Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 435

தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

நீர் நிலைகளின் புனிதம் பாதுகாக்கப் படனுமுன்னு சொல்லி தாமிரபரணி புஷ்பகர விழா (புனித நீராடலாம்) தமிழ்நாட்டுல கோலாகலமா கொண்டாடப்படுது. நாலாயிரம் போலீசுக்கு மேல பலத்த பாதுகாப்போட சிறப்பு பயண வசதிகளோட தடபுடலா நடந்துட்டு இருக்கு. நம்ம கவர்னர் கூட காவி வேட்டி கட்டிக்கிட்டு போகப்போறாராம்.

தண்ணிய மையமா வச்சு புஷ்பகரம் புனிதமுன்னு தீவிரமா நடக்குற இந்த கூத்துக்கு மத்தியில அதே தண்ணியால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கையறு நிலையில் நிக்கிறாங்க தஞ்சை டெல்டா விவசாயிகள்.

ஒரத்தநாடு பக்கத்துல உள்ள மேல உளூர் என்ற கிராமத்துல கல்லணை கால்வாயின் பிரிவான கல்யாண ஓடை ஆற்றின் இடது புற கரையில் நேற்று (8.10.2018) உடைப்பு ஏற்பட்டது. சுமார் பத்து மீட்டர் அளவுல ஏற்பட்ட உடைப்பினால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

 

உடைப்பு ஏற்பட்ட மேல உளூர் கிராமத்தைச் சுற்றி உள்ள மற்ற கிராமங்களான பருத்திக்கோட்டை, தும்பத்திக்கோட்டை, கீழஉளூர், பொண்ணாப்பூர், ஒரத்தநாடு மேலும் சில கிராமங்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

காலதாமதமாக காவிரியில் தண்ணீர் வந்ததாலும் நீர் நிலைகளின் பராமரிப்பு சரியில்லாததாலும் சம்மா பயிர் சாகுபடி பின்தங்கிப் போனது. ஏறக்குறைய நடவுப்பணிகள் இந்த ஒரு மாத இடைவெளியில் தான் நடந்துள்ளது. பயிர் வேர் பிடிக்க தொடங்கும் இந்த நேரத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

படிக்க:
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி!

ஒரு மாதம் கடந்துவிட்ட பயிர்களுக்கு போடப்பட்ட உரம் மருந்தும் தண்ணீரோடு கலந்துவிட்டது. உடைப்பு சரிசெய்யப்பட்டு வயல்களில் தண்ணீர் வடிந்த பின் மிஞ்சியுள்ள பயிர்களுக்கு மீண்டும் உரம் போட்டு சற்றேனும் பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளனர் சில விவசாயிகள்.

ஆற்றின் கரையில் நின்ற மரம் சாய்ந்து இருந்ததாகவும் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்த காரணத்தால் மரம் விழுந்து விட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கறை உடைந்து விட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆனால் நீர்நிலைகளின் பராமரிப்பு செலவுகளுக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து தஞ்சாவூர் கல்லணை கால்வாயின் குடிமராமத்து பணிக்காக ரூ 2.78 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் எந்த நிர்வாகச் சீர்கேட்டையும் அறியாத அப்பாவி விவசாயிகள் உயிரைக் கொடுத்து விவசாயம் செய்துள்ளனர். நடவு நட்டு சில தினங்களே ஆன பயிர்கள் மட்டும் பாதிக்கவில்லை. ஆள்துளை கிணற்று தண்ணீரை கொண்டு நடவு பணி செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தரையோடு சாய்ந்துள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் தாண்டி மதுக்கூர் வரை பல ஊர்களுக்கு இந்த கல்யாண ஓடை ஆற்றில் இருந்துதான் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் உயிர் விட்டு துளிர்க்கும் நிலையில் இருக்கும் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும். பயிர் வேர் விடாத நிலையில் மழை பெய்தால் பயிர் சாய்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆற்றுத் தண்ணீர் கட்டாயம் தேவைப்படும்.

இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதி நிலங்களுக்கு மட்டும் பாதிப்படைவதோடு அல்லாமல் கல்யாண ஓடை ஆற்றின் கடைசி எல்லை வரை பாதிப்பு இருக்கும். இந்த ஆற்றின் தண்ணீரை நம்பி நடவுப்பணி செய்த விவசாயிகளின் நிலை என்ன? ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது, ஏற்பட்ட இழப்பை எப்படி சரிகட்டுவது என புலம்புகின்றனர்.

படிக்க:
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

காவிரி பிரச்சனை அதையும் தாண்டி தண்ணீர் வந்தால் பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. உரம் விலை உயர்வு. விவசாய கடன்கள் கிடைப்பதில் முறைகேடு. விளைந்த நெல்லை விற்க முடியவில்லை. வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணம் எதை எடுத்தாலும் துன்பத்தில் உழல்கிறான் விவசாயி.

அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கி உலகுக்கே சோறுபோட்ட உழவனுக்கே பசியையும் பஞ்சத்தையும் ஏற்படுத்தி விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்குவதே அரசின் நோக்கம்.

சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

பரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை முதலில் வரவேற்பதாக அறிவித்த காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தற்போது தீர்ப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள். பந்தள அரச குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கலந்துகொண்ட பேரணி கேரளாவில் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற பேரணி.

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். போராட்டத்தைத் தூண்டி வருகிறது. நாங்கள் சபரிமலைக்கு போகமாட்டோம் என பெண்கள் சத்திய பிரமாணம் எடுப்பதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. தீர்ப்பு குறித்து பேட்டி கொடுத்துள்ள அரச குடும்பத்தின் வாரிசு ஒருவர் பெண்களை அனுமதித்தால் தீங்கு நிகழும் என்ற தனது அச்சத்தை தெரிவித்துள்ளார். இது போன்று பய பீதி ஊட்டப்பட்டு தான் பெண்கள் போராட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். கேரள வெள்ளத்திற்கு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தான் காரணம் என துக்ளக் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். பல ஆண்டுகளாக பிற்போக்கு தனத்தில் ஊறிய பெண்களும் இது போன்ற கருத்துக்களை நம்பி போராட்டத்திற்கு அப்பாவியாக வருகிறார்கள். அச்சத்தின் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் பந்தள அரச குடும்பமும், சங்க பரிவாரமும்.

ஒரு வேளை மக்களிடம் அப்படியாக கருத்துக்கள் இருந்தால் அதை மாற்றுவது தான் அனைத்து இந்துக்களுக்குமான அமைப்பின் கடமையாக இருக்க முடியும். ஆனால் ஒரு புறம் சக்தி என்று பேசிக்கொண்டே பெண்களை அடிமைகளாக கருதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

மக்களிடம் பீதியூட்டும் இவர்கள் அறிவுத்தளத்தில் மத விவகாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று வாதிடுகிறார்கள். ஒரு பக்கம், மக்களுக்கு பயபீதீயூட்டி கலவரத்தை தூண்டுகிறார்கள்; போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

வரலாற்றில் இது புதிது அல்ல. மதத்தில் அரசு தலையிடலாமா? என்ற கேள்வி வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த காலத்திலிருந்து பேசப்படுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பொட்டுகட்டுதல் என்ற பெயரில் நடந்த தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கு சட்டம், சமீபத்தில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் என எல்லா சீர்திருத்தங்களிலும் எழுப்பபட்டவைதான் இக்கேள்விகள். இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகள் அனைத்தும் இக்கும்பல்களை எதிர்த்து நடந்த போராட்டத்தின் விளைவுகள் தான். எதுவும் தாமாக கிடைத்துவிடவில்லை.

தற்போது சபரிமலைக்கு எதிராக பேசுபவர்களின் முன்னோர்கள் குழந்தை திருமணம் மற்றும் கோவில் நுழைவு விசயங்களில் என்ன பேசினார்கள். வரலாற்றில் யார் வென்றார்கள் என்பதை பற்றி சிறு அறிமுகம்.

1 உதாரணமாக Age of Consent Act, 1891 என்று ஒரு சட்டத்தை ஆங்கில அரசு கொண்டு வந்தது. இது எதற்கு தெரியுமா? 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் கணவர்கள் உடலுறவு கொள்வதை தடை செய்யும் சட்டம். சட்டம் திருமணத்தை தடை செய்யவில்லை குறைந்தபட்சமாக உடலுறவைத் தடை செய்கிறது.

12 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வதை தடுக்க சட்டம் போட வேண்டிய நிலைமை இருந்ததா? நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா. அதைவிட முக்கியமானது இச்சட்டத்தை லோகமானிய பாலகங்காதர திலகர் கடுமையாக எதிர்த்தார். இன்று நீதிபதி இந்து மல்ஹோத்திராவும், பிற இந்துத்துவ அறிவுஜீவிகளும் சொல்லும் அதே வாதத்தை வைத்தார் திலகர். இந்து மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றார். இவ்விவகாரம் குறித்து மேலும் படிக்க: குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

பின்னர் 1929-ல் திருமணத்திற்கு வயது வரம்பு நிர்ணயித்த போது 10 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்யாவிட்டால் பாவம் நேரும் என சத்தியமூர்த்தி உள்ளிட்ட இந்துமதவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இப்போது பெண்கள் நுழைவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவது போலவே பாவம் வரும், வெள்ளம் வரும், அழிவு நேரும் என மக்களிடத்தில் பீதியூட்டுவதும்; அறிவுஜீவி தளத்தில் இந்துமத விவகாரத்தில் தலையிடக் கூடாது என பேசுவதும் அந்த காலத்திலிருந்தே செய்திருக்கிறார்கள்.

அதைக் கண்டித்து பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அறிவுஜீவிவாதத்திற்கு பதிலடி கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பீதி உண்டாக்குவதையும் தடுத்துள்ளார். “எவ்வளவு குற்றம் செய்தாலும் தலைமுடியை வெட்டுவது, நான்கு பார்ப்பனர்களுக்கு உணவளிப்பது மூலம் அதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கு பதினாறு வயதிற்கு பிறகு திருமணம் செய்வதற்கு மட்டும் பரிகாரம் இல்லாமலா போகும். கண்டிப்பாக பாலும், பழமும் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதாகத்தான் அந்தப் பரிகாரம் இருக்கும். அதனால் சீர்திருத்தத்திற்கு கவலைப்படாதீர்கள்” என்பதாக பெரியார் எழுதியிருப்பதை குடியரசு வாயிலாக அறிய முடிகிறது.

படிக்க:
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்
பெண் விடுதலை கானல் நீரல்ல !

2 இப்பொழுது எப்படி பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டு என்கிறார்களோ அது போல நாடார்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதாக நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தினரும், பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்த முற்போக்கு சக்திகளும் போராடினர். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என தடை சொல்லும் இந்து மத ஆண்களுக்கு தாங்கள் எப்படி கோவிலுக்குள் நுழைந்தோம் என்பதை நினைவுபடுத்த தமிழகத்தில் கோவில் நுழைவு போராட்டத்தின் சுருக்கம்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01.1926 இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07.02.1927 இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப் படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (கேசரி)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில்1927 இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிர்வாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25.06.1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12. 08. 1928 இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

• தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

கோயில் நுழைவுப் போராட்டத்தில் அம்பேத்கர்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர். இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். “

– ( நன்றி தலித் முரசு மற்றும் பெரியார் முழக்கம்)

பின்னர் 1939-ல் வைத்தியநாதய்யர் நாடார்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்து சென்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரவேசம்.

இந்த போராட்டங்கள் எதுவும் தமிழகமே கொந்தளித்து எழுந்த போராட்டங்கள் அல்ல. சுயமரியாதை இயக்கத்தினர் முன்னின்று நடத்தியவை. கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதை இன்று சபரிமலைக்கு போகமாட்டோம் என்று சொல்லும் பெண்களைப் போல அன்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று கோயில் கருவறைக்குள் எப்படி செல்வதில்லையோ அது போல தங்கள் இழிவை தாங்களே அன்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வேளை மீறிப்போனால் என்ன நடக்கும். கோவில் நுழைவுப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு நேர்ந்தது தான் நடக்கும். மேலும் கேரள சி.பி.எம். அரசு இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு இல்லை என்று முடிவு எடுத்து உறுதியாக இருப்பது வரவேற்கதக்கது.

படிக்க:
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன. சபரிமலை சமரிலும் பெண்கள் வெற்றி பெறுவார்கள்.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

ருத்துவக் கருவிகள் மற்றும் மருந்து தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் முற்றிலும் தரக்குறைவான மற்றும் பயன்படுத்தத் தகுதியில்லாத ஆபத்தான கருவிகளைத் தயாரித்து, சந்தையில் விற்று காசு பார்த்து விட்டது. தங்களின் தயாரிப்புக்கள் தரமற்றவை என்பது நன்கு தெரிந்தும் அதை கமுக்கமாக மூடி மறைத்து சந்தையில் விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இப்போது கையும் களவுமாகச் சிக்கி, சில இந்திய ஊடகங்களில் அம்பலப்பட்டு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தால் தயாரிக்கபட்ட உபகரணம் ஏற்படுத்தும் பாதிப்பு

இது குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு தயாரித்த அறிக்கையில் தரக்குறைவான இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள் குறித்த தகவல்கள் தவிர கூடுதலான வேறு பல தகவல்களும் இணைக்கப்பட்டு, அந்த அறிக்கை 23.08.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும், லைவ் மிண்ட் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் ’செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள்’ பொருத்தப்பட்ட 4,700 நோயாளிகளில் 3,600 பேரைப் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை என்றும், மேலும் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட 4 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தரக்குறைவான இடுப்பெலும்புக் கருவிகளைப் பொருத்தியதன் காரணமாக, பெரும்பான்மையினருக்கு மீள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அதிலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 ஆண்டிற்குள்ளாகவே மீள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 254 பேருக்கு இடுப்பெலும்பு மீள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவில் இதே இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகளால் பாதிப்படைந்த 8,000 நோயாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக (2.47 பில்லியன் அமெரிக்க டாலர்) கொடுப்பதற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. தரக்குறைவான மருத்துவக் கருவிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகப்படியானது என லைவ்மின்ட் ஊடகம் கூறுகிறது.

ஆனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விரும்பவில்லை என்று நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும் செலவு செய்த பணத்தைத் திரும்ப கொடுப்பதையே இழப்பீடு என்பதாகக் காட்ட முனைகிறது அந்நிறுவனம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ. 20 இலட்சம் இழப்பீடு கொடுப்பதோடன்றி 2025-ம் ஆண்டு வரைக்குமான மருத்துவச் செலவுக்கான சலுகைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.

‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு மாற்று உபகரணம்

ஜான்சன் & ஜான்சனின் தரக்குறைவான ‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு அமைப்பு (ASR XL Acetabular Hip System) மற்றும் ‘ASR’ இடுப்பு மீள்பொருத்துதல் அமைப்பு (ASR Hip Resurfacing System) ஆகிய இந்த இரண்டையும் தயாரித்தது அதன் துணை நிறுவனமான ‘டெப்யூ ஆர்த்தோபீடிக்ஸ்’ (DePuy Orthopaedics Inc). அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து துறையால் 2005-ம் ஆண்டில் இந்தக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்டன. உலக அளவில் 93,000 நோயாளிகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கூறுகிறது.

இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு மற்றுமொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தக் கருவிகளின் பக்கவிளைவுகள்  குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு இக்கருவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

படிக்க:
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உண்மைகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது எனவும் இந்தக் கருவிகளை உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அந்நிறுவனம் கொடுத்துள்ள விவரங்களை, நடைமுறையில் ஏற்பட்ட பாதிப்புக்களுடன் ஒப்பிடுகையில் அவை பெரிதும் முரண்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது.

உயிருக்கே எமனாய் மாறிய இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள்

தரமற்ற இந்த செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் ஏற்படுத்திய பாதிப்புக்களால் நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டுமொருமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி இந்தக் கருவிகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோபால்ட் மற்றும் குரோமியம் அமிலங்கள் எலும்புகளிலும், இரத்தத்திலும் கசிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அதில் சிலருக்கு உறுப்புச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் சிலர் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் உயிரிழந்தனர்.

இப்படியாக இடுப்பெலும்பு மாற்றுக்கருவிகள் உயிரைப் பறித்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது மாற்றுக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து, வலியிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அந்தக் கருவிகளே தங்களுக்கு எமனாய் மாறும்போது அந்த மனிதனின் சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கேள்விக்குரியதாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை சுக்கு நூறாக்கி விடுகிறது.  நடையற்று செயல்படாமல் முடங்கிய நிலையில், அத்தனையையும் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

முகப்பூச்சு பவுடரால் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏவா எசெவர்ரியா

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக புகார் எழுப்பிய 22 பெண்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு கடந்த 2018, ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.  மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தன்னுடைய முகப்பூச்சு பவுடரில் கல்நாரை (asbestos) 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தியதை மூடி மறைத்ததாக அப்பெண்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினையில் 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் இழப்பீட்டை வழங்கத் தயாராக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் அதனைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட முயற்சிக்கிறது. ஆண்டை அமெரிக்கா தனது குடிமக்களின் நலனையும் உரிமையையும் சிறிதேனும் பாதுகாக்கிறது. ஆனால் அடிமை இந்தியாவோ தனது எஜமானனின் இலாபத்தை உறுதி செய்ய குடிமக்களின் நலனையும் உரிமைகளையும் காவுகொடுக்கிறது. அது அணு விபத்து கடப்பாடு மசோதாவாக இருக்கட்டும் அல்லது மரபணு மாற்றப் பயிர்களாகட்டும் அல்லது இந்திய மக்களை மருந்துக் கம்பெனிகளின் சோதனைச் சாலை எலிகளாக்குவதாகட்டும் இந்தியர்களின் உயிர் கார்ப்பரேட்டுகளின் முடிக்குச் சமானமாக மதிக்கப்பட்டு வந்ததே வரலாறு.

நன்றி : தி வயர்
தமிழாக்கம்:

#MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் ? கருத்துக் கணிப்பு

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் துவங்கியது #MeToo இயக்கம். தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், அதைச் செய்யும் பொறுப்பிலுள்ள ஆண்களை, சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி வருகிறார்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள்! ஈவ்டீசிங் எனும் பதமே பாலியல் துன்புறுத்தலின் தீவிரத்தை தளர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில் முன்னர் சொன்னது ஒரு தவறு, பின்னதோ ஒரு தண்டனைக்குரிய குற்றம்!

இந்த #MeToo இயக்கத்தின் மூலம் இந்தியப் பெண்களுக்கு அவர்களது பணியிட உரிமை, பாதுகாப்பாக பணியாற்றும் உரிமைகள் கற்றுத் தரப்படுகின்றது. போலவே படித்த ஆண்களுக்கும் இப்பிரச்சினையின் பரிமாணத்தை அறிமுகம் செய்கிறது.

தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர். இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையாகவே  இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர்.

இன்றைய கேள்வி: #MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
(மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)

சினிமா
ஊடகம்
தனியார் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
அரசியல் கட்சிகள்
இலக்கியம்
பல்கலைக் கழகங்கள்

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13

சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்

0

குடந்தை அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 8/10/12 அன்று இரவு உணவில் பல்லி விழுந்துள்ளது, இரவு உணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாயில் நுறை தப்பி, மயக்கம் ஏற்பட்டதும், உடனடியாக அவர்களை மற்ற விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின் மற்ற மாணவர்கள் விடுதி வாசலில் (குடந்தை – நீலத்தநல்லூர்- செயங்கொண்டம்) சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களை அதிகாரத் திமிரில் அணுகிய போலீசாரையும் அதிகாரிகளையும் துணிச்சலோடு தட்டிக்கேட்டனர், அவ்வழியே சென்ற பு.மா.இ.மு. தோழர்கள். ”சார் நீங்க எந்த ஜெயில வேணா போட்டுக்குங்க, ஆனா எங்களுக்கு தீர்வு கிடைக்கமா போமாட்டோம்” என்று உறுதியாக நின்றனர் விடுதி மாணவர்கள். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களை போலீசு வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர்.

சட்டவிரோதமான முறையில் மேல காவிரி ஆற்றுப் பாலம் அருகே வேனை நிறுத்தி மாணவர்களிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினர் போலீசார். இத்தகவலறிந்து குடந்தை பு.மா.இ.மு. அமைப்பாளரும், குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவியுமான தோழர் தமிழ், ” கொட்டும் மழையில் மாணவர்களை இங்கு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஏன் இன்னும் உணவு கொடுக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார். மண்டபம் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை என மழுப்பினர் போலீசார்.

படிக்க:
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
உரிமை கேட்டால் சஸ்பண்ட் ! குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் !

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரை வைத்து மாணவர்களிடம் நைச்சியமாகப் பேசி கலைக்க முயற்சித்தனர் போலீசார். ” ஒரு மாதத்திற்குள் விடுதி பிரச்சினைகளை சரி செய்துவிடுகிறேன் கலைந்து செல்லுங்கள்” என்றார், ஆ.தி.ந. துறை அதிகாரி. ”நீங்க சொல்ற வாக்குறுதியை அப்படியே கைப்பட கடிதமா எழுதிக் கொடுங்க கலைந்து செல்கிறோம்” என்று பு.மா.இ.மு. தோழர் கேட்டதற்கு, ” அதெல்லாம் எழுதித் தரமுடியாது” என்று திமிராக மறுத்தார் அந்த அதிகாரி.

நள்ளிரவு நேரம் என்பதும், மழை பெய்துக் கொண்டிருந்ததாலும் அடுத்தகட்டமாக போராட்டத்தை எவ்வாறு தொடர்வது என்று கலந்தாலோசித்தனர். மறுநாள் காலை (9/10/18) குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்களிடம் விடுதி மாணவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி தமது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

விடுதி மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்ட குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “சோறு கேட்டா குத்தமா… உரிமைய கேளு சத்தமா“ என்ற முழக்கத்த்தோடு சாலைமறியல் போராட்டமாக மாற்றினர். கல்லூரி முதல்வரும் போலீசாரும் மாணவர்களின் உறுதியான போராட்டத்தை கண்டு பின்வாங்கினர்.

சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தி.மு.க. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தார்.

மாணவர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, முதல்நாள் இரவு அதெல்லாம் முடியாது என்று திமிராகச் சென்ற அதிகாரிகளே மறுநாள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமானது. மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினரின் சாட்சி கையெழுத்தோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர், அரசு அதிகாரிகள்.


கும்பகோணம், பேச: 9790215184

நூல் அறிமுகம் : நிதி நெருக்கடி ஒரு புரிதல்

மிழில் பொருளாதாரச் சிந்தனைகள் குறித்த நூல்கள் குறைவாகவே வருகிறது என்கிற ஆதங்கத்தைத் தவிர்க்கிற இன்னுமொரு அரிய முயற்சி இது.

” Understanding the Financial Crisis” என அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. அமானுல்லாகான் ஆங்கிலத்தில் எழுதிய நூல் தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு.இயேசுதாஸ் அவர்களின் சிறப்பான தமிழாக்கத்தில் வெளிவந்துள்ளது.

2008 இல் உலகத்தையே உலுக்கிய நிதி நெருக்கடியை மையப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் முதலாளித்துவப் பொருளியல் தத்துவங்களின் பொய்மையைத் தகர்த்தெறிகிற அளவிற்கு இந்நூலின் நோக்கமும், ஆக்கமும் விரிந்துள்ளது… (க.சுவாமிநாதன் எழுதிய பதிப்புரையிலிருந்து பக்.5)

நிதி நெருக்கடி என்பது ஒரு மனிதனுக்கு நோய் வருவது போன்றது… இரண்டிலும் தீர்வு என்பது நோய்க்கானக் காரணங்களைக் கண்டுபிடித்து அதை குணப்படுத்துவதே ஆகும் என்கிறது உலக வங்கியின் 2009ம் ஆண்டு அறிக்கை. அரசுகளால் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. தொடர்ந்து கொண்டிருக்கும் நிதித்துறையின் பலகீனமும், அண்மையில் அரசு கடன் சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான போக்குகளும், உலகப் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவதாக 10.09.2010 அன்று வெளியான சர்வதேச நிதி நிறுவன அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. தற்போதைய கரன்சி யுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.

உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது… கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிட்டன; உலகத் தொழிலாளர் நிறுவன மதிப்பீட்டின்படி நிலைமை நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப 3-4 ஆண்டுகளாகும். வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் நிலைதான் மிக மோசமானதாகிவிட்டது. வேலையில்லா நிலைமை பற்றி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. உழைப்பு சக்திக்கான சந்தையின் பின்னடைவு நீள… நீள.. வேலை தேடுவோருக்கும் துன்பம் நீண்டு கொண்டே இருக்கிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி 35 நாடுகளில் உள்ள உழைப்பாளர்களில் 40% பேர் ஓராண்டாக வேலையின்றி உள்ளனர். அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்து மனநலம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இளம் தலைமுறை வேலைவாய்ப்பின்மையால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்பிலும் அவர்களின் தகுதிக்குத் தகாத வேவையே கிடைக்கிறது. வேலை இழப்பால் நொந்துபோன தொழிலாளர்கள் உழைப்புச் சந்தையை விட்டே ஒதுங்கிவிட்டனர். (நூலிலிருந்து பக்..87,88)

படிக்க:
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

இன்று உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வணிகம் ஒழுங்குமுறைபடுத்தப்படாதது மட்டும் காரணம் அல்ல என்பது படிப்பினை ஆகும். முதலாளித்துவம் அதன் அமைப்பிலேயே பிரச்சனைகளும், குறைகளும் நிறைந்ததாகும். இன்று உற்பத்தி சக்திகள் பெருமளவு அதிகரித்து சமூக உற்பத்தி அதகிரித்ததும் அத்துடன் உற்பத்தி உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டும் உள்ளது; ஆனால் சமூகத்தால் உற்பத்தி ஆன பொருட்கள் தனியாரின் உடமையாக உள்ளது. இதுவே முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடு ஆகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின் 1991ல் தொடங்கிய முதலாளித்துவத்தின் வெற்றிப் பயணம் நிதி வீழ்ச்சி (Financial Meltdown)யைத் தொடர்ந்து 2007ன் இறுதி காலாண்டிலிருந்து, எந்த ஒரு தீர்வும் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் பல்வேறு நிகழ்வுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. 1980 களில் சர்வதேச நிதி நிறுவனம் / உலக வங்கி அமைப்புகள் திணித்த திட்டங்களாலும், 1990 களில் சோசலிச அரசுகளின் வீழ்ச்சியாலும் நிலைகுலைந்து போன வளர்ந்து வரும் நாடுகள், இன்று உலகவர்த்தக நிறுவனம், சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலகவங்கிகளின் மூலம் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன…

படிக்க:
உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?
அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவை எல்லாம் முற்போக்கு சக்திகளின் வெற்றி அலைகளை வெகுகாலம் தடுத்து நிறுத்த முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அராஜகமாக  செயல்படும், பிரச்சனைகள் நிறைந்த, லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகத்தை எதிர்த்து புதிய உலகம் படைக்கும் நீண்ட போராட்டத்திற்கு தோழர் அமானுல்லாகானின் இந்த நூல் ஆயுதமாகப் பயன்படும். இந்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமய கொள்கைகளை மாற்றி அமைத்திடும் உடனடிப் போராட்டத்திற்கும் இந்நூல் உதவும்.  (நூலுக்கான முன்னுரையில் வெங்கடேஷ் ஆத்ரேயா, பக் 10,11)

நூல்: நிதி நெருக்கடி ஒரு புரிதல்
ஆசிரியர்அமானுல்லாகான்
(தமிழில்: இரா.இயேசுதாஸ்)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ.50.00

இணையத்தில் வாங்க:nhm.in

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !

சீனக் கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் ’கம்யூனிச’ கல்வி கட்டாயம். ஆனால், அவர்கள் எம்மாதிரியான ‘கம்யூனிசத்தை’ கற்க வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும்.

சீன கம்யூனிஸ்டு கட்சி சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்ட  ஆண்டு 1992 என்றாலும் அதற்குத் தேவையான அடித்தளத்தை 1978 -ல் இருந்தே போடத் துவங்கி விட்டது. ‘சோசலிச சந்தைப் பொருளாதாரம்’ என ஒன்றுக்கொன்று பொருந்தாத சொற்களால் தனது நவீன திரிபுவாதத்திற்கு விளக்கமளித்தது சீன கம்யூனிஸ்டு கட்சி.

எனினும், அந்நாட்டின் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கம்யூனிச கல்வி அளிக்கும் நடைமுறை அவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்தது. தற்போது இருபதுகளில் இருக்கும் மாணவர்கள் பலர் சொந்த முறையில் கம்யூனிச தத்துவங்களைக் கற்றுக் கொள்ள படிப்பு வட்டங்களை அமைத்து மார்க்ஸ், லெனின், மாவோவின் படைப்புகளைப் படித்து விவாதித்து வருகின்றனர். விளைவு? இந்த மாணவர் குழுக்கள் தங்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் போராட்டங்களுக்கும், வெளியில் நடக்கும் தொழிலாளர் போராட்டங்களுக்கும் ஆதரவாக களமிறங்கத் துவங்கியுள்ளன.

இளம் கம்யூனிஸ்டுகள் என அறியப்படும் இம்மாணவர்கள் கடுமையான அரசு அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் அதே சமயம் களப் போராட்டங்களிலும், சித்தாந்தப் போராட்டங்களிலும் துணிச்சலுடன் முன்னேறிச் செல்கின்றனர். அவ்வாறான மாணவர்களில் ஒருவர் தான் யூயீ ஜின்.

*****

யூயீ ஜின் (Yue Xin) 21 வயதேயான கல்லூரி மாணவி. பீகிங் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வரும் யூயீ, அதே பல்கலைக்கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கை அரசு தரப்பில் இழுத்தடித்துக் கொண்டிருப்பதை எதிர்த்து தனது சக மாணவர்களைத் திரட்டிக் களமிறங்குகிறார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் உலகளலவில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் முன்னெடுத்த #MeToo இயக்கம் சீனாவிலும் மெல்லப் பரவியது. அந்த சமயத்தில் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பின் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு மாணவர்களைத் திரட்டத் துவங்கினார் யூயீ.

சென்ஷென் பகுதி மாணவர்கள் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், சீரழிந்து போயுள்ள போலீசு துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், (படம் : நன்றி – நியூயார்க் டைம்ஸ்)

சமூக வலைத்தளங்களிலும் இயங்கி வரும் யூயீ, “சீனாவில் மார்க்சிய தத்துவம் ஒரு கட்டாயப் பாடம் தான்… ஆனால், நீங்கள் உண்மையான மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதை உங்கள் சொந்த முயற்சியில் தான் மேற்கொள்ள வேண்டும்” எனப் பதிவு செய்துள்ளார். மேலும், தொழிலாளர் உரிமை, ஆலைகளின் பணிச்சூழல், ஏற்றத்தாழ்வான ஊதியம் மற்றும் ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களைக் குறித்தும் பதிவு செய்துள்ள யூயீ, பல்கலைக்கழக வளாகத்தில் தான் சந்தித்த கம்யூனிஸ்டு தோழர்களின் மூலமே தான் அரசியல் கற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

எனினும், கம்யூனிச படிப்பு வட்டங்கள் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரகசியமாகத் தான் நடத்தியாக வேண்டும். ஜாங் யுன்ஃபான் (Zhang Yunfan) 25 வயது மாணவர். கடந்த ஆண்டு (2017) நவம்பர் 15ம் தேதி தனது தோழர்களோடு கம்யூனிச நூல்களைப் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாங்குடன் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் செய்த குற்றம்? தொழிலாளர் உரிமை மற்றும் ஜனநாயக மறுப்பு குறித்து படித்து விவாதித்ததே.

“அது ஒரு ஹாலிவுட் ஆக்சன் திரைப்படம் போல் இருந்தது” எனத் தான் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறார் ஜாங்கின் நண்பர். அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு கும்பலாக உள்ளே நுழைந்துள்ளனர் போலீசார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜாங்கின் நண்பரின் கழுத்தைப் பிடித்து படுக்கையோடு அழுத்தி கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

ஜாங்கும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் கடந்தாண்டு செப்டம்பரில் இருந்து விவாதக் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அதில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி மற்றும் சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

தற்போது அதிகாரத்தில் உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சி மாவோவின் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், அதை அரசியல் பேரழிவு என்று வகைப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  சுமார் ஒரு மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு இனிமேல் மார்க்சிய வகுப்புகளை நடத்தினால் அதில் விவாதிக்கப்பட உள்ள நூல்கள் மற்றும் தலைப்புகளை போலீசாருக்கு முன்னறிவிக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை சித்தரிக்கும் “வெண் கூந்தல் பெண்” (White-haired Girl) எனும் மாவோ காலத்திய நாடகத்தை நடத்துவதற்கும் போலீசார் தடைவிதித்துள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும், அதற்கு ஆதரவளிப்பதையும் சீன ஆளும் வர்க்கம் மிகக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது. சீனாவின் குவாங்ஜொவ் மாகான நீதிமன்றம் 2016 -ம் ஆண்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

மார்க்சிய சித்தாந்தத்தால் ஒளியூட்டப்பட்ட சமூக செயல்பாடுகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக கூறுகிறார் மார்க்சிய தத்துவவியலாளரான யுவான் யுவா (Yuan Yuhua). ’குவாங்ஜொவ் குழு’ எனும் மார்க்சியக் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது 20-களின் மத்தியில் இருப்பவர்கள். இவர்கள் தங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் – அந்த ஈர்ப்புக்கு அரசின் பாடதிட்டம் காரணம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

தீவிர இடதுசாரி மாணவர் குழுக்களில் இணைகிறவர்கள் தங்களது சொந்த முயற்சியில் மூல மார்க்சிய நூல்களைப் படித்து விவாதிப்பது, நேரடியான கள ஆய்வுகளில் ஈடுபடுவது மற்றும் தாங்களே ஆலைகளில் வேலை செய்து தொழிலாளர் நிலைமைகப் புரிந்து கொள்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் மார்க்சியத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இதன் விளைவே தொழிலாளர் போராட்டங்களை இம்மாணவர் குழுக்கள் ஆதரிக்கின்றன.

சீனத் தொழிலாளர்களின் நிலை 2008 -ம் ஆண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடியை ஒட்டி மேலும் சீரழிந்தது என்கிறார் ஹான் பெங் (Han Peng). முன்பு போலீசாரின் தேடப்படுவோர் பட்டியிலில் இடம் பிடித்திருந்த ஹான் பெங், தீவிர இடதுசாரிக் குழுக்களில் இயங்கி வருபவர். பத்தாண்டுகளுக்கு முன் துவங்கிய பொருளாதார நெருக்கடியால் உலகளவில் பொருட்களின் நுகர்வு சரிந்துள்ளது. இதைத் தாக்குப் பிடிக்க சீன ஆலை முதலாளிகள் தாங்க முடியாத பணிச் சுமையை தொழிலாளர்களின் மேல் சுமத்தியுள்ளனர்.

பணி உத்திரவாதம் ரத்து, பாதுகாப்பான பணிச் சூழல் ரத்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து, பணிக் கொடை ரத்து என வரிசையாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்த சீன ஆளும் வர்க்கம், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு இருந்த பெயரளவுக்கான தடைகளையும் விலக்கியுள்ளது.

இதன் விளைவாக தொழிலாளர் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றது. இன்னொருபுறம், நவீன திரிபுவாத சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் சரியான கம்யூனிச கோட்பாடுகளைக் கற்பதும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுமான போக்கு எழுந்துள்ளது.

மார்க்சிய கோட்பாடுகளை வரித்துக் கொண்ட மூளையில் இருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவான சிந்தனைகள் உதிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நல்ல மரம் நல்ல கனிகளைத் தானே கொடுத்தாக வேண்டும். எனினும், இந்த போக்கு சர்வ வல்லமை கொண்டு இரும்புக் கரத்தோடு நாட்டை ஆண்டு வரும் சீனத் திரிபுவாத கம்யூனிஸ்டு தலைமையை எதிர்க்கும் அளவுக்கான வலிமையை இன்னும் பெறவில்லை.

சீன கம்யூனிஸ்டுகளிடையே அதிகரித்து வரும் மேற்கத்திய சிந்தனைகள் குறித்து கட்சி காங்கிரசின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதற்கு பதிலாக யூயீ அனுப்பிய கடிதம் ஒன்றில், ஊழலை ஒழிக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலில் பாராட்டுகிறார். அதன் பின், தன்னைப் போன்ற இளம் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் மேற்கத்திய சிந்தனைகளில் இருந்து கிளைத்தவை அல்ல என்றும் 1919 மே 4 இயக்கத்தில் (சீனப் புரட்சிக்கு வித்திட்ட மாணவர் இயக்கம்) இருந்தே தாங்கள் உணர்வு பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

எப்படிப் பார்த்தாலும் சீனாவின் நவீனத் திரிபுவாதிகளின் எதேச்சாதிகாரத்திற்கான முடிவு சீனாவில் முளைவிடத் துவங்கியுள்ளதை மட்டும் மறுக்கவே முடியாது. விசயம் என்னவென்றால் முளைவிட்டெழும் குருத்துகள் அனைத்தும் மார்க்சியம் எனும் விதையில் இருந்தே முளைத்தெழுகின்றன.

உண்மையான மார்க்சியம் என்கிற விதையை மறைப்பதாக எண்ணிய சீன எதேச்சாதிகாரவாதிகள் அதை பண்பட்ட மண்ணுக்கடியில் புதைத்து வைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.    

மேலும் :

நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !

விருத்தாசலத்தில்…

க்கீரன் ஆசிரியரை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய கோரியும் விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள மறியல், கைது!  #NakkeeranGopal

நக்கீரன் ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற‌ கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில்,  விருத்தாசலம் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்,  சாலை மறியல் செய்த 25-க்கும் மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

இதில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் கலந்து கொண்டு முழக்கமிட்டார்.

தகவல்: மக்கள் அதிகாரம், விருத்தாசலம்.

இணைந்திருங்கள் வினவுடன்:
நக்கீரன் கோபாலை விடுதலை செய் | வினவு நேரலை | Live Streaming

நக்கீரன் கோபாலை விடுதலை செய் !

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ‘நக்கீரன்’ கோபால் இன்று (9-10-2018) காலையில் போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித உரிய ஆவணங்களுமின்றி அவரை போலீசு கைது செய்திருக்கிறது.

நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை குறித்து அம்பலப்படுத்தி வருகிறது நக்கீரன். இது தொடர்பாக சமீபத்திய இதழில் தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஆளுநரை நிர்மலாதேவி 4 முறை சந்தித்தார் என்ற செய்தியை நக்கீரன் இதழ் பிரசுரித்தது.

ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரத்தை மக்கள் மறந்துவிடுவார்கள், எளிமையாகக் கடந்து  சென்றுவிடலாம் என நினைத்த ஆளுநர் தரப்புக்கு தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டும் நக்கீரன் பெரும் குடைச்சலாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் கொடுக்கப்பட்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்து அடையாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறிய போலீசு, பின்னர் அலைக்கழித்து அவரை சிந்தாதிரிப் பேட்டை போலீசு நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறது. அவர்மீது தேச துரோகம் (124-A), வன்முறையைத் தூண்டுதல், தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசு நிலையத்தில் கோபாலைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. நக்கீரன் கோபாலின் வழக்கறிஞராக அவரைச் சந்திக்கவிருப்பதாகச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அனுமதிக்க மறுத்தது போலீசு. அதைத் தொடர்ந்து வைகோவும், பிற பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகோவைக் கைது செய்து அங்கிருந்து அகற்றியது போலீசு. ஒரு வழக்கறிஞரை சந்திக்கும் உரிமை கூட இங்கு நக்கீரன் கோபால் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

’நக்கீரன்’ கோபால்

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியதும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஆளுநரே, ஒரு விசாரணைக் கமிசனுக்கு உத்தரவிடும் இழி சூழலையும் தமிழகம் கண்டது. குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க விசாரணைக் கமிசன் போட்ட கதைதான் இது.

தமிழகத்தில் இரண்டு பொம்மைகளை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பாஜக-வின் நிழல் அரசாங்கம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் உட்பட யாரை முதல்வர் சந்தித்தாலும், உடன் நிழலாகவே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும் அதில் கலந்து கொள்கிறார். பாஜக-வின் நிழல் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பழங்கிழமான பன்வாரிலால் புரோகித்தைக் காப்பாற்றவே நக்கீரன் கோபாலின் மீதான இந்த கைது நடவடிக்கை ஏவப்பட்டிருக்கிறது. எச்.ராஜாவிற்கு ஆளுநர் மாளிகையில் விருந்து வைத்தவர் புரோகித் என வைகோ அம்பலப்படுத்துகிறார்.

நக்கீரன் கோபால் கைதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு  அமைப்புகளும், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக-வை அம்பலப்படுத்தும் விதமான எந்த ஒரு விவகாரமும் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது என பிற ஊடகங்களை பகிரங்கமாக மிரட்டுவதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி.

ஜனநாயகத்தைக் காப்பதற்கு, மத்தியில் ஆளும் பாசிச கும்பலையும், தமிழகத்தை ஆளும் அதன் அடிமைக் கும்பலையும் விரட்டியடிப்பதே நம்முன் உள்ள ஒரே தீர்வு.

நக்கீரன் கோபால் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

♦ நக்கீரன் ஆசிரியர் கோபாலை உடனே விடுதலை செய்!
♦ கவர்னர் பன்வாரிலாலை திரும்பப் பெறு!
♦ தமிழகத்தில் பாசிசம் தலை விரித்தாடுகிறது.
♦ எதற்கு எடுத்தாலும் தேசதுரோக வழக்கா?

“ஹைகோர்ட்டாவது மயிராவது, தமிழக போலீஸ் அனைவரும் லஞ்சப் பேர்வழிகள்“ எனப் பேசிய எச்.ராஜாவிற்கு கவர்னர் மாளிகையில் விருந்து. பெண்கள் சமூகத்தையே கேவலமாக பேசிய எஸ்.வி. சேகர் அரசு மரியாதையுடன் உலா வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பேராசிரியரே மாணவிகளை பல்கலைகழக அதிகாரிகளுக்கும், கவர்னர் மாளிகை வட்டாரத்திற்கும் பாலியல் இச்சைக்கு கூட்டிகொடுக்க முயன்றதை அம்பலபடுத்தினால் தேசத்துரோக வழக்கில் கைதா?. இது என்ன நாடா?

பேசத் தடை, பாடத் தடை, கூட்டம் நடத்தத் தடை, நடந்து போகத் தடை, படம் வரையத் தடை, ஆறுதல் சொல்லத் தடை, பிரசுரம் கொடுக்கத் தடை, போஸ்டர் ஒட்டத் தடை, எழுதத் தடை, போராடத் தடை, பத்திரிகை ஊடகங்கள் அச்சுறுத்தி முடக்கம், இதுதான் ஜனநாயக ஆட்சியின் அருகதை.

இனியும் எதிர்த்து போராட அஞ்சினால், தயங்கினால், பின்வாங்கினால் நாயினும் கீழாக நடத்தப்படுவோம். அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.

வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
9-10-2018

*****

நக்கீரன் கோபால் கைது ! முகநூலில் செயற்பாட்டாளர்கள் கண்டனம் !

Villavan Ramadoss

நக்கீரன் கோபால் கைது.
சக ஊடகங்கள் நாங்களும் ஊடகங்கள்தான் என நிரூபிக்க ஒரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.
இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் இன்னொரு நிர்மலா தேவி என நிரூபணம் ஆகும், அவ்வளவுதான்.

அன்சாரி முஹம்மது

தமிழக பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களின் உண்மையான முகத்தை பார்க்க தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் அபூர்வமான சந்தர்ப்பம்.!! பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார்களென்று….

Ashok.R (Don Ashok)

அடக்குமுறையும், அத்துமீறலும் ஆட்சி செய்யும்போது எங்காவது சிறுநம்பிக்கையாக ஒரு ஒளிக்கீற்று தோன்றும். நக்கீரன் அப்படித்தான் இதுவரையில் எப்போதும் இருந்திருக்கிறது. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் எல்லாம் ரஃபேல் ஊழலில் இருந்து கவர்னரின் லீலைகள் வரை பேசாமல் கோமாளித்தன விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மின்மினிப்பூச்சியாக வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த நக்கீரனையும் அணைக்க வேண்டும் என அடிமையரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால் முன்காலங்களில் ஃபாசிஸ்டு ஜெயலலிதா ஒவ்வொரு முறை அந்த மின்மினிப்பூச்சியை அழிக்க முயற்சி செய்தபோதெல்லாம் அது ட்ராகனாக மாறி இன்னும் அதிக வெளிச்சத்துடன் நெருப்பைக் கக்கியிருக்கிறதேயொழிய அணைந்த வரலாறு ஒருபோதுமில்லை. இனியும் அப்படித்தான். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு கடுமையான கண்டனங்கள். அவரை உடனே விடுதலை செய்வதோடு இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்டோரை கைது செய்ய முயற்சிப்பதையும் உடனே கைவிட வேண்டும்.

#ReleaseNakeeranGopal

Abdul Hameed Sheik Mohamed

ஆளுநரை விமர்சித்து செய்திவெளியிட்டால் அதற்கு தேச துரோக வழக்கு.. ஆளுனர்தான் இந்திய தேசம் என்பதையும் ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறைப்பதுதான் இந்த தேசத்தை பாதுகாப்பது என்பதையும் எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுங்கள். நானே அரசன், நானே நாடு என்று சொல்லவர்களையெல்லாம் வரலாறு எங்கே அனுப்பி வைத்ததோ அங்கேதான் இவர்களும் அனுப்பபடுவார்கள்.

Yuva Krishna

முந்தைய காலங்களில் அண்ணன் கோபால் மீது கை வைத்தபோதெல்லாம் ஆளுங்கட்சியின் அஸ்திவாரமே நொறுங்கியது என்பது வரலாறு. அது தொடரும்.

Sugumaran Govindarasu

நக்கீரன் கோபால் கைது : வன்மையாக கண்டிக்கிறேன் !

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறு செய்தி வெளியிட்டார் என்றால் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அது அவதூறான செய்தியா இல்லையா என்பது குறித்து சட்டப்படி விளக்க அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அதைவிடுத்து வழக்கு, கைது என்பது கருத்துரிமைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்.

Jdr Trichy

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் சமீப காலமாக கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதை கண்டிக்கிறோம்.

மேலும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் வார இதழின் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது தமிழக ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து. மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயலை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும் நசுக்கும் நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட செயல்கள் தொடருமேயானால், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று பொருள்.

தமிழகம் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்தபோதெல்லாம், அவற்றை தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பேருதவியாக செயல்பட்டவர் இவர்.

இது மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகள் நடத்தி வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நடந்தவை நடந்தவையாக நக்கீரன் இதழ்களில் பதிவு செய்துவரும் நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before the eyes of law) என்ற போதிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிலர் சுதந்திரமாக போதுமேடைகளில் தோன்றும் நிலையில் சிலர் மட்டும் ரகசியமாக கைது செய்யப்படுவது சட்டத்தின் ஆட்சி (RULE OF LAW) தான் நடக்கிறதா என்ற ஐயத்தினையும் அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.

எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
ஷானு, தலைவர்

ஜீ.ஜான்டேவிட்ராஜ், செயலாளர்
திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்
9677081363

அன்சாரி முஹம்மது


இதுதான் இவனது (தினகரன்) உண்மையான முகம். இனியாவது இவன் யாரென்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

 

 

Kokkarakko Sowmian

இணையதள செயல்பாட்டாளர்களே,

நீங்கள் எந்த கட்சி அல்லது சார்புநிலை கொண்டவராக இருப்பினும், நக்கீரன் கோபால் கைதினை இன்னுமொரு பிரேக்கிங் நியூஸாக மட்டுமே கடந்து சென்றால்..

நாளை நீங்கள் இங்கே எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது எழுத்திற்கும் கூட இந்த அரசால் கைது செய்யப்படலாம் என்பதை உணருங்கள்..!

இது நக்கீரன் கோபாலுக்கான பிரச்சினை அல்ல…, அவர் இது போல பல வழக்குகளை சந்தித்து வெளியே வந்துள்ளார்..!

ஆனால் இந்த அரசு அவரைக் கைது செய்து, இணையத்தில் அரசுக்கு எதிராக எழுதுகின்ற ஒவ்வொரு தனி நபருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்..!

ஒரு ஜனநாயக நாட்டில் எதையும் விட அதி பயங்கரம்…. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அரச நடவடிக்கையே..! இதை அனுமதித்தால், இங்கே ஒவ்வொரு குடிமகனும் அடி மாடாகவேதான் வாழ வேண்டியிருக்கும்..!

மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !

சில்லென்ற கடற்காற்றுடன் கார்மேகம் தூறலை தெளித்துக் கொண்டிருந்தது. நம்மாவாழ்வார் இலட்சிணை பொறித்த டி-சர்ட்டுடன் இளைஞர்கள்.

ஒருவர் கற்றாழையை வகுந்து சோற்றை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கிறார். இன்னொருவர் வாடிக்கையாளர்களுக்கு மண்குவளையில் சூப் பரிமாறிக் கொண்டிருக்கிறார். வேறொருவர் ஆனைநெருஞ்சிச் செடியை நீரில் முக்கி சாறு எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக மும்முரமாக சூப் மற்றும் ஜூஸ் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது.

கடை உரிமையாளர் ரவி

கடை உரிமையாளர் ரவி கூறும்போது,

சொந்த ஊரு மதுரை. இயற்கை உணவுமீது எனக்கு ரொம்ப ஆர்வம். அய்யா நம்மாழ்வார் பேருல, ஃபிரெண்ட் மகாலிங்கத்தோடு பார்ட்னரா சேர்ந்து இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கேன். மெரினா, பெசன்ட் நகர் மட்டும் இல்லாம இன்னும் ரெண்டு எடத்துல கடைபோட்டிருக்கோம்.

மொத்தம் 12 பேர் வேலை செய்யிறோம், எல்லாம் சொந்தக்காரங்கதான். கிட்டதட்ட ஆறு வருஷமா இந்தக் கடையை நடத்திகிட்டிருக்கோம். இப்ப, ஜூஸ், சூப், புட்டு, இனிப்பு என 30 வகையான உணவுகளை தயார் செய்கிறோம். கடவுள் புண்ணியத்துல ஒரு நாளைக்கு ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்கிறோம் என்று மனநிறைவோடு கூறுகிறார்.

மேலும் தொடருகிறார். “காலை அஞ்சிலேருந்து பத்தரை மணி வரைக்குதான் வியாபாரமே. அப்புறம் எல்லாத்தயும் மூட்டகட்டிகிட்டு வேனுல தூக்கிட்டு கௌம்பிடுவோம். அதுக்கப்புறம்தான் வேலையே. வீட்டுக்குப் போனதும் எல்லா பாத்திரங்களையும் கழுவ ஆரம்பிப்போம். அதை பிரிச்சி அடுக்குறதுக்கு பெரும்பாடாயிடும். பகல் 2 மணிக்குதான் மொத்த வேலையும் முடியும். ஏதோ குடும்பத்தோடு செய்யிறதுனால கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகுது. அப்புறம் அடுத்த நாளுக்குத் தேவையான கீரை, காய்கறிகளுக்கான ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்” என்றார் ரவி.

ஒரு ட்ரேயில் சக்கைகளை சேர்த்து, காட்சிக்கு வைத்திருந்தார்கள். இது என்ன புது அயிட்டம் என்று கேட்டதற்கு, “இதெல்லாம் பாத்தாத்தான் சில கஸ்டமர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு நம்புவாங்க. அதனால தினமும் ஜூஸ் போடும்போது, அதன் சக்கையை எடுத்து வைப்போம்” என்றார்.

இதுவரை ரவுடிங்க தொந்தரவு எதுவுமே இல்ல. மகிழ்ச்சியா கடையை நடத்திகிட்டிருக்கோம் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே, ஜீப்பிலிருந்து இரண்டு போலீஸார் இறங்கி வந்தார்கள். டேய் தம்பி, சார் ரெண்டுபேருக்கும் கேப்பங் கூழும் பருத்திப் பாலும் ஊத்திக் கொடுப்பா என்று கூறிவிட்டு, நம்மை நோக்கி ஒரு மெல்லிய பார்வையை வீசினார்.

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய அந்தப் பரிதாப பார்வையில், “இந்த அட்ஜெஸ்ட்மென்ட் கூட இல்லேன்னா கடை நடத்த முடியுமா?” என்பதும் அடங்கியிருந்தது.

தேனி லோயர் கேம்ப் – குமுளிச் சாலையை மூடி தொழிலாளி வயிற்றில் மண்ணைப் போடாதே !

தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து குமுளி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ தொலைவிற்கு குமுளி மலைச் சாலை அமைந்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இப்பகுதியில் பெய்த தொடர்மழையில் மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதென்பது இயல்பான ஒன்று. அதற்கேற்ப துரிதமாக செயல்பட்டு பாதைகளை சரிசெய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகம் மற்றும் வன அதிகாரிகளின் கடமை.

மாறாக, நிலச்சரிவைக் காரணம் காட்டி இப்பாதை வழியே வாகனங்கள் செல்ல தடை விதித்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம். கம்பம் மெட்டு வழியாகச் சுற்றி செல்ல வேண்டுமென்று மாற்று வழியை காட்டியிருக்கிறது. சைக்கிள் உள்ளிட்டு இருசக்கர வாகனம் கூட செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்படுவதால், அன்றாடம் பிழைப்புக்கு குமுளிக்குச் செல்லும் கூலி வேலை செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால், உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களைக்கூட இந்த சாலை வழியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. கறந்து கொண்டுவந்த பாலை நடுரோட்டில் கொட்டி தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர், விவசாயிகள். பால் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கே கம்பம் மெட்டு வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி குமுளிக்குச் சென்றுதான் பொருள் வாங்கியாக வேண்டும்.

இந்நிலையில், பாதை செப்பனிடும் பணியை விரைந்து முடிக்கக் கோரியும், அதுவரையில் இருசக்கர வாகனங்களை மட்டுமாவது அனுமதிக்க வேண்டுமென்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த அக்-07 அன்று லோயர் கேம்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான உழைக்கும் மக்கள், கூலித்தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பொறுப்பற்ற மாவட்ட நிர்வாகமே ! கூலிக்காரர் சோற்றில் மண்ணைப் போடதே !

• தொடர் மழையால் சரிந்து விழுந்த குமுளி மலைச்சாலையை ஆமை வேகத்தில் செப்பனிட்டு அப்பாவி மக்களை அலைக்கழிக்காதே!

• போர்க்கால அடிப்படையில் சாலைப்பணியை விரைவுபடுத்து!

• குமுளிக்குச் செல்லும் கூலி வேலைக்காரர்கள் இரு சக்கர வாகனங்களில் காலை, மாலை மட்டும் செல்வதற்கு வழி ஒதுக்கீடு செய்து கொடு ! பொது விதியை மீறாதே !

• ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பட்டினியில் தள்ளிவிட்டு யாருக்காக இந்த சாலை வசதி!

• கேட்பாரற்ற அனாதைகளா கூலிக்காரர்கள்?

படிக்க:
எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

தகவல்:

, லோயர் கேம்ப்.

கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர்
அ. முத்துலிங்கம்

நான் பொஸ்டனுக்கு போனால் அவர் ரொறொன்ரோவுக்கு போனார். நான் ரொறொன்ரோவுக்கு போனால் அவர் பொஸ்டனுக்கு போனார். கடைசியில் ஒருவாறு சந்திப்பு நிகழ்ந்தது. பொஸ்டன் நண்பர் வேல்முருகன் என்னை வந்து காரில் அழைத்துப் போனார். பொஸ்டன் பாலாஜி அவரைக் கூட்டிவந்தார். வேல்முருகன் வீட்டில் சந்தித்துக் கொண்டோம். இப்படித்தான் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்தேன். இதுவே முதல் தடவை.

ஒருமுறை அமெரிக்காவில் சு.ராவைச் சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்த சாந்தகுரூஸ் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அது பத்து வருடங்களுக்கு மேலேயிருக்கும் என்று நினைக்கிறேன். பேச்சின்போது நடுவிலே திடீரென்று ‘நீங்கள் சலபதியை படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் ’இல்லை’ என்றேன். ’நீங்கள் படிக்கவேண்டிய முக்கியமான ஆய்வாளர் அத்துடன் எழுத்தாளர்’ என்றார். அதன் பின்னர்தான் அவரைத்தேடி படிக்க ஆரம்பித்தேன்.

ஆ.இரா. வேங்கடாசலபதி

சலபதி சொன்ன கதையும் சுவாரஸ்யமாக இருந்தது. ‘ஒருநாள் எழுத்தாளர் பெருமாள் முருகனை கம்புயூட்டரில் தேடிக்கொண்டு போனேன். அவருடைய பெயர் வந்ததும் கிளிக் பண்ணினேன். அது எப்படியோ தவறுதலாக உங்கள் பெயரை கிளிக் செய்துவிட்டது. கட்டுரையை படிக்க ஆரம்பித்ததுமே இது வேறு ஆரோவுடைய எழுத்து என்பது தெரிந்துவிட்டது. முடிவிலே அ.முத்துலிங்கம் என்று பெயர் போட்டிருந்தது. அதன் பின்னர்தான் உங்கள் எழுத்தை படித்தேன்’ என்றார். ஒருவரை ஒருவர் தற்செயலாக படிக்கத் தொடங்கிய நாங்கள் சந்தித்ததும் இப்படி தற்செயலாகத்தான்.

‘கடிதங்களை தொகுக்கும் ஆர்வம் எப்படி வந்தது?’ என்று அவரைக் கேட்டேன். அவருக்கு வ.உ.சியில் பெரும் பற்று இருந்தது. அவருடைய கடிதங்களை தேட ஆரம்பித்தபோது பாரதி, புதுமைப்பித்தனின் கடிதங்களும், வேறு பல அருமையான தகவல்களும் அகப்பட்டன. இவற்றை வகை வகையாக புறாக்கூண்டுகளுக்குள் வைத்து இருபது வருடங்களுக்குமேல் பாதுக்காக்கிறார். சில ஆராய்ச்சிகள் தொடருகின்றன. சில ஏற்கனவே புத்தகங்களாக வந்துவிட்டன. செம்பதிப்பில் புதுமைப்பித்தன் கதைகள், கட்டுரைகள், பாரதி கட்டுரைகள் எல்லாம் வெளிவந்தது இப்படித்தான் என்றார்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் அவர் சமீபத்தில் செய்து முடித்த ஒரு மகத்தான காரியம் பற்றி அறிய முடிந்தது. ம.இலெ.தங்கப்பா, புதுவையில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிறைய தமிழ் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார். ஆனால் அவை புத்தகமாக உருப்பெற்றதில்லை. பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியின் அருமையான முன்னுரையுடன் இந்த நூல் புது தில்லி பெங்குவின் பதிப்பாக, Love Stands Alone என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்தது. இது வெளிவர முழுக்காரணமாக இருந்தவர் சலபதிதான்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக எப்படியும் புத்தகத்தை வாங்கிவிடவேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் சிறிது ஏமாற்றம் இருந்தது. ஜி.யு.போப், ஏ.கே.ராமானுஜன், ஜோர்ஜ் எல். ஹார்ட் போன்றவர்கள் ஏற்கனவே சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள். மீண்டும் ஒன்று தேவையா என்ற நினைவு எழுந்தது. ஓர் ஆராய்ச்சியாளரின் நேரம் எவ்வளவு முக்கியமானது. ஏதாவது சொந்தமாகச் செய்திருக்கலாமே என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை. எனினும் புத்தகத்தை தருவிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அமெரிக்காவிலோ கனடாவின் புத்தகக் கடைகளிலோ புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அமேஸன்.கொமிலும் தேடி கிடைக்கவில்லை. ஒரு நண்பருக்கு இந்தியாவுக்கு எழுதி அதிவேக தபாலில் ஒரு பிரதியை எடுப்பித்தேன். புத்தகத்தின் விலையிலும் இரண்டு மடங்கு கூடிய தபால் செலவு வைத்த புத்தகம் மூன்று நாளில் ஓர் இரவு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தது. அன்று இரவு படிக்கத் தொடங்கி அடுத்தநாள் காலைதான் முடித்தேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் சலபதி தன் நேரத்தை சரியான ஒரு காரியத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்று. சமீபத்தில் என்னை வேறு ஒரு புத்தகமும் இப்படி கவரவில்லை.

இந்தப் புத்தகம் பல கேள்விகளை என் மனதில் எழுப்பின. ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கும்போது அதன் கவித்துவம் முழுக்க புதுமொழியில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடாது. எண்பது சதவீதம் வந்தால் அது வெற்றி. நூறு சதவீதம் வந்தால் மாபெரும் வெற்றி. ஆனால் மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டக்கூடுமா? அப்படி தாண்டினால் அது சரியாக இருக்குமா? சங்க இலக்கியங்களில் ஓர் ஐம்பது பாடல்கள் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படும். மேடைகளில் பேசப்படும். ஒருவர் பின் ஒருவராக அவற்றை பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவற்றை விட்டுவிட்டு அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத பாடல்களை நான் மொழிபெயர்ப்பு நூலில் தேடினேன்.

அவை ஏதாவது புதிய திறப்புகள் கொண்டுள்ளனவா என்று பார்ப்பதுதான் என் எண்ணம். தமிழில் படித்தபோது சாதாரணமாகத் தோன்றிய சில பாடல்கள் ஆங்கிலத்தில் புதிய ஜொலிப்புடன் கண்ணில் பட்டன. பதினாறு மூலையாக வெட்டப்பட்ட ரத்தினக் கல்லை யன்னல் பக்கம் கொஞ்சம் திருப்பி வைத்ததும் புதிய ஒளியை வீசுவது போல.

படிக்க:
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !
அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

 

முதலில் ஆச்சரியப் படுத்திய விசயம் நூலின் தலைப்பு. Love Stands Alone. இது குறுந்தொகையில் வரும் பாடலின் ஒரு வரி. தமிழில் இந்தக் குறுந்தொகை கவிதையை பலமுறை தாண்டிப் போயிருக்கிறேன் ஆனாலும் ஆங்கிலத் தலைப்பில் கிடைத்த அர்த்தம்  எனக்கு கிடைக்கவே இல்லை. ஆங்கிலத்தில் கவிதையை படித்தபோதோ அந்தக் கருத்து பட்டென எழுந்து நின்றது.

குறுந்தொகை 174 – பாடியவர் வெண்பூதி
தலைவி தோழிக்கு சொன்னது

பெயல்மழை துறந்த புலம்புஉறு கடத்தக்
கலை முட்கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவார் ஆயின்இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

இதன் பொருளை சுருக்கமாக இப்படிக் கூறலாம். ‘மழை பெய்யாத பாலை நிலத்தில் கிளைவிடும் கள்ளிச் செடியின் காய்கள் வெடிக்கும் சத்தம் மென்மையான சிறகுகள் கொண்ட ஆண், பெண் புறாக்கள் சேருவதற்கு தடையாக அச்சமூட்டுகின்றன. என்னை தவிக்க விட்டுவிட்டு அப்படியான காட்டுப் பாதையில் அவன் பொருள் தேடி புறப்பட்டு போய்விட்டான். இந்த உலகத்தில் பொருள் ஒன்றே உறுதியான பொருள். அருள் என்பது தன்னை ஏற்றுக் கொள்வதற்கு ஆரும் இல்லாமல் நிற்கிறது.’

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி வருகிறது.

In the desolate, rain-forsaken land
the twisted kalli’s pods
open with a crackle
frightening the mating pigeons
with their close-knit downy feathers.

He has left me languishing.
‘In search of wealth’ he said.
He did not mind the risk on the way.

If it comes to that,
then in this world
wealth has all support
and love must stand alone.

அந்தக் கடைசி வரியில் ஒரு சிறு மாற்றம், அது கவிதையை என்ன மாதிரி உயர்த்தி விடுகிறது. காதலுக்கு ஒருவிதத்திலும் துணை கிடையாது என்று தமிழில் வருவது ஆங்கிலத்தில் ‘காதல் தனித்து நிற்கிறது’ (Love Stands Alone) என்று வரும். இதிலே மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஏறக்குறைய 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்கப் பாடல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நவீன கவிதைபோலவே தோற்றமளிக்கிறது என்பதுதான்.

இன்னொரு பாடல். புறநானூறு 112. பாடியவர் பாரி மகளிர். நூறு கட்டுரைகளிலும், இருநூறு மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல். சினிமாவும் இந்தப் பாடலை விடவில்லை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

பொருள் மிக எளிது. ‘அன்றைய திங்கள் தந்தை இருந்தார், குன்றும் இருந்தது. இன்றைய திங்களில் வெற்றிகொண்ட அரசர் குன்றை கைப்பற்றிக்கொண்டனர். தந்தையும் இல்லை.’ இதை மொழி பெயர்ப்பதும் எளிது. வெண்நிலவு என்பதை full moon என்று மொழிபெயர்ப்பதே வழக்கம். ஆனால் அந்த வரி இப்படி வருகிறது.

But tonight
the moon is full again,
the triumphant kings
marching with their battle drums
have our hill,
and we are fatherless.
Full moon என்பதற்கு பதிலாக the moon is full again என்ற சொற்தொடர் பயன்படுத்தப் படுகிறது.

சந்திரன் மறுபடியும் நிறைந்துவிட்டான். தேய்ந்த சந்திரன் மீண்டும் வளர்ந்து ஒருமாத காலம் ஓடிவிட்டது சொல்லப்படுகிறது. ஒரு சிறிய சொல் வித்தை கவித்துவ அழகை உயர்த்திவிடுகிறது.

இப்படி ஒரு மாயத் தருணம் ஹோமருடைய இலியட்டிலும் வருகிறது. அச்சில் கிரேக்க வீரன். அவன் திரோஜனான ஹெக்டரை பழிவாங்கும் வெறியிலிருக்கிறான். அச்சில் துரத்த ஹெக்டர் திரோய் நகரத்து சுவர்களை மூன்றுதரம் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். அச்சில் ஹெக்டரை வெட்டி வீழ்த்தி அவனுடைய குதிக்காலில் கயிற்றைக் கட்டி தேரிலே இழுத்துச் செல்கிறான். பன்னிரெண்டு நாட்களின் பின்னர் கோபம் அடங்கி பிணத்தை ஹெக்டரின் மனைவியிடம் ஒப்படைத்ததும் அவர்கள் மரணச் சடங்குகளை செய்துமுடிக்கிறார்கள்.

So they tended the burial of Hector, tamer of horses என்று ஹோமர் முடிக்கிறார். குதிரைகளை பழக்கும் ஹெக்டர் கொல்லப்பட்ட பிறகும் குதிரைகளால் இழுக்கப்பட்டு கேவலமான முடிவை அடைகிறான். ‘குதிரைகளைப் பயிற்றுவிக்கும் ஹெக்டர்’ என்று கவி சொல்லவில்லை. ‘ஹெக்டர் ஆகிய குதிரைப் பயிற்சிக்காரன்’ என்று சொல்கிறார். மிகச் சாதாரணக் கவிதையாக அதுவரைக்கும் இருந்தது சட்டென்று திறந்து உயிர் கொள்கிறது.

இப்படி உயிர் பெறும் கவிதைகளை இந்த மொழிபெயர்ப்பில் பல இடங்களில் காணலாம். இன்னொரு கவிதை. புறநானூறு 196. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனை நோக்கிப் பாடியது. நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. தருகிறேன் என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார்.

இது நீண்ட பாடல். இதன் பொருள் சுருக்கம் இது. ‘தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம். தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல. உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தை தவிர வேறு எதையும் அணியாமல், வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க’ என்கிறார் புலவர். ஆங்கில மொழிபெயர்ப்பில் கடைசிப் பகுதியில் ஒரு சின்ன மாற்றம் நிகழ்கிறது.

While I go away from here
braving the sun and the cold winds,
thinking of my delicate young wife
whose virtue is her loyalty
and who lives in my home
which is but a wind shelter
where my poverty
as if made of stone
sitting tight.

அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் தமிழ் கவிதையில் மையமாகத் தெரிகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில், வறுமையின் உக்கிரம்தான் முதலிடம் பெறுகிறது. என் குடிசையில் வறுமையோ கல்போலக் கரையாமல் நிற்கிறது என்று ஆங்கிலக் கவிதை முடிகிறது. நுட்பமான ஒரு பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது.

குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு பாடல்களை நான் அவ்வப்போது படிப்பதுண்டு. எத்தனைதரம் படித்தாலும் அவை அலுப்பதில்லை. எந்த ஒரு நல்ல கவிதையும் வாசகரின் பொறிபட்டுத்தான் சுடர்விடும்.  இந்த நூலைப் படித்தபோது பல இடங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பாடல்கள் இன்னொரு தளத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் எனக்கு கிட்டியது. ஒரு மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை தாண்டி மேலே போகலாமா? போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

படிக்க :
கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்
இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்

உலக இலக்கியங்களை தொடர்ந்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் David Damrosch உத்தமமான மொழிபெயர்ப்பு மூலப்பிரதியை மிஞ்சலாம் என்றும் அது வாசகர்களை இரண்டு கலாச்சாரங்களுக்குள்ளும் சமமாக அழைத்துச்செல்லும் தன்மையுடையதாக இருக்கும் என்றும் சொல்கிறார்.

இந்த நூல் கொடுத்த அனுபவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் பெரும் தயக்கமிருக்கிறது. ஒரு நல்ல கவிதையில் வார்த்தைகள் முன்னே போகும், கவி பின்னே செல்வார் என்று சொல்வார்கள். இங்கே வார்த்தைகளே தெரிகின்றன. இந்த நூலில் ஆங்கில மொழிபெயர்ப்பில்  கவிதைகளைப் படித்துவிட்டு பிரபல கவி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கவிதைப் பேராசிரியர் அரவிந் கிருஷ்ண மெஹ்ரோத்ரா கூறியதை நான் என்னுடைய மொழியில் சொல்கிறேன்.

‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.

குறுந்தொகையில் ஒரு பாடல் உண்டு. ‘காட்டிலே வேட்டுவன் கிழங்கு கிண்டியபோது ரத்தினக் கல் அகப்பட்டது’ என்று வரும். அதை உவமையாகச் சொல்லலாம். அதுவும் போதாது. இந்த நூலைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வை இப்படித்தான் சொல்லமுடியும். ஏடிஎம் மெசினில் 1000 டொலர் கேட்டபோது அது 2000 டொலர் தந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி. மூலப் பிரதியை மீறிய மொழிபெயர்ப்பு.

நூலை மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

அண்ணா பல்கலை தடுப்புச் சுவரை அகற்றக் கோரி சென்னைப் பல்கலை மாணவர்கள் போராட்டம் !

கிண்டி வளாகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைகளும் அண்ணா பல்கலைக் கழகமும் இயங்கி வருகிறது. இரு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து போகிற இடமாக மட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது ஆய்வுப் பணிக்காக அன்றாடம் வந்து செல்கின்றனர். இரண்டுமே அரசு கல்வி நிறுவனங்கள் என்ற வகையில் மருத்துவமனை, தபால் துறை, வங்கிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் தீயணைப்புத்துறை வண்டிகள் வந்து செல்வதற்காக பொதுவழிப்பாதைகள், பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் கிண்டிவளாகம் வனஉயிரினங்களின் மேய்ச்சல் நிலமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் இரண்டு பல்கலையைச் சேர்ந்த பெரும்பான்மை ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ தெரியாமல் பொதுவழிப்பாதையை மூடும் வகையில் நிரந்தர மதில் சுவரை கட்டி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கலையின் அன்றாட அலுவல்கள் முற்றிலும் முடங்கும் படி அண்ணா மற்றும் சென்னைப் பல்கலையை இணைக்கும் முக்கிய சாலையை திருட்டுத்தனமாக விடுமுறை நாளான ஞாயிறன்றே (07-அக்டோபர்-2018) கட்டிமுடிக்க முயற்சி செய்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்.

ஏற்கனவே ஒரு முறை மதில் சுவர் பிரச்சனை சென்னை பல்கலைக் கழக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் எழுப்பப்பட்டு முதன்மை சாலையை அடைக்கும் பணி சற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதில் சுவர் கட்டும் ஒப்பந்தம் யாரால் எங்கு இறுதியானது என்பதே இரு பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ புரியாத புதிராக தற்பொழுதுவரை இருந்து வருகிறது.

ஏனெனில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சரி அண்ணா பல்கலைக் கழகத்திலும் சரி, ஒழுங்கான குடிநீர் வசதியோ, போதுமான கழிப்பறைகளோ, கழிப்பறைகளில் கதவுகளோ கூட இல்லாதிருக்கும் பொழுது அண்ணாபல்கலைக் கழகமும் சென்னைப் பல்கலைக் கழகமும் 50%-50% என்ற கணக்கில் 90 இலட்சம் செலவழித்து மதில் சுவர் கட்டுவது ‘கட்டிங் அடிப்பதற்கே’ என்று ஒரு சேர கூறுகிறார்கள் மாணவர்களும் னநாயக உணர்வு கொண்ட ஒரு சில பேராசிரியர்களும்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மதில் சுவரை கட்டியெழுப்பிவிடலாம் என்று நினைத்த நிர்வாகத்தின் நைச்சியத்தை மாணவர்கள் தங்களது ஒருமித்த போராட்டத்தால் நொறுக்கியிருக்கிறார்கள்.

08-அக்டோபர்-2018 திங்கள் காலை 9 மணியிலிருந்தே சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் பொதுவழியை அடைத்து முன்வைக்கப்பட்டிருந்த காண்கீரிட் தடுப்பை அகற்றக்கோரி சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பெருந்திரளான முதுகலை மாணவர்கள், அலுவலர்கள், ஒரு சில பேராசிரியர்கள் ஒன்று கூடி சாலையில் அமர்ந்து போராடினர்.

(இரவோடு இரவாக பாதையை மறித்து எழுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள காங்கிரிட் கம்பிகள்)

மதில் சுவரின் ஒருபுறம் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்களும் மறுபுறத்தில் அண்ணாபல்கலைகழக நிர்வாகிகளும் தனியார் ஒப்பந்த காரர்களும் வண்டி நிறைய காவல்துறையினரும் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதற்கு யார் அனுமதி அளித்தது? என்ற கேள்விக்கு விடை எளிதே. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மேல் இருப்பவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க. அடிமைகளாகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலாகவே இருக்கிறார்கள். ஒப்பந்த பணிகள் மூலமாக வந்தவரை வாரிச்சுருட்டலாம் என்பதற்கு இதுபோன்ற போராட்டங்களால் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கல்வி நிலையத்திற்குள் காக்கிகளை ஏவி மாணவர்களை ஒடுக்க நினைக்கிறது நிர்வாகம். இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக யாரும் போராடி விடக்கூடாது என்பதற்காக நிர்வாகம் தனது அடிமைப் பேராசிரியர்களை தனியார் செக்யுரிட்டிகளுடன் நிற்க வைத்து மாணவர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் மிரட்டிக்கொண்டிருந்தது. மேலும் அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் செல்வதற்காக அப்பல்கலையின் மாணவர்களும் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டே அடைபடவிருக்கும் பொதுவழியின் வாயிலாகவே தங்களது வகுப்பு நோக்கி போவதை தடுத்து நிறுத்தி சுற்றிப்போகும் படி மிரட்டிக் கொண்டிருந்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்!

நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்து சற்றேறக்குறைய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பேச்சு வார்த்தைக்காக வந்த சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாக இயக்குநர் மற்றும் சில மூத்த பேராசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்பது போல பாவனை செய்தனர். இவர்கள் இப்படி பாவனை செய்வது வழக்கமான ஒன்று. இதே மதில் சுவர் பிரச்சனை சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பொழுது புதிதாக பதவியேற்றுக்கொண்ட கிண்டி வளாக இயக்குநர் பேராசிரியர் முருகன், தான் இந்த பிரச்சனையை துணைவேந்தரிடம் கொண்டு செல்வதாக கூறினார். பலமாதங்கள் கழித்து இன்றைக்கு மாணவர்களிடமும் இதே வார்த்தையைத்தான் சொல்கிறார். மேலும் மாணவர்கள் ஏதோ தேவையற்று யாருக்காகவோ போராடுகிறார்கள் என்ற தொனியில் பிரச்சனையை பேராசிரியர்கள் கவனத்திற்கு கொண்டுவந்துவிட்டால் அத்தோடு கலைந்து செல்ல வேண்டும் என்று கூட்டத்தைக் கலைப்பதிலேயே குறியாக இருந்தார். மேலும் எல்லாம் சட்டப்படி நடக்கிறது என்று லீகல் பாயிண்டுகளைப் பேசினார்.

படிக்க:
அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !

இரு பல்கலைக்கழகமும் இதுவரை பொதுவாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அடைத்து மதில் எழுப்பது நவீன தீண்டாமைச்சுவரைப் போன்று இருப்பது எந்த சட்டத்தில் வருகிறது என்பதற்கும் வன உயிரினங்கள் வந்து செல்லும் இடத்தில் யார் இது போன்று சுவர் எழுப்புவதற்கு அனுமதி அளித்தனர் என்பதற்கும் நிர்வாகத்தினர் பதில் தரவில்லை என்பதுடன் ஏதோ இப்பிரச்சனை இவர்களுக்கு இப்பொழுதுதான் தெரியும் என்பது போல காட்ட நினைத்து மாணவர்களிடையே அம்பலப்பட்டு போனார்கள். இதில் கோட்பாட்டு இயற்பியல் துறைத்தலைவர் ரீட்டா ஜான் ஒருபடி மேலே போய் மாணவர்களைப் பார்த்து மரியாதையா கலைஞ்சு போயிரு என்று மிரட்டினார். வழக்கமான பாணியில் மாணவர்களை அடிமைகளாக நடத்தி மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்று எண்ணியது பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு முன் ஒப்பேறவில்லை. மாணவர்கள் உறுதியுடன் நின்று போராடினர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாக கீழ்க்கண்ட பல விசயங்களைக் அனுபவமாகப் பெற்றனர்.

• மதில் சுவரை அகற்றுவோம் என்ற கோரிக்கையில் உறுதியாக பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் துறை வளாகத்திற்கு இத்தீ புதிய வரவு! பெண்களின் பங்களிப்பு அசாதாரணமான ஒன்றாக இருந்தது.

• தற்காலிகமாக பல்கலைக் கழக நிர்வாகம் மதில் சுவரை எழுப்புவதிலிருந்து நைச்சியமாக பின்வாங்கியிருக்கிறது. ஆனால் பொதுச்சொத்தான பல்கலைகழகம் கூறுபோடப்படுவதை மாணவர்களும் பேராசிரியர்களும் வீதிக்குவந்து மக்களிடையே அம்பலப்படுத்தினால் அன்றி இப்பிரச்சனைக்கு தீர்வில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இத்தகைய போராட்டம் அணையாமல் தமிழகமெங்கும் மாணவர்களால் கட்டியைமைக்கப்படும் பொழுது தான் பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல தமிழகத்தையே காக்கமுடியும் என்ற நிதர்சனம் நம் முகம் முன் நிற்கிறது என்பது மிகையல்ல!

பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை :
போராடாமல் விடிவில்லை!

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து, அவளின் வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்து கொலை செய்தார். ஆசிஃபா இந்த பெயரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ரோஜா போன்ற அந்த குழந்தையை பி.ஜே.பி.யைச் சேர்ந்த கோவில் பூசாரி, 17 வயது சிறுவன், அந்த குழந்தையைத்  தேடிச் சென்ற காவல் துறை அதிகாரி என எட்டு பேர் சேர்ந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்து கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசிவிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பல பேர் கும்பல் ஏழு மாதமாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்தக் கொடூரங்கள் எல்லாம் நம் நெஞ்சை  உலுக்கி எடுப்பவை.

பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, நரை விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும்  கொடூரங்களால்  பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் சொந்த வீட்டிலும் பின்தொடர்கிறது.

படிக்க:
மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?
நீங்கள் பாலியல் குற்றவாளியா?

இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கமும்தான். பெண் உறுப்புகளை அனுபவிக்க கூடிய பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத்தனமில்லையா?

ஆணாதிக்கத்தின் வேர்

கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்கச் செல்லும் பெண்ணைச் சீரழிக்கும் பாதிரியார்கள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்கும் அபாய வேர்.

நுகர்வுவெறி

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணைய தளங்கள். ஸ்மார்ட் போன் வடிவத்தில் நம் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கும் சனியன். பெண்களின் உடல்களை விதவிதமாக காட்டி, மகளா மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது. ‘தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்’ என்பதன் உச்சம்தான் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை. பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

இந்த ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவின் உச்சம்தான் அபிராமி. பத்து மாதம் சுமந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தன் குழந்தைகளை தனது சுகத்திற்காகக் கொலை செய்ய தூண்டியது. அதுதான் உடன் பிறந்தவர்களையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக சிதைக்கத் தூண்டுகிறது.

தடுக்க வேண்டியவர்களின் லட்சணம்

கபாலி, சீமராஜா படங்களை, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை இன்டர்நெட்டில் பார்க்க முடியாதபடி தடை விதிக்கும் நீதிமன்றம்தான், பெண்களை கவர்ச்சியாக, சோரம் போகக் கூடியவளாக, பால்உணர்வைத் தூண்டக் கூடியவளாக காட்டும் ஆபாச இணையதளங்கள், டிவி சீரியல்கள், சினிமாக்கள், விளம்பரங்களை தடை செய்ய ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று கையை விரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலரும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் அயோக்கிய சிகாமணிகளாகவே இருக்கிறார்கள்.

குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையின் இலட்சணமோ ஜ.ஜி.யே, பெண் எஸ்.பி.யை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்குவது, போராடும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது என்று சந்தி சிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க சென்றால் காவல் நிலையத்தில் கவனிக்கப்படும் முறையே  தனியானதுதான். அதிலும் ஏழைக் குடும்பமாக, தாழ்த்தப்பட்ட குடும்பமாக இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான்.

படிக்க:
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது. சாராயம், குட்கா விற்று மாணவர்கள் – இளைஞர்களிடம் போதை பழக்கத்தை வேகமாகப் புகுத்தி சீரழித்து வருகிறது ‘அம்மா’ வழியில் ஆட்சி நடத்தும் எடிப்பாடி அரசு. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான் என்று தெரிந்தும் அதனிடமே மனு கொடுத்தோ கெஞ்சியோ என்ன பயன்.

குற்றங்களை குறைக்க சொல்லப்படும் வழிமுறைகள்

‘குட் டச்’ – ‘பேட் டச்’, சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது, தண்டனைகளை கடுமையாக்குவது, உடனடியாகத் தண்டிப்பது போன்ற வழிமுறைகள் சொல்லப்படுகிறது. பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச் சட்டம் வந்த பிறகும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

எப்படித்  தடுப்பது?

உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க வேண்டுமெனில், பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்காமல்,  எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது.  ‘‘போராடுவோமா… வேண்டாமா?’’ என நாம் யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 45 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்படுகிறார்கள். போராடாமல் நம் குழந்தைகளை காக்க முடியாது என்கின்ற உண்மை நம் முகத்தில் அறையும் போது இனியும் தாமதம் ஏன்? பல இலட்சம் பேர் கூடிய மெரினா போராட்டத்திலும், பல மாதம்  வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள்.

படிக்க:
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?
பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

‘‘ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்!’’

  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!
  • நம் மாணவர்களையும் இளைஞர்களையும் கலாச்சார சீரழிவிலிருந்து மீட்டெடுப்போம்!
  • ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்ட சூளுரைப்போம்!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 2)

யந்திர சாதனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதனால்தான் காந்தியார் சர்க்காவை (இராட்டை) போற்றிப் புகழ்கிறார்; கைநெசவையும் கைநூற்பையும் வலியுறுத்துவதும் இந்த எதிர்ப்புக்குள்ள சான்றே ஆகும். அவர் இயந்திர சாதனங்களை இவ்வாறு எதிர்ப்பதும், சர்க்காவை நேசிப்பதும் தற்செயலானவை அல்ல, இது தத்துவம் தொடர்பானதாகும். காந்தியார் 1925 ஜனவரி 8ஆம் நாள் நடைபெற்ற கத்தியவார் அரசியல் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துகையில், இந்தத் தத்துவத்தை விளக்கியுரைப்பதற்கான தனி வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டார். காந்தியார் கூறியது இதுதான்:

“எல்லையின்றிப் பல்கிப் பெருகிச் செல்லும் உயிரற்ற இயந்திரங்களை வழிபட்டு நாடுகளுக்குச் சலித்துப் போய்விட்டது. ஈடிணையற்ற உயிர் வாழும் இயந்திரங்களை அதாவது நமது உடலை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்; அவற்றைத் துருப்பிடிக்க விடுவதன் மூலமும் அவற்றுக்குப் பதிலாக உயிரற்ற இயந்திர சாதனங்களை நுழைக்க முயலுவதன் மூலமும் இவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறோம்; உடல் முழுமையாக வேலை வாங்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்பது கடவுளின் விதி. நாம் அதனைக் கண்டு கொள்ளாமலிருக்கத் துணிகிறோம். ராட்டையானது சரீர யக்ஞத்தின் – உடலுழைப்பின் – புனிதச் சின்னமாகும். இந்தத் தியாகத்தைச் செய்யாமல் உணவு உண்பவர் உணவைத் திருடுபவர் ஆவார். இந்தத் தியாகத்தைக் கைவிட்டதன் மூலம் நாம் நாட்டிற்குத் துரோகிகளாகி விட்டோம்; செல்வக் கடவுளின் முகத்தில் கதவை அறைத்து மூடி விட்டோம்.”

இந்து ஸ்வராஜ் (இந்திய தன்னாட்சி) என்ற காந்தியாரின் சிறு நூலை வாசித்துள்ள எவரும் காந்தியார் நவீன நாகரிகத்தை எதிர்ப்பதை அறிந்துக் கொள்ளலாம். இந்த நூல் 1908ல் முதல் முறையாக வெளியிடப்பெற்றது. ஆனால் அதன் பிறகும் அவரது கருத்தியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . 1921இல் காந்தியார் எழுதியதாவது:(3)

“இந்தச் சிறு நூல் நவீன நாகரிகத்தை கடுமையாகக் கண்டிப்பதாகும். இது 1908இல் எழுதப்பட்டது. இன்று முன்னெப்போதைக் காட்டிலும் எனது பற்றுறுதி ஆழமடைந்துள்ளது. இந்தியா நவீன நாகரிகத்தை உதறும் என்றால் அதனால் அது ஆதாயமே அடைய முடியும் என்று நான் கருதுகிறேன். காந்தியாரின் கருத்துப்படி: (4)

“மேற்கத்திய நாகரிகம் சைத்தான் படைத்ததாகும்.

காந்தியாரின் இரண்டாவது இலட்சியம் வர்க்கப் போரை ஒழித்துக் கட்டுவதாகும்; வேலைக்கு அமர்த்துபவர்களும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான, நிலவுடமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான உறவு முறையில் காணப்படும் வர்க்கப் போராட்டத்தையும் கூட ஒழித்துக் கட்டுவதாகும். வேலைக்கு அமர்த்துவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான உறவு முறை குறித்து காந்தியாரின் கருத்துக்கள் 1921 ஜூன் 8 தேதிய நவஜீவன் ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அவரால் விவரிக்கப்பட்டன; இந்தக் கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதி எடுத்துத் தரப்படுகிறது:

காந்தியின் நவஜீவன் ஏடு.

“இந்தியாவிற்கு முன்னால் இரு பாதைகள் திறந்துள்ளன; வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற மேற்கத்தியக் கோட்பாட்டை நுழைக்கலாம்; அல்லது உண்மைதான் வெற்றி பெறும். உண்மைக்கு விபத்து எதுவும் நேரிடாது, வலுத்தவர்கள் – இளைத்தவர்கள் இரு சாராருக்கும் நீதி பெற உரிமை உண்டு என்ற கிழக்கத்திய கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கலாம். முதலில் இந்த இரண்டிலொன்றைத் தேர்தெடுக்க வேண்டியது தொழிலாளர் வர்க்கம்தான். தொழிலாளர்கள் வன்முறை வழியில் கூலியுயர்வு பெற வேண்டுமா? அது சாத்தியம் என்றாலும் கூட, அவர்களின் கோரிக்கைகள் எவ்ளவுதான் நியாயமானவை என்றாலும் வன்முறை போன்ற எதையும் அவர்கள் நாட முடியாது. உரிமைகளை அடைவதற்காக வன்முறையைப் பயன்படுத்துவது சுலபமான வழியாகத் தோன்றலாம். ஆனால் நீண்டக் காலப் பார்வையில் அது முட்களடர்ந்த பாதை என்று தெரிந்து விடுகிறது. வாளெடுத்து வாழ்கிறவர்கள் வாளினாலேயே மடிவார்கள். நீச்சல்காரரே நீரில் மூழ்கி இறப்பதுண்டு. ஐரோப்பாவைப் பாருங்கள், அங்கு யாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் யாருக்குமே மன நிறைவு இல்லை. தொழிலாளி முதலாளியை நம்புவதில்லை; முதலாளிக்குத் தொழிலாளியிடம் நம்பிக்கையில்லை. இருவருமே ஒருவிதமான வேகமும் வலிமையும் பெற்றுள்ளார்கள். ஆனால் காளை மாடுகளுக்கும் கூட இந்தத் தன்மைகள் உண்டு. அவர்கள் கடைசி முடிவு வரை போராடுகிறார்கள். இயக்கம் அனைத்துமே முன்னேற்றமாகாது. ஐரோப்பிய மக்கள் முன்னேறி வருகிறார்கள் என்று நம்புவதற்கு நம்மிடம் காரணமேதுமில்லை. அவர்களிடம் செல்வம் இருப்பது அறவியல் அல்லது அகவியல் பண்புகள் ஏதும் இருப்பதற்கு சான்றாகாது.

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !

“அப்படியானால் நாம் என்ன செய்வது? பம்பாயில் தொழிலாளர்கள் அருமையான நிலை எடுத்திருக்கிறார்கள். நான் எல்லா விவரங்களையும் அறியக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் என்னால் பார்க்க முடிந்த வரை, அவர்கள் இன்னும் சிறந்த வழியில் போராட முடியும். ஆலை அதிபர் முழுக்க முழுக்கத் தவறு செய்திருக்கலாம். பொதுவாகச் சொன்னால், மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான போராட்டத்தில் முதலாளிகள் பல சந்தர்ப்பங்களில் தவறாக நிலை எடுக்கிறார்கள். ஆனால் உழைப்பானது தன் வலிமையை முழுமையாக உணரும் நிலை ஏற்படும் போது, மூலதனத்தைக் காட்டிலும் கொடுங்கோன்மையானதாக அதனால் மாற முடியும் என்பதை நானறிவேன். உழைப்பானது ஆலை அதிபர்களின் அளவுக்கு மதிநுட்பம் வாய்ந்ததாய் இருக்க வேண்டுமானால் உழைப்பு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று ஆலை அதிபர்கள் இயங்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு நாளும் உழைப்பு அந்த மதிநுட்பத்தை அடைய முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. அப்படி அது அடையுமானால், உழைப்பு உழைப்பாக இல்லாமற் போய், அதுவே ஆண்டையாகி விடுகிறது. முதலாளிகள் பணம் தரும் வலிமையைக் கொண்டு மட்டும் போராடவில்லை. அவர்களிடம் மதி நுட்பமும் சாமர்த்தியமும் இருக்கவே செய்கின்றன.

தொழிலாளர்களின் போராட்டங்களை எப்போதும் தனது கட்டுக்குள் கொண்டுவரவே விழைந்தார் காந்தி. அகமதாபாத் டெக்ஸ்டைல் தொழிலாளர்களின் போராட்டத்தில் (1917-20) காந்தி.

“நம்முள் இருக்கும் கேள்வி இதுதான்: தொழிலாளர்கள் அவர்கள் இருக்கக் கூடிய நிலையில் குறிப்பிட்ட உணர்வு நிலையை வளர்த்துக் கொள்ளும் போது, அவர்களது பாதை எதுவாக இருக்க வேண்டும்? தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். மறுபுறம், அவர்கள் தூய்மையான நீதியின் அடிப்படையில் நிலை எடுப்பார்களானால் அதை அடைவதற்காகத் தாங்களே துன்புறுவார்களானால், அவர்கள் எப்போதுமே வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்ல, தங்கள் அதிபர்களைச் சீர்த்திருத்தம் செய்து, தொழில்களை வளர்ப்பார்கள்; அதிபர், ஆட்கள் ஆகிய இரு சாராரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகத் திகழ்வார்கள்.”

பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதே பொருள் குறித்து காந்தியார் சொன்னார்: (5)

“முன்பும் இப்படித்தான் இருந்தது. இந்தியாவின் வரலாறு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே கசப்பற்ற உறவுகளின் வரலாறு அல்ல.”

தொழிலாளர்கள் தங்களது பொருளாதார நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்கு வேலைநிறுத்தம் என்னும் கருவியைப் பயன்படுத்துவது குறித்து காந்தியாரின் கருத்துகள் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கவை. காந்தியார் சொல்கிறார்: (6)

“ஆகவே வெற்றிகரமாகப் பெரிய பெரிய வேலைநிறுத்தங்களைக் கையாண்டவன் என்ற முறையில், வேலை நிறுத்தத் தலைவர்கள் அனைவரின் வழிகாட்டுதலுக்காகவும். இவ்வேட்டில் ஏற்கெனவே கூறப்பட்ட பின்வரும் கோட்பாடுகளை மீண்டும் எடுத்துரைக்கிறேன்:

1) உண்மையான மனக்குறை இல்லாமல் வேலைநிறுத்தம் கூடாது.

2) சம்பந்தப்பட்ட ஆட்கள் தங்கள் சேமிப்பைக் கொண்டே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்றால் அல்லது சிக்கெடுத்தல், நூற்றல், நெசவு செய்தல் போன்ற ஏதாவது தற்காலிக வேலையில் ஈடுபடுவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதென்றால் வேலைநிறுத்தம் செய்யக் கூடாது. வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஒருபோதும் பொதுமக்களிடமிருந்து வரும் நன்கொடைகளையோ வேறு தர்மத்தையோ நம்பியிருக்கக் கூடாது.

3) வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் மாறவே மாறாத குறைந்தபட்சக் கோரிக்கை ஒன்றை நிர்ணயம் செய்ய வேண்டும்; வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக அதனை அறிவித்து விட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களது எண்ணிக்கையையோ, மிருக வலிமையையோ, அதாவது வன்முறையையோ நம்புவார்களானால் அது தற்கொலையாகவே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள தொழில்களுக்கு ஊறு செய்வார்கள். (- காந்தி.)

“மனக்குறை நியாயமானதாக இருந்த போதிலும், வேலைநிறுத்தம் செய்கிறவர்கள் காலவரம்பின்றித் தாக்குப் பிடிக்க முடிந்தாலும், அவர்களின் இடத்துக்கு வேலை செய்ய வருவதற்கு வேறு தொழிலாளர்கள் இருப்பார்களானால் வேலைநிறுத்தம் தோற்று விடக் கூடும். ஆகவே புத்திசாலியான ஒருவர் தமது இடத்தை வேறொருவரைக் கொண்டு நிரப்பி விட முடியும் என்று கருதினால் கூலி உயர்வுக்காகவோ வேறு வசதிக்காகவோ வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் பரோபகாரியான அல்லது தேகப்பற்றுடைய ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரர் படும் இன்னலுக்காக வருந்தி அதில் தம்மையும் இனைத்துக் கொள்ள விரும்பினால், வேண்டலை விட வழங்கல் கூடுதலாய் இருந்தாலும் வேலைநிறுத்தம் செய்வார். நான் விவரித்தது போன்ற குடியியல் வேலைநிறுத்தத்தில் மிரட்டலின் வடிவிலோ கலகம் செய்யத் தூண்டுவதன் வடிவிலோ வேறு வழியிலோ வன்முறைக்கு இடமே கிடையாது என்பதைக் கூறத் தேவையில்லை… என்னால் ஆலோசனைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ள உரைகற்களை வைத்துப் பார்த்தால், வேலைநிறுத்தக்காரர்கள் தங்களுக்கு உதவியாகக் காங்கிரசிடமிருந்தோ வேறு எந்தப் பொது அமைப்பிடமிருந்தோ நிதி கேட்டு விண்ணப்பிக்கவோ நிதி பெறவோ அவர்களின் நண்பர்கள் அவர்களுக்கு ஒருபோதும் ஆலோசனை கூறியிருக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. வேலைநிறுத்தக்காரர்கள்பால் காட்டப்படும் பரிவின் மதிப்பு அவர்கள் நிதியுதவி பெறுகிற அல்லது ஏற்றுக் கொள்கிற அளவுக்குக் குறைந்து போகிறது. பரிவு காட்டிச் செய்யப்படும் வேலைநிறுத்தத்தின் சிறப்பு பரிவு காட்டுகிறவர்கள் அடையும் சங்கடத்திலும் இழப்பிலும்தான் அடங்கியுள்ளது.

படிக்க:
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்
அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்குமான உறவுமுறை பற்றிய காந்தியாரின் கருத்துக்கள் – நிலவுடைமையாளர்களை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த ஐக்கிய மாகாணக் குத்தகையாளர்களுக்கான கட்டளைகளின் வடிவில்-1921 மே 18 நாளிட்ட யங் இந்தியாவில் அவரால் எடுத்துரைக்கப்பட்டன.(7) காந்தியார் சொன்னார்.

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார்.

“ஐக்கிய மாகாண அரசு ஒழுங்கின் எல்லைகளைக் கடந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்றும் அதேபோது, கிசான்களும் தங்களுக்குப் புதிதாய்க் கிடைத்த வலிமையைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிவில்லை என்பதில் ஐயமில்லை. அநேக ஜமீன்தார்களில், அவர்கள் எல்லை கடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சட்டத்தை கையிலெடுத்திருப்பதாகவும், தங்கள் விருப்பம் போல் செய்யாதவர்கள் மீது பொறுமையிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சமூகப் புறக்கணிப்பைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், அதனை ஒரு வன்முறைக் கருவியாக மாற்றி வருகிறார்கள். அவர்கள் சில இடங்களில் தங்கள் ஜமீன்தார்களுக்கு நீர் வழங்கலையும் நாவிதர் பணியையும், இதர ஊதியப் பணிகளையும் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களுக்குச் செலுத்த வேண்டிய குத்தகையைக் கூட நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது. கிசான் இயக்கமானது ஒத்துழையாமையிலிருந்து விலக்கம் பெற்றுள்ளது; ஆனால் அது ஒத்துழையாமை இயக்கத்துக்கு பிறழ்ந்து இருப்பது, அதைச் சாராமல் இருப்பது. உரிய நேரம் வரும் போது அரசுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூற நாம் தயங்க மாட்டோம் என்றும் அதேபோது, ஜமீன்தார்களுக்குக் குத்தகை கிடைக்காமல் செய்ய முயல்வது பற்றி ஒத்துழையாமையின் எந்தக் கட்டத்திலும் எண்ணிப் பார்க்கவில்லை. கிசான் இயக்கமானது கிசான்களின் தகு நிலையை மேம்படுத்துவது, ஜமீன்தார்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவுகளை சீர்படுத்துவது என்ற அளவோடு நிறுத்தப்பட வேண்டும். ஜமீன்தாரர்களுடனான உடன்படிக்கை எழுதப்பட்டதென்றாலும் சரி, வழக்காற்றிலிருந்து அறியப்படுவதென்றாலும் சரி, அந்த உடன்படிக்கையின் வரை முறைகளை நேர்மையாகக் கடைப்பிடிக்குமாறு கிசான்களுக்கு ஆலோசனை கூறப்பட வேண்டும். ஒரு வழக்காறு அல்லது எழுத்து மூலமான ஒப்பந்தம் மோசமானதாய் இருக்குமிடத்து, வன்முறையைக் கொண்டோ ஜமீன்தார்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமலோ இவர்கள் அதனை அகற்ற முயலக் கூடாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜமீன்தார்களிடம் நட்புடன் விவாதிக்க வேண்டும் தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும்.”

காந்தியார் சொத்துடைய வர்க்கத்தைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கெதிரான ஒரு பிரசாரத்தையும் கூட அவர் எதிர்க்கிறார். பொருளாதாரச் சமத்துவத்தின் பால் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை, சொத்துடைய வர்க்கத்தைக் குறிப்பிடுகையில், காந்தியார் பொன் முட்டையிடும் கோழியை நான் அழிக்க விரும்பவில்லை என்று சமீபகாலத்தில்தான் சொன்னார். உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பணக்காரர்களுக்கும் ஏழைக்கும் இடையிலான, நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகையாளர்களுக்கும் இடையிலான, வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான பொருளாதாரப் பிணக்கிற்கு அவர் சொல்லும் தீர்வு மிகவும் எளிமையானது. உடைமையாளர்கள் தமது சொத்தினைப் பறி கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏழைகளுக்கான அறங்காவலர்களாக தங்களை அறிவித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அறக்கட்டளையானது ஒரு தார்மிகக் கட்டுப்பாட்டை மட்டும் நிறைவேற்றுகிற தன்னார்வ அமைப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(3) யங் இந்தியா 1921 ஜனவரி 26.
(4) தர்ம மாந்தன், பக்கம் 65.
(5) யங் இண்டியா, 1922 பிப்ரவரி 23.
(6) யங் இண்டியா, 1921 ஆகஸ்ட் 11. ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )
(7) கிசான் என்பது குத்தகையாளரையும் ஜமீன்தார் என்பது நிலவுடமையாளரையும் குறிக்கும். ( மூலத்தில் அழுத்தம் தரப்படவில்லை )

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.