Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 744

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

108

மாருதி

மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.

“கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆலையைத் திறக்கப் போவதில்லை. எனக்குப் பணம் முக்கியமில்லை. ஊழியர்களின் பாதுகாப்புதான் முக்கியம்” என்று கூறி கதவடைப்பை அறிவித்திருக்கிறார் மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா. “அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று கவலை தெரிவித்திருக்கின்றன தரகு முதலாளிகளின் சங்கங்கள். 3000 தொழிலாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு போட்டு, நூறு பேரைக் கைது செய்து மீதிப் பேரை தேடுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரம் முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரியானா போலீசு. தொழிலாளர்கள் அனைவரும் தலைமறைவாகியிருக்கின்றனர்.

பேயறைந்து வெளிறிப்போன ஆளும் வர்க்கத்தின் முகத்தைத் தரிசிப்பதற்கான அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மாருதி தொழிலாளர்களுக்கு  நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிவர்க்கம்.

ஜூலை 18 அன்று நடைபெற்ற ஒரு சம்பவம்தான் “திரி” பற்றிக் கொண்டதற்கான காரணம் என்று கூறுகிறார்கள் தொழிலாளர்கள். “ஜியாலால் என்ற தொழிலாளியை மேலாளர் ஒருவன், சாதியைச் சொல்லி திட்டினான். தீண்டாமைக் குற்றத்துக்காக அந்த மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மேலாளருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தட்டிக் கேட்ட அந்தத் தொழிலாளியை நிர்வாகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. தற்காலிகப் பணிநீக்கத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் எற்கவில்லை. அன்று மாலை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, அடியாட்களைக் கொண்டுவந்து இறக்கி நிர்வாகம்தான் தொழிலாளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்தது” என்கிறது மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராம் மெகர் விடுத்துள்ள அறிக்கை.

தற்காலிகப் பணிநீக்கத்தை நிறுத்தி வைப்பதாகப் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், அதன் பின்னரும் ஏன் இப்படி நடந்தது என்பதைத்தான் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் வெகுளித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார், மாருதி நிறுவனத்தின் தலைவர் பார்கவா.

யாரோ ஒரு தொழிலாளியை, எவனோ ஒரு மேலாளர், ஏதோ ஒரு நாள் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசியிருந்தால், அதற்காக ஆலை எரிந்திருக்குமா? இல்லை. கொடூரமான பணிநிலைமைகளாலும் அடக்குமுறையாலும் அன்றாடம் கிடிக்கப்பட்ட வெடிமருந்தாகக் காய்ந்திருந்தனர் தொழிலாளர்கள். வெடிப்பதற்கு ஒரு சிறுபொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்தப் பொறி அரியானா மாநிலத்தின் இழிபுகழ் வாய்ந்த ஆதிக்க சாதிவெறியாக அமைந்ததையும், அதுவே தொழிலாளிகளின் வர்க்கக் கோபத்தைப் பற்றவைத்து வெடிக்கச் செய்திருப்பதையும் நாம் ஒரு கவித்துவ நீதியாகக்தான் கொண்டாட வேண்டும்.

மாருதி

மாருதி சுசுகி நிறுவனம், ஜப்பானிய சுசுகி மோட்டார் கார்ப்பரேசனின் ஒரு கிளை. இந்திய கார் சந்தையில் பாதி மாருதியின் கையில். மாருதி உற்பத்தி செய்கின்ற 14 மாடல்களில், சொகுசு ரகத்தைச் சேர்ந்தவையான சுவிப்ட், டிசையர், ஏ ஸ்டார், செடான் ஆகிய கார்கள் குர்கான் அருகில் உள்ள இந்த மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு 1152 கார்கள். ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுசுகியின் ஆண்டு விற்பனையில் (201011) மாருதியின் பங்கு 48%.

நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள். முதல் ஷிப்ட் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாருதி தொழிலாளி காலை 5 மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும். 6.30க்கு ஆலைக்குள் நுழைய வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அரை நாள் சம்பள வெட்டு. “சம்பளம்தான் இல்லையே” என்று திரும்பிப் போக முடியாது. ஆலைக்குள் நுழைந்துவிட்டால் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். சம்பளவெட்டு என்பது தாமதத்துக்கான தண்டனை.

மாருதி சுசுகி காரின் 4 மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும் ஒரு கார் இந்த 180இல் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அதன் ஸ்டியரிங் வலது புறமாஇடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலாடீசலாஎரிவாயுவா, ஏ.சி உள்ளதாஇல்லாததா, 32 வகை இருக்கைகளில் என்ன ரகம், 90 வகை டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள் போன்ற காரின் அங்க அவயங்கள் என்னென்ன வகையைச் சேர்ந்தவை என்ற  பட்டியலை நெற்றியில் சுமந்தபடியே அந்த கார் அசெம்பிளி லைனில் நகர்ந்து வரும். அதைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பொருத்தமான பாகத்தை தொழிலாளி அந்தக் காரில் பொருத்த வேண்டும். இதற்கு ஒரு தொழிலாளிக்குத் தரப்படும் அவகாசம் 48 நொடிகள். (அமன்சேத்தி, தி இந்து, 6.11.2011)

ஒரு நொடி தாமதமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி தாமதம் என்று பதிவாகும். அந்த உற்பத்தி இழப்புக்கு ஒவ்வொரு தொழிலாளியும் பொறுப்பேற்க வேண்டும்.

நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதற்றத்தில் வேலை செய்யவேண்டியிருப்பினும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடன் ஐம்புலன்களையும் குவித்து ஒரு தொழிலாளி வேலை செய்யவேண்டும்.

ஒரு தொழிலாளி குனிவதற்கும், நிமிருவதற்கும், திரும்புவதற்கும், ஸ்குரூ டிரைவரை வைத்து திருகுவதற்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும்  தேவைப்படும் நொடிகளை  மைக்ரோ செகண்டு துல்லியத்துடன் கணக்கிட்டு, கணித அல்கோரிதம்களின் அடிப்படையில் அசெம்பிளி லைனின் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் 100 நொடிகளாக இருந்த இந்த நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டு கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டு விட்டது. எனவே உற்பத்தியும் இரு மடங்காகிவிட்டது.

கணினிமயமாக்கப்பட்ட இந்த எந்திர வலைப்பின்னலில், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல தொழிலாளி வெறும் உப உறுப்பு. மனிதன் என்கிற காரணத்தால் அவனுக்கு, உணவுக்கு 30 நிமிட இடைவேளை. கான்டீனுக்கு போக 10 நிமிடம், வர 10 நிமிடம், சாப்பிட 10 நிமிடம். தேநீர் இடைவேளை 7.5 நிமிடம்  இருமுறை. கழிவறையில் நின்று சிறுநீர் கழித்தபடியே பிஸ்கெட்டைத் தின்று, தேநீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் தாமதமாகத் திரும்பினாலும் அரைநாள் சம்பள வெட்டு.

மாருதிதொழிலாளர்கள் தமது பணி நிலைமைகளை மேம்படுத்துவது பற்றிப் பேசுவதைக்கூட மாருதி சுசுகி நிர்வாகம் அனுமதித்ததில்லை. மாருதி நிறுவனத்தின் கட்டுப்பாடு சுசுகியின் கைக்கு மாறியவுடனே, தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் 1000 பேர் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டனர். மாருதி உத்யோக் காம்கார் யூனியன் என்ற கைக்கூலி சங்கத்தை சுசுகி நிர்வாகம் 2001இல் உருவாக்கியது. 11 ஆண்டுகளாக அந்த சங்கத்தில் தேர்தலே நடந்ததில்லை.

அதிகரித்துக் கொண்டே போகும் அசெம்பிளி லைனின் வேகம், குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி முறை ஆகியவற்றைச் சகிக்க முடியாத தொழிலாளர்கள், நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தை ஒழித்து, சுயேச்சையான தமது சங்கத்தைக் கட்டுவதன் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும் என்று, புதிய சங்கத்துக்கான போராட்டத்தை சென்ற ஆண்டு துவங்கினர்.

உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகளை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது அரியானா உயர் நீதிமன்றம். உடனே ஆலையின் கதவை இழுத்துப் பூட்டி, தண்ணீர் சப்ளையைத் துண்டித்து, உணவு கொண்டு செல்வதையும் தடுத்தது போலீசு. தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள்.  “ஆலைவாசலிலும் உட்காரக் கூடாது” என்றது நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு. 33 நாட்கள் கதவடைப்பு செய்தது நிர்வாகம். புதிய சங்கத்தைப் பதிவு செய்ய விடாமல் இழுத்தடித்தது மாநில அரசு.

புதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்காகப் பொய்வழக்குப் போட்டது நிர்வாகம். 16 இலட்சம் வாங்கிக் கொண்டு ராஜினாமா செய்தால், வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி அவர்களை விலை பேசியது. அவர்கள் சரணடைந்தவுடன், “தலைவர்கள் விலைபோய்விட்டார்கள்” என்ற பிரச்சாரத்தையும் நிர்வாகமே ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளிகளின் உறுதியைக் குலைக்க முயன்றது, முடியவில்லை.

பிறகு 103 கூடா நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஏற்றுக் கொண்டு நன்னடத்தைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வேலை என்று அறிவித்தது. 2 மாதங்கள் தொழிலாளிகள் கையொப்பமிட மறுத்துப் போராடினர். “இவ்வாறு கையெழுத்து கேட்பது 1947 தொழில் தகராறு சட்டத்தின்படி முறைகேடானது” என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டார்.

ஆனால், எந்த அமைச்சனையும் சுசுகி நிர்வாகம் சட்டை செய்யவில்லை. “பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் வேலை” என்றது. பக்கத்திலுள்ள தொழிலாளியுடன் வம்பு பேசுவது, பாட்டுப் பாடுவது, சுத்தமாக இல்லாதிருப்பது, நேர்த்தியாக உடையணியாமலிருப்பது, கழிவறையில் கூடுதல் நேரம் செலவிடுவது  இவையெல்லாம் பத்திரத்தில் நிர்வாகம் குறிப்பிடும் கூடாநடத்தைகளில் சில. இவற்றுக்காக அபராதம், தற்காலிக பணிநீக்கம் முதல் நிரந்தப் பணிநீக்கம் வரை எதையும் செய்யும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உள்ளது என்று கூறுகிறது இந்தப் பத்திரம். கம்பெனியின் நிலை ஆணையோ, “ஆலை வளாகத்தில் மட்டுமின்றி, ஆலைக்கு வெளியேயும் எந்த நேரத்திலும் தொழிலாளியைச் சோதனை போடுவதற்கு நிர்வாகத்துக்கு உரிமை உண்டு” என்கிறது.

மாருதி

1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி இவையெல்லாம் சட்டவிரோதமானவை என்பது மட்டுமல்ல, விதிகள் என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தைத்தான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திணிக்கிறது மாருதி. மாருதி நிறுவசனத்தின் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர்தான் நிரந்தரத் தொழிலாளி. மூன்றில் இருவர் பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ஒரு நிரந்தரத் தொழிலாளியின் நிச்சயமான மாத ஊதியம் 8000 ரூபாய். மீதி 8000 ரூபாய் “நிபந்தனைக்குட்பட்ட” மாத ஊதியம். ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இந்த 8000 ரூபாயில் 1500 ரூபாய் வெட்டப்படும் என்பதுதான் நிபந்தனை. 5 நாள் லீவு எடுத்தால் 7500 ரூபாய் காலி. பயிற்சித் தொழிலாளர்கள் என்று 500 பேர் உள்ளனர். இவர்களது மாத ஊதியம் 6500. நிபந்தனைக்குட்பட்ட மாத ஊதியம் 2250. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் வெட்டப்படும் தொகை 800 ரூபாய். அப்பிரன்டீஸ்களின் மாத ஊதியமோ வெறும் 3000 ரூபாய்.

2001-02இல் 900 கோடி ரூபாயாக இருந்த மாருதி சுசுகியின் ஆண்டு வருவாய், 2010-11 இல் 36,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அவர்களே கணக்கு காட்டியபடி வரி விதிப்புக்குப் பிந்தைய இலாபம் 2200 விழுக்காடு ( 105 கோடி ரூபாயிலிருந்து 2289 கோடி ரூபாயாக) உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகியின் மானேஜிங் டைரக்டர் பெற்ற ஆண்டு ஊதியம் 47.3 இலட்சம் ரூபாய். 2010-11இல் அவரது ஊதியம் 2.45 கோடி ரூபாய். அதாவது 419% உயர்வு.

2007ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆக மூத்த தொழிலாளிக்கு கிடைத்த மாத ஊதியம் சுமார் 23,000 ரூபாய். இன்று அவரது மாத ஊதியம் 25,000 ரூபாய். 5.5 % ஊதிய உயர்வு. இந்த நான்கு ஆண்டுகளில் அரியானா மாநிலத்தின் அதிகார பூர்வ நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணே 50% உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 ஆண்டுகளில் தொழிலாளியின் உண்மை ஊதியமும் வாழ்க்கைத் தரமும் பன்மடங்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

“கோன் உயரக் குடி உயரும். முதலாளிகள் உயரக் தொழிலாளிகள் உயர்வார்கள். ஜி.டி.பி. உயர மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்”  என்று தலைகீழ் சூத்திரம் கூறி வருகிறார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் அப்போஸ்தலர்கள். பத்தாண்டுகளில் மாருதியின் விற்பனை 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. இலாபம் 22 மடங்கு உயர்ந்திருக்கிறது. புல்லுக்கு எதுவும் பொசியவில்லை. குடி மென்மேலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தொழில்துறை குறித்த ஆண்டு சர்வேயின்படி, 2004-05இல் 85 இலட்சமாக இருந்த வாகன உற்பத்தி         (இருசக்கரம் முதல் லாரி வரையிலான அனைத்து வாகனங்களும்) 2011-12இல் 204 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. கார்களின் ஆண்டு உற்பத்தி மட்டும் ஆண்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. உலகின் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றியமைக்கும் பொருட்டு முதலாளிகளுக்கு மானியங்களை வாரி வழங்கி வருகின்றன மத்தியமாநில அரசுகள். (ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியாஸ் எகானமி, ஜூன், 2012 )

டெல்லிக்கு அருகில் இருக்கும் குர்கான்  மானேசர்  பவால் பகுதியில்தான் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியில் 60% நடைபெறுகிறது. அங்கிருக்கும் 10 இலட்சம் தொழிலாளர்களில் 80% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் (பிசினெஸ் ஸ்டாண்டர்டு, 6.6.2011 )

மாருதியில் மட்டுமல்ல, எந்த ஆட்டோமொபைல் துறை நாடு முழுவதும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்களோ, அந்த துறை முழுவதும் ஏறத்தாழ இதுதான் நிலைமை.

மகிந்திரா, நாசிக் (மே 2009), சன்பீம் ஆட்டோ, குர்கான் (மே,2009), போஸ்ச் சேஸிஸ், புனே (ஜுலை,2009), ஹோண்டா மோட்டர் சைக்கிள், மானேசர் (ஆக,2009), ரிக்கோ ஆட்டோ, குர்கான்(ஆக,2009), பிரிகால், கோவை (செப்,2009), வோல்வோ, ஹஸ்கொடே(ஆக,2010), எம்.ஆர்.எப்., சென்னை, (அக்,2010; ஜூன்,2011), ஜெனரல் மோட்டார்ஸ், ஹலோல், குஜராத் (மார்ச், 2011), மாருதி சுசுகி, மானேசர், ஜன்,அக் 2011), போஸ்ச், பெங்களூரு(செப், 2011), டன்லப், ஹூக்ளி(அக் 2011), காபாரோ, சிறீபெரும்புதூர்(டிச, 2011), டன்லப், அம்பத்தூர்(பிப் 2012), ஹூண்டாய், சென்னை (ஏப், டிச. 2011, ஜன. 2012)  இது கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழில் துறையில் தொழிலாளி வர்க்கம் நடத்திவரும் போராட்டங்களின் பட்டியல்.

மானேசர் வன்முறை காரணமாக இந்த “235 ரூபாய் கவர்னர் உத்தியோகம்” இந்தியாவிடமிருந்து கை நழுவிப் போய்விடுமென்றும், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவ ஊடகங்கள். பத்து ஆண்டுகளில் 900 கோடியிலிருந்து 36,000 கோடியாக வருவாயை உயர்த்திக் கொண்டிருக்கும் சுசுகி நிறுவனம், ஒரேயொரு செருப்படிக்கா ரோசப்பட்டுக் கொண்டு கிளம்பி விடும்? இந்தியாவிலிருந்து பிரிட்டனோ, இராக்கிலிருந்து அமெரிக்காவோ அப்படி ஓடியதாக வரலாறில்லையே!

இருப்பினும் அந்தப் பகுதியில் ஆலைகளுக்கு நிலத்தை விற்றுவிட்டு, கிடைத்த காசில் வீடு கட்டி வாடகைக்கு விட்டும், கடை வைத்தும், லாரிவேன் ஓட்டியும் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் முன்னாள் விவசாயிகளை, ரியல் எஸ்டேட் தரகர்கள், லேபர் காண்டிராக்டர்கள் போன்ற ஒட்டுண்ணிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள். வெளியூரிலிருந்து பிழைக்க வந்த தொழிலாளர்கள், அமைதியைக் கெடுப்பதால், உள்ளூர்க்காரர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், செங்கொடிக்காரர்களின் பிரச்சினை இல்லாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் வெளிநாட்டு சுசுகி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனர், உள்ளூர் ஆதிக்கசாதி “கப்” பஞ்சாயத்துகளின் தலைவர்கள்.

மாருதிபன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே மோதலைத் தூண்டிவிடும் சதிகளை மாநில அரசும் போலீசும் ஓட்டுப் பொறுக்கிகளும் இணைந்து அரங்கேற்றுகிறார்கள். எட்டப்பனும் தொண்டமானும் கூடிப்பெற்ற கைக்கூலியான நரேந்திர மோடியோ ஜப்பானுக்கே சென்று சுசுகி கார்ப்பரேசனின் தலைவர் ஒசுமா சுசுகியின் காலை நக்கி, குஜராத்துக்கு அழைக்கிறார்.

துரோகிகளும் அடிமைகளும் வன்முறையின் ஆபத்து குறித்து தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கிறார்கள். அகிம்சை வழியில் நடக்குமாறு அறிவுரை வழங்குகிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன் அகிம்சை வழியில் தொழிற்சங்க உரிமை கேட்டுப் போராடிய ஹோண்டா தொழிலாளர்களை இரத்தத்தில் குளிப்பாட்டியது அரியானா போலீசு. ஆனால், கொலைமுயற்சி குற்றம் சாட்டப்பட்டு 63 தொழிலாளர்கள் தான் இன்று வரை கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீசுக்காரன் மீதோ, மானேஜர் மீதோ எந்த வழக்கும் இல்லை.  3 ஆண்டுகளுக்கு முன் இதே குர்கானில் அஜித்சிங் என்ற தொழிலாளியை ஆள் வைத்துக் கொன்ற முதலாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கொலை வழக்கு தூங்குகிறது.

தொழிலாளி வர்க்கத்துக்கு  எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கும் ஊடகங்கள் எவையும், தொழிலாளர் நல சட்டங்களையும் தொழிற்சங்க உரிமைகளையும் கடுகளவும் மதிக்காத மாருதி உள்ளிட்ட நிறுவனங்களை ஒப்புக்குக் கூட எச்சரிப்பதில்லை. 2008இல் குர்கானில் கிரேசியானோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் எம்.டி. லலித் கிஷோர் சவுத்திரி தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டபோது, அன்றைய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னான்டஸ், “இந்தச் சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை மதித்து மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று வாய்தவறிச் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு கார்ப்பரேட் உலகம் கொதித்தெழுந்தவுடன், “தான் சொன்னது தவறு” என்று முதலாளிகளிடம் வருத்தம் தெரிவித்தார்.

அது தவறுதான். பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடம் மனிதத்ததன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதை நாடு முழுவதும் நாள்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். தனியார்மய  தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் கொண்ட மிருகமாகவே மாறியிருக்கும் முதலாளி வர்க்கத்தின் முகத்தின் மீது விழுந்திருக்கிறது மாருதி தொழிலாளர்கள் கொடுத்த அடி!

மத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தையும் தனது ஏவலாட்களாக வைத்திருக்கும் திமிரில், தொழிலாளி வர்க்கத்தை புழுவைப் போலக் கருதி நடத்திய மாருதி சுசுகி நிர்வாகம் அவமானத்தில் புழுங்குகிறது. அதன் அதிகாரிகளோ அச்சத்தில் நடுங்குகிறார்கள்.

மருத்துவமனையில் கிடக்கும் ஜப்பானிய அதிகாரிகள், தங்கள் சொந்தக் கம்பெனியின் வளாகத்துக்குள்ளேயே, உயிர் பிழைப்பதற்கு ஓடி ஒளிந்த கதையை, சக பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறட்டும்!

முதலாளித்துவ நிறுவனங்களில் தொழிலாளிகளை அச்சுறுத்தும் எச்.ஆர். வேட்டை நாய்கள், அவனீஷ் குமார் தேவின் புகைப்படத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து, நாள்தோறும் தம் அச்சத்தைப் புதுப்பித்துக் கொள்ளட்டும்!

எட்டு மணி நேரமோ, பனிரெண்டு மணி நேரமோ தனது ஆற்றலைப் பிழிந்து விற்கும் தொழிலாளி வர்க்கம், ஒரே ஒரு கணம் எதிர்காலம் குறித்த தனது பொருளற்ற அச்சத்தைக் கைவிடுமானால், அந்தக் கணத்தின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளட்டும்!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

“பயங்கரவாதம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் அதனை அன்றுதான் முதன் முறையாக அனுபவித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார்கள், மருத்துவமனையில் கிடக்கும் சில மாருதி அதிகாரிகள். பயங்கரம்தான்! ஒவ்வொரு நாளும் தங்கள் மீது பயங்கரத்தை ஏவும் முதலாளி வர்க்கம் சுவைக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தால் பரிமாறப்பட்ட சிவப்பு பயங்கரம்!

_______________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

9

புதிய-ஜனநாயகம்-ஆகஸ்டு-2012

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1) ”தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! மறுகாலனியாக்கக் கொள்கையை மோதி வீழ்த்துவோம்!!”  

2) ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!

3) மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் பிடித்த மிருகமாக மாறியுள்ள முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமான பதிலடி கொடுத்திருக்கிறார்கள், மாருதி தொழிலாளர்கள்.

4) சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாப வெறியா?                       
கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது, சட்டம். அது, சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை.

5) கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
நான்கு ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்திய தனியார் பள்ளி முதலாளியை முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கடி தண்டனை கொடுப்போம்

6) மாணவரைத் தற்கொலைக்குத் தள்ளிய தனியார் பள்ளியை மூடு! பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்!”                                        
-பெற்றோர்களுடன் இணைந்து ம.உ.பா.மையம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.

7) நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! -ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை.

8) தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!
இரான் மீது போர்த் தாக்குதல் நடத்துவதற்காகப் பயங்கரவாதப் பீதியூட்டிவரும் அமெரிக்கா, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.

8) போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!
ஒவ்வொரு நாளும் நடந்துவரும் போலீசின் அத்துமீறல்கள், பொதுமக்களை எப்படி போலீசிடமிருந்து பாதுகாப்பது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

9) பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.

10) தொடரும் போலீசு அட்டூழியங்களுக்கு எதிராக கருவேப்பிலங்குறிச்சி மக்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்!

11) சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!

12) மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்

13) பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
மருந்துப் பரிசோதனைக்கு யூதர்களை நாஜிகள் பயன்படுத்திக் கொண்டதைப் போல, ஏழை இந்திய மக்களை ஏமாற்றி முறைகேடான மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

14) ”இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!” – -ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி

 புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

4
நோய்

நோய்

‘அமெரிக்கா உலகின் வல்லரசு. அங்கு பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் டாலரில் சம்பாதிக்கிறார்கள், உலகின் எல்லா நாட்டவரும் அமெரிக்க குடிமக்கள் ஆக போட்டி போடுகிறார்கள், எல்லா நாடுகளும் அமெரிக்கா போல வல்லரசாக முயற்சிக்கின்றன’ என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் கருத்தாக்கம்.

இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும் என்ற அப்துல் கலாமிய கனவு அமெரிக்கா போல இந்தியாவும் ‘முன்னேறுவது’ என்பதைத்தான் குறிக்கிறது. வல்லரசு என்றால் எப்படி இருக்க வேண்டும்? இராணுவ வல்லமை, விண்வெளி சாகசம், போர் என்றுதான் இத்தகைய ‘தேசபக்தர்கள்’ பட்டியலிடுவார்கள். கூடவே கொசுறு பின்னிணைப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, உடல் நலம் பேண அனைவருக்கும் கட்டுப்படியாகும் கட்டணத்தில் மருத்துவ வசதிகள், தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் முதலியவற்றையும் கூறுவார்கள்.

அமெரிக்காவின் ஜனநாயகமும், சந்தைப் பொருளாதாரமும், வல்லரசு வலிமையும் மக்கள் நலன் சார்ந்த துறைகளில் என்ன சாதித்திருக்கின்றன? அமெரிக்காவின் மருத்துவத் துறையைப் பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருக்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், தலையை கவட்டை வழியாக விட்டு கையை கீழே நீட்டி மூக்கை தொடுவதுதான் அமெரிக்க மருத்துவத் துறையின் செயல்பாட்டுக்கு சரியான உதாரணமாக இருக்க முடியும்.

மருத்துவத் துறையின் ஒரு பகுதியான மருந்து ஆராய்ச்சி, பரிசோதனை, விற்பனை பற்றிய Big Bucks Big Pharma என்ற ஆவணப் படம் அந்த அவலங்களை அம்பலப்படுத்துகிறது.

மருந்துத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்

  • அமெரிக்காவில் எப்படி செயல்படுகின்றன
  • மக்களை எப்படி மேலும் மேலும் மருந்துகளை வாங்கி பயன்படுத்த தூண்டுகின்றன
  • புதிய புதிய நோய்களை எப்படி கண்டுபிடிக்கின்றன

என்ற விவரங்கள் இந்த ஆவணப்படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

மேலும்,

  • தமது மருந்துகளை அதிகம் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் விலையுயர்ந்த பரிசுகளை (லஞ்சம்) கொடுப்பது
  • மருந்து ஆராய்ச்சியில் லாப நோக்கிற்காக மோசடி செய்வது
  • மருந்து ஒழுங்கு முறை ஆணையத்தையும் ஊழல் மயமாக்குவது
  • புதிய மருந்துகளுக்கான பரிசோதனைகளை தமது லாப நோக்கத்திற்கு ஏற்றபடி வடிவமைப்பது
  • தமக்கு ஏற்றபடி சட்டங்களை உருவாக்க மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்குவது

என்று அந்த கிரிமினல்கள் விட்டு வைக்காத உத்திகள் எதுவும் இல்லை.

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது, தகுதி பெற்ற மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் கண்டறிந்த நோய்க்கூறுகளின் அடிப்படையில் அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது நவீன மருத்துவத்தின் மைய அம்சம். இந்த வேதி மருந்துகளின் பயன்பாடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல் உலகப்போரில்தான் முதல் முதலில் காயங்களை குணப்படுத்த நவீன முறைகளை பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்த 100 ஆண்டுகளில் மருந்துகளை

விற்கும் நிறுவனங்கள் பகாசுரன்களாக வளர்ந்து இப்போது உலகளாவிய சந்தையில் ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய்களை விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

தனியார்மயம், தாராளமயம் விரிவடைந்த 1980களுக்கு முன்பு வரை மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்கள் மூலமாகவே  மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்து வந்தன. அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனும், பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் பிரதிநிதித்துவப் படுத்திய கார்ப்பரேட்  அரசுகள், மருந்துகளை விளம்பரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தி விட கடந்த 20 ஆண்டுகளில் மருந்து விளம்பரங்கள் பெருகியிருக்கின்றன.

இப்போது மருத்துவர்களால் பரிந்துரைக்க்கப்பட வேண்டிய மருந்துகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விளம்பரங்களில் மருந்துகளை சாப்பிட்ட மக்கள் ஆனந்தத்தில் ஆடிப் பாடுகிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், அழகில் மிளிர்கிறார்கள். அதைப் பார்க்கும் பார்வையாளரை, தனது மருத்துவரிடம் அந்த மருந்தை கேட்டு வாங்கும்படி விளம்பரம் அழைக்கிறது. மருந்து எதற்காக பரிந்துரைக்கப்பட்டதோ அந்த நோயைப் பற்றியோ, அதன் பாதிப்புகளையோ இந்த விளம்பரங்கள் பேசுவதில்லை. மருந்தின் பக்க விளைவுகளையும் பார்வையாளருக்கு விபரமாக காட்டுவதில்லை. பெப்சி கோலா, குர்குரே சிப்ஸ், குளியல் சோப்பு விளம்பரங்கள் போல இந்த மருந்து விபரங்கள் மக்கள் மத்தியில் உணச்சி பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை மருந்துகளின் பக்கம் தள்ளுகின்றன.

என்ன விளைவு? மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. கூடவே மருந்துகளின் பாதகமான பக்க விளைவுகளால் லட்சக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் இறப்புகளுக்கான காரணங்களில் அது 5வது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் பாதகமான மருந்து பக்க விளைவுகள் 1 லட்சம் பேரின் இறப்புக்கும் சுமார் 15 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன.

எந்த மாதிரி மருந்துகள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகின்றன?

‘1998 முதல் 2004 வரையிலான ஏழு ஆண்டுகளில் புதிதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட மருந்துகளில் 14% மட்டுமே ஏற்கனவே விற்கப்படும் மருந்துகளை விட சிறப்பானவை என்று சொல்லக் கூடிய புதிய வேதி சேர்மங்கள். பெரும்பான்மை, பழைய வேதிப் பொருட்களை சிறிதளவு மாற்றி உருவாக்கப்பட்டவைதான். சந்தையில் ஏற்கனவே கிடைக்கும் மருந்துகளை விட அவை எந்த வகையிலும் சிறந்தவை இல்லை. இவற்றை ‘ஈயடிச்சான்’ மருந்துகள் என்கிறோம்’ என்று விளக்குகிறார் ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மார்சிய ஏஞ்சல் .

இதைப் பற்றி புரிந்து கொள்ள லாப வேட்டை அடிப்படையிலான முதலாளித்துவ மருந்து உற்பத்தி சங்கிலியின் ஒரு விபரத்தைப் பார்க்க வேண்டும்.

நோய்ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்து, சோதனை செய்து, கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்து, அனுமதி வாங்கிய பிறகுதான் சந்தைப்படுத்த முடியும். உண்மையான ஒரு புதிய மருந்தை உருவாக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகலாம். அவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய மருந்துகளை போட்டியாளர்கள் நகல் செய்து விற்க முடியாமல், மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (20 ஆண்டுகள்) ஏகபோக உரிமை தருகிறது காப்புரிமை சட்டம்.

மருந்து நிறுவனங்கள் முதல் 20 ஆண்டுகளுக்கு மருந்தை அதிக விலைக்கு விற்று தனது முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் நீங்கி விட போட்டி நிறுவனங்களும் உற்பத்தியில் குதித்து மருந்தின் விலை பல மடங்கு வீழ்ந்து விடும்.

புதிய மருந்து கண்டுபிடிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு, அதை ஈடுகட்ட பல ஆண்டுகளுக்கு ஏகபோக விற்பனை உரிமை என்பது நோக்கம். லாபத்தை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள மருந்து நிறுவனங்கள் என்ன செய்கின்றன? பெருமளவு செலவு செய்யாமலேயே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடிந்தால், அவற்றை 20 ஆண்டுகள் அதிக விலைக்கு விற்க முடிந்தால்? அதைத்தான் செய்ய ஆரம்பித்தார்கள்.

தங்களுக்கு காப்புரிமை இருக்கும் மருந்துகளின் தனி உரிமக் காலம் முடியப் போகும் நேரத்தில் அதன் மூலக்கூறில் மிகச் சிறிய மாறுதல் ஒன்றை ஏற்படுத்தி புதிய பெயரில் அதிக விலையில் விற்க ஆரம்பித்தார்கள். அந்த புதிய பெயரிலான மருந்துதான் சிறந்தது என்று மக்களை நம்ப வைக்க பல கோடி ரூபாய்கள் விளம்பரத்தில் செலவிடுகிறார்கள். இதே உத்தியை போட்டியாளர்களும் கையாள, ஒரே மருந்தின் நான்கைந்து வடிவங்கள் பல மடங்கு விலை வேறுபாட்டுடன் கிடைக்கின்றன.

இதற்கு அரசின் சட்டங்களும் துணையாக இருக்கின்றன.

‘மருந்து நிறுவனங்கள் தமது மருந்துகளை அமெரிக்க உணவு மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் போது அதே நோயை குணப்படுத்த பயன்படும் பழைய மருந்துகளோடு ஒப்பிட வேண்டியதில்லை. புதிய மருந்தை வெறும் மாத்திரையுடன் ஒப்பிட்டால் போதும். அதாவது புதிய மருந்து ஒன்றும் இல்லாததை விட சிறந்தது என்று நிரூபித்தால் போதும்’

இதற்கு உதாரணமாக பிரைலோசெக் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். 1990களின் ஆரம்பத்தில் நெஞ்செரிச்சலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய புதுமையான கண்டுபிடிப்பாக பிரைலோசெக் வெளி வந்தது. அதன் தனிப்பட்ட காப்புரிமை முடியும் காலம் வந்ததும் நிறுவனம் அதை எப்படி எதிர் கொண்டது அப்போது பிரைலோசெக்கின் விற்பனை பிரதிநிதியாக இருந்த ஜீன் கார்போனா விளக்குகிறார்.

‘ஆண்டுக்கு $6 பில்லியன் (சுமார் 25,000 கோடி ரூபாய்) வருமானத்தை இழக்கவிருந்தோம். எங்கள் நிறுவனத்தின் வரவு செலவு அறிக்கையின் லாபக் கணக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தோம். எங்கள் நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பழைய மருந்தை மிகச் சிறிதளவு மாற்றி அதே மாதிரியான நெக்சியம் எனற மருந்தை உருவாக்கி உரிமம் பெற்றார்கள்’

2004 வாக்கில் நெஞ்செரிச்சலுக்கான பிரபலமான ஊதா மாத்திரை மூன்று வடிவத்தில் கிடைத்தது. அவற்றின் விலைகள் பெருமளவு வேறுபட்டிருந்தன. கடையில் நேரடியாக வாங்கும் பிரைலோசெக்கை பயன்படுத்தினால் மாதம் $24 செலவாகும் (சுமார் ரூ 1000). மருத்துவரிடம் பரிந்துரை வாங்கி நெக்சியத்தை பயன்படுத்தினால் மாதம் $171 (சுமார் ரூ 8,000) செலவாகும்.

நோயாளிகளை அதிக லாபம் கிடைக்கும் மருந்துகளை வாங்க வைக்க  விளம்பரங்களில் பணத்தை கொட்டுகின்றன மருந்து நிறுவனங்கள்.

இரண்டாவதாக, ஒரு நோய்க்கான அளவீட்டு வரையறையை உயர்த்துவதன் மூலம் அந்த நோய்க்கான மருந்துகளின் சந்தையில் பல லட்சம் புதிய நுகர்வோரை சேர்த்து விடுகிறார்கள்.

‘உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நாளில் இயல்பு நிலையிலிருந்து உயர் அழுத்த நிலைக்கு போயிருக்கலாம். புதிய அரசு பரிந்துரைகளின் படி இலட்சக்கணக்கான பேருக்கு இரத்த அழுத்த பரிசோதனை தேவை. உங்களுக்கு?’ என்று முழங்கியது ஒரு சிபிஎஸ் தொலைக்காட்சி செய்தி அறிக்கை.

இன்னொரு சிபிஎஸ் செய்தியில் ‘நேற்று வரை உங்களுக்கு கொலஸ்டிரால் பிரச்சனை இல்லை என்றால் இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். புதிய பரிந்துரைகள் கொலஸ்டிராலை குறைக்கும் மருந்துகளான ஸ்டாடின்களின் சந்தையை பெருமளவு பெருக்குகின்றன. புதிய வரையறைகளின் படி கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் தமது வாழ்நாள் முழுமைக்கும் ஸ்டாடின் மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கொலஸ்டிரால் பற்றிய புதிய பரிந்துரைகள் ஒன்பது நிபுணர்களால் உருவாக்கப்பட்டன. அவர்களில் ஆறு பேர் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிறப்புரை கட்டணம், ஆராய்ச்சி உதவி, மற்றும் பிற வழிகளில் பண உதவி பெறுபவர்கள் என்று பின்னர் தெரிய வந்தது.

நன்றாக இருப்பவர்களையும் நோயாளியாக அறிவித்து  தமது மருந்து விற்பனைகளை விற்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தின் efficiencyயின் விளைவு.

நோய்

மூன்றாவதாக ஒரு மருந்தை இன்னொரு நோய்க்கூறுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என்று காட்டி விண்ணப்பித்தால் அதன் காப்புரிமை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சட்டத்தின் ஒரு ஷரத்து. புதிய புதிய நோய்களை தேடி கண்டுபிடித்து, அவற்றை சரி செய்ய தமது மருந்துகளை வாங்கி சாப்பிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகின்றன மருந்து நிறுவனங்கள்.

  • பதின்ம வயது சிறுவர்கள் நான்கு பேர் மத்தியில் கூச்சப்படுவது ஒரு நோயாக விளம்பரப்படுத்தப்படுகிறது
  • வீட்டிலும் அலுவலகத்திலும் எப்போதும் டென்ஷனாக இருப்பது ஒரு நோய்
  • அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது ஒரு நோய்

இந்த நோய்களுக்கு நீள நீளமான பெயர்கள் சூட்டி, அவற்றை சரிசெய்ய தமது மருந்துகளை மருத்துவர்களிடம் கேட்டு பெறுமாறு விளம்பரங்கள் செய்கிறார்கள். உதாரணமாக கூச்ச சுபாவத்திற்கு Social Anxiety Disorder என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

‘பலர் கூடியிருக்கும் இடத்துக்குள் போய் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள தயக்கமாக இருக்கிறதா! வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் தெரிந்தாலும் எழுந்து சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறதா! அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் கருத்தை சொல்ல நடுக்கமாக இருக்கிறதா!. என்ன செய்ய வேண்டும்?’ என்று போகிறது ஒரு விளம்பரம்.

புரோசேக் வகை மருந்துகள் மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டன.  இந்த மருந்துகள் இப்போது பல வகையான மனநிலைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அனுமதிக்கப்படும் ஒவ்வொரு புதிய அறிகுறியும் இந்த மருந்துகளின் லாபத்தை அதிகரிப்பதால் அப்படி புதிதாக புனையப்படும் ‘நோய்கள்’ பொதுமக்களிடையே வெகுவாக சந்தைப்படுத்தப்படுகின்றன.

இந்த புதிய ‘நோய்கள்’ தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள், பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளிவர வைக்கிறார்கள். நேற்று வரை நன்றாக இருந்து இருந்த ஒருவர் இந்த விளம்பரங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்த்த பிறகு தனக்கு ஏதோ தீர்க்க முடியாத நோய் இருப்பதாக உணர்ந்து மருந்துக்களை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டு விடுகிறார்.

‘இந்த அமைப்புக்கு மூளையே இல்லை. அதன் நோக்கம் லாபம் மட்டும்தான். அது எதைப்பற்றியும் கவலைப் படாமல் தனது சந்தையை விரிவுபடுத்துகிறது’ என்கிறார் கேதரீன் கிரெய்டர் என்ற பத்திரிகையாளர்.

நோய்‘இது உங்கள் மாத விலக்குக்கு முந்தைய வாரம். எரிச்சலையும் மனநிலை மாற்றங்களையும் பொருமல்களையும் எதிர் கொள்கிறீர்கள். இது பிஎம்எஸ் என்று நினைக்கிறீர்களா? அது பிஎம்டிடி ஆக இருக்கலாம். Premenstrual Dysphoric Disorder – மாதவிலக்குக்கு முந்தைய கோளாறாக இருக்கலாம்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்ணை காட்டி விளம்பரப்படுத்தியது எலை லில்லி என்ற நிறுவனம். இந்த விளம்பரம் மூலம் புரோசேக் மருந்துக்கான தனது சந்தையை விரிவுபடுத்தியது. பச்சையாக இருந்த புரோசேக் மருந்தின் நிறத்தை இளம் சிவப்பாக மாற்றி, அதற்கு சாராபெம் என்று பெயர் கொடுத்து அதை மாதவிலக்குக்கு முந்தைய மன அழுத்தத்துக்கான மருந்தாக சந்தைப்படுத்துவதற்கு ஒப்புதல் பெற்றது.

இந்த மருந்தை பற்றி பெண்களுக்கு ‘அறிவுறுத்த’ எலை லில்லி நிறுவனம் $30 மில்லியன் (சுமார் ரூ 150 கோடி) செலவழித்தது என்கிறது ஏபிசி செய்தி. சாராபெம் தீர்ப்பதாக சொல்லும் பிரச்சனை உண்மையில் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மக்களை சோதனைக் கூட எலிகளை விட கேவலமாக நினைத்துக் கொண்டு தமது மருந்துகளை எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் விற்பதற்கானவைதான் இத்தகைய முயற்சிகள்.

தமது மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு பரிசுகள் வழங்குவது மக்களுக்கு பரவலாக தெரிய வந்து அது விமர்சிக்கப்பட்டதும், கல்வி என்ற போர்வையில் மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தன மருந்து நிறுவனங்கள்.

‘வெள்ளை கோட்டு அணிந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரை அழைத்து அவரது பைகளை சோதித்தால் அவர் பைகளில் வைத்திருக்கும் பல  பொருட்கள் பிராண்ட் பொறித்தவையாக இருக்கும். பேனா, ஸ்டெதஸ்கோப் டேக், காம்பஸ் மற்றும் மருத்துவ பணிகளுக்காக பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இதில் அடங்கும். மருத்துவர்களும் மாணவர்களும் இப்படி விளம்பரம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வது போல நடந்து கொள்கிறார்கள்’ என்கிறார் டாக்டர் பாப் குட்மேன்.

மருந்து விற்பனையில் பணத்தை எங்கு செலவழித்தாலும் அது நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கும் என்று விற்பனை பிரதிநிதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இலவச மாதிரிகளை கொடுப்பதிலோ,  ஷேம்பேனுடனான விருந்து கொடுப்பதிலோ, நியூயார்க் போய் வருவதற்கு விமான டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுப்பதிலோ, பணத்தை செலவழிப்பதற்கு தனது நிறுவனம் முழு சுதந்திரம் அளித்திருந்ததாக ஜீன் கார்பானோ சொல்கிறார்.

நோய்கற்றுக் கொள்வதற்கான ஒரு செமினாரின் பகுதியாக ஷேம்பேன் பரிமாறப்படலாம், மருத்துவர்களுக்கு 18 சுற்று கோல்ப் விளையாட்டு ஏற்பாடு செய்யப்படலாம், $1000 மதிப்புடைய ஸ்காட்ச் விஸ்கி ஒவ்வருவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்பதுதான் அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

நோய்க்கு பொருத்தமான மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவர் மருந்து நிறுவனங்களுக்கு தேவையில்லை. அவர்களது மருந்தை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும், அதுதான் அவர்களின் நோக்கம்.

மருந்துத் துறை அமெரிக்காவின் அதிகார அமைப்புகளையும் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒவ்வொரு மாநில தலைமை செயலகத்துக்குள்ளும் வாஷிங்டனிலும் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள். பல கோடி டாலர்கள் செலவழித்து தமக்கு சாதகமான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்து கொள்கிறார்கள்’ என்கிறார் ஜீன் கார்பானோ.

1980களுக்கு முன்பு புதிய மருந்துகளுக்கான மருந்தக பரிசோதனைகள் தேசிய ஆரோக்கிய கழகத்தின் கண்காணிப்பில் அதன் செலவில் நடத்தப்பட்டன. பல்கலைக் கழகங்கள் தனியார் பணத்தை வாங்குவதை அவமானமாக நினைத்திருந்தன. 1980களில் ரீகன் அரசாங்கம் அரசு ஒதுக்கீடுகளை குறைத்து விட மருந்து நிறுவனங்கள் இந்த பரிசோதனைகளுக்கு நிதி அளிக்க ஆரம்பித்தன. 1991 வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1990களில் இந்த பரிசோதனைகள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறி லாப நோக்கமுடைய தனியார் நிறுவனங்களின் பிடியில் சிக்கின.

‘இப்போது 90% கிளினிகல் டிரையல்கள் மருந்து நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.  கிளினிக்கல் டிரையல்களுக்கான நடைமுறைகளை வகுக்கும் நிபுணர்களில் 50% பேர் மருந்து நிறுவனங்களிடம் ஊதியம் பெறுகிறார்கள். மருத்துவக் கல்வித் துறையில் பணியாற்றும் 70% மருத்துவர்கள் மருந்துத் நிறுவனங்களுடன் தொடர்பு உடையவர்கள்’.

இந்த பரிசோதனைகளின் முடிவுகளையும், தரவுகளையும் நிறுவனங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை.

உதாரணமாக, உயர் ரத்த அழுத்ததுக்கான மலிவான மாத்திரைகளை அதிக விலையில் விற்கப்படும் மருந்துகளுடன் ஒப்பிட்டு பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஆண்டுக்கு $30 முதல் $50 வரை மட்டும் செலவு வைக்கும் மலிவான மருந்துகள் மற்ற விலை உயர்ந்த மாத்திரைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன என்ற ஆராய்ச்சி முடிவுகள் அந்தக் கட்டுரையில் வெளியாகியிருந்தன. இதைப் பற்றி மருந்து நிறுவனத்தின் விற்பனை மேலாளரை கேட்ட போது, ‘இது ஒரு பிரச்சனையே இல்லை, எங்களிடம் $55 மில்லியன் விளம்பரப் பணம் இருக்கிறது. எங்கள் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த ஆய்வு விபரத்தை யாரும் கவனிக்கப் போவதில்லை ‘ என்று நம்பிக்கையுடன் சொன்னார். அப்படித்தான் நடந்தது.

உலகின் மிகவும் ‘முன்னேறிய’ நாடான அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம், நாட்டின் சட்டங்கள் என்று அனைத்தையும் தமது இலாப வெறிக்கு பலி கொடுத்தும் பசி அடங்காமல் உலகெங்கும் தமது கரங்களை விரித்துக் கொண்டிருக்கின்றன இந்த பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.

_____________________________________

– செழியன்.

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

‘காதல் கோட்டை, காதல் தேசம்’: கவலைப்படு சகோதரா!

7
காதல்-கோட்டை

பாலுறவு வாழ்க்கையில் (காதலில்) மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை. கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும் (அவை உயர்ந்த மட்டமோ, தாழ்ந்த மட்டமோ) வெளியாகின்றன என்றார் லெனின்.

‘ஆதிமுதல் காதலர்கள்’ என அறியப்படும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயற்கை அளித்த உணர்ச்சி காதல் அல்ல; ஏவாளுக்குப் பதிலாக ஓவாள் என்றொரு பெண்ணை ஏதேன் தோட்டத்தில் காண நேர்ந்திருந்தாலும் ஆதாம் அவளுடன் சேர்ந்திருப்பான்; அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்திருப்பார்கள்; ஏனென்றால் அது வெறும் பாலுணர்வு – விலங்குணர்வு. அழகு, அறிவு, அந்தஸ்து, ரசனை ஆகியவற்றையெல்லாம் பார்த்து இவற்றில் ஏதோவொரு விதமாக ஈர்க்கப்படும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புவதைத்தான் நாம் காதல் என்று அழைக்கிறோம்.

ஆணும் பெண்ணும் சுதந்திரமாகப் பழகுவதற்கும், அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் தனக்குப் பொருத்தமான துணையைத் தெரிவு செய்து கொள்வதற்கும் போதுமான வாய்ப்புகள் நமது சமூகத்தில் இல்லை. இரு பாலருக்குமிடையில் ஒரு அநாகரிகமான இடைவெளியைப் பராமரிப்பதை நமது சமூகம் தனது பண்பாட்டின் உயிர்நாடியாகக் கருதுகிறது. இதன் விளைவாகவே காதல் மணம் புரிய விரும்பும் பல ஆண்களும் பெண்களும் அதற்கு வாய்ப்பில்லாமல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட படுகுழியில் விழவேண்டியிருக்கிறது. சாதி, மதம், அந்தஸ்து போன்ற பல காரணங்களால் காதலர்கள் பிரிக்கப்பட்டுப் பெரியோர்கள் தோண்டிய படுகுழியில் தள்ளப்படுவதையும் பார்க்கிறோம். இருந்தாலும் திருமண விசயத்தில் மாடுகளைக் காட்டிலும் மனிதர்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்ற உண்மையை நிரூபிப்பதற்கு நம் கைவசம் இருக்கும் ஒரே ஆதாரம் – தாலிக்கயிறு.

நிலைமை எவ்வளவு மோசமாக இருந்த போதிலும் சுமார் 30,40 ஆண்டுகளுக்கு முன்னால் கருதப்பட்டு வந்ததைப் போல் ‘காதல்’ என்பது ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்படுவதில்லை என்பதற்காக நாம் கொஞ்சம் மகிழ்ச்சியடையலாம். அதே நேரத்தில் காதல் என்பது பெற்றோருக்குத் தலைவலியாக இருந்த நிலைமை போய் இளைய சமுதாயத்திற்குத் திருகுவலியாக மாறி வருகிறது என்ற உண்மையையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த ‘அநாகரிக’ இடைவெளியில் ஆதாயம் அடைந்தவர்கள் தான் எத்தனைப் பேர்? வயசுக்கு வராத காதல், வயசு போன காதல், சொன்ன காதல், சொல்லாத காதல்…. என்று எத்தனைப் படங்கள்! நமது ‘அவல’ நிலையைப் பல்வேறு கோணங்களில் நமக்கே படம் பிடித்துக் காட்டி கோடீசுவரர்கள் ஆன நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை ஒரு கணம் பட்டியல் போட்டுப் பாருங்கள்! காதலின் காணிக்கையாக நாம் இவர்களுக்கு இதுவரை செலுத்தியுள்ள தொகையில் இந்தியா வாங்கிய கடன்களை மட்டுமல்ல, வாங்கவிருக்கும் கடன்களையும் அடைத்து விடலாமே! எனவே ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்ற முறையிலாவது நாம் இதனைப் பரிசீலிப்பது அவசியமாகிறது.

காதல்-கோட்டை

‘காதல் கோட்டை’ நூறு நாட்களைத் தாண்டி ஓடுகிறது; ‘காதல் தேசம்’ நூறு நாட்களை நோக்கி ஓடுகிறது. முன்னது ‘தரமான’ குடும்பச் சித்திரம்; பின்னது சற்றுத் தரம் குறைந்த மாணவர் சித்திரம்.

திருட்டுப் போன தனது கைப்பையைத் திருப்பியனுப்பிய (அநாதை) கதாநாயகன் மீது காதல் கொள்கிறாள் நாயகி. ”கண்ணாலே பாத்துப் பாத்து வந்த காதல் நூறுடா – கண்ணியமான காதல் இக்காதல் தானடா’ என்று விழியில் விழாமலேயே இதயத்தில் எகிறிப் பாய்ந்து கடைசியாக உயிரில் கலக்கிறார்கள் – இது ‘காதல் கோட்டை.’

இரண்டு மாணவர்கள் ஒரு மாணவியைக் காதலிக்க, இருவரது காதலின் ஆழத்தையும் கண்டு நெகிழ்ந்து போகிறாள் அந்தக் காதலி. கடைசியாக இரண்டு பேருடைய காதலையுமே ரத்து செய்வதன் மூலம் அவர்களுடைய காதல் மீது தான் கொண்ட மரியாதையைத் தெரிவிக்கிறாள் – இது ‘காதல் தேசம்.’

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், கண்ணியமான முறையில் காதலித்து ‘கண்ணியக் குறைவான’ நோக்கத்திற்காக இணைவது ஒரு படம்; கண்ணியக் குறைவான முறையில் காதலித்து ‘கண்ணியமான’ நோக்கத்தில் இணைவது இன்னொரு படம்.

இவற்றின் வெற்றியிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? உண்மையைத் திரைப்படத்தில் தேடுவதை விட ரசிகர்களிடம் தேடுவோம்; திரையரங்கினுள் தேடுவதை விட திரையரங்கிற்கு வெளியே தேடுவோம்.

”உங்கள் காதலைத் தெரிவிக்க தங்கத்தைக் காட்டிலும் சிறந்த மொழி வேறென்ன இருக்கிறது?” என்று கேட்கிறது ஒரு நகைக்கடை விளம்பரம்.

”முற்காலத்தில் காதலர்கள் தங்கள் காதலை நிரூபிப்பதற்கு வில்லை முறிப்பது, குதிரையை அடக்குவது, மாடு பிடிப்பது போன்ற ஆபத்தான விவகாரங்களில் தலை கொடுக்க வேண்டியிருந்தது. மணிபர்சைத் திருப்பிக் கொடுத்தால் போதுமானது என்கிற அளவுக்கு இன்று நிலைமை சீர்திருந்தியிருக்கிறதே” என்ற மகிழ்ச்சியுடன் காதலர்கள் வெளியே வரும்போது மேற்படி விளம்பரம் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.

உலக அழகின் நீள அகலங்களை வரையறுத்து அதற்கேற்ப உங்களைச் சுருக்கவோ, விரிக்கவோ உத்திரவாதம் தருகின்ற அழகு நிலையங்கள் பெண்களைக் கவலையுடன் கண்ணாடி முன் நிறுத்துகின்றன.

‘ஸ்கிரீன் பிரிண்டிங் கற்றுக் கொள்வது எப்படி’, ’30 நாளில் கன்னடம்’ ஆகிய நூல்களுடன் ‘காதலிப்பது எப்படி’ என்ற நூலும் விற்பனையாவதைப் பார்க்கும் போது, உங்கள் காதலர் அல்லது காதலி உங்களை உண்மையாகவே நேசிக்கிறாரா அல்லது இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை உங்கள் மீது பிரயோகித்துப் பார்க்கிறாரா என்ற ஐயம் எழுகிறது.

”எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் என்னை நேசிக்கிறார். எனினும் இல்லற வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு அலுவலகத்தில் உள்ள சக ஊழியரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. (எனக்கு 8 வயதில் ஒரு பெண் இருக்கிறாள்) இது சரியா? தவறா?” என்ற வாரப் பத்திரிகைகளின் ஆலோசனைப் பக்கத்தில் வெளிவரும் கேள்விகளைப் படிக்கும்போது ”பட்டினத்தார் சொன்னது சரிதானோ” என்ற பயம் ஆண்களுக்கு எழுகிறது.

”இந்தியாவில் மாபெரும் பாலுறவுப் பரட்சி நடக்கிறது. உடலின்பம் குறித்த பழமைவாதக் கண்ணோட்டம் மறைந்து வருகிறது. திருமணமான பெண்கள் முன்புபோல கட்டுப்பெட்டிகளாக இல்லை. பழமைவாதச் சென்னை நகரத்தில் தான் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக் கொள்ளும் பண்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது” என்று வெளிவரும் அட்டைப்படக் கட்டுரைகள் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன; இளைஞர்களின் ஆவலைத் தூண்டுகின்றன. கடலை மிட்டாய் வாங்கி வரும் தந்தையை விட ஃபைவ் ஸ்டார் சாக்லெட்டை வாயில் திணிக்கும் தொலைக்காட்சி ‘விளம்பரத் தந்தை’ பாசமுள்ள தந்தையாக மகனுக்குத் தெரிகிறான்; மனைவியோ பட்டுப்புடவை வாங்கித் தந்து காதலை நிரூபக்கச் சொல்கிறாள்.

கேள்விக்குள்ளாக்க முடியாதவையென்றும் புனிதமானவை என்றும் கூறப்படுகின்ற காதல், பாசம், நட்பு போன்ற மென்மையான மனித உணர்வுகளையெல்லாம் உயிரற்ற ஜடப் பொருட்களின் மூலமாகத்தான் வெளியிட முடியும் என்பதே நிலைமை. நீங்கள் அதற்கும் தயார். ஆனால் பணம்? பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று அன்றே சொல்லி விட்டான் வள்ளுவன். எனவே எங்கே செல்வது? மதம் அல்லது சினிமா.

”வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” – என்று சினிமாக் கொட்டகை வாசலில் எழுதிப் போடப்படவில்லை என்றால் என்ன? இந்த நூற்றாண்டின் மதம் சினிமா; மகனுக்கு தொலைக்காட்சித் தந்தை; அப்பனுக்கு சினிமாக் காதலி.

மனிதனின் உணர்ச்சிகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே அவன் உருவாக்கிக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து பிறந்தவைதான் – காதல் எனும் மென்மையான உணர்ச்சி உட்பட.

பொருளாதார உறவுடன் காதல், குடும்பப் பாசம் ஆகியவற்றைப் பேசுவது நம்மில் சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். அதற்குக் காரணம் காதல் பற்றிய நமது புரிதல் அத்தனை ஆழமாக இருக்கிறது என்பதல்ல; பொருளாதார உறவுகள் குறித்த நமது புரிதல் அத்தனை ஆழமற்று இருக்கிறது என்பதுதான். இது காதலைக் கொச்சைப்படுத்தும் முயற்சி அல்ல; கொச்சைப்படுத்தப்பட்ட காதலைப் புரிந்து கொள்ளும் முயற்சி.

”முதலாளி வர்க்கம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிமய முகத்திரையைக் கிழித்தெறிந்து குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய்ச் சிறுமையுறச் செய்து விட்டது” என்றார் மார்க்ஸ்.

காதல்-தேசம்

பணம் பணத்தால் வாங்கக்கூடிய பொருள், பொருளால் கிடைக்கக் கூடிய இன்பம் – இப்படி டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் மகிழ்ச்சியை, நுகர்பொருள் மோகத்தை, சரியாகச் சொன்னால் நுகர்பொருள்  வெறியை நமக்கு வழங்கியிருக்கிறது முதலாளித்துவ அமைப்பு. குடும்பத்தின் நுகர்தல் வேட்கையைத் தணிப்பதற்காக திருட்டு, லஞ்சம், மோசடி ஆகிய எந்த வழிமுறையைக் கணவன் பின்பற்றினாலும் மனைவிக்கு அவன் மீது உள்ள காதல் குறையாது. மகனுக்குப் பாசம் குறையாது. காதல் கணவன் கயவாளியாக இருக்கலாம்; சமூகத்தின் விரோதி – குடும்பத்தின் ஒளி விளக்கு! ஆனால் சமூகத்தின் சேவகன் பாசமிக்க தந்தையாகவோ, காதல் கணவனாகவோ இருக்க முடிந்து விட்டால் அது அதிசயம். இல்லாமல் போனால் அது இயற்கை. என்ன வேடிக்கை!

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் நுகர்பொருளைப் போல மனிதர்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்ளும் இந்தச் சமுதாயத்தில் இந்தப் பயன்பாட்டு விதிக்குத் தப்பி, காதலும், பாசமும் மட்டும் புனிதம் கெடாமல் எப்படி அந்தரத்தில் தொங்க முடியும்?

இப்போது பூனை தன் குட்டியை விழுங்குகிறது. தம்மைத் தவிர மற்றவர்களைப் பண்டங்களாகக் கருதிப் பயன்படுத்தி வந்த தம்பதிகள் இப்போது ஒருவரையொருவர் பண்டங்களாகக் கருதத்துவங்கி விட்டார்கள். தன்னைத் தருவதன் மூலம் பெருமை பெற்ற காதல், இப்போது பெறுவதைத் தனக்கு உத்தரவாதம் செய்யச் சொல்கிறது – விளைவு பாலுறவுப் பரட்சி!

காட்சிக்கு இன்பம் தராத கறுப்பு வெள்ளை டி.வி.க்குப் பதில் கலர் டி.வி.வாங்கும்பொழுது பழைய தொலைக்காட்சியுடன் தாங்கள் கழித்த இரவுகளை எண்ணி யாரும் உணர்ச்சி வயப்படுவதில்லை. காதலோடு இருவர் கருத்தொருமித்து இருந்தாலும் உடலின் ரசனையில் மாற்றம் ஏற்படும்போது உள்ளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்கிறது மேற்படி புரட்சி.

டால்ஸ்டாயின் ‘நடனத்திற்குப் பிறகு’ என்ற சிறுகதையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும். நடன விருந்தொன்றில் ஒரு பெண்ணைப் பார்க்கின்ற இளைஞன் ஒருவன் அவளுடைய அழகால் பெரிதும் கவரப்படுகிறான். அவளையும் அவளது தந்தையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அன்றிரவு அவனுக்கு உறக்கம் வராத இரவாகக் கழிகிறது. மறுநாள் காலை அவளைப் பற்றிய நினைவுடனேயே கடைவீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு அப்பாவி இளைஞனை கதறக்கதற ரத்தம் சொட்டச் சொட்ட ராணுவ அதிகாரியொருவன் அடித்து இழுத்துச் செல்வதைக் காண்கிறான். நெருங்கிச் சென்று பார்த்தால், அது அவன் மனங்கவர்ந்த மங்கையின் தந்தை! ஏனோ தெரியவில்லை. அவள் மீது அவன் கொண்ட காதல் கலைந்தே விடுகிறது.

காதலில் உடலின் பங்கிற்கும் உள்ளத்தின் பங்கிற்கும் உள்ள உறவை விளக்கும் இக்கதைக்கு பொழிப்புரை தேவையில்லை; இவ்விசயத்தில் பாலுறவுப் புரட்சியின் அணுகுமுறை என்ன என்பதற்கும் விளக்கவுரை தேவையில்லை.

கணவனையும் மனைவியையும் ஒருவருக்கொருவர் நுகர்வதற்கான பண்டங்களாகக் கருதும் இந்த இன்பத்தாகம் இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்குத்தான் எதிராக இருக்கும்.

இந்த வடிகட்டிய தனி நபர்வாதத்தை என்ன உறவென்று அழைப்பது? காதல் என்றா? உடலின்ப வேட்கை என்றா? மனிதன் விலங்கிலிருந்து வெகுதூரம் வந்து விட்டான். உண்மைதான். எனினும் முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடுபடும் ‘விலங்குகளை’த் தான் உருவாக்குகிறது. ”இவையெல்லாம் அமெரிக்காவின் பண்பாட்டுத் தோல்விகள். நமது பண்பாடு இவற்றை வெற்றி கொள்ளும்” என்று சிலர் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் காதல் கோட்டையின் வெற்றி நமது பண்பாட்டின் தோல்வியைத்தான் நிரூபிக்கிறது.

காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் எந்த அளவிற்கு இதயமற்றுப் போகின்றனவோ அந்த அளவிற்கு முதலாளித்துவக் கலை இலக்கியங்களில் அற்ப உணர்ச்சிகளின் (சென்டிமென்ட்) ஆதிக்கம் கொடிக் கட்டிப் பறக்கிறது. பார்த்துப் பழகி வளர்ந்த காதல் தோற்றுப் போனதற்குரிய காரணங்களை ஆராயத் தொடங்கினால் அது காதலன் அல்லது காதலி பற்றிய ஆராய்ச்சியுடன் முடிவடையாமல் காதல் குறித்த ஆராய்ச்சியாக மாறி அச்சமூட்டுகிறது.

இதுவரை கொண்டிருந்த சமூகக் கண்ணோட்டங்களையே கேள்விக்குள்ளாக்கி நிலைகுலைய வைக்கும் ஆராய்ச்சியை விட, பார்க்காமலே தோன்றி வளர்ந்து வெற்றி பெறும் காதல் நிழற் கோட்டையில் இளைப்பாறுவதே ரசிகனுக்குச் சுகமாக இருக்கிறது. புதிய அர்த்தங்கள் கொண்ட உறவை முதலாளித்துவம் உருவாக்க முடியாது; பழைய உறவுகளுக்குப் புது அர்த்தம் கற்பிக்க, போதையூட்டத்தான் முடியும்.

இது கோப்பெருச்சோழன் – பிசிராந்தையார் கதை என்கிறார் இயக்குனர் அகத்தியன். அது மட்டுமா, கம்பராமாயணமும் கூடத்தான். தனது காதலன்தான் இவன் என்று தெரியாத போதும், கதாநாயகனைச் சந்திக்கும் போதெல்லாம் அவன்பால் நாயகியின் மனம் ஈர்க்கப்படுகிறது – கற்பின் மகிமை! இருந்தாலும் தன் காதலின் புனிதத்தைக் காக்கும் பொருட்டு அவனை வெறுப்பது போல நடிக்கிறாள் – கற்பின் உறுதி! கம்பனின் ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ சீன்தான்.

இந்தக் கற்புக்கனலின் சூடு தாங்காமல் ரசிகர்கள் ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையின் காரணமாகக் கதாநாயகனின் நண்பனையும் கொஞ்சம் பேச விடுகிறார் இயக்குனர்.

”என் மனைவி இழுத்துப் போர்த்திக்கிட்டு இருக்கணும்; அடுத்தவன் மனைவி அவுத்துப் போடணும்னு எல்லாரையும் போல நெனைக்கிறவன்தான் நான், ஏன்னா நான் ஒரு சராசரி இந்தியன்.”

“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனால் மாதுரி தீட்சித்தையும், ஸ்டெபி கிராப்பையும் காதலிப்பேன். ஏன்னா நான் சராசரி இந்தியன்.”

அரங்கத்தில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியர்கள் யாரும் இந்த வசனத்தைக் கேட்டுத் துணுக்குறவில்லை; கை தட்டுகிறார்கள். சராசரி இந்தியனின் காதல் ஒழுக்கம் இதுதான் என்று தெளிவுபடுத்தப்பட்டு விட்டதால், ஏற்கெனவே இது விசயத்தில் குழப்பமடைந்திருந்தவர்கள் கூட மனத்தைரியம் பெற்று விட்டார்கள். அருகில் அமர்ந்திருக்கும் சராசரி இந்தியனின் சராசரி மனைவிமார்களின் காதல் ஒழுக்கம் என்ன? அவர்கள் கமல்ஹாசனை அல்லது டெண்டுல்கரைக் காதலிக்கலாம்.

”இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவது போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன” என்று ஏங்கெல்ஸ் முதலாளித்துவச் சமூகத்தின் குடும்ப உறவுகளைக் கேலி செய்தது எவ்வளவு பொருத்தம்!

காதல் தேசத்தின் மாணவர்களோ காமவெறி கொண்ட பொறுக்கிகளாகவும், மாணவிகள் அந்தப் பொறுக்கித்தனத்தால் கிளர்ச்சியூட்டப்படும் சந்தோஷமான ரசிகைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இதை இளமையின் கலகத்துக்குக் கிட்டிய அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறார்கள் மாணவ மாணவிகள்.

‘புனிதமற்ற’ முறையில் காதலித்து, அநாகரிகமான முறையில் அடித்துக் கொண்ட காதலர்கள், கடைசிக் காட்சியில் காதலைக் கைவிட்டு, முன்னாள் காதலியுடன், புனிதமான நட்பில் பிணைந்து திரையின் உள்ளே நடந்து சென்று புள்ளியாகக் கரையும்போது, அவர்களைப் பின்தொடர முடியாத மாணவர்கள், அரங்கவாயிலை நோக்கி, எதார்த்த வாழ்வை நோக்கி எதிர்த்திசையில் புறப்படுகிறார்கள்.

காதல் கோட்டை – அற்ப உணர்வின் இடையில் தூவப்பட்ட பொறுக்கித்தனம்; காதல் தேசம் – பொறுக்கித்தனத்தின் வாலில் கட்டப்பட்ட அற்ப உணர்வு.

”என் மனைவியும் மகளும் படத்தில் ஒன்றிப் போய் விட்டார்கள். எனக்கோ சகிக்க முடியவில்லை” என்று அரற்றினார் குடும்பத்துடன் காதல் தேசம் பார்க்கப் போன ஒரு நண்பர். தன்னுடைய மனக்குமுறலை தனது மனைவி மகளுடன் அவர் மனம் விட்டுப் பேசியிருக்கலாமே; பேச முடியாது. தந்தைக்கும் மகளுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவும் ‘அநாகரிக இடைவெளி’யைக் கடக்க சராசரி இந்தியர்கள் முயற்சிப்பதில்லை.

அந்த இடைவெளியில்தான் பாரதப் பண்பாட்டின் ‘உன்னதமும்’ கோடம்பாக்கத்தின் பணப்பெட்டியும் உயிர்பிழைத்திருக்கின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 1997

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

3

“தென்னக டெட்ராய்டில்” உரிமைகள் மீதான தடைக்கற்கள்!

உயரும்-லாபம்-சுருங்கும்-கூலி
உயரும் லாபம் சுருங்கும் கூலி – நன்றி www.thehindu.com

ஹரியானா, மானசரிலுள்ள மாருதி சுசுகி ஆலையில் தொடர்ந்த நிகழ்வுகளால் தொழிலாளர்களின் 13 நாட்கள் வேலை நிறுத்தத்தின் முடிவில் கடந்த ஆண்டு ஆலை மூடல் அறிவிக்கப்பட்டது.

ஒரு வருடம் கடந்து விட்டது என்றாலும் அந்த வேலை நிறுத்தத்தின் முடிவில் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் பெற்ற வாக்குறுதிகள், குறிப்பாக நிரந்தர தொழிலாளிக்கு ஈடான சம்பள விகிதங்கள் ஒப்பந்த தொழிலாளிக்கும் அமுல் படுத்துவது, தொழிலாளர்களுக்கான குறை தீர்ப்பதற்கான குழு ஒன்றை நிறுவுவது ஆகியவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதே போன்ற ஒரு பாவப்பட்ட, கொந்தளிப்பான சூழ்நிலையில் மேற்பார்வையாளர் ஒருவர் தொழிலாளி ஒருவரை சாதிப்பெயர் சொல்லி திட்டியது, உடனடியாக தொழிலாளர்கள் ஒன்றுபடவும், அந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவும் வழிவகுத்தது. அதனால் ஏற்பட்ட வன்முறை மீது நடுநிலை பார்வையாளர்கள் மூலம் விசாரணை துவங்கியுள்ளது.

இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஐந்து வெவ்வேறு தரப்பிலிருந்து அறிக்கைகள் பெற்றுள்ளோம்.

நிர்வாகத்தரப்பில் வன்முறை நடந்த சில மணித்துளிகளிலேயே தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்- அதன் காரணமாக ஒரு மேலாளர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இந்த கூற்றை மறுத்தனர். குறிப்பாக அவர்கள் தெரிவிப்பது யாதெனில், தொழிலாளர் தரப்பில் வன்முறையின்றி அமைதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தரப்பில் ஆலைக்குள் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினர்தான் தொழிலாளர்களை தாக்கத் துவங்கினர் என்றனர்.  அதன் காரணமாக நேர்ந்த குழப்பத்தில் ஏற்பட்ட வன்முறை என்பது ஒருவர் மரணத்தில் சென்று முடிந்தது.

தொழிலாளியிடம் கேட்டறிந்ததும், சில ஊடகங்கள் வெளிச்சொன்னதும், தொழிற்சங்கத்தினர் சொல்வதிலிருந்தும், அதாவது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வன்முறை என்ற கருத்துடன் ஏறக்குறைய ஒத்துப் போகிறது.

மூன்றாவது பார்வையாக புலனாய்வு துறை வாயிலாக அரசிற்கு கிடைத்த தகவலின் பேரில் அரசு அதிகாரிகள் தரப்பு யாதெனில் மாவோயிஸ்டுகள் தொழிலாளர்களிடையே ஊடுறுவி தொழிற்சங்கங்களில் கலந்ததால் அமைதியின்மை என்பது உருவானது என்கின்றனர்.

நான்காவது கருத்தாக ‘நடுநிலை பார்வையாளர்கள்’ மாருதியோடு வணிக தொடர்புகள் வைத்திருக்காதவர்கள் தரப்பிலிருந்து இத்தகைய அமைதியின்மை என்பது உற்பத்தியை பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டது.  அது குறிப்பிட்டு சொன்னது போல அத்தகைய அமைதியின்மை சூழல் இரக்கமற்ற முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றது.

ஐந்தாவது கருத்து மானேசர் கிராமத்தில் மாருதி உற்பத்திக்கு ஆதரவாகவும், தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் செயல்பட்டுவந்த மகாபஞ்சாயத்து என்ற அமைப்பிலிருந்து வெளிப்பட்டது.அந்த மகா பஞ்சாயத்து என்ற அமைப்பில் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும், அந்த ஆலை அமைவதற்கு நிலங்கள் கொடுத்து அதனால் பயன் பெற்றவர்கள் மற்றும் அந்த தொழிலாளர் களுக்கு தொடர்புடைய விதத்தில் தொழில்கள் செய்து லாபம் பார்ப்பவர்களாக இருந்தனர்.

இந்த வகையான பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருந்த நிலையிலும், பெரும்பான்மை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் மீது சினத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த செய்தியை சொல்லின.  ஒரு பிரபல தமிழ் செய்தித்தாள் கூட “மத்தியஸ்தர்கள்” (அரசியல் படுத்தப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள்) என்ற தலைப்பிலான தனது தலையங்கத்தில் அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, கள யதார்த்தத்தை திசை திருப்பும் வண்ணம் செயல்பட்டனர் என விவரித்திருந்தது.  நிர்வாகத் தரப்பு கூற்றை மட்டும் வைத்து வெளியிடப்பட்ட இத்தகைய செய்திகள் தொழிலாளர்கள் கோபத்தை தூண்டவும், வன்முறை ஏற்படவும் காரணமானது.

ஆனால் விஷ‌யங்கள் அவ்வாறாக இல்லை.  தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதாவது அவர்களை தாக்க கூலிக்கு ஆட்கள் வரவழைக்கப்பட்டனர் என்பது ஊடகங்களால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதுடன், அதன் மீது ஆய்வும் மேற்கொள்ளப்படவுமில்லை. இல்லையென்றாலும், பல அறிக்கைகள் ஆலையில் தொழிலாளர்களின் நிலைகளை படம் பிடித்து காட்டுவதாக அமைந்தது.  கடந்த வருடம் தி இந்து நாளிதழில் வெளிவந்த (மாருதி சுசுகியில் தொழிலாளர்கள் போராட்டம் – 28 செப் 2011) செய்தி தொகுப்பில், எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உண்மையான ஊதியம் அவர்கள் பணி புரியும் நேரம் மற்றும் வாழ்நிலைக்கு போதுமானதாக உயர்த்தப்படவில்லை என்பதையும் நிர்வாகத்தின் வருவாய் உயர்விற்கேற்ப தொழிலாளர்கள் ஊதிய நிலை மாற்றியமைக்கப்படவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தது.  எனவேதான் நிர்வாகத்தரப்பில் தொழிலாளர்களையே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது என்ற நிலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது.

மிக சாதாரணமாக தொழிற்சங்க தலைவர்களை ‘வில்லன்களாக’ சித்தரித்து அதன் மூலம் அவர்கள் ஆலையின் தளத்தில் தொழிலாளர்களிடையே தோன்றும் பிரச்சனைகளின் மீது தலையிடவிடாமல் பிரித்து வைக்கப்பட்டனர்.  இது மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.  தொழிலாளர்கள் ஒரு பிரச்சனையின் மீது ஒன்றுபட்டு கருத்து செலுத்தாமலிருக்க தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும் பிரித்தாளும் நடைமுறை கையாளப்பட்டது.  தொழிற்சங்கங்களின் விஷ‌யங்களை மேலும் நலிவடையச் செய்யும் வண்ணம் அவர்கள் “சுயநலவாதிகள்” மற்றும் “கள்ளத்தனமானவர்கள்” என முத்திரை குத்தப்பட்டனர் (இவற்றை கையாள எளிதாக மாவோயிஸ்ட் என்ற அடையாளமும் குத்தப்பட்டது). பிரபலமான தமிழ் தினசரி ஒன்று இந்த விஷ‌யத்தில் நீண்ட தலையங்கம் ஒன்றை எழுதியது – அதில் போருக்கு தயார் நிலையில் இருப்பதான தொழிலாளி பக்கத்தை எடுத்துக் கொண்டு அவன் தொல்லையளிக்கும் தொழிற்சங்க தரப்பிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியது.

ஹரியானாவோ, தமிழ்நாடோ எதுவாக இருப்பினும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு, குறிப்பாக தொழிற்சங்கங்களை பூதாகரமாக காட்டுவதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை.  ஊடகங்களே அந்த பணியை செய்கின்றன.  வடக்கே விந்திய சாரத்தில் மானேசரில் நடந்த நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் தொழிலில் கோலோச்சிவரும் முதலாளிகள் கவனத்தை ஈர்த்ததுடன், கவலையுறச் செய்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போர்க்குணம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு அனுபவம் உண்டு.  தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மேற்பார்வையாளர் உயிரிழப்பில் முடிந்த கோவை பிரிகால் ஆலையின் நிகழ்வுகள் 2009-ல் பெரிய அளவில் செய்தியானது.  சென்னையில் ஹூண்டாய் தொழிலாளர்கள் ஒன்றிணைந்ததற்காகவும், மே தினம் கொண்டாடியதற்காகவும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  தொழிற்சங்கம் துவங்கி இணையவேண்டும் என்கிற அவர்களின் ஆசை கொடுஞ்செயாக பார்க்கப்படுகிறது.  அதை முறியடித்ததற்கு நன்றி கடனாக மாணவர்களை ஈடுபடுத்தி போக்குவரத்து சரிசெய்ய என்ற பெயரில் தமிழக அரசின் காவல்துறைக்கு 100 கார்கள் ஹூண்டாய் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

இதன் நடுவில் உற்பத்தி நிபந்தனைகள் என்பது தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வந்தது.  ஒவ்வொரு 48 வினாடிக்கும் ஒரு கார் வெளியேற்றப்பட வேண்டும்.  அதாவது தொழிலாளர்கள் கழிவறைக்குச் செல்ல, ஒரு கப் தேநீர் அருந்த சில நிமிடங்கள் செலவழிப்பது கூட அரிதாக இருந்தது.  பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்த பின்னர்தான் ஆலையை அடைய முடிவதுடன், அதற்கு பின்னர் 8 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது.  சென்னையில் வட-மேற்கில் தொழிற்சாலை பகுதியில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் பணி நிலை என்பது இவ்வாறாகத்தான் இருக்கிறது.  பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் பெரும்பாலும் இளைஞர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக ரூ 3500 முதல் 4000 வரையில் ஒரு மாதத்திற்கு என்ற குறைந்த சம்பள விகிதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  இங்கே நாம் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து வந்து இதைவிட மோசமான பணிநிலைகளில் ஒரு நாளைக்கு ரூ 140 என்பதை விட குறைவான கூலியில் பணிபுரிவதைப்பற்றி குறிப்பிடவில்லை.  அதுவும் மிகத் திறமையாக லாபம் கொழிக்கும் ஆட்டோமொபைல் தொழிலில் இவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாம் பல வருடங்களுக்கு முன்பாக மாநிலத்தில் தொழில் வளர்ச்சி என்று பேசப்பட்ட 1970களை திருப்பிப்பார்த்தால், அன்றும் இதே போல் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டிவிஎஸ், எம்ஆா்எப் போன்றவர்கள் செயல்பட்டு வந்ததும், தொழிற்சங்கங்களை பிரித்தாள்வதில் சாதனைகள் புரிந்தனர் என்பதும் அதற்கு அவர்களுக்கு முனைப்பாக திமுக மற்றும் அதிமுக தலைமையிலான அரசாங்கங்கள் உதவிகள் புரிந்துள்ளனர் என்பதும் தெரியவரும். தொழிலாளர்கள் மீது தடியடி தாக்குதல்கள் மேற்கொள்வதற்கும், தொழிற்சங்க தலைவர்கைள தங்கள் விருப்பத்திற்கேற்ப பிடித்து கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கங்கள் சிறிதும் யோசிக்காமல் செயல்பட்டு வந்துள்ளன.  இன்று ஹூண்டாய் மற்றும் கொரியன் நிறுவனங்களின் சங்கிலிதொடரில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல சிறிய நிறுவனங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆளும் கட்சி அரசியல் வாதிகளை கைக்குள் வைத்திருப்பதோடு, பல தாராள செய்தி ஊடகங்களையும் தமிழர்களில் பல நடுத்தர வர்க்கத்தினரையும் கையில் வைத்துள்ளன.

இந்த வகையில் பார்க்கப்போனால் மானேசர் நிகழ்வு என்பது விதிவிலக்கான ஒன்றல்ல.  ஆனால் இந்த சூழலில் மூலதனம் இட்டு குறுகிய அளவிலான தளம் கொண்ட அமைப்புசார் பகுதிகளில் கூட வெற்றிக்கான வாய்ப்பிருந்தும், ஆளுமையை நிறுவ முற்படுதலில் தொடர்ந்து முதலாளித்துவம் ஏன் தோல்வியை தழுவுகிறது என்பது வித்தியாசமாய் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “சிவப்பி”ற்கெதிராக அமைக்கப்பட்ட மகாபஞ்சாயத்து என்ற அமைப்பினரோ, இதற்கெல்லாம் காரணம் “மாவோயிஸ்ட்கள்” என கூறும் அரசாங்கமோ உற்பத்திக்கான நிபந்தனை கடுமைகளும், அது சார்ந்த தொழிலாளர்களின் பணி நிலையும்தான் இத்தகைய வர்க்க மோதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றன
_________________________________________________________
.கீதா, மற்றும் மதுமிதா தத்தாநன்றிதி இந்து
தமிழில்சித்ரகுப்தன்
______________________________________________
____________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

160

மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!

மோடி

குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த மதவெறிப் படுகொலை வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அளித்தது.  அந்நீதிமன்றம் இவ்வறிக்கையை உடனடியாக வெளியிடாமல் தன்வசமே வைத்திருந்தபோதும், “இப்படுகொலை தொடர்பாக மோடி மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரமில்லாததால், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்த முடிவு, மோடி ஆதரவு கும்பலால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மறைமுகமான ஒத்துழைப்போடு வெளியே கசியவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஜாகியா ஜாஃப்ரியிடமும், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் குழுவிடமும் நீதிமன்றம் தற்பொழுது அளித்துவிட்டது.  இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதம், அதனின் முதல் மற்றும் இறுதி அறிக்கைகள்; உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை, அதனைச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டன.

குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய மதவெறிப் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்றும், ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான் கொல்லப்பட்டார் என்றும் கூறி நியாயப்படுத்தினார், மோடி. அவரது கூற்றை அப்படியே தனது அறிக்கையில் வழிமொழிந்துள்ளது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மோடிக்கு எதிரான சாட்சியங்களை நடுநிலையாக நின்று ஆராயாமல், ஏதாவதொரு நொண்டிச்சாக்கைச் சொல்லித் தட்டிக் கழித்து மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.  “இப்படுகொலைக்கும் மோடி அரசிற்கும் இடையே எவ்விதத்திலும் தொடர்பில்லை; கலவரத்தின்பொழுது மோடியின் அரசும் போலீசும் கடமை தவறாது நடந்துகொண்டனர்” என்று புளுகியிருக்கிறது.  சுருக்கமாகச் சொன்னால், போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க ஆளும் கும்பலால் அமைக்கப்படும் தலையாட்டி விசாரணை கமிசன்களைவிட மிகக் கேவலமான முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

‘‘இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி காலனியில் வசித்து வந்த முசுலீம் குடும்பங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணிந்த சமயத்தில், எனது கணவர் இஷான் ஜாஃப்ரி நரேந்திர மோடியைப் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.  ஆனால், போலீசு துறையைத் தன்னிடம் வைத்துள்ள மோடியோ இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  எனவே, இத்தாக்குதல் மோடிக்குத் தெரிந்து, அவரது மறைமுகமான ஒப்புதலோடுதான் நடந்தது” என மோடி மீது  ஜாகியா ஜாஃப்ரி  குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, “மோடிக்கு இஷான் ஜாப்ரியிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; அவரிடமிருந்து மட்டுமல்ல, குல்பர்க் சொசைட்டியில் வசிக்கும் யாரிடமிருந்தும் தாக்குதல் நடந்த சமயத்தில் மோடிக்கோ, மற்ற உயர் அதிகாரிகளுக்கோ எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; குல்பர்க் சொசைட்டி மீது இந்து மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்த முயலுவது பற்றி அகமதாபாத் போலீசு ஆணையருக்குத் தொலைவரிச் செய்தி அனுப்பியதாக, அப்பொழுது உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியமும் இட்டுக்கட்டிய பொய்; அத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த அகமதாபாத் போலீசு ஆணையர் தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு மோடியையும் போலீசு அதிகாரிகளையும் விடுவித்துவிட்டது.

மோடி

இதுவொருபுறமிருக்க, “ஒரு பெரும் கூட்டம் குல்பர்க் சொசைட்டியைச் சுற்றிவளைத்திருந்த சமயத்தில்,  இஷான் ஜாஃப்ரி தனது துப்பாக்கியால் அக்கூட்டத்தை நோக்கிப் பலமுறை சுட்டார்.  இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.  இஷான் ஜாப்ரியின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான் குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தக் காரணமாகிவிட்டது” எனக் குறிப்பிட்டு, இஷான் ஜாஃப்ரி நடத்திய துப்பாக்கிச் சூடுக்கு எதிர்வினையாகத்தான் இப்படுகொலை நடந்ததாகக் காரணத்தைக் கற்பித்திருக்கிறது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  கடந்த பத்தாண்டுகளில் இப்படிபட்ட கற்பிதத்தை மோடியையும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் தவிர வேறுயாரும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் 1, 2002 அன்று ஜீ  டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதை வினை என்றும், அவர் கொல்லப்பட்டதை எதிர்வினை என்றும் கூறியதோடு, கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து போன சம்பவத்தை, அங்கு வாழும் முசுலீம்களின் கிரிமினல்தனத்தின் வெளிப்பாடு;  (இப்பொழுது) அவர்கள் புரிந்துள்ள கொடூரமான குற்றத்திற்கு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது” என்று வருணித்தார்.  மோடியின் இந்த இந்து மதவெறி பிடித்த பேச்சுகள் அனைத்தும் இந்து மதவெறிக் கும்பலின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், ஜாகியா ஜாஃப்ரி.

‘‘நரேந்திர மோடி ஜீடி.வி.க்கு அளித்த பேட்டியின் மூல சி.டி.யைக் கேட்டிருந்தோம்.  ஆனால், அதனை அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்கவில்லை” என்ற அற்பத்தனமான நொண்டிச்சாக்கைக் கூறி, மோடி மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூறிவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மேலும், இச்சம்பவங்களை வினையாகவும் எதிர்வினையாகவும் குறிப்பிட்டு மோடி கூறியதை, அதன் பின்னணியோடு வைத்துப் பார்க்கும்பொழுது அவர் மீது வழக்குத் தொடருவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டு, மோடியை மட்டுமல்ல, இஷான் ஜாஃப்ரி கொலையை எதிர்வினையாகச் சித்தரித்த தன்னையும் நியாயப்படுத்திக் கொண்டுவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

‘‘கோத்ரா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, எதிர்காலத்தில் இப்படியொரு குற்றச்செயல் எந்தவொரு இடத்திலும் நடக்காதிருக்கும்படி, கடுமையான தண்டனை அளிப்போம்” என மோடி பிப்.27 மற்றும் பிப்.28, 2002 ஆகிய இரு தினங்களிலும் திரும்ப திரும்பக் கூறினார்.  பத்திரிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும், பொதுமக்களைச் சந்தித்த இடங்களிலும் மோடி இதனைத் திரும்பதிரும்பக் கூறினார்.  இது, சட்டம்  ஒழுங்கை காக்க வேண்டும்; குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை தர வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது.  இப்படிபட்ட எண்ணங்கொண்ட மோடி மீது இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சுமத்துவதற்கு அடிப்படை இருக்க முடியாது.  அது மட்டுமல்ல, அவரது இந்த உரை, “இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாதென மோடி அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுதலிக்கிறது.  அப்படியே மோடி கூறியிருந்தாலும்கூட, அது நான்கு சுவருக்குள் கூறிய தனிப்பட்ட கருத்தாகும்.  அதற்காக மோடி மீது வழக்குப் பதிய முடியாது” என மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வக்காலத்து வாங்கியிருக்கிறது.

எல்லாச் சதிச் செயல்களுமே நான்கு சுவருக்குள்தான் பேசித் தீர்மானிக்கப்படுகின்றன.  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வாதப்படி பார்த்தால், கலவரத்தில் நேரடியாக இறங்காமல் சதிச் செயலைத் தீட்டும் முக்கியப் புள்ளிகள் யாரையும் தண்டிக்கவே முடியாது.  மேலும், கோத்ரா சம்பவத்துக்குக் காரணமெனக் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களைத் தண்டிப்பது பற்றித்தான் மோடி நீட்டி முழங்கி வந்தாரே தவிர, அவர் மதவெறிப் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  மாறாக, அக்கொலைவெறி பிடித்த கும்பலைக் காப்பாற்ற அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார், மோடி.

“முசுலீம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது” என்றவாறெல்லாம் மேடைதோறும் பேசி, முசுலீம்களை அவமானப்படுத்தி வந்தார்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, “மோடி அமைதியை விரும்பினார்; குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்றார்; அகமதாபாத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்” என இட்டுக்கட்டிய பொய்களை எடுத்துவைத்து, இந்து மதவெறி கொலைகாரன் மோடியை மத நல்லிணக்கவாதி போலத் தனது இறுதி அறிக்கையில் சித்தரித்துள்ளது.

கோத்ரா சம்பவம் நடந்த நாளன்று (பிப்.27, 2002) இரவில், மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மறுக்கவில்லை.  ஆனால், அக்கூட்டத்தில் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் கலந்து கொண்டதற்கோ, அக்கூட்டத்தில், “இந்துக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” என மோடி பேசியதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதை நிரூபிப்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவு.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அதிகாரிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்ததாகத் தனது இறுதி அறிக்கையில் கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது முதல் அறிக்கையில் அந்த அதிகாரிகளின் சாட்சியங்களை நம்பமுடியாது என முரணாகக் குறிப்பிட்டுள்ளது.  அவர்களின் சாட்சியங்களை நம்ப முடியாது எனும்பொழுது, அக்கூட்டம் தொடர்பான கூட்டக் குறிப்புகளை வாங்கிப் பெற்று, அதன் அடிப்படையில் மோடி மீதான குற்றச்சாட்டு பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், விசாரணைக் குழுவோ அக்கூட்டக் குறிப்புகளைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தாமல், நம்பத்தகாத சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஏற்று மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.

மோடி

பிப்.27, 2002 கூட்டம் மோடியும் அதில் கலந்துகொண்ட அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவதற்காக நடத்தப்பட்டிருக்க முடியாது.  குஜராத் மாநிலமெங்கும் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் நடந்துள்ள அந்த முக்கியமான கூட்டம் எந்தவிதமான எழுத்துபூர்வமான பதிவின்றி நடந்திருக்க முடியுமென்றால், அல்லது அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றால், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கிரிமினல் உள்நோக்கத்தைச் சந்தேகித்திருக்க வேண்டும்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அக்கூட்டம் நடந்தது தொடர்பாக அரசிடம் ஆவணங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை.  அதே சமயம், அச்சதிக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்துள்ள சஞ்சீவ் பட்டை, மோடி அரசு பல முக்கியமான தடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவருவதை அம்பலப்படுத்தி வரும் சஞ்சீவ் பட்டை, கறைபடிந்தவராகக் குற்றம் சாட்டுகிறது.  அவரது கடந்தகால அதிகாரமுறைகேடுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி, அவரை நேர்மையற்ற சாட்சியம் என முத்திரை குத்துகிறது.  மதவெறிப் படுகொலைக்கு ஆதரவாக எவ்வித எழுத்துபூர்வமான சாட்சியமின்றிப் பல வாய்மொழி உத்தரவுகளைப் போட்ட மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் போலீசு அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தையும் உள்நோக்கம் கொண்டதென ஒதுக்கித் தள்ளுகிறது.

‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் சட்டப்படி நடக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, எவ்விதமான அரசியல் சார்பும் இல்லாதவர், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடியவர்.  எனவே, அப்படிப்பட்டவரின் தலைமையில் நடக்கும் விசாரணையில் நீதி நிலைநாட்டப்படும்” என ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது.  ஆனால், ராகவன் இந்த ஒளிவட்டத்தை மோடியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.  தனது கீழ் அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா நடத்திய விசாரணை அறிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததற்கு மேல், அவர் இந்த விசாரணையில் பாரதூரமான அக்கறை எதுவும் செலுத்தவில்லை.  சோ,  இந்து என்.ராம் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ராகவன் இறுதி அறிக்கையைத் தயாரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிப்பதாகவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் அமைந்துள்ளன.

இம்முடிவுகள் மோடியை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவித்துவிடவில்லை; அவரின் பிரதமர் கனவுகளுக்கு உந்து பலகையாகவும் பயன்பட்டு வருகிறது.  மேலும், அரசு இயந்திரம் எந்தளவிற்கு இந்துமயமாகியிருக்கிறது என்பதையும்; இந்த அரசு இயந்திரத்தையும் இன்றுள்ள சட்டங்களையும் கொண்டு மோடி, அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தளகர்த்தர்களைத் தண்டித்துவிட முடியாது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வறுமைக் கோட்டை அழிக்க, கார்ப்பரேட் கொள்ளையை ஒழி! பி.சாய்நாத்

2

கார்பரேட்-கொள்ளை

பி.பி.எல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்டுங்கள் – பி சாய்நாத்

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை புரிந்து கொள்ள நாம் பெருநிறுவன கொள்ளைக் கோட்டை செலுத்தும் புள்ளி விபரங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்

ஒரு டெண்டூல்கர் பெரிய ஸ்கோர்களை எடுக்கிறார். இன்னொருவர் சராசரிகளை அடித்து துவைக்கிறார். திட்டக் குழுவிற்கு சச்சினை விட சுரேஷ் மீதுதான் அபிமானம் என்பது தெளிவு. பேராசிரியர் சுரேஷ் டெண்டூல்கரின் வழிமுறையை பயன்படுத்தி, வறுமையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அது அறிவித்துள்ளது. ஆமாம், இன்னும் ஒரு முறை, ஊரக பகுதிகளில் வறுமை வியத்தகு அளவுகளில் வீழ்ச்சி.

“வறுமையில் வரலாறு காணாத வீழ்ச்சி” என்று அலறுகிறது ஒரு தலைப்புச் செய்தி. இதே தலைப்புச் செய்தியை கடந்த பல ஆண்டுகளில் எத்தனை முறை பார்த்து விட்டோம் என்பதுதான் வரலாறு காணாத சாதனை. எத்தனை தடவை வறுமை வெகுவாக குறைந்து, கணக்கை மாற்றி போட்டதும் திரும்பவும் உயர்ந்து விடுவது நடந்திருக்கிறது!

அதாவது, இந்திய மக்கள் தொகையில் இப்போது அதிகாரபூர்வமாக வறுமைக் கோட்டுக்கு (பி.பி.எல்- BPL) கீழ் இருப்பவர்கள் 29.9 சதவீதம் மட்டும்தான்.   2004-2005-ல் இந்த எண்ணிக்கை 37.2 சதவீதம் ஆக இருந்தது. அந்தக் “கோடு” பற்றிய கதை பேசப்பட வேண்டிய ஒன்று. மேலோட்டமாக பார்க்கும் போது ஊரக வறுமை வீதம் 2004-05-ல் இருந்த 41.8 சதவீதத்திலிருந்து எட்டு சதவீத புள்ளிகள் குறைந்து 33.8 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது. நகர்ப்புற வறுமை அதே காலத்தில் 4.8 சதவீத புள்ளிகள் குறைந்து,  25.7 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. தங்களை அறியாமலேயே கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

போலியான வழிமுறையை மாற்றி அமைத்தல் ஊடகங்கள் மறதி நோயின் காரணமாக புள்ளிவிபரங்களை “எப்போதும் இல்லாத அளவு குறைவான” என்று குழப்புகின்றன. இப்போதைய புள்ளிவிபரங்கள் ‘முன் எப்போதையும் விட குறைந்த’வை இல்லை. இதற்கு முன்பு இதை விட குறைந்த வறுமை வீதத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

1996-ல் பேராசிரியர் மது தண்டவதே ‘நான் உங்கள் நாட்டின் வறுமையை இன்றைக்கு இரண்டு மடங்காக்கி விட்டேன், அதற்காக என்னைக் கொல்ல வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று கிண்டலாக கூறினார். அப்போதைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக அந்த நியாய உணர்வுள்ள முதியவர் செய்தது என்னவென்றால் போலியான ஒரு வழிமுறையை தூக்கி எறிந்ததுதான். இந்த வழிமுறை அவர் பொறுப்பேற்பதற்கு முன்பு அதே ஆண்டு திட்டக் குழுவால் தூக்கிப் பிடிக்கப்பட்டது. வழிமுறையிலோ அல்லது வறுமைக் கோட்டிலோ செய்யப்படும் சிறு சிறு மாற்றங்கள் கூட பெருமளவு வேறுபடும் மதிப்பீடுகளை உருவாக்க முடியும்.

1993-94-ம் ஆண்டில் வறுமையை 19 சதவீதமாக குறைக்க மேற்கொள்ளப்பட்ட “முயற்சி” என்ற மோசடியைத்தான் மது தண்டவதே இல்லாமல் ஆக்கினார். அதாவது அந்த முயற்சியின் படி 1987-88-ம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த வறுமை வீதம் 1993-94-ல் 19 சதவீதமாக குறைக்கப்பட்டது. “தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் திட்டக் குழு நடத்திய ஆய்வின் பூர்வாங்க முடிவுகள்” இவை (எகனாமிக் & பொலிடிக்கல் வீக்லி, ஜனவரி 27, 1996). அந்த புள்ளிவிபரங்கள் உண்மையானவை என்று எடுத்துக் கொண்டால் அதற்குப் பிறகு வறுமை உயர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது என்று பொருள்.

அந்த வரலாறு காணாத வீழ்ச்சியை தூக்கிப் பிடித்தவர் ஒரு நேர்மையான நிதி அமைச்சர், ஒரு போதும் பொய்யே சொல்லாத டாக்டர் மன்மோகன் சிங். ஒரு வணிக தினசரி அந்த நேரத்தில் பெரும் தமாசான ஒரு “எக்ஸ்க்ளூசிவ்” வெளியிட்டது. ‘வறுமை வரலாறு காணாத அளவில் 19 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.’  சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான செய்திகளிலேயே தலை சிறந்த செய்தி அது. ஆனால், அதை வெளியிட்ட அந்த அடக்கமான அதிகாரிகள் முகத்தை வெளியில் காட்டவில்லை, தாங்கள் எவ்வளவு முட்டாள்களாக பார்க்கப்படுவோம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இப்போதெல்லாம் தமது மோசடியை விளம்பரம் செய்ய பத்திரிகையாளர் கூட்டங்கள் நடத்துகிறார்கள் அத்தகைய அதிகாரிகள்.

ஏப்ரல் 1996 தேர்தல்களின் அழிவுகளில் “இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான 19 சதவீதம் வறுமை” என்ற மோசடி புதைக்கப்பட்டது. அன்றைய அரசாங்கமும் அதனுடன் சேர்ந்து புதைந்து போனது. அதற்கு பிறகு அந்த “மதிப்பீடு” யாராலும் பேசப்படவில்லை. இப்போது நமக்கு கிடைத்திருப்பது அதே போன்ற ஒரு மதிப்பீட்டின் 29.9 சதவீத அவதாரம். இந்த இரண்டு மதிப்பீடுகளையும் ஏற்றுக் கொண்டால் வறுமை 16 ஆண்டுகளில் 10.9 சதவிகித புள்ளி உயர்ந்துள்ளதாகத்தானே கருத வேண்டும்? அல்லது இதுவும் ஒரு வழிமுறை மோசடிதானா!

இதற்கிடையில், திட்டக் குழுவின் புதிய புள்ளிவிபரங்கள் சாதித்து விட்ட ஒன்றை பாராட்ட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும் பகுதியினரை அது ஒருங்கிணைத்திருக்கிறது. அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த “மதிப்பீடுகளை” பலமாக தாக்கியதோடு விளக்கமும் கேட்டிருக்கிறார்கள்.

டெண்டூல்கர் அறிக்கை தயாரிப்பில் பெரிய கோல்மால்கள் செய்யப்பட்டிருக்கின்றன. டாக்டர் மதுரா சுவாமிநாதன் சுட்டிக் காட்டுவது போல “நகர்ப்புறங்களுக்கு 2,100 கிலோ கலோரி, ஊரக பகுதிகளுக்கு 2,400 கிலோ கலோரி என்ற” என்ற கலோரி வரையறைகளை அந்தக் குழு தூக்கி எறிந்தது. “ஒரு நாளைக்கு 1,800 கிலோ கலோரி என்ற ஒரே வரையறையை பிடித்துக் கொண்டது அது. “உணவு, விவசாய நிறுவனத்தின் ஒரு வரையறை” யின் அடிப்படையில் அப்படி செய்ததாக குறிப்பிடுகிறது.

“உணவு,விவசாய நிறுவனம் நிர்ணயித்த ஆற்றல் தேவைகள் குறைந்த பட்ச ஆற்றல் தேவைகள். அதாவது எளிதான அல்லது ஓய்வான வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றல்” என்பதை சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் சுவாமிநாதன். அத்தகைய வாழ்க்கைக்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள எடுத்துக் காட்டையும் அவர் குறிப்பிடுகிறார் “… வேலை நேரத்திலோ வேலை நேரத்துக்குப் பிறகோ எப்போதாவது மட்டும் உடல் உழைப்பில் ஈடுபடும் நகர்ப்புற ஆண் அலுவலக ஊழியர்”

டாக்டர் சுவாமிநாதன் கேட்பது போல: ” நாள் முழுவதும் மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் தலைச் சுமை தொழிலாளியை எளிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா?” – தி இந்து பிப்ரவரி 5, 2010.

வறுமையை அளவிடுதல்

கார்பரேட்-கொள்ளை-2
படம் நன்றி – www.thehindu.com

வறுமையை அளவிடுவதற்கு இன்னும் பிற வழிமுறைகள் இருக்கின்றன என்பதை ஊடகங்கள் குறிப்பிடுவது இல்லை. அவையும் இதே அரசாங்கம் ஆரம்பித்து வைத்த வழிமுறைகள்தான். முறை சாரா துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பதாக கருதுகிறது. என் சி சக்ஸேனா தலைமையிலான வறுமைக் கோட்டிற்கான (பிபிஎல்) வல்லுநர் குழு அதை சுமார் 50 சதவீதம் என்று தீர்மானித்தது. டெண்டுல்கர் குழுவைப் போலவே, இந்த இரண்டும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவைதான். ஒன்றுக்கொன்று தாறுமாறாக வேறுபட்டாலும், மூன்றுமே ஊரக வறுமையை அரசாங்கத்தை விட அதிகமாகவே மதிப்பிடுகின்றன. அரசாங்கம் விரும்பும் அறிக்கை கிடைக்கும் வரையில் இதே பிரச்சனை மீது இன்னும் பல குழுக்கள் அமைக்கப்படும். அரசாங்கம் தப்பித்துக் கொள்ள உதவும் அறிக்கை கிடைப்பது வரை. (விவசாய தற்கொலைகள் மீதான பல விசாரணைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன.)

தற்போதைய மோசடியை யாரும் கவனிக்காமல் புகுத்தி விடலாம் என்று திட்டக் குழு நினைத்தது, அதிகார வர்க்கத்தின் ஆணவத்திலும் திறமையின்மையிலும் வரலாறு காணாத சாதனைதான். முதலில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த ஆவணத்தின் மூலம் மக்களின் கோபத்தை தூண்டினார்கள். அங்கு அவர்கள் ஊரக வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 26 என்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு ஒரு நாளுக்கு ரூ 32 என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை நியாயப்படுத்தினார்கள். இப்போது ஊரகப் பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ 22.42 நகர்ப் புறத்திற்கு ஒரு நாளைக்கு ரூ 28.35 என்ற அளவீட்டை புகுத்தி விட நினைக்கிறார்கள்.

1996-ம் ஆண்டில், அரசாங்கமும் திட்டக் குழுவும் தமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட அதே ஆண்டில், தில்லியைச் சேர்ந்த ஒரு முன்னணி சிந்தனைக் குழு நாட்டின் வறுமை பற்றிய “இது வரை இல்லாத பெரிய ஆய்வு” ஒன்று நடத்தியது. அவர்கள் 30,000 குடும்பங்களைசந்தித்து பதில் அளித்தவர்களிடம் 300க்கும் மேற்பட்ட காரணிகளைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். போபாலில் நடந்த ஒரு கூட்டத்தில் அதன் புகழ் பெற்ற தலைவர் இப்படித்தான் சொன்னார். பார்வையாளர்கள் மத்தியில் இருந்த பத்திரிகையாளர்களை இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவரை, பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் கருத்தரங்குகளில் என்ன செய்வார்களோ அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அமைதியாக, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பது. என் அருகில் இருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் திடுக்கிட்டு உயிர்த்தெழுந்தார். “அந்த குடும்பங்களிடம் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டார்கள் என்றா சொல்கிறார்? கடவுளே! இந்தத் துறையில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறேன், நான் நடத்திய மிகப் பெரிய நேர்முகத்தில் ஒன்பது கேள்விகள்தான் இருந்தன. அது என் எஜமானரின் மிகச் சிறந்த நண்பருடனான நேர்முகம். அதில் எனது கடைசி கேள்வி, ‘இப்பவாவது நான் போகலாமா’ என்பதுதான்.”

300 கேள்விகளால் தாக்கப்பட்ட அவரது ஆய்வு இலக்குகள் வறுமையால் இல்லா விட்டாலும் சோர்வினால் செத்திருப்பார்கள் என்று அந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணரிடம் சொன்னோம். அந்த சிந்தனைக் குழுவின் ஒரு மூத்த உதவியாளர் ஒலி பெருக்கியை கையில் வாங்கி நாங்கள் சொல்வது எப்படி தவறானது என்று விளக்கினார். ‘நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு விசாரணையாளர்களை அனுப்பினோம்’ என்று அவர் கூறினார். அது நிச்சயமா புரிந்து கொள்ளக் கூடியதுதான்: ஒருவர் பதில் சொல்பவரின் கையை முறுக்கி பிடித்து வைத்துக் கொள்ள, இன்னொருவர் 300 கேள்விகளை கேட்டிருக்கிறார்.

பிபிஎல், ஏபிஎல், ஐபிஎல், போன்றவற்றின் வரிசையில் நான் என் பங்குக்கு ஒரு எளிய அளவீட்டை சேர்க்க விரும்புகிறேன். அதுதான் சி.பி. எல், அல்லது பெருநிறுவன கொள்ளைக்கோடு. இது பெருநிறுவன உலகத்தையும் பிற பணக்காரர்களையும் அல்லது “உயர் நிகர மதிப்பு நபர்களையும்” தழுவியது. அனைவருக்குமான பொது வினியோக முறைக்கு நம்மிடம் பணம் இல்லை. அல்லது பெரிதும் குறைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு மசோதாவுக்குக் கூட பணம் இல்லை. ஊரக வேலைவாய்ப்புக்கான நிகர செலவிலிருந்து பல ஆயிரம் கோடிகளை வெட்டியிருக்கிறோம். மனித வளர்ச்சி புள்ளிவிபரங்களிலும், பட்டினி புள்ளிவிபரங்களிலும் ஊட்டச்சத்து புள்ளிவிபரங்களிலும் நாம் கடுமையாக பின்தங்கியிருக்கிறோம். உணவு விலைகள் உயர்ந்து கொண்டே போகின்றன, கௌரவமான வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன.

இருப்பினும், வறுமைக் கோடு பற்றிய புள்ளி விபரங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன. கார்பொரேட் கொள்ளைக் கோடு புள்ளி விபரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சிபிஎல் (கார்பொரேட் பிளண்டர் லைன் – பெருநிறுவன கொள்ளை கோடு) என்ற கருத்தாக்கம் மத்திய அரசின் அடுத்தடுத்த நிதி நிலை அறிக்கைகளின் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருமானம்” என்ற பிரிவில் வேர் கொண்டுள்ளது. உதாரணமாக, 2005-06-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு நிறுவன லாப வரியில் ரூ 4 லட்சம் கோடி சலுகை வழங்கியிருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மட்டும் அந்த சலுகையின் மதிப்பு ரூ 50,000 கோடி. இதே நிதி நிலை அறிக்கையில்தான் தேசிய கிராமப் புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றின் மீதான தள்ளுபடிகளையும் சேர்த்தால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் வரிச்சலுகைகள் ரூ 5 லட்சம் கோடியை தாண்டுகின்றன.

கலால் மற்றும் சுங்க வரியின் கீழ் வரும் பொருட்களில் பல, உதாரணமாக எரிபொருட்கள், பரந்து பட்ட மக்களையும் பாதிக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், பெரும்பாலும் அவை வணிக நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும்தான் உதவுகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையிலும் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் வைரம், தங்கம், மற்றும் நகைகள் மீதான இறக்குமதி தீர்வையில் ரூ 1 லட்சம் கோடி விட்டுக் கொடுத்திருக்கிறோம். இந்த அளவிலான பணம் மக்களுக்கு உணவு பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையானது. ஆனால் சிபிஎல் (வணிகநிறுவன கொள்ளை கோடு) பிபிஎல் (வறுமைக் கோடு)ஐ ஒவ்வொரு முறையும் தோற்கடித்து விடுகிறது. இயந்திரங்களின் மீதான வரி நீக்கங்களுக்கும் இதே உண்மை பொருந்தும். மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகள் போன்றவற்றின் மீதான சலுகைகள் எல்லோருக்கும் பலன் தரக் கூடியவை என்றுதான் ஏட்டுப் படிப்பு சொல்லும். ஆனால் நடைமுறையில், இந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் நுழைவது கூட சாத்தியமில்லை.

2005-06 ஆண்டிலிருந்து இந்தப் பிரிவுகளின் கீழ் மொத்த தள்ளுபடி ரூ 25.7 லட்சம் கோடி (அட்டவணையை பார்க்கவும்). அது 2ஜி ஊழலை விட கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். பெருநிறுவன கொள்ளைக் கோட்டில் சமீபத்தில் சேர்ந்து கொண்ட நிலக்கரி ஊழலை விட இரண்டு மடங்கு அதிகம். அட்டவணையைப் பார்த்து விட்டு அதன் பிறகு கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 22.42, நகரப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 28.35 என்று வரம்பு விதிக்கும் வறுமைக் கோட்டுக்கான மதிப்பீடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிபிஎல்.ஐ சரி செய்ய சி.பி.எல்.ஐ ஒழித்துக் கட்ட வேண்டியிருக்கும்.

____________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து.

தமிழாக்கம்: செழியன்.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை!

1

அவதார்-சிங்காஷ்மீரில், இந்திய இராணுவத் துணைப்படையான ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படையின் மேஜர் பொறுப்பில் பணியாற்றிய அவதார் சிங், 1996 மார்ச் மாதத்தில் காஷ்மீரின் பிரபல மனித உரிமை வழக்குரைஞரான ஜலீல் அந்த்ராபியைக் கடத்திச் சென்று, கொட்டடியில் அடைத்து வதைத்துக் கொன்ற மிகக் கொடிய அரசு பயங்கரவாதியாவான். இக்கொட்டடிக் கொலைக்கு எதிரான போராட்டங்கள் காஷ்மீரில் வலுத்து, 1996-இல் மனித உரிமையாளர்கள் தொடுத்த வழக்கின்படி காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் அவதார் சிங் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான். இதுதவிர, மேலும் 10 அப்பாவி காஷ்மீரிகளின் படுகொலைகளுக்கு அவதார் சிங்கும் அவனது தலைமையிலான 7வது ராஷ்டிரிய துப்பாக்கிப் படையினரும்தான் காரணம் என்று போலீசு குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் குடியேறி குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவதார் சிங் மீது பத்தாண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவதார் சிங்கை கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு 2007-ஆம் ஆண்டில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் இந்திய இராணுவத்திடம் கோரியது.  ஆனாலும் இந்திய இராணுவம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்த நிலையில், கடந்த 2012 ஜூன் 21 அன்று விசாரணை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே, ஜூன் 9ஆம் தேதியன்று  தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு,  அவதார் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

அவதார்-சிங்-இடைப்பட்ட காலத்தில், ஜலீல் அந்த்ராபி படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியான சிக்கந்தர் கானீ என்பவர், விசாரணைக்கு முன்பே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த்ராபி கொலை வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி பிலால் நாஸ்கி, உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். 1997-இல் காஷ்மீர் உயர் நீதிமன்றம் அவதார் சிங்கைக் கைது செய்ய உத்தரவிட்ட போதிலும், அவன் இந்திய இராணுவப் பாதுகாப்புடன் பஞ்சாபில் சுதந்திரமாகத்தான் இருந்தான். பின்னர், அவன் 2003-இல் கனடாவுக்குத் தப்பிச் சென்றதை இந்திய அரசு தடுக்கவில்லை. அங்கு அவன் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்ததை கனடா அரசு ஏற்காததால், 2007இல் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குத் தப்பியோடி, கலிபோர்னியாவிலுள்ள செல்மா நகரில் சட்டவிரோதமாகக் குடியேறி, சரக்குந்து முதலாளியாக வாழ்க்கையை நடத்தியுள்ளான். அங்கு அவன் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்ததையொட்டி,  அமெரிக்க உள்துறையும் குடிபெயர்ந்தோர் துறையும் விசாரணை நடத்தி வந்துள்ளன. கனடாவிலும் அமெரிக்காவிலும் அவன் இருந்ததைப் பற்றி அறிந்திருந்த போதிலும், அவனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அரசும் உளவுத்துறையும் அதிகார வர்க்கமும் நீதித்துறையும் இராணுவமும் அமைச்சர்களும் இப்பயங்கரவாதச் சதியில் ஈடுபட்டுள்ளதையும், அவதார் சிங்கைத் தப்பிக்கவைத்து விசாரணையை இழுத்தடித்து வந்துள்ளதையும்  இந்த விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!

0

இந்திய-அரசு-பயங்கரவாதம்

கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்  இந்தியாவுக்கு வருவதற்கு  சில மணி நேரங்களுக்கு முன்பாக,  காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி  இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது. இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா  தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து  சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக  கதையளந்தன.

இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது. இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,  பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது. உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;  அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள  கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

இராணுவத்தின் பயங்கரவாதப் படுகொலைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் கொண்டு சென்ற தம் உறவினர்களைத் திரும்ப ஒப்படைக்க கோரியும், பத்ரிபாலில் இராணுவம் கொன்று புதைத்த ஐந்து பேரின் பிணங்களையும் தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்தக் கோரியும் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராடினர்.  2000-மாவது ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி அனந்த்நாக் நகரில் 5000க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவமும் துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய தொடர் போராட்டங்களின் விளைவாக,  கொல்லப்பட்ட ஐந்து பேரின் பிணங்களும் தோண்டியெடுக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன. இருப்பினும், குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது மட்டமின்றி, தடயங்களை அழிக்கவும் இந்திய இராணுவம் முயற்சித்தது. இராணுவத்தின் மோசடிகள் அம்பலமானதால், மக்கள் ஆத்திரமடைந்ததைத் தொடர்ந்து,
2002-இல்  காஷ்மீர் மாநில அரசு, இந்த வழக்கை மையப் புலனாய்வுத்துறையிடம்  (சி.பி.ஐ.) ஒப்படைத்தது.

நான்காண்டு விசாரணைக்குப் பின்னர், 5 இராணுவ அதிகாரிகள் மற்றும் 7 ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படை சிப்பாய்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஜூலை 2006-இல் சிறீநகர் முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்ல, காஷ்மீரி மக்கள் என்றும், அவர்கள் போலி மோதலில்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் சி.பி.ஐ.இன் குற்றப்பத்திரிகை உறுதி செய்தது. கடத்தல், படுகொலை மட்டுமின்றி, சாட்சியங்களை அழிக்கும் கிரிமினல் நடவடிக்கைகளிலும் இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும்  ஈடுபட்டதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இது, இராணுவத்தினர் தமது கடமையைச் செய்யும் போக்கில் தவறுதலாகவோ தவிர்க்கவியலாமலோ நேர்ந்துவிட்ட மரணம் அல்ல; சதி செய்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதால், இதனைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கமாக இராணுவத்தினருக்கு வழங்கப்படும் இறையாண்மை மிக்க விதிவிலக்கு வழங்கப்படக் கூடாது என்றும் சி.பி.ஐ. வாதிட்டது.

ஆனால் குற்றவியல் நீதிமன்றமோ, இவ்வழக்கை இராணுவக் கோர்ட்டில் விசாரிப்பதா, வழக்கமான குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்று இராணுவமே முடிவு செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பளித்தது.

1990-ஆம் ஆண்டின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி, இராணுவப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்றால், மைய அரசின் அனுமதியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, மைய அரசிடம் முன் அனுமதி பெறாமல் சி.பி.ஐ.  விசாரணை நடத்தியுள்ளதால், சி.பி.ஐ. நடத்தியுள்ள புலனாய்வே சட்டத்துக்கு எதிரானது என்று இராணுவம் எதிர்த்தது.  இந்தப் படுகொலை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்ட விதிகளின் கீழ் வராது என்றும், எனவே மைய அரசிடம் முன்அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும் சி.பி.ஐ. வாதிட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. யின் வாதம் சரியானதென ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் முன்கூட்டியே மைய அரசிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்று ஜூலை 2007-இல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இராணுவம் மனு தாக்கல் செய்து, சாட்சியங்களை திரட்டவோ, விசாரிக்கவோ சி.பி.ஐ.க்கு உரிமை கிடையாது என்றும், அதன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரியது. இது, இந்திய இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும்  நடத்திய பச்சைப் படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் வரம்புகளுக்கு அப்பால் நடந்துள்ள கொலை என்பதால், மைய அரசிடம் முன்அனுமதி வாங்க அவசியமில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வாதிட்டது.

இந்திய-அரசு-பயங்கரவாதம்கடந்த மே முதல் நாளன்று இந்த வழக்கில், படுகேவலமானதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும் நடத்திய படுகொலையை நிரூபிக்கும் வகையில் சி.பி.ஐ. சமர்பித்த ஆதாரங்களை ஆய்வு செய்யக்கூட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. “இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அத்துமீறல்கள்  குற்றங்களை இராணுவ கோர்ட்டில்தான் விசாரிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்த முன்வராவிட்டால், மைய அரசிடம் அனுமதி கேட்டு கிரிமினல் குற்றவியல் நீதி மன்றத்தில் மையப் புலனாய்வுத்துறை வழக்கு தொடுத்து விசாரணையை நடத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இராணுவம் என்ன கூறியதோ, அதையே இன்று தனது தீர்ப்பாகக் கூறுகிறது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் கைப்பாவையான சி.பி.ஐ, இராணுவத்திற்கு எதிராக இவ்வளவு தூரம் இந்த வழக்கில் வாதிட்டதே மிப்பெரும் அதிசயம். காஷ்மீர் மக்களின் கோபத்தை தணிக்கவும், இந்திய அரசின் மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தவும் பயன்படும் என்ற காரணத்தினால்தான் வழக்கை சி.பி.ஐ. இவ்வளவு தூரம் நகர்த்திச் சென்றிருக்கிறது. இருப்பினும், அரசியல் சட்டத்தின் காவலனாகவும், மக்களுடைய அடிப்படை உரிமைகளின் காவலனாகவும் தன்னை சித்தரித்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றம், இராணுவத்தின் காவலனாக இருப்பதையே முதன்மைக் கடமையாக கருதுகிறது என்பது இத்தீர்ப்பிலிருந்து வெளிச்சமாகிறது.

பனிரெண்டு ஆண்டுகாலப் போராட்டத்தையும் இந்த பாசிசத் தீர்ப்பு ரத்து செய்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என எத்தகைய குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டாலும், அவை மறுக்க முடியாமல் நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய குற்றங்கள் அனைத்தும், இராணுவத்தினர் தம் கடமையைச் செய்யும் போக்கில் நிகழ்ந்துவிட்ட தவறுகளாகவே கருதவேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உட்பொருள். இராணுவத்தையும் போலீசையும் காட்டிலும் கொடியதும், நயவஞ்சகம் நிறைந்ததும் உச்ச நீதிமன்றம்தான் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களைப் பற்றி இலங்கையில் ராஜபக்சேயும் என்ன கூறுகிறாரோ, அதைத்தான் இந்த காஷ்மீர் தீர்ப்பில் உச்ச நீதிமன்றமும் கூறுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

பாசிச ஜெயாவின் அடுத்த ”கசப்பு மருந்து” – தண்ணீர் வெட்டு!

12

தண்ணீர்-வெட்டு

‘சென்னை மக்களுக்கு வினியோகித்து வரும் தண்ணீர் அளவில் 25 சதவீதம் வரை குறைக்கப்படும்’ என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பால் விலையேற்றம், பேருந்து கட்டண விலையேற்றம், மின் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’.

சென்னை நகருக்கு ஒரு நாளைக்கு 250 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்த வீராணம் ஏரி வற்றிப் போய் விட்டது. செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு சுமார் 30 சதவீதம்தான் உள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஏற்படப் போகும் பற்றாக் குறையை சமாளிக்க நகரின் சில பகுதிகளில் அதிகார பூர்வமாக அறிவிக்காமல் தண்ணீர் வினியோகத்தின் அளவை 25 சதவீதம் குறைத்து விட்டதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் சொல்கின்றனர்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குறைவாக பெய்வதாலும் வடகிழக்கு பருவ மழை சராசரியை விட குறைவாகவே பெய்யும் என்று மதிப்பிடப்படுவதாலும் இந்த நிலைமை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்திய விவசாயத்தை பருவக்காற்றுகளின் சூதாட்டம் என்று சொல்வது போல அடிப்படைத் தேவையான குடிநீர் வினியோகமும் ‘பருவமழையின் சூதாட்டமாக’ மாறியிருக்கிறது. உண்மையில் இது இயற்கை மட்டும் நம்மை வஞ்சிக்கும் பிரச்சினையா?

‘கடந்த 139 வருடங்களில் பருவ மழை ஒரு தடவை கூட வராமல் இருந்ததில்லை என்றும் எல்லா ஆண்டுகளிலும் சராசரியில் 60 சதவீதத்துக்கு குறையாமல் மழை பெய்துள்ளது’ என்றும் இந்து நாளிதழில் ஜூலை 26-ம் தேதி வெளியாகியுள்ள அறிக்கை சொல்கிறது. ஆனால், மழைக் காலத்தில் வெள்ளமும் மற்ற மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் என்பதுதான் சென்னை நகர மக்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

இதற்கு காரணம் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், அடிப்படை கட்டமைப்புகளை புறக்கணித்து, தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதில்  மட்டுமே கவனம் செலுத்தும் அரசு கொள்கைகள்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் சென்னை நகரில் வாழும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியால் பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்யும் ஊழியர்களின் குடியிருப்புகள், மேட்டுக் குடியினருக்கு தேவைப்படும் ஐந்து நட்சத்திர தரத்திலான கேளிக்கை வசதிகள் இவை அனைத்துக்கும் சேர்த்து நீர் தேவையை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரில் ஒரு நபருக்கு 135 லிட்டர் ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை. அந்த கணக்கின்படி சென்னை நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு கடந்த நாற்பது ஆண்டுகளில் மூன்று மடங்காகியிருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பதோடு, இருக்கும் குடிநீர் வளங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது சென்னையின் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு நபருக்கு 75 லிட்டரை விட குறைவான அளவு நீரே வினியோகிக்கப் படுகிறது.

காலம் காலமாக பருவ மழை பெய்யும் போது நீரைத் தேக்கி வைத்து மற்ற நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கி வைத்திருந்த நீர் நிலை ஆதாரங்கள் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை வருமானத்தால் ஏற்றி விடப்பட்ட வீட்டு வாடகை, நில விலை ஏற்றம் காரணமாக பல ஏரிகள் நிரப்பப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்படுவது வெகு வேகமாக நடந்து முடிந்திருக்கிறது.

1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரியத்திடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்த 29 ஏரிகளின் மொத்த நீர் தேக்கப் பரப்பில் 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. முகப்பேர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கொளத்தூர், செந்நீர்குப்பம், ஆதம்பாக்கம், உள்ளகரம், தாம்பரத்தில் இருக்கும் தலக்கன்சேரி ஆகிய இடங்களில் இருக்கும் ஏரிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இல்லாமல் ஆகி விட்டிருக்கின்றன. தாம்பரம் புதுத்தாங்கல் ஏரியில் 93 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வெறும் 7 சதவீதம் மட்டுமே குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவில் 77 சதவீதம் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போயிருக்கிறது.

பெருகி வரும் நகரத்துக்கு தேவையான புதிய நீர் வளங்களை உருவாக்கும் முயற்சிகள் அனைத்தும் அரைகுறையாகவே முடிந்திருக்கின்றன. 1968-ல் ஆரம்பிக்கப்பட்ட வீராணம் திட்டம் பல கோடி ரூபாய் விரயத்துக்குப் பிறகு சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டது. அந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட கான்கிரீட் குழாய்கள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல் ஏலம் விடப்பட்டன. 1976-ல் திட்டமிடப்பட்ட கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய மொத்த 12 டிஎம்சி நீரில் சுமார் 3 டிஎம்சி அளவே சென்னைக்கு வந்து சேருகிறது. 2004-ல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை நிலத்தடி நீராக தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்தாலும், பொது இடங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் வீணாக போவதையும், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பதையும் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமது தேவைகளுக்கான நீரை அடுக்குமாடி குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும் ஆள் துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி நிறைவு செய்து கொள்கின்றன. இதன் விளைவாக 1990க்குப் பிறகு சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் அளவு இறங்கி விட்டிருக்கிறது. மேலும் மேலும் தண்ணீரை இறைப்பதன் விளைவாக நிலத்தடி நீரில் குளோரைடின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச வரம்பை விட இரண்டு மடங்கு இருக்கிறது. புளோரைடும் நைட்ரேட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி விட்டிருக்கின்றன.

பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கில்லாத நிலைமை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அத்தகைய நீரும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு விடும்.

தண்ணீர்-வெட்டு

பருவ மழை குறைவாக பெய்வதால் ஏற்படும் குறுகிய கால தட்டுப்பாட்டிலும் சரி, நீண்ட கால நோக்கிலான தண்ணீர் இல்லாமையிலும் சரி, பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் மட்டும்தான். மேலும் மேலும் குறைந்து கொண்டே போகும் தண்ணீர் வளங்களை சுட்டிக் காட்டி ‘தண்ணீரை விற்பனை பண்டமாக ஆக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும்’ என்கிறது மத்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை. என்ன விலை கொடுத்தும் வாங்க பணம் வைத்திருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமைச்சர்களின் வீடுகளுக்கும் தேவையான தண்ணீர் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு தண்ணீர் வினியோகம் குறைக்கப்படும்.

மறுகாலனியாக்கத்தின் மூலம் நம் நாட்டை கொள்ளையடித்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை வெட்டி விற்பது என்பது குறுகிய கால லாபத்தை கொடுப்பதுதான். ஆனால் தண்ணீர், மருத்துவம், போக்குவரத்து, கல்வி, மின்சாரம் இவையெல்லாம் வற்றாத லாபம் தரும் வளங்கள். நாட்டில் உள்ள 100 கோடி பேரும் தண்ணீர் குடிக்க வேண்டும், மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும், பயணம் செய்ய வேண்டும், மின்சாரம் பயன்படுத்த வேண்டும், இவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டால் தலைமுறை தலைமுறையாக லாபம் சம்பாதிக்கலாம். அதனால்தான் புதுப் புது இடம் தேடி அலையும் பன்னாட்டு மூலதனம், ‘தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கும் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தாமாகவே தனியார் மயமாக்கத்தின் அவசியத்தை உணரும்படி அரசின் சேவைத் துறையை திட்டமிட்டு சீரழிக்க வைக்கிறார்கள். காலியாகும் வேலையிடங்கள் நிரப்பப்பட மாட்டாது, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது, அதிகாரிகளின் லஞ்ச, ஊழல்கள் கண்டு கொள்ளப்பட மாட்டாது. மக்களுக்கு தேவையான சேவை கிடைக்காமல் தவிக்கும் நிலைமை ஏற்படும். இப்படித்தான்’காசு கொடுத்தாலாவது தண்ணீர் கிடைத்தால் போதும்’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் கல்வி கட்டணத்துக்காக மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு பள்ளிக் கட்டணம் கட்டி விடுவது போல, அவசர மருத்துவ தேவைகளுக்காக சேமிப்புகளையும் சொத்துக்களையும் முற்றிலுமாக இழந்து விடுவது போல தண்ணீருக்கும் தமது வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சுருங்கக் கூறின் தண்ணீர் தட்டுப்பாடு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சினை என்பதாக இவர்கள் பேசி வருகிறார்கள். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்வதும், உபயோகிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதன் மூலம் அந்த பொறுப்புணர்ச்சியைகை கொண்டு வருவதும் வேண்டும் என்று இவர்கள் தனியார்மயத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

உண்மையில் தண்ணீரை விரயமாக்குவது யார்? கால் கழுவவும், சமைக்கவும், துவைக்கவும் பொதுக்குழாயை நம்பியிருக்கும் மக்கள்தான் சென்னையில் அதிகம். இவர்களெல்லாம் விரும்பினாலும் கூட தண்ணீரை விரயமாக்க முடியாது. நினைத்த நேரத்தில் தெருக்குழாயில் வரும் நீரை காத்திருந்து பிடிப்பதில் துவங்கி பல இன்னல்களை அடையும் இம்மக்கள்தான் உண்மையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் மூலம் ஏரிகளை சாதாரண மக்கள் வளைக்க வில்லை. கோடி ரூபாயில் விலைபேசப்படும் அப்பார்ட்மெண்டுகளிலும் அவர்கள் வசிக்கவில்லை. நட்சத்திர விடுதிகளும், பங்களாக்களும்தான் பாத்டப், நீச்சல் குளம், குளிப்பதற்கு கூட குடிநீர் என்று நீரை விரயமாக்கி வருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை கேன் நீர், பாட்டில் நீர் இல்லாமல் வாழமுடியாது என்பதற்கு பழகிவிட்டார்கள். இவர்களை குறிவைத்துத்தான் தனியார்மய தண்ணீர் வியாபாரம் கொழித்து வருகிறது. இப்போது அரசே தண்ணீர் வெட்டை அறிவித்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் முழு நீர்ப் பயன்பாடும் தனியார் கையில் மின் கட்டணம் போல தண்ணீர் கட்டணம் வசூலித்து செயல்படும் நிலை ஏற்படும்.

இயற்கையான நீர் ஒரு வணிகப் பொருளாக விற்க்கப்படும் நிலை என்பது வேறு எதனையும் விட கொடூரமானது. வேறு எதற்காகவும் கூட அரசியல் போராட்டங்களை விரும்பாத ‘கண்ணியத்திற்குரியவர்கள்’ தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராக போராட வேண்டும். இல்லையேல் உங்களது வருமானத்தில் கணிசமான அளவு நீருக்காக செலவிட வேண்டும். தண்ணீரிலிருந்தாவது உங்களது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கட்டும்.

__________________________________________

– செழியன்.

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

5

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

போபால் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றக் கோரியும், இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவரான செபஸ்டின் கௌ மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி போபால் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலண்டன் ஒலிம்பிக்கை “டௌ ஒலிம்பிக்” எனக் கூறும் போபால் மக்கள், டௌ வெளியேற்றப்படாவிட்டால், இலண்டன் ஒலிம்பிக்கை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். போபாலைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் இலண்டன் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்குமாறு இந்திய விளையாட்டு துறையையும் இந்திய ஒலிம்பிக் கமிட்டியையும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் இந்திய ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலையை மட்டுமே இதுவரை செய்துள்ளது.

டௌவுக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கடிதத்தைக்கூட அதன் ஆதரவாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. டௌவை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய தினமணி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் எழுதியதற்காக இந்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் தலைவர் கௌ, டௌ கெமிக்கல்ஸை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

டௌ கெமிக்கல்சுக்கு ஆதரவாகப் பேசும் கௌ முதல் தினமணி வரை எல்லோரும் வைக்கும் வாதம், போபால் படுகொலைகளுக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பாளியாக முடியாது என்பதாகும். அவர்களது வாதப்படி, 1984ஆம் ஆண்டு போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விபத்து நடந்தது; ஆனால், டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடை வாங்கியதோ 2001இல் தான்; அதாவது, விபத்து நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான். இதனால் போபால் படுகொலைக்கும் டௌவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் நியாயம் போலத் தோன்றும் இந்த வாதம் மிகவும் வக்கிரமானது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கும் போது அதன் சொத்துக்களை மட்டும் வாங்குவதில்லை. நிறுவனத்தின் பொறுப்புக்களையும் சேர்த்துத்தான் வாங்குகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கும்போது, போபால் படுகொலை பற்றி தெரிந்துதான் டௌ கெமிக்கல்ஸ் அதனை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், போபால் படுகொலைக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தரக் கோரி இந்திய அரசே டௌ கெமிக்கல்ஸ் மீதுதான் வழக்குத் தொடர்ந்துள்ளது. உண்மை இவ்வாறிருக்கையில், போபால் படுகொலைக்கு டௌ கெமிக்கல்ஸ் பொறுப்பில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள் என்றால், ஒன்று டௌவிடமிருந்து இவர்கள் பணம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது நாட்டு மக்கள் குறித்தும், அவர்களது துன்ப துயரம் குறித்தும் கடுகளவும் கவலைப்படாத வக்கிரப் பேர்வழிகளாக இருக்க வேண்டும். செபஸ்டின் கௌ , டௌவை ஆதரிக்க முன்னது காரணம் என்றால், தினமணிக்குப் பின்னது காரணம்.

ஒலிம்பிக்கில் டௌ : நாய் விற்ற காசு குரைக்காது !போபால் படுகொலையை விடுத்துப் பார்த்தால்கூட, டௌகெமிக்கல்ஸ் ஒன்றும் சொக்கத் தங்கமில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா நடத்திவரும் பல படுகொலைத் தாக்குதல்களுக்கு ஆட்கொல்லி நச்சு இரசாயனங்களை உற்பத்தி செய்து தருவது இந்த நிறுவனம்தான். வியட்நாம் போரில் அப்பாவி மக்கள் மீது வீசப்பட்ட “நாபாம்” இரசாயன குண்டுகளை இதே டௌ நிறுவனம்தான் தயாரித்துக் கொடுத்தது. இத்தகைய கொலைகார நிறுவனத்தைத்தான் இவர்கள் மகா யோக்கிய சிகாமணியாகச் சித்தரிக்கிறார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், இந்திய விளையாட்டு வீரர்களின் யோக்கியதையோ அருவருக்கத்தக்கதாக உள்ளது. இந்தியா ஒலிம்பிக்கைப் புறக்கணித்துவிட்டால் போட்டிகளில் பங்கெடுக்கத் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு எங்கே பறிபோய்விடுமோ என அஞ்சும் அவர்கள் போட்டியைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்கின்றனர். காமன்வெல்த் போட்டி நாயகன் என ஊடகங்களால் போற்றப்படும் ககன் நரேங் (துப்பாக்கிச் சுடுதல்), ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பது தவறென்றும் ஒலிம்பிக்குக்குப் பணம் கொடுத்ததன் மூலம் ‘டௌ’ தனது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரிஷ்வி எனும் முன்னாள் ஹாக்கி வீரர் கையில் கறுப்பு பட்டை அணிந்து செல்லலாம் என யோசனை சொல்கிறார். நாட்டுப்பற்றோ மக்கள் நலனோ மயிரளவும் இல்லாமல், தனது நலனை மட்டுமே பார்க்கும் அற்பவாத அடிமைகளாகக் கிடக்கும் இந்த ‘வீரர்’கள்தான், அர்ஜூனா, கேல் ரத்னா என நாட்டின் உயர்ந்த விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியை ஏதோ புனிதமான நிகழ்வாகவும், அதில் கலந்து கொள்வது ஏதோ மிகப்பெரிய பொறுப்பாகவும் முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் ஒலிம்பிக் என்பது, மிகப்பெரிய அளவில் உலக முதலாளிகள் நடத்தும் வியாபாரம். இதன் காரணமாகத்தான், அதனை நடத்தும் வாய்ப்புக்காக எல்லா நாடுகளும் போட்டி போடுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, 370 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. டௌ கெமிக்கல்சுக்கு இத்தொகையைத் திருப்பிக் கொடுத்து வெளியேற்றிவிடுவதில் அதற்குப் பொருளாதார ரீதியில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால், அவ்வாறு செய்தால் அந்த நிறுவனத்தைக் கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதாகிவிடும். அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தை, தங்களில் ஒருவனை, கொலைகாரன் என முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதை உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறது. எனவேதான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி டௌவை ஆதரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்திய அரசும் டௌவை ஆதரிக்கிறது.

_______________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2012

மீள்பதிவு
________________________________________

8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்!

6

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம்.

அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான்.

அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரை வைத்து போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றர்.

இந்த தூத்துக்குடி பெண்ணை ஏப் – 25 மணம் செய்திருக்கிறான். அதுவும் இருவாரத்திற்கு முன்னர்தான் அவனது விளம்பரத்தைப் பார்த்து அந்த பெண் வீட்டினர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். திருமணம் ஆனதும் சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணின் 8 பவுன் நகையை எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டான் இந்த பிளேடு பக்கிரி

இந்த புகாரை வைத்து போலீசார் மேலும் விசாரிக்கும் போதுதான் அவன் பல மாற்றுத் திறனாளி பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களை உள்ளிட்டு பல இடங்களில் இவன் மோசடி செய்திருக்கிறான்.

சமீப காலமாக திருமண மோசடி என்பது குற்றங்களில் ஒரு குறிச்சொல்லாக சேர்க்கும் அளவு தனி கிரைம் வகையாக உருவெடுத்து வருகிறது. இதுவரை மேல்தட்டு வர்க்கத்தை குறிவைத்து ஐ.டி, அமெரிக்கா, ஐ.ஏ.எஸ், முதலாளி என்று ஏமாற்றியவர்களை கண்டிருக்கிறோம். அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை, எம் பி ஏ படித்த மாப்பிள்ளை கிடைத்தால் வாழ்க்கையில் சடுதியில் முன்னேறி விடலாம் என்று பெண்களும் அவர்களது வீட்டினரும் நினைக்கின்றனர்.

இந்த காரியவாதத்தை தூண்டிலாக வைத்து பலர் ஏமாற்றியிருக்கின்றனர். இப்படி ஏமாற்றுபவர்கள் திருமண இணையதளங்களில் பந்தாவான ஃபுரஃபைலை போட்டு விட்டு மீன் சிக்குவதற்காக காத்திருப்பர். சிக்கியதும் அசத்தும் ஆங்கிலத்தில் பீட்டரைப் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைப்பார்கள். பிறகு அவரசமாக சென்னை வந்தேன், பணத்தை தொலைத்து விட்டேன், அவரசமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று சென்டிமெண்டை வீசி இலட்சங்களை அமுக்கிவிட்டு பறந்து விடுவார்கள்.

இவ்வளவு மலிவாக ஏமாற்றப்பட்டதை பெருமையாக வெளியே சொல்ல முடியாது என்பதால் பல மேல்தட்டுக் கனவான்களும், சீமாட்டிகளும் போலீசில் புகார் தருவதில்லை. சில ஜேப்படியினர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று ஆட்டையைப் போட்டு திருமணமே முடித்து பிறகு ஏமாற்றுவார்கள். இப்படி திருமணத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தில் அது தோற்றுவித்திருக்கும் மாயையை மூலதனமாக போட்டு இந்த எம்டன்கள் ஏமாற்றுகிறார்கள்.

ஆனால் இங்கே ராதேஷ் செய்திருக்கும் ஏமாற்று இந்த வகைப்பட்டதல்ல. இது ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் அவல நிலையை இரக்கமற்ற வகையில் சுரண்டியிருக்கிறான் இந்தக் கேடி. பொதுவில் கால் ஊனம் அல்லது பிறவகை உடல் குறைபாடு உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

சற்று வசதி உள்ள பெற்றோர்கள் வரதட்சணை, தங்கத்தை அதிகம் கொடுத்து ஒரு மணமகனை விலைக்கு வாங்குவார்கள். அப்படியும் ஆள் கிடைப்பது சிரமம். கிடைத்தாலும் அந்த மணவாழ்க்கை பெண்ணின் பொருளாதார அந்தஸ்தை வைத்தே தீர்மானிக்கப்படும். இதிலும் ஏழைப்பெண்களுக்கு அந்த வழியும் கிடையாது. இருந்தாலும் அவர்களும் கடன் வாங்கியாவது பெண்களை கரை சேர்க்க விரும்புகிறார்கள். மாற்றுத் திறனாளி பெண்களை மணம் செய்ய வேண்டும் என்ற இலட்சியவாதம் உள்ள ஆண்கள் தற்போது அருகி வருகிறார்கள்.

ஆக, இத்தகைய அவலச் சூழலை புரிந்து கொண்டு இவர்களை சுலபமாக ஏமாற்ற முடியும் என்று திட்டம் போட்டிருக்கிறான் ராதேஷ். உடல் குறைபாடு பெண்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற அவனது அறிவிப்பை மாபெரும் மனித நேயமாக நினைத்து பல விட்டில் பூச்சிகள் சிக்கியிருக்கின்றார்கள். அதிலும் விளம்பரத் துறையில் மேலதிகாரி என்ற அந்தஸ்தும் பலரது கனவை கிளப்பி விட்டிருக்கும்.

இத்தகைய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞன் தமது மகளை  திருமணம் செய்ய முன்வந்திருப்பதையே மாபெரும் தியாகமாக நினைத்து அந்தப் பெற்றோர் அவனை அணுகியிருக்க வேண்டும். இதனால்தான் ராதேஷ் உடனடித் திருமணத்தை எல்லோரிடமும் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் திருமணம் செய்த உடன் வீட்டிற்கு செல்லாமல் லாட்ஜ்களுக்கு அழைத்து சென்றிருக்கிறான். இதன் மூலம் தனது உண்மையான வசிப்பிடத்தை யாருக்கும் தெரிவிக்காதபடி கச்சிதமாக ஏமாற்றியிருக்கிறான்.

இதையெல்லாம் விசாரித்து அறிந்து கொள்ளும் நிலையில் அந்த பெண்களோ வீட்டினரோ இல்லை. அப்படி இருக்கவும் இயலாது. ஊனமுற்ற பெண்ணை மணம் புரிவதாக சொன்னவனை அப்படி விசாரித்தால் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சமே அவர்களைத் தடுத்திருக்கிறது.

மேட்டுக்குடியினரின் பண ஆசையை வைத்து ஏமாற்றும் மற்ற மோசடிக்காரர்களை விட அனுதாபத்தை மூதலீடாக வைத்து அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றியிருக்கும் இந்த ராதேஷ்தான் கொடூரமான கயவன். அந்த பெண்கள் ஏமாந்ததோடு குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்த பணத்தையும், தங்கத்தையும் பறிகொடுத்திருக்கிறார்கள். இப்படி ராதேஷ் சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டிருக்கிறனென்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

புரோக்கரிடம் சொல்லி  மணமக்களை தேடும் நேரடி முறை போய் தொழில் நுட்பம் வழியாக ஊடகங்கள், இணைய தளங்கள் வழி உலகம் முழுவதும் வாழ்க்கைத் துணையை தேடலாம்தான். ஆனால் இங்கேயும் தொழில்நுட்பம் ஏமாற்றுபவர்களுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் பண்புகள் அடிப்படையில் மணமக்களைத் தேட வேண்டும். பணம், அந்தஸ்து, சாதி, தகுதி என்று சுயநலத்தோடு தேட ஆரம்பித்தால் அவர்கள்தான் மோசடிக்காரர்களின் சுலபமான இரை. ராதேஷ் போன்றவர்களுக்கோ ஆதரவற்ற பிரிவினர்தான் இரை.

அத்தகைய மக்களை ஆதரவற்றவர்களாக நடத்தும் இந்த சமூகம் மாறாமல் ராதேஷ் போன்ற மோசடிக்காரர்களை ஒழித்துவிட முடியாது.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?

91

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 19

”இந்தக் காலத்தில் கூட, நம் நாட்டின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவியை ஒரு முசுலீம் அலங்கரிக்க முடிந்தது; மத்திய அமைச்சரவைகளிலும், உள்நாட்டு, வெளிநாட்டு இலாகாக்களிலும் முசுலீம்கள் பெரும் பதவிகளை அடைய முடிந்தது. அவையெல்லாம் நமது தேசிய பரம்பரையின்  வலிமையினால்தான் சாத்தியமாயிற்று. பக்கத்தில் உள்ள மதவழி அரசான பாகிஸ்தானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகள் மிகத் தெளிவாகப் புலனாகின்றன. இவற்றை விளக்க வேண்டிய அவசியமே இல்லை.”

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வால்கரின் – ‘ஞானகங்கை‘ 2 –ஆம் பாகம், பக்கம் 135.

பாகிஸ்தான் மட்டுமல்ல ஏதாவது ஒரு முசுலீம் நாட்டில் முசுலீம் அல்லாதோர் இத்தகைய உயர் பதவிகளுக்கு வர முடியுமா? இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என ஆர்.எஸ்.எஸ். கும்பல் வாதிடுகிறது. ஆயினும் உண்மை என்ன?

அநேக இசுலாமிய நாடுகளில் முசுலீம் மக்கள் தொகை விகிதம் 95 அல்லது 100 சதமாக இருக்கும்போது பிற மதத்தினர் உயர்பதவிகளுக்கு  வருவதற்கான வாய்ப்போர், அடிப்படையோ இல்லை. இருப்பினும் சிரியா, லெபனான், துருக்கி, எகிப்து, முன்னாள் சோசியத் யூனியனின் இசுலாமிய நாடுகளிலும் பிற மதத்தினர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இசுலாத்தின் சர்வதேசியம் பேசும் சதாம் உசேனின் ஈராக்கில் கூட தாரிக் அசிஸ் என்ற கிறித்தவர் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேசமயம் வளைகுடா மற்றும் பிற இசுலாமியக் குடியரசு நாடுகளில் இந்நிலைமை இல்லை. அதனால் என்ன, அந்த நாடுகள் மதச் சார்புடன் இருக்கும்போது, நாம் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்கிறோம். மதச்சார்பை இழிவு என்று கருதுகிறோம். ஆயினும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் மதச்சார்பைத்தான் பெருமையென்றும், மதச்சார்பின்னையை இழிவு எனவும் கருதுகிறது. அதனால்தான் இசுலாமிய நாடுகளின் மதச்சார்பைக் காட்டி இங்கேயும் அப்படியே ஒரு இந்துராட்டிரத்தைக் கொண்டு வர இந்த வாதத்தை வைக்கிறார்கள். இந்து மதவெறியர்கள் எழுவதற்கு முன்பிருந்த இந்நாட்டின் மதச்சார்பின்மை என்பது ஒரு கேலிப் பொருளாகவும், பார்ப்பனியப் பண்பாடே சகல மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இருந்து வருகிறது.

துருக்கியில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அந்நாடு மதச்சார்பின்மையைக் கறாராகக் கடைபிடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துருக்கி பாராளுமன்றத்தில் இசுலாமிய மதவாதம் பேசிய உறுப்பினர் ஒருவரின் பதவி ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. த.மா.காவைச் சேர்ந்த ஜெயந்தி நடராசன் அங்கு சென்றிருந்தபோது இதை அறிந்து அதிர்ச்சியுற்றதாகக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். இங்கே பால்தாக்கரே, தாராசிங் வகையறாக்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பும், சமூக மதிப்பும் தரப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மையை துருக்கியுடன் ஒப்பிடும் போது படுகேவலமாகத்தான் இருக்கின்றது.

இருந்தபோதும் நம் நாட்டின் உயர் பதவிகளில் முசுலீம்கள் சிலர் இருப்பதற்குக் காரணம் ”இயற்கையாகவே” இந்துக்களிடம் உள்ள பெருந்தன்மை என்கிறார்கள். ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராகவும், முகமது கரீம் சாக்ளா நீதிபதியாகவும், பட்டோடி, அசாருதீன் போன்றோர் கிரிக்கெட் அணித் தலைவராகவும் இருந்திருக்கிறார்கள். இதில் பெருந்தன்மை என்ன இருக்கிறது? ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்குவது என்பது ஒரு தாழ்த்தப்பட்டவரை ஜனாதிபதி ஆக்குவதைப்போல ஒரு பித்தலாட்ட வேலைதான். இப்பிரிவு மக்களிடம் ‘நம்மாள் ஜனாதிபதி’ என்ற பெருமிதத்தை உருவாக்கிவிட்டு, வழக்கமான ஒடுக்குமுறையைத் தொடருவார்கள். ரன்பீர்சேனாவின் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடும் குடியரசுத் தலைவர் நாராயணன் அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? முன்பு வெங்கட்ராமன் விட்ட அறிக்கையின் இடம், காலம் மாறியதைத் தவிர விளைவுகள் எதுவும் மாறவில்லையே?

மேலும் ஒரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களின் நலனுக்குச்சேவை செய்யவே ‘அரசு’ உள்ளிட்ட ஏனைய சட்ட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனில் இந்நிறுவனங்களின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவிகளுக்கு ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர வேண்டும் என்பதில்லை. அடக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் கூட வரலாம். அப்படி வருவதையே ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. எனவே அரசு என்ற நிறுவனம் இந்துத்தரகு முதலாளிகளுக்கும், இந்து அதிகார வர்க்க முதராளிகளுக்கும், இந்து நிலப்பிரபுக்களுக்கும் அடிபணிந்திருக்கும் போது, தலித் நாராயணனோ, முசுலீம் ஜாகீர் உசேனோ கோபுரத்தின் பொம்மையாக இருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உண்மையில் இவர்களும் அதை அறிந்தேதான் இருக்கிறார்கள். இருவரது வர்க்க நலனும் இணைந்தே இருக்கின்றன.

இத்தகைய மோடி மஸ்தான் மோசடியை உலகமெங்கும் காணலம். சிட்னி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்கும் பெருமை ‘கதே ப்ரீமென்’ என்ற ஆஸ்திரேலிய பழங்குடி வீராங்கனைக்கு வழங்கப்பட்டது. இவரைவிடப் பிரபலமான வெள்ளையின வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலிய அரசு இதைச் செய்யக் காரணம் ‘நிறவெறியை எதிர்க்கிறோம்’ என்று பம்மாத்துக் காட்டத்தான். உண்மையில் வெள்ளையர்களிடம் இழந்த தங்கள் மண்ணை மீட்க இன்று வரை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் போராடுவதும் அரசு அதை அடக்குவதும்தான் அங்கே நடைமுறையாக இருக்கிறது.

கோஃபி அன்னான் என்ற கருப்பர் செயலாளராக வந்ததினாலேயே, ஐ.நா.சபையின் ஏகாதிபத்திய அடிமைத்தனம் மாறி விட்டதா? முத்தையா முரளீதரனை இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்த்ததினாலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது என ஏற்க முடியுமா? பங்காரு லட்சுமணன் என்ற தாழ்த்தப்பட்டவர்  தலைவராக வந்தததினால், பாரதீய ஜனதாவின் பார்ப்பனிய ரத்தம் மாறிவிடுமா? கருப்புக் கிழவிகளைக் கண்ட மாத்திரத்தில்  கட்டிப் பிடிக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்குக் குறையானவையல்ல மேற்கண்டவை!

நம் நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முசுலீம்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த தேசிய விகிதம் பாராளுமன்ற – சட்டமன்றங்களில், வேலை வாய்ப்பில், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் பதவிகளில், கல்வியில், போலீசு – இராணுவத்தில் கிடையாது. நாட்டின் 50 பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் கூட முசுலீமாக இல்லை. மேலும் போலீசு – இராணுவ – உளவுப் பிரிவுகளின் உயர்மட்டப் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்படுகிறது. இவைதான் யதார்த்தம் தெரிவிக்கும் உண்மை.

எனவே கிரிக்கெட் காப்டன், ஜனாதிபதி, மந்திரி பதவி எல்லாம் உலக நாடுகளிடையே மதச்சார்பின்மை எனும் பொய்யை நிரூபிக்கும் தந்திரமாகும். அதனால்தான் இந்தியாவில் வளைகுடா நாடுகளுக்கு தூதர் அனுப்புவது முதல், பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது வரை எல்லாக் கட்சி அரசாங்கங்களும் சல்மான் குர்ஷித், நஜ்மா ஹெப்துல்லா, சிக்கந்தர் பகத், ஓமர் அப்துல்லா போன்ற முசுலீம்களைப் பயன்படுத்தி வருகின்றன.

இதெல்லாம் போகட்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில், ஒரு தோட்டி – வெட்டியானின் வேலையைச் செய்ய, கேவலம் ஒரே ஒரு ஐயர், முதலியார், செட்டியார், நாயுடு கூடத் தயாராக இல்லையே, என்ன அநீதி? ஏர்க்கலப்பையுடன் வயலில் உழும் ஒரு மார்வாடி, சேட்டு, ஐயங்காரை திரைப்படத்தில் கூடக் காண முடியவில்லையே? எப்பேர்ப்பட்ட வஞ்சனை! இன்னும் புரியும்படி கேட்போம். பார்ப்பன – பனியா, ‘மேல்’ சாதியினர் தவிர சூத்திர – பஞ்சம சாதிகளைச் சேர்ந்த எவரும் தரகு முதலாளிகளாக இல்லையே, ஏன்? நாடெங்கும் பரவிக் கிடக்கும் பார்ப்பன -வேளாள – ‘மேல்’சாதி மடங்களில், ஒரு சூத்திரனுக்கோ, பஞ்சமனுக்கோ கேவலம் ‘சந்நியாசமா’ வது வாங்கித்தர முடியுமா? முசுலீம்களுக்கு சில உயர் பதவி பிச்சையளித்து தமது பெருந்தன்மை பற்றிப் புல்லரிக்கும் இந்து மத வெறியர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்.

ஆகையால் முசுலீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோருக்கும், இவர்கள் அளிக்கும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ உயர்பதவிகளை அளிக்காமலே இருக்கலாம். அப்போதாவது அந்தச் சமூக மக்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் மாயை சுலபமாகக் கலைந்து போகும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை!

23
பலியான மாணவி அகிலா
பலியான மாணவி அகிலா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர்.

அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால் வெறிபிடித்த அந்த மாணவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அகிலா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.  இறப்பதற்கு முன்னர் அவள் எழுதிய கடிதத்தில் அந்த மூன்று மிருகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் காரணமென்று எழுதியிருக்கிறாள்.

செல்பேனில் படம் பிடிப்பதை அந்த மூவர் அணி திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறது. அதற்கு அத்தை மகன் என்ற உறவுமுறை பயன்பட்டிருக்கிறது. ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடித்து அவளிடமே காட்டி இன்புறுவது எந்த அளவுக்கு விகாரமானது, இழிவானது என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வேட்டையாடும் ஆண்மையின் பெருமையாக தெரிந்திருக்கிறது. இதனால் அவர்களது குற்றச் செயல் இப்படி படம் பிடித்ததோடு மட்டும் நின்று போயிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் தமது வக்கிர நோக்கங்களுக்காக அகிலாவை மிரட்டியிருப்பார்கள்.

டிப்ளமா படித்து விட்டு ஒரு வேலை, பின்னர் திருமணம் என்று வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக முடிய வேண்டிய அவசியம் என்ன? செல்பேசி என்பது பெண்களைப் பொறுத்தவரை எப்போதும் கற்பழிக்கக் காத்திருக்கும் வில்லன்களைப் போல மாறிவிட்டதா?

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் இப்போதெல்லாம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் கூட இத்தகைய குற்றச் செய்திகள் குறைந்த பட்சம் புலனாய்வு புலிகளின் அட்டைப்படத்தை மலிவான நோக்கத்திற்காகவென்றாலும் ஆக்கிரமித்திருந்தன. தற்போது இதெல்லாம் ஒரு செய்தியா எனுமளவுக்கு குற்றங்களும் நிறைய நடக்கின்றன. அவற்றை சுவாரசியமாக்குவதற்கு ஊடகங்கள் முயல முயல அடுத்த குற்றச் செய்தி வெறுமனே தகவலாக மட்டும் மக்களிடம் முக்கியத்துவம் பெறாமல் மறைந்து விடுகிறது.

எல்லா மாணவர்களும் இப்படி செல்போனும் வக்கிரமுமாக அலையவில்லை என்றாலும் இந்த போக்கு மாணவர்களிடையே பரவிவருவது கண்கூடு. ஆரம்பத்தில் முகத்தை மட்டும் மறைவாக படமெடுப்பவர்கள் பின்பு முழு ஆபாச படமெடுக்கும் பரிணாம வளர்ச்சியை எட்டுகிறார்கள். பிறர் எடுத்த படத்த ரசித்தவன் பின்பு தானே எடுக்க முயல்கிறான். இத்தகைய வக்கிர சீரழிவுக்கு அத்தகைய மாணவர்களின் குடும்பப் பெண்களே முதல் பலி.

வரலாற்றுக் காலம் முழுவதும் வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது. மாராப்பை சரிசெய்வதை அனிச்சைச் செயலாய் செய்யும் பெண்கள் இனி வெளியிலோ, வீட்டிலோ இருக்கும் போது சுற்றுச் சூழலில் செல்பேசிகள் இல்லை என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் போல. ஆனாலும் மாணவர்களிடையே தினுசு தினுசுகா பரவி வரும் வக்கிரம் இத்தகைய கண்காணிப்பையெல்லாம் உடைத்து விடும்.

மாணவர் சங்கங்களும், மாணவர்களும் குறிப்பாக மாணவிகள் இத்தகைய கயவர்களை குறி வைத்து தனிமைப்படுத்தி தாக்குவதன் மூலம் மாணவ சமூகத்திடையே வேரூன்றி நிற்கும் இந்த வக்கிரத்தை அறுக்க முடியும். அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடும்போதே இத்தகைய பண்பாட்டு தாக்குதலையும் அதற்கு பாதை போடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் நாம் அகிலாக்களைக் காப்பாற்ற முடியும்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி சுசுகி: போராட்டத் தீ பரவட்டும்!

63
மாருதி-சுசுகி
மாருதி சுசுகி தொழிற்சாலை லாக்-அவுட்

தலைநகருக்கு அருகில் உள்ள மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்திருக்கும் தொழிலாளர்களின் எழுச்சி பல முதலாளிகளையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், அரசையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இனி ‘இந்தியாவை முழுவதுமாக தனியார் மயமாக்கி விற்று விட முடியாதோ’ என்ற பயம் அவர்களின் முதுகெலும்பில் சிலீரென்று இறங்கியிருக்கும்.

ஜியாலால் என்கிற தொழிலாளர், ராம்கிஷோர் என்கிற மேனஜரை தாக்கியதாகவும், ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக நிர்வாகம் அறிவித்ததாகவும், அதனால் கோபமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகங்களையும் கணினிகளையும் எரித்ததாகவும் சொல்கிறது நிர்வாகம்.

உயர் அதிகாரிகள் உட்காரும் முதல் மாடியில் நுழைந்த தொழிலாளர்கள் மேனேஜர்களை தாக்கி சில இடங்களுக்கு தீ வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரு கால்களும் உடைந்த நிலையில் அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர் தீயில் சிக்கி இறந்து விட்டார். இதுவும் நிர்வாகத் தரப்பு தெரிவித்ததுதான்.

ஒரு மேலாளர் தலித் தொழிலாளரை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், அந்தத் தொழிலாளர் அதை எதிர்த்து கேட்டதாகவும், மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகம் தொழிலாளரை தற்காலிக வேலை நீக்கம் செய்ததாகவும் தொழிலாளர்கள் தரப்பில் சொல்கிறார்கள்.

மேலும் யூனியன் பிரதிநிதிகள் மனிதவளத் துறை அதிகாரிகளுடன் இதைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, நிர்வாகம் சம்பளத்துக்கு வைத்திருந்த குண்டர்களை தொழிற்சாலைக்கு வெளியிலிருந்து உள்ளே அழைத்து, செக்யூரிட்டிகளிடம் கதவுகளை மூட உத்தரவிட்டிருக்கிறது.

அந்த குண்டர்கள் ஆயுதங்களால் தொழிலாளர்களை தாக்க பல தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்த குண்டர்கள் நிறுவனத்தின் பொருட்களை அடித்து உடைத்ததுடன் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர் என்றும் மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் கூறுகிறது.

நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன, 96பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலை காலவரையறை இன்றி லாக்-அவுட் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி-சுசுகி
தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் ஊடகங்கள்

மாருதி சுசுகி நிர்வாகமும், முதலாளித்துவ ஊடகங்களும், அரசும் தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். போராடி பெற்ற யூனியனின் அங்கீகாரம் ‘ரத்து செய்யப்பட வேண்டியதுதான்’ என்று தீர்ப்பு எழுதுகிறார்கள். ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனிமேல் இந்தியாவுக்கு வர பயப்படுவார்கள், அவர்களை சமாதானப்படுத்த தொழிலாளர் சட்டங்களை மாற்றி எழுத வேண்டும், விருப்பம் போல வேலையை விட்டு நீக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

மாருதி சுசுகியின் முதல் தொழிற்சாலை குர்கானில் 1980களில் தொடங்கப்பட்டது. மானேசரில் தொடங்கப்பட்ட இரண்டாவது தொழிற்சாலையிலும் நிர்வாகத்தின் எடுபிடியான ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்க’த்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது நிர்வாகம். தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, சென்ற ஆண்டுதான் தமது புதிய யூனியனுக்கான அங்கீகாரத்தை பெற்றார்கள். 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி தரப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தவே கடும் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும்.

அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்த தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம், நேரடியாக உற்பத்தியையும், லாபத்தையும் பாதிக்கும் விசயங்கள். தொழிலாளி ஒருவர் ஆலையினுள் நுழைந்து, எந்திரங்களுடன் வேலையை தொடங்கி அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து, எந்திரத்துடன் ஒரு எந்திரமாகவே அவர்கள் மாறி விட வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மாருதி-சுசுகி
மாருதி சுசுகியின் தொழிலாளி

எந்திரங்கள் சம்பள உயர்வு கேட்காதல்லவா! ஆனால் தொழிலாளர்கள் தமக்குரிய நியாயமான ஊதியத்தை கேட்கும் போது நிர்வாகத்தால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

மானேசர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக பட்ச சம்பளம் ரூ 17,000. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 7,000 மாதச் சம்பளம். அதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2007க்கும் 2011க்கும் இடையே ஹரியானா மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் 50 சதவீதம் உயர்ந்திருக்க தொழிலாளர்களின் ஊதியம் சராசரியாக 5.5 சதவீதம்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 4 ஆண்டுகளில் தொழிலாளர் பெறும் வருமானத்தின் உண்மையான மதிப்பு சுமார் 45% குறைந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம் நான்கு மடங்கு (419 சதவீதம்) அதிகமாயிருக்கிறது.

நிர்வாகத்துக்கு ஒவ்வாத புதிய தொழிலாளர் யூனியன், அதிகரித்துக் கொண்டே போகும் வேலைப் பளு, நான்கு ஆண்டுகளாக வருமான வீழ்ச்சி என்ற சூழலில் சம்பள உயர்வு குறித்து யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சு நடந்திருக்கிறது. நிர்வாகம் அந்த பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து கால தாமதம் செய்திருக்கிறது.

தொழிலாளர்கள் கேட்கும் அதிக பட்ச ஊதிய உயர்வான ரூ 18,000ஐ எல்லா தொழிலாளர்களுக்கும் (சுமார் 2,500 பேர்) கொடுத்தாலும் நிறுவனத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ 54 கோடிதான் செலவாகியிருக்கும். 2010-11-ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ரூ 2,289 கோடி நிகர லாபம் ரூ 2,235 கோடியாக குறைய வேண்டியிருக்கும்.

தமது லாபத்தில் சுமார் 2% பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை இழுத்து அடித்து தனக்குப் பிடிக்காத யூனியனை தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இழக்கச் செய்ய முயற்சித்தது நிர்வாகம்.

‘கடந்த ஆண்டை விட லாபம் அதிகம் ஈட்ட வேண்டும் அப்பொழுது தான் லாப வளர்ச்சியைக் காட்டி பங்கின் விலையை பங்குச் சந்தையில் ஏற்ற முடியும், அதிகாரிகள் சம்பள உயர்வு பார்க்க முடியும். ‘உற்பத்தியை அதிகமாக்கி லாபம் காட்டலாம். அதிக உற்பத்தியை குறைந்த செலவில் செய்யும் போது இன்னும் லாபம் காட்டலாம்’ என்பது நிறுவனத்தின் அடிப்படை நோக்கம்.

திங்கள் கிழமை ‘முதல் ஆண்டுக்கு ரூ 6,000தான் சம்பள உயர்வு’ என்று நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை, காலையில் வழக்கமாக நடக்கும் ஒருங்கிணைப்பு கூட்டத்தை தொழிலாளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

புதன் கிழமை காலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பணிக்கு வந்து கொண்டிருந்து சில தொழிலாளர்களிடம் ராம் கிஷோர் என்ற மேலாளர் ‘ஒருங்கிணைப்பு கூட்டத்தை புறக்கணிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் பலத்து தொழிலாளர் ஜியா லாலை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார் மேலாளர். பல நாட்கள் தொழிலாளர் மத்தியில் புழுங்கிக் கிடந்த கோபம் பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது.

இப்பொழுது நடந்திருக்கும் தொழிலாளர் போராட்டம் ஒரு அவச் சொல், பணிநீக்கம் என்பதின் வெளிப்பாடு என்று சுருக்கிவிட முடியாது.

சந்தையில் நல்ல லாபத்தில் மாருதி காரை விற்றுவிட்டு, அந்த லாபத்திற்கு சம்பந்தம் இல்லாத சொற்ப சம்பளத்தை கொடுப்பது, தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்கள் ஆக்காமல் தற்காலிக தொழிலாளர்களாகவே வைப்பது, அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பது, அவர்களின் யூனியனை வேவு பார்ப்பது, ‘யூனியன் நடவடிக்கைகள் சட்டம் விரோதம் அதில் பங்கெடுக்கமாட்டேன்’ என உறுதி பத்திரத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திப்பது என இந்தியாவின் தொழிலாளர் சட்டம் என்பது தாங்கள் மலம் துடைக்க உதவும் காகிதம் என வெளிப்படையாக செயல்படுகின்றன வெளிநாட்டு நிறுவனங்கள். இதை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை சட்ட விரோதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது தொழிலாளர்களின் உரிமை.  அதை முதலாளிகளால் ஏற்க முடியவில்லையென்றால், முதலாளிகளுக்கு புரியும் மொழியில் தங்கள் கோரிக்கைகளை ஏற்கச் செய்வதுதான் தொழிலாளர்களிடம் உள்ள ஒரே வழி. ஆனால் தொழிலாளிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அதிகாரத்தின் துணை கொண்டு நசுக்க நினைக்கிறார்கள் முதலாளிகள்.

மாருதி-சுசுகி
கடந்த ஆண்டு போராட்டதின் போது.

மாருதி தொழிலாளர்களும் சரி மானேசரில் செயல்படும் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் சரி இந்த போராட்த்தின் பாதையை திடுமென வந்து அடைந்து விடவில்லை. தொடர்ந்து பல மாதங்கள் பல அநீதிகளை ஏற்க முடியாமல்தான் அவர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடியுள்ளனர்.

தொழிற்சாலையில் வன்முறையை அவிழ்த்து விட்டு சொத்துக்களை நாசம் செய்து உயிரிழப்புக்கும் காயங்களும் பிரச்சினை என்றால் அந்தப் பிரச்சினையை திமிரோடு தருவித்துக் கொண்டது மாருதி சுசுகி நிர்வாகம்தான்.  ஒப்பந்தத் தொழிலாளரை நிரந்தரம் ஆக்க மறுப்பது, குறைந்த பட்ச ஊதிய உயர்வைக் கூட மறுப்பது என்று அதிகார ஆட்டம் போடும் மாருதி நிர்வாகத்தை தொழிலாளிகள் வேறு எப்படி வழிக்கு கொண்டு வர முடியும்?

புதிய பொருளாதாரக் கொள்கையின் படி முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்க உரிமை இல்லை, நிரந்தரத் தொழிலாளர் தேவையில்லை, குறைந்த கூலி, நீதிமன்றம் தலையிட முடியாது, தொழிலாளர் ஆணையர் கேட்க முடியாது என்று இந்தியா முழுவதும் இத்தகைய கொள்கைகளே அமல்படுத்தப்படுகின்றன.  இத்தகைய அடக்குமுறையின் தர்க்க ரீதியான எதிர்வினைதான் மாருதி தொழிலாளர் போராட்டம்.

தங்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கி லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது. ஏனென்றால்  இழப்பதற்கு நிறைய முதலாளி வர்க்கத்திடம்தான் இருக்கிறதே ஒழிய தொழிலாளிகளிடம் இல்லை. மாருதி தொழிலாளர் போராட்டம் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னுதாரமாண போராட்டம். இதை பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிரான போராட்டமாக ஒருங்கிணைக்கும் போது தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல இந்திய மக்களும் தங்களது விடுதலைக்கான பாதையை கண்டடைவார்கள்.

____________________________________________

– அப்துல்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________

____________________________________________