Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 226

இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!

லங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நோய்ப் பரவலின் காரணமாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீதான விலைவாசி அதிகரிப்பு, இறக்குமதி தடைகள் போன்ற பல சுமைகளை மக்களின் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
இலங்கை ஒரு தனித்த தீவு. பிற நாட்டவர்களின் வருகையைத் தடுப்பது மிகவும் எளிதாக உள்ள ஒரு சிறிய நாடு. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே வான்வழி, கடல்வழி உட்பிரவேசங்களுக்குத் தடை விதித்திருந்தால் நாட்டுக்குள் வைரஸ் வராமலேயே தடுத்திருக்கலாம். ஆனால் ஜனாதிபதியோ, அரச பரிவாரங்களோ அதைச் செய்யவில்லை. இப்போதும் கூட, டெல்டா சரமாரியாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நாட்களிலும் கூட நாட்டுக்குள் உச்சபட்ச கட்டுப்பாடுகளை விதிக்காமல் மரணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ஒருவிதத்தில் இதுவும் சர்வாதிகார ஆட்சிதான்.
படிக்க :
இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
நாட்டில் இவ்வாறான அபாய நிலைமை காணப்படும் வேளையிலும் வைத்தியர்களும், தாதிகளும், சுகாதார சேவை அதிகாரிகளும், குடும்ப நல உத்தியோகத்தர்களும் தமது உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சாரதிகள் (ஓட்டுனர்கள்) எனப் பலரும் கடந்த வாரங்களில் மரணித்திருக்கிறார்கள்.
அபிவிருத்தியடையாத கஷ்டப் பிரதேச கிராமங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், அவர்களது குடும்பத்தினருக்கு ஊசி மருந்தேற்றவும் நடந்து சென்று வரும் குடும்ப சுகாதார சேவை மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களான பெண் அதிகாரிகளில் ஒரு சிலரையே இந்தப் புகைப்படங்களில் நீங்கள் காண்கிறீர்கள். கிராமங்களிலுள்ள இவ்வாறான கடினமான பாதைகளில் இவர்கள் இதற்கு முன்பும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க பல தடவைகள் நடந்தே போயிருக்கிறார்கள்..

 

This slideshow requires JavaScript.

இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இவர்களுக்குத் தேவையான பாராட்டுகளும் கிடைப்பது குறைவு. இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இவ்வாறான அரிய சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் பலர் உள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் அவர்கள் அனைவரதும் சேவைகளையும், அர்ப்பணிப்புகளையும் வரலாற்றில் நிலை நிறுத்துகின்றன
எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

“பணமாக்கல் திட்டம்” : கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவை தாரைவார்க்கும் திட்டம் !

0
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் பரிந்துரையின் படி 6 லட்சம் கோடி அரசுச் சொத்துக்களை குத்தகைக்கு விடுவது என்ற “தேசிய பணமாக்கல் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். செயல்படுத்துவது, பராமரிப்பது, ஒப்படைப்பது என்ற முறையில் குத்தகைக்கு விடப்படுவதாக (25 வருடத்திற்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது குறித்து) நமக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார தேக்கம் ஏற்பட்ட இன்றைய சூழலில் 7.7% பொருளாதார சரிவுடன் 2020-21-க்கான நிதி அறிக்கையை நிறைவு செய்து, 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது, உலகிலேயே பொருளாதாரத்தில் 6-வது பெரிய நாடாக உள்ள இந்தியாவை ஆளும் கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பல்.
படிக்க :
குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கொரோனாவில் ஒரு கோடி பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு,  1.50 லட்சம் பேர் காவு வாங்கப்பட்ட சூழலில், 7.7% பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கு இந்நிலைமையை சரி செய்யவும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி பணத்தைத் திரட்டவுமே இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் திருவாய் மலர்ந்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின்சாரம், தொலைதொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், விளையாட்டு அரங்குகள் இவற்றின் அசையா – அசையும் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டும். குறிப்பாக அதானி, அம்பானி கும்பலுக்கு ஏலம் விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நின்று தேர்தல் செலவிற்கும், ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் கோடிக்கணக்கில் அள்ளித் தரும் தனது எஜமானர்களை எப்படி மறக்க முடியும்?
இங்கு இது இட்டுக்கட்டி சொல்லப்படவில்லை. ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளிலிருந்து பார்த்தாலே இதன் பின் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஏலம் எடுக்க தனியார் வங்கிகள் கடன் தர நிராகரித்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.6000 கோடியை அதானிக்கு வழங்க வழிகாட்டுதல் கொடுத்தது ம்ோடி ஆட்சிதான். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை அதானியின் வசம் ஒரு விமான நிலையம் கூட இல்லை. தற்போது 51 விமான நிலையங்களிலும் மற்றும் பல துறைமுகங்களும் அதானி  நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மீதமுள்ள விமான நிலையங்களும் துறைமுகங்களும் தாரை வார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
அதேபோல் அம்பானிக்கும் தொலைத்தொடர்பு, மின்சார உற்பத்தி, பகிர்மானம், இயற்கை எரிவாயு, பைப்லைன் உற்பத்தி, பராமரிப்பு, கிடங்கு ஆகியவைகளும் இத்திட்டத்தின் கீழ் தாரை வார்ப்பதில் எந்த வில்லங்கமும் வரப்போது இல்லை. ஏறக்குறைய ஏலம் விடப்போகும் துறைகள் அனைத்தும் இவர்களின் சுரண்டலுக்கு ஏற்கனவே உட்பட்டதே.
எனவே இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக இத்துறைகளை வாரிக் கொடுப்பதில் எந்த குறுக்கீடும் இடையூறும் இருக்க போவது இல்லை. ஒருவேளை அரசின் ஏலத்தொகை கட்டுபடியாகவில்லை எனில் அடிமாட்டுத் தொகைக்கு குறைக்கவும் தயங்காது ஒன்றிய அரசு. மேலும் பல புதிய சலுகைகளையும் அறிவிக்கலாம்.
இதற்கான தொகையைக் கூட அரசு வங்கிகள் மூலம் கடன் தருவதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யலாம். அதனால்தான் என்னவோ, வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று துடிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஏனெனில் பொதுத்துறை வங்கிகள், கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் காரணமாக, அவற்றின் கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க, வங்கிகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிதியளவையும் கடன் வழங்கும் அளவையும் அதிகரிக்க முடியும். மேலும் இவர்களின் நெருக்கடியைப் பொறுத்து கடனை தள்ளுபடி செய்யவும் முடியும்.
தற்போது  விற்கப்படவிருக்கும் இவற்றை அரசே எடுத்து நடத்த முடியாதா? அதன் மூலம் பொருளீட்ட முடியாதா ? முடியும். கார்ப்பரேட் வருமான வரியை பழையபடி 40 %-ஆக உயர்த்துவதன் மூலமும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரப்படும் சலுகைகளை குறைப்பது மூலமும், வருவாயை உருவாக்கி பொருளாதார இழப்பை ஈடு செய்ய முடியும்.

பல அத்தியாவசிய சேவை நிறுவனங்களை அரசாங்கமே ஏற்று நடத்தி அவற்றின் மூலம் இலாபம் எடுக்கலாம். மேலும் நிதி தேவைப்பட்டால் அதானி, அம்பானிக்கு தரப்போகும் வங்கிக் கடனை அரசே பெற்றுக் கொள்ள முடியும். அரசு கடன் பத்திரங்களை மக்களுக்கு விநியோகிக்கலாம். அரசு சொத்துக்களையும் முறையாக திட்டமிட்ட வகையில் வருவாய் நோக்கில் பொதுத்துறைகளை போல அதன் சொத்துக்களையும் ஆக்கப்பூர்வமாக பராமரிக்கலாம். தற்போதுள்ள 7.7% சரிவை ஈடு செய்வதோடு, கடன் இல்லாத பற்றாக்குறை இல்லாத பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

உலகளவிலான பெரும் பணக்காரர்களில் (பில்லினியர்கள்) இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 140. இவர்களின் சொத்து மதிப்பு 44.27 லட்சம் கோடி என்கிறார்கள். இதற்கு 4% வரியைப் போட்டு வருவாயைப் பெருக்கலாமே ? இந்தக் கேள்வியை நாம் எழுப்புவோ. இந்தப் பணத்தை நம்மிடமிருந்துதானே இலாபமாக பெரு நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன ? அப்படி வரி செலுத்த முடியாது என்று சொல்வார்களானால் அவர்களது 50% சொத்துக்களைப் பறிமுதல் செய்யச் சொல்வோம். இதன்மூலம் பொருளாதார இழப்பை ஈடு செய்யலாம்.
அரசு சொத்துக்களை விற்பதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாய் வருகிறதோ இல்லையோ, அரசு சொத்தை ஏலம் எடுப்பதன் மூலம் அதானி, அம்பானி போன்ற கும்பலின் தற்போதைய சொத்தின் மதிப்பு 12 லட்சம் கோடியைவிட மேலும் ஒரு மடங்கோ, இரு மடங்கோ உயரலாம்.
ஆனால், இத்துறைகளைப் பயன்படுத்தும், இங்கு பணிபுரியும் பெருவாரியான மக்கள் அனைவரும் பெருநிறுவனங்களின் சுரண்டலுக்கேற்ப மேலும் பெருவாரியான உழைப்பு சக்தியை, உழைப்பாகவும் பணமாகவும் இழக்க வேண்டும். 1990-களில் கொண்டு வரப்பட்ட தாராளமய – தனியார்மய – உலகமய கொள்கையால் ஏற்பட்டுள்ள 99% – 1% என்ற ஏற்றதாழ்வு, இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மேலும் அதிகரிக்கலாம்.
படிக்க :
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
இந்த பணமாக்கல் திட்டமே, தேச நலனுக்காக, வளர்ச்சி திட்டங்களுக்காக, வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான, தேசத்தின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படவில்லை என்பது நிதர்சனம். அதானி, அம்பானி கும்பலுக்கு ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் செல்வத்தையும் பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் அவர்களின் மூலதனத்தை மேலும் மேலும் பெருக்கவுமே திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒட்டு மொத்த தேசத்தையும், அதன் நலனையும் உழைக்கும் மக்களால் உருவான மொத்த சொத்தையும், அதன் உபரிகளையும் அதானி, அம்பானி கும்பலுக்கு சமர்பணம் செய்வது எவ்வளவு பெரிய துரோகம்? இதைவிட தேசதுரோகம் வேறு எதுவும் இருக்க முடியுமா? இம்மாதிரியான தேச துரோகிகளையும், இவர்களின் எசமானர்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவது நமது கடமை. இவர்களை என்ன செய்ய வேண்டுமென்பதை மக்களே முடிவு செய்வார்கள் !

கதிரவன்

இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !

கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி !!
பாகம் 1 : நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்
புனே-சதாரா சாலையில், புனேயிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில், கெத் சிவபூர் கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் சாலையின் திருப்பத்திற்கு அருகில், கமர் அலி பாபாவின் ஆலயம் அமைந்துள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் கமர் அலி தர்வேஷ் தர்காவிற்கு வருகை தருகிறார்கள்.
அரசாங்கத்தின் பிலிம்ஸ் டிவிஷன் அல்லது ஒரு தொலைக்காட்சி சேனலில் இது பற்றிய ஒரு சிறப்புப் படம் ஒலி – ஒளி பரப்பப் படுவதால் இந்த அம்சம் அடிக்கடி வெளிச்சத்திற்கு வருகிறது. சைஇ
இந்த தர்க்காவின் முன்புறம் 90 கிலோ எடையில் ஒரு பெரிய கல்லும் 60 கிலோ எடையில் மற்றொரு சிறிய கல்லும் என இரண்டு பெரிய கற்கள் உள்ளன. பதினோரு ஆண்கள் தலா ஒரு விரல் என 11 விரல்களைச் சேர்த்து பெரிய கல்லையும், ஒன்பது ஆண்கள் தலா ஒரு விரல் என 9 விரல்களைச் சேர்த்து சிறிய கல்லையும் தூக்க வேண்டும். பெண்களுக்கு அனுமதி கிடையாது.
படிக்க :
போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்
மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
கல்லின் மீது விரல்களை வைத்து, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் சப்தமாக முழக்கமிட்டால் கற்கள் இறகு போல எடையற்றதாகி எளிதாக தூக்கப்படும். 90 கிலோ எடை கல் மற்றும் 60 கிலோ எடை கல்லைத் தூக்க முறையே 11 மற்றும் 9 விரல்களால் மட்டுமே தொட வேண்டும். இதற்குக் கூடவோ குறையவோ இருக்கக் கூடாது. அதே போல, ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்ற முழக்கம் தவிர வேறு முழக்கம் போடக் கூடாது என்பது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீகம் !
இதன் பின்னால் ஒரு பழைய கட்டுக்கதை உள்ளது. கமர் அலி தர்வேஷ் கடவுளின் வெளிப்பாட்டைக் கண்ட ஒரு முசுலீம் பக்கிரி.  அவர் இந்த இடத்தை எப்படி, எப்போது அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வாறு செய்த பிறகு, அவர் கிராமத்திலிருந்து துர்தேவதைகள், ஆவிகள், பிசாசுகள் அனைத்தையும் வெளியேற்றினார். எழுபது வயதில் தன்னை உயிருடன் புதைத்து சமாதி அடைந்தார். இந்த இடத்தில் வாழ்ந்த இரண்டு பேய்களை பக்கிர் சபித்து, அவற்றை கற்களாக மாற்றினார். இந்த கற்களைத் தான் மக்கள் தூக்கி தரையில் வீசுகின்றனர்.
இந்தக் கதை நீண்ட காலமாக மக்களின் பெரும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது. மும்பை தூர்தர்ஷன் இந்த ‘அதிசயம்’ பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஜூன் 1987-ல் எந்த அறிவியல் விளக்கமும் தராமல் ஒளிபரப்பியது. பின்னர் அனிஸ் தலையிட்டு அம்பலப்படுத்தும் செயலைச் செய்ய முயற்சிக்க வேண்டியிருந்தது. அனிஸ் அமைப்புக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. சில கடிதங்கள் ஏளனம் செய்து, “இங்கே ஒரு உண்மையான அதிசயம் நடக்கிறது; நீங்கள் இதை எப்படி விளக்க முடியும்?” என்றன. மற்றவர்கள் உண்மையாக இது போன்ற ஒரு அதிசயம் சாத்தியமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
தபோல்கர் தலைமையில் 7 பேர் குழு இந்த அதிசயத்தை அம்பலப்படுத்த செல்கிறது. இவர்கள் 7 பேர் என்பதால் உள்ளூர் ஆட்கள் 4 பேரை இணைத்துக் கொண்டு தர்காவின் வழிகாட்டுதல்படி 11 விரல்களை 90 கிலோ கல்லின் மீது வைத்து ’கமர் அலி தர்வேஷ்-க்கு வெற்றி’ என்று ஒரே நேரத்தில் முழக்கமிட்டனர். அரை அடி உயர்ந்த கல் பிறகு கவிழ்ந்து விட்டது. சுற்றி நின்ற மக்களோ நீங்கள் காலணிகளை அணிந்து கொண்டுள்ளதால் தான் அதிசயம் நடக்கவில்லை என்று கூறியதால் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு முயற்சி செய்கின்றனர். அப்போதும் கல் அரை அடிக்கு மேல் உயரவில்லை. இவர்களுடன் இணைந்த உள்ளூர் மக்கள் சற்று பயந்து போய் இவர்களை விட்டு விலகி விட்டனர்.
கோப்புப் படம்
பிறகு சுற்றுலாவாக வந்த 4 பேரிடம் பேசி அவர்களை இணைத்துக் கொண்டு முழக்கமிட்ட போது கல் படிப்படியாக ஒரு மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. இதனால் உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினர் அடுத்த முயற்சியில் தோளுக்கு மேலாகத் தூக்கி கீழே வீசினர்.
பிறகு உற்சாகமடைந்து வழக்கமான முழக்கத்தைக் கைவிட்டு, ’மகாத்மா பூலேக்கு வெற்றி’ என ஒரே நேரத்தில் கூட்டாக முழக்கமிட்ட போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்தது. இது நடந்ததும் மக்கள் இவர்களைச் சுற்றி குழுமினர்.
உற்சாகமடைந்த அனிஸ் அமைப்பினரும் சுற்றுலா வந்தவர்களும் ஏன் 11 விரல்கள்? அதுவே 10 ஆகவும் அல்லது 12 ஆகவும் இருந்தால் என்ன என்று கூட்டியும் குறைத்தும் முயற்சித்த போதும் எளிதாக கல்லைத் தூக்கி வீச முடிந்தது.
பின்னர் 60 கிலோ கல்லிலும் இதே போல முயற்சித்து, அந்தக் கல்லையும் எளிதாக தூக்கி வீசினார்கள். அதன் பின் பெண்களையும் இணைத்துக் கொண்டு இதே போல முயற்சிக்க அப்போதும் கல்லை எளிதாக தூக்கி வீச முடிந்துள்ளது. பெண்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி! புறப்படும் போது காலணிகளை அணிந்தனர். அப்போது பளிச்சென ஓர் எண்ணம் தோன்றி, காலணிகளை அணிந்தபடி கல்லைத் தூக்கி வீசியுள்ளனர்.
அதன் பின் இதற்கு என்ன விளக்கம் என பரிசீலித்து அந்த அறிவியல் உண்மையையும் கண்டறிந்து கூறினார்கள். உண்மை இதுதான். முதலில் விரலை மட்டும் கல்லின் மீது வைத்தவர்கள் அதை அழுத்தவில்லை. எனவே கல்லைத் தூக்க முடியாமல் போயுள்ளது. கமர் அலியும் உதவவில்லை. அதன் பின் முழக்கமிடும் போது விரலில் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
படிக்க :
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
ஒரே நேரத்தில் அனைவரும் அழுத்திய போது, எல்லா பக்கமும் அழுத்தம் அதிகரித்து கல் மேலே எழும்பத் தொடங்கியுள்ளது. கவிழவும் இல்லை. துவக்கத்தில் விரல் அழுத்துகிறது. பிறகு மணிக்கட்டும் முழங்கையும் அழுத்தத்தை கல்லின் மீது செலுத்தத் தொடங்குகின்றன. படகு வலிக்கும் மீனவர்கள் ஐலேசா என சேர்ந்து பாடி துடுப்பு வலித்து படகை ஓட்டுவது போல, கனமான பெரிய பாரத்தை வண்டி மீது தூக்கும் போது, அந்த உழைப்பாளிகள் தூக்கு தூக்கு என ஒரே நேரத்தில் ஓசை எழுப்பி பாரத்தை தூக்குவது போன்றதுதான் இந்தச் செயலும் என்பதுதான் இதன் பின் உள்ள அறிவியல் உண்மை என விளக்கி இந்த மூட நம்பிக்கையைத் தகர்த்துள்ளனர்.
“கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை” என தபோல்கர் கூறுகிறார்.
மக்களின் விடுதலைக்காக, அவர்களை அறியாமையிலிருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தபோல்கர். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தமது பார்ப்பனிய பார்ப்பன சித்தாந்தத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த பாசிசக் கும்பலோ தபோல்கரின் பணியைக் கண்டு அஞ்சியது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற சங்க பரிவாரக் கும்பல், தபோல்கரை சுட்டுப் படுகொலை செய்து விட்டது. தபோல்கர் படுகொலையிலும், முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலையிலும் ஈடுபட்டது, சனாதன் சன்ஸ்தா எனும் சங்கபரிவாரத்தின் கொலைகாரக் கும்பல்தான். காவிக் கிரிமினல்களின் பாசிச ஆட்சியில், இந்த அமைப்பு இன்னும் தடை செய்யப்படாமல் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது என்பது முற்போக்காளர்களுக்கு பாசிச கும்பலால் விடப்பட்டிருக்கும்  சவால்தான்.
(முற்றும்)


நாகராசு
செய்தி ஆதாரம் : தி வயர்

மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

மேக்கேதாட்டு அணை தமிழகத்தின் மீதான தாக்குதலை தகர்த்தெறிவோம் ! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !!
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்குவோம் !!!
மேற்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் வருகின்ற 30.8.2021 அன்று அஞ்செட்டி தமிழக எல்லையில் இருந்து மேக்கேதாட்டு நோக்கி மக்கள் அதிகாரம் சார்பாக நடைபயணம் நடைபெற உள்ளது. தருமபுரி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, மக்கள் அதிகாரம்.
படிக்க :
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
குறிப்பாக தமிழக எல்லை பகுதிகளான அஞ்செட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதியில் கிராமப்புற மக்களை சந்திப்பது, தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, வட்டார நகரங்களில் கடைவீதி பிரச்சாரம் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை உணர்த்தும் வகையில் மக்களுக்கு அறை கூவல் விடுத்து வருகிறது மக்கள் அதிகாரம்.
அதன்படி நாட்றாம்பாளையம் கேரட்டியில் 26.8.2021 அன்று மாலை 3 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் இப்போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். இதே போல் நாட்றாம்பாளையம் கடைவீதியில் தோழர் துரை தலைமையில் பிரச்சாரம், பென்னாகரம் கடைவீதியில் தோழர் சிவா தலைமையில் பிரச்சாரம், கேரட்டியில் தோழர் கனகராஜ் தலைமையில் பிரச்சாரங்கள் நடைப்பெற்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614

நரேந்திர தபோல்கரும் – மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கமும்

ரேந்திர தபோல்கர் என்ற பகுத்தறிவாளர் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்தவர். அதனாலேயே ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கொலைகார கும்பலால் படுகொலை செய்யப்பட்டவர். 2013 ஆகஸ்ட் 20ம் தேதி காலை நடைபயிற்சியில் இருந்த 67 வயதான அந்த தோழர் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு கொடூரம் என்றால், அந்த கொலைக்கான முக்கிய குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படாதது அதை விடக் கொடூரமானது.
தனது தந்தையைக் கொன்ற முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என அவரது மகன் டாக்டர் ஹமீது தபோல்கர் குற்றம் சுமத்துகிறார். இதனால் முற்போக்கு, பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் கொல்லப்படும் ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்று விளக்கமாகக் கூறுகிறார்.
நரேந்திர தபோல்கர் எழுதிய ஒரு நூலைப் பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த கட்டுரை. மூட நம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தோழர்களும் எதிர் கொள்கின்ற விசயங்களைப் பற்றி கட்டுரை பேசுகிறது. குறிப்பாக பார்ப்பன பாசிசக் கொடூரம் இன்று ஆட்சியில் இருக்கின்ற இந்த தருணத்தில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது !
படிக்க :
♦ கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
’காரணம் பற்றிய விவகாரம் : மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைப் புரிந்து கொள்வோம்’ என்ற இந்த நூல் தோழர் தபோல்கர் அவர்களால் மராட்டிய மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மூடநம்பிக்கை ஒழிப்பின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில் இவரது அமைப்பான ‘அந்தாஷ்ரத்தா நிர்மூலன் சமிதி’ அமைப்பின் போராட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. அது பற்றி இந்த ஆங்கில நூல் வெளிவந்த காலத்தில் 2018ல் ஓர் அறிமுகமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. அதன் சுருக்கத்தை கீழே காணலாம்.
000
அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANiS – ‘அனிஸ்’) இந்து மதத்தை மட்டும்தான் எதிர்க்கிறதா?
’அனிஸ்’ – இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறது என்ற ஒரு கருத்தைப் பரப்பி ‘அனிஸ்’ செயல் வீரர்களது நடைமுறை மீது ஒரு அவநம்பிக்கையை உருவாக்குவதே இந்தக் கேள்வியின் நோக்கம். மூட நம்பிக்கையை எதிர்க்கின்ற, இந்தியாவில் உள்ள எல்லா பகுத்தறிவு இயக்கங்களும் இதே கேள்வியை எதிர்கொள்கின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களின் மதச் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பும் விமர்சனக் கண்ணோட்டத்தை இப்படிப்பட்ட இயகங்கள் ஏற்படுத்துகின்றன.
பழமையான மதச் சடங்குகளை கவனமாக கடைப்பிடிப்பவர்கள், தாங்கள் கடைப்பிடிப்பதுதான் உண்மையான மதம் என நம்புகின்றனர். இது பற்றிய விமர்சனப் பார்வையை உருவாக்கும் ‘அனிஸ்’-சின் செயல்பாட்டால் தமக்கு ஆபத்து என உணர்கின்றனர். இந்த சிந்தனையை முறையை உள்வாங்கும் மக்கள் மதச் சடங்குகளை கேள்வி கேட்பதில் தொடங்கி மதத்தையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறார்கள். பழமை மத நம்பிக்கையாளர்கள் இதைத் தவிர்ப்பதற்காக மக்களை அனிஸ்-சிடமிருந்து தள்ளிவைக்க விரும்புகின்றனர். இதனாலேயே நாம் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதாக வலிந்து அவதூறு பரப்புரையை செய்யத் தொடங்குகிறார்கள். இதில் ஏதும் உண்மை உள்ளதா? கீழுள்ளதைப் பாருங்கள்:
மத நம்பிக்கை ஒரு வியாபாரம் என்றால் அந்த வியாபாரத்தில், மூட நம்பிக்கை என்பது ஒரு கள்ளச் சந்தை. இந்த கள்ளச் சந்தை வியாபாரிகள் (மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள்) எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. குறிப்பாக ‘அனிஸ்’ அமைப்பினர் கவலைப்படவில்லை.
மதத்தை வைத்து சுரண்டுவதை, ‘அனிஸ்’ அமைப்பு எப்போதும் எதிர்க்கிறது. மத பிரச்சாரகரை கடவுள் நிலைக்கு உயர்த்தி, தம்மை அவருக்கு அடிமையாக்குவதையும் மதச் சடங்குகள் என்ற பெயரில் மூட நம்பிக்கையை பரப்புவதையும் கடுமையாக எதிர்க்கிறது. இந்த சுரண்டல் வியாபாரத்தை எதிர்க்க அனிஸ் அமைப்பு தமக்கே உரிய பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.
அது பல இசுலாமிய பாபாக்கள் மற்றும் புவாக்களை எதிர்த்துப் போராடியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ‘அனிஸ்’ அமைப்பு தமது இதழ்களில் இவை பற்றி விரிவான செய்திகள் வந்துள்ளதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தமது பிரச்சாரத்தால் குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், வாய் பேசாதவர்கள் பேசுகிறார்கள் என பிரச்சாரம் செய்யும் கிறித்தவ பாதிரியார்களை எதிர்த்து போராடியுள்ளது.
இந்த அமைப்பு ஜைன மதத்தவர்களின் பொருளற்ற பெரும் செலவினம் பிடிக்கும் ஆடம்பர சடங்குகளை எதிர்த்துப் போராடி வருகிறது. பல்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு கிராம கோயிலில் தமது தலைகளை சுவற்றில் மோதுகின்ற சடங்கைச் செய்யும் – தம்மை புத்த மதத்தினர் என கூறிக் கொள்ளும் – நபர்களுக்கு எதிராகவும் போராடியுள்ளது. மீண்டும் சொல்கிறேன், எமது அனிஸ் அமைப்பின் பல்வேறு மத மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை அனிஸ் வெளியிட்டுள்ள பல இதழ்களில் படித்துத் தெரிந்து கொள்ள முடியும் என தபோல்கர் கூறுகிறார்.
பெரும்பாலான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம் இந்து மதம் சார்ந்ததுதான். ஆனால் இந்திய மக்கள் தொகையில் 80% பேர் இந்து மதத்தில் இருப்பதால் இதை தவிர்க்க இயலாது. இதன் விளைவாக அனிஸ் அமைப்பு நடத்திய 80% போராட்டம் இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கையை எதிர்த்தே நடந்துள்ளது. இது பெரும்பான்மையானதுதான்!
வெளியாட்கள் தமது மத மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் மக்கள் ஆத்திரமடைகின்றனர். ஒரு சாதியினரின் மூட நம்பிக்கையை வேறு சாதியினர் விமர்சித்தால் கூட ஆத்திரமடைவதும், பகை உணர்வு கொள்வதும் நடக்கிறது. பார்ப்பனர்களின் பூணூல் சடங்கு, மராத்தாக்களிடம் உள்ள விதவைத் திருமண எதிர்ப்பு, தாங்கர் சாதியினரிடம் விழாக்களின் போது விலங்குகளைப் பலியிடுவது போன்ற மூட நம்பிக்கைகளை பிற சாதியினர் விமர்சித்தால் கூட சகித்துக் கொள்ளாதது மட்டுமின்றி அது அமைதியின்மையை உருவாக்குகிறது. மக்கள் தொகையில் 80% இருப்பதால் அனிஸ் அமைப்பின் செயல்பாட்டாளர்களிலும் பெரும்பான்மையினர் இந்துக்களே. இயல்பாகவே இந்து செயல்பாட்டாளர் இசுலாமிய மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் இசுலாமியர் மனதளவில் பாதிப்படைவார்.
படிக்க :
NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு
இந்து சமூகத்திலும் மதத்திலும் மட்டுமே சாதி அடுக்குமுறை உள்ளது. இந்துக்களிடையே சுமார் 6000 முதல் 6500 சாதிகள் உள்ளன. சொல்லப் போனால் மதத்தைவிட சாதிக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு சாதியும் தமக்கே உரிய தனிச் ‘சிறப்பான’ சடங்கு – சம்பிரதாயங்களையும், பழக்க – வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், இது போல பலவற்றையும் கொண்டுள்ளன. இவை கடந்த காலங்களில் சில நேரம் பயனுள்ளதாகவும் தேவையானதாகவும் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு இவையெல்லாம் பயனற்ற வெற்று சடங்கு, பழக்கம், பாரம்பரியமாக மட்டுமின்றி வெறும் மூட நம்பிக்கைகளாக மட்டுமே உள்ளன.
மற்ற மதங்களைப் போல் இல்லாமல் இந்து மதத்தில் வகை தொகையில்லாமல் கடவுளர்களும் புராண-இதிகாச-வேத நூல்களும் மலிந்துள்ளன. 2000 ஆண்டு பழமையான கிறித்துவ மதத்தில் ஒரு கடவுள், ஒரு புனித நூல் மட்டுமே உண்டு. பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த மூன்றும் குறிப்பிடுவது ஒன்றை மட்டுமே. சுமார் 1400 ஆண்டுகால இசுலாமிய மதம் ஒரே ஒரு கடவுளையும், ஒரு இறை தூதரையும், ஒரு புனித நூலையும் மட்டுமே கொண்டு உள்ளன.
மிக பழைமையானது, அனாதியானது என சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.
இங்கே ஒரு முக்கியமான உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் உருவெடுத்து வரும் போக்கில் மூட நம்பிக்கைகளை இரக்கமற்று விமர்சித்த பல முக்கிய சமூக சீர்திருத்தவாதிகளும் இருந்துள்ளனர். 3500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த சார்வாக மற்றும் லோகாயதவாத தத்துவங்கள் ஆகியவை தெளிவாகத் தெரிகின்ற உதாரணங்களாகும்.
மஹாராட்டிர மாநிலத்தில் மட்டுமே மகாத்மா பூலே, சாஹு மகராஜ், லோகிதவாடி அகர்கர், டாக்டர் அம்பேத்கர், வி.டி.சாவர்கர், பிரபோதங்கர் தாக்ரே மற்றும் காட்கே பாபா என சமீபகால இந்து சீர்திருத்தவாதிகளைப் பட்டியலிடலாம். இந்த சீர்திருத்தவாதிகளின் கற்பித்தவை ஒரு மதத்திற்கு மட்டும் என்றில்லாமல் மனித குலம் முழுமைக்குமே மனித தன்மையுடன் விழிப்போடிருக்க கூறினாலும் ஆகப் பெரும்பான்மையாக, இந்துக்களைப் பார்த்துக் கூறியவைதான்.
வி.டி.சாவர்க்கர் மேற்கொண்ட மத நூல்களை இரக்கமற்ற முறையில் ஆராய்ச்சி செய்ததைப் பற்றி இங்கு தபோல்கர் குறிப்பிடுகிறார். மிக முக்கியமாக, அவரது ஆதரவாளர்களால் ‘இந்து இதயங்களை ஆள்பவர்’ என்று புகழப்படுவதால் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டும் என்று தபோல்கர் குறிப்பிடுகிறார். மத நூல்களை அவர் இரக்கமின்றி ஆராய்ந்தது, மூடநம்பிக்கைகளை ஒழிக்க முயற்சித்த இந்து சமூக சீர்திருத்தவாதிகளின் நீண்ட பாரம்பரியத்தை விளக்குகிறது. பிரார்த்தன சமாஜம் போன்ற முற்போக்கு இந்து சமயப் பிரிவுகள், ஒரே ஒரு கடவுள் தான் என்றும், அவரிடம் பிரார்த்தனை செய்ய ஒரு சடங்கு அல்லது அனுமதி தேவையில்லை என்றும் கூறின.
எல்லா மதங்களைச் சேர்ந்த மத நூல்களைப் பற்றி சாவர்க்கர் கூறியிருப்பது பற்றி :
“வேதங்கள், அவெஸ்தாக்கள், பைபிள், குரான் என ’புனித’ நூல்களில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே நம்புவதற்கு பதில் தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நூல்கள் மனிதர்கள் உருவாக்கியவை. அவற்றை அதற்குறிய தன்மையுடன் படிக்காமல் அப்படியே நம்புவது மதம் கூறியவற்றை அப்படியே குருட்டு மனப்பாடமாக ஒப்புவிப்பதுஆகும்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் கேள்விக்கு இடமற்ற மதத்தின் பிடியில் ஐரோப்பா அடிமைப்பட்டுக் கிடந்தது. அதற்குப் பின் பைபிளில் இருந்து தன்னை தூரமாக விலக்கிக் கொண்டு அறிவியலைப் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்கியது. ஸ்ருதி – ஸ்மிருதி – புராணங்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா இன்றைய தேதி வரை நவீனமாக உள்ளது. நம்மை விட நாலாயிரம் ஆண்டுகள் முன்னேறி உள்ளது. அது மூன்று கண்டங்களை கைப்பற்றியுள்ளது! இந்திய தேசம் ஐரோப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டிருந்தால், அது பண்டைய சகாப்தத்தின் ‘புத்தகத்தை’ மூட வேண்டும், ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் புராணங்களின் மேலாதிக்கத்தை மறந்து, அவற்றை நூலகங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அறிவியல் யுகத்தில் நுழைய வேண்டும்.
அந்த பழைய, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே இவை பொருத்தமானவை. புறநிலை உண்மையையும் அதை சோதித்து அறிகின்ற ஆற்றலையும் கொண்ட அறிவியல் மட்டுமே இன்றைக்கு எது தேவையானது, பொருத்தமானது என்பதை தீர்மானிக்கும் அடிப்படையாக உள்ளது. இந்த அறிவியல் நவீனம் கடந்த கால அனுபவங்களில் பயனுள்ளதாக இருந்த அனைத்தின் சாராம்சத்தையும் கொண்டுள்ளது; ஆனால் ஸ்ருதி – ஸ்மிருதி – புராணத்தில் நவீன அறிவு ஒரு துளி கூட இருக்க முடியாது. எனவே, நாம் இன்றைய தேதிக்கு நவீனமாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நல்லதா கெட்டதா, சீர்திருத்தம் நன்மை பயக்குமா இல்லையா என்பதற்கு, இனிமேல், ஒரு சோதனையின் அடிப்படையில் மட்டுமே, அதாவது இன்று அது பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது பயனற்றதாக இருக்கிறதா என்பதிலிருந்து பதிலளிக்கப்பட வேண்டும். வேத வாக்கியங்களால் இது அனுமதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கக்கூடாது.” இவ்வாறு கூறுகிறார் சாவர்க்கர்.
மதத்தை தமது சொந்த அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்துகின்ற சக்திகள் இன்று மஹாராஷ்ட்ராவிலும் இந்தியாவிலும் உள்ளன. இந்து மதத்திற்கு மொத்த குத்தகைதாரர்கள் தாங்கள்தான் என கருதிக் கொள்கின்றனர். இந்து மதத்தில் எந்த சீர்திருத்தங்கள் அவசியம், எவை தேவையில்லை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். ‘அனிஸ்’ ஒரு முற்போக்கான அமைப்பு, மற்றும் அதன் ஆர்வலர்கள், அவர்கள் எந்த மதம் மற்றும் சாதியில் பிறந்தார்களோ அந்த சாதி, மதங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் மதத்தைப் பற்றி பேசுவதில்லை, ஒரு அர்த்தத்தில் அதைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் சில இந்து அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவை எந்த மதப் பிரச்சினைகளை பற்றிப் பேச வேண்டும், எதைப் பற்றி பேசுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டளைகளை அவை வெளியிடுகின்றன. அவர்கள் தங்கள் ஆணைகளைப் பின்பற்ற மக்களை அச்சுறுத்துகிறார்கள். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் தாங்கள்தான் என அவர்கள் தங்களின் ஏகபோகத்தை அறிவித்துக் கொள்கின்ற வழியாகும். ஏ.என்.ஐ.எஸ் (அனிஸ்) இந்த ஏகபோகத்தை அங்கீகரிக்கவில்லை, அங்கீகரிக்கத் தேவையுமில்லை.
ஏனென்றால் அத்தகைய குறுகிய சுய – பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் எதேச்சதிகாரவாதிகள் தாராளவாத, சகிப்புத் தன்மை மற்றும் நெறிமுறைகொண்ட இந்து மதத்தின் பேச்சாளர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்று அது உணர்கிறது. அவர்கள் அனைத்து இந்துக்களினதும் செய்தித் தொடர்பாளர்களாக இருக்க மாட்டார்கள், ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக, அனிஸ்-இன் பெரும்பாலான செயல் வீரர்கள் இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அவர்கள் வேறு எந்த மதத்திற்கும் மாறவில்லை என்ற அர்த்தத்தில் இந்துக்கள். எனவே இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் இந்த உரிமையை இந்துத்துவவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
‘அனிஸ்’ (ஏ.என்.ஐ.எஸ்) அமைப்பு, அதன் வேலை பொருத்தமானது, விரும்பத்தக்கது மற்றும் அத்தியாவசியமானது என்று நம்புகிறது. சில இந்துக்கள் கூட இந்த வேலை செய்யப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும் கூட, இந்து மூடநம்பிக்கைகளை மட்டும் நாம் ஏன் ஒழிக்க முயல்கிறோம் என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அவர்களின் மனதில் உள்ள குழப்பம் தெளிவாக உள்ளது.
மூடநம்பிக்கை என்பது ஒரு வீட்டில் உள்ள குப்பைகளைப் போன்றது. நமது தேசம் பத்து அறைகள் கொண்ட வீடு என்று ஒரு கணம் வைத்துக் கொள்வோம். எனவே, 80% மக்கள் தொகை கொண்ட மதம் எட்டு அறைகளைக் கொண்டிருக்கும். மக்கள் தொகையில் 12 முதல் 13% கொண்ட இஸ்லாமிய மதம் ஒரு அறையைப் பெறும். மீதமுள்ள ஒரு அறை இந்து அல்லாத, முஸ்லீம் அல்லாத மக்களுக்கு செல்லும். இப்போது, அனிஸ், அதன் சொந்த செலவில், வீட்டின் இந்த பத்து அறைகளில் எட்டை சுத்தம் செய்தால், வீட்டின் முக்கிய பகுதி, வெளிப்படையாக, குப்பை இல்லாமல் இருக்கும். ‘ஒன்பதாவது’ அறையை முதலில் சுத்தம் செய்யாவிட்டால், மற்ற எட்டு அறைகளைத் தொட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பது நியாயமற்றதல்லவா?
மூடநம்பிக்கைகளை ஒழிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இந்துக்களின் நலனுக்கு உகந்தது. அதை எதிர்ப்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். அனிஸ்-ஐ எதிர்ப்பவர்கள், இந்து மதத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து அகற்றுவது இந்து பெருமிதத்தை பலவீனப்படுத்தும் எனவும் அதே நேரம் இசுலாமியர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி கடுங்கோட்பாட்டு மத வெறியர்களாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கடுங்கோட்பாளர்களாகவும் மதவெறியர்களுமாகவும் உள்ள இசுலாமியர்கள் பின்னர் மத மோதல்களின் போதெல்லாம் மெலிந்த இந்துக்களை எளிதாக தோற்கடித்து விடுவார்கள் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர். இத்தகைய அற்பமான மற்றும் ஏமாற்றும் வாதங்களை முன்வைப்பவர்களைப் பற்றி ஒருவர் பரிதாபப்பட மட்டுமே முடியும்.
’அனிஸ்’ வெறுமனே இந்து மூடநம்பிக்கைகளை மட்டுமே அம்பலப்படுத்தவில்லை. இசுலாமிய மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. புனே அருகில் கமர் அலி தர்வேஷ் தர்கா-வில் நீண்டகாலமாக நீடித்து வந்த ஒரு மூட நம்பிக்கையை ஒழிக்க ‘அனிஸ்’ களமிறங்கிய அனுபவத்தை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)
நகராசு
நன்றி :
தி வயர்

1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்

லங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏகாதிபத்திய – முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மார்க்சியவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் தனது பிரதானமான எதிரிகளாகக் கருதியது. இலங்கையில் அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி, இனப் போராட்டம் அல்ல.
சிங்கள- தமிழ் பூர்ஷுவா வர்க்க புத்திஜீவிகள், இன்றைக்கும் இந்த உண்மையை மறைத்து, வரலாற்றை திரித்து எழுதி வருகின்றனர்.
பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கை 1948-ல் சுதந்திரமடைந்த பின்னரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருந்தது. அத்துடன் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. இலங்கை அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக, அது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற முடியவில்லை. சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வந்தது.
1953-ம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தீவிர கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றி வந்தது. அந்த வருடத்தில் இருந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகே ஐ.நா.வில் அனுமதிக்கப் பட்டது.
படிக்க :
இலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்
இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
1950 – 1953 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்த கொரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பருக்கு அதிக கேள்வி உருவானது. ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக ஈட்டிய வருமானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்ததுடன், அரச கஜானாவிலும் பெருந்தொகைப் பணம் சேர்ந்திருந்தது. ஆனால், யுத்தம் முடிந்தவுடன் சந்தை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் வரவை விட செலவு அதிகரித்தது. கஜானா காலியாகிக் கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன.
இந்த தருணத்தில் தான் ஒரு கம்யூனிச நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது. சீனாவின் அரிசிக்கு பதிலாக இலங்கையின் ரப்பரை பண்டமாற்று செய்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இதனால் இலங்கை தேசம் திவாலாவதில் இருந்து காப்பாற்றப் பட்டது எனலாம். இருப்பினும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, பணக்கார வர்க்கத்திடம் அதிக வரி அறவிடுவது. இரண்டாவது ஏழை வர்க்கத்திற்கு கொடுத்து வந்த அரச மானியங்களை குறைப்பது. முதலாளிய ஆதரவு UNP அரசு இரண்டாவதை தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் இலங்கையை ஆள்வது ஒரு முதலாளித்துவ அரசு தானென்பதை நிரூபித்தது.
அரசு மக்களுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளும் ஒன்றில் குறைக்கப் பட்டன, அல்லது நிறுத்தப் பட்டன. அரிசிக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. சீனியின் விலையும் கூடியது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு நிறுத்தப்பட்டது. கல்வி, மருத்துவ துறைகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப்பட்டன. தபால், தந்தி, பஸ்/ரயில் போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப்பட்டன.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரச செலவினைக் குறைப்புகளால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள் ஆவர். இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது, “ஏழைகள் தமக்கான உணவை தாமே தேடிக் கொள்ள வேண்டும்” என்று அன்றைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆணவத்துடன் அறிவித்தார்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தமில்லாத, ஏழை உழைப்பாளிகளை தண்டித்த இலங்கை அரசு, அதற்குக் காரணமான பெரும் மூலதன தொழிலதிபர்களுக்கு பரிவு காட்டியது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. வணிகத்தில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கப் பட்டது.
அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம், 23 ஜூலை 1953 அன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று திரண்டார்கள். நவீன கால இலங்கை வரலாற்றில், பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடியமை அதுவே முதல் தடவை ஆகும்.
அந்தக் கூட்டத்தை வழிநடத்திய ட்ராட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியும், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. 12 ஆகஸ்ட், நாடளாவிய பொது வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தமிழ் முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சி சம்பிரதாயபூர்வமான ஆதரவு தெரிவித்திருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தான் முன்னெடுத்திருந்தன.
12 ஆகஸ்ட் 1953, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்லவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இன, மத பேதமின்றி ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினார்கள். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையாக வாழும் கொழும்பு முதல் காலி வரையிலான மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது.
படிக்க :
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே !
இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கொழும்பு நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீதிகளில் ஒன்று கூடிய பெருந்தொகையான மக்கள், போலீஸ்காரர்களை எதிர்த்து போரிட்டனர். எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த போலிஸ் படை, மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது.
பல இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன. அதனால் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. ரயில் வண்டிகள் தொழிலாளர்கள் வசமாகின. சில இடங்களில் சிறிய பாலங்கள் டைனமைட் வைத்து தகர்க்கப் பட்டன. அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன.
மக்கள் எழுச்சியின் தீவிரத்தன்மை கண்டு ஆளும்கட்சியான UNP பயந்து ஒளிந்து கொண்டது. இடதுசாரி தொழிலாளர் எழுச்சி அரசைக் கவிழ்த்து விடும், விரைவில் இலங்கை ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சினார்கள். மூவின மக்களினதும் ஆதரவை முற்றாக இழந்து விட்ட இலங்கை அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் நக்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலுக்குள் தஞ்சம் அடைந்தது.
HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு அரச படையினருக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இருபது பேரளவில் கொல்லப் பட்டனர்.
ஹர்த்தால் ஒரு நாள் மட்டுமே நடந்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை வருடக்கணக்காக தொடர்ந்தது. இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்டன.
கம்யூனிச நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப் பட்டன. அவை நூலகங்கள், மியூசியங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும், அரசியலே இல்லாத அறிவியல் துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் தடுக்கப் பட்டன.
பாதுகாப்புத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் நேரடியாக பிரதமரிடம் பொறுப்புக் கூறினால் போதும். இனி வருங்காலத்தில், ஹர்த்தால் கலவரங்களை அடக்குவதற்காக ஒரு ரிசேர்வ் படையணி உருவாக்கப் பட்டு, ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது.
1948 – 1956 வரையில், இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாக இருந்தாலும், பெரும்பான்மை சிங்கள உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சாதியப் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள கொவிகம சாதியை சேர்ந்தவர்கள்.
படிக்க :
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
இலங்கையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேன நாயக்கவை தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனநாயக்க பிரதமர் ஆனார். 1953 வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவி விலகினார். அந்த இடத்திற்கு, டட்லியின் மைத்துனர் ஜோன் கொத்தலாவல பிரதமராக வந்தார். முன்பொரு தடவை, கொத்தலாவல தானே முதலாவது பிரதமராக வர விரும்பி இருந்தார்.
ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த ஜோன் கொத்தலாவல ஒரு தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். அவர் பதவியேற்ற பின்னர், வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரம் “தனது பிரதானமான எதிரி கம்யூனிசம்” என்றே அறிவித்திருந்தார். “இந்த நாட்டில் இருந்து கம்யூனிசத்தை முற்றாக அழித்தொழிப்பதே தனது தலையாய கடமை!” என்றும் கூறினார்.
இந்த வானொலி உரைக்கு பின்னர், பிரதமர் கொத்தலாவல ஒரு தடவை, “சிவப்பு சட்டைகளுக்கு எதிராக பச்சை சட்டை அணிந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கப் போவதாகவும்” அறிவித்திருந்தார். ஊடகத்துறையில் கொத்தலாவல விசுவாசிகள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையில் முதல்தடவையாக, அவரது ஆட்சிக் காலத்தில் தான் மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன.
இலங்கையின் மூன்றாவது பிரதமர் ஜோன் கொத்தலாவல ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராக மட்டுமல்லாது ஏகாதிபத்திய விசுவாசியாகவும் இருந்தார். முழுக்க முழுக்க ஐரோப்பிய மயப்பட்டிருந்தார். சிங்கள உழைக்கும் வர்க்க மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தார். இதனால் சிங்கள பௌத்தர்களினதும், மத அடிப்படைவாத பிக்குகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது.
முதலாளிய சார்புக் கட்சியான UNP, இடதுசாரிக் கட்சிகளை மட்டுமே கணக்குத் தீர்க்கப் பட வேண்டிய எதிரிகளாக கருதி வந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான எதிர்ப்புச் சக்தி அதற்குள்ளே உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவில்லை. UNP தன்னை ஒரு லிபரல் கட்சியாக காட்டிக் கொண்டாலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை கொவிகம உயர்சாதியினரின் மேட்டுக்குடிக் கட்சியாக பார்த்தார்கள்.
1951 ல் பண்டாரநாயக்க UNP இல் இருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் அது தன்னை ஒரு சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. அதனால், அடுத்து வந்த தேர்தல்களில் கொவிகம அல்லாத பிற சாதியினரும், குட்டி முதலாளிய, உழைக்கும் வர்க்க சிங்களவர்களும் பெருமளவில் வாக்களித்தனர். இலங்கையின் போர்க்குணாம்சம் மிக்க தொழிலாளர் வர்க்கத்தை, வெகுஜனவாத (Populist) அரசியலுக்குள் இழுத்து, வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததில் பண்டாரநாயக்கவுக்கும் பங்குள்ளது.
பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றியை தொடர்ந்து ட்ராட்ஸ்கிச சமசமாஜக் கட்சியும் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தது. பிற்காலத்தில் குருஷேவிச கம்யூனிச கட்சியும் கூட்டுச் சேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் உள்ளூர் தரகு முதலாளிகள், சிங்களத் தேசியத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைத்து விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகள் இந்த துரோகத்தனத்திற்கு விலைபோனதும், பிற்காலத்தில் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
கலையரசன்
disclaimer

செங்கல் சூளையில் வேகும் தொழிலாளர்களின் வாழ்க்கை !

சேவல் கூட உறங்கும் அதிகாலை நேரம். அந்த சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு காற்றைக் கிழித்துக் கொண்டு புறப்படுகின்றன வாகனங்கள். சிவந்த விழிகள் இன்னும் கொஞ்சம் உறக்கத்திற்கு கெஞ்ச, காது வழி நுழையும் காற்று அவர்களின் உறக்கத்தை கலைத்துப்போடுகிறது. அருகருகே இருக்கும் கிராமத்திலும் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு விடியும்முன் செங்கல் சூளைக்குள் நுழைகின்றன வாகனங்கள்.
காலைக் கடனும், காலை உணவும் விடிவதற்குள் அவசர அவசரமாக முடிக்கப்படுன்றன. செங்கல் உற்பத்தி செய்யும் இயந்திரம் இயக்கப்பட, இயந்திரத்தோடு இயந்திரமாக ஓடி ஓடி வேலை செய்கிறார்கள் தொழிலாளிகள். இடையில் ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமே ஓய்வு, பின்னர் மீண்டும் வேலை.
ஈர மண்ணை இயந்திரத்தில் கொட்டி குறுக்கெலும்பு ஒடிய வேலை செய்து, ஈரமான செங்கல்லை தயாரித்துக் கொடுக்கிறார்கள் அவர்கள். சூரியன் உச்சிக்கு வரும்போது மொத்த உடலும் தளர்ந்து இயந்திரத்தைவிட்டு பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். பின்னர் அதை காயவைத்து சீவி, சூளையில் சுட்டு முழுமையான செங்கல் தயாரிக்கிறார்கள்.
படிக்க :
அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
உலகம் முழுக்க வானுயுர்ந்து நிற்கின்றன கட்டிடங்கள். நாள்தோறும் பல கட்டிடங்கள் முளைத்த வண்ணமுள்ளன. இத்தகைய கட்டுமான தொழிலில் மிகமுக்கியமானது செங்கல். ஆனால், அதை தயாரிக்கும் தொழிலாளிகளோ குடியிருப்பதற்கு லாயிக்கற்ற வகையிலான வீடு என்ற 4 சுவர்களுக்கு மத்தியில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த செங்கலை தயாரிப்பு தொழிலில் அவர்கள் படும் வேதனைகளோ வார்த்தைகளுள் அடங்காதவை.
விவசாயம் பொய்த்துப்போனதால் (அழிக்கப்பட்டதால்) இந்த வேலைக்கு வருகிறார்கள் இத்தொழிலாளிகள். கிட்டத்தட்ட ஒரு இயந்திரத்தில் 10 தொழிலாளிகள் வரை வேலை செய்து ஒரு நாளைக்கு 10,000 கற்கள் உற்பத்தி செய்தால்தான் ஒருவருக்கு ரூ.630 கூலி கிடைக்கும். ஒரு கல்லுக்கு அதை உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு 6.3 பைசாதான் கிடைக்கிறது என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.
ஆனால், ஒரு கல் ரூ.8-க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. பெரிய அளவிலான நட்டம் எதனையும் சூளை முதலாளிகள் சந்திப்பதில்லை. உற்பத்தி செய்த கல் சரியில்லை என்றாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ மறுபடியும் அந்த மண்ணை குழைத்து மீண்டும் செங்கல் தயாரித்து விடுகிறார்கள்.
மழைக்காலத்தில் செங்கல் உற்பத்தி செய்வது நிறுத்தப்படுவதால் தட்டுப்பாடு ஏற்படுவதுபோல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அவ்வேலையில் சேம்பரில் (Chamber)  சேமித்து வைக்கப்பட்ட, ரூ.8-க்கு விற்ற செங்கல் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டு முதலாளிகளுக்கு மேலும் லாபத்தை தருகிறது. மழைக்காலத்தில் செங்கல் கட்டி தங்கக் கட்டியாகிவிடுகிறது முதலாளிகளுக்கு.
ஆனால், தொழிலாளிகள் மழைக்காலங்களில் வேலை இழக்கிறார்கள். கிடைத்தால் கொத்தனார் – சித்தாள் வேலைகளுக்கு செல்கிறார்கள், இல்லையேல் பசியோடு, கடன்பட்டு குடும்பம் நடத்துகிறார்கள்.
சூளை வேலையில் கூலி என்பது முதலாளிகளாக பார்த்துக் கொடுப்பதுதான். அதுவும் பரம ரகசியமாகத்தான் தீர்மானிக்கப்படுகிறது. ரூ.570 கூலி தங்கள் வாழ்க்கை நடத்தபோதாது என்று தொழிலாளிகள் வேலைக்கு வராமல் போனதால்தான் இந்த ரூ.630 கூலியும் முதலாளிகளால் தரப்பட்டிருக்கிறது. அதுவும் சேம்பர்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான சம்பளமும் கிடையாது. முதலாளிகள் மனம் வந்து கொடுப்பதுதான். நாங்கள்தான் போனஸ் தருகிறோமே என்ற முதலாளிகளின் வெற்று வார்த்தைகளை செங்கல் சூளையில் தயாரிக்கப்படும் செங்கலே உடைக்கிறது.
தினமும் தொழிலாளிகள் தங்களது கூலியைத் தாண்டி 100 செங்கல்களையாவது முதலாளிகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்துவிட்டுத்தான் வீட்டிற்குப் போகிறார்கள். அது அன்றைய கூலி கணக்கில் வருவதில்லை. அந்த செங்கல்லின் ஒரு பகுதியைத்தான் ஆண்டிறுதியில் போனஸாக கொடுக்கிறார்கள். முதலாளிகள் ஏதோ தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கொடுப்பதுபோல் பாவனை செய்து கொடுத்து தொழிலாளிகளை நேரடியாக ஏமாற்றுகிறார்கள்.
இயந்திரத்தில் சகதொழிலாளி உயிரிழந்ததை பார்த்த தொழிலாளிகள் உண்டு. இயந்திரத்தில் தலை சிக்கி உள்ளிழுக்கப்பட்டு இடுப்பு வரை நசுங்கி உயிரிழந்தவர்கள் உண்டு. இன்சூரன்ஸ் விசயத்திலும் தொழிலாளிகளை ஏமாற்றுகிறார்கள் முதலாளிகள்.
அடிபட்ட, உயிரிழந்த தொழிலாளிகளின் பெயரில் எந்தவொரு முதலாளியும் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. தனது சேம்பரின் பெயரில் இன்சூரன்ஸ் எடுத்து தொழிலாளிக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து ஏமாற்றிவிட்டு தொழிலாளிகளின் சாவிலும் லாபம் தேடுகின்றனர் சூளை முதலாளிகள்.
இயந்திரத்தை சுற்றி எப்போதும் தண்ணீர் இருக்கும். ஆதலால் மின்சாரம்(ஷாக்) அடிப்பதுவும் உண்டு. அதை சரி செய்வது சற்று செலவு பிடிக்கும் விசயம் எனபதால் பெரும்பாலான முதலாளிகள் அதை சரி செய்வதில்லை. எப்போதும் மண்ணுக்குள் நிற்கும் வேலை என்பதால் வாழும்போதே இந்த தொழிலாளர்களின் உடலை மண் தின்கிறது. எச்சிலை காறித் துப்பும்போது மண்ணும் சேர்ந்து வெளி வருவது இதற்கு ஓர் சான்று. வாழைப்பழம்தான் இதற்கு மருந்து என்று, வேறுவழியின்றி சொல்கிறார்கள் தொழிலாளிகள்.
வாரத்தில் ஆறு நாளும் வேலை செய்ய முடியாதபடிக்கான மிகவும் கடினமான பணிதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அத்தொழிலாளர்களிடம் விவரங்களை திரட்டியபோதே அச்சத்துடன் தயங்கி தயங்கியே பேசுகின்றனர். “பேரு, போட்டோவெல்லாம் வேணாம் சார்” என்று சொல்கின்றனர். தொழிலாளர்கள் எந்தளவுக்கு கொத்தடிமையான வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. ஆனாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தங்களது குடும்பத்திற்காக தொடர்ந்து வேலைக்குப் போகிறார்கள்.
பெண்களின் பணி இன்னும் கடினமானது. சமையல் செய்வதற்காக அதிகாலை 2 மணிக்கே எழுந்துவிடுகிறார்கள். உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். சமையல் முடித்து ஆண்களோடு வேலைக்கு புறப்படுகிறார்கள். இடுப்பு ஒடிய வேலை செய்து வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது, அப்படியே படுத்து விடுகிறார்கள். ஆண் தொழிலாளிகள் தங்களது உடல் வலியை கரைத்துக் கொள்ள குடியை நாடுகிறார்கள், பெண் தொழிலாளிகளோ வலியை சுமந்து கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
லாக்டவுன் காலத்தில் மிகவும் வேதனையான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இத்தொழிலாளிகள். இவ்வளவு நாள் வேலை பார்த்த செங்கல் சூளை முதலாளிகளிடமிருந்து எந்தவொரு உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
கோப்புப்படம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குறிப்பாக ஆள்வார் திருநகரி, சீவலப்பேரி, முத்தலாங்குறிச்சி, வல்லனாடு, தென் திருப்பாறை, ஏரல், குரங்கனி, முக்காணி, புதுமலை, களக்காடு, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கத்தாலம்பாறை ஆகிய பகுதிகளில் அதிகமாக இத்தொழில் நடக்கின்றன. தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை, ஈரோடு, திண்டுக்கல், பழனி, மதுரை, கோவை என தமிழகத்தில் பல ஊர்களில் சூளைகள் பரவலாக இயங்குவதாகவும் அறிய முடிகிறது.
கைகளால் மட்டுமே வேலை செய்து அறுத்து வைக்கப்படும் செங்கல் சூளைகள் கைம்மால் என்றும், இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் வேலைகள் செங்கம்மால் எனவும் இருவகை உண்டு. நிறம் மற்றும் தரத்தைப்பொருத்து செங்கல்லின் விலை தீர்மானிக்கப்படுகிறது.  செங்கம்மால் கல் சாதாரணமாக எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விலைபோகிறது. கைம்மால் கல் நாலு ரூபாயிலிருந்து ஆறு ரூபாய் வரை விலைபோகிறது. தட்டுபாடு சமயத்தில் கல்லின் விலை இன்னும் கூடுகிறது.
கை அறுவையில் ஒரு வாரத்திற்கு 50,000 கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இயந்திரத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு ரவுண்டுக்கு சாதாரணமாக  2,00,000 கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு இயந்திரத்தில் 10,000 கற்கள் வரை உற்பத்தியாகின்றன. இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் கல் பெரிய அளவு சேதாரமின்றி வெளி வருகிறது.
கல் சீவும் தொழிலாளிகளின் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சூளையில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். கிட்டத்தட்ட கொத்தடிமை வாழ்வுக்கு சமமானதாக இருக்கின்றது. 1 லட்சம், 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டும், அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டும் வேலை செய்கிறார்கள். எதாவது கேட்டால், “என் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே போ!” என முதலாளிகளால் மிரட்டப்படுகிறார்கள். இவ்வழியாக தொழிலாளி அடிமையாக்கப்படுகிறார்கள்.
படிக்க :
அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
இந்தியாவில் கொத்தடிமைமுறை 1976-ம் ஆண்டு சட்டப்படி ஒழிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், நவீன முறையில் அது தொடரத்தான் செய்கிறது. வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடு தங்க வைக்கப்பட்டு குறைந்த கூலிக்கு கொத்தடிமை முறையில்தான் வேலை வாங்கப்படுகிறார்கள்.
செங்கல் சூளை தொழிலாளிகளைப் பொருத்தவரை குறைந்த கூலிக்கு தங்களது அதிகப்படியான உழைப்பை கொடுக்கின்றனர். உரிமைகளை கேட்கவும் வழியற்றுக் கிடக்கின்றனர். சூளை முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்து தொழிலாளிகளை சுரண்டுகின்றனர். சுரண்டப்படும் தொழிலாளிகள் சங்கமாக இல்லை. அப்படிப்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுவிடாதபடி அவர்கள் அச்சுறுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அவர்கள் சங்கமாக ஒருங்கிணயாத வரையில், இந்த சுரண்டலை எதிரத்து கேள்வி கேட்கவோ, போராடவோ முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. சங்கமாக அவர்களை ஒன்றுதிரட்டுவது தொழிற்சங்கங்களின் தலையாய பணி !!

ராஜன்

மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் | பு.ஜ.தொ.மு

நிர்வாகத்தின் அடாவடித்தனம் – தொழிற்சங்கத்தின் துரோகம் :
இரட்டை நுகத்தடிக்கு எதிரான மணலி SRF தொழிலாளர்களது போராட்டம் வெல்லட்டும் !
சென்னை மணலியில் இருக்கும் SRF நிறுவனத்தின் தொழிலாளர்கள் 09.8.2021 அன்று ஆலைவாயில் முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் 6 மணிநேரம் நீடித்த இந்த போராட்டத்தை போலீசு, நிர்வாகம், தொழிற்சங்கம் ஆகிய 3 தரப்பும் சேர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையாக தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் (ஏப்ரல்-2020) மீன்வலை தயாரிக்கும் பிரிவை (IYB) எவ்வித முன்னறிவிப்புமின்றி மூடுவதாகவும், குவாலியர் போன்ற தொலைதூர ஆலைகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் நிர்வாகம் சுமார் 140 தொழிலாளர்களுக்கு கடிதம் அனுப்பியது. கடுமையான ஊரடங்கு நிலவிய காலகட்டத்திலும் அன்றைய பொதுச்சங்க தலைமை (பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் தலைமையிலான நி.கு) தொழிலாளர் துறையை அணுகி தொழிற்தாவா எழுப்பியது.
படிக்க :
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு
அடுத்தடுத்த மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாய இடமாற்றத்துக்கு தடையாணை வாங்கியது. செப்டம்பர் 2020 வரை மாதாந்திர ஊதியமும், அக்-நவம்பரில் இடைக்கால பராமரிப்பு தொகையும் வாங்கிக் கொடுத்தது. தொழிற்தகராறு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கு ஆகிய இரு முனைகளிலும் தடுப்பரண் செய்யப்பட்டது.
ஜனவரி 2021-ல் நடந்த பொதுத்தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தலில் தி.மு.க-வின் தொழிற்சங்க பிரமுகர் திரு.ராஜகாந்தம், ம.தி.மு.க-வின் தொழிற்சங்க அமைப்பின் (எம்.எல்.எப்) பொதுச்செயலாளர் திரு.அந்திரிதாஸ் தலைமையிலான அணி, மேற்படி IYB தொழிலாளர்களது பிரச்சினையை எவ்வித போராட்டமும், வழக்குமின்றி தீர்க்கப்போவதாக வாக்குறுதி அளித்து தேர்தல் களம் கண்டது. தோழர் விஜயகுமார் தலைமையில் அந்த தேர்தலை பு.ஜ.தொ.மு எதிர்கொண்டது. தலைவர் பதவிக்கு தோழர் விஜயகுமார், திரு.ராஜகாந்தம் ஆகிய இருவரும் சம ஓட்டுகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் ராஜகாந்தம் தலைவராக தேர்வானார். செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு அணியிலிருந்து திரு.பி.ஆர்.சங்கர் இரண்டாவது முறையாக தேர்வானார். (பு.ஜ.தொ.மு பிளவின் போது இவர் சீர்குலைவுவாதிகளின் கட்டுப்பாட்டுக்கு போய்விட்டார்)
புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டவுடன் நிர்வாகத்துடன் நடந்த அறிமுகக் கூட்டத்தில், எல்லா பிரச்சினைகளையும் எவ்வித போராட்டங்களுமின்றி பேச்சுவார்த்தையில் தீர்க்கப்போவதாக திரு.ராஜகாந்தம் சவடால் அடித்தார். இரண்டாவது முறையாக தேர்வான செயலாளர் திரு.சங்கர் ஒருபடி மேலே போய், கடந்த முறை தலைமையில் இருந்தவர்கள் (தோழர் விஜயகுமார்) சொல்படிதான் நடந்தேன் என்று ஆள்காட்டி வேலை செய்து நிர்வாகத்துக்கு சமாதானச் செய்தியனுப்பினார்.
நாட்கள் ஓடின. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த தொழிற்தாவா மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெறுவதாக நிர்வாகத்துடன், புதிய தொழிற்சங்கத் தலைமை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. சங்கத்தின் செயலாளர் கையெழுத்திடாமல், தலைவர் ராஜகாந்தம் கையெழுத்து போட்ட ஜனநாயகவிரோத செயலை வெளிப்படையாக கண்டித்து போராட இந்த ஆலையை தமது கோட்டை என்று சொல்லிக் கொண்ட சீர்குலைவுவாதிகள் பதுங்கிக் கொண்டனர். இன்னொரு கேலிக்கூத்தாக, தொழிற்தகராறு எழுப்பினாலோ, வாபஸ் பெற்றாலோ பொதுக்குழுவில் முடிவெடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியைக்கூட திரு.ராஜகாந்தம், திரு.அந்திரிதாஸ், திரு.பி.ஆர்.சங்கர் அடங்கிய நிர்வாகக்குழு காற்றில் பறக்கவிட்டது.
இதற்கிடையில் தி.மு.க ஆட்சியிலும் அமர்ந்தது. இனி பாலாறும், தேனாறும் ஓடும் என சவடால் அடித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார், திரு.ராஜகாந்தம். நிர்வாகமோ, 10 முதல் 30 வருடங்கள் வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு அற்பத்தொகையை இழப்பீடாகத் தருவதாக சொன்னது. வேலை தர மறுத்துவிட்டது. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான நீம், அப்ரண்டீஸ் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது.
இதை எல்லாம் கேள்வி கேட்டு கலகம் செய்ய வேண்டிய சங்கமோ, தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் இழப்பீடு வாங்கினால் அதை தடுக்க மாட்டோம் என்று அறிக்கை விட்டு, தொழிலாளர்களை கைகழுவி விட்டது. இந்நிலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேறுவழியின்றி இழப்பீடு வாங்கிக் கொண்டனர். அப்படி இழப்பீடு வாங்கும்போது கூட சொந்த விருப்பத்தின்பேரில் ராஜினாமா செய்வதாக எழுதி வாங்கிக் கொண்டது. நிர்வாகத்தின் இந்த நயவஞ்சகத்தைக்கூட தொழிற்சங்கம் எதிர்க்க திராணியற்று கிடந்தது. நிர்வாகமோ, ஒருபடி மேலே ஏறித்தாக்கத் தொடங்கியது. சங்க நிர்வாகிகள் பம்மத் தொடங்கினர்.
நிர்வாகத்துடனான முதல் பேச்சுவார்த்தையில், போராட்டத்தைவிட பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக சவடால் அடித்த திரு.ராஜகாந்தம் பல்டியடித்தார். தொழிலாளர்கள் போராடத் தயாராக இல்லை என தொழிலாளர்கள் மீது பழியைப் போட்டார். செயலாளர் பி.ஆர்.சங்கரோ தலைவர் ராஜகாந்தத்தின் ராஜதந்திர ஆலோசனைப்படி தொழிலாளர் அமைச்சர், உள்ளூர் தி.முக. எம்.எல்.ஏ என ஓடிக் கொண்டிருந்தார், (கடந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஓட்டுகேட்ட சீர்குலைவுவாதிகளது பாடம் நல்ல பலனைத் தந்தது) இறுதியில் தொழிலாளர் அமைச்சர் உள்ளிட்ட அனைவரது பரிந்துரைகளும் மீண்டும் தொழிலாளர் துறைக்கே வந்து சேர்ந்தன.
எந்த அலுவலகத்தில் அவசர, அவசரமாக தொழிற்தாவாக்களை வாபஸ் வாங்கினார்களோ அதே அலுவலகத்துக்கு நடையாய் நடக்கின்றனர். சட்டப் போராட்டத்தின் மூலம் விஜயகுமார் தங்களை தவறாக வழிநடத்திவிட்டார் என்று நிர்வாகத்திடம் மண்டியிட்டவர்கள், இப்போது சட்டத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறனர். இந்த சூழலில், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் ஆகிய இரு தரப்பின் மீதும் நம்பிக்கை இழந்த பல தொழிலாளர்கள், இழப்பீடு வாங்கினாலும், போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் கணிசமான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். கடந்த ஆண்டு எம்மை வழிநடத்திய தோழர் விஜயகுமார் தலைமை மீண்டும் வேண்டும் என்று குரலெழுப்புகின்றனர். ஆலையில் வேலை செய்து கொண்டிருக்கும் எஞ்சிய தொழிலாளர்களும் அந்த குரலையே எதிரொலிக்கின்றனர்.
நிர்வாகத்தின் அடாவடித்தனமும், அடக்குமுறையும் கண்ணுக்குத் தெரிந்த தாக்குதல்கள். ஆனால், தொழிற்சங்கத்தின் துரோகம் முதுகில் குத்தும் கயமைத்தனம். இதை எதிர்த்து IYB தொழிலாளர்கள் 09.8.2021 அன்று நடத்திய போராட்டம், எதிர்வரும் காலங்களில் நடத்தப்போகும் போராட்டங்கள் ஆகியவற்றுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
பு.ஜ.தொ.மு.,
சென்னை-திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள் .
தொடர்புக்கு ; 9444831578

பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்

ஞ்சா விற்றால், லாரி கடத்தினால் பாஜக-வின் மாவட்டத் தலைவராகலாம் ;
பணமோசடி, பாலியல் குற்ற புரிந்தால் பாஜக-வின் மாநிலத் தலைவராகலாம் ;
நாட்டையே கூறுபோட்டு விற்றால் பாஜக-வின்தேசியத் தலைவராகலாம் !
செய்தி 1 : சேலம் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் அன்புச்செல்வன் என்பவர் லாரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி 2 : சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பாஜக வர்த்தக அணி பொருளாளராக உள்ளவர் பிரகாஷ். 1.5 டன் கிலோ பான்பராக்கை பதுக்கி வைத்தற்காக கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
செய்தி 3 : பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் தனது வீட்டின் பூஜை  அறையில் ‘ஆகம’ விதிப்படி அமர்ந்து ஒரு பெண்ணிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பாஜக-வின் உள்ளடி வேலைகளின் காரணமாக வெளியே வந்திருக்கிறது. அன்னார் பாஜகவில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

மு. துரை

 

பாஜக எதிர்ப்பாளர்களின் முகநூல் குழுக்களை முடக்கிய முகநூல் நிர்வாகம் !

‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற பெயரிலான, சுமார் 33,000 உறுப்பினர்களைக் கொண்ட பிஜேபி எதிர்ப்பு முகநூல் குழுவை ஃபேஸ்புக் நிர்வாகம் முடக்கியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்த பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு மீண்டும் தடை நீக்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாரதீய ஜனதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற முகநூல் குழுவை ஆகஸ்ட் 18 இரவு பேஸ்புக் நிறுவனம் முடக்கியது. அந்தக் குழு 33,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்ததக்கது.
இந்தக் குழு, ‘பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான வங்காளம்’ என்ற அமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. கடும் போட்டி நிலவிய அந்த மாநிலத் தேர்தலை முன்னிட்டு  பிஜேபி-க்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்கியதில் அந்த முகநூல் குழு முக்கியப் பங்கு வகித்தது என்று பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
படிக்க :
டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
மேற்கு வங்கத் தேர்தலின் முடிவில், பாஜக தோற்றது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
இந்த குழு உறுப்பினர்களின் அந்த முன்முயற்சியில், குறிப்பாக திரிணாமுல் காங்கிரசிற்கோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கோ ஆதரவு தருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் பிரச்சார வடிவங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மற்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை உள்ளடக்கியது. அதில் அவர்கள் பாஜக அல்லாத வேறு எந்த கட்சிக்காவது வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டனர்.
ஆகஸ்ட் 18 (புதன்கிழமை) அன்று அந்த முகநூல் குழு முடக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று பேஸ்புக்கிலிருந்து பதில் பெற முயன்றனர். அவர்கள் மீண்டும் ஃபேஸ்புக்கில் ஒரு புதிய ஹேஷ்டேக் பிரச்சாரத்தைத் தொடங்கினர், முடக்கப்பட்ட அந்தக் குழுவை மீண்டும் இயக்குமாறு கோரினர். ஆகஸ்ட் 20 மதியம், இறுதியாக மீண்டும் குழு செயல்பட ஃபேஸ்புக் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது.
பாஜக மற்றும் அதன் அரசியலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் முகநூல் குழு ஃபேஸ்புக் நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, கணிசமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட இதேபோன்ற ஒரு குழு  நான்கு முறை இத்தகைய தடை நடவடிக்கையை எதிர்கொண்டது.
“எங்களுக்கு எந்த முன் எச்சரிக்கையும் அல்லது அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. குழு வெறுமனே முடக்கப்பட்டது. அவர்களின் சமூக தர வரையறைகளை  மீறியதற்காக குழு முடக்கப்பட்டது என்ற பொதுவான பதிலை நாங்கள் பெற்றோம். ஆனால், எந்த சமூகத் தர வரையறைகளை மீறியது அல்லது குழுவில் எந்த பதிவுகள் அதை மீறியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை” என்கிறார் ‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற குழுவின் நிர்வாகிகளில் ஒருவரும், ஆராய்ச்சியாளரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான கஸ்தூரி பாசு.
அந்த பிரச்சார இயக்கத்தின் முகநூல் பக்கத்தை (Facebook Page) 17,000-க்கும்  அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அந்தப் பக்கம் முழுமையாக செயலிழக்கச் செய்யப்படவில்லையெனினும், அந்த முகநூல் பக்கம், ”ஒரு வழி” தகவல்தொடர்புகளை மட்டுமே அனுமதிக்கிறது. ‘நிர்வாகிகள்’ மட்டுமே இதில் இடுகையிட முடியும் – ஆனால், ஒரு முகநூல் குழுவில் ஒவ்வொரு உறுப்பினரும் இடுகையிடலாம். பெரும்பாலும், விவாதங்களுக்கு முகநூல் ‘பக்கத்தை’ விட முகநூல் ‘குழுவானது’ (Facebook Group) மிகவும் பயனுள்ள வழிமுறையாக உள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்புக் குரல்களை தீவிரமாகவும் முறையாகவும் முடக்குகிறது என்பது இப்போது வெளிப்படையாகிவிட்டது. முகநூல் இந்தியாவின் கொள்கைப் பிரிவு தலைவர் அன்கி தாஸின் பாஜக ஆதரவு நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்டது, இதற்குப் சிறந்த நடைமுறை உதாரணத்தை அளித்துள்ளது” என்கிறார் பாசு.
பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பைச் சேர்ந்தவர்களின் மதவாத வெறுப்பை ஊக்குவிக்கும் இடுகைகள் பேஸ்புக் நிறுவனத்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதேசமயம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பாசு கருதுகிறார்.
மேலும், “பேஸ்புக் சமூகத் தர வரையறைகள் சரியாக என்ன சொல்கின்றன? அவர்கள் கூறும் தரம் என்பது என்ன ? அவை பிஜேபி கூறும் தரங்களா? ஏனெனில் “பேஸ்புக் சமூகத் தர வரையறைகளை” மீறிச் செல்லும் வெறுக்கத்தக்க, கீழ்த்தரமான, வன்முறையான, வகுப்புவாத வலதுசாரி உள்ளடக்கங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனத்திற்கு அது ஒரு இழிவான விளம்பரமாகவே இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
மற்றொரு முகநூல் குழு, அதே கதை
பேஸ்புக் நிறுவனம் முன்பு ‘NRC வேண்டாம் – இயக்கம்’ என்ற மற்றொரு பெரிய ‘குழுவை’ நான்கு முறை முடக்கியிருக்கிறது, என்று வங்காளத்தில் உள்ள பிஜேபி – எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். தற்போது அந்த குழுவில் 1.71 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் – நான்காவது சந்தர்ப்பத்தில், அது ஒரு மாதத்திற்கு முடக்கப்பட்டது. பிஜேபி-யின் உத்தரவின் பேரில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் செயல்படுவதாக, அந்த குழுவில் உள்ளவர்கள், கருதுகின்றனர்.
மகத்தான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் கருத்துக்களை உருவாக்கி மக்களை விழிப்படையச் செய்யும், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஒரு மாதத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. முகநூல் அதிகாரிகள் யாரை மகிழ்விக்க முயற்சி செய்கிறார்கள்? அவர்கள் பிஜேபி-யுடன் கைகோர்க்கவில்லையா? என்று வினவுகிறார், வங்கத்தின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் (ஏ.பி.டி.ஆர்) துணைத் தலைவர் ரஞ்சித் சுர்.
மேற்கத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பேச்சு சுதந்திரத்தின் மேற்கத்திய ஜனநாயக மாதிரிகளின் தரத்தை கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற கார்ப்பரேட் தளங்கள், லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன என்றார்.
மேற்கத்திய உலகத்திற்கு வெளியே, இந்த கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாட்டின் ஆளும் கட்சியுடன் இணைகிறார்கள். ஆட்சியாளர்கள் பாசிஸ்டுகள் அல்லது மத அடிப்படைவாத சக்திகள் என்பதை பற்றியெல்லாம் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக் குரல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி அமைப்புகளின் பெயர்களை அல்லது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை மற்றும் அரசாங்கக் கொள்கைகளை நேரடியாக எதிர்ப்பவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்” என்று சுர் கூறுகிறார்.
படிக்க :
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
‘பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்’ பிரச்சார இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் அனிகேத் சட்டோபாத்யாய், பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தங்களின் பிரச்சாரத்திற்கு பயப்படுவதை பார்த்து பெருமைப்படுவதாகக் கூறுகிறார்.
 “பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தல்கள் இல்லாமல் பேஸ்புக் அதிகாரிகள் முகநூல் பக்கத்தை முடக்கியதாக நினைக்கிறீர்களா? பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் எங்கள் பிரச்சாரத்தை பார்த்து இந்த அளவிற்கு பயப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் சட்டோபாத்யாய்.
தடை விலக்கிகொள்ளப்பட்டு குழு மீண்டும் செயல்படுத்தப்பட்ட பிறகு, பிரச்சாரத்தின் உறுப்பினரான தொழிற்சங்கவாதி குஷால் தேப்நாத் முகநூலில் பெங்காளி மொழியில் ஒரு பதிவை எழுதினார். ஆங்கிலத்தில் அதன் பொருள் ‘இது எங்கள் போராட்டத்தின் விளைவு !’. இந்த முகநூல் பக்க தடைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலான எதிர்ப்பு வலுத்தது. பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் கதிகலங்கி தடையை திரும்ப பெற்றுக் கொண்டனர். நாங்கள் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

கட்டுரையாளர் : ஸ்னிக்தெண்டு பட்டாச்சார்யா
தமிழாக்கம் : முத்துகுமார்
செய்தி ஆதாரம் : The Wire

ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்

ரு நாட்டையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களின் உற்பத்தி முறையை அதாவது அவர்களின் பொருளாதார வாழ்வை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மார்க்சியத்தின் அரிச்சுவடி ஆகும்.
அதை விடுத்து ஒரு மக்கள் கூட்டத்தை மதவெறியர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் சித்தரிப்பது அறிவியல் கண்ணோட்டம் ஆகாது.
ஆப்கானிஸ்தான் ஒரு நீண்ட நெடுங்கால வரலாறை கொண்டிருந்தபோதும் அது வளர்ச்சியடையாத பழங்குடி மக்களை பிரதானமாக கொண்ட நாடு.
ஆப்கனில் விவசாய நிலம் ஏறத்தாழ எட்டு லட்சம் மில்லியன் கெக்டேராகும். ஆனால், மேய்ச்சல் நிலம் 30 மில்லியன் கெக்டேராகும்.
பெரும்பான்மை மக்கள் நிலவுடமை உற்பத்தி முறைக்கே மாறாத சமுதாயம் அது. எனவே அங்கு மதம் தான் அம்மக்களை வழி நடத்தும் அமைப்பாக இருக்கும்.
பழங்குடிகள் அல்லது நிலவுடமை சமூகங்களை வழிநடத்தும் அமைப்பாக எப்போதும் மதங்கள் இருக்கும். கடந்தகால ஐரோப்பாவை போல் மதங்களே ஆட்சி செய்யும் அல்லது இந்தியாவின் நிலவுடமை காலத்தின் நிலவுடமை அரசனின் அக்கம் பக்கமாக மதம் இருக்கும்.
படிக்க :
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
எனவே, ஒரு சமுதாயப் பொருளாதார வாழ்வை புரிந்து கொள்ளாமல் மதத்தை தனித்து புரிந்து கொள்வது என்பது அம்பேத்கரிய பெரியாரிய கருத்தாகும். அது மார்க்சியம் ஆகாது.
வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கிறிஸ்துவத்தையும் வளர்ச்சியடையாத நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் மதங்களையும் ஒப்பிட்டு நோக்குவது அறியாமை ஆகும். இந்த அறியாமை கிறித்துவத்தை முற்போக்கானதாகவும் மற்ற மதங்களை பிற்போக்கானதாகவும் கருதுகிறது.
ஐரோப்பாவில் நிலவுடமை முறை இருந்த காலத்தில் கிபி 1500-களுக்கு முன்பு கிறிஸ்தவம் எப்படி இருந்தது என பார்க்க வேண்டும். அப்போது புரியும் அது எவ்வளவு கொடூரமான பிற்போக்கான கொலைகளையும் கொள்ளைகளையும் உலகின் பெரும் நிலப்பரப்புக்களில் நிகழ்த்தியதை அறியலாம்.
அது பெண்களையும் முற்போக்காளர்களையும் தீயிட்டு கொளுத்தி ‘முற்போக்கு’ பாத்திரம் ஆற்றியதை புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இஸ்லாமோ கிறித்தவமோ இந்து மதமோ. இவற்றை தனித்தனியாக பார்க்காமல் சமுதாய வளர்ச்சியோடு இணைத்து பார்த்தல் வேண்டும்.
பொதுவாக மேய்ச்சல் குடி சமுதாயங்கள் ஆண்களை சார்ந்ததாக இருப்பதால் இயல்பாகவே அது ஆணாதிக்க சமுதாயமாக இருக்கும். அங்கு பெண்களே ஒரு அடிமை பொருள்தான். எனவேதான் ஆப்கனிலும் இந்நிலை.
அதுபோல் மேய்ச்சல் தொழிலுக்கும், வேளாண்மை தொழிலுக்கும் நவீன முறையிலான கல்வி தேவை அற்றது. முதலாளிய உற்பத்தி முறை எங்கு தனது உற்பத்தியை தொடங்குகிறதோ அங்கிருந்துதான் நவீன கல்வியின் தேவை உருவாகிறது.
எனவே ஏகாதிபத்தியங்கள் ஆப்கனில் நுழைந்த பின்புதான் நவீன கல்விக்கான தேவையும் அது சார்ந்த கல்விக் கூடங்களும் உதயமாகின்றன.
ஆனால், பல நூற்றாண்டுகள் ஏகாதிபத்தியங்கள் ஆப்கனை ஆண்டபோதும் குறிப்பிட்டு கூறும்படி, அங்கு எந்த வளர்ச்சியையும் காண முடியவில்லை. மதவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு வெறியேற்றி அவர்களை ஆயுத பாணியாக்கியதுதான் ஏகாதிபத்தியங்களின் சாதனை ஆகும்.
ஆப்கனின் யுத்த பிரபுக்களும் பழங்குடிகளின் தலைவர்களும் பழைய பிற்போக்கான உற்பத்தி முறை சார்ந்தவர்களாக இருப்பதால் இயல்பாகவே ஆணாதிக்க வெறியர்களாக கல்வி குறித்த அடிப்படை அறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்கள் தங்கள் பழங்குடி அல்லது நிலவுடமை முறையின் தந்தை ஆதிக்க சமுதாய ஏற்றதாழ்வுகளை உடைப்பதை அவர்கள் விரும்பாத காரணத்தால் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்.
இன்னொரு புறம் ஆப்கனின் யுத்தப்பிரபுக்களும் பழங்குடி தலைவர்களில் பெரும்பான்மையினரும் நீண்ட காலமாக ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கி பழகி ஏகாதிபத்தியங்களால் நஞ்சூட்டப்பட்டுள்ளனர்.
இப்போது இவர்களுக்கு ஏகாதிபத்தியங்களின் பணம் தேவையாக இருக்கிறது அதேவேளை ஏகாதிபத்தியங்களால் தமது சமுக கட்டுமானம் சிதைவதையும் அவர்களால் அங்கீகரிக்க முடியவில்லை.
எனவே, ஆப்கன் யுத்த பிரபுக்கள், ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், தங்களின் பழங்குடி மரபிலான வாழ்வுக்கும் இடையில் ஊசலாடுகிறார்கள். ஆனால், வெல்லப்போவது என்னவோ ஏகாதிபத்தியங்களின் மூலதனமே.
அங்கு இப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் சமுதாய சூழல் இல்லை. அப்படி உருவானாலும் அதுவும் நிலவுடமை சார்ந்த ஒரு அடக்குமுறை அமைப்பாகவேதான் இருக்கும்.
அங்கு இருக்கும் எம்.எல் அமைப்புகளும் ரசியாவால் உருவாக்கப்பட்ட இன்னொரு முஜாகிதின் அமைப்புதான்.
இப்போது நாம் சொல்லக் கூடிய ஒரே தீர்வு அந்த பின்தங்கிய சமுதாயத்தை அங்கீகரித்து அதன் சொந்த முயற்சியால் போராடி வளர்ந்து வர அனுமதிப்பது மட்டுமே.
ஏகாதிபத்தியங்களான சீனமோ, அமெரிக்காவோ ரசியாவோ அம்மக்களுக்கு எதையும் கொடுக்காது; இருப்பதையும் பறித்துக் கொள்ளும்.
எனவே, ஆப்கனின் தலைவிதியை ஆப்கன் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் ஆயிரம் வழிகளில் பின்தங்கியவர்களாக பிற்போக்காளர்களாக இருந்தாலும் அவர்களின் சொந்த முயற்சியால்தான் அவர்கள் முன்னேறி வரமுடியும். அதுதான் தீர்வும் கூட.
ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.
படிக்க :
“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !
தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?
ஏகாதிபத்தியங்களே நீங்கள் பல நூற்றாண்டுக்கும் மேல் ஆப்கனை ஆண்டு அதை சீரழித்ததும் மதவெறியர்களை ஊட்டி வளர்த்து அவர்கள் கையில் ஆப்கன் மக்களை ஒப்படைத்ததுமே உங்களின் சாதனை என்பதை உலகம் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் மிகவும் வெறுக்கத்தக்க பிற்போக்காளர்கள் நீங்கள் மட்டுமே.
நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக அறிவாளிகளாக இருந்தாலும் நமது எண்ணங்களை ஒரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்க முயல்வது மிகவும் ஈனத்தனமான வெறுக்கத்தக்க செயலாகும். அது சர்வாதிகாரமே ஆகும்.
முகநூலில் : R Chandrasekaran
disclaimer

Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !

அன்பார்ந்த ஐ.டி. ஊழியர்களே,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் Work From Home என்ற பெயரில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறோம். எந்த தொழிற்துறையில் வேலை செய்பவருக்கும் கிடைக்காத – ஏன் நமது ஐ.டி. துறையிலேயே மிகவும் சீனியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த – வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் இந்த வசதி, நம் அனைவருக்கும் கிடைத்த போது, “ஆகா..! இனி குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கலாம்” என நினைத்து அகமகிழ்ந்தோம்.
ஆனால் நாம் நினைத்தது போன்று நம்மால் குடும்பத்தினருடன் சிலமணி நேரமாவது கழிக்க முடிந்ததா? இல்லவே இல்லை, பெற்றோர் வீட்டிலிருந்தும் தன்னோடு விளையாட, பாடம் சொல்லிக் கொடுக்க வரவில்லை என்று நம் வீட்டு குழந்தைகளின் ஏக்கம் தீரவில்லை, மாறாக அதிகரித்து விட்டது. ஒரே வீட்டில் அக்கம்பக்கமாக உட்கார்ந்து இருந்தபோதிலும் வெவ்வேறு கிரகத்தில் இருப்பது போல் தனித்திருக்கும் பிள்ளைகளை எண்ணி வருந்தும் பெற்றோர்கள் குரலைத்தான் கேட்க முடிந்தது. என்னில் பாதி என ஸ்டேட்டஸ் வைத்த வாழ்க்கைத் துணையுடன் செலவிட்ட நேரம் பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. இதைப்பற்றியெல்லாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம். அலுவலகம் சென்று வேலை செய்த போது சராசரியாக 10 மணிநேரம் என்றிருந்த நமது வேலை நேரம் இன்று வரைமுறை இன்றி 18 முதல் 20 மணிநேரம் என்று அதிகரித்துள்ளது. அலுவலகத்தில் இருந்தபோதாவது தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை என நடுவில் பிரேக் எடுத்துக்கொள்வோம். ஆனால் இன்றோ, நமது தனிப்பட்ட வேலைக்கும், அலுவலக வேலைக்குமான எல்லைக்கோடு மிகவும் மெல்லியதாக மாறிவிட்டது. டீ,காபி குடிப்பது முதல் உணவருந்துவது வரை அனைத்தும் முன்புதான் செய்தாக வேண்டும். நமது இவ்வாறு தினப்பொழுதின் மொத்தத்தையும் முதலாளிக்காக தானம் கொடுத்துவருகிறோம்.
படிக்க :
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
இவ்வாறு எல்லாவற்றையும் கொடுத்து, முதுகு வலி, மன அழுத்தம், உடல் பருமன், பார்வைக் கோளாரு என நோய்களை ‘பரிசாக’ வாங்கிக் கொண்டிருக்கிறோம். வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்திய ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் நடத்திய ஆய்விலிருந்து கூறுகிறது. இதனால் இதய நோயும் நம்மை தாக்க துவங்கியுள்ளது. இதுபோன்ற தாக்குதலால் நிலைகுலைந்த இந்திய ஐ.டி. ஊழியர்கள் குறித்த கட்டுரைகள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இதிலிருந்து மீண்டுவிட தியானம், யோகா, உடற்பயிற்சி என பல பரிந்துரைகள் நமக்கு தினமும் வழங்கப்படுகின்றன. இவை தான் நமக்கு தீர்வா?
நோய்க்கான காரணத்தை நாம் புரிந்துகொண்டால்தான் நோயிலிருந்து நம்மால் வெளிவர முடியும். நாம் ஐ.டி. நிறுவனங்களின் லாபவெறி என்ற சுருக்கு மடிவலையில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் நமது இன்றைய நிலைக்கான காரணம். கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ருபாய் சந்தை மதிப்புள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள், தமது லாபத்திற்காக அரசையே வளைக்கும் வல்லமை கொண்டவை.
கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கும் போது ஐ.டி. துறை மட்டும் பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. முன்பு இருந்ததைவிட உற்பத்தித்திறன் (productivity), தற்போது அதிகரித்துள்ளது. வேலைகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படுகின்றன. எனவே தங்களுக்குச் சாதகமாக உள்ள இந்த முறையை நிரந்தரமாக வைத்துக்கொள்ள ஐ.டி. நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
2025-ம் ஆண்டுக்குள் 75% டி.சி.எஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டி.சி.எஸ் மட்டுமல்ல விப்ரோ, இன்போசிஸ், சி.டி.எஸ் என அனைத்து நிறுவனங்களும் இந்த முறையை நிரந்தரமாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கென்று அலுவலக கட்டமைப்பு முழுவதையும் இந்த நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. பல நிறுவனங்கள் நகரின் மத்தியில் அதிக வாடகையில் இயங்கி வந்த தங்களது அலுவலகங்கள் பலவற்றை மூடிவிட்டன.
வீட்டிலிருந்து வேலை செய்வது மட்டுமல்ல ஸ்விக்கி, ஜொமோட்டோ போல பகுதி நேர புரோகிராமர்களைக் (freelance programmers) கொண்டுவரவும் இவர்கள் திட்டமிடுகின்றனர். ஐ.டி. துறையில் கிக் பொருளாதாரத்தைப் புகுத்துவது குறித்து விப்ரோ தனது இணையதளத்திலேயே பேசுகிறது. வேலையிழப்பு என்ற கத்தி நம்தலைமீது எப்போது வேண்டுமானாலும் இறங்க காத்திருக்கிறது.
நமக்கான பாதுகாப்பை இந்த அரசாவது உத்தரவாதப்படுத்துமா என்றால் அதுவும் இல்லை. மோடி தலைமையிலான கார்ப்பரேட் விசுவாச அரசு, தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்து, நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சட்டபூர்வ உரிமைகளையும் மொத்தமாகப் மொத்தமாக பறித்துவிட்டு நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக மாற்றுவதில் குறியாக இருக்கிறது. இந்த தாக்குதலானது எந்த தொழிலாளியையும் விட்டு வைக்கபோவதில்லை, ஐ. டி. ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..
இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கூட்டணி நம்மை மட்டுமல்ல நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைச் சங்கிலி கொண்டு பிணைக்கிறது. விவசாயச் சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என விவசாயிகள், மாணவர்கள், சிறு,குறு முதலாளிகள் என அனைவரையும் சித்திரவதை செய்கிறது. கொரோனா பெருந்தொற்று கார்ப்பரேட்களது வேலையைச் சுலபமாக்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்றானது எதிர்காலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பிரகாசமானதாகவும், சாமானிய மக்களுக்கு இருண்டதாகவும் மாற்றியுள்ளது. இந்தக் காவி-கார்ப்பரேட் கூட்டணியைத் தொடரவிட்டால் நமக்கான எதிர்காலமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க :
கொரோனாவிலும் குறையாத இலாபம் ! அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு !
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
அது எல்லாம் சரிதான், வீட்டுக் கடன், வாகனக் கடன், பள்ளிக் கட்டணம் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பிறகு இவற்றையெல்லாம் எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும், என நினைக்கக்கூடும்.
ஐ.டி. ஊழியர்களாக நாம் நாடுமுழுவதும் ஏறத்தாழ 50 லட்சம்பேராக உள்ளோம். ஆனால், நம்மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்க்க வேண்டும் என்கிற உணர்வோ, நம்மால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையோ இல்லை.
தொழிலாளர்களது ஒற்றுமை மாபெரும் சர்வாதிகார அரசுகளையே தூக்கியெறிந்துள்ளது என்பதுதான் வரலாறு.. ஐ.டி. ஊழியர்களான நாம், இந்தியத் தொழிற்துறையின் முன்னோடித் தொழிலாளர்கள். கொரோனா பெருந்தொற்றிலும் மருத்துவம், வங்கித் துறை, அரசு நிர்வாகம் என அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றால் அதற்குப் பின்னால் ஐ.டி. ஊழியர்களான நமது உழைப்பு உள்ளது. தொழில்நுட்பத்தின் கதவுகளை நம் நாட்டு மக்களுக்காகத் திறந்து விடுபவர்கள் நாம். நமது ஒற்றுமையும் அநீதிக்கு எதிரான போராட்டமும் நமக்கான விடிவாக மட்டுமல்ல இந்த சமூகத்தின் விடிவாகவும் மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனவே, கார்ப்பரேட்-களின் லாபவெறிக்காக நம்மீது திணிக்கப்படும் பண்டைய எகிப்திய சிறைக்கூடத்தை நினைவுபடுத்தும் வேலை முறையையும், நமது சொந்த நலன்களோடு, நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது நலன்களையும் இணைத்து ஒரு முன்னணி சக்தியாக மாறுவோம். அதன் முதல்கட்டமாக புரட்சிக்கர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு.-வில் அணி திரள்வோம்.

இங்ஙனம்.
புஜதொமு (ஐ. டி. ஊழியர்கள் பிரிவு)
தொடர்புக்கு : 9003009641.

டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு

ஆக்சில்ஸ் இந்தியா - பாடி பிரிவு
ட்டோமொபைல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் டி.வி.எஸ் நிறுவனம், அதன் துவக்க காலம் முதலாகவே தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கோடு நடந்து கொண்டிருப்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. தொழிற்சங்கம் அமைத்தே தீருவோம் என்கிற முடிவை டி.வி.எஸ் தொழிலாளர்கள் எடுத்தபோது நிர்வாகம் முந்திக்கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடியாள்படையாக இருந்த காங்கிரஸ் கட்சி சார்புடைய ஐ.என்.டி.யு.சி சங்கத்தை டி.வி.எஸ் குழுமம் முழுவதும் நிர்வாகமே திணித்தது.
ஐ.என்.டி.யு.சி க்கு ஏகபோக அங்கீகரித்ததோடு, வேறு சங்கங்கள் கட்டப்பட்டால், அந்த மாற்று சங்கத்தின் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, முன்னணியாளர்களது வேலைபறிப்பும் சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. தொழிலாளர்களும் வேறுவழியின்றி ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களாக சகிப்போடு நீடித்து வந்தனர்.
டி.வி.எஸ் குழுமத்தின் ஒரு பிரிவான ஆக்சில்ஸ் தயாரிக்கும் ஆலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இயங்கி வந்தது. இங்கும் வழக்கம் போல ஐ.என்.டி.யு.சி தான் நிர்வாகத்தின் அடியாள்படையாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 2010-ல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆக்சில்ஸ் இந்தியா லிமிடெட் கிளைச்சங்கம் துவங்கப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டவுடன் முதலாளியை விட அதிகமாக ஆவேசப்பட்டது, ஐ.என்.டி.யு.சி தலைமைதான்.
படிக்க :
இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
இந்த துரோகிகள் துணையோடு வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு காரணங்களைச் சொல்லி 20- க்கும் மேற்பட்ட சங்க முன்னணியாளர்கள் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். வேலைநீக்கத்துக்கு எதிராக தீரமாகவும், ஊசலாட்டமும் இல்லாமல் போராடியதன் விளைவாக தோழர்கள் ஏழுமலையான், பர்கத் அலி ஆகிய இருவரும் 01.7.2021 முதல் ( 11 ஆண்டுகளுக்குப் பிறகு ) பணியில் சேர்ந்தார்கள். இது முன்னுதாரணமிக்க வெற்றியாக இருக்கிறது. இது வேலைநீக்கத்தில் இருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது. ஐ.என்.டி.யு.சி சங்க உறுப்பினர்களே மனமுவந்து இந்த வெற்றிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சங்க வேறுபாடு கடந்து ஒத்த சிந்தனை கொண்டவர்களாக தொழிலாளர்கள் பக்குவப்படும்போது டி.வி.எஸ் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட நிர்வாகமும், ஐ.என்.டி.யு.சி போன்ற அடிவருடிக் கும்பலும் சும்மா இருப்பார்களா? உடனடியாக தங்கள் சதி வேலைகளை துவங்கிவிட்டனர்.
ஆக்சில்ஸ் இந்தியா – பாடி பிரிவு
கனரக வாகனங்களுக்கான ஆக்சில்ஸ் தயாரிக்கும் இந்த ஆலையின் இன்னொரு பிரிவு திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. வழக்கம் போல இங்கும் ஐ.என்.டி.யு.சி தான் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக ஆட்டம்போட்டு வருகிறது. செய்யாறு, திருபெரும்புதூர் ஆகிய இரண்டிலும் ஆக்சில்ஸ் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனாலும், செய்யாறில் உள்ள ஆலையில் பு.ஜ.தொ.மு கிளை எத்தனை இழப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து வருகிறது.
ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்களில் பலரும் பு.ஜ.தொ.மு- வை வெளிப்படையாகவும், மனம் திறந்தும் பாராட்டுகின்றனர்; ஒன்றாகக் கலக்கும் தருணத்தை நோக்கிச் செல்கின்றனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து அனுமதித்தால் டி.வி.எஸ் நிறுவன தொழிற்சங்கம்  முழுமைக்கும் பு.ஜ.தொ.மு தலைமை தாங்கும் சூழல் வந்துவிடும் என்கிற அச்சத்தில் நரித்தனத்தில் இறங்கியுள்ளது.
செய்யாறு ஆலைக்கு உற்பத்தி ஆர்டர்கள் குறைந்து விட்டதால், 2009-க்குப் பிறகு வேலையில் சேர்ந்தவர்களை திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணியிட மாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 2009-க்குப் பிறகு பணியில் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களில் 90% பேர் ஐ.என்.டி.யு.சி உறுப்பினர்கள் தான். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்களில் கணிசமானவர்களை கட்டாயமாக, கொத்துக்கொத்தான எண்ணிக்கையில் இடமாற்றம் செய்வது தீய உள்நோக்கம் கொண்டது.
இந்த 2009 பேட்ச் தொழிலாளர்களை 5 ஆண்டுகள் பணி நிறைவடையும் தருணத்தில் வேலைநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்த போது, அங்கீகரிக்கப்பட்ட சங்கமான INTUC கைகழுவி விட்டது. அவர்களுக்காக பு.ஜ.தொ.மு போராடி, வேலையை பாதுகாத்தது. வேலைப்பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களை நிர்வாகமே INTUC சங்கத்தில் சேர்த்துவிட்டது. இவ்வாறாக, தொழிலாளர்களது உரிமைக்காக பு.ஜ.தொ.மு போராடுவதும், அதை முடக்க INTUC கும்பலை நிர்வாகம் கோடாரியாக பயன்படுத்தி வந்ததும் தான் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனாலும், பு.ஜ.தொ.மு சோர்ந்து விடவில்லை.

படிக்க :
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்

லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?

இந்த சூழலில் தான் நிர்வாகம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கட்டாய பணியிட மாற்றத்தை திணித்துள்ளது. பு.ஜ.தொ.மு செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது. இதுவரை ஐ.என்.டி.யு.சி தலைமைக்கு அடங்கிக் கிடந்த கணிசமான தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர். இவ்வாறு வெளிப்படையாக பு.ஜ.தொ.மு -வுக்கு ஆதரவு பெருகி வந்தாலும் ஐ.என்.டி.யு.சி தலைமையால் இனிமேல் உருட்டல்- மிரட்டல் வேலைகளை செய்ய முடியாது. தொழிலாளர்கள் ஒன்றுபட்ட இயக்கமாக திரள்வதற்குள் அவர்களை பிளவுபடுத்தியாக வேண்டும். வழக்கம் போல கூடுதல் சலுகை கொடுத்து ஐ.என்.டி.யு.உறுப்பினர்களது வாயை அடைப்பது இனிமேல் சாத்தியமில்லை.
இந்த சூழலில் , தானே செல்லப்பிள்ளைகளாக வளர்த்து வந்த ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்களை திருப்பெரும்புதூருக்கு கட்டாய இடமாற்றம் செய்வதால் அங்கிருக்கும்.ஐ.என்.டி.யு.சி -யை நிர்வாகத்தின் விருப்பத்துக்கேற்ப ஆட்டிப்படைப்பதோடு பு.ஜ.தொ.மு செல்வாக்கை செய்யாறு மட்டத்திலேயே நசுக்கிவிட முடியும். காலப்போக்கில் ஐ.என்.டி.யு.சி சங்கத்தை செல்லாக்காசாக்கி விடலாம். ( இதற்கான வேலைகளை திருப்பெரும்புதூர் ஆலையில் இப்போதே துவங்கியுள்ளனர் )
இந்த தீயநோக்கத்துடன் டி.வி.எஸ் ஆக்சில்ஸ் நிர்வாகம் தொழிலாளர்களை ஆளுக்கொரு திசையில் வீசியெறிந்துள்ளது. தானே உருவாக்கி உரமிட்டு வளர்த்த ஐ.என்.டி.யு.சி சங்கம் கூட இனி தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க உரிமை பற்றியோ, தொழிலார்களை நிர்வாகம் பந்தாடுவது பற்றியோ கருங்காலி தொழிற்சங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் இத்தகைய குள்ளநரித்தனத்தை அனுமதிக்காது என்பதை முதலாளி வர்க்கத்துக்கு உணர்த்துவோம்.

பிடிஎஃப் கோப்பாக இந்த பிரசுரத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்


இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்கள்
(மாநில ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைக்கப்பட்டது)
தொடர்புக்கு : 94448 31578

தாலிபான்களின் கையில் ஆப்கானின் எதிர்காலம் ?

ப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அது தொடர்பான விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன.
அமெரிக்க விமானம் ஒன்று தனது ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் இருந்து கிளம்புகிறது. அதைச் சுற்றி பெருங்கூட்டம் விமானத்தோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஓடுகிறார்கள். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து விமானத்திற்கு வெளியே இருக்கும் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மேலே இருந்து இரண்டு பேர் கீழே விழுந்து உடல் சிதறி இறந்து போன காணொலி மனதை பதைக்கச் செய்கிறது.
“அமெரிக்கா எங்களை கைவிட்டுவிட்டது” ” உலக நாடுகள் எங்களை கைவிட்டு விட்டன ” போன்ற குரல்கள் ஆப்கானியர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கின்றன. இனி என்ன ஆகுமோ நம்முடைய எதிர்காலம் என்பது நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்கானிய மக்கள். அமெரிக்காவை நம்பினால் என்ன கதி கிடைக்கும் என்பதை ஆப்கான் மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.
“தாலிபான்கள் எவ்வளவு கொடுமையானவர்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மக்கள் எப்படியெல்லாம் ஓடுகிறார்கள் பாருங்கள்! என்று கூறி கொண்டிருப்பவர்களில் பலர் உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவ அடக்குமுறை ஆட்சியை நியாயப் படுத்திக் கொண்டிருப்பவர்கள்; அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பவர்களே. உத்திரபிரதேசத்தில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதைத்தான் அன்று தாலிபான்களும் ஆப்கானிஸ்தானில் செய்தனர். இனிமேலும் செய்யப்போகின்றனர்.

படிக்க:
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !

மத அடிப்படைவாதிகளால் தாலிபான்களின் ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் பேரழிவுகள் எல்லாமே உண்மைதான். ஆனால், அமெரிக்கா நடத்திய 20 ஆண்டுகால பொம்மை ஆட்சியில், சிறு சிறு சீர்திருத்தங்களைத் தவிர மக்களின் வாழ்நிலை பெரியதாக எதுவும் மாறவில்லை. மாறாக வறுமையில் அதிகமாகவே பாதிக்கப் பட்டிருந்தார்கள் மக்கள்.
தாலிபான் ஆட்சி எப்படி இருக்கும் என்று யாராவது கேட்டால், இந்தியாவில் மோடி நடத்தும் ஆட்சியை தைரியமாக நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆப்கானை இதற்கு முன்னர் ஆட்சி செய்த முகமது கனி ஆட்சியை காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடலாம்;  2001-க்கு முந்தைய தாலிபான்களின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக முதலமைச்சராக மோடியின் குஜராத் ஆட்சியை கூறலாம். அவ்வளவுதான்.
சங்கிகளும், பல நடுநிலைவாதிகளும் இந்தியாவில் அனைத்து உரிமைகளும் கிடைத்து கொண்டிருப்பதைப் போல ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை பற்றி நமக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஏழாண்டுகளில் பசுவை கடத்தினார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி நடுரோட்டில் பட்டப் பகலில் நடத்தப்பட்ட எக்கச்சக்கமான கும்பல் படுகொலைகளையும் கும்பல் தாக்குதல்களையும் வட இந்தியாவின் பசு வளைய மாநிலங்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசியவர்களை நடுரோட்டில் கட்டி வைத்து கல்லால் அடித்துக் கொன்றதுதான் 2001-ம் ஆண்டுக்கு முந்தைய தாலிபான் ஆட்சி. இந்தியாவில் நடக்கும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே நடைபெற்ற தாலிபான் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ?
சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த கயவனை விடுவிக்கக் கோரி ஊர்வலம் போன இந்திய தாலிபான் கும்பல் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ்.
சிறு வயது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் தந்தையை பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லி அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள். புர்கா போடாத பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்ததுதான் தாலிபான்களின் முந்தைய வரலாறு.
காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார்கள் – குற்றவாளிகளுக்கு தேசியக்கொடியோடு ஆதரவு ஊர்வலம் நடத்தினார்கள். குஜராத் கலவரத்தில் 8 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொன்று அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்தார்கள். தாலிபான்கள் தமது ஆட்சிக் காலத்தில் பல இடங்களில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். பெண்களின் கல்வியை மறுத்திருக்கிறார்கள்.
தாலிபான்கள் செய்துவந்த கொடூரங்களையே வேறு வடிவத்தில் இந்துத்துவவாதிகள் அன்றாடம் செய்து வருவதை அன்றாடம் கடந்து போகும்  இந்தியாதான், தாலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தான் இருப்பது குறித்து வருத்தப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தர் சிலையை இடித்த தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என்றால், இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதியை கரசேவை நடத்தி இடித்த கிரிமினல்கள் மட்டும் எப்படி தேசபக்தர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் ?
000
ஒரு கும்பல் தாலிபான் அச்சுறுத்தல்களைக் காட்டி, இந்தியாவில் இந்துத்துவ ஆதரவையும், முசுலீம் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டிருக்க, மற்றொரு கும்பலோ, தாலிபான்களுக்கு புனிதர் பட்டம் சூட்ட முயற்சிக்கிறது.
இந்த முறை ஆப்கானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர், “பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும் படிப்பதற்கும் எவ்வித இடையூறும் செய்ய மாட்டோம். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு பெண்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடலாம். அந்நிய நாட்டு நிறுவனங்களையோ பொருட்களையோ தாக்க மாட்டோம் ” என்று கூறியிருக்கிறார்.
எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவு செய்கிறார் “தாலிபான் என்பது கெட்ட வார்த்தை அல்ல; தாலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருள் ” என்கிறார்.
வேறு சிலரோ, “தாலிபான்கள் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள் ” , “தாலிபான்களை பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுகிறது, அவர்களை அங்கீகரிக்க வேண்டும்” என்று பேசுகின்றனர்.

படிக்க :
♦ “போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

♦ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !

சமீபத்தில் தாலிபான்களிடம் பின்வரும் கேள்வியை ஒரு பெண் செய்தியாளர் எழுப்புகிறார். “அரசாங்க தலைமைப் பதவிக்கு பெண்கள் தெரிவு செய்யப்படுவார்களா?”
இந்தக் கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்திருத்திருக்கிறார்கள் தாலிபான்கள். பிறகு சுதாரித்துக்கொண்டு இஸ்லாமிற்கு உட்பட்ட வகையில் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், மத சிறுபான்மையினர், பெண்களுக்கு வரையரறுக்கப்பட்ட சுதந்திரம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
தாலிபான்களிடன் ‘முதிர்ச்சியை’ கண்ட அனைவரும், “முஸ்லிம்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதையும், தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் பெண்களின் நிலை குறித்துப் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து ‘முதிர்ச்சி’யைக் காட்டுகிறது என்று நம்பினால், தாலிபான்கள் சொல்வதையும் அவர்கள் நம்பட்டும்.
தாலிபான்கள் பெண்களின் கல்விக்கும் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள் இல்லை என்று நம்புவதற்கு இதுவரை எந்த அடிப்படையும் இல்லை. இசுலாமிய அடிப்படைவாதத்தை தலையில் வைத்து ஆட்சி செய்யும் கும்பலாகவே தாலிபான் இருந்துவருகிறது.
ஆர்.எஸ்.எஸ். தமது இந்துத்துவ அடிப்படைவாதக் கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டே, இந்தியாவை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக மாற்ற பாஜக மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறதோ, அதே போலத் தான் தாலிபான்களும். தமது இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கைகளை வைத்துக் கொண்டே ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு ஆப்கானைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தாலிபான்களுடன் சீனா பேச்சுவார்த்தை
இந்தியாவில் எப்படி, ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் எழாத வகையில் இந்துத்துவ அடிப்படைவாத சித்தாந்தமான பார்ப்பனியம் மக்களை ஒடுக்கி வைத்திருக்கிறதோ, அதே போலத்தான் ஆப்கானிலும் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்கும் வகையில் தாலிபான்களின் இசுலாமிய அடிப்படைவாதம் முக்கியப் பங்காற்றும்.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை நாடுகள் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா தாலிபான்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது.
இப்படி ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க மாட்டோம் என்ற வகையில் அனைத்து நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதன் வெளிப்பாடுதான், சீனாவுடனான சில்க் சாலைக்கான ஒப்புதலும், அந்நிய மூலதனங்களுக்கு பாதுகாப்பு என்ற தாலிபான்களின் அறிவிப்பும்.
சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள ஆப்கான் புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகும். அதனால்தான் ஆப்கானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல ஏகாதிபத்தியங்கள் இதற்கு முன்னால் முயற்சித்துள்ளன.
ஆனால் துரதிர்ஸ்டவசமான ஒன்று என்னவெனில், எந்த நாடும் இதுவரை ஆப்கானை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர iஇதுவரை முடியவில்லை. பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கடுமையான பின்னடைவை சந்தித்து வெளியேறியிருக்கின்றன.
ஆப்கான் மக்களின் ஜனநாயக வளர்ச்சியினை கருவறுத்த ஏகாதிபத்திய வரலாறு!
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஆப்கான், புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களுக்குப் பின்னரும் பிரிட்டிஷ் வசமே பெரும்பான்மையான ஆப்கான் பகுதிகள் இருந்தன. 1919-ல் அரசர் `அமனுல்லா கான்’ பதவியேற்ற உடன் சோவியத் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டினர், இதன் விளைவாகவே ஆப்கான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறியது.
1921 முதல் 1929 வரையிலான காலகட்டத்தில்,பொருளாதார உட்கட்டமைப்புத் திட்டங்கள், நீர் ஆதாரத் திட்டங்கள், மின் நிலையங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு என சோவியத் யூனியன் ஆப்கானுக்கு எண்ணற்ற பல உதவிகளைச் செய்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் சோவியத் யூனிய்னுக்கு சென்று படித்தனர். காபூலில் இருந்த அறிவியல் மற்றும் கலச்சார மையமானது சோவியத் யூனியனின் அன்புப் பரிசாகும். அந்த மையம் அமெரிக்க ஆதரவு முஜாகிதீன்களால் பின்னர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அக் காலகட்டம், பழமைவாதத்தின் பிடியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி ஆப்கான் பயணித்ததற்கான முதல் படி. அதனை உடைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.
ஆப்கானில் இருந்த பழமைவாதிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களைத் தூண்டிவிட்டது,  பிரிட்டிஷ் அரசு. 1929-க்குப்பின்னர் பிற்போக்கு சக்திகளின் நெருக்கடியால் அமனுல்லா கான் பதவி விலகினார். இதனால் பாதிக்கப்பட்ட ஆப்கான் – சோவியத் உறவு, சிறிது காலத்திற்குப் பின்னர் மீண்டும் படிப்படியாக வளர்ந்தது.
ஆப்கானிஸ்தானில் பெரும் பொறியிலாளர்கள், புவியிலாளர்களை உருவாக்கிய காபூல் பல்தொழில்நுட்பப் பயிலகம் (பாலிடெக்னிக்) 1960-களில் சோவியத் ரசியாவின் உதவியுடன் கட்டப்பட்டதாகும். 1920-க்கு பின்னால், சோவியத் யூனியனுடனான உறவுகளால் மேம்பட்டிருந்த ஆப்கான் அரசியலின் தொடர்ச்சியாகவே அங்கு மக்கள் ஜனநாயகக் கட்சி உருவானது.
1973-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் வலதுசாரியினர் மற்றும் அமெரிக்காவால் 40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட ஜாகீர் ஷா ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவி இறக்கப்பட்டார். அச்சமயத்தில் சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த ரசியாவின் ஆதரவு பெற்ற பிடிபி கட்சி ஆட்சியில் இருக்கும் போது, கல்வி, மருத்துவம், சுகாதாரம், இருப்பிடம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியது. மிகவும் ஒடுக்கப்பட்ட இனங்கள், மத சிறுபான்மையினருக்கு சம உரிமையும் பழமைவாதப்பிடியில் இருந்து மீள பெண்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்பட்டது.
1980 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் ஆப்கானுக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கு தான் கண்டதை விவரிக்கிறார். ”பெண்கள் கூட்டுறவு தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் முதல்முறையாக தங்களுடைய கௌரவமான வாழ்விற்காக சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வயது வந்த ஆண்களும் பெண்களும் ஒரு சேரப் படித்துக் கொண்டிருந்தார்கள். தொழில்முறையாளர்களாக பெண்கள் பலர் அரசின் உச்சபட்ச பொறுப்பிலிருந்தார்கள். குறிப்பாக அக்காலக்கட்டத்தில் கல்வி அமைச்சரே ஒரு பெண்ணாக இருந்தார்.”
“மிகவும் வறிய நிலைமையில் இருக்கும் குடும்பங்கள் கூட மருத்துவரை பார்க்கவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தார்கள் . நிலச் சீர்திருத்த முறை அங்கேயே தொடங்கியிருந்தது. ஆர்வமுடன் விவசாயிகள் கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்யத் தொடங்கியிருந்தார்கள். விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. உத்திரவாதமான வாழ்க்கையை நோக்கி மக்கள் பயணம் செய்ய தொடங்கியிருந்தார்கள். பொருளாதாரத்திலும் சமூக நீதியிலும் ஆப்கானிஸ்தான் வெகுவாக முன்னேறி இருந்தது. மருத்துவம், சுரங்கம், வேளாண்மை, கல்வியின் என அனைத்திலும் முன்னேறி வந்து இருந்தது”

படிக்க :
♦ மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !

இந்தக் காலகட்டத்தில் தான், கிராமப்புறங்களில் முஜாஹிதீன்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவோடு வளர்ந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்கா பழமைவாத நிலவுடைமையாளர்களுடன் இணைந்து முஜாகிதீன்களை வளர்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களுடன் முஜாஹிதீன்கள் களத்தில் இருந்தார்கள். 1970-களின் பிற்பகுதியில் முஜாஹிதீன்களின் தாக்குதல்கள் அதிகமாகவே, அதைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சமூக ஏகாதிபத்தியமாகிப் போயிருந்த சோவியத் ரசியா தனது இராணுவத்தை இறக்கியது. 1977-ல் தொடங்கிய அந்தப் போர், 1989-ல் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை இழந்து ரசியா வெளியேறியதோடு முடிவுக்கு வந்தது.
அதை கம்யூனிசத்தின் தோல்வி என்று வல்லரசு நாடுகள் கொண்டாடின. அது அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. அப்போது மேற்கத்திய ஊடகங்களில் மிகப்பெரிய போராளியாக பின்லேடன் வர்ணிக்கப்பட்டார். இப்போது போலவே அப்போதும் தனது வேலை முடித்தவுடன் அமெரிக்கா சென்றுவிட்டது.
1992-ம் ஆண்டு சமூக ஏகாதிபத்திய ரசியாவின் ஆசிபெற்ற அதிபர் நச்யிபுல்லா வீழ்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து முஜாகிதீன்களில் உள்ள பல்வேறு உட்பிரிவுகளுக்கிடையே போர்கள் நடைபெற உச்சகட்டமாக 1994-ம் ஆண்டு 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காபுலில் கொலை செய்யப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் எழுச்சி பெற்ற தலிபான் அமைப்பு 1996-ல் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியது.
தாலிபான் 2.0
1996 முதல் 2001 வரையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் இருந்த தலிபான்கள், பெண்கள் வேலைக்குச் செல்லவும் பணியில் இருக்கவும் தடை விதித்தனர். மேலும், ஒரு ஆண் பாதுகாவலர் இல்லாமல் வெளியே வரமுடியாத வகையில் அவர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டனர்.
அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அதற்கெதிராக பேசுபவர்கள் எழுதுபவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர். சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள் முற்றிலும் நசுக்கப்பட்டு வழிபாட்டுத்தலங்கள் நொறுக்கப்பட்டன. என்ன, இன்றைய இந்தியாவை நினைவுபடுத்துகிறதா இந்தச் சம்பவங்கள்? பிற்போக்குவாத, மத அடிப்படைவாதக் கும்பல்களின் ஆட்சியில் இவை அனைத்தும் பொதுவான அடிப்படையாகும்.
பொது இடத்தில் மரண தண்டனை மற்றும் கசையடி தண்டனைகள் ஆகியவை நடைமுறையில் இருந்தன. மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. இஸ்லாத்தின் கீழ் விரோதமாக பார்க்கப்பட்ட கலாச்சார கலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
2001 அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட பின்லேடனை பாதுகாத்தார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி, அமெரிக்கா ஆப்கான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அந்தப் போர் நீடித்தது.
இந்த காலகட்டத்தில் ஆப்கானில் தனக்கேற்ற பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. தாலிபான்கள் மட்டுமல்ல பல்வேறு பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த பல போராளிகள் அமெரிக்காவின் நவீன காலனியாதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போரிட்டனர்.
தங்களால் உருவாக்கப்பட்ட தாலிபான்களை தங்களால் ஒழிக்கவே முடியாது என்ற நிலைமையிலேயே வேறுவழியின்றி ராணுவத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. தங்கள் மூலதனத்திற்கு எவ்வித ஊறும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்று வெளியேறியிருக்கிறது அமெரிக்கா.
ரஷ்யாவை வீழ்த்துவதற்காக பெரும் காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் ஆப்கான் மக்களை கொண்டு போய் தள்ளி விட்ட வேலையை அமெரிக்கா தான் செய்தது. எந்தக் கும்பலிடமிருந்து ‘கொடுங்கோல்’ ஆட்சியைப் பறித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக வருவதாகச் சொன்னதோ, அந்தக் காட்டுமிராண்டிக் கும்பலிடமே, பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை ஒப்படைத்திருக்கிறது.
ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதும், ஆப்கான் மக்களை உய்விப்பதும் தான் தமது முதல் கடமை என்று ஆக்கிரமிப்பின் போது பொய்ச் சவடால் அடித்த அமெரிக்கா, தான் உருவாக்கி வளர்த்த தாலிபான் கும்பலிடமே சரணடைந்து, “ஆப்கானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல” என்ற உண்மையை வேறு வழியே இல்லாமல் ஒத்துக் கொள்ள வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
தாலிபான்களைப் பொறுத்தவரையில் அந்நிய நாட்டினர் யாரும் பயப்பட வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றனர். இந்தியா தாம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளனர். அந்நிய நாட்டு மக்களுக்கு தங்கள் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
சவுதியை போன்று பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு உட்பட்டு மத அடிப்படைவாதத்தை மேற்கொள்வதற்கு தலிபான்கள் முடிவு செய்திருப்பதைத்தான் தாலிபான்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளும் அவர்கள் தற்போது வெளியிடும் அறிவிப்புகளும் காட்டுகின்றன.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?

♦ அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்

பன்னாட்டு ஏகபோக மூலதனத்தை அனுமதிக்காத பட்சத்தில் மீண்டும் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலில் உள்நாட்டுப் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் தாலிபான்கள் அறிவர். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்றாலும் கூட கார்ப்பரேட் ஆசி இல்லாமல் நடக்காது என்பதை அவர்களுக்கு பல்வேறு சுற்றுகளின் மூலம் பல நாட்டு அனுபவங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
ரசியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா என அன்னிய வல்லூறுகளின் பசிக்கு மீண்டும் மீண்டும் ஆப்கானை இரையாக்குவதற்கு தயாராகியிருக்கிறது தாலிபான் கும்பல். இதுதான் உண்மையில் தாலிபான்கள் பெற்ற முதிர்ச்சி.
1990-களின் நடுப்பகுதி வரையில் ‘சுதேசி’ எனப் பேசித் திரிந்த ஆர்.எஸ்.எஸ். / சங்க பரிவாரக் கும்பல், மறுகாலனியாக்கச் சூழலுக்கு ஏற்றவகையில் தனது சுதேசி வேடத்தை களைந்தெறிந்துவிட்டு, வாஜ்பாய் ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இந்தியாவை விருந்து வைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக் கொண்ட இந்தக் கும்பல், மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்குத் தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இதைப் போலத்தான், 1996-2001 காலகட்டத்தில் மத அடிப்படைவாதத்தையும் அபின் பொருளாதாரத்தையுமே நம்பியிருந்த தாலிபான் கும்பல், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு தகுந்தவாறு தம்மை தகவமைத்துக் கொண்டது.
அமெரிக்காவின் படைகள் இருந்த வரையில், ஏகாதிபத்தியங்களுக்கு தொண்டூழியம் செய்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் முகமது கனி, தால்பான்கள் முற்றுகையிட்டதும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துக் கொண்டு தஜிகிஸ்தான் வழியாக தப்பி ஓடிவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் 20 ஆண்டுகால அமெரிக்க பொம்மை ஆட்சியின் லட்சணம்.
மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல் என்ற வகையில் தாலிபானுக்கும் முகமது கனிக்கும் வித்தியாசம் ஒருபோதும் இல்லை. ஒரே வித்தியாசம் மத அடிப்படைவாதத்தை தாலிபான் கும்பல் உயர்த்திப் பிடிப்பதுதான்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை மோடி தீவிரமாக அமல்படுத்தி கொண்டிருப்பது போல, ஆப்கானிஸ்தானில் கார்ப்பரேட் – இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை தாலிபான்கள் தீவிரமாக அமல்படுத்துவதை விரைவில் எதிர்பார்க்கலாம். அதைத் தான் அவர்களது சமீபத்திய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
தங்களது மூலதனத்திற்கு பாதிப்பில்லாத வரையில் எவ்வளவு பிற்போக்குத் தனத்தையும் ஆதரிக்க தயங்க மாட்டார்கள் ஏகாதிபத்தியவாதிகள். குஜராத்தின் நரவேட்டை நாயகனை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்த அமெரிக்கா, அதே மோடி பிரதமராவதற்கான வாய்ப்பிருப்பது தெரிந்ததும், புனிதர் பட்டம் கொடுத்து தனது நாட்டிற்குள் அனுமதித்துக் கொண்டதல்லவா?
மூலதனத்துக்குச் சேவை செய்யும் பட்சத்தில் இனி தாலிபான்களுக்கும் அந்தப் புனிதர் பட்டத்தைக் கொடுக்க உலக முதலாளித்துவம் தயாராகிவிட்டது !!

மருது
செய்தி ஆதாரம் :
People’s World

சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் ந. அம்பிகாபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி || அனைவரும் வருக !

க்கள் அதிகாரம் சீர்காழி பகுதித் தோழர் அம்பிகாபதி, கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதியன்று (27/06/2021) இயற்கை எய்தினார். 37 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் வர்க்க எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் தோழர் அம்பிகாபதி.

சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராகவும், பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராகவும் பல ஆண்டுகள் இருந்து வந்தார். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.

அவரது புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாள் – நேரம் : 22.08.2021, ஞாயிறு, மாலை 4:30 மணி
இடம் : பத்மாவதி திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம், சீர்காழி

தலைமை : தோழர். வி.ஸ்டாலின்
வரவேற்புரை : தோழர். முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்

நினைவேந்தல் உரை :

திரு எம்.பன்னீர் செல்வம் M.A., B.L., சட்ட மன்ற உறுப்பினர், சீர்காழி
தோழர் M.செல்லப்பன், CPI ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் K.அசோகன் CPIM ஒன்றிய செயலாளர், சீர்காழி
தோழர் N.குணசேகரன் மாவட்ட செயலாளர், CPI.ML (விடுதலை)
திரு O.M.A. முசாஹுதீன், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் மண்டல செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர் கோ.நீதிவளவன் மாநில துணை செயலாளர், வி.சி.கட்சி
தோழர் ப.கோபாலகிருஷ்ணன் நீதிபதி ஓய்வு, சீர்காழி
திரு சாமி காமராஜ், நிறுவனர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், சீர்காழி தோழர் பெரியய்யா தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு தோழர் இராமலிங்கம் ஆசிரியர் (ஓய்வு)
தோழர் தெ.மகேசு மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலை கழகம்,
தோழர் முத்து.அன்பழகன் மாவட்ட செயலாளர், மா.பெ.பொ.க. சீர்காழி
Er. இரா.கல்யாணசுந்தரம் M.E., P.hD.,
பேராசிரியர் முரளிதரன் மாவட்ட தலைவர், தமிழர் தேசிய முன்னனி
தோழர் க.மா.இரணியன் மாவட்ட செயலாளர், தமிழ் தேச மக்கள் முன்னணி
திரு ந. பரமசிவம் B.A., சென்னை வழக்கறிஞர்,
S.P. நெடுஞ்செழியன், M.A., B.L.,
திரு R. தங்க வேல், முதல்வர், ச.மு.இ.மே.நி.பள்ளி, சீர்காழி
தோழர் ஜீவா, உடையூர்
தோழர் திலிபன், சமூக செயற்பாட்டாளர்
திரு சிவக்குமார், தி.மு.க, சீர்காழி
தோழர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
டாக்டர் P.முத்துக்குமார், M.D., குமார் மருத்துவமனை, சீர்காழி
திரு. இமயவரம்பன், ஒருங்கிணைப்பாளர், காவேரி படுகை பாதுகாப்பு இயக்கம் தோழர் சம்பூகன், கும்பகோணம்
தோழர் சுப்பு. மகேசு, தமிழக அமைப்பாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் ம. குணசேகரன், மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்
தோழர் ம. சந்திரசேகரன், சீர்காழி ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம்
தோழர் கோ. நடராஜன், தமிழ்த் தேசிய பேரியக்கம்
தோழர் பரசுராமன், மாவட்ட தலைவர், த.பெ.தி.க
தோழர் அ. நேதாஜி, ஊராட்சி மன்ற தலைவர், புளியந்துறை
தோழர் விடுதலையாளன், மாவட்ட செயலாளர், தமிழர் உரிமை இயக்கம்
தோழர் குணசேகரன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ)
தோழர் கென்னடி, மக்கள் போராட்ட மையம்
தோழர் இராமலிங்கம், மக்கள் அதிகாரம், கடலூர்
தோழர் செந்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர் மருது, செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தோழர் அம்பிகாபதி நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! அனைவரும் வாரீர் !!


இவண்
தோழர் ந.அம்பிகாபதி நினைவேந்தல் குழு – சீர்காழி.
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
செல்: 9791286994