ஏதாவது பெட்டி கேஸ் ஜாமீனாவது கிடைக்குமா, பத்திருபது தேற்ற முடியுமா என்றெல்லாம் அன்றாடம் புலம்பியவாறு அழுக்குக் கோட்டோடு நீதிமன்றம் செல்லும் பரிதாபத்திற்குரிய வழக்கறிஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கருணாநிதியை பார்த்துக் கொள்ளுங்கள், கிட்டத்தட்ட, இல்லையில்லை அச்சு அசலேதான். என்ன பல நூறு கோடிகள் இருந்தும் இவரை வக்கீலாக யாரும் மதிக்கவில்லை என்பதுதான் ஒற்றுமையில் ஒரு வேற்றுமை.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.
“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.” இதுதான் கருணாநிதியின் விளக்கம்.
இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆலமரத்து பஞ்சாயத்துக்குப் போன நாட்டாமை தன்னையே குற்றவாளி என்று தண்டித்துக் கொண்ட கதையை விட கருணாநிதியின் நாடகம் மோசம்.
இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததினாலேயே ஊடகங்கள் கூட்டணி விலகல் திரியை கொளுத்திப் போட்டன. இல்லையெனில் தினத்தந்தியின் மூன்றாவது பக்கத்து செய்தியோடு அந்த அறிக்கையோ அக்கப் போரோ முடிந்திருக்கும்.
7.50 ரூபாய் விலை உயர்வு என்பது நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் மக்களிடம் கிளப்பி விட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்கும் வந்தது போன்று தி.மு.கவிற்கு வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த கடமை நாடகம் நடிப்பே இல்லாமல் இவ்வளவு அவலச் சுவையுடனா நடக்க வேண்டும்?
சோனியாவே அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டே வருவோர், போவோர் அடிப்பதை தாங்கிக் கொண்டே, “நான் ரொம்ப நல்லவன்னு சொன்னான்னு” ஏன் எல்லோரின் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?
பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்ப்பில்லையாம், இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு பெட்ரோலுக்கே இருக்கிறதென ஒரு அரிய தத்துவத்தை வேறு கண்டுபிடித்திருக்கிறார் அவர். மக்கள் மீது என்ன ஒரு மரியாதை!
இதில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற கடமையை மக்களுக்கு வரலாறு தெரியாது என்று துணிந்து நம்பிக்கையோடு விடுகிறார். வாஜ்பாயியின் மடியில் அமைச்சர் பதவிகளை ருசித்துக் கொண்டே, குஜராத் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டதெல்லாம் தி.மு.கவின் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டிய நிகழ்வுகள் போலும்.
போதாக்குறைக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்போது கூட்டணியை விட்டு நீங்குவது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்ய மாட்டாராம். இதைக் கேட்டால் அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவி கூட ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழும், இந்த ஊரில் தன்னையும் மதிக்க தெரிந்த ஒருவர் இருக்கிறார் என.
தரகு முதலாளிகளின் கட்சியாக உப்பிவிட்ட தி.மு.கவின் அரசியல், என்ன செய்தாவது அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்றுவதும், விரிவாக்குவதும் என்றான பிறகு இங்கே ஒட்டுப் பொறுக்கிக் கட்சிக்களிக்குரிய வெத்து வேட்டு சவுடால் கூட இல்லை என்றால் கருணாநிதியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க கசப்போடு காங்கிரசுக் கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்வதிலிருந்தே அவரது ஏனைய நவரசங்கள் போட்டி போடும் அழகினை தரிசிக்கலாம். வாரிசுச் சண்டைகளினால் அலுப்பு, கனிமொழி சிறையினால் வெறுப்பு, தி.மு.க அமைச்சர்களின் கைதால் வரும் நடுக்கம், இடையில் பேரன்களின் படத்தை பார்க்க வேண்டிய கடமை, ஜெயலலிதாவுக்காக எழுத வேண்டிய அறிக்கையின் நிர்ப்பந்தம், இதில் பெட்ரோல் விலை உயர்வு என்றால் அவர் என்னதான் செய்வார்?
தமிழகத்தின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு ஆளும் ஜெயலலிதா மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.கவும் அதன் தலைவரும் கூடத்தான் காரணம். பாசிசமும், கழிவிரக்கமும் இவர்களது இன்றைய உணர்ச்சி என்றால் அந்த உணர்ச்சியின் அடிப்படை கார்ப்பரேட் மயமாகிவிட்ட திராவிட அரசியல் என்றால் மறுப்பவர் உண்டா?
அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்கப் போராடுவோம்! பேரணி – மாநாடு 2012
நாள்: 03.6.2012 ஞாயிறு, மாலை 5.00 மணி
இடம்: போல் நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்.
பேரணி துவங்கும் இடம்: தெற்கு சன்னதி, சிதம்பரம். நேரம்: மாலை 3.30 மணி
பேரணி துவக்கி வைத்தல்: திரு. வை. வெங்கடேசன், மாவட்ட தலைவர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருதை.
வரவேற்புரை:
திரு.G.ராமகிருஷ்ணன், தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
தலைமை:
திரு. தஷ்ணா. கலையரசன், செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சிதம்பரம்.
மாநாட்டு துவக்க உரை:
மூத்த கல்வியாளர். ச.சீ.ராஜகோபாலன்,
சமச்சீர் கல்வி கமிட்டி உறுப்பினர், சென்னை.
கருத்துரை:
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு –
கட்டாய இலவச கல்வி உரிமையை மறுக்கும் சூழ்ச்சியே பேராசிரியர். கருணானந்தன், முன்னாள் தலைவர், வரலாற்றுத்துறை. விவேகானத்தா கல்லூரி, சென்னை.
சமச்சீர் பாடதிட்டக்குழு உறுப்பினர்.
நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள், கமிட்டி உத்தரவுகள்,
கல்வி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்குமா? வழக்கறிஞர். ச.மீனாட்சி,
உயர்நீதிமன்றம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்,
தனியார்மய கல்விக்கு முடிவு கட்டுவோம்! தோழர். த.கணேசன்.
மாநில அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, (RSYF).
நிறைவுரை:
வழக்குரைஞர். திரு.சி.ராஜூ,
மாநில ஒருங்கணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.
ம.க.இ.க.-வின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
______________________________________________
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் கடந்து வந்த பாதை….
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் மாணவர்களை துன்புறுத்துதலுக்கு எதிராகவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய பல்வேறு போராட்டங்களின் விளைவாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மார்ச் 2011 அன்று துவங்கப்பட்டது. விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமைக்காக கல்வியாளர்களை வைத்து மாநாடு நடத்தி பெருமளவில் பெற்றோர்களை சங்கமாக திரட்டினோம்.
விருத்தாசலத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாகவிருத்தாசலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரசு கட்டண பட்டியல் நோட்டீசு பலகையில் ஒட்டபட்டதுடன் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளி முதலாளிகள் மாணவர்களை துன்புறுத்துவது நின்றது.
சமச்சீர் கல்வியைஅமுல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுடன், முற்றுகை, உண்ணாவிரதம், ஊர்வலம், கைது என பல போராட்டங்களை நடத்தினோம். பாடப்புத்தகத்தை வழங்க கோரி கடலூர் மாவட்டத்தில் பல பள்ளிகளில் மாணவர்களை அழைத்து மறியல் போராட்டம் நடத்தி இறுதியாக பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றி வாகை சூடி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது.
கடலூரில் சி.கே மற்றும் கிருஷ்ணசாமி பள்ளிகளில் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், பள்ளி வளாகத்தில் பிரசுரம் விநியோகித்து போராடியதால் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள்.
கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் முன்பாக அரசு கட்டணத்தை மட்டும் கட்ட வேண்டுமென்று பிரசுரமாக கட்டண விபரத்தை அச்சடித்து விநியோகித்தோம். பள்ளி முதலாளிகள் நம்மை தீவிரவாதிகளாக பார்த்தனர் என்பது மறக்க முடியாத அனுபவமாகும். காட்டுமன்னார் கோயிலில் சில தனியார் பள்ளிகளில் பழைய மெட்ரிக் பாடத்திட்டங்களையே மாணவர்களுக்கு நடத்தினர். இதற்கு எதிராக நமது சங்கம் போராடியதால் சமச்சீர் பாடப்புத்தகத்தை வழங்கினர்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு கட்டாய டி.சி.கொடுத்ததற்கு எதிராக இடையுறாது பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டோம். அதுபோல் அரசு கட்டணத்தை மட்டுமே கட்டுவோம் என உறுதியாக நின்று ஒற்றுமையாக போராடியதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை தனிமை படுத்தி துன்புறுத்திய போதும், தேர்வு விடைத்தாள் கொடுக்க மறுத்த போதும் இரவு வரை பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளை நிர்பந்தித்து வெற்றி கண்டோம்.
ரூ. 7000-க்கும் மேல் ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி முன்பு வழக்கு போட்டு ரூ. 6000/- மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றதன் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி முதலாளிகள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அரசு உத்தரவை மதிக்காமல் கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்தும் பள்ளி முதலாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய் என நாம் போஸ்டர் அடித்து ஒட்டி போராடிய பிறகு தான் பள்ளி நிர்வாகத்திடம் இன்று பெற்றோர்களுக்கு ஓரளவு மரியாதை கிடைக்கிறது.
________________________________________________
இவ்வாறு பல்வேறு போராட்டங்களை மாணவர்களின் கல்வி உரிமைக்காக இடைவிடாது நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமது பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. உங்களையும், இந்த சங்கத்தோடு உறுப்பினராக இணைத்துக்கொண்டு போராட அழைக்கிறோம்.
தற்போது தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு மூலம் ஏழைகளுக்கு இலவச கல்வி உரிமை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அரசு கட்டண நிர்ணயத்தை, சிறிதளவும் மதிக்காமல் பல மடங்கு மாணவர்களை துன்புறுத்தி பெற்றோரகளை மிரட்டி வசூல் செய்யும் தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு சாத்தியமா?
ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான கல்வியை அளிப்பதன் மூலம்தான் சமூக பொறுப்புணர்வை, தேசப் பற்றாளர்களை, முழுமையான மனிதனை உருவாக்க முடியும். அரசு மட்டுமே இலாப நோக்கமின்றி இதை செய்ய முடியும். நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சாதிக்க முடியாது. பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் மூலமே கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.
தனியார் பள்ளிகள் பணம் சம்பாதிக்க தேவையான உதிரி பாகங்களாக நமது பிள்ளைகளை தரமான கல்வி என்ற பெயரில் உற்பத்தி செய்கின்றனர், இதுகுறித்து மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி – மாநாடு நடத்துகிறோம்.
அனைரும் குடும்பத்தோடு வரவேண்டுமென்று அன்போடு அழைக்கிறோம். மேலும் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் நண்பர்களோடு கலந்து கொள்வது அவசியமாகும். எனவே தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
வரதராஜ பெருமாள் கோவில் : பெருமாளுக்கு மரியாதை! சூத்திரனுக்கு அவமரியாதை
“யாருங்க இந்தக் காலத்துல சாதி பாக்குறாங்க” என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை பலமுறை கேட்டிருக்கிறோம். கேவலம், கோவில் பிரசாதத்தை வழங்குவதில் கூட சாதியும், சாதித் திமிரும் கடைபிடிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவின் சமூக வாழ்வில் பல்வேறு தளங்களில் சாதி கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று. அதுவும் இறைவன் சன்னிதியிலேயே நடக்கிறது என்றால் மற்ற இடங்களில் அதன் பரிமாணங்களை உணர முடியும்.
தமிழ்நாடு கோவில் நுழைவு உரிமை சட்டம் 1947ன் 3வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
Right of all classes of Hindus to enter and offer worship in temples – (1) Notwithstanding any law, custom or usage to the contrary, [every Hindu irrespective of the caste or sect to which he belongs] shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as [Hindus in general or any section of Hindus]; and [no Hindu] shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.
கோயில்களில் நுழையவும் வழிபாடு நடத்தவும் இந்துக்களின் அனைத்து பிரிவினருக்கும் இருக்கும் உரிமை – (1) வேறு எந்த சட்டம், பழக்கம் அல்லது நடைமுறை இதற்கு மாறாக இருந்தாலும், எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு இந்துவுக்கும், எந்த இந்து கோவிலிலும் நுழையவும் இந்துக்களில் எந்த ஒரு பிரிவினரும் வழிபாடு செய்யும் அதே முறையில் வழிபாடு நடத்தவும் உரிமை உண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவோ, நடைமுறைக்கு வந்த பிறகோ அப்படிப்பட்ட ஆலய நுழைவு அல்லது வழிபாடு செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாக கருதப்படக் கூடாது. அவர்கள் மீது வழக்கு தொடுக்கவோ, வழக்கு போடவோ கூடாது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 106ல் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.
Removal of discrimination in the distribution of prasadams and theerthams
106. Notwithstanding anything in this Act or in any text, rule or interpretation of Hindu law, or any custom or usage as part of that law or any other law or in any degree of Court, there shall be no discrimination in the distribution of any prasadam or theertham in any religious institution on grounds only of caste, sex, place of birth or any of them.
பிரசாதம் அல்லது தீர்த்தம் வழங்குவதில் பாகுபாட்டை நீக்குதல்
106. இந்த சட்டம் அல்லது வேறு எந்த உரை, விதி அல்லது இந்து சட்டத்தின் புரிதல், அல்லது அந்த சட்டத்தின் ஒரு பகுதியான வேறு எந்த பழக்கம், நடைமுறை அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இவை மாறுபட்டிருந்தாலும், எந்த ஒரு மதத் தலத்திலும் பிரசாதம் அல்லது தீர்த்தம் வினியோகம் செய்வதில் சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படக் கூடாது.
காஞ்சிபுரம் கோயில்கள் – சாதி கட்டுமானத்திற்கு ஒரு உதாரணம்
காஞ்சிபுரத்தை சேர்ந்த வைணவ கோவில்களில் பிரசாதம் வழங்குவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபடுவதிலும் கடைபிடிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள அந்நகரைச் சேர்ந்த திரு D மாதவன் என்பவரிடம் பேசினோம். இந்த சாதிய முறையை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார் வைணவ அடியாரான திரு மாதவன்.
2003-ம் ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கும் சுமார் 14 வைணவ கோயில்களில் பிரசாதம் (புளியோதரை, பொங்கல், சுண்டல், இட்லி, வடை, பாதுஷா, லட்டு, அக்கார வடிசல்) வழங்கும் போது பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களை உட்கார வைத்து பரிமாறும் அதே நேரத்தில் மற்ற சாதியினரை உட்கார விடாமல் மிரட்டி எழுப்பி நிற்க வைத்துதான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
கோயிலில் வழிபாடு, உற்சவ நேரத்தில் பாடல்களை பாடும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஊழியர்கள் வழிபாட்டு பாடல்களை பாடுவார்கள். கடைசி 2 பாடல்களை பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கும் படி மணியக்காரர் (கோவில் மேலாளர்) உரத்த குரலில் உத்தரவு போடுவார். அப்போது யாரும் உட்கார்ந்திருக்க முடியாது. பாடல்களை பாடி முடித்து பிரசாதம் வந்தவுடன் மேனேஜர் ‘எழுந்தருளி இருங்கோ’ என்று அழைப்பார். உடனேயே பார்ப்பன சாதியினர் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். மற்றவர்கள் உட்கார அனுமதி கிடையாது. யாராவது உட்கார்ந்தால் மிரட்டி எழுந்திருக்க சொல்வார்கள்.
வரதராஜபெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் வழங்கும் போது பார்ப்பனர்களுக்கு முறையாக வரிசையாக கொடுத்து விட்டு மற்ற சாதியினரை அடித்துப் பிடித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள வைப்பார்கள்.
சாதி பாகுபாட்டை எதிர்த்து அடியார்கள் போராட்டம்
பஞ்ச சமஸ்காரம் என்ற முறையில் வைணவ அடியார்களாக தீட்சை பெற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் இராமானுஜரை பின்பற்றி பக்தி மார்க்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திரு மாதவன் மற்றும் உடன் சேர்ந்த அடியார்கள் பலர் இந்த நடைமுறையை கண்டித்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நாட்டின் சட்டத்தையும், பொதுவான மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டு பிரசாதம் வழங்கும் முறையில் பாகுபாடு, தீர்த்தம் வழங்குவதில் அலட்சியம் போன்றவற்றை தட்டிக் கேட்டார்கள்.
தமது உரிமையை நிலைநாட்ட வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பிரசாதம் வாங்க காத்திருக்க முயற்சி செய்தபோது, நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவர்களை புறக்கணித்து விட்டு போய் விட்டார்கள் கோவில் ஊழியர்கள்.
2003-ம் ஆண்டு திருக்கச்சி நம்பி திருமால் அடியார் சேவை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். காவல் துறையின் விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் கட்டத்தில் அதிகார மையங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் தலையீட்டால் குற்றச்சாட்டு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்பட்டது.
அறநிலையத் துறை ஆணையும் பின் நிகழ்வுகளும்
அதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறைக்கு இந்த விவகாரத்தைப் பற்றி புகார் அனுப்பினார்கள் வைணவ அடியார்கள் குழுவினர். அந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் கையொப்பமிட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
“காஞ்சீபுரம் நகரில் உள்ள வைணவ திருக்கோயில்களில் சாதிபேதமற்ற வழிபாடு அமைதியும், பிரசாதம் தீர்த்தம் விநியோகம் நடைபெறுவதிலும் இந்து அறநிலைய ஆட்சித் துறை சட்டம் பிரிவு 106 மற்றும் அதன் விதிகளின் கீழ்ப்படியும் கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக வைதிகர் அல்லாத பாகவதர் என்னும் பிரிவினரையும் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் வழங்குதலின் போது தாங்கள் பிராமண சமூகத்தார் அல்ல என்பதற்காக கண்டிப்பாக எழுந்து நின்று பிரசாதம் பெறுமாறும் தனியாக மற்றொரு பகுதிக்கு செல்லுமாறும் வற்புறுத்துவதாக புகார்கள் வரப்பெறுகிறது. யதோத்தகாரி பெருமாள் திருக்கோயிலில் எழுந்த புகார் குறித்து தல விசாரணை செய்த உதவி ஆணையர் நேரடியாக திருக்கோயில் நிர்வாகியருக்கும் வேத பிரபந்த கோஷ்டியினருக்கும் திருக்கோயில் சம்பிரதாயப்படி முன்னுரிமை அளித்து பிரசாதம் தீர்த்தம் வினியோகம் செய்யலாமே தவிர
1. வழங்கும் விதத்திலும்
2. வழங்கும் இடத்திலும்
3. வழங்கும் முறையிலும்
எந்த வித பாகுபாடும் காட்டலாகாது என்ற தற்போதைய சட்ட நிலை எடுத்து கூறப்பட்டது. ஆனால், மேற்படி வழிபாடு மற்றும் பிரசாத விநியோகங்களில் ஆலய பழக்க வழக்கம் என்ற பெயரால் பிராமணர் அல்லாத இந்து சமூகத்தினருக்கும் பாகுபாடு பாராட்டப்படுமெனில் அந்தந்த திருக்கோயில் நிர்வாகி மற்றும் மேற்படி குற்றத்திற்கு பொறுப்பான தனியார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முகவரியில் காணும் திருக்கோயில் நிர்வாகியருக்கு உறுதியாக சுட்டிக் காட்டி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.”
இந்த அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த திரு ஞானசம்பந்தன் சுற்றறிக்கையை கீழ்க்கண்ட கோயில்களுக்கு அனுப்பினார்.
யதோத்தகாரி பெருமாள் திருக்கோயில்
கூரத்தாழ்வார் திருக்கோயில்
பிரவான வண்ணர் திருக்கோயில்
அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்
விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் (வரதராஜ பெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது)
பெரும்பாலான கோவில்களில் உட்கார்ந்து பிரசாதம் வாங்குபவர்களை விரட்டுவதை நிறுத்தி விட்டார்கள். தீர்த்தம் கொடுப்பதிலும் பாகுபாட்டை சரி செய்து விட்டார்கள். நாட்டின் சட்டம் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இந்த ஆணைக்குப் பிறகும் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. வரதராஜபெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினருக்குச் சொந்தமான இரண்டு துணைக் கோயில்களில் முறையை மாற்றாமல், பார்ப்பனர்களுக்கு கோயிலின் உட்பிரகாரத்தில் வைத்தும், மற்றவர்களுக்கு வெளியில் திண்ணையில் வைத்தும் பிரசாதம் வழங்கும் பழக்கத்தை தொடர்ந்தார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆணையை அமல்படுத்த அரசு நிர்வாகத்தால் முடியவில்லை. ‘அரசு ஆணை மதிக்கப்படா விட்டால் அதை தட்டிக் கேட்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன’ என்று நீதிமன்றத்தை அணுகினார் திரு மாதவன்.
நீதிமன்ற உத்தரவும் அதற்கான மரியாதையும்
2008-ல் விமலநாதன் என்ற வக்கீலை அணுகி அவர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் தீபாவளி நேரத்தில் அக்டோபர் 30, 2008 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ கே கங்குலி மற்றும் நீதிபதி பி ஜோதிமணி ஆகியோரின் பெஞ்சுக்கு விசாரணைக்கு வந்தது. புகைப்படங்கள் மூலம் கோவிலில் நடக்கும் ஒதுக்குமுறையைய விளக்கியதும் அறநிலையத் துறையின் ஆணையை அங்கீகரித்து அதை உறுதியாக செயல்படுத்தும்படி நீதிபதிகள் உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர். கலெக்டருக்கும், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் வக்கீலே கடிதம் எழுதி அனுப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஆணையர் மட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கடைசி நாள் பண்டிகையில் அனைத்து சாதியினரும் வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாளமுனி சன்னதியின் உள் மண்டபத்தில் நுழைந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ‘சூத்திரால்லாம் கோயிலுக்குள் வந்து விட்டார்கள்’ என்று பார்ப்பன சாதியினர் தகராறு செய்தனர் (வீடியோ). 1959 கோயில் நுழைவு உரிமை சட்டம் அந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.
24.1.2008 குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், அதே மாதத்தில் நக்கீரன் இதழிலும் இது பற்றிய விபரங்கள் வெளியாகின.
இவ்வளவுக்கும் பிறகும் யதோத்தகாரி கோவிலிலும், வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாள முனி சன்னதியிலும் பிரசாதம் வழங்கும் முறையிலும், கோயிலில் நுழைந்து வழிபாடு செய்வதிலும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை கற்றுத் தேர்ந்து வைணவ பஞ்ச சமஸ்காரங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், வழிபாட்டு பாடல்களை பாடும் ஊழியராக மற்ற சாதியினரை சேர்த்துக் கொள்வதில்லை. அத்தகைய தேர்ச்சி இல்லாதவர்களாக இருந்தாலும் பார்ப்பன சாதியினரை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த குழுவினர் மட்டும்தான் வழிபாடு நடக்கும் போது உள் மண்டபத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் உள்ளே நுழையவோ பாடல்களை பாடவோ அனுமதிப்பதில்லை. ‘நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை மற்றவர்கள் பாடுவது சட்டப்படி தவறு’ என்ற அவதூறையும் சொல்லி வருகிறார்கள் பார்ப்பனர்கள்.
பாடல் வழிபாடு முடிந்து பிரசாதம் வழங்கும் போதும் உள் மண்டபத்துக்கு அனைத்து பக்தர்களையும் அழைத்து தீர்த்தமும் பிரசாதமும் வழங்காமல் பெரும்பகுதி பிறசாதி பக்தர்களை வெளியிலேயே நிற்க வைத்து வெளியில் வந்து பிரசாதம் வழங்குகிறார்கள். உள்ளே வரத் துணியும் மற்ற சாதியினரை ‘சாமிக்கு அபச்சாரம்’ என்று உளவியல் ரீதியாக மிரட்டி சட்டத்தை கடைப்பிடிக்காமல் போக்கு காட்ட முயற்சிக்கிறார்கள். 2011 அக்டோபர் 30ம் தேதி மணவாளர் மாமுனி சன்னிதி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன்.
‘பிராமணாளுக்கு’ உள்ளே – ‘சூத்ராளுக்கு’ வெளியே
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
மக்கள் போராட்டம்தான் ஒரே வழி
சட்டத்திலும், அறநிலையத் துறை ஆணையிலும், நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக சொல்லியிருப்பது போல ‘சாதி, பாலினம், பிறந்த இடம் இவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கோவியில் வழிபாடு நடத்த அல்லது கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படக் கூடாது’. அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து தமது வருணாசிரம சாதீய அடக்குமுறையை இன்னமும் கைப்பிடிக்கும், இந்து மத கோயில்களை தமது பிடிக்குள் வைத்திருக்கும் சிறுபான்மை பார்ப்பனர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது?
இந்தியாவின் சாதி பிரிவினை வெளிப்படையாக தெரிவதில்லை. யாரையும் பார்த்தவுடன் வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியாது. முகத்தைப் பார்த்து யாரையும் ஜாதி சொல்ல முடியாது. அமெரிக்காவின் இனப் பிரிவினை வெளிப்படையாக தெரியும் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது. ‘இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பார்ப்பனீயம் இன்றும் இங்கே செய்து கொண்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் சொல்லுகிறார்.
அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் இனவெறியை கடைப்பிடித்த பெரும்பான்மை வெள்ளை இனத்தவருக்கு எதிராக தமது குடியுரிமைகளை நிலைநாட்ட 1960களில் மேற்கொண்ட போராட்டங்கள் புகழ் பெற்றவை. ஆனால் நாமோ இன்னும் இத்தகைய இழிவுகளை கண்டும் காணாமலும் சகித்துக் கொள்வது சரியா?
கறுப்பர் இன போராட்டக் குறிப்பு
காஞ்சிபுரம் கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஒதுக்குமுறையை போன்ற அடக்குமுறைக்கு ஆளான கறுப்பு இன மாணவர்கள் நடத்திய போராட்ட விபரம், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு போராடுவதற்கான வழிமுறையை காட்டுகிறது.
1960ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு வடக்கு கரோலினாவின் கிரீன்ஸ்பரோ நகரில் இருக்கும் வுல்ஸ்வோர்த் என்ற உணவு விடுதியில் நான்கு கறுப்பு இன கல்லூரி மாணவர்கள் மதிய உணவு மேசையில் உட்கார்ந்தார்கள். கறுப்பு இன மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாற மறுத்து விட்டார்கள் விடுதியினர். L வடிவத்தில் அமைந்த 66 பேர் உட்காரக் கூடிய நீண்ட மதிய உணவு மேசையின் இருக்கைகள் வெளளை இனத்தவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. கறுப்பு இனத்தவர் நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.
மாணவர்கள் மாலை 5.30 மணிக்கு கடை மூடப்படுவது வரை உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலும் கடைக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். 27 ஆண்களும் 4 பெண்களும் உணவு மேசைகளில் உட்கார்ந்து கொண்டு தமது கல்லூரி பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். புதன் கிழமை போராட்டக் காரர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை 300ஆக பெருகியது. சனிக்கிழமை இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 600 பேர் சேர்ந்திருந்தார்கள்.
அடுத்த திங்கள் கிழமை போராட்டம் பக்கத்து நகரங்களுக்கும் பரவியது. வியாழக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் போராட்டம் விர்ஜினியா, தெற்கு கரலினா, டென்னஸ்ஸி மாநிலங்களுக்கும் பரவியது. மாத இறுதிக்குள் தெற்கு மாநிலங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் அனைத்திலும் பரவி சுமார் 70,000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் பரவிய குடியுரிமை இயக்கத்தின் ஆரம்பமாக இந்த உள்ளிருப்பு போராட்டம் அமைந்தது.
இந்து மத கோவில்களில் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் இத்தகைய உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது மிகவும் தேவையான ஒன்று. சட்டத்தை பொறுத்தவரை ஆகம விதிகள், இறை நம்பிக்கையாளர்களின் மத உரிமை என்ற பெயரில் பார்ப்பனியத்தின் தீண்டாமையை சட்டப் பூர்வமாகவே வழங்குகிறது. இன்னொரு புறம் அப்படி பாகுபாடு காட்டக் கூடாது என்ற பிரிவுகளை மேலே பார்த்தோம். இந்த முரணை ஒழித்து அனைவருக்கும் அனைத்து உரிமை என்பதை இந்து மதத்தில் கொண்டு வரவேண்டுமானால் பல சமத்துவ போராட்டங்கள் நடத்தியாக வேண்டும். நடத்துவோம்.
கேள்வி 1: திரு. மணி அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு எதனை நோக்காக கொண்டிருக்கிறது..?
சி.பி.எம் இடுக்கி மாவட்ட செயலர் மணி
கேராளவின் இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சி செயலாளர் எம்.எம்.மணி கடந்த சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ” 1980களில் நமது கட்சி எதிரிகளை பட்டியல் போட்டு அழித்தது. இந்தக் கொலைகளெல்லாம் சி.பி.எம்முக்கு புதிததல்ல, ஏறக்குறைய 13 காங்கிரஸ் ஊழியர்களை 1980களின் ஆரம்பத்தில் முடித்திருக்கிறோம். முதல் கொலை சுட்டு நடத்தப்பட்டது, இரண்டாவது சாகும் வரை அடித்து முடிக்கப்பட்டது, மூன்றாவது குத்திக் கொன்றது. இதன் பிறகு எஞ்சிய காங்கிரசு ஊழியர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பின்னர் திரும்பினாலும் நமது கட்சி தலைவர்களிடம் அனுமதி வாங்கித்தான் இருந்தார்கள் “.
இந்த பேச்சு ஊடகங்களில் வெளியான பிறகு பரவலான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் நர வேட்டை புகழ் மோடியும் உண்டு. தற்போது மணியின் பேச்சை வைத்து கேரள போலீஸ் கொலை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. மணி குறிப்பிட்ட கொலைகளுக்காக அப்போது நடந்த வழக்குகளில் போதிய சாட்சிகளில்லை என்று சி.பி.எம் கட்சியினர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
மணி இப்படி பேசவில்லை என்றாலும் சி.பி.எம் கட்சியின் அரசியல் வழி முறை என்பது இத்தகைய ரவுடித்தனத்தைத்தான் மையமாக கொண்டு இயங்குகிறது. காங்கிரஸ்காரர்களை மட்டும் இவர்கள் கொல்லவில்லை, தங்கள் அரசியலை எதிர்க்கும் எவரையும் இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள். கேரள சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த டி.வி சந்திரசேகரன் அங்கிருக்கும் கோஷ்டி பூசலின் நியதிப்படி அச்சுதானந்தனின் ஆதரவாளர். இவர் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி “புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” யை ஆரம்பிக்கிறார். சில நாட்களிலேயே கோழிக்கோடு நகரில் மே 4ஆம் தேதி சி.பி.எம் குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
1967இல் வங்கத்தில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த கூட்டணி அரசில் சி.பி.எம்மின் ஜோதிபாசுதான் போலிசுத்துறை அமைச்சர். அப்போது சி.பி.எம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற முழக்கத்துடன் இடிமுழக்கமாய் எழுந்த நக்சல்பாரி எழுச்சி பல மாநிலங்களில் சி.பி.எம் கட்சியை உடைத்தது. எனினும் மார்க்சிய லெனினிய கட்சியின் முன்னணியாளர்களைக் கொன்றும் கைது செய்தும் ஒழித்ததில் சி.பி.எம் அமைச்சர்களுக்குத்தான் முக்கியப் பங்குண்டு.
சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களில் கூட ஆயுதமேந்திய சி.பி.எம் குண்டர் படைதான் மக்களை தாக்கியதோடு பலரை கொன்றுமிருக்கிறது. வங்கத்தில் இவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் முழுவதும் இத்தகைய ரவுடியிச வழிமுறையின் மூலம்தான் ஆட்சியைத் தக்க வைத்ததோடு பல தேர்தல்களில் வென்றும் தொடர்ந்தனர். நிறுவனமயமாக்கப்பட்ட இந்த குண்டராட்சி மீதான மக்களின் வெறுப்புதான் மம்தா பானர்ஜியை ஆட்சிக்கு கொண்டு வந்தது. இன்று மம்தா பானர்ஜி கூட சி.பி.எம்மின் குண்டர் வழிமுறையினைத்தான் தமது கட்சிக்கும் அமல்படுத்துகிறார்.
சி.பி.எம் கட்சி செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் இவர்கள் ஜனநாயகக் காவலர்கள் போல குரல் கொடுப்பார்கள். அதிகாரம் இருக்கும் கேரள, வங்க மாநிலங்களில் ஒரு கார்ப்பரேட் குண்டர் படை போல செயல்படுவார்கள். புரட்சியை தூக்கி எறிந்து விட்டு ஓட்டு பொறுக்கும் அரசியலில் சரணாகதி அடைந்து விட்ட சி.பி.எம்மின் இத்தகைய வழிமுறை ஒரு முரண் போலத் தோன்றலாம். அதாவது புரட்சியே இல்லை என்றான பிறகு இந்த வன்முறை எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கான பதிலும் அவர்கள் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் என்பதிலேயே அடங்கியிருக்கிறது. இந்தியாவில் புரட்சியை நடத்த வேண்டும் என்ற திட்டமோ, கொள்கையோ, அரசியலோ, நடைமுறையோ அவர்களிடத்தில் இல்லை. இதனாலேயே தங்கள் அரசியல் கொள்கையினை மக்களிடத்தில் கொண்டு போய் சொந்த முறையில் அவர்களை அரசியல் படுத்தும் பணி தேவையற்றதாகி விடுகிறது. இப்படித்தான் இவர்கள் மக்களுக்கு பொறுப்பற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். ஆக தங்களது செல்வாக்கு, பலத்தை காட்டுவதற்கு பிற ஓட்டுக்கட்சிகள் கையாளும் குறுக்கு வழிகளையே நாடுகிறார்கள்.
ஆனால் மற்ற கட்சிகளுக்கு இல்லாத படி சி.பி.எம் கட்சியினருக்கு ஒரு வலுவான தொண்டர் படை இருக்கிறது. இதன் போக்கில் உள்ளூர் அளவில் தங்களது அரசியலை எதிர்ப்போரை இத்தகைய குண்டர் படையினை வைத்து மிரட்டும் வழிமுறைகளை அவர்கள் இயல்பாக கையாளுகிறார்கள். அந்த வகையில் ஒரு வகையான ‘குழு பலமே’ தொண்டர்களது அரசியலாக இருக்கிறது. இதற்கு கைமாறாக ஆட்சியிலிருக்கும் போது தொண்டர்கள் பிழைத்துக் கொள்ளும் ஏற்பாடுகள் அரசு மூலமாகவோ, அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவோ செய்யப்படுகின்றன. இறுதியில் ஒரு சி.பி.எம் தொண்டன் அங்கே அரசியல் உணர்வைப் பெறுவதற்குப் பதில் வயிற்றுப் பிழைப்புக்கான நிறுவன உணர்வை பெறுகிறான். இப்படித்தான் இவர்களது வன்முறை அரசியல் வேர் கொள்கிறது.
ஒரு வேளை தமிழகத்தில் சி.பி.எம் ஆட்சி நிலவுமென்றால் ம.க.இ.க தோழர்கள் நிறையே பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இவர்களது அணிகளோடு அரசியல் பேசச் சென்றால் அதை தவிர்ப்பதற்கு அரசியலற்ற அவதூறுகளையே அணிகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். அதாவது ம.க.இ.க தோழரின் பையில் துப்பாக்கி இருக்கும், அவர்களோடு சேர்ந்தால் போலீசு கைது செய்யும், இப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்டுகிறார்கள். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இரண்டையும் படிக்கக் கூடாது என்று இவர்கள் தங்களது அணிகளுக்கு அறிவிக்கப்படாத விதியையே வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் மீது எழுப்பப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கு என்றைக்குமே பதில் சொன்னது கிடையாது. சொன்னதெல்லாம் அவதூறுகள்தான். நக்சல்பாரி கட்சி முன்வைத்த அரசியல் விமரிசனங்களுக்கு சி.பி.எம் முன்வைத்த பதில் இவர்களெல்லாம் சி.ஐ.ஏ கைக்கூலிகள் என்பதுதான். எனவே அரசியலும் இல்லாமல், குண்டர் படை வன்முறையும் இணையும் வேதியில் இப்படித்தான் சி.பி.எம் கட்சியில் இயங்கி வருகிறது.
இத்தகைய பாதை உலகமெங்கும் உள்ள போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரியவை. இவர்கள் வியந்தோடும் போலீக் கம்யூனிசம்தான் 1950 பிந்தைய ரசியாவிலும், மாவோவுக்கு பிந்தைய சீனாவிலும் ஆட்சியில் இருந்தது. தற்போது சீனாவில் மட்டும் தொடர்கிறது.
எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒரு போலிக் கம்யூனிஸ்ட்டு கட்சிக்குக் கூட வன்முறை என்பது தற்காப்பிற்காக தேவைதான். இந்து மதவெறியர்களை எதிர்த்து குஜராத்தில் ஒரு கம்யூனிசக் கட்சியை அதுவும் போலிக் கம்யூனிசக் கட்சியை கட்ட வேண்டுமென்றால் கூட அது இரத்தம் சிந்தாமல் நடக்காது. ஆனால் சி.பி.எம் கொண்டிருப்பது தற்காப்பிற்கான வன்முறை அல்ல. தங்களது சமரச அரசியலை, சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்கும் வழிமுறையாக இந்த வன்முறையினை அவர்கள் கட்சி ரீதியாகவே கையாளுகிறார்கள். இந்த வன்முறைதான் அவர்களது கட்சியில் பலத்தை, செல்வாக்கை நிர்ணயிக்கும் அளவு கோலாக உள்ளது.
அந்த வகையில் மக்கள் பயந்து கொண்டுதான் இவர்களை ஆதரித்தாக வேண்டும். வங்கத்தில் பல ஆண்டுகளாக இதுதான் நடந்தது. இனியும் நடக்கும். மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த கும்பல் வன்முறை மூலம் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படுகிறார்கள். அதன் விளைவை நாடு முழுவதும் பார்க்கிறோம். தமிழகத்தில் கூட இவர்களது கூடாரம் பல தளங்களில் காலியாகி வருகிறது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் புரட்சியை நேசிக்கும் பல சி.பி.எம் தோழர்கள் இணைந்து வருகின்றனர்.
இணையத்தில் இருக்கும் சி.பி.எம் தோழர்களும் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமென இந்த பதிலை முடித்துக் கொள்கிறோம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது மத்திய அரசு முன்வைக்கும் ஒரே காரணம், சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, விலை உயர்த்தாமல் பெட்ரோலியப் பொருட்கள் வழங்கப்படுவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி இத்தனை கோடி ரூபாய் நட்டத்தில் செயல்படுகின்றன, இனியும் இந்த சுமையை தாங்க முடியாது….என்பதை பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக் காரணம் அப்பட்டமான பொய் என்பதோடு, வரிகள், அம்பானிக்கு மானியங்கள், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச விலை என்று ஏராளமான முறையில் மக்களை ஏமாற்றி வருகிறது மத்திய அரசு. அத்தகைய விவரங்கள ஆதாரங்களோடு முன்வைக்கும் புதிய ஜனநாயகம் கட்டுரை ஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு முன்வந்ததை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையில் உள்ள விலைகள், புள்ளி விவரங்கள் இன்று கூடியிருக்கின்றன என்பதைத் தாண்டி மற்றவை அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகின்றன. படியுங்கள்!
– வினவு
பெட்ரோல் தட்டுப்பாட்டினால் சென்னையில் அண்ணா சாலை பெட்ரோல் பங்கில் கைகலப்பு – படம் thehindu.com
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை உயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; (2008 நிலவரம்) டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.
இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.
எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ”ரெடிமேட்” காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ”சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்” மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப் பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) நமது நாட்டில் தேவையான அளவிற்குக் கிடைப்பதில்லை என்றாலும் கூட, இந்தியாவின் (பெட்ரோலிய) தேவையில் ஏறத்தாழ 30 சதவீதத்தை உள்நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான் பூர்த்தி செய்கிறது. வியாபாரம் என்று பார்த்தால்கூட, உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடாக விற்பனை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மைய அரசோ, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது என்னென்ன உற்பத்திச் செலவீனங்கள் ஏற்றப்படுமோ, அவை அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மீதும் ஏற்றி வைத்து விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புகளை, ஃபாரின் சரக்குகளைப் போல விற்கும் மோசடி வியாபாரத்தை, மைய அரசு சட்டபூர்வமாகவே நடத்தி வருகிறது.
ரூபாயின் சரியும் மதிப்பை காப்பாற்ற வக்கற்ற அரசு பெட்ரோலின் விலையை ஏற்றி மக்களை கொல்கிறது
இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து அரசுக்கு ஆக. 2005இல் அளித்துள்ள அறிக்கையில், ”இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கடற்பயணச் சரக்குக் கட்டணம், துறைமுகக் கட்டணம், சுங்கவரி போன்ற செலவீனங்களை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து விலை நிர்ணயம் செய்யக் கூடாது” என அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு, ”உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் வரிகள் மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை சொல்ல ரங்கராஜன் கமிட்டியை அமைத்திருப்பதாக”க் கூறி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை அறிக்கையைக் கரையானுக்கு இரையாக்கியது, மைய அரசு.
ரங்கராஜன் கமிட்டியால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில், உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக எவ்வித ஆலோசனையும் வழங்கப்படவில்லை என்பதைக் ”கண்டுபிடித்த” நாடாளுமன்ற நிலைக்குழு, “”மைய அரசு, நிலைக்குழுவிடம் பொய் சொல்லியதாக”க் குற்றஞ்சுமத்தியது. மேலும், ஜூன் 2006-இல் அன்று அரசுக்கு அளித்த மற்றொரு அறிக்கையில், ”உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துமாறு” மீண்டும் வலியுறுத்தியது, நாடாளுமன்ற நிலைக்குழு. நாடாளுமன்ற நிலைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு இணையாக மதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அது அளித்த பரிந்துரைகளோ, பைசா காசுக்கும் பயன் இல்லாமல், செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து போனது.
கச்சா எண்ணெயின் அடக்க விலையை நிர்ணயிப்பதில் நடந்து வரும் இப்பகற் கொள்ளை ஒருபுறமிருக்க, கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது, மைய/மாநில அரசுகளின் கஜானாவை நிரப்பும் அமுதசுரபியாக இருந்து வருகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 41.25. இதில் ரூ. 23.97ஐ, வரியாக, மைய/மாநில அரசுகள் பறித்துக் கொள்கின்றன. இதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால், 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ. 17.28 தான்.
பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள் சிறீலங்காவில் 37%, தாய்லாந்தில் 24%, பாகிஸ்தானில் 30%, மற்ற பல நாடுகளில் 20 சதவீதமாகவும் இருக்கும்பொழுது இந்தியாவில், பெட்ரோலியப் பொருட்கள் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி மட்டும் 18.9 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை எகிறிப் பாய்கிறது. இவ்விற்பனை வரி தவிர்த்து, சுங்கவரி, கலால்வரி, நுழைவுவரி, கல்விவரி, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என அடுக்கடுக்காக பெட்ரோலியப் பொருட்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒட்டு மொத்தமாக, ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 57 சதவீதமும்; ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விற்பனை விலையில் 35 சதவீதமும் பல்வேறு வரிகளாக மக்களிடமிருந்து பிடுங்கப்படுகின்றன.
பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குக் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 2004-05ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய அரசுக்குக் கிடைத்த வரி வருமானம் 77,692 கோடி ரூபாய்; மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய். அந்த ஆண்டு, மைய அரசிற்கு சுங்கவரி மூலம் கிடைத்த வருமானத்தில் (54,738 கோடி ரூபாய்), 35 சதவீதப் பங்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும், அவ்விலை உயர்வுக்கு நேர் விகிதத்தில் அரசின் வரி வருமானமும் அதிகரித்து வந்திருக்கிறது. 2005-06 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 53,182 கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கு பின்னர் 64,215 கோடி ரூபாயாகத் திருத்தப்பட்டது. அந்த பட்ஜெட் ஆண்டின் இறுதியில் சுங்க வரி வருமானம் 65,050 கோடி ரூபாயாக அதிகரித்தது. பட்ஜெட்டில் போட்டதைவிட 22.32 சதவீதம் அதிகமாக சுங்கவரி வசூலானதற்கு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும் காரணமாக அமைந்தது என மைய அரசின் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் ஏற்பட்டு, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வேட்டு வைத்துவிடும் என்பதால், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட, பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்குமாறு அரசிடம் கூறி வருகிறார்கள். ஆனால் மைய அரசோ, இந்த வரிக் கொள்ளையை விரிவாக்குவதில்தான் குறியாக இருந்து வருகிறது.
எங்கும் இல்லாத அதிசயமாக, எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சி வரி என்ற பெயரில் புதுவிதமான வரியொன்றை உள்நாட்டு கச்சா எண்ணெய் மீது விதித்து, அதன்மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் வசூலித்து வருகிறது, மைய அரசு. 1974ஆம் ஆண்டு தொடங்கி விதிக்கப்பட்டு வரும் இவ்வரியின் மூலம், இதுநாள்வரை ஏறத்தாழ 64,000 கோடி ரூபாய் மைய அரசிற்கு வருமானம் கிடைத்திருந்தாலும், எண்ணெய் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இவ்வரி வருமானத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள தொகை 902 கோடி ரூபாய் தான். மீதிப் பணம் முழுவதையும் மைய அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்திருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருட்களின் மீது கல்வி வரியைக் விதித்து வருகிறது மைய அரசு; வளர்ச்சி வரியைச் சுருட்டிக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களையே அம்போ எனக் கைவிட்டுவிட்ட மைய அரசு, கல்வி வரியில் மட்டும் கை வைக்காமல் விட்டிருக்குமா?
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயரும் பொழுது, அதனின் பாதிப்பில் இருந்து உள்நாட்டு நுகர்வோரைக் காப்பாற்ற 15,000 கோடி ரூபாய் பெறுமான அவசர கால நிதியொன்றை மைய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அரசுக்குப் பதிலாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை சந்தை தீர்மானிக்கும்படியான சீர்திருத்தம் இத்துறையில் புகுத்தப்பட்டபொழுது, அந்த 15,000 கோடி ரூபாயையும் மைய அரசே சுருட்டிக் கொண்டது.
இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை தரகு முதலாளி அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது. எனினும், இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (59 சதவீத ஏற்றுமதி) முன்னணியில் இருக்கிறது. அரசாங்கம் அம்பானியிடம் கொண்டுள்ள வர்க்கப் பாசம்தான் இதற்குக் காரணம். பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இந்தச் சலுகைகளை அம்பானியே ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, ஏற்றுமதி வர்த்தகத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அடக்கி வாசிக்கின்றன.
இதனை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, ”சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரைத்தது.
இந்த ஆலோசனையைக் கேட்டு, அம்பானி அலறுவதற்கு முன்பாகவே, அரசாங்கம் அலறியது. ”இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வண்ணம் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது” எனக் கூறி, அம்பானியின் வயிற்றில் பாலை வார்த்தது.
அரசாங்கத்தின் கொள்கை எப்படி ஏறுக்கு மாறாக இருக்கிறதென்று பாருங்கள். பெட்ரோலும், டீசலும், மண்ணெண்ணெயும், சமையல் எரிவாயுவும் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் எனக் கவலைப்படுகிறுது. மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் தரப்படும் “மானியத்தை’ நிறுத்த வேண்டும் எனத் திருவாய் மலரும் மன்மோகன் சிங், அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறார்.
ஒரிசா : விலையேற்றத்தை கண்டித்து மன்மோகன் படம் எரிப்பு , மே 2012 – படம் ராய்டர்ஸ்
2004-05 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் அரசுக்குக் கிடைத்த மொத்த வரி வருமானம் 1,20,946 கோடி ரூபாய் என்று ஏற்கெனவே பார்த்தோம். இவ்வரி வருமானம் போக, அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை இலாப ஈவாக மைய அரசிற்கு அளித்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த பொழுது, அதற்கேற்ப உள்நாட்டில் விலை குறைப்பு செய்யாமல் அடித்த கொள்ளை தனிக்கதை. இப்படியாக பெட்ரோலியத் துறை பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் அதேசமயம், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் 2005-06ஆம் ஆண்டில் அரசு கொடுத்த “மானியமோ’ வெறும் 2,535 கோடி ரூபாய்தான். (ஆதாரம்: தினமணி, 13.1.08)
பொது மக்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியாகப் பறித்துக் கொண்டுவிட்டு, 2,500 கோடி ரூபாயைத் திருப்பித் தருவதை மானியம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த 2,500 கோடி ரூபாய் திருப்பித் தரப்படுவதைக் கூட நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவரும் மன்மோகன் சிங்கின் மேதமைக்கும், ஒரு வழிப்பறித் திருடனின் இரக்கமின்மைக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்து விட முடியும்?
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு அமெரிக்கா, ஈராக்கில் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர், அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க டாலரும் நசிவடைந்திருப்பது உள்ளிட்டுப் பல்வேறு திரைமறைவுக் காரணங்கள் உள்ளன. இவற்றைக் கண்டித்து அம்பலப்படுத்த முன்வராத மன்மோகன் சிங், பெட்ரோல் டீசலின் விலையை உயர்த்தி, மக்களின் இரத்தத்தைக் குடிக்கிறார். இப்படிப்பட்டவரை பொருளாதாரப் புலி என அழைப்பதைவிட, ஆட்கொல்லிப் புலி என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
____________________________________________
– புதிய ஜனநாயகம், மே – 2008
__________________________________________________
பெட்ரோல் தட்டுப்பாட்டினால் அவதி - சென்னை அண்ணா சாலை பெட்ரோல் பங்கில் கைகலப்பு - படம் thehindu.com
பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த கையோடு பெட்ரோல் விலையை ஏழு ரூபாய்க்கும் மேல் உயர்த்தி மக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த விலை உயர்வை யார்தான் கண்டிக்கவில்லை?
காங்கிரசு மந்திரி ப.சிதம்பரம் கூட கசப்பான முடிவு என்று ‘வருத்தப்’படுகிறார். இவர்களையெல்லாம் ஆட்சிக்கு அனுப்பியது கசப்பான முடிவு என்று மக்கள் உணர்ந்தால் இந்த கசப்பு வேடமெல்லாம் முடியுமா? காங்கிரசுக் கூட்டணி அரசில் அங்கம் வகித்துக் கொண்டே திரிணாமூல் காங்கிரசும், தி.மு.கவும் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றன. ஏன் விலை உயர்வைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறும் வரை ஆட்சிக்கு தரும் ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா என்று சொல்லவில்லை? கூட்டணி பிழைப்புவாதத் தருமத்தையும் மீறக்கூடாது, மக்கள் முன் நடிக்கவும் வேண்டும்.
இது போக ஆளும் கட்சி அ.தி.மு.க முதல், எதிர்க்கட்சி தே.மு.தி.க வரை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மறுகாலனியாக்கத்தை முற்றிலும் ஆதரித்துக் கொண்டே அதன் விளைவுகளின் பால் வரும் மக்கள் கோபத்தை வலுவிழக்க செய்வதற்கே ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் நாடக எதிர்ப்பு பயன்படுகின்றன.
மக்கள் வாங்கும் பெட்ரோலில் வரி இரு பங்கு, விலை ஒரு பங்கு என்று ஒரு கொள்ளை. இதை எந்த மாநில அரசுகளும் தட்டிக் கேட்பதில்லை. வரியையும் ரத்து செய்வதில்லை. அடுத்து எண்ணெய் நிறுவனங்களின் இலாபக் குறைப்பையே நட்டமென்று காட்டும் கணக்கு மோசடிகள். சென்னையிலோ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு. இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் மோசடியை மக்கள் என்று உணர்வார்கள்?
உணர்த்த வேண்டும் என்பதன் துவக்கமாக ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்தை முற்றுகையிடுகின்றன. அனைவரும் வருக!
பாதி நேரம் படப்படிப்பு! மீதி நேரம் ஆக்கிரமிப்பு !!
அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு நகரம், மதிய நேரம். டாப் கன் என்ற திரைப்படம் ஓடும் திரையரங்கின் மக்கள் வெளியேறும் வாசற்படி அருகே அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பங்களுடன் ராணுவ அலுவலர்கள் இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இந்த ஊரில் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் இந்தத் திரைப்படம் ஓடும் ஊர்களில் ராணுவ அலுவலர்கள் இப்படித்தான் காத்திருக்கிறார்கள். ஏன்?
வியட்நாம் போரில் வாங்கிய அடிக்குப் பிறகு சொந்த நாட்டு மக்களே அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திய போது, அமெரிக்க அரசு ஒன்றை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் ராணுவத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு. எனவே ராணுவத்தில் போதுமான இளைஞர்கள் சேரவில்லை. என்னதான் ஆக்கிரமிப்புப் போர் என்றாலும் சுவிட்சை போட்டு நிறைவேற்றி விட முடியாதே! சண்டை போடுவதற்கு ஆள் வேண்டுமே!
இந்த நேரத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு கை கொடுத்த படம் தான் டாப் கன். அந்தப் படத்தின் திரைக்கதையை முதலில் பார்த்த போதே ராணுவத்தினர் முடிவு செய்து விட்டார்கள். இந்தப் படம் இளைஞர்களை அமெரிக்க ராணுவத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்யும் என்று. அதனால்தான் படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் விண்ணப்பத்துடன் ஆள் போட்டார்கள்.
டாப் கன் திரைப்படத்தின் கதை முழுவதும் அமெரிக்க விமானப் படையின் சாகசங்கள் நிறைந்தது. அதனுடன் தேசபக்தி, காதல், காமம் என சகலமும் கலந்து கட்டிய மசாலா படம்தான் அது. இத்தகைய படத்தை செட் போட்டு பிரமாண்டமாக எடுக்க வேண்டுமானால் பட்ஜெட் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டி விடும். படக் குழுவினர் எளிமையான வழியைக் கையாண்டார்கள். தங்கள் படத்தின் திரைக்கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறோம் என்று அமெரிக்க ராணுவத்தின் காலில் விழுந்து விட்டார்கள்.
அவ்வளவு தான், அமெரிக்க ராணுவத்திடமிருந்து எல்லாம் கிடைத்தது. எல்லாம் என்றால் ராணுவ ஆயுதங்கள், வண்டிகள், உடைகள், ஏன் ராணுவ வீரர்கள் சிலரே துணை நடிகர்களாக நடித்து அசத்தி விட்டனர். டாப் கன் படத்தின் வெற்றி அமெரிக்க ராணுவம் விரிவாவதற்கு உதவியது. ஆம், ராணுவம் ஆள் பிடிப்பதற்கென்றே இன்னொரு அலுவலகத்தை ஹாலிவுட்இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறந்தது.
பல நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அங்கிருந்து கொள்ளையடிக்கும் செல்வத்தை வைத்து தான் அமெரிக்கா ஒரு வல்லரசாக நீடிக்க முடியும். அதனால் அமெரிக்கா தான் ஒரு ராணுவ வல்லரசு என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்க தேர்ந்தெடுத்த சிறந்த வழிகளில் ஒன்று போர், மற்றொன்று சினிமா. சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அமெரிக்க ராணுவமும், பெண்டகனும் பார்க்கவில்லை. அதனால் தான் ஹாலிவுட்டுடன் அமெரிக்க ராணுவம் ஒரு கள்ள உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட்டில் இருந்து சினிமா எடுக்க வருபவர்கள் என்ன உதவி கேட்டாலும் அமெரிக்க ராணுவம் உடனே செய்யும். அத்தகைய உதவி பெறும் திரைப்படங்களில் போர்க் காட்சிகள் முதல் பல காட்சிகள் பிரமாண்டமாகவும், தத்ரூபமாகவும் இருக்க இதுவே முதல் காரணம். படத்தை ராணுவ களத்திலேயே எடுக்கவும் அனுமதி உண்டு. ராணுவத்தின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள், தளவாடங்கள், கப்பல்கள் ஏன் தேவைப்படுமென்றால் ராணுவ வீரர்களைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாம் இலவசம்.
ராணுவம் செய்யும் இந்த உதவிக்கும் ஒரு விலை உண்டு. அவர்களிடம் முதலிலேயே திரைக்கதையைக் கொடுத்து விட வேண்டும். அவர்கள் சொல்லும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அமெரிக்க ராணுவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ராணுவத்தின் மீது மக்களுக்கு மதிப்பு வருவது போல் படம் இருக்க வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்டினால் கூட அது ஒரு குறிப்பிட்ட ராணுவ வீரன் அல்லது அதிகாரியின் தவறு மட்டுமே என்றுதான் கதை இருக்க வேண்டும். சுருக்கமாக டாப் கன் திரைப்படம் போல அக்கதை இருக்க வேண்டும். படத்தைப் பார்த்தால் அமெரிக்க ராணுவத்தின் பெருமையை எண்ணி அதில் சேர வேண்டும் என மக்கள் நினைக்க வேண்டும்; பிற நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயம் வர வேண்டும்.
இப்படித் தங்களது படைப்புரிமையைப் பலியிட்டுத்தான் போர்ப் படங்கள் நிறைய வருகின்றன. அதே நேரம் அமெரிக்க ராணுவம் தோற்பது போன்ற ஒன்றிரண்டு படம், அதுவும் பிரமாண்டமாக வருகின்றதே என்று உங்களுக்குத் தோன்றலாம்.
ப்ளாக் ஹாக் டவுண் என்ற படம் 1993-ம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்தின் சோமாலிய நாட்டின் மீதான படை எடுப்பைப் பற்றியது. உண்மையில் அங்கு அமெரிக்க ராணுவம் புறமுதுகிட்டு ஓடி வந்தது. அந்தப் படத்தை எடுக்க ராணுவம் உதவி புரிந்தது உண்மைதான். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்தனர். திரைக்கதை அமெரிக்க ராணுவ வீரர்களின் ’தியாகத்தை’த் தூக்கிப் பிடிக்க வேண்டும்; கதாநாயகர்களாகக் காட்ட வேண்டும், அவ்வளவு தான். ப்ளாக் ஹாக் டவுண் படத்தைப் பார்த்தால் அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தோல்வியடைவதை நீங்கள் உணர மாட்டீர்கள்; ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி’ விட்டதாக உச்சுக் கொட்டுவீர்கள். சில பத்து அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்காக சில நூறு சோமாலிய மக்கள் கொல்லப்பட்டது குறித்து எந்தக் குற்ற உணர்வுமின்றி, அமெரிக்க ராணுவ வீரனின் கொடூரத்தையே தேசபக்தி, தியாகமாக வியந்தோதும் படம் அது.
“முடியாது! நான் ராணுவத்தை விமர்சித்துப் படம் எடுக்கப் போகிறேன்” என்றால் நீங்கள் சொந்தமாகப் பணம் செலவழித்துதான் அந்தப் பிரமாண்டத்தை திரையில் கொண்டு வர வேண்டும். அது அமெரிக்க ஜனநாயகத்தின் பேச்சுரிமை என்று பீற்றினாலும் உண்மையில் சாத்தியமில்லை. ராணுவத்தின் உதவியுடன் ராணுவத்தைப் போற்றும் ஜால்ரா படங்களின் முன்பு, ராணுவத்தை விமர்சனம் செய்யும் இத்தகைய படங்கள் நிற்க முடியாது. அதாவது அவ்வளவு செலவழிக்க முடியாது.
ஆலிவர் ஸ்டோன் எனும் இயக்குனர், முன்னாள் ராணுவ வீரர், வியட்நாம் போரில் பங்கெடுத்தவர். வியாட்நாமிற்கு சென்ற போது ராணுவ வீரர்களின் உள்மனப் போராட்டங்களையும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், வியட்நாம் மக்களின் துயரத்தையும் நேரில் பார்த்தவர். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் இந்த அனுபவத்தையே படமாக எடுக்கலாம் என நினைத்தார். அவரது இயக்கத்தில் ப்ளாட்டுன்படமும் தயாராகத் தொடங்கியது. இவ்வளவுக்கும் இந்தப் படம் அமெரிக்க ஆக்கிரமிப்பை அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை; மாறாக அமெரிக்க வீரர்களது உளவியல் துன்பம் என்ற கோணத்தில் மட்டுமே விமரிசித்தது. மேலும் அவருக்கு ராணுவத்திடமிருந்து பெரிதாக எந்த உதவியும் தேவைப்படவில்லை.
அவரது திரைப்படத்தின் கதையை மோப்பம் பிடித்த ராணுவத்தினர் முதலில் அதிர்ச்சி அடைந்தனர். படத்தில் ராணுவ வீரர்கள் கஞ்சா புகைப்பது, சக ராணுவ வீரர்களைக் கொல்லும் சதி, அப்பாவி மக்களைக் கொல்லும் கொடூரம், பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது போன்ற காட்சிகள் ஏராளம் இருந்தன என்று தெரிய வந்தது. விளைவு, அமெரிக்காவில் இருந்தே அவரைத் துரத்தி விட்டார்கள். வேறு வழியின்றி ஆலிவர் ஸ்டோன் அந்தப் படத்தை இங்கிலாந்து போய் எடுத்தார்.
ஆலிவர் ஸ்டோனுக்கு முன்பு இதே மாதிரி ஒரு படத்தை எடுக்க முனைந்த ஸ்டான்லி க்யுப்ரிக் நிலமை ஒன்றும் மேம்பட்டதல்ல. அவர் படமான ஃபுல் மெட்டல் ஜாக்கட் திரைப்படத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி என்ற பெயரில் அனுபவிக்கும் கொடுமைகள், அவை அவர்களின் மனதைப் பாதித்து, மனநலம் பிறழ்ந்தவர்களாக அதன் பின் போருக்குச் செல்வது, அதனால் சகலரையும் சுட்டுக் கொண்டே செல்வது என்று அமெரிக்க ராணுவத்தைக் கொஞ்சம் விமர்சித்தது.
ஏன், 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படம் பெண்டகனால் உதவிகள் மறுக்கப்பட்டது. காரணம் எளிமையானது. அதில் இராக்கில் உள்ள அப்பாவி மக்களை அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கொல்லும் காட்சி இடம் பெற்றதுதான். இதில் உண்மை ஒரு சிறு துளி அளவுதான் சொல்லப்படுகின்றது. அதையே நிரகரித்து விடுகிறார்கள். அதன்படி 10 இலட்சம் இராக் மக்களைக் கொன்றதைப் பற்றி எப்பொழுதுமே ஹாலிவுட்டில் படம் வராது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
ராம்போதுவங்கி இண்டிபெண்டன்ஸ் டே வரை ஏராளமான ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம் என்பது அமெரிக்க ராணுவம் போட்ட பிச்சைதான். அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனும், அமெரிக்க சினிமாவின் தலைநகரமான ஹாலிவுட்டும் இணைந்து நடத்தும் வாண வேடிக்கைதான் இந்தப் படங்கள்.
‘கம்யூனிஸ்டுகள்தான் கலை வெளிப்பாட்டு உரிமையில் தலையிடுவார்கள்; ஆணையிடுவார்கள்; பேச்சுரிமையை மறுப்பார்கள்‘ என்று அவதூறு பேசும் அறிஞர் பெருமக்கள், அமெரிக்க சினிமாவின் திரைக்கதையை விருப்பம் போல யாரும் எழுத முடியாது, அது இராணுவம் மட்டுமே எழுத முடியும் என்பதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். அந்த நீக்கம் ஏன் என்பதை அவர்களது வாயாலேயே முதலில் பார்த்து விடுவோம்.
ஹாய் மதன் கேள்வி – பதிலுக்கு வந்த கேள்வியும் அதற்கு மதன் அளித்திருக்கும் பதிலும் இந்த பாரதப்போரின் துவக்கம்.
ஹாய் மதன் கேள்வியும் – பதிலும்:
க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.
உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?
*
ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு ‘எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (‘பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. ‘நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
மேற்கண்ட கேள்வி – பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்ற படத்துக்கு (ஜெயாவில் காலில் விழுவது) எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன்அனுப்பியுள்ள கடிதம்…
…பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் – வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.
2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியொரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
– மதன்
இதற்கு விகடன் நிர்வாகம் அளித்திருக்கும் பதில்:
மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத – அதே சமயம், அந்தக் கேள்வி – பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.
அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’ என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உச்சியிலிருக்கும் நட்சத்திரங்கள் மின்னும் போது இப்படி நினைத்திருக்குமா? தாங்கள் மண்ணில் விழுந்து மங்கும் போது துயரமும், அடிமைத்தனமும், கலந்து நகைப்புக்குரியவர்களாக மாறுவோமென்று! நட்சத்திரங்களின் இறுதிக் காலத்தை வரலாறு இப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது. விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது அப்படித்தான் காமடியும், கண்ணீருமாய் முடிந்திருக்கிறது.
ஹாய் மதன் கேள்வி – பதிலுக்காக வந்த இந்தக் கேள்வி “எப்.எம்.ரேடியோவில் மனிதர்கள் மட்டும் கடி ஜோக்குகள் சொல்கிறார்களே, விலங்குகள் சொல்வதில்லையே” என்று கேட்பதற்கு ஒப்பானது. இவ்வளவு ஆண்டுகளாக இத்தகைய பயங்கரமான பகுத்தறிவு தேடல்தான் ஆனந்த விகடன் உருவாக்கியிருக்கும் தரம். வழக்கமான பாணியில் மதனும் ஆதிகால மனிதனினது பயம் என்றெல்லாம் ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட சலித்துக் கொள்ளும் வகையில் ஒரு பதிலைப் போடுகிறார். இதற்கு சுவாரசியம் கூட்டவோ இல்லை மதனை காமடி செய்து அழவைக்கவோ ஒரு அ.தி.மு.க அடிமை ஜெயா காலில் விழும் படத்தை போடுகிறார்கள்.
இது வடிவமைப்பாளர் சுதந்திரமாக செய்த ஒன்றா, இல்லை எடிட்டோரியல் பொறுப்பாளர் திட்டமிட்டு செய்த ஒன்றா என்று எப்படி கண்டுபிடிப்பது? விசாரணைக் கமிஷன் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய மர்மம் போலத் தோன்றினாலும் பொதுவில் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் பிரபலங்கள் விரும்பாதவற்றை, பிரச்சினைக்குரியவை என்று கருதுபவற்றை, அவர்களது தொழில்சார்ந்த தர்மசங்கடங்களை எல்லாம் சுயதணிக்கை செய்து தவிர்த்து விடுவார்கள். ஒரு நேர்காணலில் கூட அத்தகைய எடக்கு மடக்கு கேள்விகள் எல்லாம் கேட்கமாட்டார்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணுடைய இலட்சணம் இதுவென்றால் இதில் கொட்டை போட்டவர்கள்தான் மதனும், விகடன் பத்திரிகையும். ஆக, ஜெயா டி.வியில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் மதன் மொக்கை போட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு இது ‘நெருடலை’ ஏற்படுத்தும் என்பது இத்தகைய நெருடல்களை அறவே செய்யாத காரியக் குன்று விகடனுக்கும் தெரிந்திருக்கும். அதே நேரம் காலில் விழும் படங்களையெல்லாம் ஜெயா பெருமையாகவே எடுத்துக் கொள்வார் என்று பொதுவாக யாரும் கணிக்க முடியும். அந்தப் படிக்கு இது வடிவமைப்பாளர் போகிற போக்கில் செய்ததாகவும் இருக்கலாம். மதனது உப்புச் சப்பற்ற பதிலை இந்த படமாவது கொஞ்சம் சூடாக்கட்டும் என்று ‘நல்ல’ விதமாகக் கூட அவர்கள் யோசித்திருக்கலாம்.
இப்படியாக ஒரு படமோ, இல்லை வடிவமைப்போ போகிற போக்கில் ஒரு அறிவாளியின் வரலாற்றை புரட்டி போடுகின்ற தகுதியைப் பெற்றுவிட்டது. கேள்வி பதில் வெளியான பிறகு மதன் அளித்திருக்கும் பதில்தான் மிகவும் முக்கியமானது. அதனாலேயே விழுந்து விழுந்து சிரிப்பதற்குரியது.
அவருக்கு வரும் கேள்விகள் மருத்துவம், விலங்கியல் போன்று துறை சார்ந்து மட்டும் வருமாம். அரசியல், சினிமா கேள்விகளை தவிர்த்து விடுவாராம். அதுவும் இந்த காலில் விழும் கேள்வி ‘ஆந்தரபாலஜி’ சம்பந்தப்பட்டதாம். இதுதான் மனித இயல் குறித்த கேள்வி என்றால் காலில் விழுவது என்ன, ஒட்டு மொத்த மனித குலமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஜெயா காலில் விழும் அடிமைகளாவது ஒரிரு கணங்கள் மட்டும்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் மதன் போன்ற அறிவாளி அடிமைகளோ தங்களது முழு மூளையையும் பாசிச ஜெயாவுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். அதன்படி மனித குலம் ஏன் காலில் விழுகிறது என்ற வெட்டி ஆராய்ச்சியை விட இந்த அறிவாளிகள் கூச்ச நாச்சமில்லாமல் எப்படி முழு அடிமைகளாக மாறிவிட்டார்கள் என்பதுதான் ஆய்வுக்குரியது.
அந்த வகையில் மதனது பதிலை விட அவரது நடத்தைதான் அந்த கேள்விக்கு மிக பொருத்தம். காலில் விழுவது என்ற நடத்தை எதன் பொருட்டு எள்ளி நகையாடப்பட்டதோ அதன் அறிவு சாட்சியமாக மதன் விளங்குகிறார். ஜெயா டி.வியில் அவர் சினிமா விமரிசனம் செய்வதாகவே இருக்கட்டும். அதனால் என்ன? அது ஏன் விகடன் கேள்வி பதிலுக்கு செல்வாக்கு செலுத்தும் தணிக்கையாக இருக்க வேண்டும்? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மதன் எப்படி வாழ்வார் என்று கற்பனை செய்து பாருங்கள். சன், கலைஞர் செய்திகளை பார்க்க மாட்டார், ஜெயா குறித்த ஊடக விமரிசனங்களை படிக்க மாட்டார்; அப்படி பார்த்து படித்து அதை யாராவது ஜெயா டி.வி ஊழியர் மேலிடத்தில் சொல்லி விட்டால் என்ன ஆகும்? நாயினும் இழிவான பிழைப்பில்லையா இது?
ஒரு வேளை இத்தகைய சுதந்திரத்தை தாரை வார்த்து விட்டுத்தான் ஜெயா டி.வியில் மொக்கை போட முடியுமென்றால் அதை தூக்கி ஏறிய வேண்டியதுதானே? ஆனால் மதன் அப்படி செய்ய முடியாது. ஊடக உலகமே அப்படித்தான் முழு அடிமைத்தனத்துடன் இயங்கி வருகிறது. எனில் இத்தகைய அறிவாளிகள் தங்களது படத்திற்கு முன்னால் இன்னாருக்கு அடிமையாக விதிக்கப்பட்ட என்ற அடை மொழியை சேர்த்துக் கொள்ளலாமே? எதற்கு கார்ட்டூனிஸ்ட் அல்லது பத்திரிகையாளர் என்ற பட்டம்?
காலணா பெறாத இந்த விசயத்தை வைத்து அவர் எவ்வளவு தூரம் அடிமைத்தனத்தை காண்பிக்கிறார் பாருங்கள். இதை விளக்குவதற்காக அவர் பிசியாக இருக்கும் ஜெயாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி சொல்ல வேண்டுமாம். அ.தி.மு.க தொண்டன் கூட அம்மா அம்மா என்றுதான் உருகுவார். ஆனால் இந்த அடிமையோ ஜெயா பேரைச் சொன்னால் சிறுநீரே கழித்து விடுவார், அவ்வளவு பயம்.
அடுத்த இதழில், “இந்த லே அவுட்டுக்கும் மதனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்று போட வேண்டும் எனுமளவுக்கு அவரது அடிமை புத்தி தாண்டவமாடுகிறது. இதற்கு சரியான பொழிப்புரை என்னவென்றால், ” நான் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி கனவிலும், நனவிலும், சிறுநீர் கழிக்கும் நேரத்திலும், எண்ணத்திலும், எழுத்திலும், வீடியோவிலும், பெருமாளை சேவிக்கும் கணத்திலும், கடுகளவு கூட தவறாக நினைத்ததில்லை, இது என் தாய், மனைவி, குழந்தைகள் மீது சத்தியம்”. இந்த படப் பிரச்சினையில் மதன் எத்தனை நாட்கள் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு அழுதிருப்பார் என்று இப்போதாவது புரிகிறதா?
0-0-0-0-0-0-0-0-0
மதனது இந்த அடிமை பத்திர விளக்கத்திற்கு விகடன் நிர்வாகம் அளித்திருக்கும் பதில் ‘டெக்னிக்கலாக’ சரிதான். ஆனால் இந்த டெக்னிக்கலுக்கு பின்னே கனமான உள்குத்து சமாச்சாரமும் உள்ளது. அதாவது அரசியல் நேர்மை காரணமாக மதன் விலக்கப்படவில்லை. அரசியல் நேர்மை என்ற ஒன்று இருக்க கூடாது என்பதில் இரு தரப்பினருக்கும் இம்மியளவு கூட வேறுபாடு இருந்ததில்லை. இது அப்பட்டமான ஒரு ஈகோ பிரச்சினைதான்.
பாலசுப்ரமணியனது வாரிசு சீனிவாசன் விகடன் சொத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்ட போது மதன்தான் அந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வகையில் முக்கியமான ஆளாக இருந்தார். அதன் போக்கில் சொத்தை வைத்திருக்கும் முதலாளிக்கும், புகழை பெற்றிருக்கும் ‘படைப்பாளிக்கும்’ முரண்பாடு தோன்றுகிறது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து மதன் வெளியேற்றப்படுகிறார். ஒரே அடியாக நீக்கினால் இருவருக்கும் போக்கிடமில்லை என்பதால் மதனது கார்ட்டூன், கேள்வி பதில்கள் மட்டும் வருகின்றன. தற்போது மதனது பங்கு விகடனுக்கு தேவையில்லை என்ற நேரத்தில் இந்த படப்பிரச்சினை உதவியால் நீக்கப்படுகிறார்.
ஒருவேளை மதன் இந்தப் பிரச்சினைக்காக தொலைபேசியில் கூப்பிட்டு, ” என்ன சீனிவாசன் தம்பி, கொஞ்சம் பாத்து செய்யப்பிடாதோ” என்று பணிவாக கோரியிருந்தால் இந்த விலகல் இவ்வளவு தூரம் வந்திருக்காதோ என்னமோ. மதனோ தனது விளக்கத்தை குறிப்பாக லே அவுட்டுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்பதை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தார். சீனிவாசனை விட ஜெயாதான் அவருக்கு பெரிய கடவுள் என்பதால் இந்த தோரணை. சீனிவாசனைப் பொறுத்தவரை நமது சொத்தால் பிழைப்பவனுக்கு இவ்வளவு அகங்காரமா என்று யோசித்திருக்க கூடும். கூடவே மதனுடைய மொக்கை கேள்வி பதிலுக்கு இனிமேலும் மதிப்பில்லை என்ற உண்மையும் சேர்ந்திருக்கும்.
இப்படி இரண்டு அம்பிகள் அடித்துக் கொண்டதை ஏதோ மாபெரும் நேர்மை, நடுநிலைமைக்கான போராட்டமாக விகடன் நிறுவனம் சித்தரிப்பதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களும் ஜெயாவின் ஜால்ராதான் என்பதற்கு 30.5.2012 ஆனந்த விகடன் தலையங்கத்தை (விளம்பர சாமரங்கள்)படித்து பாருங்கள். அதில் ஜெயாவின் ஒராண்டு சாதனை விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட தொகையே சாதனைதான் என்று ஆரம்பிக்கிறார்கள். மக்கள் பணத்தை இப்படி வெட்டித்தனமாக செலவிடுவது குறித்து ஒரு மென்மையான விமரிசனம் கூட அதில் இல்லை.
அடுத்து அந்த விளம்பரங்களில் எரி சக்தித் துறையின் விளம்பரத்தை வைத்து மட்டும் விமரிசிக்கிறார்கள். எரி சக்தி துறை கொடுத்திருக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தமிழகம் மின் உற்பத்தியில் உபரியை வைத்திருக்கும் மாநிலம் என்பது போல திருப்தி பட்டுக்கொள்கிறார்களாம். இப்படித்தான் முதலமைச்சருக்கு தவறான தகவல்களை கொடுத்து, கூடவே புகழ்ந்து போற்றுகிறார்களாம். இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
இந்த தலையங்கத்தில் ஜெயாவை கண்டித்தோ, விமரிசனம் செய்தோ எதுவுமில்லை. விமரிசனமெல்லாம் ஒரு அ.தி.மு.க அடிமை அமைச்சர் மீதுதான். ஆள்வதிலோ, நிர்வாகத்திலோ, மக்கள் நலனிலோ கிஞ்சித்தும் அக்கறையற்ற ஒரு பாசிஸ்ட்டை கண்டிப்பதற்கு கூட வக்கற்ற, தைரியமற்ற ஆனந்த விகடன் எதற்காக மதனை நீக்கியது? மதனது விளக்கத்திலும் சரி, ஆனந்த விகடன் தலையங்கத்திலும் சரி நீக்கமற நிறைந்திருப்பது பாசிச ஜெயா மீதான அடிமைத்தனம்தானே? அடிமைகளில் வீரமான அடிமை, கோழையான அடிமை என்ற வேறுபாடுகள் எப்படி இருக்க முடியும்?
இதற்கு மேல் மாறன் சகோதரர்களோடு தொலைக்காட்சி சீரியல், சினிமா உள்ளிட்டு பல வகை வியாபார தொடர்புகள் உள்ள விகடன் நிறுவனம் அவர்களைப் பற்றி எந்த விமரிசனமும் வராமல் பார்த்துக் கொள்ளும். அப்படி வெளிவரும் விசயங்களும் கூட ஊரறிந்த விசயமாக இருக்கும். இப்படி தொழிலுக்கு பங்கம் வராமல் பத்திரிகை நடத்தும் விகடன் நிறுவனத்தைப் போல மதனும் தனது தொழிலுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள விரும்பியதில் என்ன தப்பு?
ஆள்வோருக்கும், அதிகாரத்தில் உள்ளோருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும் என்பதில் நெடுங்காலமாகவே தமிழ் பத்திரிகைகள் பீடை நடை போடுகின்றன. அதில் தலைமை இடத்தை வகிக்கும் பத்திரிகைகள் விகடனும், குமுதமும். அதிலும் அரசியலையே கிசு கிசுவாக, குற்றச் செய்திகளை பாலுறவு வக்கிரமாக படிக்க வைப்பதில் சாதனை படைத்த ஜூனியர் விகடனை வடிவமைத்து நடமாட விட்டதில் மதனுடைய பங்கு முக்கியமானது. குறிப்பாக அரசியல் செய்திகளை கொள்கை, மக்கள் நலன் சார்ந்து பார்க்கக் கூடாது என்று விகடன் குழுமத்தை பயிற்றுவித்தவரில் மதன் முக்கியமானவர். அவரது பள்ளியில் படித்தோர்தான் இன்று விகடன் குழுமத்தில் முக்கிய பணியில் உள்ளனர்.
மேலும் கார்ட்டூன்களை கூட அரசியல் கூர்மையை ரத்து செய்து, ஆபத்தில்லாத, யாருக்கும் தீங்கிழைக்காத ‘நல்ல’ கார்ட்டூன்களை போட்டு முன்னுதாரணம் படைத்தவர் மதன். மறைந்த உதயனது கார்ட்டூன்களைப் பார்க்கும் போது மதனுடைய கார்ட்டூன்கள் ”டம்மி பீஸ்” களாகத்தான் தோன்றும் . இது போக அவருடைய கேள்வி பதிலெல்லாம் என்சைக்ளோப்பீடியாவை சுட்டு எழுதப்படும் தேவையற்ற மொக்கைகள்தான். இன்று இணையம், விக்கிபீடியா பரவிவரும் நிலையில் மதனுடைய அந்த சுட்ட பழங்களுக்கு மதிப்பில்லை.
இந்தப் பிரச்சினையில் இருவரையும் விமரசிப்பதை விடுத்து பலரும் ஒரு தரப்பை மட்டும் கண்டிக்கிறார்கள். சவுக்கு சங்கர் போன்றவர்கள் கூட விகடனது பொய்யான நடுநிலைமையை அம்பலப்படுத்தி விட்டு மதன் நல்லவர், எந்த ஊழலும் செய்யாதவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவர் ஊழல் செய்தார், செய்யவில்லை என்பதை எப்படி முடிவு செய்வது? ரபி பெர்னார்டு, மாலன், மதன் போன்றவர்களெல்லாம் ‘ஊழல்’ செய்து சொத்து சேர்க்காதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சேர்த்திருக்கும் சொத்தும், செய்து வரும் தொழிலும் நிச்சயமாக ‘ஊழல்’தான்.
மதனுக்கு ஜெயா டீ.வியில் கிடைத்திருக்கும் சினிமா விமரிசன வாய்ப்பு மூலம் அவருக்கு பல ஆயிரங்கள் சன்மானமாக கிடைக்கிறது. பதிலுக்கு அவர் பாசிச ஜெயாவைப் பற்றி எங்கேயும் எப்போதும் விமரிசிக்க கூடாது. இது ஊழல் இல்லையா? இப்படித்தானே ரபி பெர்னார்டுக்கு ராஜ்ஜிய சபா பதவி கிடைத்தது? நாளைக்கே மதனுக்கும் மாலனுக்கும் கிடைக்கலாமே?
தமிழ் பத்திரிகைகள் மூலம் சாதிக்கலாம் என்று மனப்பால் குடிக்கும் நல்ல எண்ணமுடைய பத்திரிகையாளர்கள் இந்த பிரச்சினையைப் பார்த்தாவது மனந்திருந்தட்டும். ஊடகங்களில் பணி புரிவது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் இருக்கட்டும். அரசியலை பயின்று கொள்வதோ, மக்களுக்கு பணி செய்வதோ எங்களுடன் இருக்கட்டும்.
இழப்பதற்கு ஏதுமற்ற, உற்பத்திக் கருவிகள் எதனையும் உடைமையாகக் கொண்டிராத, தனது உழைப்புச் சக்தியைத் தவிர விற்பதற்கு ஏதுமில்லாத பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை திரும்பும் திசையெல்லாம் பெருகிக் கொண்டிருக்கிறது. நசிப்பிக்கப்பட்ட விவசாயத்திலிருந்தும், பறிக்கப்பட்ட காடுகளிலிருந்தும், தோற்றுச் சரிந்த கைவினைத் தொழில்களிலிருந்தும் உடைமை நீக்கம் செய்யப்பட்ட மக்கள், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி விசிறியடிக்கப்பட்டுத் தொழிலாளி வர்க்கமாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அமைப்புரீதியாகத் திரட்ட வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரண்டிருக்கும் தொழிலாளி வர்க்கப் பிரிவினரோ போலி கம்யூனிஸ்டுகளால் தொழிற்சங்கவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிற ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரைக் காட்டிலும் முன்னேறிய வர்க்கம் என்ற தனது தகுதியையும், மற்றெல்லா வர்க்கங்களுக்கும் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பையும் இவர்கள் உணரவில்லை. பொதுத்துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்கும் நடவடிக்கைகள், இயற்கை வளங்களைத் தரகு முதலாளிகளுக்கு இரையாக்கும் சட்டங்கள், ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்கள் நேரடியாகவே அரசின் அங்கமாக மாறிவரும் நிகழ்ச்சிப்போக்குகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுடன், மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்களிலிருந்தும்கூட இவர்கள் விலகியே நிற்கிறார்கள்.
இன்னொருபுறம், தொழிலாளி வர்க்கத்தின் அணிவரிசையில் புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கும் இளம் தொழிலாளர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் நவீன கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகப் போர்க்குணமிக்க போராட்டங்களில் இறங்குவதைக் காண்கிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற, ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட, சலுகை பெற்ற மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தும், சிந்தனை முறையிலிருந்தும் பெரிதும் வேறுபட்ட இந்தத் தொழிலாளர்கள், விலை உயர்வு, கட்டண உயர்வு மற்றும் தனியார்மய நடவடிக்கைகள் உள்ளிட்ட மறுகாலனிய பொருளாதாரத் தாக்குதல் ஒவ்வொன்றாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தின் முன்னணியில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.
மீள முடியாத நெருக்கடியில் உலக முதலாளித்துவம் மூழ்கி வரும் இன்றைய சூழலில், தொழிலாளி வர்க்கத்திற்கு அதன் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிய வைப்பதும், புரட்சியின் முன்னணிப் படையாக அதனை அணிதிரட்டி நிறுத்துவதும் புரட்சியாளர்களின் கடமை.
இதனை உணர்த்தும் வகையில், ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இந்த மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள பிரசுரம், பு.ஜ.வாசகர்களுக்காக, முழுமையாக வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் குழு
புதிய ஜனநாயகம்
“தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க மறுகாலனியாக்கத்தை மாய்க்க நக்சல்பாரியே ஒரே மாற்று” புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
மே தினம் முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளை இரத்தம் சிந்திப் போராடி நிலைநாட்டிக் கொண்ட நாள். எட்டு மணி நேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல; குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாகப் பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் மீதான சுரண்டலும் அடக்குமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது பால், பேருந்து, மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மாதம் தோறும் ஏழை, நடுத்தரக் குடும்பம் ஒவ்வொன்றிடமிருந்தும் ரூ.2000/ க்கும் மேல் கசக்கிப் பிழிந்து கஜானாவை நிரப்பும் திட்டத்தை அறிவித்திருக்கிறார், பாசிச ஜெயலலிதா. கஜானாவை கருணாநிதி காலி செய்துவிட்டதாகவும் அதனை நிரப்புவதற்கும் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் போன்றவற்றை இலாபத்தில் நடத்துவதற்கும் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது என்றும் நியாயப்படுத்துகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கட்டண உயர்வு என்ற பெயரில் இந்த வழிப்பறிக் கொள்ளையை கருணாநிதி நடத்தியிருக்க வேண்டுமென்றும், அவர் செய்யத் தவறிய இந்தப் புனிதக் கடமையைத் தான் நிறைவேற்றியிருப்பதாகவும் சொல்லிப் பூரிக்கிறார். இந்த வழிப்பறியை ஜெயலலிதாவின் துணிச்சல் என்றும் நிர்வாகத் திறமை என்றும் போற்றுகின்றன ஊடகங்கள்.
கஜானா காலி என்றவுடனே நாமும் அதிர்ச்சி அடைகிறோம். கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று எண்ணிக் கொள்கிறோம். நம் வீட்டின் கஜானா காலியாகி, கடனில் தவிக்கிறோமே, அதிரடியாக நாம் நமது சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா? அரசாங்கம்தான் உயர்த்திக் கொடுக்குமா? இரண்டுமில்லை. எனவே, அதிரடியாக நம் வாழ்க்கைத் தரத்தைத்தான் குறைத்துக் கொள்கிறோம். இனி குறைக்கக்கூடிய செலவு எதுவும் இல்லை என்பதால், கூடுதலாக உழைக்கத் தொடங்குகிறோம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூடுதலாக இரண்டு வீடுகளில் வேலை செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் மேலும் சில மணி நேரம் உழைக்கிறார்கள், பலர் மனைவி, பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள், கடன் வாங்குகிறார்கள், அடைக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
பால், தண்ணீர், உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், பேருந்து போன்றவையெல்லாம் சேவைத்துறைகள். மக்களுக்கு இச்சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. இலாபம் ஈட்டுவது இவற்றின் நோக்கமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இலாபமீட்டி கஜானாவை நிரப்புவதையே நோக்கமாக கொண்ட நிறுவனத்தின் பெயர் அரசாங்கமல்ல கம்பெனி. ‘காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி’ என்று கூறுபவரின் பெயர் முதல்வர் அல்ல முதலாளி.
கஜானாவை நிரப்பி, தொழில் தொடங்கி, வேலைவாய்ப்பைப் பெருக்கித் தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் உன்னதமான நோக்கத்துக்காகத்தான், இன்றைக்கு மக்களின் தாலியை அறுப்பதாக விளக்கமளிக்கிறார் அம்மா. ஆட்டுக்குத் தீனி போட்டு வளர்ப்பது கறிக்காகத்தான். கட்டணத்தை ஏற்றுவதும், பொதுத்துறை நிறுவனங்களின் இலாபத்தை உயர்த்துவதும் அவற்றைத் தனியார்மயமாக்குவதற்குத்தான். கணிசமாக இலாபமீட்டுகின்ற பொதுத்துறை வங்கிகள், காப்பீடு, பெல், என்.எல்.சி போன்ற நிறுவனங்கள் அறுத்துக் கூறு கட்டப்பட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கப்படுவதை நாம் காணவில்லையா?
இந்தக் கட்டண உயர்வால் உண்மையில் ஆதாயம் அடைபவர்கள் யார்? ஏற்கெனவே இலாபமீட்டிக் கொண்டிருந்த பேருந்து, பால்பண்ணை முதலாளிகளும் விலையை உயர்த்தி விட்டார்கள். அவர்களது இலாபம் பன்மடங்காகிவிட்டது. டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்காகத்தான் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி செய்து, அடிமாட்டு விலையில் நிலக்கரிச் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நிலக்கரியை இலவசமாகக் கொடுத்து விட்டு, முதலாளிகள் சொல்லும் விலைக்கு அவர்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. எண்ணெய்க் கிணறுகளை அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்குத் தந்து விட்டு, நம் பொதுச்சொத்தான எண்ணெயைச் சர்வதேசச் சந்தை விலையில் அம்பானியிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் ஜப்பானிய முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சென்னையில் தனியாக ஒரு நகரத்தையே அமைத்துக் கொடுக்கிறார் ஜெயலலிதா. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் பல ஆயிரம் கோடிகளை தி.மு.க. அரசும் வாரி வழங்கியிருக்கிறது.
எனினும், முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்து கஜானாவைக் காலி செய்துவிட்டார் என்று ஒருபோதும் ஜெயலலிதா கருணாநிதியை குற்றம் சாட்டியதில்லை. கஜானாவை நிரப்புவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கருணாநிதி வழங்கிய சலுகைகளை ரத்து செய்ததும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் மக்களைக் கொள்ளையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்கும் தரகனாகவும், கங்காணியாகவுமே ஜெ.அரசு செயல்படுகின்றது. முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதற்காகவும், தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க, போலீசு படைகளை நவீனமயமாக்குவதற்காகவும்தான் அரசு கஜானாவின் பணம் பயன்படுத்தப்படுகிறது.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படுகின்ற மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஓட்டுக்கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. அது மட்டுமல்ல; இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்களில் தொடங்கி, அமைச்சர்கள், உயர் அதிகார வர்க்கத்தினர் வரை அனைரும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையில் தொழில்ரீதியில் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். காண்டிராக்டர்களாக, மணல் மாஃபியாக்களாக, ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக, தண்ணீர் வியாபாரிகளாக, பேருந்துபால்பண்ணை முதலாளிகளாக இருக்கும் இவர்கள், கட்டண உயர்வு, விலை உயர்வு ஒவ்வொன்றிலும் ஆதாயம் அடைகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் கோடி, இலட்சம் கோடி எனத் தினந்தோறும் சந்தி சிரிக்கும் ஊழல்கள், தனியார்மயம் என்பதே பகற்கொள்ளைதான் என நிரூபித்திருப்பதுடன், தரகுமுதலாளிகளுடன் ஓட்டுப் பொறுக்கிகள் வைத்திருக்கும் தொழில் ரீதியான கூட்டையும் அம்பலமாக்கியிருக்கின்றன.
உழைக்கும் மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்து எடுக்கப்படும் பணம் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, முதலாளிகளின் பணப்பெட்டியையும் நிரப்புகிறது. டாடா, அம்பானி, மிட்டல் போன்ற கோடீசுவரர்களின் சொத்து என்ன வேகத்தில் உயர்கிறதோ, அதே வேகத்தில் ஏழைகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. எனினும், பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களையும், ஆடம்பரங்களையும் நுகரும் வசதி கொண்ட மேல்தட்டுப் பிரிவினரைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்படுகிறது. இவர்களுக்கான மால்களும், புதுப்புது கார்களும், கேளிக்கை விடுதிகளும், நவீன நுகர்பொருட்களும் பெருகுவதைக் காட்டி, நாடு முன்னேறுகிறது என்று நம்மையும் நம்பச் சொல்கிறது.
நாமும் நம்புகிறோம். கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகிய அனைத்துக்கும் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிறோம். நம்மை நாமே வருத்திக் கொள்வதன் மூலம் இந்தத் துன்பத்திலிருந்து மீள முயல்கிறோம். நூறில் ஒரு நபருக்கு அரிதாக அடிக்கும் ‘அதிருஷ்டத்தை’ பார்த்து, அப்படி ஒரு வாய்ப்பு நமக்கும் கிடைக்காதா என்று ஏங்குகிறோம். 99 சதவீத மக்களின் நிரந்தரமான ‘துரதிருஷ்டத்துக்கான‘ காரணத்தைக் காண மறுக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. என்று மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதன் மூலம் நமது கோபத்தைக் காட்டுகிறோம்
மக்களின் இந்த ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இன்று தி.மு.க. அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. மற்ற ஓட்டுப் பொறுக்கிகளும் தேர்தல் எனும் பம்பர் குலுக்கலுக்காகக் காத்திருக்கிறார்கள். நம்மைக் கொள்ளையிடும் தனியார்மயம்தாராளமயம்தான் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் கொள்கை. ஓட்டுப் பொறுக்கி அரசியல் மூலம் இந்தத் தனியார்மயத்தை ஒழித்துவிடப் போவதாக யாரேனும் சொன்னால், அதைவிடப் பெரிய பித்தலாட்டம் இல்லை. அப்படிப் பேசிவந்த போலி கம்யூனிஸ்டுகளும், தனியார்மயத்துக்கு எதிராக சவடால் பேசும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் அம்பலமாகி நிற்கிறார்கள்.
இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் மூலம் மக்கள் தமது பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காண முடியாது என்ற உண்மைக்கு கூடங்குளம் மக்கள் போராட்டமும், முல்லைப்பெரியாறு உரிமைக்காகத் தமிழக மக்கள் நடத்திய போராட்டமும் சான்று பகர்கின்றன. வெற்றியோ தோல்வியோ ஓட்டுப் பொறுக்கிகளை நம்பக்கூடாது என்கின்ற மக்களின் பொதுக்கருத்தை இப்போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெறுவது என்ற முயற்சிகள் எல்லாம் தோற்றுப் பல்லிளித்துப் போய்விட்டன. காவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகளை மீறிய கருநாடக, கேரள அரசுகளின் ஒரு முடியைக் கூட உச்ச நீதிமன்றத்தால் அசைக்க முடியவில்லை. தங்களைப் பணிநீக்கம் செய்தது செல்லாது என்று உயர்நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள், இன்னும் தெருவில் தான் நிற்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தை ஜெயலலிதா மதிக்கவில்லை. எந்த மாநில அரசும் எங்கள் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கோமாளிகளைப் போலப் புலம்புகிறார்கள்.
பொய், பித்தலாட்டம், சட்டவிரோதம், கிரிமினல் வேலைகள் ஆகிய அனைத்தையும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரால் அரங்கேற்றுகின்றது போலீசு. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே போலி மோதலில் சுட்டுக்கொன்றுவிட்டு, செத்தவர்கள் கொள்ளையர்கள் என்று சாதிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை மதிக்காத கேரள அரசை எதிர்த்துப் போராடினால், போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் இந்த ‘சட்டத்தின் காவலர்கள்’. ‘அணு உலை வேண்டாம்‘ என்று உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் மீது ராஜத்துரோகம், சதி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற ஆயுள்தண்டனைக் குற்றங்களைச் சுமத்திச் சிறையில் அடைக்கிறது போலீசு. அறவழி, அமைதி வழி என்பதெல்லாம் காரியத்துக்கு ஆகாதவை மட்டுமல்ல, அவை நம்மைக் காயடிக்க மட்டுமே பயன்படுபவை என்றே நம் அனுபவங்கள் காட்டுகின்றன.
மாற்றுப் பாதை எது, மாற்றுப் போராட்ட முறை எது என்பதே நம் முன் உள்ள கேள்வி. கம்யூனிசத்துக்கு எதிராகக் கடைவிரிக்கப்பட்ட காந்தியம் உள்ளிட்ட எல்லா இசங்களும் பல்லிளித்துவிட்டன. தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களை விற்பதற்குமே என்பது அம்பலமாகிவிட்டது. சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம் கிழிந்து கந்தலாகித் தொங்குகிறது.
நம்மையும் நம் உரிமைகளையும் இந்த நாட்டையும் காப்பாற்ற வல்ல மாற்றுப் பாதை நக்சல்பாரி புரட்சிப் பாதை ஒன்றுதான். தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் மீது பற்று கொண்ட அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் நடித்து வந்த நாடகம் அதன் கடைசி காட்சிக்கு வந்துவிட்டது. உலக முதலாளித்துவத்தின் தலைமையான அமெரிக்காவிலேயே ‘முதலாளித்துவம் ஒழிக’ என்ற மக்களின் போர்க்குரல் முன் எப்போதும் இல்லாத கோபத்துடன் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. பிரான்சு, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் என காட்டுத்தீயைப் போல ஐரோப்பா கண்டம் முழுவதும் பற்றிப் படர்கிறது மக்கள் போராட்டம்.
முதலாளி வர்க்கம் மூர்க்கத்தின் கொடுமுடியில் வீற்றிருந்த அதன் துவக்க காலத்தில், தங்கள் இன்னுயிர் தந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டினார்கள் மேதினத் தியாகிகள். இன்று மரணப் படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொழிலாளி வர்க்கத்தின் உதிரத்தை உறிஞ்சுகிறது. விலை உயர்வு, உரிமை பறிப்பு, சுரண்டல், அடக்குமுறை, பொதுச்சொத்துகள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகிய அனைத்தும் காட்டும் உண்மை இதுதான்.
அன்று உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்காக, நெஞ்சுரத்துடன் தூக்கு மேடையை மிதித்தனர் சிகாகோ தொழிலாளர்கள். இன்று மரணத்திலிருந்து மீளத் துடிக்கிறது முதலாளித்துவம் எனும் மிருகம். அதன் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து, குரல்வளையை நெரித்து, அதனைச் சவக்குழிக்கு அனுப்புவோம்!
சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். பலவிதமான சோதனைகளையும், ஸ்கேன்களையும் செய்து பார்த்த மருத்துவர், ’உடலில் எந்தக் கோளாறும் தெரியவில்லையே!’ என்று குழம்பியிருக்கிறார். இதற்கிடையே நான்கைந்து நாட்கள் ஓடி விட்டது. இந்த நாட்களில் தொடர்ச்சியாக வலி நிவாரணி ஊசி போட்டே சமாளித்திருக்கிறார்கள். வலி நிவாரணியின் தீவிரம் குறையும் போதெல்லாம் அவள் துடிதுடித்துப் போயிருக்கிறாள்.
கடைசியாக எந்தச் சோதனையும் நோயைக் கண்டு சொல்லாததால் குழம்பிப் போன மருத்துவர்கள், எதற்கும் ஒரு முறை வயிற்றைச் சுத்தம் செய்து பார்த்து விடுவோமென்று எனிமா கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வயிற்றிலிருந்து கட்டி கட்டியாக கறுப்பு நிறக் களிம்பு போன்ற பொருள் கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதைச் சோதனைக்கனுப்பிப் பார்த்த போது, அவ்வளவும் அந்தச் சிறுமி தினசரி தின்னும் நொறுக்குத் தீனிகளின் கழிவு என்று தெரிய வந்துள்ளது. மகளைச் செல்லமாக வளர்ப்பதாகக் கருதிக் கொண்டு பெற்றோர் அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
லேய்ஸ், குர்குர்ரே, சீட்டோஸ், கிண்டர் ஜாய், சீஸ் பால் மற்றும் கடைகளில் பல வண்ணங்களில் சரம் சரமாகத் தொங்கும் அத்தனை நொறுக்குத் தீனிகளும் தான் அவள் வயிற்றை நிறைத்துள்ளது. அது சரியாக செரிமானமாகாமல் இரைப்பையிலும், குடலின் உட்சுவரிலும் ஒரு பிசினைப் போல் படிந்து போயிருக்கின்றது. தொடர்ந்து உள்ளே வரும் உணவுப் பொருள் எதையும் செரிக்க விடாமல் செய்ததோடு, கடுமையான வலியையும் தோற்றுவித்திருக்கின்றது.
குப்பை உணவு கம்பெனிகள் – ஊடக நிறுவனங்களின் கள்ளக் கூட்டணி – (Infographic) படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
குழந்தைகளைக் கவர்வதற்கென்றே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் விளம்பரங்களில் பெரும்பாலானவை தின்பண்டங்களுக்காகவும், அதனை சாப்பிட்ட பின் பற்களை எந்த பற்பசையைக் கொண்டு விளக்கலாம் என்பதற்காகவுமே காட்டப்படுகின்றது. சுமார் 50% விளம்பரங்கள் ஜங்க் புட் என்று சொல்லப்படும் குப்பை உணவுகளைக் கடை விரிப்பதாகவும், ஒரு வாரத்துக்கு சராசரியாக 45 மணி நேரம் தொலைக்காட்சிகளின் முன் செலவழிக்கும் குழந்தைகள் ஆண்டொன்றுக்கு சுமார் 30,155 விளம்பரங்களைக் காண்பதாகவும், அமெரிக்கச் சிறார்களில் 60% பேர் ஒபசிட்டி எனப்படும் அதீத உடற்பருமன் நோய்க்கு ஆட்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சொல்கின்றது.
உலகளவில் குப்பை உணவுச் சந்தையின் தோராய மதிப்பு சுமார் ரூ. 6521 பில்லியன். அமெரிக்காவில் விளம்பரங்களுக்காக மட்டுமே சுமார் 83.2 பில்லியன் ரூபாயைக் குப்பை உணவு தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு வலுவுடன் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களையே கால் தூசுக்கு மதிக்கும் குப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது திறந்த மடம் தான்.
2006-ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்கிற தன்னார்வ அமைப்பு, பெப்சி கோக்போன்ற மென்பானங்களில் கடுமையான பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளதை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். அதே நிறுவனம் கடந்த மாதம், லேய்ஸ் குர்குரே போன்ற குப்பை உணவுகளில் அளவுக்கதிகமான சர்க்கரையும், கொழுப்பும் சேர்க்கப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. குப்பை உணவு நிறுவனங்கள் எத்தனை முறை அம்பலப்பட்டாலும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலாளிகளின் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் எதையும், அது நுகர்வோரின் உரிமையை நசுக்குவதாக இருந்தாலும் அரசு கண்டுகொள்ளாது.
இது பணக்கார – நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல…! கடந்த பத்தாண்டுகளில் குப்பை உணவுகளைக் கொறிப்பது பரவலான பழக்கமாகவும், தினசரி உணவின் அங்கமாகவும் இந்தியாவில் மாறியுள்ளது. ஐந்து ரூபாயில் துவங்கி சில ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் இவ்வகை உணவுகளை மேட்டுக்குடியினர் மட்டுமல்லாது சாதாரண மக்களும் விரும்பித் தின்கின்றனர். காசுக்கேற்ற தோசை என்ற அளவில் அந்தந்த வர்க்கங்கள் தமக்குக் கட்டுப்படியாகும் தீனிகளை ருசிக்கின்றனர்.
அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இவ்வகை உணவுப் பழக்கத்துக்கு மிகத் தீவிரமாக அடிமையாகியுள்ளனர். தெருவோரப் பெட்டிக்கடைகள் தொடங்கி பேரங்காடிகள் வரை சரம்சரமாகத் தொங்க விடப்பட்டுள்ள இவ்வகை நொறுக்குத் தீனிகள் மிக எளிதில் குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றது. சந்தையில் புதிது புதிதாக வரும் இனிப்புகள், மிட்டாய்கள், தீனிகள், அவற்றின் விலை, சலுகைகள் அனைத்தும் குழந்தைகள் உலகில்தான் அழுத்தமாக அறிமுகமாகின்றன.
இவை போக, குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடே வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் குப்பை உணவுகளைக் கடை பரப்புவதற்காகவே தொடர்ந்து காட்டப்படுகின்றன. கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, வெறும் வணிகக் குறியீடுகளைப் பார்த்த மட்டிலேயே குழந்தைகளின் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
மிக விரிவாக நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் படி, குப்பை உணவுகள் உடல் ரீதியிலான பாதிப்புகளை மட்டுமின்றி உளவியல் ரீதியிலும் மிகத் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. நாக்கின் சுவை மொட்டுக்களை சட்டென்று தாக்கி அதீத உணர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதீத ‘சுவை’ உணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகக் குப்பை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நமது நாவில் உள்ள சுவை மொட்டுக்கள் மிகவும் மென்மையான தன்மை கொண்டவை. அதீத சுவையின் தாக்குதலுக்கு ஒரு சில முறைகள் மட்டும் ஆட்பட்டாலே, திரும்பவும் அதே விதமான உணர்ச்சி – அதாவது சுவை – தேவைப்படும் போது மீண்டும் அதே உணவை மூளை கோருகின்றது. தொடர்ச்சியான பழக்கத்தில் குறிப்பிட்ட அளவு ரசாயனத் தாக்குதல் பயனற்றதாகிப் போகும் நிலையில் மேலும் அதிக சுவை கூட்டும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட உணவை நாடச் செய்கின்றது. இதற்கும் பொழுதுபோக்கு குடிகாரன் விரைவிலேயே மொடாக் குடிகாரனாக மாறுவதற்கும் பாரிய வேறுபாடு இல்லை.
மிக அதிகளவிலான ரசாயான உப்பு, பதப்படுத்தப்பட்ட கொழுப்பு, அதிகப்படியான செயற்கை இனிப்பு, செயற்கை நார்ச்சத்து, மேலும் பல்வேறு வகையான ரசாயன நிறமிகள் என்று ஒரு ஆபத்தான அவியல் கலவையில் தயாராகும் குப்பை உணவு, உடலில் நுழைந்தவுடன் நிகழ்த்தும் மாற்றங்கள் அபரிமிதமானது.
சாதாரணமாக வீட்டில் தயாராகும் சமைக்கப்பட்ட உணவை விட பல மடங்கு வேகத்தில் இரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டுகின்றது, குப்பை உணவு. சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் கூடுகிறதோ அதே வேகத்தில் சடாரெனக் குறையவும் செய்கின்றது – இந்த நிலையை ஹைப்போக்ளெசெமியா (டதூணீணிஞ்டூதூஞிஞுட்டிச் ) என்கிறார்கள். இப்படிச் சர்க்கரையின் அளவு திடீரெனக் கூடிக் குறைவது மூளையின் செயல்திறனையும் பாதித்து மன அழுத்தம், மனச் சோர்வு, மனச் சிதைவு போன்ற உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
புறநிலையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை – வயிற்றின் திறனைப் பாதித்து அதிவேகமாகச் செயலாற்றி, அமிலங்களை இரத்தத்தில் கலக்கும் குப்பை உணவு; சோவும், சுப்பிரமணியம் சாமியும் போன்ற இந்த ஆபத்தான கூட்டணியின் விளைவாகக் குப்பை உணவுக்குப் பழக்கப்பட்ட ஒருவரின் மூளை நின்று நிதானமாகச் சிந்திப்பது, ஒரு விஷயத்தைப் பற்றி நின்று வேலை செய்வது, தொடர்ந்து முனைப்புடன் உழைப்பது போன்றவற்றை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது.
இரத்தத்தில் கூடிக் குறையும் சர்க்கரையின் வேகத்தில் மூளையின் செயல்பாட்டுத் திறன் இயல்பை இழக்கிறது – விரும்பிய, எதிர்ப்பார்த்த விளைவைத் தராத போது தளர்ந்து போகின்றது; வன்முறையை நாடுகின்றது. விரும்பிய குப்பைத் தின்பண்டங்களைப் பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் போது அடம் பிடிப்பதில் ஆரம்பமாகும் இந்த வன்முறை வயதோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே போகின்றது.
தொடர்ந்து குப்பை உணவுகளை உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்தியிழப்பு, சர்க்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார். பாரம்பரியமாக வீட்டில் நாம் தயாரிக்கும் உணவில் குப்பை உணவுக்கு ஈடான சுவை குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான சத்துக்கள் சம அளவில் சேர்ந்திருப்பதால் உடலின் செயல்திறனைக் கூட்டி, ஆரோக்கியத்தை அது மேம்படுத்துகிறது. வயிற்றுப் பசியைத் தீர்த்து, முதலாளித்துவச் சந்தைப் போட்டியில் நாவின் பசியைத் தீர்த்து, ஆரோக்கியத்தை அழிக்க வந்துள்ள குப்பை உணவுகளின் முன் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வீட்டு உணவு வகைகள், கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்று வருகின்றது.
சந்தையால் அழிக்கப்படும் நூற்றாண்டு கால விவசாய உணவின் அறிவு
உணவுப் பழக்கம் என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் விசேடமான தட்பவெப்ப நிலை, அம்மண்ணின் தன்மை, விவசாயத்தின் தன்மை, அம்மக்களின் உழைப்பு, சமூகப் பொருளாதாரம், உடல் அமைப்பு போன்ற பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொண்டு பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட அனுபவ அறிவின் விளைவாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை கடும் உடலுழைப்புத் தேவைப்படுவோர் அதிகாலையில் நீராகாரமும், சூரியன் ஏறும் போது கூழும் குடித்து விட்டு வயலில் இறங்கினால் சூரியன் உச்சியை அடையும் வரை உழைக்கத் தேவையான சக்தியை எளிதில் பெற்று விடுவர். எலுமிச்சை, வெல்லம் கலந்த பானகமும், நீர் மோரும், இளநீரும்தான் நமது நாட்டிற்குப் பொருத்தமான குளிர்பானங்கள். இன்று இவற்றின் இடத்தை தேநீரும், காபியும், குளிர்பானங்களும் எடுத்துக் கொண்டு விட்டன. உண்மையில் அப்படி மாற்றி விட்டார்கள்.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவுப் பொருட்கள் மண்ணின் தன்மையையும், நீர், காற்று, வெப்பம் உள்ளிட்ட சுற்றுச்சூழலையும் கணக்கில் கொண்டு விளைவிக்கப்படும். இவ்வகை விவசாய அறிவு என்பது பல நூற்றாண்டு கால அனுபவத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், குப்பைத் தின்பண்டங்களைச் சந்தையில் குவித்துள்ள கார்ப்பரேட்டுகள் எதிர்நோக்கும் சந்தைத் தேவையின் முன் இந்த விவசாய அறிவு தேவையற்ற குப்பையைப் போல் வீசியெறிப்படுகிறது. உதாரணமாக, பெப்சி நிறுவனம் தயாரிக்கும் லேய்ஸ் எனப்படும் உருளை வறுவலுக்காக பஞ்சாபில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உருளை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் உருளை வறுவல் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஒரே மாதிரியான சுவையில் வறுவலைத் தயாரிக்க ஏதுவாக ஒரே ரக உருளை விளைவிக்கப்படுகின்றது.
இதற்காக கோதுமை விளைச்சலுக்கு ஏற்ற பஞ்சாபின் விளைநிலங்கள் அந்த மண்ணோடு சம்பந்தப்படாத உருளைக் கிழங்கு ரகத்தைப் பயிரிட வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றது. இதற்காகக் கொட்டப்படும் டன் கணக்கான உரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிர்ப்புத் தன்மையை இழந்து மண்ணே மலடாகி வருகின்றது. மேலும், பெப்சி, ஐ.டி.சி போன்ற பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் விவசாயிகளோடு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, சுயசார்பு விவசாயத்தை அழித்து வருகின்றனர். மேலும் முறையான விலையையும் விளைபொருட்களுக்கு அவர்கள் தருவதில்லை. விவசாயிகளைக் கிட்டத்தட்ட கொத்தடிமைகளான மாற்றுகின்றனர்.
உலக அளவில் நாக்குகளை அடிமையாக்கி, பெரும் பணத்தை அள்ளும் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபம் பெருகுவதற்கேற்ப பாரம்பரிய விவசாயத்தின் அழிவு வேகமும் கூடுகின்றது. அந்த வகையில் குப்பை உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, பாரம்பரிய விவசாயத்தையும், சுயசார்புப் பொருளாதாரத்தையும், தேசியப் பண்பாட்டையும் சேர்த்தே அழிக்கின்றன.
குழந்தைகளும், சிறுவர்களும் தெருமுனைப் பெட்டிக் கடையில் அணிவகுக்கும் சிப்ஸ் வறுவல்கள் உள்ளிட்ட குப்பைத் தீனிகளுக்கு ஆட்பட்டிருக்கிறார்களென்றால், நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்றபடி ஷாப்பிங் மால்களிலும், தனித்துவமான உணவு விடுதிகளிலும் அணிவகுக்கும் பிஸ்ஸா, பர்கர், ஹாட்டாக், ஸ்டீக், தாய், மெக்சிகன், இத்தாலியன், சீன வகை உணவுகளுக்கு அடிமையாகி வருகின்றார்கள்.
ஐ.டி துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரோடு உரையாடிய போது அவர்கள் வட்டத்தில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் உணவுக் கலாச்சாரம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரது கம்பெனியில் பணிபுரியும் சிலர் எங்கே எந்த உணவு பிரபலம், எப்போது சாப்பிடலாம், எவ்வளவு செலவாகும் என்கிற விவரங்களை விவாதிப்பதற்காவே நடத்தப்படும் இணையதளத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இதில் உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்படும் உணவுத் திருவிழாக்கள் பற்றிய தகவல்களும், எங்கே எந்த உணவு பிரபலம் என்பது பற்றிய விவரங்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது.
சமீபத்தில் அவரது நண்பர்கள் ஒரு குழுவாக தாய்லாந்துக்கு விமானத்தில் பறந்து அங்கே ஒரு குறிப்பிட்ட தனித்துவமான உணவு விடுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவைச் சாப்பிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். சாப்பாட்டுக்காகவே நடத்தப்பட்ட இந்தப் பயணத்திற்காக தலைக்கு சுமார் ஐம்பதாயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். ஒரு ரூபாய் ரேசன் அரிசியை நம்பி வாழும் மக்களின் நாட்டில்தான் இத்தகைய ஆபாச உணவு சுற்றுலாக்களை அடிக்கடி மேற்கொள்ளும் வர்க்கமும் வாழ்கின்றது.
ஜூனியர் அம்பானிகள்
மூன்று ஷிப்டுகள் வேலை செய்யும் ஐ.டி சேவைத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் வேலையின் அலுப்பை மறக்க இடையிடையே லேய்ஸ், குர்குரே போன்ற குப்பைத் தீனிகளை உள்ளே தள்ளுவதோடு உணவு வேளையிலும் பிட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய பாணி குப்பைத் தீனிகளாலேயே வயிற்றை நிரப்புகிறார்கள். வீட்டிலிருந்து சாப்பாடு கட்டியெடுத்து வருவதை கட்டுப்பெட்டித்தனமாகவும், பர்கரும் பிட்ஸாவும் நவீனத்தின் அடையாளமாகவும் கருதிக் கொள்ளும் இவர்களுக்காகவே தொலைபேசியில் தேவையானதைக் கேட்டு விட்டு, வீட்டுக்கே வந்து தரும் பிரத்யேக உணவு விடுதிகள் இயங்கி வருகின்றன. இவர்களின் வாயும், மூளையும் மட்டுமல்ல – வயிறும் கூட மேற்கத்திய அடிமைத்தனத்திற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சதா சர்வ காலமும் பஞ்சுப் பொதி நாற்காலியில் அமர்ந்து கணினித் திரையை வெறித்துக் கொண்டு, வாயில் எப்போதும் நொறுக்குத் தீனியை அரைத்துக் கொண்டு, இடையிடையே ’கோக்’கால் தொண்டை அடைப்பை நீக்கிக் கொள்ளும் இவர்கள் வெகு எளிதில் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், உளவியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டு விடுகின்றார்கள். மூளையைக் கசக்கிப் பிழியும் வேலை ஒரு பக்கமென்றால், இவர்கள் உட்கொள்ளும் உணவோ உடல் ஆரோக்கியத்தையும், வேறொரு புறத்திலிருந்து மூளையின் செயல்திறனையும் குலைத்து இவர்களை மும்முனைத் தாக்குதலுக்கு இலக்காக்குகின்றது. உணவுக்கும் கேளிக்கைக்கும் சம்பாதிப்பது, அதற்காகவே நேரம் செலவழிப்பது என்கின்ற போக்கில் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த உணவின் முன் தோற்றுப் போய், தின்பதற்காவே வாழ்வது என்கிற நச்சுச் சுழற்சியில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்த விசயத்தில் குப்பைத் தீனிப் பழக்கம் என்பது வாழ்க்கைச் சூழலின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி ஏற்படும் தவிர்க்கவியலாத பழக்கம் என்று கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களை இத்தகைய நுகர்வுக் கலாச்சார தீனிப் பண்பில் மாற்றும் வண்ணம் உணவுச் சந்தையில் நுழைந்திருக்கும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் பங்கும் முக்கியமானது.
ஒரு உலகம், ஒரு சந்தை – ஒரு ருசி..!
கட்டுரையின் துவக்கத்தில் சர்வதேச அளவில் உணவுச் சந்தையைக் கைப்பற்றியிருக்கும் கார்ப்பரேட்டுகள் பற்றிய புள்ளிவிவரங்களை மீண்டுமொரு முறை பாருங்கள். இவை காட்டும் உண்மை என்னவென்றால், தேசங்களின் எல்லைகள், மக்களின் கலாச்சாரங்கள், பிராந்தியளவிலான விவசாயத்தின் தன்மை, வெவ்வேறு நாடுகளின் மாறுபட்ட சீதோஷ்ண நிலை என்கிற வேறுபாடுகளை அழித்து, முதலாளிகளின் இலாபத்திற்காக ஒரே ருசி, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்பது படையெடுப்பு போல நடந்து வருகின்றது. அவ்வகையில் நமது பண்பாடு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட இவர்களைப் பொறுத்த வரை கழிவறைக் காதிதம்தான்.
இந்தியனின் நாக்கு அமெரிக்கனின் சுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; சீனனது வயிறு ஐரோப்பியனின் உணவைச் செரிக்க பழகிக்கொள்ள வேண்டும்; ஆப்பிரிக்கனின் மூளையில் அமெரிக்கனின் கேளிக்கை பிறக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டப்படும் கே.எப்.சி சிக்கனின் வணிகக் குறியீட்டைக் கண்ட மாத்திரத்தில் அமெரிக்கக் குழந்தையிடம் என்னவிதமான உளவியல் மாற்றங்கள் உண்டாகுமோ அதே மாற்றங்கள் தான் இந்தியக் குழந்தையிடமும் உண்டாக வேண்டும். இதுதான் முதலாளித்துவ நியதி.
இதனால் நாம் கட்டுப்பெட்டித்தனமாக உள்ளூரில் நிலவுடமை ஆதிக்கப் பண்பாட்டின் அங்கமான ஆதிக்க சாதிகளின் உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்க வேண்டும் என்பது அல்ல. பெண்களின் பணி நேரத்தை விழுங்கிக் கொள்ளும் இத்தகைய உணவு முறையெல்லாம் உழைக்கும் வர்க்கத்திடம் இன்றுமில்லை. தினை வகைகளும், நீராகரமும்தான் அவர்களின் உணவாக சமீப காலம் வரைக்கும் இருந்தது. இன்று அது சோறு, தேநீர் என்று மாறியிருக்கின்றனது. எளிமையும், ஆரோக்கியத்தையும், சத்தையும், நமது சூழ்நிலைக்கு பொருத்தத்தையும் கொண்டிருக்கும் வரையிலும் நாம் எந்த உலக உணவு வகைகளையும் வரவேற்கலாம்.
ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் இப்படி உலக மக்களின் பண்பாட்டை சங்கமிக்கச் செய்வது அல்ல. நாகரிகம் என்ற பெயரில் ருசிக்கும், இலாபத்திற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர்களது குப்பை உணவு எல்லா வகைகளிலும் தீங்கிழைக்கின்றன. நமது மரபில் உணவு வாழ்க்கைக்குத் தேவையான சக்தியைத் தருபவையாக மட்டுமல்ல, மருந்தாகவும் இருந்திருக்கின்றது. மீனவ கிராமங்களில் கேட்டால் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மீனை மருந்தாகக் கூறுவார்கள். இன்றும் கூட பிரசவம் ஆன பெண்களுக்கு பால் சுரப்பதற்காக பால் சுறா மீன்களைக் கொடுப்பதைப் பார்க்கிறோம்.
சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள், கடுக்காய், சித்தரத்தை, மாயக்காய், அதி மதுரம், கிராம்பு, வெட்டி வேர், கண்டங்கத்திரி, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, காசினிக் கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், அவற்றின் நோய் தீர்க்கும் முறைகளும் இந்த மண்ணில் பல நூற்றாண்டு கால அனுபவத்தில் கண்டறியப்பட்டவை. இவற்றையெல்லாம் சமையல் உணவில் கலந்து சாப்பிடும் பழக்கம்தான் நமது பண்பாடு.
பிட்ஸா இத்தாலிக்குப் பொருத்தமான உணவாக இருக்கலாம். அந்த பிட்ஸா அமெரிக்கா சென்று, உலக ருசிக்காக மாற்றப்பட்டு, இந்தியாவில் மேட்டுக்குடியினரின் உணவாக மாற்றப்பட்டு விட்டது. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் நமக்கு இந்த அடுமனை வகை உணவுப் பொருட்கள் பொருத்தமானவை அல்ல. பல நாடுகளில் இன்று குடிநீர் குடிக்கும் பழக்கம் கூட இல்லை என்பது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆம், தாகம் என்று வந்தால் அவர்களுக்கு நினைவில் தோன்றுவது பெப்சியும், கோக்கும்தான்.
ஆகவேதான் இந்தக் குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழிக்கும் அணுகுண்டுகள் என்று சொல்கிறோம். மண்ணையும், பண்பாட்டையும், விவசாயத்தையும் அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தக் குப்பை உணவு நமது ஆளுமையையும் சீர்குலைக்கின்றது. ஐந்து ரூபாய் விலையுள்ள லேஸ் சிப்சை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது அவர்களது வயிற்றையும், ஆளுமை வளர்ச்சியையும் அமிலம் போலக் கரைத்து அவர்களை வெளியே தக்கைகளாகத் துப்பி விடும். சம்மதமா?
ஒரு மாநிலத்தின் சட்டம்ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சரைச் சார்ந்ததாகும். இவரது உத்தரவை உயர் போலீசு அதிகாரிகள்கூட அலட்சியப்படுத்த முடியாது என்கிறது சட்டம். ஆனால், முடியும் எனப் புலம்புகிறார் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது அமைச்சகத்தின் கீழ் வரும் போலீசு துறை தனது உத்தரவுகளை மதிப்பதில்லை என மூக்கைச் சிந்தினார்.
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் நடைபெறும் விபச்சாரக் குற்றங்கள் குறித்து மிலன்தாஸ் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் போலீசிடம் முறையிட்டுள்ளார். போலீசோ குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டு விட்டு, மிலன் தாஸைத் தாக்கியதுடன் அல்லாமல், சிறுமியான அவரது மகளையும் மானபங்கப்படுத்தியது. இது குறித்த வழக்கை கோர்பா மாவட்ட போலீசார் பதிவு செய்ய மறுத்ததால், மிலன்தாஸ் உள்துறை அமைச்சரிடம் முறையிட, அமைச்சரும் வழக்கை உடனே பதியச் சொல்லி கோர்பா மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். தனது இவ்வுத்தரவை போலீசார் அலட்சியப்படுத்திவிட்டதாக அமைச்சர் தற்பொழுது குற்றஞ்சுமத்தி வருகிறார்.
‘‘என்னுடைய பேச்சைத்தான் போலீசு கேட்பதில்லை, சட்டம் சொல்வதையாவது கேட்கலாமே” என்று அமைச்சர் பத்திரிகையாளர்களைக் கூட்டிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, அவ்வாறான உத்தரவு எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என மறுத்தார். இதற்குப் பதிலடியாக அமைச்சர், “பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே இது போன்ற வழக்குகளை பதிவு செய்யப் போதுமானது” எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக் காட்டினார். அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலாவது போலீசு வழக்கு பதிவு செய்ததா என்றால், அதற்கும் பெப்பே காட்டிவிட்டது.
2010இல் சத்தீஸ்கரில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு உள்துறை அமைச்சர் கன்வரின் அனுமதியின்றிதான் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படை ரியல் எஸ்டேட் விவகாரங்களில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பணம் பிடுங்கும் சட்டவிரோத அமைப்பு என்று அமைச்சரே குற்றஞ்சாட்டுகிறார். இப்படைப் பிரிவைக் கலைக்கச் சொல்லி உயர் போலீசு அதிகாரிகளுக்கு அமைச்சர் இட்ட உத்தரவோ கேட்பாரின்றிக் கிடக்கிறது.
மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் வேட்டையாடுவதற்காகவே சத்தீஸ்கர் மாநில அரசு சட்டவிரோதமாக ‘கோயா கமோண்டோ’ என்ற குண்டர் படையைக் கட்டி நடத்தி வந்தது. இந்தக் குண்டர் படையின் தலைவனான கர்டாம் சூர்யா என்பவன் மீது பல்வேறு கொலை, வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகள் உள்ளன. நவம்பர் 2006இல் 3 பழங்குடியினப் பெண்களை வன்புணர்ச்சி செய்த வழக்கில் இவனுக்குப் பிடிவாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம். ஆனால், அம்மாநில அரசோ கர்டாம் சூர்யாவைத் தேடிப் பிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் புளுகி வருகிறது.
சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடியின இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்று கூறி, சல்வாஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அம்மாநில அரசோ, புதிய விதிகளை உருவாக்கி, கோயா கமாண்டோவின் பெயரை மட்டும் சிறப்பு துணைப் படை என்று மாற்றி, அக்குண்டர் படையை இன்றும் நடத்தி வருகிறது. தேடப்படும் கிரிமினல் குற்றவாளியான கர்டாம் சூர்யா அப்புதிய அமைப்பில்தான் செயல்பட்டு வருகிறான். இந்த உண்மைகளெல்லாம் ஊருக்கே தெரிந்திருந்தபோதும், நீதிமன்றமோ அரசின் பதிலைக் கேட்டுக்கொண்டு அமைதி காத்து வருகிறது. அம்மாநில நக்சல் ஒழிப்பு பிரிவின் கூடுதல் உதவி ஜெனரல், நீதிமன்றம் வழங்கிய பிடிவாரண்டே நக்சல்பாரிகளின் திட்டமிட்ட சதி என எகத்தளமாகக் கூறி வருகிறார். அது மட்டுமா, இக்கிரிமினலை ‘சத்தீஸ்கரின் நாயகன்’ என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, அம்மாநில போலீசு. ‘கொடூரமான, வக்கிரமான முறைகளின் மூலம் பயத்தை விதைப்பதால்தான் அவன் சத்தீஸ்கரின் நாயகன்’ என இந்த அநியாயத்திற்கு விளக்கம் வேறு அளித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரின் கேள்விக்கிடமற்ற காட்டு ராஜ்ஜியம்தான் நடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அம்மாநிலத்தைக் கூறு போட்டு விற்பதற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் மீது பாய்வதற்காகவே கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு, இப்பொழுது செக்கு எது சிவன் எது என்ற வேறுபாடின்றி, அனைத்துச் சட்டபூர்வ அமைப்புகள் மீதும் விழுந்து பிடுங்கி வருகிறது. இதனைத் தடுக்க இயலாதது போல உள்துறை அமைச்சரும் அரசும் நாடகமாடுகிறார்கள். நீதித்துறை உள்ளிட்ட அனைவரும் இந்நாடகத்தின் கூட்டாளிகளாக உள்ளனர்.
இங்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி இப்படித்தான் சந்தி சிரிக்கிறது. ஒடிஸ்ஸாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹிகாகாவை விடுவிப்பதற்காக, சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் விடுவிப்பது என்ற அரசின் முடிவிற்குக் கட்டுப்பட மறுக்கிறது, போலீசு.
இப்படி, முகத்தில் காரி உமிழாத குறையாக உச்ச நீதிமன்றம் முதல் உள்துறை அமைச்சர் வரை தனக்கு மேலேயுள்ள சட்டபூர்வமான அனைத்து அமைப்புகளையும் துச்சமாய்க் கருதி இகழ்கிறது, போலீசு. ஆனால், சட்டத்தின் ஆட்சியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவருமே இவற்றைக் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து தி.மு.க. அரசு வேலை நிறுத்தம் செய்தது என்ற பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கைத் தானே விசாரித்து, தி.மு.க. அரசிற்கு மிரட்டல் விடுத்த நீதிமன்றமோ சத்தீஸ்கரில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாதது பற்றிக் கள்ள மவுனம் சாதிக்கின்றது. எதிர்கட்சியினரோ, சட்டத்தின் ஆட்சியையே கேலிக் கூத்தாக்கியுள்ள போலீசையோ, நாடகமாடும் அமைச்சரையோ அம்பலப்படுத்திக் குரலேதும் எழுப்ப மறுக்கிறார்கள். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்களோ இந்தப் பிரச்சினையை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்பதில்தான் இவர்களின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அதனால்தான் சொல்லி வைத்தாற்போல இவர்கள் அனைவரும் இவ்விசயங்களில் ஒரேவிதமாக நடிக்கிறார்கள். நமது உரிமைகளுக்காகச் சட்ட ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியும் என்பது போன்ற மாயைகளைத் தெளிய வைக்கின்றது போலீசின் காட்டு ராஜ்ஜியம். சட்டம், அரசியல் சாசனம் என்பவையெல்லாம் மக்களை ஒடுக்குவதற்காகவும், நாடாளுமன்ற பன்றித் தொழுவ அக்கப்போருக்குமானதேயன்றி வேறல்ல. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்க அமைப்பாக இருந்தாலும் சரி, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரவர்க்க அமைப்பாக இருந்தாலும் சரி இவர்கள் ஆளும் வர்க்க நலனையொட்டித்தான் செயல்படுகிறார்களேயொழிய, சட்டப் புத்தகம் இவ்வமைப்புகளை வழிநடத்துவதில்லை.
அறவழியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மணிப்பூரின் ஐரோம் சர்மிளா நடத்தி வரும் உண்ணாவிரதப் போர், அரசை ஓர் அங்குலம்கூட அசைக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக காந்தியவாதி ஹிமன்சுகுமார் தண்டிக்கப்பட்டார்; அவரது ஆசிரமம் போலீசாரால் பட்டப் பகலில் இடித்து நொறுக்கப்பட்டது. சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய ‘குற்றத்திற்காக’ பினாயக் சென் ஆயுள் தண்டனைக்குள்ளானார். சட்டத்தை அமல்படுத்தக் கோரிப் போராடுபவர்களுக்கு, இதுதான் கதி என ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம், போலீசு என அனைவரும் ஒன்று கூடிக் கெக்கலி கொட்டுகிறார்கள்
_________________________________________ – புதிய ஜனநாயகம், மே-2012 __________________________________________
கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது
’சரியான விரலை சரியான கட்டையின் மீது வைக்கும் போது இனிமையான இசை எழும்’ என்றார் மாவோ. பொதுவாக ஆங்கிலப் படங்களில் இந்த இனிமையான இசையைக் கேட்பது அரிது. உலகம் முழுவதும் மக்கள் தம் எதிரியை அடையாளம் கண்டு திரளாக “ஆக்கிரமிப்பு (Occupy)”போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனியும் முதலாளிகளை மனிதகுலக் காவலர்களாகக் காட்ட முடியாது என்பதாலோ என்னவோ, திரைப்படப் படைப்பாளிகள் மக்கள் நோக்கில் உண்மையான பிரச்சினைகளை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் பிரெஞ்சுப் படமான ‘தி ஆக்ஸ்‘.
டிரைலர்
படத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.
காகிதத் தொழிற்துறையில் நிபுணரும், சிறந்த மேலாளருமான புருனொ டவர்ட் பிரான்சில் வாழும் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணி புரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறான். இருப்பினும் இந்த வேலை இழப்பு அவனிடையே பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவனுக்கு 18 மாதச் சம்பளம் இழப்பீடாகக் கிடைக்கிறது. மேலும் தன்னைப் போன்ற திறமையான மேலாளர் பொறுப்பை வகித்தவன் இன்னொரு வேலையை எளிதாகப் பெற்று விடலாம் என்றும் மகிழ்ச்சியாக வெளியேறுகிறான்.
ஆனால், சற்றுக் காலம் கழித்து சுடும் எதார்த்தம் கன்னத்தில் அறைகின்றது. இரண்டு ஆண்டுகளாகியும் வேறு வேலை கிடைக்கவில்லை. சேமிப்புத் தொகை கரையத் துவங்குகின்றது. மனைவி சிறு சிறு வேலைகளில் சம்பாதிக்கும் குறைந்த பணத்தில் வாழும் வாழ்க்கை கடினமாகின்றது. இணையம் முதல் தொலைக்காட்சி கேபிள் வரை அனைத்து வசதிகளும் அந்தக் குடும்பத்தை விட்டு விலகுகின்றன. உணவைக் கூடச் சிக்கனமாக சமைக்க வேண்டிய மோசமான நிலைமையைத் தன் மனைவி, பிள்ளைகளுடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான் டவர்ட். இடையில் பள்ளியில் படிக்கும் மகன் திருட்டு வழக்கில் சிக்குகிறான். மனைவியோ மண விலக்கு செய்யும் முடிவுக்கு வருகிறாள். எல்லாம் சேர்ந்து டவர்டின் மனநிலையைக் கொதிநிலையாக மாற்றுகின்றன.
வேலை கிடைக்க வேண்டுமானால் தனக்கு போட்டியாக இருப்பவர்களைக் கொலை செய்தால் தான் சாத்தியமென இறுதியாக முடிவுக்கு வருகிறான் டவர்ட். ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் காகிதத் தொழிற்சாலை மேலாளருக்கான வேலை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் போலி நிறுவனத்திற்கு வேலை கேட்டு வரும் பல்வேறு சுயவிபரப் பட்டியல்களைச் சரி பார்த்து தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய திறமை மிக்க காகித மேலாளர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து கொலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் கொலை செய்த பிறகு, இறுதியாக பிரான்ஸ் நாட்டின் பிரபல காகிதத் தொழிற்சாலையான ஆர்கிடியாவின் காகிதத் துறை மேலாளரைக் கொலை செய்ய வேண்டும். இதுதான் திட்டம்.
கொலை செய்ய திட்டமிட்டவரின் நிழற்படத்தை முதல் நாள் கணிப்பொறியில் அச்செடுத்து, அவர்களின் இடத்திற்குச் செல்கிறான் டவர்ட். ஆரம்பத்தில் கொலை செய்யத் தடுமாறும் டவர்ட் இறுதியில் குழப்பம் ஏதுமில்லாமல் கொல்கிறான். இப்படி ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கொலை செய்யப் போகும் நபரான ஜான் உடன் சாதாரணமாகப் பேசுகையில் அவர் காகிதத் துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதைக் கண்டு அவரையும், வேறு வேலை கிடைத்து விட்டதால் இன்னொருவரையும் கொலை செய்யாமல் விடுகின்றான்.
இந்நேரத்தில் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறையினர் டவர்ட் வீட்டிற்கு வருகிறார்கள். காகிதத் தொழிலில் உள்ள மேலாண்மைத் துறை நபர்களைக் கொலை செய்தது ஜான் தான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் சொல்கிறார்கள். கொலைப்பழி ஜான் மீது விழுந்ததில் மகிழ்ச்சி அடையும் டவர்ட், ஆர்கிடியா நிறுவனத்தின் மேலாளரையும் கொன்று விட, அந்த இடத்திற்கான நேர்முகத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். மீண்டும் வசதி நிறைந்த நடுத்தர வாழ்விற்கு திரும்பும் டவர்ட், ஒரு நாள் காகிதத் தொழிற்சாலை மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவரைச் சந்திக்கிறான். அந்தப் பெண் டவர்ட் செய்தது போலவே அவனுடைய சுயவிபரப்பட்டியலுடன் வந்திருக்கிறாள். ‘போட்டியாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்‘ என்று படம் முடிவடைகின்றது.
சமீப ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் அதாவது முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரம் அமெரிக்கா தொட்டு கிரீஸ் வரை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அறிவோம். இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மட்டுமல்ல நாடுகளுமே திவால் ஆவது என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முடங்க வாய்ப்பில்லாத மூலதனமும், இலாபவெறி பிடித்து அலையும் நிறுவனங்களின் சூதாட்டப் பொருளாதாரமும் தர்க்கபூர்வமான இலக்கை அடைந்திருப்பதன் அறிகுறிதான் இந்த நெருக்கடி.
எனினும் இது அமெரிக்கா போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளோடு முடிந்து விடும் விடயமல்ல. முழு உலகையே சங்கிலியாகப் பிணைத்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதரத்தின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்தத் தனி நபரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
”உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மூன்று மந்திரச் சொற்கள் முழு உலகையும் மாற்றி விடும்” என்று பேசியவர்கள் கூட இன்று வெட்கப்பட்டு வாயடைத்துக் கொள்ளும் நிலை. இம்மூன்று மயத்திற்காகவும் எல்லா நாடுகளின் அரசுகளையும், கொள்கைகளையும் கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அப்படித்தான் தொழிற்சங்க உரிமை பறிப்பு, கேள்வி இன்றி செய்யப்படும் ஆட்குறைப்பு, அதிக நேரம் வேலை, உரிமைகள் பறிப்பு என்று பல தொழிலாளர் விரோதக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து பல நாடுகளின் தொழிலாளர்கள் இன்று வரை போராடுகிறார்கள்.
ஆனால் அந்தப் போராட்டத்தின் சாயலை வேலையிழந்த கதையின் நாயகன் டவர்டிடம் காண முடியவில்லையே, ஏன்?
இந்தப் படத்தில், வேலை போகும் காட்சியில் டவர்டும், அவன் மேலாளரும் ஒரு அறையில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் பல தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பார்கள். தன் 18 மாதச் சம்பளத்துடன் டவர்ட் அவர்களை எளிதாகக் கடந்து விடுகிறான். அவனைப் போன்று நிறுவனங்களின் மேலாளராகப் பணிபுரிபவர்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம், முற்றுகை எல்லாம் ஆகாது. அவையெல்லாம் அநாகரீக உலகின் பொறுக்கித்தனங்கள் என்பதுதான் இந்த அதிகார வர்க்கத்தின் பால பாடம். சொல்லப் போனால் போராடும் தொழிலாளர்களை சதி செய்தோ, அடக்குமுறை செய்தோ ஒடுக்குவதுதான் இவர்களுடைய வேலை.
ஆனால் தனக்கும் வேலை இல்லை என்ற போதும் கூட அவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வேலையில்லை என்று வெளியேற்றிய நிறுவனத்தின் மேல் கூட கிஞ்சித்தும் கோபம் வரவில்லை. அதே நேரம் அவன் நினைத்தது போல வேலை கிடைப்பது எளிதல்ல என்று எதார்த்தம் உணர்த்திய போதுதான் அவனுக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதுவும் கூட அவன் பயிற்றுவிக்கப்பட்ட மனநிலையைப் பெரிதும் மீறாமல்தான் வருகிறது. அதாவது தனது போட்டியாளர்களை ஒழிக்க வேண்டுமென்ற முதலாளித்துவத்தின் அரிச்சுவடியை வைத்து டவர்டும் அத்தகைய பாசிசத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறான். இதனால் அவனை ஒரு தேர்ந்த கொலைகாரனாகக் கருதி விட இயலாது.
முதல் காட்சியில் துப்பாக்கியுடன் தான் கொலை செய்ய வேண்டிய நபரை காரில் பின் தொடரும் டவர்ட், ஒரு கட்டத்தில் அந்த நபரைத் தவற விடுகிறான். வெறுப்புடன் அந்த நபரைத் தேடியவாறு அந்த இரவில் சாலையில் தன் வண்டியில் அலைய, ஒரு சாலையின் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக அந்த நபரே இவன் காரில் மோதிக் கிழே விழுகிறார். மெதுவாக, மனக் குழப்பத்துடன் அவர் மேலே காரை ஏற்றி விட்டு வேகமாக விடுதிக்குத் திரும்பி விடுகிறான். தன் அறையில் மிகவும் படப்படப்பாக நுழையும் டவர்ட், குழம்பியும், பயந்தும் போகிறான்; கைகள் நடுங்கின்றன, வாந்தியெடுக்கிறான். குற்ற உணர்ச்சி மேலிட தன் நிலமையை எண்ணி அழுகிறான்.
முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு ’அமைதியான’, வசதியான வாழ்க்கை உண்டுதான். ஆனால் அந்த வாழ்வை அவர்கள் போட்டி நிறைந்த உலகில் தனியாக ஏதாவது செய்துதான் அடைய முடியும். அப்படிப் பிறக்கும் தனிநபர்வாதம், பின்பு பொருட்களை நுகரும் நுகர்வு கலாச்சாரத்தில் தனது ஆளுமையை வடித்துக் கொள்ளும் போது இவர்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கூட தனிநபராகத்தான். அந்த வகையில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் இந்த ஆளுமையில் இல்லை.
அதன்படி டவர்டும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் எனும் போது, அது சமூக ரீதியாக இருப்பதைக் கவனமாக நீக்கும்போது, இப்படித்தான் தனிநபர் வன்முறை பாதையைத் தேர்ந்து கொள்கிறது. போட்டி போட்டு சௌகரியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போல, போட்டியை அழித்துத் தனது இடத்தைத் தக்கவைக்க நினைக்கும் டவர்டின் மனநிலை முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்திற்கு முரண்படாத ஒன்று என்பதுதான் உண்மை.
ஒரு நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியும் டவர்ட் தன் தவறுகளை நியாயப்படுத்த மனைவி, மக்கள் மேலிருக்கும் அன்பைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னைத் தேற்றிக் கொள்கிறான். குடும்பத்தின் மீதான அன்பைத் தக்கவைக்க வேலை வேண்டும். வேலை வேண்டுமென்றால் போட்டியாளர்களை அதாவது மற்ற குடும்பங்களை அழிக்க வேண்டும். முதலாளித்துவ சந்தையின் நியாயங்களை குடும்பத்திற்கும் டவர்டால் பொருத்த முடிகிறது.
கொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது
ஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான். அவர் இவனைப் போல் துப்பாக்கி எடுத்துக்கொண்டு திரியவில்லை. வேலை செய்து பிழைக்கிறார். ஆனால் அவர் மனதும் மெல்ல துப்பாக்கியை நோக்கி நகர்வதை அவர்கள் உரையாடல் காட்டுகின்றது.
அதே போல் அவரைப் பார்த்தும் டவர்ட் ’தன் தகுதிக்கு’ குறைவான வேலை செய்ய விரும்பவில்லை. கொலையை விட சர்வர் வேலை செய்து பிழைக்க வேண்டுமா என்பதுதான் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. முதல் கொலையில் அவனிடம் இருக்கும் பயம், குற்றவுணர்வு விலகி முழுமனதுடன் பிறகு வரும் கொலைகளைத் திட்டமிட்டு முடிக்கின்றான். கொலை முடிந்து தப்பித்தவுடன் குதூகலிக்கிறான். ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது முதலில் மனத் தடுமாற்றம் அடையும் டவர்ட் மெல்ல தான் வேலையை நெருங்கி வருவதைச் சொல்லி அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளி வந்து விடுகிறான். அவர்கள் மகிழ்ச்சிக்காக தான் செய்வது சரி என்ற வாதம் அவன் மனச்சாட்சியைக் கேள்வி கேட்க விடாமல் வீழ்த்துகின்றது.
அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் அன்போடு விடுமுறையைச் செலவிடும் ஒரு அமெரிக்க வீரன் பணி நிமித்தமாக ஈராக் வந்து எந்த இரக்க உணர்ச்சியுமின்றி அப்பாவி ஈராக் மக்களைக் கொலை செய்வதற்கும், டவர்டின் வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?
ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒரு அலகுதான் குடும்பம், அதன் விளைவுதான் ஒரு தனிமனிதன் எனும் போது, இங்கே டவர்ட் முதலாளித்துவ சமூகத்தின் குறியீடாக இருக்கிறான். சமூகம் கார்ப்பரேட் மயமாவது என்பது வெளியே அலங்காரங்களும், உள்ளே அழுக்கும் கொண்ட ஒரு சுரண்டல் அமைப்பு. இலாப வெறியும், சக நிறுவனங்களை மூர்க்கமாக அழிக்க நினைக்கும் முனைப்பும் ஒரு முதலாளிக்கு அடிப்படை எனும் போது அந்தப் பண்பு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேறு வேறு பரிமாணங்களில் இருந்தே தீரும். அதற்கு சாட்சிதான் டவர்ட்.
இதற்கு முன் இதே பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு தொடர் கொலை திரைப்படம் வெளி வந்திருக்கிறது. அதை இயக்கி ,தொடர் கொலைகாரனாக நடித்தவர் சார்லி சாப்ளின். அந்தப் படம் தான் ‘மோன்ஸர் வெர்டாக்ஸ்‘. அந்தப் படத்தில் பணக்கார விதவைகளைக் கொன்று அவர்கள் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி தன் கடன்களை அடைப்பார் சாப்ளின். அவரைக் கொடும் குற்றவாளியாக கோர்ட்டில் நிறுத்தும் போது அவர் தன் தரப்பாகச் சொல்வார்,
“ஆம்! எனக்கு மூளை இருந்தது. அதை வைத்து நான் நேர்மையாகவே வாழ்ந்தேன். ஆனால் ஒரு நாள் இந்த சமூகத்திற்கு என் மூளையும், நேர்மையும் தேவையற்றதாகி விட்டது. என்னைக் கொலைகாரன், வெறியன் என்கிறீர்கள்; சரிதான். ஆனால் இந்த உலகில் தன் தேவை என்று கூறிக் கொண்டு கொலைக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கும் நாடுகளை விட நான் சிறியவன். அந்த நாடுகள் போரில் கொன்ற பெண்களையும், குழந்தைகளையும் கணக்கிலெடுக்கும் போது நான் செய்த கொலைகள் சிறியவை. அவர்கள் அதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தார்கள். நான் அவர்கள் முன்னால் நிற்க தகுதியில்லாத அற்பன். ஆனால் இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் உங்களை நான் ஒரு நாள் பார்ப்பேன்”
பார்க்கிறோம் என்பதற்கு டவர்டின் கதையே போதுமானது. இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் இதன் களமும், கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற புதிய அமைப்பை மார்ச் 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப் போவதாகவும் இவ்வமைப்பு மத்திய உளவுப் பிரிவின் கீழ் இயங்குமென்றும் கடந்த பிப்ரவரியில் மைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. “தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில், சம்மந்தப்பட்ட மாநில அரசின் சம்மதம் இன்றியே இம்மையம் குற்றவாளிகளின் இருப்பிடங்களைச் சோதனையிட முடியும்; அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆவணங்களைக் கைப்பற்ற முடியும்; மேலும், அவர்களைக் கைது செய்யவும் முடியும்” என்றவாறு பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இம்மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. சுருக்கமாகச் சொன்னால், இந்த மையம் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவாகவும் போலீசாகவும் இரட்டைக் கதாநாயகர்கள் போலச் செயல்படும். மேலும், மாநில போலீசார் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்த மையத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் சாசனப்படி, குற்றவாளிகளைக் கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப் பதிவது, வழக்கை நடத்துவது ஆகியவை மாநில அரசின், போலீசின் அதிகாரமாகும். மாநில அரசின் சம்மதத்தோடு அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, மையப் புலனாய்வுத் துறை எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியும். மாநில அரசின் கைகளில் மட்டுமே இருந்துவரும் இந்த அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்ளத் தற்பொழுது கிளம்பியுள்ளது, மைய அரசு. இதன் காரணமாகத்தான், இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே, “இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை; சமஷ்டி அமைப்பு முறைக்கும், அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது” எனக் கூறி, இம்மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக பா.ஜ.க.வும், அதனின் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசு கூட்டணியில், கட்டுச் சோற்றுப் பெருச்சாளியாக இருந்து வரும் மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இம்மையம் அமைப்பது தொடர்பாக மே முதல் வாரத்தில் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது.
மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்த கல்வித்துறை போன்றவற்றை பொதுப்பட்டியலின் கீழ் கொண்டுவந்து, மாநில அரசுகளின் பல நியாயமான உரிமைகளை ஏற்கெனவே பறித்திருக்கிறது, மைய அரசு. அதனையெல்லாம் கொள்கைரீதியாகவே ஏற்றுக்கொண்டுள்ள பா.ஜ.க., ஜெயா கும்பல், மாநில உரிமையினைக் கருத்திற்கொண்டே போலீசுக்குரிய அதிகாரங்களோடு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதை எதிர்ப்பதாகக் கூறுவது, நகைப்புக்குரிய நாடகமாகும். மக்களின் சகல நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆதார் அடையாளத் திட்டத்தை எதிர்க்காத இக்கும்பல், இப்பிரச்சினையில் மக்களின் உரிமைக்காக நிற்பதைப் போல பீற்றிக் கொள்வது வெற்று அரசியல் ஸ்டண்ட் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பீற்றிக் கொள்வது போல ஒவ்வொரு மாநில அரசும், போலீசும் அந்தந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையினையா ஆற்றிவருகின்றன?
தீவிரவாதத்தை ஒழிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒவ்வொரு மாநில போலீசும் எந்தளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது என்பதும், ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தோடு போலி மோதல் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை போலீசுக்கு உரிய அதிகாரங்களோடு அமைப்பதன் மூலம் மாநில ஆளும் கட்சிகளுக்குப் போட்டியாக மைய அரசும் களத்தில் குதிக்கத் தயாராகி வருகிறது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை பழைய தாதா விரும்புவதில்லைதானே. இம்மையத்திற்கு எதிராக பா.ஜ.க., ஜெயா, நவீன் பட்நாயக், மம்தா ஆகியோர் போடும் கூச்சல்களை, இந்த தாதாக்களின் அதிகாரப் போட்டியோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.
தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் காங்கிரசு கூட்டணி அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. மாநில அரசின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல், இந்தியா வெங்கிலும் விசாரணை நடத்தக்கூடிய தேசியப் புலனாய்வு ஏஜென்சியை உருவாக்கியிருக்கிறது. இந்த அதிகாரக் குவிப்பின் தொடர்ச்சியாகத்தான், உளவுப் பிரிவுக்கு போலீசுக்குரிய அதிகாரங்களைக் கொடுக்கும் அபாயகரமான தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விசயத்தில் அரசு பாசிசமயமாவதும், மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்படுவதும்தான் மையமான பிரச்சினை. ஆனால், எதிர்த்தரப்போ தமது அரசியல் ஸ்டண்ட் மூலம் இந்த மையமான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைச் சிதறடிக்க முயலுகிறார்கள். ஊடகங்களும் எதிர்த்தரப்பு அடிக்கும் ஸ்டண்டையே ஊதிப் பெருக்கி, உண்மையை மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முயலுகிறார்கள்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அச்சட்டத்தின்படியே இம்மையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இச்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பொடாவின் மறு அவதாரமாகும். இந்திய மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக பொடா சட்டத்தைக் கைகழுவிய காங்கிரசு கும்பல், ஏற்கெனவே அமலில் இருந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, காலாவதியாகிப் போன அக்கருப்புச் சட்டத்தைக் கொல்லைப்புற வழியில் கொண்டுவந்தது.
2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இத்திருத்தங்களோடு இச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டபொழுது, வெறும் 50 உறுப்பினர்கள்தான் நாடாளுமன்ற மக்களவையில் இருந்தனர்; இத்திருத்தங்களின் அவசியம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தொடங்கியபொழுது உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்து, பின்னர் படிப்படியாக 47 எனக் குறைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட இலட்சணம் இதுதான். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு இப்பொழுதுகூட இக்கருப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இச்சட்டம் மக்களின் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், மாநில அரசின், போலீசின் உரிமைகளில் தலையிடாதவாறு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.
ஆனால், மைய அரசோ, “மைய உளவுத் துறை தரும் தகவல்களை, எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசுகள் தமது அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்தத் தயங்குவதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் எடுத்து வரும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. அதனால்தான், போலீசின் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பாகத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக’’க் கூறிவருகிறது.
மைய அரசின் கீழுள்ள உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் மாநிலப் போலீசைவிடத் திறமைசாலிகளைப் போலவும், இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபடாத, அரசியல் குறுக்கீடு எதுவுமில்லாமல் பணியாற்றும் நேர்மையாளர்கள் போலவும் நகர்ப்புறத்து படித்த நடுத்தர வர்க்கம் எண்ணிக் கொண்டுள்ளது. ஆனால், மாநில போலீசைப் போலவே, மைய அரசின் உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் அரசியல் எதிரிகளை வேவு பார்க்கவும் பழி வாங்கவும் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, மைய அரசின் உளவுத் துறையால் முன்கூட்டியே உளவறிந்து சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே அதனின் திறமையைப் புரிந்துகொண்டுவிடலாம்.
காலனிய ஆட்சியின்பொழுது, சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களைப் பற்றி உளவறிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உளவுத் துறை, அதன் அரசியல் எஜமானர்களுக்குத்தான் கட்டுப்பட்டதேயொழிய, நாடாளுமன்றத்தில்கூட அதனின் செயல்பாடுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இப்படிபட்ட இரகசியமான அதிகாரவர்க்க அமைப்பிற்கு போலீசுக்குரிய அதிகாரங்களை அளிப்பது அபாயகரமானதுதான் என்றாலும், இதனை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இடதுசாரி பயங்கரவாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது எனத் திரும்பத்திரும்பக் கூறிவரும் பின்னணியில்தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் பார்க்க வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் குறித்து தெளிவான வரையறைகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற பெயரில், யாரையும், எந்தவொரு அமைப்பையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துமளவிற்குத் தொளதொளப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையை வைத்துக் கொண்டு, அரசின் ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்ப்பவர்களைக்கூடத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தமுடியும். ஆயுத மோதல்கள், குண்டு வெடிப்புகள் போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கும் பகுதியில்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. இதன்பொருள், அரசை, சட்டபூர்வமான ஜனநாயக வழியில் எதிர்த்துப் போராடுபவர்களைக் கூட இச்சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும் என்பதுதான்.
இப்படிக் கைது செய்யப்படுபவர்களை, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே 180 நாட்கள் வரையிலும் போலீசு காவலில் வைத்திருக்க முடியும். இது, கொட்டடிச் சித்திரவதைக்கும், அதன் மூலம் பொய்யான வாக்குமூலம் வாங்குவதற்கும் போலீசிற்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ சுதந்திரமாகும்.
இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு அவர் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தார்; தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற நிரூபிக்க வேண்டிய அவசியமெல்லாம் அரசிற்குக் கிடையாது. அவர் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார், அதற்காக நிதி வசூல் செய்து கொடுத்தார் என்ற உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்தே கைது செய்ய முடியும்; இதே காரணங்களைக் கூறி, சட்டபூர்வமான முறையில் செயல்பட்டுவரும் சங்கங்கள், அமைப்புகளைக்கூட அரசால் தடை செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் முன்பே, அவரது சொத்துக்களை அரசால் பறிமுதல் செய்ய முடியும்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள குஜராத், ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள்தான் இந்த அரசு பயங்கரவாதச் சட்டத்தை ஏவி, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ளனர். அம்மாநிலங்களில் கடந்த நான்காண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டம் பிடித்துப் போட்டுள்ள ‘தீவிரவாதிகள்’ யார்யாரென்று பார்ப்போமா?
அரியானா மாநிலத்தில் மேல்சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தாழ்த்தப்பட்டோரும், பஞ்சாபில் அரசின் நாசகார விவசாயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளே இல்லாத குஜராத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சுமத்திப் பலரைக் கைது செய்துள்ள மோடி அரசு, அவர்கள் இன்னென்ன குற்றங்களைச் செய்துள்ளனர் என்பதைக்கூட இதுநாள்வரை பதிவு செய்ய மறுத்துவருகிறது.
மேற்கு வங்கத்தில் சி.பி.எம். குண்டர்களுக்கும், பயங்கரவாத போலீசுக்கும் துணை இராணுவப் படைகளுக்கும் எதிராகப் போராடிய போலீசு அடக்குமுறைகளுக்கு எதிரான சங்கம், வனவாசி சேத்னா ஆஷ்ரம், மதாங்கினி மஹிலா சமிதி உள்ளிட்ட பல சமூக அமைப்புகளும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு, அவற்றின் உறுப்பினர்கள் பலர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்டுகளைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த மம்தா, இந்த வழக்குகளில் ஒன்றைக்கூடத் திரும்பப் பெறவில்லை. ஒரிசா மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2009 இல் 18 ஆகவும், 2010 இல் 94 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை பகுதி மக்கள் அமைதியான, சட்டபூர்வமான முறையில் நடத்தி வரும் போராட்டத்தில், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டதாக ஜெயா அரசு பீதி கிளப்பியதையும், போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக மைய அரசு அவதூறு செய்ததையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்துகிறது என்பதைத்தான் இந்த வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அந்நாட்டு அரசு “பேட்ரியாட்” சட்டம்என்றொரு கருப்புச் சட்டத்தை இயற்றியதோடு, தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் உருவாக்கியது. மும்பய் தாக்குதலுக்குப் பின், இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற இவையனைத்தும் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி அமெரிக்காவை காப்பியடித்து அடக்குமுறை சட்டங்களையும் அமைப்புகளையும் கொண்டுவருவது ஒருபுறமிருக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்திலும் அமெரிக்கா நேரடியாகத் தலையீடு செய்யும் வண்ணம் தாராளமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது, இந்திய அரசு. வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இந்தியாவில் செயல்பட அனுமதித்தார். இந்த ஒத்துழைப்பு மன்மோகன் காலத்தில் இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியை மேற்கொள்வது என்ற அளவில் வளர்ந்து வருகிறது.
அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக 1,000 கோடி டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கும் என்பதால், அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றனர். இந்த வர்த்தக நோக்கம் ஒருபுறமிருக்க, உள்நாட்டு பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரி வருகின்றனர். இது, ஒரிசாவிலும், சத்தீஸ்கரிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தாக்கிவரும் குண்டர் படைகளைச் சட்டபூர்வமாக்கும் கோரிக்கை தவிர வேறில்லை. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது இந்திய மக்களின் நலன் சார்ந்தது அல்ல என்பதுதான் அது.
கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாக நடந்த ஆரிய படையெடுப்பு என்பது பழைய செய்தி. ஒரு கையெழுத்தின் மூலமாகவே, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனும் முந்தைய தி.மு.க. அரசின் அரசாணையை கோபுரச் சின்னத்தால் ஒரு குத்து குத்தி கிழித்தெறிந்து விட்டது பார்ப்பனப் பேய். கருணாநிதியின் குறுகிய சுயநல நோக்கில் தமிழ்ப் புத்தாண்டு மாதத்தை மாற்றி விட்டதாகவும் ஒரு ஆணவ அறிக்கை விட்டது அந்தக் கொள்ளிவாய். ஆமாம் ஆமாம் என்று தலையாட்டவும் சில தமிழறிஞர்கள்.
கருணாநிதி போலித்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக அவர் சோறைத் தின்றால் நாம் வேறொன்றைத் தின்ன வேண்டுமா? கருணாநிதி கனிமொழி ஆண்டு என்றா மாற்றினார், திருவள்ளுவர் ஆண்டு என்றுதானே பேசினார்! திருவள்ளுவர் என்ன தி.மு.க.வா? என்று பார்ப்பனத் திமிரை எதிர்த்துப் பேச ஆளின்றி, மத உணர்வு மீட்கப்பட்டதில் பார்ப்பனக் கெடுப்பும், சைவக் கடுப்பும் சேர்ந்து கூத்தாடுகின்றது.
சித்திரைதான் ஆண்டுத் துவக்கம் என்று நெடுநல்வாடையிலே உள்ளது, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார், நக்கீரர் சொல்லியிருக்கிறார், பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பார்ப்பன ஆவி சொன்னது என்று ஒரு கும்பல் ஆதாரங்களை அடுக்க, இல்லை இல்லை குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, புறநானூறு இவைகளிலெல்லாம் தைத்திங்கள் மரபு பற்றி குறிப்பு உள்ளது என தை மாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கமாக கொள்வோரின் ஆதாரம் முன்வைக்கப்படுகின்றன.
பஞ்சாங்கம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து, பஞ்சாங்கம் பார்த்து பதவி ஏற்று, பஞ்சாங்கம் பார்த்து வாய்தா வாங்கும் ஜெ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும், அடிவருடிகளும் முன்னிறுத்தும் சித்திரையின் சிறப்புதான் என்ன? மேழம், அதாவது மேஷ ராசியில் சூரியன் நுழைவதுதான் சித்திரை, ஆண்டுப் பிறப்பு என்றும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பிறந்தவை என்றும் ஆபாச, புராண அடிப்படையில் அமையப் பெற்ற பார்ப்பன இந்து மதம் ஆண்டுக்கணக்கை முன்வைக்கின்றது.
இதற்கு மாறாக பனிக்காலம் முடிவில் வெயில் துவங்கும் விவசாய உழைப்புக்கேற்ற தை மாதத்தை பருவ அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக கருதும் மரபை தங்கள் பஞ்சாங்கப்படி செல்லாது எனக் கூறுவதற்கு பார்ப்பனக் கும்பலுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரிய இனத்துக்கு ஆட்டின் (மேஷம்) மீதான காதலும், அறுபது ஆண்டுகள் பிறந்த விதத்தில் பெருமையாகவும் இருந்தால் அவர்கள் குடுமியைத் தட்டிக் கொள்ளட்டும். அதற்காக ஆரியப் பார்ப்பனக் குப்பையை அடுத்தவர் தலையில் கொண்டு வந்து கொட்டி, ’இதுதான் தமிழ்ப் புத்தாண்டு! இவைதான் தமிழர் ஆண்டுகள்’ என்று திணிப்பதையும், தமிழினத்தின் உரிமையை மறுப்பதையும் நாம் அயோக்கியத்தனம், ஆதிக்கம் என்பதால் எதிர்க்க வேண்டும்.
தமிழினம் உள்ளிட்ட எந்தவொரு இனத்திலும் தோன்றிய காலந்தொட்டு பண்பாட்டு அம்சங்கள் சில தொடர்வதும், சில மருவித் திரிந்து மாறுநிலை கொள்வதும், சமூக வரலாற்றுச் சூழலுக்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதிய பண்பாட்டு அடையாளங்கள் தோன்றுவதும் நடப்பதுதான். அந்த அடிப்படையில் தமிழினம் தனது பண்பாட்டு அடையாளங்களுடன் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு ஆண்டுக் கணக்கை முன்வைத்தால் திருவள்ளுவர் பிறந்த தேதி தெரியுமா? என நக்கலடிக்கிறார்கள் பார்ப்பனக் கும்பலும், அவர்களது பங்காளிகளும்.
இந்தக் கும்பல்தான் ராமன் பிறந்த இடம் இதுதான் என்றும், கடலுக்கடியில் ஒரு மணல் திட்டைக் காட்டி இது ராமர் பாலம் என்றும், ’இதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது, இது இந்துக்களின் நம்பிக்கை’ என்றும் தனது அயோக்கியத்தனத்தை அடம்பிடித்து சாதிக்கின்றது. தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற பிரச்சினையில் நாம் பார்க்க வேண்டியது பார்ப்பன ஆதிக்கமா? இல்லை தமிழின உரிமையா? என்பதாகும். ஏனெனில் வரலாற்றிலும் சரி, தற்காலத்திலும் சரி தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைப் பார்ப்பன மத ஆதிக்கத்திற்கு கீழ்ப்பணிய வைக்க கட்டுக்கதை கட்டுவதும், தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைத் தாக்கி அழிப்பதும் ஆரிய மேலாதிக்கத்தின் தொடர் நடவடிக்கையாக உள்ளது.
இசுலாமோ, சமணமோ தங்களுக்கான மத (காலண்டர்) ஆண்டுகளை தமிழாண்டுகள் என்றோ, தமிழ்ப் புத்தாண்டு என்றோ சொல்வது கிடையாது. அவர்களுடைய மத ஆண்டுகளாகவே கடைபிடிக்கிறார்கள். அது போல பார்ப்பனக் கும்பல் சித்திரையை தங்களது மத ஆண்டாக போயஸ் கார்டனில் பொங்கல் வைத்து ஓ.பன்னீர் கிடா வெட்ட, சரத்குமார் கரகாட்டம் ஆட கொண்டாடிக் கொள்வது அவர்களது உரிமை. ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு என மத அடையாளத்தை முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? தமிழினம் தன்னிலத்தில் தமக்கான ஆண்டை தையிலே தொடங்கினால் மேஷத்திற்கு என்ன மோசம் வந்தது? போய் ஜெயலலிதாவின் பட்டியில் அமைச்சர்களோடு அதுவும் சேர்ந்து அடைய வேண்டியதுதானே! ’இல்லை இல்லை இது ரொம்ப நாள் பழக்க வழக்கம் மாற்றக் கூடாது’ என்று பார்ப்பது சரியா?
கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறுவதுதான் பாரப்பனப் பழக்க வழக்கம்; சக மனிதன் மேல் சாதி தீண்டாமை பார்ப்பது கூடத்தான் சமூகத்தில் பழக்க வழக்கம். அதற்காக இந்த அயோக்கியத்தனங்களை எப்படி ஆதரிக்க முடியாதோ, அதே போலத்தான் ஆரிய ஆண்டுப் பிறப்பையும், ஆண்டுக் கணக்கையும் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்க முடியாது. சித்திரை என்ற கணக்கின்படி பார்ப்பன மத ஆதிக்கம், வடமொழி ஆதிக்கம், ஆபாசக் கலாச்சாரம் ஆகியவைகளை அட்டியின்றி ஏற்பதை விட ஆண்டுத் துவக்கக் குறியீடாக தையை ஏற்பதில் தவறேயில்லை.
இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன். அரசியல், பொருளாதார இழிவுகளைப் போலவே பார்ப்பனப் பண்பாட்டு இழிவுகளையும் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது… அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். இடது, வலதுகள் போல ’எங்கே மேய்ந்தால் என்ன? வயிறு ரொம்பினால் போதும்’ என்று வாழ முடியாது. சூடு சொரணையுள்ள தொழிலாளி வர்க்கத்தால்தான் சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்று கூறுகிறோம். அந்த வகையில் சித்திரை மாதத்து பத்தரை மாற்றுத் தங்கங்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பன அடிவருடிகளையும் நாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்.
கி.ஆ.பெ. விசுவநாதன் சொன்னார், மறைமலையடிகள் சொன்னார், நா.மு. வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசன், பாரதிதாசன் சொன்னார் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழறிஞர்களைத் தவிர ”ஏன்? தமிழ்ப் பண்பாட்டுப்படி எங்களுக்கு தைதான்… இப்ப என்னாங்குற… ?” என்று எதிர்த்து வாதாட இவ்வளவு பெரிய தமிழ் வரவு செலவு நாட்டில் ஒரு தமிழறிஞனையும் காணோம். மறைமலையடிகள் அல்ல திருவள்ளுவரே திரும்ப வந்து சொன்னாலும் பார்ப்பனக் கும்பல் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அவர்களின் நோக்கம் தையை தகர்ப்பது மட்டும் கிடையாது. தொடர்ச்சியாக தமிழ் வழிபாட்டுரிமை, கருவறையில் தமிழ் பாடும் உரிமை, கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அழிப்பு, கோட்டையில் உள்ள பாரதிதாசன் செம்மொழி நூலகம் தகர்ப்பு என தமிழின அடையாளங்களையே அழிப்பதுதான்.
இது ஏதோ கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக ஜெயலலிதா மாற்றுகிறார் என்று கருதுவது தவறானது. நோக்கியா, ஹூண்டாய் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுடன் ஏற்படுத்திய அரசு ஒப்பந்தங்களை கருணாநிதி கொண்டு வந்தார் என்று ஜெயலலிதா எதையும் நீக்கவோ, மாற்றவோ இல்லை. பன்னாட்டுக் கம்பெனி விசயத்தில் பார்ப்பனக் கம்பெனியும், திராவிடக் கம்பெனியும் ஒரே கூட்டணிதான். மற்றபடி இது பச்சையான பார்ப்பன மேலாதிக்கம் என்பதற்கு தையின் மீதான தாக்குதல் ஒரு வகை மாதிரி.
மாய்ந்து மாய்ந்து தமிழில் பாட்டெழுதி, தமிழில் பட்டிமன்ற கல்லா கட்டி (ஜெயலலிதாவின் சீலைப்பேன் கு. ஞானசம்பந்தனை விடுங்கள்), குடம் குடமாக தமிழ்த்தேனைக் குடித்து, ஜடம் ஜடமாக கல்விப்புலத்தில் கொட்டிக் கிடக்கும் தமிழறிஞன் ஒருவரும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தமிழைப் பேசிப் பிழைத்து, தமிழால் பதவியில் அமர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், ’உலகத்துக்கே தமிழாராய்ச்சி’ இப்படி பல வசதியான நாற்காலிகளில் ஆறு கால்களுடன் ஊர்ந்து கிடக்கும் மூட்டைப் பூச்சிகள் மொழி, இன உரிமைக்காக முணுமுணுக்கக் கூட இல்லாமல் ‘பாவத்தின் சம்பளத்தை’ மட்டும் பரிசுத்தமாக எண்ணிக் கொண்டிருப்பது மகா அயோக்கியத்தனம்.
மற்றவர்களை விடவும் மொழி, பண்பாட்டு விசயங்களை ஆய்ந்து அலசி, நுண்மான் நுழைபுலம் வாய்ந்த பேரறிஞர் பெருமக்கள், சமூகத்தில் தன் மொழி, பண்பாடு சார்ந்து ஒரு பாதிப்பு நேர்கையில் தன் வயிறை மட்டும் தடவிக் கொண்டு வாழ்வது கேவலமாகப் படவில்லையா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தாளமுத்து நடராசன் உடம்பில் மொழியுணர்ச்சி தீயாய்ப் பரவியது. ”உணர்ச்சியற்ற உங்களுக்கு உடம்பில் தோல் எதற்கு?” எனத் தமிழறிஞர்களைப் பார்த்து அவர்களின் உணர்ச்சி கேட்பது போல் தெரிகின்றது. அதனால்தான் பெரியார் ஒரு சந்தர்ப்பத்தில் “வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்தப் புலவனையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத்தண்டைனை வரையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தன்மானமில்லாத தமிழ்ப் புலவர்கள்” என்று ஆவேசத்துடன் கூறினார்.
தைய.. தையா.. என்று பாட்டெழுதி பிழைப்பவர் முதல் தமிழாய்வு செய்து பெருவாழ்வு வாழும் கல்வித்துறை தமிழறிஞர்கள் வரை.. ’எவன்டா என் தை யில் கை வைத்தது!’ என்று முதுகெலும்போடு எழுந்து நின்று கேள்வி கேட்பார்கள் என்று வீதியைப் பார்த்தால், எல்லோர் வாயிலும் இலக்கணப் போலி சீல் வைத்துத் தொங்குகிறது. ’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?! பெயரளவுக்கு ஒரு அறிக்கை விட்டால் கூட அந்த அம்மா ஒரு பெட்டி கேஸ் போடும் என்ற பயமா?… இல்லை தமிழ் செத்தால் பரவாயில்லை, தான் செத்தால் இருப்பதை அனுபவிக்க முடியுமா என்ற நயமா..? கல்வியா.. செல்வமா.. வீரமா.. என்று தமிழாய்ந்து விவாதித்து, கடைசியில் செல்வமே என சீல்பிடித்துப் போய் விட்டனர் தமிழறிஞர்கள்.
கவிப்பேரரசும், கோடம்பாக்கத்து குட்டி குட்டி சிற்றரசும், தமிழ்த்துறை தோறும் கோலோச்சும் தனியரசும் கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்க ஓர் ஆளில்லை என்பதோடு இந்தக் கேடுகெட்டத் தமிழறிஞர்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பார்த்து, ’தமிழனுக்கு இன்னும் சொரணை வரல சார்… எல்லாம் கோழப்பசங்க..’ என்று பல சந்தர்ப்பங்களில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம். ஜெயலலிதாவைப் பார்த்து… நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே… என்ற நக்கீரன் அளவுக்கு வேண்டாம், தமிழைப் பிசைந்து தின்று வயிறு வளர்த்த கடமைக்காவது எச்சில் கையால் காக்காய் விரட்ட வீதிக்கு வரக் கூடாதா?
இதை விடக் கேவலம் பார்ப்பன அம்மா தமிழன் தலையில் வடகம் பிழிந்தால் காக்காய் விரட்ட அல்லவா இவர்களிடம் போட்டா போட்டி… உண்மையில் தமிழறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்தவர்கள் என்பதை விட, இன்றைய உலகமய சொகுசில் எந்தவிதத்திலும் தன் குடும்பத்திலோ, உணர்விலோ தமிழ் மொழி, பண்பாடு அற்ற பிழைப்புவாதக் கும்பல் என்பதுதான் ஊரறிந்த உண்மை.
இருந்தாலும் நம் தமிழறிஞர்கள் நாம் சொல்லும் அளவுக்கு ஒன்றும் சும்மா கிடக்கவில்லை. ஜெயலலிதா ’சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்’ என உத்தரவு போட்டவுடன், பம்பரமாகச் சுழன்று சங்க இலக்கியங்களை அங்க அங்கமாகக் கழட்டி அதற்கு ஆதாரம் தேடிக் களைத்தே போய் விட்டார்கள். “அறம் செய விரும்பு” என்று பண்பாடு போற்றிய அவ்வையார் பெயரில் ஒரு விருதை “பணம் செய விரும்பு” என பள்ளிக்கூடம் கட்டிக் கொள்ளையடிக்கும் பத்மா சேஷாத்ரி திருமதி. ஒய்.ஜி.பி. க்கு கொடுத்தபோது, சொரணையோடு கைதட்டி சிவந்த கும்பலில் எத்தனை தமிழறிஞர்கள் பாருங்கள்… “நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் தேரையே!” என்ற பாரதிதாசனின் வரி ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது.
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)
தேசிய அவமானம்
அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.
பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowshipஎனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.
ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.
நன்றி www.manjul.com
அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.
இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?
ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.
ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?
ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?
யேல் பல்கலையில் குத்தாட்டம் போடும் பாதுஷா – படம் www.thehindu.com
ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.
சையத்-அகமது-காஸ்மி
சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாககைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு, இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.
மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.
ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)
பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும்பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.
ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம். ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?
இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.
நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……