Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 749

வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!

4
சங்கர்-பிதாரி
சங்கர் பிதாரி

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிதாரியை விடப் பணியில் மூத்தவரான இன்ஃபான்ட் என்ற போலீசு அதிகாரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பணி மூப்புக் காலத்தில் தன்னைவிட இளையவர் என்பது மட்டுமின்றி, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சங்கர் பிதாரியின் தலைமையிலான அதிரடிப்படை, பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைத்த வன்முறைகளைத் தேசிய மனித உரிமை ஆணையமும், சதாசிவம் கமிட்டியும் உறுதி செய்துள்ளன. அவ்வாறிருக்கத் தன்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தகுதியற்ற நபரான பிதாரியை கர்நாடக அரசு எப்படி டி.ஜி.பியாக நியமிக்க முடியும் என்பதே இன்ஃபான்ட் தொடுத்திருந்த வழக்கு. இவ்விரு ஆட்சேபங்களையும் ஏற்று, பிதாரியின் நியமனத்தை ரத்து செய்தது, நிர்வாகத் தீர்ப்பாயம்.

இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சங்கர் பிதாரி. “பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் சதாம் உசேன், கடாபியைப் போல எல்லாம் வல்லவனோ எங்கும் இருப்பவனோ அல்ல; தமிழக-கர்நாடகக் கூட்டு அதிரடிப் படையின் துணைக் கமாண்டராக மட்டுமே நான் இருந்தேன்” என்று திமிர்த்தனமாக  அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிதாரியின் நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களும், தாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள் குமார், கெம்பண்ணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, “அவர் சதாமோ, கடாபியோ அல்ல என்றால், நிச்சயம் அவர்களைவிட மோசமானவராகத்தான் இருக்க வேண்டும் என்றே அந்தப் பெண்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது” என்று கூறி , சட்டத்தின் ஆட்சி, பெண்மை, மனித உரிமைகள், ஏழைகள்பழங்குடி மக்கள் மீது அக்கறை போன்றவற்றின் மீது இந்த அரசுக்குச் சிறிதளவேனும் மரியாதை இருக்குமானால், டி.ஜி.பி., ஐ.ஜி. ஆகிய இரு பதவிகளிலிருந்தும் பிதாரியை உடனே நீக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் பிதாரி. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஆழமாக விசாரித்து மே 31க்குள் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

“தேசிய மனித உரிமை கமிசன் சங்கர் பிதாரி மீது நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. அவரது ஊழியர்கள் செய்த தவறுக்கு அவர் பொறுப்பாக முடியாது. நிவாரணத் தொகையை அதிகமாகப் பெற வேண்டும் என்பதற்காகப் பழங்குடி மக்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். பதவி உயர்வு குறித்து முடிவு செய்வதற்குத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூற்றுகளை கணக்கில் கொள்ளத் தேவையில்லை” என்று பிதாரிக்கு ஆதரவாக வாதங்களை அடுக்கியிருக்கிறது, கர்நாடக அரசு.

அதிரடிப்படையின் அட்டூழியமென்பது மறுக்கவியலாத உண்மை. நூற்றுக்கணக்கானவர்களது சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிபதி சதாசிவம் கமிட்டி, மனித உரிமை மீறல்கள் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. பழங்குடியினர் 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக 2.80 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக, கர்நாடக அரசுகள் பழங்குடியினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை உறுதி செய்திருக்கிறது.

இருந்தபோதிலும் சங்கர் பிதாரிக்கு ஜனாதிபதி விருது இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரியைப் பின்தள்ளிவிட்டுப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. பிதாரியின் மீது உச்ச நீதிமன்றம் அனுதாபம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை! பாதிப்பை ஏற்படுத்திய காக்கி உடை கிரிமினல்களுக்குப் பதவி உயர்வு! ராஜபக்சே பரிந்துரைக்கும் நீதி வழங்குமுறையும் இதுதானே!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?

20

கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி போன்று சாலையை மறித்தால்தான் அரசு ஆடும் என்பது புதுமொழி. இது உழைக்கும் மக்களுக்கு தெரிந்த அனுபவ மொழி. புதுவை வடமங்கலத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் யூனிலீவர் (டெட்ஸ்) தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான போராட்டத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடியும் இதுவரையிலும் வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது இந்நிறுவனம்.

ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.

தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இதிலும் எந்த பயனும் ஏற்படாததால் மே 18 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 350 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக சங்க முன்னனியாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். பேச்சுவார்த்தைக்கென்று சென்ற சங்க முன்னணியாளர்களை மிரட்டி பணியவைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வெளியேறிய தொழிலாளர்கள் போராட்டத்தை வீச்சாக எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறை அனைவரையும் கைது செய்தது.

ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?

_______________________________________________________________

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

40

ரூபாய் வீழ்ச்சி : வல்லரசுக் கனவுக்குச் சங்கு !

பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

சர்வதேச நிதிமூலதனம் ஐரோப்பிய நெருக்கடியின் காரணமாக  டாலரைத் தஞ்சமடைகிறது. இதன் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து உலகளவில் அதன் மதிப்பு உயர்வதென்பது, ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. இருந்த போதிலும், பஞ்சத்தைப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடும் வணிகனைப் போல, இந்தியாவைச் சூறையாடுவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளிகள்.

“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து டாலர் கையிருப்பை அதிகமாக்கு, வரி வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க மானியங்களை வெட்டு, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடு  இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் குறித்த எமது மதிப்பீட்டை (Sovereign Credit Rating) கீழிறக்க வேண்டியிருக்கும்” என்று சர்வதேச தரநிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் இந்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையின் விளைவுதான் தற்போதைய பெட்ரோல் விலையேற்றம். பிற துறைகளிலான மானிய வெட்டுகள் இனித் தொடங்கும். தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளைப் பொருத்தவரை, “வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதி தனியார்மயம் தொடர்பான நிதிச் சீர்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்” என்று அமெரிக்க நிதித்துறை செயலருக்கு வாக்களித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல்,எரிவாயு மானியங்களை முற்றாக வெட்டுவது போன்றவற்றை ஆறு மாதங்களில் முடித்து விடுவதாகக் கூறியிருக்கிறார் நிதித்துறை ஆலோசகர் கௌசிக் பாசு. அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பது, மக்கள் எதிர்ப்பால் தாமதப்படுத்தப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை அதிரடியாக முடுக்கிவிடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்திழுக்கச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்து, அதன் மூலம் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கமேயொழிய, இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அல்ல.  இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக  அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!

5

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி.யின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி., எல்.எல்.எஃப்., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

விரிவாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் மின்உற்பத்தித் தேவைகளுக்கேற்ப, கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக 14,000 ஒப்பந்தத்தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருக்கிறது, என்.எல்.சி. நிறுவனம். இங்கு பணியாற்றும் 19,000 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்த்து ஒப்பிட்டால், மொத்த தொழிலாளர்களுள் 40%க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாக, நவரத்னா தகுதியைப் பெற்றுள்ள நிறுவனமாக என்.எல்.சி. உயர்ந்திருக்கிறதென்றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இவ்வொப்பந்தத் தொழிலாளர்களுடையது. ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருள் கவ்வியதாகயிருக்கிறது.

குறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கத்திற்காகவே, சொசைட்டி தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பி ஷெட்யூல், ஏ ஷெட்யூல், ஏ.எம்.சி. தொழிலாளி, “நான்ஏ.எம்.சி.” (Non-A.M.C.) தொழிலாளி என்று பல பிரிவுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பிரித்துவைத்துள்ளது, என்.எல்.சி. நிர்வாகம். இதில் “நான்ஏம்.எம்.சி.” தொழிலாளியின் ஒரு ஷிப்டு சம்பளம் ரூ.180/ தான் என்பதிலிருந்தே, இந்தச் சுரண்டலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

‘‘ஒரு தொழிற்சாலையின் மையமான மற்றும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணிகளில்  ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்று கூறுகிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம் (1970). ஆனால், என்.எல்.சி.யின் மையமான பணியும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணியுமாகிய நிலக்கரி வெட்டுதல், கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையம் கொண்டு செல்லுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளைச் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளிகளைக் கொண்டே நிறைவேற்றி வருகிறது, என்.எல்.சி. நிர்வாகம்.

என்.எல்.சி. நிறுவனம், தனது மையமான பணிகளில் பெரும்பாலானவற்றை, ஒப்பந்ததாரர்களின் மூலமாகத்தான் மேற்கொண்டு வருகிறது. தலையில் தினத்தந்தி பேப்பரை கவிழ்த்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர் போன்றவர்களல்ல இவர்கள். இவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கமும் தெரியாது, மின் உற்பத்தி நிலையமும் தெரியாது. மாத இறுதியில், இவ்வொப்பந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றிய மொத்த வேலைக்குரிய தொகையை நிர்வாகத்திடமிருந்து காசோலையாகப் பெற்று அதன் பெரும்பகுதியைச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியதை ‘தலை’க் கணக்கில் தொழிலாளிக்கு ரொக்கமாகப் பிரித்துக் கொடுப்பதொன்றுதான் இந்த ஒப்பந்த தாரர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி. இத்தகைய, மாஃபியா கூட்டத்தின் எடுபிடியாகவே செயல்படுகிறது என்.எல்.சி.  நிர்வாகம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்‘சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியைக் கொடு! பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு!” என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களை முன்னெடுப்பதும், இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நயவஞ்சகமான முறையில், சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாய் கையெழுத்திடும்  என்.எல்.சி.நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை எள் முனையளவும் மேற்கொள்ளாமல், போராடிய தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதமாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் வேலைநீக்கம் செய்தது; சங்க அலுவலகத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது எனச் சல்லித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகம்.

2008ஆம் ஆண்டில் 16 நாட்கள் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பணிமூப்பை அடிப்படையாகக் கொண்டு 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை முதல்படியாக “இன்ட் கோ சர்வ்” பட்டியல் தொழிலாளர்களாக ஏற்றுக்கொண்டு, பின்னர் என்.எல்.சி. நிறுவன ஊழியராக முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது, அவ்வொப்பந்தத்தின் மையமான அம்சம்.

இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்தது என்.எல்.சி. நிர்வாகம். நிர்வாகத்திற்கெதிராகத் தொழிற்சங்கங்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்த வேண்டுமென  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நிர்வாகம். மேலும், “இன்ட் கோ சர்வ்” பிரிவின் கீழ் தொழிலாளர்களை நியமிப்பது தொடர்பாகத் தனது கைக்கூலி சங்கத்தைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் போட வைத்தது.

2008ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, 2010ஆம் ஆண்டில் 39 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்30, 2010 அன்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், “2 வருடத்தில், 480 நாட்கள் பணிமுடித்த அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சம வேலைக்குச் சம ஊதியம்; ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துவது” உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, என்.எல்.சி. நிர்வாகம்.

இவ்வளவுக்குப் பிறகும், 2008 மற்றும் 2010இல் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின்படி பணிமூப்பு அடிப்படையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட வெளியிடாமல் இழுத்தடித்தது நிர்வாகம். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டதை வழக்காக்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் ஒப்பந்த சரத்தை அமல்படுத்த முடியாது எனத் தெனாவெட்டாக அறிவிக்கவும் செய்தது. இந்நிலையில், 2011இல் உச்ச நீதிமன்றமும், பணி நிரந்தரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று இரண்டு இடைக்காலத் தீர்ப்புகளை வழங்கியது. எத்தனை தீர்ப்புகள் வந்தபோதும், அவற்றை அமல்படுத்த தயாரில்லை எனத் திமிராகச் செயல்பட்டது, நிர்வாகம்.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றையொட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின்படி என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரித்தான் தற்பொழுது ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இக்கோரிக்கையினை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம், பழைய ஒப்பந்தங்களையொட்டித் தனது கைக்கூலி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காட்டி, இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இப்பிரச்சினை தொடர்பாகத் தாமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிர்வாகத்தைக் கண்டித்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் என்.எல்.சி. யின் வழக்கில் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.  இந்த நியாயத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே போட்டுவைத்துள்ள வழக்குகளைக் காட்டி, தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒரு அநீதியான தீர்ப்பை அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாகவே நீருபூத்த நெருப்பாய் எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும் இத்தொழிலாளர்களின் போராட்டம் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்ட முடியாமல், ஒப்பந்தம்நீதிமன்றம்சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்டம் எனத் திரும்பத் திரும்பச் செக்குமாட்டுச் சுழலில் சிக்கித் தவிக்கிறது.

தான் வகுத்துக்கொண்ட சட்டத்தை தானே மதிக்காமல் செயல்படக்கூடிய அரசுத்துறை நிறுவனத்தை எதிர்த்து, அரைநிர்வாணப் போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என சட்டவரம்புகளுக்குட்பட்ட போராட்டங்களின் மூலமே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என தொழிற்சங்கங்கள் நம்புவதும், அவ்வாறே தொழிலாளர்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதும், இப்போராட்டத்தின் மிகப்பெரும் பலவீனமாகும்.

என்.எல்.சி. யின் உற்பத்தியினை முடக்கச் செய்யுமளவிற்குப் போர்க்குணம் கொண்ட, சட்டவரம்புகளையும் மீறிய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், தொழிலாளி வர்க்க விரோத என்.எல்.சி. நிர்வாகத்தை அடிபணியச் செய்ய முடியாது என்பதைப் போராடும் தொழிலாளர்கள் உணர வேண்டிய தருணமிது.  போராட்ட முறைகளையும், உத்திகளையும் மாற்றுவோம்!  அடிப்படை உரிமைகளை வென்றெடுப்போம்!!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

6

புதிய-ஜனநாயகம்-ரூபாய்-வீழ்ச்சி

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது இறுதிக்காலம்வரை அயராது உழைத்த தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
  2. ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
  3. நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை
  4. நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
  5. புரட்சிகர அரசியலைப் பரப்பிக் கொண்டே மரணமடைந்த தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்!
  6. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….
  7. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
  8. என்.எல்.சி.யின்  ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
  9. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலை எதிர்த்து பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டங்கள்!
  10. வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
  11. மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு
  12. நின்னா வரி… நடந்தா வரி…. நெரிசல் வரி!

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

7
ஹூண்டாய்-நரபலி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்
ஹூண்டாய்-நரபலி
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போன சிரமன், திலோத் மத்வான். இதில் சிரமனின் வயது 16 மட்டுமே.

ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இரத்தச் சகதியில் கிடத்தப்பட்டிருந்த நான்கு உயிரற்ற உடல்கள். சென்னை அரசு பொதுமருத்துவமனையின் சவக்கிடங்கில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த இரு உடல்கள். அதே மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாசி வழியே வழிந்தோடும் இரத்தத்தை துடைத்தெடுக்கக்கூடத் துணை எவருமின்றி, சுயநினைவற்றுப்போன நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரு உடல்கள். விபத்து சிகிச்சைப் பிரிவின் படுக்கையொன்றில் கிடத்தப்பட்டிருக்கும் ஒர் உயிரிருள்ள உடல். இந்தப் பரிதாபக் காட்சிகளைப் பார்க்கவே பதறுகிறது மனம். யாரையேனும் பிடித்து கதறி அழுது தீர்க்க வேண்டுமென உந்தித்தள்ளுகிறது, அதிர்ச்சியிலும், காட்சிகளிலும் வெடித்துக் கிளம்பும் உணர்ச்சி.

கவனிப்பார் யாருமின்றி, கேள்வி கேட்பாரற்ற அனாதைப் பிணங்களாய் கிடத்தப்பட்டிருக்கும் இவர்களெல்லாம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூன்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் “ஹவாசின்” என்ற நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளர்கள். பீகார், ஒரிசாவைச் சேர்ந்த இந்த சடலங்கள் அனைத்தின் வயதும் 16 தொடங்கி 26க்குள் அடக்கம்.

நள்ளிரவில் பணிமுடித்து வீடு திரும்ப பேருந்துக்காக இவர்கள் காத்திருந்ததாகவும்; அப்போது அவ்வழியே சென்ற காய்கறி ஏற்றிச்செல்லும் சரக்குந்தை வழிமறித்து 15 தொழிலாளர்கள் ஏறிச்சென்ற பொழுது, சாலையோரம் நின்றிருந்த வாகனம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகி பலியாகிவிட்டனர் என்றும் பச்சையாய் புளுகுகிறது, போலீசும் பத்திரிக்கைகளும்.

உண்மையில், இரவுநேரப்பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால், அறையில் பணிமுடித்தக் களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி, ஆடுமாடுகளைப் போல லோடு ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் வழியில்தான் இந்த விபத்தும் கோரச்சாவும் நிகழ்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். இதுவரை கிடைத்த தகவலின் படி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இருவர் இறந்தது உள்ளிட்டு மொத்தம் 6 பேர் இறந்து போயிருக்கின்றனர். எதிர்பாராத விதமாய் நிகழ்ந்துவிட்ட விபத்தல்ல இது. பச்சையான படுகொலை. முதலாளித்துவ இலாபவெறிக்கு நரபலியாக்கப்பட்டிருக்கிறார்கள் இவ்விளந் தொழிலாளர்கள்.

ஹூண்டாய்-நரபலி
மூக்குவழியே இரத்தம் கசிந்து உறைந்து போனநிலையில் சம்போ. தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் இவரது வயது 16க்குள்தான் இருக்க வேண்டும்.

ஆடுமாடுகளைப்போல, எந்நேரம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பையும் வெளிக்காட்டாமல் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40-50 பேரை ஒரே அறையில் அடைத்து வைத்து தனக்கு தேவைப்பட்ட நேரத்திலெல்லாம் அழைத்து வேலை வாங்கியிருக்கிறது, ஹவாசின் நிர்வாகம். இயந்திரங்களை கையாளுவதற்கேற்ப போதுமான கல்வித் தகுதியோ, அனுபவமோ அற்ற இத்தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய வேலைகளிலும் ஈடுபடுத்தியிருக்கிறது, நிர்வாகம். இவ்வாறு “வெல்டிங் மற்றும் பிரஸ்ஸிங் மிஷினில் கை சிக்கி உடல் உறுப்புகள் சின்னாபின்னமாகி சிதைந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம், இது இங்கே சர்வ சாதாரணம்” என்கின்றனர் ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்.

“வழக்கமா ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலைன்னா, ரூம்ல இருக்கிற ஹிந்தி காரங்களை கூட்டிட்டு வர்றதுக்கு கம்பெனியிலிருந்தே வண்டியை அனுப்புவாங்க. ஹிந்தி கார பசங்களை “டாடா ஏஸ்” வண்டியிலதான் வேலைக்கு கூட்டிட்டு வருவாங்க, கொண்டுபோய் விடுவாங்க. இது வழக்கமா நடக்குறதான். அன்னிக்கு நைட்டும் ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலை, அதனால ஒரு டாடா ஏஸ் வண்டியும் கம்பெனி ஆம்புலன்சையும் அனுப்பி வச்சாங்க. ஆம்புலன்ஸ்ல வந்தவங்களுக்கு ஒன்னும் ஆகலை. டாடா ஏஸ் வண்டிதான் ஆக்சிடென்ட் ஆச்சு. அதுவும் அந்த டாடா ஏஸ் டிரைவர் மூனுநாளா வீட்டுக்கு போகாம டூட்டி பார்த்திட்டு இருந்தார் சார் ” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்க சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்தில் சிக்கி கந்தலாகிப் போன துணியோடு அப்படியே கிடத்தப்பட்டிருந்த 16 வயது மதிக்கத்தக்க இளந்தொழிலாளி சம்போ, சுயநினைவற்ற நிலையில் மூச்சை இழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவரது இதயத்துடிப்பு மிகவேகமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. நாசிவழியே இரத்தம் வழிந்தோடிக்கிடந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம், “காலையில இருந்து பச்சைத்தண்ணி கூட உள்ள போகல தம்பி, ஒரு பய கூட எட்டிப்பார்க்கல, மூக்கு வழியா ரத்தம் வழிஞ்சிகிட்டே இருந்துச்சு. நர்சு அம்மாகிட்ட சொன்னேன், “அப்படித்தான் வரும் போ”ன்னு சொல்லிட்டாங்க. பார்க்கவே பாவமா இருக்கு தம்பி” என்றனர், அவர்கள்.

ஹூண்டாய்-நரபலி
21 வயதேயான பனிஸ்டோ, அவரை கவனித்துக்கொள்ளும் ராஜம்.

மண்டை பிளந்தும் கைமணிக்கட்டில் இரத்தக் காயங்களோடும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரிசாவை சேர்ந்த 21 வயதான பனிஸ்டோவின் நிலையோ பரிதாபம். தன்னோடு பயணித்த சக தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்து போயினர், தப்பிப்பிழைத்தவர்களின் கதியென்ன என்பதைக் கூட இதுவரை அறிந்துகொள்ள முடியாத துர்பாக்கியசாலியாய், தனிமையும் வெறுமையும் மட்டுமே துணையாய்க் கொண்டு துவண்டுக் கிடக்கிறார் அவர். படுக்கையில் கிடத்தியதோடு சரி, உடனிருந்து உதவிசெய்ய எவரும் வரவில்லை. கண்ணெதிரிலே சக தொழிலாளர்களை பலிகொடுக்க நேர்ந்த பரிதவிப்பும் அதன் தாக்கத்திலிருந்து மீளாத மிரட்சியுமே அப்பியிருந்தது, அவரது கண்களில்.

சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற நம்மை சூழ்ந்து கொண்டனர், அதே மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள். அவர்களிடம் இவர் யார், எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என்பதை சொன்னோம். “நாடு வுட்டு நாடு பொழைக்க வந்தவனுங்கள இப்படியா கொடுமை பண்ணுறது, அவனுங்களாம் நல்லா இருக்க மாட்டானுங்க. அவனுங்க கிடக்குறானுங்க தம்பி நீங்க சொல்லுங்க, இந்த பையனுக்கு இன்னா பண்ணனும் சொல்லு. நாம இருந்து நம்மலால முடிஞ்சத செய்வோம்” என்றார், வள்ளுவர் கோட்டத்தை சேர்ந்த வயதான பெண்மணி ராஜம்.

வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் யாரென்றே தெரியாத போதும், அவர் பேசும் மொழி புரியாதபோதும், உடனிருந்து உதவி செய்யக்கூட எவருமில்லாத அவலநிலையை உணர்ந்து, தானாக முன்வந்து தண்ணீர், உணவு, மருந்து மாத்திரைகளை வழங்கி பனிஸ்டோவை கவனித்துவருகிறார், ராஜம்.

அடையாளம் தெரியாத நபர்களால் அனுமதிக்கப்பட்ட “அடையாளம் காணப்படாத உருப்படிகளாய்” சவக்கிடங்கிலும், மருத்துவமனையின் படுக்கைகளிலும் அநாதைகளாய் கிடத்தப்பட்டிருக்கும் பேரவலத்தை இனியும் விவரிக்க மனம் ஒப்பவில்லை.

ஹூண்டாய்-நரபலி
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பரோதன் மற்றும் சம்போ

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கவனிக்க ஒரு நாதியுமில்லை. உயிரற்ற சடலத்தின் அருகே ஒட்டியிருந்து காதும் காதும் வைத்தாற் போல அவற்றை அப்புறப்படுத்துவதிலேயேதான் முனைப்பு காட்டியது, ஹவாசின் நிர்வாகம். இந்தப் பணிக்காகவே ஒதுக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியின் உதவியுடன் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்தும் முடித்தனர். வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்தை வாங்கிக் கொண்டு, வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உயிரற்ற சடலத்தை வடமாநிலத் தொழிலாளர்களிடம் திணித்தது நிர்வாகம். சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வாகன ஏற்பாட்டை செய்துகொடுத்து, வழிச்செலவுக்கு சில ஆயிரங்களை கொடுத்தும் ‘மனிதாபிமான’ அடிப்படையில் நடந்து கொள்வதைப் போல தொழிலாளர்களிடம் காட்டிக்கொண்டது, நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த நயவஞ்சக நாடகத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்களிடையே அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“இந்த பச்சைப் படுகொலையை செய்தது “ஹவாசின்” நிர்வாகம். கைது செய்து தூக்கிலிட வேண்டிய கொலைக்குற்றவாளிகள் அவர்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கெதிராக தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்” என்ற  இவ்வமைப்பின் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்கள். கனவிலும், இது விபத்து என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராயில்லை.

ஹூண்டாய்-நரபலிநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அய்யோ பாவம் என்ற அனுதாப வார்த்தைகளும், உண்மையாய் மனம் வருந்தி இறந்துபோன தொழிலாளிக்கு நாம் செலுத்தும் இரங்கலும் இயல்பான ஒன்றுதான். இது மட்டுமே போதுமா, என்ன?  சொந்த ஊரில் வாழ வழியற்று மொழி, உணவு, பண்பாடு தெரியாத மண்ணில் ஆட்டுமந்தைகளைப் போல அவதிப்படும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் கூட யாரும் கவனிப்பாரின்றி முடிந்திருக்கிறது. உயிர் பிழைத்தோரும் என்ன ஏது என்று தெரியாமல் அனாதைகளாய் படுக்கையில் மயங்கிய நிலையில் இருக்கின்றனர்.

அழகான ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம், எந்த வங்கியில் வட்டி குறைப்புடன் கடன் வாங்கி வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழும் வர்க்கம் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருமா? பன்னாட்டு நிறுவனங்களின் வருகை சொந்த மண்ணின் பொருளியல் வளத்தை மட்டுமல்ல, சொந்த மக்களின் உயிரையும் உறிஞ்சித்தான் இலாபத்தை பறித்தெடுக்கிறது என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா? இல்லை எனில் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், தொழிலாளிகளின் சொந்தக் கதைகளிலிருந்து சொந்தக் குரலிலிருந்து கதைகளை கேளுங்கள்! கல் நெஞ்சத்தையும் கரைக்கும் அந்தக் கண்ணீர் உங்களது பாவங்களை கழுவட்டும்!

__________________________________________________

சி.வெற்றிவேல் செழியன் உதவியுடன்,
இளங்கதிர்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்

18
கோட்டு-சூட்டு-கனவான்களின்-எளிய-வாழ்க்கை
"திட்டக் கமிஷனைப் பொறுத்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஒருவர் நாளைக்கு ரூ 22.50க்கு மேல் செலவழித்தால் அவர் ஏழை என்று கருதப்படமாட்டார். ஆனால், அதன் துணைத் தலைவர் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம்." - படம் www.thehindu.com

எளிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய பிராணாப் முகர்ஜியின் வேண்டுகோளில் இருந்த உருக்கம் நாட்டில் கண்ணீரை பெருக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த காலத்தில் எளிமைக்காக மன்றாடிய போது அவரது சகாக்கள் அதை படைப்பாக்க உணர்வுடன் தழுவி கொண்டார்கள். நிதி அமைச்சகம் கூட 2009 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சிங்கின் வேண்டுகோளை செயல்படுத்த ஆரம்பித்து விட (எகானமி வகுப்பு விமான பயணம், செலவுக் குறைப்பு) அந்த புனிதத் தேடலின் நான்காவது ஆண்டை நாம் அடைந்திருக்கிறோம்.

எளிய வாழ்க்கையில் பல வகைகள் இருக்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னைக் கேட்டால் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பாணி எளிமையைத்தான் தேர்ந்தெடுப்பேன். எளிய வாழ்க்கையின் மீது டாக்டர் அலுவாலியாவுக்கு இருக்கும் பற்றை யாரும் கேள்வி கேட்டு விட முடியாது. ‘நடைமுறைக்கு ஏற்ற மட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்க வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கையை அவர் எதிர் கொண்ட விதத்தை பாருங்கள். மக்களுக்கு சும்மா செல்லம் கொடுத்து கெடுப்பது என்பது அவரிடம் இல்லை. ‘நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 29 ரூபாய் அல்லது கிராமப் புறத்தில் 23 ரூபாய் உங்களால் செலவழிக்க முடிந்தால், நீங்கள் ஏழை இல்லைதான்’. இத்தகைய கறாரை கோடிக்கணக்கான தனது சக குடிமக்கள் மீது சுமத்துவதை அங்கீகரிக்கும்படி உச்சநீதிமன்றத்திடமும் அவர் கோரினார். திட்ட கமிஷன் தாக்கல் செய்த ஆவணத்தில் நகர்ப்புறத்தில் ரூ 32, கிராமப் புறத்தில் ரூ 26 ஒரு நாளுக்கான நாள் செலவு என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பத்ம விபூஷண் பெற்ற அவரும், அவரது சகாக்களில் சிலரும் அதை இன்னும் குறைப்பதற்கு தமது தலையையும் அடகு வைக்க தயாராக இருந்தனர்.

தகவல் பெறும் உரிமை வினவல்கள்

டாக்டர் அலுவாலியா எளிய வாழ்க்கையைத்தான் கடைப்பிடிக்கிறார் என்பது இரண்டு தகவல் பெறும் உரிமை வினவல்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. தகவல் பெறும் உரிமையை பயன்படுத்தும் சிறந்த ஊடக செயல்பாடாக அவை இருந்தும் அவற்றுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை. அந்த இரண்டும் அலுவாலியாவின் எளிய வாழ்க்கையை பகுத்து ஆராய்கின்றன. அவற்றில் ஒன்று ஜூன் 2004-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே டாக்டர் அலுவாலியா வெளிநாடுகளுக்கு போன பயணங்களைப் பற்றி இந்தியா டுடேவில் ஷ்யாம்லால் யாதவ் எழுதிய கட்டுரை. இந்த பத்திரிகையாளர் (இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் பணிபுரிகிறார்) இதற்கு முன்பும் தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

மற்றது, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவையில் நிருபர் பெயர் குறிப்பிடப்படாமல் வந்த அறிக்கை. 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையில் டாக்டர் அலுவாலியாவின் உலகளாவிய பாய்ச்சல்களை பற்றிய விபரங்களை அது வெளிக் கொணர்ந்தது. அந்த கால கட்டத்தில், அவர் “18 இரவுகள் அடங்கிய நான்கு பயணங்களை மேற்கொண்டார். இதற்கு அரசு செலவழித்த தொகை ரூ 36,40,140, அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக ​​ரூ 2.02 லட்சம் செலவு” என்று சொல்கிறது ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவை அறிக்கை.

அந்த பயணங்கள் நிகழந்த கால கட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ 2.02 லட்சம் என்பது டாலர் மதிப்பில் $4,000 ஆகும். (ஹிஹி! மான்டேக் சிக்கன வாழ்க்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். இல்லையெனில் அவரது செலவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) அந்த தினசரி செலவினம், கிராமப்புற இந்தியர்கள் ஒரு நாளைக்கு செலவிட வேண்டியதாக அவர் கருதும் வரையறையான 45 சென்டை விட 9,000 மடங்கு அதிகமாகும். அல்லது டாக்டர் அலுவாலியா நடைமுறையில் போதுமானது என்று கருதும் நகர்ப்புற இந்தியர்களுக்கான வரையறையான 55 சென்ட்டுகளை விட 7,000 மடங்கு அதிகம்.

இப்ப பாருங்க, அவர் 18 நாட்களில் செலவழித்த ரூ 36 லட்சத்தை (அல்லது $72,000) உலக சுற்றுலா துறைக்கு அவர் அளித்த தனிப்பட்ட ஊக்குவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஐநாவின் சுற்றுலா நிறுவனம் சுட்டிக் காட்டுவது போல அந்த துறை 2008-09-ன் இழப்புகளிலிருந்து 2010-ல்தான் மீண்டு கொண்டிருந்தது. அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு உலகளாவிய சுற்றுலா வருமானம் $1 டிரில்லியனைத் தாண்டியது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. மிக அதிக வருவாய் அதிகரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்தது. இந்த 18 நாட்களில் பெரும்பாலானவை அந்த இடங்களில்தான் செலவழிக்கப்பட்டன. உள்நாட்டில் சிக்கன வாழ்க்கையின் சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இந்த பொருளாதார மீட்சியில் தமது பணமும் ஒரு சிறு பங்காற்றியிருப்பதை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

வறுமைக்கோடு-1

ஷ்யாம்லால் யாதவின் தகவல் பெறும் உரிமை மனுவிலிருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்கள் இன்னும் கலக்கலாக இருக்கின்றன. டாக்டர் அலுவாலியா தனது ஏழு வருட பணிக்காலத்தில் 42 முறை உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 274 நாட்களை வெளிநாடுகளில் கழித்திருக்கிறார் என்ற அவரது கண்டுபிடிப்பை முதலில் எடுத்துக் கொள்வோம். அதாவது “ஒன்பது நாட்களில் ஒரு நாள்” அவர் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து பயணம் செய்த நாட்களை இதில் சேர்க்கவில்லை. அவரது மகிழ்வுலாக்கள் இந்திய கஜானாவுக்கு ரூ 2.34 கோடி செலவு வைத்தாக இந்தியா டுடேயின் ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால், அவரது பயணங்களுக்கான செலவுகள் பற்றி மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளை பெற்றதாகவும், பாவம் பார்த்து உள்ளதில் குறைந்ததை எடுத்துக் கொண்டதாகவும் இந்தியா டுடே அறிக்கை குறிப்பிடுகிறது. “வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தது போன்ற செலவுகள் சேர்க்கப்பட்டதா தெரியவில்லை” என்றும் இந்தியா டுடே அறிக்கை சொல்கிறது. “உண்மையான செலவுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்”.

இந்த பயணங்கள் அனைத்தையும் “பிரதமரின் அனுமதியுடனே”யே மேற்கொண்டிருந்தாலும், அவர் வகிக்கும் பதவிக்கு வெளிநாட்டு பயணம் பெரிதளவு தேவைப்படுவதில்லை என்பதால், கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. அந்த 42 பயணங்களில் 23 பயணங்கள் திட்டமிடலில் மீது நம்பிக்கையே இல்லாத அமெரிக்காவுக்கு (டாக்டர் அலுவாலியாவுக்கும் திட்டமிடலில் நம்பிக்கை இல்லைதான்) மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன?

எளிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதா? அப்படியானால், அவரது பயணங்களுக்காக நாம் இன்னும் அதிகம் செலவிட வேண்டும்: ஏதென்சின் தெருக்களில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை ஒழிப்பதற்காக போராடும் அசிங்கமான கிரேக்கர்களை பாருங்கள்! பணக்காரர்களின் எளிய வாழ்க்கை இன்னும் வெளிப்படையாக தெரியும் அமெரிக்காவுக்கு அதிகம் செலவானாலும் அவர் இன்னும் பல முறை பயணிக்க வேண்டும். வால் தெரு உலக பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கிய 2008-ம் ஆண்டில் கூட அந்த நாட்டின் நிறுவன தலைமை அதிகாரிகள் பில்லியன் கணக்கில் போனஸ்களை எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு, அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களின் ஊடக பத்திரிகைகள் கூட, தலைமை நிர்வாகிகள் தமது நிறுவனங்களையும், வேலை வாய்ப்புகளையும், இன்னும் பலவற்றையும் அழிப்பதையும் அதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதையும் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டுக் கடன்களை அடைக்க முடியாமல் போனவர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இன்னொரு வகையான எளிய வாழ்க்கையை பார்த்தார்கள். பிரெஞ்சு மக்கள் காலப் போக்கில் பயப்படுவதும், எதிர்த்து வாக்களித்ததுமான வகை.

திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com

டாக்டர் சிங் 2009-ல் எளிய வாழ்க்கைக்காக மன்றாடிய போது அவரது அமைச்சரவை பிரமாதமாக அந்த அழைப்புக்கு செவி சாய்த்தது. அடுத்த 27 மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாதத்திற்கு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் மட்டும் தனது சொத்துக்களில் ஆரவாரமில்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். முழு நேரமும் அமைச்சர்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அதை செய்தார்கள். ( “மத்திய அமைச்சரவை, இன்னும் செழிப்பாகிறது” தி இந்து, செப்டம்பர் 21, 2011). அவர்களில் தலை சிறந்தவர் பிரஃபுல் படேல். அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். அவரது பொறுப்பில் இருந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ஏர் இந்தியாவின் தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதற்கு பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது அதே காலகட்டத்தில்தான். இப்போது பிரணாப் சவுக்கை சுழற்றி விட, இன்னும் கடுமையான சிக்கனம் எல்லா இடங்களையும் ஊடுருவப் போகிறது.

இந்த சிக்கன வாழ்க்கையின் இருதரப்பு உணர்வையும் கவனிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பிரபுல் பட்டேலும் (ஐக்கிய ஜனநாயக முன்னணி – தேசியவாத காங்கிரஸ் கட்சி), நிதின் கட்காரியும் (தேசிய முற்போக்கு கூட்டணி-பாரதீய ஜனதா கட்சி) இதுவரையில் காணாத அளவுக்கு அதிக செலவிலான திருமணங்களை நடத்தினார்கள். எந்த ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டதை விட அதிகமான விருந்தினர்கள் அவர்கள் நடத்திய திருமண விழாக்களில் கலந்து கொண்டார்கள். அத்தகைய எளிய வாழ்க்கையில் பாலின சமத்துவமும் இல்லாமல் போய் விடவில்லை, அந்த திருமண விழாக்கள் திரு படேலின் மகளுக்கும் மற்றும் திரு கட்காரியின் மகனுக்குமாக நடந்தன.

அவர்களது கார்பொரேட் சகாக்கள் எளிய வாழ்க்கையை இன்னும் தீவிரமாக செயல்படுத்தினார்கள். 27 மாடியிலான (ஆனால் 50 மாடிகளை விட உயரமான) நமக்குத் நினைவு தெரிந்து அதிக செலவில் கட்டப்பட்ட அவரது வீட்டுடன் முகேஷ் அம்பானி. கிங்பிஷர் ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் போது – மே 5 அன்று டுவிட்டரில் “துபாயில் பூர்ஜ் காலிபாவின் 123வது மாடியில் அட்மாஸ்பியரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் இதுவரை இருந்தது இல்லை. வியப்பளிக்கும் காட்சி” என்று ட்வீட் செய்த விஜய் மல்லையா. அது கிங்ஃபிஷர் இப்போது பறக்கும் உயரத்தை விட அதிகமாயிருக்கலாம். இரண்டு பேரும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கிறார்கள். ஐபிஎல் கேளிக்கை வரி சலுகை முதலாக அரசு மானியங்களை பெற்றிருக்கிறது.  அதாவது, பம்பாய் உயர் நீதிமன்றத்துக்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டது வரை. பொதுமக்கள் பணத்தில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று இன்னும் பல சிக்கன நடவடிக்கைகள் இருக்கின்றன. காத்திருங்கள்.

வால் தெரு மாதிரி

இங்கு உள்ள கார்பொரேட் உலகம் வால் தெருவின் சிக்கன நடவடிக்கை மாதிரியை பின்பற்றுகின்றன.  சிட்டி குரூப் மற்றும் மெர்ரில் லிஞ்ச் உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் “2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் $175 பில்லியன் மானியமாக பெற்றுக் கொண்ட போது தமது ஊழியர்களுக்கு $32.6 பில்லியன் போனஸ்கள் வழங்கினார்கள்” என்று ப்ளூம்பர்க் 2009-ல் தெரிவித்தது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோவின் அறிக்கையை அது மேற்கோள் காட்டியது : “வங்கிகள் நன்றாக செயல்பட்ட போது, அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மோசமாக செயல்பட்ட போது அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மிகவும் மோசமாக செயல்பட்ட போது, அவை மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றப்பட அதே நேரத்தில் அவர்களது ஊழியர்களுக்கு அப்போதும் நிறைய பணம் கொடுக்கப்பட்டது. லாபம் பெருமளவு குறைந்துவிட்ட போதும் போனஸ்களும் மொத்த வருமானம் பெருமளவு மாறுபடவில்லை.”

பிரணாபின் சிக்கன வேண்டுகோளைத் தொடர்ந்து நிதி நெருக்கடி “அடுத்தடுத்த இலவச திட்டங்களால்தான்” ஏற்படுகிறது என்று பெரும் பணக்காரர்கள் தொலைக்காட்சிகளில் கொதிப்பதை பார்க்க முடிந்தது. அதாவது மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சிப்பது, பட்டினியை குறைப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற முட்டாள்தனமான விஷயங்கள். பிரணாபின் அதே பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் கார்பொரேட் வரி, கலால் வரி, சுங்க வரி சலுகைகள் மூலம் வழங்கப்பட்ட ரூ 5 லட்சம் கோடி அளவிலான பணக்காரர்களுக்கான ஜனரஞ்சகம் பற்றி எந்த முனகலும் இல்லை. (“பிபிஎல்லை சரி செய்ய சி.பி. எல்லை ஒழியுங்கள்” தி இந்து, மார்ச் 26, 2012). அந்த தள்ளுபடிகள் அரசின் நிதிப் பற்றாக்குறையை விட 8,000 கோடி கூடுதல் என்று நாடாளுமன்றத்தில் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். ஆனால் ஏழைகளுக்கான ‘ஜனரஞ்சக நடவடிக்கைகள்’ தான் தாக்கப்பட்டன.

அமர்த்தியா சென் ( தி இந்து, ஜனவரி 7, 2012) “தங்கத்துக்கும் வைரத்துக்கும் சுங்கவரி விலக்கு அளிப்பது போன்ற வருமானம் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் ஏன் வாதம் நடைபெறுவதே இல்லை. நிதி அமைச்சக மதிப்பீடுகளின்படி அது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு தேவைப்படும் கூடுதல் பணத்தை (Rs.27, 000 கோடி) விட அதிகமான வருமான இழப்பை ஏற்படுத்துகிறது (வருடத்திற்கு ரூ .50, 000 கோடி)” என்று சோகமாக கேட்கிறார்.

மெச்சத்தக்கவர்களின் ஒளிரும் வட்டத்துக்கு வெளியில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்தது இன்னொரு வகையான எளிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்ற வீதம் இரண்டு இலக்கங்களில் பறக்கிறது. காய்கறி விலைகள் ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்கின்றன. குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு வீதம் துணை சகாரா ஆப்பிரிக்காவை விட இரண்டு மடங்காக இருக்கிறது. குடும்பங்கள் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெருமளவு அதிகரித்து விட்ட மருத்துவச் செலவுகளால் திவலாகிப் போகின்றனர் பல லட்சம் பேர். விவசாயிகள் உள்ளீடுகளை வாங்க முடியாத, கடன் பெற முடியாத நிலைமை. உயிர் கொடுக்கும் பொருளான தண்ணீர் மேலும் மேலும் பிற தேவைகளுக்காக திருப்பப்படுவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு நெரிக்கிறது.

மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.

_________________________________________________

– பி.சாய்நாத், நன்றி தி இந்து

தமிழாக்கம்: அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

51
நரபலி சிறுமி ராஜலட்சுமி
கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி

அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவர். இவரது 5 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதியன்று காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவள் கண்டெடுக்கப்படுகிறாள். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இது நரபலியாக இருக்கலாமென்று போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் மலபார் என்ற கருப்பு மீது சந்தேகமேற்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து கருப்புவின் தந்தை மகாமுனியும்(65) கைது செய்யப்பட்டார். அவரோ உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்து போகிறார். நாக்கை அறுத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்ந்த கருப்புவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது கொலையா, தற்கொலையா, தற்கொலைக்கு நெருக்கடி கொடுத்த நிர்ப்பந்தமா என்பதெல்லாம் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்.

சிறுமியின் கொலை கண்டிப்பாக நரபலிதான் என்பதோடு தேடப்படும் நபர்களின் மர்ம மரணம் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறுமி அணிந்திருந்த கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்ததை வைத்து அதைக் கொடுத்த முருகேசன் என்பவரை பிடித்து கைது செய்த போது இந்த அதிர்ச்சியூட்டும் நரபலியின் முழுக்கதையும் தெரிய வந்திருக்கிறது.

முருகேசன் கொடுத்த தகவலின் படி கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நரபலியின் முதன்மைக் குற்றவாளியான அயூப்கான் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு முன்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தி.மு.கவில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரெல்லாம் காமா சோமா நபர்களாக இருக்கமாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. நாமும் நம்புவோம். அதன்படி அயூப்கானுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட இயக்க வரலாறு எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்குமென்பதால் இவரது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார். எனினும் அல்லா உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு பெரிய உணர்ச்சி ஒன்று உண்டு. வருமானத்தைக் கொடுக்கும் பொருளாதர உணர்ச்சிதான் இவரது வாழ்வின் அடிப்படையான உணர்ச்சி. சுயநிதிக் கல்லூரி முதலாளிகளாக இருக்கும் ஏனைய ஒட்டுக்கட்சி பிரமுகர்களைப் போல அயூப்கானும் மதுரை எல்லீசு நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த ஒரு முதலாளி. பொறியியில் கல்லூரி முதலாளிகளின் வருமானம் இலட்சங்களில் இருக்குமென்றால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளின் வருமானம் ஆயிரங்களில் இருக்கும். கூடவே ஊராட்சி பதவி, கட்சிப் பதவி மூலம் வருமானங்கள் தனி.

நாளொரு மேனியும் வளர்ந்து வந்த கல்வித் தொழிலுக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென்று தனிச்சியம் பகுதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் அயூப்கான். அதன் பெயர் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரியாம். இருப்பினும் அயூப்கான் நினைத்த வேகத்தில் கட்டிடம் எழவில்லை. வழக்கமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னும் கோழியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை தெளித்து கட்டிடம் இடியாமல் இருப்பதற்கு கொத்தனார் ஒரு சடங்கு செய்வார். ஆனால் அயூப்கானுக்கு கோழி போதவில்லை. ஆகவே விரைவில் கட்டிடம் முடிக்கப்பட்டு தனது கல்வி வியாபரம் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்று நினைத்ததால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

கோழி என்றால் நூறு இருநூறில் முடிந்து விடும். ஆனால் கைமேல் பலன் தரும் நம்பிக்கை என்றாலும்  குழந்தைக்கு எங்கு போவது? இதனால் கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு, பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரையும் தொடர்பு கொண்டு தனது கொடூர ஆசையை தெரிவித்து எத்தனை இலட்சம் செலவானாலும் தருகிறேன் என்று பேசி முடிக்கிறார். நரபலிக்காக மொத்தம் ஆறு இலட்ச ரூபாய் ரேட் பேசுகிறார், அயூப்கான்.

ஆறு இலட்சமா என்று வாய்பிளந்த அந்த கும்பல் உடனே காரியத்தில் இறங்கியது. அன்றலர்ந்த மலர் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இராஜலட்சுமியை கடத்தி கருப்பின் வீட்டில் வைத்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின்  கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்து இரத்தத்தை தூக்கு வாளியில் பிடித்துக் கொண்டனர். சிறுமி இறந்து போகிறாள். பின்னர் உடலை வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டுவிடுகின்றனர். கருப்புவின் தந்தை மகாமுனி மட்டும் இரத்தம் அடங்கிய தூக்குவாளியை அயூப்கானை சந்தித்து கொடுக்கிறார். அல்லாவைத் தொழும் அயூப்கானும் கல்லூரிக் கட்டிடத்தை சுற்றி அந்த ரத்தத்தை தெளிக்கிறார். பின்னர் அந்த மூவர் கும்பல் அயூப்கானிடம் ஆறு இலட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறது.

இவையெல்லாம் முதலில் கைது செய்யப்பட்ட முருகேசன் மூலம் படிப்படியாக மற்றவர்கள் பிடிபட்டு போலிசிடம் தெரிவித்த தகவல்கள். அதன் பின்னரே அயூப்கான் கைது செய்யப்படுகிறார். இப்போது மகாமுனி, கருப்பு ஆகிய இருவரின் மர்ம மரணங்கள் எப்படி நடந்திருக்குமென்பதை நாம் யூகிக்கலாம்.

நரபலி

மனித குல வரலாற்றின் ஆரம்பத்தில் புராதான இனக்குழு சமூகமாக இருந்த மனிதர்கள் பின்னர் அடிமையுடமை சமூகத்தில் நுழையும் போது நரபலியும் தோன்றுகிறது. இயற்கை சீற்றங்கள், பருவ கால மாற்றங்கள், இனக்குழுச் சண்டைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத மனித சமூகம் அவற்றை நிறுத்த வேண்டி இனக்குழு கடவுளர்களுக்கு பலியிடலை செய்கிறது. ஆரம்பத்தில் விலங்குகள் பிறகு மனிதர்கள் என்று அது மாறுகிறது.

பார்ப்பனியத்தின் வரலாற்றிலும் விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் தீவிரமாக இருந்தது. கூடவே மனிதர்களை பலியிடுவதும் நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் அரவான் பலி அதற்கோர் சான்று. இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரை பரவலாகவே இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. அன்றைக்கு இயற்கைக்கு அஞ்சிய மனிதகுலம் செய்த நரபலி, இன்று இயற்கையை மனிதன் கட்டுப்படுத்தும் காலத்திலும் தொடர்வதற்கு காரணமென்ன?

இன்னும் பின்தங்கிய நிலவுடமைச் சமூகங்களாக இருக்கும் நாடுகளில் இந்த வழக்கம் நீடிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா இரண்டிலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிப்படையான ஜனநாயத்தில் தீர்த்துக் கொள்ளும் சூழலில்லாத நிலையில் அந்த இடத்தை மதமும், மூடநம்பிக்கைகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்துகின்றது.

இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. பார்ப்பனியத்தின் அடிப்படை விதிகளை விடாத பல முதலாளிகள் இந்தியாவில் உண்டு. மேலும் குறுக்கு வழியில் அதிக பணம் சேர்க்க வாய்ப்புகளை வழங்கும் இந்த மறுகாலனியாக்க சூழ்நிலையில் அந்த மூடநம்பிக்கைகள் முன்னிலும் வலுவாக பின்பற்றப்படுகின்றன. எனில் இந்த அடிமை சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பெரியார் செய்த பணிகளை இன்னும் எத்தனை வீச்சில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியார் இயக்க வழியில் வந்த ஒரு உடன்பிறப்பே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது என்பதிலிருந்து திராவிட இயக்கத்தின் தோல்வியையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி அயூப்கான் முற்றிலும் தி.மு.கவிலிருந்து நீக்கப்படவில்லை. இது பொய்க்குற்றச்சாட்டு என்று அயூப்கான் மறுத்திருப்பதால் அவர் சட்டரீதியாக விடுதலையாகும் வரை தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை, அவரை அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைப்பது என்பதுதான் தி.மு.கவின் முடிவு.

ஒன்றரையாண்டுகளாக நடந்து வரும் வழக்கு, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அயூப்கானின் பங்கையும் குற்றத்தின் முகாந்திரத்தையும் மேலோட்டமாகக்கூட உணரலாம். ஆனால் ஊரேல்லாம் சொத்தை கைப்பற்றிய தி.மு.க பிரமுகர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சொத்துக்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்று அவர்கள் ஏதாவது சடங்கு, பரிகாரங்களை கண்டிப்பாக செய்வார்கள். அதன்படி அந்த சடங்கை கொஞ்சம் வரம்பு மீறினார் என்றாலும் அயூப்கான் செய்திருப்பதை உடன்பிறப்புகள் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.

நரபலிதான் என்று முடிவான பிறகு அயூப்கான் தனது வீட்டு இளைஞர்களையோ, பெண்களையோ, குழந்தைகளையோ நினைக்கவில்லை. சொந்த பந்தங்களை பார்க்காத அந்தக் கால நரபலி இன்று அப்படி பார்த்து சம்பந்தமில்லாத நபரை அதுவும் குழந்தையை கொல்லலாம் என்று முன்னேறியிருப்பதுதான் பரிணாம வளர்ச்சி போலும். அதிலும் ஒரு தலித் சிறுமி என்றால் கேட்பார் நாதியில்லை அல்லவா?

ஊரை விட்டு விலக்கி வைக்கப்ப்ட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தம், ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் வேண்டும். ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்? இத்தகைய பிரமுகர்கள்தான் அரசியலிலும், ஊராட்சி பதவிகளிலும், பள்ளி – கல்லூரிகளை நடத்தும் தொழிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்? அந்த துணிச்சலுக்கு மத நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தானே போபால் படுகொலையில் பார்த்தோம்.

ஆரம்பத்தில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பிற்கு மாற்று என்று தோன்றிய இசுலாமும், கிறித்தவமும் கூட இறுதியில் இந்து மதத்தின் செல்வாக்கில் கரைந்து விட்டிருக்கின்றன. பார்ப்பனியத்திடம் சரணடைந்த இசுலாம் என்ற கட்டுரைக்கு இணையத்தில் இருக்கும் இசுலாமிய ‘அறிவாளிகள்’ பொங்கினார்கள். இதற்கு மதத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்ற நழுவல் வேறு. இவர்களெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக நன்னெறி மார்க்கத்தை போதித்து தமக்குத்தாமே சுய இன்பம் காணும் சுயநலவாதிகள். நேரிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனை பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே சிறுநீர் கழிக்கும் கோழைகள். கிறித்தவர்களை வம்புக்கிழுத்து பைபிள் ஒரு ஆபாச நூல் என்று சவால் விடுவார்கள். ஆனால் இந்து புராணங்கள் ஒரு ஆபாசக் குப்பை என்று ஆர்.எஸ்.எஸ் காரனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்க வக்கற்றவர்கள். அப்படி அழைத்தால் புரட்சித் தலைவியின் நெருப்பு இவர்களை சுட்டெரிக்கும் என்பதை தெரிந்தவர்கள்.

ஒருவேளை இந்து மதத்தை அம்பலப்படுத்தி நாம் அப்படி எழுதினாலும் இது மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என்று ஓடிவருவார்கள். இறுதியில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அயூப்கான் அதுவும் போறாது என்று ஒரு நரபலி செய்திருக்கிறாரே இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் சவுதி ஷேக்குகள் உலக இசுலாத்தின் காவலர்கள் என்றால் பார்ப்பனியத்தின் நரபலியை பின்பற்றும் அயூப்கான்கள் போன்றோர்தான் உள்ளூர் இசுலாத்தின் பாதுகாவலர்கள். அமெரிக்காவிடமும், இந்து மதவெறியிடமும் சிக்கிக் கொண்டு துன்பப்படும் இசுலாமிய மக்கள் இந்தக் காவலர்களிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது.

இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை. அவளைக் கொன்ற கொடியவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஊரறியக் கொன்ற ரன்வீர் சேனா கொலையாளிகளையே விடுவித்த நாடில்லையா? ஆனால் இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும். இராஜலெட்சுமி சிந்திய இரத்தத்தை அப்படியாவது வீணாகாமல் காட்டுங்கள். பார்க்கலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

47
ரன்வீர்-சேனா-பிரம்மேஷ்வர்-சிங்
பிரம்மேஷ்வர் சிங்

இந்த ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் இது முக்கியமானது. ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.  அந்த அடையாளம் தெரியாத தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

இந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான ஆதிக்க சாதிகள்தான் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை –  ஆதிக்கத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை கொடுரமாக அடக்கி கொடுமைப்படுத்துகின்றனர். கால் வயிற்றுக் கஞ்சிக்காக எல்லா வகை உரிமைகளையும் இழந்து நடைப் பிணங்களாக இம்மக்கள் வாழும் துயரம் அளவிடற்கரியது.

இந்த சூழலில்தான் 1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க வீரத்துடன் களமிறங்கியது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் ( இந்தக் குழு பிற்பாடு பாராளுமன்றவாதத்தில் பங்கேற்று சீரழிந்து போனது) போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி வன்முறையை ஏவிவிடும் நிலப்பிரபுக்களுக்கு தக்க பாடத்தை புகட்டத் துவங்கினர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் வன்மத்துடன் பொறுமிக் கொண்டிருந்தனர்.

90களில் ஆதிக்க சாதி பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த குண்டர் படைகள் அவற்றில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது.  இப்படித்தான் பூமிகார் உள்ளிட்ட ஆதிக்கசாதி பண்ணையார்களின் ரவுடிப்படையாக ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த குண்டர் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த பதனி டோலா படுகொலையில் 21 தலித் மக்களை கொன்றனர். அதில் 11 பெண்களும், ஆறு குழந்தைகளும் அடக்கம். பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம்? குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்களாம், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்களாம் என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே அறிவித்தது.

தமிழகத்தின் கீழ்வெண்மணி படுகொலையை ஒத்த இந்த பதனி டோலா படுகொலை குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டாலும் பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் அவர்களை விடுவித்தது. படுகொலையை நேரடியாக பார்த்த சாட்சியங்களை கூட ஆதிக்க சாதி வெறிக்கு அடிபணிந்து நடக்கும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

1997 டிசம்பர் லக்ஷமன்பூர் படுகொலையில் 61 தலித் மக்கள் ரன்வீர் சேனாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 16 குழந்தைகளும், 27 பெண்களும், 18 ஆண்களும் அடக்கம். இந்த படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரம்மேஷவர் சிங் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் உண்டு. இருப்பினும் பலவற்றில் சாட்சியங்கள் இல்லை என்று இந்த கொலைகார நாய் விடுவிக்கப்பட்டிருக்கிறான். மேற்கண்ட வழக்கில் பிணையிலும் வெளிவந்திருக்கிறான்.

இந்தப் படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா குண்டர் தலைவர்களை நக்சலைட்டுகள் கொன்ற போதும், ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களை தாக்கிய போதும் ரன்வீர் சேனா தலைவன், லஷ்மன் பூர் படுகொலையை விட கொடூரமான படுகொலை நடக்கும் என்று பகிரங்கமாகவே மிரட்டியிருக்கிறான். பல ஊடகங்களிலும் அந்த செய்தி வந்துள்ளது. எனினும் இந்த நாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை

பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோவாக உலா வந்த லாலுவும் சரி, தற்போது ‘நேர்மையான’ ஆட்சியை நடத்தும் நிதீஷ் குமாரும் சரி இந்த் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான் ஆதரவாக இருந்திருக்கின்றனர். ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

இது போக ஓட்டுப்பொறுக்கும் தலித் கட்சிகளும் கூட ஆதிக்கசாதி குண்டர்களை ஆதரிக்கும் இத்தகைய கட்சிகளோடு கூடிக் குலாவியபடிதான் தலித் மக்களுக்கு துரோகமிழைத்தன. காங்கிரசு, பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இவர்கள் நேரடியாகவே ரன்வீர் சேனாவின் பாதுகாவலர்களாக இருந்தனர். தற்போது கூட கொலைகார நாய் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டதற்கு பாரதிய ஜனதா கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அதன் மாநில தலைவர் சி.பிதாகூர் இந்த கொலைகார நாயை மாபெரும் விவசாயிகள் தலைவன் என்று போற்றியதோடு இறுதி ஊர்வலத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பார்ப்பன இந்து மதம் பஞ்சமர்கள் என்று சொல்லி தலித் மக்களை ஒடுக்கியது போல பாரதீய ஜனதா அதே ஒடுக்குமுறையை ரன்வீர் சேனாவைக் கொண்டு நடத்துகிறது.

எல்லா ஒட்டுக் கட்சி தலைவர்களும் ரன்வீர் சேனா தலைவன் கொன்ற வழக்கை சி.பி.ஐ விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றன. இவை தவிர அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம் அனைத்தும் ஆதிக்க சாதிவெறியின் செல்வாக்கில்தான் இருக்கின்றன என்பதால் இந்த கொலைகார படை இதுவரை எந்த அரசு அமைப்பாலும் தண்டிக்கப்படவில்லை. ஒரு கொலைகாரனுக்கு கூட தூக்கு வாங்கித் தர முடியவில்லை.

ஆக ரன்வீர் சேனாவை அரசுகள் தடை செய்திருப்பினும் சமூக, சிவில், கட்சி அமைப்புகளால் அது அரவணைக்கப்பட்டதோடு எப்போதும் போலவே இயங்கி வந்தது. ஒவ்வொரு கொலையையும் தான்தான் செய்தோம் என பகிரங்கமாகவே ரன்வீர் சேனா அறிவித்து வந்தது. படுகொலை நடந்த கிராமங்களின் கிணறுகளில் இரத்தத்தால் ரன்வீர் சேனாவின் கொலைச்செய்தியை பொறித்து விட்டே சென்றிருக்கின்றனர். இந்த கொலைகார படை அஞ்சியது நக்சலைட் இயக்கத்தினை பார்த்து மட்டும்தான்.

ஆக இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் இன்னல்களை இங்கிருக்கும் அரசு – கட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதோடு, அவற்றை செய்யும் ஆதிக்க சாதிவெறிக்கு துணை போனதுதான் வரலாறும், யதார்த்தமும். இரத்தக் கறை படிந்த இந்த வரலாற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது நக்சல் இயக்கம்தான்.

ஆகவே அடையாளம் தெரியாத அந்த ஆறு தோழர்கள் இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்றதை நாம் மனமார பாராட்டுகிறோம். தலித் மக்களுக்கு தலித் அமைப்புகள் உள்ளிட்டு எந்த கட்சிகளும் பிரதிநிதிகள் இல்லை. நக்சல் இயக்கம் மட்டும்தான் அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை பீகாரின் இரத்தக்கறை படிந்த வரலாறு காட்டுகிறது. பதனி டோலோ படுகொலை வழக்கின் குற்றவாளிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட காலத்தில், ரன்வீர் சேனாவின் எல்லா படுகொலைகளுக்கும் தலைமை தாங்கிய பிரம்மேஷ்வர் சிங் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்பட்ட இதே காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பெருமூச்சாக இந்த கொலை நடந்திருக்கிறது.

தலைவனுக்கு நேர்ந்த கதி அனைத்து குண்டர்களுக்கும் நேரும் வரை நக்சல் இயக்கமும் ஓயப் போவதில்லை.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தோழர் ஏகலைவன் (எ) மகாலிங்கம் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

10
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்

வேலூர் மாவட்டம். திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏகலைவன் (எ) ‘டெய்லர்’ மகாலிங்கம்  அவர்கள் 28.05.2012 அன்று காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் தனது 65 வது வயதில் அகால மரணமடைந்தார்.

திருப்பத்தூர் – கந்திலி ஒன்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பங்கேற்புடன் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகு 29.05.2012 அன்று தோழரின் உடல் அவரது சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

1980 களில் தோழர் ‘இருட்டுப் பச்சை’ அவர்களின் காலத்திலிருந்தே நக்சல்பாரி புரட்சிகர அரசியலோடு தொடர்பு கொண்டு பிறகு 1980 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் ஏகலைவன். அன்று முதல் திருப்பத்தூர் பகுதியில் ம.க.இ.க வின் முகவரியாகவும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் முகவராகவும் விளங்கியவர்.

இவர் ஒரு சிறந்த தையற் கலைஞர். அதனால் வங்கி – தொலைத் தொடர்பு – மருத்துவ மனை – நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  என பலரும் இவரிடம்தான் தங்களது ஆடைகளை தைத்துச் செல்வார்கள். இவர்களிடம் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளையும் அமைப்பின் பிரசுரங்களையும் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தார். இதன் மூலமாக திருபத்தூரில் ம.க.இ.க பிரபலமடைவதற்கு ஆதாரமாகத் திகழ்ந்தவர்.

இவர் ஒரு சிறந்த ஓவியக் கலைஞரும் கூட. தொடக்க காலத்தில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் விளம்பரங்களையும் ம.க.இ.க வின் போராட்டச் செயத்திகளையும் சுவரெழுத்துகளாகவும் சுவரொட்டிகளாகவும் தன்னந்தனியாகவே மக்களிடையே எடுத்துச் சென்றவர். இவரது சுவரெழுத்துக்கள் பிறரை பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். கோடுகள் போடாமலேயே மிகப் பெரிய சுவரெழுத்துக்களை எழுதும் வல்லமை பெற்றவர். கந்திலி – திருப்பத்தூர் ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தவைகளே.

திருப்பத்தூரில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ததோடு அக்கூட்டங்களில் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி உள்ளார். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து மக்களிடையே ‘நக்சலைட்’ பீதியூட்டி வந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு தோழரின் துணிச்சலான செயல்பாடு மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

ஒரு துணிச்சலான தோழராக விளங்கிய அதே நேரத்தில் கடின உழைப்பாளியாகவும் விளங்கியவர். மிதிவண்டிதான் அவரது 65 வது வயது வரை இவரது உற்ற நண்பன். சுவரெழுத்து எழுதுவதாக இருந்தாலும், சுவரொட்டி ஒட்டுவதாக இருந்தாலும் அல்லது தனது தையற்கடைக்கு வருவதாக இருந்தாலும் தனது கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு சளைக்காமல் மிதி வண்டியிலேயே பயணித்தவர். மரணத்தின் போதுகூட மிதிவண்டியோடுதான் மரணத்திருக்கிறார்.

சீனக் கதைகளில் வரும் ‘மலையைக் குடைந்த மூடக்கிழவனை’ப் போல தனது வீட்டருகே இருக்கும் ஏரிவாய்க்காலின் குறுக்கே ஒரு சிறு அணை போன்ற தடுப்பை தன்னந்தனியாய் அமைத்தவர். இவரது கடின உமைப்பை பறைசாற்றும் சான்றாய் ஊர் மக்களால் இது பேசப்படுகிறது.

அமைப்பு வேலைகளை முழுநேரமாக எடுத்துச் செயல்படும் தோழர்களைப் பராமரிப்பதிலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டியவர் தோழர் ஏகலைவன். அத்தகைய தோழர்களின் உணவு – உடை மற்றும் தோழர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான உடை-நோட்டுப் புத்தகங்களை தானே முன் வந்து பூர்த்தி செய்வார். இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய கையில் உள்ள பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கியாவது ஈடு செய்வார். கழிவிரக்கம் கொண்டு அவர் இவ்வாறு செய்வதில்லை. மாறாக புரட்சியின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவே இவ்வாறு செய்த வந்தார்.

தனது குடும்ப உறுப்பினர்களை புரட்சிகர வேலைகளுக்கு ஆதரவாக மாற்றியமைத்தவர். சிறந்த தெருக்கூத்துக் கலைஞரான அவரது தந்தை நாராயணன் அவர்களையும் தெருக்கூத்துகளில் புரட்சிகரப் பாடல்களை எழுதிப் பாடும் அளவிற்கு மாற்றியமைத்தவர். அவரது வீடு திருப்பத்தூர் வட்டாரத் தோழர்களின் பாசறையாகவே விளங்கியது எனலாம்.

பிறர் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். அனைத்து தரப்பு மக்களிடமும் வயது வரம்பு பார்க்காமல், சாதி – மதம் பார்க்காமல் மிகவும் இயல்பாகப் பழகியவர். இவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டமே இதற்கு சாட்சியாய் அமைந்தது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் கோலோச்சும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்குள் இன்றைக்குக்கூட செல்ல முடியாது. ஆனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒடுக்கப்பட்ட சாதியினர் தனது வீட்டிற்கு வருவதும், உறவினர்கள் போல அவர்கள் உறவு முறை சொல்லி பழகுவதையும் நடைமுறைப் படுத்தியதோடு தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் அதை ஜனநாயகப் படுத்தியவர்.

கடந்த சில ஆண்டுகளாக முன்பு போல நடைமுறை அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது புரட்சிகர உணர்வு சிறிதும் குன்றவில்லை. இறுதி அடக்கத்தின் போது செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை அவரது பிள்ளைகள் புறக்கணித்ததை பார்த்த போது அவரது புரட்சிகர உணர்வின் மீது பிள்ளைகள் கொண்டிருந்த மதிப்பை உணர முடிந்தது.

தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள பலர் முயலும் போது பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த போதும் இவர் மட்டும் தனது வாழ்க்கையை புரட்சிகர அரசியலோடு பிணைத்துக் கொண்டதற்குக் காரணம் சமூக விடுதலையின் மீது இவர் கொண்டிருந்த வேட்கையே. அவரது வேட்கையை நாமும் நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டதை முன்னெடுத்துச் செல்வோம்!!

தோழர் ஏகலைவன் அவர்களுக்கு வீரவணக்கம்!

 __________________________________________________________________________

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருப்பத்தூர்-கந்திலி ஒன்றியங்கள்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?

74

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 15

”ஜிகாத் என்றால் புனிதப் போர். இந்த ஜிகாத் ‘தாரூல் ஹாப்’ நாடுகளின் மீது அங்கு உள்ள முசுலீம்களால் வெளிநாட்டு (தாருல் இஸ்லாம் நாடுகளின்) முசுலீம்களின் உதவியால் நடத்தப்படும். இசுலாத்தை நம்பாதவர்களைக் கொன்று குவித்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து, பெண்களை அபகரித்து, கோயில்களைத் தரைமட்டமாக்கி (கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு இசுலாத்திற்கு போக வேண்டும். அபகரிக்கப்பட்ட பெண்கள் உட்பட) அந்த நாட்டை முசுலீம் நாடாக மாற்ற நடத்தப்படும் புனிதப் போருக்குப் பெயர் ஜிகாத் – ஜிகாத்தில் ஈடுபட வேண்டியது ஒவ்வொரு முசுலீமின் கடமை.”

மதமாற்றத் தடை சட்டம் ஏன்?

இந்து முன்னணி வெளியீடுபக்: 26, 27.

ஒவ்வொரு முசுலீமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முசுலீம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.

குர்-ஆன் மற்றும் இலக்கியங்களில் ஜகாத், ஜிகாத் என இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன. ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச் செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.

அடுத்து, உலகிலுள்ள எல்லா அரசர்களும், அரசுகளும் தாம் வென்ற நாடுகளில் கிடைத்த செல்வத்தை தம் வீரர்களிடையே பங்கிட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இசுலாமிய மன்னர்களிடையேயும் இருந்தது. அதிலும் ஐந்தில் ஒரு பங்கு அரசின் சமூகச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல.

நபிகளுக்குப்பிறகு விரிவடைந்த இசுலாமியப் பேரரசு பல ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தினாலும் அதற்கு காரணம் மதமோ, ‘ஜிகாத்தோ’ அல்ல. ஏனைய அரசுகள் தத்தமது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்குவதற்காக நடத்திய படையெடுப்புக்களைத்தான் இசுலாமிய அரசர்களும் நடத்தினர். மற்றபடி மாற்று மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.

அதன்பின் பல இசுலாமிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது போர்களுக்கு ‘ஜிகாத்’ என்ற மதச்சாயம் பூசியே மக்களை அணி திரட்டின. இந்த நூற்றாண்டிலும்  இதைப்பார்க்க முடியும். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த ஈரான், ரசிய ஆதிக்கத்தை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் முஜாகிதீன்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த காலனிய நாடுகளின் முசுலீம்கள் அனைவரும் தங்களது போரை ‘ஜிகாத்’ என்றே அழைத்தனர். மத விளக்கப்படி அவை ‘ஜிகாத்தா’ இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் போர்களின் சாரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைப்போர் என்பதே முக்கியம்.

இதுவன்றி அமெரிக்காவை எதிர்க்கும் பின்லேடன் – தாலிபான் மற்றும் அல் – உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளும் தங்களது நடவடிக்கைகளை ஜிகாத் என்கின்றனர். ஆனால், இந்த விளக்கத்தை பெரும்பான்மை முசுலீம்களும், மிதவாதிகளும் எதிர்க்கின்றனர். இப்படி ‘ஜிகாத்துக்கு’ வேறுபட்ட  பல விளக்கங்கள் இருப்பினும், இந்துமத வெறியர்கள் கூறும் அவதூறு விளக்கம் வரலாற்று ரீதியாகவே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்துக் கோவில்களுக்கும் – பார்ப்பனர்களுக்கும் இனாம், மானியம் வழங்கியும், வேதம் – கீதை – பாரதம் போன்றவற்றை பாரசீகத்தில் மொழிபெயர்த்தும் பல மொகலாய மன்னர்கள் செய்திருக்கின்றனர். இதனாலேயே இவர்கள் யாரும் மதநீக்கம் செய்யப்படவில்லை. இப்படி ஏனைய சமூகங்களுடன் உறவு கொண்டு புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாரசீக – அராபிய அறிஞர்களிடம் வியப்பூட்டும் வகையில் இருந்தது. அதனால்தான் மத்திய காலத்தின் அறிவியல், மருத்துவ, கலைத்துறைச் சாதனைகளும், சிகரங்களும் இவ்வறிஞர்களிடமிருந்து தோன்றின.

ஆனால், மதத்தில் இல்லாத விளக்கத்தை ஜிகாத்துக்குள் புகுத்தி, மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடி அவர்களை அடக்கி ஒடுக்கவே அரபு ஷேக்குகள் முயல்கின்றனர். அதனாலேயே பல்வேறு இசுலாமியக் குழுக்களுக்குப் பொருளுதவி செய்து ‘ஜிகாத்தை’ ஆதரிக்கும் புனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இன்னொரு புறம் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் கைக்கூலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, இசுலாமிய ஆளும் வர்க்கங்களிடம் இருக்கும் ‘ஜிகாத்’ இசுலாமிய மக்களிடமும், மதத்திடமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்த ஓரிரு கலவரங்களும் பாபர் மசூதியை இந்துமத வெறியர்கள் இடித்ததன் எதிர் விளைவாகத்தான் நடந்தன. முசுலீம்கள் சிறுபான்மையாக உள்ள இந்தியா, இலங்கை போன்ற எந்த ஒரு நாட்டிலும் யாரும் ஜிகாத் நடத்தவில்லை.

பங்களாதேசம் சென்று வந்த காஞ்சி சங்கராச்சாரி அங்கே ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், தான் சென்றுவந்த ஒரு காளி கோயிலைப் புதுப்பிக்க அரசே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஜுனியர் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அங்கே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதாகவோ, இந்துக்கள் கொல்லப்படுவதாகவோ இருந்தால் அதை வெளியிடுவதில் சங்கராச்சாரிக்குத் தயக்கமோ தடையோ இருக்க முடியாது.

ஆனால், இந்துமதவெறியர்கள் வாழும் இங்கேதான் 1947 பிரிவினைக்கு முன்னும், பின்னும் இன்று வரையிலும் கலவரங்கள், மசூதி இடிப்பு, கொலை, சர்ச் மீது தாக்குதல், கன்னியாஸ்திரி கற்பழிப்பு, பாதிரி எரிப்பு போன்றவைகள் நாள் தவறாமல் நடக்கின்றன. இதன் எதிர் விளைவாகவே இசுலாமியத் தீவிரவாதம் தோன்றியது. எனவே இந்துமதவெறியர்கள் கூறுவது போன்ற (ஜிகாத்) புனிதப் போரில் முசுலீம்கள் ஈடுபடவில்லை. மாறாக பார்ப்பன – மேல் சாதியினரும், அவர்களின் பிரதிநிதிகளான இந்துமத வெறியருமே ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராத மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரின் மீதும் அன்று முதல் இன்று வரை இந்த ‘தரும யுத்தம்’ தொடர்கிறது. ஜிகாத் என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும். ஆனால், பார்ப்பனீயத்தின் இந்த தர்ம யுத்தத்திற்கு வேறு விளக்கமே கிடையாது. பார்ப்பன இலக்கியங்களும், நேற்றைய – இன்றைய வரலாறும் அதன் சாட்சியங்களாக இருக்கின்றன.

சாமி கும்பிடாவிட்டாலும், விரதமிருக்காவிட்டாலும் உயர்சாதி இந்துக்கள் இந்த தருமயுத்தக் கடமையிலிருந்து தவறுவதில்லை. இப்படி அடுத்தவனைத் துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவர்கள் குற்ற உணர்வு ஏதும் அடைவதில்லை. ”குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும் அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில் முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே பொருந்தும்.

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!

23
ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு !

‘தயவு செய்து கணவனே கண்கண்ட தெய்வமென்று உங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள். சிறுமிகளை வளர்ப்பதை நீங்கள் அளவுக்கதிகமாக வெறுக்கிறீர்கள் என்றால், அவர்களைப் பிறப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் பல சிறுமிகள் கொல்லப்படுவதற்குப் பதில் ஒரேயொரு பெண் மட்டும் இறந்து போவாள்!”

என்று நீண்ட நெடிய பெண் வாழ்வின் அவலத்தை நான்கு வரியில் சொல்கிறார் ஷகீலா. ஷகீலாவின் கதை என்ன?

அவரது சகோதரி வகிதா ஒரு மருத்துவர். அவளும், அவளது மூன்று மகள்களும் கணவனால் அமிலம் ஊற்றிக் கொல்லப்பட்டார்கள். வகிதாவின் குற்றம் என்ன? ஆண் வாரிசுக்குப் பதிலாகத் தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதும், அது குறித்து அடிக்கடி அடித்துச் சண்டையிடும் கணவனைச் சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்ததும்தான் அவளது குற்றங்கள்.

மருத்துவராகப் பணியாற்றும் ஒரு மேல்தட்டு இசுலாமியப் பெண்ணுக்கே இக்கதி என்றால் ஏழை எளிய பெண்களின் நிலை? அமிலம் ஊற்றிக் கொல்லப்படுவதும் குதறப்படுவதும் வடஇந்திய – பாக்கிஸ்தான் – வங்கதேச இசுலாமியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, ‘இந்து’ப் பெண்களுக்கோ ஸ்டவ் வெடித்து எரிக்கப்படுவது என்று வேறுபடுகிறது. உலகை உய்விக்க வந்தது தன் மதம்தான் என்று மார்தட்டும் இருமத அடிப்படைவாதிகளும், பெண்களை ஆசிட் ஊற்றியோ- மண்ணெண்ணெய் ஊற்றியோ ‘அழகு’ பார்ப்பதில் மட்டும் ஒன்றுபடுகிறார்கள். பெண்ணினத்திற்கு எதிராக ஆண்களும் கடவுள்களும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதம் ஒரு பொருட்டல்ல.

உத்திரப் பிரதேச மாநிலப் பெண்களின் வாழ்க்கையில் வன்முறை எப்படிப் பிரிக்க முடியாதபடி ஒன்றியிருக்கிறது என்பதை அரசு நடத்திய ‘மக்கள் நீதிமன்றத்தில்’ விளக்கிய பெண்களின் கதைகளை வைத்து ‘தி இந்து’ பத்திரிகையில் கல்பனா சர்மா என்பவர் எழுதியிருக்கிறார். அதிலொன்றுதான் முன்னர் கண்ட ஷகீலாவின் கதை. இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி. பரப்பளவில் மட்டுமல்ல, மத்திய அரசின் தலைமையைத் தீர்மானிக்கின்ற மாநிலமாகவும் இருக்கிறது. இன்னொரு புறம் வறுமை, எழுத்தறிவின்மை, இந்து மதவெறி, பெண்கள் மீதான வன்முறை, சுகாதாரக் கேடு இவற்றிலும் முன்னணியில் இருக்கிறது. இத்தகைய பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்களில்தான் பாரதீய ஜனதாக் கட்சி பலமாக வேரூன்றியிருக்கிறது என்பதும் மேற்படி பட்டியலின் விளைவுதான். இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையினால் கொல்லப்படும் பெண்களில் மூன்றிலொரு பங்கு உ.பி.மாநிலப் பெண்களாக இருக்கின்றனர் என்ற உண்மை கொடூர முகத்தையும் இந்தியப் பெண்களின் சராசரி அவலநிலையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு !

அரசு நிறுவனங்கள் – தன்னார்வ அமைப்புகள் நடத்திய இம்மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்ட (முன்னாள்) குடியரசுத் தலைவர் நாராயணன் ‘பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள்தான்’ என்ற ‘அரிய’ உண்மையைக் கண்டெடுத்துப் பேசினார்;’ நள்ளிரவில் நகையணிந்து பயமின்றி  நடமாடும் நிலை வந்தால்தான் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகக் கருத முடியும்,’ என்ற மற்றொரு அரிய தத்துவத்துக்குச் சொந்தக்காரரான காந்தியின் சுவரொட்டியையும் வெளியிட்டார். நள்ளிரவிலோ, பகலிலோ போடுவதற்கு நகை வேண்டுமே, அந்த நகை இல்லாததால் நடந்த கொடுமைகளை வந்திருந்த பெண்கள் விளக்கினார்கள். மற்றபடி ‘மகாத்மா’வின் கனவை ஜெயா – சசி வகையறாக்கள் மட்டும் நள்ளிரவில் நகை போட்டு பவனி வந்து வளர்ப்பு மகன் திருமணம் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதால் அவரது ஆன்மா சாந்தியடையலாம்.

ஆணாதிக்கக் கொடுமைகளை தனது மதத்திலும், தனது அணிகளிடமும் வைத்திருக்கும் மாநில பா.ஜ.க. அமைச்சர் – தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இக்கொடுமைகளை நேரடியாகச் செய்தும், ‘சட்டப்படி’ ஆதரித்தும் செயல்படுகின்ற மாநிலப் போலீசும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இறுதியில் வந்திருந்த பெண்கள் தமது உள்ளக் குமுறல்களைக் கொட்டியது மட்டுமே இந்நிகழ்ச்சியின் ஒரு பலன்.

உ.பி.மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெண்கள் குடும்ப வன்முறை, சாதி வன்முறை, அரசு – போலீசு வன்முறை என விதவிதமான கொடுமைகளைச் சொன்னார்கள். சித்திரக்கோட் மாவட்டத்திலிருந்து வந்த 19 வயது கிஸ்மாத்தூன் பானோ கூறுகிறார்:

”ஏழு வருடங்களுக்கு முன்பு மணமுடிக்கப்பட்டேன். எனது கணவன் மோட்டார் சைக்கிள் வாங்குவற்காகப் பத்தாயிரம் ரூபாயை வரதட்சணையாகக் கேட்டு நச்சரித்தான்; தொடர்ந்து அடித்துக் கொண்டுமிருந்தான். இதை எனது கிராம மக்களிடமும், போலீசிடமும் தெரிவித்தேன். எவரும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. ஆனால் கணவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தினார்கள். அப்படி ஒவ்வொரு முறையும் திரும்பியபோதும் அடிப்பதை மட்டும் அவன் நிறுத்தவில்லை. இப்போது என் உடல் நலத்தையும் இழந்துவிட்டேன். ஆயினும் வயதான என் தாயையும், மூன்று வயதுக் குழந்தையையும் காப்பாற்ற வேலை செய்ய வேண்டும். எனது கணவனும் அவனது குடும்பத்தாரும் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.”

ஒரு தாய், தனது 11 வயது மகளை கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பிணமாகப் பார்த்தது, 68 வயதுப் பெண்மணியை 27 வயது இளைஞன் கற்பழித்தது இப்படிச் சில உண்மைகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தன. இப்பெண்களில் பலர் ஏழை – எளிய – தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அதேசமயம் நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கப் பெண்களும் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதில்லை.

லக்னோவைச் சேர்ந்த தீப்தி கல்லூரிப் படிப்பு முடித்து கணினி ஆசிரியையாகப் பணி புரிபவள். பெற்றோரால் சதீஷ் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளனுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். ”மணமான முதல் நாளிலிருந்தே எனது கணவனும், அவனது பெற்றோர்களும் வரதட்சணை கேட்டு நச்சரித்தும் பின்னர் அடித்துத் துன்புறுத்தவும் செய்தார்கள். மேலும் எனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகவும் மிரட்டினார்கள்” என்று தன் மணவாழ்க்கையை ஆயுள் தண்டனையாகத் தொடங்கியதை நினைவு கூர்கிறாள் தீப்தி. இறுதியில் அவளது கணவன் ஏதோ கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்த போது வீட்டை விட்டுத் துரத்தப்பட்டாள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் அவளைத் தேடி விவாகரத்து வழக்கு வந்தது. பின்னர் மகளிர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் எதிர் வழக்குப் போட்ட தீப்திக்கு கடந்த 6 மாதமாக முடிவோ, இல்லை அமைதியோ கிடைத்து விடவில்லை.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிராம்பபுற தலித் பெண்கள், நகர்ப்புற நடுத்தரவர்க்கப் பெண்கள் அனைவரும் அரசு – அதிகார வர்க்கம் – போலீசுத் துறைகள் சாதி – பண பலத்தின் முன் மண்டியிட்டு தமது அவலங்களைப் பாராமுகத்துடன் நடப்பது குறித்து விளக்கினார்கள். ஏதோ ஒரு மகளிர் அமைப்பின் தொடர்பினால் இங்கு வந்த பெண்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்போது வெளியுலகம் அறியாத பெண்களின் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். 1998-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி உ.பி.மாநிலத்தின் பெண்கள் மீதான வன்முறை 17,497 ஆகும். எனில் பதிவு செய்யப்படாத புகார்களின் எண்ணிக்கை எத்தனை இலட்சமிருக்கும்? இந்த எண்ணிக்கையுங் கூட வேறு இந்திய மாநிலங்களின் கணக்கைவிட மிக அதிகம். இந்தியாவின் பெரிய மாநிலத்தின் பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

இந்த அதிகாரபூர்வ வழக்குகளில் பாதி கற்பழிப்பு வழக்குகளாகவும் அதில் பாதி ஆதாரமில்லையென மூடப்படுவதாகவும் இருப்பது நடைமுறை உண்மை. பெண்களுக்கு நியாயம் கிடைப்பதற்குச் சட்டம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே கற்பழிப்பு – வீட்டு வன்முறை – அலுவலகப் பாலியல் வன்முறை குறித்த குற்றவியல் சட்டங்களில் ஏராளமான திருத்தங்களும், புதிய சட்டங்களும் கொண்டு வந்தார்கள். ஆயினும் என்ன, வரதட்சணைக்காக எரிக்கப்படுவதும் ‘மேல்’ சாதி வெறியர்களால் கற்பழிக்கப்படுவதும், காமவெறிக் கிரிமினல்களால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதும் அதிகரித்தே வருகிறது. பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் பெரும்பாலானோர் விடுவிக்கப்படுகிறார்கள்.

‘பவாந்தர்’ எனும் இந்தித் திரைப்படத்தில் கதைக்குச் சொந்தக்காரரான பன்வாரி தேவி, இராஜஸ்தான் மாநிலத்தில் ‘மேல்’ சாதியினரை எதிர்த்து நின்று அதனால் கற்பழிக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்காத ஒரு அப்பாவிப் பெண். ‘பண்டிட் குயின் திரைப்படக் கதைக்குச் சொந்தக்காரரான பூலான் தேவி பாராளுமன்றம் வரை சென்றும் விடுதலை கிடைக்காமல் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு பெண். ரவுடிகள் – போதை –சிறை அதிகாரிகளால் மனநிலை சிதையுமளவு குதறப்பட்ட தமிழகத்தின் ரீட்டாவுக்கு 5 லட்சத்தைக் கொடுத்துவிட்டார்கள் என்பதைத் தவிர பன்வாரி தேவிக்கு நேர்ந்தது இவருக்கும் நேரிடும்.

இப்படிப் பெண்கள் மீதான வன்முறையின் புள்ளி விவரம் சலிப்பூட்டும் ஒரு சடங்காக மாறிவிட்டது. அவர்களின் அவலங்களைப் பாலுணர்வைக் கிளப்பும் பரபரப்பான பத்திரிக்கைச் செய்திகளாக மாற்றிவிட்டார்கள். உழைப்பைச் செலுத்தும் பெண்களை வீட்டு வாழ்க்கையில் கூட சரிசமமாக மதிக்காமல் அடிமைகளாக நடத்தும் நாட்டில் அவர்களின் விடுதலையும் எளிதில் கிடைத்துவிடாது. அரசியல் – சமூக – பொது வாழ்க்கையில் அதிகம் பங்கேற்பதும், போராடுவதும்தான் விடுதலைக்கான தொடக்கமாக இருக்கும். அப்போதும் கூட அரசு நடத்தும் ‘மக்கள் நீதிமன்றத்தில்’ துயரங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதைத் தாண்டிச் செல்வது கடினம்.

அதற்கு உ.பி. மாநிலத்தின் அருகிலிருக்கும் பீகார் மாநிலத்திற்குச் செல்ல வேண்டும். தெற்கு பீகாரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வலுவாக இருக்கும் மாவோயிச கம்யூனிச மையம் (M.C.C) (இன்று மாவோயிசக் கட்சி) என்ற நகசல்பாரிப் புரட்சியாளர்களால் கிராமங்கள் தோறும் உண்மையான மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. சாதி – வர்க்க – பாலியல் கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு அங்கே உடனுக்குடன் நீதி கிடைக்கின்றது. குற்றவாளிகளுக்கான தண்டனையும் மக்களால் உடன் நிறைவேற்றப்படுகிறது. ஒப்பீட்டளவில் இப்பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறை ஏனைய மாநிலங்களைவிடக் குறைவு. நிலவுகின்ற சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு இதைவிடத் தெளிவான வழி வேறு ஏதும் இருக்கிறதா?

___________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 2002.

___________________________________________    

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பெட்ரோல் விலை உயர்வு: ஐ.ஓ.சி அலுவலகம் முற்றுகை – படங்கள்!

9

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புக்களின் போராட்டம்

பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூபாய் 7.50 உயர்த்தப்பட்டு ஒரே அடியாக  உழைக்கின்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில் சம்மட்டி அடியாக விழுந்தது. இதற்கு காரணமான மறுகாலனியாக்கத்தை எதிர்க்காமல் எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புக்கு சப்பாக  போராட்டங்களை அறிவித்து இருந்தன.

பால் விலை, மின் கட்டணத்தை ஏற்றிய ஜெயா மாட்டுவண்டி போராட்டமும், போலி கம்யூனிஸ்டுகள் வாகனத்திற்கு சடங்கு நடத்தும் போராட்டமும் கருணாநதியோ மத்திய அரசில் சொகுசாக இருந்து கொண்டே சேப்பாக்கத்தில் போராட்டம் என எண்ணை வளங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதற்கு எதிராக எதையும் பேசாமல் எதிர்ப்பை நாடகமாகக் காட்டிக்கொண்டிருக்கும் போது,

இந்திய ரூபாயின் சரிவும், கச்சா எண்ணையின் விலை ஏற்றமும் மறுகாலனியாக்கத்தின் கோரவிளைவு, இந்த தனியார்மயத்தை வேரறுக்க நக்சல்பாரிகள் தலைமையில் களமிறங்குவோம் என்ற முழக்கச் சுவரொட்டிகள் மே 29 காலை சென்னை நகர்ப்புறத்தில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. கூடவே மே 29 காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கம் ஐ.ஓ.சி அலுவலகத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்கள் சார்பில் முற்றுகையிட உள்ள சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு  இருந்தன.

சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அடுத்து எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் அந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டு சிலரை எதிர்பார்த்து இருந்தது. அந்த எண்ணத்தில் இடி விழுந்தது போல நான்கு பக்கத்திலிருந்தும் பெண்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளுடன் சீறிப்பாய்ந்து வந்தனர்.

உழைக்கும் மக்களை கொள்ளையடித்து தனியாருக்கு எண்ணைவளங்களை தாரை வார்ப்பதற்காக உருவான ஐஓசி செஞ்சட்டைகளால் முற்றுகையிடப்பட்டது. மக்களிடம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்கில் முற்றுகை சாலைமறியலாக மாற்றப்பட்டது. தோழர்கள் தடுப்புச்சங்கிலியாக மாறி ஒரு புறம் சாலையை மறித்து நிற்க, மறுபுறமோ மக்கள் தன்னிச்சையாகத்  வாகனத்தை நிறுத்திவிட்டு சாலைமறியலை கவனித்தனர்.

எங்கிருந்து இத்தனை பேர் வந்தீங்க? என்று திகைத்துப்போய் கேள்விகேட்ட போலீசு “ நீங்க இத்தனைபேர் வருவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா, பக்கத்துல ஒரு கிரவுண்ட் இருக்கு, ஆர்ப்பாட்டம் நடத்த வசதியாக அதை ரெடி பண்ணியிருப்போம் “  என்று கூற,

“எங்க போராட்டம் நடத்த வேண்டும்னு நாங்க முடிவு செய்யறோம், அந்த வேலை உங்களுக்கு வேண்டாம் “ என்று தலைமை தாங்கிய  பு.மா.இ.மு சென்னைக் கிளை இணைச் செயலர் தோழர். நெடுஞ்செழியன் பதில் அளித்தார்.

”எல்லா கட்சி காரங்களும் நாங்க சொன்னா கேட்டுக்குறாங்க, ஏன் போன வாரம் சிபிஎம் ரங்கராஜன் வந்திருந்தாரு நாங்க சொல்லுற இடத்துல செஞ்சுட்டு போயிட்டாங்க, நீங்கதான்…” என்ற படி போலீசு புலம்பியது.

தோழர்கள் மற்றும் அங்கு சுற்றி இருந்த மக்களிடம் ;பேசிய தோழர் நெடுஞ்செழியன் “இந்த பெட்ரோல் விலைஉயர்விற்கு காரணம் எண்ணை வளங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டதே. இதுதான் நாடு மீண்டும் காலனி ஆகிக்கொண்டு இருப்பதை காட்டுகிறது. இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி  நக்சல்பாரி தலைமையில்போராட வேண்டும்” என்று விளக்கினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியலால் சென்னையின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.  முதல்வன் பட பாணியில் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று ஒருவர் உதார் விட்டபோது “ பெட்ரோலே இல்லேன்னா ஏது போக்குவரத்து? உங்களுக்கும் சேர்த்து தான்  நாங்க போராடுகிறோம்” என்று  கூறியதற்கு “அது தான் போராட்டம் நடத்துறாங்கன்னு சொல்லுறாங்க இல்ல, ஏய்யா கத்தற என்று மக்கள் நமக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இளந்தோழர்களின் கம்பீரமான முழக்கத்தை கண்ட மக்கள் “இந்த வயசுல மக்கள் பிரச்சினைக்கு போராடுறது பெரிய விசயம்” என்று வியப்புடன் ஆதரித்தனர். ஒருவர் “சரியான விசயத்துக்குதான நியாயமா போராடுறீங்க” என்று கூறினார்.

இப்படி கிடைத்த மக்களின் ஆதரவால் உற்சாகமடைந்த தோழர்கள் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்துத் தோழர்களையும்  காவல் துறை கைது செய்தது, மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை அப்பகுதியில் இருந்த மக்கள் அங்கேயே இருந்து ஆதரவளித்துள்ளனர். மற்ற ஓட்டுக்கட்சிகளின் போராட்டங்கள் எல்லாம் பித்தலாட்டம், உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஒன்று தான் இந்த மறுகாலனியை மாய்க்க ஒரே வழி என்பதை அறிவிக்கும் விதமாக இந்த போராட்டம் அமைந்தது.

____________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

____________________________________________________

கருணாநிதியின் கசப்பு!

8

ஏதாவது பெட்டி கேஸ் ஜாமீனாவது கிடைக்குமா, பத்திருபது தேற்ற முடியுமா என்றெல்லாம் அன்றாடம் புலம்பியவாறு அழுக்குக் கோட்டோடு நீதிமன்றம் செல்லும் பரிதாபத்திற்குரிய வழக்கறிஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கருணாநிதியை பார்த்துக் கொள்ளுங்கள், கிட்டத்தட்ட, இல்லையில்லை அச்சு அசலேதான். என்ன பல நூறு கோடிகள் இருந்தும் இவரை வக்கீலாக யாரும் மதிக்கவில்லை என்பதுதான்  ஒற்றுமையில் ஒரு வேற்றுமை.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.

“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.” இதுதான் கருணாநிதியின் விளக்கம்.

இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆலமரத்து பஞ்சாயத்துக்குப் போன நாட்டாமை தன்னையே குற்றவாளி என்று தண்டித்துக் கொண்ட கதையை விட கருணாநிதியின் நாடகம் மோசம்.

கருணாநிதி-கார்டூன்இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததினாலேயே ஊடகங்கள் கூட்டணி விலகல் திரியை கொளுத்திப் போட்டன. இல்லையெனில் தினத்தந்தியின் மூன்றாவது பக்கத்து செய்தியோடு அந்த அறிக்கையோ அக்கப் போரோ முடிந்திருக்கும்.

7.50 ரூபாய் விலை உயர்வு என்பது நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் மக்களிடம் கிளப்பி விட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்கும் வந்தது போன்று தி.மு.கவிற்கு வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த கடமை நாடகம் நடிப்பே இல்லாமல் இவ்வளவு அவலச் சுவையுடனா நடக்க வேண்டும்?

சோனியாவே அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டே வருவோர், போவோர் அடிப்பதை தாங்கிக் கொண்டே, “நான் ரொம்ப நல்லவன்னு சொன்னான்னு”  ஏன் எல்லோரின் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?

பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்ப்பில்லையாம், இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு பெட்ரோலுக்கே இருக்கிறதென ஒரு அரிய தத்துவத்தை வேறு கண்டுபிடித்திருக்கிறார் அவர். மக்கள் மீது என்ன ஒரு மரியாதை!

இதில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற கடமையை மக்களுக்கு வரலாறு தெரியாது என்று துணிந்து நம்பிக்கையோடு விடுகிறார். வாஜ்பாயியின் மடியில் அமைச்சர் பதவிகளை ருசித்துக் கொண்டே, குஜராத் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டதெல்லாம் தி.மு.கவின் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டிய நிகழ்வுகள் போலும்.

போதாக்குறைக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்போது கூட்டணியை விட்டு நீங்குவது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்ய மாட்டாராம். இதைக் கேட்டால் அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவி கூட ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழும், இந்த ஊரில் தன்னையும் மதிக்க தெரிந்த ஒருவர் இருக்கிறார் என.

தரகு முதலாளிகளின் கட்சியாக உப்பிவிட்ட தி.மு.கவின் அரசியல், என்ன செய்தாவது அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்றுவதும், விரிவாக்குவதும் என்றான பிறகு இங்கே ஒட்டுப் பொறுக்கிக் கட்சிக்களிக்குரிய வெத்து வேட்டு சவுடால் கூட இல்லை என்றால் கருணாநிதியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளலாம்.

தி.மு.க கசப்போடு காங்கிரசுக் கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்வதிலிருந்தே அவரது ஏனைய நவரசங்கள் போட்டி போடும் அழகினை தரிசிக்கலாம். வாரிசுச் சண்டைகளினால் அலுப்பு, கனிமொழி சிறையினால் வெறுப்பு, தி.மு.க அமைச்சர்களின் கைதால் வரும் நடுக்கம், இடையில் பேரன்களின் படத்தை பார்க்க வேண்டிய கடமை, ஜெயலலிதாவுக்காக எழுத வேண்டிய அறிக்கையின் நிர்ப்பந்தம், இதில் பெட்ரோல் விலை உயர்வு என்றால் அவர் என்னதான் செய்வார்?

தமிழகத்தின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஆளும் ஜெயலலிதா மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.கவும் அதன் தலைவரும் கூடத்தான் காரணம். பாசிசமும், கழிவிரக்கமும் இவர்களது இன்றைய உணர்ச்சி என்றால் அந்த உணர்ச்சியின் அடிப்படை கார்ப்பரேட் மயமாகிவிட்ட திராவிட அரசியல் என்றால் மறுப்பவர் உண்டா?

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு!

8

இலவச-கல்வி-உரிமை-மாநாடு

அழைப்பிதழை பெரியதாக பார்க்க அதன்மீது அழுத்தவும்

அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்கப் போராடுவோம்! பேரணி – மாநாடு 2012

நாள்: 03.6.2012 ஞாயிறு, மாலை 5.00 மணி

இடம்: போல் நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்.

பேரணி துவங்கும் இடம்: தெற்கு சன்னதி, சிதம்பரம். நேரம்: மாலை 3.30 மணி

பேரணி துவக்கி வைத்தல்: திரு. வை. வெங்கடேசன், மாவட்ட தலைவர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருதை.

வரவேற்புரை:

திரு.G.ராமகிருஷ்ணன், தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.

தலைமை:

திரு. தஷ்ணா. கலையரசன், செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.

மாநாட்டு துவக்க உரை:

மூத்த கல்வியாளர். ச.சீ.ராஜகோபாலன்,
சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினர், சென்னை.

கருத்துரை:

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு –
கட்டாய இலவச கல்வி உரிமையை மறுக்கும் சூழ்ச்சியே

பேராசிரியர். கருணானந்தன்,
முன்னாள் தலைவர், வரலாற்றுத்துறை.
விவேகானத்தா கல்லூரி, சென்னை.
சமச்சீர் பாடதிட்டக்குழு உறுப்பினர்.

நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள், கமிட்டி உத்தரவுகள்,
கல்வி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா?

வழக்கறிஞர். ச.மீனாட்சி,
உயர்நீதிமன்றம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்,
தனியார்மய கல்விக்கு முடிவு கட்டுவோம்!

தோழர். த.கணேசன்.
மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, (RSYF).

நிறைவுரை:

வழக்குரைஞர். திரு.சி.ராஜூ,
மாநில ஒருங்கணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.

ம.க.இ.க.-வின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

______________________________________________

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதை….

இலவச-கல்வி-உரிமை-மாநாடுதனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாணவர்களை துன்புறுத்துதலுக்கு எதிராகவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மார்ச் 2011 அன்று துவங்கப்பட்டது. விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமைக்காக கல்வியாளர்களை வைத்து மாநாடு நடத்தி பெருமளவில் பெற்றோர்களை சங்கமாக திரட்டினோம்.

விருத்தாசலத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக விருத்தாசலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரசு கட்டண பட்டியல் நோட்டீசு பலகையில் ஒட்டபட்டதுடன் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளி முதலாளிகள் மாணவர்களை துன்புறுத்துவது நின்றது.

சமச்சீர் கல்வியை அமுல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுடன், முற்றுகை, உண்ணாவிரதம், ஊர்வலம், கைது என பல போராட்டங்களை நடத்தினோம். பாடப்புத்தகத்தை வழங்க கோரி கடலூர் மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவர்களை அழைத்து மறியல் போராட்டம் நடத்தி இறுதியாக பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றி வாகை சூடி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.

கடலூரில் சி.கே மற்றும் கிருஷ்ணசாமி பள்ளிகளில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பள்ளி வளாகத்தில் பிரசுரம் விநியோகித்து போராடியதால் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் முன்பாக அரசு கட்டணத்தை மட்டும் கட்ட வேண்டுமென்று பிரசுரமாக கட்டண விபரத்தை அச்சடித்து விநியோகித்தோம். பள்ளி முதலாளிகள் நம்மை தீவிரவாதிகளாக பார்த்தனர் என்பது மறக்க முடியாத அனுபவமாகும். காட்டுமன்னார் கோயிலில் சில தனியார் பள்ளிகளில் பழைய மெட்ரிக் பாடத்திட்டங்களையே மாணவர்களுக்கு நடத்தினர். இதற்கு எதிராக நமது சங்கம் போராடியதால் சமச்சீர் பாடப்புத்தகத்தை வழங்கினர்.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு கட்டாய டி.சி.கொடுத்ததற்கு எதிராக இடையுறாது பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம். அதுபோல் அரசு கட்டணத்தை மட்டுமே கட்டுவோம் என உறுதியாக நின்று ஒற்றுமையாக போராடியதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை தனிமை படுத்தி துன்புறுத்திய போதும், தேர்வு விடைத்தாள் கொடுக்க மறுத்த போதும் இரவு வரை பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளை நிர்பந்தித்து வெற்றி கண்டோம்.

ரூ. 7000-க்கும் மேல் ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி முன்பு வழக்கு போட்டு ரூ. 6000/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி முதலாளிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அரசு உத்தரவை மதிக்காமல் கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி முதலாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய் என நாம் போஸ்டர் அடித்து ஒட்டி போராடிய பிறகு தான் பள்ளி நிர்வாகத்திடம் இன்று பெற்றோர்களுக்கு ஓரளவு மரியாதை கிடைக்கிறது.

________________________________________________

இவ்வாறு பல்வேறு போராட்டங்களை மாணவர்களின் கல்வி உரிமைக்காக இடைவிடாது நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமது பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. உங்களையும், இந்த சங்கத்தோடு உறுப்பினராக இணைத்துக்கொண்டு போராட அழைக்கிறோம்.

தற்போது தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு இலவச கல்வி உரிமை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அரசு கட்டண நிர்ணயத்தை, சிறிதளவும் மதிக்காமல் பல மடங்கு மாணவர்களை துன்புறுத்தி பெற்றோரகளை மிரட்டி வசூல் செய்யும் தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு சாத்தியமா?

ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான கல்வியை அளிப்பதன் மூலம்தான் சமூக பொறுப்புணர்வை, தேசப் பற்றாளர்களை, முழுமையான மனிதனை உருவாக்க முடியும். அரசு மட்டுமே இலாப நோக்கமின்றி இதை செய்ய முடியும். நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சாதிக்க முடியாது. பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் மூலமே கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.

தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்க தேவையான உதிரி பாகங்களாக நமது பிள்ளைகளை தரமான கல்வி என்ற பெயரில் உற்பத்தி செய்கின்றனர், இதுகுறித்து மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி – மாநாடு நடத்துகிறோம்.

அனைரும் குடும்பத்தோடு வரவேண்டுமென்று அன்போடு அழைக்கிறோம். மேலும் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் நண்பர்களோடு கலந்து கொள்வது அவசியமாகும். எனவே தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

__________________________________________________________________________

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9790404031, 9443876977.

-மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கடலூர் மாவட்டம்.
செல் நம்பர், 9360061121, 9345180948.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________