கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணு உலை விபத்துஅளிக்கும் படிப்பினைகள் என்ன? விபத்து நடந்து ஓராண்டாகியும் அதன் பாதிப்புகள் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படவில்லை. அணு உலையிலிருந்து வெளிப்பட்ட கதிர் வீச்சின் செறிவு, பாதிக்கப்பட்ட பரப்பளவு, உலை விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் குறித்து ஜப்பான் அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றது.
எனினும், ஜப்பானின் ஊடகங்களும் பல்வேறு அமைப்புகளும் தகவலறியும் உரிமையைப் பயன்படுத்திப் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. ஜப்பான் நாடாளுமன்றக் குழு இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையும், பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளது.
கூடங்குளத்தில் கட்டப்படும் அணு உலை, புகுஷிமா அணு உலையைவிடத் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியது, அதனால் இங்கே அதுபோன்றதொரு விபத்து ஏற்படாது என நம் நாட்டு அணுஉலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். புகுஷிமா விபத்திற்குக் காரணம் தொழில்நுட்பக் குறைபாடல்ல; முதலாளித்துவ இலாபவெறியும், நிர்வாகச் சீர்கேடுகளும், மனிதத் தவறுகளும்தான் காரணம் என்பதை மேற்கூறிய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
சுனாமிப் பேரலைகள் புகுந்து அணு உலையின் குளிர்விப்பான் இயங்காமல் போனதால் விபத்து ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது. ஆனால், சுனாமியின் காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டு, குளிர்விப்பானின் இயக்கம் நின்றுபோனது ஊழியர்களுக்குத் தெரியவில்லை. உலைக்கு உள்ளே வெப்பம் அதிகரித்து. உலை மெல்ல உருக ஆரம்பித்த பிறகுதான் குளிர்விப்பான் செயலிழந்து விட்டதையே அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இது மனிதத்தவறு.
விபத்துக் காலங்களில் அணு உலையை கையாள்வதற்கான கையேட்டில் குளிர்விப்பான் இயங்குகிறதா என்பதைச் சோதிக்கவேண்டும் என்றோ, இயங்காவிட்டால் செய்ய வேண்டியதென்னவென்றோ கூறப்படவில்லை. இது அலட்சியம்.
உப்புநீர் புகுந்தால் கருவிகள் பழுதாகி நட்டம் அதிகமாகும் என்று கூறி, உலையை கட்டிய ஜெனரல் எலெக்டிரிகல் நிறுவனம் கடல் நீரைப் பயன்படுத்தி உலையைக் குளிர்விக்க முயன்றதைத் தடுத்துள்ளது. இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதலாளித்துவத்தின் இலாபவெறி.
வரவிருக்கும் விபரீதம் கண்டு அஞ்சிய அரசு உலையை நிரந்தரமாக மூடுவது என்று முடிவு செய்ததால்தான் கடல் நீரைப் பயன்படுத்தும்படி உத்தரவிட்டது.
மிகப்பெரிய விபத்தை எதிர்பார்த்த அணு உலை நிர்வாகம், விபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, 800க்கும் அதிகமான ஊழியர்களில் 50 பேரைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. அணு உலை வட்டாரத்தில் வாழ்ந்த 80,000 பேரையும் உடனே வெளியேற்றியது.
புகுஷிமாவிலிருந்து 250 கி.மீ. தொலைவிலிருந்த டோக்கியோ நகரத்தையும் காலி செய்யும்படி அணு சக்தித் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். டோக்கியோவின் மக்கள் தொகை 3 கோடி. இந்த விபரீத யோசனையை ஏற்க மறுத்த பிரதமர், அதிகமான ஊழியர்களை ஈடுபடுத்தியாவது, உலையைச் சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார். நிர்வாத்தின் பொறுப்பின்மைக்கும் முதலாளித்துவ இலாபவெறிக்கும் இது சான்று.
வெடிப்பைத் தொடர்ந்து, உலையில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவற்றைச் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களை நாடாளுமன்ற ஆய்வுக்குழு தெரிந்து கொள்ளமுடியவில்லை. காரணம், அப்போது நடத்தப்பட்ட கூட்டங்கள் எதற்கும் குறிப்புப் பதிவுகள் (மினிட்ஸ்) இல்லை. இதனால் விபத்தையொட்டி கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள், குறைபாடுகள் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களாக மறைக்கப்பட்டுள்ளன.
அணு உலையைச் சுற்றி 20 கி.மீ. மட்டுமே கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக ஜப்பான் அரசு கூறுகிறது. ஆனால், அணு உலை வெடிப்பினால் வெளிப்பட்ட அபாயகரமான ‘சீசியம்’ துகள்கள் 45 கி.மீ. தூரத்தில் உள்ள லிடேட் என்ற கிராமத்தில் கொட்டிக்கிடக்கின்றன. மரங்களில் படர்ந்துள்ள சீசியம் துகள்கள் காற்று வேகமாக வீசும்போது, காற்றின் திசையில் இன்னும் அதிக தூரத்திற்கு பரவுகின்றன.
கதிர்வீச்சு அபாயம் 20 கி.மீ. மட்டுமே என்று ஜப்பான் அரசு தன் மக்களுக்கு கூறிக்கொண்டிருக்க, அணு உலையிலிருந்து 80 கி.மீ. தொலைவு வரை உள்ள பகுதிகளில் வாழும் அமெரிக்கர்களை உடனே வெளியேறும்படி அறிவுறுத்தியது அமெரிக்கத் தூதரகம். மக்களை அப்புறப்படுத்துவதிலும் ஜப்பான் அரசு முறையாகச் செயல்படவில்லை. பல இடங்களில் மக்கள் தாமாகவே வெளியேறியுள்ளனர். மினாமி என்ற பகுதியிலிருந்த மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வெளியேற்ற எவ்வித வசதியும் இல்லாததால் இரண்டு நாட்களில் 12 நோயாளிகள் உயிரிழந்ததுடன், பல நோயாளிகளும், மருத்துவர்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகுஷிமாவிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சு முக்கியமாக நெற்பயிர்களையும், பசு மாடுகளையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக அரிசியும், பாலும் கதிர்வீச்சுத் தன்மை கொண்டதாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பால்பவுடர் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள ஜப்பான் நிறுவனமான ‘மெய்ஜி’, புகுஷிமா விபத்திற்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட தங்களது பொருட்களில் கதிர்வீச்சுத் தன்மை உள்ளதைக் கண்டுபிடித்து, அவற்றை திரும்பப் பெற்றுக்கொண்டது.
புகுஷிமா அணு உலை சுனாமி தாக்குதலையும், திடீர் மின் தடையையும் சமாளிக்கும் வகையில் கட்டப்படவில்லை என ஜப்பானின் அணு சக்திப் பாதுகாப்புத் துறையின் தலைவர் ஹரூக்கி மடாரம் பாராளுமன்ற விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பானின் அணு சக்தி விதிமுறைகள் தவறானவையாகவும், காலாவதியானவையாகவும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புகுஷிமா அணு உலையைக் கட்டிய டோக்கியோ மின்சார நிறுவனம், அது பூகம்பம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படக்கூடிய இடம் எனத் தெரிந்தேதான் அணு உலைகளைக் கட்டியுள்ளது. அங்கே சுனாமி தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சுனாமி அலைகள் இங்கே எழும்பும் என்று எச்சரித்து வெளிவந்த ஆய்வுகளை அறிவியல்பூர்வமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது இந்த நிறுவனம். தற்போது தங்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சுனாமி அலை எழுந்துவிட்டதாக கூறித் தமது தவறை மறைக்கின்றனர் அதிகாரிகள்.
கடந்த பத்து வருடங்களாக புகுஷிமா அணு உலையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவே இல்லை. விபத்து ஏற்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, புகுஷிமா உலையால் சுனாமியைச் சமாளிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இவையெல்லாம் இப்போதுதான் தெரிய வருகின்றன.
ஜப்பானிய மொழியில் “சொட்கேய்” என்றொரு சொல் உண்டு. கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று அதற்குப் பொருள். அணு உலை அதிகாரிகள் வல்லுநர்களிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும், இப்படிப்பட்டதொரு தவறு நடக்கும் என்றோ, இயற்கைப் பேரழிவு இவ்வளவு பெரிதாக இருக்குமென்றோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது சொட்கேய் என்ற சொல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
அதிகாரிகளின் இந்தக் கூற்றை ஏற்க மறுக்கும் ஜப்பான் நாடாளுமன்றத்தின் விசாரணை அறிக்கை, அதிகாரிகள் தங்களது தவறுகளை மறைத்துக் கொண்டு இயற்கையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறது.
அணுசக்தித் துறையில் முன்னணியில் உள்ள, அணு உலைகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகளில் ஒன்றான ஜப்பானின், கல்வி, மக்களின் விழிப்புணர்வு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் பெரிதும் முன்னேறிய நாடான ஜப்பானின் இலட்சணம் இது. மனிதத் தவறுகளும், அதிகாரவர்க்கச் சீர்கேடுகளும் மலிந்த இந்தியாவில் அத்தகைய காரணங்களால் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் பல நூறு மடங்கு அதிகம் என்பதே உண்மை.
அணு உலையைப் பாதுகாக்க எத்தனை முன்னேற்பாடுகளைச் செய்திருந்தாலும், நம் எதிர்பார்ப்புக்கு மேல் இடர் வந்தால் அதன் விலை எத்தனை ஆயிரம் உயிர்களாக இருக்கும் என்ற கேள்விதான் முக்கியமானது. சொட்கேய் என்ற சொல் இலட்சக்கணக்கான மனித உயிர்களைப் பகடைக்காய் ஆக்க நாம் அனுமதிக்க முடியாது.
”டி.வி.எஸ். நிறுவனத்தில் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்த நான் பெரிதும் முயற்சி எடுத்தேன். அதன்படி நாங்களே ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை இங்கே நிறுவினோம்… எப்படியும் ஒரு தொழிற்சங்கம் உருவாகத்தானே போகிறது. அது நமக்கு விசுவாசமான சங்கமாக இருந்தால் நல்லதல்லவா” – இப்படிக் கேட்டார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் டி.வி.எஸ். முதலாளி. (ஆதாரம்: பிசினஸ்இந்தியா, மார்ச் – ஏப்ரல், 1986).
இதே கொள்கையின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிக்கையில் அடங்காத அளவு இயங்கி வருகின்றவை தாம் தன்னார்வக் குழுக்கள்.
நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்”
எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளிலும் அதிருப்தி, ஆத்திரமடைந்துள்ள மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி, பதப்படுத்தி, அதிகாரபூர்வ, சட்டவரம்புக்குள் அவர்கள் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கு மாற்று அமைப்புக்களும், வழிமுறைகளும், சித்தாந்த விளக்கங்களும் ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய சுரண்டல் – ஒடுக்குமுறை ஏகாதிபத்தியமாக முன்னுக்கு வந்த அமெரிக்காவை ”உலகின் மிகப்பெரிய கொடை வள்ளல் நாடு” என்று பீற்றிக் கொண்டு, அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை மூடிமறைக்க இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரிதும் பயன்பட்டன.
அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமன், ”உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு” முன்வைத்த ”அமெரிக்க அமைதிப் பேரரசு” திட்டத்தில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் முக்கிய இடம் பெற்றன. ஃபோர்டு அறக்கட்டளையோடு, கேர், வோர்ல்டு விஷன் போன்றவையும் சேர்ந்து ஆண்டுக்குப் பலநூறு கோடிடாலர்கள் இந்த ”சமூக சேவைக்காக” செலவிட்டன.
இவை நேரடியாகவும், பின்தங்கிய ஏழை நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சகங்களின் மூலமும் பல ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி செய்து, கண்காணித்து இயக்கின. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் நிறுவப்பட்டது. இதனுடன் ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.
இப்போது அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப் புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று பிரதானமாக நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, படித்த அறிவுஜீவிப் பிரிவினரிடையே சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டு ஆய்வுகளை – பயிற்சி, கருத்தரங்குகளை நடத்துவது.
காலனிய காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும் மதப் பிரச்சாரத்துடன் இணைத்து கல்வி – வேலைவாய்ப்பு, சுகாதாரம் – சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் பிரதானப் பணிகளாக இருந்தன.
ஆனால் 1960களின் பிற்பகுதியில் இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுளுக்கு ”முற்றிலும் புதிய கோட்பாட்டு அடிப்படைகள்” வகுத்துத் தரப்பட்டன. இனி மேலும் தன்னார்வக் குழுக்கள் மக்களுக்கான ”இலவசத்திட்டங்கள்” மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கான அளவு வசதியும் கிடையாது. மக்கள் தமது கோரிக்கைகளுக்காகவும் உரிமைக்காகவும்” போராடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்வதும் அவர்களுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைப்பதும் தான் இனித் தன்னார்வக் குழுக்களின் பணியாக இருக்க வேண்டும் என்று உலக அளவில் முடிவு செய்யப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த பவுலோ பீரியனின் ”சுரண்டப்படுவோருக்கான கல்வியியல்”, பிலிப்பைன்சினுடைய பவுல் அபின்ஸ்கியின் ”அதிகாரத்தின் தத்துவம்” ”சிறியதே அழகு”, கிட் டியர்சின் ”விடுதலை இறையியல்” (சூமேக்கரின்) ஆப்பிரிக்காவில் ”கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்”, ஆசியாவில் புதிய காந்திய, புதிய புத்த மதக் கோட்பாடுகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ”புதிய இடதுகள்” ”இளைஞர் அரசியல் மற்றும் பசுமை இயக்கங்கள்” ஆகியன தன்னார்வக் குழுக்களின் வழிகாட்டும் கோட்பாடுகளாகின.
இக்கோட்பாடுகளின்படி மதப்பிரச்சார, மதமாற்ற முயற்சிகள் கைவிடப்பட்டு ”மக்கள் பங்கேற்பு அல்லது அடிமட்ட மக்கள் அமைப்புகள்” மூலம் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது குறிக்கோள்கள் என்று அறிவித்துக் கொண்டன.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் – குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் ”நடவடிக்கைக் குழுக்கள்” அமைக்கப்பட்டன.
”மக்களை அணிதிரட்டுவது”, ”அதிகாரம் பெறுதல்” ”ஒடுக்கப்படுவோரின் விடுதலை” என்று தீவிரச் சவடால்கள் அடித்த போதும் வர்க்கக அணுகுமுறை வர்க்கப் போராட்டம் வர்க்க சித்தாந்தத்தை (திட்டமிட்டு, உணர்வுபூர்வமாகவே) விலக்கி வைப்பதில் குறியாக உள்ளன, இத்தன்னார்வக் குழுக்கள். இத்தகைய நடவடிக்கைக் குழுக்களைத்தான் உண்மையான அடிமட்ட மக்கள் இயக்கங்கள் என்றும் ”புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகள்” என்றும் ஆளும் வர்க்கப் பத்திரிக்கைகள் புகழ்கின்றன.
இவை ”வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் உணர்வு பூர்வமாகத் தலையிடும் செயற்போக்கு” என்று தன்னார்வக் குழுக்களின் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர் (கோத்தாரி). இவை ”மாற்று வளர்ச்சிக்கான முழுமைபெற்ற இயக்கமாக மலரும் சாத்தியக் கூறு உடையவை” என்கின்றார் (டி.எல்.சேத்).
இவையெல்லாம் காட்டுவது என்ன? மக்கள் தமது விடுதலை, உரிமைக்கான கோரிக்கைகளுக்காகப் போராடும் மையங்களாக, கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையிலான வர்க்க அமைப்புகளை மட்டுமே இனிமேலும் நம்பியிருக்க தேவையில்லை.
அவற்றுக்கு மாற்று மையங்களாக இதோ அரசு சாரா, கட்சிசாரா, வர்க்கம் – அரசியல் சாரா நிறுவனங்கள் இருக்கின்றன என ”மாற்றுக்களை” வைப்பதுதான். இதன் மூலம் பாலோடீரியர், பவுன் அலின்ஸ்கி, கிட்டியர்சி, சூமேக்கர் போன்றவர்களின் கோட்பாடுகளை முன்வைத்து, மார்க்சிய சொற்களைப் பிரயோகிப்பது, பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதால் இந்த அமைப்புகள் இடதுசாரித் தோற்றம் தருகின்றன.
இந்த அமைப்புகள் தமது களப்பணியிலும் கூட ஒருவித இரகசிய – சதிகார அணுகுமுறையைக் கையாள்வதால் அந்நிய உளவாளிகளும் நாச வேலைக்காரர்களும் ஊடுருவுவதற்கும், அதற்காக ஆட்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன.
1960-களில் இருந்தே ஏகாதிபத்திய வல்லரசுகளின் புதிய காலனிய தேவைகளுக்காக மேற்கத்திய சமூகவியல், அரசியல், பண்பாட்டு சிந்தனையாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுக் கழகங்கள் கீழை நாடுகளின் தமது சகபாடி நிறுவனங்களுடன் இணைந்து கம்யூனிய சித்தாந்தத்துக்கு எதிராக ”புரட்சிகர மாற்றுகளை” உருவாக்கும் பணியில் இறங்கினர்.
”இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு என்கிற சித்தாந்த வேறுபாடுகள் அடிப்படையில் தீர்வுகள் முன் வைக்கப்படுவது இனிமேலும் அவசியமில்லை என்பதை முன் வைக்கும் ”சித்தாந்தத்தின் முடிவு” முதலிய கருத்தாக்கங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிரான்சிஸ் புக்குயோமாவின் ”வரலாற்றின் முடிவு” என்கிற கோட்பாடு பிறகு வந்தது.
வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்தக் காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை, காலாவதியாகிவிட்டது என்று ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ”ஸ்டாலினிசம்”, ”மரபுவழி மார்க்சிசம்” என்பதாகக் கற்பனை செய்து கொண்ட தத்துவத்தையும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சமரச செயல்பாடுகளையும் முன்னிறுத்தி மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் மீதே அவதூறு பரப்பினர்.
புறநிலை யதார்த்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிறுத்தி மார்க்சிய லெனினியத்தைச் செழுமைப்படுத்துவதாகப் புளுகினர்; மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகள் ஐரோப்பிய முதலாளத்துவத்தை மட்டுமே ஆய்வுக்கெடுத்துக் கொண்டது என்றும் தாம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைப்பதாகவும் சொல்லி அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ நிராகரிக்கும்படி தூண்டினர்.
தாமும் மார்க்சியப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கீழை மார்க்சியம் – மேலை மார்க்சியம், இளைய மார்க்ஸ் – முதிய மார்க்ஸ், ஐரோப்பிய கம்யூனிசம், அந்நியமாதல், இருத்தலியல், நவீனத்துவம், அமைப்பியல் வாதம், புதிய இடது சிந்தனைகள் போன்ற பல பிறழ்வுக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பரப்பினர். இதற்காக சார்த்தர், கிராம்சி, மார்க்யூஸ், அல்தூஸ்யர், கெம்யூ, பிராங்ஃபர்ட் சிந்தனையாளர்கள் போன்ற வகுப்பறை ”மார்க்சியக் கோட்பாட்டாளர்”களின் படைப்புகளைக் கடத்தி வந்தார்கள்.
இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றுதான். மார்க்சிய – லெனினியம், வர்க்கம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக வர்க்க சமரசத்தையும் பல்வேறு வகை திரிபுகளையும் முன்வைத்து மார்க்கிய லெனினியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் கட்சியின் தனிநபரின் சர்வாதிகாரம், எல்லாவற்றையும் உற்பத்தி பொருளாதாரம், வர்க்கம் என்று குறுக்கிச் சுருக்கிப் பேசும் வறட்டுத்தனம் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்கத் தூண்டுவதே.
இந்திய அரசு சாரா நிறுவனங்களின் சித்தாந்த குரு ரஜினி கோத்தாரி, மார்க்சியம் – தொழிலாளி வர்க்க சித்தாந்தம் வழக்கிழந்து விட்டது என்று வாதம் புரிந்து வந்தார். ”உலகத் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவதற்கு பதில் சர்வதேச நடுத்தர வர்க்கமே தனது விடுதலையைப் பற்றிய உணர்வுகளைக் கொண்டதாக மாறிவருகிறது” என்று இவர் பிரகடனம் செய்தார்.
இவரும் பிற அரசு சாரா நிறுவன சித்தாந்திகளும் அப்போது வாதிட்டது என்னவென்றால் கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பதிலாக உணர்வூட்டப்பட்ட நடுத்தர வர்க்கத் தொழில் முறைத் தலைவர்களால் கட்சிசாரா அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் மக்கள் திரளால் வழிநடத்தப்படும் இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுதான்.
”நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இயக்கும் அடிமட்டக் களப்பணியிலுள்ள அரசுசாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் வேண்டுமானால் ஊடுருவல், உளவு, சதி, நாசவேலை, மக்கள் இயக்கங்களை சீர்குலைவு செய்வது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம். அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் எதிர்ப்பதும் சரிதான்.”
”ஆனால் சி.டி.ஆர்.ஏ., ஐ.எஸ்.ஐ., ஐ.டி.யாஸ், மிட்ஸ், சாமிநாதன் ஃபவுண்டேசன் போன்ற ஆவணப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அரை அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள், அந்நிய நிதியுதவி பெற்ற பல்கலைக் கழக அரங்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. விவரங்களை சேகரிக்கவும் ஆய்வுகளை நடத்தவும் முற்போக்கு இயக்கத்தவரும் பயன்படுத்தலாம்” என்று அவற்றுடன் தொடர்புடைய பலரும் நியாயம் கற்பிக்கின்றனர்.
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக்குழுக்கள் நேரடியாக மக்கள் முன் வேலை செய்வதால் இன்றோ நாளையோ அம்பலப்பட்டுப் போவது சாத்தியம். ஆனால் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.
அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பணிகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பது; பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பிப்பது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குத் திட்டப் பணிகளைப் பரிந்துரை செயவது போன்ற வேலைகளை இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்கின்றன.
உதாரணமாக, இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான நெல் மூலக்கூறு (ஜீன்ஸ்)களைக் கடத்திக் கொண்டு போய் ஏகாதிபத்திய பன்னாட்டு விதை, உரம், பூச்சி மருந்து, இரசாயன ஊக்கி உற்பத்தித் தொழில்கள் புரியும் பன்னாட்டு தேசங்கடந்த தொழில் நிறுவனங்களுக்கு விற்பது முதல் நாட்டுப்புற கலை – இலக்கிய மரபுகளைக் கொள்ளையிடுவது வரை சாமிநாதன் ஃபவுண்டேசன் செய்கிறது.
இதேபோல மொழி, மரபுகள், தொற்று நோய்கள் பரவுதல், சிறுவர் – கொத்தடிமை உழைப்பு போன்ற பல ஆராய்ச்சிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குப் பயன்படுகின்றன. இவையெல்லாம் எப்படி அவற்றின் தொழில்களுக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எப்படிப் பயன்படுகின்றன என்பது நேரடியாகத் தெரிவதில்லை.
குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம் என்ற கொள்கையின் கீழ் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் புதிய தகுதிகளைப் பெற்றுள்ளன.
கட்டுமான மறுசீரமைப்புத திட்டங்களால் உலகின் பல நாடுகளில் பஞ்சம் – பசி – பட்டினிச் சாவுகள், ஆலைகள் மூடி வேலை இழப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு பெருகி பரந்துபட்ட மக்கள் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் கிளர்ந்தெழுவதை திசை திருப்புவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் முக்கியக் கருவிகளாகப் பயன்படுகின்றன.
80 நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி நிதியுதவி செய்து, ”பசி, உலக வறுமையின் அடிப்படைக் காரணங்கள் குறித்து விவாதங்கள் புரியவும், ஒரு பொதுத்துறை தனியார் வளர்ச்சி உதவித் திட்டத்துக்கான தொகுதியை விரிவுப்பத்தவும், உறுதியூட்டவும்,இந்த வளர்ச்சித் திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களின் வலைப்பின்னலை வளர்க்கவும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் பணியாற்றியது. (வளர்ச்சிக்கான வழிகாட்டும் கல்வித்திட்ட உதவிகள், 1987 பொருளியல் ஆண்டு அறிக்கை)
கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் அரசுகளின் பங்கு – பாத்திரங்களை வெட்டிவிட்டு அதற்கு மாற்றாக ”சமூகப் பங்கேற்பு” ”அடிமட்டத் திட்டமிடுதல்” ”வளர்ச்சியில் பங்குதார்கள்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சமூக நலப்பணிகளுக்கு இனியும் அரசு அதிகாரபூர்வ சட்டபூர்வ அமைப்புகள் பொறுப்பல்ல; அவை மக்களின் சொந்தப் பொறுப்புதான் என சுமையை – பழியை மக்கள் மீதே மாற்றுவதுதான் இதன் நோக்கம்.
அவை மாற்றுப் பொருளாதாரத்திட்ட உருவரைகள் – வரவு செலவுத் திட்டங்கள், மாற்றுப் பொருளாதார உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஐ.எம்.எஃப் – உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்குப் ”போட்டி”க் கூட்டங்கள் நடத்துகின்றன. சூழலுக்குத் தகுந்த பாரிய மதிப்புகளின் அடிப்படையிலான மாற்றுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சி திட்டங்கள் மூலம் கட்டுமான மறுசீரமைப்பு, உலகமயமாக்குதலை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன.
ஆனால் இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்குவதற்கே கூட அதே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் நிதியுதவி செய்கின்றன. அதனால்தான், இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்கும் எல்லா நாடுகளிலும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் முற்றி மீளமுடியாத கட்டத்தை எட்டிய போதும், இந்த நாடுகளில் அரசியல் வாழ்வில் பண்பாட்டுச் சீரழிவும், கிரிமினல் மயமாவதும், இலஞ்ச ஊழலும் தலைவிரித்தாடிய போதும், அந்தந்த நாட்டு அரசுகளைத் தகர்ப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி இந்த அரசு சாரா நிறுவனங்கள் தப்பித் தவறி மேலெழுந்த வாரியாகக் கூட மூச்சு விடுவதே கிடையாது.
”மதபோதனையோ, மத மாற்றமோ கண்காணிப்பும் கிடையாது. ஏராளமான ஆய்வு வசதிகளும், நிதியும் கணிசமான ஆள்பலமும் உள்ள அரசு சாரா – தன்னார்வக் குழுக்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, திறந்த மனதுடன் இருக்கும் தங்களிடம் ஒரு உரையாடலை ஏன் நடத்தக் கூடாது” என்று புரட்சி சக்திகளுக்கு இந்தக்குழுக்கள் தூண்டில் வீசுகின்றன. நடுத்தர வர்க்க ஊசலாட்ட நபர்கள் ஓடிப் போய் அந்தத் தூண்டிலைக் கவ்விக் கொள்கின்றனர்.
புரட்சிகர அறிவுஜீவிகளைக் கூட நிரந்தர உரையாடலில் நிறுத்தி வைப்பதுதான் அக்குழுக்களின் நோக்கம். புரட்சியின் மீதும் கட்சியின் மீதும் ஐயவாதத்தை விதைத்து செயலிழக்க வைப்பதுதான் அவற்றின் இலக்கு.
இறுதியாக, அவை அரசு சாரா நிறுவனங்கள் என்று தான் சொல்லிக் கொள்கின்றனவே தவிர அரசு எதிர்ப்பு நிறுவனங்கள் அல்ல என்கிற ஒரு உண்மையே போதும், – அவை மண் குதிரைகள் தாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு!
_______________________________________
புதிய கலாச்சாரம், மே 1997 _______________________________________
இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் - தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்?
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் மூண்டு எல்லா வகைப் படைகளோடும் குருஷேத்திரத்தில் சந்திக்கிறார்கள். கண்ணில்லாத திருதராஷ்டிரன் போர்க்களத்திற்கு செல்ல முடியாது என்பதால் போரின் நேரடி வர்ணனையை விவரிக்குமாறு சஞ்ஜயன் என்ற அமைச்சரை நியமிக்கிறான். வியாசரால் ஞானதிருஷ்டி பெற்றவனான சஞ்ஜயன் அப்படியே அட்சரம் பிசகாமல் வர்ணிக்கிறான். போரின் துவக்கமாக அர்ஜுனனின் தடுமாற்றம் வருகிறது. கீதை பிறக்கிறது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சாகசங்களை நேரில் கண்டுணர முடியாத நம்மைப் போன்றோருக்கு, ஏகாதிபத்தியங்களால் ஊக்குவிக்கப்படும் ஹாலிவுட் உலகம் அதன் நேரடி வர்ணனையைக் காட்சியாக, விறுவிறுப்பான திரைப்படமாகத் தருகின்றது. ஜேம்ஸ்பாண்ட்பிறக்கிறான்.
கீதையும், ஜேம்ஸ்பாண்ட்டும் வெறுமனே லைவ் கமெண்ட்ரி சொல்லும் உபந்யாசகர்கள் மட்டும் அல்ல. ஆன்மீகவாதிகள் சொல்வது போல கீதை என்பது வாழ்வின் நான்கு யோகங்களைச் சொல்லி நம்மை ’நல்வழி’ப்படுத்தும் பார்ப்பனியத்தின் சாரம். ஜேம்ஸ்பாண்டும் சாகசங்கள் செய்து வில்லன்களை வீழ்த்துவதோடு இந்த உலகில் நிலைத்திருப்பது எது என்பதை மாற்ற முடியாத ’தத்துவ’மாக, மனதை மயக்கும் கதையாக முன்வைக்கிறான்.
இந்தப் போரின் ஆரம்பத்தில் அர்ஜுனனுக்கு தடுமாற்றம் வருகிறது. ஜேம்ஸ்பாண்டுக்கு போரின் நடுப்பகுதியில்தான் தடுமாற்றம் வருகின்றது. சொந்த பந்தங்களைக் கொன்று குலநாசம் ஏற்பட்டு, அதர்மம் சூழ்ந்து, குலப்பெண்கள் கெட்டு, வருண குழப்பம் ஏற்பட்டு, தொன்றுதொட்டு வரும் சாதி தர்மங்கள் அழிந்துவிடுமே என்று அர்ஜுனன் கேட்கிறான்.
ஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டு ’குலநாச’த்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியாது நீண்டு கொண்டே போகின்றது. அதிலும் அவனை பணியிலமர்த்தியிருக்கும் அந்த நாகரீக உலகமே வில்லனாகத் தெரியவரும் போது ஜேம்ஸ்பாண்ட் குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?
படத்தின் ஆரம்பத்தில் ஒரு அதிரடிக் காட்சி இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் தனது நேச சக்தி கூட்டாளி ஒருவரைக் காப்பாற்றுவான். அல்லது முந்தைய படத்தில் வரும் வில்லனது கூட்டாளியைக் கைது செய்வான். பிறகு வட்டத்தில் அவன் துப்பாக்கியால் சுட்டவாறு டைட்டில் காட்சி ஆரம்பமாகும். படிமங்கள் மறைத்தவாறு நிர்வாணமாகத் தோன்றும் நடன மங்கைகள் ஆட, பாடலுடன் டைட்டில் ஓடும். பிறகு அவனது எம்.16 எனும் உளவுத்துறையின் தலைவரான எம்-உடன் சந்திப்பு. அடுத்த மிஷன் பற்றி அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார்.
வெடிக்கும் பேனா, பறக்கும் கார், கண்காணிக்கும் குண்டூசி முதலான நவீன ஆயுதங்கள் உளவுத் துறையின் ஆயுத நிபுணரான க்யூ– வால் அவனுக்கு அறிமுகம் செய்யப்படும். பிறகு அவன் வில்லனது உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வான். அங்கு வில்லனால் அனுப்பி வைக்கப்பட்ட கெட்ட வகைப் பெண்ணைச் சந்திப்பான். முரண்படும் உறவோடு படுக்கை உறவும் நடக்கும். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வான். வில்லனது உலகைத் தேடி வரும் பிறநாட்டு உளவாளிப் பெண் போன்ற நல்ல வகைப் பெண்ணைச் சந்திப்பான். அவளோடும் உறவு கொள்வான். இறுதியில் வில்லனது கோட்டைக்குள் புகுந்து வில்லனை அழிப்பான். வேலை முடிந்த பிறகு நல்ல வகை பெண் நாயகியோடு சல்லாபித்திருக்க படம் முடியும். சில சமயம் அடுத்த படத்தின் ஆரம்பமாக ஒரு கேள்விக்குறியோடும் காட்சி முடியும்.
ஜேம்ஸ்பாண்ட் திரும்பி வருவான் என்ற அறிவிப்புடன் தீம் மியூசிக்கோடு படக்குழுவினரை அறிமுகப்படுத்தியவாறு டைட்டில் ஓடும்.
இத்தகைய கச்சிதமான, ஆனால் அரதப்பழசான ஃபார்முலாவை வைத்தா ஜேம்ஸ்பாண்டு படங்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஓடுகின்றது!? என்ற கேள்வி எழலாம். வடிவத்தின் பிரம்மாண்டம், உள்ளடக்கத்தின் சமூக நிலைமைகள் இரண்டையும் வைத்துக் கொண்டுதான் இத்தனை காலமாக உலக சினிமா ரசிகர்களை ஜேம்ஸ்பாண்ட் கட்டிப்போட்டிருக்கிறான்.
இதுவரை நாம் கண்டிராத அழகான லொகேஷன்கள், கேள்விப்பட்டிராத நாடுகள், தீவுகள், மலைகள், காடுகள், அருவிகள், கடற்கரைகள் அத்தனையும் ஒரு படத்தில் புதிது புதிதாக வந்து கொண்டேயிருக்கும். தமிழ்ப் படத்தில் நாயகன் ஒரு சந்தை வளாகத்தில் வில்லனை தீர்த்துக்கட்டும் போது இங்கு அந்தக் களம் விண்வெளியிலோ, விமானங்களோடோ, ஹெலிகாப்டர்களோடோ, குகைவழிச் சாலையிலோ, பிரம்மாண்டமான ஆய்வுக் கூடங்களிலோ அமைந்து மிகவும் செலவு பிடிக்கும் சண்டைகளாக அவை நடக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிகினி உடையில் வரும் அழகான நாயகிகள் அதன் அடுத்த கவர்ச்சி. பிறகு அவன் பயன்படுத்தும் நவீன கார்கள், ஆயுதங்கள், உடைகள், கடிகாரங்கள் கொசுறான நுகர்வுக் கலாச்சாரக் கவர்ச்சி.
ஜேம்ஸ்பாண்ட் படங்களது முன்களக் கதையின் கவர்ச்சியை இத்தகைய படிமங்கள் தீர்மானிக்கின்றது எனில், அதன் பின்களக் கதையின் சமூக நிலைமைகள் பொருத்தமான விகிதத்தோடு கலந்து வரும் போது ஒரு படம் இரசிகனைக் கவருவதற்குப் போதுமானது என்றாகின்றது.
ஏகாதிபத்தியங்களின் சமூக, அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு வரலாற்றின் கலை முகமாக ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த வரலாறு ஜேம்ஸ்பாண்ட் படங்களை உருவாக்கிய படைப்பாளிகள் முற்றிலும் திட்டமிட்டு செய்த ஒன்றல்ல என்றாலும், அவை இயல்பிலேயே அத்தகைய ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு திட்டம் இல்லாமலில்லை.
••
பிளெம்மிங்கின் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள்
இங்கிலாந்தின் மசாலாக் கதை எழுத்தாளர் அயன் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டு உருவாக்கிய கற்பனைப் பாத்திரம்தான் 007 எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவர் 12 நாவல்களையும், இரு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 1964-இல் அவரது இறப்பிற்குப் பிறகு ஆறு எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தக் கதாபாத்திரத்தை வைத்து எழுதியிருக்கிறார்கள். நாவல்கள், படங்கள் தவிர தொலைக்காட்சி – வானொலி தொடர்கள், காமிக்ஸ் கதைகள், வீடியோ விளையாட்டு முதலானவற்றிலும் ஜேம்ஸ்பாண்ட் வருகிறான்.
1962-ஆம் ஆண்டில்தான் டாக்டர் நோ எனும் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. கனடாவைச் சேர்ந்த ஹாரி சால்ட்ஸ்மென், அமெரிக்கரான ஆல்பர்ட் ஆர் ‘கியூபி‘ பிரக்கோலி இருவரது இயான் புரடக்சன்ஸ் எனும் நிறுவனம்தான் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்து வருகின்றது. ஹாலிவுட்டின் பெரும் திரைப்பட நிறுவனங்கள் நிதியுதவி அளித்து இப்படங்களை உலகெங்கும் விநியோகித்து வருகின்றன. இதுவரை சீன் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரான்சன், தற்போது டானியல் கிரெய்க் முதலான நடிகர்கர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதுவரை வெளியான 22 ஜேம்ஸ்பாண்ட் படங்களும் மொத்தம் 5 பில்லியன் டாலரை அதாவது 22,500 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கின்றன. ஹாரி பார்ட்டர் தொடர் வரிசைப் படங்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ்பாண்ட் படங்களே அதிகம் வசூலித்த தொடர் படமாகும். உலக மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் ஏதேனும் ஒரு பாண்ட் படத்தைப் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிரபலமான பிறகு பிளமிங்கின் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டு இதுவரை மொத்தம் 2 கோடியே முப்பது இலட்சம் நாவல்கள் விற்பனையாகியிருக்கின்றன.
••
த்ரில்லர் எனப்படும் துப்பறியும் கதைகளுக்கு உலகமெங்கும் வரவேற்பு உண்டு. நிலவுடமைச் சமூகங்களில் நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்குமான காரணங்கள் மர்மம் நிறைந்தவை அல்ல. அந்த வன்முறையின் களம் வரம்புக்குட்பட்டது போலவே அதன் சூத்திரதாரியும் எளிதில் கண்டுணரக்கூடியவன்தான். ஆனால் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இதே சமூக வன்முறைகள், கொலைகள், களத்திலும், காரணத்திலும், யார் செய்தார்கள் என்பதிலும் பரந்த பரப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலையைக் கண்டுபிடிப்பது என்ற முறையில் புலனாய்வு எனும் கலை அறிவியலும், புத்தார்வமும் நிறைந்த ஒன்றாகத் தோன்ற வேண்டியிருக்கின்றது.
நகரமயமாக்கமும், முதலாளித்துவ சமூகமும் வளரும் போது தோன்றிய நாவல் எனும் விரிந்த களத்தையும், நுட்பமான சிந்தனையோட்டங்களையும், பிரச்சினைகளையும் சொல்லக்கூடிய கலை தோன்றும் போது அதன் உட்பிரிவாக இந்த துப்பறியும் கதைகளும் தோன்றுகின்றன. குடும்ப-குழு-பாலின-சமூக வன்முறைகள் எனும் களத்திலேயே ஆரம்பத்தில் இது தோன்றியிருந்தாலும் பின்னர் அது அரசியல் களத்திலும், பொருளாதார அரங்கிலும் கால்பதிக்கின்றது. குடும்ப வன்முறைகளைக் காட்டிலும் அரசியல் அரங்கு ஒரு நகரத்துடனோ, பகுதியுடனோ மட்டும் நின்று விடாமல் நாடுகள், கண்டங்களையும் தாண்டிச் செல்கின்றது. ஹிட்ச்காக் முதலான சாதனைகள் படைத்த இயக்குநர்கள், படைப்பாளிகள் தனி மனிதனின் வன்முறைகளைக் கச்சிதமான படமாகச் சொல்லிய போது வேறு சிலர் தங்களது களத்தினை அரசியல் அரங்கிற்குள் கொண்டு சென்றார்கள்.ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் சூல் கொண்டுள்ள இடமும், அதன் பிரம்மாண்டமான மசாலா கதைகளுக்கான தோற்றுவாயும் இதுதான்.
••
ஜேம்பாண்டை படைத்த இயன் பிளெம்மிங், ஊதாரித்தனமும், அடிமைத்தனமும் கலந்த கலவை
அயன் ஃபிளமிங் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் ஒரு உளவாளி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறையான எம் 16 எனும் இயக்கத்தில் வேலை செய்கிறான். அந்த உளவுத்துறை இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடான அமெரிக்கா போன்ற நாடுகளின் நலனுக்காக எல்லா வகை ’வேலை’களையும் செய்கிறது. இந்த உண்மையுடன் கொஞ்சம் தனிமனித சாகசங்களைச் சேர்த்து விடும் போது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிறக்கின்றது.
பாண்டை உருவாக்கிய அயன் பிளமிங் ஒரு வசதியான செல்வந்தர் குடும்பத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பம் ராபர்ட் பிளமிங் அண்டு கோ எனும் வணிக வங்கிக் குடும்பத்துடன் தொடர்புடையது. அவரது தந்தையும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1910 முதல் 1917 இல் இறக்கும் வரை உறுப்பினராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும், பின்னர் ராயல் மிலிட்டரி அகாடமியிலும் பயின்ற ஃபிளமிங் ஒரு மேட்டுக்குடி ஆங்கிலேயே கனவானுடைய நடத்தையைக் கொண்டிருந்தார். பின்னர் அவர் இங்கிலாந்து கடற்படையின் உளவுத்துறையில் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது அவர் சந்தித்த அனுபவங்கள், கதைகள், பாத்திரங்களெல்லாம் பின்னர் பாண்ட் நாவலுக்குரிய கச்சாப் பொருட்களை அளித்தன.
இது போக அவரது தனிப்பட்ட நடத்தையான புகைபிடிப்பது, அதிகம் குடிப்பது, அழகான பெண்களிடம் ஜொள்ளு விடுவது முதலானவையும் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் சேர்ந்திருந்தன. சுருங்கக் கூறின் அவரது தனிப்பட்ட பண்பான கேளிக்கை நடத்தைகளும், அவரது அரசியல் பார்வையான அரசகுலம் சார்ந்த, இங்கிலாந்தின் மேட்டுக்குடி மனோபாவமுமே ஜேம்ஸ்பாண்டின் அடிப்படை விதிகள்.
20 ஆம் நூற்றாண்டு இரண்டு உலகப் போர்களை பெரும் அழிவுடன் சந்தித்திருக்கின்றது. அதன் பிறகு அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமான கெடுபிடிப் போர் அந்த நூற்றாண்டின் இறுதி வரை நடந்திருக்கின்றது. உலகப் போர்களின் துயரங்களையும், நட்டங்களையும் ஒரு கண்டம் என்ற வகையில் ஐரோப்பிய மக்களே அதிகம் அனுபவித்திருந்தார்கள். இரண்டாவது உலகப் போரின் முடிவுக்குப் பிறகு இங்கிலாந்து, பிரான்சு போன்ற ஏகாதிபத்தியங்கள் தங்களது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழந்தும், மிச்சமிருப்பதை தக்க வைத்திருப்பதற்கு பெரும் பிரயத்தனத்துடனும் போராடி வந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து மக்கள் போரின் அழிவுகளுடனும், புதிய பனிப்போர் நிலைமை காரணமான அச்சத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். கொரியா, மலாய், கென்யா, கயனா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகள் இறுதியாய் போராடி வந்த போது பிரான்சு நாடு வியத்நாமில் தனது அஸ்தமனத்திற்காக போராடி வந்தது. கூடவே நுழைந்த அமெரிக்கா வியத்நாமை கம்யூனிச அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பெரும் படையெடுப்பையே நடத்தி வந்தது.
சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொதுவுடமை செல்வாக்கிற்கு அஞ்சிய மேற்குலகம் கம்யூனிச எதிர்ப்பிற்கு அமெரிக்காவின் தலைமையில் பெரும் போர்த்தந்திரத்தை அமல்படுத்தி வந்தன. அமெரிக்க மண்ணிலேயே பொதுவுடமையின் வாசம் கூட தோன்றிவிடக் கூடாது என்பதற்க்காக மெக்கார்த்தி யுகம் எனும் கம்யூனிச எதிர்ப்புப் பாசிசம் அமலில் இருந்தது. இதன் காரணமாகவே சார்லி சாப்ளினுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டு தாயகமான இங்கிலாந்துக்கு அவர் திரும்பினார்.
இதே காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள் உலகை வலம் வரத் துவங்கின. உயிரியில் – உடலியலின் சாதனையாக டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அதிவேக ஜெட் விமான சேவை இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்க வீடுகளின் அறைகளுக்குள் தொலைக்காட்சி எனும் புதிய தொழில்நுட்பம் பேசத் துவங்கியிருந்தது. அமெரிக்கா, ரசியாவிற்கு அடுத்த நாடாக பிரிட்டன் அணு வெடிப்புச் சோதனை நடத்தி அணு வல்லரசாக அறிவித்துக் கொண்டது. ஹைட்ரஜன் குண்டுகளும் சோதனைக்காக வெடிக்கப்பட்டன. சோவியத் யூனியனிடம் அணுகுண்டு அறிவியலின் நுட்பங்களை அளித்தார்கள் என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சில அறிவியலாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
உலகப் போர் முடிந்த இடத்தில் அமெரிக்காவுக்கும், ரசியாவுக்குமான பனிப்போர் எனப்படும் கெடுபிடிப் போர். அந்த வகையில் உலகப்போரின் அச்சத்திலேயே தொடர்ந்து இருக்க மக்களிடம் அடுத்த வில்லன் சோவியத் யூனியன்தான் என்று மேற்குலகங்கள் பிரச்சாரத்தை கட்டியமைத்தன. இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கம் அரசியல் ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம் அது. கூடவே தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள், புதிய வாழ்க்கை என்ற இந்த சமூக உளவியலின் பின்னணியில்தான் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களை ஃபிளமிங் எழுதுகிறார்.
••
யூ ஒன்லி லிவ் டுவைஸ் படத்துக்கான ‘ஸ்பெக்டர் ‘ செட்
நாயகனின் சாகசங்களை சென்டிமெண்டாக உணர்த்துவதற்கு வில்லன்கள் அவசியம். ஒரு குடும்ப நாயகனின் எழுச்சிக்கு ஒரு தெருவோர ரவுடி போதும். அவனே உலக நாயகனாக இருந்தால் வில்லனும் உலக ரவுடியாக இருக்க வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களில் வாய் கூவிச் சிரிக்கும் நம்பியாரும், வீரப்பாவும் போதுமானவர்கள் என்றால் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவன் நவீன தொழில்நுட்பத்தில் மேதையாகவும், அவனது களம் முழு உலகைக் கைப்பற்றுவதாகவும் இருக்கிறது. நிஜ வாழ்வின் பொதுப்புத்தியில் சோவியத் யூனியனும், அதன் உளவுத் துறையான கே.ஜி.பியும்தான் மாபெரும் வில்லன்கள் என்று சித்தரித்து விட்ட பிறகு, அதையே கதையில் கொண்டுவரும் போது ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகின்றது.
அந்த வில்லனின் ஹைடெக் சமாச்சாரங்களின் சாத்தியங்களை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி கொண்டு வரும்போது மசாலா படங்களின் ரிச்சான காட்சிகளுக்கு வழி பிறந்து விடுகின்றது. எனினும் ஃபிளமிங் அவரது நாவல்களில் சோவியத் யூனியனை வில்லனாகவும், உலக அமைதிக்கு எதிராகவும் காட்டியது போல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நேரடியாகக் காட்டவில்லை. அப்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்யூனிசம் செல்வாக்காக இருந்த காரணத்தாலும், பனிப்போர் விரைவில் முடிந்து விடும் என்று ஃபிளமிங் நம்பியதாலும் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன்தான் ஸ்பெக்டர் இயக்கம்.
SPECTRE (SPecial Executive for Counter&intelligence, Terrorism, Revenge and Extortion) ஸ்பெக்டர் இயக்கத்திற்கு நாடோ, அரசியலோ, கொள்கையோ இல்லை என்று சொன்னாலும் இது உலகளாவிய மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமாகும். ஆனால் மறைமுகமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஹிட்லரின் இரகசிய போலீசான கெஸ்டபோ, ரசிய கே.ஜி.பியின் ஸ்மெர்ஷ், யூகஸ்லோவேகியாவின் இரகசிய போலிசு, இத்தாலியின் மாஃபியா, பிரான்சின் நிழல் இயக்கமான யூனிஒன் கோர்ஸ் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.
பின்னர் இந்த ஸ்பெக்டர் இயக்கத்தை ரசியா, சீனா முதலான பொதுவுடமை நாடுகள் மேற்குலக நாடுகளை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தியதாக படத்தில் மாற்றினார்கள்.
ஃபிளமிங் மட்டுமல்ல, அன்றைய நாவல் எழுத்தாளர்கள் பலரும் சோவியத் யூனியன், சீனா, கியூபா, கிழக்கு ஐரோப்பா பின்னர் வட கொரியாவையும் வில்லன்களாக வைத்துக் கதைகளை எழுதினார்கள். அதற்காகவே அவர்களில் சிலருக்கு நோபல் பரிசும் தரப்பட்டிருக்கின்றது. பின்னர் 1990களில் இங்கிலாந்தில் வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இவர்களில் பலர் எம்.16 உளவுத் துறையின் நிதிப் பராமரிப்பில் வாழ்ந்தவர்கள் என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்தது.
••
முதல் படமான டாக்டர் நோவின் கதை என்ன? ஜமைக்காவில் ஒரு எம்.16 இன் உளவாளி கொல்லப்பட, அதை விசாரிப்பதற்காக ஜேம்ஸபாண்ட் அங்கு செல்கிறான். அதன் போக்கில் டாக்டர் நோ எனும் ஸ்பெக்டரால் நியமிக்கப்பட்ட வில்லன் ரேடியோ ஜாமரை வைத்து அமெரிக்க ராக்கெட்டுகளை முடக்கும் சதியை அரங்கேற்ற நினைக்கிறான். இவனை சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது. பிறகு அமெரிக்க சி.ஐ.ஏ உதவியுடன் பாண்ட் டாக்டர் நோவை கொல்கிறான்.
இங்கிலாந்தின் மகத்துவத்தை முன்வைத்து புனையப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஆரம்பத்தில் ஹாலிவுட் ஏற்கவில்லை என்றாலும், பின்னர் நிஜ உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை உணர்ந்த பாண்ட் படைப்பாளிகள் கதைகளில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தைக் கொண்டு வந்தனர். இது முதல் படத்தில் மட்டுமல்ல, பின்னர் வந்த பல படங்களிலும் தொடர்கின்றது. ஜேம்ஸ்பாண்டின் உலகளாவிய, குறிப்பாக அமெரிக்க வசூலுக்கும் அது தேவையாக இருந்தது. அது போல அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்புப் போர் வரையிலும் இங்கிலாந்துதான் முக்கியமான நேச சக்தி என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.
முதல் படத்திலேயே பெண்களோடு குத்தாட்டம் போட்டு, நேர்ப்படுபவனையெல்லாம் சுட்டுக் கொல்லும் பாண்டின் செக்ஸ் மற்றும் வன்முறை குறித்து வாத்திகன் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே ஹிட்லரை, போப் இரண்டாம் பயஸ் ஆதரித்திருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் பாதிரிகளின் செக்ஸ் ஸ்கேண்டல்கள் உலகம் முழுவதும் தலைவிரித்தாடி சிலவற்றில் போப் ஆண்டவரே மன்னிப்பு கேட்டதைப் பார்த்தால் அந்த கண்டனத்திற்கு வரலாற்றுச் சிறப்பேதுமில்லை.
இந்தப் படத்தில் பாண்டின் நட்புப் பெண் பிகினி உடையில் வரும் காட்சி பின்னர் வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைகிறது. அந்த உடையும் கூட 2001 ஆம் ஆண்டு முப்பது இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றது. படத்தில் மோன்டி நார்மனின் தீம் மியூசிக், வில்லன் ஆய்வுக்கூடம், பாண்டின் கவர்ச்சி உடை நாயகிகள் எனப்படும் பாண்ட் பட குறியீடுகள் உருப்பெருகின்றன. படத்தயாரிப்பை விட ஆறு மடங்கு வசூலை அள்ளிக் குவித்தபடியால் அடுத்த பாண்ட் படங்கள் இன்னும் அதிக செலவுடன் தயாரிக்கப்பட்டன.
மூன்றாவது படமான கோல்டு ஃபிங்கரில், தங்க முதலாளி ஆரிக் கோல்டு ஃபிங்கர் அமெரிக்கக் கருவூலத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயல்கிறான். அதற்கு சீனத்து அணுகுண்டையும் பயன்படுத்த முனைகின்றான். பின்னர் பாண்ட் இதை முறியடிக்கிறான். அப்போது தங்கம் சர்வதேச பண மதிப்பின் அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுபதுகளின் இறுதியில் வந்த மூன் ரேக்கர் படம் ஸ்டார் வார்ஸ் படத்தின் போட்டிக்காகவும், அமெரிக்கா, ரசியா ஈடுபட்டிருந்த நட்சத்திர சண்டை காரணமாகவும் வெளி வந்தது. இப்படி நிகழுலக அரசியல் போக்குகளெல்லாம் பாண்ட் படங்களில் மலிவாகப் பயன்படுத்தப்பட்டன.
ஐந்தாவது படமான யு ஒன்லி லிவ் டுவைஸ் படத்தை இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரீமியர் காட்சியாகவே பார்க்கிறார். கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் கென்னடியும் பாண்ட் நாவல்கள், படங்களின் விசிறிதான். அவருக்கு பிடித்த படம் ஃபிரம் ரசியா வித் லவ். இப்படி பாண்ட் படங்கள் உலகெங்கும் மேற்குலகின் சாகச நாயகனாக வலம் வந்த போது அப்படி முயன்று வந்த அரசுகள், அதிபர்கள் இதை ஆரவாரத்துடன் ஆதரித்தது அதிசயமில்லை.
பதினான்காவது படமான எ வியூ டு எ கில் படத்தில் வில்லன் ரசிய உதவியுடன் கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியை தகர்க்க முனைவதை பாண்ட் முறியடிக்கிறான்.
பதினேழாவது படமான கோல்டன் ஐ வெளிவரும் போது கோர்பச்சேவின் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது வேடத்தைக் கலைத்து விட்டு முழு முதலாளித்துவ அரசாக அறிவித்துக் கொள்கிறது. விடுவார்களா, இந்தப் படத்தின் டைட்டில் காட்சியில் கம்யூனிச சின்னங்கள் அரிவாள் சுத்தியல், லெனின் சிலைகளெல்லாம் தகர்ப்படுகின்ற பின்னணியில் நடன மங்கைகள் ஆடுகிறார்கள். பெர்லின் சுவர் இடிப்பு, லெனின் சிலை இடிப்பு என்று ஏகாதிபத்திய உலகமே கொண்டாடிய போது ஜேம்ஸ்பாண்ட் மட்டும் கொண்டாடாமல் இருப்பானா என்ன?
ஆனால் இந்தக் கொண்டாட்டம் பத்து ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. கம்யூனிச நாடுகள் வீழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகள் ஒன்றும் பூவுலகில் சொர்க்கத்தை படைக்க முடியவில்லை என்பதோடு நரக வாழ்க்கையை விஸ்தரித்து வந்த நேரம். பல நாடுகளில் வெடித்த பொருளாதாரப் பிரச்சினைகள் மேற்குலகின் மெக்காவான அமெரிக்காவிலேயே ஆட்டம் போட்ட போது ஜேம்ஸ்பாண்டும் நிறைய தடுமாறுகிறான்.
••
முதலாளித்துவத்தைக் காப்பாற்ற அவதரித்த பாண்ட் இப்போது முதலாளிகளை வேட்டையாடுகிறான்
2006 இல் வெளிவந்த கேசினோ ராயல், 2008இல் வெளிவந்த குவாண்டம் ஆஃப் சோலஸ் எனும் இரண்டு தொடர் வரிசை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வழக்கமான பாண்ட் பாணியிலிருந்து நிறைய வேறுபடுகின்றன. இந்த படங்களில் ஒரு புது வில்லன் இயக்கம், குவாண்டம் என்ற பெயரில் வருகிறது. இவர்கள் யார்? பன்னாட்டு முதலாளிகள், அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளோடு தொடர்புடையவர்கள், இசுரேலின் மொசாட்டில் உள்ளவர்கள் என்று ஜேம்ஸ்பாண்ட் எந்த முதலாளித்துவ உலகைக் காப்பாற்ற இத்தனை காலம் போராடினானோ அந்த உலகத்தின் சூத்திரதாரிகளே வில்லன்களாக மாறுகிறார்கள்.
கேசினோ ராயலில் இரகசியமாக போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளுக்காக ஒரு நிதி நிறுவனத்தை நடத்துபவன் அந்தப் பணத்தை வைத்துப் பங்குச்சந்தையில் சூதாடுகிறான். அதில் பணத்தை இழந்து அதனை மீட்பதற்காக பில்லியனர்கள் விளையாடும் சீட்டு ஆட்டத்தில் ஈடுபடுகிறான். பாண்ட் அங்கு சென்று ஆட்டத்தில் சி.ஐ.ஏ பண உதவியுடன் வென்று வில்லனை அமெரிக்காவிடமே கையளிக்கிறான். ஆனால் வென்ற சூதாட்டப் பணத்தை அவனால் மீட்க முடியவில்லை. காதலியையும் இழக்கிறான். காதலியுடன் களித்திருக்கும் போது இனி இந்த பாண்ட் வேலையை செய்யவில்லை, வேறு ஏதாவது நல்ல வேலை செய்கிறேன் என்றும் கூறிவிட்டு இந்த உலகில் அப்படி ஒரு நல்ல வேலை இருக்கிறதா என்று கேட்கிறான். கூடவே எம்.16 உளவுத் துறையின் தலைவர் எம் க்கு ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் செய்கிறான்.
ஆனாலும் காதலியின் கொலைக்காக அவனது வேலை அடுத்த படத்திலும் தொடர்கிறது. குவாண்டம் ஆஃப் சோலசில் வில்லன் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் குடிநீர் வளத்தை கைப்பற்றுவதற்கு முயல்கிறான். அதற்காக இருக்கும் அரசை கவிழத்துவிட்டு ஒரு ராணுவ தளபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உதவுகிறான். இவனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இங்கிலாந்து பிரதமரின் நெருங்கிய நண்பர், மொசாட்டில் பணியாற்றி பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் முதலாளி என்று பலரும் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்கள்தான் குவாண்டம் எனப்படும் அந்த இயக்கத்தின் அஸ்திவாரங்கள்.
பாண்ட் இவர்களை விரட்டியவாறு பொலிவியாவுக்கே சென்றாலும் அங்கு அவனால் ஒரு கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியவில்லை. எம்.16 உளவுத்துறையே அவனது கைகளைக் கட்டிப் போடுகின்றது. இடையில் அவன் தனது தலைவரின் சங்கேத வார்த்தையைத் திருடி அவர்களது இணைய தளத்தில் நுழைந்து தகவல்களைச் சேகரிக்கிறான். தலைவரது வீட்டிற்கு அவனாகவே நுழைந்து பேசுகிறான். உளவுத்துறை தலைவர் எம் முன்னால் விறைப்புடன் ஒரு இராணுவ வீரன் போல அடிமையாக கிடக்கும் முந்தைய பாண்ட் படங்களிலிருந்து இவன் வேறுபடுகிறான்.
எம்.16 உளவுத் துறையிலும் கூட குவாண்டத்தின் நபர்கள் புகுந்து விடுகிறார்கள். எம் இன் பாதுகாவலராக இருக்கும் ஒருவனே வில்லனது கையாள் என்பதையெல்லாம் அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதியில் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி தலைவர் எம் இன் ஆதரவோடு மட்டும் பொலிவியாவில் அந்த வில்லனைக் கொல்கிறான். இறுதியில் வில்லனுக்கு ஆதரவாக இருந்த சி.ஐ.ஏ தலைவர், மற்றும் இங்கிலாந்து பிரதமரின் ஆதரவாளரெல்லாம் மாற்றப்படுகிறார்கள். அது இன்னமும் அந்த முதலாளித்துவ உலகத்தை காப்பாற்றத் துடிக்கும் பாண்டின் இலட்சியத்திற்காகச் சொல்லப்பட்ட புனைவுதான்.
ஆனாலும் புனைவில் உதித்த இந்த முதலாளித்துவ நாயகன் இனி முழுக்க முழுக்க புனைவையே நம்பி வாழ முடியாது. வால் வீதியில் ‘நாங்கள்தான் 99%‘ என்று முழங்கும் சராசரி அமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வை இனியும் மடை மாற்ற முடியாது. அதன்படி இனி பாண்ட்டின் படங்களில் காட்டியே ஆக வேண்டிய வில்லனாக முதலாளித்துவமே விசுவரூபமெடுத்து நிற்கிறது.
இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் – தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்?
சாகசங்களை விசுவரூப தரிசனமாகக் காட்டித்தான் இது வரை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உலகை வலம் வந்தன. இனியும் வரும். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் இனி யாருக்காக உழைக்க முடியும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதன்படி அவனது நாயகப் பண்புகள் மறைந்து அவனே ஒரு வில்லன் போல தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு நிறுவனத்தை எதிர்க்கும் கலகமாக மாற்றப்பட்டு அவனது பாத்திரம் காப்பாற்றப்படலாம். ஆனால் அதற்கு விலையாகப் பன்னாட்டு நிறுவனங்களையே வில்லனாகக் காட்டும் நிலையில் பாண்டின் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
இரண்டில் ஒன்றைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இனி ஜேம்ஸ்பாண்டின் படங்கள் எப்படி இருக்கும்? வழக்கம் போல மசாலா காட்சிகள், பிகினி நாயகிகள் எல்லாம் இருந்தே தீரும். ஆனால் மேற்குலக மக்களின் உணர்வை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெரும் குழப்பத்தில் நிற்கிறான். அவனது குழப்பத்தை நீக்கி நல்வழிப்படுத்தும் தகுதியை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இழந்து விட்டது.
ஆனாலும் அவன் இன்னமும் ஏகாதிபத்தியத்தின் அடியாள்தான். என்றாலும் இந்த அடியாள் இனி நாயகனாக வேடம் கட்டினாலும் நிஜ உலகைப் பொறுத்த வரை அவன் வில்லன். ____________________________________________
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.
இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.
இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன் சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.
ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல் அதனால் தீவிரவாத வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.
இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப் பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது; சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை. வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும் ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக் கூடாதா? மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.
நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி
1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது,தேசியக் குற்ற ஆவண ஆணையம். இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157; அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம். இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.
இப்புள்ளிவிவரத்தோடு மைய அரசு வெளியிட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரத்தைச் சேர்த்துப் பார்ப்போம். 2010 டிசம்பரில் 68,597.09 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அடுத்த ஒரே ஆண்டில், 2011 டிசம்பரில் 1,03,891.27 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.
இந்த வாராக் கடன் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு, வசூலாகாமல் நிலுவையாக இருந்து வரும் கடன் தனிக் கணக்கு. இதில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 1,21,000 கோடி ரூபாய். விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 39,000 கோடி ரூபாய். இந்த 39,000 கோடி ரூபாய் கடனில் சமீபத்தில் போண்டியாகிப் போன கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 7,000 கோடி ரூபாயாகும்.
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும்; கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போடுவதும் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆனால், காங்கிரசு கூட்டணி அரசோ, “பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் கடன் பாக்கியும் வாராக் கடனும் அதிகரித்திருப்பதாக’’க் கூறி, கார்ப்பரேட் முதலாளிகளின் மோசடிகளை மூடிமறைக்க முயலுகிறது. இன்னொருபுறம், கந்துவட்டிக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் சதித்தனத்திலும் அரசே ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு விவசாயி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நிரூபிப்பதற்கு 13 சான்றாவணங்களைப் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலோ, கந்துவட்டிக் கடன் தொல்லையால் நேர்ந்த தற்கொலையா, இல்லையா என்பதை ஆராய்ந்து சான்றளிப்பதற்காகவே ஒரு அதிகார வர்க்கக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகளையும் மீறி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறித்துத் தேசிய குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டு வரும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன, மைய, மாநில அரசுகள்; மேலும், தமது கைத்தடி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அறிவித்து, விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வது குறைந்து வருவதாக மாய்மாலம் செய்கின்றன.
இப்புள்ளிவிவர மோசடிகளுக்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கும், விவசாயிகளின் அவல வாழ்க்கைக்கும் நாம் முடிவு காணுவது எப்போது?
ஏப்ரல் 22: தோழர் லெனின் பிறந்த நாள் நினைவுக் கட்டுரை!
சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:
”எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”
சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.
தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.
பெத்னதா (”ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.
”இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”
பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (”பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.
”இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.
”ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். ”எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”
விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.
கட்டாயத் தானியக் கொள்முதல்* பற்றியும், விவசாயிகளின் கடிய நிலைமை பற்றியும் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. லெனினது சொந்த அறிக்கையில் இவை சேர்க்கப்பட்டன. விவசாயிகள் கடிதங்களின் பொழிப்பு வீணாகப் போகவில்லை என்று நான் விரைவில் உறுதி கொண்டேன். கட்சியின் 10-வது காங்கிரசில் லெனின் சமர்ப்பித்த கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக உணவுப் பொருள் வரி விதிப்பது பற்றிய அறிக்கையைக் கேட்ட நான் விவசாயிகளின் கடிதங்களை லெனின் இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தேன்.
அதிலிருந்து பெத்னதாவின் ஒழுங்கான அறிக்கைகள் தமக்குக் கிட்ட வேண்டும் என்று விளதீமிர் இலீச் கோரினார். விளதீமிர் இலீச் நுணுக்கி நுணுக்கி எழுதிய ஒரு துண்டுக் காகிதம் என்னிடம் இன்னும் இருக்கிறது. அதை அப்படியே கீழே தருகிறேன்.
”26.1.1922.
தோழர் கர்பீன்ஸ்கி!
பின்கண்டவை பற்றி எனக்குச் சுருக்கமாக (அதிகபட்சம் 2-3 பக்கங்கள்) எழுத மாட்டீர்களா? விவசாயிகளிடமிருந்து பெத்னதா பத்திரிகைக்கு எத்தனை கடிதங்கள் வந்திருக்கின்றன? முக்கியமாக (குறிப்பாக, முக்கியமாக), புதியதாக இக்கடிதங்களில் என்ன இருக்கிறது? அவர்கள் மனநிலை எப்படி? முக்கியமான பிரச்னை என்ன?
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை (அடுத்தது 15.3.1922) இத்தகைய கடிதங்கள் நீங்கள் எழுத முடியுமா?
அ. கடிதங்களின் சராசரி எண்ணிக்கை
ஆ. மனநிலை
இ. மிக முக்கியமான பிரச்னை.
கம்யூனிச வாழ்த்துக்களுடன்,
லெனின்”
விவசாயிகளுடன் தோழர் லெனின்
அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த விளதீமிர் இலீச் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார். தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க விசேஷ தினம் வைத்திருந்தார் லெனின்.
குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்து விட்டு பதட்டத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, விளதீமிர் இலீச்சைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.
சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவிவிட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார்.
”தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!”
ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்படையும் விளதீமிர் இலீச் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.
விளதீமிர் இலீச் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்ததும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும் கூட விளதீமில் இலீச் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.
வரவேற்பறையில் ஒருநாள் பின்கண்ட சம்பவம் நடந்தது. வந்தவர்களில் ஒருவர் திடீரென்று குதித்தெழுந்து மிகவும் பதற்றத்துடன் சொன்னார்:
”தோழர் லெனின், இதெல்லாம் என்ன?! அவர்கள் எங்களை முன் போலவே கசக்கிப் பிழிகிறார்கள், கசக்கிப் பிழிகிறார்கள்!”
விளதீமிர் இலீச்சுக்கு ஒன்றும் பிரியவில்லை.
”இவான் ரதியோனவிச், அமைதி கொள்ளுங்கள். என்னவென்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்கள் என்பது யார்?”
”யார் என்கிறீர்களா? எங்கள் கிராம சோவியத்துக் காரர்கள்! அநியாய வரிகள் தண்டி எங்களை வாட்டி வதைக்கிறார்கள்!”
”அவர்களைத் தேர்ந்தெடுத்து யார்?”
”நாங்கள்தான். வேறு யார்?…”
”வேறு ஆட்களைத் தேர்ந்தெடுங்களேன்!”
”அப்படி முடியுமா என்ன?”
”முடியும். அப்படித்தான் செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு நியாயமாக நடந்து கொள்ளாத எந்த சோவியத் பிரதிநிதியையும், அவரது பணியின் காலம் முடிவதற்குள் ஒதுக்கி வேறொருவரைத் தேர்ந்தெடுக்க சோவியத் சட்டம் அனுமதிக்கிறது. இதுதான் விஷயம், இவான் ரதியோனவிச்!”
இத்தகைய உரையாடல்களுக்குப் பின்பு அவசியமான சந்தர்ப்பங்களில் உடனடியாக ஆணைகள் பிறப்பித்தார் விளதீமிர் இலீச். தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நடந்த உரையாடல்களில் கிடைத்த தகவல்கள் அவ்வப்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகத் திகழ்ந்திருக்கின்றன.
___________
(*கட்டாயத் தானியக் கொள்முதல் – உணவுப் பொருள் சேகரிப்பதற்காக அரசு கடைப்பிடித்த நிர்ப்பந்த முறை. அன்னிய இராணுவத் தலையீட்டின் போது, உள்நாட்டுப் போரின் போது (1918 – 1921) இம்முறையைச் சோவியத் அரசு கடைப்பிடித்தது. விவசாயிகளிடமிருந்த அதிகப்படியான உணவுப் பொருளையும், தீவனத்தையும் நிர்ணயமான ஒரு விலை கொடுத்து அரசு எடுத்துக் கொண்டது. 1921-ல் கட்டாயத் தானியக் கொள்முதலுக்குப் பதிலாக நிர்ணயமான உணவுப் பொருள் வரிவிதிக்கப்பட்டது. இது விவசாயிகட்கு அதிக அனுகூலமானது. –
முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.
ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.
முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.
1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும், காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.
ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.
1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார். அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.
இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.
வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் 2007ல் லிபிய தலைவர் கடாஃபியை சந்திக்கிறார். புகைப்படம்: ஸ்டீபன் ரோஸ்ஸியொ / PA
திங்கள் கிழமை ஒளிபரப்பான நவீன உளவாளிகள் நிகழ்ச்சி பயங்கரவாதத்தின் மீதான போர் எந்த அளவுக்கு சட்டமில்லா பள்ளத்தாக்கில் வீழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கியது. 2004-ம் ஆண்டு, அப்போதைய லிபிய அதிபர் கடா்பியின் எதிரியான, வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜை கடத்துவதற்கு பிரிட்டனின் உளவு நிறுவனம் எம்ஐ6, சிஐஏ மூலம் ஏற்பாடு செய்தது. அதன் மூலம் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் கர்னல் கடாபியை சந்தித்து நட்பை உருவாக்கிக் கொள்வதற்கான பாதையை எம்ஐ6 போட்டுக் கொடுத்தது.
பெல்ஹாஜூம் அவரது மனைவியும் பிரிட்டனுக்கு போகும் வழியில் பாங்காக்கில் பிடிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் காலனியான டியேகோ கார்சியா வழியாக திரிபோலியின் தாஜௌரா சிறைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பெல்ஹாஜ் ஆறு ஆண்டுகளும், அவரது மனைவி நான்கரை மாதங்களும் கடாபியின் பாதுகாப்புத் தலைவர் மௌசா கௌசாவின் கருணை நிறைந்த பாதுகாப்பில் கழித்தார்கள். கர்ப்பமாக இருந்த பெல்ஹாஜின் மனைவி ஒரு மம்மியை போல ஸ்ட்ரெச்சரில் கட்டி வைக்கப்பட்டிருந்தார், பெல்ஹாஜ் முறையாக சித்திரவதை செய்யபட்டார். சித்திரவதையில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று கௌசா இப்போது மறுத்திருக்கிறார்.
இந்த பரிசுடன் வந்த எம்ஐ6-ன் மார்க் ஆலனின் கடிதம் விமான தபால் (பெல்ஹஜ்) பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கான வாழ்த்துக்களை கௌசாவுக்கு தெரிவித்தது. “பல ஆண்டுகளாக நாம் வளர்த்துக் கொண்ட தனிச் சிறப்பான உறவை வெளிப்படுத்த நாங்கள் உங்களுக்கும் லிபியாவுக்கும் செய்யும் குறைந்தபட்ச சேவை இதுதான்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள், பல்லை இளித்துக் கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை, கடாபி தனது பிரபலமான பாலைவன கூடாரத்தில் வரவேற்றார். பயங்கரவாதத்தை கை விடுவதாகவும், பேரழிவு ஆயுதங்களுக்கான திட்டங்களை கை விடுவதாகவும் கடாபி அறிவித்தார். அந்தத் திட்டங்கள் போலியானவையாக இருந்திருக்கலாம், ஆனால் அந்த ஒப்பந்தம், ஈராக் ஆக்கிரமிப்பு மோசமாக போய்க் கொண்டிருந்த கால கட்டத்தில் டோனி பிளேயர் வாஷிங்டனில் தலை நிமிர்ந்து நடக்க உதவியது.
இந்த வினோதமான உறவின் மற்ற விபரங்கள் போலியாக இருக்கவில்லை.
1. பிரிட்டன் பெல்ஹாஜை கடாபியிடம் கொண்டு சேர்த்தது மட்டுமின்றி, லிபியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது.
2. அடுத்த சில மாதங்களுக்குள் கடாபி, எம்ஐ6 அதிகாரியாக இருந்து அரசாங்கத்தின் முழு ஒப்புதலுடன் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) ஆலோசகராக பொறுப்பேற்றிருந்த ஆலன் துணையுடன் வருகை புரிந்த பிரௌன் பிரபுவை லிபியாவுக்கு வரவேற்றார்.
3. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உடைந்து போகும் அபாயம் ஏற்பட்ட போது, ஆலன் லிபியாவைச் சேர்ந்த லாக்கர்பீ குண்டு வெடிப்பாளர் அப்துல் பாஸ்த் அல் மெக்ராஹியை விடுதலை செய்யும்படி தனது முன்னாள் எஜமான் ஜாக் ஸ்ட்ராவிடம் வலியுறுத்தினார்.
4. கடாபியின் உலகப் புகழை உயர்த்த உதவிய மானிடர் கன்சல்டன்சியின் மூத்த ஆலோசகராக ஆலன் இருந்தார் . அந்த கன்சல்டன்சி லண்டன் பொருளாதார கல்லூரிக்கு ஆலோசனை வழங்கியது. லண்டன் பொருளாதார கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் ஆலன் பங்கேற்றிருந்த நேரத்தில் கடாபியின் மகன் பெரிதும் போற்றப்பட்ட தனது பிஎச்டி பட்டத்தை அங்கிருந்து பெற்றார்.
2011 ல், கடாஃபியின் ஆட்சி வெளிப்படையாக தள்ளாடியபோது பிரிட்டன் அமைதியாக அவரை கைவிட்டது. பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டன. ஆனால் திரிபோலி வீழ்ந்த போது 2004 சந்திப்பு குறித்த ஆவணங்களை தேடி கைப்பற்றும்படி அங்கிருந்த நேட்டோவின் சிறப்புப் படைகளுக்கு உத்தரவிட யாருக்கும் தோன்றவில்லை. எம்ஐ6க்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அங்கு முதலில் போய்ச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பகம் ஆலனின் கடிதத்தை கண்டு பிடித்து பத்திரிகையாளர்களிடம் கொடுத்தது.
இன்னும் மோசம் என்னவென்றால், பெல்ஹாஜ் சிறையிலிருந்து வெளி வந்து இப்போது த்ரிபோலி இராணுவக் குழுவின் தலைவராக இருக்கிறார். அதை விட மோசம், அவரது பழைய எதிரி கௌசா, கடாபி வீழ்ந்த போது புத்திசாலித்தனமாக கட்சி மாறியிருந்தார். அவர் நடந்தவற்றில் பிரிட்டிஷாரின் பங்கு பற்றிய பெல்ஹாஜின் சந்தேகங்களை உறுதி செய்தார்.
பெல்ஹாஜ் தனது மனக் குறைகளை மூடி வைத்துக் கொள்பவராக இல்லாமல் ‘சித்திரவதைக்கு உடந்தை’, ‘மக்கள் பொறுப்பில் முறைகேடு’ என்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஆலன் மீதும் பிரிட்டிஷ் அரசு மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வாயை மூட பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 10 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டு (சுமார் 8 கோடி ரூபாய்கள்) வழங்கியதை வாங்க மறுத்து விட்டிருக்கிறார். பீதி மற்றும் குளறுபடிகள் நிறைந்த இந்த கதை ஸ்மைலியின் மக்களை (1979ல் வெளியான உளவாளி நாவல்) தோற்கடித்து விடுகிறது.
எம்ஐ6 வழக்கம் போல, ‘அமைச்சரவை அங்கீகரித்த அரசு கொள்கையை மட்டுமே தான் பின்பற்றுவதாக’ சொல்கிறது. அந்த கால கட்டத்தில் இதனுடன் தொடர்புள்ள அமைச்சர்கள் வெளியுறவுத்துறை செயலர் ஜாக் ஸ்ட்ரா மற்றும் பிரதம மந்திரி டோனி பிளேயர். அவர்களுக்கு 2004-ல் கடாபியின் தலைகீழ் மன மாற்றம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் முழுமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். பெல்ஹாஜின் கடத்தல் மற்றும் சித்திரவதை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று மறுக்கிறார்கள். அந்த நிகழ்வும் மெக்ராஹியின் விடுதலையும் எண்ணெய் வர்த்தகத்துக்கான (பெட்ரோல்) பதில் உதவி என்பதை மறுத்தார்கள். ‘அமைச்சர்களுக்கு பொறுப்பு இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது’ என்று புகார் சொல்லும் குரலில் சொல்கிறார்கள்.
‘அவரது எஜமானர்கள் மிகத் தீவிரமாக விரும்பியதைத்தான் அவர் செய்தார்’ என்று ஆலனை நியாயப்படுத்தலாம்.
2004-ல் டோனி பிளேயர் வாஷிங்டனுக்கு அடிமைப்பட்டிருந்தார். போராடும் இஸ்லாமுக்கு எதிரான ஜார்ஜ் புஷ்ஷின் சிலுவைப் போரில் தன் பங்குக்கு ஒரு வெற்றியை காட்ட தவித்துக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் சிஐஏயின் சிறை பிடிக்கும் விமானங்கள் முஸ்லீம் கைதிகளை தரையில் கட்டி வைத்துக் கொண்டு உலகை வலம் வந்து கொண்டிருந்தன. அத்தகைய சூழலில் கருணை பொருந்திய ஒரு சர்வாதிகாரிக்கு பரிசாக இன்னொரு தம்பதியை பலி கொடுப்பது பெரிய விஷயமாக தோன்றவில்லை. இதைப் பற்றிய விபரங்களை ஜாக் ஸ்ட்ராவிடம் ஆலன் தெரிவித்தாரா என்பதை அவரோ ஜாக் ஸ்ட்ராவோ இதுவரை சொல்லவில்லை. ஆலன் எம்ஐ6-ன் தலைவராகும் முயற்சியை ஜாக் ஸ்ட்ரா ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போதைய வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், இதைப் பற்றி கருத்து சொல்ல மறுப்பதற்கு பெல்ஹாஜின் நீதி மன்ற வழக்கை ஒரு சாக்காக பிடித்துக் கொண்டார். ‘மொத்த விஷயமும் நீதி மன்றத்தில் இருக்கிறது’ என்று பெரிய புன்னகையுடன் அவர் சொன்னார். அவர் கருத்து சொல்வது வழக்கை பாதிக்கும் என்று என்று கருதுவது, வழக்கு வெளிப்படையாக நடத்தப்படும் என்ற ஊகத்தில்தான். ஆனால், இது போன்ற வழக்குகளை ரகசியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுகிறது என்கிறது அமைச்சரவை.
புதை மணல் இன்னமும் கெட்டியாகிறது. பிப்ரவரி 22 அன்று, லண்டனில் இருக்கும் மேல் முறையீடு நீதிமன்றம் (பிரபுக்கள் சபை) “பயங்கரவாதத்தின் மீதான போர்” தன்னையும் வசியப்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தியது. இணையத்தில் “பயங்கரவாதம்” பற்றிய தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட லண்டன் பல்கலைக்கழக மாணவர் முகமது குல்லுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அது உறுதி செய்தது. பரிதாபத்துக்குரிய, தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த முகமது குல்க்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்ததோடு நின்று விடாத மாண்புமிகு பிரபுக்கள், பயங்கரவாதத்தின் மீதான போர் பற்றிய அரசியல் கோட்பாட்டை விவரிக்கவும் செய்தார்கள்.
“பயங்கரவாதத்தின் மீதான போர் குல் போன்றவர்கள் மீது மட்டும் நடத்தப்படவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் ஆயுதப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கும் கிளர்ச்சியாளர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். அத்தகைய நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களுக்காக அந்த நாட்டு அரசாங்கத்தை பாதிப்பதாக இருந்தால் அவை பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பங்காகவே கருதப்பட வேண்டும்”. பயங்கரவாதம் என்பது வன்முறை செயல்கள் மட்டும் இல்லை. ‘அரசியல் அல்லது மத அல்லது இன அல்லது சித்தாந்த வேறுபாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முன் வைக்கப்படும் எந்த ஒரு அச்சுறுத்தலும் அதன் வரையறையில் அடங்கும். இந்த அச்சுறுத்தல்கள் “ஒரு மின்னணு கட்டமைப்புக்கு (இணையம்) தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது’ ‘பொது சுகாதாரம் அல்லது பொது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது’ போன்ற செயல்களையும் உள்ளடக்கியவை.
அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையில் எந்த ஒரு அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மாற்றுக் கருத்தாளர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் ராணுவத்தை தாக்குபவர்கள் யாரையும் பயங்கரவாதி என்ற வரையறையிலிருந்து ஒதுக்க முடியாது என்று தோன்றுவதாக பிரபுக்கள் குறிப்பிட்டனர். குர்துகள், கோசோவர்கள், பெங்காசியர்கள், திபெத்தியர்கள், இரானிய போராளிகள், இன்றைய சிரிய எதிர்க் கட்சியினர் அனைவருக்கும் அதுதான் தலைவிதி. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான்.
இது முட்டாள்தனமானது. முகமது குல்லின் பின் லாடன் பற்றிய பகற்கனவுகள் கடாபியை எதிர்த்த பெல்ஹாஜின் எதிர்ப்புக்கு எந்த வகையிலும் ஈடானவை அல்ல. ஆனால் இரண்டு பேருமே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கையாட்களால் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்கள்.
அவர்களுடன் கூடவே உலகெங்கும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக போராடும் அந்த அரசுகளின் ‘ஆயுதப் படைகளுக்கு’ தீங்கு விளைவிக்க எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான மக்கள் இந்த சட்ட புதைகுழியில் சிக்கியிருக்கிறார்கள். போராடும் ஒவ்வொரு மாணவரும் பயங்கரவாதி, ஒவ்வொரு இணைய ஹேக்கரும், டீக்கடையில் மாற்றுக் கருத்து பேசுபவரும் சுதந்திர போராட்ட வீரர் அல்லது மற்றும் கிளர்ச்சி படைத் தலைவர். பயங்கரவாதத்தின் மீதான போர் தான் கை வைக்கும் அனைத்தையும் கெடுக்கிறது. நாடாளுமன்றம் ஒடுக்குமுறைக்கான அரிவாளின் ஒவ்வொரு திருகுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
சென்னை வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போலி மோதல் கொலை, திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த திருட்டு ஆகிய இரண்டு சம்பவங்களுக்குப் பின், வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் கூலித் தொழிலாளர்கள், தமிழகத்தில் உயர் கல்வி படித்துவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது, தமிழக போலீசு. சென்னை, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதைத் தமிழக போலீசு அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர்.
வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிரடியாகப் புகுந்தும், அவர்களைத் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டிவந்தும் இப்பதிவினை போலீசார் நடத்தி வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்களின் பிறந்த ஊர், தொழில், தற்போதைய முகவரி, கைபேசி எண்கள் ஆகியவற்றோடு, அவர்களின் விரல் ரேகைகளும் போலீசாரால் வலுக்கட்டாயமாகப் பதிவு செய்யப்படுகின்றன. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தற்பொழுது கணக்குப் பாடம் நடைபெறுகிறதோ இல்லையோ, வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசும், போலீசும் தயாரித்து வரும் இந்த “சந்தேக லிஸ்டு” வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை அவர்களது புகைப்படம், கைபேசி எண்களோடு பெற்று அருகிலுள்ள போலீசு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர போலீசு வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் போலீசு எச்சரித்துள்ளது.
ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசின் இந்த உத்தரவு. இது, குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; இனப் பாகுபாடு மற்றும் வர்க்கப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த உத்தரவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.
எனினும், தமிழகத்தில் நடந்துவரும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி, தனது இந்தப் பீதியூட்டும் உத்தரவை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக போலீசு. பாதுகாப்பான நகர வாழ்க்கைக்கு இது போன்ற கணக்கெடுப்பு அவசியமென்றும், மும்பய், டெல்லி, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வசிப்போர் பற்றிய விவரங்களைப் போலீசிடம் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கெனவே அந்நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வரும்பொழுது, தமிழகத்தில் இது காலதாமதமாகத் தொடங்கப்படுகிறதென அலுத்துக் கொள்கிறது, தமிழக போலீசு. அதாவது, சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளையடுத்து, வாடகை வீட்டில் குடியிருப்போரைக் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசு வரவில்லை; அதன் மனதில் ஏற்கெனவே தயாராக இருந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தக் கொள்ளைகளை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதுதான் இப்பதிவின் பின்னணியிலுள்ள உண்மை.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் நக்சலைட்டுகளும் கலந்து வருகிறார்கள் என ஏற்கெனவே பீதி கிளப்பி வந்த போலீசு, அவர்களைப் பாகுபடுத்திப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இந்தக் கொள்ளைச் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக போலீசு பயன்படுத்தி வருகிறது என்பதுதான் இங்கு நமது கவனத்திற்குரியது.
தமிழகத்தில் போலீசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எந்தப் பஞ்சமும் கிடையாது. தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது என்ற பெயரில் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் “மெட்டல் டிடெக்டர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா” கண்காணிப்பு; இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டால், வாகனங்களைத் தடுத்து நிறுத்திப் பரிசோதிக்கும் நேரடிக் கண்காணிப்பு; பகல்பொழுதுகளில் தெருவுக்குத்தெரு நடத்தப்படும் வாகனப் பரிசோதனை என்ற கண்காணிப்பு; இவை ஒருபுறமிருக்க, தெருவில் குடிமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகப் புறக்காவல் நிலையங்கள் புதிதுபுதிதாகத் திறக்கப்படுவதோடு, பல்வேறு தெருச் சந்திப்புகளில் செக்போஸ்டுகளும், சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்படுகின்றன. போலீசின் “இன்ஃபார்மர்களாக’’ப் பணியாற்றுவதற்காகவே போலீசு நண்பர்கள் குழு, போலீசு பாய்ஸ் கிளப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டப்படுகின்றன. இப்படி தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வரும் போலீசின் கண்காணிப்பு இன்று வீடு வரை நீள்கிறது.
குடும்ப அட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை மூலம் குடிமக்கள் பற்றிய தேவையான விவரங்களை அரசு பெற்று வந்தாலும், மேலும் மேலும் குடிமக்களின் அந்தரங்க விசயங்களை அறிந்து கொள்ளுவதற்கும், அவற்றைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கும் அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. தமிழகத்தில் பயின்று வரும் வடமாநில மாணவர்கள் பற்றி தற்பொழுது தமிழக போலீசு நடத்தத் துணிந்திருக்கும் இந்தக் கணக்கெடுப்பை, மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே எடுத்து வருவதாகக் கூறுகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். மைய அரசோ தேசிய அடையாள அட்டைத் திட்டம் மூலம் குடிமக்கள் அனைவரையும் தமது முழுக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முயற்சியினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேசிய அடையாள அட்டை (ஆதார்) திட்டம், குடிமக்களின் பெயர், வயது, முகவரி போன்ற வெளிப்படையான விவரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவரது வங்கி இருப்பு தொடங்கி அவருக்கு உள்ள நோய் வரை அனைத்து அந்தரங்கமான தகவல்களையும் இந்த ஆதார் அட்டையின் மூலம் அரசு நோட்டம் விடுகிறது.
தமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளையைச் சாக்கிட்டு தமிழக போலீசு மேற்சொன்ன கணக்கெடுப்பு கண்காணிப்பை நடத்தி வருகிறதென்றால், மைய அரசு கார்கில் போரைச் சாக்காக வைத்து ஆதார் திட்டத்தைக் கொண்டுவந்தது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கார்கில் போரை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி, தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென ஆலோசனை கூறியது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பை மறுசீரமைப்பது என்ற அறிக்கையைத் தயாரித்தது. அதில் வங்கதேச முசுலீம்கள் ஊடுருவலை மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் காட்டி, தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை நாடெங்கும் கொண்டு வரும் முடிவை எடுத்தது. இதற்கு ஏற்ப, குடிமக்களின் அந்தரங்க விசயங்களையும் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. பா.ஜ.க.விற்குப் பின் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு, 2008 ஆம் ஆண்டு மும்பயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைச் சாக்காகக் காட்டி, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு தனியான ஆணையத்தை அமைத்தது.
‘‘தேசிய அடையாள அட்டை இருந்தால்தான் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சமையல் எரிவாயு உருளை கிடைக்கும்; அரசு அறிவிக்கும் சமூக நலத் திட்டங்களைப் பெற முடியும்” என அரசு அடுத்தடுத்து போகிறபோக்கில் அறிவிப்பதன் மூலம் இத்திட்டத்தில் பொதுமக்கள் தாமே முன்வந்து பதிவு செய்துகொள்வதைக் கொல்லைப்புறவழியில் கட்டாயமாக்கி வருகிறது. ஆதார் அட்டை தனி மனித உரிமைகள், அந்தரங்கங்களை மீறுகிறது என மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் சுட்டிக் காட்டினாலும், அந்த எச்சரிக்கையை நடுத்தர வர்க்கம்கூடப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏதாவதொரு அட்டை இருந்தால்தான் தமது அடையாளத்தை அரசிடம் உறுதிப்படுத்த முடியும் என்ற நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டிருப்பதால், பொது மக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து, அவர்களைக் கண்காணிக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றித் தமிழகப் போலீசு நடத்திவரும் பதிவின்பொழுது அளிக்கப்படும் புகைப்படங்களும், கைபேசி விவரங்களும் போலீசாரால் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது என்ற கேள்விக்கு, “எங்களை நம்புங்கள்” என யோக்கியனைப் போலப் பதில் அளித்திருக்கிறது, சென்னை போலீசு. சென்னை போலீசாரால் பதியப்படும் வழக்குகளுள் 60 சதவீத வழக்குகள் பொய்யானவை என மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள விவரத்தோடு ஒப்பிட்டால், போலீசின் நேர்மையும், நாணயமும் நம்மைப் பீதியடையச் செய்துவிடும். சென்னை வேளச்சேரியில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஜய்குமார் வங்கிகளை நோட்டம் விடுவது போல போலீசாரால் வெளியிடப்பட்ட காட்சியின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
‘‘போலீசு கேட்கும் விவரங்களை அளிப்பதற்குச் சமூக விரோதிகள்தான் அச்சப்பட வேண்டும். சட்டப்படி கண்ணியமாக நடந்துகொள்ளும் பொதுமக்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்ற எதிர்க்கேள்வியின் மூலம் சாதாரண பொதுமக்களை சமாதானப்படுத்த முயலுகிறது, போலீசு. சமூக விரோதி யார், சட்டப்படி நடக்கும் குடிமகன் யார் என்ற கேள்விக்கு அரசிடம், போலீசிடம் இருக்கும் அளவுகோலே வேறானது. ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாகச் சட்டப்படி நடக்கும் குடிமக்களாகக் கருதப்பட்ட கூடங்குளம் இடிந்த கரைபகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அணு உலையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடத் தொடங்கிய பிறகு, அவர்களைச் சமூக விரோதிகளாகக் காட்ட அரசும் போலீசும் தொடர்ந்து முயன்று வருகின்றன. கோவை பகுதியைச் சேர்ந்த சிறு தொழில் அதிபர்கள் மின்வெட்டைக் கண்டித்துப் போராடியபொழுது, தமிழக போலீசு அவர்களை லத்தியால் அடித்துத் துரத்தியது. கண்ணியமான குடிமக்கள் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுபவர்களாக மாறியது அந்தப் போராட்ட தருணத்தில்தான்.
ஆங்கிலேய காலனிய ஆட்சியின்பொழுது தம்மை எதிர்த்துப் போராடிய பழங்குடி இன மக்களைக் குற்றப் பரம்பரை சாதியாக முத்திரை குத்திய வெள்ளை துரைமார்கள், அம்மக்களை இரவு நேரங்களில் போலீசு நிலையங்களில் அடைத்து வைத்துக் கண்காணித்தார்கள். தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இன்றைய மறுகாலனிய கட்டத்தில், இந்திய மக்களைக் கணினி வழியாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர், பழுப்பு நிற துரைமார்கள். கண்காணிக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், இரண்டு துரைமார்களுக்கும் பொதுமக்களைப் பற்றிய பார்வை ஒன்றுதான்.
மைய அரசு சமீபத்தில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் வரும் மைய அரசின் உளவுத் துறைக்கு, சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்யும் அதிகாரத்தையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகக் கூறி, ஜெயா, மோடி உள்ளிட்டோர் எதிர்த்து சவுண்டு விட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் சந்தேக லிஸ்டில் கொண்டு வரப்படும் நபரைக் கைது செய்யும் அதிகாரம் மாநில போலீசிடம் இருக்க வேண்டுமா, அல்லது மைய உளவுத் துறையிடம் இருக்க வேண்டுமா என்பது குறித்துதான் காங்கிரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடக்கிறதேயொழிய, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிப் போலி கம்யூனிஸ்டுகள்கூட அக்கறை கொள்ளவில்லை.
அரசு நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் தமது வாழ்வாதாரங்களை இழந்துவரும் விவசாயிகள், தொழிலாளிகள், வணிகர்கள், சிறுதொழில் அதிபர்கள் என ஆகப் பெரும்பான்மையான மக்கள் அரசை எதிர்த்துப் போராடத் தயாராகிவரும் சூழ்நிலையில்தான் அரசு அனைத்துக் குடிமக்களையும் தனது முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரத் தயாராகிறது. தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றையெல்லாம் வேண்டாத சதைப் பிண்டமாக, தனக்குத் தொந்தரவு தரும் விசயமாகப் பார்க்கிறது. மறுகாலனியாக்கம் சட்டத்தின் ஆட்சி என்ற இடத்தில் போலீசின் ஆட்சியைக் கொண்டு வருகிறது. மக்களின் சட்டபூர்வ போராட்டங்களைக்கூட, அது துப்பாக்கி முனையில் தீர்த்துவிடத்தான் முயலுகிறது.
வட மாநிலத்திலிருந்து வரும் கூலித் தொழிலாளர்கள், வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றிய விவரங்களையெல்லாம் போலீசிடம் பதிவு செய்ய வேண்டும்; வட மாநில மாணவர்கள் பற்றிய விவரங்களைக் கல்லூரி நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும்; ஆதார் அட்டையை அல்லது அரசால் தரப்படும் வேறு ஏதாவதொரு அட்டையை, நாய்க்கு மாட்டிவிடும் லைசென்சு போன்று எப்போதும் கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டபூர்வமாகவே ஒரு பாசிச ஆட்சி திணிக்கப்பட்டு வருவதன் அடையாளங்கள்தான்.
வாய்ப்பு கிடைத்தால், கொலை கொள்ளை, தீவிரவாதம் போன்ற குற்றச் செயல்களைக் காட்டி பொதுமக்களை இந்தக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்; அதற்கு வாய்ப்பில்லை இல்லாதபொழுது, அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் சமூக நலத் திட்டங்கள் கிடைக்கும்; ரேஷனில் அரிசியும், கோதுமையும் கிடைக்கும் எனப் பொய்யான காரணங்களைச் சொல்லி மக்களைத் தமது கண்காணிப்பிற்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.
சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்; அவர்களைப் போலி மோதலில் சுட்டுக்கூடக் கொல்லலாம் என்றபடி அரசு பாசிசமயமாகிவரும்பொழுது, இந்த அடையாள அட்டைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது கொட்டடியில் கொல்லப்பட்ட பிணங்களை அடையாளப்படுத்ததான் பயன்படும். மற்றபடி, தீவிரவாதத்தையும் கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்களையும் தடுக்கத்தான் இந்தக் கண்காணிப்பு தேவைப்படுகிறது என இந்திய ஆளுங்கும்பலும் போலீசும் சொல்வதெல்லாம் வெறும் பம்மாத்துதான். இதனைப் புரிந்துகொள்ள தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் யார் மீது ஏவப்பட்டது என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
‘தி கிட்’ (சிறுவன்) என்ற பட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். 1920ஆம் ஆண்டு. சார்லி சாப்லின் பட உலகில் நிலைத்துவிட்ட நாட்கள்.
ஒரு நாள் ஏழு வயது சதுரங்க (செஸ்) நிபுணன் ஸ்டூடியோ வந்திருந்தான். ஒரே நேரத்தில் 20 பேருடன் ஆடப்போகிறான். கலிஃபோர்னியா சதுரங்க நிபுணர் டாக்டர் கிரிபித்சும் அன்று ஆடுகிறார்.
அவன் பெயர் சாமுவேல் ரெஷவ்ஸ்கி. மெலிந்த, வெளுத்த, தீவிரமான முகம். பெரிய கண்கள். யாரைச் சந்தித்தாலும் சவால் விடும் கோபமான பார்வை. சந்திப்பதற்கு முன்பே அவனைப் பற்றி எச்சரித்து விட்டார்கள். திடீரென்று உணர்ச்சிவசப்படுவான், வணக்கம் சொல்லவும் மாட்டான் என்றார்கள்.
சாப்லினுக்கு அறிமுகப்படுத்தினார்கள். சிறுவன் அமைதியாக சாப்லினை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அவரோ மும்முரமாகத் தொகுப்பு வேலையில் இருந்தார்.
சில நிமிடங்கள் கழிந்தன, ‘உனக்கு பீச் பழங்கள் பிடிக்குமா?’ என்று சாப்லின் கேட்டார். ‘ஓ’ என்றான் அவன். தோட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சாப்லின் தனக்கும் ஒன்று வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.
பதினைந்தே நிமிடங்களில் அவன் பழங்களோடு திரும்பினான்.
இருவருக்கும் அப்போதே நட்பு பூத்தது.
”உங்களுக்கு செஸ் ஆடத் தெரியுமா?”
”ஆடத் தெரியாதே!”
”நான் கற்றுத் தருகிறேன். இன்றிரவு நான் ஆடுகிற ஆட்டத்தைப் பார்க்க வாருங்கள். இருபது பேரோடு ஒரே சமயத்தில் ஆடப் போகிறேன்” –பெருமிதம் அவன் குரலில் ஓங்கியிருந்தது.
இரவு-
சாப்லின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. சிறுவனையே ஆழ்ந்து கவனித்தார். அற்புதமான ஆட்டம் போடும் அவனது வேகம் அசரவைத்தது. அதேசமயம் சாப்லினது மனத்தை அது கலக்கிவிட்டது. ஆழ்ந்து கவனிக்கும் சிறுவனின் சின்ன முகம் ஒரு நொடி குப்பென்று சிவந்தது. அடுத்த நொடி வடிந்து வெளுத்தது. தனது திறமைக்கு அவன் ஆரோக்கியத்தையே விலையாகக் கொடுத்தான். தன்னையே அழித்துக்கொண்டு, அதையே விற்றுக் காசாக்கிப் பிழைக்கும் ஒரு கலைஞனாக அச்சிறுவனைப் பார்த்தார் சாப்லின். எவ்வளவு அவலமான, கொடூரமான வாழ்க்கை!
♦
சார்லி-சாப்ளின்
சார்லி சாப்லினுக்குள் அவர் சாகும் வரை விழித்துக் கொண்டிருந்த ஒரே உணர்வு – இந்த மனிதத்தன்மை தான். வாழ்க்கையின் அடித்தட்டில் கஷ்டப்பட்ட பல லட்சக்கணக்கான உலக மக்களின் மீது அவர் அன்பு செலுத்திய காரணமும் இதுதான்.
ஒருவேளைச் சோறுக்கே தவித்த ஐரிஷ் இனக் குடும்பத்தில் வாழ்ந்து பின்னாளில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் சாப்லின். அவரே ஒரு முறை சொன்னது போல பணத்தோடு வாழப் பழகினாரே தவிர, பணக்காரனாக வாழப்பழகவில்லை. காரணம் – தனது பழைய லண்டன் நாட்களின் அடிவேரை மறக்கவில்லை; மறக்க விரும்பியதுமில்லை.
சாப்லின் பிறந்து வளர்ந்தது கலைக் குடும்பத்தில். தாய், தந்தை இருவரும் மேடை நடிகர்கள். அவர் தேர்ந்தெடுத்ததும் நடிப்புத்துறை. அதிலும் நகைச்சுவை நடிகனாகவே பயிற்சி பெற்றார். அப்போதிருந்து தானே எடுத்த சினிமாப் படங்கள் வரை மிகச் சாதாரண ஏழையின் வாழ்க்கையையே எடுத்துச் சொன்னார். பணக்காரர்களின் போலித்தனமான, கேடுகெட்ட, அற்ப வாழ்க்கையை எள்ளி நகையாடினார்.
சாப்லின் அமெரிக்க ஹாலிவுட் சினிமா நடிப்புக்கு வருவதற்கு முன் லண்டனில் வாழ்ந்தார். தாய் ஒருபக்கம், அண்ணன் ஒருபக்கம், அவர் ஒருபக்கம் என்று வேலைக்குப் போய்விடுவார்கள். சுற்றிலும் உள்ள உலகத்தை அனுபவித்து உணர்ந்து அறியவேண்டிய சின்னஞ்சிறு வயதிலேயே பல வேலைகளைச் செய்தார் சாப்லின். சிறுவியாபாரி, கண்ணாடித் தொழிலில் தொழிலாளி, பழைய துணி விற்பனையாளர், ஓட்டல் சர்வர், சாலை போடுபவர், குத்துச் சண்டை விளையாட்டு நடுவர், ஓவியர், நர்ஸ், துப்புரவாளர், ரொட்டிக்கிடங்குத் தொழிலாளி, ரொட்டி சுடும் சமையல்காரர், பிணங்களை அகற்றும் கூலி, துணை நடிகர், மரவேலை இப்படிப் பல வேலைகளில் நுழைந்து வெளியே வந்தவர் அவர்.
குடிகாரத் தந்தை; வேலைதேடி அலையும் அண்ணன்; முதலில் நடிப்பு, பிறகு தையல் மிஷினில் கூலி வேலைசெய்து, அதற்கும் பிறகு கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிய தாய் – இப்படிப்பட்ட வீட்டுச்சூழல்.
படிப்பு – அப்படி ஒன்று நடந்தது கொஞ்சகாலம். அவரும், அண்ணனும் அனாதை விடுதியில் படித்தார்கள். அவர்களுக்கான செலவுப் பணத்தை ஈடுகட்ட அதே நிர்வாகத்தில் அவரது தாய் உழைத்தாள். எப்போதோ ஒரு நாள்தான் தாயைப் பார்க்கமுடியும். தவறே செய்யாவிட்டாலும்கூட நிர்வாகிகள் கொடூரமாகச் சவுக்கடி கொடுத்துத் தண்டிப்பார்கள். தாயின் அரவணைப்புக்கும், பாசத்துக்கும் ஏங்கித் துடித்து வளர்ந்தார்கள் சாப்லினும் அவரது அண்ணனும்.
பின் அங்கிருந்து வெளியேறி தாயின் ஊழைப்பில் காலந்தள்ளினார் சாப்லின். அண்ணன் கப்பற் படைக்குச் சென்றுவிட்டான். ஒருவேளைச் சோறுகூட இல்லாமல் தவிப்பார். அப்படியே பழகி இரவு மட்டும் தாய் கொடுக்கும் பணத்தில் வெளிச்சாப்பாடு வாங்கிவந்து இருவரும் சாப்பிடுவார்கள். அரைப்பட்டினியும், குறைப்பட்டினியும், கடின உழைப்பும், நிம்மதியற்ற வாழ்க்கையும் தாயின் மூளையைச் சிதைத்தன. பிறகு சாகும்வரை அரைப்பைத்திய நிலையில் மருத்துவமனையில் வாழவைக்கப்பட்டாள்.
ஆரம்பகால துயரங்கள், சித்திரவதைகள் சாப்லினின் மனதில் ஆழ்ந்த வடுக்களாகிவிட்டன. ”ஒரே ஒரு குவளை டீ கொடுத்திருந்தால் நான் குணம்ஆகி இருப்பேன்” என்று அவரது தாய் கதறியது இறுதிவரை மறக்கவேயில்லை.
சாப்லின் என்ற ஏழைப்பங்காளனின் உலகப்பார்வை இங்கிருந்துதான் தொடங்கியது. பிறகு பணம் வந்தபிறகு, எல்லாவற்றையும் மறந்துவிட்டுச் சுயநலத்தோடு வாழாமல் ஏன், எப்படி என்று கேள்விகேட்டுக் கொண்டார். தனக்கோ தன் குடும்பத்துக்கோ மட்டும் இந்நிலை இல்லை, சமூகத்தில் அடித்தட்டு ஒன்று உண்டு. அவர்களே சமூகத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொண்டார். வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையைச் சொல்லும் கலையே சிறந்தது, இதை மாற்றக்கூடிய போராட்டமே மக்களுக்கானது, மற்றவை மக்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டார்.
இந்த கண்ணோட்டம் கலைஞருக்கு அவசியம் என்பதை சககலைஞரிடமிருந்து கற்றுக் கொண்டார். தாயிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டார்.
♦
தொளதொளத்த கால்சட்டை, இறுக்கமான கோட்டு, கால்களில் பெரிய பூட்சுகள், கையில் நடைக்கம்பு, முகத்தில் ஒப்பனை, பல்குச்சி அளவுக்கு மீசை, கோமாளி நடை – இப்படி ஒரு நாடோடித் தோற்றம் – – இதுதான் சார்லி சாப்லின். திரையில் அந்த உருவம் தோன்றிவிட்டால் போதும் – அரங்கத்தில் சிரிப்பு தொடங்கி விடும்.
இந்த நாடோடி உலகம் முழுவதும் மக்களைச் சிரிக்க வைத்தான். இந்திய, தமிழக மக்களுக்கும் அவனை ஓரளவு தெரியும். ஊமைப்படக் கோமாளி நடிகர் சார்லி சாப்லின்.
இன்றுள்ள அளவு தொழில்நுட்பம் வராத காலம் –ஒலி வசதி கூட இல்லை – வண்ணங்களில் எடுக்கமுடியாது; கறுப்பு – வெளுப்பு மட்டும்தான். எங்கு வேண்டுமானாலும் காமெராவை நகர்த்தக்கூடிய வசதிகள், சாதனங்கள் கிடையாது. பலப்பல வரம்புகள். இவ்வளவையும் மீறி, பேச்சு இல்லாத குறை கொஞ்சம் கூடத் தெரியாதபடி ஒரு மணி, இரண்டு மணிநேரம் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும் அற்புதத்தைத் திரையில் படைத்தார் சாப்லின். உலகில் தனக்கு முன்னால் நகைச்சுவைக் கலையை மனித நேயத்துடன் நடித்தவர்களின், கதைகள் எழுதியவர்களின் பாரம்பரியத்திலிருந்து அள்ளி எடுத்துக் கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா, தாமஸ் மான், என்று எண்ணற்ற எழுத்தாளர்களிடமிருந்து, நிஜின்ஸ்கிபோன்ற நாட்டியக் கலைஞரிடமிருந்து, ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற பாட்டாளிவர்க்க இசை மேதையிடமிருந்து, ஐன்ஸ்டீன்போன்ற விஞ்ஞானிகளிடமிருந்து, ஐஸன்ஸ்டீன், டான்லெனோ, மார்செலின், டன்வில், மார்க்ஷெரீடன், பிராங்க் காயின், ஜார்மோ போன்ற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.
சாப்லின் படங்களை வேகமாக ஒரு நோட்டம் விட்டால் வாழ்க்கை வீச்சை அதில் பார்க்கலாம்.
*1914 கீஸ்டோன் சினிமாக் கம்பெனியில் தயாரித்த ‘திநியூஜானிடர்‘:(துப்புரவு வேலையாள்): இந்தப் படத்தில் அந்தத் தொழிலாளி ஏதோ தவறு செய்துவிட மேனேபஜர் வேலையைவிட்டு நிறுத்திவிடுகிறேன் என்று கத்துகிறான். ‘ஐயா எனக்குப் பெரிய குடும்பம். சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு. வேலையவிட்டு நிறுத்திடாதீங்கய்யா என்று அவன் கெச்சுவான். இப்படிச் சிறு சிறு சம்பவங்களாக அவனது வாழ்க்கை.
*1917 ஃபர்ஸ்ட் நேசனல் கம்பெனியில் தயாரித்த ‘ஒரு நாயின்வாழ்க்கை‘: ஏழையின் வாழ்க்கையை நாயின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு நகைச்சுவைக் காட்சிகள் வரும், எச்சில் சோறு தேடப்போய் நாய்ச்சண்டையில் ஒரு நாயைக் காப்பாற்றுகிறான் நாடோடி; பிறகு அந்த நாய் நட்பாகிறது. இப்படியாக அவனது ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை.
*1921 – திகிட்: குப்பைத் தொட்டியருகே ஒரு குழந்தை அனாதையாக வீசப்படுகிறது. நாடோடி எடுத்து வளர்க்கிறான். அதை வளர்க்க அவன் படும்பாடு. வளர்ந்து சிறுவனானதும் அவன் பெரிய பங்களாக்களின் கண்ணாடிக் கதவுகளை உடைப்பான். நாடோடி சென்று செப்பம் செய்து சம்பாதிப்பான். இருவரும் நடுவே எதிரியாக வரும் போலீசைச் சமாளிப்பார்கள்.
*’திசர்க்கஸ்‘ : சர்க்கஸ் கோமாளியின் அவல வாழ்க்கை. அவர் மிக உயர்வாக மதித்த மார்செலின் என்ற அற்புதமான மேடை நகைச்சுவை நடிகர் பிழைப்புக்காக பல கோமாளிகளோடு ஒரு கோமாளியாக சர்க்கஸ் கூடாரத்தில் வாழ்வதை நேரில் பார்த்தார். அவரது நசிந்த வாழ்க்கையே இந்த திரைப்படம் என்று சொல்லலாம். ஒரு கலைஞன் எப்படியெல்லாம் துன்பப்படுகிறான் என்பதை சர்க்கஸ் கூடாரத்தில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகக் காட்டுகிறார். (ராஜ்கபூரின் ‘மேரா நாம் ஜோக்கரி’ன் கடைசிப் பகுதி சாப்லினை மோசமாகக் காப்பியடித்த படமாகும்.)
*’திஐடில்கிளாஸ்‘ (சோம்பேறிவர்க்கம்): நாடோடி கோல்ஃப் ஆட்டம் ஆடுகிறான். அங்கு நடக்கும் விருந்தில் அழகிய பெண் ஒருத்தியைச் சந்தித்துப் பழகுகிறான்; அதற்காகவே கனவான்களிடம் அடி உதை வாங்கி வெளியே ஓடுகிறான்; மறுபடி பயணம் தொடருகிறான். பணக்காரச் சோம்பேறி வர்க்கத்தை, அந்த கேவலமான வாழ்க்கையை அலசுகிறார் சாப்லின்.
*’திசிடிலைட்ஸ்‘ (நகரவிளக்குகள்) 1931: இதன் கரு உருவானதே விசித்திரமான கதை. பணக்காரனின் கிளப்பில் இரண்டுபேர் ‘மனித உணர்வுகள் நிலையில்லாதது. அதாவது மாறிக்கொண்டே இருக்கும்’ என்று வாதிட்டார்கள். ஒருநாள் சாதாதாரண ஏழையைக் கொண்டுபோய் தங்கள் பங்களாவில் மது, மாது, பாட்டு நடனம் எல்லாம் கொடுத்தார்கள்; அவன் மயங்கி விழுந்ததும் மறுபடி அவன் வாழ்ந்த நடைபாதையில் கொண்டு போட்டு விடுகிறார்கள். தூங்கி எழுந்த அவன் முந்தின இரவு நடந்தது கனவா, நனவா என்று புரியாமல் விழிக்கிறான். இந்த பணக்காரர்களின் குரூரமான வக்கிரப் புத்தியைச் சந்தித்த சாப்லின் இதிலிருந்து தனக்கான கருவை உருவாக்கினார். கிளப்பில் விவாதித்த சோம்பேறியின் பிரதிநிதியாக ஒரு பணக்காரனைக் குடிகாரனாக்கி, அவன் போதையில் இருக்கும் போது நாடோடியை இழுத்துக் கொண்டு போய் நண்பன் என்று சீராட்டுவான். மறுநாள் காலை போதை தெளிந்ததும் ‘யார்டா நீ’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். இந்த அதிர்ச்சியிலிருந்து நாடோடி மீள்வதற்க்குள்ளாக மறுபடி வேறொரு நாள் அக்குடிகாரன் அவனைப் பார்த்து நட்பு கொண்டாடுவான்.
♦
ஏழ்மை, வறுமை பற்றி சாப்லின் ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்வதற்கு பல காரணங்கள் தேடினார்கள். சாமர்செட்மாம் என்ற அமெரிக்க எழுத்தாளர் ”அவரது பழைய நாட்களை விரும்புகிறார், இளவயதில் போராடிய நாட்களின் சுதந்திரத்தை விரும்புகிறார், அதனால் தான் அவரது நகைச்சுவை இப்படி இருக்கிறது” என்றார். அதற்குப் பதில் சொன்ன சாப்லின், ”வறுமை கவர்ச்சிகரமான விஷயம் போல் எழுதிவிடுகிறார்கள். எந்த ஒரு ஏழையும் பழைய வறுமையை மறுபடி விரும்புவதில்லை. அதற்காக ஏங்குவதுமில்லை. அதை போல வறுமையில் சுதந்திரம் காண்பவனும் இருக்கமுடியாது…..” என்று தெளிவாய்ச் சொன்னார். பணக்காரர்களின் அழுகிநாறும் உலகமும் வேண்டாம், ஏழ்மை வறுமையும் வேண்டாம், சுதந்திரமான – ஜனநாயகமான புதிய உலகம் வேண்டும். இதுவே அவரது நடிப்பு, கதை, அரசியல் வாழ்க்கை எல்லாம், இதன் தர்க்கரீதியிலான சிந்தனைகள் அவரைக் கம்யூனிச ஆதரவாளராக மாற்றியது.
உலகைச் சுற்றிலும் ரத்தம் தேடி அலையும் பாசிச அரக்கன் ஜெர்மனி இட்லர்; அதை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் போரும் தியாகங்களும் – இந்த நிலைமையில் ஹாலிவுட் கலைஞர்களை போதைகளான, ஆபாசமான, பொறுப்பற்ற பொழுதுபோக்குச் சரக்கைத் தயாரிக்கச் சொல்லி பலவந்தம் செய்தார்கள் முதலாளிகள். நேர்மை, தனிவுள்ளம் கொண்ட கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலாளிகளின் அராஜகத்தை கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்லின்; இட்லரை எதிர்த்து அம்பலப்படுத்தும் ‘கிரேட் டிக்டேடர்’ (மாபெரும் சர்வாதிகாரி’) என்ற படமும் தயாரித்தார்.
இருபடங்களைத் தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்குகள், 10 ஆண்டுகள் நடந்தன. இதனால் அவரது ‘யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. ‘அமெரிக்காவில் பல காலம் வாழ்ந்தும் ஏன் குடியுரிமை பெறவில்லை?’ என்ற கேள்வி எழுப்பினார்கள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ ‘சாப்லின் விருந்தாளி. நீண்டநாள் தங்கிவிட்டார்’ என்று ‘கத்தோலிக்க படைப்பிரிவினர்’ எதிர்ப்புக் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
எதிர்ப்புகள் தோன்றத்தோன்ற சாப்லின் உறுதியாக நின்றார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் அணி சேர்ந்தன. சோவியத் ரசியா மீது ஜெர்மனி போர் தொடுத்தது. 200 நாஜிப்படைப் பிரிவுகளை எதிர்த்து முதல் போர் முன்னணியைத் தொடங்கியது சோவியத். அங்கு நிவாரணக் குழு அனுப்பவும், அமெரிக்கா இரண்டாவது போர் முன்னணியைத் தொடங்க நிர்ப்பந்தம் செய்தும் சாப்லின் வீர உரைகள் ஆற்றினார்.
அவரைக் கம்யூனிஸ்டு என்று தூற்றினார்கள். சாப்லின் அஞ்சவில்லை.
”நான் ஒரு கம்யூனிஸ்டு அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்வுகள் எனக்குத் தெரியும். எப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும். கம்யூனிஸ்டுகள் மற்றவர்களை விட வித்தியாசமான ஜீவன்கள் இல்லை. கம்யூனிஸ்டுகளின் தாயும் மற்ற தாய்களைப் போலத்தான். தனது மகன் போர் முனையிலிருந்து திரும்ப மாட்டான் என்று செய்தி கேள்விப்படுகிற போது அந்தத் தாயும் அழுகிறாள். கதறுகிறாள். இதை நான் புரிந்துகொள்ள கம்யூனிஸ்ட்டாக இருக்க வேண்டியதில்லை. நான் ஒரு மனிதனாக இருந்தாலே போதும்….”
”ரசியப் போர் முனையில் சாவா, வாழ்வா என்ற போராட்டத்தில் ஜனநாயகம் இருக்கிறது. நேச நாடுகளின் விதி கம்யூனிஸ்டுகளின் கையில் இருக்கிறது…. லிபியாவைக் காத்தோம், இழந்தோம்; பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகள் அத்தனையும் இழந்தோம். ஆனால் ரசியாவை இழக்கவிடக்கூடாது. அது ஏன்? ரசியாதான் ஜனநாயகத்தைத் தீவிரமாகக் காக்கும் போர் முன்னணி. நமது உலகம் – நமது வாழ்வு – நமது நாகரிகம் காலடியில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. நாம் உடனே முடிவெடுத்தாக வேண்டும்.”
இந்த நேரத்தைக் கைவிட்டுவிட்டால், ஜெர்மனி இட்லர் ஜெயித்தால், உலகெங்கும் உள்ளே மறைந்திருக்கும் நச்சுக் கிருமிகள் போல நாஜிகள் வெளியே தலைதூக்குவார்கள். வெற்றிபெற்ற இட்லரோடு ஒப்பந்தம் போடச் சொல்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்று மக்களிடம் அவசரமாக, தீவிரமாக, ஒரு புயல்போல பிரச்சாரம் எடுத்துச் சென்றார்.
கடைசியில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். எங்கு பல கனவுகளோடு உழைத்துக் கொண்டிருந்தாரோ, எங்கு பாசிச ஆதரவு முதலாளிகளின் மனிதகுல நாசவேலைகள் தீவிரப்பட்டதோ அங்கிருந்து வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். அங்கும் நாஜி ஆதரவாளர்கள், மக்களின் எதிரிகள் தொல்லை கொடுத்தார்கள். உலகம் முழுதும் பரவியுள்ள நச்சுக் கிருமியாகப் போர் வெறியைப் பார்த்தார் சாப்லின். இறுதி மூச்சுவரை அதை எதிர்த்துக் கலை அரங்கிலிருந்து தாக்குதல் தொடுக்க அவர் தவறவில்லை.
ஒரு சுவையான சம்பவம், இங்கிலாந்தில் சாப்லினுக்கு நேர்ந்த்து. நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான். அவரோடு பேசிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பார்த்தால் அடுத்த போரும் வரும் என்றார் சாப்லின். ‘அடுத்தமுறை போருக்குச் செல்ல நான் அகப்படமாட்டேன்’ என்றார் அவர். ”உன்னைப் பழிசொல்லி என்ன பயன்? நீ இன்னாரோடு சண்டைக்குப்போ, செத்துப்போ என்று கட்டளை போட இவர்கள் யார்? இதில் தேசபக்தி என்ற பெயர் வேறு. என்று சொன்னார் சாப்லின். அடுத்தநாள் செய்தி ஏடுகளில் பெரிய தலைப்பில் செய்திவந்தது – ”சாப்லின் தேசபக்தர் அல்ல”. பிறகுதான் சாப்லினுக்குப் புரிந்தது, முந்தினநாள் வந்து பேசியது எந்த நண்பருக்கு நண்பனும் அல்ல, ஒரு செய்தியாளர் என்பது.
சாப்லின் அதற்குச் சொன்ன பதில் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒன்று. ” ஆம் நான் தேச பக்தன் அல்லதான், அதாவது தேச பக்தி என்ற பெயரில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படும்போது” அப்படிப்பட்ட தேசபக்தி போலி தேசியம், அப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்காக, ஒரு பிரதமருக்காக, ஒரு சார்வாதிகாரிக்காக உயிர்க்கொடுக்க நான் விரும்பவில்லை. – சாப்லின் இவ்வாறு கொதித்துச் சொன்னார்.
ஒரு கலைப் பொருள் பற்றி சாப்லினிடம் விவாதித்ததால் அது மக்களுக்கானதா என்றுதான் அவர் ஆராயத் தொடங்குவார். தனது திரைப்பட நகைச்சுவைக் கலை மூலம் இதைத்தான் சாதித்தார். ஒலிப்பதிவு வந்த பிறகும் அவர் துணிச்சலாக ஊமைப்படம் எடுத்தார். ஊமைப்படத்திலேயே அதன் வரம்புகளை நடிப்பின் மூலம் உடைத்தெறியக் கற்றுத் தேர்ந்ததால், ஒலியைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த வகைக்கலையில் ஓர் அறிஞர் சாப்லின் என்றுகூடச் சொல்லலாம்.
கட்டளைக்கு ஆடிவிட்டு வரும் கலை மோசமான கலை என்பார் அவர். மனிதனுக்கே எதிரான கருத்தைப் போலித்தனமாக வேஷங்கட்டி ஆடமுடியாது. ஒரு சிறந்த கலைஞர், ஒரு உன்னதமான கலைஞர் அவ்வாறு செய்யமாட்டார். கலைபற்றி பல விதங்களில் விளக்க முற்பட்ட சாப்லின் – உணர்ச்சிகளையும் புத்தியையும் இணைத்துக் கலக்கும் விதம் கலைஞனுக்குக் கைவரவேண்டும். அதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, கலைநுட்பம், கலைத்திறன் வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும் என்றார்.
அவர் கலையில் ஓர் எதார்த்த வாதி. வெளியே நடப்பதை அப்படியே திரையில் எடுத்துவைப்பது எதார்த்தம் அல்ல; கற்பனை அந்த எதார்த்தத்திலிருந்து என்ன எடுத்துச் செய்யமுடியுமோ அதுவே முக்கியம் என்பார். உலகெங்கிலும், ஏன் இந்தியாவில் உள்ள ஒரு சில இயக்குனர்கள் கூட எதார்த்தம் என்பதுபற்றி விசித்திரமான கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள்.
பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட செட் அல்லது இடத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றால் போதும். அதற்குப் பிறகும் கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அசைவது; நகருவது எல்லாம் காட்டவேண்டியதில்லை. இது படத்தின் ஓட்டத்தைக் குறைத்துவிடுகிறது. ஆனால் இதைத்தான் கலைப்படம் என்று சிலர் சொல்கிறார்கள் என்று கேலி செய்தார் சாப்லின்.
நம்நாட்டில் சத்யஜித்ரே, குமார் சஹாரி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்றோர் இப்படிப்பட்ட சித்தரிப்பையே எதார்த்தம் என்கிறார்கள்.
அதேபோல அவசியமில்லாமல் காமிரா விளையாட்டு காட்டுவது கலையல்ல என்றார் சாப்லின். ஓர் அறை, கணப்பு அடுப்பு, அதைக் காட்டுவதற்கு எரியும் துண்டுக் கரியின் பார்வையிலிருந்து அடுப்பையும், அறையையும் காட்டவேண்டிய அவசியமில்லையே என்று கேலி செய்தார் அவர்.
வாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்கள் நிறைந்தது; அதில் வரும் நோவும் துன்பமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. இதிலிருந்துதான் தனது கதைகளை எடுத்துக் கொண்டார் சாப்லின். கற்பனையைத் தூண்டும் சம்பவங்களை ஓயாது தேடும் காவல் கோபுரமாக மனது (மூளை) பயிற்சி பெற்று விட்டது. ஒரு கருவை எடுத்தபிறகு, விரிவாக்குவேன், பிறகு அதில் முழுமூச்சாக ஈடுபடுவேன் என்று தனது கலை ஆக்கத்தைச் சொன்னார் சாப்லின்.
லண்டன் கென்னிங்டன் தெரு பவுனால் ஏழைக்குடியிருப்பில் வித்திடப்பட்ட அக்கலைஞன் நாடுவிட்டு நாடு பயணம் செய்த போதும், நடிப்புத் துறையில் முன்னேறி எவ்வளவோ சம்பாதித்தபோதும் தன் வேரை இடம் பெயர்க்கவே இல்லை. ‘The Great Dictator – மாபெரும் சர்வாதிகாரி‘ திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் ஓர் முடித்திருத்தும் தொழிலாளி மாறாட்டத்தினால் சர்வாதிகாரியின் இடத்தில் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார். அந்த எளியவரின் எண்ணங்கள் மாறவில்லை. அவர் பேசுகிறார் – யாரும் எதிர் பாராத பேச்சு – சர்வாதிகாரியையே எதிர்த்துப் பேசுகிறார். கதாபாத்திரம் அங்கே பேசவில்லை – அவர்மூலம் சாப்லின் என்ற மனிதர், ஒரு ஜனநாயகக் கலைஞர் அங்கே பேசுகிறார்:
”இப்போது எனது குரலை உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். துன்பப்படும் பல லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் அத்தனைப்பேரும் உங்களையே அடிமைப்படுத்தும் ஓர் அமைப்புக்குப் பலியாகியிருக்கிறீர்கள்:
எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா? எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்: ‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது. இனி மனிதர்களுக்கு இடையே உள்ள குரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!….. வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!
மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள்; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம்!
போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்!
மக்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது!
அணு உலையின் அபாயம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை!
கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளை தொடுத்துள்ளது!
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய நாட்டுப்பற்றாளர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை இன்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும் போட்டிருக்கிறது தமிழக அரசு!
ஆபத்தான அணு உலை வேண்டாம் என்று கூறுவது தேசத்துரோகமாம்!
இ.பி.கோ.120 சதித்திட்டம் தீட்டுவது – இ.பி.கோ.121 அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது – இ.பி.கோ.124 ஏ ராஜத்துரோகம் – இவற்றிற்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வழங்க முடியும்.
இ.பி.கோ.199, 188, 121, 121(A) 123, 124(A), 125, 143, 147, 153(A), 294(b) 341, 342, 353, 447, 500, 505(I), (b) 506(II), 3 Of Ppdl Act, 7(1) (A) CLA Act r\w 120(b) என்ற கடும் குற்றப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடங்களம் அணு உலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. இந்திய ஆளும் வர்க்கத்தின் அணு குண்டு, வல்லரசு கனவு, மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால்தான் அரசு இயந்திரங்களும் அதன் அடிவருடிகளும் அப்போராட்டத்தை ஒருசேர ஒடுக்க முயல்கிறார்கள். சாலை மறியல் செய்த பெண்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள், உள்பட கூட்டப்புளி மக்கள் 178 பேர் மீது தூக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் சிறையில் அடைக்கிறார்கள். தலைக்கு இருவர் என 356 பேர் வள்ளியூர் நீதிமன்றம் வந்து ஜாமீன் கொடுத்து பிணையில் வந்தாலும், தினமும் காலையில் கொடும் குற்றவாளிகளைப் போல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செய்கிறார்கள். பிணையை தளர்த்த நீதிமன்றம் சென்றால் ஒரு மாதம் கழித்து வாருங்கள் அது எனது கொள்கை என அறிவிக்கிறார்கள். பேருந்து வசதியில்லாத பாதையில் பழவூர் காவல் நிலையத்திற்கு காலை 10-00 மணிக்கு சென்று தினமும் கையெழுத்து போட்டால் பிழைப்புக்கு கடலுக்கு எப்படி செல்வது? குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவது? ஆனால் மக்களின் இப்பிரச்சினைகள் பற்றியும் வாழ்க்கை குறித்தும் அரசு இயந்திரத்திற்கு மயிரளவும் கவலை கிடையாது.
கூடங்குளம் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உட்பட 18 பேர், கூட்டப்புளி ஃபாதர் சுசிலன் உட்பட 30 பேர் மற்றும் முகிலன், சதீஷ் ஆகியோர் நான்கு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 23 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு பிணையில் வந்துள்ளனர். வழக்கம் போல் நக்சலைட் பீதியூட்ட முகிலன், சதீஷ் ஆகியோருக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் வைத்துள்ளனர். உதயக்குமார் உட்பட யாரை வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கில் கைது செய்யும் வகையில் கடந்த ஆண்டே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதுதான் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படும் போராட்டக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளனர். காவல் துறை உயர் அதிகாரிகள், கலெக்டரை பல முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். நேற்று வரை போராட்டத்தில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று நாடகமாடிய ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், 144 தடையுத்திரவு மூலம் போக்குவரத்து, மின்சாரம், பால்,தண்ணீரை நிறுத்திப் போராடும் மக்களை பணிய வைக்க முயற்சித்தார். தமிழக அரசின் இம்முயற்சிக்கு நாடு முழுவதும் கண்டனக்குரல் எழும்பவே பகுதி அளவில் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. வாழ்வுரிமைக்காக போராடியதைத் தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத அப்பகுதி மக்களை வழக்கு, கைது, சிறை என பய பீதியூட்டி வருகிறது தமிழக அரசு. போலீசின் தடியடி, துப்பாக்கி சூட்டைக்காட்டிலும் இது கடுமையான ஒடுக்குமுறை.
ஆபத்தான அணு உலை வேண்டாம் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துப் போராடியதால் அப்பகுதி மக்கள் வேலை இழந்தார்கள், உணவை இழந்தார்கள், வருமானத்தின் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுத்து வருமானத்தை இழந்தார்கள். தற்போது வழக்கு, கைது, சிறை துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகிறார்கள். நான்கு வழக்குகளில் 200 பேரை பிணையில் எடுக்க ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் 10 பேர் 20 நாட்களாக இரவு பகலாக உழைத்து கட்டணம் வாங்காமல் விடுவித்தோம். நூற்றுக்கணக்கான வழக்குகளில் ஆயிரக்கணக்கான மக்களை அது போல் பிணையில் எடுப்பது சாத்தியமா? அவசியமா? என்றால் இல்லை. இது நீதிமன்றத்தில் தீர்க்கும் பிரச்சினை அல்ல. மக்கள் மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது.
எனவே அணு உலைகளுக்கு எதிராக மட்டுமல்ல, போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற நாம் அனைவரும் போராட வேண்டும். இன்று நாம் போராட விட்டால் அனைத்து மக்கள் போராட்டங்களையும் ஒடுக்க அரசு இம்முறையை கையாளும். போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல். ஆகவே சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தியாகங்களை படித்துப் பெருமை கொள்ளும் நாம் சம காலத்தில் நடக்கும் போராட்டத்தை ஆதரிப்பது, பங்கேற்பது நமது கடமை.
போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!
___________________________________
ஆபத்தான அணு உலை வேண்டாம் எனப்போராடுவது தேசத்துரோகமா?
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கு சொந்த நாட்டு மக்களைக் காவு கொடுக்காதே!
ஆபத்தான அணு உலையை இழுத்து மூடு! அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!
ராஜத்துரோகம் உள்ளிட்ட காலனியாதிக்க சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்!
அணு உலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை!
கதிர் வீச்சுக்கும் மரணத்துக்கும் எதிராகப் போராடுவது மக்களின் வாழ்வுரிமை!
21.4.12 அன்று மாலை 2-30 மணிக்கு இடிந்த கரை மத்தியில் போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விளக்கவுரை ஆற்ற உள்ளனர்.
தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!
2009ஆம் அமைந்த காங்கிரசு தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனது தேர்தல் வாக்குறுதிளில் ஒன்றான கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தை ஏப்ரல் 1, 2010 அன்று அமலுக்குக் கொண்டு வந்தது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமையை உத்தரவாதம் செய்வதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி வெளியிட்டது.
’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ண்யித்துக் கொடுத்த பிறகு, அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போன முதலாளிகள், அப்பரிந்துரைகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தம் விருப்பப்படி கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர். அதைத் தடுக்க முடியாத ஆட்சியாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க தனியார் பள்ளிகளை கட்டாயப்படுத்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சொல்லும்போது அதை கவனமாக அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
1947க்குப் பிறகு இலவச தாய்மொழி வழிக்கல்வி தருவதற்காக அரசு பள்ளிகள் கிராமம் தோறும் தொடங்கப்பட்டன. பல குற்றம் குறைகளுடன் இயங்கினாலும், எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி, அனைவருக்கு ஒரே மாதிரியான கல்வி என்ற நோக்கத்தை அவை நிறைவேற்றின. 1980களுக்குப் பிறகு மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகையுடன் தனியார் பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன. லாபம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிகளில் பலவற்றுக்கு சரியான கட்டிட வசதிகள் கிடையாது, தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடையாது.
ஆனால், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் அடுத்தடுத்த அரசுகளின் புறக்கணிப்பின் மூலம் சீரழிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் என்றால் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வதுதான் சிறந்தது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவது என்பது மக்கள் மீது பெருத்த சுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்கள் கூட பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்புவதை நகர்ப்புறங்களில் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, தேவைப்படும் இடங்களில் புதிய பள்ளிகளைத் திறந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எல்லாக் குழந்தைகளுக்கும் தாய்மொழி வழியில் தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதுதான் நியாயமான திட்டமாக இருக்க முடியும். ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கும் திசையில் போகவில்லை என்பதோடு, ஏற்றத் தாழ்வுகளை இன்னமும் கெட்டித்துப் போக வழி செய்கிறது. கல்வியை வணிகமயமாக்கி லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக மாற்றும் தனியார்மயப் போக்கை இந்தச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கப் போவதில்லை. மாறாக கல்வி தனியார்மயம் என்ற எதார்த்தத்தை அங்கீகரித்து, அதற்கேற்ப மாறிக்கொள்ளுமாறு மக்களுக்கு இது அறிவுருத்துகிறது.
படம் - thehindu.com
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29% இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்த வகை செய்யவும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் முன்வராத இந்த சட்டம், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆரம்பப் பள்ளிக் கல்வியை மேலும் மேலும் தனியார் கைகளில் விடுவதற்கான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், கேந்திரீய வித்யாலயா/நவோதயா போன்ற சிறப்புப் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் என்று பல அடுக்குகளாக இருக்கும் பள்ளிக் கல்வி முறையை அங்கீகரித்து பள்ளிக் கல்வியில் இருக்கும் வசதி படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை தொடர்ந்து பராமரிக்க வழி செய்கிறது.
இரண்டாவதாக, எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவேயில்லை.
தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தனியார் கல்வி முதலாளிகளுக்கு கட்டாயம் ஏற்படுத்துவது போல தோன்றினாலும் ஏற்கனவே பல்கி பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அங்கீகாரம் அளித்து கணிசமான அரசு நிதியையும் திருப்பி விடுவது இதன் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது. அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்று கருதப்படும் சூழ்நிலையில் ஏழை மக்கள் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் தமது குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெரிய சலுகையாக நினைப்பார்கள். அதன் மூலம் அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது இன்னும் தீவிரமாகி அவை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படும்.
மூன்றாவதாக குழந்தைகளுக்கு ஆறு வயது வரையிலான இளநிலைக் கல்வி, 14 வயதுக்குப் பிறகான உயர்கல்வி தொடர்பான தனது பொறுப்பை முற்றிலும் கைகழுவி விடும் நோக்கத்தையும் இந்தச் சட்டத்தின் மூலம் அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. உயர்கல்விக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக வேலைச் சந்தையில் விடப்படுவார்கள்.
இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது குறித்து ‘அடுத்த 5 ஆண்டுகளில் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று அவர்கள் சொன்னால், அதற்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சுயநிர்வாக உரிமை தருவோம்’ என்று மனித வளத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அதாவது உயர் கல்வி நிறுவனங்கள், தமக்கு நிதி வழங்கும் தனியார் நிறுவனங்களின் விருப்பப்படி செயல்படவிருப்பதைத்தான் தன்னாட்சி என்று சித்தரிக்கிறது அரசு.
“உழைக்கும் வர்க்கத்தினருக்கு அவர்களது வாழ்க்கை நிலைக்கு மேற்பட்ட கல்வி அளிக்கப்படக் கூடாது” என்று 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு கடைப்பிடித்த கொள்கை கூறுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரை தற்போதைய சட்டமும் நடைமுறையில் பத்தொன்பதாம் நூற்றாண்டை நோக்கிய பயணமாகவே இருக்கும்.
நான்காவதாக, தனியார் பள்ளிகள் தமது விருப்பப்படி தன்னிச்சையாக நிர்வாகம் செய்து கொள்ளவும், கட்டணங்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை. இப்போது இருப்பதைப் போலவே பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு அஞ்சி நடுங்கி கேட்ட தொகையைக் கட்டி கல்வியை வாங்குவது நடைமுறையாக தொடரும். ’தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர் செல்லாமல் போய் விடும்’ என்று கபில் சிபல் தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
மெட்ரிக் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க சட்டம் நிறைவேற்றப் பட்டாலும், அவற்றை விட பல மடங்கு அதிகமான கட்டணங்களை அந்த பள்ளிகள் வசூலித்துக் கொண்டிருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அப்பல்லோ மருத்துவமனைக்கு போக முடிவதை மகிழ்ச்சியாக கருதும் மக்கள் அந்த மருத்துவமனை காப்பீடு மூலம் பெறும் பணத்துக்கும் மேல் கூடுதலாக கேட்பதை ’மனமுவந்து’ கட்டி விடுவதைப் போல, குழந்தையின் கல்விக்கான கூடுதல் நன்கொடையை சுமக்கவும் மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டியிருக்கும்.
25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் சுமையைத் தாங்கிக் கொள்வதால் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டியிருக்கிறது என்ற ’தார்மீகக்’ கடமையை தனியார் பள்ளிகள் ‘சுமப்பதால்’, அவர்கள் விதிக்கும் கட்டணங்களை சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ தட்டிக் கேட்கும் உரிமை யாருக்கும் இல்லாமல் போய் விடும்.
ஐந்தாவதாக, இந்தச் சட்டம் 60 குழந்தைகளுக்குக் குறைவாகப் படிக்கும் சுமார் 40% ஆரம்பப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர், இரண்டு வகுப்பறை முறை தொடர்ந்து நிலவுவதை மாற்றப் போவதில்லை என்று தெரிகிறது. அரசு ஒப்பந்த முறையில் தற்காலிக, பயிற்சியளிக்கப்படாத, துணை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் இந்தச் சட்டம் வழி செய்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் வேலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நிவாரணப் பணிகள் போனவற்றுக்கு அனுப்புவதற்கு இடம் அளிக்கிறது. தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடக்கும் போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது இருப்பது போலவே அவ்வப்போது மட்டும் பாடம் நடப்பது தொடரும். பிஎட் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் திறமை பற்றி சட்டம் எந்த வரையறையும் செய்யவில்லை.
ஆறாவதாக, குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவை என்று கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய்மொழி வழிக் கல்வி வழங்குவதிலிருந்து தன்னை முழுவதும் விடுவித்துக் கொள்ளும் முகமாக ’சாத்தியமான சூழ்நிலைகளில் மட்டும் தாய்மொழி வழிக் கல்வி வழங்கப்பட்டால் போதும்’ என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கில வழிக் கல்வி என்ற மாயையின் மூலம் கல்வி வியாபாரிகள் பணம் சம்பாதிப்பதை தொடர்ந்து ஊக்குவித்து, குழந்தைகள் தாய்மொழி வழி கற்பதற்கு இருக்கின்ற வாய்ப்புகளும் ஒழிந்து விடும்.
தனியார்மயத்தை ஆதரித்துவிட்டு, ஆரம்பக் கல்வி அடிப்படை உரிமையாம் - இந்திய அரசு விளம்பரம்
வர்த்தகம் தொடர்பான சேவைகள் குறித்த பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Trade Related Services) கீழ் கல்வி, சில்லறை வணிகம், வழக்கறிஞர்கள் பணி, குடிநீர் வழங்குதல், குப்பை அள்ளுவது, தொலைபேசித் துறை, தபால் துறை, மருத்துவத் துறை என்று பல சேவைகள் வணிகம் சார்ந்த சேவைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அந்தத் துறைகளில் தலையிட்டு சுதந்திரச் சந்தையின் செயல்பாட்டை பாதிக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசுக்கு கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளை தனியார் சந்தைப் போட்டிக்கு திறந்து விடப்பட வேண்டும் என்ற பன்னாட்டு கடமை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொள்ளலாமே தவிர அரசு புதிய மருத்துவமனை கட்டுவதோ, பள்ளி கட்டுவதோ, மருந்து செய்வதோ முற்றிலும் நிறுத்தப்பட்டு தனியார் மயமாக்கப்பட்டே தீர வேண்டும்.
உயர் கல்வியையும் தொழிற்கல்வியையும் விற்பனை பண்டமாக மாற்றுவதற்கான ஒரு பரிந்துரையை நமது அரசாங்கம் உலக வர்த்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருக்கிறது. சந்தைக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் ’மெரிடோகிரசி’ மூலம் ஈவு இரக்கமில்லாத கழித்துக் கட்டலை மக்களிடையே செயல்படுத்த முனைகின்றன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவிக் கொள்வது என்பது சந்தை போட்டி சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்று.
கல்வி பெறும் வாய்ப்புகளை ஜனநாயக முறைப்படி செயல்படுத்தினால் கல்வி விலைபொருளாக இருக்க முடியாது. ஆனால், மூலதனம் தன்னைத்தானே இயற்கையானதாகவும், சுதந்திரமானதாகவும், ஜனநாயகபூர்வமானதாகவும் காட்டிக் கொள்கிறது. சுதந்திரச் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் ஜனநாயக விரோதமானது என்று முத்திரை குத்தவும் செய்கிறது. சந்தைப் போட்டி, தனியார் மயமாக்கம், தரம் குறைந்த பொதுத் துறை சேவைகள், பணம் படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே நியாயமானவை, இயல்பானவை என்று மக்களை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது.
கல்வி நிலையங்கள் வழியாக அரசாங்கம் முதலாளித்துவத்தை இயற்கையானதாக காட்ட முயற்சிக்கிறது. சந்தையின் தேவைகளுக்கு அப்படியே பொருந்தும் மனிதர்களை உருவாக்குவதே மூலதனத்தின் தேவையாக இருக்கிறது. அறிவியல் பூர்வமான சிந்திக்கும் திறனுக்குப் பதிலாக வணிக நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் தேவைப்படும் திறன்களை வழங்குவதே கல்வியின் வேலையாக திட்டமிடப்படுகிறது. நியோ லிபரல் பொருளாதாரவாதிகள் இளைஞர்களை சந்தையில் வேலை செய்யத் தேவைப்படும் விலைபொருளாக ஒரு பக்கமும், சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களாக இன்னொரு பக்கமும் பார்க்கிறார்கள். இந்த இரண்டிலும் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அவர்கள் ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி விடுகிறார்கள்.
10% மக்களை மட்டும் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும் வைத்திருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மன்மோகன், சோனியா கும்பல் அமெரிக்க/பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலில் செய்து வருகின்றார்கள். அத்தகைய முதலாளித்துவ சொர்க்கத்தில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கருணை இல்லங்களில் வசித்து, தர்ம பிரபுக்கள் மனமுவந்து போடும் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, வாய்ப்புக் கிடைக்கும் போது கிடைத்த வேலையைச் செய்து முடித்து விட்டு மீண்டும் இல்லங்களுக்குத் திரும்பி விடுவது மட்டுமே விதியாக இருக்கும்.
அரசுத்துறை நிறுவனங்களையும் இயற்கை மூலவளங்களையும் தனியார்மயமாக்கி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துவரும் இந்திய ஆட்சியாளர்கள், இயற்கையின் கொடையான தண்ணீரையும் தனியார்மயமாக்க மூர்க்கமாகக் கிளம்பிவிட்டார்கள்.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. அத்தகைய தண்ணீரை பெருமுதலாளிகளின் இலாபத்திற்கான வணிகப் பொருளாக, காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றும் அநீதியை கொள்கை அறிவிப்பாக இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது (PDF).
“தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012” என்ற 31.1.2012 தேதியிட்ட அறிவிக்கையை இந்திய நீர்வள அமைச்சகம் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை வரைவின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமாம். இவற்றைப் பரிசீலித்து இந்த வரைவு அறிக்கை இறுதியாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவு அறிக்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்குப் பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீரை வியாபாரப் பண்டமாக்குவதன் மூலம், தகாத முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதும் விரயமாக்குவதும் குறையும் என்று இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த நகல் அறிக்கையின் தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்துவந்த சூழலில், உலக வங்கியின் கைக்கூலியும் திட்டக் கமிசனின் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா, “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று திமிராக அறிவித்தார். அவரது வழிகாட்டுதலில் தயாராகியுள்ள இந்த வரைவு அறிக்கையானது, விவசாயத்துக்கும் குடிமக்களுக்கும் எந்த வடிவத்திலும் தண்ணீருக்காக மானியம் அளிப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும் என்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மானியம் அளிப்பது வீண்விரயமாக்கும் செயல் என்கிறது.
“உலக மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் இந்தியர்கள் 17 சதவீதத்தினர். ஆனால், உலகப் பரப்பில் உள்ள நீர்வள ஆதாரம் வெறும் 4 சதவீதம்தான். புவி வெப்பமடைகிறது. உயிராதாரமான நீர் பற்றாக்குறையாகி வருகிறது” என்றெல்லாம் கவலையோடு முன்னுரையாக இந்த வரைவு அறிக்கை கூறுகிறது. பின்னர் “கவலைப்படாதே சகோதரா! இதோ தீர்வு கிடைத்துவிட்டது; இயற்கை மூலவளங்களையும் நீராதாரங்களையும் தனியார் முதலாளிகளுக்கு விற்று விடலாம்” என்கிறது.
புதிய தேசிய நீர் கொள்கையின்படி, தண்ணீர் சேவை தனியார் வசம் இருக்குமாம். இருப்பினும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் குடிமக்களுக்கு அத்தியாவசியமான குறைந்தபட்ச அளவு தண்ணீரைக் கொடுக்க உத்தரவாதப்படுத்த வேண்டுமாம். அதாவது, அரசாங்கங்கள் தனியாரிடமிருந்து தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை “இலவசத் தண்ணீர்” அல்லது “விலையில்லாத் தண்ணீர்” என்ற பெயர் வைக்கும் உரிமை மட்டுமே அரசாங்கத்திடம் இருக்கும். ஏனெனில், சேவை அளிப்பவர் என்ற பொறுப்பை அரசாங்கங்கள் படிப்படியாகக் கைவிட வேண்டும் என்கிறது இக்கொள்கை.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுமாம். அது கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றைச் செய்யுமாம். மின்சாரக் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிப்பதைப் போல, தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் தண்ணீர்க் கட்டணத்தை நிர்ணயிக்குமாம்.
அப்படியானால் தண்ணீரின் விலை எவ்வளவு? நீர்த் திட்டங்களின் நிர்வாகம், விநியோகம், செயல்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளை முழுமையாக வசூலிக்கின்ற வகையில் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டுமென்று கந்துவட்டிக்காரனைப் போல கூறுகிறது இக்கொள்கை அறிக்கை. அதாவது, காசிலிருந்தால் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால், நாவறண்டு குடிமக்கள் சாக வேண்டும் என்கிறது, இந்தக் கொள்கை அறிக்கை. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் கழிவு நீரைச் சுத்திகரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டும் என்கிறது. சாதாரணக் குடிமகன் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமாம். தண்ணீர் முதலாளியாய் இருந்தால் மானியமும் ஊக்கத்தொகையும் தரப்படுமாம்.
இந்த வரைவு அறிக்கை இந்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல. “தேசிய நீராதார திட்ட வரைவுக்கான பரிசீலனை சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையை உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு2030” என்ற அமைப்பு இந்திய அரசின் திட்டக் குழுவிற்கு வழங்கியது. இந்த “நீர்ஆதாரக்குழு2030” என்ற அமைப்புக்கு கோக், பெப்சி, யுனிலீவர், கார்கில், மெக்கன்சி முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நிதிவழங்கும் புரவலர்களாக உள்ளன.
இந்த நீர் ஆதாரக்குழு, கடந்த 2011 அக்டோபரில் இந்திய திட்டக் கமிசனுக்கு அளித்த திசைவழி அறிக்கைதான், அப்படியே எந்த மாற்றமுமின்றி “தேசிய நீர்க் கொள்கை2012” என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நகல் கொள்கை அறிக்கை தயாரிப்பதில் செல்வாக்கு செலுத்திய பெருந்தொழில் நிறுவனங்கள், இப்போது இந்த அறிக்கையை வரவேற்று ஆதரிக்கின்றன. ஃபிக்கி எனும் பெருமுதலாளிகளின் சங்கத்தின் முதுநிலை துணை இயக்குநரான ரொமித் சென், தண்ணீருக்கு முறையான விலை வைப்பதன் மூலம் தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும் என்று இந்த வரைவு அறிக்கையைப் பாராட்டுகிறார். இவையனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் கொள்ளைக்காகவே தண்ணீர் தனியார்மயமாக்கப்படுகிறது என்பதையும், ஆட்சியாளர்கள் அவர்களின் கைக்கூலிகளாக இருப்பதையும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
ஏற்கெனவே உள்ள 2002ஆம் ஆண்டின் தேசிய நீர்க் கொள்கையானது, பொது நீராதாரங்களில் பயன்பாட்டிற்கான முன்னுரிமையைத் தீர்மானித்திருந்தது. இதன்படி, குடிநீர், விவசாயம், நீர் மின்சாரம், சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடு என்ற வரிசையில் முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போதைய வரைவு அறிக்கையில் இத்தகைய முன்னுரிமை தீர்மானிக்கப்படவில்லை. அதாவது, குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்தாலும், தண்ணீர் இல்லாமல் விவசாயப் பயிர்கள் கருகிக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு முன்னுரிமை தரப்படாமல், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கும், வாட்டர் போலோ போன்ற தண்ணீரில் நடக்கும் மேட்டுக்குடியினரின் கேளிக்கை விளையாட்டுகளுக்கும் தண்ணீர் தாராளமாகத் தரப்படும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் மாநிலப் பட்டியலின் 17வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை உள்ளன. புதிய வரைவுக் கொள்கையானது, மாநில அரசின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது இந்திய அரசின் நேரடி அதிகாரத்துக்கோ மாற்றியமைக்க ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்கிறது.
1882ஆம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது புதிய கொள்கை. ஒரு ஊரில் பொதுச் சொத்தாக உள்ள ஏரியோ அல்லது வளமான நீர் நிறைந்த ஒரு விவசாயியின் கிணறோ இருந்தால், இனிமேல் அவை அவர்களுக்குச் சொந்தமில்லை. அதனைக் கட்டுப்படுத்தி விநியோகிக்கும் பொறுப்பை ஒழுங்குமுறை ஆணையம் பறித்துக் கொள்ளும்.
குடிமக்களுக்கு அடிப்படைத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அரசாங்கம் உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று இந்த நகல் அறிக்கை கூறினாலும், இதனை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்கி சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை. அத்தியாவசியத் தேவையான பால், மின்சாரம் போன்றவற்றைப் போலவே குடிநீர் கிடைக்கவும் உத்திரவாதம் செய்துள்ளோம், காசுள்ளவர்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டியதான் பாக்கி.
தென்னமெரிக்காவிலுள்ள ஏழை நாடான ஈக்வடார், மனித இனம் மட்டுமின்றி இயற்கையும் உரிமைகளைப் பெற்றிருப்பதாக 2008ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியது. இதன்படி இயற்கையின் அங்கமான மலைகளும் ஆறுகளும் ஏரிகளும் பொதுச் சொத்தான தங்களை வணிகப் பொருளாக்குவதையோ, கழிவுகளைக் கொட்டி நாசமாக்குவதையோ எதிர்த்து தங்களது வாழும் உரிமைக்காக, தங்கள் சார்பில் மனித இனத்தைக் கொண்டு வழக்கு தொடுத்து போராட முடியும். ஈக்வடார் நாட்டின் வழியில் பொலிவியாவும் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. “தாய்மண் சட்டம்” என்றழைக்கப்படும் இச்சட்டம், மனித இனத்துக்கு இணையாக இயற்கைக்கும் சமமான உரிமைகளை அளித்துள்ளது. இதனை மேலும் 12 நாடுகள் சட்டமாக்க ஆலோசித்து வருகின்றன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் வழியில் தாய்மண்ணின் உரிமைக்கான பிரகடனத்தை ஐ.நா. மன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று பொலிவியா முன்மொழிந்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இருந்துகொண்டு வல்லரசாகத் துடிக்கும் இந்திய அரசோ, தண்ணீரைத் தனியார்மயமாக்க மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் வியாபாரம் என்பது நமது பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். எனவே தண்ணீரை எவனுக்கும் தனியுடமையாக்கக் கூடாது. தண்ணீரை வணிகச் சரக்காக்கக் கூடாது. உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. எனவே நாம் உயிர் வாழ வேண்டுமென்றாலே இத்தனியார்மயத்தை இன்றே இப்பொழுதே எதிர்த்துப் போராடி வீழ்த்த வேண்டும். பொலிவியாவின் கொச்சபம்பா நகர மக்கள் பெக்டெல் எனும் ஏகபோக தண்ணீர் நிறுவனத்தை விரட்டியடித்ததைப் போல, தண்ணீரைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செய்யவரும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும் அதற்குக்கைகட்டிச் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களையும் எதிர்த்து போராட வேண்டும்.
தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி.) என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். அதில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் ஊதிய விகிதப்படி சம்பளம் தரவேண்டும். என்.டி.சி. அதிகாரிகள் தாங்கள் மத்திய அரசு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு மாத ஊதியமாக சுமார் ரூ. 1,20,000/-ஐ எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தனது இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் என்.டி.சி தொழிலாளர்களுக்கோ மாநில அரசின் ஊதிய விகிதப்படி மாத ஊதியமாக சுமார் ரூ.8,500/- மட்டும் கொடுக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் ரூ.8,500/- சம்பளத்தை கொண்டு குடும்பத்தின் உணவு செலவையும், குழந்தைகளின் கல்விச் செலவையும், இன்ன பிற செலவுகளையும் சமாளிக்க இயலாமல் பாதி நாட்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு நிறுவன ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பு.ஜ.தொ.மு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஆகிய சங்கங்களின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரண்டு 29.02.2012-அன்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எட்டு நாள் சம்பள பிடித்தம் செய்ய ஆலை நிர்வாகம் உத்தரவிட்டது. சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் திமிராக நடந்து கொண்டது நிர்வாகம். பிறகு தொழிலாளர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அஞ்சிய நிர்வாகம், தொழிலாளர்களின் எட்டு நாள் சம்பள பிடித்தத்தை ரத்து செய்தது. ஆனால் IDA உள்ளிட்ட 23 கோரிக்கையை ஏற்க மறுத்தது நிர்வாகம்.
மேற்கண்ட 23-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், பு.ஜ.தொ.மு-வை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும், 22.03.2012 அன்று கோவையிலுள்ள என்.டி.சி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு-வை சேர்ந்த கம்போடியா மில்லின் கிளைச் செயலாளர் தோழர். K. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் (C..I.T.U) பொதுச் செயலாளர் தோழர். C..பத்மநாபன் அவர்களும், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) துணை பொதுச் செயலாளர் தோழர். V.R..பாலசுந்தரம் அவர்களும் உரையாற்றினார்கள். இறுதியாக கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (பு.ஜ.தொ.மு) பொதுச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் N..T.C -யின் தொழிலாளர் விரோத போக்கையும் கண்டித்து கண்டன உரையாற்றினார். மிகவும் எழுச்சிகரமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 225 பேர் கலந்து கொண்டனர்.
2007-ம் ஆண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், விற்பனைக்கு வெளியாகத் திட்டமிட்ட நாளுக்கு ஒரு மாதம்தான் இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ், மேலாளர்கள் சிலரை தனது அலுவலகத்திற்குள் அழைத்தார். சில வாரங்களாக ஐ-போன் கருவியின் மாதிரியை தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்து சோதனை செய்து கொண்டிருந்தார், ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது, அந்த மாதிரியை கோபத்துடன் எல்லோருக்கும் காட்டினார். அதன் பிளாஸ்டிக் திரையில் சிறு கோடுகளாக மெல்லிய கீறல்கள் தெரிந்தன.
தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து சாவிக் கொத்து ஒன்றை வெளியில் எடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘இந்த போனை மக்கள் தமது பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்கள். சாவிக் கொத்துகளையும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். கீறல் விழும்படியான ஒரு பொருளை நான் விற்க மாட்டேன்’ என்று கடுப்புடன் சொன்னார். கீறல் விழாத கண்ணாடி திரையை பயன்படுத்துவதுதான் ஒரே வழி. ‘கண்ணாடி திரை வேண்டும். ஆறு வாரங்களுக்குள் பக்காவாக வேண்டும்’.
இதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ். நுகர்வோர் ஐ-போனை சாவிகளுடன் சட்டைப் பையில் வைத்திருந்தால், அதன் திரையில் ஏற்படக் கூடிய கீறலைப் பற்றி கவலைப் படுவது போல ஒவ்வொரு நுணுக்கமான விபரத்திலும் கவனம் செலுத்துவதுதான் அவரது வெற்றியின் ரகசியமாக போற்றப்படுகிறது. “ஆப்பிள் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போன்றதில்லை. தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். அத்தகைய கலாச்சாரத்தை பயிற்றுவித்து வெற்றிக்கு வழிகாட்டிய உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் தயாரித்து விற்கும் பொருட்களின் வடிவமைப்பில் புரட்சிகர மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்” என்று பலரும் பாரட்டத் தயங்குவதில்லை.
உலகின் நம்பர் 1 நிறுவனம் ஆப்பிள்
ஆப்பிள் தயாரிப்புகளின் ஒரு பகுதி
மேக்கின்டோஷ் வரிசை மேசைக் கணினிகள், ஐ-மேக் மடிக்கணினிகள், ஐ-பாட் பாட்டு கேட்கும் கருவி, ஐ-போன் செல்பேசி, ஐ-பேட் கையடக்கக் கணினி என்று கை வைத்த எல்லா துறைகளிலும் ஏற்கனவே இருந்த தயாரிப்புகளை பின் தள்ளி முடி சூடிக் கொண்டது ஆப்பிள் நிறுவனம். மற்ற நிறுவனங்களின் பொருட்களை விட ‘தரத்தில் உயர்ந்த’ ஆப்பிள் பொருட்களின் சந்தை விலை கணிசமாக அதிகம். வழக்கமான mp3 பிளேயர் 1,000 ரூபாய்க்குள் கிடைத்தால் ஆப்பிள் ஐ-பாட் 3,000 ரூபாய்க்கு விற்கும், மற்ற தயாரிப்பாளர்களின் ஸ்மார்ட் தொலைபேசி 15,000 ரூபாய்க்கு விற்றால் அதற்கு இணையான ஆப்பிள் ஐ-போன் தொலைபேசி 30,000 ரூபாய்க்கு விற்கப்படும்.
அவற்றை வாங்குவதற்கு இலட்சக்கணக்கான பயனர்கள் போட்டி போடுவார்கள். ஆப்பிளின் புதிய பொருட்கள் வெளியாகும் நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்திருப்பார்கள் ஆப்பிள் ரசிகர்கள்.
2011-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு எக்ஸான் மொபைல் என்ற எண்ணெய் (பெட்ரோல்) நிறுவனத்தின் மதிப்பைத் தாண்டி உலகத்திலேயே முதலிடத்தை எட்டிப் பிடித்தது. மொத்த வருமானத்தின் அடிப்படையிலும், லாபத்தின் அடிப்படையிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் உலகின் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது ஆப்பிள். போட்டியாளர்களான கூகுள், மைக்ரோசாப்டு இரண்டு நிறுவனங்களின் வருமானத்தை ஒன்று சேர்த்தாலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிற்கின்றது ஆப்பிள்.
ஆப்பிள் சாம்ராஜ்யம் உற்பத்தி செய்யும் பொருட்களின் பளபளப்பு அவற்றை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் காணப்படுகிறதா? சிறு சிறு விபரங்களிலும் அக்கறை காட்டும் ஸ்டீவ் ஜாப்சிஸ் ஆப்பிள் சாம்ராஜ்யத்தின் எல்லா பகுதிகளிலும் தனது ஆளுமையை, ‘உயர் தரத்துக்கான’ தேடலை செலுத்தினாரா?
அமெரிக்காவின் தேவதை பிசாசு ஆனது!
1990களில் போட்டியாளர்களின் பொருட்களைப் போல் இல்லாமல் ‘ஆப்பிள் பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை, அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவை’ என்று மார் தட்டிக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்போது ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு முழுமையாக நகர்த்தப்பட்டு விட்டது. குறிப்பாக, சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வரும் பாக்ஸ்கான் என்ற தாய்வான் நிறுவனம் பெரும்பகுதி உற்பத்தி பணியை செய்து வருகிறது.
‘பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் வளரும் போது, அவற்றின் சொந்தக்காரர்களான முதலாளிகள் கோடீஸ்வரர்களாகும் போது, நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்’ என்ற தாரம மந்திரத்தில் இயங்கும் அமெரிக்காவிலேயே அந்தக் கோட்பாடு செல்லாமல் போய் விட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் வருமானமும் லாபமும் பங்குச் சந்தை மதிப்பும் உயர்ந்து கொண்டே போன கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரமும் பொது மக்களும் வீடுகளை இழந்து, வேலை இழந்து, வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டிருக்கிறார்கள். ‘அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது எங்கள் வேலை கிடையாது. ஆகச் சிறந்த பொருளை உருவாக்கி சந்தைப்படுத்துவதுதான் எங்களது பணி’ என்கிறார்கள் ஆப்பிள் மேலாளர்கள்.
சுரண்டலையும் ஆதிக்கத்தையும் உடைத்தெறிவதாக 1984-ல் விளம்பரம் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் இன்று அது போன்ற பல பிக்பிரதர்களின் சங்கிலித் தொடர் உற்பத்தி முறையில்தான் பில்லியன் டாலர்களை குவித்துக் கொண்டிருக்கிறது. (ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரிட்டிஷ் உளவுத் துறை கைக்கூலி எழுதிய ‘1984’ நாவலில்உருவகிக்கப்பட்ட பிக்பிரதர்கள் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகின்றன).
ஆப்பிள் நிறுவன வெற்றியின் ஊற்றுக்கண்
ஆப்பிள் நிறுவனத்தின் தளுக்காக, கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதரின் திறமையால் நமது கைகளுக்கு வந்து சேரவில்லை. சீன அரசாங்கத்தின் வரிச் சலுகைகள், சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களின் இரத்த வியர்வை, உலகெங்கும் பரந்து விரிந்து நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வல்லாதிக்க பொருளாதார கொள்கைகள் இவற்றின் கூட்டுச் சேர்க்கையின் விளைவுகள்தான் ஆப்பிள் பொருட்கள்.
மேலே சொன்ன ஐ-போன் திரை மாற்றம் முடிவு செய்யப்பட்டு, கண்ணாடித் திரைகளை வெட்டி அனுப்பும் தொழிற்சாலை அடையாளம் காணப்பட்டது. கண்ணாடி திரை வெட்டி கொடுக்கும் வேலைக்காக விண்ணப்பிருந்த சீன தொழிற்சாலைக்கு ஆப்பிள் மேலாளர் போன போது, வேலை கிடைத்தால் பயன்படுத்துவதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. சீன அரசாங்கம் முதலீட்டுக்கு அளித்த மானியம் இந்த கண்ணாடி வெட்டும் தொழிற்சாலைக்கும் கிடைத்திருந்தது. தொழிற்சாலையின் கிடங்கில் ஆப்பிளுக்குத் தேவையான இலவச கண்ணாடி மாதிரிகள் குவிக்கப்பட்டிருந்தன. பொறியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பணி புரிய தயார் செய்யப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் ஊழியர்கள் வேலைக்கு வரும்படியாக தொழிற்சாலைக்குள்ளாகவே தங்கும் அறைகள் கட்டப்பட்டிருந்தன.
அந்த தொழிற்சாலைக்கு கண்ணாடி திரைகள் வெட்டும் வேலை கிடைத்தது. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஒரு நள்ளிரவில் ஆப்பிள் பொருட்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நகரத்துக்கு வந்து சேர்ந்தன. மேலாளர்கள் தொழிற்சாலையின் தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எழுப்பினார்கள். அவசர அவசரமாக தத்தமது சீருடைக்குள் நுழைத்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு ஒரு பிஸ்கட்டும், ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அரை மணி நேரத்துக்குள் அவர்கள் ஐ-போன்களை பொருத்தி உருவாக்கும் அசெம்பிளி லைனில் அணிவகுத்தார்கள். ஐ-போனில் கண்ணாடி திரைகளை பொருத்தும் 12 மணி நேர ஷிப்டு ஆரம்பித்தது.
96 மணி நேரத்துக்குள் நாளைக்கு 10,000 ஐ-போன்கள் உற்பத்தி ஆரம்பித்து விட்டிருந்தது. 3 மாதங்களுக்குள் ஆப்பிள் 10 லட்சம் ஐ-போன்களை விற்றது. 2011 இறுதி வரை பாக்ஸ்கான் 20 கோடிக்கும் அதிகமான ஐ-போன்களை உற்பத்தி செய்து அனுப்பியிருக்கிறது.
உடைக்கப்படும் சீனத் தொழிலாளர்களின் முதுகுகள்
1. தேவைக்கேற்ப வாரத்துக்கு 7 நாட்கள் கூட வேலை வாங்கப்படுகிறார்கள் பாக்ஸ்கான் தொழிலாளர்கள். ஒரு தொழிலாளர் ஒரு மாதத்துக்கு சராசரியாக 83 மணி நேரம் ஓவர் டைம் செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்துக்கு 36 மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளர் ஓவர் டைம் வேலை செய்யக் கூடாது என்ற விதி முறையை கண்டு கொள்ளாமல் தொழிலாளர்களை சக்கையாக பிழிந்து ஐ-போனுக்கு மெருகூட்டப்படுகிறது.
ஓவர் டைம் வேலை என்பதை தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையாக பலர் பார்க்கிறார்கள். நம் ஊரிலும் தொழிலாளர்களும் ஆர்வமாக ஓவர் டைம் கேட்டு வேலை செய்கிறார்கள். 8 மணி நேர வேலைக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியாமல்தான் ஓவர் டைம் செய்து தமது உடல்நலத்தை அழித்துக் கொள்கிறார்கள் தொழிலாளர்கள். வேலையில் தேயும் தொழிலாளர்களின் உடம்பையும் மனதையும் புதுப்பித்து மறு உற்பத்திக்கு தயார் செய்யத் தேவையான கூலியை மட்டும் கொடுத்து உபரி மதிப்பை சுரண்டுவதுதான் முதலாளித்துவம் என்பது பாரம்பரிய வரையறை. மறு உற்பத்திக்குக் கூட போதாமல் தொழிலாளர்களின் வாழ்க்கையை பறித்துக் கொள்கின்றது இன்றைய பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவம்.
ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள்
2. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஐ-போன் 4G கருவியை உற்பத்தி செய்ய ஆகும் கூலிச் செலவு $6.5 (சுமார் 300 ரூபாய், விற்பனை விலையில் 1.1%) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஐ-போன் கருவி விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 60% லாபம் ($350, சுமார் 17,000 ரூபாய்) சம்பாதிக்கிறது.
தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். நாளைக்கு 8 மணி நேர வேலை என்பது உலகத் தொழிலாளர் வர்க்கம் நீண்ட போராட்டங்களின் மூலம் ரத்தம் சிந்தி ஈட்டிய உரிமை. 8 மணி நேர ஷிப்டு, குறைந்த பட்ச ஊதியம், மனிதர்களுக்கு ஏற்ற பணிச் சூழல் என்ற அடிப்படை மனித உரிமைகள் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கு நியாயமான பணி உரிமைகளை வழங்கினால் ஐ-போன் விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்து விடும், அதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் சிறு சிறு கீறல்கள் ஏற்படுவதைக் கூடத் தாங்க முடியாத மெல்லிய மனம் படைத்த மனிதாபிமானியாகத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.
12 மணி நேர ஷிப்டுகள், ஓவர் டைம் வேலை என்று கணக்கு போட்டுப் பார்த்தால் தொழிலாளர்கள் பெரும்பான்மை நாட்களில் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. ஆப்பிள் லோகோவை ஐ-பேட் கருவியின் மீது பொறிக்கும் வேலை கைக்கருவியால் செய்யப்படுகிறது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். அந்த வேலையை மட்டுமே நாள் முழுவது செய்யும் பெண் தொழிலாளர், ஆப்பிள் ஐ-பேட் எப்படி இயங்குகிறது என்று இது வரை பார்த்ததில்லை.
ஆப்பிள் தொழிலாளர் குடியிருப்பு
15 மணி நேர மனதை மரக்கடிக்கும் இத்தகைய இயந்திர வேலைக்குப் பிறகு இளைப்பாறி, தூங்கி, புத்துணர்ச்சி பெறுவதற்கு ஐ-வரிசை பொருட்களின் உற்பத்தி முதலாளிகள் தொழிலாளர்களுக்கு வழங்கியிருக்கும் தங்கும் அறைகள் எந்த தரத்தில் இருக்கின்றன என்று பார்க்கலாம். ரயில் பெட்டிகளில் தூங்கும் வசதி போன்று மூன்றடுக்காக அமைந்த படுக்கையில் தூக்கம், படுக்கையை ஒட்டிய பெட்டியில் பொருட்களை பூட்டி வைத்துக் கொள்ளும் வசதி என்று சிறு அறைகளில் 8 பேர் வரையிலும் பெரிய அறைகளில் 20 பேர் வரையிலும் தங்குகிறார்கள் சீனத் தொழிலாளர்கள்.
இத்தகைய மன அழுத்தங்களின் வெளிப்பாடாக பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் 17 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் ஊழியர்களை பிடிக்க தொழிற்சாலை நிர்வாகம் பாதுகாப்பு வலைகளை பொருத்தியிருக்கிறது. தொழிலாளர் தற்கொலை பற்றிய விபரங்கள் சீன ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அமெரிக்க பத்திரிகைகளிலும் வெளியான பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 900 யுவானாக இருந்த தொழிலாளர்களின் மாதச் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2,200 யுவான் ஆகியிருக்கிறது.
பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இதில் பார்க்கலாம். தற்கொலை செய்து கொள்வதற்காக மொட்டை மாடிக்குள் போகும் பெண் தொழிலாளரின் வீடியோ பாதுகாப்பு கேமிராவில் பதிவாகியிருக்கிறது.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
சாவியையும் ஐ-போனையும் சேர்த்து பையில் போட்டு பரிசோதிப்பதன் மூலம் நுகர்வோரின் மனதில் கூட கீறல்கள் விழுந்து விடக் கூடாது என்று நுண்ணறிவுடன் செயல்பட்ட ஸ்டீவ் ஜாப் தலைமையிலான ஆப்பிள் நிறுவனத்துக்கு 17 உயிர்கள் பலி போன பிறகுதான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பரிசீலிக்கும் கவனம் வந்திருக்கிறது. அதுவும், எதிர்மறை பிரபலத்தால் தமது பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டு நிறுவனத்தின் லாபம் குறைந்து அதன் மூலம் தான் வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகளின் மதிப்பு வீழ்ந்து விடக் கூடாதே என்ற தவிப்பினால்தான் பிச்சைக் காசை தூக்கி எறிந்து தமது இமேஜை பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘சரி, லாப வெறி பிடித்த முதலாளித்துவ நிறுவனம்தான் தொழிலாளர்களை கவனிப்பதில்லை. தொழிலாளர்கள் ஒன்று கூடி தொழிற்சங்கம் அமைக்கலாமே, தமது உரிமைகளுக்குப் போராடலாமே’ என்று நினைத்தால், பாக்ஸ்கான் நிறுவனம் சீன அதிகார வர்க்கத்துடன் வைத்துள்ள கள்ளக் கூட்டுறவின் மூலம் அப்படி எதிர்த்து குரல் எழுப்ப முயலும் தொழிலாளர்களுக்கு 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
அவரவர் பிரச்சனை அவரவருக்கு
இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் கவலை, ‘உபரியாக வங்கியில் உறங்கும் 98 பில்லியன் டாலர் (சுமார் 5 லட்சம் கோடி) கையிருப்பை என்ன செய்வது?’ என்பதுதான்!
அடுத்த முறை பளபளப்பான ஆப்பிள் பொருட்களின் விளம்பரத்தைப் பார்க்கும் போது, ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற தீர்க்க தரிசியின் வாழ்க்கையை வியக்கும் போது, ஆப்பிள் பொருட்களைத் தடவித் தடவி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வெள்ளுடை வேந்தர்களை போல நாமும் ஆக வேண்டும் என்று நினைக்கும் போது சிதைக்கப்பட்டு வரும் சீனத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் நமது மனதில் தோன்ற வேண்டும். அதுதான் ‘நமக்கு சோறு போடும்’ இன்றைய முதலாளித்துவ அமைப்புக்கு நாம் செலுத்தும் சரியான காணிக்கையாக இருக்க முடியும்.