் நலன் காக்க நாம் ஒரு அரசை நமக்கான அரசை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படியானால் அது சாதரணமாக சாத்தியமாகுமா? இல்லை. பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையே அதை சாத்தியமாக்கும்.
வர்க்கமாக ஒன்றிணைவோம். காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒழித்துகட்டுவோம்.

ஓவியா

மோடியின் பொய் உரைகள் : கூட்டாட்சி தத்துவம், பெட்ரோல் டீசல் வரிகுறைப்பு, மாநில அரசு மீதான குற்றசாட்டு !

0
பெட்ரோல் – டீசல் வரி குறைப்பு என்பது மோசடி, மோடி அரசின் பொய்யையும், சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து இருப்பதை ஒட்டி, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27 அன்று காணொலி மூலம் உரையாற்றினார்.
“சர்வதேச நெருக்கடி (உக்ரைன் – ரஷ்யா போர்) பல சாவல்களை கொண்டு வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் கூட்டாட்சியில் ஒத்துழைப்பையும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதரம் தொடர்பான முடிவுகளில் மத்திய – மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து பேசிய மோடி, “மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு, மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அப்போதே ஒன்றிய அரசு வலியுறுத்தியது. ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. கர்நாடகா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களுக்கு முறையே ரூ.5,000 கோடி, ரூ.3,500 கோடி – ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று எதிர்கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
படிக்க :
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
மோடியின் கருத்துக்கு எதிர்கட்சிகளின் மறுப்பு:
மோடியின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நிலக்கிரி தட்டுபாடு, ஆக்சிஜன் தட்டுபாடு” அனைத்துக்கும் மாநில அரசே காரணம் என்று கூறுகிறது மோடி அரசு. ஆனால் பெட்ரோல், டீசல் மீதான மொத்த வரி வருவாயில் 68 சதவீதம் பங்கை ஒன்றிய அரசே எடுத்துகொள்கிறது. மோடி அரசு “கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கவில்லை, மாறாக மாநிலங்களை கட்டுபடுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “பிரதமருடனான கலந்துரையாடல் ஒரு பக்கச் சார்புடனும் தவறான தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. மேலும், எங்கள் மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மானியமாக ரூ.1 வழங்குகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மேற்குவங்கத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி ரூ.97,000 கோடி வரி நிலுவை உள்ளது. பாக்கி தொகையை முதலில் மோடி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில அரசால் விலை உயர்ந்துவிட்டது என்பது உண்மையல்ல. ஒன்றிய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26,500 கோடி வரி நிலுவை வைத்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களை சமமாக நடத்துவதில்லை என மோடி அரசின்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தெலங்கானா முதல்வர், கே. சந்திரசேகர ராவ் “மாநிலங்களிடம் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசே ஏன் வரியைக் குறைக்கக் கூடாது? மத்திய அரசு வரிகளை மட்டுமல்லாமல், ‘செஸ்’ஐயும் உயர்த்தியது. உங்களுக்குத் தைரியமிருந்தால் வரிகளை உயர்த்தியது ஏன் என்பதை விளக்குங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற் போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது” தற்போது மாநில அரசை குறை கூறுவது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது ஒன்றிய அரசு என்று விமர்சித்துள்ளார்.
இதுவரை, தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த வரி வருவாய், 2019 – 2020-ல் ரூ.1163.13 கோடி. ஆனால் 2020 – 2021-ல் மாநில அரசு பெற்ற வரிவருவாய் ரூ.837.75 கோடி. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை குறைத்துவிட்டது. கலால் வரி குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் வரிகுறைப்பு உண்மையல்ல, நாடகம் :
2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் கலால் வரியை குறைத்துவிட்டோம், என்று ஒன்றிய அரசு பெருமை பீற்றிகொள்கிறது.
பாஜக ஆளும் 17 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களிலும் வாட் வரியை குறைத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.80 – ரூ.10 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ. 2.7 என்ற அளவில் குறைத்து இருகின்றன. இந்த வரி குறைப்பின் மூலம் ஒன்றிய அரசிற்கு பெருமளவு இழப்பு இல்லை. ரிசர்வ் வங்கியின் 2021 – 2022-ம் நிதிஆண்டிற்கான மாநிலத்திற்கான அறிக்கைப்படி, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08 சதவீதம் என மதிப்பிட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு என்பது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து 16 நாட்களில் ரூ.14 வரை விலையை உயர்த்தியது என்பதுதான் உண்மை. வாட்வரி குறைப்பு என்பது தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம்.
கடந்த மார்ச் மாதம் மட்டும் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 ஆகவும், வணிக எரிவாயுவின் விலை ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டது. அப்பளம், வெல்லம் போன்ற 143 அத்தியாவசிய பொருள்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது மோடி அரசு. தீடிரென்று மோடி மக்கள் நலனை பற்றி பேசுவது, மக்கள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல.
மோடி அரசு ஒரு கொள்ளை நிறுவனம் :
2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிபொறுப்பு ஏற்றுகொண்டதிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.27 லட்சம் கோடிகள் வருவாயாக பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று பெட்ரோல் அடிப்படை விலை, லிட்டருக்கு ரூ.48.55 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.47.27 விலையிலும் இருந்தது.
நவம்பர் 04, 2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.48.36 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.69 ஆகவும் இருந்தது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று மத்திய அரசின் வரிகள் ரூ.9.48 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.3.57 விலையிலும் இருந்தது. அதே சமயத்தில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ15.67 விலையிலும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.10.25 விலையிலும் இருந்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலால் வரியை குறைப்பதற்கு முன்பு, கலால் வரி மற்றும் கூடுதல் கட்டண வரி விதிப்பு உட்பட, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 32.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.31.80 காசுகளாகவும் விலையை உயர்த்தி இருந்தது.
2014 மோடி பொறுப்பேற்று கொண்ட போது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. அப்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.41 மற்றும் ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று கச்சா எண்ணெய் பேரலுக்கு 100.20 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.105.41 மற்றும் 96.67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடிப்படை எரிபொருள் விலை ஏறக்குறைய மாறாமல் இருக்கும்போது, மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.42 காசுகளாகவும், தோராயமாக 200 சதவீதம் வரியை அதிகரித்துள்ளது. அதுபோல டீசல் லிட்டருக்கு ரூ.18.23 கூடுதல் வரி விதிதுள்ளது. 2014 நடைமுறையில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும் போது டீசலுக்கான வரி 500 மடங்கு அதிகமாகும்.
2019 – 2020-ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடிகள். 2020 – 2021-ம் ஆண்டு ரூ.3.72 லட்சம் கோடியாக  ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. (செய்தி ஆதாரம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியின் மூலம் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒரு கொள்ளை நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
மோடி அரசின் கூட்டாட்சி தத்துவம்:
மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தையையும், உரிமையையும் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தியது. அதன்பின் மாநிலங்கள் ஒன்றிய அரசை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு தொகை, மார்ச் 2022-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், ரூ.78,704 கோடி நிலுவை பாக்கி உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது என்பதுதான் கூட்டாட்சி தத்துவம் அடிப்படை. மாறாக மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களை பறித்து ஒற்றை சர்வதிகார அரசை நிறுவத்துடிக்கும் மோடி அரசு கூட்டாட்சி குறித்து பேசுவது வேடிக்கையானது.
மோடி, புதிய பொருளாதர கொள்கையின் தீவிர விசுவாசி:
மோடி அரசு, உலகமய – தனியார்மய – தாரளமய கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது கொதிக்கும் எண்ணெயை, அள்ளி தெளித்தது போல மக்கள்மீது பெரும் சுமையை திணித்துள்ளது மோடி அரசு.
மோடி ஆட்சி காலத்தில் 2014 – 2015 முதல் 2019 – 2020 காலக் கட்டங்களில் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட, மொத்த வராக்கடனின் அளவு ரூ.18.28 லட்சம் கோடிகள். காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிய 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை இருந்த வராக்கடன் அளவு ரூ.5.04 லட்சம் கோடிகள் கடனாக இருந்தன.
படிக்க :
இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
மோடி ஆட்சியில், அதானி குழுமத்திற்கு மட்டும், 2020 வரை கொடுக்கப்பட்ட கடன் அளவு ரூ.2.25 லட்சம் கோடிகள் ஆகும். மோடி ஆட்சி முதலாளிகளுக்கு பொற்காலமாகும், மக்களுக்கு இருண்ட காலமாகும். இவ்வுண்மையை மறைத்து, மோடி அரசின்மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திசை திருப்பும் விதமாக, தன்னை நியாமானவனாக காட்டிக்கொள்ளவும், எதிர்கட்சிகளின் மீது நயவஞ்சகமாக பழியை சுமத்தியுள்ளது.
000
இன்று நிலவும் ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பும், நம்நாட்டு சமூக பொருளாதர கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்களுக்குள் சிக்கி கொண்டுள்ளன. முதலாளிகளுக்கு உள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு இப்பாசிச கும்பல் மேன்மேலும் மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கும் என்பதுதான் நிதர்சனம். இதனை திசைதிருப்பும் பொருட்டு பாசிஸ்டுகள் எல்லாவித சூழ்ச்சிகளையும், பொய் புரட்டுகளையும் அவிழ்த்துவிடுவார்கள்.
எதிர்கட்சிகள் மோடியின் குற்றச்சாட்டை வழமையாக கடந்து செல்லாமல், மோடி அரசின் ஒரே நாடு – ஒரே வரி, இந்தி மொழி திணிப்பு, நீட், போன்ற மாநில அரசின் உரிமை பறிப்புகளை எதிர்த்து, அரசியல் அரங்கில் கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதும், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மோடி – அமித்ஷா பாசிச கும்பலை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

தங்கபாலு

நீட் தேர்வின் தரா‘தரம்’ என்ன?

ருத்துவ நுழைவுக்கான நீட் தேர்வு, தகுதியின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுவது என பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் நெடுங்காலமாக கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால் நீட் போன்ற தகுதிகாண் போட்டித் தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு உதவுகிறது என்பதையும் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதிகள் செய்துகொடுகின்றன என்பதையும் பல தரவுகள் அவ்வப்போது அம்பலமாக்கி வருகின்றன.
ஆனாலும் இந்தியாவில் நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக்காண விழையும் பெரும் முயற்சி என்று இன்னமும் கதை அளந்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது முகத்தில் காரி உமிழும் வண்ணம் தற்போது மற்றொரு தரவும் வெளியாகி இருக்கிறது.
கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை’ என்பதனை தரவுகளுடன் அம்பலமாக்கியுள்ளது.
படிக்க :
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடுகிறது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் எத்தகைய முட்டாள்தனமானது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து மாநிலங்கல், மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கடைசி மாணவருடைய தரவரிசை மற்றும் மதிப்பெண் என்ன என்பதை, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் கடைசியிடம் பெற்ற (என்.ஆர்.ஐ – NRI) மாணவரின் தரவரிசை மற்றும் தகுதி மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்கள்.
அவ்வாறு ஒப்பிட்டு பார்த்ததில், வசதிப் படைத்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் வரக்கூடிய மாணவர்கள், தரவரிசைகளிலும் மதிப்பெண்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, தகுதியுள்ள மாணவர்களைத் பொறுக்கியெடுக்கிறோம் என்ற சாயம் வெளுத்துப்போய்விட்டது. எந்த நீட் வந்தாலும் தனியார் கொள்ளையர்கள் புகுந்து மேயலாம், தடையில்லை; காசு இருப்பவன் கல்வி பயிலலாம், தகுதி வெங்காயமெல்லாம் தேவையில்லை என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஆய்வின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்:
கடந்த 2020-ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத பதிவு செய்த 16 இலட்சம் மாணவர்களில், 13.6 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் (ஜஸ்ட் பாஸ் ஆனவர்கள் உட்பட) சுமார் 7.7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.
பொதுவாக இவ்வாறு தேர்வாகிறவர்களில் முதல் தரத்தில், முதல் இடத்தில் தேர்வான மாணவர் தொடங்கி அவருக்கு அடுத்து வருபவர் என தரவரிசைப்படியும் மதிப்பெண்படியும்தான் எல்லா மருத்துவ இடங்களும் நிரப்பப்படும் என்று பலரும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி நடப்பது இல்லை.
கேரியர்ஸ் 360 நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட ஐந்து மாநிலங்களில், கர்நாடக மாநிலத்தின் யோக்கியதையை எடுத்துக்காட்டுக்காக கொடுத்துள்ளோம். கீழே பாருங்கள்
(இதர மாநில மருத்துவ கல்லூரிகள் குறித்த புள்ளிவிவரங்கள் மூலக்கட்டுரையில் உள்ளது – NEET: How NRI quota dilutes ‘merit’ but faces none of the flak reservation gets)
2020-ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள 80,000 இளநிலை மருத்துவ இடங்களில் சுமார் 4௦,௦௦௦ இடங்கள் அரசுக் கல்லூரிகளும் இதர 40,000 இடங்கள் தனியார் கல்லூரிகளும் கொண்டிருந்தன. இந்த தனியார் கல்லூரிகளில், NRI பிரிவிலுள்ள இடங்கள் மட்டும் 1,869.
ஏற்கெனவே, வகுக்கப்பட்ட கொள்கையின்படி NRI பிரிவினியாருக்கான கட்டணம் சுமார் 1௦ லட்சம். அவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சேர்வது இல்லை. முதல் இரண்டு மாணவர் சேர்க்கை சுற்றுகளில் (Counselling) NRI மாணவர்கள் சேராவிட்டால் இந்தக் கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து சுமார் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரை இக்கல்லூரிகள் வசூலிக்கின்றன.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இதற்காகத்தான் தனியார் கல்லூரிகள் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. சான்றாக, நீட் தேர்வு வேண்டும் என்று முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கல்ப் அறக்கட்டளை (Sankal Charitable Trust) மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிறது. நீதிமன்றமோ கொள்ளையடிப்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.
000
பா.ஜ.க.-வினர் மட்டுமின்றி சுமந்த் ராமன், பாலகுருசாமி போன்ற கழிசடை கருத்துசொல்லி பேர்வழிகளும் தரத்தை பற்றியும் தகுதியைப் பற்றியும் சொல்லக்கூடிய அத்தனை வாதங்களும் எப்படி பொய்யானது என்று பாருங்கள்.
இதே தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரும் தாழ்த்தப்பட்ட பிரிவில் கடைசியில் வரும் மாணவர்களைவிட, தரவரிசையில் பல லட்சங்களுக்கு கீழே இருக்கும் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்ற வசதிபடைத்த என்.ஆர்.ஐ. மாணவர்கள் எப்படி தரம் உயர்ந்தவர்களானர்கள். கிழிந்து தொங்குகிறது நீட் தேர்வின் தரா‘தரம்’!

தினகரன்

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

1993 முதல் நெல்லை மாவட்டத்தின் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளரும், மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்ட பின் அதன் சிவகிரி வட்ட அமைப்பாளராகவும் இருந்தார் தோழர் சம்மனசு. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 27/04/2022 அன்று மாலை 5 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று, எழுத, படிக்கத் தெரியாத தோழர் சம்மனசு சிறு விவசாயி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இளம் வயது முதல் தவறுகளை தட்டிக் கேட்பது, நியாயத்தின் பக்கம் நிற்பது என தனது ஊரான தேவிப்பட்டனத்திலும் சுற்று பட்டிலும் செயல்பட்டுள்ளார்.
தோழர் துவக்கம் முதலே கைது, வழக்கு, சிறை என எதற்கும் அஞ்சாமல் தன் போராட்டங்களைத் தொடர்ந்துள்ளார். ஒரு பிரச்சினையில் போலீசும் தி.மு.க.வும் சமரசம் செய்து கொண்டதை தோழரால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பிரச்சினையில் தோழரை ஆதரித்த சி.பி.ஐ.(எம்)-ல் தன்னை இணைத்துக் கொண்டார்.
சி.பி.எம்-ல் செயல்படும் போதே தோழருக்கு நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. நடுவில் தன் காதல் மனைவி முத்துலெட்சுமியின் உதவியுடன் படிக்கக் கற்றுக்கொண்டார். மார்க்சிய – லெனினிய நூல்களை படித்து விவாதிப்பார். இந்திரா காந்தியின் அவசர நிலை பேயாட்சியில் தோழரும் கைது செய்யப்பட்டார். சிறை மீண்டதும் மீண்டும் நியாயத்திற்கான போராட்டங்கள். இப்போது நக்சல்பாரி கட்சியில் இருந்து செயல்படுகிறார். ‘அழித்தொழிப்புகள் நம்மை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும். மக்களை புரட்சிக்கு திரட்ட இந்தத் திட்டம் உதவாது!’ என கட்சியில் போராடுகிறார் தோழர் சம்மனஸ்.

படிக்க :

♦ இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

♦ ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

தியாகிகள் மச்சக்காளை, இராயப்பன் போன்றோரோடு இணைந்து செயல்பட்டவர். பின்னர் ‘மக்கள் முன்னணி’ என்ற மக்கள் திரள் அமைப்பைத் துவங்கி, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து வலது சந்தர்ப்பவாத சகதியில் வீழ்ந்த வினோத் மிஸ்ரா குழுவை (சி.பி.ஐ.(எம்-எல்) விடுதலை) விட்டு விலகி முற்போக்கு இளைஞர் அணி (RYL) என்ற அமைப்பில் இணைந்து போராடத் துவங்கினார்.
அந்த அமைப்போ, இடது சந்தர்ப்பவாத சகதியில் சிக்கித் தவித்தது. மக்களின் எளிய கோரிக்கைகளுக்குக் கூட பேருந்தை எரிக்கப் போனது. தோழர் சம்மனஸ் மக்களைத் திரட்டுவதை முன் வைத்து போராடினார். அவரது குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை. பேருந்து எரிக்கப்பட்டது.
தோழர் சம்மனசின் குடும்பமே போலீசு அடக்குமுறைக்கு ஆளானது. அதிகம் படிக்கத் தெரியாது. மார்க்சிய மூல நூல்கள் அனைத்தையும் படித்ததில்லை. அடிப்படையான நூல்களை மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் தன் வர்க்க உணர்வின் மூலம் வலது சந்தர்ப்பவாதமும், இடது சந்தர்ப்பவாதமும் தன் வர்க்கத்தின் விடுதலைக்கு உதவாது என்பதை தன் எளிய அறிவால் தன் தோழர்களுக்கு விளக்கினார்.
‘மக்கள் திரள் வழி’ (Mass Line) ஒன்றே இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்கவல்ல ஒரே பாதை என முடிவெடுத்து, தன் உயிர்த் தோழர்கள் கணபதி (இராசபாளையம்), செல்வம் (தேவிப்பட்டனம்) மற்றும் சிலருடன் 1993-ல் விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.
போராட்டங்கள் தொடர்ந்தன. கைதுகளும் வழக்குகளும் கூடவே தொடர்ந்தன. குடும்பமே (மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்) சிறையில் கழித்த மாதங்கள் பல. நாட்டில் ஏதோ போராட்டம் என்றால் முன்னெச்சரிக்கை என சம்மனசு கைது செய்யப்படுவார். மனைவியும் மக்களும் முன் திட்டமிட்டபடி பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாவார்கள். போலீசின் அடக்குமுறைகளை கண்டு ஒருபோதும் தோழர் சம்மனசும் அவர் குடும்பமும் துவண்டதில்லை.
‘போலீஸ் அடக்குமுறை’ என பொதுவாக கூறினால், அதன் உண்மையான பொருளை புரிந்து கொள்ள முடியாது. நள்ளிரவுக் கைதுகள்! நக்சலைட்! தீவிரவாதி! பயங்கரவாதி! என்ற பீதியூட்டும் பிரச்சாரங்கள். தோழர்கள் பற்றியும், அமைப்பு பற்றியும் தகவல் கூறினால், வசதியான வாழ்க்கை கிடைக்கும் என கொடுக்கப்பட்ட உத்திரவாதங்கள்! சாம, தான, பேத, தண்டங்கள் என எதிரிகள் விரித்த வலைகள் ஏராளம். எதிலும் சிக்காத உண்மைப் புரட்சியாளர் தோழர் சம்மனசு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கடும் இதய நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த தோழரை, தரகு முதலாளி ராம்கோ-வுக்கு எதிரான தோழரின் போராட்டங்களை முன்னிட்டு, வழக்கம் போல் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தது போலீசு.
“விலகிவிடு! இலட்சங்கள் கிடைக்கும்!” என்ற உபசித்திரவதைகள் தனிக் கதை.
அமைப்பு முன்னெடுத்த எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு தமது கிராம மக்களையும் அதில் பங்கேற்க வைத்தார். தன் வட்டாரத்தில் இயங்கிய முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சம்மனசு.
இறுதியாக, அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போதும் அங்கு சென்று விவசாயிகளை ஒருங்கிணைத்தார். இந்தப் போர்க் குணம்தான் தோழரிடம் இருந்து நாம் வரித்துக் கொள்ள வேண்டியது.
மக்கள் விரோதிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றோரை ஒருபோதும் மதித்ததே இல்லை தோழர் சம்மனசு. அவர்களைப் பற்றி பேசும் போது கூட மிக இயல்பாக அவரது புரட்சிகர வர்க்கக் கோபம் வெளிப்படும். அதே நேரம், மக்கள் மற்றும் தோழர்களை அணுகும்போது அவரது வர்க்க பாசம் வெளிப்படும்.
“ஆஸ்பத்திரியில் அது சரி இல்ல, இது சரியில்ல! ஏகப்பட்ட பிரச்சினை! போராட்டம் செய்யணும் தோழர்!” இதய நோய்க்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உடன் தோழர் சம்மனசு பேசிய வார்த்தைகள் இவை. ஒரு வாரம் முன்னர் கூட மருத்துவமனையில் தனக்கு உதவி செய்ய வந்த இளம் தோழர்களை அன்புடன் வரவேற்று, செய்ய வேண்டிய புரட்சிகர பணிகள் பற்றி பேசி, உற்சாகமூட்டி உள்ளார்.
என்ன சொல்ல? எந்த இடத்திலும் மக்கள் நலனை, மக்கள் விடுதலையை, புரட்சியை உயர்த்திப் பிடித்தார். எந்த இடத்திலும் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் நமது நாட்டை சூறையாடுவதை எதிர்த்து நின்ற தோழர் சம்மனசின் புரட்சிகர வர்க்க உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிறுத்தி தோழர் பேசியதே இல்லை. அமைப்பும், இலட்சியமும், நியாயமும் மட்டுமே தோழரால் எப்போதும் முன்னிறுத்தப் பட்டவை.

படிக்க :

♦ NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

♦ தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

“வீட்டில் செய்த உணவை வந்த தோழர்களுக்கு பரிமாறிவிட்டு, எங்களை, ‘பள்ளிக்கூடத்தில் (சத்துணவு) சாப்பிடுங்க’ என கூறிவிட்டு ஒரு பீடியில் தன் வயிற்றை நிரப்பிக் கொண்ட நாட்கள் பல” என தன் தந்தையைப் பற்றி பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார் தோழர் சம்மனசின் மகன்.
“கொள்கையை வித்தவுகள பத்தி பேசாதீங்க தோழர்?, புரட்சிக்கு என்ன தேவையோ அத ஆக வேண்டியதப் பாப்போம்!” என தன் இயல்பான வர்க்க மொழியில் வழிகாட்டியதை என்னவென்று விளக்க இயலும்? “அரசியலைப் பாருங்க தோழர்! எவம் யோக்கியம்னு தெரிஞ்சி போவும்!” என ‘அரசியலை ஆணையில் வைத்தவர்’ தோழர் சம்மனசு.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேவிப்பட்டனம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்திற்கு மட்டுமே உரியவர் அல்ல அவர். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் உலக உழைக்கும் மக்களுக்கு உரியவர் தோழர் சம்மனசு. உழைக்கும் மக்களின் கலங்கரை விளக்கம் தோழர் சம்மனசு.
தன் வாழ் நாள் எல்லாம் மக்கள் விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும் உழைத்த ஒரு உண்மை நக்சல்பாரி புரட்சியாளன் மறைந்து விட்டான். அதோ! அந்தப் பெருவெளியில் நகைத்தபடி நமக்கு வழிகாட்டுகின்றான்!
சிவப்பு அஞ்சலிகள்! தோழர் சம்மனசு!
உங்கள் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
உங்கள் கனவை, உங்கள் வழி நின்று முடித்து வைப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ராஜபாளையம்.

தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

29.4.2022
தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது
நீண்ட நாட்களாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் ராஜபாளையம் பகுதியில் பொறுப்பாளராகவும், மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கிய பின் ராஜபாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்ட தோழர் சம்மனஸ் 27/04/2022 அன்று மாலை 5 மணி அளவில் மரணம் அடைந்தார்.
தோழர் சம்மனஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் நம்பிக்கையுடனும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு புரட்சிகர அரசியலில் தன்னையும் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டவர்.
பல்வேறு காலகட்டங்களில் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் ஊசலாடிய பேர்வழிகள் அமைப்பை பிளவுபடுத்த எண்ணிய போதெல்லாம் தளராது நின்று விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
நம்மை விட்டு பிரிந்த அருமைத் தோழருக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவப்பஞ்லி!

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.