Thursday, May 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 750

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?

29

‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்.

நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.

இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.

கடையின் உரிமையாளர், அவர் மனைவி, தம்பிகள், வயதான தந்தை என்று 6 குடும்ப உறுப்பினர்கள் கடை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆள் மாறி மாறி காலையில் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடை திறந்திருப்பதற்கு தேவையான வேலைகளை செய்கிறார்கள். இவர்களைத் தவிர சம்பளத்துக்கு இரண்டு பேர் வைத்திருக்கிறார். மொத்தம் 8 பேர் நேரடியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். சொந்தமாக வீடு கட்டி வசதியாகவே வாழ்கிறார்கள்.

மளிகைச் சாமான்கள், பால், காய்கறி, தண்ணீர், தின்பண்டங்கள் மற்றும் சகலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விற்கிறார்கள்.

உரிமையாளர் 4 மணிக்கு எழுந்து சந்தைக்கு காய்கறி வாங்கப் போவார். ஆறரை மணிக்கெல்லாம் ஒரு தம்பி வந்து கடையை திறப்பார். சந்தையிலிருந்து திரும்பி வந்தவரும் பொருட்களை எடுத்துக் கொடுக்க நிற்பார். காலை நேரம் சுறுசுறுப்பான நேரம். பால் வாங்க வருபவர்கள், அன்று வாங்கி வரும் காய்கறி வாங்கிப் போக வருபவர்கள் என்று பரபரப்பாக இயங்கும். அந்த நேரத்தில் வயதான தந்தையும் உதவிக்கு சேர்ந்து கொள்வார். பகல் வேளையில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் மாறி மாறி யாராவது ஒருவர் கடையில் இருப்பார்கள். தண்ணீர், பால், வீடுகளுக்கு பொருட்களை கொண்டு கொடுப்பது போன்ற வேலைகளை சம்பளத்துக்கு இருக்கும் இரண்டு பையன்கள் வேலை செய்வார்கள்.

இரவு 10.30 வரை கடை திறந்திருக்கும். ஓய்வாக இருக்கும் போது பொருட்களை அடுக்கி வைப்பது, கணக்கு எடுப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டியதுதான். வாரத்துக்கு 7 நாளும் உழைப்பு, வார விடுமுறை கிடையாது. தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகளுக்குப் போக வேண்டியிருந்தால் ஒழிய கடைக்கு விடுமுறை கிடையாது.

இது போன்ற கடைக்குப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் எத்தகையவை, அவற்றில் எவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள்?

சுமார் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் பொருட்களைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவற்றில் தயாரிப்பு நிறுவனங்களின் ஏஜன்சிகளும், நேரடியாக பொருட்களை தயாரித்து கொண்டு வருபவர்களும் அடங்குவார்கள்.

ஆச்சி மசாலா, சக்தி மசாலா, அரசன் சோப்பு, இதயம் நல்லெண்ணெய், பிராண்டட் பருப்பு வகைகள், எழுதுபொருட்கள் போன்ற பொருட்களுக்கான ஏஜன்சிகளில் சுமார் 5 முதல் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கடைகளுக்கு அவர்கள் பொருட்களை கொண்டு தருகிறார்கள். இத்தகைய ஏஜன்சிகளில் சேல்ஸ்மேன்கள், சப்ளையர்கள், சேல்ஸ் மேனேஜர்கள் போன்றவர்கள் கடைகளுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதையும், விற்ற பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வதையும் செய்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்வார்கள். அவை மாநிலம் முழுமைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அமைந்திருக்கலாம்.

இரண்டாவதாக, சேமியா, அப்பளம், ஜூஸ், சுக்கு, ஆசிட், லோசன், கடலை, ஓம திரவம், சிப்ஸ், தரை துடைப்பு, துடைப்பம், கற்கண்டு, முறுக்கு, பிஸ்கட், லோஷன், துடைப்பம், கடலை மிட்டாய், மெழுகுவர்த்தி, கருவாடு போன்ற பொருட்களை செய்து வழங்குபவர்கள். இவை பெரும்பாலும் குடிசைத் தொழில்களாக செயல்படுகின்றன. நகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வீடுகளில் பொருட்கள் செய்யப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. ஒரு மளிகைக்கடையில் விற்கப்படும் இத்தகைய பொருட்களை செய்யும் தொழில்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருட்களை டூவீலர் அல்லது சைக்கிளில் கொண்டு வந்து கடையில் போட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு போவார்கள்.

சுமார் 50 வகையான இத்தகைய பொருட்களை தயாரிப்பதில் ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. .

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?முட்டை கொண்டு வந்து தருபவர் கோழிப்பண்ணைகளிலிருந்து வந்து இறங்கும் முட்டைகளை மொத்தமாக வாங்கி சைக்கிளில் கட்டி எடுத்து வந்து கடைகளுக்குக் கொடுத்து விட்டுப் போவார். பால், மோர், தயிர் போன்றவற்றுக்கு ஆவின், ஆரோக்கியா ஏஜன்சிகளை கடைக்காரரே எடுத்திருக்கிறார். ஆவின் நிறுவனத்தின் மாநிலம் முழுவதற்குமான கூட்டுறவு பண்ணைகள், பால் பிடித்து வரும் வண்டிகள், பால் பதப்படுத்தும் தொழிலகங்கள், பால் கொண்டு வந்து போடும் ஊழியர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அரிசி, உளுந்து, பருப்பு வகைகளுக்கு சில்லறையாக விற்பதற்கு மொத்தச் சந்தையிலிருந்து மூட்டையில் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அரிசி மண்டி, வெல்ல மண்டி, பயறு மண்டி என்று மொத்த வியாபாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலையில் காய்கறி சந்தைக்குப் போய் காய், பழம் வாங்கி வருகிறார் கடைக்காரர். லாரிகளில் தூரத்திலிருந்து வரும் காய்கறிகள் தவிர, சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வரும் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. சிறு விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பதற்கான முக்கியமான வழியை சில்லறை வணிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இவ்வாறாக மளிகைக் கடை சில்லறை வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நகரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதியினர் சுயமாக தொழில் செய்பவர்கள்.  இவர்களில் யாருக்குமே அரசு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வங்கிக் கடன்கள், மானியங்கள் போன்ற சலுகைகளும் சுத்தமாக கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க தமது உழைப்பு, சேமிப்பு, சமூக ஆதரவு மூலமாகவே இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இவர்களின் வருமானம், லாபம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது அல்லது முதலீடு செய்யப்படுகிறது. உதாரணமாக மளிகைக் கடைக்காரர் சம்பாதிக்கும் பணத்தை உள்ளூரிலேயே வீடு கட்ட, கடையை விரிவு படுத்த பயன்படுத்துவார். அது மறைமுகமாக அடுத்த சுற்று வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது. இப்படியாக, இந்தியா முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் சில்லறை வணிக துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் சில்லறை வணிகர்கள் பொருட்கள் வாங்குவதையே உலகமயமாக்கியிருப்பவர்கள். வால்மார்ட்டில் விற்கப்படும் பால் பாக்கெட் ஆவின் பாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விலை குறைவாக கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட, டெட்ராபேக் பாலை விற்க ஆரம்பிப்பார்கள். காய்கறிகள், முட்டை போன்றவற்றை ஒப்பந்த பண்ணை முறையில் பணக்கார விவசாயிகள் அல்லது முதலாளிகளிடம் ஒப்படைத்து சிறு விவசாயிகளையும், குடிசைத் தொழில்களையும் ஒழித்து விடுவார்கள். அரிசி, பருப்பு, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், பழங்கள் கூட குறைந்த விலையில் வால்மார்ட்டின் தரத்துக்கு கிடைக்கக் கூடிய எந்த நாட்டிலிருந்தாவது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.

இப்படி துரத்தியடிக்கப்படும் 15 கோடி மக்களுக்குப் பதிலாக சில ஆயிரம் பேரை கூலி உழைப்பாளிகளாக வைத்துக் கொள்வதுதான் வால்மார்ட் மக்களுக்கு வழங்கும் ஒரே வேலைவாய்ப்பாக இருக்கும். வால்மார்ட்டில் வேலை செய்வது என்பதன் பொருள் குறைந்த ஊதியம், ஓவர் டைம் கொடுக்காமல் அதிக நேரம் வேலை வாங்கப்படுதல், போதுமான மருத்துவ வசதிகள் மறுப்பு என்று பலவிதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதே ஆகும்.

‘வால்மார்ட்டில் குறைந்த விலை அல்வா கிடைக்கலாம், ஆனால் வால்மார்ட் அழித்து விடப் போகும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள், என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதது’ என்பது கார்பொரேட் சில்லறை வணிகத்தை அனுமதித்த பல நாடுகளின் அனுபவம்.

வால்மார்ட் சில்லறை வணிக குடும்பங்களை மட்டுமல்ல, அவர்களுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில்கள், சிறு, நடுத்தர விவசாயிகள், அத்தனை பேரையும் சேர்த்தே அழிக்கிறது. தூக்கி எறியப்படும் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த வாழ்க்கையை இழப்பதோடு மலிவான கூலியுழைப்பு சந்தையின் ரிசர்வ் சக்திகளாக அலைய வேண்டியிருக்கும்.

இந்த அழிவை தடுத்த நிறுத்தா விட்டால் அதன் சமூக, அரசியல் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் பிராயச்சித்தமாக வால்மார்ட்டை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். செய்வார்களா?

– செழியன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?

1

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மிகவும் கறாரான தீர்ப்பாக ஊடகங்கள் இதனைச் சித்தரித்த போதிலும், இத்தீர்ப்பு நடந்துள்ள ஊழலைப் பற்றியதல்ல. உரிமங்கள் வழங்கும் முறையில் சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மட்டுமே இத்தீர்ப்பு குறிப்பிடுகிறது. மற்றபடி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா முதல் அதிகாரிகள் வரையிலான பலரின் குற்றத்தையும், குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டுமா என்பதையும் முடிவு செய்யவேண்டியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்தான் என்று கூறியிருக்கும் இத்தீர்ப்பு, நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம்-ஊழல்-தீர்ப்புசிறப்பு நீதிமன்றமும், “ப.சிதம்பரத்துக்கு இக்குற்றத்தில் தொடர்பில்லை” என்று கூறியிருப்பதுடன், “2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-இலும் அலைக்கற்றைகளை விற்பனை செய்தது, 2008-இல் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்க அனுமதித்தது ஆகிய இரண்டு முடிவுகளில் மட்டுமே சிதம்பரத்துக்குத் தொடர்பிருக்கிறது என்றும், இவ்விரு செயல்களும் தம்மளவிலேயே குற்றங்கள் ஆகாது” என்றும் கூறியிருக்கிறது.

தன்னுடைய அரசு வழங்கிய 122 உரிமங்களை முறைகேடானவை என்று கூறி ரத்து செய்திருக்கும் நிலையிலும், தன்னை விடுவித்துவிட்ட ஒரே காரணத்தினால் சிறிதும் வெட்கமில்லாமல் இத்தீர்ப்பை வரவேற்றிருக்கிறது பிரதமர் அலுவலகம். “அலைக்கற்றை விற்பனையால் ஒரு பைசாகூட நட்டம் ஏற்படவில்லை” என்று நேற்று வரை கூறிவந்த அமைச்சர் கபில்சிபல், அரசின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஆ.ராசா ஊழல் செய்துவிட்டதைப் போல, தீர்ப்புக்குப் பின்னர் இன்று திரித்துப் பேசுகிறார்.

பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ இந்த ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போலவும், ஆ.ராசா போன்ற நாலாந்தர ஊழல் அரசியல்வாதிகளால் இந்த மேன்மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதைப் போலவும் ஒரு சித்திரத்தை காங்கிரசு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள், ஊடகங்களுடன், வழக்கு தொடுத்திருக்கும் சுப்பிரமணிய சாமியும் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களும் சேர்ந்து உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்.

பிரதமர், நிதியமைச்சர், தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஜூலை 6, 2008-இல் முடிவு எடுக்கப்பட்டதாக நிதித்துறை செயலரின் குறிப்பு கூறுகிறது. 2008-லேயே ஊழல் புகார் எழுந்த பின்னரும் 2009-இல் ஆ.ராசா அமைச்சராக்கப்படுகிறார். அவர் அமைச்சராக்கப்பட்டதில் டாடாவின் பாத்திரம் பற்றி ராடியா டேப் கூறுகிறது.  2008-இல் புகார் எழுப்பியவர்கள் போட்டி நிறுவனங்களே என்றும் 2009 மே மாதத்தில் ராசாவை அமைச்சராக்க வேண்டாம் என்று தான் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் பிப். 2010 தொலைக்காட்சிப் பேட்டியில் மன்மோகன் சிங் கூறுகிறார். கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரும் ராசாவின் முடிவில் தவறில்லை என்றே கபில்சிபல் பேசி வந்திருக்கிறார்.

டாடா டோகோமோ, எடிலசாட் டிபி போன்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றுக் கொள்ளை இலாபம் பார்ப்பதற்கு மைய அரசின் அந்நிய முதலீட்டு கமிசன் அன்று அனுமதி தந்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள அந்த பங்கு விற்பனை நடவடிக்கையை  நியாயமானது என்று சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பேசியிருக்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அரசு வங்கிகள், இன்று உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கின்றன. இவ்வளவு உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு ராசாவும், தி.மு.க.வும், சில அதிகாரிகளும், சில முதலாளிகளும் மட்டும்  இந்த ஊழலில் ஈடுபட்டதைப் போலக் காட்டிப் பலிகடா ஆக்குவதில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சு.சாமி, ஊடகங்கள், நீதிமன்றம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

பொதுச்சொத்துகளைத் தனியாருக்குத் தரும்போது, முதலில் வருவோர்க்கு முதலில் என்ற வழிமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும், அது சிலரது கொள்ளைக்குப் பயன்படுவது தவிர்க்கவியலாதது என்பதால், அது சமத்துவம் மற்றும் நீதியான நடைமுறைக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது என்றும் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. ஆனால், முதலில் வருபவர்க்கு முதலில் என்ற பெயரில் 2001 இல் அருண் ஷோரி வகுத்த இந்த அடிமாட்டு விலைக் கோட்பாட்டின்படிதான் 95% அலைக்கற்றைகளை ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, வோடஃபோன் உள்ளிட்ட  நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றனர் என்றபோதிலும், இவர்களது உரிமங்களை ரத்து செய்ய மறுத்து, இவர்களுக்கு எதிராக யாரும் வழக்குப் போடவில்லை என்று சப்பை கட்டுகிறது.

2  ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து, ஆன்டிரிக்ஸ்தேவாஸ் அலைக்கற்றை ஊழல் அம்பலமானதும், உடனே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அரசு அறிவித்துவிட்டது. தற்போது  இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 4 விஞ்ஞானிகளைக் கருப்புப் பட்டியலில் வைப்பதாகக் கூறி, அவர்களைப் பலிகடா ஆக்க முயன்றது மத்திய அரசு. மத்திய அமைச்சரவைச் செயலர், பிரதமரின் தலைமைச் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், விண்வெளித்துறையின் கூடுதல் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய விண்வெளி கமிசனும், தற்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற ஆன்டிரிக்ஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவும்தான் தேவாஸ் உள்ளிட்ட பல நூறு ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளன என்றும், எதுவும் எப்போதும் ஏலம் விடப்பட்டதில்லை என்றும் மாதவன் நாயர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, டாடா ஸ்கை,சன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் டி.டி.எச். சேவைக்கு செயற்கைக் கோள் ஏவும் பணியை இஸ்ரோதான் செய்கிறது என்றும், அவை “தேவாஸைவிடப் பெரிய விவகாரங்கள்” என்ற செய்தியும் இப்போது கசியத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விசயத்தை அமுக்குவதற்காக விஞ்ஞானிகளுடன் சமரசம் பேசத் தயார் என்று பல்டியடித்திருக்கிறது மையஅரசு.

பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும்போது, முதலில் வருபவருக்கு முதலில் என்ற முறையைக் கடைப்பிடிக்க கூடாது என்றும் ஏலமுறையில்தான் நியாயமான போட்டியையும் வெளிப்படைத் தன்மையையும் உத்திரவாதப்படுத்த முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தற்போதைய தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது. பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையை ஒப்புக் கொண்டு, அதை நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமல்படுத்த வழிதேடுவது கேலிக்கூத்து.

தனியார்மயம் என்பது நமது விருப்பத் தேர்வல்ல. அதுவே பன்னாட்டு முதலாளித்துவத்தின் நிர்ப்பந்தம்தான். அந்த நிர்ப்பந்தத்தின் இயல்பிலேயே உள்ள நியாயமற்ற ஆதிக்கத் தன்மையும் சுரண்டல் நோக்கமும்தான், புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் இரகசியமாக்கி, ஊழலை அவற்றின் உடன்பிறப்பாக்கியுள்ளது. மறைக்கமுடியாத அளவுக்கு ஊழல் அம்பலப்பட்டு நாறும்போது ஆ.ராசா, கல்மாடி போன்ற சிலரையும், சில அதிகாரிகளையும் பலிகடாவாக்குவதன் மூலம் இந்த அமைப்பு முறை தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. நீதிபதிகளின் சொல்லிக்கொள்ளப்படும் நேர்மையும்கூட இந்த நோக்கத்துக்குத்தான் பயன்படுகிறது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

மாமி – மாட்டுக்கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!

97

ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

உடனே அம்மாவின் விசுவாசிகள் கும்பல் கும்பலாக வந்து, போலீசின் பாதுகாப்போடு நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கிவிட்டுச் சென்றார்கள்.  அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் நக்கீரன் அலுவலத்துக்கு அருகே அமைந்துள்ள ஜாம்பஜார் போலீசு நிலையத்தையே கண்ட்ரோல் ரூமாக மாற்றிக் கொண்டு, அங்கிருந்தபடி மேற்படி போரை  வழிநடத்தியதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்தப் போரில் உயிர்ச்சேதம் இல்லையே தவிர, மற்றபடி தினகரன் அலுவலகத் தாக்குதலுக்கும் இதற்கும் ‘கொள்கைரீதியாக’ வேறுபாடு ஏதும் இல்லை.

மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1அம்மாவின் படம் தாங்கிய அட்டையுடன் பத்திரிகையைக் கொளுத்துவது அம்மாவை அவமதிப்பதாக ஆகிவிடும் என்பதால், அம்மாவைப் பிய்த்துக் குப்பையில் வீசி விட்டு, உள்பக்கங்களை மட்டும் கொளுத்தினார்கள் உடன்பிறப்புகள். இதழை விற்கக்கூடாதென பெட்டிக்கடைக்காரர்கள் மிரட்டப்பட்டனர்.  ஏவல்துறை நக்கீரன் அலுவலகத்திற்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியது. நக்கீரன் அலுவலகத்துக்கு மட்டும் மின்சாரத்தை நிறுத்துவது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக இருக்கும் என்பதால், அந்த வட்டாரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் துணை ஆசிரியர் காமராஜுக்கு எதிராகத் தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மாவின் விசுவாசிகளால் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் புகார்கள் பதியப்பட்டன.

கிசுகிசு செய்திகளை நக்கீரன் மட்டுமின்றி, ஜு.வி., ரிப்போர்ட்டர், தினமணி, தினமலர், தினகரன் முதல் உலக உத்தமர் சோ வரை அனைவரும்தான் பிரசுரிக்கின்றனர். கிசுகிசுக்கள் மட்டுமின்றி, போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி முதல் வெள்ளை மாளிகை வரையில் எங்கே என்ன பேசிக்கொண்டாலும், அவை அடுத்த வார தமிழ் பத்திரிகையில் எழுதப்பட்டு விடுகின்றன. ஜெ  சசி மோதல் போயசுத் தோட்டத்துக்குள்ளே எப்படி நடந்தது, யார் என்ன வசனம் பேசினார்கள் என்பது குறித்து, பல “ஸ்கிரிப்டுகள்” நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. “நான் பேசியது உனக்கெப்படி தெரியும்?” என்று அப்போதெல்லாம் அம்மா கோர்ட்டுக்குப் போகவில்லை.

மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1‘‘நக்கீரன் இதழ் ஜெயாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எந்தச் செய்தி வெளியிட்டாலும், அவரின் கருத்தையும் கேட்ட பிறகுதான் வெளியிட வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும்பொழுது, அதனை மீறி நக்கீரன் இதழ் இந்த மாட்டுக்கறி செய்தியை வெளியிட்டிருப்பது நீதிமன்றத்தையே  அவமதிப்பதாக இருந்ததால், தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.  மேற்படி கட்டுரையின் மூலம் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றம்தான் என்பதைப் புரட்சித்தலைவி தெளிவுபடுத்திய பின்னரும், “ஆத்தாளுக்கு விளக்கு போட்டு, வருத்தத்தை அம்மாவிடம் தெரிவிக்குமாறு” நக்கீரனுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். நக்கீரன் வருத்தமும் தெரிவித்து விட்டது.

இருப்பினும் அவமதிப்பை எற்படுத்திய இதழ் கடைகளிலிருந்து அநேகமாகப் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், எதற்காக இந்தத் தண்டனை என்பதை வாசகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது பற்றிச் செய்தி வெளியிட்ட இந்து நாளேடு, ஏன் தாக்கப்பட்டது என்பதை விளக்குமுகமாக, நக்கீரனின் மாட்டுக்கறி கதையை வெளியிட்டிருந்தது. மாட்டுக்கறி மேட்டரை ஆங்கிலத்தில் கிளப்புவது, பாரதிய ஜனதா ஆதரவுடன் தான் பிரதமராகும் வாய்ப்பைக் கெடுப்பதற்குத்தான் என்பது புரட்சித்தலைவிக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக நக்கீரன் மீது வழக்கு போட்ட ஜெ., தன்னை அவமதித்து விட்டதாக இந்து ஆசிரியர் என்.ராம் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் கொடுத்துள்ளார். என்.ராம் மீது நில அபகரிப்பு புகார், கோபால் மீது கொலை மிரட்டல் புகார் என்று சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் அளவு வழக்குகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் விசயத்துக்கு வருவோம்.

நக்கீரன் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் தொடர்புடைய எம்.ஜி.ஆர்., எஸ்.டி. சோமசுந்தரம், கே.ஏ. கிருஷ்ணசாமி ஆகிய மூவர் மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட (அல்லது படாத) மாடும் உயிரோடு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கும் பொன்னையன், தொடர்ந்து உயிரோடு இருக்க விரும்புவதால்,  புரட்சித்தலைவர் அப்படி சொல்லவே இல்லை என்றும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், புரட்சித்தலைவிக்கு சமைக்கவே தெரியாது என்பதால், புரட்சித்தலைவர் அப்படிச் சொல்லியிருக்கவே முடியாது என்றும் அம்மாவுக்கு சமைக்கத் தெரியும் என்று கூறியிருப்பதே  அபாண்டமானதொரு அவதூறு என்ற கோணத்திலும் இதனைத் தெளிவுபடுத் தியிருக்கிறார். நடுநிலையாளர்களான சோ ராமஸ்வாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் போன்றோர், “ஜெயாவின் புகழுக்கும், நற்பெயருக்கும், செல்வாக்கிற்கும் களங்கம் விளைவிக்கும்” நோக்கில்தான் நக்கீரன் இச்செய்தியினை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளனர்.

அவ்வளவு பயங்கரமான அவதூறு அந்த செய்தியில் என்ன இருக்கிறது? ‘மாமி’ என்ற சொல்லை யாரும் அவதூறாகக் கருத வாய்ப்பில்லை.‘நான் ஒரு பாப்பாத்திதான்’ என்று சட்டமன்றத்தில் கம்பீரமாக அறிவித்துக்கொண்டவர் அம்மா. எஞ்சியிருப்பது மாட்டுக்கறி மட்டும்தான். ஜெயா மாட்டுக் கறி உண்ணும் பழக்கமுடையவர் என்பது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு மாட்டுக் கறி சமைத்தும் போட்டதாக நக்கீரன் கூறியுள்ளது.  அவாள் இவாள் எல்லாம் கூச்சலிடுவதும், குமுறுவதும்  இதற்காகத்தான்.

மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-3

மாட்டுக் கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்போரை  குறிப்பாக, தாழ்த்தப்பட்டோரையும், முசுலீம்களையும்  தீண்டத்தகாதவர்களாகவும் கருதும் பார்ப்பன  ஆதிக்க சாதி மனோபாவத்திலிருந்துதான் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்தியைக் கண்டு பார்ப்பனக் கும்பல் குதிக்கிறது. இப்பிரச்சினையில் பார்ப்பனக் கும்பல் வெளிப்படுத்தும் சாதி வெறியும், தீண்டாமை வெறியும்தான் அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. நியாயமாக, மாட்டுக் கறி குறித்த தீண்டாமை மனோபாவத்தை வெளிப்படுத்தியிருக்கும் இப்பார்ப்பனக் கும்பலின் மீதுதான் வன்கொடுமை சட்டம் பாய்ந்திருக்க வேண்டும்.  ஆனால், மாட்டுக் கறி உண்பது கேவலமானது என்ற பார்ப்பன  ஆதிக்க சாதி மனோபாவம் நீதிமன்றம் வரை புரையோடியிருக்கிறதே! நீதிமன்றத்தின் மீது யார் வன்கொடுமை வழக்கு தொடுப்பது?

எனவே, பிரச்சினையை வேறு கோணத்திலிருந்துதான் அணுக வேண்டும் போலும்! வேதத்துக்கு இணையான தொன்மை வாய்ந்ததும், வேதங்களால் விதந்து போற்றப்பட்டதும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இனியதும், யாக்ஞவல்கியர் முதலான உபநிடத கால முனிவர்களால் விரும்பிச் சுவைக்கப்பட்ட புனித உணவுமான மாட்டிறைச்சியை இழிவுபடுத்தியதன் மூலம், வேதஇதிகாசங்களை இழிவுபடுத்தி, தங்கள் மனதைப் புண்படுத்தியதற்காகவும் துக்ளக், தினமணி போன்ற பத்திரிகைகள் மீது ‘ஹிந்துக்கள்’ வழக்கு தொடுக்கலாம். மாட்டுக் கறியின் புனிதத் தன்மையை நிறுவுவதற்கான அசைக்க முடியாத வேத சாத்திர ஆதாரங்களைப் பேராசிரியர் ஜா எழுதிய பசுவின் புனிதம் நூலிலிருந்து அவர்கள் திரட்டிக் கொள்ளலாம்.

மாட்டுக் கறி சமைத்தார், சுவைத்தார் என்பன போன்ற புனிதமற்ற அவதூறுகள் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பித்து விட்டதாகக் குமுறும் ஹிந்து தர்மத்தின் காவலர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி, தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டாரே செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்? “திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவியோ என்ற பாட்டின் மூலம் என்னை அடையாளம் காட்டினார் புரட்சித் தலைவர்” என்று சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பாட்டுப் பாட, அதனை மேசையைத் தட்டி வரவேற்றார்களே ரத்தத்தின் ரத்தங்கள், அந்த மானக்கேட்டுக்கு எந்தக் கோவாலு மீது கேஸ் போடுவது?

திருவளர்ச்செல்வியின் தனிப்பட்ட வாழ்க்கை புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கையைப் பிரசவிக்கிறது. மறுகணமே புரட்சித்தலைவியின் பொதுவாழ்க்கை,  “அன்புத்தோழி, வளர்ப்புமகன், கொடநாடு எஸ்டேட்..” என்று தனிப்பட்ட வாழ்க்கையைக் கருத்தரிக்கிறது. பிறகு தோழிகளுக்கிடையில் வெடித்த தனிப்பட்ட முரண்பாடுகள், தமிழகத்தில் ஒரு ‘அரசியல் புயலை’ உருவாக்குகின்றன. பொதுவாழ்க்கையிலிருந்து ஊழலை ஓட ஓட விரட்டுகிறார் புரட்சித்தலைவி. தனிவாழ்வும் பொதுவாழ்வும் தண்டவாளம் போலப் பிரிந்தும் பிணைந்தும் தோற்றம் காட்டும் இவ்வுலகில் இவற்றைப் பிரித்தறிவது எப்படி?

கொ.ப.செ. என்பது பொதுவாழ்க்கை, மாட்டுக்கறி தனிப்பட்ட வாழ்க்கையா? ஜெயேந்திரனின் துறவறம் பொதுவாழ்க்கை, அன்னாரின் ராசலீலைகள் தனிப்பட்ட வாழ்க்கை என்பது போலவா? எது நற்பெயர்,எது களங்கம்? எது சட்டமன்ற மேசை, எது நக்கீரன்? எது ஜீவாத்மா, எது பரமாத்மா? எது மாயை, எது உண்மை? சோ ராமஸ்வாமி அய்யர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

4
தானே புயல் பேரழிவு
வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள்ந நாசமாகிவிட்ட விவசாயம்: வாழ்வாதாரங்களைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய ‘தானே’ புயலின் கோரம்.

வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள், கற்குவியலாகச் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் படகுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகள், உப்புநீரில் பாழ்பட்டுக் கிடக்கும் விளைநிலங்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் எனப் போர் நடந்த பூமியைப் போல் காட்சியளிக்கின்றன தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள். கடந்த டிசம்பர் இறுதியில் 136 கி.மீ. வேகத்தில் தாக்கிய “தானே” புயலால் உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள், மரங்கள்,  விளைநிலங்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, எதற்கும் வழியின்றி ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர். உயிருக்கு மோசமான பாதிப்பை சுனாமி ஏற்படுத்தியது என்றால், வாழ்வைப் பல தலைமுறைகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அதைவிட மோசமான பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியுள்ளது.

“தானே” புயல் மழையினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 இலட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 2.24 ஹெக்டேர் நிலங்கள் பாழாகியுள்ளன. 45,000 மின்கம்பங்களும் 4,500 மின்மாற்றிகளும் சாய்ந்துவிட்டன. செல்போன் கோபுரங்கள் விழுந்து கிடக்கின்றன. 30,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த முந்திரித் தோப்புகளில் 95 சதவீத மரங்கள் புயலில் சாய்ந்துவிட்டன. 811 ஹெக்டேர்  பரப்பளவில் இருந்த பலா விவசாயத்தில் ஏறத்தாழ் 505 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் முற்றிலும் விழுந்துவிட்டன. 3 இலட்சம் ஏக்கர் நெல், மணிலா, கரும்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் நாசமாகியுள்ளன. ஏறத்தாழ 43,000 விவசாயிகள் பல தலைமுறைகளுக்குத் தங்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் தாண்டவராயன் சோழகன் பேட்டை முதல் நல்லவாடு வரை 48 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் உள்ளனர். “தானே” புயலால் மீனவர்களின் 82 விசைப்படகுகள், 270 கண்ணாடி இழைப் படகுகள், 729 கட்டுமரங்கள் சேதமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சேதத்தின் அளவு  இதை விட அதிகமானது. மொத்தத்தில் இக்கடும் புயலால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ரூ.10,000 கோடிக்கும் மேலாக சேதமாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. கடலூர் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைப் பகுதிகளில் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். குழந்தைகளுக்குப் பள்ளி இல்லை, நோயாளிகளுக்கு மருத்துவமனை இல்லை, விவசாயிகளுக்கு விளைநிலமில்லை, மீனவர்களுக்குப் படகில்லை. யாருக்கும் எதுவுமில்லை என்பதே கடலூரின் இன்றைய நிலை.

தானே புயல் பேரழிவு
சுனாமி ஏற்படுத்திய பேரழிவைவிடக் கோரமான பாதிப்பு

இப்பேரழிவு ஏற்பட்டு ஒருவார காலத்துக்குப் பின்னர்தான் அந்தப் பகுதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பார்வையிடச் சென்றார். மக்கள் மீது தனக்குக் கரிசனம் உள்ளதாகக் கணக்குக் காட்ட, கடலூரில் ஒரேயொரு இடத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்த இடத்தில் அற்பமான நிவாரண உதவிகளைக் கொடுத்துவிட்டு, உடனே ஹெலிகாப்டரில் பறந்துவிட்டார்.

அரசு ஒதுக்கியுள்ள புயல் நிவாரணத் தொகை ரூ.700 கோடிதான். இதை வைத்துக் கொண்டு ஒரு வட்டத்திலுள்ள கிராமங்களுக்குக்கூட நிவாரண உதவியையோ, மறு சீரமைப்பையோ செய்யவே முடியாது. முந்திரி போன்றவற்றை பணப்பயிர் என அரசாங்கம் வகைப்படுத்தியிருப்பதால், வசதியாக தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. ஒரு ஹெக்டேர் வாழைக்கு ரூ.7500/ ம், முந்திரிக்கு ரூ.9000/ மும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சாய்ந்து கிடக்கும் மரங்களைக்கூட அகற்ற முடியாது. புயலால் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றினால்தான் புதிய கன்றுகளை நட முடியும் என்றுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல்,  இலவச மரக்கன்றுகள், பயிர்களுக்கான ஓராண்டு இலவசப் பராமரிப்பு முதலானவற்றைக் கோமாளித்தனமாக அறிவித்துள்ளது, ஜெயலலிதா அரசு.

வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுவது ஏழை விவசாயிகளுக்குப் பெரும் சுமை. 5,6 பேரை வேலைக்கு அமர்த்தினால்தான் ஒரு மரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடியும். ஒரு நபருக்குத் தினக்கூலியாக ரூ. 300/ தர வேண்டியுள்ளது. ஆனால், மரத்துக்கான விலையோ ஒரு டன்னுக்கு  ரூ.500 கூட கிடைப்பதில்லை. பலா, முந்திரி மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்து மகசூலைத் தர ஏறத்தாழ 10,15 ஆண்டுகளாகும். வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கே விவசாயிகள் தங்கள் சொத்தை விற்றால்தான் சாத்தியம் என்ற நிலைமைதான் உள்ளது. இதைச் சாதகமாக்கிக் கொண்டு அழிந்துவிட்ட முந்திரிக் காடுகளை ரியல் எஸ்டேடுகளாக மாற்றி, அவற்றைக் கைப்பற்ற நிலமுதலைகள் அலைகிறார்கள். இதனால் முந்திரித் தோப்பைச் சார்ந்துள்ள உழைக்கும் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு ஊரைவிட்டு பிழைப்புக்காக அலைய வேண்டிய அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். முந்திரி விவசாயத்தைச் சார்ந்துள்ள விவசாயிகள் மட்டுமின்றி, அதன் பழங்கள், கொட்டைகளைக் களைதல், பருப்பு உடைத்தல், முந்திரி எண்ணெய் எடுத்தல் முதலான பல தொழில்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அரசின் அறிவிப்பு, பின்னர் பச்சை வண்ண குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. “கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் 48,240 என்றும், ஆனால், 50 ஆயிரம் பேருக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசுத் துறைகளிடேயே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளதாகவும், இடைத்தரகர்கள் மக்களை மோசடி செய்வதாகவும், இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால்தான் அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்றும் ஜெயலலிதா ஆதரவு நாளேடான தினமணியே (25.12.2012) எழுதுகிறது.  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளிப்பதுதான் புயல் நிவாரணப் பட்டியலாகி விட்டது என்றும் அரசு வழங்கிய அற்ப நிவாரணம் அ.தி.மு.க.  நிவாரணமாக மாறிவிட்டது என்றும் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

தானே புயல் பேரழிவு
அரசின் அலட்சியத்தை எதிர்த்தும் மறுவாழ்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும் வாழ்விழந்த விவசாயிகள் விருத்தாசலத்தில் நடத்திய பேரணி

அரசு அறிவித்த நிவாரணம் கூட முறையாகக் கிடைக்காத நிலையில் கடலூர், பண்ருட்டி வட்டார  கிராமங்களில் பொங்கல் விழாவைப் புறக்கணித்துக் கருப்புக் கொடியேற்றி, மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சேதமடைந்த அனைத்துப் படகுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ளதைப் போல உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரும் கடலூர் வட்டார மீனவர்கள், அதுவரை கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று போராடினர். புதுச்சேரி மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லாமல், கடலூர் மீனவர்களுக்கு ஆதரவாகப் போராடினர்.  மீனவர்கள் கோருவது போல நிவாரணம் வழங்க அரசாணையில் இடமில்லை என்றும், கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிப்பதாகவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய துணை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், அரசை நம்பிப் பலனில்லை என்று வேறுவழியின்றி இப்போது வேதனையுடன் மீனவர்கள் தமது பிழைப்பைத் தொடர்கின்றனர்.

நாட்டு முன்னேற்றம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரியிறைக்கும் அரசு, கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்து நிற்கும் போது அற்ப நிவாரணத்துடன் தனது கடமை முடிந்ததாகக் கருதுகிறது. சாமானிய மக்களின் அடிப்படை வசதிகளை அறவே புறக்கணித்துவரும் அரசு, மறுபுறம் உள்நாட்டு  வெளிநாட்டு பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைகளையும் மானியங்களையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தத் தொகை ரூ.4.2 இலட்சம் கோடியாகவும், 2009-10ஆம் ஆண்டில் 4.37 இலட்சம் கோடியாகவும் இருந்தது. கடந்த 2011, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இது 4.6 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் அடுத்தடுத்து குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த நிதியாண்டில் ரூ. 1.54 இலட்சம் கோடியாக இருந்த மானியங்கள் 2011-12ஆம் ஆண்டில் 1.44 இலட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடியைக் கொடுத்துவிட்டு, மத்தியக் குழுவை ஆய்வுக்கு அனுப்பியது மைய அரசு. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை மதிப்பீடு செய்யச் சென்ற அதிகாரிகள் குழுவிலிருந்த வடநாட்டு அதிகாரி ஒருவர், “முந்திரின்னா கிழங்கா?” என்று அறிவுபூர்வமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். புயலால் சுமார் ரூ.5800 கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை மைய அரசு அளிக்க வேண்டும் என்றும் மத்தியக் குழுவிடம் தலைமைச் செயலர் அறிக்கை கொடுத்துள்ளார்.  ஆனாலும் இன்றுவரை கூடுதல் நிதி ஒதுக்க மைய அரசு முன்வரவில்லை.

சுனாமி தாக்கிய மறு ஆண்டில் பேரிடர் மேலாண்மை ஆணையம்  மைய அரசால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்கள் தோறும் இந்த ஆணையம் செயல்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு, இதுவரை தனியாக ஒரு ஆணையத்தைக் கூட உருவாக்கவில்லை. மாறாக, பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் துடைப்புத் துறை என்ற பெயரில் வருவாய்த்துறையின் கீழ் இயக்கி வருகிறது. சுனாமி தாக்கி ஏழாண்டுகளுக்குப் பின்னர், தானே புயல் தாக்கியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் பேரிடரை எதிர்கொள்ள எந்தத் தயாரிப்பும் இல்லை. பேரிடர் தடுப்பு ஒருபுறமிருக்கட்டும், மிக அவசியமான அடிப்படைப் பணியான குப்பைகளை அகற்றுவது முதலான துப்புரவுப் பணிகள்கூட ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரிலேயே மாதக்கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. சாதாரண மழைக்கே சாலைகள் சிதைந்து கிடப்பதோடு, மழைநீர் பல பகுதிகளில் கழிவு நீருடன் கலந்து நோயைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால், கிராமப்புறப் பகுதிகளை அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கும்  என்பதைச் சொல்லத் தேவையில்லை.

புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குக் கருணை அடிப்படையில் அற்ப நிவாரணம் அளிப்பது என்கிற கோணத்தில்தான் ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். அதனால்தான், ஒரே மாதத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைச் செய்து உலகச் சாதனை படைத்துள்ளதாகச் சட்டமன்றத்திலேயே பெருமைப்பட்டுக் கொள்கிறார், ஜெயலலிதா. பாதிக்கப்பட்டுள்ள மக்களும் பேச்சுரிமை, எழுத்துரிமை போல மறுவாழ்வுரிமை என்பது தமது அடிப்படை உரிமை என்ற கோணத்தில் பார்க்காமல், கூடுதல் நிவாரணம் என்கிற கோணத்தில்தான் அணுகுகின்றனர். ஆனால், நடந்திருப்பது பேரழிவு. புயலால் வாழ்விழந்து நிற்கும் மக்களின் தேவை அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு. கருணையினாலோ, அற்ப நிவாரணங்களாலோ அதை ஒருக்காலும் மீட்டெடுக்க முடியாது. வாழ்விழந்து நிற்கும் மக்களின் குமுறலை எதிரொலிக்கும் வண்ணம் புரட்சிகர  ஜனநாயக இயக்கங்கள்  மறுவாழ்வுக்கான போராட்டங்களைக் கட்டியமைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உண்மையான நிவாரணப்பணியாக, அரசியல் பணியாக இருக்க முடியும்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!

117

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன மேல் சாதிக் கும்பல்

வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். இதன் முக்கியத் தூண்களில் ஒருவர் ராஜாஜி. கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்பி வரும் இந்த ஆர்.எஸ்.எஸ். பினாமி நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்.

அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது,  3 அய்யர், 3 அய்யங்கார் மற்றும் ஒரு முதலியாரை உரிமையாளர்களாகக் கொண்டது. தற்போதைய இதன் தலைவர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு மேட்டுக்குடிக் குலக்கொழுந்துகளைத் தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், சாஸ்திரி ஹால் என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய்.

‘தேசியத் தலைவர்’ எனப் ’பெத்த பேர்’ வாங்கிய தெலுங்கு பார்ப்பனரான நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன்  நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம்.

கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் என்று அழைக்கப்படும்  பெண்ணாத்தூர் சுப்பிரமணிய அய்யர் மேல்நிலைப் பள்ளி. கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது.

மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்த அய்யங்கார், இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. அய்யர், அய்யங்கார்வாள்கள் இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான். ‘வாரியம் அமைத்து விழுங்கவேண்டும்’ என்பது இந்து முன்னணியின் கோரிக்கை. விழுங்கியவர்களை வைத்து வாரியம் அமைக்கலாம் என்பது பாரதிய வித்யா பவனின் கருத்து போலும். படுத்திக்கினு போத்திக்கலாம். போத்திக்கினும் படுத்துக்கலாம் என்ற கதைதான்.

கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன மேல் சாதிக் கும்பல்

சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் நடந்தது என்ன? கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது.

தீட்சிதர்களாகிய தங்களில் ஒருவர்தான் நடராசப் பெருமான் என்றும், எனவே கோயிலும் அதன் சொத்துகளும் தங்கள் ஆன்மீக உரிமை என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள். சு.சாமியும் இந்து முன்னணிக் கும்பலும் தீட்சிதர்களுக்கு ஆதரவு. சிதம்பரம் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம், எத்தனை மனைகள், கட்டிடங்கள் இருந்தன, தீட்சிதர்கள் தின்றது போக இன்று மிச்சம் என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறது என்ற உண்மைகளைக் கண்டுபிடிப்பது, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதை விடக் கடினமானது.

கோயில், மடங்களின் பேரில் இருந்த சொத்துகளை பார்ப்பன, ஆதிக்க சாதிக் கும்பல் தின்று கொழுத்ததை முடிவுக்குக் கொண்டுவர சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927ஆம் வருடத்தில் இந்துமத தர்மபரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள். அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். 1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்),  உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு  ஜில்லாவில்  ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அறநிலையத்துறை இருக்கிறது. சொத்துகள்தான் இல்லை. மிகவும் அரிதாக சில அதிகாரிகள் இப்படிக் களவு போன கோயில் சொத்துகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள். ஒரு கபாலீசுவரர் கோயில் சொத்து விவகாரம் அரைகுறையாக வெளியே வந்திருக்கும்போதே, கொள்ளையின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிகிறது. பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் 1951-இல் இருந்த பெரிய மடங்கள் 184. பெரிய கோவில்கள் 12,232. இவற்றிற்கு சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. பிரிக்கப்பட்ட பின் இவை 6 லட்சம் ஏக்கர்களாகின. அந்த நிலங்கள் மற்றும் சொத்துகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரத்தை அறநிலையத்துறை வெளியிட வேண்டும். அந்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடைமையாக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் விழுங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்கள் பல ஆயிரம் ஏக்கர் இருக்கும். அந்தக் கோயில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றில் வீடற்ற ஏழைகளைக் குடியேற்ற வேண்டும்.

தமது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை  அனைத்தையும் தீர்த்துக் கொள்ளவும், ஊர் சொத்தைக் கொள்ளையடிக்கவும், கடவுளின் பெயரைக் கவசமாகப் பயன்படுத்திய கயவர்களின் வாரிசுதான் இந்து முன்னணி முதலான அமைப்புகள். “மயிலாப்பூர் கிளப்பையும் பாரதிய வித்யா பவனையும் இடித்துவிட்டு, கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்போம்” என்று ஒருவேளை அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் இரவோடு இரவாக கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள். கபாலிக்குக் கோயில் சொந்தம் என்று நிரூபித்த பின்னர்தானே, கோயிலுக்கு கிளப் சொந்தம் என்று பேசவே முடியும்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

இந்தோனேசியா : அறுந்த செருப்புக்காக ஐந்து ஆண்டு சிறை தண்டனை!

1

ந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.

14 மாதங்களுக்கு முன்பு, நவம்பர் 2010-இல், இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேஸி மாகாணத் தலைநகர் பாலு நகரைச் சேர்ந்த ஒரு போலீசு அதிகாரியின் ரப்பர் செருப்புகள் காணாமல் போயின.  தனது செருப்பு திருடு போனதாக வழக்குத் தொடுத்தார், அப்போலீசு அதிகாரி.  இவ்வழக்கை விசாரித்து வந்த பாலு நகர நீதிமன்றம், போலீசாரால் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட “ஏ.ஏ.எல்.” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பள்ளிச் சிறுவனைத் திருடன் என்று தீர்ப்பளித்தது.  திருடு போனதாகக் கூறப்படுவது நூறு ரூபாய்கூடப் பெறாத பழைய செருப்புதான் என்றாலும், இக்குற்றத்திற்கு நீதிமன்றம் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனை ஐந்தாண்டு சிறைவாசமாகும்.

ஒரு ஜோடி தேய்ந்து போன ரப்பர் செருப்புகள் காணாமல் போன 'குற்றத்திற்காக'ப் பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருக்கிறது, இந்தோனேஷிய நீதிமன்றம்
போலீசாரால் அநியாயமாகத் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனை விடுதலை செய்யக்கோரி, போலீசு நிலைய வாயில்களில் தேய்ந்து போன ரப்பர் செருப்புகளை குவிக்கிறார்கள்

இத்திருட்டு வழக்கை போலீசார் புனைந்த விதமும், அதனை நீதிமன்றம் விசாரித்த விதமும் ஒருபுறம் கேலிக்குரியதாகவும் இன்னொருபுறம் அதிகார வர்க்கக் கும்பலின் எதேச்சதிகாரப் போக்கையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.  தனது செருப்பு காணாமல் போனவுடனேயே, அப்போலீசு அதிகாரி திருட்டு வழக்கைத் தொடுக்கவில்லை.  செருப்பு காணாமல் போய் ஆறு மாதங்கள் கழித்து, தனது செருப்பைத் திருடியதாக ஒரு பள்ளிச் சிறுவனைத் திடீரெனப் பிடித்துக் கொண்ட அப்போலீசு அதிகாரி, அச்சிறுவனை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் மிருகத்தனமாகத் தாக்கினார்.  அச்சிறுவனின் பெற்றோர் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக புகார் கொடுத்தவுடனே, அச்சிறுவனின் மீது போலீசாரால் திருட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, போலீசார் தங்கள் குற்றத்தை மூடிமறைக்கப் பாதிக்கப்பட்ட சிறுவனையே குற்றவாளியாக்கினார்கள்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தவுடனேயே, அச்சிறுவனை விடுதலை செய்யக் கோரி இந்தோனேஷியாவெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் தொடங்கின.  பழைய தேய்ந்து போன, அறுந்து போன ரப்பர் செருப்புகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை அந்நாட்டிலுள்ள போலீசு நிலைய வாயில்களிலும், அரசு வழக்குரைஞர்களின் அலுவலக வாயில்களிலும் கொண்டு வந்து கொட்டிப் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது ஓர் இயக்கமாகவே மாறியது.  பள்ளி மாணவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, ஷூக்களுக்குப் பதிலாக, அறுந்து போன ரப்பர் செருப்புகளை அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்கள்.

இத்திருட்டு வழக்கு பாலு நகர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபொழுது, சிறுவன் திருடியதாகக் கூறப்பட்ட ரப்பர் செருப்புகள், முக்கிய சாட்சியமாக நீதிபதியின் முன் வைக்கப்பட்டன.  ஆனால், செருப்பைப் பறிகொடுத்த போலீசு அதிகாரியோ, நீதிமன்றத்தில் காட்டப்பட்ட செருப்புகள் தனது செருப்புகள் அல்ல என அச்சாட்சியத்தை மறுத்தார்.  எனினும், பாலு நகர நீதிமன்றம், போதிய சாட்சியம் எதுவுமின்றியும், பொதுக்கருத்தை மீறியும், அச்சிறுவனைத் திருட்டுக் குற்றவாளியென அதிகாரத்திமிரோடு தீர்ப்பளித்தது.

இலஞ்ச  ஊழல், அதிகாரமுறைகேடுகளில் ஊறித் திளைக்கும் போலீசையும், பொதுச்சொத்துக்களைக் கொள்ளையிடும் முதலாளி வர்க்கத்தையும் தண்டிக்க முன்வராத நீதிமன்றம், காணாமல் போன பழைய செருப்புக்காக, ஒரு பள்ளிச் சிறுவனை ஈவிரக்கமின்றித் தண்டித்திருப்பதால், இத்தீர்ப்புக்கு எதிரான கண்டனங்கள் இந்தோனேசியாவெங்கும் வெடித்து வருகின்றன.

இக்கண்டனங்கள் இந்தோனேஷிய அரசமைப்பின் மீது விழுகின்ற செருப்படியைத் தவிர, வேறென்ன!

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!

26

டந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

சசிகலா கும்பல் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்று சித்தரிக்கும் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இதற்கு ஜெயலலிதா மக்களிடம் விளக்கம் தர வேண்டும் என்று கோருகிறார். திருவாளர் ராமகிருஷ்ணன் சித்தரிப்பது போல, இது அ.தி.மு.க.வின் அற்பமான உட்கட்சி விவகாரமல்ல. இது ஆட்சியதிகாரம் சம்பந்தப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமி கும்பலைக் கொண்டு அரசு எந்திரத்தை ஜெயலலிதா ஆட்டிப்படைத்த விவகாரம்.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்கட்சியில் யாரை அமைச்சராக்குவது, யாரை நீக்குவது என்பது மட்டுமின்றி, எந்தெந்த போலீசு மற்றும் அரசு அதிகாரிகளை எங்கே, எந்தத் துறையில் நியமனம் செய்வது, இடமாற்றம்  செய்வது  என அனைத்தையும் செயல்படுத்துவது வரை, ஜெயலலிதாவின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக அவரது பினாமியாக சசிகலா கும்பல் இயங்கி வந்தது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக, யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத அதிகாரமாக இருந்த ஜெயாவின் பினாமியான இந்த கும்பலே ஆட்சியை நடந்தி வந்தது.

ஜெயலலிதா-சசிகலா
ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையில் ஊறித்திளைக்கும் ஜெயலலிதாவின் பினாமி சசிகலாவும் பினாமியின் எஜமானி ஜெயலலிதாவும்

ஜெயாவுக்காக இக்கும்பலிடம் கப்பம் கட்டி கடாட்சம் பெற்றதால்தான் அமைச்சர்களாகவும் அரசின் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாகவும் நியமனம் பெற முடியும். அதிகார போதையிலும், ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையிலும், இலஞ்ச  ஊழல், சொத்து சுகத்திலும் மூழ்கிக்கிடந்த ஜெயா, தன்சார்பாக இக்கும்பல் மூலம் நிர்வாகத்தை நடத்தி வந்தார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், பெருமுதலாளிகளிடம் பேரம் நடத்துவதும், கோடிகோடியாகக் கொள்ளையடிப்பதும், கொள்ளையடித்த சொத்துக்களை தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஜெயாவின் பினாமி சொத்தாகப் பதுக்கிவைப்பதுமாக அனைத்தையும் சசிகலா கும்பல்தான் கவனித்துக் கொண்டது. இத்திருப்பணியின் மூலம் இக்கும்பல் தனது பங்குக்கும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டது.

இவையெல்லாம் ஜெயாவுக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அனைத்தும் தெரிந்தேதான், அவரது ஒப்புதலுடன்  உத்தரவுப்படிதான் நடந்துள்ளது. “உடன்பிறவா சகோதரி’’, “தியாகி” என்றெல்லாம் புகழ்ந்து சசிகலா கும்பலை வளர்த்துவிட்டதே ஜெயலலிதாதான். பதவியேற்பின்போது சட்டவிரோதமாக சட்டமன்றத்திலேயே துணை அவைத்தலைவர் இருக்கையில் சசிகலாவை அவர் அமர்த்திக் கொண்டார். சசிகலாவை அ.தி.மு.க.வினர்  “சின்னம்மா” என்று அழைக்குமளவுக்கு போயசு தோட்ட மாளிகையில் மட்டுமின்றி, கட்சிக் கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், மகாமகத்தில் குளிக்கும்போதும் அவர் சசிகலாவை அருகிலேயே வைத்துக் கொண்டு அவருக்கு உயர் அதிகார முக்கியத்துவம் அளித்தார். சின்னம்மா சொன்னால் காரியம் நடக்கும், ஜெயலலிதாவின் மறுஅவதாரம்தான் சசிகலா என்பதாகியது. தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளை சசிகலா கும்பலைச் சேர்ந்த ராவணன், ராமச்சந்திரன் முதலானோர்தான் நடத்தினர். இறுதியில், உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தமாகும்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதுபோல ஜெயா போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தார்.

நேற்றுவரை கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடி பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பன ஊடகங்கள் இப்போது சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்றியதும், இதுநாள்வரை ஜெயா ஆட்சியில் மன்னார்குடி மாஃபியா எனப்படும் சசி குடும்பத்தின் நிர்வாகத் தலையீடு இருந்ததாக எழுதுகின்றன. அவ்வாறு தலையீடு செய்ய அதிகாரமளித்தது யார்? யார் அந்தக் கும்பலை ஊட்டி வளர்த்தார்கள்? எப்படி இந்தக் கும்பலால் ஆட்டம் போட முடிந்தது? என்ற விவகாரத்திற்குள் இவை நுழைவதில்லை. இந்த பினாமி கும்பலின் எஜமானிதான் ஜெயா. இப்படி, தானே சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமியாக சசிகலா கும்பலை வளர்த்துவிட்டு, இப்போது எதுவும் தெரியாதது போல ஜெயலலிதா நாடகமாடுகிறார். இத்தனை காலமும் தனது பினாமி கும்பலைக் கொண்டு ஆட்சியை நடத்திவந்துள்ள ஜெயா, முதல்வர் பதவியில் நீடிக்க அருகதையில்லை என்று இந்த ஊடகங்கள் சாடுவதில்லை. சசிகலா கும்பலை உருவாக்கி வளர்த்துவிட்ட குற்றவாளியான ஜெயாவை எதிர்த்து வாய்திறப்பதுமில்லை.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்அதற்கு மாறாக, 25 ஆண்டு காலம் தன்னுடன் இருந்த தோழியைப் பிரிவதால், உணர்வு ரீதியான கொந்தளிப்புகள் இருந்தாலும், அதனைச் சகித்துக் கொண்டு தமிழக மக்களின் நலனையே அவர் முன்னிறுத்திப் பாடுபடுகிறார் என்று ஜெயலலிதாவை மாபெரும் தியாகியைப் போலச் சித்தரிக்கின்றன.  சசிகலா கும்பலின் ஊழலும் கொள்ளையும் பற்றி ஜெயலிலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றும்,  நம்பிக்கைத் துரோகத்துக்காக சசிகலா கும்பல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும், கோடிகோடியாகக் கொள்ளையடித்து அதை சசிகலா கும்பல் மட்டுமே தூக்கிக் கொண்டு ஓடியது போலவும் கதையளக்கின்றன.  இக்கும்பலை வளர்த்து ஆதாயமடைந்துள்ள முதன்மைக் குற்றவாளியான ஜெயாவை இக்குற்றங்களிலிருந்து விடுவித்து, அவரைப் புனிதமானவராகக் காட்டி ஒளிவட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஊடகங்கள் சித்தரிப்பது போல, ஜெயாவுடனிருந்து கொண்டு நைச்சியமாக அவருக்குத் தெரியாமல், அவரை ஏமாற்றிவிட்டு இந்தக் கும்பல் ஊழல் கொள்ளையில் ஈடுபடவில்லை. பினாமி என்ற முறையில் ஜெயாவால் நியமிக்கப்பட்டு, அவரது ஆசியுடன் ஒப்பதலுடன்தான் அது ஊழல்  ‘கொள்ளை’   அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது.

கீழ்நிலை ஊழியர்களைக் கொண்டு அரசு அதிகாரிகளும் போலீசு அதிகாரிகளும் இலஞ்ச ஊழலில் ஊறித் திளைப்பதைப் போலத்தான், ஜெயலலிதாவும் தனது பினாமியான சசிகலா கும்பல் மூலம் ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். பங்கு போடுவதில் பிரச்சினை வரும்போதும் அல்லது அம்பலப்படும்போதும் தான் குற்றவாளி அல்ல என்று கீழ்நிலை ஊழியரை உயரதிகாரிகள் பலிகிடாவாக்குவதைப் போலத்தான், பங்கு போடுவதில் பிரச்சினை வந்ததும், தன்னை அப்பாவியாகக் காட்டிக்கொண்டு, பினாமி பணத்தையும் சொத்தையும் மீட்பதற்காகவும், பழிவாங்கவும் போலீசையும் உளவுத்துறையையும் ஜெயலலிதா ஏவிவிடுகிறார்.

இதுநாள்வரை சசிகலா கும்பல் மூலம் பலன்களைப் பங்கு போட்டுக் கொண்ட ஜெயலலிதா,  சசிகலா கும்பலை வெளியேற்றியதும் இப்போது தன்னையே நீதிபதியாகவும் விசாரணை அதிகாரியாகவும் நியமித்துக் கொண்டு நில அபகரிப்பு, நிதிமோசடி முதலான குற்றங்களில் ஈடுபட்டதாக சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மீது போலீசை ஏவி நடவடிக்கை எடுக்கக் கிளம்பியுள்ளார். ஆனால், கோடநாடு எஸ்டேட் போன்றவற்றில் ஜெயாவும் சசிலாவும் வெளிப்படையாகவே பங்குதாரர்களாக இருப்பதுபோல,   இத்தகைய எல்லா குற்றங்களிலும் ஜெயாவுக்கும் பங்கு உள்ளது. முன்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது, ஜெயாவின் போயசுத் தோட்டப் புதையலைக் கைப்பற்றுவதற்காக போதை மருந்து வழக்கு போடப்பட்டதைப் போலவே,  இப்போது இம்மாதிரியான காரியங்களுக்குச்  சட்டவிரோதமாக போலீசும் உளவுத்துறையும் ஜெயாவினால் ஏவிவிடப்படுகிறது.

இப்படி போலீசை சட்டவிரோதமாக ஜெயா பயன்படுத்துவதைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள்  ஏன் கேள்வி எழுப்புவதில்லை? அண்ணா ஹசாரேவின் பின்னால் ஊழலை ஒழிக்க அணிதிரளச் சொல்லும் ‘அறிஞர்’களுக்கும் ஊடகங்களுக்கும், ஜெயாவின் பினாமி அதிகாரமாக இயங்கிய சசிகலா கும்பலும், அக்கும்பலை ஊட்டி வளர்த்து இலஞ்ச ஊழல்அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளி ஜெயாவும்  கண்ணில் படாமல் போனது ஏன்?  இது சட்டவிரோதமானது என்று ஏன் இந்த ‘அறிவாளி’களுக்குத் தெரிவதில்லை?

அதிகாரத் தரகரான நீரா ராடியாவும் தரகுப் பெருமுதலாளி டாடாவும் ஆ.ராசாவைத் தொலைத்தொடர்பு அமைச்சராக்க “லாபி” செய்ததையும், அமைச்சர்களின் நியமனம் மற்றும் அமைச்சரவையின் உருவாக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளும் அதிகாரத் தரகர்களும் நேரடியாகத் தலையிடுவதையும் ராடியா டேப்புகள் அம்பலப்படுத்திக் காட்டின. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக இவர்கள் செயல்பட்டதைச் சாடியும், அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்றும் அப்போது பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.வும் சோவும், அதேபோன்று சட்டத்துக்குப் புறம்பான தனது பினாமி கும்பலை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திய ஜெயாவைப் பற்றி வாய்திறப்பதில்லை.

பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, ஒருவேளை பதவியிழக்க வேண்டியிருந்தாலோ, அல்லது சிறைக்கு அனுப்பப்பட்டாலோ, ஆட்சியில் நீடிப்பதற்காகத் தனது விசுவாசியும் ஏற்கெனவே வாஜ்பேயி அரசில் சட்ட அமைச்சராக இருந்தவருமான தம்பிதுரையைத் தற்காலிக முதல்வராக்குவது என்கிற திட்டம் ஜெயாவிடம் இருந்தது. மறுபுறம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டால், கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தமது விசுவாசிகளில் ஒருவரை முதல்வராக்க  சசிகலாவும், அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சதியாலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

ராஜகுரு ராமஸ்வாமி அய்யரிடம் ஆசி
ராஜகுரு ராமஸ்வாமி அய்யரிடம் ஆசி

சு.சாமி, துக்ளக் சோ, மறைந்த முன்னாள் அரசுத் தலைவர் வெங்கட்ராமன் முதலானோரைக் கொண்ட பார்ப்பன கும்பல், சசிகலா கும்பலிடமிருந்து ஜெயாவை மீட்க அக்கும்பலுடன் ஏற்கெனவே நீண்டகாலமாக அதிகாரச் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. சசிகலா கும்பலின் சதியாலோசனை பற்றி உளவுத்துறை மூலம் ஜெயாவின் கவனத்துக்கு வந்ததாலும், மகாமகப் படுகொலை காலத்திலிருந்தே பினாமி அதிகாரத்துக்காக சசிகலா கும்பலுடன் போட்டி போட்டு வந்த பார்ப்பன கும்பல் இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயாவை எச்சரித்ததாலும், சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்ற வேண்டியதாயிற்று. சசிகலா கும்பலுக்குப் பதிலாக, இப்போது அந்த இடத்துக்கு வந்துள்ள பார்ப்பன கும்பல் வேகமாகக் காய்களை நகர்த்தவும் தொடங்கி விட்டது. தன்னை வெளியிலிருந்து பார்த்து விமர்சிப்பவராகக் காட்டிக் கொள்ளும் சோ, கடந்த ஜனவரி 14 அன்று நடந்த துக்ளக் வார இதழின் 42வது ஆண்டுவிழாக் கூட்டத்துக்கு இந்துவெறி பயங்கரவாத மோடியையும் அத்வானியையும் அழைத்துவந்து ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார்.

சசிகலா நீக்கத்துக்குப் பிறகு, மயக்கத்திலிருந்து ஜெயா தெளிந்துவிட்டார் என்றும்,  கட்சியையும் ஆட்சியையும் புதிய பாதையில் செலுத்த நிர்வாகத்திறன்மிக்க ஜெயலலிதா புறப்பட்டுவிட்டார் என்றும் அதிகாரச் சூதாட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பார்ப்பன கும்பலின் ஊடகங்கள் ஜெயாவுக்குப் புகழாரம் சூட்டி வருகின்றன. ஆனால், போலீசை ஏவி அச்சுறுத்துவதைத் தவிர, நிர்வாகத் திறனற்ற ஜெயலலிதாவுக்கு இத்தகைய பினாமி கும்பல்களின் கொட்டத்தை கட்டுப்படுத்தவும் தெரியாது; ருசி கண்ட பூனையாக உள்ள இத்தகைய கும்பல்களைக் கட்டுப்படுத்திவிடவும் முடியாது. ஜெயலலிதாவின் பினாமியான சசிகலா கும்பல் மீதும், அப்பினாமி கும்பலைக் கொண்டு ஊழல்கொள்ளையில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் மீதும் பகிரங்கமாக முழுமையான விசாரணை நடத்தி, அக்கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்கள் தமது போராட்டத்தின் மூலம் குற்றவாளியான ஜெயாவைத் தண்டிப்பதுதான், இத்தகைய பினாமி கும்பல்களையும் அதன் மூலம் ஊழல் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களையும் முடமாக்கும்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

29

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

 

பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

அழைப்பிதழை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
பெண்கள் விடுதலை முன்னணி.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!

74

’மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.

இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையினரின் நோக்கும் கூட. ‘அவர் வெளியத் தெரியாம பல ஏழைப் பிள்ளைங்களைப் படிக்க வெச்சுகிட்டிருக்காரு’ என சிலரைப் பற்றி சொல்வதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘ஏழைப்பசங்க படிக்க கஷ்டப்படுறாங்க. இவர் ஹெல்ப் பண்றாரு.. இதுல என்ன தப்பு இருக்கு?’ என்பதாகவே தோன்றும். ஆனால் அது அப்படி அல்ல.

சமூக நீதியை அழித்து சமமின்மையை ஒரு அறமாக முன் வைக்கும் சமகால கல்விக்கொள்ளைக்கு முட்டுக்கொடுக்கும் செயல் இது. உரிமையாய் பெற வேண்டிய கல்வியை பிச்சையாய் மாற்றும் அயோக்கியதனம். பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைமையை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி நிறுவன முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் செயல். சசிக்குமார் தெரிந்தோ, தெரியாமலோ அந்த தரகு வேலையைதான் பார்த்திருக்கிறார்.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!இந்த தரகர் வேலையை சில வருடங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த பெருமையுடன் செய்து வருகிறார் நடிகர் சூர்யா. தனது ’அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். (அகரம் மூலம் கல்விக்கு செலவழிக்கும் தொகையை விட அதற்கான விளம்பரத்திற்கு செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது). இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல. இங்கு அகரம், ஒரு புரவலராக செயல்படுகிறது.

அரண்மனை உப்பரிகையில் இருந்து மன்னர்கள் அள்ளி வீசும் சில்லறை காசுகளால் ஏழைகளின் வயிறு ஒருபோதும் நிறைவதில்லை. மேலும், மன்னர்கள் காசை அள்ளிவீசுவதன் நோக்கம் ஏழைகளின் பசியைப் போக்குவதும் அல்ல. அது அவர்களது அந்தஸ்தின் ஸ்திரத்தன்மையை உலகுக்கும், தனக்குமேக் கூட காட்டிக்கொள்வதற்கான ஏற்பாடு.  இந்த நடிகர்களின் கூத்தும் அந்தக் கதைதான். ஆனால் இதில் நடிகர்களுக்கு சில கூடுதல் அனுகூலங்கள் உண்டு.

’வருமான வரி விலக்கு, கறுப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு’ இதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே. முக்கியமானது இந்த ‘வள்ளல்’ தன்மையால் இவர்களுக்கு வந்து சேரும் இமேஜ். போட்டி மிகுந்த திரைப்படத் துறையின் வியாபாரத்திற்கு இந்த இமேஜ் ஒருவித தனித்தன்மையைக் கொடுக்கிறது. அதன்பிறகு ‘நீயா நானா?’ போன்ற கைப்புள்ள ஸ்டைலில் தமிழகத்தில் ‘அறிவை’க் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியின் விருந்தினர் நாற்காலியை அலங்கரிக்கலாம். ஊடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கலாம்.

இப்படி சில மாணவர்களுக்கு பணம் கட்டிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்புக்கான பணத்தைக் கட்டி படிக்க முடியாமல் அல்லாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ‘உண்டியல்’ ஏந்தி பணம் வசூல் செய்து தந்துவிட முடியுமா? எத்தனை தலைமுறைக்கு, எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு அப்படி செய்ய முடியும்? பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான, ஜனநாயகப்பூர்வமான வழி என்ன?

மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. மாறாக நடைமுறையில் கல்வி காசாக்கப்பட்டு, மிக்ஸியும், கிரைண்டரும், (தேர்தல் சமயத்தில்) குவாட்டருமே இலவசமாக வழங்கப்படுகின்றது. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.

இயக்குநர் சசிக்குமார், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த அநீதியான கல்விக்கொள்ளைக் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அவர்களின் நட்சத்திர இமேஜ் காரணமாக அது கூடுதலாக கவனம் பெறுமே?! ஆனால் அவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். பேசாததால்தான் அவர்கள் நட்சத்திரங்களாகவும் இருக்கின்றனர். அதனால்தான் உண்மையில் மங்கிய இந்த நட்சத்திரங்கள் சினிமா லைட்டிங்கால் பிராகசிக்கும் போலி நட்சத்திரங்களாக ஊரை மயக்குகின்றன.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!கல்வி என்பது இன்று என்னவாக இருக்கிறது? பணம் இருந்தால் மட்டுமே தரமான பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும். ‘தரமான பள்ளி’ என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நம் மனங்களில் தனியார் பள்ளிகளின் சித்திரம்தான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு கையில் காசு இல்லை. என்ன செய்வது? படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் தனது மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் படிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறது. தங்கள் வாழ்க்கையை அடகு வைத்தால்தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் என்பது கண்கூடான யதார்த்தம். இந்த நிலைமை உண்மை என்கிற அதே சமயம் இது நியாயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனாலும் எல்லோரும் தனது அடுத்தத் தலைமுறையையேனும் மேலும் ஒரு படி அதிக வசதியுள்ள வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிரமங்களை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்தான் எல்.கே.ஜி.க்கு 40 ஆயிரம் என்ஜினீயரிங்குக்கு 20 லட்சம் என கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொட்டுகின்றனர்.

’வேற என்ன சார் பண்றது? பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தரணும்ல.. நாம காசு, பணம்தான் சேர்த்து வைக்கலை. நல்லப் படிப்பைக் கொடுத்துட்டா அதுங்க பொழைச்சுக்கும்ல…’ என்பது பொதுவான பெற்றோர் எதிர்வினை. இச்சொற்களில் இருக்கும் ’பாசம், அக்கறை’ என்பனவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ‘சுயநலம்’ என்ற சொல் கிடைக்கக்கூடும். தனது சக்திக்கு மீறி அதிக முதலீடு போட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது பதற்றமடைகிறது. ஏனெனில் இன்றைய பெற்றோர்கள் வெறும் பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முதலீட்டாளர்களும் கூட. இந்த சொற்பிரயோகத்தில் கொஞ்சம் கடின தொனி இருக்கலாம். ஆனால் உண்மை அதுதானே?! ஊரைச்சுற்றி கொடுநோய் சூழ்ந்திருக்கும்போது தான் மட்டும் பாதுகாப்பாய் கரையேறிவிடலாம் என்பது சுயநலம் மிகுந்த மூட நம்பிக்கை.

ஒரு சூறையாடலைப் போல தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக்கொள்ளை நம்மை சூழ்ந்திருக்கிறது. முனியாண்டி விலாஸ் கணக்காக ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துகிடக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியின் நில மதிப்பு, கட்டட மதிப்பு எல்லாவற்றையும் தோராயமாக கணக்கிட்டாலே கோடிகளில் வரும். எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? நடுத்தர வர்க்கம் தனது ரத்தம் சுண்ட உழைத்துக் கொடுத்த பணம். ஏழைப் பெற்றோர்கள் கூலி வேலை செய்து கொடுத்தப் பணம். திருப்பூரில் பனியன் ஃபேக்டரியிலும், வளைகுடா நாடுகளின் தொழிற்சாலைகளிலும் உதிரம் வற்ற உழைத்த காசு. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியின் செங்கல்லிலும் பெற்றோர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. அதே நேரம் லஞ்சத்தில் பெருத்த அதிகார வர்க்க பெருச்சாளிகளும், பங்குச் சந்தை சூதாட்டத்தில் ‘சம்பாதித்த’ பணக்காரர்களும் தகுதியே இல்லாத தமது வாரிசுகளுக்கு பல இலட்சங்களை தூக்கி எறிந்து கல்வியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படித்தான் நமது கல்வி முதலாளிகள் கல்லா கட்டுகின்றனர்.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக இயக்குநர் சசிகுமார்!
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

ஒரு தொழில் செய்பவன், அதற்கான நியாயமான லாபத்தை எதிர்பார்ப்பதும், பெறுவதும் சரியானதே. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த நியாயமுமின்றி லாபவெறி எடுத்து அலைகின்றன. ஒரு Vampire-ஐ போல அவர்களின் மனம், பணம் தேடி அலைகிறது. இந்த மனநிலை நிறுவனங்களோடு நிற்கவில்லை. மக்களின் மனங்களுக்கும் இந்த ‘லாபவெறி’ மடை மாற்றப்பட்டிருக்கிறது.

அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ‘கல்விக்கொள்ளை’ என்பது அநியாய லாபமாக தோன்றவில்லை. ‘முதல் போடுறவன் லாபம் பார்க்கத்தானே செய்வான்..’ என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்து. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அநியாய லாபத்தின் மொத்த குறியீடாக சினிமா இருக்கிறது. இதில் சசிக்குமாரும், சூர்யாவும் ‘கல்வி வள்ளல்களாக’ அருள் பாலிக்கின்றனர்.

சசிக்குமாரின் ‘மாணவர் மறுமலர்ச்சித் திட்டம்’ குறித்த பத்திரிகை செய்திக் குறிப்பில் சில வி.ஐ.பி.களும் கருத்து சொல்லியிருக்கின்றனர். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் விதார்த், சில அரசு அதிகாரிகள் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், ‘தாமரை’ ஆசிரியருமான சி.மகேந்திரனின் கருத்தும் அதில் உண்டு. அவர், ” வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட  கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.’’ என்று சொல்லியிருக்கிறார். நடிகர் விதார்த்தின் கருத்துடன் ஒத்துப் போகும் அளவுக்கு ‘முன்னேறியிருகிறது’  இந்திய கம்யுனிஸ்ட் கட்சி.

ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவரே இந்த கல்விப் பிச்சை மேனியாவில் மனதைப் பறிகொடுத்திருக்கும் போது புயலுக்கு கரை ஒதுங்குவது போல இமேஜுக்குகாக ‘சமூகப் பணிகளில்’ இறங்கும் இயக்குநர் சசிகுமார் போன்றோர் அடித்து செல்லப்படுவது ஆச்சரியமல்லவே!

– வளவன்.

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!

9

“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.

இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.

பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை. அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.

ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.

பிள்ளை-வளர்ப்புஉலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.

கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.

ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.

இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.

கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.

ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.

முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.

தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.

உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.

ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.

குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.

இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.

”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.

ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது

பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.

மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.

ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”

“குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”

இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?

-துரை. சண்முகம், புதிய கலாச்சாரம் மே,2001

டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!

2

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

வெள்ளம், வறட்சி, அதிவேகப் புயல், கடுங்குளிர், நோய்கள் அதிகரித்தல்  எனப் பல கேடுகளும் மனிதகுலப் பேரழிவுகளும் பெருகுவதற்குப் புவி வெப்பமடைதலே முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.

மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.
மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.

2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்க வேண்டும்; 2012க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்குக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்  என கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம்   பெயரளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியோட்டோ ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் பின்னணியில்,  இதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்வைக்கும் நோக்கில் டர்பன் மாநாடு கடந்த ஆண்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை 13 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் இறுதியாக்கப்பட்ட “மேம்பட்ட செயல்பாடுகளுக்கான டர்பன் மேடை” என்று அழைக்கப்படும்  ஒப்பந்தம், கியோட்டோ மாநாட்டின் பெயரளவிலான கட்டுப்பாடுகளுக்கும்  சமாதி கட்டியுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தத்தில்  ஏகாதிபத்தியங்கள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.  அவற்றை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முன்வரவில்லை என்றாலும், இந்த விதிகள் ஏட்டளவிலாவது இருந்து வந்தன. தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்காவும், பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழை நாடும் ஒன்றுதான் என்றும், 194 உறுப்பு நாடுகளும் பசுமைவாயு வெளியேற்றம் பற்றிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றும் தற்போதைய ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும் பொதுமைப்படுத்த முயற்சிக்கிறது. இதனால்தான், கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அமெரிக்கா, டர்பன் மாநாட்டு முடிவுகளை வரவேற்றுள்ளது.

ஏழை நாடுகளும் வளரும் நாடுகளும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று காரணம் காட்டி, ஏகாதிபத்திய நாடுகள் நாங்களும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நியாயவாதம் பேசவும்,  மொத்தத்தில் எவ்வித வரைமுறையின்றி பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றிவிட்டு, புவி வெப்பமடைதலுக்கு  நாங்கள் மட்டும் பொறுப்பல்ல என்று ஏழை நாடுகளையும் குற்றவாளியாக்கிப் பழியைப்போடும்  ஏகாதிபத்தியங்களின் திட்டத்திற்கு ஏற்பவே இந்த மாநாடு  நடந்துள்ளது. இதற்காக எல்லா ஏழை நாடுகளையும் ஒருங்கிணைத்து விவாதிக்கச் சொல்லி  இம்முடிவை ஏற்க வைக்கும் தரகனாக ஐ.நா.மன்றம் செயல்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றின் கூட்டாளியாகவும் வட்டார மேலாதிக்க வல்லரசாகவும் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள்  எனப் பொதுவில் உலக நாடுகள் மூன்று வகையாக உள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா முதலான நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் ஏழை நாடுகளை விடத் தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள். ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே இந்நாடுகளிலும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவும் நுகர்வுக்காகவும் இத்தகைய நாடுகளில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில்  ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளோ சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ இலாபவெறி கொண்ட உற்பத்தியைக் கொண்டவை. அதே பாதையைப் பின்பற்றும் இந்நாடுகள், இதனை ‘வளர்ச்சிக்கான பாதை’ என்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை நாசமாக்கிப் பேரழிவுகளை விளைவித்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்ப்பதுமில்லை. ஏகாதிபத்தியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுப்பதுமில்லை.

இந்தியா போன்ற ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் ஆளும் வர்க்கமான தரகுப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவதோடு, விரிவடையவும் முயற்சிக்கின்றனர். மறுபுறம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்பதால், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்தான் இந்திய அரசின் நலனாக உள்ளது. இதற்கேற்ப மற்ற ஏழை நாடுகளைத் தம் பின்னே திரட்டிக் கொண்டும் தம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை இந்தியா எதிர்க்கிறது. இதற்காகவே வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடாலடிக்கிறது.

“எங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பணயம் வைக்கச் சொல்கிறீர்களா? எங்களைப் பிணைக்கைதியாக்காதீர்கள்” என்று டர்பன் மாநாட்டில்  இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆவேசமாகப் பேசியதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இப்படியெல்லாம் சவடால் அடித்த அவர், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமிடையிலான வேறுபாட்டை மறைத்துச் சுற்றுச்சூழல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமானதே என்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் திட்டத்தை ஏற்க மறுப்பது போல முறுக்கிக் கொண்ட அவர்,  பின்னர் எப்படியாவது மாநாட்டை வெற்றிபெறச் செய்ய சமரசம் காண்பது என்ற பெயரில், ஏகாதிபத்தியங்கள் முன்வைத்த துரோகத் திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஏழை நாடுகள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் முதலானவற்றில் முதலீடு செய்து ஆலைகளைத் தொடங்கி அவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் ஏகாதிபத்தியங்கள், அந்த ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஆலை அமைந்துள்ள நாடும் மக்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியங்களின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா, சீனா, பிரேசில் முதலான  நாடுகள் ஒருபுறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடித்துக்கொண்டும், மறுபுறம் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு ஏற்பச்  சமரசமாகச் சென்று துரோகமிழைத்தும் வருகின்றன. இந்த உண்மையை டர்பன் மாநாடு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

சுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு  இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட  ஏகாதிபத்திய உற்பத்திமுறை எனும் பேரழிவுப்பாதையே முதன்மைக் காரணம். சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவரும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களை மட்டுமின்றி, அவற்றின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க, அனைத்துலக மக்களும் அணிதிரண்டு போராடுவதே இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கு எதிரான, மக்கள் நலனையும் சுயசார்பையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய உற்பத்திமுறையை நிறுவி வளர்க்காத வரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்தியங்கள் போடும் பழியையும், சுற்றுச்சூழல் பாதிப்பின் கோரமான விளைவுகளையும் தடுத்து நிறுத்தவே முடியாது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

150

கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.

இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.

ஆக, மேம்போக்காக பார்க்கும் போதே இந்த நடவடிக்கைக்கு கூறப்படும் காரணம் உண்மையானதோ, சரியானதோ அல்ல என்பது யாருக்கும் எளிதாக விளங்கும்.

எனில், அற்பமான இந்த பிரச்சனை ஜும்மாவில் பொது அறிவிப்பு கொடுத்து தடை செய்யும் அளவுக்கு போனது ஏன்? அதை அறியவேண்டுமானால் ஆழங்களில் புதைந்திருக்கும் வேர்கள் தோண்டி எடுக்கப்பட்டாக வேண்டும்.

முதலில் அறிமுகப் படலம். தோழர் துராப்ஷா கடையநல்லூர் சிபிஐ (வலது கம்யூனிஸ்ட் கட்சி) யில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். கடவுள் நம்பிக்கையற்றவராக, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்தாலும் சமுதாயத்தினருக்கு உதவிகள் செய்வதிலும், துணை நிற்பதிலும் துடிப்பாக செயல்படுபவர். சிபிஐ-யில் இருக்கும் போதுகூட கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நிர்வாகக் குழுவில் நேர்மையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய சகோதரி தேர்தலில் நின்றபோதும் கூட உறவினர்களையெல்லாம் எதிர்த்து “ஓட்டுப்போடாதே புரட்சி செய்” என்று பிரச்சாரம் செய்தவர்.

சைபுல்லா ஹாஜா கடையநல்லூர் மக்கள் மத்தியில் பல காலமாக மத அறிஞராக மதிக்கப்பட்டவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் நிர்வாக மட்டத்தில் மேலாண்மைக் குழுவில் செயலாற்றியவர். என்றாலும் அவர்மீது தனிப்பட்ட சில விமர்சனங்களும் இசுலாமிய மக்களிடம் இருக்கின்றன. தன் குடும்ப திருமணத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணவில்லை என்று தவ்ஹீத் ஜமாத் வட்டாரத்திலேயே சலசலப்பு எழுந்ததுண்டு. இது குறித்து ஆன்லைன் பிஜேவில் இவரை நிறையவே தாளித்திருக்கிறார்கள். ஆமினா என்ற பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்து, மதுரையில் ஒரு தங்கும் விடுதியில் அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் பரபரப்புடன் பேசப்பட்டது.

முபாரக் பள்ளியுடன் தொடர்புடைய நிலத்தை ஜமாத்தின் பெயரிலோ, பொது அறக்கட்டளையின் பெயரிலோ பதிவு செய்யாமல் தனி ஒருவரின் பெயரில் பதிவு செய்ததாக கடந்த ஆண்டு இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கப்பட்டுவிட, தற்போது கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டி) என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.

தோழர் துராப்ஷாவுக்கும் மேற்கண்ட சைபுல்லா ஹாஜாவுக்கும் இடையே முன்பிருந்தே சிற்சில பிரச்சனைகள் இருந்ததாக தெரிய வருகிறது. முபாரக் பள்ளிக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று நிலத்தில் சிபிஐ பாராளுமன்ற நிதியில் இருந்து பொது நூலகத்திற்கு சொந்த கட்டிடம் எழுப்பும் முயற்சியில் முபாரக் பள்ளிக்கு எதிராக செயல்பட்டது. தொழுகை நேரம் தவிர ஏனைய நேரங்களிலும் (இரவு நேரங்களில் கூட) அன்றாட மதரசா நிகழ்சிகளையும் ஒலிபெருகியை சப்தமாக வைத்து மக்களுக்கு தொல்லை கொடுப்பது இது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளில் மறைமுகமாக பிணக்கு ஏற்பட்டிருந்தாலும் நேரடியாக தலையிடும்படியான சூழலும் நேர்ந்தது.

தோழர் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கிய பிறகு, சைபுல்லா ஹாஜாவின் முபாரக் பள்ளி கமிட்டியின் கீழ் மஸ்ஜிதுல் முபாரக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ சங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இந்த சங்கத்தின் ஆட்டோக்கள் கடைவீதியில் முபாரக் பள்ளிக்கு அருகில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும். முதலில் நிறுத்தப்பட்ட ஆட்டோவுக்கு முதல் சவாரி எனும் அடிப்படையில் செயல்பட்டாலும், குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்டோவை முதலில் நிறுத்தவிடாமல் தடுப்பது, சவாரி அவர்களுக்கு கிடைக்காத வண்ணம் தில்லுமுல்லுகளைச் செய்வது என்று நடந்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட அந்த ஓட்டுனர்கள் இந்த பிரச்சினையை சைபுல்லா ஹாஜாவிடம் கொண்டு சென்ற பின்பும், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் இதனால் பாதிக்கப்பட்ட ஆறு ஆட்டோ ஓட்டுனர்கள், ”நாங்கள் சங்கத்திலிருந்து விலகிக் கொள்கிறோம், உறுப்பினர் சேர்ப்பு கட்டணமாக நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பத் தாருங்கள்” என்று கேட்டபோது சைபுல்லா ஹாஜா, ”பணத்தையும் திரும்பத்தர முடியாது, நீங்கள் தனியாகவும் செயல்படக் கூடாது. மீறி செயல்பட்டால் கடையநல்லூரில் எந்த இடத்திலும் தொழில் செய்ய முடியாமல் செய்து விடுவேன்.” என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த ஆறு ஆட்டோ ஓட்டுனர்களும் தோழர் துராப்ஷாவை அணுகி தங்களுக்கு உதவமுடியுமா எனக் கேட்டுள்ளனர். துராப்ஷாவும் வேறு தோழர்களின் உதவியுடன் அவர்களுக்கு சங்கம் என்றால் என்ன?, உரிமைகளுக்காக போராடுவது, அதனூடான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று செயல்பட்டிருக்கிறார்.

இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது.

இவர்களின் இந்த போட்டி மனப்பான்மைக்கு, ஹஜ்ஜுப் பெருநாளை வெவ்வேறு குழுக்களின் சார்பில் மூன்று தனித்தனி நாட்களில் மூன்று பெருநாளாக கொண்டாடியது, நோன்புப் பெருநாளில் தொழுகை நடத்துவதற்கு ஒரு திடலுக்கு மூன்று குழுக்களும் போட்டி நடத்தி காவல்நிலையம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது என்று கடையநல்லூரிலிருந்தே எடுத்துக்காட்டுகளை கூற முடியும். இது தான் தோழர் துராப்ஷாவுக்கு எதிரான வெள்ளிக்கிழமை அறிவிப்புக்கு அடிப்படையான காரணம். இதைத்தான் இஸ்லாம், ஹராம், ஹலால் என்று திசை திருப்பி மக்களை வெறியேற்றி விட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான பின்னணிப் பிரச்சனைகளெல்லாம் இல்லாமல் இஸ்லத்திற்கு எதிராக கட்டுரை எழுதியது மட்டும் தான் பிரச்சனை என்றால் என்ன செய்திருக்கப்பட வேண்டும்? சம்மந்தப்பட்டவரை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் வெள்ளிக் கிழமை அறிவிப்புக்கு முன்பும் பின்பும் தோழரிடம் யாரும் இது குறித்து விசாரிக்கவோ, விளக்கம் கேட்கவோ இல்லை. தனக்கும் குறிப்பிட்ட அந்த தளத்திற்கும், குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கும் தொடர்பு ஒன்றுமில்லை என்றும், முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள், அதன்பிற்கு நீங்கள் வழங்கும் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன் எனும் தோழரின் கூற்று யார் காதிலும் ஏறவில்லை. மாறாக அவர்களின் செயல்கள் அப்பட்டமாக மேற்கூறப்பட்ட பின்னணிகள் தான் இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.

வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிடும் போது அவர் அதை எப்படி கூறினார்? அந்தக் கட்டுரையை நீங்கள் படித்தால் உணர்ச்சிவசப்பட்டு அவரையும் அந்தக் கடையையும் அடித்து நொறுக்கி விடுவீர்கள் அவ்வளவு கேவலமாக அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படி நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கடையை புறக்கணியுங்கள் என்கிறேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை படியெடுத்து அதன் கீழே நபிமார்களை இவ்வளவு கேவலமாக எழுதியிருக்கும் இவனை என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று எழுதி அதை வீடு வீடாக எடுத்துச் சென்று வினியோகித்திருக்கிறார்கள்.

உண்மையில் தோழர் துராப்ஷவுக்கும் அந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அவர் எழுதியது போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்க விரும்பினார்கள். இது ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டதற்கான எதிர்வினை என்றில்லாமல், திட்டமிட்டு தோழர் மீது மக்களிடம் வெறுப்பை உண்டாக்க வேண்டும், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வது போன்ற தோற்றத்தில் அவர் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியான பின்னர் அந்த அறிவிப்பு பெரிய அளவில் மக்களை  ஈர்க்கவில்லை. சனிக்கிழமை தோழரின் கடையில் ஒப்பீட்டளவில் வியாபாரம் குறைந்திருந்தது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அந்த பாதிப்பு மீண்டுவரத் தொடங்கியது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை நடக்கும் வியாபாரமே நாளின் மொத்த வியாபரத்தையும் தீர்மானிக்கும் எனும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பழையபடி வியாபாரம் மீளத் தொடங்கியிருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.

என்ன தான் ஹலால் பிரச்சனையை தூண்டினாலும் தோழரின் கடையில் கறி வாங்கும் அனைவருக்குமே தெரியும், அங்கு ஹலாலான முறையில் தான் கோழி அறுத்து விற்பனை செய்யப்படுகிறது என்பது. தோழரே முன்னின்று நேரடியாக அறுத்து விற்பனை செய்வதில்லை. நிறுத்துக் கொடுப்பது அதற்கான பணத்தை வாங்குவதை மட்டும் தான் தோழர் செய்துவந்தார். கோழி அறுப்பதற்கும் வெட்டி துண்டுகளாக்குவதற்கும் இஸ்லாமியர் ஒருவரையே வேலைக்கு அமர்த்தியிருந்தார். எனவே அது இஸ்லாமிய முறைப்படி ஹலாலானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். மட்டுமல்லாது வாங்குவதை தவிர்த்தவர்களும் கூட ’எதற்கு வம்பு’ எனும் ஜாக்கிரதை உணர்ச்சியில் தவிர்த்திருப்பார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அந்தக் கடையைத் தவிர பொருளாதார வசதிகளோ வேறு ஆதாரங்களோ இல்லாத தோழர், பள்ளிவாசலில் அறிவித்தவுடன் வாழ்வாதாரத்திற்கே தடை வந்துவிட்டதே என்று கலங்கி தம்மிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டு பணிந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் போலும். அவ்வாறல்லாமல் நிலமை சகஜமாவதை கவனித்த அவர்கள், ஞாயிற்றுக் கிழமை 9 மணிக்கு மேல் கடைக்கு முன் திரளத் தொடங்கினார்கள். ”எங்கள் நபியை கேவலப்படுத்திய உன்னை கடையை நடத்த விடமாட்டோம், கடையை மூடு” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது.

தயாராக கொண்டு வந்திருந்த (கட்டுரை அடங்கிய) பிரசுரத்தையும் கூட்டத்தில் வினியோகித்தனர். அந்தக் கூட்டத்திலேயே ஒருவன் ”வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கடைக்குள் நுழைந்து எதையாவது செய்தால் அது நமக்கு எதிராக திரும்பிவிடும்” என்று கூறியிருக்கிறான். இதிலிருந்து அவர்கள் முன் யோசனையுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே வேறு வழியின்றி தோழர் கடையை அடைத்து விட்டு தொலைபேசியில் தோழர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார். இதற்குள் அவர்களாகவே காவல்துறைக்கு மதத்தை கேவலப்படுத்தி எழுதிய ஒருவரின் கடைக்கு முன்னே மக்கள் திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்க போலீஸ் வந்தது. தோழரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர், தோழரும் தன்னுடய தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார். கடைசியில் புதன் வரை கடையை மூடி வைப்பது என்றும் வியாழனிலிருந்து வழக்கம் போல் கடையை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்பிறகும் அமைதியடையாத சைபுல்லா ஹாஜா குழு, ஞாயிறு மதியத்திற்குப் பிறகு, தோழர் வசிக்கும் வட்டார ஜமாத்திற்கும், மக்கட்டி குடும்பத்தார்களுக்கும் (வட்டார ஜமாத் என்பது வசிக்கும் தெருவை உள்ளடக்கிய அமைப்பு, குடும்பத்தார்கள் என்பது குறிப்பிட்ட குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு) அந்தக் கட்டுரையை அனுப்பி இப்படிப்பட்டவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து கூடிய வட்டார ஜமாத் நாங்கள் முடிவு செய்வதை விட உலமாக்கள் சபைக்கு இதை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் கூறும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

குடும்பத்தார்களோ முபாரக் பள்ளி கமிட்டிக்குச் சென்று நிபந்தனையற்று மன்னிப்பு கூறு இல்லாவிட்டால் குடும்பத்திலிருந்து நீக்கிவைப்போம் என்று தோழரை நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகிறார்கள். இத்தனைக்கும் முபாரக் பள்ளி கமிட்டியிலிருந்து இதுவரை என்ன பிரச்சனை என்றோ, விளக்கம் என்ன என்றோ தோழரிடம் யாரும் விசாரணை செய்யவே இல்லை. தோழரோ தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் அந்த கட்டுரையை எழுதவில்லை, அந்த தளத்தை நடத்துவதும் நானல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அது யாருடைய செவியையும் எட்டவில்லை.

ஆம், பிரச்சனையை அணுகுபவர்களுக்கு அல்லவா, என்ன நடந்தது, எங்கு தவறு என்பன போன்றவையெல்லாம் தேவையாக இருக்கும். இங்கு நடப்பது தோழரை முடக்கி தண்டித்தாக வேண்டும் எனும் முயற்சியல்லவா? அதனால் தான் தங்கள் பலத்தை பயன்படுத்தி, நேர்மையை புறந்தள்ளி தங்களின் திட்டமிட்ட இலக்கை அடைய முயல்கிறார்கள். இவர்கள் தான் இஸ்லாம் நீதியையும் நேர்மையையும் பேணுகிறது என்று மதத்தை போதிக்கும் அறிஞர்களாம், வெட்கக்கேடு.

இதன் பிறகுதான் நிகழ்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மறுநாள் திங்கட்கிழமை மக்கட்டி குடும்பத்தார்கள் கூட்டம் தொடங்கியது, தோழரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். விசாரித்திருக்கிறார்கள் என்பதை விட, ”நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாத பட்சத்தில் குடும்பத்திலிருந்து நீக்கி வைப்போம், எந்த விதத்திலும் எங்களுடைய உதவி உங்களுக்கு கிடைக்காது” என்று மிரட்டியிருக்கிறார்கள் என்பதே சரி.

மட்டுமல்லாது உலமாக்கள் சபை என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்பதையும் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் தவறு நடந்திருக்கிறதா என்பதை ஆராய்வதல்ல, எந்த விதத்திலாவது மன்னிப்பு கேட்கவைத்து, பிரச்சனையை மூடிவிடுவது என்பதாகவே இருக்கிறது. முடிவில் தொடர்ந்த அவர்களின் வற்புறுத்தல்களின் காரணமாக எந்த தவறும் செய்யத நிலையிலும் தோழர் மன்னிப்பு கேட்பதற்கு சம்மதிக்கிறார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை, மெல்ல மெல்ல விசயம் தெரிந்து பலரும் தோழரை தொலைபேசியில் விசாரித்திருக்கிறார்கள். ஊடகவியலாளர் கவின்மலருக்கும் விசயம் தெரிந்து, ஜூனியர் விகடனுக்கும், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் கடையநல்லூரும் சூடேறிக் கொண்டிருந்தது.

மதிய நேர லுஹர் தொழுகைக்குப் பின்னர் தான் கூட்டம் நடக்கவிருக்கிறது என்றாலும் அதற்கு முன்பிருந்தே இளைஞர்கள் பெருமளவில் குழுமத் தொடங்குவார்கள் என்பதால், தொழுகை நேரத்திற்கும் முன்னதாகவே பள்ளிவாசலுக்குள் சென்று உள்ளேயே இருங்கள் வெளியில் வரவேண்டாம் என்று தோழருக்கு அறிவுரை தரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ”நாங்கள் அழைத்த பின்னரே வரவேண்டும்” என்று கூறினார்கள். மன்னிப்பு கேட்பதற்காகத்தான் வருகிறார் என்றாலும் பாதுகாப்புக்காக காவல் துறையை அணுகுவதற்கு அனுமதி கேட்டபோது, “காவல் துறையை அணுகினால், நாங்கள் விலகி விடுகிறோம், நீயே தனியாக சந்தித்துக் கொள்” என்று குடும்பத்தார்கள் மிரட்டியிருக்கிறார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத நிலையிலேயே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார் தோழர். விசாரணை இல்லை. விளக்கம் கூற அனுமதி இல்லை. மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் வேறு எதையும் பேசக்கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்றாலும், பள்ளிவாசலில் நுழைந்ததுமே, அங்கிருந்த மதவெறியேறிய காட்டுமிராண்டிக் கும்பல் தோழரை தாக்கத் தொடங்கியிருக்கிறது. உறவினர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகு தோழரை தனியறையில் தள்ளி அடைத்து தாக்குதல்களை தடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தயாராக கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் தோழரிடம் கையெழுத்து வாங்கி, “இவர் காஃபிர் என அறிவிக்கப்படுகிறார், தாய், மனைவி குழந்தைகள் உட்பட இவரோடு யார் தொடர்பு கொண்டாலும் அவர்களும் காஃபிர்களாக கருதப்படுவார்கள்” என்று அறிவித்து விட்டார்கள். இதன்பிறகு காவல்துறை தோழரை பாதுகாப்பாக வெளியேற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. காவலர்களின் கண் முன்பே காவல்துறை வாகனத்தில் வைத்தும்கூட தாக்கியிருக்கிறார்கள் அந்த மதவெறி பிடித்த மிருகங்கள். “காவல்துறை எங்களை எதுவும் செய்ய முடியாது. என்றிருந்தாலும் உன்னுடைய சாவு எங்கள் கையில் தான்” என்றெல்லாம் அந்த கும்பல் வெறிக் கூச்சலிட்டது.

இதனிடையே ஒருவரை காஃபிர் என ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் மண்டல அரசு காஜிக்கு மட்டுமே உண்டு. ஆனால் தோழருக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா அரசு காஜியினால் கொடுக்கப்படவில்லை. அவருடைய அனுமதியின்றி இவர்களாகவே ஃபத்வா கொடுத்துவிட்டு பின்னர் அரசு காஜியிடம் கையெழுத்துக்காக சென்றிருக்கிறார்கள். அவர் கையெழுத்திடுவதற்கு முதலில் மறுத்திருக்கிறார், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்று சமாதானம் செய்து கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். முதலில் மன்னிப்பு கடிதம் வாங்கி வாருங்கள் பின்னர் பார்க்கலாம் என்று அரசு காஜி கூற, எப்படியோ கடிதம் வாங்கி ஃபத்வாவில் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள்.

இது ரவுடிக் கும்பலின் அட்டகாசம் என்பதிலோ, மதவெறிபிடித்த காட்டுமிராண்டிக் கும்பலின் வெறியாட்டம் என்பதிலோ நேர்மையுடன் பரிசீலிக்கும் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆனால் இதில் இஸ்லாமியர்களின் பார்வை, நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளை இழிவுபடுத்தியவரை நாங்கள் தாக்குவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்? என்பதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் இப்படித்தான் இந்து மதத்தை, இந்துக்கடவுளரை புண்படுத்தி விட்டார்கள் என்று கூறி வருவதோடு எம்.எப்.ஹூசைன் உட்பட பலரை தாக்கியிருக்கிறது. நாட்டை விட்டே விரட்டியுமிருக்கிறது. மதவாதிகள் அனைவருமே விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் கையில் எடுக்கும் ஆயுதம் எங்கள் மனது புண்படுகிறது என்பது தான்.

இஸ்லாத்தின் ஆரம்பமே பிற மத நம்பிக்கைகளை விமர்சிப்பதிலிருந்து தான் தொடங்கியிருக்கிறது. காபாவில் வைக்கப்பட்டிருந்த முன்னூறுக்கும் அதிகமான சிலைகளை அடித்து நொறுக்கித்தான் இஸ்லாத்தின் புனிதம் நிறுவப்பட்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இன்றும் கூட பைபிள் இறை வேதமல்ல, மனிதர்கள் அதை திருத்திவிட்டார்கள் என்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள், மேடைகளில் பரப்புரை செய்கிறார்கள், விவாதம் நடத்துகிறார்கள். இதனால் எங்கள் மனது புண்படுகிறது என்று கிறித்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அதை சரி என்பார்களா? ஆக இது பலம் இருக்கிறது என்பதால் வெளிப்படும் திமிர்த்தனம் தானேயன்றி வேறொன்றுமில்லை.

பொதுவெளியில் இருக்கும் எதையும் விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. செய்யப்படும் விமர்சனத்தில் தவறு இருப்பதாக கருதினால் சுட்டிக் காட்டுவதையோ, விசாரிப்பதையோ யாரும் தவறென கூற முடியாது. ஆனால் எங்கள் நம்பிக்கையை எதிர்த்து எழுதினால் நாங்கள் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.

தோழர் துராப்ஷா குறிப்பிட்ட கட்டுரையை எழதவில்லை, அவரது ஃபேஸ்புக் ஐடிக்கு வந்திருக்கிறது என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் தன்னை ஒரு பொதுவுடமையாளராக அறிவித்துக் கொண்டு வாழ்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இசுலாமிய மதவாதிகள் ஆட்சியிலிருந்தால் அவர் கடைய நல்லூரில் கல்லால் அடித்தே கொல்லப்பட்டிருப்பார். அந்த வகையில் இசுலாத்தின் ஆட்சியை நேற்றும்-இன்றும்-நாளையும் கொண்டு வராமல் இருப்பதன் மூலம் பல கோடி இசுலாமிய மக்கள் கொல்லப்படாமல் இருப்பதற்காக நாம் ‘அல்லா’விற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இசுலாத்தில் இருந்து கொண்டு எல்லா பாவச்செயல்களையும் ஆதிக்கம், அதிகாரம் காரணமாக செய்யும் எவரையும் இவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன், நேர்மையுடன் பாடுபடுவேன், அதற்காக பொதுவுடமைக் கொள்கையை ஏற்கிறேன் என்று ஒருவர் அறிவித்தால் இவர்கள் கொலைவெறி அடைகிறார்கள்.

அந்த வகையில் உழைக்கும் இசுலாமிய மக்களின் எதிரிகள் எவரையும் இவர்கள் தமது சுண்டு விரலைக்கூட நீட்டி எதிர்த்ததில்லை. லாட்டரிச் சீட்டு புகழ் ஹாருணா, ஈராக்கையும், ஈரானையும் பிணக்காடாக்குவேன் என்று எக்காளமிடும் அமெரிக்காவின் பாதந்தாங்கிகளான சவுதி அரசு ஷேக்குகளா, இவர்களெல்லாம் இசுலாத்தின் பாதுகாவலர்கள் என்று போற்றுவார்கள். ஆனால் ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பேன் என்று போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டை அவன் பிறப்பால் இசுலாமியராக இருக்கும் ஒரே காரணத்தால் ஒழிக்க முனைவார்கள்.

இசுலாமிய நண்பர்கள் உள்ளிட்டு அனைவரும் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதோடு தத்தமது நட்பு வட்டாரத்தில் இதை தெரிவித்து தோழர் துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய மத பிற்போக்குத்தனங்களிலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு உங்களது வெளிப்படையான ஆதரவு அவசியம் என்பதை இங்கே உரிமையுடன் கோருகிறோம்.

– வினவு செய்தியாளர்.

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

36

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

– துரை.சண்முகம்

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!

5

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

2007ஆம் ஆண்டின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி (திருப்பிக் கட்ட உத்தரவாதமில்லாத கடன்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான ஊகபேர சூதாட்டம்) வெடித்ததிலிருந்து இப்போது அமெரிக்காவின் கடன் அந்தஸ்தை கீழிறக்கியுள்ளது வரையிலான நெருக்கடிகள் இத்துடன் முடியப் போவதில்லை.

2007, ஆகஸ்டு 9;  2008, செப்டம்பர் 15;  2009, ஏப்ரல் 2;  2010, மே 9;  2011, ஆகஸ்ட் 5  அமெரிக்காவின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி வெடித்ததிலிருந்து தற்போதைய வீழ்ச்சி வரை, மிகவும் கடுமையான நெருக்கடிகளாக ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத்  தாக்கியுள்ளது. முதலாளித்துவத்தின் பெருமந்தக் காலத்திற்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிய  நிலைமையை மேற்கூறிய நாட்களில் நாம் பார்க்க முடியும்.

நிதி நெருக்கடி
நியூ யார்க் பங்கு வணிகர் (படம் – கார்டியன்)

2007, ஆகஸ்டு 9-இல் தொடங்கிய முதற்கட்டம், வங்கித்துறை நெருக்கடியில் தொடங்கியது. பிஎன்பி பரிபாஸ் என்ற பிரான்சு நாட்டு வங்கி, தன்னுடைய  இருப்பில் பணம் இல்லாததால், அமெரிக்காவின் அடகுக் கடன் துறையில் செயல்படும் 3 பிரபல வேலியிடப்பட்ட நிதியங்களில் தனது செயல்பாடுகளை முடக்கி வைப்பதாக  அறிவித்தது. பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ளவை என்று கருதப்பட்ட ஏராளமான பந்தய ஒப்பந்தங்களின் மதிப்பு, தாங்கள் எண்ணிக் கொண்டிருந்ததைக் காட்டிலும் மிகவும் குறைவானதே என்ற உண்மை பல வங்கித்துறையினருக்கு இந்தத் தருணத்தில்தான்  தெரிய வந்தது.

எனினும், இதனால் ஏற்பட்ட பேரிழப்பு எவ்வளவு என்றோ, எந்தெந்த வங்கிகளுடைய பணம் இத்தகைய குப்பைப் பத்திரங்களில் சிக்கியிருக்கிறது என்றோ யாராலும் கணிக்க இயலவில்லை. இதன் காரணமாக, வங்கிகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒரே நாளில் தகர்ந்தது. வங்கிகள் தமக்கிடையிலான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.

நிதி நெருக்கடி மேலும் முற்றி வெடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்தது. 2008, செப்டம்பர்  15 அன்று முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸைத் திவாலாகிப் போவதற்கு அமெரிக்க அரசு அனுமதித்த அன்று அது வெடித்தது. எந்தவொரு வங்கியும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டால், உடனே அரசாங்கங்கள் அவற்றின் இழப்புகளை ஈடுசெய்து கைதூக்கி விடும் (பெயில் அவுட்) என்று ஒரு நம்பிக்கை பொதுவில் நிலவி வந்தது. திவாலாகும் நிலையில் இருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான பியர் ஸ்டீர்ன்ஸ்ஐ  இன்னொரு தனியார் வங்கி வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாட்டை, அமெரிக்காவின் மத்திய அரசு வங்கியான பெடரல் ரிசர்வ் செய்தது. இதேபோல, சப்பிரைம் கடன் அடமான நெருக்கடியில் சிக்கிய நார்த்தன் ராக் வங்கியை பிரிட்டிஷ் அரசு நாட்டுடமையாக்கியது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!வங்கிகள் எனப்படுபவை “மூழ்கவே முடியாத அளவுக்கு மிகப் பெரியவை” என்ற நம்பிக்கையும் லேமன் பிரதர்ஸ் திவாலானவுடனேயே பொய்யாகி விட்டது. சீட்டுக்கட்டுச் சரிவது போல உலக நிதி அமைப்பே தடதடவெனச் சரிந்து விடக்கூடிய அபாயத்தின் காரணமாக, மேற்கத்திய அரசாங்கங்கள் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி, தங்களது நாட்டின் வங்கிகள் நொறுங்கி விழுவதைத் தடுத்தன. உயிர் போகும் தருணத்தில் வங்கிகள் கைதூக்கி விடப்பட்டு விட்டன. என்றபோதிலும், அதற்குள்ளாகவே உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிவிட்டது.

நுகர்வோரின் நம்பிக்கையும் வர்த்தக உலகின் நம்பிக்கையும் சரிந்து கொண்டிருந்த அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வங்கிக் கடன்கள் நின்று போயின. பரவ இருக்கும் நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முடியவில்லை; ஏனென்றால், இந்த நெருக்கடிகள் வருவதற்கு முன்னர்தான், எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பணவீக்கம் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மத்திய வங்கிகள் அனைத்தும் வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தன.

வளர்ச்சியடைந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கூட்டுச் சேர்ந்து புதிதாக உருவாக்கியுள்ள ஜி20 என்ற அமைப்பு, இந்தப் பொருளாதாரப் பின்னடைவு பெருவீழ்ச்சியாக மாறுவதைத் தடுக்கும் பொருட்டு, 2008 – 09 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. வட்டி விகிதங்கள் தரைமட்டத்துக்குக் குறைக்கப்பட்டன. அரசின் செலவுகள் அதிகரிக்கப்பட்டு, சிறிதும் பெரிதுமான ஊக்கப் பொதிகள் அறிவிக்கப்பட்டன. நோட்டு அடித்துப் புழக்கத்தில்விடாமல், இணையத்தின் மூலம் மின்னணுப் பணத்தின் புழக்கம் கூட்டப்பட்டது.

2009  ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாளன்று  இலண்டனில் நடந்த ஜி20 அமைப்பின் மாநாட்டில், 5 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு அரசுச் செலவின அதிகரிப்பு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) மற்றும் பிற அனைத்துலக நிதி அமைப்புகளுக்கும் 110 ஆயிரம் கோடி டாலர் கொடுத்து, வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் பெருக்குவதென்றும், வங்கிகளைச் சீர்திருத்துவதென்றும்  இந்த நாடுகளின் தலைவர்கள் உறுதியேற்றனர். இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே, சர்வதேச ஒத்துழைப்பு சீர்குலையத் தொடங்கியது. நாடுகள் தத்தம் சொந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கி விட்டன.

2010, மே 9 ஆம் நாள் அன்று உலகத்தின் கவனமும் கவலையும் தனியார் துறையிலிருந்து அரசுத் துறையை நோக்கித் திரும்பின. சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரீஸ் நாட்டுக்கு நிதியுதவி செய்யப் போவதாக அறிவித்தன. வங்கிகள் திவாலாகாமல் தடுப்பது என்பதிலிருந்து, அரசாங்கங்கள் திவாலாகாமல் தடுப்பது என்பதாகப் பிரச்சினை மாறியது. வரி வருவாய் குறைவு மற்றும் மக்கள் நலத் திட்டச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மட்டுமின்றி, 2008-09 குளிர்காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதித்துறை சலுகைகள் காரணமாகவும் பொருளாதாரப் பின்னடைவுக் காலத்திலான கிரீஸ் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை ஊதிப் பெருத்தது.

தனது நிதி நெருக்கடியை மூடி மறைத்ததன் காரணமாகவும், வரி வசூல் செய்ய முடியாத சிக்கல்களாலும் கிரீஸ் நாட்டு அரசு விசேடமான பிரச்சினைகளை எதிர்கொண்டது. மற்ற நாடுகளோ தங்கள் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு பீதியடைந்தன. சிக்கன சீரமைப்பு என்பது புதிய முழக்கமாகியது. இது பிரிட்டன், ஐரோப்பிய வட்டார நாடுகளை மட்டுமின்றி, வெகு நீண்டகாலமாக பட்ஜெட் பற்றாக்குறை என்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொள்கை முடிவுகள் மீதும் இந்தச் சிக்கன சீரமைப்புக் கொள்கை தாக்கம் செலுத்தத் தொடங்கியது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!தனியார் (முதலாளித்துவத்தின்) கடன் நெருக்கடி ஒரு நாட்டின் கடன் நெருக்கடியாக உருமாறும் நிகழ்ச்சிப் போக்கு கடந்த 2011, ஆகஸ்ட் 5  வெள்ளிக்கிழமையன்று முழுமையடைந்தது. வார இறுதி நாளன்று, வால் ஸ்டிரீட்டின் வர்த்தக நிறுவனங்கள் கடையை மூடும் வரைக் காத்திருந்த ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம், அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலை, “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இனிமேலும் வைக்க இயலாது என்று அறிவித்தது.

இந்த அறிவப்பு வெளிவந்த தருணம் மிக மோசமானது. 2008இன் இறுதிக் காலத்துக்குப் பின், கடந்த வாரம்தான் பங்குச் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. மென்மேலும் மந்தத்தில் வீழ்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தையும், அதன் ஓர் அங்கமான ஐரோப்பாவில் கட்டமைப்பு நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் கொள்கை வகுப்பாளர்கள். முட்டாள்தனத்தில் அவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைதான், அவர்களுக்கிடையில் காணப்படும் கருத்தொற்றுமை. சிக்கன சீரமைப்பு என்ற அவர்களது கொள்கை,  நிலைமையை மேம்படுத்தப் போவதில்லை, மோசமாக்கப் போகிறது. 2007ஆம் ஆண்டு வெடித்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான பிரச்சினையையே அவர்கள் இன்னும் தீர்த்தபாடில்லை. சீனா, ஜெர்மனி போன்ற கடன் அளிக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா போன்ற மிகப் பெரிய கடனாளி நாடுகளுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வு என்ற அந்தப் பிரச்சினைக்கு இதுவரை அவர்களால் எந்தத் தீர்வும் காண முடியவில்லை.

இத்தகைய சூழலில், வரவிருக்கும் நிலைமைகள் குறித்துத் தடாலடியாக நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச முடியாது. சந்தைகள் பெரிதும் ஆட்டம் கண்டவாறுதான் இருக்கும். அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் குறைந்து விட்டதாக ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மதிப்பிட்டிருப்பதால், அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாய் உயராது. ஜப்பானும் “ஏஏஏ” தரத்தை நீண்ட காலத்துக்கு முன்பே இழந்து விட்டது. அதன் மொத்த தேசியக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 200 சதவீத அளவையும் தாண்டிவிட்டது. அதன் கடன் பத்திரங்களின் மதிப்பு இன்னமும் அதளபாதாள நிலையில்தான் உள்ளது. காரணம், ஜப்பானியப் பொருளாதாரம் வளர்வதற்கான சாத்தியங்கள் மங்கலாகவே உள்ளன.

அமெரிக்காவின் நிலைமையும் அதுதான்.  இப்போதைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் அதன் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாயும் குறைவாகத்தான் இருக்கும். ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடன், அமெரிக்காவுக்கு பெய்ஜிங் (சீனா) விட்ட டோஸ் சாதாரணமானதல்ல.

சீனாவின் 10 சதவீத ஆண்டு வளர்ச்சி என்பதன் பொருள், அமெரிக்காவை சீனா முந்தப் போகும் தருணம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதுதான். சீனா விஞ்சும் என்பதையும், இந்த நிலைமையானது இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான போட்டியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் காட்டுகிறது. தங்களது பொருளாதாரத்தை எப்படி  நிர்வகிக்க வேண்டும் என்று  மேற்குலக முதலாளி வர்க்கத்துக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு கீழை உலகத்தின் கம்யூனிஸ்டுகளுக்கு தைரியம் வந்துவிட்டது.  நிதிச் சந்தைகள் இந்த வாரத்தை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடட்டும்.  2011, ஆகஸ்ட் 5  ஆம் தேதி என்பது,  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழந்த நாள் என்றே இனி நினைவில் கொள்ளப்படும்.

அதிபர் ஒபாமாவுக்கு இவையனைத்தும் பயங்கரமான செய்திகள். பொருளாதார மீட்சியை அவரால் சாதிக்க முடியவில்லை. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளிலும், கடனுக்காக ஜப்தி செய்யப்பட்ட வீடுகளிலும் அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது. இன்றுள்ளதைப் போல வேலையின்மை மிக அதிகமாயிருக்கும் ஒரு சூழலில் ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு வேறு எந்த அதிபரும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. வரிச் சலுகைகள் முடியப் போகின்றன. அடுத்துவரும் மாதங்களில் நிதிக் கொள்கை மேலும் கடுமையாகப் போகிறது. பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு நோட்டு அடிப்பது என்ற மொண்ணையான ஆயுதம் ஒன்றுதான் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வசம் உள்ளது. அதற்கு முன் சந்தைகள் கொஞ்சம் இளகவேண்டும். அதற்குச் சில மாதங்கள் ஆகும். அதன் பின்னர்தான், இந்த மொண்ணையான ஆயுதத்தைக்கூடப் பயன்படுத்த முடியும்.

இதற்கும் மேல் வேறொன்று இருக்கிறது. கடனைத் திருப்பிக் கொடுக்கும் நம்பகத்தன்மை குறைந்து போன அமெரிக்கா என்கின்ற தேசிய அவமானத்துக்குத் தலைமை தாங்கிய அதிபராக ஒபாமா நினைவு கூரப்படுவார். அவர் ஜிம்மி கார்ட்டரைப் போலத் தோன்றுகிறார், ரூஸ்வெல்ட்டைப் போல அல்ல.

இந்த நிலைமைகளைக் கண்டு ஐரோப்பியர்கள் முறுவலிக்க முடியாது. ஏனென்றால், நாம் பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்காவின் வீழ்ச்சியை மட்டுமல்ல; ஒட்டு மொத்த மேற்குலகின் வீழ்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற வாரத்தின் பெரும் சரிவைத் தொடர்ந்து, ஜி7 நாடுகளுக்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி,  பிரான்சு, கனடா, ஜப்பான்  பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், இவர்களுக்கிடையிலான கூட்டத்தால் பயனிருந்திருக்கலாம். சந்தையின் மீது செல்வாக்கு செலுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் இன்று இவர்களுக்கு இல்லை. இன்று சீனாவைத் தவிர்த்து விட்டு, இந்த ஜி7 நாடுகள் மட்டும் கூடிப் பேசுவது என்பது, 1930களின் சர்வாதிகாரத்தை அமெரிக்காவைத் தவிர்த்த பிற “லீக் ஆஃப் நேஷன்ஸ்” நாடுகள் மட்டும் சேர்ந்து முறியடித்திருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!இந்தக் கதைக்கு சுபமான முடிவு ஏதுமில்லை. குமிழிப் பொருளாதார காலத்தில் மட்டுமீறி வாங்கிக் குவித்த கடனைத் தனிநபர்கள் முதல் வங்கிகள் வரை அனைவரும் திருப்பி அடைத்தல்,  அதிகபட்ச வேலையில்லாத் திண்டாட்டம், நீண்ட காலத்திற்கு மிகவும் பலவீனமான பொருளாதார வளர்ச்சி மிக அதிகபட்சமாக நேர்மறையில் நடக்கக் கூடியது இவ்வளவுதான். எதிர்மறையில் அதிகபட்சமாக நடக்கக் கூடியது என்ன? அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் பின்னோக்கிச் செல்ல, உலகப் பொருளாதாரமும் மீண்டும் தேக்கத்தில் விழும். ஐரோப்பிய ஒன்றியமே பிய்ந்து சிதைந்து போகும். இரண்டாவதாகக் கூறப்பட்ட இருண்ட சூழல் எற்படுவதற்கான சாத்தியமே அதிகம். சென்ற வாரத்தைக் காட்டிலும் இன்று அந்த சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

ஏன்? ஏனென்றால் தேசங்களுக்கிடையே ஒத்துழைப்பு இல்லை. சிக்கனத்துக்கான திட்டங்கள்தான் உள்ளன. வளர்ச்சிக்குத் திட்டமில்லை. கடன் வாங்கிப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைத் தூண்ட முடிந்த நாடுகள்கூட, கடன் வாங்கத் தயங்குகின்றன. யூரோ என்ற ஒற்றை நாணயம் குலைந்து விடாமல் தடுக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஐக்கியத்தை விரைவுபடுத்த வேண்டும். இதற்குத் தேவையான அரசியல் உறுதி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லை.

பண்டங்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஆனால், அது ஒன்று மட்டும்தான் நல்ல செய்தி. மற்றபடி 9, ஆகஸ்டு, 2007 அன்று தொடங்கிய நெருக்கடி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் பாதி தூரத்தைக்கூட நாம் இன்னும் கடக்கவில்லை. அந்த நெருக்கடி அபாயகரமான புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012
ஆங்கில மூலம் – Global financial crisis: five key stages 2007-2011

சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம் ! பாடல் !!

36

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

=========

பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?

முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?

தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?



சொல்லாத சோகம் – யாரும்  வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – இது கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

அசரத் மஹல் அயோத்தியின் ராணி. முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் நடத்தி தோல்வியுற்றாள் ஹசரத் மஹல். அவளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூட எந்த இந்து மன்னனும் முன்வரவில்லை. தன் 10 வயது மகனோடு இமயத்தின் அடிவாரக் காடுகளில் அநாதையாக திரிந்து இறந்தாள் அந்தத் தாய்.

அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

ஆளரவம் இல்லா காட்டில்…அநா..தையாக மரணம்
கோரஸ் : அநா..தையாக மரணம்

அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
கோரஸ் : அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

இந்து மன்னர்களின் துரோகம் – எட்டப்பன் வகையில் சேரும்…
கோரஸ் : எட்டப்பன் வகையில் சேரும்…

தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்…
கோரஸ் : தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்..

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்..

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

உழுபவனுக்கு நிலம். மாப்பிளா முஸ்லீம் விவசாயிகளின் முழக்கம். அது தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம் விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டம். சொந்த மண்ணின் மக்களை ஒடுக்க வெள்ளையனின் காலை நக்கினார்கள் நம்பூதிரிகள். கிராமம் கிராமமாக கொலை செய்யப்பட்ட போதும் 50 ஆண்டு காலம் அந்த போராட்டம் ஓயவில்லை.

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

நம்பூதிரி வெள்ளையர் ஆட்டம் – அவன் சாதித் திமிரை ஓட்டும்
கோரஸ்: அவன் சாதித்திமிரை ஓட்டும்

அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
கோரஸ் : அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வேலூர் கோட்டை. அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் முஸ்லீம் தளபதிகளும் ஆங்கிலப் படையின் தமிழ் சிப்பாய்களும் கோட்டையைக் கைப்பற்றினார்கள். கிளர்ச்சியை நசுக்கினான் வெள்ளையன். பீரங்கி வாயில் வைத்து அவர்களை பிளந்து அகழியில் வீசினான். விடுதலைப் போரின் உறவாய் அந்த மண்ணில் உறைந்து விட்ட இரத்தத்தில் மதம் எங்கே?

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வெள்ளை கசையால் சிதைந்த தேகம் – வேலூர் கோட்டை அகழியை மூடும்
கோரஸ் : வேலூர் கோட்டை அகழியை மூடும்

அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
கோரஸ் : அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…

என்றும்… உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

பேஷ்வா அரச பரம்பரையும் இன்னும் பல எட்டப்பன்களும் நினைத்திருப்பார்களா, இந்து என்ற ஒரே காரணத்தால் நாம் போற்றப்படுவோம் என்று. அல்லது களத்தில் உயிர்நீத்தானே திப்பு சுல்தான், அவன் நினைத்திருப்பானா, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் நாம் தூற்றப்படுவோம் என்று. இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

திப்பு சுல்தானின் தியாகம்… – ஏன் முஸ்லீம் என்ற பேதம்
கோரஸ் : ஏன் முஸ்லீம் என்ற பேதம்

இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம் –
கோரஸ் : இது பாடாத வீரம்  யாரும் தேடாத ராகம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

__________________________________________

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் காவி இருள் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367