Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 742

சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!

6

செய்தி -95

டந்த புதன்கிழமை (05/09/2012) பிற்பகலில் சிவகாசியை அடுத்த முதலிபட்டி ஓம்சக்தி புளூ மெட்டல்ஸ் எனும் வெடி பொருட்கள் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஈரத்துடன் காட்சியளித்தன. விசாரித்துப் பார்த்ததில் முதலிபட்டிக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆட்டோ, வேன் போன்றவையும் கூட செல்லாது என்றும் கூறினார்கள். வேறு வழியின்றி டூவீலர்களுக்கு ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

முதலிபட்டிக்கு சென்றதும் யாரும் தொழிற்கூடம் இருந்த பகுதிக்குச் சென்றுவிட முடியாதபடி காவல் படைகளின் அரண் தான் எம்மை எதிர்கொண்டது. முன்பக்கப் பாதை, பின்பக்கப் பாதை, சுற்றுவழி, ஒத்தையடிப் பாதை, முள்வேலி என அனைத்து வழிகளில் உள்ளே செல்ல முயற்சித்தும் அத்தனையிலும் லத்திக்கம்புகள் விரட்டின. கேரளாவின் கைரளி தொலைக்காட்சியும், புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஏதேதோ பேப்பர்களைக்காட்டி உள்ளே நுழைந்தன. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் சிபிஎம் தலைவர் எச்சூரியும் (மதுரையில் எஸ்.எஃப்ஃ.ஐ மாநாடாம், அப்படியே துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்) அவர் பின்னே ஒரு கூட்டமும் வந்தது. பின்னர் காவல்படை அரண்களும் விலக்கப்பட்டுவிட உள்ளே நுழைந்தோம்.

வெடித்துச் சிதறி சிதிலமைடைந்த அறைகள், தீப்பிடித்து கரிந்து போன சுவர்கள், முறிந்து போன மரம் என காணக் கிடைத்தவை நடந்த கோரத்தின் மௌன சாட்சிகளாய் எஞ்சியிருந்தன. ஆனால் சிதறிய பட்டாசுகளின் மிச்சங்கள் கூட்டிப் பெருக்கி ஓரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா இடமும் சுத்தமாய் காட்சியளித்தது. தெளிவாய்ச் சொன்னால் கட்டிட இடிபாடுகளைக் கழித்து விட்டால் சில மணி நேரங்களுக்கு முன்னர் கோரமான வெடி விபத்து நிகழ்ந்த இடம் என்று கூறமுடியாதபடி இருந்தது. அதாவது, இப்படி ஒரு விபத்து நேர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த இடத்தைப் பார்வையிட்டால் எப்படி இருக்குமே அப்படி ஒரே இரவில் மாற்றப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் இது ஏன் என்ற கேள்விதான் மனதில் தொக்கி நின்றது. மெல்ல அங்கு கூடியிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

சிவகாசி-வெடி-விபத்து-நேரடி-ரிப்போர்ட்

ஒரு முதியவர் கூறினார், இரவோடு இரவாக புல்டோசர்களும், ஜேசிபி எந்திரங்களும் வந்து சென்றன என்று. அந்தக் கோரம் நடந்து ஓரிரு மணி நேரத்திற்குள் அந்தப் பகுதியை காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. காலை வரை யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் கனரக வாகனங்கள் வந்து சென்றிருக்கின்றன. காலையில் உள்ளே சென்று பார்த்தால் எல்லா இடமும் சுத்தமாக இருக்கிறது. என்றால் இதன் பொருள் என்ன? முதல் நாள் இரவில் ஜி டிவி செய்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 வரை என்று கூறினார்கள். ஆனால் காலையில் அனைத்து நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும் 38 என்று முடித்து விட்டன. ஆகவே, இது தெளிவாக இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் வேலைதான்.

சிறிதும் பெரிதுமாக சிவகாசி பகுதியில் இது போன்ற பட்டாசு ஆலைகள் 900க்கும் அதிகமாக இயங்கி வருகின்றன. முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக 200 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள். இத்தனைக்கும் சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு எட்டு பெண்களுக்கு எட்டு என பதினாறு படுக்கைகள் கொண்ட தீக்காய சிகிச்சைப் பிரிவு மட்டும் தான். ஆபத்து காலங்களுக்கு சிவகாசியிலிருந்தோ சாத்தூரிலிருந்தோ தான் தீயணைப்பு வண்டிகள் வர வேண்டும். சாலைகளோ படு மோசம். 15 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படவே இல்லை என்கிறார்கள் பகுதி மக்கள். சரியாக பகல் 12.15 மணிக்கு முதலில் வெடித்திருக்கிறது. ஆனால் தீயணைப்பு வண்டிகளோ, ஆம்புலன்ஸ்களோ வந்து சேர ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியிருக்கிறது. ஆளும், அதிகார வர்க்கங்கள் எந்த அளவுக்கு மக்கள் மீது அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பதம்.

இங்குள்ள எந்த பட்டாசு ஆலையும் விதிமுறைகளுக்கு மயிரளவுக்கும் மதிப்பளிக்கவில்லை. ஓம்சக்தி ஆலை உட்பட எந்த ஆலையிலும் சிறிய அளவில் விபத்து நடந்தால் கூட அதை எதிர்கொள்வதற்கு முதலுதவியோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வேலை செய்பவர்களுக்கு முறையான பயிற்சியோ, தொழில்நுட்பங்களோ கற்றுக் கொடுக்கப்படவில்லை. முதலிப்பெட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் கூறுகிறார், இங்குள்ள யாருக்கும் எந்தவித பயிற்சியும் தரப்பட்டதில்லை என்று. மட்டுமல்லாது ஆபத்தான ஃபேன்ஸி ரக வெடிகளை தயாரிக்கும் அவருக்கு அதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பெயரோ, அது என்ன விதமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்தும் என்பதோ, விபரீதம் நேர்ந்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதோ தெரியவில்லை. சிவப்பு மருந்து, பச்சை மருந்து, நீல மருந்து என்று அவற்றின் நிறங்களே பெயராக தெரிகிறது. அவருக்கு மட்டுமல்ல அந்தப்பகுதியில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளிகளுக்கு தெரியாது என அடித்துக் கூறுகிறார்.

சிவகாசி மருத்துவமனையில் கையில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் காளியம்மாளிடம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெடிவிபத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த போதிய அனுபவமற்ற தொழிலாளர் ஒருவர் வெடிமருந்தை கிட்டிக்கும் போது (வெடியின் குழாய்களில் வெடிமருந்துக் கலவையை திணிப்பது) அதிக அழுத்தம் கொடுத்ததால் வெடித்தது என்கிறார். அனுபவமற்ற, புதிய, பயிற்சியற்ற தொழிலாளரைக் கொண்டு படு ஆபத்தான வேலையைச் செய்வித்த அந்த முதலாளியின் லாப வெறியை என்னவென்று அழைப்பது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, நாங்கள் முப்பத்தாறு பேர் இந்த ஆலையில் வேலை செய்தோம் ஒருவர் இறந்து விட்டார் என்கிறார். எப்படி நேர்ந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது, நான் வெளியில் சென்றுவிட்டேன் என்கிறார். இன்னொருவரைக் கேட்டாலும் அதே பதில். ஏனையவர்கள் எங்கே என்றால் கூற மறுக்கிறார். எதையும் கூறக் கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களில் ஓம்சக்தியில் வேலை பார்த்தவர்களைவிட முதல் வெடித்தலுக்குப் பிறகு அக்கம் பக்கத்திலிருந்து காப்பாற்றச் சென்றவர்களும், வேடிக்கை பார்க்கச் சென்றவர்களுமே அதிகம். சரியாக 12.15க்கு முதல் வெடி வெடித்திருக்கிறது. இதில் அதிக சேதம் ஏற்படவில்லை. வேலை செய்தவர்கள் காயங்களுடன் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அருகிலிருந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் உதவிக்கு வந்து பெரும்பாலானோரை தூக்கிவந்து வெளியில் கிடத்தியிருக்கிறார்கள். அதற்கு சரியாக அரை மணி நேரம் கழித்து மணி மருந்து என்று சொல்லப்படும் கடுகைப் போல் உருட்டிய வெடிமருந்துக் கலவை சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து அறை மிக மோசமாக வெடித்துச் சிதறி இருக்கிறது. இது தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் வெடிப்பு நிகழ்ந்த பிறகு, உதவி செய்யவும் வேடிக்கை பார்க்கவும் வந்த அநேகர் இரண்டாவது வெடிப்பில் சிக்கிக் கொண்டனர்.

இதில் தன் தம்பியை பறிகொடுத்த குமார் என்பவர் புதுத் தகவல் ஒன்றைக் கூறினார், காலை பத்து மணிக்கு சிறிய அளவில் வெடித்ததாகவும், அதை அணைத்து தார்ப்பாயில் சுற்றி தனியாக ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை தொடருமாறு நிர்வாகத் தரப்பில் வற்புறுத்தியதாகவும், அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கு காரணமாகி விட்டது, முதலிலேயே வேலை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியேற்றி இருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இந்தத் தகவலை அங்கு வேலை செய்த யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த கோரத்துக்கு காரணமான விசயம் என்னவென்றால் மணி மருந்தை சிறிய அளவிலல்லாது சேமித்து வைக்கவே கூடாது. ஆனால் வேறொரு ஆலைக்கு வேண்டி மிக அதிக அளவில் மணி மருந்தை இரண்டு நாட்களாக சேமித்து வைத்திருந்திருக்கிறது நிர்வாகம். இது தான் இரண்டாவது வெடிப்புக்கு முக்கியமான காரணம். மணிமருந்தை சேமித்துவைப்பது ஆபத்து என்று தெரிந்திருந்த போதிலும் இரண்டு நாட்களாக சேமித்து வைக்கத் தூண்டியது எது? அந்த லாப வெறி அல்லவா இந்த விபத்துக்கும் இத்தனை மரணங்களுக்கும் காரணம்?

முதல் வெடிப்பு நிகழ்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது கிரசஷர் எனப்படும் கன்வேயர் பெல்ட் போன்ற ஒன்றின் மீது ஏறி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இரண்டாவது வெடிப்பின் போது சடுதியில் புகை சூழ்ந்து கொண்டதால் எந்தப் பக்கம் இறங்குவது என்று தெரியாமல் கிரஷருக்குள்ளேயே விழுந்திருக்கிறார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். மட்டுமல்லாது உள்ளே நின்றிருந்த நான்கு பேருந்துகளை வெளியில் எடுத்துவரும் போது அதில் சிக்கியும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

எப்படி இருந்த போதிலும் 38 என்பது மிகக் குறைந்த எண்ணிக்கை. நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகளில் மதுரையிலும் சாத்தூரிலும் தலா 13 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிவகாசியில் 18 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 44 என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையில் அது எப்படி 38 ஆனது என்பது முதலாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஓம்சக்தியில் அதிகாரபூர்வமாக தற்காலிக வேலை செய்பவர்கள் (நிரந்தரத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இல்லை) 260 வரை இருக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லா ஆலைகளிலும் ‘எக்ஸ்ட்ரா ஆட்கள்’ தான் உற்பத்தியில் பெரும்பகுதியைச் செய்வது. இவர்கள் வேலை செய்ததற்காக எந்தப் பதிவும் இருக்காது.

250 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டமிருக்கிறது, பயிற்சித் தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டமிருக்கிறது. ஆனால் இந்த சட்டங்களெல்லாம் முதலாளியின் கழிப்பறைக் காகிதமாகத்தானே இருக்கிறது. அதன்படி எக்ஸ்ட்ரா ஆட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மொத்தம் 400 பேர்வரை வேலையில் இருந்திருக்கிறார்கள். வெடிப்பு நடந்து ஒன்றரை மணி நேரம் வரை எந்த உதவியும் அரசிடமிருந்து வரவில்லை. வந்த பின்னரும் கூட மிக மோசமான சாலைகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் இறப்பு எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என்று கூறுவதை மிகைப்படுத்தப்பட்டது என்று கொண்டாலும், நூற்றுக்கு குறையாமல் இருக்கும் என்பதை களத்தை ஆய்வு செய்யும் போது அறிய முடிகிறது. ஆனாலும் இது துல்லியமான எண்ணிக்கை அல்ல.

எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று உறுதியாக தெரியாதவரை இறப்புக் கணக்கை துல்லியமாக கூற முடியாது. மேற்கு வங்கத்திலிருந்து முதலிபட்டி வரை பல இடங்களிலிருந்தும் வந்து எக்ஸ்ட்ராவாக வேலை பார்த்தவர்கள் இருக்கும் போது உண்மை கணக்கு தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அல்லது தெரியாமலும் போகலாம்.  அதேநேரம் ஊடக வலைப்பின்னல் கொண்டிருக்கும் எந்த செய்தி நிறுவனங்களும் இதை கணக்கெடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அரசு சொன்ன 38 போதுமானதாக இருக்கிறது.

இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை விட ஏன் இறந்தார்கள் என்பதே முதன்மையானது. சற்றேரக்குறைய 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இந்த வெடிமருந்து ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப்பகுதியில் வேலை செய்யும் அனைவரும் இந்த வேலையைத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் சிறிதும் பெரிதுமாய் விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆபத்தான இரசாயனப் பொருட்களை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, எந்தவித தொழில்நுட்ப பயிற்சியும் இன்றி வெறுங்கைகளுடன் குழைத்து திரித்து உருட்டி கிட்டித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தான இந்த தொழிலை விட்டு வேறு வேலைகளுக்கு ஏன் அவர்கள் செல்லக் கூடாது?

சிவகாசி-வெடி-விபத்து-நேரடி-ரிப்போர்ட்

இதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் கேட்கலாம். இவ்வளவு கோரமான விபத்து நடந்து இத்தனைபேர் இறந்திருக்கிறார்கள் ஆனாலும் இந்தப்பகுதி மக்களிடம் உறவினர்கள், நண்பர்கள் இறந்துபோன சோகம் இருக்கிறது ஆனால் இவ்வளவு கோரமான இந்த விபத்து குறித்து எந்த வித அதிர்ச்சியும் அவர்களிடம் இல்லை. இது ஏன்? இதற்கு செல்லையநாயக்கன்பட்டி ஆறுமுகம் பதில் கூறுகிறார், “இன்று எல்லை ஆலைகளுக்கும் லீவு விட்டு விட்டார்கள் அதனால் எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். வேலை வைத்திருந்தால் இன்றும் வேலைக்கு சென்றிருப்பார்கள். ஏனென்றால் இதை விட்டால் நாங்கள் வாழ்வதற்கு வேறு வழியில்லை” மாற்று வேலை வாய்ப்புகளே இல்லாமல் இந்த மக்களை வெடிமருந்தோடு மருந்தாய் கிட்டிக்கச் செய்திருப்பது யார் பொறுப்பு?

திருடனையும் திருட்டுக் கொடுத்தவனையும் ஒரே தட்டில் வைத்து இருவர் மீது தவறு இருக்கிறது என்று கூறுவது போல், ஜாக்கிரதையாக இல்லாதது தொழிலாளர்கள் தவறுதான் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எட்டு மணி நேரம் வேலை, மாதச் சம்பளம் என்று இருந்தால் அவர்கள் செய்யும் வேலையின் ஆபத்தை உணர்ந்து நிதானமாய் செய்திருக்க மாட்டார்களா? ஆனால் பீஸ் ரேட் போட்டு ஒரு யூனிட்டுக்கு (ஆயிரம் வெடிகள்) ஆறு ரூபாய் சம்பளம் என்று அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதால் தானே, தங்கள் வயிற்றுக்காக உயிரையே துச்சமென மதிக்கிறார்கள். பீஸ் ரேட் போட்டு கொள்ளையடிப்பதற்கு அனுமதித்த இந்த அரசை யார் தண்டிப்பது?

இராமலிங்காபுரம் இன்னாசி வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டார். “மற்ற எல்லா வேலையிலும் கங்காணியோ சூபர்வைசரோ பின்னால் நின்று கொண்டு வேலை செய் வேலை செய் என்று தார்க்குச்சி போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் மட்டும், கங்காணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதேநேரம் ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் வேலை நடக்கும்”.  பீஸ் ரேட் என்ற ஒன்றைக் கொண்டு வந்து அவர்களை அவர்களே எந்திரமாய் மாற்றிவைத்தது யார் பொறுப்பு?

இத்தனைக்கும் மேல் மக்களை கொதிக்க வைக்கும் விசயமும் இதிலிருக்கிறது. இந்த ஓம்சக்தி ஆலையின் உரிமையாளரான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விருதுநகர் சேர்மன் முருகேசன் ஆலை நடத்துவதற்காகப் பெற்றிருந்த அனுமதி கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இவனுக்கோ, இதை லீசுக்கு ஏற்று நடத்தும் திருத்தங்கல் பால் பாண்டிக்கோ இது தெரியாதா? இன்னும் எத்தனை உயிர்கள் இந்த மண்ணில் வீழ்ந்தாலும் இவர்களின் லாபவெறி கண்ணை மறைக்கும். ஆலை நடத்த அனுமதி இல்லை, தொழிலாளர் சட்டங்களை மதிப்பது இல்லை, முறையான பயிற்சி அளிப்பதில்லை, விழிப்புணர்வு கொடுப்பதில்லை, முறையான ஊதியம் கொடுப்பதில்லை, சங்கம் சேர அனுமதி இல்லை. ஆனால் தொழிலாளர்களை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை என்றால். இது யார்மீது யார் செலுத்திய வன்முறை? இந்த அரசும் முதலாளிகளும் சேர்ந்து செய்த படுகொலை இது என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா?

_________________________________________________

– வினவு செய்தியாளர்கள்.

__________________________________________________

மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!

2

மாருதி-தொழிலாளர்-அடக்குமுறை-1

மாருதி சுசுகி நிர்வாகத்தின் கொடிய அடக்குமுறைக்கு எதிராக ஜுலை 18  அன்று வெடித்த தொழிலாளர் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆலையில்  கதவடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆலையின் சுற்றுவட்டார கிராமங்களில்  வசித்து வந்த மாருதி தொழிலாளர்கள் மீது போலீசு அடக்குமுறையும்  பொய்வழக்குகளும் பாய்ந்தன.

இப்போது மாருதி சுசுகி தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே  வேலைக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

1528 நிரந்தரத் தொழிலாளர்களில் 500 பேர் பணி நீக்கம்  செய்யப்பட்டிருக்கின்றனர். பணி நீக்க அறிவிப்பும் ஆலை  இயங்கத் தொடங்கும் என்ற அறிவிப்பும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.‘காயம்பட்ட அதிகாரிகள் யாரையெல்லாம்  அடையாளம் காட்டினார்களோ, அவர்கள் அனைவரையும் வேலை நீக்கம்  செய்திருக்கிறோம்; இன்னும் யாரெல்லாம் அடையாளம்  காட்டப்படுகிறார்களோ,  அவர்களையெல்லாம் வேலைநீக்கம் செய்வோம்” என்று அறிவித்திருக்கிறார் மாருதியின் தலைவர் பார்கவா.

எந்த விதமான விளக்கமும் கேட்காமல், விசாரணையும் நடத்தாமல்  பணிநீக்கம் செய்வது, சட்டத்துக்குப் புறம்பானது என்று தெளிவாகத்  தெரிந்த போதும், மாநில அரசு மூச்சுவிடவில்லை. 500 போலீசாரை  ஆலைக்குள்ளேயே குவித்திருக்கிறது மாநில அரசு. முன்னாள்  இராணுவத்தினர் உள்ளிட்ட 100 ஆயுதம் தாங்கிய தனியார் படையினரை  நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது. வெளிப்படையாக நிர்வாகத்தின் அடியாள்  படையாகவே போலீசு நிறுத்தப்பட்டிருப்பதால், வேறு வழியின்றி  காங்கிரசு, பா.ஜ.க. தொழிற்சங்கங்களே, ‘ஆலைக்குள்ளிருந்து போலீசைத்  திரும்பப் பெறவேண்டும்’ என்று கோரியிருக்கின்றன.

அரியானா மாநிலம் போன்ட்சி சிறையில் 154 தொழிலாளர்கள்  அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இ.பி.கோ 302, 307, 323, 147,  148, 149, 34, 114 உள்ளிட்ட பல பிரிவுகளில் பொய்வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பெயர் குறிப்பிடமுடியாத, ஆனால்  கண்டால் அடையாளம் காணத்தக்க 500, 600 தொழிலாளர்கள்  வன்முறையில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கு ஒரு  நாளைக்கு மூன்று முறை போலீசு வருவதாகவும், தங்களை  மிரட்டுவதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.  தலைமறைவாகியிருக்கின்ற தொழிலாளிகளைப் பிடிக்க, போலீசார்  தபால்காரர்கள் போல வேடமணிந்து வந்து விசாரிப்பதாகவும்  குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே போலீசால்  கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். நிர்வாகத்திலிருந்து  வந்த அதிகாரிகள் போலீசுடன் சேர்ந்து விசாரணையில்  ஈடுபட்டிருக்கின்றனர். அனைவருமே நிர்வாணப்படுத்தப்பட்டு,  தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அடிக்கப்பட்டுள்ளனர். மூச்சு முட்டித்  தவிக்கும் வரை தலையைத் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்குவது,  மின்சார ஷாக் கொடுப்பது போன்ற கொடிய சித்திரவதைகளுக்குப் பின்,  நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களிடம் வெள்ளைத் தாள்களில்  கையெழுத்து வாங்கியுள்ளனர். ஒரு முன்னணித் தொழிலாளியை  படுக்கவைத்து அவர் மீது 90 கிலோ உருளையை உருட்டியிருக்கின்றனர்.  போலீசு நிலையத்தில் இருக்கும் வரை தொழிலாளர்கள் யாரும்  வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

சித்திரவதைகள் குறித்து தொழிலாளர்களின் வக்கீல் விவரித்த பின்னரும்  நீதிமன்றம் அதைப் பதிவு செய்யவில்லை. போலீசு கையில்  வைத்திருக்கும் தொழிலாளிகளின் பட்டியல், நிர்வாகம் எழுதிக்  கொடுத்ததேயன்றி, போலீசு விசாரணை செய்து கண்டுபிடித்தது அல்ல  என்பதைத் தொழிலாளர் தரப்பு வக்கீல் பதக் நீதிமன்றத்தில் நிறுவிய  பின்னரும், அதனை நீதிபதி கண்டுகொள்ளவில்லை.

“நிர்வாகம் கொடுத்திருக்கும் அந்தப் பட்டியலில் உள்ள  தொழிலாளர்கள்தான், சுயேச்சையான தொழிற்சங்கம் ஒன்றைக்  கட்டுவதற்காக கடந்த ஒரு ஆண்டாக இடைவிடாமல் போராடி  வருபவர்கள். அடக்குமுறைகள் ஒவ்வொன்றின்போதும்  அடங்கிப்போகாமல், நிர்வாகத்தை உறுதியாக எதிர்த்து நின்றவர்கள்.  வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், வெளியில் இருந்தபடி மீண்டும்  சங்கத்தைக் கட்டியமைக்கக் கூடியவர்கள். எனவே, மீண்டும் ஒரு  சுயேச்சையான சங்கம் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டுமானால்,  இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தாகவேண்டும். நிர்வாகம் தனது  கைக்கூலி சங்கம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்துவதும்கூட, இவர்கள்  வெளியில் வந்து விட் டால் இயலாமல் போய்விடும் என்பதுதான்  நிர்வாகத்தின் அச்சம்” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு தரப்பாக, நிர்வாகத்தின் ஊதுகுழலாக  இருப்பதால், அன்று ஆலைக்குள் நடைபெற்ற சம்பவம் என்ன என்பது  இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை. சில பத்திரிகையாளர்களும்,  பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்களும்,  தலைமறைவாக இருக்கின்ற தொழிலாளிகளிடம் விசாரித்ததில் புதிதாகப்  பல தகவல்கள் தெரிய வருகின்றன.

மானேசர்-குர்கான் ஆலைகள் அனைத்திலுமே, தொழிலாளர்களை  மேலாளர்கள் கெட்டவார்த்தையால் திட்டுவது என்பது மிகவும் சகஜம்  என்றும், தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும்  நேரங்களில், பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு உள்ளேயே  நிர்வாகத்தின் அடியாட்படை நின்று கொண்டிருக்கும் என்பதையும், ஒரு  பழகிப்போன சம்பிரதாயம் போல விவரிக்கிறார்கள் அப்பகுதி  தொழிலாளர்கள்.

அன்று மாருதி ஆலையில் பேச்சுவார்த்தைக்குப் போன தொழிற்சங்க  முன்னணியாளர்கள் நாற்காலியில் அமர்ந்தவுடன், நிர்வாகத் தரப்பு  மேசையின் மீது ஒரு ரிவால்வரை எடுத்து வைத்ததாகவும்,  பேச்சுவார்த்தையின் ஊடாகவே தலைவர்கள் அடியாட்களால்  தாக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மாருதி-தொழிலாளர்-அடக்குமுறை-1

எத்தனை உண்மைகள், எத்தனை ஆதாரங்கள் தரப்பட்டாலும் அவை  எதையும் அரசோ, போலீசோ, நீதிமன்றமோ கணக்கில்  கொள்ளப்போவதில்லை. ஜூலை சம்பவத்துக்குப் பின்னர்  பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மாருதி சுசுகியின் தலைவர்  பார்கவா, சுயேச்சையான தொழிற்சங்கத்தைத் தாங்கள் எதிர்க்கவே  இல்லையென்றும், அரியானா மாநில அரசுதான் சங்கத்தைப் பதிவு  செய்வது தொடர்பாக சில பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தது  என்றும், சங்கத்தை விரைவாகப் பதிவு செய்து தருமாறு தாங்கள்  அரசைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இதைவிடக் கடைந்தெடுத்த ஒரு பொய் இருக்க முடியாது. சுயேச்சையான  தொழிற்சங்கத்துக்கான அங்கீகாரம் என்ற கோரிக்கையை முன்வைத்து  2011இல் மட்டும் 5 மாதம் போராட்டம் நடந்துள்ளது. மாருதியின்  உற்பத்தி வீழ்ந்தது. பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. என்ன  நடந்தாலும், சங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜுலை 2011இல் அறிக்கை விட்டார், மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி சித்திகி.  இறுதியில் தொழிலாளர்கள் தமது கோரிக்கையில் வென்றவுடனே,  தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 16 இலட்சம் ரூபாய் கொடுத்து  ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியது நிர்வாகம். இவையனைத்தும்  உலகறிந்த உண்மைகள். எனினும், ஒரு ஊடகம்கூட பார்கவாவிடம்  எதிர்க்கேள்வி கேட்கவில்லை.

குர்கானில் உள்ள மாருதி உத்யோக் காம்கார் யூனியனின் செயலர்  குல்தீப் ஜங்கு, “500 தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவை ரத்து  செய்யவேண்டும்” என்று கோரியிருக்கிறார். அச்சங்கத்தின் சார்பில் 5000  தொழிலாளர்கள், மாருதி தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தக்  கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புரட்சிகர அமைப்புகள் மற்றும்  ஜனநாயக சக்திகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.  தமிழகத்தில் மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை வாழ்த்தி  வரவேற்று பு.ஜ.தொ.மு.,  பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை  நடத்தியிருக்கிறது.

மாருதி போராட்டத்தை ஆதரிக்கவும் விரும்பாமல், கண்டிப்பதற்கும்  துணிவில்லாமல் சிக்கித் தவிக்கின்றன போலி கம்யூனிஸ்டு  தொழிற்சங்கத் தலைமைகள். சட்டத்தின் ஆட்சியைத் துளியும் மதிக்காமல்,  தங்களை இப்படிப்பட்ட இக்கட்டுகளில் இழுத்துவிடும் முதலாளிகளின்  மீதும், தொழிலாளிகளின் மீதும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு கோபம்  வருகிறது. இருந்த போதிலும், அவர்கள் சட்டத்தைப் உறுதியாகப் பற்றி  நிற்கிறார்கள்.

“மாநில அரசைக் கலந்து கொள்ளாமல் இவ்வளவு பேரை நிர்வாகம்  வேலை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தில்  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவோம்” என்று கூறியிருக்கிறார்  ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசியச் செயலர் சச்தேவா.

ஒத்திவைப்புத் தீர்மானமல்ல முதலாளிகளின் கவலை. பிரிகால், ஏனாம்,  மாருதி என்று அடுத்தடுத்து தொடரும் தொழிலாளி வர்க்கத்தின்  போர்க்குணம்தான் முதலாளி வர்க்கத்தின் கவலை. மானேசரில்  மாவோயிஸ்டுகள் ஊடுருவலா என்று தேடுகிறார்கள். தமிழகத்தில்  பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகளை ஒடுக்க  வேண்டுமென்று தென்னிந்திய முதலாளிகள் சங்கம் ஜெயலலிதாவிடம்  மனுகொடுக்கிறது. உடனே உளவுத்துறையும் போலீசும் தமது  நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன.

நக்சல் அபாயம் என்பது முதலாளி வர்க்கத்துக்கு  உண்மையான  அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. தொழிலாளிகளின் மீது அரசு  அடக்குமுறையை ஏவிவிடுவதற்கான பூச்சாண்டியாகவும் அதற்குப்  பயன்படுகிறது. இருப்பினும், மாருதி பிரச்சினையின் ஊடாக தனது  வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத்  தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.

“அன்று இப்படி ஒரு சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த குறிப்பான  நிகழ்வுகள் என்ன என்பது குறித்துத் தனக்கு தெரியாதெனினும், இத்தகைய  போக்கினை ஈவு இரக்கமின்றி நசுக்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார்  விப்ரோ நிறுவனத்தின் முதலாளி அசிம் பிரேம்ஜி. மாருதி சம்பவத்தை  ‘ஒரு வர்க்கத் தாக்குதல்’ என்று வருணிக்கிறார், மாருதி சுசுகியின்  தலைவர் பார்கவா.

‘வர்க்க உணர்வு’ என்பதை முதலாளி வர்க்கத்திடமிருந்து ஒரு  எதிர்மறைப் பாடமாகக்கூடத் தொழிலாளி வர்க்கம் சில சந்தர்ப்பங்களில்  கற்றுக் கொள்ள முடியும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!

3

அசாம்-கலவரம்டந்த ஜூலை மாதத்தில் அசாமின் போடோலாந்து பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் 78 பேர் கொல்லப்பட்டு, ஏறத்தாழ 400 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 4 இலட்சம்  போடோ அல்லாத பழங்குடி மக்களும்  முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். போடோ அல்லாத மக்கள் மீது, குறிப்பாக முஸ்லிம்களைக் குறிவைத்து போடோக்கள் நடத்திய இந்தப் பயங்கரவாத வெறியாட்டமும்  அட்டூழியங்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்த போதிலும், அசாம் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும், உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தென்மாநிலங்களுக்குப் பிழைப்புத்தேடி வந்துள்ள தங்களது உறவினர்களை  ஊருக்குத் திரும்பிவிடுமாறு அசாமியர்கள் அழைத்துள்ளனர்.  அதையொட்டி, வடகிழக்கிந்திய மாநிலத்தவர் அனைவரும் தாக்கப்படக்கூடும் என்ற அச்சமும் பீதியும் கைபேசி குறுந்தகவல்களாகப் பரப்பப்பட்டு, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து வடகிழக்கிந்திய மாநிலத்தவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்லாயிரக்கணக்கில் வெளியேறியுள்ளனர்.

அசாமின் போடோ சுயாட்சி கவுன்சில் பிராந்திய மக்கள் தொகையில் போடோ இனக்குழுவினர் மூன்றிலொரு பங்கினராக உள்ளனர். பாரம்பரியமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் மூன்றிலொரு பங்கினராகவும், போடோ அல்லாத  அசாமியர்கள், கூலித் தொழிலாளர்களாக பீகார், உ.பி. மாநிலங்களிலிருந்து குடியேறிய சந்தால், முண்டா முதலான பழங்குடியினர் மூன்றிலொரு பங்கினராகவும் உள்ளனர். இவர்கள் தவிர, வங்கதேசப் போரின் போது அகதிகளாகக் குடியேறிய வங்கதேச முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர்.

ஆனால், தமது சமூகம் முன்னேறாததற்கு அகதிகளாக ஊடுருவியுள்ள வங்கதேச முஸ்லிம்களே காரணம் என்றும், முஸ்லிம்களும் இதரப் பழங்குடியினரும் நதிக்கரை, காட்டுநிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் வெறியூட்டப்பட்ட போடோக்கள்  90களிலிருந்து அடுத்தடுத்து போடோ அல்லாதவர்கள் மீது கொடிய தாக்குதல்களை  நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்த வடகிழக்கிந்திய தேசிய இனங்களின் போராட்டங்களைப் பழங்குடி இனரீதியில் பிளவுபடுத்தி மோதவிட்டு இரத்தம் குடிப்பது காங்கிரசின் அரசியல் நரித்தனம்; அந்த வகையில் அனைத்து அசாம் மக்களின், அனைத்து அசாம் மாணவர்களின்  போராட்டத்துக்கு எதிராக போடோக்களை ஆயுதபாணியாக்கி, இனவெறிக் குழுக்களை உருவாக்கியதே காங்கிரசு அரசின் உளவுப்படையான  “ரா” தான்.

இதுவரை  சிதறிக்கிடந்த அசாமிலுள்ள முஸ்லிம்கள் இப்போது  தனிக் கட்சியாக வளர்ந்துள்ளதால், முன்போல அவர்களை வளைத்து ஓட்டு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரசால் முடிவதில்லை. எனவே, பா.ஜ.க. வழியில் முஸ்லிம் அல்லாதோரின் ஓட்டுக்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன், அசாம் காங்கிரசு இப்போது போடோக்களுடன் புதிய கூட்டணி கட்டிக் கொண்டு அரவணைத்துச் செல்கிறது. போடோ இனவெறிக் குழுக்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் மீதும் பிற பழங்குடியினர் மீதும் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளன.

போடோ இனவெறிக் குழுக்களின் பயங்கரவாதத் தாக்குதல்  அட்டூழியங்களுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் மும்பையில் முஸ்லிம்கள் பேரணி  நடத்தியபோது, போலீசைக் குவித்து அச்சுறுத்தியதால், அக்கெடுபிடிகளை எதிர்த்து சில முஸ்லிம் இளைஞர்கள் போலீசு வாகனங்களைச் சேதப்படுத்தி எரித்தனர். இதைச் சாக்கிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.  அதைத் தொடர்ந்து, போலீசுக்குப் பாதுகாப்பில்லை, மும்பையில் குடியேறியுள்ள முஸ்லிம்கள்தான் வன்முறைக்குக் காரணம் என்று அவதூறு பரப்பி, இந்துவெறிஇனவெறி பாசிஸ்டான ராஜ்தாக்கரே திடீர் பேரணி நடத்தினார். அத்வானியோ, வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல்தான் போடோலாந்தில் நடந்துள்ள வன்முறைத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என்கிறார்.

அசாமில் நடந்துள்ள இந்த பயங்கரவாதத் தாக்குதலை, பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ராஜ்தாக்கரேவும் நாடு தழுவிய விவகாரமாக்கி, அனைத்து இஸ்லாமியருக்கும் எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு அரசு இச்சக்திகளை அனுசரித்துப் போகிறது. அசாம் விவகாரத்தைத் தமது அரசியல் நோக்கங்களுக்குச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டு மக்களை இனக்குழு அடிப்படையிலும் மதவாத அடிப்படையிலும் பிளவுபடுத்தி மோதவிட்டு , அரசு பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்க இந்துவெறியர்களும் காங்கிரசும் போட்டி போடுவதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மலைக்கள்ளன் அண்ட் கோ!

12

கிரானைட்-ஊழல்

“பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.”

இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா?

கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக,  போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள, செய்தி போல தோற்றம் தரும் விளம்பர வாசகங்கள். இன்றல்ல, டிசம்பர் 10, 2010 அன்று.

இஸ்தான்புல் விமானநிலையம், தோஹா மசூதி, துபாய் ரேஸ் கோர்ஸ், தமிழ்நாடு புதிய சட்டமன்றக் கட்டிடம், இன்னும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரசியா, தென்கிழக்காசியா என எல்லா இடங்களிலும் உள்ள மாபெரும் கட்டிடங்களை அலங்கரிப்பவை, மதுரை மாவட்டத்தையே கண்டதுண்டமாக வெட்டித் துண்டு போட்டு சாமியால் விற்பனை செய்யப்பட்ட கிரானைட்டுகள்தான் என்று பெருமை பொங்க கூறுகிறது அந்த செய்தி.

கிரானைட்டின் சிறப்பு பற்றி மனித குலத்துக்கு கி.மு. 2600இலேயே தெரிந்திருந்தாலும், அது பழனிச்சாமிக்கு 1980களின் பிற்பகுதியில்தான் தெரியவருகிறது. அப்போதுதான் மதுரைப் பாறைகளில் உள்ள அற்புதத்தை அவர் அடையாளம் கண்டாராம். நல்வாய்ப்பாக கி.மு. 2600இல் பழனிச்சாமி பிறக்கவில்லை. பிறந்திருந்தால் தமிழ்நாட்டைக் கடல் கொண்டிருக்கும்.

1980களில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, நாங்குனேரியில் ஒரு வாய்க்கால் வேலையில் எல்லை மீறி மோசடி செய்ததால் காண்டிராக்டர் என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட நபர்தான் பி.ஆர்.பழனிச்சாமி என்ற கிரிமினல். அதன்பின், மேலூர் வட்டத்தில் ஒரு கல் குவாரியை எடுத்துத் தொழில் செய்ய முனைந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் தொழில் செய்துவந்த ஒரு வடநாட்டு சேட் தொடர்பு பி.ஆர்.பி.க்குக் கிடைக்கிறது. மதுரையில் இருப்பது உலகத்தரம் வாய்ந்த கிரானைட் என்பதும் தெரிகிறது. அது முதல் கொள்ளையடிக்கத்  துவங்கி,  மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் 8 முறை ஏற்றுமதிக்கு அவார்டு வாங்குமளவுக்கு மாவட்டத்தையே வெடி வைத்துத் தகர்த்து விற்றிறிருக்கிறார் பழனிச்சாமி.

பழனிச்சாமி ‘தொழிலுக்குள்’ நுழைந்த காலம் என்பது தமிழகத்தைப் பொருத்தவரை, ‘வரலாற்று ரீதியில்’ முக்கியத்துவம் வாய்ந்த காலம். 1991இல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவியும் உடன்பிறவாத் தோழியும், “ஐந்தே ஆண்டுகளுக்குள் தமிழகத்தை முடிந்த வரை வாங்கிவிட வேண்டும், அல்லது விற்றுவிடவேண்டும்” என்ற கொலைவெறியோடு களத்தில் இறங்கியிருந்த காலம் அது. பழனிச்சாமியின் கொள்கையும் அதுவாகவே இருந்தது. அவரது கொள்கையும் உடன் பிறவாதோழிகளின் கொள்கையும் ஒத்துப்போனதையும்,  பழனிச்சாமியின் சாதியும் சின்னம்மாவின் சாதியும் ஒத்துப்போனதையும் மட்டும் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும். அன்று முதல் இன்றுவரை சின்னம்மாவுடன் ஹாட்லைன் தொடர்பில் இருப்பவர் பழனிச்சாமி.

கிரானைட் கொள்ளைக்கு மன்னார்குடி கும்பல் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பி.ஆர்.பி.க்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் குருநாதர் என்று சொல்லுமளவுக்கு தொழில் நெருக்கம். இன்னொரு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பரமசிவம் தனது மைத்துனர் கோட்டைவீரன் பெயரில் கீழையூரில் பிரம்மாண்ட கிரானைட் குவாரியை எடுத்து நடத்தினார். பின்னர் அதுவும் மன்னார்குடி கும்பல் தயவால் இன்று பி.ஆர்.பி. கைக்கு வந்துவிட்டது.  பி.ஆர்.பி.யிடம் மேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி, மதுரை அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பா, ஜெயா அமைச்சரவையில் இரண்டாவது இடத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது பினாமிகள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மன்னார்குடி கும்பல்   எனப் பலரும் பல நூறு கோடிகள் பங்கு வாங்கியிருக்கின்றனர்.

தி.மு.க.வில் அழகிரிக்கும் பி.ஆர்.பி.க்கும் இடைத்தரகர் நாகேஷ் என்ற தி.மு.க. பிரமுகர். 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ சிவராமன்தான், விலையுயர்ந்த கிரானைட்டுகள் கொண்ட கீழையூரில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமாக குவாரி ஏற்படுத்தி கொடுத்தவர். இது சென்ற தி.மு.க. ஆட்சியின் போதே,  அழகிரியின் பினாமி பொட்டு சுரேசின் மகன் நாகராஜ் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது.

அனைவரையும்விட பழனிச்சாமியிடம் அதிகமாகப் பொறுக்கித் தின்றவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிதான். அவரது பினாமிகள் சூடாமணி, நாகராஜ், நாகேஷ், பொட்டு சுரேஷ், தனபால், பாலசுப்பிரமணி முதலானோரும் தனித்தனியே காசு பார்த்திருக்கின்றனர். அது மட்டுமின்றி, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பி.ஆர்.பி. விட்டெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த மதிவாணன், உதயசந்திரன் ஆகியோருடன் அஞ்சாநெஞ்சனின் உடன்பிறப்புகள் மல்லுக்கட்டியிருக்கின்றனர்.

மொத்தத்தில், தி.மு.க., அ.தி.மு.க. வில் மேலிருந்து கீழ் வரை பழனிச்சாமியிடம் மொய் வாங்காத உடன்பிறப்போ, ரத்தத்தின் ரத்தமோ கிடையாது. இந்த ‘மாமன்கள்’ எல்லோருடைய பெயர்களையும் அச்சிடுவதற்கு பத்திரிகையில் இடமும் கிடையாது.

கிரானைட்-ஊழல்

பூமிக்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் (சமூகத்துக்கு) சொந்தம் என்பது பொது நியதி. இந்த விதிக்கு உட்படாமல், பூமிக்கு அடியில் கிரானைட், லைம்ஸ்டோன் போன்றவை இருக்குமானால், அவை நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்று சட்டம் அங்கீகரிப்பதால், ஒரு நிலத்தை வாங்கி, தனக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அரசு அனுமதிக்கின்ற அளவுக்கான ஆழத்துக்கு குவாரி வெட்டி கிரானைட்டுகளை எடுத்து விற்பது சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுகிறது.

இதன்படி பாமர விவசாயிகளுடைய நிலங்களை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால், மிரட்டியோ, தாக்கியோ, பொய்வழக்கு போட்டோ, நாற்புறமும் உள்ள நிலங்களை வாங்கி அந்த விவசாயியை முடக்கியோ அவருடைய நிலத்தைப் பறிப்பது, பிறகு அங்கே  குவாரி வெட்டுவது என்ற வழிமுறைகளை பி.ஆர்.பி; அழகிரியின் மகன் துரை தயாநிதி,  தளி ராமச்சந்திரன் போன்று இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மாஃபியாக்கள் அனைவருமே கையாண்டு வருகின்றனர். இந்த அயோக்கியத்தனம் சட்டபூர்வமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இதைத்தான் ‘நியாயமாகத் தொழில் செய்வது’ என்று கூறுகிறார்கள்.

பி.ஆர்.பி. மற்றும் அழகிரியின் மகன் முதலானோருக்கு இந்த ‘நியாயம்’ போதவில்லை. டாமின் குவாரிக்கு அருகாமையில் ஒரு இடத்தை வாங்கிப்போட்டு, டாமின் குவாரியின் கற்களைத் திருடி,  தனது குவாரியின் கற்களாக கணக்கு காட்டி விற்பது; அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் ஆகியவற்றில் ஒரு பகுதியை அரசிடமிருந்து குத்தகையாக வாங்கிக் கொண்டு, அதைக் காட்டி அந்த வட்டாரம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரானைட் கொள்ளையடிப்பது; எந்த ஆவணமும் இல்லாமல் பொதுநிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளையிடுவது  எனத் தங்களுடைய கொள்ளையை நடத்தியிருக்கின்றனர். அதாவது இலஞ்சத்தை ‘நியாயமாக’ கேட்டு வாங்கும் போலீசுக்கும், சட்டையில் கைவிட்டு எடுக்கும் போலீசுக்குமுள்ள வேறுபாடு!

இந்த வழியில் மக்களுக்குச் சொந்தமான 70 கண்மாய்கள், 50 ஊருணிகள், எண்ணற்ற சாலைகள், புறம்போக்கு நிலங்கள்  என அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  மேலூர் வட்டத்தில் கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, செம்மணிப்பட்டி, திருவாதவூர் ஆகிய கிராமங்களிலுள்ள கிரானைட் குவாரிகளும்; மதுரை வடக்கு வட்டத்தில் புதுத்தாமரைப்பட்டி, இடையப்பட்டி ஆகிய கிரானைட் குவாரிகளும் முக்கியமானவையாகும். செம்மணிப்பட்டியிலுள்ள உயர்ந்த புறாக்கூட்டு மலையும், ரெங்கசாமிபுரம் கீழையூர் மலையும், கீழவளவு பொக்கிச மலையும் இருந்த சுவடுகூடத் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட்டுகள் பி.ஆர்.பி.யால் பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டன.

உரிமம் ஏதும் இல்லாமலே, அரசு நிலங்கள், புறம்போக்கு  என எல்லா இடங்களிலும் குவாரிகளைத் தோண்டிக் கொள்ளையடித்துள்ளனர்.  உதாரணமாக, மதுரை மாவட்டம் கீழவளவுக்கு அருகிலுள்ள பிள்ளையார்குளம் கண்மாயில் குவாரி அமைக்க 99 வருடக் குத்தகைக்கு பி.ஆர்.பி. நிறுவனம் கேட்டபோது அரசு தர மறுத்ததால், அக்கண்மாயைத் தோண்டிக் கற்களனைத்தையும் எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், பின்னர் மண்ணைப்போட்டு  மூடியிருக்கிறது. ஆவணங்களில் மட்டும் இருக்கும் இக்கண்மாயை தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

தொல்லியல் மதிப்புள்ள புராதனச் சின்னங்களும் இவர்களது கொள்ளைக்குத் தப்பவில்லை.  கீழையூர் சமணமலையில் சமணப்படுகைகள், கல்வெட்டுகள் இருப்பதால் அம்மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அதற்கு வெகு அருகிலேயே கற்களை வெட்டி எடுத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் வெட்டி எடுத்த கற்களை அடுக்கி சமணப்படுக்கையையே மறைத்துவிட்டனர்.

100 ஏக்கர் சுற்றளவுள்ள மேலூர் திருச்சுனை மலையில் சுரக்கும் நீர் பத்தாயிரம் ஏக்கருக்கு பாசனவசதி அளித்துவந்தது. வருவாய்த்துறையும் கனிமவளத்துறையும் இன்ன பிற துறைகளும் அந்த மலையின் மையத்தில் உச்சந்தலையில் 0.2 ஹெக்டேரை பி.ஆர்.பி. பினாமிக்குக் குத்தகைக்கு விட்டிருக்கின்றனர். நினைத்தும் பார்க்க முடியாத இந்த வக்கிரத்தின் விளைவாக,  இன்று மலை இல்லை. பல இடங்களில் மலைகள் மடுவாகிவிட்டன. விளைநிலங்களிலும்  நீர்வரத்து கால்வாய்களிலும் கற்களை அடுக்கிவைத்துப் பாசனமும் இல்லை.

பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் அழிக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால்நடைகள் இல்லை. விளைந்த பயிரின் மேல் கிரானைட் தூசு படிந்து பயிர்கள் அழிவதால் விவசாயம் இல்லை. பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், கிராமங்களில் வீடுகள் விரிந்து நொறுங்கியிருக்கின்றன.

மதுரை தெற்குத்தெரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு 400 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி, இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைக் கொண்டு மிகப் பெரிய கிரானைட் தொழிற்சாலையை நடத்துகிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  கற்களை அறுப்பது,  பாலிஷ் போடுவது, கிரானைட் கற்களிலேயே விதவிதமான அழகு சாதனப் பொருட்கள், சோபா செட், நாற்காலிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகின்றன.

விதிகளின்படி குறிப்பிட்ட  ஆழத்துக்கு மேல் கிரானைட்டுக்காகப்  பூமியைத் தோண்டக்கூடாது. ஆனால், பி.ஆர்.பி. மற்றும் பிற கிரானைட் கும்பல்கள் பாதாளம் வரை தோண்டியிருக்கின்றனர். அந்த வட்டார மக்களுக்கு மின்சாரம் கிடைப்பது அத்திபூத்தாற் போலத்தான். மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவையான அளவு மின்சாரத்தைத் திருடுகிறது இந்த கிரானைட் கொள்ளையர் கூட்டம்.

பி.ஆர்.பி. நிறுவனம் திருமோகூரில் தலித் மக்களுக்கான தொகுப்பு வீடுகளை  இடித்து குவாரியாக்கியிருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இடையபட்டியில் சத்துணவுக் கூடம்,  சமூகக் கூடம் போன்றவை  இடிக்கப்பட்டு குவாரிகளாக்கப்பட்டிருக்கின்றன.  கீழவளவில் குவாரிக்காகப் பள்ளிக்கூடத்தை  இடித்துள்ளனர். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.  திருவாதவூரில் தலித் மக்களுக்கான பஞ்சமி நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. கண்மாய், ஊருணி, புறம்போக்கு, மின்சாரம் ஆகியவற்றைத் திருடுவதை எதிர்த்த ஊர்த்தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். மீறிப் போராடிய விவசாயிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிரானைட்-ஊழல்

பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் வட்டத்தில் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர்,இராமநாதபுரம், கோவை, நாமக்கல்,சேலம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 1500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தேனியில் மட்டும் 700 ஏக்கர் என்றும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. மிக முக்கியமான கிரானைட் குவாரி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழனிச்சாமியின் சொத்து விவரங்கள் பற்றி தெரியாதது மர்மமாக இருக்கின்றது.

பி.ஆர்.பழனிச்சாமி நடத்தி வந்தது ஒரு அரசு. வருவாய்துறை, கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் பி.ஆர்.பி. யின் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நிலத்தை ஆக்கிரமிப்பது முதல் எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவது வரையிலான எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் திட்டம்போட்டுக் கொடுப்பது இவர்கள்தான். சொல்லப்போனால் பி.ஆர்.பி. கும்பல், இந்த ‘ஓய்வு பெற்ற அரசை’ வைத்துத்தான் ஓய்வின்றி உழைக்கும் அம்மாவின் அரசை இயக்கியிருக்கிறது.

கிரானைட் தோண்டும் பகுதிகளிலுள்ள கிராம உதவியாளர்களுக்கு (தலையாரி) ரூ.1000. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.5000; வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.8000; மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு ரூ.10,000; வட்டாட்சியர்களுக்கு ரூ.20,000; கோட்டாட்சியர்களுக்கு ரூ.30,000; மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.50,000; கலெக்டருக்கு ரூ. 1லட்சம் முதல் 2 லட்சம்வரை  என மாதந்தோறும் தவறாமல் வேன் மூலம் உரிய நபர்கள் மூலம் பட்டுவாடா நடந்திருக்கிறது. கனிமவளத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் தாய்வீடு போல. ஒன்று கேட்டால் இரண்டு கிடைக்கும். தலையாரிகளைப் பொருத்தவரை, சுவரில் கிரானைட் பதித்திருப்பவர்களெல்லாம் உண்டு.

இதைப்போன்றே காவல் துறையில் ‘ஏட்டய்யா’, சார் ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி; ஐ.ஜி. முதலானோருக்கும் மாதந்தோறும் பணப்பட்டுவாடா நடந்து வந்துள்ளது.  கீழ்நிலை நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை ‘நீதி அரசர்’களுக்குத் தகுந்த முறையில் மாதந்தோறும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்துள்ளது. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கார் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

கட்சிகளைப் பொருத்தவரை,  காங்கிரசு, பா.ஜ.க., ம.தி.மு.க, பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி., புதிய தமிழகம்  என விதிவிலக்கின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தத்தம் தகுதிக்கேற்ற ‘அன்பளிப்பு’களைச் சுருட்டியிருக்கின்றனர். மறைந்த மார்க்சிஸ்டு கட்சியின் மதுரை எம்.பி. மோகன், தேர்தல் செலவுக்கென ஒரு கோடி ரூபாயை பி.ஆர்.பி. யிடம் வாங்கியிருப்பதாகவும், இதுவன்றி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து பிழைப்புவாத தொழிற்சங்கங்களும் தத்தம் மாநாடுகள், கருத்தரங்குகளுக்கு இலட்சக் கணக்கில் பி.ஆர்.பி.யிடம் பணம் பெற்றுள்ளனர் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் எவ்விதத் தயக்கமுமில்லாமல் சாதாரணமாக கூறுகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் அழகர்கோவிலில் நடைபெற்ற மார்க்சிஸ்டு கட்சியினர் தலைமை தாங்கும், மதுரை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாட்டில் பரிமாறப்பட்ட ஆடு, கோழி, மீன், முட்டை  முதல் பீடா வரையிலான அனைத்தும்  பி.ஆர்.பி. யின் செலவுதான் என்றும் இவர்கள் கூறுகின்றனர். தலையாரி முதல் தாசில்தார் வரையிலான ‘தோழர்கள்’ தனித்தனியாக மாதாமாதம் கைநீட்டும்போது, எல்லா கைகளும் இணைந்து ஒற்றுமையாக, ஒரே சங்கமாக, கை நீட்டுவதில் புதிதாக என்ன மானக்கேடு வந்துவிடப் போகிறது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

குவாரிகளைத் தாரைவார்த்த டாமின் அதிகாரிகளுக்கு, சிட்டா அடங்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைத்து ஆக்கிரமிப்புக்கு ரூட்டு போட்டுத்தந்த வருவாய்த்துறைக்கு, கால்வாய்கள்  ஊருணிகளை விழுங்க உதவிய பொதுப்பணித்துறைக்கு, சமணமலை, திருவாதவூர் போன்றவற்றைத் தோண்ட அனுதித்த தொல்லியல் துறைக்கு, மற்றவர் நிலத்தையும் புறம்போக்கையும் பதிவு செய்து தருவதற்காக பத்திரப் பதிவுத்துறைக்கு, சத்துணவுக்கூடம், பள்ளி, சமூகக்கூடங்களைக்கூட இடித்து குவாரியாக்க உதவிய ஊரக வளர்ச்சித்துறைக்கு, ஒரு நம்பர் பிளேட்டில் எட்டு கன்டெயினர் லாரிகள் வீதம் ஓட்டுவதற்கு உதவி புரிந்த வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு, கணக்கில் வராமல் விற்பனை செய்வதற்குத் துணை புரிந்த வணிகவரித்துறைக்கு, கணக்கில் வராத கள்ள ஏற்றுமதிக்கு துணை நிற்கும் சுங்கத்துறைக்கு, அனைத்துக்கும் துணை நின்று அருள் புரியும் எல்லாம் வல்ல அன்னைக்கு… என்று சகலருக்கும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப ‘அன்பளிப்பு’ வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2012 வரை அனைவருக்கும் மாமூல் முறையாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் ‘நல்லபடியாக’ போய்க்கொண்டிருந்த நேரத்தில், அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவும் விதத்தில் ஆட்சியர் சகாயம் எழுதிய கடிதம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

கிரானைட்-ஊழல்

தற்போது விசாரணை நடத்திவரும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பி.ஆர்.பி. நிறுவனத்தில் மட்டுமின்றி, சோதனையிட்ட 175 குவாரிகளில் 89 இல் எல்லாவிதமான முறைகேடுகளும் நடந்திருப்பதாகவும், பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஆக்கிரமித்த புறம்போக்குகளைத் தலையாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள். தோண்டப்பட்ட குழிகளை டாமின் அதிகாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியாறு பாசனக்கால்வாய் கோட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் காணாமல் போன கால்வாய்களைத் தேடுகிறார்கள். குவாரிகளில் மர்மமான முறையில் இறந்தவர்கள் பற்றி டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையிலான குழு மருத்துவமனை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி செய்கிறதாம்.

இந்த விசாரணையை நடத்திவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த விவசாயிகள், கிரானைட் கொள்ளையர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, கொள்ளைக்குத் துணை நின்ற அனைவர் மீதும், குறிப்பாக எல்லா அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆனால், ஒன்றிரண்டு வி.ஏ.ஓ., தலையாரி, தாசில்தார்கள் மட்டுமே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மற்றபடி பி.ஆர்.பி.க்குப் புறம்போக்கை அளந்து கொடுத்த அதே தலையாரிகள், அதே இடத்தை, அதே இஞ்சு டேப்பை வைத்து இப்போது கலெக்டர் தலைமையில் அளந்து கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு முன் பெரியாறு கால்வாயை பார்த்திராதவர்கள் போலத் தேடுகிறார்கள். விபத்து என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கைகளை ஆராய்வது போல போலீசார் பாவ்லா காட்டுகிறார்கள். மற்றபடி, பி.ஆர்.பி. அலுவலகங்களில் நடந்த சோதனைகள் பலவற்றில் கணினிகள் கைப்பற்றப்பட்டன, வன்தகடுகள் இல்லை. பீரோக்கள் உள்ளன, கோப்புகள் இல்லை என்று கூறுகின்றன நாளேடுகள். மலைகளையும் கால்வாய்களையுமே தொலைக்கத் தெரிந்த அதிகாரிகள் கொண்ட அரசில் கோப்புகள் காணாமல் போவதா பெரிய அதிசயம்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது இந்தக் கொள்ளை. கொள்ளையின் மதிப்பு பன்மடங்கு  சில இலட்சம் கோடிகளாக இருக்குமென்பதில் ஐயமில்லை. பண மதிப்பைக் குறிப்பதற்காக இதனைக் கொள்ளை என்று நாம் குறிப்பிட்டாலும், ‘கொள்ளை’ என்ற சொல் இந்தக் குற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் சுட்டவில்லை. இந்தக் கொள்ளைக்குள் கொலை, இலஞ்சம், மோசடி, நம்பிக்கைத் துரோகம், தேசத்துரோகம், சூழல் நாசம், இயற்கைவளம், விவசாய அழிப்பு உள்ளிட்ட எல்லாப் பாதகங்களும் அடங்கியுள்ளன.

பி.ஆர்.பழனிச்சாமி என்றொரு திருடன் முதன்மைக் கொள்ளையனாக இருந்த போதிலும், பழனிச்சாமி, துரை தயாநிதி போன்றவர்கள் மட்டுமே இந்தக் குற்றவாளிகள் கூட்டத்தின் முழுமையைக் காட்டவில்லை. தலையாரியில் தொடங்கி ஆட்சியர், அமைச்சர்கள் வரையிலான எல்லாத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் குற்றக்கூண்டில் நிற்கிறார்கள்.

மக்கள் மீதோ, இந்த மண்ணின் மீதோ, நம் தொன்மை மரபின் மீதோ, இயற்கை வளங்கள் மீதோ, அறநெறிகளின் மீதோ எவ்வித மதிப்புமற்ற ஒரு பெரும் கூட்டம் இந்தச் சூறையாடலில் ஈடுபட்டிருக்கிறது. குவாரிகளின் வெடிச்சத்தத்தில் தூக்கியெறியப்பட்டுப் புழுதியைப் போலக் காற்றில் கலந்து காணாமல் போய் விட்டது அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கை. இந்தக் குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியமாக வெட்டுப்பட்ட கழுத்தைப் போல, இரத்தம் கசிய நிற்கிறது சக்கரமலை.

பிரெஞ்சுப் புரட்சியின் கிலெட்டினில் வெட்டுப்பட்டுச் சரிந்த முண்டங்களின் ஓவியம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவராகத் தண்டிக்க முடியாத அளவுக்கு பிரபுக்குல குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அன்று கிலெட்டின் பயன்படுத்தப்பட்டதென்று கூறுவார்கள். குற்றவாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு எதிரான மக்கள் கோபத்தின் வடிவமாகவும் கிலெட்டின் இருந்தது. இருக்கிறது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

3

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. மாருதி தொழிலாளர் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!

2. அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயற்சிக்கும் காங்கிரசு-பா.ஜ.க.வின் நரித்தனங்கள்!

3. மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி.ஆர்.பழனிச்சாமி – துரை தயாநிதி – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – கருணாநிதி – கலெக்டர் – எஸ்.பி – நீதிபதி – தாசில்தார் – கிராம நிர்வாக அலுவலர் – தலையாரி…..

4. மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

5. சென்னை பு.மா.இ.மு. தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்!

6. தென்னாப்பிரிக்கச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

7. அரசுப் பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே! தனியார் மயம் நுழையும் பின்னே!!
– அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

8. சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச் சாலை!
– தனது மேலாதிக்க நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள, அமெரிக்கா முசுலீம் பயங்கவரவாதத்தை ஊட்டி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது.

9. தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்திருத்தமா? புரட்சியா?
– இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள்அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன.

10. கூடங்குளம்: எரிபொருள் நிரப்பும் அனுமதிக்காகச் செய்யப்பட்ட மோசடிகள்!
– கூடங்குளம் அணு உலையில் காணப்படும் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.

11. வி.வி.மு.வின் துணையுடன் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய கிராம மக்களின் போராட்டம்!

12. அடாவடி உத்தரவால் அல்லற்படும் ரேசன் அட்டைதாரர்கள் ரேசன் கடைகளை மூடுவதற்கான சதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

13. காவிரி நீரின்றித் தவிக்கும் தமிழகம்! விவசாயத்தைக் காவு கொள்ளும் மறுகாலனியாக்கம்! – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

14. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….பாகம் 4
– வெளிநாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும் பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை.

15. சிறுமி சுருதியைப் பலிகொண்ட தனியார்மயத்தை வீழ்த்துவோம்! – பு.மா.இ.மு.வின் தெருமுனைக் கூட்டம்

16. இலண்டன் கலகம்: 1,800 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2

13

hallelujah-govindaஇந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன்.

குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது.

‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோவிந்தா கும்பலின் (மாமியார், மாமனார்) நிலை. வழக்கம் போல் கணவர் நடுநிலை. ஆனால் கதை எதிர்பாராத விதத்தில் வேறு மாதிரி தடம் மாறியது.

கணவர் ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து 3 மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘இது சாத்தான் வழிபாடுக்கு கர்த்தர் கொடுத்த தண்டனை’ என்று அல்லேலுயா கும்பல் தீர்ப்பு சொன்னது. ‘ஜபக் கூட்டம், அது இது வென பெருமாளை அவமானப் படுத்தியதால் வந்த தண்டனை’ என்று வாதிட்டது கோவிந்தா கும்பல். போட்டி போட்டுக் கொண்டு தண்டனை கொடுக்கும் எவ்வளவு நல்ல கடவுள்கள்!

‘ஒரு பெரிய தொகையை சபைக்கு கொடுத்துவிட்டு ஜபக் கூட்டம் நடத்தி புனித பிரார்த்தனை ஒன்றை செய்ய வேண்டும்’ என்று அல்லெலுயா பாதிரியார் சொல்லிவிட்டார். ஆனால் கோவிந்தா கோஷ்டி ஒரு படி முன்னேறி சிந்தித்தது. ‘இந்த கூட்டத்தை ஒரேயடியாக அடக்கா விட்டால் நல்லது நடக்க போவதில்லை. இனி சமரசமில்லை’ என்று கறாரான முடிவுக்கு வந்துவிட்டது.

ஜபக்கூட்டம் என்று பிரச்சனையை அல்லேலுயா கிளப்பியது வரை காத்துக்கொண்டிருந்த கோவிந்தா கூட்டம் சண்டையை நன்றாக வலுக்க செய்து, பின்னர் ஒரு அதிரடி இடியை தூக்கி போட்டது.

“இனியும் இந்த மாதிரி அல்லேலுயா கூட்டம், கிறிஸ்துவ மதம் பற்றிய பேச்செல்லாம் இந்த வீட்டில் கேட்கக் கூடாது. மீறினால் சொத்தில் சல்லி பைசா கூட விடாமல் திருப்பதிக்கு எழுதி வைத்துவிடுவேன்” என்று ஒரு செக் வைத்தார் கோவிந்தா கூட்டத்தைச் சேர்ந்த மாமனார்.

ஆடிப் போய்விட்டது அல்லேலுயா கூட்டம். பாதிரியார் தலைமையில் கொள்கை முடிவெடுப்பதற்காக முக்கிய கூட்டம் நடந்தது. இறுதியில் ‘சொத்தை இழக்க வேண்டாம். வீட்டில் எந்த விதமான கூட்டங்களும் நடத்த வேண்டாம். கர்த்தரை மனதில் நினைத்து ஜபித்தால் போதும். சாத்தான் வென்றுவிட்டான், ஆனால் இறைவன் நம்மை ரட்சிப்பார்’ என்று சில ஆண்டுகளுக்கு ரகசிய பெந்தகோஸ்தேவாகவே கர்த்தாவின் கருணையை பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

வீட்டில்ல் அல்லேலுயா சத்தம் அடங்கி ரகசிய செயல்பாடுகளாகவும், இரவு நேர பிரார்த்தனைகளாகவும் பதுங்கி விட்டிருக்கிறது. இந்த ரகசியமெல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போல் தன் வெற்றியை எண்ணி பெருமிதத்துடன் மீண்டும் கிராமத்தில் திரிய தொடங்கி விட்டார் கோவிந்தா கூட்டத்தின் தலைவர் மாமனார்.

அல்லெலுயாவா கோவிந்தவா சண்டையின் இப்போதைய நிலவரப்படி சொத்து தான் வெற்றிபெற்றிருக்கிறது.

______________________________________

– ஆதவன்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_______________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________

மாட்டுத்தாவணி – கோயம்பேடு

11

மாட்டுத்தாவணி-கோயம்பேடு

தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி
தாய்ச்சுமையொடு பக்குவமாக
மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து
தேசிய நெடுஞ்சாலையை
பிடித்தது பேருந்து.

இயங்குவது எந்திரம் மட்டுமா?
அதனொரு பாகமாய்
ஓட்டுநரின் கையும், காலும்
தசையும், நரம்பும் அசையும்.
வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு
வெகுதூரம் சரிபார்த்து
விழிகள் சுழன்று இசையும்.

அவியும் எஞ்சின் சூடும்
இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே
பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால்
உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம்.
கும்மிருட்டில்
விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல்
பத்திரமாய் நம் பயணங்கள்.
எத்தனை பேர் அறிவோம்
அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும் தருணங்கள்.

போகும் நள்ளிரவில்… எதிரே தனியார் பேருந்துகளின்
தகிக்கும் விளக்கொளிகள்,
இரவையும் பகலாக்கும்
நிலவையும் கூச வைக்கும்.
அதை.. தனியே எதிர்கொண்டு
வேகம் குறையாமல்
லாவகமாய் சைடு வாங்கி
தாய்மடி தூங்காத குழந்தையையும்
தனது ஸ்டியரிங் இட வலது தாலாட்டில் உறங்க வைத்து,
துடிக்கும் கண்களுக்குள்
டீசலொடு ஓட்டுநரின் தூக்கமும்
எரிந்து விசையாகி எஞ்சின் துடிதுடிக்கும்.

அண்ணா சமாதி அணையா விளக்கு போல
ஏதோ வெளிச்சம் காட்டும்
முன்விளக்கைப் பற்றிக் கொண்டு
பாதை விரியும் தூரம் முழுக்க
தன் கண் விளக்கால் கடந்து கடந்து
பயணிகளைச் சுமந்து செல்லும்
ஓட்டுநரின் விழி இருக்கை.

கொட்டாம்பட்டி தாண்டும்போதோ
கொட்டும் மழை…
பேருந்து நிர்வாகம் போல் இயங்காத வைப்பர்
தினந்தந்தி நாளிதழோ, தான் போடும் புகையிலையோ
பேருந்து கண்ணாடிக்கும் போட்டு
விழி மறைக்கும் மழை விலக்குவார்.
எதிர்ப்படும் மின்னலை கருவிழி துடைத்து
திருச்சி தாண்டி
ஒரு தேநீர் குவளைக்குள்
இரவைக் கலக்கி குடிக்கும் ஓட்டுநரின் கையில்
பயணிகள் அனுபவித்த தூக்கம்
தோலுரிந்து  கிடக்கும்.

இருள் அப்பிக் கிடக்கும் சாலைகள்…
எதிர்ப்படும் தடைகள், குண்டு குழிகள்
பராமரிப்பில்லாத பேருந்தின் தொல்லைகள்
அத்தனைக்கும் முனகும் குரல்களை
வலிகளாய் தான் வாங்கி…
எரிபொருள்  சிக்கனமாய் வண்டியை ஓட்டி
தன் இரத்தம் தாராளமாய் விடிய விடிய
கண்களில் கொப்பளித்து
அத்தனை பயணிகளையும்
பத்திரமாய் கோயம்பேட்டில் இறக்கி விட
வானம் வெளுத்து வரும்
ஓட்டுநரின் கண்களோ செக்கச் சிவந்திருக்கும்.

தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி
நாட்டையே விபத்துக்குள்ளாக்கும்
மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும்
‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள்

பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல்
“ஊம்.. வந்துட்டேன்,
ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

–  துரை. சண்முகம்.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

14

செய்தி -72

ஜெயலலிதா-சோ

5.9.12 தேதியிட்ட துக்ளக் இதழில் வந்த கேள்வி பதில் இது:

கேள்வி: ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வக்கீல் ஆச்சார்யா அலுத்துப் போய் ராஜினாமா செய்து விட்டது பற்றி?

பதில்: அவர் அலுத்துப் போய் ராஜினாமா செய்தாரா, வெறுத்துப் போய் ராஜினாமா செய்தாரா அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம். பத்திரிகைகளில் அவர் தரும் பேட்டிகளைப் படிக்கும் போது, ‘ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை, தான் நடத்தினால்தான், அதில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வரும்’ என்று பொருள்படும்படியாக, பல விஷயங்களை அவர் கூறி வருகிறார். ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அவர் நடந்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவரின் விரோதி அல்ல. அவருடைய எதிரி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான சாட்சியங்களோ, வாதமோ அவர் கண்ணில் பட்டால், அதை முதலில் நீதிமன்றத்தில் முன் எடுத்து வைப்பது அவருடைய கடமை. ‘குற்றவாளிக்குச் சாதகமான விஷயங்களை அவர் தரப்பு வக்கீல் கவனித்துக் கொள்ளட்டும், எனக்கென்ன?’ என்று அவர் இருந்துவிடக் கூடாது. அவராக முன் வந்து, இன்னின்ன அம்சங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக உள்ளன’ என்பதை நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேன் என்று செயல்படுவது அவருடைய கடமை அல்ல. இது கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த அடிப்படை சட்டத் தத்துவங்களில் ஒன்று, சுப்ரீம் கோர்ட் பல்வேறு வழக்குகளில் இதை வலியுறுத்தியிருக்கிறது. இதை ஆச்சார்யா லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை.

வாய்தா-ராணிஆச்சார்யா ஊடகங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படையானவை. வாய்தா மேல் வாய்தா வாங்கி, நீதிபதி, வழக்கறிஞர் யாரும் ஜெயாவை விசாரிப்பதற்கு தகுதி இல்லை என்று புதுப்புது வழக்குகள் போடுவது, அதையும் உச்சநீதிமன்றம் வரை போய் இழுத்தடிப்பது, ஆச்சார்யா மேலேயே சில வழக்குகள் போட்டு மிரட்டியிருப்பது, நீதிபதியே களைத்துப் போய் ஜெய-சசிகலாவை நிர்ப்பந்தம் செய்யாமல் இருப்பது குறித்துத்தான் ஆச்சார்யா வெறுத்துப் போய் பேசியிருக்கிறார். இவை எவை குறித்தும் சோ பேசவில்லை என்பது அவரது அப்பட்டமான பூணூல் பாசமே அன்றி வேறல்ல.

அடுத்து ஜெயாவை எதிரியாக நினைக்கக் கூடாது என்று ஆச்சார்யாவுக்கு சோ உபதேசம் செய்கிறார். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேனென்று செயல்படக்கூடாது என்று வழக்கறிஞர் தர்மம் பேசுகிறார். அதாவது ஆச்சார்யா கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதுதான் சோவின் விருப்பம். ஆனால் ஜெயாவின் மிரட்டல், நிர்ப்ந்தங்களால் விலகிப் போயிருக்கும் ஆச்சார்யாவை வழக்கறிஞர் தர்மம் தெரியாமல் நடந்து கொண்டிருப்பதாக வெட்கமே இல்லாமல் தூற்றுகிறார் சோ. நரித் தந்திரம் என்பதற்கு இலக்கணமே சோ தான் என்பதற்கு இந்தப் பதில் ஒரு சான்று.

ஆச்சார்யா விலகியிருக்கும் காரணங்கள் வெளிப்படையானவை. அந்தக் காரணங்களுக்கு பதில் சொன்னால் ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் சோ லீகலாக வேறு விசயங்களை இட்டுக்கட்டி பேசுகிறார். அதுவும் உப்புப்பெறாத விசயங்களை வைத்து. மணலில் கயிறு திரிப்பது என்பது இதுதான். நேற்று ஜெயலலிதாவின் திரையுலக நண்பர்களுக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தாம். அதில் பங்கேற்ற ஆண் நடிகர் சோ மட்டுமே. விருந்தில் மட்டுமல்ல ஜெயாவின் பார்ப்பன கிச்சன்கேபினெட்டில் முக்கிய நபராக இருக்கும் இந்த ஆள் இப்படி பேசாமல் வேறு எப்படி பேசுவார்?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

58
புதிய-தலைமுறை

புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

  1. புதிய-தலைமுறைNightingale Matriculation Higher Secondary School,
  2. Valliammai Polytechnic Institute,
  3. SRM Engineering College,
  4. SRM College of Nursing and SRM College of Pharmacy,
  5. SRM School of Nursing and SRM College of Physiotherapy,
  6. SRM Institute of Hotel Management,
  7. SRM Arts & Science,
  8. SRM Polytechnic Institute,
  9. Easwari Engineering College,
  10. SRM College of Occupational Therapy,
  11. SRM Institute of Management & Technology,
  12. Valliammai Engineering College,
  13. SRM Institute of Science and Technology,
  14. SRM Dental College,
  15. SRM Medical College Hospital and Research Centre,
  16. SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
  17. Chennai Medical College, Trichy
  18. Inter Disciplinary School of Indian System of Medicine,
  19. TRP Engineering College, Trichy,
  20. Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

ந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய-தலைமுறை-2

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது.  மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

புதிய-தலைமுறை

ல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

10

திரெண்டெழுந்தனர்
மாருதி தொழிலாளர்கள்!

தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!

எதுவன்முறை?
யார்
வன்முறையாளர்கள்?

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!

பொதுக்கூட்டங்கள்
தெருமுனைக்கூட்டங்கள்
கலை நிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர்.  அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ்.  முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர்.  அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர்.  தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார வர்க்கம் போல் பிரச்சாரம் செய்கின்றனர் முதலாளிகள்.  ஒரு நிமிடத் தாமதத்திற்குக் கூட அதை வேலை நீக்கத்திற்கான குற்றமாக்குவது, இயந்திரங்களின் வேகத்தைக் காட்டி தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிவது, இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க தவறினால் சம்பள வெட்டு, கழிப்பறைகளிலும் கண்காணிப்புக் கேமரா, அற்பக்காரணங்களுக்கும் அசிங்கமாய் திட்டி அவமானப்படுத்துவது என அடுக்கடுக்கான அடக்குமுறைகள். பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்ற பெயரில் குண்டர்களையும் போலீசையும் வைத்து தொழிலாளர்களைத் தாக்க முற்பட்ட போது தொழிலாளிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத்திய போராட்டத்தில் தான் அந்த அதிகாரி பலியானான்.  வன்முறைக்கு வித்திட்டது ஆலை நிர்வாகம், தொழிலாளிகளல்ல.

நாட்டில் 90 சதம் பேர் தொழிலாளிகள், உழைப்பாளிகள்.  அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேச்சுவார்த்தை என அமைதியான வழிகளில் தான் போராடுகிறார்கள்.ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான முதலாளிகள் தான் அதிகார வர்க்கம், போலீசின் துணையோடு ஒடுக்கின்றனர்.  மிக மிக அரிதாகத் தான் தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.  எங்கோ, எப்போதோ ஒரு அதிகாரி பலியானால் ஊளையிடும் ஓட்டுக்கட்சிகளும், ஒப்பாரி வைக்கும் ஊடங்கங்களும் முதலாளிகள் நடத்தும் படுகொலைகள், வன்முறை பற்றி வாய் திறப்பதில்லை.

தனியார்மயத்தின் பெயரால் நாட்டை மீண்டும் காலனியாக்கும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு வரும் கடந்த இருபது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளிகளின் வன்முறை மிகப்பெருமளவில் அதிகரித்துவருகிறாது.  நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் தியாகத்தால் கிடைத்த எட்டு மணிநேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையை ஒழித்துவிட்டு முதலாளிகள் தங்கள் விருப்பப்படி 12 மணி, 14 மணி, 16 மணி என உழைப்பை உறிஞ்சுகிறார்களே இது வன்முறையில்லையா?  எட்டு மணி நேரம் என்ற சட்டத்தை முதலாளிகள் அமுல்படுத்தினால் இன்னும் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கலாம்.  வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முதலாளிகளின் லாப வெறியால் உருவாக்கப்படும் கொடுமை.  இது சமூகத்தின் மீது நடத்தப்படும் வன்முறையில்லையா?

240 நாட்கள் ஓராண்டில் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை எந்த முதலாளியும் மதிப்பதில்லை.  பத்தாண்டு, இருபதாண்டு பணியாற்றியவர்களைக் கூட திடீரெனத் தூக்கியெறிந்து குடும்பங்களை வீதியில் நிறுத்துகின்றனர் முதலாளிகள்.  பயிற்சியாளர்கள் (ட்ரெய்னி) தொழில் பழகுநர் (அப்ரெண்டிஸ்) என்ற பெயரில் சம்பளமே இல்லாமல் அல்லது அற்பச் சம்பளத்தில் இளவயது ஆற்றலை உறிஞ்சி விட்டு தூக்கியெறிந்து விடுகின்றனர்.  இந்த மோசடியும், துரோகமும் வன்முறையில்லையா?  தமிழகத்தின் பெருந்தொழில் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளிகளில் முக்கால்வாசிப்பேர் ஒப்பந்த தொழிலாளிகள்  பெரும்பாலான் ஒப்பந்தத் தொழிலாளிகளை முதலாளிகள் கணக்கில் காட்டுவதேயில்லை.  சென்னையைச் சுற்றி ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், இருங்காட்டுகோட்டை, மறைமலை நகர் போன்ற பகுதிகளில் நோக்கியா, ஹூண்டாய், சிமென்ஸ், செயிண்ட் கோபெய்ன் என பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.  அன்றாடம் நடக்கும் ஏராளமான விபத்துகளிலும் ‘மர்ம’மான முறையிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்.  இவ்வளவு பெரிய தொழில்பகுதியில் தீவிர, அவசர சிகிச்சைக்க்கு ஒரு மருத்துவமனை கூட இல்லை.  அண்மையில் ஹவாசின் என்ற தொழிற்சாலையில் பணியாற்றிய 7 பேர் சாலை விபத்தில் இறந்தனர்.  இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் அடையாளம் தெரியாதவர்கள் என்றே பதிவு செய்யப்பட்டனர்.  புகழ்பெற்ற டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் கை நசுங்கிய தொழிலாளிக்கு பஞ்சை வைத்துக் கட்டி பேருந்து செலவுக்கு ரூ. 25/- கொடுத்து அனுப்பி விட்டது நிர்வாகம்.  முதலாளிகளின் கொடிய மனதுக்கு சிறு எடுத்துக்காட்டு இது.  ‘சுமங்கலித் திட்டம்’ எனும் பெயரில் கிராமப்புறத்தில் ஏழை இளம்பெண்களைத் திரட்டி கொட்டடிகளில் அடைத்து வரைமுறையின்றி வேலை வாங்குவது, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என சொல்லொணாக் கொடுமைகளை கோவை திருப்பூர் பஞ்சாலை முதலாளிகள் நடத்துகின்றனர்.   முதலாளிகள் நடத்தும் வரம்பற்ற வன்முறைகளைப் பற்றி ஊடகங்களோ, ஓட்டுக்கட்சிகளோ பேசுவதில்லை.

கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி, சாலை வசதி என அரசு வழங்கவேண்டிய சேவைகள் அனைத்தையும் தனியார்மயத்தின் பெயரில் முதலாளிகள் கைப்பற்றிக்கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.  மழலையர் பள்ளி முதல் மருத்துவக் கல்வி வரை ஆக்கிரமித்து ‘தரமான கல்வி’  என்ற போர்வையில் விதவிதமான வழிகளில் – கல்விக் கட்டணம், சிறப்பு வகுப்பு, செருப்பு, சீருடை பேனா, பென்சில், பேருந்து என பெற்றோர்களைக் கசக்கிப் பிழிகின்றனர். எந்த சட்டத்திற்கு கட்டுப்பட மறுக்கின்றனர்.  அரியானா மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் இருநூறு ரூபாய் பணம் கட்டவில்லை என்பதால், இன்குபேட்டரில் இருந்த குழந்தைக்கு சிகிச்சையை நிறுத்தியதால் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்துவிட்டது.    அரசு மருத்துவமனையே இப்படியென்றால் தனியார் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்.  அப்பல்லோ போன்ற கார்ப்பரேட், தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் முன்பணம் கட்டாவிட்டால் தொட்டுக்கூட பார்க்கமாட்டார்கள்.  இவையெல்லாம் அரசின் துணையோடு முதலாளிகள் நடத்தும் வன்முறையில்லையா?

போலி மருந்து தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடுபவர்கள், பத்து மடங்கு, இருபது மடங்கு லாபம் வைத்து மருந்து விற்பனையில் கொள்ளையடிக்க்கும் கொலை பாதகத்தைச் செய்பவர்கள் யார்?  தொழிலாளிகளா, முதலாளிகளா?  மாசுப்பட்ட குடிநீரால் சென்னையில் காலரா நோய்க்கு 30 பேர் பலியாகிவிட்டனர்.  அசுத்தமான குடிநீரில் அன்றாடம் வாந்தி பேதிக்கு இரையாகும் மக்கள் ஏராளம்.  ஆனால் கொக்கோ கோலா, பெப்சி, டாடா, உள்ளூர் மாபியாக்கள் அனைவரும் நீர்வளத்தை உறிஞ்சி விற்று பல்லாயிரம் கோடிகளை சுருட்டுகின்றனர்.  தண்ணீர் சமூகத்தின் பொதுச்சொத்து, அதை முதலாளிகள் கைப்பற்றி உரிமை கொண்டாடுவது வன்முறையில்லையா?  கட்டுப்படியாகாமல் கடன்பட்டு இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்?  விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை அநியாய விலைக்கு விற்று, அடிமாட்டு விலைக்கு விளைச்சலை அபகரித்த முதலாளிகள் தானே!  இது வன்முறையில்லையா?

பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பது, கறுப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குவது, பொருள்களைப் பதுக்கி விலையேற்றுவது, கலப்படம் செய்வது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பொதுச்சொத்துக்கள், கனிவளங்கள், கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடிப்பது இப்படி அனைத்துக் கிரிமினல் குற்றங்களையும் செய்வது யார் தொழிலாளியா?  முதலாளியா? இக்குற்றங்கள் வன்முறையில்லையா?  பயங்கரவாதவில்லையா?  சாராயம் காய்ச்சும் ரெளடி மீது பாயும் குண்டர் சட்டம் ஒரு குற்றத்தைக் கூட விட்டு வைக்காமல் செய்யும் முதலாளிகள் மீது பாய்வதில்லை.  காரணம் இக்குற்றங்கள் தனியார்மயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு அரசு அதிகாரிகள் துணையோடு நடத்தப்படுவதால் தான்!

உழைப்பைச் சுரண்டுவது, நாட்டின் பொருளாதார வளங்களைக் கொள்ளையடிப்பதோடு பண்பாட்டுத்துறையிலும் தங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் முதலாளிகள்.  விற்பனையை அதிகரிக்கவும், சந்தையை விரிவுப்படுத்தவும் பெரு விளம்பர யுத்தத்தை நடத்தி மொத்த சமூகத்திலும் நுகர்வு வெறியை, பாலூணர்வைத் தூண்டுகின்றனர்.  எல்லாவற்றையும் அனுபவிப்பது, எந்த வழியிலும் பணம் சேர்ப்பது, சுயநலம், ஆடம்பரமோகம் என்ற சித்தாந்தத்தைப் பரப்புவதன் மூலம் ஒழுக்கக் கேட்டையே புதிய சமூக ஒழுங்காக மாற்றுகின்றனர்.  இதன் விளைவு தான் நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, ரெளடித்தனம் ஆகியவை.  சமூகம் பாதுகாப்பற்றதாக மாறிவரக்காரணம் முதலாளிகளின் லாபவெறித்தானே!  இது வன்முறை இல்லையா?

முதலாளிகளின் அனைத்தும் தழுவிய இந்த வன்முறையை, பயங்கரவாதத்தை ஓட்டுக் கட்சிகளோ ஊடகங்களோ அம்பலப்படுத்துவதில்லை.  ஏனெனில் இவர்கள் தனியார்மயத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.  ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கை கொள்ளையடிப்பது, அதற்குப் போட்டி போடுவதே அவர்களின் ஜனநாயகம்.  உங்கள் எல்லோருக்கும் தெரிந்த இந்த உண்மையை அம்பலப்படுத்த்வதால் தான் நக்சல்பாரிப் புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் யார் வன்முறையாளர்கள்?  எது வன்முறை?

சூழ்ச்சி, வஞ்சகம், பித்தலாட்டம், மோசடி, லாபம் இவைதான் முதலாளிகளின் சிந்தனை. வரைமுறையின்றி இயற்கை வளங்கைச் சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழலை அழித்து பூமியின் இருத்தலுக்கே எதிராக இருப்பவர்கள் முதலாளிகள்.

உழைப்பாளி மக்களாகிய நாம் எப்பொழுதும் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புகிறோம்.  வன்முறையை நாம் சிந்திப்பதேயில்லை.  அதனால் தான் அணு உலை வேண்டாம் என்கிறோம்.  ஆபத்து எனத் தெரிந்தும் தங்கள் சுயநலத்திற்கு அணு உலை வேண்டும் என்கின்றனர் முதலாளிகள்.

உழைப்பாளிகள் வன்முறையைக் கையிலெடுத்தால் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளி வர்க்கம் ஒரு நொடியில் வீழ்ந்து விடாதா?  மாருதி தொழிலாளிகள் நடத்திய போராட்டம் ஒரு வெள்ளோட்டம் தான்.

முதலாளித்துவ சுரண்டல், பயங்கரவாத ஒடுக்குமுறை இவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டுமானால் காங்கிரஸ், பா.ஜ.க. பிற ஓட்டுக் கட்சிகள் அமுல்படுத்தும் தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டவேண்டும்.  இதற்கு மார்க்சிய – லெனினிய மாவோ சிந்த்னை வழியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் தலைமையில்  அணிதிரள்வது ஒன்றே வழி!

  • நாடு மீண்டும் காலனியாவதைத்
    தடுத்து நிறுத்துவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை
    அடித்து வீழ்த்துவோம்!
  • போலி ஜனநாயக தேர்தல் பாதையைத்
    தூக்கியெறிவோம்!
  • நக்சல்பாரி புரட்சிப் பாதையில்
    ஒன்றிணைவோம்!

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

தொடர்புக்கு:

அ. முகுந்தன்,
110, 2வது மாடி,  மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 24
பேச : 94448 34519

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

56
கொலையான மாணவன் ரஞ்சன் - பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி
கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி

திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். ஆசிரியர்களுக்கே இதுதான் கதியென்றால் நீச்சல் பயிற்சியாளரெல்லாம் உரிய தகுதிகளுடன், அதிக சம்பளத்துடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மேலும் சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன- மேட்டுக்குடி கூட்டத்திற்கு இந்த பள்ளியின் தாளாளர்தான் தலைமை தாங்கினார். ஆக கல்வியில் தனியார் மயத்தின் கொள்ளையை தடையின்றி நடத்தும் மற்ற கொள்ளையர்களுக்கு இந்த அம்மையார்தான் முன்னோடி.

சிறுமி சுருதி கொலையில் சியோன் பள்ளியின் தாளாளர் விஜயனை கைது செய்த போலீசு இங்கே திருமதி ஒய்ஜிபியை கைது செய்யவில்லை. வெறுமனே பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களை மட்டும் பேருக்கு கைது செய்திருக்கிறது. முழுப்பழியையும் இவர்கள் மீது போட்டு ஏதாவது தண்டனை வாங்கி வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். ஆகவே திருமதி ஒய்ஜிபையை கைது செய்து கொலை வழக்கு போடுவதுதான் தனியார் பள்ளிகளில் மாணவர் உயிரிழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் என்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன். அவரிடம் நேற்று கலைஞர் டீவி கண்ட நேர்காணலை இந்த வீடியோவில் காணலாம்.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!

அண்ணா-ஹசாரே
அண்ணா ஹசாரே

கேள்வி: அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது? ஹசாரே அரசியலற்ற வாதத்தை முன்வைப்பதாக குற்றம் சாட்டிய வினவு இப்போது அண்ணாவின் அரசியலை ஆதரிக்கப் போகிறதா இல்லையா? இதற்கு நேரடி பதில் தேவை. அண்ணா ஹசாரேவின் அரசியல் கட்சியை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை இழைக்கிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா?

கணேசன், சேலம்.

அன்புள்ள கணேசன்,

அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னார்; அப்படியில்லை என்று அவர் சொன்னதாக அவரது குழுவினர் சொல்லியதை பத்திரிகைகள் சொல்லின; இல்லையென்று மறுத்தார்; ஆமாம் என்றார்; இருக்கலாமென்றார்; கட்சி தொடங்கச் சொல்லி அண்ணா உத்தரவிட்டதாக கேஜ்ரிவால் சொல்கிறார் – உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக இது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வாசித்ததில்  இந்தளவுக்குத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் எழுத்தாளர் கோணங்கியின் பிற்காலக் கதைகளைப் போலவே இருப்பதால் லேசாக கிர்ரடிக்கிறது.

போகட்டும். நீங்கள் ஒரு முன்முடிவோடு நாங்கள் அண்ணாவின் கட்சி துவங்கும் அறிவிப்பை எதிர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்தின் வேட்டியும் பட்டாபட்டியுமே பறந்தோடிப் போய் விட்டபின் தலைப்பாகை களைந்து போனதற்கா நாங்கள் சஞ்சலப்படுவோம்? ஏற்கனவே இங்கே விஜயகாந்த் ஒரு கட்சியை நடத்துகிறார். விஜய டி.ராஜேந்தரும் ஏதோவொன்றை நடத்துவதாகச் சொல்லிக் கொள்கிறார். கார்த்திக் நடத்தாத கட்சிக் கூட்டங்களா? சேலத்தில் மாநாடு நடத்துமளவு சுப்ரீம் ஸ்டாரின் கட்சி பொளந்து கட்டுகிறது. காதலர்களின் புரட்சித் தலைவர் குமார் ஸ்ரீ ஸ்ரீ நடத்தும் “அகில இந்திய காதலர்கள் கட்சியில்” கோடிக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். கிளி ஜோசியக்காரர்கள் ஏதாவது கட்சி வைத்துள்ளார்களா என்கிற தகவல் எம்மிடம் இல்லை.  இத்தனை கட்சிகள் இருக்கும் போது, அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பித்தால் புதிதாகவா குடி முழுகப் போகிறது? வடிவேலு வேறு இப்போதெல்லாம் சினிமாக்களில் நடிப்பதில்லை – வறண்டு போன மக்களுக்கு இப்படியாவது ஆறுதல் கிடைக்குமென்றால் கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே.

indian-lovers-party
குமார் ஸ்ரீ ஸ்ரீயின் அகில இந்திய காதலர்கள் கட்சி

அண்ணா ஹசாரேவின் அறிவிப்பைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை பெரிய அளவு மகிழ்ச்சியும் இல்லை. நாங்கள் வேறொன்றைப் பற்றித்தான் அக்கறை கொள்கிறோம்.

கணேசன், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அண்ணா ஹசாரே மேல் எங்களுக்கு வன்மம் ஏதுமில்லை. உலக அளவில் வரவேற்புப் பெற்ற ஜஸ்ட் ஃபார் லாஃப் நகைச்சுவை நிகழ்ச்சியைப் போய் யாராவது வைவார்களா என்ன? மேலும் அரசியல் அரங்கில் அண்ணா ஹசாரே பெரிய அளவுக்கு ஒர்த் இல்லை என்பது ஒரு காரணமென்றாலும், அவரது தன்னம்பிக்கையை நினைத்து பெரிதும் ஆச்சரியப்படுகிறோம். நீங்களே நினைத்துப் பாருங்களேன், ஒரு கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் பட்டினத்துக்கு வரும் பெரியவர் ஒருவரை டைம்ஸ் நௌவிலிருந்து பேட்டியெடுக்கிறார்கள்; பிரதமர் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் – நேரில் சந்திக்கிறார், அமைச்சர்கள் பதட்டத்துடன் அறிக்கை விடுகிறார்கள்,  நாடெங்கும் ஆங்காங்கே சில பத்து பத்தரை போராளிகள் திரளுகிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்க ரிட்டர்ன் விவேகானந்தராலேயே நூறு பேரைத் திரட்ட முடியாமல் அல்லு கழண்டுவிட்டது – அண்ணா ஹசாரேவுக்கு திரண்டார்களென்பது சாதனைதானே?

அரசியலில் பல ஆண்டுகள் பழம் தின்று கொட்டையை துப்ப முடியாதபடி வெம்பிப் போன டி.ராஜேந்தருக்குக் கூட “நானும் டி.ஆர் தான்” என்று அறிவித்துக் கொள்ளும் தொண்டர்கள் இல்லை. ஆனால், அண்ணாவின் தொண்டர்களோ “தாமும் அண்ணா தான்” என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தொப்பியை மாட்டிக் கொண்டு தெருவில் அலைந்தார்கள். இது எப்பேர்பட்ட தியாகம்? இப்படி பல பத்து தியாகிகளை ஒரு கிராமத்து பெரிசினால் உருவாக்க முடியுமென்றால் அது ஒரு சாதனை தானே?

வார இறுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்த தயாராக இருக்கும் இந்த வீக் எண்ட் புரட்சியாளர்களைக் கொண்டே இந்தியாவைத் தலைகீழாய்த் திருப்ப முடியும் என்கிற நம்பிக்கை என்பது கோணவாயன்பட்டியிலிருந்து கல்கண்டு பத்திரிகைக்கு எழுதியனுப்பிய நெம்புகோல் கவிதையின் மூலம் இந்த பூமிப் பந்தையே நெம்பித் தள்ளி விடலாம் என்று கனவு காணும் கவிஞனின் நம்பிக்கைக்கு சற்றும் குறையாத தன்னம்பிக்கை அண்ணா ஹசாரேவின் தன்னம்பிக்கை. பாருங்கள், இந்த வாக்கியத்தில்தான் எத்தனை கை! அதனால் தான், மும்பையில் ஓடாத படப் பெட்டியோடு தில்லிக்கு வண்டியேறியிருக்கிறார். அங்கும் ரீல் அறுந்து போன பின்னும் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் என்றால் அதற்கு எத்தனை மனத்துணிவு வேண்டும்? கைப்புள்ள கூட  வான்டடாக கட்டதுரையிடம் மாட்டவில்லை என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

கணேசன், சென்ற ஆண்டு அண்ணாவின் கிராமமான ராலேகான் சித்திக்கு நாங்கள் புனித யாத்திரை சென்றிருந்த சமயத்தில்  தான் அவர் ஜூலைப் போராட்டத்தின் வெற்றியை தில்லியில் கொண்டாடி விட்டு ஊர் திரும்பியிருந்தார். தினமும் மூன்று முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் வறப் பட்டிக்காடு அது. அந்த நேரத்தின் பரபரப்பின் காரணமாக அண்ணாவுக்கு போலீசு பாதுகாப்பெல்லாம் போட்டிருந்தார்கள் – ஒரு 807-ம் ஒரு 205-ம் கையில் லத்தியோடும் இடையில் தொந்தியோடும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது அவர் அகில உலக வி.ஐ.பி ஆகியிருந்ததால் பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு பார்க்க வந்திருந்தனர்.

ஆனால், அவர் வி.ஐ.பி அந்தஸ்துக்கு வரும் முன்பு வரை பத்மாவதி கோவிலின் முன்னே உள்ள ஆலமரத்தடி பஞ்சாயத்து மேடை தான் அவரது ஜாகை. அதைச் சுற்றி வரும் மூன்று ரிடையர்டு காந்திக் குல்லாய்களும் வாடிப்போயிருந்த நான்கு சொறி-தெரு நாய்களுமே அவரது நண்பர்கள். தன் உற்ற நண்பர்கள் புடைசூழ அந்தப் பஞ்சாயத்து மேடையிலிருந்து அண்ணா வழங்கிய தீர்ப்புகள் ஒவ்வொன்றும் இன்றளவும் அந்த கிராமத்தின் இ.பி.கோ சட்டங்கள். அதிக பட்சம் ராலேகான் சிந்தி டைம்ஸ் எனும் ஒரு பக்க பத்திரிக்கையில் மேட்டருக்கு பஞ்சமென்றால் அண்ணாவை குழாயடி, கொசுக்கடி போன்ற பிரச்சனைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கச்சொல்லி செய்தி போடுவர்.  இப்படி ஒரு சாதாரண கிராமத்திலிருந்து துண்டை உதறி கக்கத்தில் சொருகிக் கொண்டு தில்லிக்கு வண்டியேறிய அண்ணாவின் வளர்ச்சி என்பது அண்ணாமலை ரஜினியின் வளர்ச்சியைக் காட்டிலும் மிகப் பெரியது.

கிரண்-பேடி-அரவிந்த்-கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால் – கிரண்-பேடி (டீம் அண்ணா)

இன்றைக்கு அரசியல் கட்சி துவங்கப் போவதாக அவர் சொல்கிறார் ( அல்லது அவரது குழுவினர் சொல்கிறார்கள் – அல்லது ஜந்தர்மந்தரில் சுண்டல் விற்ற சிறுவன் சொல்கிறான்) – இதற்காக எங்களுக்கு சந்தோஷமோ வருத்தமோ இல்லை. ஆனால், இந்த அறிவிப்பை சுமாரான திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூம் போட்டு கொண்டாடும் மன நிலையில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரசு தான். 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் அவரை சில்லறைதான் என்றாலும், எத்தனை துண்டுகளாக சிதறப் போகிறது என்பதை இப்போதே ராகுல் தலைமையிலான காங்கிரசு செயல்வீரர்கள் குழு கணக்கிட்டு வருவதாக தில்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணா ஹசாரே பிரிக்கும் ஓட்டைக்கூட எண்ண வேண்டிய அவலத்தில் காங்கிரசுக் கட்சி இருப்பது பெரும் சாதனையல்லவா?

அண்ணா அரசியலுக்கு வந்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம் – அதன் மூலம் ராகுல் காந்தியெல்லாம் சில்லறை வாக்குகளைப் பொறுக்கி ஒரு ஆளாக விரும்புவதை நினைத்தால் தான் பேஜாராக இருக்கிறது. முந்தா நாள் தான் நடைபழகப் ஆரம்பித்த சிறுவர்களான அகிலேஷ் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்களிடமெல்லாம் தோற்றுப் போன ராகுல் காந்திக்கு வரப்போகும் வாழ்வைப் பாருங்கள். பாஜ.கவும் காங்கிரசும் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளென்றாலும் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடுகளை அதாவது தேர்தல் சண்டைக்கெல்லாம் நமது அண்ணா பயன்படுகிறார் என்பது எத்தனை பெரிய சாதனை.

கணேசன், காங்கிரசின் போதைக்கு அண்ணா ஹசாரே ஊறுகாய் ஆவதை உங்களால் எப்படி கொண்டாட முடிகிறது? தயவு செய்து அண்ணாவே கட்சி கட்டி, தேர்தலில் நின்று, மெஜாரிட்டி பெற்று பிரதமர் ஆவார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் – ஏற்கனவே இட்லிக்கடை சரத்பாபுவில் இருந்து ஐ.ஐ.டி மாணவர்களின் லோக் பரித்ரன் வரை இயன்ற மட்டும் எகிறிக் குதித்தும் எட்டாத திராட்சைப் பழம் அது. வேண்டுமென்றால் கே.வி ஆனந்திடம் சொல்லி கோ படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் அண்ணாவை ஹீரோவாகப் போட்டு அழகு பார்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் தேர்தல் என்பது மெழுவர்த்தி ஊர்வலம் நடத்துவது போல் அத்தனை சுலபமானதில்லை.  சாதாரணமாக ஒரு அகில இந்திய அரசியல் கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தது ஆயிரம் கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று முன்னாள் மத்திய கேபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் சொல்கிறார். ராலேகான் சித்தியில் அண்ணாவுக்கு இருக்கும் ரெண்டு நெளிந்த அலுமினியத் தட்டையும் மூன்று நசுங்கிய சொம்பையும் (அதிலொன்று ஊர்பஞ்சாயத்தாருக்கு பாத்தியப்பட்டது) நாலு மஞ்சள் பைகளையும் விற்றால் கூட நூறு ரூபாய்கள் தானே தேறும் மீதம் தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்பது கோடியே தொன்னூற்றொன்பது லட்சத்து தொன்னூற்றொன்பதாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்களுக்கு அவர் எங்கே போவார்? இதற்காகவெல்லாம் அவர் வாழும் மாளிகை வீட்டை விற்றுவிட்டு ஆலமரத்தடியில் கொசுக்களோடு படுக்கப் போய்விடுவார் என்றெல்லாம் தோன்றவில்லை.

அண்ணா-ஹசாரே
அண்ணா ஹசாரே

தேர்தலில் போட்டியிடும் புனிதக் காரியத்துக்கு காசு தேற்ற கிரண் பேடி விமானத்தில் பயணித்து கள்ளக் கணக்கு எழுத வேண்டுமென்றால் கூட செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் டிக்கெட் செலவில் இருந்து தான் இத்தனை பெரிய தொகையைத் தேற்ற முடியும். இன்னும் மல்லையா கூட செவ்வாய் கிரகத்துக்கு விமானப் போக்குவரத்து சர்வீஸ் துவங்கவில்லை. கேஜ்ரிவால் வேண்டுமானால் என்.ஜி.ஓ நிதியை இதற்காகத் திருப்பி விடலாம் – ஆனாலும் கூட காங்கிரஸ் பி.ஜே.பியின் பலத்துக்கு முன்னாள் அது கொசு தான். ஏனெனில் முதலாளிகள் அனைவரும் ஜெயிக்கிற குதிரை மீதுதான் பணம் கட்டத் துணிவார்கள். வாயலேயே முழம் போடுபவர்களுக்கு கொஞ்சம் சில்லறைகளை வீசிவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, அண்ணா ஹசாரேவின் கட்சி டி.ஆரின் லட்சிய தி.மு.கவை விட கொஞ்சம் அதிகம் வளர வாய்ப்பிருந்தால் பத்து நூறு காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டைப் பிரித்து ராகுல் காந்திக்கு உதவி செய்யலாம் – ஒருவேளை சுத்தமாக டெப்பாஸிட் காலியானால் போட்ட காசைக் கூட எடுக்க முடியாது. ஐ.ஐ.டி சரத்பாபுவுக்காவது கைவசம் இட்லி சுடும் தொழில் இருக்கிறது. காலம் போன காலத்தில் அண்ணா ஹசாரே என்னதான் செய்வார்? மிஞ்சிய ஆயுள் முழுக்க உலகமெங்கும் விமானத்தில் பறக்க கிரண் பேடி வேண்டுமானால் தயாராய் இருக்கலாம் – ஆனால் தோத்தாங்காலிகளை யார் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்வார்கள்?

ராலேகான் சித்தியில் சிங்கமாக சுற்றி வந்தவரை அழைத்து வந்து முட்டுச் சந்தில் நிறுத்தி சாணியடி வாங்கிக் கொடுத்தது போலாகி விட்டது நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட அண்ணாவின் குழுவினர் வேலியில் போன ஓணானைப் பிடித்ததும் இல்லாமல் அதை அண்ணாவின் வேட்டிக்குள் விட்டு விட்டனர் என்பது எப்பேர்பட்ட சோகம்?

கணேசன், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்; நீங்கள்?

______________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

34

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 21

”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள்.  ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”

இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.

முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு. சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.

எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?

இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.

வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.

சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.

காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.

தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது. இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள  மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.

சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும்,  தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.

அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான். இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.

இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே  அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.

இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.

சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.

காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு  வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.

அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க –  ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.

இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.

அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து  விரட்டுகிறது.

எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.

அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

தொடர்புடைய பதிவுகள்

வினவுடன் இணையுங்கள்

தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்!

10
முகுல்-ராய்-சிவப்பு-கம்பள-வரவேற்பு
சொகுசு இரயிலும் – சிவப்பு கம்பளமும்

ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர்.

விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில்நிலையத்தின் நடைமேடைகளைக் கழுவிச் சுத்தமாக்கி, வாசனைத் திரவியம் தெளித்து, சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றிருக்கிறார்கள் தென்னக ரயில்வே அதிகாரிகள்! அமைச்சரின் நடத்தை இருக்கட்டும், அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதிகாரிகளின் நடத்தையை என்ன சொல்வது? பிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் இந்தக் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?

இதே விபத்து மே.வங்கத்திலோ அல்லது கேரளத்திலோ நடந்திருந்தால் அங்கே எந்த அதிகாரியாவது இப்படியொரு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கக் கூடுமா?  தமிழன்தான் இளித்தவாயன், வடவர் ஆதிக்கம் என்று இனவாதிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் விடையை வழங்கக் கூடும். அது விடையல்ல, விடையைப் புரிந்து கொள்ள முடியாமல் தமிழ்மக்களின் மூளையை மறிக்கின்ற தடை.

வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. மற்ற மாநிலங்களின் அரசியலும் பண்பாடும் உன்னதத்தில் உள்ளதாக இதற்குப் பொருள் அல்ல. இத்தகைய அருவெறுக்கத்தக்க அடிமைத்தனம் வேறு எங்கும் இல்லை என்பதே இதன் பொருள்.

அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில் விழுகிறது. அதிகாரிகளும் துணை வேந்தர்களும் ஜெயலலிதாவின் முன்னால் விநோதமான முறையில் உடம்பை மடித்தவாறு நிற்கப் பழகியிருக்கிறார்கள். இத்தகைய காட்சிகளை இந்தியாவில் வேறு எங்கே காணமுடியும்? வேறு எந்த முதலமைச்சராவது தலைநகரை விட்டு சுற்றுலாமைய மாளிகைகளில் தங்கி ஆட்சி செலுத்தியிருக்கிறார்களா? தலைமைச் செயலர் துவங்கி, பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை தமது கோப்புக்களை இருமுடியாகச் சுமந்து  கொடநாட்டிற்கு பயணிக்கிறார்கள். இத்தகைய கேவலத்தை ஊடகங்களும் அறிவுத்துறையினரும் அங்கீகரித்திருப்பதை வேறு எங்கும் காண இயலாது.

கோபாலபுரம் சி.ஐ.டி நகர் குடும்ப ஆட்சியைப் போன்ற அருவெறுக்கத்தக்க அற்பத்தனத்தை வேறு எங்காவது நாம் கண்டிருக்க முடியுமா?  டெசோ எனும் காற்றுப் போன பலூனைப் பாருங்கள்! சுதந்திர ஈழம் என்று தொடங்கி, பின்னர் அது ஈழத்துயரை பகிர்ந்து கொள்ளும் சோக காவியமாகி, பிறகு படம் கொடி முழக்கம் ஏதுமற்ற மவுன ஊர்வலமாகி, கடைசியில் உள்துறை அமைச்சகத்தின் நற்சான்று பெற்ற நடவடிக்கையாகிவிட்டது.

கெக்கெக்கே என்று கருணாநிதியைப் பார்த்து சிரிக்க விரும்பினால், ஈழத்தாய் என்று ஜெயலலிதாவுக்கு காவடி சுமந்த சீமான், நெடுமாறன், இன்னபிற தமிழினவாதிகளின் வரலாறும், ஈழத்தைக் காப்பாற்ற அத்வானியின் காலைப்பிடித்த வைகோ வின் அரசியல் சாணக்கியமும் நினைவில் வந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன. கிளிநொச்சியின் தோல்வி, ஒரு மிகப்பெரிய பின்னடைவை முன்னறிவித்த பின்னரும், வெற்றி வெற்றி என்று ஆய்வுக்கட்டுரை எழுதுவது, எல்லாம் முடிந்து புல் முளைத்த பின்னரும், தம்பி இருக்கிறார் என்று சொல்லக் கேட்டு ஓ வென்று ஆர்ப்பரிப்பது இவையெல்லாம் தமிழகம் தவிர வேறு எங்கே சாத்தியம்?  யோசித்துப் பார்க்கும்போது, முகுல் ராய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததொன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை.

________________________________________________

– புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

5

புதிய-கலாச்சாரம்-ஆகஸ்டு-2012

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

அடிமைகளின் தேசம்!
“வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.”

கடவுளை நொறுக்கிய துகள்!
“இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.” “தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.”

கடவுளை நொறுக்கிய துகள்! ஒரு வரலாற்று விளக்கம்
“கடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

நாமக்கல்பிராய்லர்பள்ளிகள்!
“நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.”

 கல்லறைக் கருநாகங்கள்!
தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம்.”

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் எஸ்.எம்.எஸ். புரட்சி!
“உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும். ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.”

 கருணையா, கொலையா? வரமா, சாபமா?
“அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.”

 திரைவிமரிசனம்: ‘மேட் சிட்டி‘: பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
“சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் ’மேட் சிட்டி’.”

குறுக்கு வெட்டு
ஜீன்ஸ் அணிந்தால் கொலை, பேட்மேன் ரிடர்ன்ஸ், ராம்போவுக்கு புரியுமா, இந்தியாவின் உறக்கமின்மை, தங்கக் கவலைகள், காதல் கொலை, கட்சி மாறி ஓட்டுப்போடும் கட்டுப்பாடான கட்சி…

பிச்சை புகினும் கற்கை நன்றே….
“யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!”

மாட்டுத்தாவணிகோயம்பேடு
“தனியார்மயத்தால் தறிகெட்டு ஓட்டி நாட்டையே விபத்துக்குள்ளாக்கும் மன்மோகனையும், ப. சிதம்பரத்தையும் ‘மினிஸ்டர்’ என மரியாதையாகப் பேசும் வாய்கள் பத்திரமாய் இறங்கியவுடன்.. உதிர்க்கும் ஒரு சொல் “ஊம்.. வந்துட்டேன், ஒரு வழியா ஓட்டிட்டு வந்து சேர்த்துட்டான்”.

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்