Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 203

பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !

திறமையானவர்களுக்கு பத்ம விருது வழங்க வேண்டும்; அதற்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஜூலை 11-ம் தேதி மோடி டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

♦ மொத்த நாட்டையும் ஏழே ஆண்டில் திவாலாக்கும் அளவிற்கு இங்கு திறமைசாலி  யார்?
♦ கங்கையைப் புனிதப்படுத்துவேன் என்று கூறி கோவிட் பிணங்களை மிதக்கவிட்டு அழகு பார்த்த சாதனையாளர் யார்  ?
♦ GDP-யை உயர்த்துவதாகச் செல்லி நம்பவைத்து, கேஸ், டீசல், பெட்ரோல் விலையை அதிகரிக்கும் திறன்மிக்கவர் யார்?

இத்தனை திறமையையும் அந்தத் தாடிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு வெளியே  ‘எளிமையாக’ வாழும் மோடிஜி மட்டுமே அனைத்து பத்ம விருதுகளையும் பெறத் தகுதியானவர்.

கருத்துப்படம்


கருத்துப்படம் : மு.துரை

தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை

தோழர் திசை கர்ணன் படத்திறப்பு !

தோழரின் படத்திறப்பு நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்வாக தோழர் திசை கர்ணனின்  உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

“அமைப்பில் தோழர்கள் வந்து இணைவது பல வழிகளில் நடக்கிறது உதாரணத்திற்கு தொழிற்சங்கத்தில் பாதுகாப்பு என சிலர் சேர்வார்கள்; பின்பு அரசியலையும் ஏற்றுக் கொண்டு செயல்படுவார்கள்; ஆனால், மக்களின் நலனுக்காக சொந்த வாழ்க்கையை விட்டு விட்டு வருபவர்கள் சிலர்; அதில் தோழர் திசை கர்ணன் ஒருவர். அமைப்பு வேலை பார்ப்பதற்குதான் பார்த்து வந்த சொசைட்டி வேலை தடையாக இருந்ததால் அதை தூக்கிப் போட்டுவிட்டு வந்தவர்.

இந்தப் பகுதியில் அமைப்பு செல்வாக்கடைய முன்னின்று உழைத்தவர்களில் தோழர் திசை கர்ணனுக்கு முக்கியப் பங்குண்டு. பல்வேறு நாடகங்களாகவும் பாடல்களாகவும் மக்களுக்கான போராட்டங்களின் மூலமாகவும் அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். தோழரின் இறப்பு மிகவும் கடினமானது. தோழர் விட்டுச்சென்ற இலட்சியத்தை எடுத்துச் செல்வோம்” என்று தோழர் குருசாமி தனது தலைமை உரையை முடித்தார்.

படிக்க :
♦ உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்
♦ தோழர் அம்பிகாபதி இறுதி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் திசை கர்ணனின் 40 ஆண்டுகால புரட்சிகர இயக்கத்தில் செயல்பாடு; மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மறைந்த தோழர் சம்புகன், தோழர் அம்பிகாபதி ஆகியவர்களை நினைவு கூர்ந்தார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மூத்த தோழர் கதிரவன். பின்பு அவர் பேசும்போது, “தோழர் திசை கர்ணன் பலமுறை சிறை சென்றவர்; அதில் ஒரு வழக்கில் 15 வருடம் சிறையில் இருந்தவர். பலமுறை நான் சிறை சென்று அவரை பார்த்தபோது அமைப்பும் அதன் நிலைமைகள் பற்றியும் தொடர்ந்து விசாரிப்பார். 1982-ல் ஆரியபட்டி பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தொடங்க முன் நின்றவர்களில் தோழர் ஒருவர்.

பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் தோழர் முன்னின்று உற்சாகமாக செயல்பட கூடியவர்; அதில் ஒன்று தோழரின் ஊர் பகுதியில் ஆதிக்கச் சாதிவெறியர்கள் சாதாரண மக்கள் மத்தியில், “முதல் நாடு எது? திடியனா ? வாலாந்தூரா ?” எனப் பேசி வெறுப்பை தூண்டிய போது, தோழர் திசை கர்ணன் ஆதிக்கசாதி வெறியர்களின் வாயை அடைக்கும் வகையில் களத்தில் இறங்கினார். உலகில் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தும் அமெரிக்காதான் முதல் நாடாக இருக்கிறது என்றும், அதனால் பயனில்லை என்றும் சாதியவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சாரம் போஸ்டர், பொதுக்கூட்டம் என மக்கள் மத்தியில் வீச்சாக கொண்டு சென்று அம்பலப்படுத்தினார்.

கீழ்வெண்மணி படுகொலையைக் கண்டித்து தங்கள் பகுதியில் ஊன்றி நின்று  போராடியவர். தோழரின் இழப்பு மக்களுக்கும் அமைப்புக்கும் பேரிழப்பு; தோழர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வோம்” என பேசி முடித்தார்.

“36 வருடமாக தோழருக்கும் எனக்கும் இருந்த அரசியல் ரீதியான உறவு, நான் பார்த்த வகையில் கடினமான தருணத்திலும் நியாயம் நேர்மைக்கு உறுதியாக நிற்பவர். தான் வேலை பார்த்த சொசைட்டியில் ஏதாவது தவறு நடந்தால், அது அமைப்பிற்கு கெட்ட பெயர் என்பதால் அந்த வேலையை விட்டு வந்தவர். தோழர் ஊர் பஞ்சாயத்தில் போய் நின்றார் என்றால், சாதி ஆதிக்கவாதிகளுக்கு நடுக்கம் ஏற்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடினமாக நின்று போராடியவர். தோழரின் 15 வருட சிறைவாழ்க்கை மிகவும் கடினமானது. தோழரின் பெயர் இந்த ஊர் இருக்கும் வரைக்கும் நிலைக்கும்” என்று வழக்கறிஞர் நடராஜ் உரையாற்றினார்.

தோழரின் சொந்த கிராமம் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முத்துக்கருப்பன், ரவி, சிவகாமு ஆகியோர் தோழர் திசை கர்ணன் பற்றியான உளப் பதிவுகளை பதிவு செய்தனர்.

“தோழர் திசை கர்ணனுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் அவருடைய மகன் வயது எனக்கு தோழர் உடைய இறப்பு என் அப்பா இறந்தால் ஏற்படும் வருத்தத்தை விட அதிகமானது ஏனென்றால் தோழர் வெளிப்படையாக ஓர வஞ்சனை இல்லாமல் உறுதியாக பேசக்கூடியவர். தோழர் பஞ்சாயத்தில் பேசினால் சரியாக இருக்கும் என ஊர் மக்கள் பேசிக் கொள்வார்கள்; அதைப் பார்த்துதான் நான் இந்த அமைப்பின் மீது ஆர்வம் ஆனேன்; இணைந்து பணியாற்றினேன். “இன்று ஊர் பணம் 10 லட்சத்தை பெரும் முதலைகள் முழுங்கி விட்டார்கள், கேள்வி கேட்க தோழர் திசை கர்ணன் இல்லையே” என்று ஊர் மக்கள்  பேசுவதை பதிவு செய்தார் தோழர் முத்துக்கருப்பன்.

“தோழர் திசை கர்ணன் 15 வருடமாக சிறையில் இருந்தவர். அங்கு தோழர் தொடர்ச்சியாக அரசியல் பேசக்கூடியவர். அந்த செல்வாக்கை நாங்கள் சிறைக்கு செல்லும் போது மற்றவர்கள் தந்த மரியாதையில் இருந்து புரிந்து கொண்டோம். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் தோழர் கொள்கையில் ஊன்றி நின்றார். தற்போது அமைப்பிலிருந்து சீர்குலைவுவாதிகள் வெளியேறியபோது நாங்களெல்லாம் குழம்பிப்போயிருந்த சூழ்நிலையில் அதற்கெதிராக முதலில் கருத்து சொன்னதும் தோழர் தான்.” இறுதியாக தோழர் திசை கர்ணன் எழுதி வைத்திருந்த வசனத்தை “உடல் நோகாமல் வராது புரட்சி” என சொல்லி முடித்துக்கொண்டார் தோழர் ரவி.

“ஊரில் வெண்மணி படுகொலையின் நாடகத்தை மிக அருமையாக நடத்தினார்கள்; அதுதான் என்னை அவர்கள்பால் ஈர்த்தது. குடும்பம், வேலை என குறுக்கி பார்த்து வாழும்  வாழ்க்கையை விட்டு விட்டு மக்களுக்காக நாட்டிற்காக போராடும் நல்ல மனிதர்களின் செயல்பாடுதான் நாளை வரலாறு ஆகிறது; தோழர் திசைக் கர்ணனின் செயல்பாடுகள் வரலாறுதான். தோழர் கடைசிவரை கொள்கைக்காக உறுதியாக நின்றவர் என்பதை பதிவு செய்து சென்றார் தோழர் சிவகாமு.

“காவிரி பிரச்சனையின் போது நாங்கள் 20 பேர் சிறை சென்று மூன்று நாட்கள் உள்ளே இருந்தோம். அப்போதும் சில தோழர்கள் எப்போது ஜாமீன் கிடைக்கும் என கேட்பார்கள்; எதற்காக இதை சொல்கிறேன் என்றால் தோழரின் 15 வருட சிறை வாழ்க்கை மிகவும் கொடியது. அதை உறுதியாக எதிர்கொண்டவர் தோழர்; அந்தப் பண்பை தோழரிடம் இருந்து மற்றவர்கள் வரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோழர் திசைக் கர்ணனை போன்று பலரையும் நாம் உருவாக்க வேண்டிய பொறுப்பை நம்மிடம் தோழர் விட்டுச் சென்றுள்ளார்” என தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம்.

“தோழருடைய செயல்பாடுகள் அமைப்பிற்குள் நாங்கள் வரும்போது மிகுந்த உற்சாகத்தை தந்தது. பல மாணவர்களிடமும் எப்போதும் தோழர்களைப் பற்றி நாங்கள் சொல்லி அவர்களை உற்சாகமூட்டுவதுண்டு. தோழர் விட்டுச்சென்ற இலட்சியத்தை எடுத்துச் செல்வோம்” என்று தனது கருத்தை பதிவு செய்தார் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மதுரை தோழர் ரவி.

This slideshow requires JavaScript.

இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் உரையாற்றினார்.

“நானும் தோழர் திசை கர்ணனின் அருகாமை ஊர்க்காரர் தான். ஆரம்பத்தில் தோழர்களை ஹீரோவைப் போல் நாங்கள் பார்ப்போம். ஏனென்றால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தனது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்யும்போது; தோழர்களே சரியான முழக்கத்தை முன்வைத்து நம்பிக்கையை தந்தனர். அதில் ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! தேர்தல் பாதை திருடர் பாதை!  போன்ற முழக்கங்கள் எண்ணுள் விதையாக விழுந்தது.

ஆனாலும் நான் அமைப்பில் இணையவில்லை. ஏனென்றால் அன்று இருந்த ஊசலாட்டம் தான் இதற்கு காரணம். பிறகு எப்படியாவது பிழைக்கலாம் என்று சென்னை சென்றேன். அங்குதான் வேலை உத்திரவாதம் அற்றநிலை; வேலை பார்த்த இடத்தில் பிரச்சனை, அதற்காக அமைப்பை கட்டுவது என்ற தேவையை உணர்ந்த போதுதான் தோழர்கள் போட்ட விதை முளைக்க ஆரம்பித்தது. அந்த வகையில் நான் அமைப்பிற்கு வர முக்கியமான காரணமாக இருந்தவர்கள் தோழர் திசை கர்ணனை போன்றவர்கள்.

மக்களுக்காக வாழ்பவர்கள் இறப்பதில்லை. மார்க்ஸ் இறந்த போது எங்கல்ஸ் ஆற்றிய இறுதி உரையில் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என பதிவு செய்தார். ஆம்  தோழர் உடைய சிந்தனையும் செயல்பாடும் எப்போதும் வாழும். இன்றைக்கு மகிழ்ச்சியாக வாழ்வது என்றால் குடும்பம் குட்டி பணம் சம்பாதிப்பது என தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால், மக்களுக்காக இறுதிவரை வாழ்வதுதான் உண்மையான சந்தோசம். சிலர் அமைப்பில் செயல்பட்டு 15 வருடங்கள் வாழ்க்கையை வீணாக்கி விட்டேன் என பேசுகிறார்கள். அவர்கள் மேற்சொன்ன குடும்பம் குட்டி வாழ்க்கைதான் மகிழ்ச்சியான உயர்வான வாழ்க்கை என பார்க்கிறார்கள். அதை தோழர் திசை கர்ணனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 40 வருட அரசியல் வாழ்க்கை 15 வருடம் சிறையில் இருந்துள்ளார் இறுதிவரை கொள்கைக்காக உறுதியாக நின்றார்.

சிறையிலிருந்து இடையிடையில் வெளிவரும் போதும் அவர் எப்போதும் அமைப்பு நடவடிக்கைகளை சந்தோசமாக பார்த்தார். வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேன், என்ற சிந்தனையை அவரிடம் நான் பார்க்கவே இல்லை. பத்து நாள் சிறையில் இருந்தாலே நமக்கு பல்வேறு உளவியல் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால், தோழர்கள் விடுதலையாவது நிச்சயமே இல்லாத சூழலில் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதைப்போலவே மக்களுடைய பல்வேறு பிரச்சனைகாகவும் உற்சாகமாக போராட்ட களத்தில் நின்றார். அதில் குறிப்பாக உர வியாபாரிகள் ரூ.90-க்கு விற்க வேண்டிய உரத்தை ரூ.140-க்கு விற்று மக்களை அநியாயமாக கொள்ளையடித்தனர். இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மக்களுடன் சென்று வியாபாரிகளிடம் நேரடியாக பேசினார்கள்.

உர வியாபாரிகள் உடனே பம்மி விட்டார்கள்; தோழர்கள் சாதாரணமாக பேசிய உடனே விலையை ரூ.90-க்கு குறைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு போலீஸ்காரர்கள் வந்து என்ன பிரச்சனை என்று வியாபாரிகளிடம் கேட்ட போதும் “ஒரு பிரச்சனையும் இல்ல” என வியாபாரிகள் கூறியது மிகவும் வியப்பாக இருந்தது.

ஏனென்றால் வியாபாரிகள் நினைத்திருந்தால் போலீசை வைத்து பிரச்சனை செய்திருக்க முடியும்; ஆனால் செய்யவில்லை; காரணம் அது மக்களின் செல்வாக்கு மிகுந்த போராட்டம். இன்று பல கட்சிகள் இருக்கின்றன லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உறுப்பினர் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் என்ன பயன் நாம் சிறிய சக்தியாக இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். அது மகிழ்ச்சிகரமானது.

தோழர்கள் உடைய இந்த செயல்பாடு தான் சராசரி மனிதனாக வாழ்ந்த என்னையும் மாற்றியது. தோழர்களின் இந்தப் பண்பை வரித்துக் கொள்வது நம்மை நாமே மீண்டும் மீண்டும் உரசிப் பார்த்துக் கொள்ள ஒரு உரைகல்லை போன்றது. அதற்காக தான் இந்த கூட்டம்” என பேசி முடித்தார்.

இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்.

ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி

ஃபேல் ஊழல் பற்றிய விசாரணையை பிரான்ஸ் அரசு தற்போது துவங்கியுள்ளது. அந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை துவங்கியது. ஆனால் இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள இந்திய அரசு மற்றும் அனில் அம்பானியின் மீது கடுமையான குற்றச்சாட்டோ கூட இந்தியாவில் வைக்கப்படவில்லை.  இந்தியாவில் இப்படிப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடு மக்கள் மத்தியில் ஏன் போராட்டத் தீயைப் பற்ற வைக்கவில்லை?

இந்தக் கேள்விக்கான பதிலையும் ரஃபேல் ஊழல் நடைபெற்ற முறையையும் குறித்து விவரிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன். ரஃபேல் ஊழலில் இதுவரை நடந்தவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு காணொலிகளாக இங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஊழல் : விசாரணையை துவக்கிய பிரான்ஸ் !

ரஃபேல் ஊழல் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பிரான்ஸ் ஊடகங்கள் பேசத் துவங்கிவிட்டன. அங்கு இந்த ஊழலை பற்றிய பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ரஃபேல் ஒப்பந்தம் செய்து கொண்டபோது இருந்த அதிபர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்த உள்ளது பிரான்ஸ்.

000

ரஃபேல் ஊழல் : மோடி – அம்பானி பங்கு என்ன ?

ரஃபேல் ஊழலில் இந்தியாவின் பங்கு குறிந்து தற்போது மிகவும் சொற்பமாகவே இந்தியாவில் பேசப்படுகிறது. அதிகமான ஆதாரங்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் நேரடியாக ஈடுபட்ட மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சரைக் கூட கலந்தாலோசிக்காமல் அனில் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்று இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

000

ரஃபேல் ஊழல் : இந்தியாவில் குற்ற விசாரணை அவசியம் – ஏன் ?

மோடி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று இந்த ரஃபேல் ஒப்பந்த ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் போடப்ப்பட்ட ஓப்பந்த விலையை விட ஒரு விமானத்தின் விலையை 3 மடங்காக அதிகரித்துக் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.-ஐ பின்புலமாகக் கொண்ட பாஜக அரசு. இது மாபெரும் ஊழல் என்பதோடு, தேசிய பாதுகாப்பையே அடகு வைத்த ஒப்பந்தமாகும். பிரான்ஸ் அரசின் ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணை போல இந்தியாவிலும் ரஃபேல் தொடர்பான குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்

000

ரஃபேல் ஊழல் : எதிர்கட்சிகள், ஊடகங்கள் அமைதி காப்பது ஏன்?

மோடி இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் இந்த ஊழலை பற்றி பேசியே ஓட்டுக்கேட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க-வும் இந்த ஊழலைப்பற்றி பேசியது. ஆனால் தற்போது காங்கிரசில் ஒரு சிலரைத்தவிர பல ஓட்டுக் கட்சிகளும் மௌனம் காக்கின்றன. ஊடகங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுடையது என்பதால், ரஃபேல் ஊழல் விவகாரத்தை பேச மறுக்கிறது. ஆனால் மக்களாகிய நாம், ஊழல் மூலமாக பறிக்கப்பட்ட நம் பணத்தை மீட்டெடுக்க என்ன செய்யப் போகிறோம்.

காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள் !!

வங்க தேசத்தில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதப் படுகொலைகள் || படக் கட்டுரை

உணவுக்கிடங்கு தீ விபத்து – வங்கதேசத்தில் தொடரும் தொழிலாளர் படுகொலைகள்

ங்கதேச உணவுக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 52 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் தாக்காவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நாராயன் கஞ்ச் (Narayan ganj) மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த 6 மாடி தனியார் உணவுக் கிடங்கு.

இந்தக் கிடங்கின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ மொத்த கட்டிடத்திலும் பற்றிப் படர்ந்ததில் 52தொழிலாளர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இதனை ஒட்டி இக் கிடங்கு முதலாளி உட்பட 8 நபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

இது போன்ற விபத்துக்கள் நடப்பது வங்க தேசத்திற்கு புதிதல்ல. இதே போன்ற வெவ்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. விபத்துகளைப் போலவே அதற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கை குறித்த எச்சரிக்கைகள், மற்றும் அறிவிப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன.

சமீபத்திய சம்பவம் 2016 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நடந்த விபத்தை விட மிகவும் மோசமானது. அந்த சம்பவத்தில் தெற்கு சிட்டகாங் நகரில் ஒரு உரத் தொழிற்சாலையில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்த பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

படிக்க :
♦ ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி
♦ வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மட்டும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் நடந்த விபத்துகளில் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பலியாகினர். குறிப்பாக 2013-ல் ராணா பிளாசா கட்டிடம் சரிந்து விழுந்ததில் மட்டுமே 1100 தொழிலாளர்கள் – அதில் பெரும்பாலும் பெண்கள் – உடல் நசுங்கி மாண்டு போனார்கள்.

வங்க தேசத்தில் தொடரும் இத்தகைய விபத்துகளுக்குப் பின்னால் டார்கெட், ஹெட்ச் & எம் மற்றும் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாபவெறி இருக்கிறது. இந்த நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகளின் இலாபவெறியும் அதற்குப் பின்னணியில் இருக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுமே இந்தத் தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.

வங்கதேச பொருளாதாரத்தை குறைந்த – நடுத்தர – வருமானம் கொண்ட பொருளாதாரமாக உலக வங்கி வரையறை செய்கிறது. உழைப்பை அடிமாட்டுக் கூலிக்கு வாங்கி ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் ஒட்டச் சுரண்டும் சுரண்டல் நிலமாக இருக்கிறது வங்கதேசம்.

தனியார்மயத்தின், திறந்த சந்தையின் இலாப வெறியினால் நிகழும் இந்த மனிதப்படுகொலைகள் வெறுமனே வங்கதேச அரசின் ஊழலாகவும் திறமையின்மையாகவும் மடைமாற்றப்படுகிறது. இதைப் போன்று தொடர்ந்து நிகழும் மனித பேரவலங்களைக் கொண்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதார புதைக்குழி நிரப்பப்படுகிறது.

கடந்த ஜூலை 8-ம் தேதி உணவு தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீவிபத்தின் சில காட்சிகள்:

தொழிற்சாலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் தெரியாத உறவினர்கள் அங்கு துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் ரூப்கஞ்சில் உள்ள குளிர்பானம் மற்றும் உணவுப்பொருள் தயரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து அலையலையாய் புகைமூட்டம்.

கட்டுகடங்காத தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.

தீயணைப்பு வீரர்கள் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும்தீயை அணைக்க முயற்சிக்கின்றனர்.

விபத்துப் பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளை மறித்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கலைத்த பின்னர் தீ விபத்தின் காட்சியை பார்க்கும் மக்கள்.

தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்கின்றனர்.

தீ விபத்து நடந்த ஒரு பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

தீ விபத்து நடந்த தொழிற்சாலைக்கு வெளியே துயரத்தில் நிற்கும் பலியானவர்களது உறவினர்கள்.

கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீப்பிழம்புகள்

ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா

கேரள சிறையில் மற்றுமொரு ஸ்டான் சுவாமி – ஆறாண்டு அநீதிக்கு பதில் சொல்வாரா பினராயி ?

0

டுக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடி, மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பிணை மறுக்கப்பட்ட ஒரு வயதான மனிதரைப் பற்றி ஜமீலா இப்ராஹீம் ஒவ்வொரு நாளும் கவலைப்படுகிறார்.

அந்த மனிதர் 84 வயதான ஸ்டான் சுவாமி அல்ல. கேரளத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளிக்காக போராடியவர். அவருக்காக கவலை கொள்கிறார் ஜமீலா.

எல்கார் பரிஷத் வழக்கில் பிணைக்காக காத்திருந்து ஜூலை 5-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையின் காவலில் இறந்த ராஞ்சியைச் சேர்ந்த பாதிரியாரும் பழங்குடி உரிமை செயல்பாட்டாளருமான ஸ்டான் ஸ்வாமி குறித்து, 63 வயதான ஜமீலாவுக்கு குறைவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், எதிர்க்குரலை முடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என அவர் கூறுகிறார்.

ஜமீலாவின் கணவரும் தேயிலை தொழிலாளர் தலைவருமான என்.கே. இப்ராஹிம் 67 வயதானவர். 2015 –ம் ஆண்டு ஜூலை மாதம் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணை இல்லாமல் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படிக்க :
♦ ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

செயல்பாட்டாளர் ஸ்டானின் தடுப்புக் காவலை பகிரங்கமாக கண்டித்த சிபிஎம் முதலமைச்சர் பினராயி விஜயனின் கேரள அரசு, இப்ராஹிமுக்கு எதிரான வழக்கை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது முரணாக உள்ளது என்கிறார் அவரது மகன் நவ்ஃபால்.

என்.கே. இப்ராஹிமுக்கு சிறையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்தாக அவரது குடும்பத்தினரும் சிறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். மேலும் கடுமையான சர்க்கரை நோய் காரணமாக, ஈறுவலி நோயால் அவதியுற்று அவர் பற்கள் அனைத்தையும் இழந்துள்ளார்.

அவரால் மென்று உண்ண முடியாது என்பதால் சிறையில் அளிக்கும் சப்பாத்தியை தண்ணீரில் ஊறவைத்து, விழுங்குகிறார். சர்க்கரை நோய்க்காக ஒரு நாளைக்கு 22 மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்” என்கிறார் ஜமீலா.

வயநாடு மாவட்டத்தில் உள்ள நெடும்காரனா கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து 187 கி.மீ. தொலைவில் திரிசூர் மாவட்டத்தில் உள்ள வியூர் மத்திய சிறையில், ஜமீலாவும் நவ்ஃபாலும் வாரம் இருமுறை இப்ராஹிமை சந்திக்கிறார்கள்.

ஏப்ரல் 24, 2014 அன்று நெடும்காரனாவிலிருந்து 47 கி.மீ தொலைவில் வயநாட்டில் உள்ள வெல்லமுண்டா அருகே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து, மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படும் ஒரு குழுவுடன், காவலரின் பைக்கை எரித்த குற்றச்சாட்டில், ஜூலை 14, 2015 அன்று இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.

கே.என்.இப்ராஹிம்

இப்ராஹிம் ஒரு மாவோயிஸ்ட் கூரியர் (தகவல் அளிப்பவர்) எனவும், இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் தென்னிந்திய தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா மற்றும் அவர்களது தோழர்கள் அனுப், ஜெயன்னா, கன்யா மற்றும் சுந்தரி உட்பட ஏழு பேருடன் ஆயுதமேந்திய தாக்குதலில் பங்கேற்றதாகவும் 67 வயது இப்ராஹிம் மீது குற்றம் சாட்டுகிறது போலீசு.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில், வெல்லமுண்டாவிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான நெடம்பாலாவில் இப்ராஹிம் இருந்ததாக ஜமீலா கூறுகிறார். அதுவரை அவர் எந்தவொரு கிரிமினல் வழக்கையும் எதிர்கொள்ளவில்லை எனவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை எனவும், அவருக்கு ஒருபோதும் மாவோயிச தொடர்புகள் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இந்த வழக்கில் புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் வெள்ளமுண்டா காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட போலீசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தேயிலை நிறுவனத்தின் சதி என ஜமீலா குற்றம்சாட்டுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அந்த நிறுவனத்தில் அவரும் இப்ராஹிமும் பணிபுரிந்ததாகவும் ஓய்வுபெறும் வயதான 65 வயதை எட்டுவதற்கு முன், மோசமான நிதி நிலைமையை காரணம் காட்டி, நிறுவனம் தங்களை பணிநீக்கம் செய்ததாகவும் கூறுகிறார்.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய இப்ராஹிமை மாவோயிஸ்ட் தலைவர்கள் ரூபேஷ், ஷைனா மற்றும் அனுப் ஆகியோருக்கு நெருக்கமான ஒரு மாவோயிஸ்ட் என போலீசாரிடம் அந்த நிறுவனம் இட்டுக்கட்டியதாகவும் ஜமீலா கூறுகிறார் .

என் கணவர் வயநாட்டில் உள்ள தோட்டத் தொழிலாளர்களிடையே பிரபலமான தலைவராக இருந்தார். 1990-களில் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மோசமான விளைச்சலைக் காரணம் காட்டி நிறுவனம் தொழிலாளர்களை தன்னிச்சையாக பணிநீக்கம் செய்தபோது நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். இந்தப் போராட்டங்களால் எரிச்சலுற்ற நிறுவனம் அவரை இலக்காகக் கொண்டது”

இப்ராஹிம் மற்றும் மற்றவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று, பாயோலியில் மாவோயிஸ்டுகளுக்காக இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு. மற்றொன்று, வெல்லமுண்டா சோதனை தொடர்பாக, கலகம் செய்தல், அனுமதியின்றி நுழைதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றங்களுக்காக போடப்பட்ட வழக்கு.

படிக்க :
♦ கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்

கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு அமர்வு நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் வழக்கில் இப்ராஹிம் மற்றும் அவரது சக குற்றவாளிகளை விடுவித்தது. இரண்டாவது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என யாருக்கும் தெரியாது.

வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் முதல் வழக்கின் விசாரணையின் போது, உடல்நிலை சரியில்லாததால் இப்ராஹிம் மயங்கிவிழுந்தார்” என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளரான சி.பி. ரஷீத்.

பிணை மற்றும் பரோலுக்காக இப்ராஹிமின் கோரிக்கைகள் உள்ளூர் நீதிமன்றங்களால் இதுவரை ஆறு முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்ராஹீமின் மூன்று பற்கள் விழுந்த நிலையில், பல் மருத்துவர் மற்றும் நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையின் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்பு மீதமுள்ள பற்கள் அகற்றப்பட்டதாகவும் இதனால் உணவு உட்கொள்வது பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மட்டும் 8 கிலோ எடை குறைந்துள்ளதாக அவருடைய குடும்பம் கூறுகிறது.

பினராயி அரசாங்கத்தின் பங்கு

இப்ராஹிமின் குடும்பம் கேரள அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளது. திங்களன்று, முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ஸ்டான் சுவாமி சிறையில் நடத்தப்பட்ட விதம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக பிணை அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் தந்தைக்கு முதலமைச்சர் ஏன் நீதியை உறுதிசெய்யவில்லை என இப்போது நான் சிந்திக்கிறேன். அதுவும் போதுமான சாட்சிகளோ, உறுதியான ஆதாரங்களோ இல்லாத வழக்கில். குறைந்தபட்சம் முதலமைச்சர் என் தந்தைக்கு போதுமான மருத்துவ உதவியை செய்யவும் கடமைப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் மீது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை”

குற்றம்சாட்டப்பட்ட மற்ற ஏழு பேரில் 6 பேருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் அனைவரும் 50 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிகிறது. கோயம்புத்தூர் சிறையில் நான்கு ஆண்டுகள் கழித்து ஷைனா மட்டும் பிணை பெற்றார். ரூபேஷ் (44) மற்றும் அனூப் ஆகியோர் கோவையில் சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் மைசூர் மற்றும் பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயோலி மற்றும் வெள்ளமுண்டா வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்னர் ஏழு பேரும் வேறு பல வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

கொலை அல்லது பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்ற 200 க்கும் அதிகமான சிறைக் கைதிகள் கடந்த ஆண்டு முதல் வியூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டதாக திருச்சூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

pinarayi-vijayanபரோலில் விடுவிக்கப்பட்டவர்களில் சிபிஎம் தலைவர் டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கோடி சுனி, முஹம்மது ஷாஃபி மற்றும் கிர்மானி மனோஜ் ஆகியோரும் கொலை செய்வதற்கென்று அமர்த்தப்பட்ட கூலி ஆட்களும் அடக்கம். கொலையை திட்டமிடுதல், தங்கம் கடத்தல், சிறையில் இருந்து போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுனி மீது சுமத்தப்பட்டுள்ளன.

எப்படி இருந்தாலும், இப்ராஹிம் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

கடந்த ஆறு ஆண்டுகளில், அவர் இரண்டு முறை மட்டுமே வீட்டிற்குச் செல்ல முடிந்தது. அதுவும் இறுக்கமான போலீசு பாதுகாவலரின் கீழ். ஒவ்வொரு முறையும் ஒரு நாள் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது” என்கிறார் ஜமீலா .

கோவிட்டின் இரண்டாவது அலை தொடங்கியதும், மூன்றாவது அலையும் வரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். நாங்கள் மீண்டும் பிணை பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் நவ்ஃபால்.

அவருக்கு கடுமையான நோய்கள் இருப்பதால் நாங்கள் கவலைப்பட்டோம். கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் பிணையும் பரோலும் பெறும்போது, குறைந்தபட்சம் என் தந்தைக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்.”

குடும்பத்தின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்கி, சிறை அதிகாரிகள் இப்ராஹிமுக்கு சில மருத்துவ சிகிச்சையை வழங்கியதாக நவ்ஃபால் நன்றி கூறினார். ஆனால், தங்களுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையால் செயற்கை பற்களை கட்டுவதற்குக்கூட இயலவில்லை என்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜெ.தேவிகா, கே.சச்சிதானந்தன், மீனா கந்தசாமி உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விஜயனுக்கு கடிதம் எழுதி இப்ராஹிமை விடுவிக்குமாறு வலியுறுத்தினர்.

சித்திக் கப்பன் (உத்தரபிரதேசத்தில் ஊபாவின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட கேரள பத்திரிகையாளர்) மற்றும் ஹனி பாபு (எல்கார் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கல்வியாளர்) வழக்கில் நீங்கள் செய்ததைப் போலவே இப்ராஹிம் வழக்கிலும் சரியான நேரத்தில் தலையீடு செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பினராயி அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் இல்லை.

சித்திக் காப்பான், ஹனி பாபு விவகாரத்தில்  பினராயி விஜயன் மத்திய அரசுக்கும் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை.

கேரளாவின் ஆளும் சிபிஎம் ஊபா போன்ற கடுமையான சட்டங்களுக்கு எதிரானது எனக் கூறிக்கொண்டாலும், விஜயனின் அரசாங்கம் எதிர்க்குரல்களை ஒடுக்குவதற்கு ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

சி.பி.எம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களான ஆலன் மற்றும் தாஹா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி கொள்கைகளை விமர்சிக்கத் தொடங்கியபோது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆலன் இப்போது பிணையில் வந்துள்ளார். ஆனால், தாஹா இன்னமும் சிறையில் இருக்கிறார்.

செய்திகட்டுரை : கே..ஷாஜி
நன்றி : டெலிகிராப் இந்தியா
தமிழாக்கம் : கலைமதி

விளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது ? || கருத்துப்படம்

திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் முன்பே, அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று தெரிவித்தது. ஆனால் 4 மாதங்களில்  ஆலை மூடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது திமுக.

கடந்த ஜூலை 7-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் தயாரிக்க இன்னும் ஆறு மாதங்கள் காலநீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததை பற்றி திமுக அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று (ஜூலை 8) செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், “ஸ்டெர்லைட்டை மூட தற்போது என்ன அவசரம்?” என்று கேட்கிறார்.

சிறைத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவர் விடுதலையை சாத்தியப்படுத்த அத்தனை வழிமுறையும் இருக்கும்போது, அது குறித்து மவுனம் சாதிக்கிறது  திமுக அரசு. எழுவர் விடுதலை விவகாரத்தில் ஸ்டாலின் சிக்கிக் கொள்ள மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாக அறிவிக்கிறார்.

பெட்ரோல் டீசல் மீதான மாநில வரிகளை குறைக்க சொல்லும் போது கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லும் திமுக அரசு புதிய பூங்காக்களை rஊ. 2500 கோடி செலவில் அமைத்து சென்னையை அழகுபடுத்தத் திட்டமிடுகிறது.

மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்க, ஊடகங்களும், இணைய திமுகவினரும் ஸ்டாலின் சைக்கிளில் போவதையும் ஜிம்முக்குப் போவதையும் பற்றிப் பேசி நம்மை புளகாங்கிதமடையச் சொல்கிறார்கள்.

ஸ்டெர்லைட் திறப்பு – விண்ணை முட்டும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு – கிடப்பில் போடப்பட்டிருக்கும் எழுவர் விடுதலை

இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, ஊடகங்களில் தனிமனிதப் புகழ் பாடியே எவ்வளவு நாள் வண்டி ஓட்ட முடியும் ?


கருத்துப்படம் : மு. துரை

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

காவிரி, தென்பெண்ணை ஆற்று நீரை தடுத்து அணை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசு – பாஜக – கார்ப்பரேட் கூட்டு சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 8.7.2021 காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

தமிழ்நாட்டு எல்லை பகுதியில் அமைந்துள்ள மேக்கேதாட்டு பகுதியில் மிகப் பெரிய தடுப்பணையை கட்ட முயற்சித்து வருகிறது கர்நாடகம். இந்த கட்டுமானப் பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.

ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுப்பதும், பாஜக போன்ற கார்ப்பேரேட் சேவை செய்யும் துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும் நமது கடமையாகும்.

இந்தக் கடமைகளை நிறைவேற்ற தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு தோழர் மாதையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் தோழர் கருப்பண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்புக் குழு தோழர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
97901 38614.

000

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதன் மூலம் காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறித்து தமிழகத்தை பாலைவனமாக்கி, காவிரி டெல்டாவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராகப் போராடுவோம் ! எனும் முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டாரச் செயலாளர் தோழர் அசோக்குமார் தலைமையில் விருதாச்சலம் பேருத்து நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் தோழர் கோகுல்கிருஷ்டிபன், RMPI ; தோழர் ராமர், CPI (ML) மக்கள் விடுதலை; தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?

0

ந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான்” என்று கடந்த ஜூலை 5-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தா இப்படிப் பேசியது என வியப்படைய வேண்டாம். பாபர் மசூதியை இடித்த அதே ஆர்.எஸ்.எஸ். – சங்க பரிவாரக் கும்பலின் தலைவர் மோகன் பாகவத் தான் இப்படிப் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ”தி மீட்டிங் ஆஃப் மைண்ட்ஸ்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில்தான் இந்தப் பொன்னான கருத்தை தெரிவித்தார் பாகவத். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் அந்த நூலை எழுதியவர் இப்திகார் அகமது எனும் இசுலாமியர் ஒருவர்.

இந்தியாவில் முசுலீம்கள் தங்கக் கூடாது என வெறுப்புடன் ஒருவர் பேசினால், அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. பசு புனிதமான விலங்குதான். ஆனால் பசுப் பாதுகாவலர் என்ற பெயரில் பலரும் அப்பாவிகளைத் தாக்குகிறார்கள். இது இந்துத்துவாவிற்கு எதிரானது. பலர் மீது பொய்யான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.” என்றெல்லாம் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார் பாகவத்.

படிக்க :
♦ படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !

அதோடு நிற்கவில்லை. இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முசுலீம்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் முசுலீம்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்பவர்கள் இந்துத்துவவாதிகள் அல்ல என்றும் கூறி ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் பாகவத்.

உத்தரப் பிரதேசத்தில் ஏதேனும் தேர்தல் வரப் போகிறதா என்று நமது மண்டையில் ஒரு சந்தேகம் இந்தச் சமயத்தில் எழும் என்பதையும் முன்னறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட பாகவத், அதையும் தானே குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முஸ்லீம்கள் பற்றி அதிகம் கவலைப்படுகிறது, வாக்கு வங்கி அரசியலுக்காகச் செயல்படுகிறது என்று சிலர் பேசலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ஐப் பொறுத்தவரையில், இந்தியாவில் ஜனநாயகத்தை முழுமையாக நம்புகிறது. இங்கு இந்துக்கள், முஸ்ஸிம்கள் ஆதிக்கம் என்பதைவிட இந்தியர்கள் ஆதிக்கம் என்ற நிலையைத்தான் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார் பாகவத்.

தேர்தலுக்காக இதைச் சொல்லவில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் மோகன் பாகவத். எங்காவது ஆர்.எஸ்.எஸ். தேர்தலில் பங்கேற்றுப் பார்த்திருக்கிறீர்களா? ஆகவே நம்புங்கள். ஆர்.எஸ்.எஸ்.-க்கும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கு இந்து ராஷ்டிரம் அமைப்பதுதான். ஆர்.எஸ்.எஸ்.-ஐப் பொறுத்தவரையில் சட்டமன்றத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ தமது இலக்கை அடைவதற்கான சிறு உபகரணம் தான்.

மோகன் பகவத்

மோகன் பாகவத் கூறியதில் பல விசயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறிய இந்துக்களுக்கான ‘இலட்சணங்களை’ வைத்துப் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஒட்டுமொத்த சங்க பரிவாரக் கும்பலிலும் இருக்கும் யாரும் இந்துவாக இருக்க முடியாது.

ஏனெனில், முசுலீம்களையும் கிறிஸ்தவர்களையும் வந்தேறிகள் என்று அழைப்பதுதான் சங்க பரிவாரத்தின் அடிப்படை. அவர்களது குருவும் வெள்ளைக்காரனுக்கு நாவால் ஷூ பாலிஷ் செய்துவிட்டவருமான ‘வீர’ சாவர்க்கர் பற்றி அனைவரும் அறிந்ததே. அவர் ஒரு கடவுள் மறுப்பாளர். இந்து ராஷ்டிரம் பற்றிய அவரது வரையரையில், முசுலீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவர் கடுமையாக எதிர்க்கிறார். சாவர்க்கர் எனும் இந்துத்துவ வெறியரின் இந்து ராஷ்டிரக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் வகையில், முசுலீம்களும் இந்தியர்கள் தான் என்ற உண்மையைப் பேசியிருக்கிறார் பாகவத். ஏன் ?

மோடியை ஆட்சியில் அமர்த்த, உத்தரப் பிரதேசத்தில் லவ் ஜிகாத் எனும் கட்டுக் கதையை கிளப்பிவிட்டு முசுலீம்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டி குளிர்காய்ந்தது ஆர்.எஸ்.எஸ். தான். நேரடியாக பல சாதி இந்து கிராமங்களுக்குச் சென்று முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ். தான்.

மோடி ஆட்சியில் முதல்முறை அமர்ந்த பின்னர், கர் வாப்சி” என்ற பெயரில் உத்தரப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் முசுலீம்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளில் அவர்களை மிரட்டி இந்து மதத்திற்கு மாறச் செய்தது ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல். முசுலீம்களுக்கு எதிரான படுகொலைகளையும் தாக்குதல்களையும் களத்தில் இறங்கிச் செய்வது, சங்க பரிவாரத்தின் பஜ்ரங் தள் அமைப்புதான்.

உ.பி முசாபர் நகர் கலவரம்

பசுவளைய மாநிலங்கள் என்று அழைக்கப்படும், உத்தரப் பிரதேசம், அரியானா, இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அந்தப் படுகொலைகளை நாடு முழுவதும் தூண்டிவிட்டு, கொலைகாரர்களை போற்றிப் புகழ்ந்து ஆராதித்ததும் சங்க பரிவாரக் கும்பல்தான்.

இப்படி, இவ்வளவு நாளும் முசுலீம்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் முன் நின்று செய்துவிட்டு, இன்று திடீரென முசுலீம்கள் மீதான பாசம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு வந்திருப்பது ஏன் ?

தமது இலக்கான இந்துராஷ்டிரக் கட்டுமானத்தை சோதித்துப் பார்க்கும் சோதனைச் சாவடியாக இருப்பது உத்தரப் பிரதேசம் தான். அதற்கு முன்னர் மோடியின் ஆட்சியதிகாரத்தின் கீழ், குஜராத் பயன்படுத்தப்பட்டதைப் போல இன்று உத்தரப் பிரதேசத்தில் ஒரு பாசிச ஆட்சியை அமல்படுத்தி வருகிறது சங்க பரிவாரக் கும்பல். அதன் தொடர்ச்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு பிரயத்தனப் படுகிறார், பாகவத்.

கொரோனா நோய்த் தொற்றின், முதல் அலை, இரண்டாம் அலை ஆகியவற்றில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது வட இந்திய மாநிலங்கள் தான். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. முக்கியமாக யோகியின் ஆட்சியில் சங்கபரிவாரக் கும்பலுக்குத் தேவையான மருத்துவ வசதியோ, ஆக்சிஜனோ கூட கிடைக்காத நிலைமைதான் நீடித்தது. இது அம்மாநில மக்களிடம், குறிப்பாக பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களிடமும் கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க :
♦ அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

மேலும் விவசாயிகள் பெரும்பான்மையாக உள்ள உத்தரப் பிரதேசத்தில், ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உத்தரப் பிரதேச விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். நாமெல்லாம் இந்துக்கள் என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகள் எல்லாம் வீணாகிவிட்டன. போதாத குறைக்கு சமீபத்தில் பாஜக கிரிமினல்கள் உ.பி. எல்லையில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளைத் தாக்கியுள்ளனர்.

இது போக, யோகியை ஓய்த்துக் கட்ட உத்தரப் பிரதேச அரசியலில் மோடி அமித்ஷா கும்பல் ஏற்படுத்திய சலசலப்பும் அதனைத் தொடர்ந்து அங்கு பிளவு ஏற்பட்டிருக்கிறது.

மேற்கூறியவை அனைத்தும் சேர்ந்து எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆப்பு வைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பதால், கடந்த முறை போல சாதி அரசியலால் மட்டுமே வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 9-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு உத்தரப் பிரதேசத்தின் சித்திரக்கூட் எனும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் ஒன்றுகூடி, உத்தரப் பிரதேச தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

தமது இலக்கான இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதற்கான வழிமுறையில், ஆர்.எஸ்.எஸ்.-ற்கு ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் முக்கியமானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, எம்.எல்.க்களை விலைக்கு வாங்குவது முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது வரை அனைத்திலும் இறங்குகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.

வெற்றி பெற வேண்டுமென்றால், கலவரங்களையே செய்யத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்.-க்கு , முசுலீம்களைப் போற்றிப் புகழ்வது எல்லாம் கடினமான வேலையா என்ன ?

சரண்

செய்தி ஆதாரம் :
தமிழ் இந்து

ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !

அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் நிறுவன ரீதியான கொலை
(
பி.கே.-16இன் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் விடுக்கும் அறிக்கை)

6.7.2021

பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களின் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களுமான நாங்கள் அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் இழப்பினால் உலுக்கப் பட்டு ஆழ்ந்த காயமடைந்திருக்கிறோம். இது ஒரு இயற்கையான மரணமல்ல; ஒரு கனிவான ஆத்மாவிற்கு எதிராக ஒரு மனிதாபிமானமில்லாத அரசு நடத்திய நிறுவன ரீதியான கொலை.

வாழ்நாள் முழுவதிலும் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆதிவாசிகளிடையே இருந்து அவர்களுடைய வளங்கள், நிலங்கள் மீது அவர்களுக்கு இருந்த உரிமைக்காகப் போராடிய அருட்தந்தை ஸ்டானுக்கு, அவர் நேசித்த ஜார்கண்டிலிருந்து தொலைதூரத்தில், பழிவாங்கும் உணர்ச்சி மிகுந்த அரசினால் சிறை வைக்கப்பட்ட நிலையில் இப்படி மரணம்  நேர்ந்திருக்கக் கூடாது.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !

பீமா கொரேகான் வழக்கில் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 16 பேரில் கடைசியாகக் கைதானவர் அருட்தந்தை ஸ்டான்தான். பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான அவர்தான் கைது செய்யப்பட்டவர்களில் மூத்தவர்; அதிகம் நலிவடைந்தவர். உடல்நிலை மோசமாக இருந்த போதிலும், அவருடைய தார்மீக வலிமையாலும் அசைக்க முடியாத நேர்மையாலும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தார்.

சிறையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டிருந்த போதிலும் சக சிறைவாசிகளைக் குறித்தே அவருடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருந்தன. தன்னுடைய கடிதங்களில் பல்வேறு வழக்குகளில் போலியாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்தவர்களைப் பற்றி எழுதிய அவர் சமுதாயத்தில் நிலவும் அநீதிகளைக் குறித்து வேதனையில் புழுங்கினார்.

அவருடைய கனிவையும், மனித நேயத்தையும், இரக்க உணர்வையும் நினைத்துப் பார்க்கும் நேரத்தில், அவர் சிறைவைக்கப்பட்டதெனும் மாபெரும் அநீதியை மறக்க முடியாது. அருட்தந்தை ஸ்டான் போல் வயதுமுதிர்ந்த நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவர் சிறையிலடைக்கப்படுவதே, அதுவும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடப்பது, மனசாட்சிக்கு விரோதமானது.

அக்டோபர் 8, 2020-ம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டபோதே அவருக்கு எதிரான விசாரணை முடிவுற்றிருந்தது; அவர் ஓடிப் போகும் அபாயம் இல்லை என்பதும் தெளிவு. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதும், நவி மும்பையிலிருக்கும் தஜோலா சிறையில் அடைக்கப்பட்டதுமே அவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை போன்றதுதான்.

அருட்தந்தை ஸ்டான் கைது செய்யப்பட்ட நேரத்தில் மனதை உருக வைக்கும் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். அவருடைய கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட சில குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் – அந்த ஆவணங்களை அவர் அதற்கு முன் பார்த்ததில்லை, தன் கணிணியில் பதியவுமில்லை என்ற போதிலும் – அவர் ஒரு மாவோயிஸ்ட் சதியில் ஈடுபட்டதாக மென்மையான ஆனால் தெளிவான குரலில் கூறினார்.

அந்த ஆவணங்கள் அவருடைய கணிணியில் தொலைத்தூரத்திலிருந்து திருட்டுத் தனமாக பதியப்பட்டன என்பதை இந்த வருட ஆரம்பத்தில் ஆர்சனல் கன்சல்டிங் என்கிற நிறுவனமும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையும் வெளியிட்ட ஸ்தம்பிக்க வைக்கும் உண்மைகள் உறுதிப்படுத்தின.

நெட்வைர் மால்வேர் என்கிற இணையக் கருவியைப் பயன்படுத்தி பீமா கொரேகான் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணிணிகளில் அவர்களை சதியில் தொடர்பு படுத்தும் ஆவணங்களை தொலைத்தூரத்திலிருந்து பதிந்த முறையையும் அந்த இரு நிறுவனங்களும் விளக்கியிருந்தன. இப்படி தீய நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கு விலையாக அருட்தந்தை ஸ்டான் தன் உயிரைக் கொடுக்க நேர்ந்திருப்பதைக் கண்டு நாங்கள் கொதித்துப் போயிருக்கிறோம்.

அருட்தந்தை ஸ்டான் சிறையிலடைக்கப்பட்ட பிறகும் கூட அவரது உடல்நிலையைக் குறித்து கவலை கொள்ளாத பொறுப்பற்ற போக்கு தொடர்ந்தது. சிறையில் ஸ்ட்ரா வைத்து உறிஞ்சிக் குடிக்க உதவும் கோப்பையைப் பயன்படுத்தக் கூட அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அடிப்படையான இந்தத் தேவைக்காகக் கூட அவர் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. நீதிமன்றமும் விரக்தியடையச் செய்யும் வகையில் மெத்தனமாக நடந்து கொண்டது.

பின்னர் அவரது உடல் நிலை தொடர்ந்து சீரழிந்து வந்த போதிலும் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பிணையில் விடுவிக்குமாறு அவர் செய்த மனுவும் இதே குருட்டுத் தனமான, உணர்ச்சிகளற்ற, சொரணையற்ற என்.ஐ.ஏ. நீதிமன்றத்தால் எந்திர ரீதியாக நிராகரிக்கப்பட்டது. அவருக்கு கோவிட் தொற்று இருக்கிறதா என்பது கூட மருத்துவ ரீதியாகத் தீர்மானிக்கப்படவில்லை; உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன்தான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரி செய்த மனுவின் விசாரணையின் போது அவர், தன் மோசமாகி வரும் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் நிகழ்த்திய உருக வைக்கும், இதயத்தை உடையச் செய்யும் உரையை நாம் மறக்க முடியாது. தான் நீண்ட நாள் உயிரோடு இருப்பேன் என எதிர்பார்க்கவில்லையென்றும், ராஞ்சியிலிருக்கும் பகாய்ச்சவில் வாழும் தன் மக்கள் கூட்டத்துக்கு நடுவே இருந்து இறக்க விரும்புவதாகவும் அவர் பேசினார். இந்த எளிமையான வேண்டுகோளைக் கூட நம் நீதித் துறையினால் நிறைவேற்ற முடியவில்லை என்பது கேவலமானது.

அருட்தந்தை ஸ்டானின் மறைவு குறித்து நாம் சோகமாயிருக்கும் அதே நேரத்தில், அவரது துரதிருஷ்டவசமான மரணத்துக்கு அலட்சியமான சிறைச்சாலைகளும், பொறுப்பற்ற நீதிமன்றங்களும், தீய நோக்கம் கொண்ட புலனாய்வு அமைப்புகளுமே பொறுப்பு என நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம்.

இதே சிறைகளில், இதே பொறுப்பேற்க மறுக்கும் அமைப்பின் அடியில், இதேபோன்ற அநீதிகளை எதிர்கொண்டிருக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களின் உடல்நிலை குறித்தும் உயிர் குறித்தும் அச்சம் கொண்டிருக்கிறோம். அனைவரின் பாதுகாப்பையும் நாங்கள் விழிப்புணர்வுடன் தொடர்ந்து கண்காணிப்போம். “நாங்கள் அமைதியான பார்வையாளர்களாக இருக்க மாட்டோம்; அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருப்போம்.” இதைத்தான் அருட்தந்தை ஸ்டானும் விரும்பியிருப்பார்.

இப்படிக்கு,
மீனால் காட்லிங்க், ராய் வில்சன், மோனாலி ராவுட், கோயல் சென், ஹர்ஷாலி போட்தார், ஷரத் கெய்க்வாட், மாய்ஷா சிங், ஒய். ஃஃபெரேரா, சூசன் ஆப்ரஹாம், பி. ஹேமலதா, சபா ஹுசைன், ரமா டெல்டும்ப்டே, ஜென்னி ரொவீனா, சுரேகா கோர்க்கே, ப்ரனாலி பரப், ருபாலி ஜாதவ், அருட்தந்தை ஜோ சேவியர்


தமிழாக்கம் : விஜயசங்கர் ராமச்சந்திரன்
முகநூலில் : Vijayasankar Ramachandran

disclaimer

ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்

ழங்குடி மக்கள் நலனுக்காக தன் 84 வயதிலும் போராடி வந்த ஸ்டான் சுவாமியை பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது மோடி அரசு. அவரது உடல்நிலை பாதிப்பின் காரணமாக தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா வைத்த குவளை கேட்டதைக் கூட கொடுக்க மறுத்து அவரை சிறையில் துன்புறுத்தியது மோடி அரசு. சிறையில் கொரோனா பரவுகையில் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க கோரிய நிலையில், அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இப்படி தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி மரணமடைந்துவிட்டார் ஸ்டான்சுவாமி. திருச்சியில் புள்ளப்பாடியில் பிறந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தபோது, பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார். கடவுளுக்கு தொண்டூழியம் செய்வதை விட மக்களுக்கு வேலை செய்வதையே முக்கியமான பணி என்று முடிவு செய்தவர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

அவர் கடவுளுக்கு தொண்டூழியம் செய்திருந்தால் கூட அவரை விட்டுவைத்திருக்கும் இந்த அரசு. ஆனால் அவர் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடியதன் காரணமாகவே மோடி கும்பலால் தற்போது கொல்லப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மோடி அரசுக்கு எதிராக பேசும் சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர் கடுமையாக ஒடுக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போல் தற்போது சமூக செயற்பாட்டாளர்  ஸ்டான் சுவாமி மோடி, அமித்ஷா மற்றும் அதிகார வர்க்கத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார், என்பதை மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ரெட்பிக்ஸ் யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் விளக்கியுள்ளார்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

அடுத்த ஜிகாத் : முசுலீம் தெரு வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் || அலிசன் ஜாஃப்ரி

0

லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத்துக்கு அடுத்து
முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர் படை !

நிலத்துக்கான ஜிகாத், லவ் ஜிகாத், கொரோனா ஜிகாத், சிவில் சர்வீஸ் ஜிகாத் வரிசையில், இந்துத்துவ குண்டர் படை தலைநகர் உள்ளிட்டு நாடு முழுவதும் முசுலீம் தெரு வியாபாரிகளை குறிவைத்து ’ரெடி ஜிகாத்’ (Redi Jihad) என்ற புதிய சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வகுப்புவாத பிரச்சாரத்தில் பல்வேறு தீவிர இந்துத்துவ அமைப்புகளின் குண்டர்களும் இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நொய்டாவை தளமாகக் கொண்ட சுதர்சன் டி.வி. என்ற செய்தி தொலைக்காட்சியும் இந்த பிரச்சாரத்தில் இணைந்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் ஒளிபரப்பு ஊடகங்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக அதன் மேற்பார்வை முறையை கடுமையாக்கிய போதிலும் சுதர்சன் டி.வி. இந்தப் ’பணி’யில் ஈடுபட்டுள்ளது.

படிக்க :
♦ உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

ஜூன் 18, 2021 அன்று, புது டெல்லியின் உத்தம் நகரில் ஒரு முசுலீம் பழ விற்பனையாளர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எனக் கூச்சலிட்ட அடையாளம் தெரியாத மனிதர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 20 அன்று, ‘ஜிகாதி’ பழ விற்பனையாளர்களால் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு எனக் கூறிய இந்துத்துவ குண்டர்கள் அதே பகுதியில் பரபரப்பான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த குண்டர்கள் முசுலீம்-விரோத முழக்கங்களை எழுப்பினர். கைகளில் லத்திகளை வைத்துக் கொண்டு, பெரும்பான்மையாக உள்ள முசுலீம் விற்பனையாளர்கள் வரக் கூடாது என்ற எச்சரிக்கையை அனுப்பினர். பின்னர் மாலையில், இந்த குண்டர்களும் உள்ளூர் கடைக்காரர்களும் ‘இந்து ஒற்றுமை’யை வெளிப்படுத்தும் வகையில் சாலையின் நடுவே அனுமன் சாலிசாவை ஓதினர்.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, தற்போதைய பதற்றத்திற்கு காரணம் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்த ஒரு சண்டையாகும். இதில் ஒரு உள்ளூர் கடைக்காரர் பழ விற்பனையாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூன் 20 அன்று உத்தம் நகரில் இருந்து ஒளிபரப்பப்பட்ட ஒரு நேரலை வீடியோவில், அடையாளம் தெரியாத ஆண்கள், முசுலீம் விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாகக் கூறினர். தெரு விற்பனையாளர்கள் அனைவரும் முசுலீம்கள் என இந்துத்துவ குண்டர் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். முஸ்லீம் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் எனவும் ‘அவர்கள் நடமாடும் புற்றுநோய்’ எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

உத்தர் நகரில் பழ விற்பனையாளர்களை எதிர்த்து லத்திகளுடன் இந்துத்துவா குண்டர்கள்

தெரு விற்பனையாளர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையிலான சண்டைகள் நகர்ப்புற இந்தியாவின் பிரதானமானவை, குடிமைத் திட்டமிடல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமையும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும், உத்தம் நகர் நிகழ்வுக்குப் பின், ஏப்ரல் 2021 முதல் சமூக ஊடக இடுகைகள் மற்றும் ஆன்லைன் கருத்துரைகளை படித்தபோது, வலதுசாரிகள் திட்டமிட்டு, இந்தப் பகுதியில் மத ரீதியிலான கோணத்தை முன்னெடுப்பது தெரிகிறது.

ஒரு குடிமை பிரச்சனையை வகுப்புவாதமாக்குதல்

கிழக்கில் ஜனக்புரி, மேற்கில் நஜாப்கர் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள உத்தம் நகர் பகுதி டெல்லியின் மேற்கு விளிம்பில் அடர்த்தியான குடியிருப்பு காலனியாகும். இங்கு தினக் கூலி பெறுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

உத்தம் நகரில் உள்ள மிலாப் நகர் டைல் சந்தை மற்றும் துவாரகா பாஸ் இடையேயான சாலை கடந்த இரண்டு தசாப்தங்களாக கடுமையான போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பழ விற்பனையாளர்கள் மற்றும் இ-ரிக்‌ஷாக்களின் அக்கிரமிப்பு. இந்தப் பகுதியில் அதிகரிக்கும் பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால், பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. அத்துமீறல்களை அகற்றுவதில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையினரின் குறைபாடான அணுகுமுறை குறித்து அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பலமுறை புகார் அளித்துள்ளது நாளிதழ்களில் பதிவாகியுள்ளது.

அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோருவதற்குப் பதிலாக அல்லது நகராட்சியையும் போலீசுத்துறையையும் செயல்பட கட்டாயப்படுத்த நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் பல்வேறு இந்துத்துவ அமைப்புகளும் ’கண்காணிக்கும்’ பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். (அதாவது, தாமே சட்டமும் நீதிமன்றமும்தான் என்பதை சொல்கின்றனர்). முசுலீம் பழ விற்பனையாளர்களை அப்பகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதாக அச்சுறுத்தியதைத் தவிர, ஜூன் 20-ஆம் தேதியன்று களத்தில் இறங்கிய குண்டர் படை முசுலீம்களுடன் வியாபாரம் செய்வதை நிறுத்துமாறு இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

முசுலீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதாக அடிக்கடி குற்றம்சாட்டப்படும் தீவிர வலதுசாரி தொலைக்காட்சி சேனலான சுதர்சன் நியூஸ், உத்தம் நகரில் நடைபெற்ற நிகழ்வுகளை வன்முறையைத் தூண்டும் வகையில் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி முழுவதும், சுதர்சன் நிருபர் சாகர் குமார் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபம் திரிபாதி ஆகியோர் முசுலீம்களை ‘ஜிகாதிகள்’ எனக் குறிப்பிட்டு பிற கேவலமான சொற்களைப் பயன்படுத்தினர்.

‘டெல்லியில் தெரு விற்பனையாளர் ஜிஹாத்தின் பயங்கரவாதம்’, என்று எழுதியிருக்கும் ஒரு வீடியோவின் முகப்பு படம்

‘முதல் முறையாக இந்துக்கள் ஜிகாதிகளுக்கு எதிராக உத்தம் நகரில் லத்திகளுடன் மிகவும் ஆக்ரோஷமாக வெளியே வந்துள்ளனர்’ என சுபம் கூறினார்.

“இன்று, உத்தம் நகரில் அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்படும், ஜிகாதிகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்படும். சுதர்ஷன் நியூஸ் நீண்ட காலமாக ஜிகாதிகளை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பதை ஆதரிக்கிறது” என சாகர் குமார் கூறினார்.

‘இந்த முசுலீம் விற்பனையாளர்களில் பெரும்பாலானோர், கடந்த காலங்களில் வன்முறையைச் செய்த ரோஹிங்கியாக்கள் என்ற தகவல்கூட எங்களுக்கு கிடைத்துள்ளது’  இப்படி எழுதினார் சுதர்சன் நியூஸின் கட்டுரையாளர் அபய் பிரதாப்.

“மோசடி செய்யும் பழக்கம் குறித்து புகார் அளிக்கும் வாடிக்கையாளர்கள் கத்தியால் அச்சுறுத்தப் படுகிறார்கள். நாங்கள் சிறிது நேரம் காத்திருப்போம், ஆனால் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இங்கே ஒரு சாலை மறியலை தொடங்குவோம்” என்று பா.ஜ.க-வின் நஜாப்கர் மாவட்ட துணைத் தலைவர் புல்கித் சர்மா உத்தம் நகர் ‘போராட்ட’த்தின் போது கூறினார்.

“அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய வீடியோவில், போராட்டத்தில் மதவாதம் எதுவுமில்லை என சர்மா கூறினார். ஆனால், அவர் தனது வாக்கு பொய் என்பதை நிரூபிக்க ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத முழக்கங்களுடன் கூடிய வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மிருகத்தனமாக அடிப்பது

இந்த வலிமையைக் காண்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரிஸ்வான் என்ற முசுலீம் விற்பனையாளர் அடையாளம் தெரியாத இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டார்.

“இது ஒரு பழ விற்பனையாளருக்கும் கடைக்காரருக்கும் இடையே ஒரு சிறிய சண்டை காரணமாக தொடங்கியது. இருப்பினும், பல சமூக விரோத சக்திகள் இந்த விஷயத்தில் உள்ளே புகுந்து வகுப்புவாதமாக்கிவிட்டன. பின்னர், எங்கள் விற்பனையாளர்களில் ஒருவரான ரிஸ்வானை கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் ஒரு கும்பல் தாக்கியது. பலத்த காயமடைந்து தீனதயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போலீசுத்துறையினர் இப்போது தெரு விற்பனையாளர்களைத் துன்புறுத்துகிறார்கள்” என மேற்கு டெல்லியில் உள்ள பழ விற்பனையாளர்களின் தலைவர் அஜய் சிங் கூறுகிறார்.

முசுலீம் பழ விற்பனையாளர்களுக்கு எதிராக இந்துத்துவா குண்டர்கள் ஆர்ப்பாட்டம்

“ஜூன் 18, 2021 அன்று இரவு 9 மணியளவில், நான் எனது பழ வண்டியை சந்தையிலிருந்து இழுத்துக் கொண்டிருந்தேன். அப்போது 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் என்னைத் தாக்கியது. அடி விழுந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். வேறு எதையும் அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் ரிஸ்வான். ரிஸ்வான் இந்த விஷயத்தைப் பற்றி பேசத் தயங்குகிறார். இதைக் கடந்து செல்ல விரும்பினாலும், டெல்லி துவாரகாவில் உள்ள பூண்டா புர் போலீசு நிலையத்தில் ஜூன் 19-ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்ட ஒரு குழுவினர் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயரை கேட்டதாகவும், ‘ரிஸ்வான்’ எனக் கூறியபோது கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அவர் இனி தனது வண்டியை அப்பகுதிக்கு கொண்டு வரக் கூடாது என அவர்கள் சொன்னதாகவும்  குறிப்பிடுகிறார்.

ரிஸ்வானுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு, திட்டமிட்ட மதரீதியிலான தாக்குதல் என முதல் தகவல் அறிக்கை விவரிக்கிறது. ஆனால் டெல்லி போலீசுத்துறை தொடர்புடைய மற்றும் மிகவும் தீவிரமான – இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் (153, 295 அல்லது 505) கீழ் வழக்கைப் பதியவில்லை. அதற்கு பதிலாக வழக்கை சாதாரண தாக்குதலாக பதிவு செய்துள்ளது.

பழ விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அஜய் சிங், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சமூக விரோத சக்திகளால் இந்த தாக்குதல் நடந்துள்ளது என கூறுகிறார். விற்பனையாளர்கள் சட்டவிரோத ‘வசூல்’ மற்றும் அதிகாரிகளின் துன்புறுத்தல் குறித்து தன்னிடம் புகார் அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார். “நீண்ட காலமாக, இந்த இனவாத திட்டம் வெளிப்புற நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்டது. இது அமைதியை சீர்குலைக்கும் மற்றும் அப்பகுதியில் கலவரத்தைத் தூண்டக்கூடும் என நான் போலீசில் புகார் செய்தேன்” என்கிறார் சிங்.

ஒரு வருடத்திற்கும் மேலாக முசுலீம் விற்பனையாளர்களை குறிவைத்து இந்துத்துவா குண்டர்கள் பல வெறுப்புணர்வை தூண்டும் வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை எழுதி வருகின்றனர் என்பது சிங்கின் கருத்துக்கு வலுசேர்க்கிறது.

இந்துத்துவா சமூக ஊடக வலைப்பின்னல்களில் முசுலீம்-விரோத வன்முறையை ஊக்குவிக்கும் வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர். பல வீடியோக்களில் இடம்பெற்ற பா.ஜ.க உள்ளூர் தலைவரான ஹிமாஷு யாதவ், “இவர்களில் 90% பேர் ரோஹிங்கியாக்கள் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் அனைவரும் ரோஹிங்கியாக்கள் என்று நான் நம்புகிறேன். மக்களை தாக்கவும் கொலை செய்யவும் அவர்கள் சிறுவர்களையும் பெண்களையும் அனுப்புகிறார்கள்” என்கிறார். யாதவ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோருடன் உள்ள படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேற்கு டெல்லியில் நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, சுரேஷ் சாவன்கே சுதர்ஷன் டி.வி-யில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். யமுனா நகரில் ஒரு முசுலீம் தெரு விற்பனையாளரின் வண்டியில் ‘குப்தா’ என்ற வார்த்தையை வண்ணம் பூசி அழிக்கும் இந்துத்துவ குண்டர்களின் வீடியோ அது. வெறுப்புணர்வை தூண்டும் அந்த வீடியோவை சாவன்கேவும் ட்வீட் செய்து, “மியான் 18 ஆண்டுகளாக குப்தா என்ற பெயரைப் பயன்படுத்தி பர்கர்களை விற்றுக் கொண்டிருந்தார்” என முசுலீம்களை மோசமாக அழைக்கும் சொல் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார். “மக்கள் அதை அகற்றினர். விழித்திருங்கள் விழித்திருங்கள்.” எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த வார இறுதியில் பஜ்ரங் தளத்தின் பெயரைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் முசுலீம்களை பொருளாதார ரீதியில் புறக்கணியுங்கள் என அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து, போலீசுத்துறை இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஒரு திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரம்

உத்தம் நகரில் உள்ளூர் கடைக்காரர்களின் போராட்டத்தை வகுப்புவாதமாக்கியது, நீண்டகால இந்துத்துவ பிரச்சாரத்தின் விளைவு. இது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சில முக்கியத்துவங்களைப் பெற்றுள்ளது. 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லியில் நடந்த முசுலீம் எதிர்ப்பு வன்முறைக்குப் பின்னர், 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதியன்று இந்தியா கேட்டில் ஒரு ஆர்ப்பாட்டம் என சுதர்சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்க்கே அழைப்பு விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஒரு வாரம் இந்தத் தொலைக்காட்சி விவாதங்கள் “கலகக்காரர்களை” பொருளாதார ரீதியாக புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்தன. இந்த “கலகக்காரர்கள்” யார் என்று சவாங்கே குறிப்பிடவில்லை. ஆனால் அவர் முசுலீம்களைக் குறிப்பிடுவதாக கிராபிக்ஸ் மற்றும் விவரிப்பு மூலம் வலுவான குறிப்புகளைக் கொடுத்தார்.

கபில் மிஸ்ராவுடன் வினோத் சர்மா.

“உங்கள் தொண்டையை அறுப்பதை தடுக்க நீங்கள் விரும்பினால், உங்கள் பணத்தை இப்போது அவர்களின் ‘பச்சை அங்கிக்கு’ நன்கொடையாக தருவதை நிறுத்த வேண்டும்,” என சாவாங்கே தனது சேனலில் மார்ச் முதல் வாரத்தில் போராட்டங்களை ஏற்பாடு செய்தபோது கூறினார். அவர் “கலகக்காரர்களை” இவ்வாறு விவரித்தார்: “அவர்கள் எங்கள் இராணுவத்தை விட அதிக பணம் பெறுகிறார்கள். இந்த கலவரக்காரர்களுக்கு இராணுவத்தை விட அதிக பணம் கிடைத்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? முடி திருத்துபவர்களிடம் கூட ரூ.11,000 கோடி பொருளாதாரம் உள்ளது! … நீங்கள் கலகக்காரர்களின் தொழில்களின் பட்டியலை உருவாக்கினால், முடிதிருத்தும் தொழிலாளர்கள், தச்சர்கள், பஞ்சர் ஒட்டுபவர்கள், பழ விற்பனையாளர்கள் மற்றும் மிக முக்கியமாக இறைச்சி வணிகங்களில் அவர்கள் வல்லுநர்களாக உள்ளது தெரியும்”

முசுலீம் சமையல்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் தயாரிக்கும் உணவில், நோய்களை பரப்பும்பொருட்டு ‘துப்பி’ தருவதாகவும் ஒரு பொய்யான கோட்பாட்டை இந்துத்துவ கும்பல் பரப்பி வருகிறது.

சத்ய சனாதன் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்து இளைஞர்கள் சில வேலைகளில் இருந்து முறையாக நீக்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா கூறுகிறார்.  “இந்துக்களின் பொருளாதார வாய்ப்புகளை திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார்கள். இந்த நாட்களில் முடியை வெட்ட இந்து முடிதிருத்துநர் ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். புதிய வேலைகளில், அவர்கள் [முசுலீம்கள்]வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதை நாம் மாற்ற வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க, இந்து சுற்றுச்சூழல் அமைப்பு, அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும். ”

சில முறைசாரா வேலை பிரிவுகளில் முசுலீம் ஆதிக்கம் என்ற பொருளில் மிஸ்ரா மற்றும் சாவாங்கே ஆகியோரின் எண்ணங்கள் மற்றொரு வலதுசாரி இந்து அமைப்பான சுதர்சன் வாகினியின் வினோத் சர்மா எதிரொலிக்கிறார். ஜூன் 20-ஆம் தேதியன்று உத்தம் நகரில் நடந்த போராட்டத்தில் ஷர்மா ஒரு முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். மேலும் அவர் முசுலீம் வணிகங்களின் பொருளாதார புறக்கணிப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த ஆண்டு, அவர் தனது குடியுரிமை (திருத்த) சட்ட ஆதரவு போராட்டங்களில் மிஸ்ராவுடன் இணைந்து செயல்பாட்டார்.

‘எந்தவொரு வியாபார நோக்கத்திற்காகவும் இந்த கிராமத்தில் முசுலிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்ட பேனர்.

இந்துத்துவா கும்பலின் ‘ரெடி ஜிஹாத்’ பிரச்சாரத்தின் குறிக்கோள், முசுலீம்களை பொருளாதார ரீதியாக முடக்கி, அவர்களை இந்தியாவில் முறைசாரா வர்த்தகம் மற்றும் சமூக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்த இலக்கை அடைய, வலதுசாரி ஆர்வலர்கள் இந்தியாவின் முசுலீம்கள் இந்து வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை கையகப்படுத்த சதி செய்கிறார்கள் என்ற அச்சத்தை பரப்பினர். இது இந்துத்துவ குறுங்குழு பிரச்சாரமாக மட்டும் நின்றுவிடவில்லை. 2020-ம் ஆண்டில் தப்லிகி ஜமாஅத் மீதான ஊடக குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அது அதிக மதிப்பைப் பெற்றது. பா.ஜ.க எம்.எல்.ஏக்களும் வலதுசாரித் தலைவர்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் முசுலீம் வணிகர்கள் நுழைவதைத் தடுத்தனர். கிராமங்களுக்கு வெளியே பலகைகளை ஒட்டினர். முசுலீம்கள் ஊருக்குள் நுழைவைத் தடை செய்தனர். இந்து விற்பனையாளர்களின் வண்டிகளுக்கு காவிக் கொடி கட்டி அனுமதித்தனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய தள்ளுவண்டி வியாபாரி கூட்டமைப்பு, பொது முடக்கத்தின் முசுலீம் விற்பனையாளர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், தடுத்து நிறுத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், மேலும் முழுமையான தண்டனையின்றி செயல்படும் கண்காணிப்பு குழுக்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் சிலரால் ஊக்கமளிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகின்றன” என அந்த அறிக்கை கூறியது.

முறைசாரா பொருளாதாரத்தை சுருக்கியதன் விளைவு

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சட்டம் மற்றும் ஆளுமை ஆய்வு மையத்தின் உதவி பேராசிரியர் கசலா ஜமீல், முசுலீம்களின் வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்ட இந்துத்துவ பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை விளக்கினார்.

“இந்தியாவில் முறைசாரா துறையில் தொழிலாளர் சந்தை பிரிவுகள் பெரும்பாலும் சாதி மற்றும் உறவு வலைப்பின்னல்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் சில சாதிகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் சில தொழில்களில் வேலை செய்வதை நீங்கள் காண்பீர்கள். முசுலீம்கள் சில துறைகளாக பிரிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘பஞ்சர் வாலா’ என்ற சொல் முசுலீம்களை சிறுமைப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் நிறைய ஆட்டோமொபைல் மெக்கானிக்குகள் முசுலீம்கள்” என்கிறார் அவர்.

“நுட்பமான பாகுபாடு, வெளிப்படையான விரோதப் போக்கு, இலக்கு வைக்கப்பட்ட வன்முறை மற்றும் மாசு மற்றும் தூய்மை பற்றிய சாதி அடிப்படையிலான கருத்துக்களை உள்ளடக்கிய சிக்கலான செயல்முறைகள் மூலம், முசுலீம்கள் மிக மோசமான பணியினைக் கொண்ட பிரிவினராக பிரிக்கப்படுகிறார்கள். குறைந்த ஊதியம், குறைவான இலாப விகிதங்கள், கண்ணிய குறைவு, ஆனால் துன்பங்கள் அதிகம். ஏனெனில் இந்த வேலைகள் மற்றவர்களால் விரும்பப்படாதவை அல்லது மற்றவர்களுக்கு எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பதால் இந்த பிரிவுகளில் அவர்கள் இடத்தை எடுக்க முடிகிறது.  இந்த பிரிவுகளில் தெரு விற்பனையும் ஒன்றாகும்” என்கிறார் கசாலா ஜமீல்.

உத்தம் நகரில் சந்தையில் ரோந்து செல்லும் பாதுகாப்புப் படையினர்

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2020-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட நீண்டகால பொதுமுடக்கத்தின் காரணமாக முறைசாரா பொருளாதாரத்தில் பெரிய அளவிலான சுருக்கம் இந்த பிரச்சாரங்களை வினையூக்குகிறது என அவர் நம்புகிறார். எப்போதும் இருக்கும் முசுலீம்-விரோத தப்பெண்ணங்கள் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அல்லது இந்து வாழ்வாதாரத்தின் மீதான பொருளாதார தாக்குதல்கள் தொடர்பான அச்சத்தைத் தூண்டும் வகையில் மறுவடிவமைக்கப் படுகின்றன எனவும் அவர் கூறுகிறார்.

“அவர்கள் முசுலீம்களை அதிக தொழிலாளர் பிரிவுகளிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள். பல முசுலீம்களை தெருக்களில் பழம் மற்றும் காய்கறி விற்கும் வியாபாரத்திலிருந்து வெளியேற்றுவது வெற்றிகரமாக இருக்கலாம், ஆனால் இதுவரை, பல இந்து தொழிலாளர்கள் இந்த பிரிவில் பணியாற்ற தயாராக இல்லை” என கசாலா ஜமீல் விளக்கினார்.

‘இனப் படுகொலைக்கான பாதை’

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜெனோசைட் வாட்சின் நிறுவனத் தலைவரும், தலைவருமான கிரிகோரி ஸ்டாண்டன் இனப்படுகொலையின் பத்து நிலைகளில் புறக்கணிப்புகள் மூலம் பாகுபாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது என விவரித்தார்.

கடந்த காலத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை பொருளாதார புறக்கணிப்பு பிரச்சாரங்கள் இறுதியில் வெகுஜன வன்முறைக்கு வழிவகுத்தன. இன்று சாவன்கே மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலவே, நாஜிகளும் யூதர்கள் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்துவதாகக் கூறும் சதி கோட்பாடுகளை தயாரித்து பிரச்சாரம் செய்தனர். பின்னர், இந்த ‘தீவிர யூத செல்வாக்கை’ பொருளாதாரத்திலிருந்து அகற்றுவது அவர்களின் பணியாக மாற்றியது. 1933-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த “ஜூடன்பாய்காட்” (யூத புறக்கணிப்பு), சாதாரண ஜெர்மானியர்கள் நாஜி அழைப்பை புறக்கணித்ததால் குறிப்பாக வெற்றிபெறவில்லை. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1938-ஆம் ஆண்டில், நாஜிக்கள் கிறிஸ்டல்நாட்ச் படுகொலையில் நேரடியாக விஷயங்களை எடுத்துக் கொண்டனர்.

படிக்க :
♦ தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
♦ யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

இந்தியாவில், விஸ்வ இந்து பரிஷத் தலைமையிலான வலதுசாரி குழுக்களால் விநியோகிக்கப்பட்ட வெறுப்புணர்வை தூண்டும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் முசுலீம்-விரோத படுகொலையின் போது பயன்படுத்தப்பட்டன. மிக சமீபத்தில் ஆசியாவில், மியான்மரின் தீவிர பழமைவாத தேசியவாதி அஷின் விராத்தின் 969 இயக்கம் முசுலீம் வணிகங்களை புறக்கணித்தது. இது ரோஹிங்கியாக்களின் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருந்தன.

‘அடிப்படை மனித உரிமைகளை மீறுதல்’

தன்வீர் கூறினார், “லத்திகள் அல்லது வேறு எந்த ஆயுதத்தையும் வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வது, ஒரு சமூகத்தை புறக்கணிப்பதை வெளிப்படையாக ஆதரிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது. மேலும் இது இந்துக்கள் மற்றும் முசுலீம்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. அதிர்ச்சியூட்டும் வகையில், போலீசுத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தப்லிகி ஜமாஅத் ஊடக பொய் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் முசுலீம்களை புறக்கணிக்குமாறு தொடர்ச்சியான அழைப்புகளை விடுத்தபோது, வழக்கறிஞர் முகமது அஃபீப், அரசியலமைப்புக்கு விரோதமானது, குற்றவியல் தன்மை கொண்டது என எழுதினார். இதுபோன்ற புறக்கணிப்பு அழைப்புகள், அடிப்படை சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுகின்றன என்கிறார்.


கட்டுரையாளர் : அலிசன் ஜாஃப்ரி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : கலைமதி
செய்தி ஆதாரம் : The Wire

உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்

உத்தரப்பிரதேச பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. எப்படி வெற்றிபெற்றது. அதன் அர்த்தம் என்ன?

த்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 பதவிகளில் 67 இடங்களை பா.ஜ.க.வும் சமாஜ்வாதி கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பா.ஜ.க.-வுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் அப்படித்தானா என்பதைப் பார்க்கலாம். இது தொடர்பாக பிபிசி-யின் இந்தி சேவையின் செய்தியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் படித்தால், இந்த வெற்றியின் அர்த்தம், அதன் பின்னணியை புரிந்துகொள்ளலாம்.

படிக்க :
♦ உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

மொத்தமுள்ள 75 இடங்களில் 22 இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் 21 இடங்கள் பா.ஜ.க-வுக்கும் 1 இடம் சமாஜ்வாதி கட்சிக்கும் கிடைத்தது. மீதமுள்ள 53 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டதில் 46 இடங்களைப் பா.ஜ.க.-வும் ஐந்து இடங்களை சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தை ஆர்.எல்.டி.-யும் ஒரு இடத்தை ஜன்சட்டா தளமும் வென்றிருக்கின்றன.

அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த வெற்றிகளை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமென்றே பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படியில்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர்.

இங்குதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 3052 இடங்களில் பா.ஜ.க. 603 இடங்களையே பிடித்தது. மாறாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 842 இடங்களில் வெற்றிபெற்றது.

பெரும்பான்மையான இடங்களை சுயேச்சைகளே கைப்பற்றினர். இந்த சுயேச்சைகள்தான் இப்போது பா.ஜ.க.-வால் விலைக்கு வாங்கப்பட்டு, பெரும்பாலான தலைவர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்த்து காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், பெரும்பாலன இடங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

“இந்தத் தேர்தலை செமி – பைனல் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். மக்களே வாக்களிக்காதபோது அதை எப்படி செமி – ஃபைனல் என்று சொல்லலாம்? வேண்டுமானால் ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலை செமி – ஃபைனல் என்று சொல்லலாம். அதில் பெரும்பலான இடங்களை சமாஜ்வாதி கட்சிதான் பிடித்தது. அரசின் ஆதரவுடன்தான் இம்மாதிரி தேர்தல்கள் வெல்லப்படுகின்றன” என்கிறார் உ.பியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கலகன்ஸ்.

தவிர, இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி-யும் காங்கிரசும் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு சுயேச்சை உறுப்பினருக்கும் லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டது. ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சைகள் உடனடியாகக் கடத்தப்பட்டு, தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க-வின் பிடியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், கடந்த மூன்று முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மூன்று முறையும் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததோ, அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

“2010-ம் ஆண்டில் மாயாவதியின் பி.எஸ்.பி பெரும்பாலான தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2012-ம் ஆண்டில் பெரும்தோல்வியடைந்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2017-ம் ஆண்டில் பெருந்தோல்வியைச் சந்தித்தது. இப்போது பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார் சித்தார்த்.


முரளிதரன் காசி விஸ்வநாதன்
முகநூலில் : K Muralidharan
disclaimer

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

0

ழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டான்சுவாமி இன்று (05/07/2021) பிற்பகலில் மரணமடைந்தார். ஸ்டேன்சுவாமியின் மரணம், மக்களுக்காகப் போராடுபவர்களை ஒழித்துக்கட்டும் அரச பயங்கரவாதப் படுகொலையின் நேரடி சாட்சியாகும்.

ஜார்கண்ட் மாநிலப் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் போராடி வந்தவர் பாதிரியார் ஸ்டான்சுவாமி. உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெறாமல், கார்ப்பரேட்டுகளின் இலாப வெறிக்காக துரத்தியடிக்கப்பட்ட பழங்குடியின, மலைவாழ் மக்களின் பிரச்சினைகளுக்காக பல்வேறு சட்டரீதியான போராட்டங்களை மேற்கொண்டவர் ஸ்டான்சுவாமி.

பாசிச பாஜக அரசின் பழங்குடியின மக்கள் விரோத நிலைப்பாட்டை தமது தொடர் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி எல்கார் பரிஷத் ‘சதி’ வழக்கில் என்...-வால் (NIA) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்க :
♦ சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு கோவிட் தொற்று !
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !

சமூகச் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு என்றே புனையப்பட்ட எல்கார் பரிஷத் வழக்கில், மாவோயிஸ்ட்டுகளோடு சேர்ந்து பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

84 வயதான பாதிரியார் ஸ்டான்சுவாமி, நடுக்குவாத நோயால் (நரம்புத் தளர்ச்சி) பாதிக்கப்பட்டிருந்தார். கேட்கும் திறனையும் படிப்படியாக இழந்து வந்திருந்த அவர், சிறையில் நிற்க முடியாமல் பல முறை கீழே விழுந்து உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கைநடுக்கம் காரணமாக தண்ணீர்க் குவளையைக் கூட கையில் எடுத்து குடிக்க முடியாத நிலையில், அவர் தமக்கு குடிப்பதற்கு சிப்பர் (உறிஞ்சு குழாய் கொண்ட தண்ணீர் குவளை) வேண்டுமென்று கோரியிருந்தார். அதைக் கூட கொடுக்காமல் மறுத்தது சிறை நிர்வாகம்.

இதற்கு எதிராக என்... சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பதிலளித்த என்..., அவருக்கு சிப்பர் கொடுப்பது குறித்து பரிசீலிப்பதற்கு 20 நாள் அவகாசம் கேட்டது. இதுவே வக்கிரம் என்றால், என்...-வின் கோரிக்கைக்கு நீதிமன்றமும் அனுமதியளித்ததுதான் வக்கிரத்தின் உச்சம்.

போராட்டக் களத்தில் பாதிரியார் ஸ்டான்சுவாமி

சிறையில் ஸ்டான்சுவாமியின் உடல்நிலை மேலும் மோசமாகிப் போன சூழலிலும், அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது நீதிமன்றம். கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸ்டான்சுவாமி அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் தான், ஸ்டான்சுவாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிறையில் முறையான சிகிச்சை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு முற்றிய நிலையில்தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து போயிருக்கிறார் ஸ்டான்சுவாமி.

ஸ்டான் சுவாமி மரணம் என்பது நோயால் ஏற்பட்ட மரணம் அல்ல. சமூகச் செயற்பாட்டாளர்களை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலும், இந்தக் கும்பலுக்கு அடியாள் வேலைபார்க்கும் என்..வும் இவர்களுக்குத் துணை நிற்கும் நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையாகும்.

இதுவரையில் எல்கர்பரிஷத் வழக்கில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் என 20-க்கும் மேற்பட்டவர்களை மோடியைக் கொல்ல மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறி ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது என்...

இந்த வழக்கில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவரான ரோனா வில்சனின் மடிக் கணிணியிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு சதிக் கடிதத்தை, முகாந்திரமாக வைத்தே, இவ்வழக்கில் அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் கைது செய்தது. ஆனால் இந்தக் கடிதம் வெளியிலிருந்து ஒரு தீமென்பொருள் மூலமாக ரோனா வில்சனின் கணிணிக்குள் நுழைக்கப்பட்டது என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

படிக்க :
♦ மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

நீதிமன்றம் யோக்கியமானதாக இருந்திருக்கும் பட்சத்தில், போலியானது மற்றும் சதித்தனமாக திணிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்ட அந்த சதிக்’ கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைத்து சமூகச் செயற்பாட்டாளர்களையும் வழக்கிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அவர்கள் மீது போடப்பட்ட ஊபா சட்டப் பிரிவையாவது ரத்து செய்து அவர்கள் அனைவருக்கும் பிணை அளித்திருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களின் வயதையும் கருத்தில் கொள்ளாமல் அவர்களை சிறையில் வைத்து விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி அவர்களை சித்திரவதை செய்திருக்கின்றது, நீதிமன்றம். அதில் உச்சபட்சமாக, பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு விசாரணைக் காலத்திலேயே மரண தண்டனையை வழங்கியிருக்கிறது.

விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் நடைமுறையின் மூலம், மக்களுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களை பாசிச ஆர்.எஸ்.எஸ். – மோடி கும்பல் அச்சுறுத்துவதற்குத் துணை போயிருக்கிறது நீதித்துறை.

ஸ்டான் சுவாமியின் மரணம், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே ஏற்பட்ட வெட்கக் கேடு. ஆனால் இன்னமும் அதை உணரக் கூட முடியாத அளவிற்கு அனைத்தையும் உதிர்த்துவிட்டு அமர்ந்திருக்கிறது இந்திய நீதித்துறை.

இன்று ஸ்டான் சுவாமி அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அடுத்து படுகொலை செய்யப்படுவதற்காக சாய்பாபா, ஆனந்த் தெல்தும்டே, சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, சோமா சென் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ஸ்டான் சுவாமியை இழந்துவிட்டோம். அரசின் மக்கள் விரோதத் தன்மைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திய பிற சமூகச் செயற்பாட்டாளர்களையும் அடுத்ததாக இழக்கப் போகிறோமா ?

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலுக்கு கைக்கூலியாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) ஒட்டுமொத்தமாகக் களைக்கவும், விசாரணைக் காலத்தையே தண்டனைக் காலமாக்கி செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்படும் ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கறுப்புச்சட்டங்களை ரத்து செய்யவும் வீதியில் இறங்கிப் போராடுவதே பாதிரியார் ஸ்டான்சுவாமிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும் !


சரண்

ஓட்டுனர்களைச் சுரண்டும் ஓலா – ஊபர் நிறுவனங்கள்! || நிதி குமார்

டந்த ஜூன் 30-ம் தேதி புதன்கிழமை அன்று ஓலா ஊபர் ஓட்டுனர்கள் தன்னெழுச்சியான ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்கள் வெறும் ஆப்பை மட்டும் வைத்துக் கொண்டு தங்களிடம் 30% கமிஷனை வாங்குகின்றனர் என்றும் டீசல் விலை ரூ.50 இருந்தபோது எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்தார்களோ அதே தொகையை இன்று டீசல் விலை ரூ.94 கடந்து விட்ட பின்பும் நிர்ணயம் செய்கின்றனர் என்றும் தொழிலாளர்கள் குமுறினர்.

கிட்டத்தட்ட ரூ.100-ல் ஒரு ட்ரிப் எடுத்தால் அதில் ரூ.30 ஓலா-ஊபர் மாதிரியான நிறுவனங்களுக்கும் பெட்ரோலுக்கு ஒரு ரூ.40-50 என்று போக கைக்கு ரூ.10-20 தான் நிற்கின்றது என்று கூறுகின்றனர் ஓட்டுநர்கள். இந்த பணத்தை வைத்துக் கொண்டு EMI  கட்டுவதா வீட்டை பார்ப்பதா இதனை வைத்து கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று புலம்புகின்றனர்.

படிக்க :
♦ ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
♦ ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

ஆகவே, ஓலா ஊபர் மாதிரியான நிறுவனங்களின் 30 சதவீத கமிஷனை 10 சதவீதமாக குறைக்கவும் நிலவுகின்ற டீசல் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அரசே தொடர்ச்சியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டி கடந்த புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் சங்க மற்ற தொழிலாளர்கள் அதாவது வாட்ஸ்அப், டெலிகிராம் மாதிரியான குரூப் மூலமாக இணைந்தவர்கள். தற்போதுள்ள சங்கத்தின் மீது அவநம்பிக்கை உள்ளவர்களும் கூட. அந்த வகையில் தன்னெழுச்சியாக இந்தப் போராட்டம் புதன்கிழமை அன்று தொடங்கியது.

இந்த போராட்டம் தெரியாமலோ அல்லது தெரிந்தும் பணத்திற்காக சில ஓட்டுநர்கள் ஓலா ஊபரில் வாகனம் ஓட்டவே செய்தனர். கடந்த புதன், வியாழன் கிழமைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களே அவர்களை மடக்கி வேலை நிறுத்தத்தை பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தங்களுடன் போராட்டத்தத்தில் இணைத்துக் கொண்டனர். அந்த வகையில் கடந்த இரு நாளும் போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

சங்கம் இல்லாமல் இணைந்த இந்த தொழிலாளர்கள் மற்ற அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் ஆதரவையும் கோரினர். ஆனால், ஓட்டுனர் சங்கங்கள் தனித்தனியாக இந்த மாதிரியான வேலை நிறுத்தத்தினால் எந்த பலனும் கிடைக்காது; ஆகவே ஒற்றுமையாக ஒரு ஓட்டுநர் கூட்டமைப்பின் சார்பாக ஒரு மாபெரும் போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தின் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர். அதனை ஏற்று இன்று கிட்டத்தட்ட 2000-த்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் அந்தப் போராட்டக் களத்தில் இணைந்தனர்.

ஆரம்பத்தில் ஓட்டுநர் கூட்டமைப்பின் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து கமிஷனரை சந்தித்து இந்தப் போராட்டத்தைப் பற்றிய மனுவைக் கொடுத்து, இந்த போராட்டம் சம்பந்தமாக பேசினர். ஆனால், அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மனுவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; பிறகு ஆலோசித்து பதில் சொல்கிறோம் என்று கூறிவிட்டனர். ஆனால், அதனை ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

அதன் விளைவாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஓட்டுநர்களின் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் பேசிய பின்னர் ஜூலை 9-ஆம் தேதி இதனைப் பற்றி முடிவெடுப்பதாக அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனையும் ஓட்டுநர்கள் யாரும் ஏற்கவில்லை.

This slideshow requires JavaScript.

இது இந்த போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றே ஓட்டுநர்கள் கருதினர். அதனால் அதன் பிறகும் ஓட்டுனர்கள் கலையாமல் அதே இடத்தில் உட்கார்ந்து போராடியபடி இருந்தனர். இவ்வாறு இருக்க காலையில் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் வந்து தொழிலாளர்களிடம் பேசுகையில் இத்தனை லட்சம் ஓட்டுனர்கள் இருக்கிறார்கள் நாம் மிகக் குறைவே அவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியதை கேட்ட  தொழிலாளர்களே சங்க நிர்வாகிகளை கோபமாகப் பேசி அங்கிருந்து வெளியேற்றினர்.

இயல்பாகவே தொழிலாளர்களிடம் ஊறிப்போன சங்கம் வேண்டாம், சங்கம் வந்தால் போராட்டத்தை கெடுத்துவிடும் என்ற சிந்தனையும், சங்கங்களும் அதனை சரிவர கையாலாததால் சங்க நிர்வாகிகளை அங்கிருந்து தொழிலாளர்களே திட்டித் தீர்த்தனர். அதன் விளைவாக ஒவ்வொரு சங்கங்களும் சங்க நிர்வாகிகளும் படிப்படியாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.

முன்பெல்லாம் ஒரு போராட்டம் தொடங்கப்பட வேண்டும் எனில் சங்கமாக இணைய வேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருந்தது. அவர்கள் போராட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்றும் எப்போது தொடங்க வேண்டும், அதன் கோரிக்கைகள் என்ன, அந்த போராட்டத்தின் காலம் எவ்வளவு, எப்போது முடிக்க வேண்டும் என்ற அனைத்து திட்டமிடல்களும் நடக்கும். ஆனால் இப்போது பல சங்கங்கள் அவ்வாறு இல்லாமல் இருப்பதால் தொழிலாளர்கள் பலர் இந்த சங்கங்களின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

சங்கங்கள் வந்தால் போராட்டம் கலைந்துவிடும் என்ற அளவுக்கு இறுதியாக இந்த போராட்டம் கலைந்து தொழிலாளர்கள் செல்லும்போது கூடவும் சங்கத்தினால் தான் போராட்டம் கலைந்தது என்று அவர்கள் கூறியபடியே சென்றனர்.

ஆகவே சங்கத்தினால் தொடங்கப்பட்ட போராட்டம் போய் சங்கமே போராட்டத்தை கலைக்கும் எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் வெகுவாக ஊறிப் போயிருக்கிறது.

முக்கியமாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த எண்ணம் வளர்ந்து வருகிறது. அது அமைப்பு மறுப்பியல் என்ற சிந்தனையில் தொழிலாளர்கள் ஊறி போய் உள்ளனர். ஆனால் எந்த ஒரு போராட்டமும் சரியான அமைப்பு வழிகாட்டுதல் இல்லை எனில் வெற்றியடைய முடியாது என்பதே நிதர்சனம்.

அமைப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி விவாதிக்கலாம். ஆனால் அமைப்பே கூடாது என்பது சரியல்ல. அதே வகையில் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடம் முறையாக பேசி அவர்களின் கோரிக்கைகள் என்ன அவற்றை எவ்வகையில் வழி நடத்தினால் கொண்டு செல்ல முடியும் என்றும் சரியாக விளக்காமல் ஒரு தொழிலாளர்களிடம் இருந்து  அந்நியப்பட்ட மனநிலையையே தொழிற்சங்கங்கள் வகித்து வருகின்றன.

சொல்லப்போனால் சங்கங்கள் நடத்தும் பெரும்பாலான போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக இருப்பதும் தொழிலாளர்களின் விரக்திக்கு ஒரு முக்கியமான காரணம். ஆனால் இந்த போராட்டம் அடையாளப் போராட்டமாக இல்லாமல்; பலர் பெரும் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் இருந்த விரக்தியின் விளைவாய் தொடங்கப்பட்ட போராட்டம்.

போராட்டமே கூடாது என்று சொல்லும் நடுத்தர வர்க்க மக்கள் தான் தங்களுடைய சுயவாழ்க்கையின் வெளிப்பாடாய் விரக்தியில் போராட்டமே தீர்வு என்ற முறையில் வீதிக்கு வந்து இருக்கின்றனர். அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய சங்கமும் வழி நடத்தவில்லை. அவர்களுடைய அமைப்பு மறுப்பியல் சிந்தனையும் சங்கமாக அவர்களை இணைய அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் இரண்டாவது பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த தொழிலாளர்களிடம் அமைச்சர் பேசினார். 9-ஆம் தேதி இதைப் பற்றி விவாதிப்பதை கூறியிருக்கிறார். நமது கோரிக்கைகளை கேட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். மற்ற தொழிலாளர்கள் அமைச்சர் இங்கே வந்து எங்களிடம் அதை நேரடியாகச் சொன்னால்தான் என்ன? அமைச்சரை வர சொல்லுங்கள் என்று கூச்சலிட்டனர். ஆனால், அமைச்சரோ உணவருந்த சென்றுவிட்டார் என்று பேச்சுவார்த்தைக்கு போன தொழிலாளர்கள் கூறினார்கள்.

அதனைக் கேட்ட ஓட்டுனர்கள் காலையிலிருந்து மதியம் தாண்டியும் சாப்பிடாமல் இங்கே நாங்கள் அமர்ந்திருக்கிறோம் போராட்டக்களத்தில் அமைச்சர் மட்டும் அழகாய் உணவு சாப்பிட சென்றுவிடுவாரா என்று கூறினர்.

இறுதியாக காவல்துறையும் ஓட்டுநர்களை மிரட்டுவதற்கு முன்பே கைது செய்வதற்குரிய வாகனங்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு இருந்தனர். இடையிடையே உள்ளே பேசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இறுதியாக ஒன்று கலைந்து செல் அல்லது கைதாகு என்பதையே காவல்துறை கோரிக்கையாக முன்வைத்தது. இறுதியில் கைது செய்யுங்கள் என்று தொழிலாளர்கள் முன்வந்தனர். அதன் வகையில் இரண்டு அரசு பேருந்துகளில் தொழிலாளர்களை ஏற்றினர். பிறகு மனம் மாறிய தொழிலாளர்கள் அதில் இருந்து கீழே இறங்கி நாங்கள் கிளம்புகிறோம் என்று முடிவெடுத்தனர்.

ஆனாலும்கூட கூட்டத்தில் நிறைய சிறு சிறு குழுக்கள் எண்ணற்ற மாற்றுச் சிந்தனைகளோடவே இருந்தனர். சிலர் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். சிலர் நான் தீ குளிக்க போகிறேன் என்ற ஒரு வெறுப்பிலும் பேசிக் கொண்டே இருந்தனர். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருந்தது.

மக்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க அரசும் கடைசி வரையும் அங்கு வந்து பார்க்கவேவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் ஓட்டுநர்களும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.-வான உதயநிதி ஸ்டாலினும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் வந்து எங்களுக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய சில தி.மு.க. உறுப்பினர்கள் என்று சந்தேகப்படும் சில ஓட்டுநர்களும் இப்போது அமைந்திருப்பது மக்களுக்கான அரசு என்று கூறி போராட்டத்தை கலைப்பதில் உறுதியாக ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். அதனை தெளிவாக நம்மால் அங்கு பார்க்க முடிந்தது.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை சரியாக வழி நடத்தி அவர்களின் கோரிக்கையை வெற்றி பெற செய்வதற்கான செயல் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும். ஆனால், அப்படியான தொழிற்சங்க இயக்கம் குறைவாகவே உள்ளது. அதே சமயம் தொழிலாளர்களும் ஒரு சங்கமாய் அமைப்பாய் இணைந்து தங்களுடைய கோரிக்கைகளை சரியாக அணுகி அதனை எப்படி வெற்றி அடைய வைப்பது என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.

ஆனால், இங்கு இரண்டு மாபெரும் குறையாகவே உள்ளது. அடையாளப் போராட்டங்களை நடத்தும் தொழிற்சங்க இயக்கம் ஒருபுறமும் இயக்க அமைப்பு மறுப்பு சிந்தனையில் இருக்கும் தொழிலாளர்கள் மறுபுறமும் இருக்க மோடி அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத சட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

படிக்க :
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !
♦ கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !

போராட்டக் களத்தில் வந்த ஒரு ஓட்டுனர் உணர்வு ரீதியாக ஒரு கருத்தை வெளியிட்டார். கிருஷ்ணகிரியில் ரூ.2,000 கோடியில் ஓலா நிறுவனம் இருசக்கர வாகன தொழிற்சாலையில் கட்டப்போகிறதாம். அதற்கு முதலமைச்சர் ஆதரவு தருவாராம். ஆனால், அவர்களோ எங்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்துதராத இது யாருக்கான அரசு, ஓலா நிறுவனத்திற்கான அரசா? ஓட்டுநர்களுக்கான அரசா? என்று முழக்கமிட்டார். ஆனால், எவ்வகையிலும் ஒரு முதலாளித்துவ அரசு என்பது மக்களுக்கான அரசாக எவ்வாறு இருக்க முடியும்.

இறுதியாக உண்மையிலேயே இது ஒரு தன்னெழுச்சியான மாபெரும் போராட்டமாக தொடங்கியிருக்கிறது தொழிலாளர்களே இரண்டு நாட்கள் சிறப்பாக போராடி இருந்தனர். அவர்களை தொழிற்சங்கங்கள் ஒரு இடத்தில் ஒன்றிணைத்து இதை பெரிய போராட்டமாக மாற்றுவதாக உறுதி அளித்தது. ஆனால், அதன் செயல்பாடு அப்போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாகவே இருக்கிறது. இந்த போராட்டம் நாளை எவ்வாறு தொடரும் அடுத்த கட்டங்கள் எவ்வாறு நகரும் என்பதை பொருத்தே இன்றைய இந்த மாபெரும் போராட்டத்தை நம்மால் மதிப்பிட முடியும். ஆனால், தொழிலாளர்கள் சிறு குழுக்களாக இல்லாமல் ஒற்றுமையாக தங்களுக்குள்ளே அமைப்பாக திரண்டால் மட்டுமே தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

குறிப்பு : (ஜூலை, 2) அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் முழுவதுமாக உடன் நின்ற வகையில் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


நிதி குமார்

முகநூலில் : Nithi Kumar
disclaimer

காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் || மக்கள் அதிகாரம் – கடலூர்

காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் !

04.07.2021

பத்திரிகைச் செய்தி

ர்நாடக அரசு 9,000 கோடி செலவில் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு அனைத்து முயற்சியும் செய்து வருகின்றது. இந்த அணையின் மூலம் 4.75 டி.எம்.சி. தண்ணீரை குழாய் மூலம் பெங்களூருக்கு எடுத்துச் செல்வதும், 400 மெகாவாட் அளவில் புனல் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சென்ற மாதம் செய்தித்தாள் ஒன்றில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்து வருவதாக செய்தி வெளிவந்தது.

மேகதாட்டுவில் சட்டத்துக்குப் புறம்பாகவும் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், அங்கு கட்டுமான பணி நடைபெறுகிறதா என்று குழு ஒன்றை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இக்குழு ஜூன் 7-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தரவேண்டும் என்றும் சொல்லியிருந்தது.

படிக்க :
♦ டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
♦ சேலம் படுகொலை : போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் || மக்கள் அதிகாரம்

இதனை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேகேதாட்டுவில் அணை கட்டுவதன் மூலமாக காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதை உடனடியாக கர்நாடக அரசு கைவிட வேண்டும். ஓட்டுப் பொறுக்குவதற்காகவும், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

மார்கண்டேய நதியில் அணையை கட்டியதன் மூலம் கர்நாடக அரசு அந்த நதியின் கடைமடை பகுதியான கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. இதனால் 870 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

1966 ஹெல்சிங்கி தீர்மானத்தின்படி, நதி உருவாகும் இடத்தில் உள்ள மக்களுக்கு இருக்கும் அதே சம உரிமை கடைமடைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் உள்ளது.

காவிரி, மார்கண்டேயா, பாலாறு, முல்லைப் பெரியாறு என நதிநீர் பிரச்சனைகளில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் முற்போக்கு அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் உழைக்கும் மக்களும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக வருகின்ற 6/7/2021 விருதாச்சலம் பாலக்கரையில் 10:30 மணி அளவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குழுவை கலைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தொடர்புக்கு : 9791286994