Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 438

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன? – அ.தி.மு.க-வின் ஊழலா, முதலாளிகளின் இலாபவெறியா?

மிழகத்திற்கு புதிதாக முதலீடு செய்ய வந்த கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் கமிஷன் கலாச்சாரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் இதனால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் தமிழகத்திற்கு இல்லாமல் போய் விட்டதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!தான் பார்க்கும் பார்ப்பன மாமா வேலைக்கு மேலும் ‘ஊக்கத்தொகை’ பெற கோப்ரா போஸ்ட்டிடம் பேரம் பேசிய ஆதிமூலத்துக்கு சொந்தமானது இந்த தினமலர். அதாவது முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கி அவர்களுக்கு ஏற்றபடி செய்தி வெளியிட்டு சேவை செய்வதில் முதல் இடத்தில் இருக்கும் தினமலர்தான் லஞ்ச ஊழல் பற்றி புலம்புகிறது.

மேலும், எடப்பாடி அ.தி.மு.க அரசு தினமலரின் ஆதர்ச முதலமைச்சரான பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் கட்டியமைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம்தான் என்பதை மறைத்து விட்டு, ‘தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன’ திராவிட இயக்கத்தின் மீது ஒட்டு மொத்தமான அவதூறை வாரி இறைக்கிறது, தினமலர்.

இனிமேல் விஷயத்துக்கு வருவோம். ஒரு வெவரமும் தெரியாத வெள்ளேந்திகளான கார்ப்பரேட்டுகளை தமிழ்நாட்டின் அ.தி.மு.க பொறுக்கிகள் சுரண்டுவது போல பில்ட்- அப் கொடுக்கிறது பார்ப்பன ஊழல் பத்திரிகை தினமலர்.

உண்மையில் ‘கறி உள்ள பக்கம் தான் கத்தி சாயும்’, என்ற வகையில் தனக்கு எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு தான் தன் கடையை விரிக்கின்றன கார்ப்பரேட்டுகள்.

கார்ப்பரேட்டுகளின் உற்ற நண்பர் சந்திரபாபு நாயுடு (கோப்புப் படம்)

“போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. இலாபம் சுமார் 10 சதவீதம் கிடைக்குமென்றால், எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது பொருட்டில்லை; 20 சதவீதம் லாபம் உறுதியாக கிடைக்குமென்றால் அதற்கு பித்தம் தலைக்கேறி விடும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால் வெளிப்படையாக அடாவடி செய்யும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகள் மீதும் ஏறி மிதிக்க தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்; அதன் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட எந்த நச்சுப் பரீட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையுமே தடையின்றி ஊக்குவிக்கும்”

இது மூலதனத்தின் இயல்பை பற்றியும், அதன் ஆள் உருவமான முதலாளிகள் பற்றியும் டி.ஜே. டன்னிங் என்பவர் 19-ம் நூற்றாண்டில் எழுதியது.

எனவே, முதலீடு தமிழ்நாட்டில் போடப்படுகிறதா, ஆந்திராவுக்கு போகிறதா என்பதை தீர்மானிப்பது லஞ்சம் கொடுப்பது தொடர்பான முதலாளியின் விருப்பு வெறுப்பு இல்லை. லஞ்சம் கொடுப்பது என்ன கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதை ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் பார்த்து விட்டோம்.

கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதன் நிரூபணம் தான் ஸ்டெர்லைட் தூத்துக்குடி மாடல்.

அரசுக்கு லஞ்சம் கொடுப்பது முதலாளித்துவத்தின் மரபணுவிலேயே உள்ளது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இந்தியாவில் வாங்கி குவித்த லஞ்சங்கள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள வரலாறு. அது ஒரு புறம் இருக்க கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோக சாசனத்தை புதுப்பிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுக்கு பெருமளவு லஞ்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது அக்கம்பெனி. இவ்வாறு, தனது பிறப்பிலேயே ஊழலில் திளைத்து, வளர்ந்ததுதான் முதலாளித்துவம்.

அதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.

ஆனால், முதலாளிகளின் நிர்வாகக் குழுவான இந்த அரசும், தினமலர் போன்ற பாடபத்திர ஓணாண்டி புலவர்களும் “முதலாளிகள் முதலீடு செய்வார்கள், பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், “2009-10ல் 5,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பொதுத்துறை நிறுவனங்களில் 50% தொழிலாளர்களும், நவீன பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் 70% தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்” என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது கூடுதலான ‘சலுகை’.

♦ படிக்க:
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

எனவே, முதலாளிகளைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் ஆள் எடுத்து வேண்டாத நேரத்தில் தூக்கி எறிவதற்கான சுதந்திரம்; நாட்டின் வளங்களை வரைமுறையற்று கொள்ளையடிக்க சுதந்திரம்; சுற்றுச் சூழலை சீரழிக்க சுதந்திரம் வேண்டும். இவற்றுக்கெல்லாம் வசதி செய்து கொடுக்கும் விசுவாசமான, திறமையான அரசு வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் லஞ்ச ஊழலில் இருந்து சுதந்திரம் என்பது வருகிறது, அதுவும் கொடுக்கும் கமிஷனை மிச்சப்படுத்தி லாபத்தை அதிகப்படுத்துவது என்ற நோக்கத்தில்தானே தவிர, ஏதோ லஞ்சத்துக்கு
எதிரான அறச்சீற்றத்தினால் அல்ல.

முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் கூட அவர்களது சொந்த மூலதனத்தில் இருந்து வருவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியைத்தான் லஞ்சமாக வாரி வழங்குகின்றனர். உதாரணமாக, 2013-ல் டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் இருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்ட போது, அது ஏன் ஏற்கனவே வாகன உற்பத்தி துறை வலுவாக இருந்த தமிழ்நாட்டிற்கோ இல்லை மராட்டியத்திற்கோ வராமல் குஜராத்திற்கு சென்றது? அங்குதான் இருக்கிறது சூட்சுமம், டாடாவின் மீது தனக்கிருந்த காதலின் பால் ஒரு சிறிய பரிசாய் கிட்டத்தட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை வழங்கினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதில் ஒன்று 20 ஆண்டுகளுக்கு வரியில்லா கடன். டாடாவுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறான சலுகைகள் லஞ்சத்துக்கு சமமானது தானே?

♦ படிக்க:
நானோ கார் : மலிவின் பயங்கரம் !

டாடாவுக்கு கொடுக்கப்பட்டதை லஞ்சம் என்று ஏன் சொல்கிறோம்? தொழிற்சாலை ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குள் நானோ கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி விட்டிருக்கிறது டாடா. அத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன ஆயின என்பதற்கு மோடியும் பதில் சொல்லப் போவதில்லை, டாடாவும் விளக்கம் சொல்லப் போவதில்லை. முறைகேடாக சலுகைகளைப் பெறுவது, அதற்கு கவுரவமாக பெயர் சூட்டிக் கொள்வது, சட்டபூர்வமாக்கிக் கொள்வது. இதுதான் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நடைமுறை.

தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுகிறது, தினமலர். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் ஒரு காலத்தில் கார் உற்பத்திக்கு பெயர் போன இடம். ஆனால், தமது லாபத்தை பெருக்குவதற்காக டெட்ராய்ட்டை கைவிட்டு விட்டு லஞ்ச ஊழல் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுத்தனர் கார் கம்பெனி முதலாளிகள். இன்றைய டெட்ராயிடின் நிலையோ காய்ந்து காயலான் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நகரமே திவாலாகி திருவோடு ஏந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போதோ தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள், முதலாளிகளின் அடிவருடிகள்.

♦ படிக்க:
முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

ஒருவேளை டெட்ராய்ட்டின் நிலை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு முதலாளிகள் வேறு இடம் தேடி போகிறார்களே என்று தினமலர் வருத்தப்படுகிறதோ என்னவோ? கவலைப்பட வேண்டாம், முதலாளிகள் எங்கு போனாலும் மொட்டை அடிப்பதில் வல்லவர்கள்தான்.

ஒரு பகுதி தொழிலாளிகளை இன்னொரு பகுதி தொழிலாளிகளுக்கு எதிராக நிறுத்துவது, ஒரு பகுதியை சுரண்டி தரிசு நிலமாக்கி விட்டு இன்னொரு பகுதிக்கு நகர்ந்து விடுவது என்ற ஊதாரி முதலாளித்துவ நிறுவனங்களுக்கு செக் வைப்பது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே ஆகக் கூடியது. தொழிலாளி வர்க்கம் தனது சர்வதேச ஐக்கியத்தின் மூலம்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கும் அதையே சாதனையாக்கி துதிபாடும் ஊடக ஊதுகுழல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

– ராஜதுரை
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats

அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கிறார்கள் ஸ்டெர்லைட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஆய்வுக்குழு ஒன்றை அமர்த்தியது. அக்குழு தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. அங்கு ஆய்வுக்குழுவினரிடம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் என மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் 27.09.2018 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இது.

”ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மக்கள் பாதிப்பு குறித்து மாநில அரசு எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசு” என்கின்றனர் இம்மக்கள்.

படிப்படியாக தண்ணீரின் தன்மை மாறியிருப்பதையும், தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் விவரிக்கின்றனர். ஸ்டெர்லைட் நிர்வாகமோ அங்கு பணிபுரியும் நபர்களுக்குப் பணம் வழங்கி ஸ்டெர்லைட்டினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கூற வைக்கிறது.

”கடந்த மே 22 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட, படுகாயத்திற்குள்ளாக்கப்பட்ட, கைது செய்யப்பட்டவர்களின் தியாகத்திற்கு பதில் என்ன ?” எனக் கேட்கின்றனர் இம்மக்கள்.

சுற்றுவட்டாரப் பகுதி மக்களை பணம் கொடுத்து எப்படியாவது வாயை அடைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஸ்டெர்லைட். பெண்கள் சிலரை பணிக்கமர்த்தி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்று மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆள் பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறது.

அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்துத் தருவதாகவும் வாக்களித்திருக்கிறது. இவனே தண்ணீரையும் மாசுபடுத்துவான், இவனே எங்களுக்கு மருத்துவக் குழுவையும் அமைத்து வைத்தியம் பார்ப்பானா ? எனக் கொதிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கைகளில் எங்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த அரசு. நாங்கள் இறுதி வரையில் – ஸ்டெர்லைட்டை மூடும் வரையில் போராடுவோம். இந்த அரசாங்கம் மக்களுக்காக இருக்கிறதா ? இல்லை, ஸ்டெர்லைட்டுக்காக இருக்கிறதா ? என வினவுகின்றனர் இம்மக்கள்.

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள காணொளியைப் பாருங்கள் பகிருங்கள் !

தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் தரவிறக்கம் செய்யலாம்

2

நண்பர்களே…

பொ. வேல்சாமி
தந்தைப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிஞர் கருணானந்தம் 1979 இல் சிறப்பாக எழுதியுள்ளார். 903 பக்கங்கள் கொண்ட இந்நூலை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இந்நூலை தரவிறக்கம் செய்து கொள்ள பெரியார் பிறந்த தினமான (17-09-18) இன்று இணைப்பைத் தந்துள்ளேன்.

 

கோப்பை தரவிறக்க இங்கே சொடுக்கி, Free Download பட்டனை அழுத்தவும் : தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு

1926 இல் நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கும் பட்டியலைப் பாருங்கள்
– தந்தைப் பெரியார்.

நண்பர்களே….

“ஓட்டு”க்கு ரூபாய் நோட்டை மக்கள் மானமற்று வாங்குவது நேற்றைக்கு இன்றைக்கும் நடந்ததாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் 1926 ஆண்டு குடியரசு இதழ் தொகுதி 3, பக்.322 இல் சித்திரகுப்தன் என்ற பெயரில் பெரியார் கொடுத்துள்ள தகவல்கள் நம் புருவத்தை உயர்த்தவைக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் அன்றைய காங்கிரஸ் கட்சிகாரர்கள் இந்த தொகைகளை ஓட்டுக்காக வழங்கியுள்ளார்கள். இந்த தகவல்கள் காந்திக்கும் தெரியும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

நூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்

”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை – விதைக்கப்படுகிறார்கள்” என்று காலங்காலமாக சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? விதைக்கப்பட்ட அந்த புரட்சியாளர்களின் வேர்களைப் பற்றிக் கொண்டு, இன்றைய காலகட்டத்தின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் புதிய புரட்சியாளர்கள் தானாகவே உருவாகி விடுவார்களா? நிச்சயம் உருவாக முடியாது. இங்கே அப்புரட்சியாளர்களோடு அவர்களது கொள்கைகளும் சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கையில் அது எப்படி நடக்கும்! புதைக்கப்பட்ட – மறைக்கப்பட்ட அவர்களது கொள்கைகள், கருத்துக்களின் சாரத்தை உட்கொண்டு ஜீரணிக்கும் ஒரு தலைமுறையில் இருந்து மட்டுமே அத்தகைய புதிய புரட்சியாளர்கள் உருவாகி வரமுடியும். (நூலிலிருந்து பக்-9)

பகத்சிங் தூக்கிலடப்பட்டு ஏறத்தாழ 55 ஆண்டுகள் முடிந்த பின்னரே முதன் முதலாக பகத்சிங்கின் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. (நூலிலிருந்து பக்-11)

பகத்சிங்கைப் பற்றி, அவரது கொள்கைகள் பற்றி அவர் வழிநடப்பது பற்றி ஏன் இத்தனை குழப்பங்கள் – தவறான அபிப்ராயங்கள்? காரணம், பகத்சிங்கின் தியாகம் தெரிந்த அளவிற்கு அவரது மார்க்சிய கொள்கையின் ஆழம் சாதாரண மக்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி, ஆளும் வர்க்கங்கள் பகத்சிங்கைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பி வருவது ஒருபுறம் இருக்க பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றுபவர்களும் தங்கள் பங்கிற்கு தவறான அபிப்ராயங்களை உருவாக்கி வருகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் உண்மையில் பகத்சிங்கின் கொள்கைகள்தான் என்ன என்பதை உழைக்கும் மக்கள் உணருமாறு செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் பகத்சிங்கைப் பற்றிய தங்களது சொந்த அபிப்ராயங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். (நூலிலிருந்து பக்-22)

எனவே, பகத்சிங்கின் எழுத்துக்களை மொழிபெயர்க்கும் போது கருத்துச் சிதைவிற்கோ, தவறான பொருள் கொள்வதற்கோ வாய்ப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தனிக்கவனம் எடுத்துக் கொண்டோம். (பக்-23) – முன்னுரையில் த.சிவக்குமார்.

பகத்சிங் சாதிக்க முயற்சித்த புரட்சி பற்றிய அவரது சொந்த புரிதல் என்னவாக இருந்தது என்பதை தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவரது படைப்புகள், அவரது பல்வேறு அறிக்கைகள் மற்றும் எழுத்துக்களை ஆராய்ந்துப் பார்த்தால், பகத்சிங்கை அவரது சமகாலத்தில் இருந்த மற்ற புரட்சியாளர்களோடு ஒன்றாகக் கருதுவதற்கு எவருக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. மற்ற புரட்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலையை சாதிக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தால் உணர்ச்சிப் பூர்வமாக தூண்டப்பட்டிருந்தனர்; அதற்குத் தேவைப்படும் எந்த தியாகங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருந்தனர்.

இவற்றைத் தவிர, அவ்விடுதலையைச் சாதிப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மீதோ பரந்துபட்ட மக்களின் மீதோ அவர்கள் எவரும் பத்தியை சிறிதளவும் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் பகத்சிங்கின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. அவர், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அத்துடன் தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். பகத்சிங்கின் இந்த அம்சம்தான் பகத்சிங் ஓர் கம்யூனிஸ்டாக இருந்தார் என்ற முடிவுக்கு பலரையும் வரச்செய்தது. (நூலிலிருந்து பக்-31,32)

” புரட்சி என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. ‘புரட்சி’ என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும்வரை இந்தப் போர் தொடரும்; தொடர வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அவர்கள் தங்களது நயவஞ்சகமான சுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்… இந்தப்போர் தொடர்ந்தே தீரும்… அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்… இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சூழ்நிலைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்.” – பகத்சிங்.

அப்படியே இன்றைய சூழலோடுப் பொருந்திப் போகக்கூடிய, பகத்சிங்கின் தீர்க்க தரிசனமான வரிகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. நூலின் வழியே பகத்சிங்கோடு உரையாடி பாருங்கள், உண்மை புரியும்.

நூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…
(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)
தொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்

வெளியீடு: நெம்புகோல் பதிப்பகம்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயணபுரம், மதுரை – 625014.
பேச: 93441 23114.
பக்கங்கள்: 384
விலை: ரூ150.00

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

ன்று (செப்டெம்பர் 28, 2018) பகத்சிங்கின் 111-வது பிறந்தநாள். பகத்சிங்கைப் பற்றி இக்காலகட்டத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன?

ஊர்பக்கங்களில் கோவில் திருவிழாக்களில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவதற்கு முன்னர், முள் பொறுக்கி சாமியை வீதி உலா அழைத்துச் செல்வர். அதாவது உற்சவ மூர்த்தி வருவதற்கு முன், இந்தச் சாமி வந்து வழியை சரிபடுத்திக் கொடுக்கும். அதே போல ஏகாதிபத்தியங்கள் இந்த நாட்டை ஒட்டச் சுரண்டுவதற்கேற்ப வழிப்பாதையை சரி படுத்திக் கொடுக்கவே முள்பொறுக்கிச் சாமியாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் தற்போது மக்களை ஒடுக்கி வருகிறது.

தற்போது நிலவும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு நிகராக அன்று இருந்த காலனிய காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் பகத்சிங். பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்புக் குரலைப் போன்றே இன்றும் இந்த அரசின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக இளைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு.

இந்த சூழல்தான் பகத்சிங்கை அவசியப்படுத்துகிறது. அவரைப் பற்றி இதுவரை நமக்கு என்ன சொல்லித் தரப்பட்டிருக்கிறது ?

பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டது மட்டும்தான் முக்கியமான நடவடிக்கையா? அவர் ஒரு துடிப்புள்ள இளைஞர் என்பது மட்டும்தானா அவரது சிறப்பு? அதைத்தாண்டி இச்சமூகத்திற்கு பகத்சிங்கின் பங்களிப்பு என்ன?

பகத்சிங் ஒரு தியாகி. அவரது தியாகத்திற்குப் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன? அவரது நோக்கம் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதும், சோசலிச சமதர்ம சமூகத்தை ஏற்படுத்துவதுமே ஆகும். அதற்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் பகத்சிங். அவரது சித்தாந்தமும் உணர்வும் என்னவாக இருந்தது?

பகத்சிங் தனது உயிருக்காக வாழவில்லை. அவர் தனது உணர்வுக்காக வாழ்ந்தவர். அவர் மரணிப்பதற்கு முன்பு கூட, இந்த நாட்டிற்குத் தாம் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறோமா என்பதை பரிசீலித்தவர்.

உண்மையான தியாகம் என்பது என்ன ? உயிரை இழப்பது மட்டுமா ? இல்லை சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்பதா?

பகத்சிங் எதற்காக, என்ன நோக்கத்திற்காக வாழ்ந்தாரோ அதிலிருந்துதான் பகத்சிங்கின் வாழ்வை, அவரது தியாகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகத்சிங்கை அத்தகையதொரு சீரிய பார்வையில் நமக்கு அறியத் தருகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம்

பாருங்கள் ! பகிருங்கள் !

மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று “உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன் பெயர் ”பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா”.

மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு மருத்துவத் திட்டங்கள் வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த ’பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’தான்.

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாஇத்திட்டம் குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது மோடி அரசு. அமெரிக்காவின் “ஒபாமா கேர்” என்ற மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தோடு இதனை ஒப்பிட்டு அப்போது இத்திட்டத்தை மோடி ஆதரவு ஊடகங்கள், ’மோடி கேர்’ திட்டம் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தன.

இத்திட்டத்தின்படி பொருளாதார ரீதியில் பின்தங்கிய சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ. 5 இலட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் மோடி.

உலகில் எந்த நாடும் செய்திராத அளவிலான அரசு நிதியளிக்கும் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் இது என்றும் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமான அளவிலான மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார் மோடி.

ஆனால் உலகின் மிகப்பெரிய திட்டம் என்று மோடியால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ.2000 கோடி மட்டுமேயாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டம், நாடு முழுவதும் 1,50,000 சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களை உருவாக்குவது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.1200 கோடியை ஒதுக்கியது மோடி அரசு. அதாவது ஒரு மையத்துக்கு ரூ. 80,000 மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த 80,000 ரூபாயை வைத்துக் கொண்டு பழைய சுகாதார மையங்களுக்கு பெயிண்ட் அடித்து புதுப்பிக்க முடியுமே அன்றி கண்டிப்பாக புதிய மையங்களை உருவாக்க முடியாது. ஆயுஷ்மான் பாரத்தின் திட்டத்தின் கீழ் வரும் இத்திட்டமும் ஒரு ஜூம்ளா-தான் என்பதை இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை வைத்தே சொல்லாமல் சொல்லியிருக்கிறது மோடி அரசு.

ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் வரும் மற்றொரு திட்டமான இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நடப்பாண்டு நிதிநிலையறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2000 கோடி ஆகும். இத்திட்டம்தான் 50 கோடி இந்தியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் மோடி.

இத்திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கவிருப்பதாக நடப்பாண்டு  நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது மத்திய அரசு. ஒரு சிறிய கணக்கு ஒன்றை போட்டுப் பார்ப்போம். இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்கள் தலா ரூ.5,00,000 வரையிலான மருத்துவக் காப்பீட்டுத்தொகையாக பெறமுடியும். இத்தொகையில் 1% (ரூ.5000) தொகையை மட்டுமே 10 கோடி குடும்பங்கள் கோரிப் பெறுகின்றனர் என்று வைத்துக் கொண்டாலுமே குறைந்தபட்சம் ரூ. 50,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்ட 1% என்பது மிகச் சிறியது. நடைமுறையில் இதை விட அதிகமான தொகையே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோரப்படும்.

இவர்கள் ஒதுக்குவதாக கூறியுள்ள தொகையைக் கொண்டு கணக்கிடுவோம். 10 கோடி குடும்பங்கள் பயனடையவிருக்கின்றனர் எனில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு வழங்கப்படக் கூடிய தொகை வெறும் ரூ.1100 ஆகும். எனில் நடைமுறையில் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு ஒருமுறை பல் பிடுங்க மட்டுமே இந்த பணம் போதுமானதே ஒழிய எவ்விதத்திலும் இது மக்களை நோயிலிருந்து காக்கப் போவது இல்லை.

மோடியின் அறிவிப்புப் படி சரியாக 50 கோடி பயனர்களுக்கு இந்த தொகையை பிரித்துப் போட்டால், நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.220 மட்டுமே இன்சுரன்ஸ் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகையும் கூட அந்த ரூ.10,000 கோடியை மோடி அரசு ஒதுக்கினால்தான்.

மோடி அரசு சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்த வரலாறையும் சிறிது பார்க்கலாம். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்ட போது ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கு 11.8% அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டிருப்பதாக பெருமை பீற்றியது மோடி அரசு. ஆனால் சிறிது நுணுக்கமாக கணக்கிட்டால் மோடி அரசின் பித்தலாட்டம் அம்பலப்படும்.

மோடிகடந்த 2017-2018 –ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்துக்கு ரூ.48,878 கோடி ஒதுக்கிய பிறகு மறுமதிப்பீட்டு நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.53,294 கோடியாகும். நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.54,600 கோடியாகும். இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெறும் 2.7% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

“உலகின் மிகப்பெரிய அளவிலான” காப்பீட்டுத்திட்டம் என்பதும் மிகப்பெரிய கட்டுக்கதையே. ஒதுக்கப்படும் நிதியை வைத்துப் பார்த்தாலும் கூட உலகிலேயே மிகப்பெரிய திட்டம் எனக் கூற முடியாது. ஏனெனில் பல்வேறு நாடுகள் இதனை விட அதிகமாக செலவிடுகின்றன. உலக நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி)  பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதி அளவின், சராசரி 5.99% ஆகும். ஆனால் இந்தியா வெறும் 1.2% மட்டுமே ஒதுக்குகிறது.

கணக்கில் முன் பின் இருந்தாலும் இந்த காப்பீட்டுத்திட்டம் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். ஏற்கனவே 1 இலட்சத்திற்கும் குறைவாக இருந்த காப்பீட்டுத்தொகை தற்போது 5 இலட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் நல்லதுதானே என்றும் பலர் கருதலாம். அது நல்லதுதான். ஆனால் யாருக்கு நல்லது என்பதுதான் கேள்வி.

இந்தியா முழுவதும் அரசு சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏழை மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இன்றி நோயால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் போக்கவே இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்திருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இனி மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் என்று மோடி உட்பட அனைத்து தனியார்மயதாசர்கள் கூறிவருகின்றனர்.

உண்மையிலேயே இவர்கள் அரசு மருத்துவமனை போதுமான அளவில் இல்லை என வருத்தப்படுபவர்களாக இருந்தால் 1,50,000 மருத்துவமனைகளைக் கட்ட வெறும் தலா ரூ.80,000 –ஐ ஒதுக்கியிருப்பார்களா?

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களான கலைஞர் காப்பீட்டுத்திட்டம், அம்மா காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் ராஸ்டிரிய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா” போன்றவற்றின் கீழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு போவது யார்?

ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்று எடுத்துக் கொண்டால், அதனை அரசு மருத்துவமனையில் எவ்வித கூடுதல் கட்டணமின்றியும் செய்து கொள்ள முடியும். இதையே காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் செய்யும் போது, புதிய புதிய மருந்துகள், தேவையற்ற கூடுதல் மருந்துகள், உபகரணங்கள் என அவற்றிற்கு தனியாக பணம் பிடுங்கி வெளியே அனுப்புவதுதான் வாடிக்கை.

அரசு மருத்துவமனைகளுக்கான அடிப்படை வசதிகளைக் கைவிட்டு விட்டு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்கு பணம் ஒதுக்குகிறார் மோடி

கூடுதலாக உங்களது காப்பீட்டின் கீழ் எவ்வளவு பணம், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு நாட்கள் உங்களை மருத்துவமனையில் இருத்தி வைத்திருப்பது, ஒரு வேளை உங்களது மருத்துவக் காப்பீட்டின் பணம் குறைவாக இருந்தால் 4 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வைப்பதற்குப் பதிலாக 2 நாட்களில் கிளப்பி விடுவதும் நடைமுறையில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளாக இருக்கின்றன.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல், அங்குள்ள சிறப்புப் பிரிவுகளை தனியார்வசம் ஒப்படைக்கும் வேலைகளை சத்தமின்றி செய்து வருகின்றன மத்திய மாநில அரசுகள். அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் காப்பீட்டு அட்டையின் அடிப்படையில் கிடைக்கும் தொகையைக் கொண்டு தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இது மருத்துவ சேவையிலிருந்து அரசு தமது கையைக் கழுவிக் கொள்ளும் நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியே. இப்போது அதனைத் தீவிரப்படுத்தவே இத்தகைய காப்பீட்டுத் தொகை உயர்வை அறிவித்து கொள்ளைப் புற வழியே அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழாவை நடத்துகிறது மோடி அரசு.

கடந்த 2017-ம் ஆண்டு அத்தியாவசிய மருந்துகளுக்கான விலையை கட்டுப்படுத்தி, மருந்து மாஃபியாக்களின் கொள்ளையைக் கட்டுப்படுத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் ஸ்ரீநிவாசனை அப்பதவியிலிருந்து மோடி அரசு வெளியேற்றியது நினைவிருக்கலாம்.

அடுத்ததாக அப்பதவிக்கு வந்த பூபேந்திர சிங், ’ஸ்டெண்ட்’ என்னும் மருத்துவ உபகரணத்திற்கான விலையைக் கட்டுப்படுத்தி உத்தரவிட்டார். இது பல வெளிநாட்டு ஸ்டெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்குக் குடைச்சலைக் கொடுத்தது. இதன் காரணமாக அப்பதவியிலிருந்து பூபேந்திர சிங் அவர்கள், மோடி அரசால் தூக்கியெறியப்பட்டார்.

இவ்விரு சம்பவங்களிலிருந்துமே மோடி அரசு யார் நலனுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கு ரூ.5,00,000 மருத்துவக் காப்பீட்டுப் பணம் என்ற மோடியின் இந்த அறிவிப்பை, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி அறிவித்த ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15,00,000 போடுவதாக மோடி கூறிய வாக்குறுதியோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். மோடியின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும்.

மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

ண வாழ்க்கையில் இருப்போர் அதற்கு வெளியே பாலுறவு வைத்திருந்தால் அதில் தொடர்புடைய ஆணை தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. ஆணை மட்டும் தண்டிப்பதோடு, பெண்ணை ஆணின் உடமையாகக் கருதி விலக்கு கொடுத்து அவளை ஒரு பண்டமாக கருதும் இச்சட்டம் தவறு; பாலின பாகுபாட்டைக் காட்டுகிறது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று (27.09.2018) தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தனது மனைவியின் மணவாழ்க்கைக்கு வெளியேயான உறவால் பாதிக்கப்பட்ட கணவர் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் என்று வையுங்கள். இந்திய தண்டனைச் சட்டம் 497-இன் படி அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்க முடியும். பெண்ணுக்கு தண்டனை இல்லை.

இத்தாலி வாழ் ஜோசப் ஷைன் எனும் வெளிநாடு வாழ் இந்தியர் 2017-ஆம் ஆண்டில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார். இச்சட்டத்தை இருபாலானாருக்கும் பொதுவாக மாற்றவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் மத்திய அரசும் தனது வாதங்களை பதிவு செய்திருக்கிறது. அதன்படி இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் சமூகத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும், சட்டமே நீர்த்து போகும், கலாச்சாரம் பாழ்படும் என்று வாதிட்டது. சலவைத் தொழிலாளி சொன்னார் என சீதையை தீக்குளிக்கச் செய்து கொன்ற இராமனின் பெயரால் கட்சி நடத்துபவர்கள்தான் உண்மையில் இன்றைய  இந்தியாவில் மக்களின் சமத்துவ கலாச்சாரத்தை கொன்று வருகிறார்கள். லவ் ஜிகாத் பெயரிலும், ஆணவக் கொலை பெயரிலும் இவர்கள் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை கொன்று வருகிறார்கள்.

கி.பி 1860-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் 157 ஆண்டுகள் பழமையானது. இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆணுக்கு 5 ஆண்டு சிறையும், சில நேரம் அபராதமும் கூட விதிக்கப்படலாம். எனினும் திருமணமான ஆண் திருமணமாகாத வயது வந்த பெண்ணுடனோ, கணவன் இறந்து போன கைம்பெண்ணுடனோ உறவு கொண்டால் இச்சட்டம் அதை குற்றமாக கருதாது.

ஆங்கிலேயர் கால சட்டங்களில் இருந்தே இத்தகைய மணவாழ்க்கை குறித்து மட்டுமல்ல, என்.எஸ்.ஏ. போன்ற அடக்குமுறைச் சட்டங்களும் இருக்கின்றன. கருத்துரிமையை பறிக்கும் இச்சட்டங்களெல்லாம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வராது.

இதிலும் கூட பாலின சமத்துவம் என்ற விவாதம் எத்தகையது? பாலியல் உறவிலோ, இல்லை திருமண ஒப்பந்தங்களிலோ ஆணாதிக்க சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்காகவே கூடுதல் உரிமைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. ஆனால் நமது அரசு அமைப்பில் அத்தகைய உரிமைகளை ஒரு பெண்ணால் முற்றிலும் சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சட்டங்கள் வெறும் ஏட்டளவிலேயே உள்ளன.

குடும்ப வன்முறை சட்டத்தின்படி ஒரு பெண் அளிக்கும் புகாரால் ஆண்கள் முகாந்திரம் இல்லாமலேயே பாதிக்கப்படுவதாக பொதுவில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் முகாந்திரம் இருந்தாலும் ஒரு பெண், கணவன் – வீட்டினரை எதிர்த்து புகார் கொடுக்க முடியாமல் இருப்பதே அதிகம். அதனால்தான் இன்றும் கூட இங்கே வரதட்சணை அமலில் இருப்பதோடு அதன் பெயரில் பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகம் நடக்கிறது.

பாலியல் உறவு மீறல் குறித்த பழைய சட்டம் 497-ன் படி ஒரு பெண்ணை அவளது கணவன் ஒரு சொத்தாக பார்ப்பதால்தான் வழக்கு தொடுக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். இது வழக்கிற்கு மட்டுமல்ல, திருமணம் செய்யாத பெண், கைம்பெண்களுக்கும் கூட பொருந்தும். அவர்கள் யாருக்கும் ‘சொத்தல்ல’ என்பதால்தான் மேற்கண்ட சட்டம் அவர்களோடு உறவு கொள்வதை குற்றமாக பார்க்கவில்லை.

பார்ப்பனிய ஆதிக்க சாதியினர் பலரும் கிராமங்களில் இன்றளவிலும் கைம்பெண்களோடு உறவு வைத்திருப்பதை மறைமுகமாக செய்கின்றனர். மாறாக அதே பெண்களை மறுமணம் செய்வதை அதே ஆதிக்க சாதியினர் விரும்புவதில்லை என்பதோடு தடையும் செய்கிறார்கள். தமிழகத்தில் இன்றும் கூட பல ஆதிக்க சாதியினர் கிராமங்களில் கைம்பெண்கள் திருமணத்திற்கு சமூக ரீதியான தடை அமலில் இருக்கிறது. மீறினால் அந்த பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது முதல், கொலை செய்வது வரை பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன.

அறுத்துக் கட்டும் வழக்கமும் கூட சில ஆதிக்க சாதியினரிடம் இருந்த, இருக்கின்ற ஒரு ஜனநாயக நடைமுறைதான். ஆனாலும் அங்கும் கூட ஒரு பெண்ணுக்கு சொத்துரிமை, பொருளாதார உரிமை இல்லை என்பதால் அவையும் அவளது சுதந்திர வாழ்க்கைத் தெரிவிற்கு உதவுவதில்லை.

தற்போதைய சமூக நடைமுறையில் மண வாழ்க்கைக்கு வெளியே ஆன உறவு என்பது பல நெருடல்களையும், கொலைகளையும், தற்கொலைகளையும், வன்முறைகளையும், குழந்தைகளை தவிக்க விடும் அவலநிலையுமாக தொடர்கிறது. இப்போது வந்த தீர்ப்பின் படி மேற்கண்ட வெளி உறவினால் தற்கொலை நடக்காத பட்சத்தில் அதில் ஈடுபடும் ஆணை தண்டிக்கத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

ஆனால், அதில் ஈடுபடும் பெண்ணுக்கோ அவளது கணவன் – குழந்தைகளுக்கோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு என்ன பதில்? இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

இன்றைக்கு ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணைவரை சுதந்திரமாக தெரிவு செய்வதற்காக உரிமை சமூகத்தில் இல்லை. அவள் காதலித்தாலும் கூட அது அவளது பாதுகாப்பு, பொருளாதார நிச்சயமின்மை காரணமாக சில சமரசங்களோடுதான் இருக்கும். வேலைக்கு போனாலும் கூட சம்பளமோ, வங்கி அட்டைகளோ கணவனது பிடிக்கு சென்றுவிடும் போது மண வாழ்க்கைக்கு வெளியே விடுங்கள், மண வாழ்க்கையின் உள்ளே ஏற்படும் சிக்கல்களுக்குக் கூட அவளுக்கு விடுதலையோ தீர்வோ இருப்பதில்லை.

அடுத்து இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் பயிற்றுவித்திருக்கும் நடைமுறையால் இங்கே விவாகங்கள் மட்டுமல்ல விவாகரத்தும் கூட சுதந்திரமாக நடப்பதில்லை. குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அதில் முடிவெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது போல. பல விசயங்களையும் கணக்கில் கொண்டே அவள் முடிவு எடுக்க முடியாமல் தனது ஆயுள் தண்டனை வாழ்க்கையை தொடர்கிறார்கள். சில நேரம் ஆண்களுக்கும் கூட இது பிரச்சினைதான்.

ஆணவக் கொலை அதிகம் நடக்கும் நாட்டில் சாதி வெறியர்களைக் கூட இன்னும் தண்டிக்க முடியாத நிலையில் நமது பெண்கள் வாழ்க்கை குறித்து எப்படி முடிவெடுக்க முடியும்? சாதிவெறி, மதவெறியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை முடக்கினால்தான் பெண்களின் முதல் படி விடுதலையை நோக்கி வைக்க முடியும்.

அடுத்து சமூகத்தில் பாலியல் சமத்துவமும், ஜனநாயகமும் வரவேண்டுமென்றால் அது பொருளாதார சமத்துவத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது. திருமணம், கற்பு, ஒரு தாரமணம் போன்றவை கூட ஒழுக்கத்தின் பெயரில் உலா வந்தாலும் அவற்றின் அடிப்படையே சொத்துரிமையை இரத்தவழியில் மாற்றிக் கொடுப்பது மட்டுமே.

மணவாழ்க்கைக்கு வெளியே இருக்கும் உறவினால் ‘கலாச்சாரம்’ சீரழிவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் மண வாழ்க்கையில் அதே கலாச்சாரம் – ஜனநாயகம் இல்லை என்பதே அவர்கள் கருதும் சீரழிவிற்கான அடிப்படை! காதலிலும், திருமண வாழ்விலும் எப்போது ஜனநாயகமும், பாலின சமத்துவமும் வருகிறதோ அன்றுதான் வெளி உறவுகள் நடக்காது அல்லது நடப்பதற்கான அடிப்படை இருக்காது என்பதோடு, காதலும் உண்மையாக பரஸ்பரம் இருக்க முடியும்.

ஆகவே, இன்று உச்சநீதிமன்றம் மேற்கண்ட 497 பிரிவை ரத்து செய்திருப்பது சமூக முன்னேற்றத்தில் ஒரு சிறு முன் நகர்வு என்பதைத் தாண்டி இங்கே சட்டப்படியும், சமூகப்படியும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. குன்றத்தூர் அபிராமி முதல், ‘கள்ளக்காதல்’ என்று கிசுகிசு ரசனையோடு ஊடகங்கள் வெளியிடும் அன்றாட செய்திகளும் அந்தக் கடமையை நினைவுபடுத்துகின்றன.

தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம்!

 நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகள், ஒடுக்கப்பட்ட- சிறுபான்மையினர், தலித்துகள், முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், புரட்சிகர போராளிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மீதும் மோடி அரசு நிகழ்த்தி வரும் பாசிச தாக்குதல்களை அம்பலப்படுத்தி,  “வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க….. ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” இந்தியா முழுவதும் ஐந்து முனைகளிலிருந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் செப்-22 கன்யாகுமரியில் தொடங்கி செப்-25 வரை சென்னையிலும், தொடர்ச்சியாக அக்டோபர் 13 வரை பயணித்து டெல்லியில் நிறைவுறுகிறது.  இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது என்பதே. அந்த அடிப்படையில் தமிழகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இருபத்தி ஐந்து அமைப்புகள் இந்தக் கூட்டமைப்பில் பங்கெடுத்துள்ளன.

தமிழக பயணத்தின் இறுதி நாளான செப் 25-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் ஆடிட்டோரியத்தில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முதல் நிகழ்ச்சி இந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவருக்காக உருவாக்கப்பட்ட பாடல் ஒலிபரப்புடன் இந்நிகழ்ச்சியை பேராசிரியர் கல்பனா தொகுத்து வழங்கினார்.

அவருடையை அறிமுகவுரையில், “பெண்களின்  இந்தப் பிரச்சார பயணம் வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு பயணமாக அமைந்துள்ளது. இன்று நமது அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தை காக்க, அமைதியை நிலைநாட்டுவதற்காக,  வன்முறை இல்லாத  ஒரு இந்தியாவை, சாதி வெறி, மதவெறி, வர்க்க ரீதியான வன்முறைகள் இல்லாத இந்தியாவை படைப்பதற்காக பெண்கள் நாடெங்கும் போர்க்களத்தில் இறங்கியிருக்கிறோம்.  இந்தியாவின் ஐந்து முனைகளில், தமிழ்நாடு,கேரளா,ஜம்மு காஷ்மீர், அசாம், டில்லியிலிருந்து  பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய இப்பிரச்சார பயணம்,  செப்டம்பர் 22-ம்தேதி தொடங்கி  அக்டோபர் 13 தேதி டெல்லியில் சங்கமிக்க உள்ளனர்.  நாடு தழுவிய இந்த இயக்கத்தில் சுமார் ஐநூறு இயக்கங்களும், பெண்களும் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கல்பனா.

அடிப்படை உரிமைகளுக்காக போராட பெண்கள் களத்தில் இறங்கிவிட்டால் வெற்றி நிச்சயம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இதை நான் எந்த அடிப்படையில்  சொல்லுகிறேன் என்றால், ‘இங்கிலாந்தின் க்ரீன்ஹாம் காமன் என்று சொல்லக்கூடிய பகுதியில் இங்கிலாந்து அரசு அணு ஆயுதங்களை குவித்தது. இது நடந்த பிறகு  1981 லிருந்து 2001  வரை கிட்டதட்ட  19 ஆண்டுகள் அந்த இடத்தில் பெண்கள் அமைதி முகம் அமைத்து குவிந்தனர்.  “இந்த அணு ஆயுதங்கள் எங்களுக்கு வேண்டாம். நமது நாட்டுக்கு தேவை இல்லை.  எங்களுக்கு தேவை அமைதி. வளர்ச்சி.  சமாதானம்.  நாங்கள் தான் எங்கள் உயிரை கொடுக்கின்றோம்.  எனவே எங்கள் குழந்தைகளுக்கு வருங்காலம் வேண்டுமென்றால் அணு  ஆயுதங்கள் இருக்கக் கூடாது” என்று சொல்லி க்ரீன்ஹாம் காமன்  என்னும் அந்த மிலிட்டரி பேஸில் கிட்டதட்ட 3,00,000 பெண்கள் சூழ்ந்து கைகோர்த்து இரவிலும் தங்கி போராடினார்கள்.

அடுத்து, 1977  அர்ஜண்டினாவில் ராணுவ சர்வாதிகார அரசு ஒன்று வந்த போது அந்நாட்டின் பல இளைஞர்கள் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டு, பல சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.   அப்போது அந்த நாட்டின் சராசரி பெண்கள்  “பிரிடென்ஷியல் பேலஸ்” முன்னால் ஒவ்வொரு வாரமும் கூடினார்கள். 77 லிருந்து 83 வரை  “எங்கே எங்கள் குழந்தை” என்று கேள்வி எழுப்பினார்கள்.

(பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்ளே முழக்கமிட்டவாறு வருகின்றனர்)

இதன் பிறகு தான் உலகிற்கு அந்த மனித உரிமை மீறல் தெரிந்தது. இந்த போராட்டம் தான் அரசு பதில் சொல்லும் கடமைக்கு ஆட்பட்டது. அவர்கள் ’தாய்’ என்னும் அடையாளத்தை முன்வைத்து,  அரசியல்படுத்தி ஒரு சர்வாதிகார அரசை வீழ்த்தினார்கள்.

அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில், தஞ்சம் மனோரமா 2004-ல் அஸ்ஸாம் ரைபிள்ஸ்… ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் பன்னிரண்டு  பெண்கள்,  இந்திய ராணுவ அலுவலகம் முன்பு கூடி ”இந்திய ராணுவமே எங்களையும் கற்பழி” என்று போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகே இந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது.

இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூர் பெண்கள் போராட்டம்

எனவே நமது முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் சொல்கிறோம். தாய்மை என்ற அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றியவர்கள் பெண்கள்.

‘தாய்மை தான் உன் அடையாளம் என்று இந்த சமூகம் பெண்களை பார்த்தது சொல்லும்போது  அந்த அடையாளத்தையே போருக்கான ஆயுதமாக  மாற்றியவர்கள் நம் பெண்கள்’ என்பதை மறந்து விடக்கூடாது.  உடலை வைத்துதான் உன்னை தாக்குவோம் என்று சொல்லும்போது தன் உடலையே  ஒரு போராயுதமாக மாற்றிய பெண்களை நாம் மறந்து விடக் கூடாது.

இந்த வீர ஆவேசத்துடன் அமைதிக்கான உரையாடல்களை நடத்துவோம். ஜனநாயகத்தை பாதுகாப்போம். வன்முறை இல்லாத இந்தியாவை படைப்போம்.  அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்காக போராடுவோம்” என்று சொல்லி அறிமுக உரையை முடித்தார்.

அதனைத்தொடர்ந்து “புத்தர் கலைக் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி” நடைபெற்றது.

முனைவர் வசந்தி தேவி அவர்களின் தலைமையுரையில்  “இன்று நம்பிக்கைகள் எல்லாம் நசிந்து போய்க் கொண்டிருக்கின்ற ஒரு காலத்திலேயே  பெண்களுடைய எழுச்சி, இருள் சூழ்ந்த நேரத்திலேயே ஒரு ஒளிக்கற்றையாக இருக்கிறது. இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கின்ற அபாயத்திற்கு இந்த படைதான் முன்னிற்க வேண்டும்.

மத்தியிலே இருக்கும் அரசும்,  அதை  சார்ந்து இருக்கின்ற சித்தாந்தமும்,  இந்துத்துவ வெறித்தனங்களும் இன்றைக்கு நாட்டையே சூறையாடிக்கொண்டிருக்கின்றன.   இதிலிருந்து நாம் எப்படி இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற போகின்றோம் என்ற மிகப்பெரிய கேள்வி நம் முன்னால் இருக்கிறது.

முனைவர் வசந்தி தேவி.

பாசிசத்தின் கொடிய பிடியில் இந்தியா இருக்கிறது.  எங்கு பார்த்தாலும் வன்முறை. ஒன்று அரசு பயங்கர வாதத்தின் வன்முறை. மற்றொன்று அதன் துணையோடு நடந்து கொண்டிருக்கின்ற கும்பல்களின் வன்முறை.  இதற்கு பலியாகின்றவர்கள் எல்லாம் நாட்டின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள். தலித், முசுலீம் தான்.

பல ஆண்டுகள் போராட்டத்திகிற்கு பிறகு கிடைத்த அரசியல் சாசன உரிமைகள் எல்லாம் நசுக்கக்கப்பட்டு வருகின்றன.  பயங்கரமான கருப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் இவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக நடக்கிறது. தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது. போலீசின் அராஜகம் நடந்து வருகிறது.

மத்தியிலேயே இருக்கும் அரசுக்கு ஆட்சியை பிடிக்க ஒரே வழி  வன்முறையை தூண்டுவது.  மக்களை பிரித்து ஆள்வது, எதிரெதிர் அணியை உருவாக்கி வருகிறது.

வியாபாரிகள், விவசாயிகள் எல்லாம் வீழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பயங்கர பொருளாதார வீழ்ச்சி. அனைத்தும் கார்ப்பரேட் கையில் உள்ளது. ரஃபேல் ஊழலில் மிகப்பெரிய கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அணிதிரள வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உரையை முடித்துக் கொண்டார்.

தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன்

அடுத்ததாக தி.மு.க. மகளிரணி புரவலர் திரு.விஜயா தாயன்பன் அவர்கள் வாழ்த்துரையில்,  “இது பேச்சுக்கான இடமில்லை. உணர்வுக்கான சங்கமம் என்று உணர்ந்து கொண்டேன்.  இந்த நாட்டிலே எந்த சாரரும் நிம்மதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற கொடுமைகளை நாம் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். கதுவாவில் அந்த 8 வயது சிறுமிக்கு நடந்ததை நிச்சயமாக நாம் மறக்க முடியாது.  சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பிலே நடந்த வன்புணர்வை முடியாது.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் இந்த மோசமான நிலை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இன்று எந்த பேச்சு சுதந்திரமும் இல்லை, எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லை. நாம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதோ அதைப் போன்ற நிறைய பேச்சாளர்கள், எழுத்தாளர்களை ஒழிக்கும் ஆட்சிதான் மத்தியில் ஆகட்டும், மாநிலத்தில் ஆகட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை மாற்றவேண்டுமென்றால் இந்த பயணம் வெற்றிகரமாக மாறவேண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற அரசு மாற்றப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும். அதற்கான வழியை இந்த பயணம் ஏற்படுத்தும்” என்று முடித்தார்.

நிஷா சித்து.

அவரைத்தொடர்ந்து பிராச்சாரக் குழுவில் தலைமையேற்பவரில் ஒருவரான ராஜஸ்தானை சேர்ந்த நிஷா சித்து அவர்கள் பேசுகையில்,   “நாம் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம்முடைய ஒரே ஒரு நோக்கம் அமைதியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் உதவித்தொகை பற்றி கேட்டால் தேசத் துரோக வழக்கில் கைது செய்கிறார்கள். அக்லக், பெகுலுகான் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.  மத்தியில் இருக்கும் ஆட்சி பொய் மேல் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது. இனி இந்த ஆட்சியை ஒருபோதும் வர விட மாட்டோம். பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து விட்டது அதை தடுப்பதற்கு மோடி ஆட்சி எந்த காரணம் கொண்டும் வரவிடக்கூடாது. நமக்கு ஜியோவும் வேண்டாம்.. ராம்தேவின் எந்த பொருளும் தேவையில்லை. நமக்கு தேவை ஒரு அமைதியான இந்தியா” என்று  முடித்தார்.

அடுத்ததாக பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் பத்மாவதி அவர்கள் பேசியபோது, “ இன்றைக்கு இந்த நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சனைகள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட சட்டங்கள் நம் கையில் வந்து சேருவதற்கே பல்வேறு போராட்டங்கள் நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தோழர் பத்மாவதி.

அந்த ஜனநாயகத்தை தேடித்தேடி அலைந்து அலைந்து அந்த கோவத்தின் உச்சம் ஒன்று திரண்டு இந்தியா முழுவதும் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பு இந்த பிரச்சார யாத்திரையை முன் வைத்திருக்கிரார்கள். வருங்காலத்தின் இந்த ஜனநாயக அமைப்பும், நாடும் அதிகாரமும் நமக்கானதாக மாற வேண்டும்.” என்று கூறி முடித்தார்.

அவரைத்தொடர்ந்து பிரச்சாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆன்னிராஜா பேசுகையில்,  “இந்தியாவில் இதற்கு முன்பு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்பொழுது அவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை. வீடு, பள்ளி, பஸ், கோவில், மசூதி, சர்ச் என எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத நிலை.

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க மந்திரிகள் போராடுகிறார்கள். “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்- பெண் குழந்தைக்கு கல்வி கொடுப்போம்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் ஹரியானாவில் சி.பி.எஸ்.இ பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்.  அங்கு இருக்கக் கூடிய ஒரு எம்.எல்.ஏ “ இளைஞர்களுக்கு வேலை இல்லாததால்தான் அப்படி செய்கிறார்கள்” என்று சொல்கிறார்.

தோழர் ஆன்னிராஜா.

ஜார்கண்டில் மாட்டை எடுத்து சென்ற ஒரு இளைஞரை கோடாரியால் அவருடைய காலை வெட்டி கொலை செய்கிறார்கள். அந்த இளைஞரின் தாய் கொலை செய்தவனை பிடித்து நியாயம் கேட்கிறார். அப்பொழுது அவருடைய கையில் இருந்த கண்ணாடி வலையல் உடைந்து கொலையாளியின் கையை அறுத்து விடுகிறது… அதற்கு அந்த தாயின் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் கொடுமை நடக்கிறது.

சந்தோஷ் என்ற சிறுமி உணவில்லாமல் இறக்கிறார்.  ஒருபக்கம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது என்கிறார்கள். மற்றொரு புறம் பட்டினி சாவுகள் அதிகரித்து வருகிறது.  இப்படி ஒரு நிலை இருக்கும்போது எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார் ஆன்னிராஜா.

நம்ம குழு அஜிதா பாடல்.

தொடர்ந்து,  பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நம்ம குழு பாடல்கள் சார்பாக, “பாரத மாதா நீயுமம்மா… பாத்து இருந்துக்க பத்திரமா… எட்டு வயசு குழந்தைய குதறும் வக்கிர தேசமம்மா… அஸ்வினி.. நந்தினி..ஆசிபா-ஹாசினி ரத்தம் கொதிக்குதம்மா…. இந்த சிசுவை மேய்ந்த சேவகர் எல்லாம் பசுவுக்கு காவலம்மா…” என்ற பாடல் அரங்கம் அதிர ஒலித்தன.

மஞ்சள் நாடகத்திலிருந்து ஒரு காட்சி.

அதனைத்தொடர்ந்து கட்டியக்காரி நாடகக் குழுவினரின்…  பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சாதி தீண்டாமையை தோலுரிக்கும் விதமாக “ மஞ்சள்” நாடகத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய சமூக செயற்பாட்டாளர் தோழர் கீதா அவர்கள் ,  “ இந்து மதம் சாதியை, பெண்ணடிமைத்தனத்தை காப்பாற்றும் மதம். இங்கு இருக்கக் கூடிய எல்லா மூட நம்பிக்கைக்கும், ஏற்றத்தாழ்விற்கும் அரணமைத்துக் கொடுக்ககூடியது இந்து மதம்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெரியாரும், பெரியாரை சார்ந்த இயக்கங்களும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் வருகின்றன.

இந்து மதம் மிக மோசமான, வக்கிரமான எந்த வகையிலும் நம்முடைய உரிமைகளை மீட்டுத்தர முடியாத  குடும்ப வன்முறையையும் தடுக்க வக்கில்லாத ஒரு மதம்.

சமூக செயற்பாட்டாளர் தோழர் வ.கீதா.

நாம் அரசு வன்முறையைப் பற்றி பேசுகிறோம்… பெண்கள் மீதான வன்முறையைப் பற்றி பேசுகிறோம். ஆனால் குடும்ப வன்முறையைப் பற்றி  பேசுவது கிடையாது.  அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் முதல் இளவரசன் கொலை வரை நமக்கு தெரியும்.  இதனை எல்லாம் யாரும் ஏவி விட்டு செய்வதில்லை. அதற்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கும்  சாதியும், குடும்ப வன்முறையும் தான் இதை சாத்தியப்படுத்துகின்றன.

இந்த நாட்டில் வக்கிரம் பிடித்த சாதியமைப்பும், குடும்ப அமைப்பையும் வைத்துக்கொண்டு வன்முறையற்ற இந்தியாவை எப்படி உருவாக்க முடியும?  இந்த இரண்டையும் கட்டிக் காக்கும் அரசு எத்தகைய கொடூரமானதாக இருக்கும்…. என பேசினார்.

அடுத்த நிகழ்வாக “மனிதி மற்றும் ஆக்ட் நாடகக் குழுவினரின் “பல்லக்கு தூக்கிகள்” வாழ்க்கை அவலத்தை சொல்லும் நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா.

நாடகத்தைத் தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியா, பேசுகையில்,  “குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் எப்படி இருக்குமோ அது மத்திய அரசு…  அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பத்து எட்டு அரிவா.. என்பார்கள் அது தமிழக அரசு… ஒரு ஆட்சிய நடத்தத் தெரியாதவன் கிட்ட கொடுத்தா கம்பராமயணத்த எழுதினவரு கூட சேக்கிழாரா மாறுவாரு…

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான். அரசியலமைப்பு சட்டத்தில் அது ஒன்றியம் என்றே அழைக்கப்படுகிறது. அதனை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியா என்றார்கள். இந்தியா என்று அழைத்தால் இந்து-இந்தி- இந்தியா என்று அழைத்தாக வேண்டும் என்று நமக்கு பதிய வைக்கப்படுகிறது. எனவே  நாமே அதற்கு வழி வகுக்கக் கூடாது.  வன்முறை இருக்கிறதென்றால் அந்த வன்முறை யாரால் யாருக்காக நடத்தப்படுகிறது.. அம்பானி அதானி போன்றோருக்காக நடத்தப்படுகிறது. அதற்கு நாம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த அமைதி தான் அவர்களுக்கு பலமாகிறது. எனவே அந்த வன்முறையை நாம் ஒழிக்க வேண்டும்.

இந்துத்துவத்துக்கு எதிரா தீர்ப்பு கொடுத்த லோயா மர்ம மரணம். அமித்ஷாவுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா ஆளுநர் பதவி கிடைக்கும். இது நீதித்துறையில் இருக்கும் வன்முறை. ஆக வன்முறை என்பது எல்லா இடங்களிலும் நிலவி கிடக்கிறது. எனவே நம்முடைய பயணம் அமைதியானதாக இருக்கக் கூடாது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் இந்த இந்துத்துவ வன்முறையை ஒழிக்க புரட்சி என்ற வன்முறையை கையில் எடுக்க வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் அருள்மொழி.

தொடர்ந்து காளீஸ்வர குழுவின் கரகாட்டம் நடைபெற்று  முடிந்த பிறகு திராவிடர் கழகத்தின் தோழர் அருள்மொழி அவர்கள் பேசுகையில்,  “இந்தியாவ காப்பாத்தனும்னு இப்பதான் நாம் முடிவெடுத்திருக்கோம். அதுக்குள்ளவே அவங்க அவ்வளவு ஆட்டம் காட்டிடாங்க. இந்தியாவ யார்கிட்ட இருந்து காப்பாத்துறது? இதான் இங்க பிரச்சனை. அல்லது, எங்க முறையிட்டு காப்பத்துறது?

ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி… இந்த நாட்டின் ஆளும் கட்சியின் தேசிய தலைவருக்கு சம்மன் அனுப்புகிறார். தண்டனை கொடுக்கவில்லை. வழக்கு விசாரணை முடியல. சம்மன் அனுப்பினார். சம்மன் அனுப்பினா என்ன பண்ணனும்.. கோர்ட்டுக்கு வரனும்… யார் வருவாங்க.. சாதாரண குடிமக்கள் வருவாங்க. இவங்க எல்லாம் அப்படி இல்ல. அவர் வர்ல.  வராததால் அந்த நீதிபதி கொஞ்சம் கடுமையா , நான் டிரையலை நடத்தி முடிக்க போறேன். நீங்க வர்லன்னா வாரண்ட் போட்டுடுவேன். இதை சொல்லுவதற்கு ஒரு நீதிபதிக்கு அதிகாரம் இருக்கு   என்று அவர் நம்பியது சட்டம். அப்படி நம்பியதற்கு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது இந்த நாட்டின் நிலமை.

கொலை செய்வது, குண்டு வைப்பது. எத்தனை விதமான வன்முறையில்  நடவடிக்கையில் ஈடுபட்டது யார்? சாமியார் அசீமானந்தா. சாமியார் என்றால் சாதாரண  சாமியார் இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய அமைப்பான வனவாசி கல்யாண் என்ற அமைப்பின் தலைவர். பழங்குடி மக்களை தாய் மதம் திரும்புவது என்ற பெயரில் கர்வாப்சி செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுவதற்கான அதிகாரம் பெற்ற அசீமானந்தா.. வெளிப்படையாக வாக்குமூலம், பேட்டிகள் கொடுத்தார். பத்திரிக்கைகளில் வந்தது.

மாலேகான் முதல் ஹைதராபாத் குண்டு வெடிப்பு வரை எப்படி திட்டமிடப் பட்டது. ரயில்ல வெடிச்சதே ஒரு குண்டு. அந்த ரயில்ல வெடிச்ச குண்டை வச்சி படமே எடுத்துட்டாங்க. இந்த கூட்டத்திற்கு பயிற்சியும் கொடுத்து, வெடிகுண்டுகள் வழங்கியது புரோகித் என்ற ராணுவ அதிகாரி. இது சம்பந்தபட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஒருவர் கொஞ்சம் கடுமையா இருந்ததால அவருக்கு நடப்பது மரணம்.

இதனுடைய இன்னொரு குண்டு வெடிப்பு நடந்த ஹைதராபாத் வழக்குல அந்த அசீமானந்தா உட்பட அத்தனை பேரையும் விடுதலை செய்த நீதிபதி, ஒரு மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார்.  அந்த நீதிபதி ராஜேந்திரன் பாஜகவில் சேர்ந்து விட்டார். உலகில் இப்படி ஒரு வெட்கக்கேடானா ஜனநாயகமா இது? உலகத்துல எந்த நாட்டுலயாவது  நடக்குமா? ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக முக்கியாக குண்டு வெடிப்பு வழக்கில் இருக்கும் அத்தனை பேரையும் விடுதலை செய்கிறார் என்று சொன்னால் இதைவிட இந்த நாட்டில் ஜனநாயகப் படுகொலை நடப்பதற்கோ, பேசுவதற்கோ வேறு மிச்சம் இருக்கா?

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இப்ப யார் யார் எல்லாம் ராணுவத்துல பதவியில இருப்பாங்கன்னு யோசிச்சி பாருங்க. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ல பயிற்சி அளிக்கப்படவர்கள் தான் ராணுவத்தில் இருப்பார்கள். நம்ம ஊரில் ஒரு கலவரம் என்றால் ராணுவம் வரும். அப்ப என்ன நடக்கும்?

பாஜக கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜிக்கே பாதுகாப்பு இல்லை.  ஒரு இந்து-முசுலிம் தம்பதியினருக்கு  பாஸ்போர்ட் மறுக்கப்படுகிறது. இதற்க்காக அந்தப் பெண் சுஸ்மாவிற்கு கடிதம் எழுதுகிறார். உடனடியாக பாஸ்போர்ட் மறுத்த அந்த அதிகாரி மாற்றப்படுகிறார். அனுமதி வழங்க உத்தரவிடுகிறார். இந்த சம்பவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா போடுகிறார். அதை கண்டித்து ஒரு லட்சம் பேர் தாகாத முறையில் திட்டுகிறார்கள். இதை எந்த அமைச்சர்களும் கேட்கவில்லை என்று சுஷ்மா சொல்லும் போதுதான் ராஜ்நாத் சிங் இதனை கண்டிக்கிறேன் என்று அறிக்கை விடுகிறார்.

தன் சொந்தக் கட்சியில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதுதான் கதி என்றால்…. கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டத்தில் ஆச்சரியமில்லை. இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்? இந்த உயிர்களை காக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட பெண்கள், ஆண்களுடைய போர்களால் அழிந்து போன பெண்கள், அந்த போர்களின் அழிவின் விளைவுகளை எல்லாம் தாங்குகின்ற பெண்கள்… அவர்கள் தான் இன்றைக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்” என்று முடித்தார்.

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா

இறுதியாக உரையாற்றிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா அவர்கள் பேசுகையில்,  “கொத்தடிமை- குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இது சாதியத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு முறையாக உள்ளது.இது பெண்ணடிமைத்தனத்தோடு பிணைந்து விட்டது. இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது இது சுதந்திர நாடா என்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தி தொழிலாளர்களை அடிமையாக்குகிறது இந்த அரசு.  வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்து, நகரத்தில் குடிசையை அகற்றி வேலையில்லாதவர்களாக மாற்றுகிறார்கள்.  உழைக்கும் மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. எனவே இந்த வாழ்வாதாராம் பாதுகாக்க நிலம் உறுதி செய்யப்பட்டாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

இறுதியா அமைதிக்கான உரையாடல் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் மஞ்சுளா அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வந்திருந்த தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக் குழுவினர், 23-09-2018 அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தினர்.

இக்கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு சுற்றுவட்டாரத்தை கிராம மக்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். ஆலையை மூட வேண்டுமென்ற கோரிக்கைகளோடு வந்திருந்த மக்கள் திரளில் வயதான மூதாட்டிகளையும் குழந்தைகளையும் கணிசமாக காணமுடிந்தது. தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் முழக்கத் தட்டிகளைப் பிடித்திருந்த அவர்கள் தொண்டை வற்றும் வரையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தனர்.

அப்போது, சினிமா சூட்டிங்கிற்கு வந்து செல்வதைப் போல, மேட்டுக்குடி ’காஸ்டியூமில்’ ’இங்கிலீஷ்’ மட்டுமே பேசத் தெரிந்த கும்பலொன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூடவே, அப்பாவி கிராம மக்கள் சிலரையும் கூட்டி வந்திருந்தது. கூடியிருந்த மக்களிடம் ”ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடினால், போலீசின் கண்காணிப்பிற்கு உள்ளாவீர்கள்” என்று நக்கலாகவும் திமிர்த்தனமாகவும் போதித்தது. அவர்களை மடக்கிப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர், அங்கு திரண்டிருந்த மக்கள். போலீசு அவர்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்றது. 

ஸ்டெர்லைட் ஆலையால் காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட அக்கூட்டத்தினரிடம் இருந்தது, அனைத்தும் செட்டப் செய்யப்பட்ட கடிதங்கள். தூத்துக்குடி நகரின் பல்வேறு சிறு கம்பெனிகள் லெட்டர்பேடு நிறுவனங்கள் அனைத்தும், இக்கூட்டத்தில் பங்கேற்று தமது கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக டி.வேல்சங்கர் என்பவரை நியமித்திருப்பதாக அறிவிக்கின்றன இக்கடிதங்கள். அக்கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களின் நகல்கள்தான் இவை.

பாஜக-விற்கு பதினைந்து கோடி ரூபாயை அதிகாரப்பூர்வ நன்கொடையாக கொடுத்திருக்கும் வேதாந்தா முதலாளிக்கு இதெல்லாம் கைவந்த கலை!

நால்வருணக் கோட்பாடு நல்லது என்கிறது சைவ சித்தாந்தம் !

2

பார்ப்பனர்கள் இவ்வுலகின் தேவர்கள் – சைவ சித்தாந்தம்
நால்வருணக் கோட்பாடு நன்மைப் பயப்பதே – சைவ சித்தாந்தம்

நண்பர்களே….

பொ. வேல்சாமி
20 -ஆம் நூற்றாண்டில் கூட தமிழ் அறிஞர்களில் பலரும் கடந்த காலங்களில் “சைவ சித்தாந்தம்தான்” தமிழர்களுடைய “தனிபெரும் தத்துவம்” என்று எழுதியும் பேசியும் வந்துள்ளனர், வருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்தத்தைப் பயிலும்படி தூண்டியது. அப்படி பல வருடங்களாக சித்தாந்த நூல்களைப் படித்தேன். அப்பொழுது இவர்களுடைய கூற்றுக்கள் உண்மையானவைகள் அல்ல என்பதையும் அரசியல்அதிகாரம் சார்ந்த முழக்கங்கள் என்பதையும் அந்த நூல்களில் உள்ள பல செய்திகள் எனக்கு புலப்படுத்தின. அத்தகைய செய்திகளை நீங்களும் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை தூண்டுவதற்காக அவற்றுள் ஒரு முக்கிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமஸ்கிருத நூல்களில் “பேரூரைகள்”(பாஷ்யங்கள்) பல உண்டு. ஆனால் தமிழ் நூல்களில் ஒரே ஒரு பேரூரைதான் காணப்படுகிறது. அதை எழுதியவர் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிவஞான முனிவர்” என்பவர். இவர் தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கண நூல்கள் அனைத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழ் காப்பியங்களிலும் சைவ சித்தாந்த நூல்களிலும் வடமொழி இலக்கணத்திலும் இந்திய தத்துவ நூல்களிலும் தர்க்க நூல்களிலும் பெரும் புலமைப் படைத்தவராக உள்ளார் என்பதை அவர் எழுதியுள்ள நூல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இத்தகைய பெரும் ஆற்றல் நிறைந்த சிவஞான முனிவர் எழுதிய “சிவஞானபோதப் பேரூரை”யில் உள்ள “சிறப்புப்பாயிரத்திற்கான” விளக்க உரை பகுதியில்,

“சூத்திரர் என்னும் பொதுப்பெயரே பற்றிச் சற்சூத்திரரையும் அசற்சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர்; மனிதர் என்னும் பொதுப்பெயரே பற்றி மறையோரையும் அவ்வாறு சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர் போலும் என்று ஒழிக.” என்று எழுதுகின்றார்.

இதே பகுதியில் இவர் நால்வருணக் கோட்பாட்டில் சூத்திரர்கள் கீழானவர்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் தானும் சூத்திரராக இருப்பதால் சூத்திரர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்.
1.சற்சூத்திரர் 2.அசத்சூத்திரர்

அதாவது சற்சூத்திரர் என்பது தூய்மையான சூத்திரர். அசத்சூத்திரர் என்பது இழிவான சூத்திரர். இப்படி சொல்வதை அந்தக் காலத்திலேயே அறிவுள்ள சிலர் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளனர். அந்த மறுப்பாளர்களை நோக்கி இவர் கூறும் பதிலில் இவ்வுலகின் தேவர்களான பார்ப்பனர்கள் மனிதர்களாகிய உங்களை போன்றே வடிவத்தில் இருப்பதனால் பூதேவர்களான பார்ப்பனர்களையும் உங்களைப் போன்ற அற்ப மனிதர்கள் என்று கூறுவீர்களோ? என்று நகைத்து எழுதுகின்றார்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

பந்தய மூலதனம் – 6

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

திர்காலத்தில் தானும் வணிக பத்திரிகைகளில் பேசப்படும் தொழிலதிபராக ஆகி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்வதற்கு பிரகாஷ் என்ன பாடு படுகிறார் என்று பார்ப்போம். இது போல ஓடும் 1,00,000 பிரகாஷ்களில் ஒருவர் இன்ஃபோசிஸ் போல வளர்ந்தால் அதுவே பெரிய விஷயம்.

விலை ’ப்ரப்போசலை’ அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகு செல்லமணி கம்பெனிக்கு தொலைபேசினால் மாசிலாமணி. “என்ன சாரை பார்க்கணுமா? இல்ல சார், அவரு ரொம்ப பிசி. நேத்தைக்குத்தான் கோயம்புத்தூர் போய்ட்டு வந்தார். அடுத்த வாரம் ஜெர்மனிக்கு போகப் போறார். ஒரு ரெண்டு வாரம் கழிச்சு கூப்பிடுங்களேன்”

“இல்ல சார், போன வாரமே சாரை பார்த்து பேசி, விபரம் எல்லாம் அனுப்பிட்டேன். உடனேயே முடிவு பண்ணணும். நீங்க ஒரு தடவை ராமமூர்த்தி சார் கிட்ட கேட்டிருங்களேன். இல்ல அவர் நம்பர கொடுங்க நானே பேசிர்றேன்.”

“என்ன சார், சொன்ன கேக்க மாட்டீங்களா? சரி, சரி கேட்டுட்டு நானே லைன்ல வர்றேன்”.

அடுத்த நாள் போய்ப் பார்க்க, நேரம் வாங்கிக் கொள்கிறார்.

அடுத்த நாள் சந்திப்பில் ராமமூர்த்தி தயாராக இருக்கிறார். “என்னப்பா, நீங்க யூஸ் பண்ற சாஃப்ட்வேர்ல வேலை செய்ய நிறைய பேரு கிடைக்க மாட்டாங்களாமே?” “மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலையை முடிச்சி கொடுத்துட்டீங்களா” என்று ஆரம்பித்து பல கேள்விகளை கேட்டு விட்டு இன்னும் சில புதிய தேவைகளையும் சொல்லி விட்டு, விலை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“என்னப்பா, 30 லட்சம் எல்லாம் இதுக்கு அதிகம்பா. நான் ஏதோ 2-3 லட்சம் இருக்கும், வாங்கி பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா ஒரேயடியா 30 லட்சம்னு போட்டு அனுப்பியிருக்க” என்று ஒரு கொக்கியை போடுகிறார்.

“இல்ல சார், இதைச் செய்து முடிக்கிறதுக்கு 1 வருசம் ஆகிடும். எல்லா செலவையும் சேர்த்துதான் கணக்கு போட்டு சொல்லியிருக்கேன்.”

“எல்லாச் செலவையும் என்கிட்டையே வாங்கிடலாம்னு பார்க்கக் கூடாதுப்பா. முன்னேயே நான் சொன்னது போல எங்களுக்கு செஞ்சு கொடுத்தா பல பேர் வாங்க வருவாங்க. அப்படித்தான் யோசிக்கணும்”

ராமமூர்த்தியைப் பொறுத்தவரை செல்லமணி கம்பெனியின் ஆண்டு விற்பனை ரூ 100 கோடி. அதில் எல்லா செலவுகளும் போக சுமார் 10 கோடி லாபம் வருகிறது. இதில் தொழிலில் புதிதாக முதலீடு செய்வதற்கு வருசத்துக்கு ரூ 7-8 கோடி வரை ஒதுக்குவார்கள். தொழிற்சாலை எந்திரங்கள், வண்டிகள், கட்டிடங்கள் என்று முக்கியமான முதலீடுகள் போக மென்பொருளுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற ஒரு கணக்கு உண்டு. ஒரு மென்பொருளுக்கு 30 லட்சம் அந்த வகையில் பெரிய தொகைதான். இதுவரை இவ்வளவு முதலீடு மென்பொருளுக்கு செய்ததில்லை. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், இதே சாஃப்ட்வேரை இவ்வளவு செலவு பண்ணி நாமே செய்து கொள்ள முடியுமா என்றும் அவரது புத்தி குறுக்கே ஏர் ஓட்டுகிறது. அவரது தங்கச்சி பையன் ஒருத்தன் காலேஜில் கம்ப்யூட்டர் சைன்ஸ்தான் படிக்கிறான். அவனிடம் விபரம் கேட்டு ஆஃபிஸ்லேயே ஒரு இடம் கொடுத்து நான்கு சாஃப்ட்வேர் பையன்களை ஆளுக்கு 10,000- 12,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து இதை செய்யலாம். ஆனால், பிரகாஷ் போல அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாமல் செய்து முடிப்பது சிரமம். அப்படி ஒரு ஆளை வேலைக்கு எடுக்கப் போனால் லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதுவே பி.எஸ்.எஸ்-க்கு போட்டியாக இன்னொரு நிறுவனம் விலை ’ப்ரப்போசல்’ கொடுத்திருந்தால் பேரம் பேசுவது ரணகளமாகத்தான் இருக்கும்.

இப்போது அப்படி போட்டிக்கு யாரும் இல்லை, இருந்தாலும் பிரகாஷ்-ஐ கொஞ்சம் மயக்கி எவ்வளவு செலவை குறைக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஒரு வருசம் ஆகும் என்று சொல்கிறார். அப்படின்னா 8 மாசம்தான் கணக்கு. கம்பெனில 4 பேருதான் வேலைக்கு வைச்சிருக்கிறார். மாசச் செலவு 2 லட்சம் வந்தாலும் 16 லட்சம்தான் செலவு ஆகும். கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு விலை சொல்லியிருக்கிறார் என்று மனக்கணக்கு போட்டுக் கொள்கிறார்.

அதாவது பிரகாஷ் 30 லட்சம் கேட்டதால் பேரம் பேசுகிறார். இதுவே 3 கோடி விலை சொல்லியிருந்தால், திரும்ப அழைத்திருக்கவே மாட்டார். 30 கோடி சொல்லியிருந்தால், காறி துப்பியிருப்பார். ஒரு கம்பெனி ஒரு பொருளை செய்து கொடுக்க முடிந்தால் அதனோடு போட்டி போட்டு அதே பொருளை செய்து விற்க பிறர் இருப்பது வரை செலவை விட பெரிய அளவு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட முடியாது.

ஒப்பந்தங்கள், லைசன்சுகள், தனித்திறமை இவற்றின் மூலம் போட்டிக்கு யாரும் வராதபடி தடுத்தால்தான் விலையை உயர்த்தி பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும். அப்படி லாபம் சம்பாதிக்கும் வகையில் பிராண்ட் ஏகபோகம், புதிய தொழில்நுட்பம், கனிம வளங்களுக்கான லைசன்ஸ் அல்லது அரசியல் தொடர்பு போன்றவற்றை வைத்திருக்கும் கம்பெனி மீதுதான் பங்குச் சந்தை பந்தயம் கட்டுவது நடைபெறும்.

அத்தகைய நிறுவனங்கள் பிரகாஷ் போன்ற சிறு முதலாளிகளிடமிருந்து அடி மாட்டு விலைக்கு சரக்குகளை வாங்குவதன் மூலமும் தமது ஏகபோக லாபத்தை அதிகரித்துக் கொள்ளும்.  ராமமூர்த்தியின் பேரம் எப்படி போகிறது என்று பார்ப்போம்.

“எல்லாம் புரியுதுப்பா, இப்போ எங்க பட்ஜெட்ல 5 லட்சத்துக்கு மேல போக முடியாது. கொஞ்சம் கணக்கு பார்த்து சரியா விலை சொல்லுப்பா”

“சரி சார், நீங்க இவ்வளவு சொல்றீங்களேன்னு நான் 25 லட்சத்துக்கு செய்றேன். எங்களுக்கு நஷ்டம்தான். ஆனா, நீங்க ராஜலட்சுமி கம்பெனிக்கும், வெற்றி என்டர்பிரைசஸ்க்கும் என்னை அறிமுகம் பண்ணி வெச்சிருங்க. அவங்க உங்க ஃபிரெண்ட்ஸ்னு கேள்விப்பட்டேன்.” – சரி லாபம் வேணாம், ஆகிற செலவு வந்தா போதும்னு விட்டுக் கொடுத்தாலும் 25 லட்சம் வேணும் – இது பிரகாஷ் கணக்கு. சம்பளம், அலுவலக வாடகை, நம்ம செலவு எல்லாம் சமாளிக்க இது போகும்.

“அது எப்படிப்பா உனக்கு நான் மார்க்கெட்டிங் பண்ண முடியும். சரி, நான் அவங்ககிட்ட ஒரு வார்த்த சொல்றேன். ஆனா 25 லட்சம்லாம் தர முடியாது. எங்க பார்ட்னர்கிட்ட பேசி பட்ஜெட்ட ரெண்டு மடங்காக்க பார்க்கிறேன். 10 லட்சம் வாங்கிக்கோ, பேசி முடிச்சிருவோம். 25 லட்சம்லாம் எங்கேயோ நிக்குது. நாங்க எல்லாம் சாதாரண ஆளுங்கப்பா, நீங்க வேலை பார்த்த கம்பெனியோட அமெரிக்கா, ஐரோப்பா கஸ்டமர் போல நினைச்சு விலை சொல்லாதீங்க”.

எதிர்பாராத ரிஸ்குக்கு ஒதுக்கின 2 மாதங்களை கழிச்சிட்டா கூட 20 லட்சம் வருது. கொஞ்சம் டைட்டா இழுத்து பிடிச்சி, பசங்களை உற்சாகப்படுத்தி, நாமளும் இறங்கி வேலை செஞ்சா முடிச்சிரலாம். இவரு சொல்ற மாதிரி இங்க புராஜக்ட முடிச்சா நிறைய ஆர்டர் கிடைக்கத்தான் செய்யும்.

“அவ்வளவு குறைச்சா எப்படி சார். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணினா 20 லட்சம் வரை குறைக்கலாம் சார், அதுக்கு மேல முடியாது.”

“சரிப்பா, நீ இவ்வளவு சொல்ற, புரியுது. ஒரேயடியா 12 லட்சத்துக்கு முடிச்சிறலாம். இதுக்கே என் பார்ட்னர் என்னை வறுத்து எடுத்துருவார். மன்னார் கம்பெனி ஓனர் ரெக்கமன்ட் பண்ணினார்னுதான் நான் இவ்வளவு இறங்கி வர்றேன். இதைச் செய்து முடி, இன்னும் அடுத்த ஆர்டர் கூட நம்ம கம்பெனியிலேயே கிடைக்கும், இன்னும் நிறைய இடங்கள்ள ஆர்டர் வாங்கலாம். இதில செய்ய முடியும்னா சொல்லு, இல்லைன்னா அப்புறமா பார்த்துக்கலாம். நம்ம பட்ஜெட் முடிஞ்சு போச்சு”

“கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன் சார். நாளைக்கு உங்களுக்கு கன்ஃபர்ம் பண்றேன்” என்று விடைபெறுகிறார் பிரகாஷ்.

பிரகாஷூம் ஓலா வாடகை வண்டி சேவை நிறுவனம் போலவோ, இணைய விற்பனை நிறுவனம் ஃபிளிப்கார்ட் போலவோ, ஸ்விக்கி உணவு வழங்கல் சேவை நிறுவனம் போலவோ “நஷ்டமானாலும் பரவாயில்லை” என்று வாடிக்கையாளரை குளிப்பாட்டுவதற்கு என்ன தேவை? அது பிரகாஷிடம் உள்ளதா?

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?
பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி

ம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின் பரிந்துரைகளை கணக்கிலெடுத்தும் முடிவு செய்யப்பட்டது.

எழுத்தாளர்
அ. முத்துலிங்கம்
வீட்டுக்கு வந்து புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். முதல் மூன்று புத்தகங்களும் முப்பது பக்கங்களை தாண்டவில்லை. முப்பது பக்கங்கள் என்பது கூட்டுத் தொகை. எவ்வளவு முயன்றும் உள்ளே நுழைய முடியவில்லை. முன்னர் என்றால் காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்று கல்வயலை உழுவதுபோல இடறி விழுந்து எழுந்து விழுந்து ஒருவாறு முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்.

இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. நேரம் முக்கியமானது. புத்தகம் என்பது அறிவைக் கூட்டவேண்டும் அல்லது வாசிப்பு இன்பத்தைக் கூட்டவேண்டும் அல்லது சொல்வங்கியைக் கூட்டவேண்டும். விருப்பமில்லாத, ஈர்ப்பில்லாத ஒரு புத்தகத்தை எதற்காக இந்தப் பாடுபட்டு படித்து முடிக்கவேண்டும். என் மனைவி கேட்பதுபோல ஏதாவது பரீட்சை எழுதப் போகிறேனா? எனவே நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தை தொடங்க வேண்டியதுதான்.

நாலாவது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அது என்னைக் கைவிடவில்லை. நூலை நாவல் என்று சொன்னாலும் அது 13 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அந்தப் பதின்மூன்று சிறுகதைகளும் ஒன்றையொன்று தொட்டும், பொருந்தியும் நிரப்பியும் ஒரு நாவல் வடிவத்தை கொடுத்தன. இதற்கு முன்னரும் ஆங்கிலத்தில் இப்படிச் சின்னச் சின்ன முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்த நூல் இரண்டு இலக்குகளையும் எட்டியதுடன் முன்பு ஒருவரும் எட்டாத உயரத்தையும் அடைந்திருந்தது.

நான் நாவல் முடியும்வரை புத்தகத்தை கீழே வைக்கவில்லை. ஆங்கில புனைவு உலகத்தில் நிறைய பேசப்படும் ’கட்டுமானம் கட்டுமானம் கட்டுமானம்’ என்ன என்பதைக் கண்டேன். விறகு கடையில் விறகு நிறுத்து விற்பார்கள். மரக்கறிக் கடையில் மரக்கறி நிறுத்து விற்பார்கள். தங்கம் விற்கும் கடையில் தங்கம் நிறுத்து விற்பார்கள். ஆனால் தங்கம் விற்கும் தராசு மிகவும் நுண்ணியதாக இருக்கும். அப்படியான ஒரு தராசில் நாவலின் ஒவ்வொரு வசனமும் நிறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறுகதையும் பூரணமான வடிவத்துடன் தனியாக நின்றது. அவை ஒன்றாகச் சேர்ந்தபோது இன்னொரு வடிவத்தை கொடுத்தன.

கண்ணுக்கு தெரியாத மெல்லிய இழை அங்கே ஓடியது. ஒவ்வொரு சிறுகதையும் முடிவுக்கு வரும்போது கயிற்றுப்பாலத்தில் ஆற்றைக் கடப்பதுபோல மனம் முடிவெடுக்கமுடியாமல் தள்ளாடும். கண்களை மூடிக்கொண்டு கதையின் முடிவை கற்பனையில் பூர்த்திசெய்து பார்ப்பேன். பின்னர் ஆசிரியரின் முடிவை வாசிப்பேன். ஒவ்வொரு தடவையும் ஆசிரியரின் முடிவு என் கற்பனையை தாண்டி இன்னும் ஓர் அடி முன்னால் போயிருக்கும். யாரோ தள்ளிவிட்டதுபோல உணர்வேன்.

ஆங்கிலத்தில் இந்த வகையை Novel in stories (சிறுகதைகளில் நாவல்) என்று சொல்கிறார்கள். Elizabeth Strout எழுதிய Olive Kitteridge என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டு புனைவு இலக்கியப் பிரிவில் புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது. இது அமெரிக்காவில் வருடா வருடம் கொடுக்கும் ஆகச் சிறந்த பரிசு. இங்கிலாந்தின் புக்கர் பரிசுக்கும் கனடாவின் கில்லர் பரிசுக்கும் நிகரானது. இந்தப் பரிசைத்தான் ஜும்பா லாஹிரிக்கும் 2000ம் ஆண்டு புனைவு இலக்கியத்துக்கு கொடுத்திருந்தார்கள்.

என்னுடைய நாவலான ’உண்மைகலந்த நாட்குறிப்புகள்’ உயிர்மை வெளியீடாக வெளிவந்த அதே காலப் பகுதியில்தான் ஒலிவ் கிற்றரிட்ஜ்  நாவலும்  வெளிவந்தது. என்னுடைய நாவல் 46 தனித்தனி சிறுகதைகளைக் கொண்டது. அவருடையது 13 சிறுகதைகளைக் கொண்டது. சமீபத்தில் என்னுடைய புத்தகம் நாவலா சிறுகதை தொகுப்பா என்ற விவாதம் நடந்தது.

நாவல் இலக்கியம் என்பதே தமிழுக்கு புதிது. ஆங்கிலேயரிடம் இருந்து நாம் அந்த வடிவத்தை பெற்றுக்கொண்டோம். ஆங்கிலத்தில் ரொபின்ஸன் குரூசோதான் முதல் முழுமையான நாவல் என்று ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அந்த வடிவம் இன்றுவரை எத்தனையோ மாற்றம் பெற்றுவிட்டது. இப்பொழுது Novel in stories வடிவம் வந்து அங்கீகாரமும் பெற்றுவிட்டது. இன்னும் பல புதிய வடிவங்களுக்கும் நாங்கள் தயாராக வேண்டும். என்னுடைய நாவலும் ஒலிவ் கிற்றறிட்ஜ் நாவலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளிவந்திருந்ததால் அந்த நாவலைப் பார்த்துத்தான் என்னுடைய நாவலை எழுதினேன் என்ற குற்றச்சாட்டில் இருந்து நான் தப்பிக்கொண்டேன்.

இந்தக் கட்டுரை எழுதக் காரணம் நேற்று எனக்கு வந்த ஒரு மின்கடிதம். இதற்கு முன்னர் என்னை தொடர்பு கொண்டிராத சித்திரலேகா என்ற வாசகி எழுதியிருந்தார். உங்களைப்பற்றி கிரிதரன் என்ற எழுத்தாளர் எழுதியதை படித்தீர்களா என்று கேட்டு அந்தக் கொழுவியையும் அனுப்பியிருந்தார்.

வழக்கமாக ஓர் ஆசிரியரை வர்ணிக்கும்போது இவர் கல்கியைப்போல எழுதுகிறார், ஹெமிங்வேயைப்போல எழுதுகிறார் என்றுதான் சொல்வார்கள். கிரிதரன் என்னுடைய எழுத்தை ஒரு போலிஷ் எழுத்தாளருடைய எழுத்துடன் ஒப்பிட்டிருந்தார். அவருடைய பெயர் Ryszard Kapuscinski ஆனால் நான் அவரைப்பற்றி கேள்விப்பட்டது கிடையாது. இதில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் அந்தப் போலிஷ் எழுத்தாளர் என்னைப்போல எழுதுகிறார் என்று சொல்லியிருந்ததுதான். அவரைப்போல நான் எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. இதைவிட வேறு என்ன புகழ்ச்சி வேண்டும்? எனக்கு ஏதோ பெரிய விருது கிடைத்ததுபோல இருந்தது.

நான் புத்தகக் கடையில் வரிசையில் நின்றபோது எனக்கு முன்னால் ஒருவர் நின்றிருந்தார். தோட்டத்து சப்பாத்தும் தோட்டத்து கையுறையும் தோட்டத்து தொப்பியும் அணிந்தபடி தோட்டத்திலிருந்து நேராக வந்தவர்போல காணப்பட்டார். அவருடைய கையிலும் ஒலிவ் கீற்றறிட்ஜ் நாவல் இருந்தது. தோட்டக்கலை பற்றிய புத்தகம் என்றால் வியப்படைந்திருக்கமாட்டேன். ’உங்கள் கையிலிருக்கும் புத்தகம் நல்லதுதானா?’ என்று கேட்டுவைத்தேன்.

அவர் ’நான் ஏற்கனவே படித்துவிட்டேன். என் மகளுடைய பிறந்த நாளுக்கு அவருக்கு பரிசளிக்கப் போகிறேன்’ என்றார். ’அப்படியென்றால் உங்களுக்கு நாவல் பிடித்திருக்கிறது’ என்றேன். அவர் சொன்ன பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ’எல்லாவிதமான காதல் பற்றியும் புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் இரண்டு முதியவரின் காதலை அழகாகச் சொல்லும் புத்தகத்தை நான் படித்ததில்லை. இந்த நாவல் சொல்கிறது. என் மகளுக்கு இந்த அறிவு வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார்.

அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தகத்தை படித்து முடிந்த பின்னர்தான் புரிந்தது.  இந்த நாவல் எல்லாவிதமான காதல்களையும் சொன்னது. இளையோரின் காதல், முதியவருக்கும் இளையவருக்குமான காதல்,  கணவருக்கு தெரியாமல் மனைவியின் காதல், மனைவிக்கு தெரியாமல் கணவரின் காதல், கணவருக்கும் மனைவிக்குமான காதல் அத்துடன் முதியோர் இருவருக்கிடையில் ஏற்படும் காதல். முதியோர் காதலை இவ்வளவு நுட்பமாகவும் உருக்கமாகவும் வேறு ஒருவர் வர்ணித்தது நினைவில் இல்லை.

முதிர்ந்த, சுருங்கிய, முடிச்சுகள் விழுந்த உடல்களுக்கு கூட காதல் அவசியமாக இருக்கிறது. ஓட்டை விழுந்த இரண்டு சுவிஸ் வெண்ணெய் கட்டிகள் ஒட்டுவதுபோல வாழ்க்கையின் இழப்புகள் ஏற்படுத்திய ஓட்டைகளுடன் அவர்கள் இணைந்துகொண்டார்கள் என்று நாவலாசிரியர் வர்ணிப்பார். பல வருடங்களுக்கு முன்னர் தொலைத்த பழைய நாணயத்தை கண்டெடுத்ததுபோன்ற ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !

மோடி அரசு இயற்றிய ஆதார் சட்டம் (2016), அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் வந்தது. இவ்வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் 10-ம் தேதியோடு நிறைவடைந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (26.09.2018) காலை 11 மணியளவில் வழங்கப்பட்டது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி, ஆகிய மூவரும் சேர்ந்து ஒன்றுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி அசோக் பூசன் அம்மூவரின் தீர்ப்பையும் ஏற்றுக் கொண்டு கூடுதலாக சில கருத்துக்களையும் சேர்த்து தனித் தீர்ப்பில் கூறியுள்ளார். நீதிபதி சந்திரசூட் இந்நால்வரின் தீர்ப்புக்கும் மாறுபட்ட கருத்துக்களோடு தனது தனித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இத்தீர்ப்பின் சாரம் என்னவெனில், ஆதார் சட்டம் ஒரு சில பிரிவுகளை நீக்கிவிட்டால் அரசியல் சாசனத்திற்கு ஏற்ற சட்டமாகிவிடும். அரசு குடிமக்களின் மின்னணு அடையாளங்களை எடுப்பது தவறானதல்ல. தனியார் கையில் அதனை ஒப்படைக்கக் கூடாது. மற்றபடி அரசு ஆதார் சட்டத்தை தொடரந்து செயல்படுத்தலாம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சிக்ரி ஆகியோரின் ஒருமனதான தீர்ப்பு முதலில் ஆதார் சட்டத்திற்கும் அதனை செயல்படுத்திய விதம் குறித்தும் பின்வரும் புகழாரங்களைச் சூட்டுகிறது.

  • ஆதார் போலிகள் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஆதார் சேர்க்கை என்பது ஏமாற்ற முடியாதது.
  • இது விளிம்புநிலை சமூகத்தினருக்கு அதிகாரத்தைக் கொடுக்க வல்லது.
  • அடையாளங்காணுவதற்கான போதுமான பாதுகாப்பு கொண்ட பொறியமைவில் உச்சநீதிமன்றம் திருப்தியடைகிறது.

இதுதவிர இத்தீர்ப்பின் இதர விவகாரங்கள் பின்வருகின்றன

  • ஆதார் சட்டத்தின் பிரிவு 33(2) (தேசிய பாதுகாப்பு கருதி குடிமகனின் ஆதார் தகவல்களை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தருவதற்கான அதிகாரம்), பிரிவு 57 (தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்கள் தருவதற்கான விதிமுறை), பிரிவு 47 (பிறர் நீதிமன்றங்களில் முறையீடு செய்யக் கூடாது) ஆகியவை நீக்கப்படுகின்றன.
  • 5 ஆண்டுகளுக்கு தகவல்களை சேமிக்கலாம் என்ற வரைமுறை 6 மாதத்திற்கு மேல் தகவல்களை சேமிக்கக் கூடாது என மாற்றப்பட்டுள்ளது. .
  • குழந்தைகளை ஆதாரில் சேர்ப்பதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி தேவை. அதே போல 18 வயதுக்கு பிறகு அக்குழந்தை தனது தகவல்களை நீக்கக் கோரினால் உடனடியாக நீக்க வேண்டும். பள்ளியில் சேர்ப்பதற்கு ஆதார் தேவையில்லை.
  • குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் எதற்கும் ஆதார் கேட்கப்படக்கூடாது.
  • தனியார் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், வங்கிகள், ஆதார் கேட்கக் கூடாது.
  • பான் கார்டுகளோடு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
  • ஆதார் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
  • நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னர்தான் ஆதார் குறித்த தகவல்களை ’தேச நலனுக்காக’ கூட வெளியிடமுடியும் (இதற்கு முன்னர் இணை இயக்குனரின் அனுமதி மட்டுமே போதுமானதாக இருந்தது)
  • இதுவரையில் தனி அடையாளங்களுக்கான ஆணையம் (UIDAI) மட்டுமே ஆதார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி இனி தனி நபர்களும் வழக்கு தொடுக்கலாம் என்றும் கூறியுள்ளது,

மேலும் தனிமனிதர்களின் அந்தரங்க உரிமை குறித்து நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில், ”மனிதர்களின் கண்ணியம் குறித்த கருத்தோட்டம் அந்தரங்க உரிமை குறித்த தீர்ப்பில் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் நலன் அல்லது அந்தரங்க உரிமை குறித்த நியதிகளை ஏற்படுத்திய பின்னரே, இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவு குறித்து முடிவு செய்ய முடியும்” என்கிறார்.

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு இறுதியில் “கல்வி நம்மை கைநாட்டிலிருந்து கையெழுத்துப் போட வைத்திருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் நம்மை கையெழுத்திலிருந்து கைநாட்டிற்கு மாற்றியிருக்கிறது” என நடிகர் பார்த்திபன் பாணியிலான ’குண்டக்க மண்டக்க’ முத்துக்களையும் உதிர்த்துள்ளார் நீதிபதி சிக்ரி.

நீதிபதி சிக்ரி உள்ளிட்ட பெரும்பான்மை (3) நீதிபதிகளின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கும் நீதிபதி அசோக் பூசன் தமது தீர்ப்பில் கூடுதலாக “ஆதாருக்காக குடிமக்களின் உயிரியல் அடையாளங்களை எடுப்பது தனிநபர்களின் அந்தரங்க உரிமையைப் பறிப்பது ஆகாது. ஆதார் திட்டத்தின் வடிவமைப்பு கண்காணிப்பு வேலைகளுக்கு வசதி செய்துதருவதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நால்வரின் தீர்ப்பிலிருந்து மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி சந்திரசூட் வழங்கியுள்ளார். தமது தீர்ப்பில் ”டிஜிட்டல் இந்தியா” மக்களின் அடையாளங்களை மூழ்கடித்துவிடக் கூடாது. தொழில்நுட்பம் சுதந்திரத்தின் எதிர்காலத்திற்கு எதிரானதாக இருக்கிறது.ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களுக்குத் தரக்கூடாது என்ற சிக்ரியின் தீர்ப்பை தாம் ஆமோதிப்பதாகவும், தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களிடமுள்ள வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்என்றும் கூறியுள்ளார்.

ஆதார் சட்டத்தை பணச் சட்டமாக கொண்டு வந்திருக்கக்கூடாது என்று தனது கண்டனத்தைத் தெரிவித்தார் சந்திரசூட். “ஆளும் கட்சி ராஜ்ய சபாவில் போதிய பலமில்லாமல் இருக்கலாம். அதற்காக இச்சட்டத்தை பணச்சட்டமாக இயற்றியிருப்பது ஒரு தந்திரமான காரியம். இவ்வாறு ஜனநாயக நிறுவனங்களை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது” என்றும் கூறியுள்ளார். இவர் மட்டுமே ஆதார் எனும் கண்காணிப்பு முறை  கொல்லைப்புற வாயிலாக கொண்டு வருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் இது சிறுபான்மை தீர்ப்பு என்பதால் உண்மையை ஒருவர் எடுத்து வைத்திருக்கிறார் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவமில்லை.

ஆதார் என்பதே மக்களை தன் கண்காணிப்பிற்குள் வைப்பதற்கான தந்திரம் என்னும் போது, அதனை சட்டமாக்க தந்திரம் செய்த மோடி அரசைக் கண்டித்து என்ன பயன்?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சுமார் 1000 பக்கங்களுக்கும் மேலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிப்பதால், இதில் இன்னும் என்னென்ன ஓட்டைகள் இட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரிய இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம்.

சிக்ரியின் தீர்ப்பில் ”ஆதார்” என்ற மக்கள் மீதான கண்காணிப்புப் பொறியை வெகு எளிதாக ”பெரும்பான்மையினரின் நலன்” என்ற போர்வையின் கீழ் கடந்து சென்றுவிட்டார். மேலும் வங்கிகளில் ஆதார் கேட்கக்கூடாது எனக் கூறிவிட்டு, ’பான்’ அட்டைகளுக்கு, பி.எஃப். போன்றவற்றிற்கு, நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்று நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

பி.எஃப் தகவல் பதிவு செய்ய உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டும். ’பான்’ அட்டை மூலம் ஆதார் எண் வங்கிக்கு இணைக்கப்படும். ஆக உங்கள் நிறுவனங்களும் உங்கள் வங்கியும் இனி உங்களைக் கட்டாயப்படுத்தி ஆதார் எண் கேட்கத் தேவையில்லை. உங்களுக்கு பி.எஃப் பணம் வேண்டுமெனில், உங்கள் வங்கியில் ரூ. 50,000க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் நீங்களே உங்கள் நிறுவனத்திடம் நேரடியாகவும், வங்கியிடம் மறைமுகமாகவும் உங்கள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.

இதற்கு மேல் மோடி அரசு இன்னின்ன துறைகள், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தும் இணைக்கலாம். இப்படி ஆதார் உருவாக்கிய அபாயங்கள் தொடரவும் இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கின்றது. மேலும் ஆதார் தகவல்கள் மலிவாக கசிய முடியும், வாங்க முடியும் என்பதை சில பத்திரிகையாளர்கள் சுலபமாக நிரூபித்திருக்கின்றனர். ஆனால் மத்திய அரசின் டிஜிட்டல் துறை ஆதார் தகவல்களை பத்திரமாக பாதுகாப்பதாக நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் ஆதார் திட்டம் என்பது உலக அளவில் ஒரு முன்னோடித் திட்டமாகும். உலக முதலாளித்துவத்தின் கீழ் மக்களை கண்காணித்து பொருளியல் ரீதியில் சுரண்டவும், அரசியல் ரீதியில் அச்சுறுத்தவும் இத்திட்டம் ஒரு பரிசோதனை என்ற பெயரிலும் வல்லரசு நாடுகளுக்கு பயன்படும்.

பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி. பெரும்பான்மையினரின் மனசாட்சிக்காக அப்சல் குருவுக்குக் கொடுக்கப்பட்ட தூக்குத்தண்டனையைப் போன்றதொரு அபத்தத்தையே தமது தீர்ப்பில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். அன்று தூக்கில் தொங்கியது அப்சல் குரு. இன்று நமது உரிமைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

அரசை எதிர்த்தால் குற்றமாம் ! விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர்கள் 3 பேர் சிறை வைப்பு !

0
சிறை வாசலில் முழக்கமிடும் பு.மா.இ.மு தோழர்கள்

விழுப்புரம் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலை, மாலை, என இரண்டு வேளைகளிலும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கல்லூரி நிர்வாக, இட ஒதுக்கீட்டை மாணவர்களிடம் விலைபேசி விற்று வந்தது. விருப்பமான துறையை மாற்றி தருவதாகவும் கூறி அதற்கென்றும் தனிரேட் போட்டு வசூலித்தது. பின்னர், சொன்னபடி துறையை மாற்றித் தராமல் அவர்களை ஏமாற்றியது. இத்தகைய ஊழல் – முறைகேடுகளை அம்பலபடுத்தியிருக்கிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.  கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி மாணவர்களை அணிதிரட்டி உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

பு.மா.இ.மு.வின் மீது வன்மத்திலிருந்த கல்லூரி நிர்வாகம், பழிவாங்கும் தருணத்திற்காக காத்திருந்தது. இந்நிலையில், கடந்த செப்-20 அன்று, சமூகத்தில் நிலவும் பண்பாடு, கலாச்சார சீரழிவு குறித்தும், ,3000 அரசு பள்ளிகள் மூடப்படுவது; உயர்கல்வி ஆணைய மசோதா; வணிகமயமாகும் கல்வி உள்ளிட்ட அபாயங்களை விளக்கி இக்கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இப்பொதுப் பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு முன்வரும் மாணவர்களை உறுப்பினராக்கினர்.

கல்லூரி வளாகத்திற்கு வெளியே, ஓட்டுபோடும் உரிமையுள்ள கல்லூரி பயிலும் மாணவர்களிடம் சமூக யதார்த்தத்தை விளக்கிப் பேசுவதும்; ஒரு மாணவர் அமைப்பு மாணவர்களை சங்கமாக அணிதிரட்டுவதும் சட்டவிரோதம் என்று தடுத்தது கல்லூரி நிர்வாகம்.

நீட் அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம். (கோப்புப் படம்)

இந்தக் கல்வியாண்டில் தொடக்கத்தில் இதேக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கிய போது ”அனுமதி இன்றி இனிப்பு வழங்கக்கூடாது” என சட்டம் பேசிய விழுப்புரம் போலீசு, இன்றும் சட்டம் குறித்து வகுப்பெடுத்தது. இப்போது மாணவர்களிடம் விநியோகித்த பிரசுரத்தில் அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது என்று கூறி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர்கள் மோகன், மணிகண்டன், ஆகியோரைக் கைது செய்தது.

பகல் முழுவதும் போலீசு நிலையத்திலேயே சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்திருந்த போலீசு பின்னர் இரவுக்கு மேல் நீதிபதியிடம் ஆஜர் படுத்தியது. விழுப்புரம் கிளைச்சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் மாஜிஸ்டிரேட். சட்டவிரோதக் கைதைக் கண்டித்தும், அரசியல் கைதி என்பதால் சட்டையைக் கழட்ட மாட்டோமென்று சிறை வாசலிலே முழக்கமிட்டனர் தோழர்கள். இதனையடுத்து, அவர்களை விழுப்புரம் கிளைச்சிறையில் அடைக்க முடியாதென சிறை நிர்வாகம் மறுத்துவிட தோழர்களைக் கடலூர் சிறையில் அடைத்தது போலீசு.

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், உயர்நீதிமன்றத்தை “மயிர்” என்றும் பேசிய எச்(சை) ராஜாவிடமும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசிய எஸ்.வி.சேகரிடமும் தன் அதிகாரத்தையும் வீரத்தையும் காட்ட துப்பில்லாத அரசும், போலீசும் கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கும் சமூகத்தையும், மாணவர்களையும் மீட்க போராடிய பு.மா.இ.மு தோழர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் அட்டகாசம் என்று ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுகளை அனைத்து மாணவர்கள் செய்யும் தவறு போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இதையே சமூகத்தின் பொதுப்புத்தியாகவும் கட்டியமைக்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களை நேர்வழிப்படுத்தும் பு.மா.இ.மு தோழர்களை ஏதோ சட்டவிரோத செயல் செய்யும் ரவுடிகள் போன்று கல்லூரி நிர்வாகமும், போலீசும், நீதிமன்றமும் நடத்துகிறது. ஆக மாணவர்கள் நேர்மறையாக அரசியல் படுத்தப்பட்டு எழுச்சி பெறுவதை இவர்கள் விரும்புவதில்லை. மாணவர்கள் குடி, போதை, இதர தவறுகளால் திசை திருப்பப்படுவதையே இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களது சதித்திட்டத்தை முறியடித்து மாணவர் சமுதாயத்தை புடம் போடும் வேலையில் பு.மா.இ.மு. தொடர்ந்து பயணிக்கும். கைது சிறைகளுக்கு அஞ்சாமல் போராடும்.


விழுப்புரம்.

மக்கள் போராடி மூடிய விழுப்புரம் சாலாமேடு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு !

டந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினார்கள். இதன் எழுச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதியில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கடை தற்காலிகமாக 3 நாட்கள் மூடப்பட்டதுடன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் உள்ளிட்டு அப்பகுதியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு வழக்கம்போல் கடை திறக்கப்பட்டது.

(கோப்புப் படம்)

மீண்டும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் வலுத்தது. பலவேறு இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது மீண்டும் போராட்டத்தை தொடர்ந்த சாலாமேடு கிராம மக்கள், கடையை மூட கெடு விதித்திருந்தனர். குறிப்பிட்ட கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், டாஸ்மாக் கடையை நாங்களே மூடுவோம் என எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். டாஸ்மாக் கடையை மூடுவதற்குப் பதிலாக கடைக்குப் பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான போலீசை குவித்தது. போலீசின் அச்சுறுத்தலையும் மீறி, பள்ளி செல்லும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பமாகத் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர் அப்பகுதி மக்கள். இப்பகுதி மக்களின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான போராட்டத்தைக் கண்டு பின்வாங்கிய தாசில்தார், அருகருகே இருந்த இரண்டு கடைகளை மூட உத்தரவிட்டார்.

(கோப்புப் படம்)

இந்நிலையில், ஓராண்டாக மூடப்பட்டிருந்த அந்தக் கடையை மீண்டும் திறக்க முயன்றது, அரசு. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாயினர். உளவுத்துறை போலீசு மூலம் இதனையறிந்த விழுப்புரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், கடையை திறக்கப் போவதில்லை என சத்தியம் செய்யாத குறையாக உறுதியளித்திருந்ததோடு, போராட்டம் எதுவும் செய்துவிடாதீர்கள் என்று மக்கள் அதிகாரம் தோழர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டார்.

இன்னொருபுறம், போலீசின் தூண்டுதலின் பேரில் டாஸ்மாக் அருகில் மினி பார் நடத்திவந்தவரின் உறவினரான செங்குட்டுவன் என்ற ரவுடி கும்பலை ஏவிவிட்டு அவர் குடும்பத்தில் உள்ளர்வர்கள் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். குட்கா, கஞ்சா,  டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இந்தக் கும்பல் நடத்திய போராட்டத்தை எதிர்த்து சாலமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் அக்கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை திறந்தால் இங்கேயே தீ குளிப்போம் என எச்சரித்தும் சென்றனர். அன்று இரவே செங்குட்டுவனின் அண்ணனான குமரன் என்ற மற்றொரு ரவுடி, தீ குளிப்போம் என கூறிய பெண்களின் கணவர்களை மிரட்டி உள்ளார்.

இதற்கிடையில் மறுநாளே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசின் பாதுகாப்போடு கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற கிராம பெண்கள் 40-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். மக்கள் அதிகாரம் சார்பில் அச்சடிக்கப்பட்ட கண்டன சுவரொட்டிகளை அப்பகுதி மக்களே ஒட்டி அம்பலப்படுத்தினர். குடிகெடுக்கும் சாராயக் கடையை மூடக்கோரி சுவரொட்டி ஓட்டியதற்காக 3 இளைஞர்களை கைது செய்தது போலீசு. அவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் போன்ற பொய்யானக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது. பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்போடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் அவ்விளைஞர்களை பிணையில் வெளிக்கொண்டு வந்தனர். சாலாமேடு பகுதி மக்கள் கைது சிறைக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தகவல்:

மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம்.