Monday, May 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 753

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

முன்னுரை:

தமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறுக்கப்படும் அல்லது தள்ளிப் போடப்படும். தற்போது ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி திரைப்படத் தொழிலாளர்கள் போராடி வருவதையும், அதை மறுத்து தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்வதையும் நீங்கள் படித்திருக்கலாம். இது இன்றைய தினத்தில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல.

1997ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடினர். அப்போது பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள். அப்போது ம.க.இ.க சார்பில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களை ஆதரித்து பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட சிறு நூலை இங்கே வெளியிடுகிறோம்.

–    வினவு

_________________________________

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் !
சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012

டி.வி.எஸ். முதலாளி கையில் ஸ்பானருடன் வந்து நின்று, ‘நானும் தொழிலாளிதான்’ என்று வசனம் பேசினால் எப்படி இருக்கும்? இந்தக் கூத்தெல்லாம் தமிழ் சினிமாவில்தான் நடக்கும் என்பீர்கள். தமிழ்த் திரையுலகத்தில் இப்போது உண்மேயிலேயே அப்படியொரு கேலிக்கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான மோதல், நட்சத்திரங்களுக்கிடையிலான மோதல்- என்று பல வடிவங்களில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகப் பிரச்சினை இப்போது முதலாளி- தொழிலாளி பிரச்சினையாக, சந்திக்கு வந்துவிட்டது.

பிரச்சினையின் பின்னணி என்ன?

ஒரு ஆண்டில் வெளியாகும் சுமார் 150 படங்களில் 5 படங்கள் மட்டுமே போதிய லாபம் தருகின்றன. மற்ற தோல்வியடையும் படங்களுக்கு முன்பணம் கொடுத்து சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை.

”ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களைத் தவிர மற்றவர்களின் படங்களை ‘அவுட்ரைட்’ முறையில் முன்பணம் கொடுத்து வாங்க முடியாது. படத்தை வெளியிடுங்கள். ஓடுகிறதா என்று பார்ப்போம். பிறகு விலையைத் தீர்மானிப்போம்” என்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.

வேறு விதமாகச் சொன்னால் மற்ற குதிரைகளின் மீது கோடிக்கணக்கில் பணம் கட்டிச் சூதாட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. ”தயாரிப்புச் செலவைக் குறை” என்று கூறுகிறார்கள்.

தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகள் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு கணக்கு என்று கூறப்படுகிறது.

இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை  முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.

இருந்தாலும் தயாரிப்புச் செலவைக்     குறைக்க வேண்டும். என்ன செய்யலாம்? ரசிகர்களாகிய மக்கள் தலையில்  கை வைக்கலாம். அல்லது திரையுல தொழிலாளர்கள் தலையில் கை வக்கலாம். டிக்கெட் விலையேற்றி மக்களை சமீபத்தில்தான் மொட்டையடித்திருக்கிறார்கள் என்பதால் கத்தியை இப்போது தொழிலாளர்களை நோக்கித் திருப்பியிருக்கிறார்கள்.

தொழிலாளி வேடத்தில் முதலாளிகள்!

பட முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினை இயக்குநர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலாக மாறிய மர்மம் என்ன? அதுதான் ”டி.வி.எஸ். முதலாளி ஸ்பானர் பிடித்த கதை.”

மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தின் அதிபர் பாரதிராஜாவும், கவிதாலயா அதிபர் பாலச்சந்தரும் இயக்குநர் வேடத்தில் இப்போது களத்தில் நிற்கிறார்கள். ”வறுமையின் நிறம் சிவப்பு” – ”என்னுயிர்த்தோழன்” போன்ற ‘புரட்சிப் படங்களை’ எடுத்த இயக்குநர்கள்தான் இப்போது தொழிலாளிகளுக்கு எதிராக முண்டா தட்டுகிறார்கள்.

முதலாளிகள் என்று சொல்லிக் கொண்டு களத்தில் நின்றால் தங்கள் ”சுரண்டும் உரிமை” பற்றிப் பேச வேண்டியிருக்கும். மக்கள் ஆதரவும் கிடைக்காது. எனவேதான் இயக்குநர் வேடத்துக்கு மாறிக் கொண்டு ”படைப்புரிமை, கலைஞனின் சுதந்திரம், தமிழுணர்வு” என்று வசனம் பேசுகிறார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனமாகிய ஃபெப்சி சங்கத்தை உடைப்பது என்று தாங்கள் முடிவு செய்யக் காரணம் ராமன் – அப்துல்லா படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினைதான் என்று ரீல் சுற்றுகிறார்கள்.

ஆனால், சம்பவம் பற்றி பாலுமகேந்திரா இயக்குநர்கள் சங்கத்திடம் கொடுத்த புகாரை இந்தப் ‘படைப்பாளிகள்’ அப்போது யாரும் கண்டுக் கொள்ளவில்லை. படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருந்தது.

ஃபெப்சியை ‘வழிக்குக் கொண்டு வருவதற்கு’ இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கலாம் என்ற முடிவு தயாரிப்பாளர் சங்கத்தில்தான் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாரதிராஜாவிடம் ”இந்த ஸ்டோரியை டெவலப் செய்யும் பொறுப்பு” ஒப்படைக்கப்பட்டது. இயக்குநர்கள் களத்தில் இறங்கினார்கள்.

‘படைப்பாளி’களின் வாதம் என்ன?

ஃபெப்சியை உடைத்து ”தமிழ்நாடு படைப்பாளிகள் –தொழிலாளிகள் கூட்டமைப்பு” என்ற கருங்காலி சங்கத்தைத் துவக்குவதற்கு இயக்குநர்கள் (அதாவது பட முதலாளிகள் ) கூறும் காரணம் என்ன?

”இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் போன்ற படைப்பாளிகளும் –லைட்மேன், துணை நடிகர்கள், சண்டை நடிகர்கள், சமையல்காரர்கள் போன்ற படைப்பாற்றலுக்குத் தொடர்பில்லாத தொழிலாளிகளும் ஒரு சங்கத்தில் இருக்க முடியாது; தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்குகிறவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஒரு சங்கத்தின் கீழ் இருக்க முடியாது. படைப்பாற்றலுக்கு எள்ளளவும் தொடர்பில்லாத தொழிலாளிகள் கும்பல், எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. படைப்பாளி வேறு; தொழிலாளி வேறு. படைப்பாளிகள் உரிமையில் எந்தவிதத்திலும் தொழிலாளி தலையிட முடியாது”- என்று இயக்குநர்கள் சார்பாக சண்டமாருதம் செய்கிறார் பாரதிராஜா.

முகமூடியைக் கிழிக்கிறார்கள் தொழிலாளர்கள்!

இயக்குநர்களின் வாதம் வெறும் பித்தலாட்டம் என்று மறுக்கின்றனர், போராடி வரும் ஃபெப்சி தொழிலாளர்கள்.

”இயக்குநர்கள் என்ற பெயரில் கருங்காலி வேலை செய்யும் இவர்களில் பெரும்பான்மையினர் தயாரிப்பாளர்கள் அதாவது முதலாளிகள். 10 மாதங்களுக்கு முன்னால் முதல்வர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இன்று வரை இவர்கள்  கையெழுத்திடவில்லை.”

”தெலுங்கு, கன்னட, மலையாள தயாரிப்பாளர்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு விட்டார்கள். சம்பள உயர்வை மறுப்பதற்குத்தான் இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். சங்கத்தை உடைக்கிறார்கள். இன்று தொழிலாளிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்த இயக்குநர்கள் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலித்துத் தர, தங்கள் சுண்டுவிரலைக் கூட அசைத்ததில்லை.”

”தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஆயிரக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். பாதி படத்திற்க்கு வேலை செய்ததற்கு கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், மீதி படத்தை வேறு ஆள் வைத்து வேலை செய்கிறோம் என்கிறார்களே, இது என்ன நியாயம்?”

”இந்த திடீர்த் தமிழர்கள் தங்கள் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யாமல் இருப்பார்களா? அனைத்திந்திய சந்தையை கைகழுவி விடுவார்களா? அதெல்லாம் இருக்கட்டும் முதலில் தங்கள் படத்துக்கு தமிழில் பெயர் வைப்பார்களா?”- என்ற பதிலடி கொடுக்கிறார்கள்  தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்களிடமிருந்து நாணயமான பதில் எதுவும் இல்லை. தன் முன்னிலையில் ஏற்றுக் கொண்ட ஊதிய ஒப்பந்தத்தில் 10 மாதமாகக் கையெழுத்து போடாதது பற்றியோ, பல கோடி ரூபாய் சம்பளம் பாக்கி பற்றியோ முதலாளிகளிடம் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் கட்டைப் பஞ்சாயத்து செய்திருக்கிறது, கலைஞர் அரசு.

பிற தொழில்களைப் போன்றதல்ல திரைப்படத் தொழில்!

சினிமா தொழிலாளர்களின் வேலை நிலைமைகளும், அவர்களது பிரச்சினைகளும் மிகச் சிக்கலானவை. பிற தொழில்களைப் போல ஒரு நிர்வாகம் – ஒரு முதலாளி என்பது இங்கே கிடையாது.

முப்பதாண்டுகளாகப்  பணியாற்றும் தொழிலாளிகள் இங்கே உண்டு. ஆனால் முதலாளிகள் பலர் முகவரி இல்லாதவர்கள். சூது, மோசடி, வாய் ஜாலம் ஆகியவற்றையே மூலதனமாக வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கும் பல முதலாளிகள் எப்போது ஓடுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.

தொழிலாளிக்கு அன்றைய வேலைக்கு அன்றே சம்பளம் கிடைக்காது; வாரத்திற்கு ஒரு முறையும் கிடைக்காது; படம் முடிந்தபின் தருகிறோம் என்று உறுதி சொல்லி பாக்கி வைப்பார்கள்; பாதியில் ஓடுவார்கள்.

எனவே சம்பள உயர்வுக்கும், உரிமைக்கும் போராடும் மற்ற தொழிற்சங்கங்களைப் போல இல்லாமல், உள்ளே சம்பளத்தை வசூல் செய்யும் வேலையையே இங்கே தொழிற்சங்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஃபெப்சி என்ற திரைப்பட ஊழியர் சம்மேளனம், இயக்குநர்கள் சங்கம் முதல் சமையல் தொழிலாளர்கள் சங்கம் வரையிலான  24 சங்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமாகும். இயக்குநர் முதல் கடைநிலைத் தொழிலாளிவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் ஊதிய ஒப்பந்தப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கு இந்த நிர்ணயிக்கப்பட்ட கூலி மட்டுமே கிடைக்கும்.

ஆனால் இயக்குநர் போன்றோரின் சம்பளம் அவர்களது மார்க்கெட்டைப் பொருத்து கருப்பு நிறத்தில் தீர்மானிக்கப்படும். முதன் முதலில் இயக்குநராகி தன் பெயரைத் திரையில் பார்ப்பதற்க்கு தவம் கிடக்கும் காலங்களில் இவர்களுக்கு தொழிற்சங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. இயக்குநராக உயர்ந்து விட்டவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் தயாரிப்பாளராக மாறி சொந்தப் படம் எடுக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் என்ற முறையில் முதலாளியாகவும் இயக்குநர் என்ற வகையில் தொழிலாளியாகவும் ஒரே நேரத்தில் இரண்டு சங்கங்களிலும் அங்கம் வகிக்கின்றனர். டி. ராஜேந்தர், பாக்கியராஜ் போன்ற ‘சகலகலா வல்லவர்களாக’ இருந்தால் சமையல்காரர் சங்கத்தைத் தவிர எல்லா சங்கத்திலும் தொழிலாளி என்ற முறையிலும் உறுப்பினராகிக் கொள்ளலாம். அதே நேரத்தில் முதலாளியாகவும் இருந்து கொள்ளலாம்.

எனவே பெப்சியை உடைப்பதற்கு காரணமான பிரச்சினை படைப்பாளி – தொழிலாளி பிரச்சினை அல்ல; முதலாளி – தொழிலாளி முரண்பாடுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் தொழிலாளிகள் தரப்பின் நியாயத்தையே புரிந்து கொள்ள முடியும்.

பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம் !
சென்னையில் பெப்சி நடத்திய கூட்டத்திலிருந்து – ஜனவரி 2012

பாரதிராஜாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்  

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களே, மற்றும் சிகரங்களே, குன்றுகளே,

‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்ற தத்துவக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் உங்கள் சகோதர இயக்குநர்கள்.

”பல லட்சம் சம்பாதிக்கும் எனக்கும் ஒரு ஓட்டு, நூறு ரூபாய் சம்பளம் வாங்கும் லைட்மேனுக்கும் ஒரு ஓட்டா?” என்பதுதான் உங்கள் உண்மையான உள்ளக் குமுறல்.

இதை வெளிப்படையாகக் கேட்க வேண்டியதுதானே! ”படைப்பாளி – கலை – எதார்த்தம்” என்று எதற்க்காக குப்பையைக் கிளற வேண்டும்? நீங்கள் குப்பையைக் கிளற ஆரம்பித்து விட்டதனால் நாங்களும் மூக்கைப் பிடித்துக்கொண்டு அந்த குப்பைத் தொட்டிக்குள் குதிக்க வேண்டியிருக்கிறது.

படைப்பாளியா வியாபாரியா?

கலைத் தாய், கலைச் சேவை போன்ற 40 வருடங்களுக்கு முந்தைய வசனங்களையெல்லாம் எடுத்து விடுகிறீர்களே, எந்தத் தேதியிலிருந்து நீங்கள் படைப்பாளிகள் ஆனீர்கள்? ஆபாசக் காட்சிகளையும், கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளையும் பற்றிக் கேட்டால் இது ‘வியாபார சமரசம்’ என்று கூறும் உங்கள் சகோதரர்கள் திடீரெனப் படைப்பாளிகளாக மாறிய மாயம் என்ன?

”சோப்பு வியாபாரி சோப்பு விற்கிறான்; நான் சினிமா விற்கிறேன்” என்று ஒருமுறை சொன்னார் மணிரத்தினம். வியாபாரி என்ற சொல்லுக்குப் பன்மை- வியாபாரிகள். தனியாளாக இருந்தால் வியாபாரி;கூட்டமாய்ச் சேர்ந்தால் படைப்பாளிகளா? அதெப்படி?

‘தனியாக இருந்தால் தென்னங் குச்சி –சேர்த்துக் கட்டினால் விளக்குமாறு’ என்பது போலவா?

ரொம்பவும் தரக் குறைவாக எழுதுகிறோம் என்று வருந்த வேண்டாம்.நாங்கள் தலைகீழாய் நின்றாலும் உங்கள் படைப்பாளிகள் எடுக்கும் படங்களை விடத் தரம் தாழ்ந்து போக முடியாவே முடியாது.

ராமன் –அப்துல்லா படப்பிடிப்பில் நடந்த பிரச்சினை என்ன? வசனம் இல்லாத பாத்திரங்களில் துணை நடிகர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விதி. அதைக் கடைப்பிடிக்கச் சொல்லி கேட்பதில் என்ன தவறு?

கவர்ச்சிக்கு பம்பாய்! கலைக்கு கிராமத்து ஆள்!!

‘கிழக்குச் சீமையிலே’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கிராமத்து ஆட்கள் கட்டிப் புரண்டு சண்டை போடும் காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் கிராமத்து ஆட்களை, ஒரிஜினல் வயலில், ஒரிஜினலாக கட்டிப் புரண்டு சண்டைபோட வைத்து படமெடுத்ததாகவும் ‘அந்தக் காட்சியில் சண்டை நடிகர்களாகிய எங்களை ஏன் பயன்படுத்தவில்லை?’ என்று தொழிலாளர்கள் சண்டைக்கு வந்ததாகவும் கூறியிருக்கிறீர்கள்.

இதுபோன்று படைப்பாளிகளான இயக்குநர்கள் பல பேர், பல சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கத்தால் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள்.

சினிமா என்கிற உன்னதமான கலையை வாழ வைப்பதற்காக  எத்தனை இன்னல்களையும், அவமானங்களையும் நீங்கள் மெளனமாக சகித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற உண்மை இப்பொழுதல்லவா தெரிய வருகிறது!

அட உத்தமபுத்திரர்களே! கிளைமேக்ஸ் சண்டையில் கட்டிப் புரள ஸ்டண்டு நடிகர்களைச் சேர்த்தால் யதார்த்தம் கெட்டு விடும். ஆனால் படம் முழுவதும் கதாநாயகனுடன் கட்டிப் புரள கதாநாயகி மட்டும் பம்பாயில் இருந்து வரவேண்டுமோ? ஏன் அதற்கு அல்லி நகரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டியில் ஒரிஜினல் முத்துப்பேச்சிகள் யாரும் கிடைக்கவில்லையா?

நக்மா நாத்து நட்டதையும், குஷ்பூ கரகாட்டம் ஆடியதையும், பால்காரன் பவர் ஷூ போட்டுக்கொண்டு  பால் கறப்பதையும், விவசாயி ஜீன்ஸ் அணிந்து வருவதையும், அவ்வளவு ஏன்…. அகத்தியரே ஹவாய் செருப்பு போட்டு நடந்ததையும் காசு கொடுத்துப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

தாத்தாவும் பேத்தியும் டூயட் பாடலாம்; புகைக்குப் பின்னால் ஆடும் பெண்கள் மட்டும் பருவக் குமரிகளாக இருக்க வேண்டுமோ? டோப்பா தலையர்கள் கல்லூரி மாணவனாக நடிக்கலாம்; அவனைச் சுற்றி வரும் துணை நடிகர்கள் கூட்டம் மட்டும் கட்டிளங் காளைகளாக இருக்க வேண்டுமோ?

தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் துணை நடிகர்களும் தொழிலாளிகளும் இதைக் கேட்கக் கூடாதா? அவர்கள் கதையை மாற்றச் சொன்னார்களா, காட்சிகளை திருத்தச் சொன்னார்களா? ”இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறித்து வயிற்றில் அடிக்காதே” என்கிறார்கள். இதில் என்ன குற்றம்?

படைப்புக்காக உயிர் கொடுத்த படைப்பாளி யார்?

பாலு மகேந்திராவின் ‘மறுபடியும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. பாடல் காட்சியை ஆபாச நடனமாக மாற்ற முடியாது என்று மறுத்து விநியோகஸ்தர்களுடன் கட்டிப் புரளுவார் இயக்குநராக நடிக்கும் நிழல்கள் ரவி.

பாரதிராஜா அவர்களே, உங்கள் படைப்பாளிகள் கூட்டமைப்பில் இப்படி படைப்புக்காகப் போராடி உயிர் நீத்த இயக்குநர்கள் எத்தனை பேர்? தியாகிகள் பட்டியலைக் கொஞ்சம் வெளியிடுவீர்களா?

நாங்கள் வெளியிடுகிறோம். உங்கள் மயிர்க் கூச்செறியும்,பயங்கரமான சண்டைக் காட்சிகளில் அடிபட்டு எலும்பு நொறுங்கிய சண்டை நடிகர்கள், கேட்பாரின்றி இறந்துபோன சண்டை நடிகர்கள், எலக்ட்ரிசியன்கள், லைட்மேன்கள் போன்ற சாதாரண தொழிலாளிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம்.

உங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்காகச் சவப்பெட்டிக்குள் போனவர்கள் ”படைப்புத் தொழிலுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாதவர்களா?”

பணத்துக்குத் தலைவணங்கும் படைப்பாளிகள்!

சன் டி.வி.யில் பாலு மகேந்திரா கொடுத்த ‘உருக்கமான’ பேட்டியை நீங்கள் பார்க்கத் தவறியிருக்க மாட்டீர்கள். தான் எடுத்த படங்களில் இரண்டைத் தவிர மற்றவைகளிலெல்லாம் பல சமரசங்கள் செய்து கொண்டதை அவர் நாணயமாக ஒப்புக் கொண்டார். யாருடன் சமரசம் செய்து கொண்டார்? ஃபெப்சியுடனா, அல்லது தயாரிப்பாளருடனா?

படைப்பாளியின் உரிமையில் தொழிலாளி தலையிடுவதை எதிர்த்து இப்போது போராடுகிறீர்களே, தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் தலையிட்டதை எதிர்த்து எப்போதாவது நீங்கள் போராடியதுண்டா?

பணத்துக்குத் தலை வணங்குவதில் உங்களுக்குக் கூச்சமில்லை; உழைப்புக்குத் தலை வணங்குவதுதான் அவமானமாக இருக்கிறது போலும்! அடடா… எப்பேர்ப்பட்ட சுயமரியாதை!

காசுக்காகத் தன்னை விற்றுக் கொள்ளும் பெண்ணை ‘விபச்சாரி’ என்று சமூகம் அழைக்கிறது. அதுவே, ஆணாய் இருந்தால் அவனை என்ன சொல்லி அழைப்பது என்று கேட்டார் பெரியார். ‘படைப்பாளி’களே பதில் சொல்லுங்கள்!

தொப்புளில் ஆம்லெட் போடச் சொன்னவன் தொழிலாளியா?

தமிழ் ரசிகர்களுக்கு கிராமங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, தமிழ்க் கதாநாயகிகளுக்கு டூ பீஸ் நீச்சல் உடையை அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான் என்கிறார்கள். ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கு நீச்சல் உடை தவிர வேறெதுவும் தைத்துத் தர மாட்டோம் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார், தையற் கலைஞர்களா?

கதாநாயகிகளின் தொப்புளில் ஆம்லெட் போடுவது போன்ற கற்பனை செய்ய முடியாத காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களே, உங்கள் படைப்பாளி சகோதரர்கள், அத்தகைய காட்சிகளை திணித்தவர்கள் யார், சமையல் கலைஞர்களா?

என்ன இருந்தாலும் உங்கள் துணிச்சலைக் கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கொல்லன் தெருவில் ஊசி விற்பதென்றால் சும்மாவா?

ஹீரோவுக்குத் தகுந்த மாதிரி கதை தயார் செய்து, கதாநாயகிக்கும், பிற நடிகர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி கதை சொல்லி, படப்பிடிப்பின் போது ரிலீசாகும் வேறு படங்களைப் பார்த்து அதற்கேற்ப கதையைத் திருத்தி, கடைசியில் விநியோகஸ்தரின் ஆசைக்கேற்ப சில காட்சிகளை சேர்த்து / நீக்கி ஒருவழியாக நீங்கள் தயார் செய்யும் படத்தைப் ‘படைப்பு’ என்கிறீர்கள்.

படைப்பாளியா, அழிப்பாளியா?

சன்  டிவியில் உங்கள் பேட்டியைப் பார்த்தோம். சத்தமே வராமல் ஏதோ கையைக் காட்டிக் கொண்டிருந்தீர்கள். சரி. ஊமை நியூஸ் போலிருக்கிறது என்று நினைத்தோம். ”விஷூவலாகவே திங்க் பண்ணிப் பழகியவர் பாரதிராஜா” என்ற உண்மை அப்புறம்தான் எங்கள் மண்டையில் உறைத்தது.

சிந்திப்பதை வார்த்தைகளில் சொல்வதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே, அதைப் புரிந்து கொண்டு அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதென்ன அத்தனை சுலபமா?

‘சந்தையில் ஹீரோ அறிமுகம்’ என்று ஒரு சீட்டில் உங்கள் இயக்குநர்கள் எழுதிக் கொடுத்தவுடனே டீக்கடை, மளிகைக் கடை ஜவுளிக் கடை, கசாப்புக் கடை, பழ வண்டி, ஐஸ் வண்டி முதல் வில்லன் விழுந்து உடைப்பதற்க்குப் பூசணிக்காய், பானை, கட்டைவண்டி, சர்பத் கடை அனைத்தையும் தயார் செய்து வைப்பவர்களும், எதன்மீது எப்படி உருண்டு விழுவது என்று விழுந்து பார்த்து ரெடியாக இருக்கும் சண்டை நடிகர்களும், லைட்மேன்களும் இன்ன பிற தொழிலாளிகளும் உங்கள் படைப்புக்கு எள்ளளவும் சம்பந்தமில்லாதவர்கள்! நீங்கள்தான் படைப்பாளிகள்!

எல்.ஐ.சி. கட்டிடத்தைக் காகிதத்தில் வரைந்து காட்டுபவன் படைப்பாளி. 14வது மாடியில் கயிற்றில் தொங்கிக்கொண்டு சுண்ணாம்பு அடிப்பவன் படைப்புக்குச் சம்மந்தமில்லாதவன்- அப்படித்தானே!

ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் ‘அழிப்பது எப்படி’ என்பதை நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு டிஸ்கஷன் நடத்தும் இயக்குநர்கள் படைப்பாளிகள் என்று சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. பூவாலே சாலை போட்டு அதன்மீது நடந்து சென்ற புரட்சித் தலைவி, இத்தகைய வக்கிரங்களை எல்லாம் தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதிலிருந்து கற்றுக் கொண்டிருக்க முடியும்?

உரிமைக் குரலெல்லாம் உழைப்பாளியை எதிர்த்துத்தான்!

படைப்பு உரிமைக்காக சங்கம் கட்டிக் குரல் கொடுக்கும் படைப்பாளிகளே! அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, யோக்கியமான திரைப்படங்கள் பலவற்றில் ஒன்றையாவது ஆதரித்து உங்களில் ஒரு படைப்பாளியாவது குரல் கொடுத்ததுண்டா?

தொழிலாளியின் வயிற்றில் அடிப்பதற்காக உரிமைக் குரல் எழுப்புகிறீர்களே, உங்கள் படைப்பாளி மணிரத்தினம் ‘பம்பாய்’ படத்திற்காக தாக்கரேயின் காலில் விழுந்தாரே, அப்பொழுது உங்களுக்கெல்லாம் தொண்டை அடைத்துக் கொண்டதா?

எச்சரிக்கை தமிழர்கள் வருகிறார்கள்!   

உங்கள் கருங்காலித் தனத்திற்குத் தமிழ் முகமூடி வேறு. முப்பந்தைந்து ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் மென்று துப்பிய தமிழை இப்பொழுது நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். படத்தின் பெயர் ஆங்கிலத்தில், கதாநாயகியோ இந்தி, பாட்டு கதம்ப மொழி, பணம் கொடுப்பவன் சேட்டு – நீங்கள் தமிழ்ப் படைப்பாளிகள்!

ஹெலிகாப்டரிலிருந்து தேசியக் கொடியை பறக்க விடுவதற்காகவே சிவப்பு, வெள்ளை, பச்சையில் சேலை கட்டி மூன்று தமிழச்சிகளை உட்கார வைத்து அவர்களது சேலையை உருவி பறக்க விட்ட உங்கள் இயக்குநர்கள் தமிழ் படைப்பாளிகள்!

சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், கவுண்டர் பொண்ணா கொக்கா, தேவர் மகன், பசும்பொன், மண்வாசனை…… என்று படமெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகச் சாதி வெறியைத் தூண்டி விட்டவர்களும், ‘வானமே எல்லை’ படத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகக் குரலெழுப்பிய பாலசந்தரும், குஞ்சுமோனும், ஆர்.பி.சவுத்தியும்,மார்வாடிகளும், சேட்டுகளும்…நீங்கள் எல்லோரும் ‘தமிழ்’ படைப்பாளிகள்!

சாதி, மதம், இனம் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றுபட்டிருக்கும் நீங்கள், தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையைக் கண்டு வயிறெரிகிறீர்கள். சினிமா சென்டிமெண்டால் அடிக்கப் பார்க்கிறீர்கள்.

”பத்து வருஷமா எங்கிட்ட வேல பார்த்த பையனே என்ன மோசமா பேசிட்டான்” என்று கண் கலங்குகிறீர்கள்.

”தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் பணம் கட்டுகிறோம்” என்கிறார்கள் சில இயக்குநர்கள். பத்து வருஷமென்ன, முப்பது வருடமாக இந்தத் துறையில் குப்பை கொட்டிவரும் தொழிலாளிகள் இன்னும் தொழிலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.”இதுதான் ஸ்டூடியோ” என்று உங்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிய தொழிலாளிகள் இன்னும் சைக்கிளில்தான் வருகிறார்கள். கார்,பங்களா, செல்ஃபோன் போன்ற வசதிகள் அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை.

வெற்றிப் படமோ, வெள்ளி விழாவோ அவர்களுக்கு நீங்கள் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட கூலிதான். இன்று கண்ணீர் வடிப்பவர்கள் அன்று லாபத்தைப் பகிர்ந்து கொண்டீர்களா என்ன? மாதத்தில் பாதி நாள் வேலை இல்லாமல் கிடக்கும் தொழிலாளி எப்படி சாப்பிடுவான் என்பதை அப்பொழுது சிந்தித்திருக்கிறீர்களா? இப்போது சிந்திப்பதில் வியப்பில்லை.

போராட்டம் நடக்கும் பொழுதுதான் தொழிலாளிகளின் மீது முதலாளிகளுக்குக் கரிசனம் அதிகமாகும். நீங்கள் வள்ளல்களாக இருக்க விரும்புகிறீர்கள்; ஆனால் தொழிலாளிகள் அடிமைகளாக நீடிக்கத் தயாராக இல்லையே- என்ன செய்வது?

வாலாட்டுகின்றன பத்திரிகைகள்!

ஆனால் பத்திரிகைகள் உங்களுக்குத்தான் வாலாட்டுகின்றன. மனோரமா திரையரங்கில் தாக்கப்பட்ட தொழிலாளர்களை யாரும் படமெடுக்கவில்லை. மறியல் செய்த உங்களைப் படமெடுக்கிறார்கள். பேட்டி எடுக்கிறார்கள். ”பாத்திரம் கழுவுகிறவனுக்கு இயக்குநர் அடிமையா” என்று கொதிக்கிறார்கள்.

”படப்பிடிப்பு தொடங்கியது” என்று கொட்டை எழுத்தில் போடுகிறார்கள். அடுத்த நாள் தொடர்ந்ததா என்று போடுவதில்லை. 30,000 பேர் படைப்பாளிகள் சங்கத்தில் சேர்ந்ததாகப் போடுகிறார்கள். சேர்ந்தவர்கள் தொழிலாளிகளா, ரசிகர்களா என்று போடுவதில்லை.

சினிமா முதலாளிகளும், பத்திரிகை முதலாளிகளும் தொழில் கூட்டாளிகளல்லவா? நட்சத்திர ஓட்டல்களில் தின்றதற்கும் குடித்ததற்கும் வாங்கின ‘கவர்’களுக்கும் விசுவாசமாக ‘கவரேஜ் கொடுக்க வேண்டாமா, அதுதான் வாலாட்டுகிறார்கள்.

அரசாங்கமும் உங்கள் பக்கம். இதுவும்கூடத் தொழில் கூட்டுதான். அரசியல்வாதிகள் எல்லாம் அயோக்கியர்கள் என்று படமெடுப்பீர்கள். ஊரறிந்த அயோக்கியனின் காலில் விழுவீர்கள்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழ் மக்கள் சூறையாடப்பட்டபோது, வேட்டையாடப்பட்டபோது, பத்திரிகைகள் தாக்கப்பட்டபோது, ‘தமிழ்’ படைப்பாளிகளே நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பூனையைப் போல ஜெயலலிதாவின் காலடியில் சுருண்டு கிடந்தீர்கள்.

இப்போது கலைஞர் ஆட்சி. எந்த ஆட்சியானாலும் உங்கள் ஆட்சிதான். கலைஞர் பகிரங்கமாக உங்கள் பக்கம் நிற்கிறார். ”காமம் கலையாகுமென்றால் களவும்கூடக் கலைதான்” என்று மந்திரிகுமாரியில் வசனம் எழுதியவர் உங்கள் பக்கம் நிற்பதும் பொருத்தம்தான்.

படைப்பாளிகள் கூட்டமைப்புக்கு போலீசு காவல், படைப்பாளிகள் வீட்டுக்கு போலீசு காவல், படப்பிடிப்புக்கு போலீசு காவல், காமராவை எடுத்துச் செல்ல போலீசு காவல்…. அடேயப்பா! போலீஸ்காரர்களுக்கு மட்டும் லைட் மேன் வேலை பார்க்கத் தெரிந்திருந்தால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான்.

‘கம்யூனிஸ்டு’களின் ஆதரவு பெற்ற பாரதிராஜா – தொழிலாளியே!

வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளும்கூட உங்கள் பக்கம்தான். ”நாங்கள் முதலாளிகளாக இருந்தால் கம்யூனிஸ்டுகள் எங்களை ஆதரிப்பார்களா? என்று ஒரு கேள்வியை தினமணிக் கதிர் பேட்டியில் எழுப்பியிருக்கிறீர்கள்.

என்ன அற்புதமான கேள்வி! தொழிலாளிகளை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றுதான் இதுவரை நாங்கள் அறிந்திருக்கிறோம். கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்கப்படுபவர்கள்தான் தொழிலாளிகள் என்று புதியதொரு கோணத்தைக் காட்டியிருக்கிறீர்கள்.

”எங்கள் சங்கம் வேலை நிறுத்தமே செய்யாது” என்று அடுத்த வரியிலேயே கொள்கைப் பிரகடனம் செய்து உங்களை ஆதரிக்கும் போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை நீங்களே கிழித்து விட்டீர்கள்.

விற்பதற்கு உழைப்பைத் தவிர வேறு உடைமையில்லாத தொழிலாளி, தன் உழைப்பை விற்க மறுப்பதற்குப் பெயர்தான் வேலை நிறுத்தம். உங்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முடியாது என்பதும் உண்மைதான். முதலாளிகள் கதவடைப்புதானே செய்ய முடியும்!

பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்!

அரசும், போலீசும், பத்திரிகைகளும், கட்சிகளும் உங்கள் பக்கம் என்று இறுமாந்து இருக்கிறீர்கள். இவர்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளைத் தொழிலாளர்கள் உதிர்த்து வருகிறார்கள் என்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மக்கள் உங்கள் பக்கம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லை. மனோரமா திரையரங்கில் நீங்கள் அடிபட்டு விட்டது போல பொய்ச் செய்தி பரப்பினீர்களே, அதைக்கேட்டு மக்கள் யாரும் மனம் பதறவில்லை; மாறாக மகிழ்ச்சியடைந்தார்கள்.

எவ்வளவுதான் சினிமா போதையில் நீங்கள் மக்களை ஆழ்த்தியிருந்தாலும் லட்சாதிபதிகளுக்காகவும்,கோடீசுவரர்களுக்காகவும் கண்ணீர் விடும் அளவுக்குத் தமிழகம் இன்னும் தாழ்ந்து போகவில்லை; அதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.

அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தைச் சீர்குலைத்திருக்கிறீர்கள். படைப்பாளிகள் என்ற முறையில் நீங்கள் படைத்தவை ஏதாவது உண்டென்றால் அவை பண்பாட்டைச் சீரழிக்கும் நச்சுக் கிருமிகள்தான். தமிழகத்தின் பண்பாட்டுச் சூழலை மாசுபடுத்தியதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

காற்றையும், நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் ஆலைகளுக்கெதிராக ஆங்காங்கே மக்கள் போராடுகிறார்கள். நீதிமன்றங்கள் ஆலைகளை மூடுகின்றன.

டெல்லியில் ஆலைகள் மூடப்பட்டதால் 3 லட்சம் தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். கோவையில் விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ஆனால் பண்பாட்டை மாசுபடுத்தும் உங்கள் கனவுத் தொழிற்சாலைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் தடை விதித்திருக்கிறார்கள்.

பண்பாட்டை மாசுபடுத்தும் நச்சுக் கிருமிகளுக்கெதிராக நாங்கள் வெளியிலிருந்து போராடுகிறோம். ‘உள்ளிருந்தே போராடுங்கள்’ என்று தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறோம்.

”படைப்பாளிகளின் விசயத்தில் தொழிலாளி தலையிடவே கூடாது” என்று நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். ”மேலும் தலையிடுங்கள்” என்று நாங்கள் கோருகிறோம்.

”உங்கள் பிழைப்புக்காக மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலனுக்காகவும் தலையிடுங்கள்” என்கிறோம்.

”ஆபாசக் காட்சிகளுக்குப் பணியாற்ற மாட்டோம்;. ஆங்கிலப் பெயர் வைத்த படங்களுக்குப் பணியாற்றமாட்டோம்; சாதி வெறியைத் தூண்டும் படங்களுக்குப் பணியாற்ற மாட்டோம்” என்று தொழிலாளர்கள் குரல்கொடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.

பேசட்டும். இதுவரை வசனம் தரப்படாதவர்களெல்லாம் பேசட்டும். தொழிலாளர்கள் பேசட்டும். லைட்மேன்களும், ஓட்டுனர்களும், தையல்காரர்களும், சண்டை நடிகர்களும், துணை நடிகர்களும் இன்ன பிறரும் பேசட்டும்.

”எங்கள் படைப்புரிமையில் தொழிலாளர்கள் தலையிடுகிறார்கள்” என்று நீங்கள் கூவுவீர்கள். தெருவுக்கு வருவீர்கள்.

அப்போது மந்திரி வந்தாலும் வராவிட்டாலும் மக்கள் வருவார்கள்.

படைப்பு எது, படைப்பாளிகள் யார், படைப்பாளிகளின் உரிமை என்ன என்ற கேள்விகளுக்கான விடை வீதியில் அளிக்கப்படும்.

***********************************************************

–    “திரைப்படத் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம்”

–    1997ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ம.க.இ.கவின் சிறு வெளியீடு.

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

54

ஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.

1950 களில் தேசிய​ முக்கியத்துவம் வாய்ந்த​ அமைப்புகளாக​ சென்னையின் இருபெரும் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன​. ஒன்று ஐ.சி.எப், இன்னொன்று ஐ.ஐ.டி. முதலாவது நிறுவனம் தொழிலாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனியக் கோட்டையான  ஐ.ஐ.டி சென்னையோ  கடந்த​ 20 ஆண்டுக்காலத்தில் படிப்படியாக​ நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்துவிட்டு ஒப்பந்த​ கூலிகளைக் கொண்டு நிரப்புவதோடு மட்டுமன்றி, அந்த​ அமைப்புசாரா தொழிலாளர்களை அடிமாடு போல​ நடத்துகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக இருப்பதோடு மாணவர்களையும் மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. ஐஐடி மாணவர்களுக்கான கேண்டின் வசதி, ஹாஸ்டல் வசதிகள் பற்றி கேட்டால் ‘ஐஐடி ஒன்றும் தர்மாஸ்ரமமல்ல’ என்று சொல்லும் நிர்வாகம்தான் பல கோடிகளில் இக்கேளிக்கைச் சீரழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!ஐஐடி சென்னை வருடம் தோறும் ஜனவரி மாதத்தில் நடத்தும் சாரங்க் உயர் கல்விநிறுவனங்களில் நடத்தப்படும் கலாச்சார​ திருவிழாக்களிலே பெயர்போனது. நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஐஐடி மாணவர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவிலுள்ள​ பெரும்பாலான​ கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்கள் உட்பட​ சுமார் 50,000 பேர் கலந்து கொள்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கான​ கலாச்சார​ நிகழ்ச்சியாக​ சித்தரிக்கப்பட்டாலும், இது இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க​ இளைஞர்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் உள்ளது. முழுமையாகவே மேற்கத்திய​ கலாச்சாரத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும்  இந்நிகழ்ச்சியில் உண்மையில் இரண்டுமே இருப்பதில்லை. மேற்கத்திய சீரழிவு கலாச்சாரக் கழிவுகளையும், பார்ப்பனியக் கலைகளான​ பரத​ நாட்டியம், குச்சுப்புடி, கர்நாடக​ இசை வழியாக​ இந்து புராணக் கட்டுக்கதைகளும்தான் அரங்கேறும்.

இந்த​ ஆண்டும் வழக்கம் போல​ ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரைக்கும் நடந்திருக்கிறது இவ்விழா. சாரங்க் மாணவர்களால் மாணவர்களுக்காக​ நடத்தப்படும் இலாபநோக்கற்ற​ நிகழ்ச்சி என்று வெளியே கூறப்பட்டாலும், இந்த​ நான்கு நாட்களாக நடத்தப்படும் ‘ஷோ’க்களுக்கான​ நுழைவுக்கட்டணம், அதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள், பங்கேற்கும் கலைகுழுக்கள் எனக் கோடிகளில் புரளும் இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாகப் பார்த்தால் தான் இதன் பின்னாலிருக்கும் சமூகப் பொருளாதார​ இலாப​ நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள​ முடியும்.

இந் நிகழ்ச்சியின் முதல்நாள் கிளசிக்கல் நைட். அதில் சசாங்க் சுப்பிரமணியத்தின் புல்லாங்குழலுடன், மலேசியா நடனக் குழுவின் ஒடீசியோடு ஆரம்பித்தது சாரங்க். இந்து புராண கட்டுக்கதையான காளீயமர்த்தனத்தையும், மீரா கிருஷ்ணனின் மேல்வைத்த ஒருதலைக் காதலையும் பல்வேறு இசை வடிவங்களில் மேடையேற்றிய பின்னர் மோகினி வேடமிட்டு அசுரர்களிடமிருந்து அமுதத்தை ஆட்டைய போட்ட விஷ்ணுவிடம் மோகம் கொண்ட சிவனின் லீலைகளும் (ஹரி-ஹர லீலை), தாந்திரிகக் கதைகளில் வரும் யோகினியின் சுடலை நடனமும் ஒடீசி நடன வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது.  அடுத்தடுத்த​ நாட்களில் கொறியோ நைட், போப்புலர் நைட் (தேவி சிறீ பிரசாத் மற்றும் விஸால் அன் சேகர்) மற்றும் ரோக் ஷோ (வித்ஜர்தா, சுவீடன்) என்று மேற்கத்திய​ மற்றும் இந்திய​ மேல்தட்டு வர்க்க கலைகளின்​ கூட்டுக்கலவையாக​ நடைபெற​ உள்ளது.

இந்த​ ஆடம்பர கவர்ச்சிகரமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கான​ நுழைவுச் சீட்டுகள் இன்டெர்நெட்டிலிருந்து சென்னை நகரத்தின் பீட்சா கார்னர்கள் வரைக்கும் கூவிக்கூவி விற்கப்படுகிறது. இப்படி கூவிக்கூவி விற்கிறார்களே ஒரு நிகழ்ச்சிக்குப் போய் பார்க்கலாமென்றால், கட்டணம் 200 ரூபாயில் ஆரம்பித்து 1,500 ரூபாய் வரைக்கும் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என்று அவற்றின் இன்றைய​ சந்தை நிலவரம் போன்றே விலைவைக்கப்பட்டுள்ளது. சராசரியாக​ 30,000 பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக்கட்டணம் தலைக்கு சராசரி 400 ரூபாய் போட்டாலும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணத்திலிருந்து மட்டும் வருகிறது.

‘‘பெரிய​ பெரிய​ குரூப்பெல்லாம் வறாய்ங்க. ஐய்யோ பாவம் மாணவர்களால​ இலாபநோக்கமே இல்லாம​ நடத்தப்படுதே. அதனால​ தான் இம்புட்டு பைசா போலருக்குண்ணு’’ என்ன​ மாதிரியே நீங்களும் நெனச்சீங்கண்ணா​ எமாந்திட்டீங்க​. சாரங்க் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள் யாரென்றால், நோக்கியா, டாடாவின் குரோமா, ரிலையன்ஸ், பீட்சா கார்னர், பேஸ்புக், லாஜிடெக், மக் டொனால்ட்ஸ், டொயோடா, ஹிந்து, கொக்கோ கோலா போன்ற​ ‘சின்ன​’ கம்பெனிகளிலிருந்து, பிரான்ஸ் எம்பசியின் அல்லயன்ஸ் பிராஞ்சைஸ் , யுஎஸ் கண்சுலேட்,  இஸ்ரேல் எம்பசி, கொதெ இன்ஸ்டிடுட்/மாக்ஸ்முல்லர் பவன் போன்ற ஏகாதிபத்திய புரவலர்கள்  என்று பட்டியல் விரிகிறது.

இந்த​ கார்பரேட்-ஏகாதிபத்தியப் புரவலர்கள் ஆதாயமில்லாமல் இந்நிகழ்ச்சிக்கு முதலீடு செய்வதில்லை. ஏற்கனவே புதிய​ தாராளவாதக் கொள்கைகளின் பகுதியாக​​ உயர்கல்வித் துறை தனியார்மயமாக்கப்பட்டு இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இந்திய​ உயர்கல்வித் துறை கொண்டவரப் பட்டிருக்கிறது. இச் சூழலில் ஐஐடிக்களை தனியார்மயமாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள​ நிலையில் இதைப் பற்றி சற்றும் பிரக்ஞையற்ற ஐஐடி மாணவர்களும் பேராசிரியர்களும் வழக்கம்போல​ ‘ஊழல்’தான் இந்த நாட்டின் முதன்மையான​ பிரச்சனையென்று அண்ணா ஹசாரே பின்னால் ஆட்டுமந்தைகள் போல் மெழுகுவர்த்தியுடன் பேரணி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  தன்னுடன் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக​ தற்கொலை செய்யும் போது கூட​ எதிர்வினையாற்றும் திராணியற்று விட்டேத்தியாக​ இருக்கும் அளவிற்கு இம்மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த​ மனநிலைக்கு சாரங்க் போன்ற​ கலாச்சார ​ நிகழ்ச்சிகள் ஆற்றும் பங்கும் முதன்மையானது.

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!
படம் – இந்து நாளிதழ்

அதற்கு சாரங்கின் வரலாற்றை கொஞ்சம் புரட்டுவோம். 1960 களில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து தொற்றுநோய் போல் கீழைநாடுகளிலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட​ ஹிப்பி கலாச்சாரம் கீழைநாட்டுப் பிற்போக்கு தத்துவங்களையும் உள்வாங்கி  புது வகை உதிரிக் கலாச்சாரமாகப் பரிணமித்த​ போதே 1973-74 லிருந்து ஆண்டுதோறும் ஐஐடி சென்னையும் ‘மார்திக்ரா’ (Mardi Gras)  என்ற​ பெயரில் இந்த​ களியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட​ புதிய​ தாராளமயக் கொள்கைகள் நாட்டை சூறையாட​ ஆரம்பித்ததும் இந்த​ களியாட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன​. அப்படித்தான் 1996-ல் மார்திக்ரா என்ற​  அராஜகவாதிகளின் களியாட்டம் சாரங்க் என்று பெயர் மாற்றப்பட்டது. 90களில் ஆரம்பித்த​ இந்த​ இரண்டாம் தலைமுறை ஹிப்பிகளின் (New Ager) மிகப்பெரிய​ சங்கமமாக​ தென் இந்தியாவில் சாரங்க் விளங்குகிறது. இதற்கு   இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து Students Activity center (SAC) முன்புறம் தலைவிரிக்கோலத்தில் கறுப்புடை அணிந்து நாள்முழுதும் ஆடி, அண்டம் கிழியக் கத்தும் ட்ரூப்புகளைப் பார்த்தால் புரியும்.

நாட்டில் 90% உள்ள​ உழைக்கும் பெரும்பான்மை மக்களின் கலாசாரமும் பொருளாதார​ நிலைமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 10% நடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களதும் பார்ப்பனர்களதும் சமூகப் பொருளாதார​ விழுமியங்கள் ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் இம்மாதிரி கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது. மேற்கத்திய​ களிவெறி இசையுடன் கூட்டணி சேர்ந்துள்ள​ பார்ப்பனிய​ இசையானது, ஏகாதிபத்தியத்துடன் கள்ள​ உறவு வைத்துள்ள​ ஆர்.எஸ்.எஸ் ஐத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. சாரங்க் மட்டுமன்றி ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் விவேகானந்த​ வாசகர் வட்டம், இஸ்கான் என்ற​ ஹிப்பி கும்பல், மியூசிக் கிளப், ஆத்ம​ ஞான​ யோகா போன்றவை மூலமும், Extra Mural Lectures வாயிலாக​ ராஜிவ் மல்கோத்ரா (உடையும் இந்தியா ஆசிரியர்), வாழும் கலையின் (Art of Living) ஐ.என்.கே. போன்றவர்களை உரையாற்ற​ அழைப்பதன் மூலமும் இந்துத்துவத்துவதை கட்டமைக்கும் வேலையிலும் அதனூடாக​ பார்ப்பனிய​ கலாச்சாரத்திற்கு முட்டுக்கொடுக்கும் வேலையிலும் ஐஐடி பார்ப்பனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு  ஐஐடி உணவு விடுதிகள் இன்றும் தீட்டுப்படாமல் சைவ​ உணவகங்களாக​ இருப்பதும், பெரும்பாலான மாணவர்கள் அசைவப் பிரியர்களாக​ இருந்தும் இந்தியாவின் தேசிய​ உணவாக​ சைவத்தை சித்தரிப்பதும் உதாரணம்.

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் முதல் இலக்கான ஐஐடி கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தங்கள்  நியாயமான உரிமைகளான உணவு விடுதிப் பிரச்சனைக்கோ அல்லது வாத்தியார்களின் தனிப்பட்ட பாழிவாங்குதலுக்கு எதிராகவோ முணுமுணுத்தால் கூட அதை தன் இரும்புக் கரங்களான பேராசிரியர்களை வைத்து ஒடுக்கிவருகிறது. இதன் கடந்தகால ரத்தசாட்சிகளான நிதின் குமார் மற்றும், அனூப்பின் தற்கொலைகள் இந்த அமைப்பின் கோரமுகத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியும், இந்த அமைப்பினை எதிர்த்து கேள்வி கேட்க்கும் உணர்வுகூட இல்லாததால் இம்மாணவர்களின் காதுகளில் ஒலிக்கும் சகமாணவனின் மரண ஓலம்கூட இன்று சாரங்கின் காக்கஃபோனி இசையின் இரைச்சலில் கரைந்து போயுள்ளது.

ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் இணைந்து வழங்கும் ஐ ஐ டி சாரங்க் விழா!ஏற்கனவே இந்த​ கல்விமுறையால் சுயசிந்தனையற்றவர்களாக​ ஆக்கப்பட்ட​ மாணவனை கலாச்சார​ நிகழ்ச்சிகள் என்ற​ பெயரில் நடத்தப்படும் சாரங்க் போன்றவை மூலம் எதிர்காலத்தில் பொழுதுபோக்கு சந்தையின் வரைமுறையற்ற​ நுகர்வோனாவதற்கு​ தயாரிக்கப்படுகிறான்.  ஒரு டாலருக்கும் குறைவாக​ தினக்கூலியாகப் பெறும் 65% மக்கள் வாழும் நாட்டில் கூத்தாடுவதெற்கென்றே பல​ கோடிகள் செலவு செய்யும்   கேவலம் தான் இங்கே நடைபெறுகிறது. இத்தகைய​ கலாச்சாரத் தாக்குதல்களால் சீரழிவுக்காளான ​ மாணவன் கல்லூரியை விட்டு வெளியேறும் போது சமூகப் பிரக்ஞையற்றவனாக​ மாறுவதோடு ஏகாதிபத்தியத்தின் அடியாளாகவும் கொ.ப.செ.யாகவும் மாறுகிறான். ஒரு பக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பறித்து அடிமைகளாக்குவதுடன் இன்னொரு பக்கம் சாரங்க் போன்ற கலாச்சார சீரழிவுகள் மூலம் சுயசிந்தனையற்ற யுப்பிகளை உருவாக்குவது தான் சாரங்கின் புரவலர்களான கார்பரேட், ஏகாதிபத்திய தூதரகங்கள் மற்றும் திரைமறைவில் செயல்படும் சாரங்கின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க​ மூளைகளின் இலக்கு. சாரங்க் நிகழ்வு நடைபெற்ற பகுதியில் புரவலர்களின் விளம்பர மற்றும் விற்பனை அங்காடிகளில் ஒன்றாக டூயுரக்ஸ் ஆணுறை நிறுவனமும் இருந்தது சூசகமாக இதைத்தான் சுட்டுகிறது – F*CK their minds… but Play it Safe!

ராஜன்

குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

10
குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

1. கர்நாடாகாவில் 71,605 தீவிரமாக ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தைகளும், 11 லட்சத்து 29 ஆயிரத்து 947 ஊட்டச் சத்து குறைபாடுடைய குழந்தைகளும் இருக்கின்றனர். 2008-09-ல் 1070 சாவுகளும், 2009-10-ல் 1,144 சாவுகளும், 2010-11-ல் ஆகஸ்டு வரை 431 சாவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஜப்பூரில் 8983 தீவிரமாக ஊட்டக் குறைவு பீடித்த குழந்தைகளும் ராய்ச்சூரில் 4531 குழந்தைகளும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ‘உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது, இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது, படிப்பறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவைகள்தான் இவற்றுக்கு காரணம்’ என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

ராய்ச்சூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அப்பனடோடி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவிக்கு வயது மூன்று. அந்த ஊர் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட பிசிபேளாபாத்தை சாப்பிட்ட அன்று இரவு முழுவதும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள்.

‘படிப்பறிவு இல்லாததால் குழந்தைக்கு என்ன உணவு தேவை’ என்று தெரியாமல் இல்லை அவளது அம்மா நரசம்மாவுக்கு; சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 60 ரூபாய் தினசரி வருமானத்தில் 5 குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சோற்றுடன் மிளகாய்ப் பொடி கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.

அங்கன்வாடியில் இணைக்கப்பட்டுள்ள 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அன்றன்று சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டல். ஆனால், கர்நாடகாவின் 60,000 அங்கன்வாடியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி பிரைட்கிராம் இண்டஸ்ட்ரீ என்ற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளில் வரும் பிசிபேளாபாத், கேசரி பாத், நியூட்ரியா கார்ன் பாப் மற்றும் சத்து மாவு குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அவை குழந்தைகள் சாப்பிடும் தரத்தில் இல்லாததோடு புதிதாக சமைத்த உணவைப் போல தேவையான சத்துகளையும் தருவதில்லை.

இப்படி மக்களின் மீது மோசடியை அவிழ்த்து விட்டுக் கொண்டே அந்த மக்களின் மீதே பழி போடுவது ஒரு ‘மக்கள் நல’ அரசின் கீழ்தான் நடைபெற முடியும். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வறுமையில் தள்ளி, அரசு நலத் திட்டங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க செயல்படும் இந்த பாவிகள் அந்த மக்களின் மீதே பழி போடுகிறார்கள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காததிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. இதற்கு எந்த ஒரு மூட நம்பிக்கையும் காரணம் இல்லை. ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தான் சரியான ஊட்டச்சத்து கிடைத்து ரத்த சோகை இன்றி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்’ என்பதை தெரியாத தாய்மார்கள் யாருமே இல்லை. ஆனால், இந்தியாவின் ஒரே செயல்படும் தங்கச் சுரங்கம் இயங்கும் ராய்ச்சூரில் உழைக்கும் மக்களுக்கு அதற்கெல்லாம் ‘வசதி’ இல்லை, என்ன செய்ய?

குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டதை ஆராய நியமிக்கப்பட்ட 15 உறுப்பினர் குழு குழந்தைகளுக்கு முட்டையும் பாலும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதுவும் மக்களின் மூட நம்பிக்கைகளால் அல்ல, இந்துமதவெறியர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ராய்ச்சூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊட்டச் சத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஐந்தரை கிலோ எடை மட்டும் இருந்த 18 மாத குழந்தை ஸ்ரீகாந்த் ஊட்டச் சத்து நிவாரண மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட பத்தே நாட்களில் அவனது எடை 1 கிலோ அதிகரித்தது. வாழைப்பழங்கள், பால், சோறு, பருப்பு, காய்கறிகள், சப்பாத்திகள், ராகி, அவித்த முட்டை போன்றவை தினமும் சாப்பிடுவதன் மூலம்தான் அது நடந்ததே தவிர, ஆய்வுக் குழு கண்டறிந்தது போல அறியாமையை அகற்றி விட்டதால் அல்ல.

_____________________________

2. நைட்ரஸ் ஆக்சைட் என்ற மயக்க வாயு இல்லாததால் அவசரமில்லாத (elective surgery) அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட்டிருக்கிறது சென்னை அரசு பொது மருத்துவமனை. நவம்பர் 29 செவ்வாய் கிழமை அன்று அவசர சிகிச்சைகளுக்கு முதலிடம் கொடுத்து 64 அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்தப்பட்டன, 29 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.

‘மழை வெள்ளத்தினாலும், மின்சார தடையினாலும் உற்பத்தி 50% குறைந்து விட்டது. 24 மணி நேரமும் இயக்கப்பட வேண்டிய தொழிற்சாலையில் மின் தடை காரணமாக உற்பத்தி தடைப்பட்டது. அதனால்தான் ஜிஎச்சுக்கு  தேவைப்படும் 10 சிலிண்டர்களுக்கு பதிலாக 7 சிலிண்டர்கள் அனுப்பினோம்’ என்று காரணம் சொல்கிறார்கள் ஐநாக்ஸ் ஏர் புரோடக்ட்ஸ் என்ற நைட்ரஸ் ஆக்சைடு அனுப்பும் நிறுவனம்.

உண்மையில் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கூட கையிருப்பில் இருக்காது என்பதுதான் சென்னை அரசு மருத்துவமனையில் வாடிக்கை. நோயாளிகளை வெளியில் அனுப்பி கடைக்குப் போய் விலைக்கு வாங்கி வரச் சொல்வதுதான் நடைமுறை. அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நைட்ரஸ் ஆக்சைட் சிலிண்டர்களை அப்படி கடையில் வாங்கி கொண்டு வரும் சாத்தியம் இல்லாததால் விஷயம் வெளியில் வந்து விட்டிருக்கிறதே தவிர, இவர்கள் சப்பைக் கட்டு கட்டும் மழை, மின்தடை காரணம் இல்லை. சில உதாரணங்கள் கீழே:

ஒரு நாள் ஊசி போடுவதற்கான 10 மிலி சிரிஞ்சு இருக்காது. 5 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். ஒரு நோயாளிக்கு 10 மிலி மருந்து செலுத்த வேண்டுமென்றால் இரண்டு சிரிஞ்சுகளை நிரப்பி முதல் சிரிஞ்சுடன் ஊசி குத்தி விட்டு, அதை அப்படி பிடித்துக் கொண்டிருந்து விட்டு, சிரிஞ்சை மட்டும் கழற்றி விட்டு அப்படியே இரண்டாவது சிரிஞ்சை பொருத்தி ஊசி போட்டு முடிக்க வேண்டும்.

அடுத்த வாரம் 5 மிலி சிரிஞ்சு இருக்காது, 10 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். 4 மிலி மருந்து கொடுக்க 10 மிலி சிரிஞ்சை வீணாக்க வேண்டியிருக்கும்.

இதற்கு எந்த மழை அல்லது மின்தடை காரணம்?

ஒரு நாள் அளவு 7 கையுறைகள் மட்டும்தான் இருக்கும். 7.5 அளவு கை உடைய மருத்துவர் விரல்கள் வலிக்க வலிக்கத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு வாரம் கழித்து 7.5 அளவு கையுறை மட்டும்தான் வழங்கப்படும். கை அளவு சிறிதாக இருக்கும் ஒருவர் நிமிடத்துக்கொரு முறை கையுறையை இழுத்து விட்டுக் கொண்டே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

இவற்றுக்குமா மழை பெய்ததும், மின்சார தடையும் காரணமாக இருக்கும்?

இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்யும் அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் புதிய மருத்துவமனைகளாக மாற்றி நடத்த திட்டமிட்டுள்ளது!

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது மருத்துவத்தில் அரசின் அக்கறையின்மையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும், மறுபுறத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு அரசே முன்னின்று உதவி செய்வதையும், காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு கடை விரிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

– அப்துல்

சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!

75

மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இது தவிர அஃப்ராஸ், பின்லாதின், சௌதி கேட்டரிங் போன்ற நிறுவனங்களும் சிற்சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன.

சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். அதாவது லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் பஹா எல்தின் ஹரிரி உருவாக்கிய இந்நிறுவனத்தில்சௌதியின் முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின் குடும்பமும் முக்கியமான பங்குதாரராக கருதப்படுகிறது. இது சௌதியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனமே கேகேஐஏ வில் பெரிய ஒப்பந்ததாரராக நீடித்து வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவரும் கேகேஐஏ சௌதி ஓஜரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தினர் (பங்களா தேஷ்). இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் குறைந்த அளவில் வேலை செய்து வருகிறார்கள். விமானநிலையம், ஊழியர்களுக்கான விடுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இதில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை ஓராளவு செய்து வந்தாலும், விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் போதிலும் சௌதி ஓஜர் விமான நிலையத்தின் மீப்பெரும் ஒப்பந்த நிறுவனமாக தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு அது ஆளும் கும்பலைச் சார்ந்த நிறுவனம் என்பதைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு நாடுகளிலோ இரண்டு வகை தொழிலாளர்கள் இருப்பார்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் சௌதியைப் பொருத்தவரை அனைவருமே ஒப்பந்தத் தொழிலளர்கள் தாம். நிரந்தரத் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சங்கமாக கூடும் உரிமையையோ, தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நடைமுறையையோ சௌதியில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, வேறு சலுகைகளோ நிறுவனத்தின், உயரதிகாரிகளின் விருப்பத்தைப் பொருத்தது. உரிமையாக யாரும் கோர முடியாது. இதனால் கேள்வி முறையின்றி நிர்வாகத்திற்கு அடிபணிபவர்களும், கருங்காலிகளுமே இதுபோன்ற சலுகைகளையும் பதவி உயர்வையும் பெறுவது சௌதியில் சாதாரணம்.

இந்த அடிப்படையில் கடைநிலை ஊழியர்களிலிருந்தே கருங்காலிகளைத் தேர்ந்தெடுத்து ஃபோர்மேன்களாகவும், சூபர்வைசர்களாகவும் இன்னும் சில கங்காணி பதவிகளில் அமரவைத்து (சில ஆண்டுகளுக்கு முன் கடைநிலை ஊழியராக வந்த ஒருவர்தான் இன்று மருத்துவ அதிகாரி. ஊழியர்களை பரிசோதித்து இவர் அங்கீகரித்தால் மட்டுமே உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியும்) உபரிநேர வேலைச் சுரண்டல், விடுதிகளில் அடிப்படை உரிமைகளைக் கூட செய்து தராமல் தொழிலாளர்களை ஏய்த்து வருகிறார்கள். இன்று சௌதி ஓஜர் நிறுவனம் இந்த கங்காணிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறது.

தற்போது இந்நிறுவனம் முனைய(டெர்மினல்) துப்புறவு பணியாளர்களை மட்டும் லிபனெட் எனும் நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் மூலம் மாற்றியிருக்கிறது. தொழிலாளர்களிடம் முறைப்படி அறிவிக்கவோ, தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தங்களோ எதுவுமின்றி, சௌதி ஓஜரில் பணிபுரிந்தவர்கள் அப்படியே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தினசரி வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக செய்தவர்கள் இன்று புதிய நிறுவனத்திற்காக செய்கிறார்கள். ஐநூறு ரியால் அடிப்படை சம்பளத்தில் வேலை செய்தவர்கள் புதிய நிறுவனத்தில் நூறு ரியால் மட்டும் அதிகம் தருவதாக வாய் மொழியாக கூறியிருக்கிறார்கள்.

பகரமாக எட்டுமணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். அது உபரி நேர வேலையாகவும் கணக்கிடப்படாது. அதாவது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை வாங்கிவிட்டு 100 ரியால் மட்டும் அதிகமாக கொடுக்கப் போகிறார்கள். இந்த 12 மணி நேரத்தில் தேனீர் குடிப்பதற்குக் கூட இடைவெளி எடுக்கக் கூடாது, உணவு இடைவேளை (வேலை நேரமாக கணக்கிடப்படுவதில்லை என்ற போதிலும்) ஒரு மணிநேரத்திலிருந்து அரை மணியாக குறைப்பு, அதுவும் அறைக்குச் சென்று சாப்பிடாமல் வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் அசுத்தம் ஏதும் கண்டுபிடிக்கப் பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் அறைக்கு அனுப்பிவிட்டு அன்றைய தினத்தை பணிக்கு வராத நாளாக கணக்கிடுவது உள்ளிட்ட பல அடக்குமுறை விதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை வதைக்கிறது.

மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் ஊர் சென்று வரலாம் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறது. அதுவும் ஒருவழி விமான பயணச்சீட்டு மட்டுமே லிபனெட் கொடுக்கும் இன்னொரு வழி பயணச்சீட்டை ஊழியர் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கிரமாக அறிவித்து வருகிறது. இவைகளை எதிர்த்து முணுமுணுத்த ஒரு தொழிலாளியை தனியறைக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள்.

மறுபுறம் சௌதி ஓஜர் நிறுவனமோ புதிய நிறுவனத்தின் அடக்குமுறை பிடிக்காமல் ”நாங்கள் சௌதி ஓஜரிலேயே இருக்கிறோம் வேறு பகுதிகளில் வேலை கொடுங்கள்” என்று வருபவர்களை எந்த வாய்ப்புக்கும் இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறது. மட்டுமல்லாமல் படிப்படியாக எல்லா பகுதிகளையும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அடக்குமுறை தாங்காமல் திரும்பி வருபவர்களுக்கு சாப்பாட்டு டோக்கன்களை கூட கொடுக்காமல் பட்டினி போடுகிறது. சௌதி ஓஜரிலேயே வேலை தாருங்கள் என்று திரும்பி வந்தவர்களை இருபது நாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டது. அதிகாரிகளுக்கு வேண்டிய சிலரை மட்டும் தண்டனை மாறுதலாக ஜித்தாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக ஆங்காங்கே கிளம்பிய முணுமுணுப்புகள் திரளத் தொடங்கிய வேளையில், நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்வு தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்களிடையே ஏற்படுத்தப்பட்ட போராட்ட உணர்வு சிதறடிக்கப் பட்டிருக்கிறது, மட்டுமல்லாது போராட்ட முயற்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கொஞ்சம் வைராக்கியம் காட்டிய தொழிலாளர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிகழ்வின் பிறகு தங்கள் விதியை நொந்தபடி வேலைக்கு திரும்பி விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள். ஆனால், மறுபக்கம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக வேலை செய்துவரும் வயதான ஒரு தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே கூறுகிறார், “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”

இது நம்பிக்கையா? இயலாமையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் குடும்பத்தைக் காணாது கடல் கடந்து வேலை செய்தாலும் வளமையை பெறமுடியாமல் தடுப்பது, வர்க்க உணர்வு கொள்ளாமல் இருப்பதும், துன்பங்களின் கண்ணீரை கடவுளின் மாயக்கையை எடுத்து துடைத்துக் கொள்ள நினைப்பதும் தான் என்பது அவருக்கு தெரியவில்லை. மத வேறுபாடுகளோ, நாட்டின் எல்லைக் கோடுகளோ சுரண்டுபவர்களிடம் எந்த பேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் சுரண்டும் வர்க்கமாய் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். ஆனால் ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் முதுகில் உரைத்த பின்பும் பிரார்த்தனையோடு முடித்துக் கொள்வதா? முயற்சிகள் தொடர்கின்றன. பலனளிக்குமா? காத்திருப்போம்.

–    வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து….

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!

12-1-2012 வியாழன் மாலை 5.30 மணிக்கு புதுவை சிங்காரவேலர் சிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.

கூட்ட நாளன்று பாண்டிச்சேரியின் இன்றைய முதல்வரான என்.ரெங்கசாமியின் அடியாள் படை தொண்டரடிப்பொடி ஒருவன், எங்கள் முதல்வரை திட்டிப் பேசிய நீங்கள் எப்படி பொதுக்கூட்டம் நடத்திவிடுவீர்கள் என பார்த்துவிடுகிறேன், என தொலைபேசியில் மிரட்டியுள்ளான். ஏற்கனவே எல்லா தொழிற்பேட்டை பகுதிகளிலும் விரிவாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, அணிதிரட்டிய போது தானே புயலின் கோர பாதிப்பு, அரசின் பாராமுகம் மற்றும் மெத்தனப் போக்கைக் கண்டித்ததோடு சட்டப்படி தொழிலாளர் உரிமைக்கு உதவ வேண்டிய அரசு முதலாளிகளின் எடுபிடிகளாக தொழிலாளர் விரோதப் போக்கிலிருப்பதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் பேசியிருந்தனர். இதனடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது வர்க்க ஒர்றுமையை நிரூபிக்கும் விதமாக பெருந்திரளாக பங்கேற்றனர். சுமார் ஆயிரம் பேர் வரை திரண்டிருந்த இப்பொதுக்கூட்டத்தில் யூனிலீவர் ஆலைத் தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். இதுதவிர பல்வேறு ஆலையிலிருந்தும் கணிசமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்

5.30 மணிக்கு இந்துஸ்தான் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர். அய்யனார் தலைமையில் கூட்டம் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது. வெல்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் விநாயகம், ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர் லோகநாதன், எல்&டி பட்டாளித் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமர், புதுவை புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆகியோர் HUL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் சட்டவிரோதமாகத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதைக் கண்டித்தும் பேசினர். தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாகத் திரண்டு பாண்டிச்சேரி முதலாளிகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு சவக்குழி தோண்ட அறைகூவினர். தொழிலாளர்களுக்கே உரிய போர்க்குணத்துடன் நேர்படப் பேசினர்.

கண்டன உரை முடிந்ததும் சென்னை புமாஇமுவின் எழுச்சிமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பார்த்தசாரதி, தொழிலாளர்கள் தங்களது உரிமைப் பிரச்சினைகளுக்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நம்புவது வீணான வேலை என்பதை தனது அனுபவத்தின் மூலமாக நிரூபித்தார். மாறாக தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கு வர்க்க ஒற்றுமையுடன் போராடுவதே தீர்வு என்பதனை மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கூறி விளக்கிப் பேசினார்.

அதன்பின் சிறப்புரையாற்றிய தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வருங்கால தொழிலாள வர்க்கத் தலைவர்களை முதலாளிகள்தான் உருவாக்குகிறார்கள் என HUL நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மேடையில் அறிமுகப்படுத்தி எழுச்சிமிகு உரையாற்றினார். தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதென்பது தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்குவதற்கு முழுமையான தீர்வாகாது. தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போதுதான், முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்து தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும். எனவே தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தங்களது போராட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என அரசியல் போராட்டங்களுக்கு அணிதிரள அறைகூவினார். தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் பங்கெடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட அரசிய போராட்டங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டு பேசினார்.

இறுதியில் சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் முடிவடைந்தது.

-புஜதொமு செய்தியாளர், புதுவை

கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு

கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.

பால்-தாக்கரே
சிவ சேனை தலைவர் பால் தாக்கரே

மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.

விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் தோன்றியக் கலவரங்களில் பெரும்பாலானவற்றிற்கு தாக்கரே மீதும், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியர் மீதும் பதிவு செய்யப் பட்டது.  ஆனால் பெரும்பாலானவை நடவடிக்கையின்றி நின்று விட்டது.  கலவரம் தோன்றுவதற்கும், தோன்றிய பின்னரும் பல வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153A யின் கீழ் விரோதத்தை தூண்டுவது என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் சில மட்டும் வந்திருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட போராட்டம் மற்றும் மேல் முறையீடுகள் போன்றவற்றிற்கு பிறகு சில வழக்குகளின் விவரங்களை 2011-ல் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுருங்க சொல்ல வேண்டுமென்றால் 1995 முதல் 1999 வரை சிவசேனா, பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த போதும், அதற்கு பிறகு மூன்று முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் தாக்கரே மீதான குற்ற வழக்கை கொண்டு செல்வதில் எந்த வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. வழக்குகள் முடிக்கப்படவுமில்லை, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய அரசின் அனுமதி கோரப்படவுமில்லை.  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான முடிவுகள் குறித்த விபரங்கள் சமீபத்தில் வெளியான மீனாமேனன் என்பவரின் மும்பை வன்முறை மற்றும் அதற்கு பின்னர்: (நாள்பட்ட உண்மைகள் மற்றும் ஒத்திசைவு) என்ற புத்தகத்திலிருந்து திரட்டப்பட்டது.

சுருக்கம்: டிசம்பர் 2004-ல் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது பதிவான காவல் துறை வழக்குகள் தொடர்பான நகல்கள், அவற்றின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை காவல்துறையிடம் கோரி மனுச்செய்தேன்.  நான் மேலும் அந்த வழக்குகளின் நிலை, அவற்றில் ஏதேனும் வாபஸ் பெறப்பட்டிருந்தால் அது குறித்த ஆவணங்களின் நகல்களையும் கோரியிருந்தேன்.  மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து 19 மே 2007 நாளிட்ட பதிலின் வாயிலாக, காவல்துறை ஆணையர் அலுவலக பொதுத் தகவல் அலுவலா், சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரே மற்றும் அதன் கட்சி பத்திரிக்கை சாம்னாவின் ஆசிரியர் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட அக்டோபர் 1992 முதல் டிசம்பர் 1993 வரையிலான காலத்திற்கு தொடர்புடைய 8 வழக்குகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்த வழக்குகள் 20 ஜனவரி 1993-லும், 1 அக்டோபர் 1993-லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை 30 ஜூலை 1993-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 4 வழக்குகளும் தாதர் நீதிமன்றத்திலிருந்து பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளில், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இரண்டு வழக்குகள் சாட்சியம் போதவில்லை என முடிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மேல் எந்த விவரமும் காணப்படவில்லை. எனது முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால் 2வது மேல் முறையீடு தலைமை தகவல் ஆணையரால் 30 நவம்பர் 2009-ல் விசாரிக்கப்பட்டது. திரு ஜோஷி தனது 8 அக்டோபர் 2010 நாளிட்ட உத்திரவில் பின்வருமாறு உத்திரவிட்டார்.

திருமதி மேனன் அவர்களின் இதே பொருள் குறித் மேல் முறையிட்டின் மீது 17/04/2007-ல் ஆணையம் தெரிவித்த உத்திரவின் தொடர்ச்சியாக, பால் தாக்கரே மீதான வழக்கில் எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பிரிவு 8(1)(g)ன் கீழ் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.  எனவே இந்த மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பையும் விசாரித்தபின் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் ஏதும் சொல்லியிருப்பின்,அது தொடர்பாக அரசால் முன்வைக்கப்பட்ட வேண்டுகை வாசகங்கள், மற்றும் அதன் மீது நீதிமன்றம் தெரிவித்த முடிவு ஆகியவற்றின் முடிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.

எனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கான பதில்கள் 18  ஜனவரி 2011 -லிருந்து வரத் துவங்கியது.  முதல் தவணையாக 18 ஜனவரி 2011-ல் வந்த பதிலில் தாதர், மாஹிம், மற்றும் சிவாஜி பார்க் காவல்நிலையம் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டது.  தாதர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு
153A-ன் கீழ் குழுக்களுக்கிடையே விரோதம் உருவாக்குவது, வெறியூட்டும் எழுத்துக்கள் எழுதுவது மற்றும் இதர பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 3 வழக்குகள் மூடப்பட்டுள்ளது.

இரண்டு 31 டிசம்பர் 1991-லும், ஒன்று 26 டிசம்பர் 1991-லும் மூடப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் 18 அக்டோபர் 1996-ல் இ.த.ச.153A ன் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளில் 153A ன் கீழான வழக்குகளை குற்றவியல் நடைமுறை தொகுப்பின் பிரிவு 468(2)(c)ஐ குறிப்பிட்டு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது (அதாவது காலவரையரை தாண்டி நடவடிக்கை எடுக்கக் கூடாது – 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை அந்தந்த தண்டனையை பொறுத்தது). மேலும் 3 வழக்குகளில் நீதிமன்றத்தால் சாட்சியம் ஏதுமில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டதால் மூடி முடிக்கப்பட்டது.  ஒரு வழக்கில் ‘C’ தொகுப்பு புலனாய்வு அதிகாரியால் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் நிலுவையிலுள்ளது. மேலும் 153A ன் கீழான ஒரு வழக்கில் தாக்கரேயை கைது செய்வதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் நிலுவையிலுள்ளது.

மாஹிம் காவல் நிலையத்தில் மூன்று பழைய வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒரு வழக்கில் 15 நவம்பர் 1990-ல் தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு 1984-ம் வருடத்திய பழைய வழக்கில் 153A ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஆனால் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பழையதாகவும், கிழிந்தும், தெளிவில்லாமலும் உள்ளது.  1991-ம் ஆண்டிலான மற்றொரு வழக்கிலும் இ.த.ச.153A ன் கீழாகவும், இன்ன பிற பிரிவுகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் அமர்வு நீதிமன்றம், பாந்த்ராவிற்கு 27 செப்டம்பர் 1998-ல் மாற்றப்பட்டுள்ளது.  6 ஏப்ரல் 2004-ல் மாநில அரசிடமிருந்து வந்த உத்திரவின் அடிப்படையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  வாபஸ்க்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  2002-ல் பதியப்பட்ட பிரிவு 153A ன் கீழான ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.  வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது.  மற்றொரு அவமதிப்பு தொடர்பான 2004-ம் ஆண்டு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற நடவடிக்கையில் இருந்த போதும் குற்றம் சாட்டப்பட்ட தாக்கரே இன்னும் கைது செய்யப்படவில்லை.

காம்தேவி காவல் நிலையத்தில் அவர்களின் 30 டிசம்பர் 2010 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது என்னவென்றால், அவர்களுக்கு 1984-ல் இ.த.ச.பிரிவுகள் 153A, 295A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், இந்த குற்றங்கள் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாக அது குறித்து தகவல் ஏதுமில்லை என்ற நிலையில் தகவல் எதுவும் தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்கு முன்பாகவும் தாக்கரே மீது பல வழக்குகள் பதிவுசெய்யப் பட்டிருந்த போதிலும் அவைகளின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்களின் படி, அதாவது காவல்துறை குற்றப்பிரிவு 3 உடைய 12 ஜனவரி 2011 நாளிட்ட கடிதத்தில் இரண்டு வழக்குகள் ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் 28 மார்ச் 1988ல் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு காவல்துறை குற்றவியல் பிரிவு 3ஐ இந்த வழக்குகள் தொடர்பான புலனாய்வு மேற்கொள்ள 30 மார்ச் 1988-ல் தெரிவிக்கப் பட்டுள்ளது.  புலனாய்வின்படி இ.த.ச.பிரிவு 153A, 153B மற்றும் 505(1)(c)ன் கீழான குற்றம் குறித்து ஏராளமான சாட்சியங்கள் உள்ளது எனவும், அதனால் காவல் ஆணையர் தனது 9 ஜூன் 1988 நாளிட்ட கடிதம் வாயிலாக அரசு உள் துறை செயலாளரிடம் நீதிமன்றத்தில் தாக்கரே மீது வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர், 3 பிப்ரவரி 1995ல் மற்றொரு கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி வேண்டிய கடிதம் மீது விரைவு முடிவு எடுக்க வேண்டியுள்ளார்.

13 ஏப்ரல் 2000-ல் கூடுதல் தலைமைச் செயலாளா், உள்துறை அனைத்து காவல் நிலையங்களிலும் தாக்கரே மீதுள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ள அனைத்து வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அரசிற்கு சமர்ப்பிக்க கேட்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க 25 ஏப்ரல் 2000-ல் குற்றப்பிரிவு 3ன் காவல் அதிகாரி திரு எம்.எம்.குல்கர்னி அனைத்து ஆவணங்களையும் சிறப்பு கிளை 1ன் முன்பாக சமா்ப்பித்துள்ளார்.  அதன் பிறகு இன்றுவரை எந்தவித அனுமதியும் அரசிடமிருந்து பெறப்படவில்லை என தகவல் அறியும் உரிமை மனுவிற்கான பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் அனுமதி பெறப்படாதவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தாக்கல் ஆகாது.  அவை நிலுவையில்தான் இருக்கும்.

(மேற்படி பகுதிகள் திருமதி மீனாமேனன் என்பவரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.  திருமதி மீனாமேனன் தி இந்து நாளிதழின் மும்பை பிரிவு துணை ஆசிரியர் என்பதுடன், மும்பை பத்திரிக்கை பிரிவிற்கு துணை தலைமையாளரும் ஆவார்)

ஆங்கில மூலம் – திருமதி மீனா மேனன், தி இந்து
தமிழாக்கம்:  சித்ரகுப்தன்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம் !!கூடங்குளம் அணு உலையை மூடு ! ஆர்பாட்டம் !!

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கே அழுத்தவும்

ஆதார் : விலை போகும் உங்கள் தகவல்கள்!

35

இந்த செய்தித்தாள் நடத்திய விசாரணை ஒன்றில் உங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் தனியார் சேர்க்கை ஏஜன்சிகளிடம் கொடுக்கும் முக்கியமான உடற்கூறு மற்றும் மற்றும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்களின் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அச்சங்களை உறுதி செய்வதாக இது இருக்கிறது.

இந்தியக் குடிமக்களிடமிருந்து மதிப்பு வாய்ந்த தகவல்களை திரட்டும் பொறுப்பை பெற்றுள்ள சேர்க்கை ஏஜன்சிகள், இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் (UIDAI) அமைத்துள்ள விதிமுறைகளை மீறி, சேர்க்கை பணிகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கியிருக்கிறார்கள். இந்த துணை முகவர்கள் யார் யார் என்பது பற்றி UIDAIக்கு எந்த தகவலும் இல்லை. இத்தகைய சட்ட விரோதமான நிறுவனங்கள் மூலம் தகவல் திரட்டப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. இந்த நாளிதழ் தொடர்பு கொண்ட பல சேர்க்கை நிறுவனங்கள் பணியை ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்கு வெளிப்பணியாக கொடுத்திருப்பதாகவோ அல்லது அத்தகைய முகவர்களைத் தேடுவதாகவோ தெரிவித்தன.

இந்த நிருபர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் விற்பனை நிறுவனம் என்ற போர்வையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சேர்க்கை ஏஜன்சியை தொடர்பு கொண்ட போது, மும்பையில் ஆதார் எண்களை திரட்டுவதற்கான முகமை தருவதாச் சொன்னார்கள். அவருக்கு மராத்தி மொழி அறிவு சுத்தமாக இல்லை என்றும், தகவல் திரட்டும் பணியில் முன் அனுபவம் இல்லை என்றும் தெரிவித்த பிறகு கூட, சுமார் 50 லட்ச ரூபாய்க்கு 30 எந்திரங்களை வழங்குவதாகவும், வசதிப்பட்ட சமயத்தில் மும்பையில் பணிகளை ஆரம்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் பல ஏஜன்சிகள் பணியை வெளியில் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலர் UIDAI வகுத்துள்ள முறைக்குள் செயல்படுவது எப்படி என்று தெரியவில்லை என்று ஜாக்கிரதையாக பதில் சொன்னார்கள்.

ஆதார் அடையாள அட்டை - விலைபோகும் தகவல்கள்
நந்தன் நீலகேணி

“அலங்கித் பின்செக், ஆதார் சேர்க்கை பணியை பிற தனியார் அமைப்புகளுக்கு வெளிப் பணியாக கொடுத்தது தொடர்பாக பெங்களூரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நிறுவனம், சண்டிகரில் சேர்க்கைப் பணிகளை ஒரு தனிநபருக்கு துணை ஒப்பந்த பணியாக வழங்கியிருக்கிறது. அந்த நபர் இன்னும் பலருக்கு வேலையைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். மைசூரில் பொய்யான அடையாளங்களை உருவாக்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஹூப்ளியில் ஆதார் தகவல் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூன்று மடிக்கணினிகள் திருடு போயின,” என்று மேத்தியூ பிலிப் என்ற சமூக ஆர்வலர் சொல்கிறார். அவர் பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆதார் திட்டம் சட்ட விரோதமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார். அலங்கித்தின் கம்பெனி செயலர் வினய் சாவ்லா, தகவல் திரட்டும் பணி வெளியில் கொடுக்கப்பட்டதை ஒத்துக் கொண்டார். ஆனால், UIDAIயிடமிருந்து வழிமுறைகள் வந்த பிறகு அத்தகைய வழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

“UIDA இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஒப்பந்த பணி கொடுத்த வழிமுறையே பெரும் சந்தேகத்துக்குரியது. டெண்டர் முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. சேர்க்கக் கோரி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு உடற்கூறு தகவல் சேகரிப்பு அல்லது பெரும் அளவில் தகவல் சேகரிப்பில் முன் அனுபவம் கிடையாது. ஆதார் எண்ணை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையோ தரவுகளையோ சரிபார்க்கும் நிபுணத்துவம் அவர்கள் வேலைக்கு அமர்த்தும் பணியாளர்களுக்கு கிடையாது.” என்று சொல்கிறார் வழக்கறிஞரும் UIDக்கு எதிரான ஆர்வலருமான பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ் பப்பர்ஜங்.

UIDAI அங்கீகரித்துள்ள நிறுவனங்களின் பட்டியல் வெங்கடேஷின் கவலைகளை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. 2010ல் அசாமில் ஆதார் தகவல்களை திரட்டும் ஒப்பந்தப் புள்ளி பாருநகர் டீ எஸ்டேட்ஸ் என்ற தேயிலைத் தோட்டத்துக்கு வழங்கப்பட்டது. பீகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தகவல்கள் திரட்டுவதற்கான அங்கீகாரம் சென்னையைச் சேர்ந்த ஹெர்ம்ஸ் I டிக்கெட்ஸ் என்ற பயணம் மற்றும் பயணச்சீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரு கணினி விற்பனை மற்றும் பராமரிப்புக் கடை, அச்சகங்கள், கல்வி மற்றும் தரும நிறுவனங்கள், தெருவணிகர்களின் தேசிய கூட்டமைப்பு, சர்க்கரை ஆலை, காப்பீட்டு நிறுவனங்கள், BPOக்கள், நிதி நிறுவனங்கள், நிலக்கரி மற்றும் உருக்கு நிறுவனங்கள், கட்டிட நிறுவனங்கள் போன்றவை இப்போது சேர்க்கை ஏஜன்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அடங்கும்.

பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கை ஏஜன்சிகளுக்கு அவர்களுக்குத் தெரியாத மொழி பேசப்படும் மாநிலங்களில் உடற்கூறியல், வாழ்வியல் மற்றும் தனிநபர் தகவல்களை திரட்ட ஒப்பந்த புள்ளிகள் வழங்கபட்டிருந்தன. அந்த மாநிலங்களின் உள்ளூர் நிலைமைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இல்லை. உதாரணமாக, ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி கல்வி சங்கம் என்ற கல்வி அறக்கட்டளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தகவல் திரட்டும் பணியை பெற்றுள்ளது. ஆந்திர பிரேதசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜினா டெக்னாலஜிஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர்க்கை நடத்த அங்கீகரிக்கப்பட்டிருந்க்கிறது, ஆனால் ஆந்திராவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த தவறான முறை பதிவு ஏஜன்சிகள் உள்ளூர் ஏஜன்டுகளை பணிக்கு அமர்த்தியதற்கு காரணமாக இருக்கிறது. “ஒரு நிறுவனம் அவ்வளவு பெரிய அளவிலான தரவுகளை கையாளுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பணியை வெளியில் கொடுக்காமல் நாங்கள் சமாளித்தாலும், குறிப்பிட்ட பகுதியில் பணியாளர்களை வழங்குவதற்கு உள்ளூர் மனிதவள ஏஜன்சிகளைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது” என்று சேர்க்கை பதிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவர், பெயர் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் சொன்னார்.

UIDAI தலைவர் நந்தன் நீலகேனி மற்றும் பதிவுகளுக்கான உதவி இயக்குனர் அலின் காச்சி ஆகியோருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அச்சுக்குப் போகும் வரை பதில் கிடைக்கவில்லை. UIDAI செய்தித் தொடர்பாளர் அவதேஷ் குமார் கருத்து சொல்வதற்கு கிடைக்கவில்லை.

ஆங்கில மூலம் : உங்கள் ஆதார் தகவல்களை திரட்டுவது யார்?

நன்றி: சன்டே கார்டியன்
தமிழாக்கம்: செழியன்

சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!

அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளிக்கு விளைச்சலில் உரிமை இல்லை, அது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையானது. கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு கட்டிடத்தின் மீது உரிமை இல்லை, அது முதல் போட்ட முதலாளிக்கு உரிமையானது. தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளிக்கு உற்பத்திப் பொருளின் மீது உரிமை இல்லை, அது வேலை வாங்கிய முதலாளிக்குச் சொந்தமானது.

இதுதான் மனித வரலாற்றின் மிகப்பெரிய மனித உரிமை மீறல். ‘தனிச் சொத்தும் லாபமும் இல்லா விட்டால் வேலை செய்ய ஊக்கம் இருக்காது’ என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். உண்மையில் உற்பத்தி எல்லாமே, விளைபொருளாலிருந்து சொத்து, லாபம் சேர்க்க முடியாத தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவாகிறது.

ஒரு விவசாயத் தொழிலாளரின் எண்ணங்களாக இந்த நிதர்சனத்தின் சோகங்களை இந்தப் பாடலில் கேட்கலாம். இதைக் கேட்கும் போது ‘நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்’ என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.

எரின் புரோக்கோவிச் என்ற திரைப்படத்தில் கணவனைப் பிரிந்த தாயாக நடிக்கும் ஜூலியா ராபர்ட்ஸ், செய்த வேலைக்குத் தனக்குச் சேர வேண்டிய பணம் மறுக்கப்படும் சூழலில் ‘நான் என் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தில் உழைத்து செய்த வேலை, அதன் பலனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று பொங்கி எழுவார். இந்தப் பாடலில் வரும்

‘கத்துற பிள்ளைய தொட்டில்ல போட்டுட்டு கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்’

என்ற வரி ஒரு தாயின் அத்தகைய சோகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த உழைப்பின் பலன் அவருக்கும் இல்லை, தாயின் அருகாமையை இழந்த குழந்தைக்கும் இல்லை. ஏனென்றால் நிலம் அவர்களது சொத்து இல்லை. விவசாயத் தொழிலின் கடும் உழைப்பு, உடல் வருத்தம் இவற்றைச் சொல்லும் வரிகள் கேட்பவரையும் அந்த வலியை உணர வைக்கின்றன.

 “ஏ ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு நம்ம உழப்பச் சொரண்டி சேர்த்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த இல்லாம ஒழிக்க வாருங்கம்மா”

தனது உழைப்பின் பலனை சுரண்டி உல்லாசமாக வாழும் கூட்டத்தின் மீதான அவரது கோபம் நியாயமானது, புரிந்து கொள்ளக் கூடியது, ஆதரிக்கப்பட வேண்டியது.

விவசாயத் தொழிலாளரை வைத்துப் பாடப்படும் இந்தப் பாடல் உழைப்பை விற்று கூலி வாங்கி வாழ்க்கை நடத்தும் அனைத்துத் தொழிலாளருக்கும் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்கள், தொழிற்சாலை உழைப்பாளிகள், ஓட்டுனர்கள் என்று உடலுழைப்பு செலுத்துபவர்களுக்கு தமது உழைப்பின் கருவிகளும் சொந்தமில்லை, பலனும் சொந்தமில்லை.

புரிதலுக்காக நடுத்தர வர்க்கம், அதிக சம்பளம் என்று ‘பொறாமைக்குள்ளாகும்’ ஐடி ஊழியர்களை எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக உழைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் அல்லது கண் போல பராமரித்து ஒரு வாடிக்கையாளர் உறவை வளர்த்திருக்கலாம். குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை விட்டுப் போக நேர்ந்தால், அத்தனையையும் இறக்கி வைத்து விட்டு வெறுமையுடன் அடுத்த நிறுவனத்துக்கு நகர வேண்டியதுதான். அங்கும் தனது உழைப்பைச் செலுத்தி அதன் பலனிலிருந்து விலகியே வாழ வேண்டியிருக்கும்.

கூலிக்கு உழைப்பை பரிவர்த்தனை செய்யும் சமூகத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்கள், வாழ்வின் வெறுமை யாராலும் கணக்கிடப்படவில்லை. இதற்கு தீர்வுதான் என்ன? வயலில் விவசாயக் கூலித் தொழிலாளி சொல்கிறார் கேட்போம்.

=================

சாமக்கோழி கூவும் நேரத்திலே

தை மாதத்துப் பின்னிரவின் கரிய இருளில் உதறி எடுக்கும் பனியையும் குளிரையும் உதறி எறிந்து கூடைக்குள் முடங்கிக் கிடக்கும் கோழியையும் எழுப்பி கொக்கரக்கோ பாடச் சொல்லி விட்டு அறுவடைக்குச் செல்வான் எங்கள் கூலி விவசாயி. அறுவடை செய்யப் போகும் விளைச்சலில் தனக்குப் பங்கில்லை என்பது தெரிந்தும் மகிழ்ச்சியோடு உழைக்கிறான். அந்த மகிழ்ச்சி உழைத்து வாழும் ஒழுக்கத்தால், பெருமிதத்தால் வந்த மகிழ்ச்சி.

சாமக்கோழி கூவும் நேரத்தில….ம.க.இ.க பாடல் – ஆடியோ!ஏ தானே னன்னே னானே னானே
ஏ தானே னானே னானே
தானே னானே
தானே னானே

ஏ… சாமக்கோழி கூவும் நேரத்திலே – நாங்க
சம்பா அறுவட செய்யப் போனோம்
விளக்கு வக்கிர நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

கோரஸ் : விளக்கு வைக்கிற நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

ஏ… கையுக்குள்ள தூரை சேர்த்து வைத்து – கோணக்
கருக்கருவாள வீசி வீசி
பண்ண வயலில நெல்லறுத்தும் – நம்ம
மண்ணுக் குடிசையும் மாறவில்ல

கோரஸ் : மண்ணுக் குடிசையும் மாறவில்ல

ஏ… அள்ளிப் போட்டு நெல்லக் கட்டுகட்டி – நாங்க
ஆளும் பேருமாக தூக்கிக்கிட்டு
ஊசி வரப்புல போகையிலே – ஏங்கி
மூச்சு விட எம்மா… முடியல..,

கோரஸ் : மூச்சு விட எம்மா முடியல

ஏ… கொட்டும் மழையில கொடலங்கீத்துப் போட்டு
குறுவைப் பயிருக்கு களையறுத்தோம்
கத்துற புள்ளைய தொட்டில போட்டுட்டு
கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

கோரஸ் : கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

ஏ.. ஊத்தும் பனியில தூங்காம – பண்ண
வூட்டு வயலுக்கு நீர் பாய்ச்சி…
மாட்டப் போல தெனம் பாடுபட்டோம் –  நம்ம
வாட்டும் வறுமையும் தீரவில்ல

கோரஸ் : வாட்டும் வறுமையும் தீரவில்ல

ஏ.. ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு – நம்ம
ஒழப்பச் சொரண்டி சேத்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த
இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

கோரஸ் : இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

ஏ.. ஆள மாத்தி ஆளு ஓட்டுப் போட்டு – அய்யோ
என்ன கண்டோமம்மா நீயே சொல்லு
ஆளுற கூட்டத்த பாடைக்கு அனுப்ப
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

கோரஸ் : ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

சுற்றிவளைக்கப்படும் சீனா!

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது  என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம்  கிளம்பியுள்ளது.

கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர  விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.

மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டுசெல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரைவழியாக  சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள  சீனாவின் இப்பெருந்திட்டத்தைத்  தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

மியான்மரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட  அமெரிக்கா முயற்சிப்பதாகக்  கூறப்பட்டாலும், உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ் பகுதி நாடுகளுடன்   அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட, 2009இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட  “கீழ் மேகாங் முன்முயற்சி” என்ற கூட்டமைப்பில் மியான்மரையும் சேருமாறு நிர்பந்திக்கிறது.

ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர்,  இப்போது மியான்மர்  மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும்  மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக  இந்தியப் பெருமுதலாளிகளின் சங்கமான “ஃபிக்கி” பூரிக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும், அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து, எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா.  இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும்  பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவபொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை  உறுதிப்படுத்துகின்றன.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை ஆஸ்திரேலிய அரசு  அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வர வேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்தான்,  இம்மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும், அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித்தான் உள்ளன.

இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும்  தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே  ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம்  இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன.  இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5  ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.  விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்  கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள  வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும்  பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி  நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன்விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி, பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார், அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம், பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால், அந்நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது.

அமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் ‘வல்லரசாக’ விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

ற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார்.  தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்ப்பதாக நாடகமாடி வரும் பா.ஜ.க. கும்பல், ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பதை வரவேற்று உள்ளது.  மைய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்த ஓய்வூதியத் துறையைத் தனியார்மயமாக்குவதற்கும், அதில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதற்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்ததே பா.ஜ.க.வின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இச்சமயத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.  1935-இல், காலனிய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது சட்டபூர்வமாக்கப்பட்டது.  1947க்குப் பின், ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்பதை உறுதிசெய்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.  எனினும், ‘சுதந்திர’ இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் கொள்கையோ, சட்டங்களோ நடைமுறையில் இருந்ததே இல்லை.  மைய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது.  1990  களில்தான் அரசு வங்கிகள், எல்.ஐ.சி., பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்  தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் சில நிறுவனங்கள் மட்டும்தான் தமது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.  ஆனால், அந்நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வ உரிமையாகக் கோர முடியாது.  சிறுசிறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் எதுவும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க,  அவர்களுக்கு முதலாளிகள் தம் பங்காக அளிக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியைக்கூட முறையாகச் செலுத்துவது கிடையாது.  உதிரித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கடைச் சிப்பந்திகள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான எந்தவிதமான சமூக நலத் திட்டங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.  பல கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமை காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்ற அவல நிலையில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் சித்திரம் இதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : இருப்பதையும் பறிக்கும் சாத்தான்!

இருப்பதையும் பறிப்பது என்பதையே நோக்கமாகக் கொண்ட தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையை 2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பறித்தது.  ஜனவரி 1, 2004 க்குப் பிறகு மைய அரசுப் பதவிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.  அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.

எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. தனியார்மயம் என்ற கொள்ளையைப் பாதுகாக்கும் சட்டபூர்வ குண்டர்படைக்கு எஜமானர்கள் வீசியெறிந்துள்ள எலும்புத் துண்டுதான் இந்தச் சலுகை.  மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு சேரும் தமது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கைவிரித்தன.

ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.  இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  இதோடு ஒப்பிடும்பொழுது அரசுத்துறை மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுண்டைக்காய்தான்.  2004 ஜூனில் ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தப் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்  இழுத்துப் போடும் நோக்கத்தோடு அத்திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரையும் சூட்டியது.  மைய  மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம் விருப்பப்படி இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.  இதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் தாராளமயம் சேமநல நிதி நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தோடு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க முயன்று வரும் மன்மோகன் சிங் கும்பல், இன்னொருபுறம் இத்துறையில் தற்பொழுது 26 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும்; நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக ஆணை மூலம் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ளவும்;  இத்துறையில் அந்நியக் கூட்டோடு நுழையும் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதமான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  இவையனைத்தும் நிறைவேறும்பொழுது, தொலைபேசித் துறையில் தனியாரை அனுமதித்த பிறகு அரசின் தொலைபேசி நிறுவனத்திற்கு எந்தக் கதி ஏற்பட்டதோ, அதே போன்ற நிலை  தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களையும், அவர்களின் வருங்கால வைப்பு நிதியையும் பாதுகாத்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்திற்கும் ஏற்படும்.

 

பற்றாக்குறை என்ற பழைய பல்லவி

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவதற்கு என்ன காரணத்தை அரசு முன்வைத்து வருகிறதோ, அதே காரணத்தைத்தான், அதாவது அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பதைத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவதற்கும், ஓய்வூதிய நிதித் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கும் காரணமாக அரசு முன்வைத்து வருகிறது.  ஆனால், ஆறாவது ஊதியக் கமிசனின் சார்பாக அமைக்கப்பட்ட காயத்ரி கமிட்டி, “மைய அரசினால் வழங்கப்படும் மொத்த ஓய்வூதிய நிதியில் 54 சதவீதம் இராணுவச் சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லுகிறது.  அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்பொழுது, அரசின் ஓய்வூதியச் செலவு எப்படிக் குறையும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, தனது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டிலேயே தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வரும்பொழுது, அரசிற்கு ஓய்வூதிய நிதிச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பில்லை; அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960  இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது.  இது, 200405  இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திவந்தால்கூட, இச்செலவு 202728  இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

எனவே, அரசின் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல.  அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்;  தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும்தான் இதன் பின்னுள்ள காரணம்.

வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பறிபோகும் அபாயம்

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும்.  அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை அரசின் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்.  இதன் மூலம் கிடைக்கும் இலாபமோ/நட்டமோ, அது ஒவ்வொரு தொழிலாளியின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து கருத்துக் கூறும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  புதிய ஓய்வூதியத் திட்டத்திலோ ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் தொழிலாளி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.  அதாவது, தன்னுடைய ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தக் கொள்ளையிலிருந்து தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்கு கிடையாது.

இலாபம் கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஓய்வு பெறும் வரை மாதாந்திர நிதியைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.  திட்டத்திலிருந்து விலகுவது மட்டுமல்ல, ஒருவர் தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதுகூட அவ்வளவு எளிதான விவகாரமல்ல. மேலும், ஒரு தொழிலாளி வேலையிழந்து, அதனால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்; மீதி 40 சதவீதம் அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், ஒரு தொழிலாளி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  இந்தக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது அல்ல.  சந்தை நிலவரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால், ஓவ்வொரு தொழிலாளியும் தனக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும்.  பங்குச் சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போகும்.  இப்படிப்பட்ட அபாயம் நடக்குமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.  இப்படி நடப்பது தவிர்க்க முடியாதது என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.

அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால்,  1980க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது.  இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, வேலியிடப்பட்ட நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன.  குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின.  சப்  பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கோடி ரூபாய்) பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.

இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை.  இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.

இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பார்களா, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை முறையாகத் திரும்ப ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.  வேலிக்கு ஓணாண் சாட்சியாம்.  தொலை தொடர்புத் துறையிலும் காப்பீடு துறையிலும் மின் துறையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும் திருப்பணியைத்தான் செய்து வருகின்றன.  ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது விருப்பம் போலப் பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதை, 2 ஜி  ஐ விஞ்சும் ஊழலாகத்தான் சொல்ல முடியும்.

ஓய்வூதியம்: முதலாளியின் கொடையா, தொழிலாளியின் உரிமையா?

அரசும் முதலாளிகளும் தமது ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பணச் சலுகைகளை, தாங்கள் மனமுவந்து அளிக்கும் கொடையாக, தங்களின் இலாபத்தின் ஒரு பகுதியைத் தொழிலாளர்களுக்குத் தருவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.  இதன் காரணமாகவே, அரசும் முதலாளிகளும் தங்களுக்கு ஏற்படும் பற்றாக்குறை அல்லது நட்டம் போன்ற காரணங்களைக் காட்டி, தொழிலாளிகள் போராடி பெற்ற இந்த உரிமைகளைப் பறித்துவிட முயலுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது அலுவலகத்திலோ எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் முழு உழைப்புச் சக்திக்கு உரிய கூலியை ஒருபோதும் தருவதில்லை.  தொழிலாளிகள் வாழ்வதற்குப் போதுமான, அதாவது தொழிலாளி வர்க்கம் தம்மை மறுஉற்பத்தி செய்து கொள்ளுவதற்கு எவ்வளவு தேவைப்படுமோ, அதனை மட்டுமே கூலியாகத் தருகிறார்கள்.  ஒரு தொழிற்சாலையில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி தன்னை மறு உற்பத்தி செய்து கொள்வதற்கு தேவையான கூலியை இரண்டு மணி நேர உழைப்பின் மூலம் பெற்றுவிட முடியும் என்றால், மீதி ஆறு மணி நேரமும் அத்தொழிலாளி இலவசமாக முதலாளிக்குத் தனது உழைப்புச் சக்தியை வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்.  முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம், நில வாடகை, வரிகள் இத்தியாதி என்னும் எல்லாவிதமான உபரி மதிப்பும் கூலி கொடுக்கப்படாத இந்த உழைப்பிலிருந்துதான் முதலாளி பெற்றுக் கொள்கிறான் என மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலின் பின்னுள்ள இந்த இரகசியத்தை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

எனவே, ஓய்வூதியம் என்பது தொழிலாளிகளுக்குத் தரப்படும் தானமல்ல.  அது அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட கொடுபடா கூலியின் ஒரு பகுதிதான்.  இதனைத் தர மறுப்பதென்பது முதலாளித்துவப் பயங்கரவாதம்தான்.  புதிய ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய உரிமையைப் பறித்ததன் மூலம், தனியார் கார்ப்பரேட் முதலாளிகளும் இன்ன பிற முதலாளிகளும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் சட்டபூர்வமான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.  ஓடிஓடித் தேய்ந்து போன இயந்திரங்களைக் கழித்துக் கட்டிக் குப்பையில் வீசியெறிவது போல, உழைத்து உழைத்து இளைத்துப் போகும் தொழிலாளர்களை, அவர்களின் முதுமைக் காலத்தில் எவ்விதச் சமூகப் பாதுகாப்பும் அற்ற நிர்க்கதியான நிலையில், அபாயத்தில் தள்ளிவிடும் முதலா ளித்துவ வக்கிரம்தான் இப்புதிய ஓய்வூதியத் திட்டம்.

போலி கம்யூனிஸ்டுகள் தவிர்த்த பிற எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வாயளவில்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  போலி கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்போ நாடாளுமன்றம் என்ற நான்கு சுவற்றுக்குள்ளேயே முடங்கிவிட்டது.  நாடெங்குமுள்ள அக்கட்சிகளின் தொழிற்சங்கங்களோ ஆலை வாயிலில் ஒழிக கோஷம் போடுவதற்கு அப்பால் தாண்டிச் செல்லவில்லை.  இந்த சம்பிரதாயமான எதிர்ப்புகளால் தனியார்மயம்   தாராளமயத்தை வீழ்த்த முடியாது என்பதை கடந்த இருபது ஆண்டு கால அனுபவம் உணர்த்தியிருக்கிறது.  எனவே, தொழிலாளி வர்க்கம் ஒரே அணியாகத் திரண்டு போலிகளின் இந்தச் சடங்குத்தனமான எதிர்ப்பை மீறி, சம்பிரதாயமான, சட்டத்திற்கு உட்பட்ட போராட்ட முறைகளை மீறிப் போராடினால் மட்டுமே, புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தைத் துரத்தியடிக்க முடியும்.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

குஜராத்: மோடியின் கொலைக்களம்!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.  அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.  “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார்  இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.

செப். 2009இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம்‘மோதல்’ கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் ‘மோதலில்’ கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்று முறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.

இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை  மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், “அந்நால்வரும் லஷ்கர்  இ  தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்” என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், “நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும்  தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை” என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை.  அது மட்டுமின்றி, “இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி அப்பெண், ‘நடத்தை கெட்டவள்’ என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.

இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது.  இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள்.  அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை.  குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.  “இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்” என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.

குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும்.  குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார்.  ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது.  இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது.  எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டது.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோராபுதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.  2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.  ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோராபுதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006  ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான்.  சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான்.  அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான்.  இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது.  சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார்.  ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி.  இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.

குஜராத்: மோடியின் கொலைக்களம்!குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்து கின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.

இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது.  மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய

நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார், பிரணாப் முகர்ஜி. இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைப் போல, இதுவும் ஒரு வாக்கெடுப்புக்குப் போனால், எம்.பி.க்களைக் கொள்முதல் செய்து தந்துவிட்டு, சிறைக்கும் போவதற்கு இன்னொரு அமர்சிங் இல்லையென்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
கூட்டுக் களவாணிகள்

இம்முடிவைத் தள்ளிவைத்த சில நாட்களுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் சிங், உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, எல்லாக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அதன் பின்னர் இதனை அமல்படுத்துவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விசயத்தில், ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி நடத்தும் நாடகங்கள் அவர்களுக்கே புளித்துப் போகும் அளவுக்குப் பழகிவிட்டதால், ஒளிவுமறைவுக்குக்கூட இடமில்லாமல் போய்விட்டது. எனவேதான், தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னாலேயே அறிவிக்கிறார், மன்மோகன் சிங்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் அந்நிய மூலதனத்தைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் சாதகங்கள் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த விவாதமே பொருளற்றது. சாதக பாதக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்நிய மூலதனத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்கப் போவதில்லை. அந்நிய நேரடி முதலீட்டினால் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகம் என்பதை நிறுவிவிட்டால், மன்மோகன் சிங் இதனை நிறுத்திவிடப் போவதும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையப்பொருள். அது குறித்த கேள்வியை எழுப்பாமல் தவிர்த்துக் கொண்டே, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதைத் தனியொரு பிரச்சினை போல விவாதிக்கின்றனர். இது மிகப்பெரும் மோசடியாகும்.

மைய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவே சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார். “இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும். அதுமட்டுமின்றி, இது போன்ற கேந்திரமான தொழில்களில் மேலை நாட்டு நிறுவனங்களை இந்தியா அனுமதிக்காவிட்டால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் விடுபட முடியாது. அவர்களுடைய பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நாமும் வளர முடியாது. சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது குறித்த முடிவை ஏற்கெனவே எடுத்தாகி விட்டது. எந்தத் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவது என்பதில் மட்டுமே ஒத்த கருத்தை எட்டவேண்டியிருக்கிறது” என்று விளக்கினார்,  ஆனந்த் சர்மா.

உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்நிய முதலீட்டைத் தடுப்பவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால், தாராளமயக் கொள்கையில் பா.ஜ.க.வின் யோக்கியதையை ஊரறியும். 1998இல் இருந்து 2004 வரை ஆறாண்டுகள் அக்கட்சி ஆட்சி செய்தபோதுதான், இந்தத் தாராளமயத்துக்கான வலுவான அடித்தளங்கள் எல்லாம் போடப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி தருவதற்கு முன்னோடியாக இருந்தது. அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் “மால்கள்” உருவாக்கப்பட வேண்டி, அதற்குத்தக்கபடி நகர்ப்புற நில உச்ச வரம்பை தளர்த்தியதும் பா.ஜ.க.தான்.

பா.ஜ.க.வின் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராயிருந்த முரசொலி மாறன் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையிலேயே, சில்லறை வணிகத்தில் 26% அந்நிய மூலதனத்தை அனுமதிக்க இருப்பதாகக் கூறியது பா.ஜ.க. ஒருபக்கம் எதிர்ப்பு நாடகம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட மோடியும், பா.ஜ.க. வின் கூட்டாளியான நவீன் பட்நாயக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

பா.ஜ.க. இன்று அந்தர்பல்டி அடித்தாலும், நடித்தாலும் அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது காங்கிரசு கும்பலுக்கு நன்றாகவே தெரியும். “சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம் என்பது நீங்கள் பெற்ற குழந்தை. நாங்கள் அதை வளர்க்கிறோம். அவ்வளவுதான்” என்றார் பிரணாப் முகர்ஜி.

அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்றாலும், பா.ஜ.க. கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதாக ஆளும் வர்க்கங்கள் கருதுவதால், ஊடகங்கள் பா.ஜ.க.வை ‘கொள்கை இல்லாத கட்சி’ என்றும், ஓட்டுக்காகத் தேசத்தின் நலனை அடகு வைப்பதாகவும், தொலைநோக்குள்ள சிந்தனையை இழந்துவிட்டதாகவும் வசைபாடுகின்றன. பா.ஜ.க. தலைவர்களிடம்  அவர்கள் கடந்த காலங்களில் தாராளமயத்துக்கு ஆதரவாகப் பேசியதையெல்லாம் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்கின்றன. ஊடகங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி பா.ஜ.க.வினர் திணறுகிறார்கள்.  ஆளும் வர்க்கத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டோமோ என்ற அச்சமும் பா.ஜ.க. வைப் பிடித்தாட்டுகிறது. அதனால்தான் ‘வால்மார்ட்டைக் கொளுத்துவேன்’ என்று உமாபாரதி கொக்கரித்ததும், அதில் தமக்கு உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தலைமை அவசரமாக தனது நிலையைத் தெளிவுபடுத்தியது.

காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திருணாமுல் காங்கிரசின் யோக்கியதையோ தனிக்கதை. எஃப்.ஐ.சி.சி.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தீவிரமாக ஆதரித்தவருமான அமித் மித்ராவை நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் தாராளமயத்தைத் தாராளமாக அனுமதித்து வரும் மம்தா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தீவிரமாக எதிர்ப்பதாக நடிக்கிறார். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதால், விருப்பமில்லாத மாநிலங்கள் தடை செய்து கொள்ளலாம். ஆனால், அந்நிய மூலதனத்தை விரும்பும் மாநிலங்களும் அதனைப் பெற முடியாமல் தடுப்பது என்ன நியாயம் என்று வாதாடுகிறது காங்கிரசு கட்சி.

மாநிலங்களின் உரிமை மீது காங்கிரசுக்கு எழுந்துள்ள இந்த திடீர்க்காதல், மாநிலப் பட்டியலில் இருந்த பல அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிய போது எழவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனக் கூறும் இவர்கள்தான், சில்லறை வணிகப் பிரச்சனையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியிருப்பதாகப் பேசுகிறார்கள். ஒட்டகம் தலை நுழைக்க இடம் கொடுத்துவிட்டால், அது உடலை நுழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமைக்கு அடிப்படையாகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இடுப்பொடிந்து போய்க் கிடக்கையில், அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அந்நாடுகளின் நிதிமூலதனத்தை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் தடையின்றி அனுமதிக்க வேண்டும். அதற்காகத்தான் வால்மார்ட்டின் கையாளான ஹிலாரி கிளிண்டன் நேரடியாக இங்கு வந்து இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்பந்தித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்தியாவில்  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்த ஆண்டு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வால்மார்ட்  நினைத்திருந்தது. ஆனால், அவர்களேகூட எதிர்பார்க்காத வகையில் மன்மோகன் அரசு 51 சதவீதமாக அதனை உயர்த்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என ஆண்டையின் நலன் குறித்துக் கவலைப்படும் அடிமையாக இந்திய ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் அந்நிய முதலீட்டை இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்கள் முடிவதற்காகத்தான் எல்லோரும் காத்திருக்கின்றனர். பா.ஜ.க., தான் பெற்ற பிள்ளையை கைவிட்டு விடுமா, என்ன?

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!

30
கிழக்கு பதிப்பகம் கார்டூன்

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!கிழக்கு பதிப்பகம் கார்டூன்(படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.

– பத்ரி சேஷாத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் – நியூ ஹொரைசன் மீடியா) கட்டுரையிலிருந்து

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!

25

இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா?  அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு பகுதியை அரசே அறிவிக்கும்படி செய்ய வேண்டுமா? இதன் வழியாக ஓட்டை பொறுக்கி ஆட்சியாளர்களாக மாறி, நாட்டின் வளங்களை கொள்ளையிட வேண்டுமா?

அப்படியானால், பார்ப்பன, பாசிச, இந்துத்துவா கருத்துகளை உங்கள் சிந்தனையின் ஒவ்வொரு துளியிலும் விதைக்க வேண்டும். அப்போதுதான் பொய் பேச முடியும். ஒரு பொருளை தானே திருடிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்த முடியும். திட்டமிட்டு மக்கள் குவியும் இடத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு, இந்தக் ‘படுபாதக’ செயலை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புதான் என்று குற்றம்சாட்ட முடியும்.

சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் நிகழ்த்த முயன்றுள்ளன.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி, கர்நாடக மாநிலம் சிந்தகியில் உள்ள தாசில்தார் அலுவலம் பக்கமாக வந்தவர்கள் திடுக்கிட்டார்கள். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் பாகிஸ்தானின் தேசிய கொடி, பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தது. இந்திய நாட்டில், பாகிஸ்தான் கொடியை ஏற்றி, புத்தாண்டு கொண்டாடுபவர்கள் யார் என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

ராம் சேனா
ஸ்ரீ ராம் சேனாவின் முத்தாலிக்

சரியாக, அப்போது பார்த்து, ‘இது இந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமியர்கள் செய்த செயல்…’ என்ற நச்சு தூவப்பட்டது. ஒளியை விட வேகமாக இந்த வாசகம் மக்களின் செவியை அடைந்தது. முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, அடுத்தடுத்து வெவ்வேறு வார்த்தைகளுடன் இதே அர்த்தம் பொதிந்த சொற்களை எதிர்கொள்ள நேர்ந்ததும், ஒருவேளை அப்படி இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தார்கள். விளைவு, சில மணி நேரங்களில், சிந்தகி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்கள்.

ஆனால், இந்த அயோக்கியதனத்தை நிகழ்த்தியது, எந்த இஸ்லாமிய குழுக்களும் அல்ல; தனிப்பட்ட இஸ்லாமியரும் அல்ல. பதிலாக ஒரு மதக் கலவரத்தை உண்டாக்குவதற்காக அந்தப் பகுதியில் உள்ள ராம் சேனா குண்டர்கள் நிகழ்த்திய நாடகம் இது. ராகேஷ் மத், என்ற ரவுடியின் தலைமையில் இந்தப் பித்தலாட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனதும், விழித்துக் கொண்ட காவல்துறை, ராகேஷ் மத் உட்பட ஆறு ராம் சேனா குண்டர்களை கைது செய்து பிஜப்பூர் சிறையில் அடைத்தது. ஆனால், அந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள், ‘தேசத்தை துண்டாட முயற்சிப்பவர்களை எங்களுடன் அடைக்க வேண்டாம்’  என கோஷமிட்டதுடன், இந்த இந்துத்துவ பாசிஸ்ட்டுகளை நையப் புடைந்துள்ளனர். இதில், ராகேஷ் மத்துக்கு ‘பூசை’யும், மற்றவர்களுக்கு வெறும் ‘தீபாராதனையும்’ காட்டப்படவே, வேறு வழியின்றி இந்தக் கும்பலை பெல்லாரி மாவட்ட சிறைக்கு கடந்த ஞாயிறன்று (08.01.12) மாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (10.01.12) இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இன்னொருவரை கைது செய்து பெல்லாரியில் அடைத்திருக்கிறார்கள். இதன் மூலம், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ராம் சேனா அமைப்பினர், ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஆனால், காவல்துறை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். பெயர் வெளியில் வராதபடி பார்த்துக் கொள்கிறது. வேண்டுமென்றே எங்கள் அமைப்பை களங்கப்படுத்த முயற்சிக்கிறது…’ என்று கூறியதுடன், இதற்கு ஆதாரமாக ஏராளமான புகைப்படங்களையும் செய்தியாளர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, ராம் சேனா அமைப்பில் இருப்பவர்கள் ‘ரொம்ப’ நல்லவர்களாம். ஆர்.எஸ்.எஸ். ‘பாய்ஸ்’ மட்டுமே கெட்டவர்களாம். கேழ்வரகில் நெய் வடியும் கதையாக கதறுகிறார்கள் ராம் சேனா அமைப்பினர். கலாச்சார காவலர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, இவர்கள் நிகழ்த்திய – நிகழ்த்தும் வெறியாட்டங்கள் அனைத்தையுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஊடகங்களும் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனவே ராம் சேனா – ஆர்.எஸ்.எஸ். என பெயர்கள்தான் வேறு வேறே தவிர, மதக் கலவரங்களை நிகழ்த்துவதில் இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

என்ன… இந்திய அதிகார வர்க்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊடுருவி இருப்பது போல் ராம் சேனா உறுப்பினர்கள் நுழையவில்லை. அதனால் ராம் சேனா செய்யும் அராஜகங்கள், உடனே வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். செய்யும் வெறிச் செயல்கள் முடிந்தவரை அமுக்கப்படுகின்றன. உண்மை அறிந்து மக்கள் போராடத் தொடங்கியதும் வேறு வழியின்றி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய பித்தலாட்டங்கள் ஊடகங்களாலும், காவலர்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.

இதையேதான் இப்போது ராம் சேனாவும் ‘ராகேஷ் மத் உள்ளிட்டவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்ல…’ என்று சொல்வதன் வழியாக கடைபிடிக்கிறது. பிரதான ‘தாதா’வுக்கும், பகுதி ‘தாதா’வுக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் ‘பங்கீடு’ குறித்த முரண்பாடு போன்றதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பதும். மற்றபடி பார்ப்பன பாசிச இந்துத்துவா கொள்கை உடையவர்கள் அனைவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இப்போது சிந்தகி பகுதியில் பேரணி நடத்தவும், போராட்டங்கள் நிகழ்த்தவும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவாம். அதற்கு பார்ப்பன பாசிச இந்துத்துவா சக்திகளை அல்லவா ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்க வேண்டும்?

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி கட்டண கொள்ளை… என நாட்டு மக்கள் இந்த அரசியல் அமைப்பின் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் – அதை திசை திருப்பி அறுவடை செய்வதற்காக இந்துத்துவா சக்திகள் காய் நகர்த்தி வருகின்றன. அதன் ஒரு வடிவம்தான் இந்த பாகிஸ்தான் கொடியை ஏற்றியிருப்பது.

அடுத்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினால் இந்துக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும் துவேஷத்தையும் கிளப்பி விடலாம் என்று இந்துமதவெறியர்கள் தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்றால் ‘இந்துக்கள்’ அத்தகைய பலவீனத்தை கொண்டிருப்பது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தியாவில் அமெரிக்க கொடியெல்லாம் பட்டொளி வீசி பறக்கும் போது பாகிஸ்தான் கொடி பறந்தால் என்ன குடி முழுகிவிடப் போகிறது? பாகிஸ்தான் மீதான வெறியை வளர்த்து போலி இந்திய தேசபக்தியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவுதான் சங்க பரிவாரம். எனவே இந்த கொடி முத்திரை தேச வெறியிலிருந்து மக்களை விடுவிப்பதும் நம் பணியாக இருக்கிறது.

எண்ணெய் வளங்களை அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றுவதற்காக, இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக சொல்லி ஈராக்கையே சுடுகாடாக மாற்றியது அமெரிக்க இராணுவம்.

அமெரிக்காவின் அல்லக்கையாக திகழும் இந்துத்துவா சக்திகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பொய்யை சொல்லி, நாட்டில் மதக் கலவரங்களை நிகழ்த்த முயன்று வருகிறது.

உண்மையில் ‘உடையும் இந்தியா?’வுக்கு காரணம் பார்ப்பன பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகள்தான். ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்தான்.

– அறிவுச் செல்வன்