Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 775

லீனா மணிமேகலை பிடிபட்டார்!

120

காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள்,

______________________________________________

புரட்சித் தலைவி

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்மையாக எதிர்க்கப்படுகின்றன.

டாடா போன்ற ஒரு கார்ப்போரேட் நிறுவனம் இவ்வாறு எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, எதிர்ப்பின் காரணங்களை, மக்கள் பிரச்சினைகளை, அவர்கள் வாழ்வாதாரங்கள், வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதைக் கருதுவதில்லை. மாறாகத் தனது பிம்பம் போராட்டங்களால் சிதைக்கப்படுவதைப் பற்றிக் கவலை கொள்கிறது. தேசத்திற்குச் சேவைசெய்யும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, உயரிய மதிப்பீடுகளைப் பின்பற்றும் நிறுவனம் டாடா என்ற காலங்காலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் மாசுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறது. இதற்குச் சிறந்த வழிமுறை விளம்பரப் படங்களைத் தயாரிப்பது. இதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, நடுத்தர வர்க்கத்திடம் டாடா நிறுவனம் பற்றிய உன்னதக் கருத்தாக்கத்தைக் கட்டமைப்பது. இரண்டு, விளம்பரங்கள் வழி ஊடகங்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து போராட்டங்கள் செய்தியாகாமல் தடுப்பது. விளம்பரம் கையூட்டாக மாறும் சாகசம். மேற்படி ஆதிவாசியின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பல விளம்பரங்களை டாடா நிறுவனம் தயாரிக்க முடிவுசெய்து அப்பணியை ஒகில்வி & மாத்தர் என்ற 120 நாடுகளில் அலுவலகங்களுடைய பன்னாட்டு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் ஒன்றின் தலைப்பு ‘தேஜஸ்வினி.’ ஆதிவாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘தேஜஸ்வினி’. பிரகாசம் அல்லது ஒளிமயம் என்று பொருள்.

2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இந்தியாவின் கார்ப்பொரேட் – அதிகார வர்க்க – ஊடக ஊடாடல் பற்றிப் பல புரிதல்களை நமக்குத் தந்த அரிய ஆவணம் நீரா ராடியா ஒலிப்பதிவுகள். இதில் பத்திரிகையாளர் வீர் சிங்வியிடம் டாடாவின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகப் பணிபுரிந்த ராடியா, கலிங்க நகர் ‘மாவோயிஸ்டுக’ளுக்கு எதிரான தனது போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிவாசிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டு பிரச்சினையுடன் இணைத்திட ஊடகங்கள் வழி டாடா ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு இது சான்றாகிறது. கலிங்க நகரில் போராடும் மக்கள் துணை ராணுவத்தினர் மீது மக்கள் சில கற்களை வீசியதும் அவர்கள் அம்மக்களின் தானியங்களை அழித்து, பாத்திரங்களை உடைத்து, நீரில் மண்ணெண்ணெயைக் கலந்த அராஜகத்தையும் இந்த ஒளிப்பதிவில் பாருங்கள்

ஆதிவாசிகளுக்கு எதிரான தனது வன்செயல்பாடுகள் ஊடகங்கள் வழி வெளிக்குத் தெரியாமல் டாடா தடுத்து நிறுத்தினாலும் மக்கள் தாங்களே எடுத்த பதிவுகளை you-tube இல் பகிரங்கப்படுத்தினார்கள். அப்பதிவுகளை ( http://www.youtube.com/samadrusti ) இங்கே காணலாம்.

ஆதிவாசிகளின் வாழ்விடங்களை அழிக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் டாடா ஸ்டீல் தன்மீதான கறையை நீக்க உருவாக்கிய ஆதிவாசிப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்தான் ‘தேஜஸ்வினி.’ தேஜஸ்வினி எனும் விளம்பரப் படம் அத்திட்டத்தின் சிறப்பை முன்னிறுத்துவதாக உள்ளது. அன்றாட வேலைகளிலும் நடனமாடியும் ‘சாதாரண’மாக வாழ்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் டாடா ஸ்டீலில் சேர்ந்த பிறகு பேண்ட் சட்டை அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டி, வாகன ஓட்டுநராகி வாழ்க்கையில் முன்னேறிச் சமூகத்தின் மதிப்பைப் பெறுவதாக விளம்பரக் ‘கதை’ அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் ஆதிவாசிப் பெண்ணுக்கு உதவுவதாக மட்டும் காட்டுவது இன்று ‘சரியான அரசியல்’ அல்ல. ஆதிவாசிப் பெண்ணும் டாடாவுக்குப் பங்களிப்பதாகக் காட்ட வேண்டும். ஆகவே விளம்பரக் கதையின்படி இந்தப் பெண்ணிடமிருந்து டாடா ஸ்டீலும் கற்றுக்கொள்கிறது. அது ‘துணிச்ச’லைக் கற்கிறது. இது விளம்பரம்.

டாடாவிடம் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை, அவர்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் பலப்பல திட்டங்கள். அத்திட்டங்களின் ரத்தக் கறையை மூடிமறைக்க ‘தேஜஸ்வினி’ என்று ஒரு நலத்திட்டம். அந்நலத்திட்டத்திற்கு ஒரு விளம்பரம். இந்த விளம்பரத்தைச் ‘சரியான அரசியல்’ கூறுகளுடன் இயக்கப் பொருத்தமான நபராக யார் இருக்க முடியும்? களப் பணியாளர், போராளி, பெண்ணியவாதி போன்ற பிம்பங்களை உடைய ஒருவர்தான் சரியான தேர்வாக இருக்கும். அத்தோடு நாய் விற்ற காசு குரைக்காது என்ற நெஞ்சுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். டாடா ஸ்டீலும் ஒகில்வியும் சரியான நபரைத் தேர்வுசெய்தன. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர், இடதுசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆவணப்பட இயக்குநர், கிட்டத்தட்ட நக்சலைட் லீனா மணிமேகலை. இவ்விளம்பரப் படத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம். (இத்தகவலை கேம்பெயின் இந்தியாவும் உறுதி செய்திருக்கிறது -வினவு)

‘ஆதிவாசிப் பெண்களை மேம்படுத்தும் நிறுவனம் டாடா’ என்று காட்டிடும் இந்தப் பிரச்சாரப்படத்தை இயக்கிட எத்தனை லட்சம் கிடைத்தது லீனா?

இது வெறும் விளம்பரம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். விளம்பரத்தின் கடைசி வாசகம் இது: “இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை.”

– நன்றி காலச்சுவடு
_____________________________________

படித்து விட்டீர்களா?

லீனா-மணிமேகலை
லீனா மணிமேகலை

சீமாட்டி லீனா மணிமேகலை மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களையும், பொதுவில் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளையும், மக்களையும் கொச்சைப்படுத்தி எழுதிய கவிஜைகளை அம்பலப்படுத்தியும், அவரது “செங்கடல்” படப்படிப்பின் போது உதவி இயக்குநர் தீபக்கை, ஷோபா சக்தியை வைத்து அடித்து அவமானப்படுத்தியதை உலகறியச் செய்தும், பின்னர் லீனாவுக்காக அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் எமது தோழர்கள் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டது குறித்தும் வினவில் எழுதியிருக்கிறோம்.

எனினும் ஒரு சில ‘அறிவாளிகள்’, ‘நடுநிலையாளர்கள்’ லீனாவுக்காக நீர்த்துப் போன வார்த்தைகளால் வக்காலத்து வாங்கி வந்தனர். அது குறித்தும் வினவில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. சீமாட்டியின் பெண்ணுரிமை போராளி வேடத்தில் இத்தகைய சிரிப்பு போலீஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது ஆச்சரியமல்ல. இத்தனைக்கும் அவர் சில ஆவணப்படங்கள் எடுத்தார், சில கவிதைகள் எழுதியிருக்கிறார், ஆபத்தில்லாத முறையில் சில பல குட்டி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார், அந்த பங்கேற்றலில் தனது பங்கை அதிகமாக காட்டி ஏமாற்றியிருக்கிறார் (இது அவரது சக பெண் கவிஞர்களது குற்றச்சாட்டு), ஈழத்தமிழர்களை காசு வாங்கி ஏமாற்றியிருக்கிறார் (இதுவும் ஏமாந்த ஈழத்தமிழர்களின் குற்றச்சாட்டு) தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு உயரம் குறைந்த இடமென்றாலும் பரவாயில்லை என்று முயற்சி செய்திருக்கிறார்…. இவைதான் இந்த சீமாட்டியின் ஆளுமை அடையாளங்கள்.

இவற்றினைச் சுருக்கிப் பார்த்தால் காரியவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் சீமாட்டியின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு விசயங்கள் கொண்ட, குறிப்பாக பெண்ணுரிமை போராளியாக, அதுவும் கவிதைகள் எனும் சுலபமான வழி மூலம் முன்னிறுத்திக் கொண்டார். எனினும் அந்த முன்னிறுத்தலிலேயே அவரது உட்கிடக்கை அதாவது மேட்டிமைத்தனம் கலந்த மனித குல விரோதம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் சீமாட்டி எழுதிய கவிதைகள் குறித்த எமது விமரிசனம். இரண்டும் வேறு வேறு அல்ல, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தாம்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே லீனாவின் இந்த தேஜஸ்வினி எனும் கார்ப்பரேட் கைக்கூலித்தனம் வெளிப்பட்டிருக்கிறது. தேஜஸ்வினி என்றால் ஒளிமயமாம். இந்த ஒளிமயத்தின் உதவியால் சீமாட்டியின் இருண்ட பக்கம் தாரை தப்பட்டைகளுடன் தெரிய வந்திருக்கிறது.

லீனா-மணிமேகலை-காலச்சுவடு-
நன்றி காலச்சுவடு

பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி, சில பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு டாடாவின் பாகாசுர சுரண்டலுக்கு ஒரு மனித நேய முகமூடியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரு பாசிச மனம் வேண்டும். அந்த வகையில் சீமாட்டி தான் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகறியச் செய்திருக்கிறார். தண்டகராண்யாவிலும், ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் கொல்லப்படும் ஒவ்வொரு ஆதிவாதி மக்களின் இரத்தத்தை குடிக்கும் நரவெறிக்கும் சீமாட்டியின் நடத்தைக்கும் வேறுபாடில்லை.

அவரது கவிமனமும், பெண்ணுரிமை போராளி துடிப்பும், ஆவணப்பட அனுபவமும் ஒன்று சேர்ந்து டாடவின் தேஜஸ்வினி விளம்பர படையெடுப்பிற்கு பயன்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முற்போக்கு வேடதாரியாக அறியப்பட்ட ஒருவர், டாடாவை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை வேரறுக்கப் பயன்படுகிறார் என்றால் இந்த இழிவினை என்னவென்று அழைப்பது?

இதில் சீமாட்டி லீனாவின் ஞான குரு அய்யா அ.மார்க்ஸ் சட்டீஸ்கரெல்லாம் போய் வந்தவர், இனி என்ன சொல்லி நியாயப்படுத்துவார்? தொழில் வேறு, கொள்கை வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவாரா? முடியாது என்றால் லீனாவின் வேடத்தை அம்பலப்படுத்திய எமது தோழர்களை வெளியேற்றினாரே அதற்கு என்ன பதில்? தொழிலும், கலை மனமும் இறுதியில் பழங்குடி மக்களை கொன்று போடுவதற்குத்தானே பயன்படுகிறது? அறிவாளிகளின் அந்தரங்கம் மட்டுமல்ல அவர்களது வெளிப்படையான வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நாள் நாறியே தீரும். போக, லீனாவுக்காக சப்பைக்கட்டு கட்டிய காணாமல் போன ‘முற்போக்காளர்கள்’, கொட்டை போட்ட ‘பெருச்சாளிகள்’ , போலி கம்யூனிஸ்டு ‘தோழர்கள்’ மற்றும் பெயர் தெரியாத ‘இலக்கியவாதிகள்’ அனைவரும் இப்போது என்ன சொல்வார்கள? ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை என்றால் டாடாவின் கைக்கூலி லீனா மணிமேகலையின் அல்லக்கைகள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவீர்கள். சீமாட்டி நடத்தும் கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு டாடாவின் காசை குடித்தவர்கள் என்றும் அழைக்கப்படலாம். மொத்தத்தில் அல்லக்கை பட்டம் உறுதி. முடிவு செய்யுங்கள்.

காலச்சுவடு இந்த அம்பலப்படுத்தலை உலகறியச் செய்ததன் காரணம் என்ன? சீமாட்டி லீனா, அறிஞரய்யா அ.மார்க்ஸ் அணியைச் சேர்ந்தவர். அ.மார்க்ஸ் கும்பலுக்கும், காலச்சுவடுக்கும் ஒத்துக் கொள்ளாது. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம். ஆனால் அதற்கு கொள்கை என்ற பெயரில் ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவார்கள். எனினும் இதில் அ.மார்க்ஸ் அணி காலச்சுவடு அணியிடம் நிறையவே தோற்றிருக்கிறது. அ.மார்க்ஸின் வலது கை, இடது கை என்று அறியப்பட்ட இரவிக்குமார், பொ.வேல்சாமி போன்றோரே காலச்சுவடு அணியில் சேர்ந்து விட்ட பிறகு அறிஞர் சில சில்லறைகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்.

டாடாவிடம் காசு வாங்கியதை அம்பலப்படுத்தியிருக்கும் காலச்சுவடு கண்ணன் தனது முகத்தையும் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஆகப் பிற்போக்கான தினமலரிடம் இருந்து இதுவரை காலச்சவடு பெற்ற உதவித் தொகை மட்டும் போற்றத் தக்கதா? இல்லை  ஸ்ரீராம் சிட் பண்ட்டின் பணம் மட்டும் புனிதமானதா? சீமாட்டி டாடாவிடம் பெரிய தொகை வாங்கினார், நாங்கள் சிறிய தொகை என்றெல்லாம் சமாளிக்க முடியாது. தொகை அல்ல பிரச்சினை, தொகையின் பின்னே உள்ள ‘அறம்’தான் முக்கியம்.

ஆளும் வர்க்கங்களின் ஊழல், முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டியினால் வரும் என்பதற்கு நீரா ராடியா விவாகாரம் ஒரு சான்று. டாடவைப் போட்டுக் கொடுக்க விரும்பிய போட்டி முதலாளிகளின் கைங்கரியத்தால் அந்த ஊழல் வெளிவந்திருக்கிறது. அது போல இலக்கியவாதிகளின் கைக்கூலித்தனத்தையும் அவர்களுக்கிடையே நிலவும் இத்தகைய போட்டிகள்தான் வெளிக் கொண்டு வருகிறது. ஒருவேளை அ.மார்க்ஸ் அணிக்கும், காலச்சுவடுக்கும் தோழமையான உறவிருந்தால் சீமாட்டியின் இந்த ஊழல் வெளிவந்திருக்காது. அதே நேரம் இலக்கியவாதிகள், அறிஞர் பெருமக்கள் எவரும் எப்போதும் ஓரணியாக இருப்பது ‘இயற்கை’க்கு விரோதமானது. முதலாளிகளுக்கும் அதே விதிதான்.

எது எப்படியோ இனி சீமாட்டியை நாம்  கார்ப்பரேட் கைக்கூலி என்று அழைப்பதோடு கூடுதலாக பெண்ணுரிமைப் போராளி   என்றும் அழைத்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நேபாளப் புரட்சி : பின்னடைவு அளிக்கும் படிப்பினை!

5

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரசுக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது; அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும்  நடைபெறும் என்றும்  இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய மாலெ கட்சி மற்றும் பிற கட்சிகள் நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில், இச்சபையில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சியான மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து முரண்பட்டதால், அரசியல் சட்டத்தை இயற்றும் பணி கடந்த நான்காண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தும் நிலைக்கு நேபாளம் பின்னோக்கிச் சென்றுள்ளது.

நான்காண்டுகளுக்கு முன்பு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தபோது,நேபாள மாவோயிஸ்டு கட்சியிடம் செம்படை இருந்தது. அது இப்போது கலைக்கப்பட்டு, அப்படையின் ஒரு சிறுபிரிவு நேபாள இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  இணைக்கப்பட்டுள்ளது. கடைசியில், இருப்பதையும் இழந்து புதிதாக எதையும் பெறாத நிலைக்கு நேபாள மாவோயிஸ்டு கட்சி தள்ளப்பட்டுள்ளது. புரட்சியை முன்னெடுத்துச் செல்ல விழையும் தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மைக் குழுவாகவும், பிரசந்தா – பட்டாராய் தலைமையிலான சட்டவாத சமரசவாதப் பெரும்பான்மைக் குழுவாகவும் மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டுள்ளது. நேபாளத்தில் மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் வற்றச் செய்து, அதன் புரட்சிகர ஆற்றலை வலுவிழக்கச் செய்ய உலக ஏகாதிபத்தியமும், இந்திய மேலாதிக்க அரசும், நேபாள பிற்போக்கு அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட சதிகளும் சூழ்ச்சிகளும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய அரசியல் நெருக்கடியைப் புரட்சிக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூட முடியாமல்,  மாவோயிஸ்டு கட்சி பிளவுபட்டு நிற்கிறது.

நேபாளத்தின் கிராமப்புறங்களில் மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், மன்னராட்சிக்கு எதிராக நகர்புறங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராடினர். மன்னராட்சியின் கீழிருந்த நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சிகள் என்னசெய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், மன்னராட்சியை வீழ்த்தும் போராட்டத்துக்கு மாவோயிஸ்டுகளைத் தலைமை தாங்குமாறு மக்கள் கோரியதைத் தொடர்ந்து, மக்கள் சக்தியின் முன்னே மண்டியிட்ட நேபாள அரசியல் கட்சிகள் மன்னராட்சியை வீழ்த்தவும் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்தவும் முன்வந்து, மாவோயிஸ்டுகளுடன் ஒப்பந்தம் போட்டன. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவது என்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திரத்தை வகுத்து நேபாள மாவோயிஸ்டு கட்சி செயல்படுத்தியது. அன்றைய பருண்மையான நிலைமையை ஒட்டி மாவோயிஸ்டு கட்சி வகுத்துக் கொண்ட அச்செயல்தந்திரம் சரியானதும், அவசியமானதுமாகும்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!

அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு, இடைக்கால அரசில் பங்கேற்று, அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகள், மறுபுறம் கூட்டுத்துவ ஜனநாயகக் குடியரசுக்கான அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய நேபாள ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் எஜமானரான இந்திய மேலாதிக்கவாதிகள் ஆகியோரை எதிர்த்து மக்களைத் திரட்டித் தொடர்ந்து போராடி வந்தனர். நேபாள மன்னர் ஞானேந்திராவை அரண்மனையை விட்டு வெளியேறக் கோரி இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு நடத்திய மிகப் பெரிய போராட்டம், போலி கம்யூனிஸ்டு ஐக்கிய மாலெ கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவும், முன்னாள் மன்னாராட்சியின் ராயல் நேபாள இராணுவத்தின் தலைமைத் தளபதி ருக்மாங்கத் கடுவாலும் இந்திய மேலாதிக்கவாதிகளின் ஆசியுடன் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டபோது, அதற்கெதிரான மாவோயிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள், இந்திய மேலாதிக்கச் சதிகளுக்கு எதிராகவும் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டவும் மாவோயிஸ்டு கட்சியினர் நடத்திய கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள்  எனத் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்தன.

“கூட்டுத்துவ மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதை உடனடி செயல்தந்திரத் திட்டமாகக் கொள்ள வேண்டும். அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பது, அரசியல் நிர்ணய சபையைக் கலைப்பது, மக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பது, மக்கள் யுத்தத்தின் சாதனைகளைப் பறித்துக் கொள்வது என்ற ஏகாதிபத்தியவாதிகள், இந்திய விரிவாக்கவாதிகள் மற்றும்  அவர்களது விசுவாச பிற்போக்கு அரசியல் கட்சிகளின் சதிகளுக்கு எதிராக மக்களின் போராட்ட எழுச்சிகளை உறுதிப்படுத்த வேண்டும்” என்று  கோர்க்கா மாவட்டத்திலுள்ள பலுங்டார் கிராமத்தில் கடந்த நவம்பர் 2010இல் நடந்த நேபாள மாவோயிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் 6வது விரிவாக்கப்பட்ட பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அம்முடிவுகளுக்கு மாறாகவும் எதிராகவும்  மாவோயிஸ்டு கட்சித் தலைவர் பிரசந்தாவும் துணைத்தலைவர் பட்டாராயும் செயல்படத் தொடங்கினர்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!அந்த விலகலை எதிர்த்து, 2010 டிசம்பரில் பாரிஸ்தண்டாவில் நடந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில், முந்தைய பிளீன முடிவுப்படி மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லாமல் கட்சித் தலைமை திசை விலகிச் செல்வதாகக் குற்றம் சாட்டி, கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவரான தோழர் கிரண், மக்களின் எழுச்சியை முன்னெடுத்துச் சென்று அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது என்ற திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி அறிக்கை வைத்தார். “சமூக  அரசியல் மாற்றங்களை உறுதி செய்யாமல், பிற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு அரசியல் சட்டத்தை நிறைவேற்றத் துடிப்பது, மக்களின் புரட்சிகரப் போராட்டத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதாகும். இன்றைய இடைக்கால அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தைக் கண்டு மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். பிற்போக்கு அரசியல் கட்சிகள் தீராத நெருக்கடியில் சிக்கியுள்ளன.  மக்கள் எழுச்சிக்கு உகந்த நேரம் கனிந்துள்ள போதிலும், கட்சியானது அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை”  என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் மற்றொரு துணைத்தலைவரான பாபுராம் பட்டாராய் அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதையே முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வைத்தார். நேரெதிரான இவ்விரு பாதைகளைக் கொண்ட அறிக்கைகளை இணைத்து,  அரசியல் சட்டமியற்றுவதை முதன்மையாகவும், அதற்குத் துணையாக மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று சமரசப்படுத்தி, கட்சித் தலைவர் பிரசந்தா முன்வைத்த அறிக்கை அந்த மத்தியக் கமிட்டி கூட்டத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், கடந்த ஏப்ரல் 20,2011இல் நடந்த கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் “உடனடி அரசியல் உத்தேசத் திட்டம்” எனும் சமரசவாத ஆவணத்தை பிரசந்தா முன்வைத்து நிறைவேற்றினார். மக்கள்திரள் எழுச்சிகளைக் கட்டியமைக்கும் கட்சியின் முடிவுக்கு மாறாக, சட்டவாதசமரசவாத நடவடிக்கைகள் மூலம் அரசியல் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை பிரசந்தாவும் பட்டாராயும் முனைப்புடன் செயல்படுத்தத் தொடங்கினர். “செம்படையை நேபாள இராணுவத்துடன் இணைப்பதும், அரசியல் நகல் சட்டத்தை இயற்றுவதுமே முதன்மையான பணி என்றும், அரசியல் சட்டம்தான் பிற்போக்குவாதிகளின் சதிகளை முறியடிக்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். மக்கள் போராட்டங்கள் பெருகினால், அதைக் காட்டி அரசியல் நிர்ணய சபையிலுள்ள இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு இழுபறி நீடிக்கும்;  இதனால் அரசியல் சட்டத்தை நிறைவடையச் செய்ய முடியாமல் போய்விடும் என்று பிரசந்தா வாதிட்டார். இதற்கெதிரான கருத்துக்களைப் புறக்கணித்து, இருவழிப் போராட்டத்தை நிராகரித்து, ஒரு குடைக் கவிழ்ப்பு நடவடிக்கையை நடத்தி பிரசந்தாவும் பட்டாராயும் கட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டனர். யாருடனும் கலந்தாலோசிக்காமல் இந்தியாவுடன் இருதரப்பு முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரதமர் பட்டாராய் தன்னிச்சையாக கையெழுத்திட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டுகிறார், தோழர் கிரண்.

தீராத அரசியல் நெருக்கடிகள்  இழுத்தடிப்புகளால் நேபாள மக்களை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சோர்வடையச் செய்து நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய மேலாதிக்கவாதிகள் காய்களை நகர்த்தினர். அதற்கேற்ப ஊடகங்களும் ஒத்தூதின. இந்திய மேலாதிக்கவாதிகளின் திட்டப்படி, நாடாளுமன்ற முட்டுக்கட்டைகள் மூலம் நாட்டை தீராத அரசியல் நெருக்கடியில் தள்ளும் நோக்கத்துடன் நேபாளத்தின் பிற அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அந்தச் சதிவலையில் சிக்கி, அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் பிரசந்தாவும் பட்டாராயும் வளைந்து கொடுத்துச் செல்லத் தொடங்கினர். மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள், போராட்டத்தை அல்ல  என்ற ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பிக் கொண்டு, அமைதி நடவடிக்கைதான் முதன்மையானது என்ற திசையில் இவர்கள் கட்சியை இழுத்துச் சென்றனர். எப்படியாவது அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அக்கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு துரோகமிழைப்பதாக கட்சித் தலைமை சீரழிந்து போனது. எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் அரசியல் சட்டத்தை இயற்ற ஒத்துழைப்பார்கள் என்று பிரசந்தாவும், பட்டாராயும் பெரிதும் நம்பினர். மேலும்மேலும் இறங்கிவந்து சமரசமாகப் போவதும், அக்கட்சிகளுடன் பேரங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இரகசிய ஒப்பந்தங்கள் போடுவதுமாக பிரசந்தா-பட்டாராய் தலைமை துரோகத்தில் இறங்கியது.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!கட்சியின் அரசியல் தலைமைக்குழு தோழர்களையோ, ஏன் கட்சியின் செயலாளரும், கட்சியின் பாதுகாப்புத் துறை பொறுப்பாளருமான பாதலையோ கலந்தாலோசிக்காமல் பிரசந்தாவும் பட்டாராயும் கடந்த ஆண்டு செப்டம்பரில் செம்படை முகாம்களிலுள்ள ஆயுதப் பெட்டகங்களின் சாவியை ராயல் நேபாள இராணுவத்திடம் ஒப்படைத்தனர். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று நடந்த ராயல் நேபாள இராணுவத்துடன் செம்படை இணைப்பு என்பது அப்பட்டமான சரணாகதியாகவே நடந்துள்ளது. ஏறத்தாழ 19,000 பேர் கொண்ட செம்படையில் வெறும் 6,500 பேரை மட்டும் நேபாள இராணுவத்தில் சேர்க்கலாம் என்று பிற அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தித்ததை அப்படியே பிரசந்தாவும் பட்டாராயும் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியோரைக் கட்டாயமாக விருப்ப ஓய்வு பெறச் செய்து செம்படையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இச்சரணடைவை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே சக்திகோர் செம்படை முகாமில் மோதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து, ராயல் நேபாள இராணுவத்தை 15 செம்படை முகாம்களுக்கும் அனுப்பி ஆயுதங்களைக் கைப்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு பட்டாராய்  உத்தரவிட்டார். இதை எதிர்த்து, “நீங்களும் சரி, நாங்களும் சரி; இப்போது பாதுகாப்பற்ற அபாய நிலையில் உள்ளோம்” என்று செம்படையின் ஏழு டிவிஷனல் தளபதிகள்  நேபாள மாவோயிஸ்டுக் கட்சித் தலைவர் பிரசந்தாவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்க விடுத்தனர். ஆனால், பிரசந்தா இதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், “அமைதி நடவடிக்கையை முழுமைப்படுத்துவதற்காகவே நான் தைரியமான சில முடிவுகளை எடுத்தேன்” என்று  இந்தச் சரணாகதி நடவடிக்கையைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

இறுதியில், பிரசந்தாவும் பட்டாராயும் கட்சியின், புரட்சியின் துரோகிகளாக அம்பலப்பட்டுப் போனார்கள். செம்படை கலைக்கப்பட்டு ஆயுதங்களும் பறிக்கப்பட்ட பிறகு, பிரசந்தாவும் பட்டாராயும் இதர கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கான ஆற்றலையே இழந்து விட்டனர். இதர கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து அவர்கள் முன்வைக்கும் முடிவுகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, பிரசந்தா  பட்டாராயிடம் வேறு அரசியல் பலமோ, ஆயுத பலமோ இல்லாமல் போய்விட்டது. இதனால்தான், இந்தியாவும் அமெரிக்காவும் இச்சரணாகதியை வாழ்த்தி வரவேற்கின்றன. “மாவோயிஸ்டு கட்சியைச் சட்டவாதக் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் இது முக்கியமான நடவடிக்கையாகும்” என்று நேபாள காங்கிரசுக் கட்சியின் தலைவரான ராமச்சந்திர பவுதேல் வாழ்த்துகிறார்.

மன்னராட்சிக்கு எதிரான மக்களின் பேரெழுச்சியையும், அதைத் தொடர்ந்து உருவான அரசியல் ஆதரவையும், ஒரு உந்துவிசையாகக் கொண்டு, அடுத்த கட்டத்துக்குப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளைக் கொண்டதாக, அதற்கான தயாரிப்பாக நேபாள மாவோயிஸ்டுகளின் செயல்தந்திரத்  திட்டமும் அரசியல் நடத்தை வழியும் இருந்திருக்க வேண்டும்.

“தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கேற்றாலோ, இல்லாவிட்டாலோ, எப்படியிருந்த போதிலும் தற்காலிக புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்ப்பந்தம் கொண்டுவர வேண்டும். கீழிருந்து இந்த நிர்ப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்குப் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தியிருக்க வேண்டும்  —  ஏனெனில், புரட்சிகரமான நிலைமைகளில் விவகாரங்கள் அசாதரணமான வேகத்துடன் பகிரங்க உள்நாட்டுப் போர் கட்டத்துக்கு வளர்கின்றன  — மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்திருக்கவும் வேண்டும். அது ஆயுதமேந்திச் செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம் ‘புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவாக்குவது’  அதாவது, பாட்டாளி வர்க்க நலன் நிலையிலிருந்து பார்க்கும் போது அந்த ஆதாயங்கள் நம் குறைந்தபட்ச வேலைத் திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் ” ( ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்) என்றார் லெனின்.

பாட்டாளி வர்க்கத் தலைமையும் ஆயுதப்படை பலமும் எனும் இரு மையமான நிபந்தனைகளை மாவோயிஸ்டு கட்சித் தலைவர்களான பிரசந்தாவும் பட்டாராயும் கைவிட்டதன் விளைவாக, இன்று நேபாளப் புரட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!மேலும், தொழிலாளர்  விவசாயி இயக்கங்களையும் கட்சியின் தலைமையிலான ஆயுதப்படை சக்திகளையும் விரிவுபடுத்த முயற்சி எடுக்காமல், ஒரு தற்காலிகக் கூட்டாளியாகிய கோமிங்டாங்கையே முற்றும் முழுதாகச் சார்ந்திருக்கும்படியான சந்தர்ப்பவாதப் பாதை கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், 1927 புரட்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியது என்று (ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான செயல்தந்திரம் பற்றி எனும் நூலில்) மாவோ குறிப்பிடுகிறார்.

இத்தகைய நிலைமையில்தான் பிரசந்தா-பட்டாராய் தலைமையும் உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான தற்காலிகக் கூட்டாளிகளான இதர பிற்போக்கு அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் சந்தர்ப்பவாதப் பாதைக்கு அப்பால், கட்சி தனது சொந்த திட்டத்தை முன்வைத்து உழைக்கும் மக்களை அணிதிரட்டவோ, செம்படையைக் கட்டியமைத்து விரிவாக்கவோ அத்தலைமையிடம் திட்டம் ஏதுமில்லை. நேபாள மாவோயிஸ்டு கட்சி இதர 7 கட்சிகளுடன் போட்டுகொண்ட ஒப்பந்தம் மன்னராட்சியை வீழ்த்துவதற்கும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்குமான ஒரு தற்காலிக ஐக்கிய முன்னணி செயல்தந்திரம்தான். ஒருவேளை, இந்த ஐக்கிய முன்னணி நாளை முறிந்து போகலாம் என்ற எதிர்பார்ப்பில் கட்சியைத் தயார் நிலையில் வைப்பதும், மக்களைத் திரட்டுவதும் வேண்டும். ஆனால் அத்தகைய திட்டம் ஏதுமில்லாமல், முழுக்கவும் சட்டவாத நடவடிக்கைகளில் பிரசந்தா -பட்டாராய் தலைமை மூழ்கிப் போனது.

“ராயல் நேபாள இராணுவத்தின் போர்வீரர்களைப் போல முறைப்படி போர்ப்பயிற்சி பெற்றிராத, தகுதியில்லாத செம்படை வீரர்களை நேபாள ராணுவத்தில் இணைத்தால் ராணுவத்தின் ஆற்றல் குறைந்துபோகும்” என்றும், “செம்படையின் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்; மாவோயிஸ்டுகளின் தலைமையிலான வன்முறைக் கும்பலான கம்யூனிஸ்டு இளைஞர் கழகத்தைக்  கலைக்க வேண்டும்’’என்றும்  எதிர்க்கட்சிகள் நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, அரசியல் சட்டத்தை இயற்றவிடாமல் சதிகளில் இறங்கிய  நிலையில், பிரசந்தா-பட்டாராய் தலைமை இக்கட்சிகளின் சதிகளை அம்பலப்படுத்தி, இக்கட்சிகளின் நிர்பந்தங்களை ஏற்க மறுத்து, எதிர் நிர்ப்பந்தங்களை முன்வைக்கவில்லை. “செம்படையின் ஆயுதங்களைக் கையளிக்க மாட்டோம்; நாட்டுப் பற்றும் அர்ப்பணிப்பும் கொண்ட, மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் செம்படை வீரர்களின் தகுதியானது, மக்களை ஒடுக்கும் ராயல் நேபாள ராணுவத்தின் படைவீரர்களை விட மிக உயர்வானது; மக்களுக்கும் புரட்சிக்கும் சேவை செய்யும் போர்க்குணமிக்க இளைஞர் கழகத்தைக் கலைக்க மாட்டோம்; நிலப்பிரபுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திருப்பி ஒப்படைக்கமாட்டோம்; நாடு முழுவதும் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம்” என எதிர்நிர்ப்பந்தங்களை முன்வைத்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்முயற்சியுடன் கட்சி செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், புரட்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை கண்கூடாகக் காணும் மக்கள், புரட்சியையும் கட்சியையும் காக்கும் போரில் மாவோயிஸ்டுகளுடன் கைகோர்த்திருப்பார்கள்.

மறுபுறம், நேபாளப் புரட்சியின் பின்னடைவைக் காட்டி, ‘மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மாவோயிஸ்டு கட்சி தனது செயல்தந்திரத்தை மாற்றிக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி நடவடிக்கைக்குச் சென்றதுதான் தவறு. நீண்டகால மக்கள் யுத்தத்தை தொடர்வது என்ற பழைய செயல்தந்திரத்தை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், இத்தகைய சந்தர்ப்பவாதத் தவறுகள் நிகழாமல் தடுத்திருக்கலாம்’ என்று  சிலர் கருதுகின்றனர். நேபாள மக்கள் எழுச்சியும், அதைத் தொடர்ந்த புதிய அரசியல் நிலைமையும் கோரியபடி மாவோயிஸ்டுகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல புதிய செயல்தந்திரத்தை வகுத்துச் செயல்படுத்தியது அவசியமான, பருண்மையான நிலைமைக்கேற்ற சரியான வழிமுறையாகும். மாறிய நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல், தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதுவதுதான் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான வறட்டுத்தனமாகும்.

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவரான கிரண் எனப்படும் மோகன் வைத்யா, “நாங்கள் வகுத்துக் கொண்ட புதிய செயல்தந்திரம் சரியானது. ஆனால் கட்சித் தலைவர் பிரசந்தாவும், துணைத் தலைவர்களில் ஒருவரான பாபுராம் பட்டாராயும் அதைப் புறக்கணித்துவிட்டு, புரட்சிக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து, செம்படையை ராயல் நேபாள ராணுவத்திடம் சரணடைய வைத்துவிட்டனர். இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலிகளாகிவிட்டனர். முதலாளித்துவ நாடாளுமன்ற சட்டவாதக் கட்சியாக, மாவோயிஸ்டு கட்சியை மாற்ற முயற்சிக்கின்றனர்” என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்.

“இது, பிரசந்தா  பட்டாராய் துரோகக் கும்பல் நடத்தியுள்ள ஒருவகையான  குடைக்கவிழ்ப்பு நடவடிக்கையாகும். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது செயலிழந்து போய்விட்டது. கட்சியின்  அரசியல் சித்தாந்த சீரழிவுக்கும் பிளவுக்கும் பிரசந்தாவும் பட்டாராயும்தான் முதன்மைக் காரணம். நாங்கள் பிரசந்தா மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தோம். இது எங்களின் பலவீனம். அவரது வலது விலகலைப் புரிந்து கொண்டு நாங்கள் விழிப்புற்று போராடுவதற்குள் மிகுந்த தாமதமாகிவிட்டது ” என்கிறார்,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா. “இந்தியாவின் தலையாட்டிப் பொம்மைகளாக பிரசந்தாவும் பட்டாராயும் மாறிவிட்டனர்” என்று சாடுகிறார், கிரண் குழுவைச் சேர்ந்த கட்சியின் செயலர்களுள் ஒருவரான தோழர் கஜுரேல்.

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!தோழர் கிரண் தலைமையிலான சிறுபான்மையினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வராமல், “அமைதி நடவடிக்கையைத் திசை திருப்பி சீர்குலைக்கும் வகையில் கட்சியில் சிலர் அதிருப்தியைக் காட்டுகின்றனர்” என்று  அக்குழுவினர் மீது குற்றம் சாட்டும் பிரசந்தா, இச்சிறுபான்மைக் குழுவினர்தான் அமைதி நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி,  தொடர்ந்து அவர்களை வறட்டுவாதிகள், கடுங்கோட்பாட்டுவாதிகள் என்று சாடி அலட்சியப்படுத்துகிறார். இன்னொருபுறம், பிரசந்தாபட்டாராய் பாதையை எதிர்க்கும் தோழர் கிரண் தலைமையிலான குழுவினரிடம் வெறும் விமர்சனங்கள்தான் இருக்கிறதே தவிர, மாற்றுத் திட்டம் இல்லை என்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால், தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவி அரசியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற பலுங்டார் பிளீனத் தீர்மானத்தை காட்டி, அதுதான் கட்சியின் செயல்தந்திரத் திட்டம் என்றும், அதை நிறைவேற்றக் கோருவதையே தங்களது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் கிரண் தலைமையிலான குழுவினர், நீண்டகாலமாக பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் சமரசசரணாகதிப் பாதைக்கு எதிராக கட்சிக்குள் போராடி வந்துள்ளனர். இருப்பினும், கட்சி ஐக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில்,  இருவழிப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்லாமல் இருந்துள்ளனர்.  இப்போது, பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் துரோகம் மேலும்மேலும் அம்பலப்பட்டுள்ள நிலையில், அத்துரோகப் பாதையை எதிர்த்து தனியாக மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தியுள்ளதோடு, பட்டாராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், பிரசந்தாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டமும் நடத்தியுள்ளனர். கிரண் குழுவினருக்கு ஆதரவாக மாவோயிஸ்டு கட்சியின் மாணவர் சங்க, தொழிற்சங்க அமைப்புகளும் பிளவுபட்டுள்ளன. இளங்கம்யூனிஸ்டு கழகத்திலிருந்து வெளியேறிய தோழர்களைக் கொண்டு “மக்கள் சேவை கழகம்” எனும் புதிய இளைஞர் அமைப்பை கிரண் குழுவினர் கட்டியமைத்துள்ளதாகவும்,  தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் தேர்தல் கமிஷனில் புதிய கட்சியாகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள முயற்சித்து வருவதாகவும், அரசியல் நிர்ணய சபையிலும் கட்சியின் மத்தியக் கமிட்டியிலும் மூன்றிலொரு பங்கினரும், செம்படை வீரர்களில் ஆகப் பெரும்பான்மையினரும் தோழர் கிரண் குழுவினரை ஆதரிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.  தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் பிரசந்தா-பட்டாராய் குழுவினரின் சரணடைவுப் பாதையை முறியடித்து, கட்சியை ஐக்கியப்படுத்திப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புவோமாக!

நேபாள்-புரட்சி-பின்னடைவு-படிப்பினை!இடர்ப்பாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட சவாலாகவும், அவற்றை முறியடித்து எழும் நம்பிக்கை நட்சத்திரமாகவும்  தோன்றிய நேபாள புரட்சி இன்று பெரும் பின்னடைவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவம் இதனைக் காட்டி, இனி கம்யூனிசப் புரட்சி சாத்தியமே இல்லை என்று எகத்தாளம் செய்வதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆளும் வர்க்கங்களின் அரசியல் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராடுவதன் மூலம்தான் கட்சியின் செல்வாக்கும் மேலாண்மையும் நிலைநாட்டப்பட்டு புரட்சி முன்னேறுகிறது; பாட்டாளி வர்க்கக் கட்சிக்கும் இதர முதலாளித்துவக் கட்சிகளுக்குமிடையே கொள்கை, சித்தாந்தம், வேலைத்திட்டம், நடைமுறை என அனைத்திலும் வேறுபாடு உள்ளதை அலட்சியம் செய்து, முதலாளித்துவக் கட்சிகளைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று கருதும் வலது விலகலை எதிர்த்துப் போரிடுவதுதன் மூலம்தான் புரட்சி முன்னேறுகிறது என்ற நேபாளப் புரட்சியின் அரிய படிப்பினையைப் பெற்று, உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கம் போராடுவதன் மூலம்தான், பிற்போக்கு முதலாளித்துவவாதிகளின் அவதூறுகளையும் பொய்ப்பிரச்சாரத்தையும் முறியடிக்க முடியும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

33

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.

பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.

இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.

மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.

இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.

இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.

”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”

“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.

”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”

இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.

”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.

1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.

அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.

இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.

ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.

படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

ண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்இந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.

ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.

”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.

அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.

நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்

மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?

வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.

இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?

”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?

இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.

அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.

து ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள்.  ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!

து ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.

துதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.

அப்படியா

அப்படி ஓர் இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல

பாசாங்கு செய்கிறார்கள்

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படியொரு ரகசிய உலகம்

இருக்கிறது என்பதை.

சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்

குப்பை கூளத்திலும்தான் – அங்கே

சிலர் வாழ்கிறார்கள் என்பதை

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

-என்று அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வாழும் சேரிகளைப் பற்றி மனம் குமுறிப் பாடினார் கறுப்பினப் பாடகி டிரேஸி சாப்மன்.

அமெரிக்க-கொத்தடிமை-கூடாரம்விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.

அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.

வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சென்னைக்கு வருகிறது ”டிராபிக் ஜாம்” வரி!

51
டிராபிக் ஜாம் வரி

டிராபிக் ஜாம் வரிசென்னை நகரிலும், அதன் புறநகர் சாலைகளிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தனியார் வாகனங்கள் மீது நெரிசல் வரி விதிக்கும் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகவும்; இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகருக்குள் அமைந்துள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை ஆகிய மூன்றிலும் இவ்வரி விதிக்கும் நடைமுறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொடங்கிவிடுமென்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த வரி விதிப்பைத் தவிர்க்க எண்ணும் தனியார் வாகன ஓட்டிகள், இந்தச் சாலைகளுக்குள் நுழையாமல் சுற்றிச் செல்ல வேண்டும்; இல்லையேல், அவர்கள் இந்தச் சாலைகளில் செல்லப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  இதன் மூலம் இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துவிட முடியும் என அரசு வாதிடுகிறது.

‘‘ஒவ்வொரு காரிலும் ஒரு சில்லு (Chip) பொருத்தப்படும்; அதன் மூலம் அந்த கார் இந்தச் சாலைகளுக்குள் நுழைந்தவுடனேயே, காரின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து வரி பிடித்தம் செய்யப்படும்” என இந்தத் திட்டத்தின் நடைமுறை சாத்தியப்பாடு பற்றி அரசு விளக்கமளித்திருக்கிறது, தமிழக அரசு.  இதனைக் கேட்பதற்கு ஹை-டெக் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.  ஒருவேளை, கார் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால், காரைத் துரத்திக் கொண்டு போலீசு போகும் போலும்.  இப்படி டிமிக்கி கொடுக்கும் கார்காரர்களை நடுவழியில் நிறுத்தி வரி வசூலிக்கத் தொடங்கினால் அல்லது போலீசு தனது “மாமூல்” கடமையை ஆற்ற வண்டிகளை ஓரங்கட்டச் சொன்னால் இத்திட்டமே கோமாளித்தனமாகிவிடும்.

இவ்வரி மூலம் போக்குவரத்து நெரிசல் குறையுமோ, இல்லையோ, அரசாங்கத்தின் கஜானைவை நிரப்பிக் கொள்ளுவதற்குப் புதிய வழி கிடைத்திருக்கிறது; குறிப்பாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும், கண்காணிக்கும் போலீசாரின் பாக்கெட்டுகள் நிரம்புவதற்கு உத்திரவாதம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் புதிதாகச் சட்டங்களைப் போட்டும், அதிகாரங்களைக் குவித்துக் கொண்டும் தீர்த்துவிட முடியும் என்ற ஆளும் கும்பலின் பாசிச குரூரப் புத்தி இதிலும் வெளிப்பட்டுள்ளது.

நகரமயமாக்கம் அதிகரித்ததற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வசதிகளை நவீனப்படுத்தாமல்,  அச்சேவையை அதிகரிக்காமல் திட்டமிட்டுச் சீர்குலைத்ததன் மூலமும், சாதாரண அடித்தட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்கூட வேலைக்குப் போய்த் திரும்புவதற்குச் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  இன்னொருபுறமோ, தனியார்மயம்  தாராளமயத்தின் செல்லப் பிள்ளைகளான புதுப் பணக்கார மேட்டுக்குடி கும்பலின் நுகர்வு வெறிக்குத் தீனி போடுவதற்கு ஏற்ப, விதவிதமான வெளிநாட்டு கார்களை உள்நாட்டிலேயே உற்பத்தி  விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு இத்துறையில் தாராளமயம் புகுத்தப்பட்டது.  குறிப்பாக, கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்துவதற்காகவே,  வங்கிகளில் கார், பைக் லோன் வாங்குவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.

அரசின் இந்தக் கொள்கை சாலைகளில் கால்வைப்பதற்குக்கூட இடமில்லாத வகையில் தனியார் வாகனப் பெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  உதாரணமாக சென்னை நகரை எடுத்துக்கொண்டால், 2000ஆம் ஆண்டில் 8,48,118ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 2011இல் 25,81,534 ஆகவும்; இதேகாலகட்டத்தில் கார்களின் எண்ணிக்கை 1,99,848லிருந்து 5,67,568 ஆகவும் அதிகரித்திருக்கிறது.  இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் எட்டு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டிராபிக் ஜாம் வரிசென்னையில் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எந்தவொரு இடத்தை அவதானித்தாலும், பொது வாகனங்களைவிட, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்கள்தான் முண்டியடித்துக்கொண்டு உருமி நிற்பதைக் காணமுடியும்.  இந்தத் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, அவைகள் நகரத்தின் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வந்து போவதற்கு கட்டுப்பாடு விதிக்கவோ விரும்பாத அரசு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கைரிக்ஷாக்கள், மாட்டு வண்டிகள் போன்ற சாதாரண வண்டிகள் சென்னை நகரின் முக்கிய தெருக்களில் வந்து போவதற்குத் தடை விதித்திருக்கிறது.  பின்னர், இந்தத் தடையுத்தரவு சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படும் லாரிகள் காலை நேரத்தில் நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று வருவதற்கு நீட்டிக்கப்பட்டது.

இத்தடையுத்தரவுகளுக்கு அப்பால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதை, புறவழிச் சாலை, விரைவுச் சாலை, மேம்பாலங்கள் என நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் அடுத்தடுத்து  அமல்படுத்தப்பட்டன.  இந்தத் திட்டங்கள் அனைத்தும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதோடு, எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தி வருகின்றன.  குறிப்பாக, சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதைகள், கால விரயத்தையும் போக்குவரத்துச் செலவையும்தான் அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய, சாலை நெரிசலைக் குறைக்கவில்லை.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்களுக்காக, புறவழி மற்றும் விரைவுச் சாலைகளுக்காக, தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்திற்காகப் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் தமது வாழ்விடத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வலுக்கட்டாய வெளியேற்றத்தை நியாயப்படுத்துவதற்காகவே, அவர்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டனர்.

இந்த ஏழைகள் கூவம் நதிக் கரையோரத்திலும், தெருவோர நடைபாதைகளிலும் குடிசைகள் போட்டு ‘ஆக்கிரமித்திருந்ததை’ விட தனியாருக்குச் சொந்தமான கார்களும், பேருந்துளும்தான் சென்னை நகரின் முக்கிய தெருக்கள், நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மிகப்பெரும் ஆக்கிரமிப்பை நடத்தி வருகின்றன.  தமது வீட்டில் காரை நிறுத்தும் வசதி கிடையாது எனத் தெரிந்தும் காரை வாங்கும் மேல்தட்டு நடுத்தர வர்க்கம், தமது வீட்டு அருகிலுள்ள பொதுச் சாலைகளைத்தான் காரை நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறது.  இவர்களைப் போலவே, தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகள் மற்றும் ஹுண்டாய், நோக்கியா, இன்ஃபோசிஸ் போன்ற தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் யாவும் பொது இடங்களைத்தான் இரவு நேர “பார்கிங்கிற்கு’’ப்பயன்படுத்தி வருகின்றன.  அண்ணா சாலையிலிருந்து பீட்டர்ஸ் சாலை வழியாக இராயப்பேட்டை செல்லும் வழியில் கட்டப்பட்ட மேம்பாலம், அங்குள்ள சரவண பவன் ஹோட்டலுக்குச் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்தப் பயன்படுகிறதேயொழிய, அப்பாலத்தால் ஆயிரம் விளக்குச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக்க 49 இடங்களில் சாலையோரக் கடைகள் போடுவதற்கு அனுமதி கிடையாது எனத் தடை போட்டு அதனைக் கண்காணிக்கும் அதிகாரிகளும், போலீசும் இப்படிபட்ட கெடுபிடிகளை சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள், ஆம்னி பஸ்கள் மீது காட்டுவதில்லை.  மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையோரத்தில் பிழைப்புக்காக கடை போடுவதை ஆக்கிரமிப்பு எனச் சாடும் மேட்டுக்குடி கும்பல், தாம் “ஷாப்பிங்” போவதற்காக, சாலைகளின் பக்கவாட்டில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதை ஆக்கிரமிப்பாகக் கருதுவதில்லை.  விதவிதமான சொகுசுக் கார்களில் வந்திறங்கும் அவர்கள், “இங்கே நிறுத்தக்கூடாது” என அறிவிக்கும் கம்பங்களுக்குத் தெரு நாய்கள் தரும் மதிப்புக்கு மேல் தருவதில்லை.  போலீசு தமது காரை இழுத்துச் சென்றால், அபராதம் கட்டியோ, இலஞ்சம் கொடுத்தோ காரை மீட்டுவிடலாம் என்ற பணக்கொழுப்புதான், அவர்களுக்குப் போக்குவரத்திற்கு இடையூறாக காரை நிறுத்தும் அகங்காரத்தைக் கொடுக்கிறது.  இக்கும்பலைப் போலவே ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடைபாதையிலும், தெருக்களிலும் ஜல்லி, செங்கல், மணலைக் கொட்டி வைத்துப் பொது இடத்தை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

டிராபிக் ஜாம் வரிசென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் வேலைக்காக நகரத்திற்குள் வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்பொழுது, மேட்டுக்குடி  புதுப்பணக்காரக் கும்பல் பேய்த்தனமான வேகத்தில் தமது கார்களை ஓட்டிச் செல்வதற்காகவே புறவழிச் சாலைகள், விரைவு வழிச் சாலைகள், தங்க நாற்கரணச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.  இந்தச் சாலைகள் ஒருபுறம் சுங்க வரி என்ற பெயரில் தனியார் நடத்தும் கொள்ளைக்கான வாய்ப்பாகவும் இன்னொருபுறம் மரணச் சாலைகளாகவும் உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்துவரும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களில் 38 சதவீதம் சாலைகளில் நடந்து செல்வோர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடித்துவிட்டும், பேய்த்தனமான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்வதும்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.  சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மற்ற நெடுஞ்சாலைகளைவிட விபத்துக்கள் அதிகம் நடப்பதைக் கண்டுபிடித்த போலீசார், அச்சாலையில் பறந்து செல்லும் வாகனங்களின் வேகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை.  மாறாக, அச்சாலையையொட்டி அமைந்துள்ள கிராம மக்களிடம், “சாலையைக் கடக்கும்பொழுது ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டும்” என்ற அறிவுரையைத்தான் அள்ளி வீசியுள்ளனர்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டி மரணத்தில் முடியும் விபத்துக்களை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டுகள்தான் தண்டனை வழங்கப்படுகிறது.  இத்தண்டனையைப் பத்து ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.  அப்பொழுதுதான் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற பயம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.  இந்த எச்சரிக்கையைக் கண்டு பிழைப்புக்காக ஓட்டுநர் வேலை பார்க்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேண்டுமானால் பயப்படலாமே தவிர, குடி, கும்மாளம், உல்லாசம் என நவநாகரீகப் பொறுக்கி கலாச்சாரத்தில் மூழ்கிப் போயுள்ள மேட்டுக்குடி கும்பல் இதைக் கண்டு மிரண்டு போகாது.

இதுவொருபுறமிருக்க, பி.எம்.டபிள்யூ. போன்ற வெளிநாட்டுக் கார்களைப் பேய்த்தனமாக ஓட்டிச் சென்று பாதசாரிகளைக் கொன்றுபோட்டுள்ள வழக்குகளில் போலீசாரே மேல்தட்டுக் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களைத் தப்பவைத்து வருகின்றனர்.  டெல்லியிலும், மும்பயிலும், அகமதாபாத்திலும் நடந்துள்ள பல சாலை விபத்துக்களை இதற்கு ஆதாரமாகத் தரலாம்.

தனியார்மயமும் தாராளமயமும் கொண்டுவந்துள்ள “பப்” கலாச்சாரம்தான், குடித்துவிட்டு பேய்த்தனமாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் குரூரமான களிவெறியாட்டத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டுள்ளது.  இக்கேடுகெட்ட பொறுக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க முயலாமல் தண்டனையை அதிகப்படுத்தலாம் என்ற ஆலோசனை, வழக்குப் பதியும் அதிகாரம் கொண்ட போலீசாரின் மாமூல், இலஞ்ச வேட்டைக்கும், குற்றவாளிகளைத் தப்பவைக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் பயன்படுமேயொழிய, விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடாது.

டிராபிக் ஜாம் வரி

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரி போடும் திட்டம் ஏற்கெனவே சிங்கப்பூர், ஹாங்ஹாங், இலண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது.  அக்கொள்ளையைத் தமிழகத்திலும் இறக்குமதி செய்ய எத்தணிக்கிறது, பாசிச ஜெயா கும்பல்.  இன்று தனியார் வாகனங்கள் மீது விதிக்கப்படும் இவ்வரி நாளை பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீதும் விதிக்கப்படும் நிலை உருவாகலாம்; மேலும், டெல்லி, மும்பய் நகரங்களில் உள்ளது போன்று ஆட்டோ போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நகரின் சில முக்கிய பகுதிகளுக்கு வந்துபோவதற்கும் தடை விதிக்கப்படலாம்.

காலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் காட்டி, வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் நுழைந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றைப் புறவழிச் சாலையாகத் திருப்பிவிட்டுள்ள அரசு, இது போன்ற கட்டுப்பாடு எதையும் தனியார் கார்களுக்கு, குறிப்பாக ஸ்கார்பியோ, சுமோ, இனோவா போன்ற பெரிய சொகுசு கார்களுக்குக்கூட விதிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

கூவம் நதிக்கரை ஓரமும், குப்பங்களிலும் குடிசை போட்டு வாழ்ந்து வந்த உழைக்கும் மக்கள் சிங்கார சென்னையை உருவாக்குவதற்காக அங்கிருந்து பிடுங்கி எறியப்பட்டுவிட்டனர்.  ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியால் சென்னை நகர்ப்புறப் பகுதியில் நடுத்தர வர்க்கம்கூட வீட்டு வாடகை கொடுத்து வாழ முடியாத சூழலும் உருவாகிவிட்டது.  இப்படி பல்வேறு காரணங்களால் புறநகர்ப் பகுதிக்குத் துரத்தப்பட்ட நடுத்தர, அடித்தட்டு மக்கள் தமது பிழைப்புக்காக நகரின் மையத்திற்கு வந்து செல்ல வேண்டுமானால், நெரிசல் வரி கட்ட வேண்டும் என்ற அடுத்த தாக்குதலைத் தொடுக்க தயாராகி வருகிறது, ஆளுங்கும்பல்.  அதாவது, காசுள்ளவன்தான் இனி நகரத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும்; நகர்ப்புறமும், அதன் தெருக்களும் இனி பணக்காரர்களுக்குச் சொந்தம் என்பதுதான் இந்த நெரிசல் வரியின் பின்னே மறைந்துள்ள திட்டமாகும்

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!

4
சங்கர்-பிதாரி
சங்கர் பிதாரி

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தின் மலைவாழ் மக்களைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்த கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பிதாரி, அம்மாநிலத்தின் காவல்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிதாரியை விடப் பணியில் மூத்தவரான இன்ஃபான்ட் என்ற போலீசு அதிகாரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

பணி மூப்புக் காலத்தில் தன்னைவிட இளையவர் என்பது மட்டுமின்றி, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சங்கர் பிதாரியின் தலைமையிலான அதிரடிப்படை, பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைத்த வன்முறைகளைத் தேசிய மனித உரிமை ஆணையமும், சதாசிவம் கமிட்டியும் உறுதி செய்துள்ளன. அவ்வாறிருக்கத் தன்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தகுதியற்ற நபரான பிதாரியை கர்நாடக அரசு எப்படி டி.ஜி.பியாக நியமிக்க முடியும் என்பதே இன்ஃபான்ட் தொடுத்திருந்த வழக்கு. இவ்விரு ஆட்சேபங்களையும் ஏற்று, பிதாரியின் நியமனத்தை ரத்து செய்தது, நிர்வாகத் தீர்ப்பாயம்.

இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சங்கர் பிதாரி. “பழங்குடி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் சதாம் உசேன், கடாபியைப் போல எல்லாம் வல்லவனோ எங்கும் இருப்பவனோ அல்ல; தமிழக-கர்நாடகக் கூட்டு அதிரடிப் படையின் துணைக் கமாண்டராக மட்டுமே நான் இருந்தேன்” என்று திமிர்த்தனமாக  அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிதாரியின் நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களும், தாங்கள் அனுபவித்த சித்திரவதைகளைப் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றைப் பரிசீலித்த நீதிபதிகள் குமார், கெம்பண்ணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, “அவர் சதாமோ, கடாபியோ அல்ல என்றால், நிச்சயம் அவர்களைவிட மோசமானவராகத்தான் இருக்க வேண்டும் என்றே அந்தப் பெண்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது” என்று கூறி , சட்டத்தின் ஆட்சி, பெண்மை, மனித உரிமைகள், ஏழைகள்பழங்குடி மக்கள் மீது அக்கறை போன்றவற்றின் மீது இந்த அரசுக்குச் சிறிதளவேனும் மரியாதை இருக்குமானால், டி.ஜி.பி., ஐ.ஜி. ஆகிய இரு பதவிகளிலிருந்தும் பிதாரியை உடனே நீக்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் பிதாரி. உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஆழமாக விசாரித்து மே 31க்குள் தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

“தேசிய மனித உரிமை கமிசன் சங்கர் பிதாரி மீது நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. அவரது ஊழியர்கள் செய்த தவறுக்கு அவர் பொறுப்பாக முடியாது. நிவாரணத் தொகையை அதிகமாகப் பெற வேண்டும் என்பதற்காகப் பழங்குடி மக்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்கள். பதவி உயர்வு குறித்து முடிவு செய்வதற்குத் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூற்றுகளை கணக்கில் கொள்ளத் தேவையில்லை” என்று பிதாரிக்கு ஆதரவாக வாதங்களை அடுக்கியிருக்கிறது, கர்நாடக அரசு.

அதிரடிப்படையின் அட்டூழியமென்பது மறுக்கவியலாத உண்மை. நூற்றுக்கணக்கானவர்களது சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிபதி சதாசிவம் கமிட்டி, மனித உரிமை மீறல்கள் நடந்ததை உறுதி செய்திருக்கிறது. பழங்குடியினர் 89 பேருக்கு இடைக்கால நிவாரணமாக 2.80 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக, கர்நாடக அரசுகள் பழங்குடியினருக்கு நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை உறுதி செய்திருக்கிறது.

இருந்தபோதிலும் சங்கர் பிதாரிக்கு ஜனாதிபதி விருது இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரியைப் பின்தள்ளிவிட்டுப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. பிதாரியின் மீது உச்ச நீதிமன்றம் அனுதாபம் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை! பாதிப்பை ஏற்படுத்திய காக்கி உடை கிரிமினல்களுக்குப் பதவி உயர்வு! ராஜபக்சே பரிந்துரைக்கும் நீதி வழங்குமுறையும் இதுதானே!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்துஸ்தான் யூனிலீவர்: இனி இந்த முதலாளிகளை என்ன செய்யலாம்?

20

கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழி போன்று சாலையை மறித்தால்தான் அரசு ஆடும் என்பது புதுமொழி. இது உழைக்கும் மக்களுக்கு தெரிந்த அனுபவ மொழி. புதுவை வடமங்கலத்தில் இயங்கிவரும் இந்துஸ்தான் யூனிலீவர் (டெட்ஸ்) தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமான போராட்டத்தை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடியும் இதுவரையிலும் வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழித்து வருகிறது இந்நிறுவனம்.

ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் முறையாக பங்கெடுக்காமல் இழுத்தடித்து தொழிலாளர்களின் உழைப்பின் பலனை அபகரித்துக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள், புதுவையின் முதல்வர், கலெக்டர், தாசில்தார், தொழில்துறை ஆணையர், தொழில்துறை அமைச்சர் என அனைத்து ஆளும் கும்பல்களுக்கும் மனு கொடுத்தனர். மனு கொடுத்ததன் விளைவாக அரசிடமிருந்து எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதன் பின்விளைவாக நிர்வாகமானது உற்பத்தி குறைந்துள்ளதாக பொய்யான காரணம் காட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் 4 மாத சம்பளம் பிடித்தம் செய்தது.

தொழிலாளர்களை பட்டினியில் தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களில் சிலரை பலவீனப்படுத்தவும் சங்கத்தை உடைக்கவும் முயற்சித்தது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு 10-5-12-ல் சட்டவிரோத சம்பள பிடித்தத்தை உடனே வழங்கக் கோரியும், 7 தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடைமுறைப்படுத்து என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 152 தொழிலாளர்களுடன் வில்லியனூர் வட்டாட்சியர் அவர்களை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இதிலும் எந்த பயனும் ஏற்படாததால் மே 18 அன்று கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 350 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக சங்க முன்னனியாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அலுவலக அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். பேச்சுவார்த்தைக்கென்று சென்ற சங்க முன்னணியாளர்களை மிரட்டி பணியவைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வெளியேறிய தொழிலாளர்கள் போராட்டத்தை வீச்சாக எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறை அனைவரையும் கைது செய்தது.

ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அரசானது மக்கள் நலனுக்கானது அல்ல என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த தொழிலாளர்கள் அதை உழைக்கும் மக்களுக்கும் புரியவைக்கும் விதமான முழக்கங்களை எழுப்பி கைதாகினர். அன்று மாலையே சங்க முன்னனியாளர்களை சந்திப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர்கள் கலெக்டரைச் சந்தித்து, நிர்வாகமானது தான் கூறும் விதிமுறைகளையே அப்பட்டமாக மீறும் அதன் அயோக்கியத்தனத்தை விளக்கிக் கூறினார்கள். இதனையடுத்து .வரும் 21-5-12 அன்று HUL ல் ஆய்வு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

21-5-12 அன்று HULன் நிர்வாக மேலாளர் மற்றும் அலுவலக மேலாளரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஊதிய உயர்வு சம்பந்தமாக கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இருதரப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் HUL நிர்வாகமோ அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இன்றளவும் புறக்கணித்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக புதுவை அரசும் ஒரு மயிரையும் பிடுங்கிப் போடவில்லை. நியாயம் கிடைக்கும் வரையில் தொழிலாளர்களும் போராட்டத்தை கைவிடப்போவதுமில்லை என தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அம்பானிகளுக்காக நள்ளிரவில் பெட்ரோல் விலையை ஏற்றும் அரசு, தொழிலாளர்கள் தங்களின் உயிர்வாழும் கோரிக்கைகளுக்காக உச்சி வெயிலில் சாலையில் நின்று போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுப்பதில்லை. இனி இந்த முதலாளிகளையும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் அரசையும் என்ன செய்யலாம்?

_______________________________________________________________

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுவை.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!

40

ரூபாய் வீழ்ச்சி : வல்லரசுக் கனவுக்குச் சங்கு !

பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இந்தியாவின் எதிர்காலம் குறித்து இதைவிட நம்பகமானதொரு விளக்கத்தை நாம் கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

சர்வதேச நிதிமூலதனம் ஐரோப்பிய நெருக்கடியின் காரணமாக  டாலரைத் தஞ்சமடைகிறது. இதன் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து உலகளவில் அதன் மதிப்பு உயர்வதென்பது, ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. ஆனால், அது மட்டுமே காரணமல்ல. இருந்த போதிலும், பஞ்சத்தைப் பயன்படுத்தி மக்களைச் சூறையாடும் வணிகனைப் போல, இந்தியாவைச் சூறையாடுவதற்கான இன்னொரு வாய்ப்பாக இந்த சர்வதேச நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் ஏகாதிபத்திய முதலாளிகள்.

“நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைத்து டாலர் கையிருப்பை அதிகமாக்கு, வரி வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க மானியங்களை வெட்டு, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடு  இல்லையேல் இந்தியப் பொருளாதாரம் குறித்த எமது மதிப்பீட்டை (Sovereign Credit Rating) கீழிறக்க வேண்டியிருக்கும்” என்று சர்வதேச தரநிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் இந்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையின் விளைவுதான் தற்போதைய பெட்ரோல் விலையேற்றம். பிற துறைகளிலான மானிய வெட்டுகள் இனித் தொடங்கும். தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளைப் பொருத்தவரை, “வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதி தனியார்மயம் தொடர்பான நிதிச் சீர்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்” என்று அமெரிக்க நிதித்துறை செயலருக்கு வாக்களித்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, டீசல்,எரிவாயு மானியங்களை முற்றாக வெட்டுவது போன்றவற்றை ஆறு மாதங்களில் முடித்து விடுவதாகக் கூறியிருக்கிறார் நிதித்துறை ஆலோசகர் கௌசிக் பாசு. அந்நிய முதலீட்டாளர்களுக்கான சலுகைகளை அதிகரிப்பது, மக்கள் எதிர்ப்பால் தாமதப்படுத்தப்படும் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை அதிரடியாக முடுக்கிவிடுவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்திழுக்கச் சொல்கிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் டாலர் முதலீட்டைக் கவர்ந்து, அதன் மூலம் ரூபாயின் மதிப்பை உயர்த்திக் கொள்வதுதான் இந்த அரசின் நோக்கமேயொழிய, இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அல்ல.  இப்பொருளாதாரக் கொள்கையின் அரசியல் மொழிபெயர்ப்புதான் அமெரிக்காவின் காலை நக்கி வல்லரசாவது என்ற கனவு.

பெட்ரோல், மின் கட்டணம், பேருந்துக் கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி சராசரி இந்தியனின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தினால்தான், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுதான் ஏகாதிபத்திய மூலதனம் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கை. அதன் ஆலோசனைப்படி கிரீஸ் அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் அந்நாட்டைப் படுகுழியில் வீழ்த்தின. இந்தியாவும் அதே படுகுழியை நோக்கித்தான் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்த உண்மை சராசரி ஐ.பி.எல். இந்தியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, என்.ஆர்.ஐ இந்தியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்கள் இந்திய வங்கிகளில் போட்டிருக்கும் டாலர் முதலீடுகளுக்குக் கூடுதல் வட்டி தருவதாக  அரசு ஆசை காட்டியும் மயங்காமல், தமது முதலீடுகளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கிறார்கள் இந்த இந்தியர்கள். நாட்டை நெருங்கிவரும் அபாயத்தினை அறிவிக்கின்ற எச்சரிக்கைச் சங்காக இதை எடுத்துக் கொள்ளலாம். ‘வல்லரசுக் கனவுக்கு சங்கு’ என்றும் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

என்.எல்.சி.யின் ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்!

5

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி.யின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி., எல்.எல்.எஃப்., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

விரிவாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் மின்உற்பத்தித் தேவைகளுக்கேற்ப, கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக 14,000 ஒப்பந்தத்தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருக்கிறது, என்.எல்.சி. நிறுவனம். இங்கு பணியாற்றும் 19,000 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்த்து ஒப்பிட்டால், மொத்த தொழிலாளர்களுள் 40%க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாக, நவரத்னா தகுதியைப் பெற்றுள்ள நிறுவனமாக என்.எல்.சி. உயர்ந்திருக்கிறதென்றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இவ்வொப்பந்தத் தொழிலாளர்களுடையது. ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருள் கவ்வியதாகயிருக்கிறது.

குறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கத்திற்காகவே, சொசைட்டி தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பி ஷெட்யூல், ஏ ஷெட்யூல், ஏ.எம்.சி. தொழிலாளி, “நான்ஏ.எம்.சி.” (Non-A.M.C.) தொழிலாளி என்று பல பிரிவுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பிரித்துவைத்துள்ளது, என்.எல்.சி. நிர்வாகம். இதில் “நான்ஏம்.எம்.சி.” தொழிலாளியின் ஒரு ஷிப்டு சம்பளம் ரூ.180/ தான் என்பதிலிருந்தே, இந்தச் சுரண்டலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

‘‘ஒரு தொழிற்சாலையின் மையமான மற்றும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணிகளில்  ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்று கூறுகிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம் (1970). ஆனால், என்.எல்.சி.யின் மையமான பணியும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணியுமாகிய நிலக்கரி வெட்டுதல், கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையம் கொண்டு செல்லுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளைச் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளிகளைக் கொண்டே நிறைவேற்றி வருகிறது, என்.எல்.சி. நிர்வாகம்.

என்.எல்.சி. நிறுவனம், தனது மையமான பணிகளில் பெரும்பாலானவற்றை, ஒப்பந்ததாரர்களின் மூலமாகத்தான் மேற்கொண்டு வருகிறது. தலையில் தினத்தந்தி பேப்பரை கவிழ்த்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர் போன்றவர்களல்ல இவர்கள். இவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கமும் தெரியாது, மின் உற்பத்தி நிலையமும் தெரியாது. மாத இறுதியில், இவ்வொப்பந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றிய மொத்த வேலைக்குரிய தொகையை நிர்வாகத்திடமிருந்து காசோலையாகப் பெற்று அதன் பெரும்பகுதியைச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியதை ‘தலை’க் கணக்கில் தொழிலாளிக்கு ரொக்கமாகப் பிரித்துக் கொடுப்பதொன்றுதான் இந்த ஒப்பந்த தாரர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி. இத்தகைய, மாஃபியா கூட்டத்தின் எடுபிடியாகவே செயல்படுகிறது என்.எல்.சி.  நிர்வாகம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்‘சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியைக் கொடு! பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு!” என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களை முன்னெடுப்பதும், இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நயவஞ்சகமான முறையில், சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாய் கையெழுத்திடும்  என்.எல்.சி.நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை எள் முனையளவும் மேற்கொள்ளாமல், போராடிய தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதமாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் வேலைநீக்கம் செய்தது; சங்க அலுவலகத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது எனச் சல்லித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகம்.

2008ஆம் ஆண்டில் 16 நாட்கள் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பணிமூப்பை அடிப்படையாகக் கொண்டு 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை முதல்படியாக “இன்ட் கோ சர்வ்” பட்டியல் தொழிலாளர்களாக ஏற்றுக்கொண்டு, பின்னர் என்.எல்.சி. நிறுவன ஊழியராக முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது, அவ்வொப்பந்தத்தின் மையமான அம்சம்.

இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்தது என்.எல்.சி. நிர்வாகம். நிர்வாகத்திற்கெதிராகத் தொழிற்சங்கங்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்த வேண்டுமென  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நிர்வாகம். மேலும், “இன்ட் கோ சர்வ்” பிரிவின் கீழ் தொழிலாளர்களை நியமிப்பது தொடர்பாகத் தனது கைக்கூலி சங்கத்தைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் போட வைத்தது.

2008ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, 2010ஆம் ஆண்டில் 39 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்30, 2010 அன்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், “2 வருடத்தில், 480 நாட்கள் பணிமுடித்த அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சம வேலைக்குச் சம ஊதியம்; ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துவது” உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, என்.எல்.சி. நிர்வாகம்.

இவ்வளவுக்குப் பிறகும், 2008 மற்றும் 2010இல் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின்படி பணிமூப்பு அடிப்படையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட வெளியிடாமல் இழுத்தடித்தது நிர்வாகம். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டதை வழக்காக்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் ஒப்பந்த சரத்தை அமல்படுத்த முடியாது எனத் தெனாவெட்டாக அறிவிக்கவும் செய்தது. இந்நிலையில், 2011இல் உச்ச நீதிமன்றமும், பணி நிரந்தரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று இரண்டு இடைக்காலத் தீர்ப்புகளை வழங்கியது. எத்தனை தீர்ப்புகள் வந்தபோதும், அவற்றை அமல்படுத்த தயாரில்லை எனத் திமிராகச் செயல்பட்டது, நிர்வாகம்.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றையொட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின்படி என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரித்தான் தற்பொழுது ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இக்கோரிக்கையினை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம், பழைய ஒப்பந்தங்களையொட்டித் தனது கைக்கூலி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காட்டி, இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இப்பிரச்சினை தொடர்பாகத் தாமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிர்வாகத்தைக் கண்டித்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் என்.எல்.சி. யின் வழக்கில் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.  இந்த நியாயத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே போட்டுவைத்துள்ள வழக்குகளைக் காட்டி, தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒரு அநீதியான தீர்ப்பை அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

என்-எல்-சி தொழிலாளர் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளாகவே நீருபூத்த நெருப்பாய் எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும் இத்தொழிலாளர்களின் போராட்டம் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்ட முடியாமல், ஒப்பந்தம்நீதிமன்றம்சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்டம் எனத் திரும்பத் திரும்பச் செக்குமாட்டுச் சுழலில் சிக்கித் தவிக்கிறது.

தான் வகுத்துக்கொண்ட சட்டத்தை தானே மதிக்காமல் செயல்படக்கூடிய அரசுத்துறை நிறுவனத்தை எதிர்த்து, அரைநிர்வாணப் போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என சட்டவரம்புகளுக்குட்பட்ட போராட்டங்களின் மூலமே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என தொழிற்சங்கங்கள் நம்புவதும், அவ்வாறே தொழிலாளர்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதும், இப்போராட்டத்தின் மிகப்பெரும் பலவீனமாகும்.

என்.எல்.சி. யின் உற்பத்தியினை முடக்கச் செய்யுமளவிற்குப் போர்க்குணம் கொண்ட, சட்டவரம்புகளையும் மீறிய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், தொழிலாளி வர்க்க விரோத என்.எல்.சி. நிர்வாகத்தை அடிபணியச் செய்ய முடியாது என்பதைப் போராடும் தொழிலாளர்கள் உணர வேண்டிய தருணமிது.  போராட்ட முறைகளையும், உத்திகளையும் மாற்றுவோம்!  அடிப்படை உரிமைகளை வென்றெடுப்போம்!!

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

6

புதிய-ஜனநாயகம்-ரூபாய்-வீழ்ச்சி

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது இறுதிக்காலம்வரை அயராது உழைத்த தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
  2. ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
  3. நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை
  4. நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
  5. புரட்சிகர அரசியலைப் பரப்பிக் கொண்டே மரணமடைந்த தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்!
  6. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….
  7. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
  8. என்.எல்.சி.யின்  ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
  9. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலை எதிர்த்து பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டங்கள்!
  10. வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
  11. மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு
  12. நின்னா வரி… நடந்தா வரி…. நெரிசல் வரி!

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

ஹூண்டாய் ஹவாசின்: ஆறு தொழிலாளிகள் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

7
ஹூண்டாய்-நரபலி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்
ஹூண்டாய்-நரபலி
சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்து போன சிரமன், திலோத் மத்வான். இதில் சிரமனின் வயது 16 மட்டுமே.

ஸ்ரீபெரும்புதூர் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் இரத்தச் சகதியில் கிடத்தப்பட்டிருந்த நான்கு உயிரற்ற உடல்கள். சென்னை அரசு பொதுமருத்துவமனையின் சவக்கிடங்கில் வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த இரு உடல்கள். அதே மருத்துவமனையின், தீவிர சிகிச்சைப் பிரிவில் நாசி வழியே வழிந்தோடும் இரத்தத்தை துடைத்தெடுக்கக்கூடத் துணை எவருமின்றி, சுயநினைவற்றுப்போன நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரு உடல்கள். விபத்து சிகிச்சைப் பிரிவின் படுக்கையொன்றில் கிடத்தப்பட்டிருக்கும் ஒர் உயிரிருள்ள உடல். இந்தப் பரிதாபக் காட்சிகளைப் பார்க்கவே பதறுகிறது மனம். யாரையேனும் பிடித்து கதறி அழுது தீர்க்க வேண்டுமென உந்தித்தள்ளுகிறது, அதிர்ச்சியிலும், காட்சிகளிலும் வெடித்துக் கிளம்பும் உணர்ச்சி.

கவனிப்பார் யாருமின்றி, கேள்வி கேட்பாரற்ற அனாதைப் பிணங்களாய் கிடத்தப்பட்டிருக்கும் இவர்களெல்லாம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூன்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் “ஹவாசின்” என்ற நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளர்கள். பீகார், ஒரிசாவைச் சேர்ந்த இந்த சடலங்கள் அனைத்தின் வயதும் 16 தொடங்கி 26க்குள் அடக்கம்.

நள்ளிரவில் பணிமுடித்து வீடு திரும்ப பேருந்துக்காக இவர்கள் காத்திருந்ததாகவும்; அப்போது அவ்வழியே சென்ற காய்கறி ஏற்றிச்செல்லும் சரக்குந்தை வழிமறித்து 15 தொழிலாளர்கள் ஏறிச்சென்ற பொழுது, சாலையோரம் நின்றிருந்த வாகனம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகி பலியாகிவிட்டனர் என்றும் பச்சையாய் புளுகுகிறது, போலீசும் பத்திரிக்கைகளும்.

உண்மையில், இரவுநேரப்பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால், அறையில் பணிமுடித்தக் களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி, ஆடுமாடுகளைப் போல லோடு ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் வழியில்தான் இந்த விபத்தும் கோரச்சாவும் நிகழ்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி இறந்திருக்கின்றனர். இதுவரை கிடைத்த தகவலின் படி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இருவர் இறந்தது உள்ளிட்டு மொத்தம் 6 பேர் இறந்து போயிருக்கின்றனர். எதிர்பாராத விதமாய் நிகழ்ந்துவிட்ட விபத்தல்ல இது. பச்சையான படுகொலை. முதலாளித்துவ இலாபவெறிக்கு நரபலியாக்கப்பட்டிருக்கிறார்கள் இவ்விளந் தொழிலாளர்கள்.

ஹூண்டாய்-நரபலி
மூக்குவழியே இரத்தம் கசிந்து உறைந்து போனநிலையில் சம்போ. தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் இவரது வயது 16க்குள்தான் இருக்க வேண்டும்.

ஆடுமாடுகளைப்போல, எந்நேரம் வேலைக்குப் பணிக்கப்பட்டாலும் சிறு முணுமுணுப்பையும் வெளிக்காட்டாமல் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் 40-50 பேரை ஒரே அறையில் அடைத்து வைத்து தனக்கு தேவைப்பட்ட நேரத்திலெல்லாம் அழைத்து வேலை வாங்கியிருக்கிறது, ஹவாசின் நிர்வாகம். இயந்திரங்களை கையாளுவதற்கேற்ப போதுமான கல்வித் தகுதியோ, அனுபவமோ அற்ற இத்தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய வேலைகளிலும் ஈடுபடுத்தியிருக்கிறது, நிர்வாகம். இவ்வாறு “வெல்டிங் மற்றும் பிரஸ்ஸிங் மிஷினில் கை சிக்கி உடல் உறுப்புகள் சின்னாபின்னமாகி சிதைந்து போன தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம், இது இங்கே சர்வ சாதாரணம்” என்கின்றனர் ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள்.

“வழக்கமா ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலைன்னா, ரூம்ல இருக்கிற ஹிந்தி காரங்களை கூட்டிட்டு வர்றதுக்கு கம்பெனியிலிருந்தே வண்டியை அனுப்புவாங்க. ஹிந்தி கார பசங்களை “டாடா ஏஸ்” வண்டியிலதான் வேலைக்கு கூட்டிட்டு வருவாங்க, கொண்டுபோய் விடுவாங்க. இது வழக்கமா நடக்குறதான். அன்னிக்கு நைட்டும் ஷிப்ட்டுக்கு ஆள் பத்தலை, அதனால ஒரு டாடா ஏஸ் வண்டியும் கம்பெனி ஆம்புலன்சையும் அனுப்பி வச்சாங்க. ஆம்புலன்ஸ்ல வந்தவங்களுக்கு ஒன்னும் ஆகலை. டாடா ஏஸ் வண்டிதான் ஆக்சிடென்ட் ஆச்சு. அதுவும் அந்த டாடா ஏஸ் டிரைவர் மூனுநாளா வீட்டுக்கு போகாம டூட்டி பார்த்திட்டு இருந்தார் சார் ” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத ஹவாசின் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்க சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்தில் சிக்கி கந்தலாகிப் போன துணியோடு அப்படியே கிடத்தப்பட்டிருந்த 16 வயது மதிக்கத்தக்க இளந்தொழிலாளி சம்போ, சுயநினைவற்ற நிலையில் மூச்சை இழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவரது இதயத்துடிப்பு மிகவேகமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது. நாசிவழியே இரத்தம் வழிந்தோடிக்கிடந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தோம், “காலையில இருந்து பச்சைத்தண்ணி கூட உள்ள போகல தம்பி, ஒரு பய கூட எட்டிப்பார்க்கல, மூக்கு வழியா ரத்தம் வழிஞ்சிகிட்டே இருந்துச்சு. நர்சு அம்மாகிட்ட சொன்னேன், “அப்படித்தான் வரும் போ”ன்னு சொல்லிட்டாங்க. பார்க்கவே பாவமா இருக்கு தம்பி” என்றனர், அவர்கள்.

ஹூண்டாய்-நரபலி
21 வயதேயான பனிஸ்டோ, அவரை கவனித்துக்கொள்ளும் ராஜம்.

மண்டை பிளந்தும் கைமணிக்கட்டில் இரத்தக் காயங்களோடும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரிசாவை சேர்ந்த 21 வயதான பனிஸ்டோவின் நிலையோ பரிதாபம். தன்னோடு பயணித்த சக தொழிலாளர்களில் எத்தனை பேர் இறந்து போயினர், தப்பிப்பிழைத்தவர்களின் கதியென்ன என்பதைக் கூட இதுவரை அறிந்துகொள்ள முடியாத துர்பாக்கியசாலியாய், தனிமையும் வெறுமையும் மட்டுமே துணையாய்க் கொண்டு துவண்டுக் கிடக்கிறார் அவர். படுக்கையில் கிடத்தியதோடு சரி, உடனிருந்து உதவிசெய்ய எவரும் வரவில்லை. கண்ணெதிரிலே சக தொழிலாளர்களை பலிகொடுக்க நேர்ந்த பரிதவிப்பும் அதன் தாக்கத்திலிருந்து மீளாத மிரட்சியுமே அப்பியிருந்தது, அவரது கண்களில்.

சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற நம்மை சூழ்ந்து கொண்டனர், அதே மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள். அவர்களிடம் இவர் யார், எப்படி இங்கு வந்து சேர்ந்தார் என்பதை சொன்னோம். “நாடு வுட்டு நாடு பொழைக்க வந்தவனுங்கள இப்படியா கொடுமை பண்ணுறது, அவனுங்களாம் நல்லா இருக்க மாட்டானுங்க. அவனுங்க கிடக்குறானுங்க தம்பி நீங்க சொல்லுங்க, இந்த பையனுக்கு இன்னா பண்ணனும் சொல்லு. நாம இருந்து நம்மலால முடிஞ்சத செய்வோம்” என்றார், வள்ளுவர் கோட்டத்தை சேர்ந்த வயதான பெண்மணி ராஜம்.

வடமாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் யாரென்றே தெரியாத போதும், அவர் பேசும் மொழி புரியாதபோதும், உடனிருந்து உதவி செய்யக்கூட எவருமில்லாத அவலநிலையை உணர்ந்து, தானாக முன்வந்து தண்ணீர், உணவு, மருந்து மாத்திரைகளை வழங்கி பனிஸ்டோவை கவனித்துவருகிறார், ராஜம்.

அடையாளம் தெரியாத நபர்களால் அனுமதிக்கப்பட்ட “அடையாளம் காணப்படாத உருப்படிகளாய்” சவக்கிடங்கிலும், மருத்துவமனையின் படுக்கைகளிலும் அநாதைகளாய் கிடத்தப்பட்டிருக்கும் பேரவலத்தை இனியும் விவரிக்க மனம் ஒப்பவில்லை.

ஹூண்டாய்-நரபலி
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பரோதன் மற்றும் சம்போ

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை கவனிக்க ஒரு நாதியுமில்லை. உயிரற்ற சடலத்தின் அருகே ஒட்டியிருந்து காதும் காதும் வைத்தாற் போல அவற்றை அப்புறப்படுத்துவதிலேயேதான் முனைப்பு காட்டியது, ஹவாசின் நிர்வாகம். இந்தப் பணிக்காகவே ஒதுக்கப்பட்ட இரண்டு நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தியின் உதவியுடன் இந்தக் காரியத்தை கச்சிதமாக செய்தும் முடித்தனர். வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்தை வாங்கிக் கொண்டு, வெள்ளைத்துணி போர்த்தப்பட்ட உயிரற்ற சடலத்தை வடமாநிலத் தொழிலாளர்களிடம் திணித்தது நிர்வாகம். சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வாகன ஏற்பாட்டை செய்துகொடுத்து, வழிச்செலவுக்கு சில ஆயிரங்களை கொடுத்தும் ‘மனிதாபிமான’ அடிப்படையில் நடந்து கொள்வதைப் போல தொழிலாளர்களிடம் காட்டிக்கொண்டது, நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த நயவஞ்சக நாடகத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்களிடையே அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

“இந்த பச்சைப் படுகொலையை செய்தது “ஹவாசின்” நிர்வாகம். கைது செய்து தூக்கிலிட வேண்டிய கொலைக்குற்றவாளிகள் அவர்கள். முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கெதிராக தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும்” என்ற  இவ்வமைப்பின் பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்துள்ளனர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பணியாற்றும் இளம் தொழிலாளர்கள். கனவிலும், இது விபத்து என்று ஒப்புக்கொள்ள அவர்கள் தயாராயில்லை.

ஹூண்டாய்-நரபலிநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அய்யோ பாவம் என்ற அனுதாப வார்த்தைகளும், உண்மையாய் மனம் வருந்தி இறந்துபோன தொழிலாளிக்கு நாம் செலுத்தும் இரங்கலும் இயல்பான ஒன்றுதான். இது மட்டுமே போதுமா, என்ன?  சொந்த ஊரில் வாழ வழியற்று மொழி, உணவு, பண்பாடு தெரியாத மண்ணில் ஆட்டுமந்தைகளைப் போல அவதிப்படும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் கூட யாரும் கவனிப்பாரின்றி முடிந்திருக்கிறது. உயிர் பிழைத்தோரும் என்ன ஏது என்று தெரியாமல் அனாதைகளாய் படுக்கையில் மயங்கிய நிலையில் இருக்கின்றனர்.

அழகான ஹூண்டாய் காரை என்ன கலரில் வாங்கலாம், எந்த வங்கியில் வட்டி குறைப்புடன் கடன் வாங்கி வாங்கலாம் என்று கனவு இல்லத் திட்டத்தோடு வாழும் வர்க்கம் தனது காருக்கு பின்னே இத்தனை இரத்தமும், சதையும் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை உணருமா? பன்னாட்டு நிறுவனங்களின் வருகை சொந்த மண்ணின் பொருளியல் வளத்தை மட்டுமல்ல, சொந்த மக்களின் உயிரையும் உறிஞ்சித்தான் இலாபத்தை பறித்தெடுக்கிறது என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா? இல்லை எனில் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், தொழிலாளிகளின் சொந்தக் கதைகளிலிருந்து சொந்தக் குரலிலிருந்து கதைகளை கேளுங்கள்! கல் நெஞ்சத்தையும் கரைக்கும் அந்தக் கண்ணீர் உங்களது பாவங்களை கழுவட்டும்!

__________________________________________________

சி.வெற்றிவேல் செழியன் உதவியுடன்,
இளங்கதிர்.

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

_______________________________________________________________________________

கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை – பி.சாய்நாத்

18
கோட்டு-சூட்டு-கனவான்களின்-எளிய-வாழ்க்கை
"திட்டக் கமிஷனைப் பொறுத்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஒருவர் நாளைக்கு ரூ 22.50க்கு மேல் செலவழித்தால் அவர் ஏழை என்று கருதப்படமாட்டார். ஆனால், அதன் துணைத் தலைவர் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம்." - படம் www.thehindu.com

எளிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய பிராணாப் முகர்ஜியின் வேண்டுகோளில் இருந்த உருக்கம் நாட்டில் கண்ணீரை பெருக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த காலத்தில் எளிமைக்காக மன்றாடிய போது அவரது சகாக்கள் அதை படைப்பாக்க உணர்வுடன் தழுவி கொண்டார்கள். நிதி அமைச்சகம் கூட 2009 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சிங்கின் வேண்டுகோளை செயல்படுத்த ஆரம்பித்து விட (எகானமி வகுப்பு விமான பயணம், செலவுக் குறைப்பு) அந்த புனிதத் தேடலின் நான்காவது ஆண்டை நாம் அடைந்திருக்கிறோம்.

எளிய வாழ்க்கையில் பல வகைகள் இருக்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னைக் கேட்டால் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பாணி எளிமையைத்தான் தேர்ந்தெடுப்பேன். எளிய வாழ்க்கையின் மீது டாக்டர் அலுவாலியாவுக்கு இருக்கும் பற்றை யாரும் கேள்வி கேட்டு விட முடியாது. ‘நடைமுறைக்கு ஏற்ற மட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்க வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கையை அவர் எதிர் கொண்ட விதத்தை பாருங்கள். மக்களுக்கு சும்மா செல்லம் கொடுத்து கெடுப்பது என்பது அவரிடம் இல்லை. ‘நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 29 ரூபாய் அல்லது கிராமப் புறத்தில் 23 ரூபாய் உங்களால் செலவழிக்க முடிந்தால், நீங்கள் ஏழை இல்லைதான்’. இத்தகைய கறாரை கோடிக்கணக்கான தனது சக குடிமக்கள் மீது சுமத்துவதை அங்கீகரிக்கும்படி உச்சநீதிமன்றத்திடமும் அவர் கோரினார். திட்ட கமிஷன் தாக்கல் செய்த ஆவணத்தில் நகர்ப்புறத்தில் ரூ 32, கிராமப் புறத்தில் ரூ 26 ஒரு நாளுக்கான நாள் செலவு என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பத்ம விபூஷண் பெற்ற அவரும், அவரது சகாக்களில் சிலரும் அதை இன்னும் குறைப்பதற்கு தமது தலையையும் அடகு வைக்க தயாராக இருந்தனர்.

தகவல் பெறும் உரிமை வினவல்கள்

டாக்டர் அலுவாலியா எளிய வாழ்க்கையைத்தான் கடைப்பிடிக்கிறார் என்பது இரண்டு தகவல் பெறும் உரிமை வினவல்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. தகவல் பெறும் உரிமையை பயன்படுத்தும் சிறந்த ஊடக செயல்பாடாக அவை இருந்தும் அவற்றுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை. அந்த இரண்டும் அலுவாலியாவின் எளிய வாழ்க்கையை பகுத்து ஆராய்கின்றன. அவற்றில் ஒன்று ஜூன் 2004-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே டாக்டர் அலுவாலியா வெளிநாடுகளுக்கு போன பயணங்களைப் பற்றி இந்தியா டுடேவில் ஷ்யாம்லால் யாதவ் எழுதிய கட்டுரை. இந்த பத்திரிகையாளர் (இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் பணிபுரிகிறார்) இதற்கு முன்பும் தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

மற்றது, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவையில் நிருபர் பெயர் குறிப்பிடப்படாமல் வந்த அறிக்கை. 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையில் டாக்டர் அலுவாலியாவின் உலகளாவிய பாய்ச்சல்களை பற்றிய விபரங்களை அது வெளிக் கொணர்ந்தது. அந்த கால கட்டத்தில், அவர் “18 இரவுகள் அடங்கிய நான்கு பயணங்களை மேற்கொண்டார். இதற்கு அரசு செலவழித்த தொகை ரூ 36,40,140, அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக ​​ரூ 2.02 லட்சம் செலவு” என்று சொல்கிறது ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவை அறிக்கை.

அந்த பயணங்கள் நிகழந்த கால கட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ 2.02 லட்சம் என்பது டாலர் மதிப்பில் $4,000 ஆகும். (ஹிஹி! மான்டேக் சிக்கன வாழ்க்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். இல்லையெனில் அவரது செலவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) அந்த தினசரி செலவினம், கிராமப்புற இந்தியர்கள் ஒரு நாளைக்கு செலவிட வேண்டியதாக அவர் கருதும் வரையறையான 45 சென்டை விட 9,000 மடங்கு அதிகமாகும். அல்லது டாக்டர் அலுவாலியா நடைமுறையில் போதுமானது என்று கருதும் நகர்ப்புற இந்தியர்களுக்கான வரையறையான 55 சென்ட்டுகளை விட 7,000 மடங்கு அதிகம்.

இப்ப பாருங்க, அவர் 18 நாட்களில் செலவழித்த ரூ 36 லட்சத்தை (அல்லது $72,000) உலக சுற்றுலா துறைக்கு அவர் அளித்த தனிப்பட்ட ஊக்குவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஐநாவின் சுற்றுலா நிறுவனம் சுட்டிக் காட்டுவது போல அந்த துறை 2008-09-ன் இழப்புகளிலிருந்து 2010-ல்தான் மீண்டு கொண்டிருந்தது. அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு உலகளாவிய சுற்றுலா வருமானம் $1 டிரில்லியனைத் தாண்டியது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. மிக அதிக வருவாய் அதிகரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்தது. இந்த 18 நாட்களில் பெரும்பாலானவை அந்த இடங்களில்தான் செலவழிக்கப்பட்டன. உள்நாட்டில் சிக்கன வாழ்க்கையின் சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இந்த பொருளாதார மீட்சியில் தமது பணமும் ஒரு சிறு பங்காற்றியிருப்பதை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

வறுமைக்கோடு-1

ஷ்யாம்லால் யாதவின் தகவல் பெறும் உரிமை மனுவிலிருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்கள் இன்னும் கலக்கலாக இருக்கின்றன. டாக்டர் அலுவாலியா தனது ஏழு வருட பணிக்காலத்தில் 42 முறை உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 274 நாட்களை வெளிநாடுகளில் கழித்திருக்கிறார் என்ற அவரது கண்டுபிடிப்பை முதலில் எடுத்துக் கொள்வோம். அதாவது “ஒன்பது நாட்களில் ஒரு நாள்” அவர் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து பயணம் செய்த நாட்களை இதில் சேர்க்கவில்லை. அவரது மகிழ்வுலாக்கள் இந்திய கஜானாவுக்கு ரூ 2.34 கோடி செலவு வைத்தாக இந்தியா டுடேயின் ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால், அவரது பயணங்களுக்கான செலவுகள் பற்றி மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளை பெற்றதாகவும், பாவம் பார்த்து உள்ளதில் குறைந்ததை எடுத்துக் கொண்டதாகவும் இந்தியா டுடே அறிக்கை குறிப்பிடுகிறது. “வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தது போன்ற செலவுகள் சேர்க்கப்பட்டதா தெரியவில்லை” என்றும் இந்தியா டுடே அறிக்கை சொல்கிறது. “உண்மையான செலவுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்”.

இந்த பயணங்கள் அனைத்தையும் “பிரதமரின் அனுமதியுடனே”யே மேற்கொண்டிருந்தாலும், அவர் வகிக்கும் பதவிக்கு வெளிநாட்டு பயணம் பெரிதளவு தேவைப்படுவதில்லை என்பதால், கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. அந்த 42 பயணங்களில் 23 பயணங்கள் திட்டமிடலில் மீது நம்பிக்கையே இல்லாத அமெரிக்காவுக்கு (டாக்டர் அலுவாலியாவுக்கும் திட்டமிடலில் நம்பிக்கை இல்லைதான்) மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன?

எளிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதா? அப்படியானால், அவரது பயணங்களுக்காக நாம் இன்னும் அதிகம் செலவிட வேண்டும்: ஏதென்சின் தெருக்களில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை ஒழிப்பதற்காக போராடும் அசிங்கமான கிரேக்கர்களை பாருங்கள்! பணக்காரர்களின் எளிய வாழ்க்கை இன்னும் வெளிப்படையாக தெரியும் அமெரிக்காவுக்கு அதிகம் செலவானாலும் அவர் இன்னும் பல முறை பயணிக்க வேண்டும். வால் தெரு உலக பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கிய 2008-ம் ஆண்டில் கூட அந்த நாட்டின் நிறுவன தலைமை அதிகாரிகள் பில்லியன் கணக்கில் போனஸ்களை எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு, அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களின் ஊடக பத்திரிகைகள் கூட, தலைமை நிர்வாகிகள் தமது நிறுவனங்களையும், வேலை வாய்ப்புகளையும், இன்னும் பலவற்றையும் அழிப்பதையும் அதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதையும் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டுக் கடன்களை அடைக்க முடியாமல் போனவர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இன்னொரு வகையான எளிய வாழ்க்கையை பார்த்தார்கள். பிரெஞ்சு மக்கள் காலப் போக்கில் பயப்படுவதும், எதிர்த்து வாக்களித்ததுமான வகை.

திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com

டாக்டர் சிங் 2009-ல் எளிய வாழ்க்கைக்காக மன்றாடிய போது அவரது அமைச்சரவை பிரமாதமாக அந்த அழைப்புக்கு செவி சாய்த்தது. அடுத்த 27 மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாதத்திற்கு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் மட்டும் தனது சொத்துக்களில் ஆரவாரமில்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். முழு நேரமும் அமைச்சர்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அதை செய்தார்கள். ( “மத்திய அமைச்சரவை, இன்னும் செழிப்பாகிறது” தி இந்து, செப்டம்பர் 21, 2011). அவர்களில் தலை சிறந்தவர் பிரஃபுல் படேல். அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். அவரது பொறுப்பில் இருந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ஏர் இந்தியாவின் தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதற்கு பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது அதே காலகட்டத்தில்தான். இப்போது பிரணாப் சவுக்கை சுழற்றி விட, இன்னும் கடுமையான சிக்கனம் எல்லா இடங்களையும் ஊடுருவப் போகிறது.

இந்த சிக்கன வாழ்க்கையின் இருதரப்பு உணர்வையும் கவனிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பிரபுல் பட்டேலும் (ஐக்கிய ஜனநாயக முன்னணி – தேசியவாத காங்கிரஸ் கட்சி), நிதின் கட்காரியும் (தேசிய முற்போக்கு கூட்டணி-பாரதீய ஜனதா கட்சி) இதுவரையில் காணாத அளவுக்கு அதிக செலவிலான திருமணங்களை நடத்தினார்கள். எந்த ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டதை விட அதிகமான விருந்தினர்கள் அவர்கள் நடத்திய திருமண விழாக்களில் கலந்து கொண்டார்கள். அத்தகைய எளிய வாழ்க்கையில் பாலின சமத்துவமும் இல்லாமல் போய் விடவில்லை, அந்த திருமண விழாக்கள் திரு படேலின் மகளுக்கும் மற்றும் திரு கட்காரியின் மகனுக்குமாக நடந்தன.

அவர்களது கார்பொரேட் சகாக்கள் எளிய வாழ்க்கையை இன்னும் தீவிரமாக செயல்படுத்தினார்கள். 27 மாடியிலான (ஆனால் 50 மாடிகளை விட உயரமான) நமக்குத் நினைவு தெரிந்து அதிக செலவில் கட்டப்பட்ட அவரது வீட்டுடன் முகேஷ் அம்பானி. கிங்பிஷர் ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் போது – மே 5 அன்று டுவிட்டரில் “துபாயில் பூர்ஜ் காலிபாவின் 123வது மாடியில் அட்மாஸ்பியரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் இதுவரை இருந்தது இல்லை. வியப்பளிக்கும் காட்சி” என்று ட்வீட் செய்த விஜய் மல்லையா. அது கிங்ஃபிஷர் இப்போது பறக்கும் உயரத்தை விட அதிகமாயிருக்கலாம். இரண்டு பேரும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கிறார்கள். ஐபிஎல் கேளிக்கை வரி சலுகை முதலாக அரசு மானியங்களை பெற்றிருக்கிறது.  அதாவது, பம்பாய் உயர் நீதிமன்றத்துக்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டது வரை. பொதுமக்கள் பணத்தில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று இன்னும் பல சிக்கன நடவடிக்கைகள் இருக்கின்றன. காத்திருங்கள்.

வால் தெரு மாதிரி

இங்கு உள்ள கார்பொரேட் உலகம் வால் தெருவின் சிக்கன நடவடிக்கை மாதிரியை பின்பற்றுகின்றன.  சிட்டி குரூப் மற்றும் மெர்ரில் லிஞ்ச் உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் “2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் $175 பில்லியன் மானியமாக பெற்றுக் கொண்ட போது தமது ஊழியர்களுக்கு $32.6 பில்லியன் போனஸ்கள் வழங்கினார்கள்” என்று ப்ளூம்பர்க் 2009-ல் தெரிவித்தது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோவின் அறிக்கையை அது மேற்கோள் காட்டியது : “வங்கிகள் நன்றாக செயல்பட்ட போது, அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மோசமாக செயல்பட்ட போது அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மிகவும் மோசமாக செயல்பட்ட போது, அவை மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றப்பட அதே நேரத்தில் அவர்களது ஊழியர்களுக்கு அப்போதும் நிறைய பணம் கொடுக்கப்பட்டது. லாபம் பெருமளவு குறைந்துவிட்ட போதும் போனஸ்களும் மொத்த வருமானம் பெருமளவு மாறுபடவில்லை.”

பிரணாபின் சிக்கன வேண்டுகோளைத் தொடர்ந்து நிதி நெருக்கடி “அடுத்தடுத்த இலவச திட்டங்களால்தான்” ஏற்படுகிறது என்று பெரும் பணக்காரர்கள் தொலைக்காட்சிகளில் கொதிப்பதை பார்க்க முடிந்தது. அதாவது மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சிப்பது, பட்டினியை குறைப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற முட்டாள்தனமான விஷயங்கள். பிரணாபின் அதே பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் கார்பொரேட் வரி, கலால் வரி, சுங்க வரி சலுகைகள் மூலம் வழங்கப்பட்ட ரூ 5 லட்சம் கோடி அளவிலான பணக்காரர்களுக்கான ஜனரஞ்சகம் பற்றி எந்த முனகலும் இல்லை. (“பிபிஎல்லை சரி செய்ய சி.பி. எல்லை ஒழியுங்கள்” தி இந்து, மார்ச் 26, 2012). அந்த தள்ளுபடிகள் அரசின் நிதிப் பற்றாக்குறையை விட 8,000 கோடி கூடுதல் என்று நாடாளுமன்றத்தில் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். ஆனால் ஏழைகளுக்கான ‘ஜனரஞ்சக நடவடிக்கைகள்’ தான் தாக்கப்பட்டன.

அமர்த்தியா சென் ( தி இந்து, ஜனவரி 7, 2012) “தங்கத்துக்கும் வைரத்துக்கும் சுங்கவரி விலக்கு அளிப்பது போன்ற வருமானம் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் ஏன் வாதம் நடைபெறுவதே இல்லை. நிதி அமைச்சக மதிப்பீடுகளின்படி அது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு தேவைப்படும் கூடுதல் பணத்தை (Rs.27, 000 கோடி) விட அதிகமான வருமான இழப்பை ஏற்படுத்துகிறது (வருடத்திற்கு ரூ .50, 000 கோடி)” என்று சோகமாக கேட்கிறார்.

மெச்சத்தக்கவர்களின் ஒளிரும் வட்டத்துக்கு வெளியில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்தது இன்னொரு வகையான எளிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்ற வீதம் இரண்டு இலக்கங்களில் பறக்கிறது. காய்கறி விலைகள் ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்கின்றன. குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு வீதம் துணை சகாரா ஆப்பிரிக்காவை விட இரண்டு மடங்காக இருக்கிறது. குடும்பங்கள் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெருமளவு அதிகரித்து விட்ட மருத்துவச் செலவுகளால் திவலாகிப் போகின்றனர் பல லட்சம் பேர். விவசாயிகள் உள்ளீடுகளை வாங்க முடியாத, கடன் பெற முடியாத நிலைமை. உயிர் கொடுக்கும் பொருளான தண்ணீர் மேலும் மேலும் பிற தேவைகளுக்காக திருப்பப்படுவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு நெரிக்கிறது.

மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.

_________________________________________________

– பி.சாய்நாத், நன்றி தி இந்து

தமிழாக்கம்: அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

51
நரபலி சிறுமி ராஜலட்சுமி
கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி

அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவர். இவரது 5 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதியன்று காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவள் கண்டெடுக்கப்படுகிறாள். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இது நரபலியாக இருக்கலாமென்று போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் மலபார் என்ற கருப்பு மீது சந்தேகமேற்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து கருப்புவின் தந்தை மகாமுனியும்(65) கைது செய்யப்பட்டார். அவரோ உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்து போகிறார். நாக்கை அறுத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்ந்த கருப்புவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது கொலையா, தற்கொலையா, தற்கொலைக்கு நெருக்கடி கொடுத்த நிர்ப்பந்தமா என்பதெல்லாம் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்.

சிறுமியின் கொலை கண்டிப்பாக நரபலிதான் என்பதோடு தேடப்படும் நபர்களின் மர்ம மரணம் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறுமி அணிந்திருந்த கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்ததை வைத்து அதைக் கொடுத்த முருகேசன் என்பவரை பிடித்து கைது செய்த போது இந்த அதிர்ச்சியூட்டும் நரபலியின் முழுக்கதையும் தெரிய வந்திருக்கிறது.

முருகேசன் கொடுத்த தகவலின் படி கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நரபலியின் முதன்மைக் குற்றவாளியான அயூப்கான் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு முன்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தி.மு.கவில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரெல்லாம் காமா சோமா நபர்களாக இருக்கமாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. நாமும் நம்புவோம். அதன்படி அயூப்கானுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட இயக்க வரலாறு எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்குமென்பதால் இவரது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார். எனினும் அல்லா உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு பெரிய உணர்ச்சி ஒன்று உண்டு. வருமானத்தைக் கொடுக்கும் பொருளாதர உணர்ச்சிதான் இவரது வாழ்வின் அடிப்படையான உணர்ச்சி. சுயநிதிக் கல்லூரி முதலாளிகளாக இருக்கும் ஏனைய ஒட்டுக்கட்சி பிரமுகர்களைப் போல அயூப்கானும் மதுரை எல்லீசு நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த ஒரு முதலாளி. பொறியியில் கல்லூரி முதலாளிகளின் வருமானம் இலட்சங்களில் இருக்குமென்றால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளின் வருமானம் ஆயிரங்களில் இருக்கும். கூடவே ஊராட்சி பதவி, கட்சிப் பதவி மூலம் வருமானங்கள் தனி.

நாளொரு மேனியும் வளர்ந்து வந்த கல்வித் தொழிலுக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென்று தனிச்சியம் பகுதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் அயூப்கான். அதன் பெயர் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரியாம். இருப்பினும் அயூப்கான் நினைத்த வேகத்தில் கட்டிடம் எழவில்லை. வழக்கமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னும் கோழியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை தெளித்து கட்டிடம் இடியாமல் இருப்பதற்கு கொத்தனார் ஒரு சடங்கு செய்வார். ஆனால் அயூப்கானுக்கு கோழி போதவில்லை. ஆகவே விரைவில் கட்டிடம் முடிக்கப்பட்டு தனது கல்வி வியாபரம் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்று நினைத்ததால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

கோழி என்றால் நூறு இருநூறில் முடிந்து விடும். ஆனால் கைமேல் பலன் தரும் நம்பிக்கை என்றாலும்  குழந்தைக்கு எங்கு போவது? இதனால் கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு, பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரையும் தொடர்பு கொண்டு தனது கொடூர ஆசையை தெரிவித்து எத்தனை இலட்சம் செலவானாலும் தருகிறேன் என்று பேசி முடிக்கிறார். நரபலிக்காக மொத்தம் ஆறு இலட்ச ரூபாய் ரேட் பேசுகிறார், அயூப்கான்.

ஆறு இலட்சமா என்று வாய்பிளந்த அந்த கும்பல் உடனே காரியத்தில் இறங்கியது. அன்றலர்ந்த மலர் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இராஜலட்சுமியை கடத்தி கருப்பின் வீட்டில் வைத்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின்  கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்து இரத்தத்தை தூக்கு வாளியில் பிடித்துக் கொண்டனர். சிறுமி இறந்து போகிறாள். பின்னர் உடலை வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டுவிடுகின்றனர். கருப்புவின் தந்தை மகாமுனி மட்டும் இரத்தம் அடங்கிய தூக்குவாளியை அயூப்கானை சந்தித்து கொடுக்கிறார். அல்லாவைத் தொழும் அயூப்கானும் கல்லூரிக் கட்டிடத்தை சுற்றி அந்த ரத்தத்தை தெளிக்கிறார். பின்னர் அந்த மூவர் கும்பல் அயூப்கானிடம் ஆறு இலட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறது.

இவையெல்லாம் முதலில் கைது செய்யப்பட்ட முருகேசன் மூலம் படிப்படியாக மற்றவர்கள் பிடிபட்டு போலிசிடம் தெரிவித்த தகவல்கள். அதன் பின்னரே அயூப்கான் கைது செய்யப்படுகிறார். இப்போது மகாமுனி, கருப்பு ஆகிய இருவரின் மர்ம மரணங்கள் எப்படி நடந்திருக்குமென்பதை நாம் யூகிக்கலாம்.

நரபலி

மனித குல வரலாற்றின் ஆரம்பத்தில் புராதான இனக்குழு சமூகமாக இருந்த மனிதர்கள் பின்னர் அடிமையுடமை சமூகத்தில் நுழையும் போது நரபலியும் தோன்றுகிறது. இயற்கை சீற்றங்கள், பருவ கால மாற்றங்கள், இனக்குழுச் சண்டைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத மனித சமூகம் அவற்றை நிறுத்த வேண்டி இனக்குழு கடவுளர்களுக்கு பலியிடலை செய்கிறது. ஆரம்பத்தில் விலங்குகள் பிறகு மனிதர்கள் என்று அது மாறுகிறது.

பார்ப்பனியத்தின் வரலாற்றிலும் விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் தீவிரமாக இருந்தது. கூடவே மனிதர்களை பலியிடுவதும் நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் அரவான் பலி அதற்கோர் சான்று. இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரை பரவலாகவே இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. அன்றைக்கு இயற்கைக்கு அஞ்சிய மனிதகுலம் செய்த நரபலி, இன்று இயற்கையை மனிதன் கட்டுப்படுத்தும் காலத்திலும் தொடர்வதற்கு காரணமென்ன?

இன்னும் பின்தங்கிய நிலவுடமைச் சமூகங்களாக இருக்கும் நாடுகளில் இந்த வழக்கம் நீடிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா இரண்டிலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிப்படையான ஜனநாயத்தில் தீர்த்துக் கொள்ளும் சூழலில்லாத நிலையில் அந்த இடத்தை மதமும், மூடநம்பிக்கைகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்துகின்றது.

இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. பார்ப்பனியத்தின் அடிப்படை விதிகளை விடாத பல முதலாளிகள் இந்தியாவில் உண்டு. மேலும் குறுக்கு வழியில் அதிக பணம் சேர்க்க வாய்ப்புகளை வழங்கும் இந்த மறுகாலனியாக்க சூழ்நிலையில் அந்த மூடநம்பிக்கைகள் முன்னிலும் வலுவாக பின்பற்றப்படுகின்றன. எனில் இந்த அடிமை சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பெரியார் செய்த பணிகளை இன்னும் எத்தனை வீச்சில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியார் இயக்க வழியில் வந்த ஒரு உடன்பிறப்பே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது என்பதிலிருந்து திராவிட இயக்கத்தின் தோல்வியையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி அயூப்கான் முற்றிலும் தி.மு.கவிலிருந்து நீக்கப்படவில்லை. இது பொய்க்குற்றச்சாட்டு என்று அயூப்கான் மறுத்திருப்பதால் அவர் சட்டரீதியாக விடுதலையாகும் வரை தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை, அவரை அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைப்பது என்பதுதான் தி.மு.கவின் முடிவு.

ஒன்றரையாண்டுகளாக நடந்து வரும் வழக்கு, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அயூப்கானின் பங்கையும் குற்றத்தின் முகாந்திரத்தையும் மேலோட்டமாகக்கூட உணரலாம். ஆனால் ஊரேல்லாம் சொத்தை கைப்பற்றிய தி.மு.க பிரமுகர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சொத்துக்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்று அவர்கள் ஏதாவது சடங்கு, பரிகாரங்களை கண்டிப்பாக செய்வார்கள். அதன்படி அந்த சடங்கை கொஞ்சம் வரம்பு மீறினார் என்றாலும் அயூப்கான் செய்திருப்பதை உடன்பிறப்புகள் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.

நரபலிதான் என்று முடிவான பிறகு அயூப்கான் தனது வீட்டு இளைஞர்களையோ, பெண்களையோ, குழந்தைகளையோ நினைக்கவில்லை. சொந்த பந்தங்களை பார்க்காத அந்தக் கால நரபலி இன்று அப்படி பார்த்து சம்பந்தமில்லாத நபரை அதுவும் குழந்தையை கொல்லலாம் என்று முன்னேறியிருப்பதுதான் பரிணாம வளர்ச்சி போலும். அதிலும் ஒரு தலித் சிறுமி என்றால் கேட்பார் நாதியில்லை அல்லவா?

ஊரை விட்டு விலக்கி வைக்கப்ப்ட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தம், ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் வேண்டும். ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்? இத்தகைய பிரமுகர்கள்தான் அரசியலிலும், ஊராட்சி பதவிகளிலும், பள்ளி – கல்லூரிகளை நடத்தும் தொழிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்? அந்த துணிச்சலுக்கு மத நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தானே போபால் படுகொலையில் பார்த்தோம்.

ஆரம்பத்தில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பிற்கு மாற்று என்று தோன்றிய இசுலாமும், கிறித்தவமும் கூட இறுதியில் இந்து மதத்தின் செல்வாக்கில் கரைந்து விட்டிருக்கின்றன. பார்ப்பனியத்திடம் சரணடைந்த இசுலாம் என்ற கட்டுரைக்கு இணையத்தில் இருக்கும் இசுலாமிய ‘அறிவாளிகள்’ பொங்கினார்கள். இதற்கு மதத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்ற நழுவல் வேறு. இவர்களெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக நன்னெறி மார்க்கத்தை போதித்து தமக்குத்தாமே சுய இன்பம் காணும் சுயநலவாதிகள். நேரிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனை பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே சிறுநீர் கழிக்கும் கோழைகள். கிறித்தவர்களை வம்புக்கிழுத்து பைபிள் ஒரு ஆபாச நூல் என்று சவால் விடுவார்கள். ஆனால் இந்து புராணங்கள் ஒரு ஆபாசக் குப்பை என்று ஆர்.எஸ்.எஸ் காரனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்க வக்கற்றவர்கள். அப்படி அழைத்தால் புரட்சித் தலைவியின் நெருப்பு இவர்களை சுட்டெரிக்கும் என்பதை தெரிந்தவர்கள்.

ஒருவேளை இந்து மதத்தை அம்பலப்படுத்தி நாம் அப்படி எழுதினாலும் இது மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என்று ஓடிவருவார்கள். இறுதியில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அயூப்கான் அதுவும் போறாது என்று ஒரு நரபலி செய்திருக்கிறாரே இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் சவுதி ஷேக்குகள் உலக இசுலாத்தின் காவலர்கள் என்றால் பார்ப்பனியத்தின் நரபலியை பின்பற்றும் அயூப்கான்கள் போன்றோர்தான் உள்ளூர் இசுலாத்தின் பாதுகாவலர்கள். அமெரிக்காவிடமும், இந்து மதவெறியிடமும் சிக்கிக் கொண்டு துன்பப்படும் இசுலாமிய மக்கள் இந்தக் காவலர்களிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது.

இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை. அவளைக் கொன்ற கொடியவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஊரறியக் கொன்ற ரன்வீர் சேனா கொலையாளிகளையே விடுவித்த நாடில்லையா? ஆனால் இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும். இராஜலெட்சுமி சிந்திய இரத்தத்தை அப்படியாவது வீணாகாமல் காட்டுங்கள். பார்க்கலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

47
ரன்வீர்-சேனா-பிரம்மேஷ்வர்-சிங்
பிரம்மேஷ்வர் சிங்

இந்த ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் இது முக்கியமானது. ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.  அந்த அடையாளம் தெரியாத தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

இந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான ஆதிக்க சாதிகள்தான் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை –  ஆதிக்கத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை கொடுரமாக அடக்கி கொடுமைப்படுத்துகின்றனர். கால் வயிற்றுக் கஞ்சிக்காக எல்லா வகை உரிமைகளையும் இழந்து நடைப் பிணங்களாக இம்மக்கள் வாழும் துயரம் அளவிடற்கரியது.

இந்த சூழலில்தான் 1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க வீரத்துடன் களமிறங்கியது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் ( இந்தக் குழு பிற்பாடு பாராளுமன்றவாதத்தில் பங்கேற்று சீரழிந்து போனது) போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி வன்முறையை ஏவிவிடும் நிலப்பிரபுக்களுக்கு தக்க பாடத்தை புகட்டத் துவங்கினர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களை கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களை பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் வன்மத்துடன் பொறுமிக் கொண்டிருந்தனர்.

90களில் ஆதிக்க சாதி பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த குண்டர் படைகள் அவற்றில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது.  இப்படித்தான் பூமிகார் உள்ளிட்ட ஆதிக்கசாதி பண்ணையார்களின் ரவுடிப்படையாக ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த குண்டர் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த பதனி டோலா படுகொலையில் 21 தலித் மக்களை கொன்றனர். அதில் 11 பெண்களும், ஆறு குழந்தைகளும் அடக்கம். பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம்? குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்களாம், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்களாம் என்று ரன்வீர் சேனா பகிரங்கமாகவே அறிவித்தது.

தமிழகத்தின் கீழ்வெண்மணி படுகொலையை ஒத்த இந்த பதனி டோலா படுகொலை குற்றவாளிகள் கீழ் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டாலும் பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் அவர்களை விடுவித்தது. படுகொலையை நேரடியாக பார்த்த சாட்சியங்களை கூட ஆதிக்க சாதி வெறிக்கு அடிபணிந்து நடக்கும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

1997 டிசம்பர் லக்ஷமன்பூர் படுகொலையில் 61 தலித் மக்கள் ரன்வீர் சேனாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 16 குழந்தைகளும், 27 பெண்களும், 18 ஆண்களும் அடக்கம். இந்த படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரம்மேஷவர் சிங் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் உண்டு. இருப்பினும் பலவற்றில் சாட்சியங்கள் இல்லை என்று இந்த கொலைகார நாய் விடுவிக்கப்பட்டிருக்கிறான். மேற்கண்ட வழக்கில் பிணையிலும் வெளிவந்திருக்கிறான்.

இந்தப் படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா குண்டர் தலைவர்களை நக்சலைட்டுகள் கொன்ற போதும், ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களை தாக்கிய போதும் ரன்வீர் சேனா தலைவன், லஷ்மன் பூர் படுகொலையை விட கொடூரமான படுகொலை நடக்கும் என்று பகிரங்கமாகவே மிரட்டியிருக்கிறான். பல ஊடகங்களிலும் அந்த செய்தி வந்துள்ளது. எனினும் இந்த நாய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை

பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோவாக உலா வந்த லாலுவும் சரி, தற்போது ‘நேர்மையான’ ஆட்சியை நடத்தும் நிதீஷ் குமாரும் சரி இந்த் ஆதிக்க சாதி வெறியர்களுக்குத்தான் ஆதரவாக இருந்திருக்கின்றனர். ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார்.  ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.

இது போக ஓட்டுப்பொறுக்கும் தலித் கட்சிகளும் கூட ஆதிக்கசாதி குண்டர்களை ஆதரிக்கும் இத்தகைய கட்சிகளோடு கூடிக் குலாவியபடிதான் தலித் மக்களுக்கு துரோகமிழைத்தன. காங்கிரசு, பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை இவர்கள் நேரடியாகவே ரன்வீர் சேனாவின் பாதுகாவலர்களாக இருந்தனர். தற்போது கூட கொலைகார நாய் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டதற்கு பாரதிய ஜனதா கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறது. அதன் மாநில தலைவர் சி.பிதாகூர் இந்த கொலைகார நாயை மாபெரும் விவசாயிகள் தலைவன் என்று போற்றியதோடு இறுதி ஊர்வலத்திற்கே சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பார்ப்பன இந்து மதம் பஞ்சமர்கள் என்று சொல்லி தலித் மக்களை ஒடுக்கியது போல பாரதீய ஜனதா அதே ஒடுக்குமுறையை ரன்வீர் சேனாவைக் கொண்டு நடத்துகிறது.

எல்லா ஒட்டுக் கட்சி தலைவர்களும் ரன்வீர் சேனா தலைவன் கொன்ற வழக்கை சி.பி.ஐ விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றன. இவை தவிர அதிகார வர்க்கம், போலீசு, நீதிமன்றம் அனைத்தும் ஆதிக்க சாதிவெறியின் செல்வாக்கில்தான் இருக்கின்றன என்பதால் இந்த கொலைகார படை இதுவரை எந்த அரசு அமைப்பாலும் தண்டிக்கப்படவில்லை. ஒரு கொலைகாரனுக்கு கூட தூக்கு வாங்கித் தர முடியவில்லை.

ஆக ரன்வீர் சேனாவை அரசுகள் தடை செய்திருப்பினும் சமூக, சிவில், கட்சி அமைப்புகளால் அது அரவணைக்கப்பட்டதோடு எப்போதும் போலவே இயங்கி வந்தது. ஒவ்வொரு கொலையையும் தான்தான் செய்தோம் என பகிரங்கமாகவே ரன்வீர் சேனா அறிவித்து வந்தது. படுகொலை நடந்த கிராமங்களின் கிணறுகளில் இரத்தத்தால் ரன்வீர் சேனாவின் கொலைச்செய்தியை பொறித்து விட்டே சென்றிருக்கின்றனர். இந்த கொலைகார படை அஞ்சியது நக்சலைட் இயக்கத்தினை பார்த்து மட்டும்தான்.

ஆக இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் இன்னல்களை இங்கிருக்கும் அரசு – கட்சி அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதோடு, அவற்றை செய்யும் ஆதிக்க சாதிவெறிக்கு துணை போனதுதான் வரலாறும், யதார்த்தமும். இரத்தக் கறை படிந்த இந்த வரலாற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது நக்சல் இயக்கம்தான்.

ஆகவே அடையாளம் தெரியாத அந்த ஆறு தோழர்கள் இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்றதை நாம் மனமார பாராட்டுகிறோம். தலித் மக்களுக்கு தலித் அமைப்புகள் உள்ளிட்டு எந்த கட்சிகளும் பிரதிநிதிகள் இல்லை. நக்சல் இயக்கம் மட்டும்தான் அவர்களுடைய உண்மையான பிரதிநிதிகள் என்பதை பீகாரின் இரத்தக்கறை படிந்த வரலாறு காட்டுகிறது. பதனி டோலோ படுகொலை வழக்கின் குற்றவாளிகள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட காலத்தில், ரன்வீர் சேனாவின் எல்லா படுகொலைகளுக்கும் தலைமை தாங்கிய பிரம்மேஷ்வர் சிங் குற்றவாளி இல்லை என விடுதலை செய்யப்பட்ட இதே காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பெருமூச்சாக இந்த கொலை நடந்திருக்கிறது.

தலைவனுக்கு நேர்ந்த கதி அனைத்து குண்டர்களுக்கும் நேரும் வரை நக்சல் இயக்கமும் ஓயப் போவதில்லை.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தோழர் ஏகலைவன் (எ) மகாலிங்கம் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

10
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்

வேலூர் மாவட்டம். திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏகலைவன் (எ) ‘டெய்லர்’ மகாலிங்கம்  அவர்கள் 28.05.2012 அன்று காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் தனது 65 வது வயதில் அகால மரணமடைந்தார்.

திருப்பத்தூர் – கந்திலி ஒன்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பங்கேற்புடன் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகு 29.05.2012 அன்று தோழரின் உடல் அவரது சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

1980 களில் தோழர் ‘இருட்டுப் பச்சை’ அவர்களின் காலத்திலிருந்தே நக்சல்பாரி புரட்சிகர அரசியலோடு தொடர்பு கொண்டு பிறகு 1980 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் ஏகலைவன். அன்று முதல் திருப்பத்தூர் பகுதியில் ம.க.இ.க வின் முகவரியாகவும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் முகவராகவும் விளங்கியவர்.

இவர் ஒரு சிறந்த தையற் கலைஞர். அதனால் வங்கி – தொலைத் தொடர்பு – மருத்துவ மனை – நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  என பலரும் இவரிடம்தான் தங்களது ஆடைகளை தைத்துச் செல்வார்கள். இவர்களிடம் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளையும் அமைப்பின் பிரசுரங்களையும் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தார். இதன் மூலமாக திருபத்தூரில் ம.க.இ.க பிரபலமடைவதற்கு ஆதாரமாகத் திகழ்ந்தவர்.

இவர் ஒரு சிறந்த ஓவியக் கலைஞரும் கூட. தொடக்க காலத்தில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் விளம்பரங்களையும் ம.க.இ.க வின் போராட்டச் செயத்திகளையும் சுவரெழுத்துகளாகவும் சுவரொட்டிகளாகவும் தன்னந்தனியாகவே மக்களிடையே எடுத்துச் சென்றவர். இவரது சுவரெழுத்துக்கள் பிறரை பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். கோடுகள் போடாமலேயே மிகப் பெரிய சுவரெழுத்துக்களை எழுதும் வல்லமை பெற்றவர். கந்திலி – திருப்பத்தூர் ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தவைகளே.

திருப்பத்தூரில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ததோடு அக்கூட்டங்களில் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி உள்ளார். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து மக்களிடையே ‘நக்சலைட்’ பீதியூட்டி வந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு தோழரின் துணிச்சலான செயல்பாடு மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

ஒரு துணிச்சலான தோழராக விளங்கிய அதே நேரத்தில் கடின உழைப்பாளியாகவும் விளங்கியவர். மிதிவண்டிதான் அவரது 65 வது வயது வரை இவரது உற்ற நண்பன். சுவரெழுத்து எழுதுவதாக இருந்தாலும், சுவரொட்டி ஒட்டுவதாக இருந்தாலும் அல்லது தனது தையற்கடைக்கு வருவதாக இருந்தாலும் தனது கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு சளைக்காமல் மிதி வண்டியிலேயே பயணித்தவர். மரணத்தின் போதுகூட மிதிவண்டியோடுதான் மரணத்திருக்கிறார்.

சீனக் கதைகளில் வரும் ‘மலையைக் குடைந்த மூடக்கிழவனை’ப் போல தனது வீட்டருகே இருக்கும் ஏரிவாய்க்காலின் குறுக்கே ஒரு சிறு அணை போன்ற தடுப்பை தன்னந்தனியாய் அமைத்தவர். இவரது கடின உமைப்பை பறைசாற்றும் சான்றாய் ஊர் மக்களால் இது பேசப்படுகிறது.

அமைப்பு வேலைகளை முழுநேரமாக எடுத்துச் செயல்படும் தோழர்களைப் பராமரிப்பதிலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டியவர் தோழர் ஏகலைவன். அத்தகைய தோழர்களின் உணவு – உடை மற்றும் தோழர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான உடை-நோட்டுப் புத்தகங்களை தானே முன் வந்து பூர்த்தி செய்வார். இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய கையில் உள்ள பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கியாவது ஈடு செய்வார். கழிவிரக்கம் கொண்டு அவர் இவ்வாறு செய்வதில்லை. மாறாக புரட்சியின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவே இவ்வாறு செய்த வந்தார்.

தனது குடும்ப உறுப்பினர்களை புரட்சிகர வேலைகளுக்கு ஆதரவாக மாற்றியமைத்தவர். சிறந்த தெருக்கூத்துக் கலைஞரான அவரது தந்தை நாராயணன் அவர்களையும் தெருக்கூத்துகளில் புரட்சிகரப் பாடல்களை எழுதிப் பாடும் அளவிற்கு மாற்றியமைத்தவர். அவரது வீடு திருப்பத்தூர் வட்டாரத் தோழர்களின் பாசறையாகவே விளங்கியது எனலாம்.

பிறர் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். அனைத்து தரப்பு மக்களிடமும் வயது வரம்பு பார்க்காமல், சாதி – மதம் பார்க்காமல் மிகவும் இயல்பாகப் பழகியவர். இவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டமே இதற்கு சாட்சியாய் அமைந்தது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் கோலோச்சும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்குள் இன்றைக்குக்கூட செல்ல முடியாது. ஆனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒடுக்கப்பட்ட சாதியினர் தனது வீட்டிற்கு வருவதும், உறவினர்கள் போல அவர்கள் உறவு முறை சொல்லி பழகுவதையும் நடைமுறைப் படுத்தியதோடு தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் அதை ஜனநாயகப் படுத்தியவர்.

கடந்த சில ஆண்டுகளாக முன்பு போல நடைமுறை அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது புரட்சிகர உணர்வு சிறிதும் குன்றவில்லை. இறுதி அடக்கத்தின் போது செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை அவரது பிள்ளைகள் புறக்கணித்ததை பார்த்த போது அவரது புரட்சிகர உணர்வின் மீது பிள்ளைகள் கொண்டிருந்த மதிப்பை உணர முடிந்தது.

தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள பலர் முயலும் போது பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த போதும் இவர் மட்டும் தனது வாழ்க்கையை புரட்சிகர அரசியலோடு பிணைத்துக் கொண்டதற்குக் காரணம் சமூக விடுதலையின் மீது இவர் கொண்டிருந்த வேட்கையே. அவரது வேட்கையை நாமும் நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டதை முன்னெடுத்துச் செல்வோம்!!

தோழர் ஏகலைவன் அவர்களுக்கு வீரவணக்கம்!

 __________________________________________________________________________

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருப்பத்தூர்-கந்திலி ஒன்றியங்கள்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்

ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?

74

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 15

”ஜிகாத் என்றால் புனிதப் போர். இந்த ஜிகாத் ‘தாரூல் ஹாப்’ நாடுகளின் மீது அங்கு உள்ள முசுலீம்களால் வெளிநாட்டு (தாருல் இஸ்லாம் நாடுகளின்) முசுலீம்களின் உதவியால் நடத்தப்படும். இசுலாத்தை நம்பாதவர்களைக் கொன்று குவித்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து, பெண்களை அபகரித்து, கோயில்களைத் தரைமட்டமாக்கி (கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு இசுலாத்திற்கு போக வேண்டும். அபகரிக்கப்பட்ட பெண்கள் உட்பட) அந்த நாட்டை முசுலீம் நாடாக மாற்ற நடத்தப்படும் புனிதப் போருக்குப் பெயர் ஜிகாத் – ஜிகாத்தில் ஈடுபட வேண்டியது ஒவ்வொரு முசுலீமின் கடமை.”

மதமாற்றத் தடை சட்டம் ஏன்?

இந்து முன்னணி வெளியீடுபக்: 26, 27.

ஒவ்வொரு முசுலீமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முசுலீம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.

குர்-ஆன் மற்றும் இலக்கியங்களில் ஜகாத், ஜிகாத் என இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன. ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச் செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.

அடுத்து, உலகிலுள்ள எல்லா அரசர்களும், அரசுகளும் தாம் வென்ற நாடுகளில் கிடைத்த செல்வத்தை தம் வீரர்களிடையே பங்கிட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இசுலாமிய மன்னர்களிடையேயும் இருந்தது. அதிலும் ஐந்தில் ஒரு பங்கு அரசின் சமூகச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல.

நபிகளுக்குப்பிறகு விரிவடைந்த இசுலாமியப் பேரரசு பல ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தினாலும் அதற்கு காரணம் மதமோ, ‘ஜிகாத்தோ’ அல்ல. ஏனைய அரசுகள் தத்தமது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்குவதற்காக நடத்திய படையெடுப்புக்களைத்தான் இசுலாமிய அரசர்களும் நடத்தினர். மற்றபடி மாற்று மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.

அதன்பின் பல இசுலாமிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது போர்களுக்கு ‘ஜிகாத்’ என்ற மதச்சாயம் பூசியே மக்களை அணி திரட்டின. இந்த நூற்றாண்டிலும்  இதைப்பார்க்க முடியும். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த ஈரான், ரசிய ஆதிக்கத்தை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் முஜாகிதீன்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த காலனிய நாடுகளின் முசுலீம்கள் அனைவரும் தங்களது போரை ‘ஜிகாத்’ என்றே அழைத்தனர். மத விளக்கப்படி அவை ‘ஜிகாத்தா’ இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் போர்களின் சாரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைப்போர் என்பதே முக்கியம்.

இதுவன்றி அமெரிக்காவை எதிர்க்கும் பின்லேடன் – தாலிபான் மற்றும் அல் – உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளும் தங்களது நடவடிக்கைகளை ஜிகாத் என்கின்றனர். ஆனால், இந்த விளக்கத்தை பெரும்பான்மை முசுலீம்களும், மிதவாதிகளும் எதிர்க்கின்றனர். இப்படி ‘ஜிகாத்துக்கு’ வேறுபட்ட  பல விளக்கங்கள் இருப்பினும், இந்துமத வெறியர்கள் கூறும் அவதூறு விளக்கம் வரலாற்று ரீதியாகவே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்துக் கோவில்களுக்கும் – பார்ப்பனர்களுக்கும் இனாம், மானியம் வழங்கியும், வேதம் – கீதை – பாரதம் போன்றவற்றை பாரசீகத்தில் மொழிபெயர்த்தும் பல மொகலாய மன்னர்கள் செய்திருக்கின்றனர். இதனாலேயே இவர்கள் யாரும் மதநீக்கம் செய்யப்படவில்லை. இப்படி ஏனைய சமூகங்களுடன் உறவு கொண்டு புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாரசீக – அராபிய அறிஞர்களிடம் வியப்பூட்டும் வகையில் இருந்தது. அதனால்தான் மத்திய காலத்தின் அறிவியல், மருத்துவ, கலைத்துறைச் சாதனைகளும், சிகரங்களும் இவ்வறிஞர்களிடமிருந்து தோன்றின.

ஆனால், மதத்தில் இல்லாத விளக்கத்தை ஜிகாத்துக்குள் புகுத்தி, மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடி அவர்களை அடக்கி ஒடுக்கவே அரபு ஷேக்குகள் முயல்கின்றனர். அதனாலேயே பல்வேறு இசுலாமியக் குழுக்களுக்குப் பொருளுதவி செய்து ‘ஜிகாத்தை’ ஆதரிக்கும் புனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இன்னொரு புறம் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் கைக்கூலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, இசுலாமிய ஆளும் வர்க்கங்களிடம் இருக்கும் ‘ஜிகாத்’ இசுலாமிய மக்களிடமும், மதத்திடமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்த ஓரிரு கலவரங்களும் பாபர் மசூதியை இந்துமத வெறியர்கள் இடித்ததன் எதிர் விளைவாகத்தான் நடந்தன. முசுலீம்கள் சிறுபான்மையாக உள்ள இந்தியா, இலங்கை போன்ற எந்த ஒரு நாட்டிலும் யாரும் ஜிகாத் நடத்தவில்லை.

பங்களாதேசம் சென்று வந்த காஞ்சி சங்கராச்சாரி அங்கே ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், தான் சென்றுவந்த ஒரு காளி கோயிலைப் புதுப்பிக்க அரசே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஜுனியர் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அங்கே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதாகவோ, இந்துக்கள் கொல்லப்படுவதாகவோ இருந்தால் அதை வெளியிடுவதில் சங்கராச்சாரிக்குத் தயக்கமோ தடையோ இருக்க முடியாது.

ஆனால், இந்துமதவெறியர்கள் வாழும் இங்கேதான் 1947 பிரிவினைக்கு முன்னும், பின்னும் இன்று வரையிலும் கலவரங்கள், மசூதி இடிப்பு, கொலை, சர்ச் மீது தாக்குதல், கன்னியாஸ்திரி கற்பழிப்பு, பாதிரி எரிப்பு போன்றவைகள் நாள் தவறாமல் நடக்கின்றன. இதன் எதிர் விளைவாகவே இசுலாமியத் தீவிரவாதம் தோன்றியது. எனவே இந்துமதவெறியர்கள் கூறுவது போன்ற (ஜிகாத்) புனிதப் போரில் முசுலீம்கள் ஈடுபடவில்லை. மாறாக பார்ப்பன – மேல் சாதியினரும், அவர்களின் பிரதிநிதிகளான இந்துமத வெறியருமே ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராத மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரின் மீதும் அன்று முதல் இன்று வரை இந்த ‘தரும யுத்தம்’ தொடர்கிறது. ஜிகாத் என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும். ஆனால், பார்ப்பனீயத்தின் இந்த தர்ம யுத்தத்திற்கு வேறு விளக்கமே கிடையாது. பார்ப்பன இலக்கியங்களும், நேற்றைய – இன்றைய வரலாறும் அதன் சாட்சியங்களாக இருக்கின்றன.

சாமி கும்பிடாவிட்டாலும், விரதமிருக்காவிட்டாலும் உயர்சாதி இந்துக்கள் இந்த தருமயுத்தக் கடமையிலிருந்து தவறுவதில்லை. இப்படி அடுத்தவனைத் துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவர்கள் குற்ற உணர்வு ஏதும் அடைவதில்லை. ”குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும் அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில் முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே பொருந்தும்.

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: