“இந்திய இராணுவம்” என்றாலே பலருக்கும் பலவும் நினைவுக்கு வரும். பொதுவாகப் பார்த்தால் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு தேசப்பற்று நினைவுக்கு வரும்; மேட்டுக்குடி / ஐ.டி துறை இளைஞர்களுக்கு சாகசங்கள் நினைவுக்கு வரும்; வடகிழக்குப் பெண்களுக்கு கற்பழிப்புகள் நினைவுக்கு வந்து ஆத்திரம் தோன்றும்; காஷ்மீரிகளுக்குக் கொலைகள் நினைவுக்கு வந்து வன்மம் தோன்றும்; தண்டகாரண்யக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மண் பறிபோகும் சோகம் நினைவுக்கு வந்து வீரம் பிறக்கும்; விவசாயம் பொய்த்துப் போன வட மாநிலங்களில் பள்ளி முடித்த இளைஞர்களுக்கு சுட்ட ரொட்டியும் பருப்புக் கூட்டும் வறுத்த கறியும் நினைவுக்கு வந்து ஏக்கம் பிறக்கும்; மொழி-இன வேறுபாடு இல்லாமல் மொக்கைகளுக்கு மலிவான மிலிட்டரி சரக்கு நினைவுக்கு வந்து எச்சிலூறும்..
பிறருக்குத் தோன்றுவதிருக்கட்டும் – அதே இராணுவத்தின் மேல் மட்டத்திலிருந்து கடைநிலைவரை உள்ள அதிகாரிகளுக்கு தாம் பணிபுரியும் பிரம்மாண்டமான இயந்திரத்தைப் பற்றி என்ன மாதிரியான சித்திரம் இருக்கும்?
அது என்னவென்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் வாழ்க்கையையும் அது உத்திரவாதப்படுத்திக் கொடுத்திருக்கும் அதிகார வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வது அவசியம். இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு சுமார் அறுபத்தோரு வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றது. துவக்கச் சம்பளமாக மாதம் ரூ 15,600-ல் இருந்து 39,100 வரை வழங்கப்படுகிறது. இது போக, சேவைச் சம்பளம் 6,000, போக்குவரத்து அலவன்சாக 1,600-ல் இருந்து 3200 வரை தரப்படுகிறது, சியாச்சின் போன்ற பகுதிகளில் பணிபுரிய தனியாக மாதம் 14,000, தரமான உணவுப் பொருட்கள் அனைத்தும் மலிவான விலைக்கு, வருடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இலவச ரயில் பயணம், குடும்பம் மொத்தத்திற்கும் இலவச மருத்துவம், கண்டோன்மென்ட் பகுதிகளில் மலிவு விலைக்குத் தங்குமிடம், பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க ஒதுக்கீடு, சீருடைக்கு படி, செருப்புக்கு படி, அதற்குப் பாலீஷ் போட்டுக் கொள்ள படி… ஓய்வு பெற்ற பின்னும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு… இன்னும் சொல்லி மாளாது நண்பர்களே.
சுருங்கச் சொன்னால் இராணுவம் என்பது காயடிக்கப்பட்டு நன்றாக ஊதிப் பெருத்த பங்களா நாய். அளவற்ற அதிகாரம், கேள்விகளுக்கப்பாற்பட்ட போலிப் புனிதம், துப்பாக்கியேந்திய வெட்டிப் பெருமிதம், மக்களுக்கு இவர்கள் மேல் இருக்கும் அச்சம், செயலற்ற பலம் – இவை மொத்தமும் சேர்ந்து வழங்கும் ஒருவகை விசேடமான திமிர் – இவையெல்லாம்தான் ஒரு இராணுவ அதிகாரியின் ஆளுமையை தீர்மானிக்கின்றன. 2012-ம் ஆண்டு மட்டும் இந்திய இராணுவத்துக்கான அதிகாரப்பூர்வமான பட்ஜெட் ஒதுக்கீடு ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து எழுநூற்றுப் பத்து கோடிகள்(37.65 பில்லியன் டாலர்கள்)..!
இராணுவச் செலவினங்களைப் பொருத்தமட்டில் இந்திய இராணுவம் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆயுத இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. பிரம்மாண்டமான இராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதி புதிய தளவாடங்கள் வாங்கவும், இருக்கும் உபகரணங்களை மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது. 2007 – 2012 கால அளவில் மட்டும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் புதிய தளவாடங்கள் வாங்க செலவிடப்பட்டதாக சுயேச்சையான மதிப்பீடு ஒன்று கூறுகிறது.
முன்பே குறிப்பிட்ட கேள்விகளுக்கப்பாற்பட்ட அளவற்ற அதிகாரமும் அதிகாரத் திமிரும் உள்ள ஒரு இடத்தில் இப்படி வரைமுறையின்றி நிதியைக் குவித்தால் என்னவாகும்? இதைத் தான் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தண்டோரா போட்டு உலகத்துக்கு அறிவிக்கின்றன.
இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்
மார்ச் 25-ம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே சிங்கின் பேட்டி ஒன்று வெளியாகிறது. அதில், சுமார் ஒரு வருடத்திற்கு முன் அவரது சக அதிகாரி ஒருவர் (பின்னர் இது லெப்டினென்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் என்று உறுதிப்படுத்தப்பட்டது), 600 இராணுவத்திற்கான மாறுபட்ட புவியியல் பரப்பிலும் இயங்கங்கூடிய கனரக வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடக்காமலிருக்க 14 கோடிகள் லஞ்சமாக அளிக்க முன்வந்தார் என்றும், மேற்படி வாகனங்கள் தரமற்றதென்றும் குறிப்பிடுகிறார். தற்போது அதே கம்பெனியைச் சேர்ந்த சுமார் 7000 வாகனங்கள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கின்றது. இப்படி தலைமைத் தளபதியிடமே லஞ்ச பேரம் பேசும் சூழல் இராணுவத்தில் உண்டானது குறித்து அவர் குறிப்பிடும் போது, “எங்கோ எப்படியோ நமது தரம் தாழ்ந்து வீழ்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனே இந்தச் செய்தியைக் கையில் எடுத்துக் கொண்ட தேசிய ஊடகங்கள், இதற்கு மசாலா சேர்க்கும் விதமாக சமீப காலமாய் இராணுவத் தளபதிக்கும் அரசுக்கும் இடையே அவரது பிறப்புச் சான்றிதழ் குறித்து எழுந்துள்ள உரசல் போக்கோடு சம்பந்தப்படுத்தி, இதை அரசுக்கும் தளபதிக்குமான ‘மானப்’ பிரச்சினையாக ஊதிப் பெருக்கியது. இந்தியளவிலான ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில், அரசும் தளபதியும் லஞ்ச விவகாரத்தை போதிய கவனத்துடன் கையாளவில்லையென்றும், தளபதியும் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பொதுவெளியில் வைத்திருக்கக் கூடாது என்றும் ஒரு பஞ்சாயத்தை நடத்தி இது சம்பந்தப்பட்ட ஆளுமைகளுக்கிடையேயான ஈகோ பிரச்சினை என்பதாக மட்டும் சுருக்கி விட முயன்றன.
ஆனால் விஷயம் அத்தோடு ஓய்ந்து விடுவதாக இல்லை. இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் விவரங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊழல் முறைகேட்டுப் பூதத்தை ‘உசுப்பி’ விட்டுள்ளது. 1986-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த டாட்ரா நிறுவனத்தோடு இராணுவத் தளவாட வாகனங்களை வாங்க இந்திய இராணுவம் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகிறது. எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, செக்கோஸ்லோவாக்கியாவையும் விட்டு வைக்கவில்லை. அந்த நேரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த டாட்ரா நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த வெக்ட்ரா நிறுவனம் கையகப்படுத்துகிறது. வெக்ட்ரா நிறுவனம் வெளிநாடு வாழ் இந்தியரான ரவி ரிஷி என்பவருக்குச் சொந்தமானது.
டாட்ராவை இணைத்துக் கொண்ட வெக்ட்ரா, டாட்ரா சிப்பாக்ஸ் என்கிற வர்த்தக நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறது. டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனம் டாட்ரா வாகனங்களின் நேரடி உற்பத்தியாளராகத் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. டாட்ராவிடமிருந்து வாங்கி விற்கும் இடைநிலை நிறுவனம் தான் டாட்ரா சிப்பாக்ஸ். இங்கிலாந்து நாட்டின் கம்பெனி விவகாரங்களுக்கான இலாக்காவில் தனது தொழில் நடவடிக்கையாக டாட்ரா சிப்பாக்ஸ் குறிப்பிட்டுள்ளது இது தான் – “ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த சேவைகள்”. அதன் செயல்பாட்டு மூலதனம் (Working Capital) அன்றைய தேதியில் வெறும் 30,000 பவுண்டுகள் தான். வேறு வகையாகச் சொல்லப் போனால், டாட்ரா சிப்பாக்ஸ் ஒரு உப்புமா கம்பெனி.
2003-ம் ஆண்டு வாக்கில் டாட்ராவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெரக்ஸ் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்கிறது. பின் 2006-ம் ஆண்டு தனது 80% பங்குகளை ப்ளூ ரிவர் என்கிற நிறுவனத்திற்கு டெரக்ஸ் கைமாற்றி விடுகிறது. ப்ளூ ரிவர் நிறுவனத்தின் நான்கு முக்கிய பங்கு நிறுவனங்கள் – வெக்ட்ரா, சாம் அய்ட், கே.பி.சி ப்ரைவேட் ஈக்விட்டி, மெடாவ்ஹில் மற்றும் ரொனால்ட் ஆடம்ஸ். வெக்ட்ரா, ரஷியாவைச் சேர்ந்த கமாஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஹொசூரில் கமாஸ் வெக்ட்ரா என்கிற அசெம்ப்ளி யூனிட்டை நடத்துகிறது.
கமாஸ் வெக்ட்ராவின் 51% பங்குகள் கமாஸிடமும், 49% பங்குகள் வெக்ட்ராவிடமும் உள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதத்தில் கமாஸ் BEML நிறுவனத்திடம் ஒவ்வொரு வருடமும் 6000 ட்ரக்குகள் ( 4 X 4) சப்ளை செய்யும் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய ராணுவம் வெளியிடும் தளவாடக் கொள்முதலுக்கான டெண்டரில் ஒரு பக்கம் வெக்ட்ரா சிப்பாக்ஸ் BEML மூலம் கலந்து கொள்ள அதற்கான போட்டி டெண்டரை கமாஸ் வெக்ட்ரா மூலமாக தாக்கல் செய்து வேறு போட்டி நிறுவனங்கள் போட்டியில் தேர்வாகி விடாதவாறு பார்த்துக் கொண்டு தமது ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளனர்.
டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துடன் இராணுவத் தளவாடங்கள் பெற இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட BEML ( Bharath Earth Movers Limited) 1992-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் BEML இராணுவப் பயன்பாட்டுக்கான தளவாடங்கள் வாங்குவதில் மிக முக்கியமான வழிகாட்டி விதிமுறை ஒன்றை அப்போதே மீறியுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்துக்கான தளவாடம் எதுவானாலும், அதை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும் – மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்யக் கூடாது என்கிற விதி அப்போதே மீறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஸப் மிஜெஸ்க்கி என்கிற ஸ்லோவாக்கிய தேசத்தைச் சேர்ந்த நபர் நிதி முறைகேடுகளுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர்.
மேற்படி சந்தேகத்துக்குரிய நிழல்கள் டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்தின் மேல் இருக்கும் போதே BEML அதனோடான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் 2003-ம் ஆண்டு காலகட்டத்தில் இறங்குகிறது (அமெரிக்காவின் டெரக்ஸ் வெக்ட்ராவுடன் கைகோர்த்த அதே காலகட்டம்). இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த இராணுவ தளவாடப் பிரிவு டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டுப் பின் எந்த முகாந்திரமோ விளக்கமோ இன்றி அந்தக் கடிதத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறது.
டாட்ரா டிரக்
தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி. இதன் தரம் பற்றி புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணம் – பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.
டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது. உதாரணமாக வெறும் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும் தார்பாயை 30,000 ரூபாய்க்கு இராணுவத்திற்கு விற்கிறது டாட்ரா.
தேஜிந்தர் சிங் இராணுவ தளபதி வி.கே.சிங்கிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படுவது 2010 செப்டெம்பர் மாதம். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போது தான் அதை வெளியே எடுக்கிறார் வி.கே.சிங். இத்தனை மாதங்களாக இராணுவ அமைச்சரிடம் ‘வாய்ப்பேச்சாக’ சொன்னதைத் தாண்டி நடை பெற்ற ஊழலை அம்பலப்படுத்த ஒன்றும் செய்யவில்லை – சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு வெக்ட்ரா சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இராணுவத்தோடு பொருளாதார உறவு வைத்துக் கொள்ள தடை விதிக்கவும் ( Blacklist) இல்லை. இதே தளபதி தான் தனது வயதுச் சான்றிதழைத் திருத்தவிலை என்கிற ஆத்திரத்தில் நீதிமன்றம் வரை அரசை இழுத்தவர். தனது சொந்த விஷயத்துக்காக அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் துணிச்சல் கொண்டவர், கண்ணுக்குத் தெரிந்து நடந்த ஊழலை மட்டும் அமைச்சரிடம் போகிற போக்கில் வாய்ப்பேச்சாக சொல்லியிருக்கிறார்.
தனது பதவியை நீட்டிக்க அரசு உதவவில்லை என்கிற நிலையில் தான் பதிலடியாக ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணருகிறார் தலைமை இராணுவ தளபதி. அதோடு சேர்த்து, வி.கே சிங் உரால்ஸ் நிறுவனத்தோடு கொண்டிருக்கும் நட்புறவும் கவனத்திற்குரியது. டி.ஆர்.டி.ஓவின் ஒப்புதலின்றியே அவர் வடகிழக்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த போது, அதிகாரப்பூர்வமற்ற முறையில் உரால்ஸ் நிறுவனத்தின் டிரக்குகளைச் சோதித்துப் பார்த்துள்ளார் என்கிற செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.
இராணுவத்தில் ஒரு இயந்திரத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகள் உண்டு. அதையெல்லாம் மீறி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உரால்ஸ் டிரக்குகளை வி.கே.சிங் சொந்த ஆர்வத்தில் மட்டும் தான் சோதித்துப் பார்த்திருப்பார் என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. வெளிவரும் தகவல்களை வைத்துப் பார்த்தால், இராணுவத்தின் ஒரு சாரார் வெக்ட்ரா லாபியோடும் வி.கே.சிங் உரால்ஸ் லாபியோடும் நெருக்கம் காட்டியிருப்பது தெளிவாகிறது.சொந்தக் காரணமாகவோ அல்லது கார்ப்பரேட் லாபியின் எதிர் முனையில் நிற்பதாலேயோ தான் வி.கே.சிங் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் – அவரே பீற்றிக் கொள்வது போல் நியாய தர்மத்துக்குக் கட்டுபட்டு அல்ல.
இது ஒருபுறமிருக்க, இராணுவத் தளபதி லஞ்ச விவகாரத்தைக் கிளப்பியவுடன் களமிறங்கிய எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் இதைப் பற்றி விவாதிக்கக் கோரி ரகளையில் ஈடுபடுகின்றன. இராணுவத்தில் லஞ்சம் என்பது தேசியளவில் விவாதத்திற்குள்ளாவதோ, அதைத் தொட்டு ஒவ்வொரு பூதமாக வெளிக்கிளம்பி வருவதென்பதோ ஆளும் வர்க்கத்திற்கு பாரதூரமான விளைவுகளை உண்டாக்கி மூலத்தில் ஆப்பறைந்தது போலாகி விடக்கூடும். எனவே விவாதத்தை மடை மாற்றும் நோக்கில் மத்திய அரசு, இராணுவத்தின் தயார் நிலை பற்றி தளபதி பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் கசிய விடுகிறது.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் புகார்கள் பற்றிய விவாதங்கள் பின்னணிக்குப் போய் இராணுவ தளபதியின் ‘அடாவடித்தனம்’ முன்னுக்கு வருகிறது. நாட்டின் மானம் மரியாதை, இராணுவத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்று சகலமும் பறிபோய் விட்டதாக ஒப்பாரி வைக்கும் ஓட்டுக் கட்சிகள், இராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா மட்டுமல்லாது வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸோடு கரம் கோர்க்கிறார்கள்.
இந்த கூச்சலில் அகஸ்டா வெஸ்ட்லாண்டு என்கிற இத்தாலி நிறுவனம் இராணுவத்திற்கு ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்ய அமெரிக்க இடைத்தரகு கம்பெனி ஒன்றின் மூலம் 15% லஞ்சம் கொடுத்ததாக வெளியான செய்தி ஓசையின்றி அமுக்கப்பட்டு விட்டது. சாதாரணமாக தற்போது வெக்ட்ரா நிறுவனத்தின் மேல் சி.பி.ஐயை வைத்து ஒரு கண்துடைப்பு விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான். அந்த வகையில் 1948-ம் ஆண்டே இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் வி.கே கிருஷ்ணன் மேனன். அதைத் தொடர்ந்து, போபர்ஸ் ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், கோல்ப் கார்ட் ஊழல், சுக்னா ரியல் எஸ்டேட் ஊழல், என்று சகலத்திலும் ஊழல் தான். சர்வதேச அளவில் ஆயுத பேரங்களைக் கட்டுப்படுத்தும் பலமான வலைப்பின்னல் கொண்ட மாஃபியா கும்பல்கள் தான் இந்திய இராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலையும் கட்டுப்படுத்துகின்றன.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்பெற்ற உயரதிகாரிகள் ஆயுத பேர இடைத்தரகு கம்பெனிகளில் ‘வல்லுனர்களாக’ சேர்ந்து ஆயுத மாஃபியாவின் அங்கங்களாகிறார்கள். ஆயுதக் கம்பெனிகளின் வலுவான லாபியிங் இயந்திரத்தின் நட்டு போல்ட்டுகளாய் மாறும் இவர்களுக்கு ஆயுதக் கொள்முதலில் பின்பற்றப்படும் டெண்டர் நடைமுறைகளும், எங்கே எதைத் தள்ளினால் எப்படி காரியம் சாதிக்க முடியும் என்பதும் அத்துப்படி. அந்த வகையில் அவர்களை ‘கேடி கிரிமினல்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் இவர்கள் மூலமாகவே நடக்கிறது. உண்மையில் இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் கொள்கையை பாகிஸ்தானின் இராணுவத் தயாரிப்புகளோ சீனத்தின் இராணுவத் தயார்நிலையோ தீர்மானிப்பதில்லை – சர்வதேச ஆயுத பேர மாஃபியா கும்பலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுத உற்பத்திக் கார்ப்பரேட்டுகளும் தான் தீர்மானிக்கின்றனர்.
கடந்த பல பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு ஒரு பகாசுர பூதம் போல் நீட்டிப் படுத்துக் கிடக்கிறது இராணுவம். இராணுவத்தின் அதிகார வர்க்கம், ஊழலிலும் உல்லாச சொகுசு வாழ்க்கையிலும் ஊறித் திளைத்துக் கிடக்கிறது. இராணுவம் என்கிற வார்த்தை நமது சிந்தனையில் என்னவிதமான சித்திரத்தை உண்டாக்குமோ – ஆனால், அதன் அதிகாரிகளுக்கு கண்களும், காதுகளும், உணர்ச்சிகளும் அற்ற ஒரு காமதேனுவின் சித்திரத்தை தான் அது உண்டாக்குகிறது. வேண்டும் மட்டும் கறந்து கொள்ளலாம், கேள்வி முறை கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது, தணிக்கை கிடையாது.
இந்த தேசத்தின் எல்லைகளை விட அளவில் ஊதிப் பருத்த மாபெரும் ஊழல் பெருச்சாளியாக ராணுவம் மக்களின் மேல் அழுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அடியாள் படைக்கு இந்தத் தகுதியும் தராதரமுமே போதுமானதாக இருப்பதால் ஆளும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பல் இதைத் தெரிந்தே விட்டு வைத்திருக்கிறது. ‘கொல்’ என்றால் கொல்ல வேண்டும்; ‘அடி’ என்றால் அடிக்க வேண்டும் – ஏன் எதற்கு என்கிற கேள்விகள் அனாவசியம். தமது நடவடிக்கைகளால் ஏமாற்றமடையும் மக்களை மிதித்து நசுக்க இது போன்ற யானைக் கால்களே போதும் என்பதால் தான் அதன் ஊழல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன.
1948-ம் ஆண்டு நடந்த ஜீப் ஊழலின் விசாரணை எப்படி முடிவுற்றது தெரியுமா? அந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட அனந்தசயனம் அய்யங்கார் கமிட்டியின் பரிந்துரைகளை புறம் தள்ளிய அப்போதைய உள்துறை மந்திரி கோவிந் வல்லப பந்த், ஊழல் விசாரணைகளை தமது அரசு மேற்கொண்டு தொடராமல் இழுத்து மூடவிருப்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு இதில் உடன்பாடில்லையென்றால் அதைத் தேர்தல் பிரச்சினையாக மாற்றிக் கொள்ளட்டும் என்று செப்டெம்பர் 30 – 1955 அன்று திமிர்த்தனமாக அறிவிக்கிறார். ஊழலில் ஈடுபட்ட கிருஷ்ணன் மேனன், அதற்கடுத்த வருஷமே நேருவின் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.
மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கு வாய்க்கிறது. இதை ஊட்டி வளர்க்கும் அரசும், முதலாளிகள் இருக்கும் வரை அது ஊழலில் பெருத்து, அடக்குமுறையில் ஆட்டம் போடும். உழைக்கும் மக்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கும் போது உருவாகும் மக்கள் இராணுவம் இத்தகைய அதிகார வர்க்க பொறுக்கி இராணுவத்தினை இல்லமலாக்கும். அதுவரையிலும் நமது கோபம் இந்த பங்களா நாயை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு எதிராக திரும்பட்டும்.
பதிவர்களோடு விவாதம் நடத்தி எத்தனை நாளாயிற்று! இது நம் குற்றமா, இல்லை வாய்ப்பு தராத சூழலின் சாபமா? முற்றிலும் சூழல் அப்படி இல்லை என்று சொல்ல முடியாது. ஆதீனம் ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் மறுவினைக்கான விருப்பத்தை எப்போதும் தோற்றுவிக்கிறது. நேரப்பிரச்சினை காரணமாக அவையெல்லாம் மனவெளிக் குகையின் ஆழங்களில் துள்ளிக் குதித்து தூங்குகின்றன.
இதற்கடுத்த வாய்ப்பை சி.பி.எம் பதிவர்கள்தான் வழங்க முடியும். அவர்களும் மறைந்த தோழர் “சந்திப்பு” செல்வப்பெருமாள் போல ஊக்கமாக செயல்படுவதில்லை. செயல்படும் மாதவராஜ் போன்றவர்களும் எழுதுவதை குறைத்திருக்கிறார்கள். காவல் கோட்டம் – சாகித்ய அகாடமி விருது சர்ச்சை வந்த போது அண்ணன் மாதவராஜ் எழுதிய தொடர் கட்டுரைகள், அதன் மீது ஜெயமோகனது பதில் தொடர்பாகவெல்லாம் எழுதவே முடிவு செய்திருந்தோம். விவாதித்து ஒரு தோழர் எழுதியும் அது சரியாக வராததால் வெளியிடவில்லை. திருத்தி எழுதவும் நேரமில்லை. அப்போது விட்ட வாய்ப்பை இப்போதும் விட்டுவிடக்கூடாது என்பதால் இந்தப் பதிவு.
____________________________________
அண்ணன் மாதவராஜ் எழுதிய, “விமர்சனங்கள்: வார்த்தைகளைக் கொட்டாதீர்கள் “, எனும் கட்டுரையின் இணைப்பை தோழர் ஒருவர் அனுப்பியிருந்தார். பிறகு இந்தக் கட்டுரையை ஏன் எழுதினாரென்று விளங்கிக் கொள்ள மாதவராஜ் எழுதிய முந்தைய இரு கட்டுரைகளையும் படிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக பின்னூட்டங்கள். நீங்களும் ஒரு முறை படித்து விடுங்கள்.
ஒரு டி.எஸ்.பி நடுச்சாலையில் நிற்கும் ஒரு தம்பதியனரை, ஆசிரியர் தேர்வுக்கான விண்ண்ப்பங்கள் வரவில்லை என்று போராடியதற்காக தாக்கியிருக்கிறார். இங்கு “அர்” விகுதி போட்டு நாம் எழுதியதை அவர் “இன்” விகுதி போட்டே எழுதியிருக்கிறார். போலீசு என்பது ஒரு வெறிநாய்க் கூட்டம்தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இருக்கும் இதனை மாதவராஜ் உழைக்கும் மக்களுக்கே உரிய ஆவேசத்துடன் கண்டிக்கிறார். பதிலுக்கு அந்த டி.எஸ்.பியை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டாமா என்றும் கேட்கிறார்.
இதற்கும் முந்தைய பதிவில் மின்கட்டண உயர்வை அறிவித்திருக்கும் ஜெயாவை அதே ஆவேசத்தோடும் விமரிசிக்கிறார். கருணாநிதி, ஜெயா என்று மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏமாறும் மக்கள் இனியாவது இரு கட்சியும் நாசமாக போகட்டும் என்று பேசுவார்களா என்றும் அத்தகைய எழுச்சி காரணமாக இந்த ‘ஜனநாயகம்’ நிலநடுக்கத்தை சந்திக்கும் என்று அவர் ஆதங்கத்துடன் எழுதுகிறார்.
இவற்றில் என்ன பிரச்சினை? குறிப்பிட்ட சம்பவங்கள், அரசு அறிவிப்புகள் மீது மக்கள் நலனிலிருந்து யதார்த்தமாக எழுதுபவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். எழுதத் தெரியாத பாமர மக்களும் இப்படித்தான் பேசுவார்கள். எனினும் இவை நமது ‘மார்க்சிஸ்டு’ பெருந்தலைகளுக்கு பிடிக்கவில்லை. பின்னூட்டத்தில் அவர்கள் அனைவரும் அண்ணன் மாதவராஜை சாந்தப்படுத்தி, நேர்வழிப்படுத்தி, தணியவைக்க முயல்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் படியுங்கள்:
“இல்லாத கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது. வெற்று கோபத்தைவிடவும் சாபத்தைவிடவும் மேலும் தீவிரமான விழிப்புணர்வு வேலையைத் தான் காலம் நம்மிடம் கோருகிறது. இன்னும் தேர்ச்சியான வேலையை.” (எஸ் வி வேணுகோபாலன்)
“தற்பொழுது வரும் கட்டுரைகள் உங்களது கோபத்தை அதிகமாக காட்டுகிறது. தீர்வை சற்று நிதானமாக ஆழ யோசித்து இடுகையில் வெளியிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.” (தஞ்சை ரமேஷ்)
“அந்த டிஎஸ்பியை செருப்பால் அடித்தால் இனி இந்த மாதிரி நடக்காது என்று நினைத்தால் அது சரியல்ல. (பழனி கந்தசாமி)
“வணக்கம் தோழர் தங்களின் ஆவேசம் புரிகிறது அப்படி ஒருமுறை நடந்தால் நன்றாகவே இருக்கும் ஆனாலும் …நிறைய யோசிக்க வேண்டி உள்ளது ..தோழர்..என்ன செய்ய இந்த தேசத்தை ….? (தாமிரபரணி)
“இது தவறான அணுகுமுறை மாதவ். லட்சக்கணக்கான அதிகாரிகள் பதவியில் அவர்களின் கடமையைச் செய்யும் போது பத்து, இருபது அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சகஜம்தான்.உணர்ச்சிவசப்பட்டு சிந்தும் வார்த்தையும் செயலும் எந்தப் பலனையும் தராது. உங்கள் இடுகையின் தலைப்பும் உங்களின் முதிர்ச்சிக்குப் பொறுத்தமானதல்ல.” (சுந்தர்ஜி)
” மாதவ்! நான் அவருக்குரிய தண்டனை குறித்து எதுவும் பேசவில்லை.அதை மக்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் நேரும் விபரீதங்களை மட்டுமே எழுதினேன். இப்போதும் சொல்கிறேன்.உங்களின் பக்குவமும் வாசிப்பும் நிச்சயமாகத் துணை நிற்கும். தவறு செய்பவர்களை ஆயிரம் ஆயிரம் முறை மன்னியுங்கள் என்று சொன்ன வேரிலிருந்து துவங்குகிறது நமது பயணம்.” (சுந்தர்ஜி)
இவர்களனைவரும் சி.பி.எம்மைச் சார்ந்தவர்களா என்பதறியோம். என்றாலும் இதுதான் சி.பி.எம்மின் அரசியல் பார்வை என்பதால் அது பிரச்சினையுமில்லை. அதே நேரம் இந்தப் பார்வை சி.பி.எம்மிற்கு மட்டும் உரியது அல்ல. அது பல விதங்களில் அரசியல் குறித்த நடுத்தர வர்க்கத்தின் பார்வையாகவும் இருக்கிறது. இந்த பின்னூட்டங்கள் போக பலரும் தனி மின்னஞ்சல், தொலைபேசி மூலம் மாதவராஜிடம், “உங்கள் கோபம் நியாயம் என்றாலும் வார்த்தைகள் பக்குவமாக, நிதானமாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அண்ணன் மாதவராஜ் அளித்திருக்கும் பதில் முதலில் சொன்ன தனி பதிவாகவே இருக்கிறது. சாரத்தில், ” தனிப்பட்ட மனிதனின் கோபம் இல்லை இது. ஒரு சமூக மனிதனின் குரலும், அடையாளமும் ஆகும். அடிப்பவர்களுக்கு எதிராக அடிவாங்குகிறவர்களின் சிந்தனை. அதிலிருக்கும் தார்மீக கோபத்தை புரிந்துகொள்ளுங்கள் என வேண்டுகிறேன். இருந்தபோதிலும், அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சிக்கிறேன் இனி. ” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக முந்தைய பதிவின் பின்னூட்டமொன்றில் இப்படி ஆவேசமாக கண்டிப்பது குறித்து, “அதற்காக நான் என் முதிர்ச்சி, பக்குவத்தை இழந்து போவது ஒன்றும் தப்பில்லை.” என்று தைரியமாகப் பேசும் மாதவராஜ் இனி ‘நண்பர்கள்’ சுட்டிக் காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சித்திருப்பதாக கூறும் தயக்க, மயக்க, குழப்ப நிலைக்கு சென்றிருப்பதன் காரணம் என்ன?
டைட்டானிக் படத்தில் சீமான்களது உப்புச் சப்பில்லாத வாழ்வோடு பிணைக்கப்பட்ட ரோஸ் பிறகு இயல்பாக ஜாக்கை காதலிப்பாள். டேபிள் மேனர்சோடு சாப்பிடுவது போல, சபை மேனர்சோடு உடம்புக்கு வலிக்காமல் ஆடும் அவளை இழுத்துக் கொண்டு கீழ் தளத்தில் உழைக்கும் மக்களோடு பட்டையைக் கிளப்பும் குத்தாட்டத்தை ஆடுவான் ஜாக். மேல் தளத்தில் இருந்த நமது சி.பி.எம் தோழர்கள் கீழே மாதவராஜ் ஆடுவதைப் பார்த்து அதிர்ச்சி பொங்க கேட்கிறார்கள்: ஏன் தோழர் இப்படி?
அண்ணன் மாதவராஜ் அவர்களே, நீங்கள் கோபமடையக் கூடாது என்று உங்கள் தோழர்கள் கேட்கிறார்கள். நீங்களும் கோபமடைவதில் தவறில்லை, ஆனாலும் இனி எச்சரிக்கையாகக் கோபம் அடைவேன் என்று சுய விமரிசனம் செய்கிறீர்கள். தோழர்களை விமரிசனம் செய்ய வேண்டிய தருணத்தில் எதற்காக உங்களது சுய விமரிசனம்? ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு கோபம் வரக்கூடாது என்றால் நாம் என்ன சிவாய நமஹா என்று கோவிலைச் சுற்றி வரும் செக்குமாடுகளா?
விடுதலைக்கான தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்தை அறிவுப்பூர்வமாகவும், உழைக்கும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் உணர்ச்சிப் பூர்வமாகவும் இருக்க வேண்டிய ஒரு கம்யூனிஸ்ட்டிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று யார் சொல்வார்கள்?
புரட்சி என்பதே மக்களின் அமைப்பாக்கப்பட்ட கோபம்தான். அந்த மாபெரும் ‘கோபத்தை’ மக்களிடம் உருவாக்குவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் மையப் பணி. சுரணை, மானம், ரோஷம், பழிவாங்குவது, கோபம் முதலியவற்றை மக்களிடம் நினைவுபடுத்தினால்தான் நம் நினைவில் இருக்கும் புரட்சி என்பது வெளியே உருத்திரண்டு பௌதீக சக்தியாக மாறும். அந்த வகையில் மக்களை கோபம் கொள்ள வைப்பதன்றி நமது பணி ஏது?
ஒரு டி.எஸ்.பியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறுவதினாலாயே புரட்சி வந்து விடாதுதான். ஆனால் அது அரசு, போலீசு, அதிகார வர்க்கம் முதலியவற்றை உள்ளது உள்ளபடி மக்களிடம் புரியவைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மக்கள் தமது சொந்த உணர்வில் இந்த அரசு அமைப்பு அநீதியானது என்று புரிந்து கொள்வதற்கு ஒரு ஆரம்பம். ஆனால் உங்கள் தோழர்களோ இந்த ஆரம்பத்திற்கே சமாதி கட்டி ஜனகனமன பாடி முடிக்க நினைக்கிறார்கள். நூறு நல்ல போலீசில் ஓரிரு கெட்ட போலீசு இருப்பார்கள் என்று ஒட்டு மொத்த போலீசுத் துறைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.
அப்படி என்றால் ஓரிரு கெட்ட அரசியல்வாதிகள், ஓரிரு கெட்ட அதிகாரிகள், ஓரிரு கெட்ட முதலாளிகள், ஓரிரு கெட்ட வல்லரசு நாடுகள் என்று அடுக்கினால் என்ன வரும்? ஓரிரு பிரச்சினைகள் தவிர நிலவுகின்ற இந்த சமூக அமைப்பே சாலச்சிறந்தது என்று முதலாளித்துவத்திற்கு வால் பிடிப்பதாய் அமையும். இதையேதான் பாராளுமன்ற ஜனநாயகம் ஒவ்வொரு முறையும் பல்லிளிக்கும் போதும் உங்கள் தோழர்கள்,“நமது மாண்பு என்ன, மரபு என்ன, சிறப்பு என்ன, சிங்காரம் என்ன” என்று பன்றிகள் புரளும் பாராளுமன்றத்திற்கு புனித வட்டம் பேசுகிறார்கள். ஆதாரம் வேண்டுமென்றால் முன்னாள் சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி துவங்கி, சீதாராம் எச்சூரி வரை உச்சாடனம் செய்த மந்திரங்களை கேளுங்கள். பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்தான் என்று பன்றிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். மக்களே தமது சொந்த அனுபவத்தினூடாக இந்த அமைப்பை உணரும் போது நாம் ஒரு படி மேலே ஏறி பேசுவதற்கு பதில் மக்களையே ஒரு படி கீழிறங்கும்படி கோரினால் அவன் கம்யூனிஸ்ட்டா, இல்லை சிரிப்பு போலிசா?
கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது என்று ஓதுகிறார்கள் உங்கள் தோழர்கள். ஒரு சம்பவத்தை பார்த்து வரும் கோபம் அதற்குரிய வார்த்தைகளை சரியாகவே எடுத்துக் கொள்ளும். இதற்கு தணிக்கை போட்டால் அது கோபமா இல்லை சந்தானம் காமடியா? மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் நேசத்தின் அடிப்படையில்தான் நடந்து விட்ட சம்பவத்தின் பால் கோபம் கொள்கிறோம். அது செயற்கையானது அல்ல. அதே நேரம் அந்த புறநிலை நிகழ்வை வைத்து மக்களை அரசியல்படுத்தும் ஆற்றல் இருந்தால் அந்த கோபம் இன்னும் வலிமையாக வரும். ஆனால் உங்கள் தோழர்கள் அப்படி சொல்லவில்லை. கோபத்தை கம்மியாக்குங்கள் என்கிறார்கள். கோபத்தை குறைத்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? ரத்த அழுத்தத்தை தணிப்பதற்கா?
யோசித்துப் பாருங்கள், குஜராத்தில் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த நரவேட்டை மோடியை, ஜென்டில் மேன் மோடி என்றா அழைக்க முடியும்? கலவரத்தில் உற்றார் உறவினரை இழந்த முசுலீம் மக்கள் கூட்டத்தில் கொலைகார மோடி என்று பேசுவதற்கு பதில் முதலமைச்சர் மோடி சில தவறுகள் செய்திருக்கிறார் என்று பேசினால் அந்த மக்களின் கண்ணீரே உங்களை சாகடித்து விடாது?
ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், விடுதலையான முன்தாஜர் அல் ஜய்தி, ” என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:
“நான் வீசியெறிந்தகாலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்துவந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும்மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
என்று பேசினான். அல் ஜய்தியை நாம் கொண்டாடினோமா இல்லையா? அதே செருப்பு இங்கே ஒரு வெறிநாய் டி.எஸ்.பியை அடிக்க பயன்படுவதில் என்ன தவறு?
ஒரு வேளை உங்கள் தோழர்கள் இப்படியும் சொல்லலாம்: “தோழர் எகாதிபத்தியம் என்பது பெரிய விசயம். அதை இது போன்ற சில்லறைத்தனங்களால் வீழ்த்திவிட முடியாது, ஆகையால் இதையெல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது”. சரி, ஏகாதிபத்தியத்தை எப்படி வீழ்த்துவார்களாம்? இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தை கைப்பற்றி பின்னர் அமெரிக்காவின் மேல் படையெடுப்பார்களா? அப்படி எனில் சீனா இன்னும் அப்படி படையெடுக்கவில்லையே? படையெடுக்க வேண்டாம். ஏகாதிபத்திய அமெரிக்காவோடு பொருளாதார உறவு கிடையாது என்று கூட சொல்லவில்லையே? பரஸ்பர சமாதான சகவாழ்வு என ஏகாதிபத்தியங்களோடு சமரசமாக வாழ்வதை ஆரம்பித்து வைத்த குருசேவ் தொடங்கி, இன்றைய சீனா, இந்தியாவில் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை அப்படி முடிவெடுத்த பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் வெங்காயம்தானே?
ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு செருப்பும் ஒரு ஆயுதம், ஒரு செருப்பு வீச்சு கூட பரந்து பட்ட மக்களை எகாதிபத்திய எதிர்ப்புக்கு அணி சேர்க்கும் என்பதால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த செருப்பு வீச்சை கொண்டாடினார்கள். செருப்பு ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டின் மூலம் நாம் பெறும் அரசியல் ஆதாயம் என்ன என்று பார்க்க வேண்டுமே ஒழிய, கனவான்களது காந்திய அரசியலில் நின்று பிதற்றுவது அறியாமை.
கயர்லாஞ்சியிலோ, இல்லை நமது மேலவளவில் வெட்டிக் கொல்லப்பட்ட முருகேசனையே எடுத்துக் கொள்வோம். இதை தலித் மக்களிடம் மட்டுமல்ல, எல்லாப் பிரிவு மக்களிடம் பேசுவதாக இருந்தால் எப்படிப் பேச வேண்டும்? ஆதிக்கசாதி வெறியின் பால் நடத்தப்பட்டிருக்கும் இந்த கொலை பாதகத்தை கொஞ்சும் தமிழிலா கதைக்க முடியும்? தீப்பிடிக்கும் தமிழில் பொறிந்தால்தானே மற்ற பிரிவு மக்களிடம் கொஞ்சம் குற்ற உணர்வையும், தலித் மக்களிடம் நீதி கிடைக்க போராடுவோம் என்ற உத்வேகத்தையும் அளிக்க முடியும்? ஒருவேளை மாதவராஜுக்கு அட்வைசு செய்த அம்பிகள் பேசினால் எப்படி இருக்கும்? ” நடந்தது நடந்து விட்டது. நடப்பது நல்லனவாயிருக்கட்டும், மறப்போம், மன்னிப்போம் ” இப்படி உங்களால் பேசமுடியுமா மாதவராஜ்?
பாபர் மசூதி இடிப்பின் போது ” கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம்” என்று உங்கள் தோழர்கள் ஏற்னவே இப்படித்தான் பேசியிருக்கிறார்கள். ‘இந்துக்களை’ புண்படுத்தாமல் இந்துத்வத்தை வீழ்த்த முடியுமா? 50களில் ராமாயணம் நாடகம் போட்ட எம்.ஆர்.ராதாதனது நாடகம் இந்துக்களை புண்படுத்தும் என்பதால் அப்படி நினைப்பவர்கள் வரவேண்டாம், அவர்களது காசும் வேண்டாம் என்று விளம்பர சுவரொட்டியிலேயே முழங்கியது குறித்து அறிவீர்களா? அந்த மண்தான் இன்றும் கொஞ்சமாவது பார்ப்பனிய எதிர்ப்பின் மரபை கொண்டிருக்கிறது. உங்கள் தோழர்களோ அதை நீர்த்துப் போகச் செய்யும் அரசியலை செய்து வருகிறார்கள்.
கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தில் முதலாளிகளைப் பழிவாங்க தொழிலாளிகள் அணி திரளட்டும் என்று பேசுவோமா, இல்லை எல்லாம் சட்டம், நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று பேசுவோமா? இதற்கும் அருட்செல்வர் பொள்ளாட்சி மகாலிங்கம் நடத்தும் ஆன்மீகக் கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? வெண்மணி கொலைகாரர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. முதன்மைக் குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டிக் கொன்றது ஒரு மா.லெ இயக்கத் தோழன். கம்யூனிஸ்டு என்ற முறையில் இங்கு நாம் சட்டத்தின் பக்கமா? இல்லை புரட்சியின் பக்கமா?
புரட்சியின் பக்கம் இருப்பவர்கள் கோபமடைய வேண்டும். நடைபிணங்களைப் போல வாழும் மக்களை கிளர்ந்தெழுச் செய்யும் வலிமை படைத்த பெருங்கோபத்தை பயின்று கொள்ள வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் உண்மையில் கோபமடைபவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தூற்றினால் அவர்களை என்னவென்று அழைப்பது?
தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் பேசமாட்டார்களா எனும் மாதவராஜின் இரண்டாவது கோபத்தை எடுத்துக் கொள்வோம். உண்மையில் இது கோபம் என்பதை விட ஒரு ஆதங்கம் என்றும் சொல்லலாம். தன் சொந்த அரசியலிலேயே நம்பிக்கை கொள்ளாத போது வேறு வழியின்றி வந்தடைந்திருக்கும் ஒரு முட்டுச் சந்து. ஆனால் இதில் ஒரு நேர்மை இருக்கிறது. தனது அரசியல் சரிதான் என்று கூற முடியாத போது வேறு வழியின்றி மக்களே அந்த இரு கட்சிகளையும் புறக்கணிக்க மாட்டார்களா என்று ஏங்கும் ஒரு மனநிலையை உணர முடிகிறது.
அதற்கும் சி.பி.எம் பெருந்தலைகள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு கருணாநிதியோ, இல்லை ஜெயலலிதாவோ காரணமில்லை உலக வங்கிதான் மூலம் என்று ஒருவர் அருள்வாக்கு பாடியிருக்கிறார். இதில் அரசியல் பிழை இல்லை. ஆனால் இதன் மூலம் அவர் என்ன சொல்கிறார்? அதாவது தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிப்பதில் பயனில்லை, நாம் உலக வங்கியை புறக்கணிக்க வேண்டும் என்கிறார். இதில் ஒரு உள் குத்தும் இருக்கிறது.
” மக்கள் நாசமாகப் போக காரணமாக இருக்கும் ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் மாறி மாறி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும் நாசமாகப் போவதுதான் நியாயம் சார். ” என்று லக்கிலுக் யுவகிருஷ்ணா அதை சரியாக பிடித்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் மாறி மாறி இரண்டு கட்சிகளின் தயவில் ஏதோ ஐந்து, ஐந்தரை சீட்டுக்கள் வாங்கிபரப்பிரம்மத்தை தரிசித்த போதையையே பாதையாக நினைத்து செட்டிலாகிவிட்டார்கள். இப்போது மக்கள் இரண்டு கட்சிகளையும் நாசமாக போகட்டும் என்று எண்ண வேண்டுமென்றால் அதில் அந்த கட்சிகளோடு கூட்டணி சேருபவர்களையும் நாசமாக போங்கள் என்று சொல்லக் கோருவதுதான் சரியாக இருக்கும். அதுதான் அந்த பெரிசு உலக வங்கியை இழுத்து வந்து கூட்டணி தருமத்தை பாதுகாக்கிறார். பாவம் அண்ணன் மாதவராஜ்! சுதந்திரமாகக் கோபம் அடைய முடியாத படி ஒரு அவலச் சூழல்.
சரி, விசயத்திற்கு வருவோம். மின்கட்டண உயர்வின் மூல காரணம் உலக வங்கி என்றே வைப்போம். அதை எப்படி எதிர்கொள்வது? யாரெல்லாம் உலக வங்கிக்கு அடியாள் வேலை பார்க்கிறார்களோ அவர்களை எதிர்ப்பதின் மூலம்தான் உலகவங்கிக்கான எதிர்ப்பை ஆரம்பிக்க முடியும். மக்களுக்கும் அடையாளம் காட்ட முடியும். அந்தப்படிக்கும் மாதவராஜ் சொன்னது போல இரு கட்சிகளும் நாசமாக போகட்டும் அல்லது இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
ஆனால் சி.பி.எம்மின் அணுகுமுறைப்படி, கூட்டணி அவசியம். அதனால் இரு கட்சிகளையும் புறக்கணிக்க கூற முடியாது. அதனால் உலக வங்கியையும் எதிர்க்க முடியாதபடி போகிறது. இறுதியில் ஐந்தரை சீட்டுக்களே கதி மோட்சம் என்று காலம் தள்ள வேண்டியதுதான். போதாக்குறைக்கு இன்னொரு ஜெயலலிதாவான, தே.மு.தி.க கேப்டனை சி.பி.எம்மினர் கொஞ்சிக் குலாவ ஆரம்பித்திருக்கின்றனர். சரி, வாழ்க்கையில்தான் புரட்சி வராது, கூட்டணியிலாவது புரட்சி இருக்கட்டுமே என்று அவர்கள் நினைத்திருக்கலாமோ?
இந்த விசயத்தில் அண்ணன் மாதவராஜிடம் கொஞ்சம் நேர்மை இருப்பதை பார்க்கிறோம். அதனால்தான் அவர் சென்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. கிட்டத்தட்ட தேர்தல் புறக்கணிப்புதான். ஆனாலும் அந்த நேர்மை விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையேல் அது நீர்த்துபோய் கரைந்து மறைந்து விடும். தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நாசமாக போகட்டும் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா என்ற அவரது ஆதங்கம், சொந்த முறையில் தனது அரசியல் மீது நம்பிக்கை இல்லாததால் வருகிறது. இல்லையேல் புறக்கணிக்கச் சொன்ன கையோடு மாற்று என்ன என்று அவர் கூறியிருக்க வேண்டும். அப்படி அவர் கூறவில்லை என்பதால்தான்,
அவர் “கோபம்” அடைவதை வரவேற்கிறோம். சரியான கோபம் சரியான செயலையும் காட்டும். அந்த வகையில் நியாயமான கோபத்திற்கு எதிர்காலம் உண்டு. இந்த கோபம் கண்டு வெட்கமடையும் சி.பி.எம் தோழர்களைப் பற்றி அண்ணன் மாதவராஜ் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில் அவரது கோபத்தை பாராட்டித்தான் பலரும் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இது பெரும்பான்மைக் கருத்தும் கூட.
மாறாக அவரது தோழர்கள் கூறுவது போல இனி கோபமடைவதில் சற்று எச்சரிக்கையாக இருப்பேன் என்று அவர் முடிவெடுத்தால் ஒரு போதும் கோபமே வராது. மக்கள் நலன், புரட்சி முதலானவையெல்லாம் நமது ஈகோ சார்ந்த வறட்டு கௌரவங்கள் அல்ல. பிழைகளை ஒப்புக் கொண்டு சரியானதை நோக்கி நகருவதும் கோழைத்தனமல்ல. அப்படி முடிவெடுக்கும் தைரியம் உள்ளவர்களே கம்யூனிசத்தின் உரத்தை பெற்று காரியம் சாதிக்க முடியும்.
1. அணுஉலைஅல்லதுசிறை!
(அணு உலையைவிட அரசுதான் மிகக் கொடியது என்ற படிப்பினையை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.)
2. அணுஉலைகளைவிடஆபத்தானவை!
3. சிங்களஇனவெறிநாயைப்பாதுகாத்தஇந்தியநரி! (ஐ.நா.வின் தீர்மானத்தை திருத்தத்துடன் ஆதரித்து, பாசிச ராஜபக்சேவை மனித உரிமை மீறல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றியுள்ளது இந்தியா.)
( கியூபா: இனப்படுகொலைகளின் கவசமா, இறையாண்மை?)
4. பாசிசமயமாகும்அரசு!
வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்களையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகக் கருதும் அரசின் அணுகுமுறை காலனிய ஆட்சியை நினைவுபடுத்துகிறது.)
5.தமிழ்த்தேசியத்தின்பெயரால்பாசிசஇனவெறி! (பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத்தேடி குடியேறும் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள் என்று கூறி சிவசேனா பாணியில் நஞ்சு கக்குகிறது த.தே.பொ.க. தலைமை.)
6.பெண்ணுரிமையின்பேராயுதம்.
(அனைத்துலக மகளிர் தினம்.)
8. செக்குமீதேறிசிங்கப்பூர்பயணம்!
(தனியார்மயம் – தாராளமயம் எல்லா முனைகளிலும் தோல்வியடைந்த பிறகும் அதே செக்குமாட்டுப் பாதையில் செலுத்தப்படுகிறது, பட்ஜெட்.)
11. மின்சாரச்சந்தையைவட்டமிடும்பணந்தின்னிகள்.
(ஆன்லைன் சந்தையில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரத்தை அங்கீகரித்துள்ளது அரசு. வருங்காலத்தில் மின்கட்டணம் என்பது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கும்.)
13. ”அரசுமற்றும்அரசுஉதவிபெறும்கல்லூரிகளில்அடிப்படைவசதிகளைஉடனேசெய்துகொடு!”
(புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.)
14. மக்களாட்சிஅல்ல, மாஃபியாஆட்சி! (கனிம வளங்களைக் கொள்ளையிடும் மாஃபியாக்களின் ஆதிக்கமும் அட்டூழியங்களும் யாரும் கேள்வி கேட்க முடியாத வண்ணம் அதிகரித்து விட்டன்.)
15. வல்லரசின்முகத்தில்வழியும்மலம்! (கொத்தடிமைத் தொழிலாளர்கள் எத்தனைக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வெள்ளையன் என்ற தொழிலாளியின் கண்ணீர்க்கதை!)
16. அணுஉலைஆதரவாளர்களுக்குபுகுஷிமாவிடுக்கும்எச்சரிக்கை!
(அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாபவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?)
17. பேரழிவின்தொடக்கம்!
(உயிராதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்கு என்று அறிவித்திருப்பதன் மூலம் ஒரு பேரழிவை முன்மொழிகிறது, தேசியத் தண்ணீர்க் கொள்கை.)
கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.
சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.
பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் போதான நீதிபதியின் நேர்காணலுக்கு பதிலளித்த சசிகலா, சொத்து சேர்ப்பு குறித்த விவகாரம் எதிலும் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ஜெயவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டது தனக்கு தெரியாது, ஒருபோதும் தான் அக்காவிற்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை முக்கியத்துவம் கொடுத்து காட்டிய ஜெயா டி.வி அடுத்த நாளே அவர் மீதான நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜெயா அறிவித்ததைக் காட்டியது. சகோதரிகள் மீண்டு சேர்ந்ததாக ஊடகங்களும் அறிவித்தன.
ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம். எனினும் இந்த சொத்துப் பேரரசின் கடிவாளம் யாரிடம் இருக்க வேண்டுமென்பது இருவரிடையே எற்பட்டிருக்கும் முரண்பாடு. இந்த முரண்பாடு நட்பு முரண்பாடா, பகை முரண்பாடா என்றால் நிச்சயம் இது பகை முரண்பாடாக போக முடியாத அளவுக்கு சொத்துரிமை விவகாரங்கள் தடுக்கின்றன. மீறிப் போனால் அது இருவருக்குமே பிரச்சினை.
ஜெயா-சசி கும்பல் கடந்த ஆட்சிக்காலங்களில் முழு தமிழகத்தையுமே மொட்டையடித்து சுரண்டிச் சேர்த்த சொத்துக்களின் வலிமையில்தான் அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சியை கட்டி மேய்ப்பதோடு ஆட்சியையும் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் எதை துறந்தாலும் அதன் விளைவு மற்றதை பாதிக்கும். அந்த பயம்தான் இருவரின் சேர்க்கைக்கும் நிபந்தனை. இதைத் தாண்டி இருவரும் சண்டை போட முடியாது.
எனினும் இப்போது கடிவாளம் ஜெயாவிடமே இருக்க வேண்டும் என்பதை இந்த 2012 எபிசோடு காண்பித்திருக்கிறது. மன்னார்குடி கும்பலில் சசிகலாவைத் தவிர அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து தனது நாட்டாண்மையை ஜெ தெரிவித்திருக்கிறார். கைது வரை போகுமா என்று நினைத்திருந்த மன்னார்குடி கும்பல் இப்போது சிறையிலிருந்தவாறு சமாதான வழிகளைத் தேடி வருகிறது. சேர்ந்தே ஊழல் செய்திருந்தாலும் அதை விசாரணை செய்யும் உரிமையை ஜெயாவே வைத்துக் கொண்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. காரணம் அவர் மீதான பார்ப்பன ஊடகங்களின் பக்தி.
ஆக மன்னார்குடி கும்பல் இனி அடக்கி வாசிக்க வேண்டுமென்பதாக இந்த பிரிவு நாடகம் முடிந்திருக்கிறது. கூடவே சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் “அக்கா மேல எந்த தப்புமில்லை” எனும் வாக்குமூலமும் கூட இதில் பங்காற்றியிருக்கக் கூடும். அல்லது இது பேசி வைத்துக் கொண்டதாக இருக்குமென்று சிலர் கூறினாலும் அது முற்றிலும் அப்படி மட்டும் நடந்திருக்க முடியாது. ஏனெனில் மன்னார்குடி கும்பலின் சொத்துரிமையின் மேலாண்மை இப்போது மாறியிருக்கிறது என்பதால் பெங்களூரு வழக்கில் சசிகலா வாக்குமூலம் என்பது தொடர் விளைவுதான். நாடகத்தின் மையக் கதை அல்ல.
அடுத்து ஜெயா ஆட்சிக்கு வந்த எல்லா சமயங்களிலும் அவர் எடுத்த மக்கள் விரோத முடிவுகள், பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் அனைத்தும் அவரது வர்க்க நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான். அதற்கும் சசிகலாவுக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் விசேசமான தொடர்புமில்லை. தேவர் சாதிவெறியின் மேலாண்மை மட்டும் மன்னார்குடி கும்பலின் தனிச்சிறப்பு என்றாலும் இதுவும் பார்ப்பன பாசிசத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். தற்போது “ராமர் பாலம்” எனும் புராணப் புளுகைக்கூட தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதிலிருந்தும் ஜெயாவின் பார்ப்பன விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம்.
சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை தள்ளி மிரட்டும் பிரச்சினையில் ஜெயா திமிராக அறிவித்தது நினைவிருக்கிறதா? அதாவது பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெறுவேன் என்று அவர் அடித்துச் சொன்னது வெறுமனே தேர்தல் வெற்றி சார்ந்த ஒன்றல்ல. அது அவரது பாசிச திமிரை காட்டுகிறது.
மேலும் ஜெயாவின் ஆட்சி என்பது போலிசுமற்றும் அதிகார வர்க்கத்தினரை மட்டும் நம்பி நடத்தப்படும் சிறு கும்லது ஆட்சி. அவர்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போன்றதொரு அமைப்பில் நடத்தப்படும் ஆட்சி. இது ஜெயாவின் தனிப்பட்ட பண்பு என்பதோடு, பொதுவில் பாசிஸ்ட்டுகள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பும் ஆகும். அந்த வகையில்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது ஜெயாவின் கிச்சன் கேபினட்டாக அமர்ந்திருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கும் இத்தகைய கட்டுக்கோப்பான ஆட்சிகளைத்தான் தற்போது முதலாளிகள் விரும்புகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மக்களிடையே அமைப்பு ரீதியான எதிர்ப்பாக எழும் போது அதற்கு ஜெயா பாணியிலானா போலிசு ஆட்சிதான் தீர்வு என்பது ஆளும் வர்க்கத்தின் முடிவு.
பரமக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும், இல்லை கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறையாக இருக்கட்டும்இவையெல்லாம் ஜெயாவின் பேயாட்சி என்பதோடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகவும் இருப்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தே இருக்கின்றன. அத்தகைய போக்கின் அடையாளமாகத்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது அம்மாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகின்றன. இதனால் ஜெயாவின் தனிப்பண்புக்கு இடமில்லை என்பதல்ல. இருவரும் தன்னளவில் ஒரே பார்வை உடையவர்கள். ஒருவேளை மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் ஜெயா அவர்களது அபிலாஷைகளை அவர்கள் சொல்லாமலேயே நிறைவேற்றும் ஆளுமை கொண்டவர். அதே போன்று மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் பார்ப்பன ஊடகங்கள் ஜெயாவை எந்த தருணத்திலும் கை கழுவியது இல்லை.
ஊரறிந்த அவரது திமிரான நடவடிக்கைகள் கூட பார்ப்பன ஊடகங்களில் விமரிசிக்கப்படுவதில்லை. தினமணி வைத்தி மாமாவின் ஜால்ரா தலையங்கங்களே அதற்கு சான்று. ஆனால் இதே சலுகை கருணாநிதிக்கு இல்லை என்பதோடு அவரை தொட்டதுக்கெல்லாம் குத்தி காட்டுவதும் பார்ப்பன ஊடகங்களில் சாதாரணம். இது அரசியலிலும் இருக்கிறது. பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என்றாலும் அத்வானி, மோடி போன்றோர் போயஸ் தோட்டத்தில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே வந்து போகும் உரிமை உள்ளவர்கள். அதே போன்று பா.ஜ.கவின் கொள்கைகளை கூட்டணி இல்லாமலே ஆதரிக்கும் பண்பு ஜெயாவிடம் உண்டு.
மன்னார்குடி கும்பலுக்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை வெளியே தெரியாமல் உள் வட்ட பஞ்சாயத்தில் தீர்த்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். கூடிக் கொள்ளையடிப்பதிலும், சுரண்டுவதிலும்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே ஒற்றுமை இருக்கும். பங்கு பிரிப்பதில் முரண்பாடு வந்தால் அது வெளியே வந்தே தீரும். இதை 2 ஜி ஊழலிலும், நீரா ராடியா விவகாரத்திலும் பார்த்திருக்கிறோம். தரகு முதலாளிகளுக்கிடையே உள்ள வணிகப் போட்டி காரணமாகவே இந்த ஊழல் வெளியே வந்திருக்கிறது.
அதனால்தான் மன்னார்குடி கும்பலை முற்றிலும் நீக்கிவிட முடியாத நிலையில் ஜெயா இருக்கிறார். சசிகலாவோ, வெறு சில முக்கியமான உறவினர்களோ அனைவரும் ஜெயாவின் அனைத்து விசயங்களையும், அந்தரங்கங்களையும் அறிந்தவர்கள். அந்த அந்தரங்கத்தில் முக்கியமானது ஜெயாவின் ஊழல் சொத்துக்களும் அதன் இன்றைய நிலைமையும். இதை வெளியே சொன்னால் ஜெயா பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதை வெளியே சொல்வதால் மன்னார்குடி கும்பலும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவகையில் அது இருவருக்கும் தற்கொலைப் பாதை என்றும் சொல்லலாம்.
வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மக்கள்தான் தற்கொலை செய்வார்களே ஒழிய முதலாளிகள் மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகள் தோற்றுவிக்கும் தன்மானம், நாகரீகம், கௌரவம், அச்சம், நேர்மை போன்ற உணர்ச்சிகளெல்லாம் அதிகார பீடங்களில் இருப்பவர்களுக்கு இல்லை. அவையெல்லாம் மக்கள் திரள் முன்னே அவிழ்த்துப் போடப்படும் முகமூடிகள் என்பதைத்தாண்டி வேறு முக்கியத்துவம் இல்லை. ஆகவே அவர்கள் அடித்துக் கொண்டாலும், கூடிக் கொண்டாலும் அது மக்களிடையே நடப்பதைப் போன்று இருக்காது; இருக்கவும் முடியாது. ஆக ஜெயா சசி கும்பல் தங்களிடையே வரம்பு மீறி சண்டையிடும் தற்கொலைப் பாதையை எப்போதும் எடுக்காது. ஒரு வேளை அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் ஒரு கும்பல் பூண்டோடு அழிக்கப்படவேண்டியது அவசியம்.
அதற்குத்தான் மயிலாப்பூர் கும்பல் முனைகிறது. என்றாலும் அது அத்தனை சுலபமல்ல. சனிப்பெயர்ச்சியின் போது நீக்கப்பட்ட சசிகலா இப்போது முட்டாள்கள் தினத்தில் சேர்ந்திருக்கிறார். மக்களோ இன்னமும் சனியனை நீங்க முடியாமலும், முட்டாள்தினத்தின் காட்சிகளில் மயங்கியவாறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப்புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலோ அல்லது காஷ்மீரின் விடுதலையைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல. “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான, அதேசமயம் அடிப்படைத் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்து ஊரி மின்சார நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூறுதான் எனப் பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேசமயம், அம்மின்சார நிலையத்தைப் பாதுகாத்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களின் எண்ணிக்கையோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததையும் அச்சிப்பாய்கள் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்கள் மீது துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுத் தள்ளியதையும் அப்படையின் தலைமை அதிகாரி என்.ஆர். தாஸ் பத்திரிக்கையாளர்களிடம் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அகங்காரத்தோடு விவரித்திருக்கிறார். “ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற கொலைவெறியோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.
காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் மக்களை எந்த அளவிற்குப் புழுபூச்சிகளைவிடக் கீழாக மதிக்கிறார்கள் என்பதற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றொரு உதாரணமாகும். துணை இராணுவப் படையால் இந்த ஆர்ப்பாட்டத்தை மூடிமறைக்க முடிந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப் அகமதுவும் காயம்பட்ட இருவரும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்.
இப்படுகொலை தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்டாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” எனச் சவால்விட்டுள்ளார்.
ஆனால், இந்தக் கைதும், காஷ்மீர் முதல்வரின் சவடாலும் ஊரை ஏய்க்கும் நாடகம் என்பது காஷ்மீர் மக்களுக்குத் தெரியாத விசயமல்ல. காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், மத்திய ரிசர்வ் படைச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. இச்சட்டங்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை, ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும் அதிகாரத்தையும், ஆணவத்தையும் இந்திய இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் வழங்கியுள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவ, துணை இராணுவப் படை சிப்பாய்கள், அதிகாரிகளின் மீது காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்கூட, அதற்கு மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் மத்திய ரிசர்வ் போலீசு சட்டத்தின் 17ஆவது பிரிவிலும் உள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால் தமக்கு இப்படிபட்ட அதிகாரமும் பாதுகாப்பும் வேண்டுமென இராணுவம் கூறி வருகிறது. இச்சட்டத்தில் சில்லறை சீர்திருத்தங்களைச் செய்வதற்குக்கூட காங்கிரசும், பா.ஜ.க.வும், இராணுவமும் சம்மதிப்பதில்லை. ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காகத்தான் இராணுவத்திற்கு இந்த அதிகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் போல நம்மை நம்பவைக்க ஆளும் கும்பல் முயன்று வருகிறது. ஆனால், இது அப்பட்டமான பொய்; அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீரிகளை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்வதற்கும் இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பது பல நூறு முறை அம்பலமாகியிருக்கிறது.
கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்களை இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன. காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரகசியக் கல்லறைகள் குறித்து காஷ்மீர் மாநில அரசின் மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட இவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பது தெரியவந்துள்ளது. இப்படி அப்பட்டமாக அம்பலமான மனித உரிமை மீறல் வழக்குகளில்கூட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது, மைய அரசு.
காஷ்மீர் மாநில அரசு இந்திய இராணுவ, துணை இராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்/அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி மைய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை; 11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை. இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் மைய அரசிடம் குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.
இதில் ஒரு கொலை வழக்கு 1991 ஆம் ஆண்டு நடந்ததாகும். பட்வாரா என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது ஆயுப் பட் என்ற அப்பாவியை இந்திய இராணுவம் கொலை செய்து, அவரது சடலத்தை தால் ஏரியில் வீசியெறிந்தது. இப்படுகொலையை அப்பொழுது சிறீநகர் பகுதியில் பணியாற்றிவந்த பிரிகேடியர் குல்ஷன் ராவ்தான் செய்தார் என்பது காஷ்மீர் மாநில போலீசு நடத்திய விசாரணையில் அம்பலமானது. கொலை நடந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 3, 2009 அன்று அந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என அறிவித்தது மைய அரசு.
பீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மேஜர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற சம்பவம் 1997ஆம் ஆண்டு நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து, 2001இல்தான் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது. இதற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து, குற்றவாளியான அந்த இராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென செப்.12, 2011இல் அறிவித்தது, மைய அரசு. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்த 50 வழக்குகளில் 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை’’, “விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’, “இராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்ற மொன்னையான காரணங்களைக் கூறி, அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட இராணுவ, துணை இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிதர மறுத்துவிட்டது,மைய அரசு.
அப்பாவிகளை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என இராணுவமும் துணை இராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது. 1990ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு முடியவுள்ள பதினேழு ஆண்டுகளில் காஷ்மீரில் ஏறத்தாழ 70,000 பேர் துப்பாக்கிச் சூடு, போலி மோதல், கொட்டடிக் கொலைகள் ஆகிய அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்குப் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட 8,000 பேர் காணாமல் போயிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காஷ்மீரிலிருந்து இராணுவத்தை விலக்கவும், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவும் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உண்மை இவ்வாறிருக்க, கடந்த இருபது ஆண்டுகளில் வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிக்க மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த 50 வழக்குகளில் தற்பொழுது 42 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தப்பித்தவறி மீதமுள்ள எட்டு வழக்குகளில் அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மைய அரசு சம்மதிக்காது. உண்மையும் நீதியும் இராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும். இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?
“கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?
– ராஜன்
__________________________________________
அன்புள்ள ராஜன்,
கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?
கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும், ஈழத்திலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது? செங்கொடி தீக்குளித்து இறந்தாள் என்பதைக் கேட்ட மாத்திரத்தில் நமக்குள் கையறு நிலையால் உந்தப்பட்ட ஒரு சோகம் எழவில்லையா? அந்தச் சாவு நம் மனதைப் பிசையவில்லையா? ஆனால், அதே சம்பவத்தை தினமலரால் காதல் தோல்வி என்று கொச்சைப்படுத்த முடிகிறதே?
நமது இந்தக் கருத்தும் தினமலரின் அந்தக் கருத்தும் சொந்த/தனிப்பட்ட முறையில் தான் உண்டானதென்று நம்புகிறீர்களா? இல்லை.
நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமது இதயம் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாயின் சிதறிய ரத்தத் துளிகளைக் கண்டு கூட பதறுகிறது. தினமலரின் இதயமோ ஈழத்தில் ஆயிரக்கணக்கில் செத்துச் சிதறிய அப்பாவி மனித உடல்களைக் கண்டு குதூகலிக்கிறது. சேனல் 4ன் வீடியோவைப் பற்றி ‘இன்ட்ரெஸ்டிங்கா ஏதும் இல்லை’ என்று கொக்கரிக்க வைக்கிறது. ராஜபக்சே கும்பலும் இது பொய் என்று ஊளையிட்டு விட்டு எளிதில் கடந்து செல்கிறது.
ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.
கடவுள் பற்றிய நமது கருத்துக்களையும் கூட அவ்வாறே நாம் ‘வெளியில்’ இருந்து தான் ‘உள்ளே’ இறக்கிக் கொள்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ, முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர். அச்சமற்ற இயல்பையும், அளவற்ற ஆற்றலையும் கொண்ட குழந்தைகளை அதனைச் சுற்றியிருப்போர் தான் கடவுள் பூச்சாண்டி காட்டி அஞ்சி நடுங்கும் கோழைகளாக்குகின்றனர்.
ஆக, கடவுளை உங்கள் நண்பர் கண்டடைந்ததே தனிப்பட்ட முறையில் அல்ல எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது. இருப்பினும் அந்த ‘தனிப்பட்ட’ கடவுள் நம்பிக்கை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பதுங்கிக் கொள்ளும் வரை, எவரையும் துன்புறுத்தாத வரை யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவ்வாறு பதுங்கிக் கொள்வதில் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
வட / தென் துருவங்களில் கடலில் மிதக்கும் ஐஸ் மலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் சிறிய முனை மட்டுமே கடல் மட்டத்துக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் விதமாய் மிதந்து கொண்டிருக்கும். கடவுள் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறானதே. அது தனது கால்களின் கீழே ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறது – அதன் மேல் தான் நிலை கொண்டுமிருக்கிறது. சுற்றிலும் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளும், அப்பாவி மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும் கடவுள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை நித்தம் நித்தம் அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.
வாழ்க்கை நெடுக தம்மோடு சுக துக்கங்களில் சேர்ந்து பயணிக்கப் போகும் காதலியிடம் கூட ஒரு சில முறைகள் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருப்பார் – ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் போதாமல், தனக்குள்ள கடவுள் சித்திரத்தை ஒத்திராத நம்பிக்கை கொண்டவர்களிடம் முரண்பட்டு உரசிப் பார்த்து தனக்குத்தானே திருப்தி கொள்கிறார்..
‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன? இதைப் பார்க்கும் முன், இதற்கு நேர் எதிரான ‘நம்பிக்கையற்ற’ நிலையைப் பற்றியும் பார்த்து விடலாம். இவையிரண்டும் தம்மளவில் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு மனிதனின் ஆளுமையையும் அவனது சமூகப் பொறுப்பையும் இவை மட்டுமே தீர்மானிப்பவைகளாக இல்லை.
நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.
இந்து பாஸிச பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ் கும்பலுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுத்தவரும், இந்து மகாசபையின் தலைவரும், காந்தி கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவருமான வி.டி சாவர்க்கரும் அவரது ஞான குருவான இத்தாலி பாசிஸ்ட் கட்சி தலைவர் பெனிட்டோ முசோலினியும் கூட கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகள் தான். சாவர்க்கர் கடவுளை நம்பாத அதே நேரம் வேதத்தையும், பார்ப்பனிய வருண தர்மத்தையும் நம்பினார். எனினும் அவர் நாத்திகர்தான். ஆனால் சிதம்பரம் சிவனடியார் ஆறுமுகசாமியோ கடவுளை நம்பும் ஒரு பக்தர். ஆனால் அவரது பக்தி, இந்து மதத்தில் நிலவும் பார்ப்பன மேலாதிக்கம், மொழித் தீண்டாமை போன்ற இழிவுகளை சகித்துக் கொண்டிராமல் எதிர்த்துப் போராடும் நேர்மையான தன்மான உணர்ச்சிக்குத் தடையாய் நிற்கவில்லை. கடவுளை நம்பிய சித்தர்கள் கூட அதன் பெயரில் விளங்கிய ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பனிய இழிவையும் இடித்துரைத்துள்ளனர்.
ஆக, ஒருவர் சமூக அளவில் வகிக்கும் பாத்திரம் என்னவென்பதிலிருந்து தான் அவரை மதிப்பீடு செய்ய முடியுமேயொழிய கடவுளை நம்புகிறாரா இல்லையா என்பதைக் கொண்டல்ல. நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல – போற்றத்தக்கதுமல்ல. கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள். வீட்டினுள் தொலைத்ததை தெருவிலே தேடியலையும் மக்களின் அந்தக் கையறு நிலை ஒரு அவலம். அந்த அவலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அதனால் தான் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று குறிப்பிட்டு விட்டு, அது “இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது” என்றார்.
வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, கல்யாணம் முடிய, குழந்தை பிறக்க, குழந்தையின் பள்ளிக்கூட சீட், படிப்பு, வேலை, அதற்கு ஒரு திருமணம், அதன் வாழ்க்கை…. என்று நீளும் வாழ்க்கைத் தேவைகளும் அது நிறைவேறாமல் போகும் சமூக எதார்த்தமும், உறைந்து போய் நிற்கும் ஏற்றத்தாழ்வுகளும் அப்பாவி மக்களை ‘ஆறுதலுடன்’ அணிதிரட்டி கோவில்களையும், ஆன்மீக நிறுவனங்களையும் நோக்கி விரட்டி விடுகிறது. தீர்வு அங்கேயில்லை என்பதையும் எங்கே உள்ளது என்பதையும் நேர்மறையில் உணர்த்த வேண்டியது நமது கடமை – வறட்டு நாத்திகத்தை மட்டும் பேசிக்கொண்டு மக்களுக்கு மேலாக நம்மைக் கருதிக் கொள்வதல்ல. அதே நேரம், தீர்வுக்கான பாதையை நந்தி போல் மறைத்துக் கொண்டு கடவுள் நம்பிக்கை வரும் போது இடித்துரைப்பதும் நேர்மறையில் விமர்சிப்பதும் அவசியம்.
நமது விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்த ‘ தனிப்பட்ட நம்பிக்கைகள்’ உதிர்ந்து ஒழிந்து போக வேண்டிய ஒரு சந்தர்பத்தை நேர்மையாக சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது எப்போது?
சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது. துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?
இங்கே நாம் கையறு நிலையில் ஏற்பட்ட கடவுள் பக்தியையும் காரியவாதக் கடவுள் பக்தியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் – இரண்டையும் இருவேறு விதமாய் அணுக வேண்டியுள்ளது.
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதன் சகல இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு இடையிடையே எப்போதாவது எழும் குற்றவுணர்வைத் தவிர்த்துக் கொள்ள கோயில் உண்டியல்கள் முன்பும் கார்ப்பரேட் குரு பீடங்களின் முன்பும் திரளும் மேட்டுக்குடி கனவான்களின் நம்பிக்கையும் சாதாரண மக்களின் நம்பிக்கையும் ஒன்றல்ல.
வயதான மனைவியின் மருத்துவத்துக்கு சல்லிக்காசு கூட இல்லாமல், தாமதமாகி இழுத்துக் கொண்டேயிருக்கும் ஓய்வூதிய செட்டில்மெண்டு பாஸ் ஆக வேண்டுமே என்கிற பதைப்போடு வந்தவரும் – கறுப்புப் பணக் குவியலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை கிள்ளி உண்டியலில் போட்டு விட்டால் ரெய்டிலிருந்து தப்பலாமோவென்கிற ‘பதைபதைப்போடும்’ வந்தவரும் ஒன்றாகத் திருப்பதி ஏழுமலையான் முன் வரிசை கட்டி நிற்கிறார்களே, இவர்களின் பக்தி ஒன்றா?
இரண்டும் வேறுவேறானது என்றாலும் நாம் இரண்டிலும் தலையிட்டுத் தான் தீர வேண்டும் – ஆனால், அணுகுமுறையில் பாரிய வேறுபாடு இருக்கும். முந்தையவர் நம்மோடு ஒரே அணியில் நின்று போராட வேண்டியவர்; பிந்தையவரோ நமக்கு நேர் எதிரணியில் நிற்பவர் – எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்.
ஆக, கடவுள் நம்பிக்கையில் தனிப்பட்டது என்று எதுவுமில்லை. உங்கள் நண்பரால் தனது மூக்கு நுனியைத் தாண்டி எட்டிப்பார்க்காமல் அவரது நம்பிக்கையைக் கட்டி வைத்துக் கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்களையும், சமூக விடுதலைக்கு குறுக்கே கடவுள் நிற்பதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறதா என்று கவனியுங்கள். முடிகிறது என்றால், கவலையை விடுங்கள் கூடிய சீக்கிரம் கடவுள் பெட்டி சட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.
தனிச்சுடுகாடு, இரட்டைக்குவளை எனத் தெளிவாகத் தெரியும்வண்ணம் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமை, பல புதிய வடிவங்களை எடுத்தவண்ணம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கருவடத்தெரு சிற்றூரில் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அது அரங்கேறியுள்ளது. கருவடத்தெருவின் ஊராட்சித் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கலைமணி அண்ணாதுரை, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ள வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டார். அப்போது அங்கே ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மகனான குமார் தலைமையில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட கள்ளர் சாதி வெறியர்கள் அவரைக் கீழே தள்ளிவிட்டனர். ‘பல ஆண்டுகளாக பள்ளி அலுவலகத்தோடு நெருங்கிய தொடர்பில்’ இருக்கும் தாங்கள்தான் கொடியேற்றுவோம் எனக் கூறி கலைமணியைக் கொடியேற்றவிடாமல் தடுத்தனர்.
இது ஜனநாயக நாடென்று அரசு செய்து வரும் பிரச்சாரம், கொடிக்கம்பத்தின் கீழேயே கிழிந்து தொங்கியது. ஊராட்சிமன்றத் தலைவராகவே இருந்தாலும், கள்ளர் சாதியினர் இருக்க தாழ்த்தப்பட்டவர் கொடியேற்றுவதா எனத் தெனாவெட்டாகத் தீண்டாமையை அனுசரித்த அக்கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசோ இருதரப்பினருக்குமிடையே கட்டப்பஞ்சாயத்து பேசி, பள்ளித் தலைமை ஆசிரியரைக் கொடியேற்ற வைத்துள்ளது. மொத்தத்தில், கள்ளர்சாதிக் கும்பலும் போலீசுதுறையும், தாழ்த்தப்பட்டோர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் பார்த்துக் கொண்டனர். கோயில் திருவிழா போன்ற நிலப்பிரபுத்துவ ஊர் மரபுகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமை, குடியரசு தின விழாவுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இல்லாத கடவுளுக்கு ஏற்றப்படும் கோயில் திருவிழா கொடிக்கும், இல்லாத ஜனநாயகத்தை இருப்பது போலக் காட்டுவதற்காக ஏற்றப்படும் குடியரசு தினவிழாக் கொடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவியான வள்ளி தெய்வானை என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனுவை அளித்துள்ளார். “தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தான் சாதி இந்துக்களால் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே ஊராட்சிமன்றத் தலைவர் இருக்கையில் தன்னை ஆதிக்க சாதியினர் அமரவிட்டதில்லை” என்றும் அப்புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை பணி செய்ய விடாமல் சாதி இந்துக்கள் தடுப்பதாகவும், தகுதியே இல்லாதவர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தை வழங்கக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
பசுவம்பட்டியில் மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஊராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. தலைவராக ஆனாலும் நின்றுகொண்டேதான் கூட்டம் நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்றப் பிரதிநிதிகளின் ஆணைகளை அவர்களுக்குக் கீழே பணியாற்றும் உதவி அலுவலர்கள் கூட செயல்படுத்துவதில்லை. அப்பிரதிநிதிகள், நாற்காலியில் அமர விடாமல் தடுக்க, நாற்காலிகளை உடைத்துப் போட்டுவிட்டு, அவற்றை செப்பனிடாமல் போட்டுவைக்கும் கீழ்த்தரமான தந்திரங்களைச் செய்யவும் கூச்சப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டோரை, அதிகாரத்தில் பங்கெடுக்க வைக்கும் இட ஒதுக்கீடு சீர்திருத்தங்களைக் கூட ஆதிக்க சாதியினர் சகித்துக் கொள்வதில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர், உள்ளாட்சி தேர்தலைக் கேலிக்கூத்தாக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உடனே பதவி விலக வைத்து வந்தனர். அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தண்டிக்காத அரசோ, அடுத்தடுத்து இந்தக் கேலிக்கூத்துத் தேர்தல்களை நடத்தியது. அச்சாதி வெறியர்களிடம் பேரம் பேசி ரூ. 25 லட்சம் சிறப்பு ஒதுக்கீடு செய்து தாஜா செய்தது.
பாப்பாப்பட்டி போலன்றி சுமுகமாகத் தேர்தல் நடந்த பல ஊர்களில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் சுயேச்சையாக முடிவெடுக்கவோ, சட்டப்படி செயல்படவோ ஆதிக்க சாதியினரால் அனுமதிக்கப்படுவதில்லை. அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி செயல்பட முனைந்தவர்களுக்குக் கிடைத்தவையோ கொலைவெறித் தாக்குதல்கள். அதிலும் பெண்ணாயிருந்தால் பாலியல் வன்முறைக்கும் ஆளாகியுள்ளனர். அருந்ததியினர் சாதியைச் சேர்ந்த திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் இதற்கு சான்றாகும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் சாதிவெறித் தாக்குதல்கள் அன்றாடச் செய்திகளாகி உள்ளன. கடந்த ஜனவரி 22 அன்று ஒடிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்த லாத்தூரில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் சுனா எனும் தாழ்த்தப்பட்ட மாணவன், உள்ளூர் கடையொன்றில் சட்டை வாங்கச் சென்றான். அப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர் உள்ளாடை அணிவதை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. கணேஷ் சுனா, பனியன் அணிந்திருந்ததைக் கவனித்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த கடைக்காரர், ஆத்திரமடைந்திருக்கிறார். அதனை வெளிப்படையாகச் சொல்லாமல், சட்டை வாங்க வந்த மாணவனை, திருட வந்ததாகச் சொல்லி கடைக்காரர் தாக்கினார். தடுத்த, அப்பையனின் தாத்தாவையும் தாக்கியுள்ளார். பின்னர் 50 பேருக்கும் மேல் திரண்டு வந்து சேரியைச் சூறையாடி தீவைத்துள்ளனர்.
அதே மாதத்தில், மகாராஷ்டிர மாநிலம் முல்கான் கிராமத்தில், 42 வயதான தாழ்த்தப்பட்ட பெண்மணியை நிர்வாணப்படுத்தி சாதிவெறியர்கள் ஊர்வலம் விட்டுள்ளனர். அப்பெண்மணியின் மகன் ஒரு மாதத்திற்கு முன் ஆதிக்க சாதிப் பெண்ணுடன் காதல்வயப்பட்டு ஊரைவிட்டு ஓடியதுதான், இக்கொடுஞ்செயலுக்குக் காரணம்.
இவ்வாறு தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் மீது, வன்கொடுமையை ஏவுவதில் ஆதிக்க சாதியினர் தீவிரமாக உள்ளனர். வன்கொடுமையைத் தடுப்பதற்கென கொண்டுவரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இச்சாதிவெறியர்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் ஏவுவதில்லை. வன்கொடுமையைத் தடுக்கத் தவறுகின்ற மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் கூறியுள்ளது. காகிதத் தீர்ப்பு சாதிவெறியைக் கட்டுப்படுத்திவிடவில்லை.
“அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்! அதன்மூலம் சாதிக்கொடுமையை ஒழிப்போம்!” என்ற முழக்கத்தை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டின, தலித் இயக்கங்கள். தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைப் பல இடங்களில் கைப்பற்றிய பின்னரும் சாதிக் கொடுமை தீரவில்லை. உத்திரப் பிரதேசத்தில் பார்ப்பனர் கூட்டணியுடன் மாயாவதி ஆட்சியைப் பிடித்த பின்னர், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. தலித் இளைஞரைப் படுகொலை செய்த தன் கட்சியை சேர்ந்த சாதிவெறியர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைப்பதற்கே பகுஜன் சமாஜ் கட்சி துணைபோனது.
சாதி ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் தொடர்ந்து பேணுவதற்காக, தலித் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணமே இட ஒதுக்கீடு என்பது சாதிவெறியர்களின் கருத்து. தலித் மக்களில் யாருக்கு எவ்வளவு ஜனநாயகத்தை, எங்கே, எப்போது வழங்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தாங்கள் பெற்றிருப்பதாகவே ஆதிக்க சாதியினர் கருதுகிறார்கள். இந்த அதிகாரம் வன்கொடுமைத் தடைச்சட்டத்துடன் மோதும் இடங்களில், மிகவும் இலாவகமாக, அதனை மடை மாற்றி விட்டு, ஆதிக்க சாதியினரின் அதிகாரத்தைப் பாதுகாக்கும் பணியை போலீசும் அதிகார வர்க்கமும் செய்கின்றன.
சமரசம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த அயோக்கியத்தனத்தை அடையாளம் காட்டி, அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான் சாதிதீண்டாமையை ஒழிக்க விரும்பும் அனைவரின் கடமை.
மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆமாம் உண்மைதானே’ என்று தோன்றும். திரைப்பட உலகமும், செய்தி நிறுவனங்களும் முசுலீம்களைக் கடத்தல்காரர்களாகப் பல ஆண்டுகளாகச் சித்தரித்ததன் விளைவே மேற்கண்ட கருத்து. விவாதத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை போல இது உருவெடுத்திருக்கிறது. உண்மையில் கடத்தல் தொழிலுக்கு உகந்த மதம் என்று எதுவும் இல்லை. கடத்தல் தொழிலில் எல்லா மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். அவர்களின் மதமே சட்ட விரோதமாகக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதுதான்.
பம்பாயின் வரதராஜ முதலியார், அமர்நாயக், அருண்காவ்லி, சிவசேனாவின் குண்டர்படைத் தொழிற்சங்கம், தாவூத் இப்ராகிமிடம் வேலை பார்க்கும் இந்துத் தளபதிகள் போன்ற தாதாக்களெல்லாம் யார்? சென்னையில் ஏழுமலை, சிவா, வீரமணி, பாக்சர் வடிவேலு, எர்ணாவூர் நாராயணன், ஆதி ராஜாராம், மதுசூதனன், ஜெயா – சசி கும்பலின் தலைமையில் தமிழகத்தை மொட்டையடித்த வட்டாரத் தளபதிகள் அவர்களெல்லாம் யார்? அந்நியச் செலவாணி மோசடியில் ஈடுபட்டமைக்காக ஜெயா – சசி கும்பலைச் சேர்ந்த தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ என்பதால்தான் கடத்தல், சட்ட விரோத தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று கூறலாமா?
கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி மோசடியைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகக் கருதிய ஃபெரா (FERA) சட்டத்தை ரத்து செய்து, அதை சிவில் குற்றமாக மாற்றி ஃபெமா (FEMA) என்ற புதிய சட்டத்தைப் பிறப்பித்திருப்பதே தற்போதைய பா.ஜ.க. அரசுதான். எனவே கடத்தல் பேர்வழிகளெல்லாம் இந்துக்கள்தான் என்பதற்கு இதையே நிரூபணமாக எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது, முசுலீம்கள் மட்டுமே கடத்தல் செய்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகிறார்களாம்.
உண்மையில் கடத்தல் என்றால் என்ன? சுங்கவரி, இறக்குமதித் தீர்வைப் பட்டியலில் உள்ள பொருட்களை சட்ட விரோதமாகக் கடத்தி வந்து விற்று இலாபம் சம்பாதிப்பது. ஆனால், இன்றைய உலகமயமாக்கமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் இத்தகைய மரபுவழிக் கடத்தலைத் தேவையற்றதாக்கி விட்டது. தங்கமும், டாலரும் தடையின்றி வர அனுமதிக்கப்படுகின்றன. முக்கியமாக அரசே கடத்தல் தொழிலுக்கு உரிமம் கொடுத்து வருகிறது. ஓ.ஜி.எல் (Open Goverment License) என்ற உரிமம் பெற்று எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யலாம். தற்போதைய பா.ஜ.க. அரசும், முந்தைய அரசுகளும் செய்ததும், செய்வதும் இத்தகைய கடத்தல்தான்.
பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முசுலீமைக் காட்டி ”பார் முசுலீம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி. லுங்கி கிடக்கட்டும்; பனியன் ஜட்டி முதல் பல் குத்தும் குச்சி வரை, ஊறுகாய் மட்டை முதல் துடைப்பக்கட்டை வரை சுமார் 750 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து ‘கடத்தலாம்’ என்று இப்போது சட்டமே போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. கடத்தல் அனுமதிக்கப்பட்ட 750 சரக்குகளில் ”ஹிந்துக்களின் புனிதமான குங்குமமும்” அடக்கம். பர்மா பஜார் முசுலீம்களை ஒழிக்கத்தான் பா.ஜ.க அரசு நாட்டையே பர்மா பஜார் ஆக்கிவிட்டது போலும்!
இதுவன்றி ஏற்றுமதி – இறக்குமதி மோசடி, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி, கழிவு, தரகு, ஊழல் என்று பல்லாயிரங்கோடிக் கணக்கில் சுருட்டுவது பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள்தான். தன்னுடைய கணக்குப்படி ஒரு ஆண்டில் சுருட்டப்படும் மோசடிப் பணம் குறைந்தது ஒரு லட்சம் கோடியிருக்கும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் மாதவன் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியாவின் பிரபல ஊழல் வழக்குகளான போஃபர்ஸ், சர்க்கரை, நிலக்கரி, தொலைபேசி, ஜெயின் டைரி, ஹவாலா, இந்தியன் வங்கி, பங்குச் சந்தை, ஜெயா – சசி ஊழல், தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற அனைத்து வழக்குகளிலும் கோடிகளைக் கொள்ளையடித்தவர்கள் யார்? முசுலீம்களா? இல்லை; ஒருவர் கூட இல்லை. மாறாக பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருந்து நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது.
எனவே இத்தகைய மோசடிகளைத் தடுப்பதோ, தடை செய்வதோ இந்து மத வெறியர்களின் நோக்கமல்ல. மாறாக இந்த சட்ட விரோத – சமூக விரோத கும்பல்கள் அனைத்தும் தனக்கு மட்டும் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். ”கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், குண்டர் படை நடத்துபவர்கள், விபச்சாரத் தொழில் செய்பவர்கள் – அனைவரும் மராத்திய இந்துக்களாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று அவர்களின் நோக்கத்தை பால் தாக்கரே பச்சையாக வெளியிடுகிறார். இது இந்து தர்மத்துக்கு விரோதமானதல்ல என்பதையே கீழ்க்கண்ட கீதையின் சுலோகமும் மெய்ப்பிக்கின்றது.
”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.”
வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையும் அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய “என்கவுன்ட்டர்“ நாடகத்தில் வெளிமாநிலத்தவர்களை கொலைசெய்ததையும் முகாந்திரமாக வைத்து சென்னைக் காவல் துறை ஆணையாளர் கடந்த 03.03.2012 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் சென்னை மாநகரத்தில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் சமூக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் தேவையைக் கருதி அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் காவல் துறை கொடுக்கும் விண்ணப்பத்தில் வாடகை தாரர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அளிக்காத பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் (இப்பிரிவின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும்) குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் மக்களின் தகவல்களை தரவாக்கும் பணியினை மேற்கொண்டு அதன் மூலமாக பற்றிப் பரவும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நீண்டகால அரசின் தேவையை நிவர்த்தி செய்யவே இவ்வுத்தரவு உண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை ஆணையாளரின் மேற்கூறிய உத்திரவினை பல்வேறு இடங்களில் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து காவல் துறையினர் விவரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த தென் சென்னை உதவி ஆணையாளர், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 22,000 வீட்டு உரிமையாளர்கள் வாடகைதரார்களின் தகவல்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். காவல் துறை தயாரித்துள்ள விண்ணப்பத்தில் வாடகைதாரரின் புகைப்படம், அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த முகவரி, செல் பேசி எண், வேலை செய்யும் இடம் மற்றும் அதன் முகவரி மற்றும் தன்னுடன் தங்கியிருப்பவர்களின் விவரம் மற்றும் அவர்களுடனான உறவு ஆகியவற்றை நிரப்பி அனைவருடைய புகைப்பட அடையாள அட்டையின் நகல்களை இணைத்து வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் கையொப்பம் இடவேண்டும்.
காவல் துறை மேற்கூறிய உத்திரவினை சில மனித உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் எதிர்த்து குரல் எழுப்பியிருந்தாலும், இதற்கெதிரான வலுவான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படாத காரணத்தால் காவல் துறையினர் இதனை தீவிரமான அமல்படுத்த முனைந்தனர். மேலும் இதே போன்று கல்வி நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் தகவல்களைத் தரவு செய்யவும், வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்களைத் தரவு செய்யவும் காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கூறிய காவல் துறை ஆணையாளரின் உத்திரவினை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, எமது செயலாளர் வழக்குரைஞர் மில்ட்டன் பெயரில் பொது நல வழக்கு ஒன்றினைச் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்று அவ்வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆயத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதே போன்று அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சிறிதர் என்பரும் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் புருஷோத்தமன் அவர்கள் காவல் துறை ஆணையாளரின் உத்திரவானது பொது மக்களின் தகவல்களை சட்ட அங்கீகாரம் இல்லாமல் காவல் துறை பெற்று பராமரிக்க இயலாது என்கிற நிலையில், பொது அமைதிக்காக உடனடி ஆபத்துக்களைத் தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை, காவல் துறை ஆணையாளர் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும், இவ்வாரான நடவடிக்கை வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதாகவும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகவும், உடைமையாளர் மற்றும் உடைமையற்றோரைப் பாகுபடுத்தும் நிலையை உருவாக்குவதாகவும், வாடகைதாரர்களையும், வெளிமாநிலத்தவரையம் கிரிமினல்களாக சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை வாடகைதார்களைப் பற்றிய இன்ஃபார்மர்களாக மாற்றும் கயமைத்தனமான நடவடிக்கை இது என்றும் வாதிட்டார்.
மேலும் மே 1-ம் தேதிக்குள் வாடகைதாரர்களின் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது ஏற்க இயலாத ஒன்று எனவும் வலியுறுத்தினார். மருத்துவர் சிறிதருக்கு ஆஜரான வழக்குரைஞர் சத்தியசந்திரன் அவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையில் இவ்வுத்திரவு மூலம் பகைமைபாராட்டும் உணர்வை தூண்டும் அரசே தூண்டியுள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் மும்பை, பெங்களுர் போன்ற மாநகரங்களில் இதே போன்று அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் சென்னை மாநகரத்தில் அமல்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இறுதியில் தலைமை நீதிபதி ஆயம் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு மட்டும் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. வழக்கானது அரசின் பதில் மனுவிற்காக இரு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசு வழக்குரைஞர் கூறியது போலவே புது தில்லி, மும்பை மற்றும் பெங்களுர் போன்ற பெருநகரங்களில் அம்மாநகர காவல் துறையினர் தீவிரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இதே மாதிரியான உத்திரவைகளை பிறப்பித்து மக்களின் தகவல்களைத் திரட்ட முனைந்து வருகின்றனர். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்;; இங்கோ கொள்ளையர் அச்சுறுத்தல்;; இவ்வாறான அச்சுறுத்தல் பீதிகளை மிகைப்படுத்தி, அரசு பயங்கரவாதமானது அனைத்து மக்கள் தகவல்களையும் தரவுபடுத்தும் பணியினை எளிமையாகச் செய்துவிடலாம் என்று முனைந்து வருகின்றது. இதற்காக அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றையெல்லாம் பறித்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர எத்தனிக்கிறது.
பொதுவாகவே, பொது நல வழக்கு என்பது ஒரு வகையில் அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விவாதத்திற்கு கொண்டு வரும் ஓர் நடவடிக்கையாகவே இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஜனநாயகமற்ற அரசின் பாசிச செயல்பாடுகளை மக்கள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க இயலும். அதற்கு இவ்வுத்திரவு மக்களிடம் விவாதத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று கருதுகிறோம்.
மக்கள் போராட்டத்திற்காக எமது பிரச்சாரத்தையும் துவக்கவுள்ளோம்.
எங்களோடு அணி சேருங்கள்!
மக்கள் உரிமைகளைப் பறிக்கும் அரசின் கொடுங்கோன்மையை தடுத்திடுவோம்!
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 13
”சிறுபான்மையினரைப் பற்றி மட்டும் கவலைப்படும் ஒரு சார்பாக சிறுபான்மையினர் கமிசனைக் கலைத்து விட்டு, அனைத்து மக்களும் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணும் மனித உரிமைக் கமிசன் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் எவருக்கு எந்தக் குறையிருந்தாலும் அது களையப்பட ஒரு அமைப்பும் உருவாகும்.”
பெரும்பான்மை இந்துக்களுக்குக் கிடைக்காத மாபெரும் உரிமைகள் சிறுபான்மையினர் கமிசனுக்கு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்தக் கோரிக்கை. தேசிய சிறுபான்மையினர் கமிசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கமிசன், தேசிய மகளிர் கமிசன் போன்றவை பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்த மக்கள் போராட்டத்தினால் உருவானவை. இவை அந்தந்தப் பிரிவு மக்களின் குறிப்பான பிரச்சினைகள், பாதிப்புகளை அரசிற்கும், வெளி உலகிற்கும் ‘தெரிவிக்க’ மட்டுமே அதிகாரம் படைத்தவை. மற்றபடி இவற்றுக்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது.
இந்தக் கமிசன்கள் விசாரிக்கச் செல்லும் பிரச்சினைகளில், சாதி, மத, இன, ஆணாதிக்கத்தின் உறைவிடமான இந்து மதவெறியர்களே எதிர்த்தரப்பாக இருக்கின்றனர். எனவேதான் இந்தச் ‘சிறுபான்மை’ கமிசன்களைக் கலைத்துவிட்டு, மனித உரிமைக் கமிசனை ஏற்படுத்துமாறு கேட்கிறார்கள். அவர்கள் கேட்காமலேயே இப்போதே ‘மனித உரிமைக் கமிசன்’ ஒன்று செயல்படுகிறது.
கோவையில் காவலர் செல்வராசு கொலையைச் சாக்கிட்டு முசுலீம்களை எதிர்த்து நடந்த கலவரத்தை விசாரிக்க ‘மனித உரிமைக் கமிசன்’ வந்தது. வந்தவர்கள் உள்ளூர் போலீசு உருவாக்கிய அறிக்கையைக் கேட்டு வாங்கி, ‘இதுதான் தாங்கள் விசாரித்துக் கண்டறிந்தது’ என வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு வந்த சிறுபான்மையினர் கமிசன் இந்த ‘மனித உரிமை’ மோசடியை அம்பலப்படுத்தியது.
இப்படித் தங்கள் கலவரங்கள், கொலைகள் மற்றும் ஆதிக்கத்தை எவ்வித இடையூறுமின்றி தொடர்வதற்கே மனித உரிமை பற்றிப் பேசுகிறது ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணிக் கும்பல்.
ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.
”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.
“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”
“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர் சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.
மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்ததும் கரவொலி. இதோடு அந்த போட்டியாளரை விட்டு விடவில்லை. ”சரி, சந்தோஷ், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன ஃபீல் பண்ணீங்க, இப்போ என்ன ஃபீல் பண்றீங்க? எப்படியாவது வார்த்தையில அதை கொண்டு வாங்க?” என்று அந்த போட்டியாளரை விடாமல் தோண்டித் துருவி செண்டிமெண்டைப் பிழிந்து எடுக்கிறார்கள்.
நடுவர்கள் கண்களை துடைத்துக் கொள்கிறார்கள். அரங்கத்திலிருப்பவர்கள், இந்தக் காட்சியை காணத் திராணியற்றவர்களாய் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். அப்படியும் போட்டியாளரை நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. விக்கித்துப் போய் இருப்பவரிடமிருந்து உணர்ச்சியை வார்த்தைகளாகக் கறந்துவிடத் துடிக்கிறார். “எங்க அம்மாவால நடந்து வர முடியாது, வந்தாலும் நாள் முழுக்க நாற்காலியில உட்கார்ந்து இருக்க முடியாது” என்று போட்டியாளர் சந்தோஷ் தடுமாறுகிறார்.
போட்டியாளரின் தாயையும், நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. அவரும் தடுமாற்றமான குரலில் பதிலளிக்கிறார். தனக்கு இந்த ஏற்பாடு முன்பே தெரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இருக்கட்டுமே என்பதற்காக மகனிடம் இது குறித்துச் சொல்லவில்லை என்கிறார். இதற்கும் அரங்கம் கண்கலங்குகிறது. நெகிழ்ந்து கரவொலி எழுப்புகிறது. சிறிது நேரத்தில் விட்ட இடத்திலிருந்து திரும்ப பாடல் தொடங்குகிறது.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் – தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் மற்றும் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசித்தம்.
முதலில் இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோ வகையைச் சார்ந்தது. அதாவது, பணத்துக்காக நடிக்கும் நடிகர்களை கொண்டதல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களைக் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை மையமாகக் கொண்டு பணத்துக்காகவும், படோடபமான பரிசுகளுக்காகவும் முக்கியமா டி ஆர் பி ரேட்டிங்குக்காக நடத்தப்படுபவை. முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு உண்மையான விறுவிறுப்பு, ஆவல், த்ரில் முதலான உணர்ச்சிகளை ஊட்டி கல்லா கட்டுவதுதான் இந்த ரியாலிட்டி ஷோக்களின் நோக்கம்.
இவ்வகை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் 1970களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அமெரிக்காவில் ஓபரா வின் ஃப்ரே என்ற பெண்மணியின் இவ்வகை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எல்ல வணிக ஊடகங்களும் அமெரிக்க மாதிரியை வைத்து வளர்ந்தது போல தற்போது இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவுக்கும் இறக்குமதியாகி இருக்கின்றன.
கோன் பனேகா குரோர்பதி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் அனு, சச் கா சாம்னா, மானாட மயிலாட, சரிகமபதநி என்று இதில் அநேக ரகங்களுண்டு. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விளையாட்டு, காமெடி, பிரபலங்களை வைத்து, திறமைக்கான தேடல் என்றும் பல வகைகள் உண்டு. ஏ எக்ஸ் போன்ற சேனல்களில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களே தனிச்சிறப்பாக நடக்கின்றன. அதில் போட்டி நிகழ்ச்சிக்காக அருவெறுப்பான உணவுகளை உண்பது, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்யாதவற்றை காமிரா முன்பு செய்வது, சமயங்களில் உயிரைக் காவு கொள்ளக்கூடிய சாகசங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் சில நாட்களை ஒரே வீட்டில் கழிப்பது முதலியன.
வகைவகையாக நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் – காண்பவரின் உணர்ச்சிகளைக் கொண்டு விளம்பரங்களின் மூலம் காசு பார்ப்பது. அதாவது ரியாலிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதில் இயல்பு தன்மை என்பது பேச்சுக்குக் கூட இருக்காது. எல்லாம் ஒரு செயற்கைத்தனம் கலந்து இருக்கும். அதே நேரம் உண்மையில் நடப்பது போல தொகுத்து வழங்குவார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பார்ப்பவரை அடுத்தது என்ன என்பதை இதயத்துடிப்பை எகிறவைத்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஈர்த்துப் பிடிக்கின்றன. எவ்வளவுக்கெவ்வளவு மக்களை ஈர்த்துப் பார்க்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறும். அதைப் பொறுத்து பணமும் கொழிக்கும். இதைக் கண்டுக்கொண்ட, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காமதேனுவாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு அம்சத்துக்காக நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது போக, நிஜத்தைப் போலவே காண்பிக்க வேண்டும், பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன, தொலைக்காட்சி நிறுவனங்கள். ஆட்டை இழுத்து வந்து, வளர்த்து, பூஜை செய்து வெட்டுவது போலத்தான், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்த காட்சி.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகளின் சுரண்டல் என்றால் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதும் மற்றொரு வகைச் சுரண்டல்தான். யார் அதிக வாக்குகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு. விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குறுஞ்செய்திகளிலும் காசு வேட்டைதான், விஜய் டீவிக்கு. இப்படிக் கொள்ளையடிப்பதற்காக, மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தெரியாமலே வக்கிரமான ரசனைக்குக் கொண்டு சென்று செண்டிமெண்டால் தாக்குவார்கள். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன், மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் அடக்கம்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல், நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில் விடாமல் கலந்துக் கொண்டார்.
ஒருமுறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டான். அடுத்ததாக, பொது மக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனுக்கு வாக்கு சேகரிக்க சென்னை நகரெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய எஸ் எம் எஸ் எண், எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும், எந்த நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பன போன்ற விவரங்களுடன். ஒரு செல்போனுக்கு எத்தனை வாக்கு வேண்டுமானாலும் அளிக்கலாமாம். அதில் , அந்த சிறுவன், 10 வயது கூட நிரம்பியிராத அந்த சிறுவன் கூழை கும்பிடு போட்டுக்கொண்டு, ”என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து, ஜூனியர் 2 டைட்டிலை வின் பண்ணிக் கொடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு பெற்றோரின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையைச் சீரழித்து வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.
இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்.
சந்தோஷ்: நோயுற்ற இவரது தாயை வைத்து விஜய் டி.வி.யின் ஆபாச சென்டிமென்ட்!
பிறக்கும் போதே குழந்தை என்ன பொறியியல் படிப்பு முடிக்க வேண்டும், எத்தனை இலட்சம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ன ஆய கலைகள் கற்க வேண்டும் என்பதை ஒரு பந்தயக் குதிரையை வளர்ப்பது போல ’தீனி’ போட்டு வளர்க்கிறார்கள், நடுத்தர வர்க்க பெற்றோர்கள். அதுவும் அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே கர்நாடக சங்கீதமும், பரதமும், கணினிக் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். ஊடக, கலை, சினிமாத்துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட்தான் என்பது நிதர்சனமாயிருப்பதால் இந்த மாயை பெருக்கெடுத்து ஒடுகின்றது. ஆயினும் ஆயிரத்தில் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமென்றாலும் பெற்றோர்கள் அயர்ந்து விடுவதில்லை.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு 25 லட்சத்தில் வீடு, கார் என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் முதலிடத்துக்கு வந்து வீட்டைப் பரிசாகத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக எந்த அளவுக்கும் மெனக்கெடத் துணிகிறார்கள். லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி என்று கனவு கண்டு ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு வாங்கி பாமரர்கள் ஏமாறுகிறார்கள், இல்லையா? அது போல, தங்கள் குழந்தையை ரேஸ் குதிரைகளாக நினைக்கும் பெற்றோரின் இந்த மனநிலையை விஜய் டிவி நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விஜய் டிவி ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கிறது என்றால் பெற்றோர்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள்.
அந்தச் சிறுவனைப் பார்த்தால் பத்து வயதுதான் இருக்கும். மாலையில் ஐந்து மணி வாக்கில் தனது தந்தையுடன் அந்த ஸ்டூடியோ வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறான். ஜிகினாக்களுடன் பளபளக்கும் உடை அணிந்திருக்கிறான். முகத்தில் மேக்கப். இருந்தும், முகம் சோர்ந்திருக்கிறது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. பசிக்கிறதென்றும், ஜூரம் வருவது போலிருக்கிறது என்றும் தந்தையிடம் முணுமுணுக்கிறான். ஆனால், அவனது தந்தையோ பதைப்பதைப்புடன் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டை விட்டால், தனது மகன் அதற்கான வயது வரம்பைத் தாண்டி விடுவான் என்கிறார்.
சூப்பர் சிங்கர் பாடல் போட்டிக்கான சுற்றுதான், அது. அதில் அவன் ஜெயித்துவிட்டால், அடுத்த சுற்றில் பாடத் தயாராக வேண்டும். திரும்ப இதே போல ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள். அந்தச் சுற்றில் நடுவர்களுக்கு முன்பு தோன்றுவதற்கேற்ப உடை அணிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் அவனது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிடும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் சினிமாவில் பாட சான்ஸ் கிடைக்கும் என்று பரப்பப்பட்டு வருகிறது.
அதற்கேற்றாற் போல், நடுவராக வரும் ஏதாவது ஒரு இசையமைப்பாளரும் ஆசை காட்டுகிறார். ஆனால், அப்படி சினிமாவில் பாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகவும் சொற்பமே. இன்று தனித்த குரலிசை என்று ஒன்று திரையிசையில் இல்லாமல் போய்விட்ட பின்னரும் இத்தகைய ஆசைகளை அந்தப் பெற்றோர்கள் விடுவதாக இல்லை.
குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
ஏனெனில், அது தற்போது பரிசை நோக்கிய ஓட்டமாக மாறி விட்டது. கலந்து கொள்ளும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறார்கள். எப்படியாவது பரிசுப்பொருளைக் கைப்பற்ற எண்ணுகிறார்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராக இருப்பவர்கள் தங்கள் குழந்தையை விற்கத் தயாராகிவிடுகிறார்கள். அதற்காக, விஜய் டிவியிடம் முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விடுகிறார்கள். தன் குழந்தை மேடையில் பாடினால், அரங்கில் அமர்ந்தபடி தந்தை நடனமாடுகிறார். பாட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார்.
ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை. அது செயற்கையாக தன்னை பிறர் பார்க்க வேண்டும், அப்படி ஆடினால்தான் காமரா தன்னைப் பார்க்கும், தான் அதிகம் பார்க்கப்பட்டால்தான் தனது குழந்தையின் பிராண்ட் இமேஜ் உயரும் என்ற பச்சையான சுயநலமே இத்தகைய ஜோடனைகளைத் தோற்றுவிக்கின்றது.
குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சமூகச் சூழலைப் பற்றி கவனிக்காமல் அல்லது கவலைப்படாமல், சாயப்பட்டறைளிலும், பட்டாசுத் தொழிற்சாலையிலும், டீக்கடைகளிலும் பணிபுரியும் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தைத் தொலைத்து விடுவதாகவும், குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க வேண்டுமென்றும் கூச்சல் இடும் நடுத்தர வர்க்கத்தின் கண்களுக்கு, விஜய் டிவி குழந்தைகளின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, சமூக அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் நிலை பற்றி எண்ணுவதற்குக் கூட இவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – விஜய் டி.வி.யின் அடுத்த சுரண்டல் ரெடி
குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குகளுக்குக் கூட சுதந்திரமிருக்கும். ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக விஜய் டிவியிடம் மாட்டிய குழந்தைகள் நிலை அதைவிடப் பரிதாபம். போட்டியாளராகிவிட்டால், பள்ளிக்கூடத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டம்தான். ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல, பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகின்றன. போட்டி முடிந்து விட்டாலோ, அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அடுத்த பலியாடு மாட்டும் வரை, விஜய் டிவி எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அல்லது ஆட்டம் பாட்டம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வெற்றியாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி இந்த வெற்றியாளர்களைத் தமது பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. இலவசமாகக் கிடைத்த விளம்பரத்தை மனதில் கொண்டோ அல்லது விஜய் டிவிக்கு காட்ட வேண்டிய நன்றி விசுவாசத்தை நினைத்தோ, வெற்றியாளர்கள் இதனை மறுத்துப் பேசவும் முடியாது.
முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள் பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும். _____________________________________________
குஜராத் 2002ஐ நம்மில் சிலர் விரும்புவது போல ‘நடந்து முடிந்த ஒன்று’ என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
நாள்: ஷா-இ-ஆலம் நிவாரண முகாம், அகமதாபாத், மார்ச் 27, 2002:
அகமதாபாத் ஷா இ ஆலம் நிவாரண முகாம் 10,000 க்கும் அதிகமான தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய முகாம். அதன் முற்றத்தில் சிதறிக் கிடக்கும் மனித எச்சங்களில் சாய்ரா (வயது 12), அப்ஸனா (வயது 11), நைனா (வயது 12), அஞ்சு (வயது 12 ), ருக்சத் (வயது 9), நீலோபர் (வயது 10), நீலோபர் (வயது 9), ஹேனா (வயது 11) ஆகியோரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் நரோடா பாடியாவில் தப்பிப் பிழைத்தவர்கள். எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாதவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எந்தக் குழந்தையும் கற்றிருக்கக் கூடாத வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
“பலாத்கார்” (பாலியல் வன்முறை) -என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியும். “மெயின் பதாவூம் தீதீ?” (நான் சொல்லட்டுமா, அக்கா?), “பலாத்கார் கா மத்லப் ஜப் அவுரத் கோ நங்கா கர்தே ஹைன், அவுர் பிர் உசே ஜலா தேத்தே ஹைன்” (பாலியல் வன்முறை என்றால் ஒரு பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு, பிறகு எரிக்கப்படுவது). அதன் பிறகு அவள் தரையை நோக்கி வெறித்துப் பார்க்கிறாள். ஒரு குழந்தை மட்டுமே இப்படி பேச முடியும். நரோடா பாடியாவில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்தது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, எரிக்கப்பட்டனர். (‘தப்பி பிழைத்தவர்கள் பேசுகிறார்கள், ஒரு மகளிர் குழுவின் உண்மை அறிதல்’ ஏப்ரல் 16, 2002 – பக்கம் 13)
சிதைக்கப்பட்ட அந்த பெண்களில் எதுவும் மிச்சமில்லை – உடல்கள், தடயங்கள், நீதி எதுவும் மிச்சம் இல்லை. இந்த சிறுபெண்ணின் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களைத் தவிர எதுவும் எஞ்சியிருக்கவில்லை. எனக்கு இன்னும் அவளது முகம் நினைவில் இருக்கிறது. இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் எங்கே இருக்கிறாள், எப்படி கொலையும் பாலியல் வன்முறையும் நிரம்பிய மன பிம்பங்களுடன் வாழ்க்கையில் பயணிக்கிறாள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை குழந்தைப் பருவங்களை வெட்டிச் சிதைத்த, அதற்காக தண்டிக்கப்படாமல் தப்பித்து விட்ட அந்த ஆண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். தனது குடிமக்களை பாதுகாப்பதற்கான அரசியல் கடமை உடைய அரசு தனது சொந்த குடிமக்களின் படுகொலையில் கூட்டுச் சதி செய்தது குறித்து மீண்டும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.
காயம் ஒன்று இருக்கிறது
குஜராத்தில் இனப் படுகொலைக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் போலவே எனக்கும் அது முடியாத ஒன்றாக இருக்கிறது. நிகழ்காலத்தின் பிரிக்க முடியாத பகுதியாக விளங்கும் ஒன்றை எப்படி திரும்பிப் பார்க்க முடியும்? அதனால், எப்போதும் இருக்கும் தொடர்ந்து இருக்கும் ஆழமான காயமாக குஜராத் இருக்கிறது. 2002ல் நான் அடிக்கடி அழுதிருக்கிறேன். நான் இன்னும் அழுகிறேன். அதுதான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் குஜராத் நம்மைக் கூட்டாக அழ வைக்க வேண்டும். ஒரு தேசம் ஆக நம்மை நாமே உண்மையிலேயே வெட்கப்படச் செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது வரலாறு படுத்தப்பட மறுக்கும் வகையிலான கிளர்ச்சியாக உள்ளது. எந்த ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களிலும் அதை அடக்கம் செய்து முற்றுப் புள்ளி வைத்து விட முடியாது. அதற்கான காரணத்தின் ஒரு பகுதி – பிப்ரவரி-மார்ச் 2002க்கும் வெகு காலத்துக்குப் பிறகும் அது தொடர்ந்து கொண்டிருப்பது, அழித்தொழிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பங்களின் அச்சுறுத்தப்பட்ட பல டஜன் சிறு வாழ்க்கைகளில், வெளிப்பார்வைக்கு கொழித்துக் கொண்டிருக்கும் நகரங்களின் மாநகரங்களின் விளிம்புகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மறுவாழ்வு குடியிருப்புகளில்’ உழன்று கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது. அந்த காரணத்தின் இன்னொரு பகுதி, நியாயத்துக்கான போராட்டங்கள் இன்னும் பல நீதிமன்றங்களில் தைரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதும், அதைப் பற்றிய விவரிப்பு இன்னும் வெளியாகிக் கொண்டிருப்பதும். ஆனால், காரணத்தின் பெரும்பகுதி, குஜராத் நிகழ்வுகள் இந்தியாவுக்கு இழைத்ததன் அர்த்தம் இன்னமும் போட்டி விவாதக்குட்பட்டதாகவே இருப்பதாகும்.
“போகட்டும் விடுங்க, நடக்க வேண்டியதை பாருங்கள். ஏன் இந்த ஆர்வலர்கள் இந்த ‘மகிழ்ச்சியற்ற’ கடந்த காலத்தை திரும்பத் திரும்பக் கிளறி கொண்டே இருக்கிறார்கள்? 10 வருடங்கள் ஆகிவிட்டன” என்று சிலர் சொல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் சிலர் விரும்புவது போன்ற திரைக்கதையின் அடிப்படையில் கடந்த காலத்தை முடிவு கட்டினால், அது நமது நிகழ்காலத்தின் அர்த்தத்தை சிதைப்பதோடு எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. இந்த வாக்குவாதங்கள் நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களைப் பற்றியவை மட்டும் இல்லை. இந்த வாக்குவாதம் குடியுரிமையின் அர்த்தத்தைப் பற்றியது. இது குடிமக்கள் மற்றும் அரசுக்கு இடையே உள்ள உறவை பற்றியது. அரசாங்கத்தின் தண்டனையைத் தாண்டிய நிலையைப் பற்றியது. குஜராத் என்பது மறப்பதற்கு எதிராக, கூட்டு நினைவைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். ஏனென்றால் கடைசியில் அது இந்தியா என்ற ஆதர்சத்துக்கான போராட்டமாக உள்ளது.
இந்தியா அதன் சிறுபான்மையினர் கௌரவமாகவும் குடியுரிமையின் முழு உரிமைகளுடனும் வாழ்வதற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை 1950 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும், அந்த புனிதமான வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது – தில்லி, நெல்லி, மீரட், பகல்பூர், ஹாஷிம்புரா, கந்தர்மால், குஜராத் மற்றும் மிகச் சமீபத்தில் கோபால்கர் (செப்டம்பர் 2011) என்று ஒவ்வொரு நிகழ்விலும், அவர்களது சிறுபான்மை அடையாளத்துக்காகவே, அவர்கள் யார் என்பதற்காகவே அப்பாவிகள் கொல்லப்படவும், முடமாக்கப்படவும், பாலியல் தாக்குதலுக்குட்படுத்தப்படவும், வீட்டிலிருந்தும் சமையலறையிலிருந்தும் எரிக்கப்பட்டு காற்றில் வீசப்படவும் செய்யப்பட்டார்கள்.
குறிவைக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், அரசாங்கத்தின் அலுவலர்கள் ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாக்கவும், வழக்கு தொடரவும், நீதி வழங்கவும் உள்ள தமது கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். இப்படியே எவ்வளவு காலம் போக முடியும்? அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் வல்லமையையும் துப்பாக்கிகளையும் போலீசையும், சைரன்களையும் குடிமக்களின் ஒரு குழுவினருக்கு எதிராக பயன்படுத்தவும் அதற்கு பதில் சொல்லப் பொறுப்பில்லாமலும் எவ்வளவு காலம் தப்ப முடியும்? அரசு நிறுவனத்தின் நிறுவன சார்புநிலைகள் எந்த நாகரீக ஜனநாயகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுதான் குஜராத் சொல்லும் பாடம்.
சவால்கள்
குஜராத் படுகொலை ஒரு தேசமாக நமக்கு முன் பல சவால்களை முன் வைக்கிறது. நமது இதயங்களிலும் சமூகக் கட்டமைப்பிலும் குற்றவியல் நீதிஅமைப்பு, சட்டங்கள், மற்றும் நீதிபரிபாலனத்திலும் உள்ள ஓட்டைகளை வெளிக் கொணர்கிறது. மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இனவாத பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாதுதான். நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகளில் பல லட்ச வேறுபட்ட தருணங்களில் பல லட்ச வேறுபட்ட வழிகளில் நாம் ஒரு சமூகமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டம் அது. ஆனால் பலவீனமானவர்களுக்கு நீதியை உறுதி செய்ய சட்டம் இயற்ற முடியும், இயற்ற வேண்டும்.
நழுவிப் போகும் நீதி
இந்தியாவின் சமீபத்திய வரலாற்றின் வேறு எந்த வன்முறை நிகழ்வையும் போலல்லாமல், குஜராத் 2002 நமது ஜனநாயக நிறுவனங்கள் பலவற்றின் வலிமையையும் தாங்கும் தன்மையையும் சோதித்தது – தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, கெளரவத்துக்குரிய உச்ச நீதிமன்றம், மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். ஒவ்வொன்றும் முன் வந்து நடவடிக்கை எடுத்தன. இருப்பினும், எப்படியோ, குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீதி என்ற விஷயம் இன்னும் எட்டவில்லை.
சட்டத்தின் செயல்பாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம் என்பதை நிலைநாட்ட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். அரசாங்கத்தின் நிறுவனமயமான பாரபட்சத்துக்கு ஒரு சட்ட நிவாரணம் உருவாக்க; கையில் கத்திகளோடு பிடிபடாத, ஆனால் மற்றவர்களை பொய் சொல்லவும் கொல்லவும் தேர்தல் ஆதாயங்களுக்காக சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தவும் தூண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம், தண்டனைச் சட்ட பொறுப்புகளை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் தவறிய நமது சட்டங்களிலும் நீதி பரிபாலனத்திலும் உள்ள இடைவெளிகளை நிரப்ப நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். இதை சரிவர செய்து முடிப்பது, நீதிக்கும் சட்டத்துக்கு முன்பு சமத்துவத்துக்கான நமது அரசியலமைப்பு வாக்குறுதியை கண்டெடுக்க, இதுவரை இருப்பதை விட சிறப்பாக உதவும். நீதி இல்லாமல், நாம் நகர்ந்து செல்ல முடியாது.
உயிர்தப்பிய ஒருவரின் தைரியம்
ஜனவரி 12, 2008ல் பேச முடியாததை பேசுவதற்கான தைரியத்தைக் கொண்டிருந்த, 20 நாட்களுக்கு மேலான கடுமையான குறுக்கு விசாரணையை தாங்கிக் கொண்ட பில்கிஸ் பானோ என்ற குஜராத் தப்பிப் பிழைத்தவர் சிறிதளவு நீதியை பெற்றார். 2002ன் கொடூரமான நாட்களின் போது அவரை கும்பலாக பாலியல் வன்முறை செய்த, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொல்லவும் பாலியல் வன்முறைக்குட்படுத்தவும், அவரது மூன்று-வயது-மகளை தரையில் அடித்து சிதறடிக்கவும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியது.
ஜனவரி 21, 2008 அன்று தில்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பில்கிஸ் இந்த அறிக்கையை வெளியிட்டார்:
“கடந்த ஆறு வருடங்களாக நான் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். என் குழந்தைகளையும் சுமந்து கொண்டு ஒரு தற்காலிக இல்லத்திலிருந்து இன்னொன்றுக்கு அல்லாடிக் கொண்டிருந்தேன். இத்தனை மக்களின் மனங்களில் இன்னமும் இருக்கும் வெறுப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த தீர்ப்பு அந்த வெறுப்புக்கு முடிவு கட்டி விடப் போவதில்லைதான், ஆனால் எங்காவது, எப்படியாவது நீதி நிலைநாட்டப்படும் என்பதை அது உணர்த்துகிறது. இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமின்றி கொல்லப்பட்ட எல்லா அப்பாவி முஸ்லீம்களுக்கும் என்னைப் போன்று முஸ்லீமாக இருந்ததாலேயே உடல்ரீதியாக மீறப்பட்ட எல்லா முஸ்லீம் பெண்களுக்குமான வெற்றியாகும். இதற்குப் பிறகு 2002ன் அந்த பயங்கரமான நாட்களில் குஜராத்தின் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால் இது ஒரு வெற்றி. ஏனென்றால், குஜராத்தின் வரலாற்றுப் பதிவுகளில் பாலியல் வன்முறை எங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று அழிக்க முடியாமல் பதிக்கப்பட்டு விட்டது. குஜராத் மக்கள் அந்த வன்முறை மற்றும் வெறுப்புணர்வின் களங்கத்துடன் வாழ முடியாமல் என்றாவது ஒரு நாள் இன்னும் எனது தாய்வீடாக திகழும் மாநிலத்தின் மண்ணிலிருந்தே அதை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”
குஜராத்தில் நீதிக்கான போராட்டத்தை நமது சொந்த அபாயத்தில்தான் நாம் கைவிட வேண்டும். குஜராத்தை கைவிடுவதன் மூலம் நாம் ஒரு சிறந்த இந்தியாவை, ‘இந்தியா நம் ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ள வீடு’ என்ற நம்பிக்கையை கைவிடுகிறோம்.
கடந்த மார்ச் 14ம் தேதி, ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி, 2009-ல் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் பற்றிய ஆதாரங்களை தொகுத்து வழங்கியிருக்கிறது
ஜூன் 2011-ல் இலங்கையின் கொலைக் களங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்த ஆவணப்படத்தின் நோக்கம் மிகவும் குறுகிய அளவில் வரையறுக்கப்பட்டது. இறுதிக் கட்டப் போரில் 2009ம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியிலிருந்து வெளியேறி வடகிழக்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்து இலங்கை அரசு படைகள் வெற்றி அடைவது வரையிலான கால கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்தனவா என்பதை மட்டும் ஆய்வு செய்கிறது இந்த நிகழ்ச்சி.
இந்த ஆவணப்படம் அந்த காலகட்டத்தில்,
1. தொலைக்காட்சி நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள், படங்கள்
2. இலங்கை இராணுவத்தினர் தமது மொபைல் போன்களில் எடுத்த வீடியோக்கள்
3. அமெரிக்க சேட்டிலைட் மூலமாக கிடைத்த படங்கள்
இவற்றையும்,
1. போரின் இறுதிக் கட்டத்தில் போர்ப் பகுதியில் பணி செய்த ஐநா ஊழியர்களின் அறிக்கைகள்
2. விக்கிலீக்ஸ் மூலமாக வெளியான அந்த காலத்தில் நடத்தப்பட்ட அமெரிக்க தூதரக செய்திகள்
3. இலங்கை அரசின் அறிக்கைகள்
இவற்றையும்,
இணைத்து இலங்கை அரசு படைகள், இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அரசின் உயர் மட்டத் தலைமையின் ஆதரவோடும், உத்தரவின் கீழும் போர்க்குற்றங்களை நிகழ்ந்தன என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறது.
இந்த படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட, பிற நோக்கங்களுக்காக செய்யப்பட்ட பதிவுகள். இவற்றை இணைத்து போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. இதைப் பார்க்கும் போது புலப்படும் கொடூரங்கள் கடலுக்குள் மூழ்கியிருக்கும் பனிமலையின் விளிம்பு மட்டுமே என்று புரிகிறது. வீடியோ கேமராக்களால் படம் பிடிக்கப்படாத, பார்வையாளர்களால் பதிவு செய்யப்படாத, களத்தில் நடந்த கொடுமைகள் இதை விட பல நூறு மடங்கு அதிகமானவை, தீவிரமானவை என்பது தெரிகிறது. இலங்கை பேரினவாத அரசின் கொடூரமான நடவடிக்கைகளைப் பற்றிய முக்கியமான ஆவணம் இந்த படம்.
அந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தினமலர் பத்திரிகையின் இணைய பதிப்பில் ‘அது சேனல் four இல்லை சேனல் bore’ என்று தலைப்பிட்டு, ‘எதுவும் சொல்லும்படியாக இல்லை, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டு கிடப்பதைத் தவிர எதுவும் புதிதாக காண்பிக்கவில்லை, பிரபாகரன் இறந்த விதத்தைப் பற்றி புதிதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை’ என்று படத்தில் த்ரில்லிங்காக எதுவுமில்லை என்பதாக ஒரு வக்கிரமான கட்டுரை எழுதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு படங்களில் வன்முறை காட்சிகளை பார்த்து கை தட்டி ரசிக்கும் ‘தினமலர்’ போன்றவர்கள் போரில் நிகழும் மக்களின் துயரங்களையும் அழிவுகளையும் புரிந்து கொள்ள முடியாதுதான்.
21ம் தேதி ஐநா மனித உரிமை கமிஷனில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம் ‘இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை இலங்கை உள்நாட்டிலேயே விசாரிக்க வேண்டும்’ என்று இலங்கை அரசையே அதன் தவறுகளுக்கு நீதிபதியாக செயல்படும்படி மட்டுமே வற்புறுத்துகிறது (http://www.youtube.com/watch?v=rmgh0RKr6w4)
இந்த பின்னணியில் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ நிகழ்ச்சியை பார்த்து புரிந்து கொள்ள அதில் சொல்லப்படும் விபரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது. இதில் முழு நிகழ்ச்சியின் தமிழாக்கம் – வருணணை, நேர்காணல், விளக்கம், அனைத்தும் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியை படித்து உடன் வீடியோவைப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்பதால் உங்கள் நட்பு வட்டத்தில் இந்தக் கட்டுரையினை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.
ஜான் ஸ்னோ மறுபடியும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான முடிவை ஆய்வு செய்கிறார். மனதை உலுக்கும் விவரிப்புகளுடனும் பொது மக்கள் மீது குண்டு வீசப்படுவது, படுகொலைகள் நிகழ்த்தப்படுவது மற்றும் அட்டூழியங்கள் பற்றிய காட்சிகளுடனும் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ துவங்குகிறது.
இது வரை நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளிலேயே அதிகம் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் இடம் பெற்ற ஆவணப்படம் ஒன்றை சென்ற ஆண்டு சேனல் 4 ஒளிபரப்பியது. அவை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனப்படும் போராளி படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டமான 2009ம் ஆண்டில் படம் பிடிக்கப்பட்டவை.
அந்த காலகட்டத்தில் அரசு படைகள் 40,000க்கும் அதிகமான பொதுமக்களை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் சொல்கின்றன. மற்றவர்கள் இந்த எண்ணிக்கை அதை விட பல மடங்கு அதிகம் என்று சொல்கின்றனர். எங்களது ஆவணப்படம் இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களைப் பற்றி ஆதாரங்களை வழங்கியது. ஆனால் அதன் மனதை பெரிதும் உலுக்கும் கண்டுபிடிப்புகள் இலங்கை அரசு படைகள் நிகழ்த்திய வரிசையான போர்க்குற்றங்களே.
பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசியது அதில் காட்டப்பட்டது. பெண் போராளிகள் மீதான பாலியல் ரீதியாக தாக்குதலுக்கான ஆதாரங்களையும் அது வழங்கியது. கட்டப்பட்ட கைதிகள் திட்டமிட்டபடி கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தையும் அது வழங்கியிருந்தது. அந்த ஆவணப்படம் ஜெனீவா முதல் நியூயார்க் வரை உலகத் தலைவர்களுக்கும் அயலுறவுத் துறை அலுவலர்களுக்கும் காட்டப்பட்டது. உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து ஒளிபரப்பப்பட்டது.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன்:
“ஒரு பெரும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்ச்சி. கவலை தரக்கூடிய நிகழ்வுகளைப் குறிப்பிட்டது, என்ன நடந்தது என்பதைப் பற்றிய முழு விபரங்களையும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”
இது ஆஸ்திரேலிய செனட்டிலும் பேசப்பட்டது
“சேனல் 4ல் மிகவும் தெளிவாகவும் மனதை உலுக்கும் வகையிலும் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய கடும் குற்றச்சாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன”
ஆச்சரியப்படும்படியாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் மனசாட்சியை உலுக்கி ஒரு அறிக்கையை வெளியிட வைத்தது. “எனது 28 வயது மகன் என்னை அழைத்தான். தொலைபேசியில் அழுது கொண்டே, ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு தன்னை ஒரு சிங்களன் அல்லது இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கே வெட்கப்படுவதாக சொன்னான்”
எங்களது ஆவணப்படம் போர்க்குற்றங்களுக்கான குறிப்பான ஆதாரங்களையும் சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட மக்களின் கொடும் துயரங்களையும் காண்பித்தது. இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே இப்போது விடை சொல்லப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? இதுவரை, அது நடக்கவில்லை. எனவே, அதன் தொடர்ச்சியான இந்த ஆவணப்படத்தில் நாங்கள் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை தருவதோடு, அவற்றுக்கு யார் பொறுப்பானவர்கள் என்பதையும் ஆய்வு செய்கிறோம். இலங்கை அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்கள்தான் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு.
விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அமைக்கப் போராடிய கொடூரமான ஆனால் ஆற்றல் மிகுந்த ராணுவமாக இருந்தனர். கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தை போராளிகள், இந்த அரசு அதிகாரியை கொல்ல நடந்த முயற்சியைப் போல தற்கொலை வெடிகுண்டுகளை கூடப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருந்தனர்.
எங்களது முதல் ஆவணப்படத்தில் போரின் அரசுப் படைகள் புலிகளையும் லட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களையும் வடகிழக்கின் மேலும் மேலும் சிறிய பகுதிக்குள், இலங்கையின் கொலைக்களத்துக்குள், எப்படி விரட்டிச் சென்றனர் என்பதை பதிவு செய்தோம்.
டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)
“அரசாங்கத்துக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. அவர்கள் 26 ஆண்டு காலமாக கொடூரமான ஒரு போரை நடத்தி வந்தார்கள். எவ்வளவு காலம் பிடித்தாலும், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத சக்தியாக மீண்டும் தலையெடுக்க முடியாதபடி அழித்தொழிக்க முடிவு செய்திருந்தார்கள்”
சர் ஜான் ஹோம்ஸ் – மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைமை (2007-2010)
“பன்னாட்டு சமூகம், ஊடகங்கள், அல்லது மனிதஉரிமை பிரச்சனைகள் என்று யாரும் அதை செய்வதிலிருந்து தங்களை தடுப்பதை அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அப்படித்தான் அது நடந்து முடிந்தது.”
எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கைகளை முன் நின்று நடத்தியவர்கள் இன்றும் இலங்கையில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும்தான் போரை வழிநடத்தியவர்கள், போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து வருபவர்கள்.
கோத்தபய ராஜபக்சே
“வெளிநாட்டினர் தமது மதிப்பீடுகளை அல்லது தீர்ப்புகளை இலங்கையின் மீது சுமத்த முடியாது”
மாறாக ஜனாதிபதியின் உத்தரவுப்படி தங்களது சொந்த விசாரணை நடத்துவதாக வலியுறுத்தினர். அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது LLRC என்று அழைக்கப்பட்டது. எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள்.
சென்ற ஆண்டு இறுதியில் LLRCயின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டது. இதுதான் அது.
பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததை அது ஒப்புக் கொண்டது. இதுவரை அரசாங்கம் இந்த உண்மையை மறுத்து வந்தது. கைது செய்யப்பட்டு இப்போது காணாமல் போய் விட்ட பெரும் எண்ணிக்கையிலான தமிழர் போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி தனது கவலையை அது வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அது எதை சொல்லாமல் விட்டது என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் . அரசு படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான பெருவாரியான ஆதாரங்களை அது முறையாக பரிசீலிக்கவில்லை. பொதுமக்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டார்கள் என்பதை அது குறிப்பாக மறுக்கிறது. விளைவாக, போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டத் தவறியது.
இந்த ஆவணப்படத்தில் நாம் நான்கு குறிப்பான குற்றப்பதிவுகளில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு குற்றப்பதிவிலும் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை அளிப்பதோடு அந்த குற்றங்களுக்கான இறுதி பொறுப்பு இலங்கை ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இருந்தது என்றும் காட்டுகிறோம்.
நமது முதல் குற்றப்பதிவு, போர்ப்பகுதிக்குள் கடைசி சாலை-வழி-உணவு-போக்குவரத்து-குழுவின் ஐநா ஊழியர்கள் சண்டை பகுதியில் மாட்டிக் கொண்ட ஜனவரி 23, 2009-ல் தொடங்குகிறது. அரசுப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே தீவிரமடையும் போரிலிருந்து தப்பிப் பிழைக்க லட்சக்கணக்கான பொதுமக்கள் போரின் முதல் ‘பாதுகாப்பு பகுதி’யாக இலங்கை அரசு அறிவித்த இடங்களுக்கு ஓடினார்கள்
இங்கு நீல டி-சட்டை அணிந்திருக்கும் பீட்டர் மெக்காய் என்ற ஆஸ்திரேலியரையும் சேர்த்து இரண்டு பன்னாட்டு ஊழியர்களால் வழிநடத்தப்பட்ட ஐநா அணியினர் போர்நிறுத்தப் பகுதியில் உடையார்கட்டு என்ற பகுதியில் ஒரு தற்காலிக மருத்துவமனை அருகில் முகாம் இட்டார்கள். அருகில் வசிக்கும் பொதுமக்களின் உதவியுடன் பதுங்குகுழிகள் தோண்டி ஐநா பணிகளுக்கான மையத்தை உருவாக்கினார்கள். தகுதர நெறிமுறைகளின்படி மெக்காய் ஐநா மையத்தின் சரியான ஜிபிஎஸ் விபரங்களை குறித்துக் கொண்டார். அவை ஐக்கிய நாடுகள் சபைய இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் அந்த மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது.
அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. பல குண்டுகள் ஐநா வினியோக மையத்தின் மீது அல்லது அருகில் விழுந்தன. அதனால் ஏற்பட்ட அழிவுகளை ஐநா ஊழியர்களே படம் எடுத்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களிடையே பதுங்குகுழிகள் தோண்டுவதற்கு உதவி செய்த அப்பாவி பொதுமக்களும் இருந்தார்கள்.
நாம் இந்த புகைப்படங்களை ஒரு தடயவியல் வல்லுனரிடம் காட்டினோம்.
பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் வல்லுனர்
“இந்த புகைப்படங்கள் பெருமளவிலான காயங்களை காண்பிக்கின்றன. முகத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டு விட்ட ஒரு மனிதர், இன்னொரு மனிதரின் தலை துண்டிக்கப்பட்டு துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன, அதன் பிறகு ஒரு பெண்ணும் குழந்தையும். இது போன்ற காயங்கள் உலோகத் துண்டுகளால் ஏற்பட்டவை. குண்டு வெடிப்புகள், பறக்கும் உலோகத் துண்டுகள், மற்றும் சிதைவுகளைப் பற்றி பேசுகிறோம்”
“இந்த தடயங்கள் குண்டு வீச்சுடன் பொருந்துகின்றனவா?”
“ஆமாம். இவை குண்டு வீச்சுடன் ஒத்துப் போகின்றன. இவை குண்டு வீச்சால் விளைந்தவை என்பதை மறுக்க எந்த தடயமும் இல்லை”
ஆனால், குண்டு வீச்சு எங்கிருந்து வந்தது என்பது முக்கியமான கேள்வி. அரசு செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானயகாரா அரசின் பொறுப்பை மறுத்தார். விடுதலை புலிகள் சில சமயம் பொது மக்களை குறி வைத்தார்கள் என்றார்.
ஒரு ரகசிய ஐநா அறிக்கை களத்தில் இருக்கும் அதன் ஊழியர்களுக்கு குண்டு வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று பதிவு செய்கிறது. “குண்டு வீச்சு இலங்கை அரசு படைகளிடமிருந்து வருகின்றன என்பதற்கான சாத்தியம் 100% என்று கருதப்படுகிறது”
இதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆதாரம் இருக்கிறது. உடையார் கட்டு மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, போர் நிறுத்தப் பகுதியிலிருந்த ஐநா ஊழியர்கள் கொழும்பில் இருக்கும் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் ஐநா அலுவலர்களுக்கும் அவசர தகவல்களை அனுப்பி குண்டு வீச்சை நிறுத்தும்படி வேண்டினர். அந்த கோரிக்கைகள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு விட்டதாக ஐநா ஊழியர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த தொலைபேசி உரையாடல்களுக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு குண்டு வீச்சு ஐநா பதுங்குகுழிகளை விட்டு சிறிது தூரம் விலகியது. ஆனால் போர் நிறுத்தப் பகுதியில் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு பீட்டர் மெக்காய் பதிவு செய்த வாக்குமூலத்தில் குண்டு வீச்சின் இலக்கு எப்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார்
“இப்போது எங்களுக்கு 100 மீட்டர் தொலைவில் குண்டுகள் விழுந்தன. அவர்கள் விரும்பினால் குண்டு வீச்சை கட்டுப்படுத்த முடியும் என்று இது காட்டியது”
இந்த நிகழ்வு முக்கியமானது. குறைந்தபட்சம் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தளபதியும் போர் நிறுத்தப் பகுதியின் மீது குண்டு வீசப்படுவதைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்று இது சுட்டிக் காட்டுகிறது. ஐநா பதுங்கு குழிகளிலிருந்து விலகி தாக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு பகுதியில் குண்டு வீச்சுக்கு முடிவே இல்லாமல் இருந்தது. பொதுமக்களை கொல்லும்படியான தாக்குதல்கள் குறி வைத்து நடத்தப்பட்டவை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்
“இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்று நான் நினைக்கிறேன். இலங்கை இராணுவத்தின் வெகு உயர் மட்டங்களில் இந்த தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. இராணுவம் அவர்களது உத்தரவுகளின் படி தாக்குதல்களை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.”
“இது வரை நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவும் சரத் பொன்சேகாவும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”
“அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நிகழ்வு சரிவர பரிசீலிக்கப்பட்டால், ஊகங்கள் கூடுதல் தடயங்களால் உறுதி செய்யப்பட்டால், குற்றவியல் வழக்குக்கான சாத்தியம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்”
பொதுமக்கள் யாரும் கொல்லப்படக் கூடாது என்பதுதான் தனது கொள்கை என்று இலங்கை அரசு போர்க்காலம் முழுவதிலும் வலியுறுத்தி வந்தது. ஆனால் பல வாரங்களாக தொடர்ந்த அரசு குண்டு வீச்சு தமிழ் மக்களை பாதுகாப்பு பகுதிகளிலிருந்து தப்பி ஓட வைத்தது. அதன் பிறகு பிப்ரவரி 12 அன்று அரசு வடக்கில் இருக்கும் நீண்ட மணல் திட்டை புதிய பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது. சுமார் 3 லட்சம் பொதுமக்கள் இங்கு முகாமிட்டார்கள். இந்த கடற்கரைப் பகுதியில் வாழ்க்கை கொடூரமாக இருந்தது. குண்டு வீச்சு இடைவிடாமல் நடந்தது. இன்னும் ஒன்று நடந்தது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நமது இரண்டாவது குற்றப்பதிவில், இன்னொரு முக்கியமான தொடர்ச்சியான இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய ஆதாரங்களை பரிசீலிக்கிறோம். இலட்சக்கணக்கான சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் வேண்டுமென்றே மறுத்த குற்றம்.
(பெண் தமிழில் நிலைமையை விளக்குகிறார்)
உணவுப் பற்றாக்குறையின் விளைவுகள் மோசமாக மோசமாக இன்னொரு பற்றாக்குறை தீவிரமானது. தற்காலிக மருத்துவமனைகளில் மருந்துகள் பரிதாபமான அளவுக்கு குறைவாக இருந்தன.
(காயமடைந்த ஆண் நிலைமையை விளக்குகிறார்)
பாதுகாப்பு பகுதியில் மாட்டிக் கொண்ட அரசு நியமித்த மருத்துவர்கள் கூட நிலைமையைப் பற்றி புகார் செய்ய ஆரம்பித்தனர். கூடுதல் மருந்துகள் அனுப்பும்படியான அவர்களின் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக சொன்னார்கள்.
“இவர்கள் எல்லோரும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) நோயாளிகள் – அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள். எங்களிடம் ஆன்டிபயாடிக்குகளும் தேவையான இரத்தமும் இல்லவே இல்லை. பல முறை தகவல் தெரிவித்தும் அரசாங்கம் மருந்துகள் எதையும் இங்கு அனுப்ப விரும்பவில்லை.”
ஆனால், போர்ப்பகுதிக்கு போதுமான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது ஒரு சட்டப்படியான பொறுப்பாகும். பொருட்கள் அனுப்புவதை மட்டுப்படுத்தியதை அரசு எப்படி நியாயப்படுத்தியது? பாதுகாப்பு பகுதிகளில் உணவும் மருத்துவ உதவியும் தேவைப்படும் அகதிகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொல்வதன் மூலம் அதை செய்தார்கள் என்று புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையை சுமார் 60,000 ஆக அரசாங்கம் மதிப்பிட்டது என்று ஏப்ரல் 2009-ல் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிள் தெரிவிக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்ட பெருவாரியான தகவல் பரிமாற்றங்களில் ஒன்றாக அந்த கேபிள் வெளியாகியிருக்கிறது. உண்மையான எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தன.
இலங்கை அரசாங்கத்திடமும் அதன் உளவு பார்க்கும் மிதவைகளும் செயற்கை கோள்களும் இருப்பதால் அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும். அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது இந்த குறைந்த மதிப்பீட்டின் விளைவுகள் படு பயங்கரமாக இருந்தன.
டேவிட் மில்லிபண்ட்
“60,000 பேருக்கு ஒரு நாள் உணவளிக்க 30 டன் உணவுப் பொருட்கள் தேவை. ஏப்ரல் மாதத்தில் இரண்டு மூன்று லட்சத்துக்கு குறையாத மக்கள் அந்த பகுதியில் இருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. ஆனால், ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை 60 டன் மட்டுமே அனுப்பப்பட்டது. எனவே, இந்த நான்கு வாரங்களிலும் இரண்டு நாட்களுக்கு 60,000 பேருக்கு போதுமான உணவுதான் கொண்டு வரப்பட்டது. ஒரு மாதத்துக்கு 3 லட்சம் பேருக்கு உணவளிக்கும் அளவு அங்கு வழங்கப்படவில்லை. அங்கு நிலவிய மனிதாபிமான அவசர நிலையின் தீவிரத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கான பொறுப்பு கொழும்புவில் இருக்கும் அரசாங்கத்துக்கு நேரடியாக போகிறது”
ஒரு சில பொதுமக்கள் பாதுகாப்பு பகுதியிலிருந்து தப்பிப் போக முடிந்தாலும் இலங்கை அரசு மாட்டிக் கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைவாகவே காட்டி வந்தது. ஐநா கணக்கீடுகளின் படி ஏப்ரல் இறுதியில் 1,25,000க்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜனாதிபதி ராஜபக்சே ஏப்ரல் 28 அன்று சிஎன்என்னுக்கு கொடுத்த மதிப்பீடு
“நாங்கள் பொருட்களை அனுப்புகிறோம். அதனால்தான் இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து மக்களை எங்கள் பக்கம் கொண்டு வர விரும்புகிறோம். ஏனென்றால் அங்கு 5000 பேர்தான் இருப்பார்கள், வேண்டுமென்றால் 10,000 என்று சொல்லப்படுவதை கூட வைத்துக் கொள்ளலாம்”. இது மிகப்பெரிய அளவிலான குறைமதிப்பீடு. ஜனாதிபதியே போதுமான மனிதாபிமான பொருட்கள் மறுப்பதை நியாயப்படுத்தும் மோசடியான கணக்கீடுகளை அங்கீகரித்தார்.
ஆதாரங்களை பரிசீலித்த இலங்கைக்கான ஐநாவின் சிறப்பு நிபுணர் குழு என்ன நடந்தது என்பதில் தெளிவாக இருக்கிறது.
“சண்டை நடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் வேண்டுமென்றே உணவு, மருந்து பொருட்கள், குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான தேவைகள் போன்ற மனித உதவிகளை இல்லாமல் செய்து அவர்களது துன்பத்தை அதிகரித்தது. இந்த நோக்கத்துடன் சண்டை பகுதியில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டது”
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை
“பன்னாட்டு சட்டம் பழங்கால சித்திரவதை நடவடிக்கைகளை தடை செய்கிறது. பொதுமக்களை பட்டினி, பஞ்சம் அல்லது பெருநோய்க்கு உள்ளாக்குவதை இராணுவ வெற்றிக்கான வழிமுறையாக பயன்படுத்த கூடாது”
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்
“அலுவலகங்களில் உட்கார்ந்து மின்னஞ்சல் அனுப்பியும் உத்தரவு பிறப்பித்துக் கொண்டும் இருப்பவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வருவது பன்னாட்டு சட்டத்தின், பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மீதான தாக்குதல், உயிர் வாழ்வதற்கான பொருட்களை பொதுமக்களுக்கு மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தால் போர்க்குற்றங்களை நிகழ்வதில் பெருமளவு பங்கேற்றதாக கருதப்படும்.”
இறுதி வாரங்களில் போர் நுழைந்தபோது, இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் போர்க்குற்றங்கள் நிகழ்த்துவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு நிறைய இருந்தது என்று நிரூபிக்கின்றன.
ஏப்ரல் மத்தியில் அரசு படைகளின் குண்டு வீச்சும் உணவு பற்றாக்குறையும் பாதுகாப்பு பகுதி 2 – புது மாத்தளத்தில் வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கியிருந்தது. அது மிகவும் அது இன்னும் மோசமாக போகிறது.
ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 1 மணிக்கு இலங்கை இராணுவத்தின் தரைப் படைகள் கனத்த ரக ஆயுதங்களை பயன்படுத்தி புது மாத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். கொடூரமான காட்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே ஒரு தற்காலிக மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். நாம் பரிசீலிக்கும் மூன்றாவது குற்றப் பதிவின் நிகழ்வுகள் அதிலிருந்து தொடங்குகின்றன.
அது ஒரு பிணைக்கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சொன்னது. உண்மையில் அது ஆயிரக்கணக்கான பொதுமக்களை அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கூடும்படி அரசாங்கம் சொல்லியிருந்த பாதுகாப்பு பகுதியின் மீது நடத்தப்பட்ட முழு அளவிலான இராணுவத் தாக்குதலாக அமைந்தது. தெரிந்தே பொதுமக்களை குறிவைப்பது ஒரு போர்க்குற்றம். அது நடந்தது மட்டுமின்றி, இராணுவத் தலைமையில் உயர் மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாம் பரிசீலிக்கிறோம்.
தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, எடுத்துச் செல்லும் நிலையில் இருந்த காயம்பட்டவர்கள் டிரக்குகளிலும் டிராக்டர்களிலும் ஏற்றப்பட்டு பாதுகாப்பு பகுதியில் இன்னும் உள்ளே இருந்த இன்னொரு தற்காலிக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். காயங்களினாலும், கட்டுப்படுத்தாத இரத்த இழப்பினாலும் பலர் வழியிலேயே உயிரிழந்தார்கள். பீதிக்கும் குழப்பத்துக்கும் நடுவே என்ன நடந்தது என்று மெதுவாக புலனாகியது.
இலங்கை அரசு படைகள் பாதுகாப்பு பகுதியின் நடுவாக ஒரு கோடு கிழித்து மேற்கு பகுதியில் இருந்த நிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாதுகாப்பு பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டிருக்க, விடுதலை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்கள் அரசு படைகளிடமிருந்து தப்பி எஞ்சியிருந்த பாதுகாப்பு பகுதிக்குள் ஓடினார்கள். பீரங்கி குண்டு வீச்சும், வான் வழி தாக்குதலும் நாள் முழுவதும் தொடர்ந்தது. அதற்கு பிறகு முன்னறிவிப்பின்றி சாவு வந்தது. இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு கிழக்கே சுமார் ஒரு லட்சம் மக்கள் அதுவரை பாதுகாப்பு பகுதியாக இருந்த இடத்தை விட்டு தப்பிக்க போராடினார்கள். முடிந்தவர்கள் கடல் நீரில் இறங்கி நடந்தார்கள். அவர்களில் பலர் காயமடைந்தவர்கள், ஊட்டச் சத்து குன்றியவர்கள்.
தனது காயமடைந்த குழந்தைக்கு உதவி கேட்டு ஒரு தந்தை பரிதாபமாக கதறுகிறார். அவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டு சிறை முகாம்களுக்கு கொண்டு போக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டனர். அந்த தந்தை இன்னமும் தனது குழந்தையை கையில் ஏந்தியிருக்கிறார், இப்போது பிணமாக.
ஏப்ரல் 22ம் தேதி அதிகார பூர்வ இராணுவ செய்தி தொடர்பாளர் கனரக ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று போர்க் காலம் முழுவதும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தியது போலவே வலியுறுத்தினார். “நான் ஏற்கனவே சொன்னது போல இந்த மீட்பு நடவடிக்கையில் கனரக ஆயுதங்களையோ டாங்கிகளையோ பயன்படுத்தவேயில்லை.”
இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அரசு சார்பு ஊடகங்கள் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று சொன்னார்கள்.
“வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையினர் புதுமாங்குளத்திலிருந்து அம்பலம் புக்கணை வரை விடுதலை புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொதுமக்களையும் விடுவித்து விட்டதாக நம்பப்படுகிறது. கொடூர விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் பிணையாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை தாக்குவதை படைகள் தவிர்த்துக் கொண்டிருக்கின்றன. ”
டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)
“விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக வைத்திருந்தால், அப்படி சில இடங்களில் அதை செய்தார்கள் என்பது உண்மைதான், அதுவும் ஒரு போர்க்குற்றம்தான். ஆனால், அந்த இடங்கள் மீதும் மக்கள் மீதும் குண்டு வீசி தாக்குவதை அது நியாயப்படுத்தாது. பயங்கரவாத அமைப்புகளை விட ஜனநாயக அரசுகளுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது, அந்த பொறுப்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.”
இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளம் அதை கச்சிதமான மீட்பு நடவடிக்கையாக சித்தரித்தது. ஐநா மற்றும் பிற மதிப்பீடுகள் 1500 வரையிலான உயிர்கள் பறிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றன.
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை
“இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் நடந்தன என்று உறுதியாக சுட்டிக்காட்டுகின்றன. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்திருக்கலாம். ஒரு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”
புதுமாங்களத்துக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்? மேற்கிலிருந்து தாக்குதல் பிரிகேடியர் பிரசன்னா டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 55வது படைப்பிரிவினால் நடத்தப்பட்டது. நேரடி தாக்குதல் சுரேந்திர டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 58வது பிரிவினால் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் அவர் கொடுத்த பேட்டி
“நாங்கள் பெரும் வெற்றி அடைந்திருக்கிறோம். இது பிணைக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளிலேயே மிக வெற்றிகரமான ஒன்று என்று சொல்லலாம்”
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இராணுவத் தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக் கொண்டது. அந்த சாவுகள் எதிரெதிர் குண்டு வீச்சினால் ஏற்பட்டவை என்றும் இராணுவத்தின் குண்டு வீச்சுகள் அளவுடனும் நியாயப்படுத்தும்படியாகவும் இருந்தன என்றது. ஆனால் ஆதாரங்களின்படி இது ஒரு சாத்தியமான போர்க்குற்றம் என்று சார்பில்லாத பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்
“இவை ஊகங்கள்தான், தாக்குதல்கள் நடந்த போது அவை தேவைக்கு அதிகமாக இருந்திருக்கலாம், பொதுமக்கள் அல்லது மருத்துவமனை போன்ற பொது இடங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். உண்மைகளை கண்டறியும் வழி கடுமையான குறுக்கு விசாரணையுடன் கூடிய முழுமையான விசாரணையே ஆகும். பொருத்தமான விளக்கம் தரும்படி தலைவர்கள் கேட்கப்பட வேண்டும்
முறையான எந்த ஒரு விசாரணையும் சந்திக்க வேண்டிய முக்கிய கேள்வி, யார் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார்கள்? பொறுப்பு எவ்வளவு உயரம் வரை போகிறது?
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை
“ஜனாதிபதி ராஜபக்சே நாட்டின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி. அவர்தான் தலைமை தளபதி, அப்படித்தான் அவர் தன்னை சித்தரித்துக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும், தான் இராணுவ போர்த் திட்டங்களில் பெருமளவு ஈடுபட்டிருந்தாக அறிவித்துக் கொண்டார். குறிப்பான நிகழ்வுகளைப் பற்றி இவர்கள் இரண்டு பேரையும் கேள்வி கேட்பதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. கட்டளை சங்கிலி நடைமுறையில் என்னவாக இருந்தது என்பதை நிறுவுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக இறுதி வாரங்களில் நடந்த இரணகளமான, எதிர்பார்த்தபடியே இரணகளமான நிகழ்வுகளுக்கு இது மிக மிக அவசியமானது”
அடுத்த சில வாரங்களில், கனரக குண்டு வீச்சும் இடைவிடா தாக்குதலும் பாதுகாப்பு பகுதியில் மேலும் மேலும் களேபரத்தை உருவாக்கி வந்த போது அரசாங்கத்தின் மேல் மட்டத்திலிருந்து வந்த மறுப்புகள் மேலும் மேலும் திட்டவட்டமாக இருந்தன.
மகிந்த ராஜபக்சே
“நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, நாங்கள் இல்லை என்று சொன்னால் இல்லை என்றுதான் பொருள்.”
செயற்கை கோள் படங்களையும் ஐநா நிபுணர்கள் குழுவின் வரைபடங்களையும் இணைத்த ஐநாவின் ரகசிய அலசல் அறிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அவர்கள் அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தத்தான் செய்தார்கள் என்றும் அவற்றை பாதுகாப்பு பகுதிகளின் மீது குறி வைத்தார்கள் என்றும் அவை சுட்டிக் காட்டுகின்றன.
“கனரக ஹௌவிட்சர் ரக பீரங்கிகளின் சுடும் முனையை மீண்டும் மீண்டும் திருப்பி முதலில் பாதுகாப்பு பகுதி 2ன் மீதும் பின்னர் பாதுகாப்பு பகுதி 3ன் மீதும் இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது காலவரிசைப் படியான பீரங்கி படைகளின் நகர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் தெரிய வந்தது. பொருத்தமான இராணுவ இலக்குகள் இல்லாத பாதுகாப்பு பகுதி 2 மற்றும் பாதுகாப்பு பகுதி 3க்குள் இருக்கும் இடங்கள் மட்டும் இருக்கும் போதும் இலங்கை இராணுவம் பீரங்கி அணிகளை நிறுத்தியிருந்தது”
போரின் கடைசி அரை மாதத்தில், மே 8, 2009 இரவில் பாதுகாப்பு பகுதி ஒரு மைல் அகலமுள்ள சிறுபகுதியாக குறைக்கப்பட்டது. இதுதான் போரின் மூன்றாவதும் இறுதியானதுமான பாதுகாப்பு பகுதியாகும். மே 17 அன்று அமெரிக்கர்கள் ஒரு போர் நிறுத்தத்தை பரிந்துரைத்தார்கள் என்று புதிதாக வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் கேபிள்கள் பதிவு செய்கின்றன.
“நிலவர அறிக்கை 74: வெளியுறவு தூதுவர் கோத்தபய ராஜபக்சேவிடம் பேசி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை சண்டை பகுதிக்குள் அனுமதித்து சரணடைதலை ஏற்பாடு செய்ய அனுமதிக்கும்படி வேண்டினார். ‘நாங்கள் அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி விட்டோம்’ என்பதுதான் ராஜபக்சேவின் பதில்”
அதே நேரம் மீண்டும் குண்டு வீசித் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் இறந்தவர்களாலும் இறந்து கொண்டிருப்பவர்களாலும் நிரம்பி வழிந்தன. ஆனால் வெளியிலிருந்து உதவி எதுவும் வரவில்லை. அமெரிக்க கேபிள்கள் தெரிவிப்பது போல ஜனாதிபதியின் அலுவலகம் செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி மறுத்துக் கொண்டே இருந்தது.
“நிலவர அறிக்கை 74: காயமடைந்தவர்களை மீட்டு வருவதற்கு பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்துக்கு தூதுவர் மீண்டும் அனுமதி வேண்டினார்”
அந்த கோரிக்கை “உறுதியாக மறுக்கப்பட்டது”
செஞ்சிலுவை சங்கம் மக்களை மீட்க தவறியதால் அரசு படைகள் தாமே அதை செய்ய வேண்டி வந்தது என்று அரசாங்கம் சொன்னது. மீட்பு பணி நடைமுறையில் எப்படி நடந்தது என்று இவர் சொல்கிறார். அரசு படைகள் வரும் போது அவர் பலத்த காயங்களுடன் பதுங்குகுழியில் ஒழிந்து கொண்டிருந்தார்.
(முகம் மறைக்கப்பட்ட மனிதர் பேசுகிறார் -தமிழில்)
படைகள் முன்னேற முன்னேற இன்னும் ஒரு கொலை செய்யும் முறை உருவானது. நிர்வாணப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுவதே எங்களது முதல் ஆவணப்படத்தின் மிகவும் சின்னமாக விளங்கிய காட்சிகளாக இருந்தன. பெண் போராளிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை நடந்திருக்கலாம் என்பதை சுட்டும் காட்சிகளையும் ஒளிபரப்பினோம். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி வழங்குனர் இசைப்பிரியாவும் இதில் அடங்குவார்.
பெரும்பான்மை வீடியோக்கள் இலங்கை இராணுவத்தின் படைவீரர்களால் வெற்றியின் நினைவுச் சின்னங்களாக மொபைல் போன் கேமராக்களில் பிடிக்கப்பட்டவை. இந்த வீடியோக்கள் சார்பில்லாத வீடியோ நிபுணர்களாலும், தடயவியல் நிபுணராலும் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் அமர்த்தப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவினாலும் நம்பகமானவை என்று உறுதி செய்யப்பட்டன. அவை போலியானவை என்று இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்எல்ஆர்சி இந்த வீடியோக்களையும் சட்ட விரோத கொலைகளையும் பரிசீலித்த போது ஒரு முடிவை எட்டுவதை தவிர்த்து விட்டது. பதிலாக இன்னொரு விசாரணை நடத்த பரிந்துரை சொன்னது.
சென்ற மாதம் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்ட இலங்கை இராணுவம் எல்எல்ஆர்சி எழுப்பிய விஷயங்களைப் பற்றியும் எமது சென்ற ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சசாட்டுகளையும் விசாரிக்க முன் வந்தது. ஆனால் இந்த விசாரணை சுதந்திரமான இன்னொரு அமைப்பால் இல்லாமல் இராணுவத்தாலேயே நடத்தப்படும். யாருக்கெல்லாம் இந்த கொலைகளைப் பற்றி தெரிந்திருந்தது என்பதும் யார் இதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள் என்பதும் முக்கியமான கேள்விகள். ஏனெனில் நமது 4வது குற்றப் பதிவு கொலைகளுக்கான புதிய ஆதாரங்களை கொண்டுள்ளது. அதற்கான பொறுப்பு இலங்கை அதிகார அமைப்பின் மிக உயர் நிலை வரை போகின்றன என்று சுட்டிக் காட்டுகிறது.
நாங்கள் இப்போது பெற்றுள்ள இந்த மனதை உறைய வைக்கும் புதிய வீடியோ பதிவில் குறைந்தது ஒரு கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன். இந்த பதிவு முன்னணி சார்பற்ற நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்
“இது ஐந்து ஆண்களும் ஒரு சிறு பையனும் உள்ள ஒரு கொலைக் காட்சி. 5 ஆண்களின் கைகள் பின்புறம் இருக்கின்றன. அவர்கள் இப்போதுதான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் கடைசி மனிதனைத் தவிர மற்றவர்கள் கட்டப்பட்டதற்கான அடையாளம் தென்படவில்லை. நாம் பார்த்த பிற பதிவுகளைப் போலவே இதுவும் இருக்கின்றது. அவற்றிலும் கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, தரையில் முட்டியிட வைத்து சுடப்பட்டார்கள்”
பாலசந்திரன் பிரபாகரன் என்ற 12 வயது பையனின் கதைதான் இந்த வெறி பிடித்த கொலைகளின் இயல்பை தெளிவாக்குகின்றன. ஒரு மூத்த இலங்கை அதிகாரி சத்திய பிரமாணத்தின் கூழ் கீழ் கொடுத்த வாக்குமூலத்தின் படி அவனது தந்தையின் இருப்பிடத்தைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டு அந்த பையன் கொல்லப்பட்டான்
“அவன் 5 பாதுகாவலர்களுடன் சரண்டைய அனுப்பி வைக்கப்பட்டான். சிறிது காலத்துக்குப் பிறகு அவரது மகன் மூலம் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று அறிந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தது. அதற்கு பிறகு அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று எனக்குத் தெரிய வந்தது”
அந்த 12 வயது பையன் சுடப்பட்டது கொலைதான், சண்டையில் ஏற்பட்ட காயங்களினால் அல்ல என்பதை இந்த உயர் விவர படங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது.
பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடய நோயியல் நிபுணர்
“அவன் மீது 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருக்கின்றன, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள். இதுதான் முதலில் சுடப்பட்ட காயமாக இருக்க வேண்டும். அதைச் சுற்றி வெடிமருந்து புகையும் துகள்களும் படிந்திருப்பதால் அது அழுக்காக தெரிகிறது. இதனால் சுடப்பட்ட ஆயுதத்துக்கும் பையனின் உடம்புக்கும் தூரம் 2 அல்லது 3 அடிக்குள்தான் இருந்திருக்கும் என்று தெரிகிறது. அவன் கையை நீட்டி தன்னை கொன்ற துப்பாக்கியை தொட்டிருக்க முடியும். இந்த காயம் பெற்றவுடன் அவன் பின் நோக்கி விழுந்திருக்கிறான். அதன் பிறகு இந்த இரண்டு காயங்களையும் பெற்றிருக்கலாம். அவை கீழ் பகுதியில் மழுங்கலாக இருப்பது, குண்டுகள் உடம்பில் மேல் நோக்கி சென்றன என்று காட்டுகின்றது. அவனது இடது தோளின் மேல் பகுதியில் சந்தேகத்துக்கிடமில்லாத ஒரு வெளியேறும் காயம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சுடுபவர் அவன் தரையில் விழுந்து கிடக்கும் போது அவன் காலுக்கு அருகில் நின்று கொண்டு மேல் நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஒரு கொலை, சந்தேகமில்லாத படுகொலை”
“இந்த குழந்தை சித்திரவதை செய்யப்பட்டதாக ஏதாவது அறிகுறிகள் தெரிகின்றனவா? ஏனென்றால் அவனிடமிருந்து இன்னும் பலரைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெளிவு”
“உடல் ரீதியான சித்தரவதைக்கான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. ஆனால் அவன் இருந்த நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவனுக்கு அருகில் 5 உயிரிழந்த ஆண்களை பார்க்கிறோம். அவர்கள் இவனுக்கு முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம். அவன் கண்கள் கட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் அவன் காலருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவனால் சுடப்பட்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே, இதுவே ஒரு வகையான உளவியல் சித்திரவதைதான்.”
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர் :
“இது ஒரு போர்க்குற்றம். இது ஒரு குற்றம், சாதாரண வகை குற்றம், சூழ்நிலைகளை பொருத்திப் பார்க்கும் போது குறிப்பாக ஒரு போர்க்குற்றமாகிறது அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு”. அப்படி எந்த விசாரணையும் இது வரை நடக்கவில்லை.
“நாம் இலங்கையில் பார்த்த நடவடிக்கைகளிலிருந்து இது ஒரு மூடி மறைப்பு என்று தெளிவாகிறது. இந்த நிகழ்வுகள் நடந்தன என்பதை மறுக்கும் முயற்சி”
அடுத்த நாள் பையனின் தந்தை பிரபாகரனே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தலை துணியால் மூடப்பட்ட அவரது உடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. நாங்கள் பெற்ற அதிகாரபூர்வமற்ற பதிவு ஒரு தலைக் காயத்தையும், இராணுவ மருத்துவ பணியாளர்கள் மூளையிலிருந்து மாதிரி எடுப்பதையும் காட்டுகின்றன. இன்னொரு புகைப்பட வரிசையில், முதலில் பிரபாகரனின் உடல் இராணுவ சீருடையிலும், பின்னர் நிர்வாணமாகவும், பின்னர் சேறு பூசப்பட்டும் காணப்படுகின்றது. தலைக் காயம்தான் மிகவும் முக்கியமானது.
பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்
இது உயர் வேக துப்பாக்கி சூட்டு காயம் ஒன்றின் காட்சி. முன்பக்கம் இருக்கும் வெளியேறிய பகுதியை நாம் புகைப்படத்தில் பார்க்கிறோம். புகைப்படத்தில் தெரியாத தலையின் பின்பக்கம் நுழைவு காயம் இருக்கும் என்று ஊகிக்கலாம். தலையில் ஒற்றை துப்பாக்கி குண்டு காயம் படுவது சண்டை சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தாக்கப்படுபவர் நகராமல் இருக்கும் போது குறி வைத்து சுடப்பட்டிருக்கலாம் என்று சொல்ல வேண்டும்”
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்
“சட்ட விரோதமான மரண தண்டனைகளை நடத்தும் படைகளுக்கு பொறுப்பான மூத்த இராணுவ அதிகாரி, அவை நடக்க சாத்தியமுள்ள நேரத்தில் அவற்றை நிறுத்தும்படி ஆணையிடா விட்டால், நடந்த பிறகு அவர்களை தண்டிக்காமல் இருந்தால் அவரே போர்க்குற்றங்களுக்கான வழக்கை சந்திக்க வேண்டும். ஒரு வகையில் அவர் இந்த குற்றத்தில் பங்கேற்றிருக்கிறார்”
இந்த ஆவணப்படத்திலும் முதல் படத்திலும் நாங்கள் காட்டிய ஆதாரங்கள் இன்னும் அதிகமான பொறுப்பை சுட்டிக் காட்டுகின்றன. கைகள் கட்டப்படுவது, உடைகள் நீக்கப்படுவது, தலைக்குப் பின் துப்பாக்கியால் சுடுவது, அனைத்தும் இது பிடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலி போராளிகளை திட்டமிட்ட முறையில் கொல்வது கொள்கையாக இருந்தது என்பதை சுட்டுகின்றன.
பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்
“இது மிகவும் கடுமையான குற்றம். தலைமை இதை கண்டு கொள்ளாமல் மட்டும் இருக்கவில்லை நேரடியாக வழிநடத்தி கட்டுப்படுத்தி உத்தரவிட்டு நடத்தியது என்று நிரூபிக்க முடிந்தால் கடுமை இன்னும் அதிகமாகிறது. நாங்கள் முழுக் கட்டுப்பாடு வைத்திருக்கிறோம் என்று உயர் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இந்த மாதிரிகள் தொடர்ந்து நடந்தன என்று நிரூபித்தால், கீழ் மட்டத்தில் குற்றவாளிகள் இவற்றை நடைமுறையில் நடத்தினார்கள் என்று நிரூபித்தால், உயர் மட்டத்தையும் கீழ் மட்டத்தையும் இணைப்பதில் இருக்கும் சட்ட சிரமங்கள் பெருமளவு நீக்கப்பட்டு விடுகின்றன”
பிரபாகரன் இறந்து விட, போர் நடவடிக்கைகள் மே 18, 2009-ல் முடிவுக்கு வந்தன. போர்க்களத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள் பலவற்றில் கொலை, பாலியல் வன்முறைக்கான அடையாளங்கள் தெரிந்தன.
கடற்கரையில் வெற்றிமாலை சூடிய இராணுவ வீரர்கள் போரில் பயன்படுத்தவே இல்லை என்று சாதித்த கனரக பீரங்கிகளிலிருந்து கொண்டாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
உலகத்தின் முன்பு இது ஒரு வெற்றி முழக்கம், ஒரு போரிடும் சக்தியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதை குறிக்கும் செய்கை. போர் முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் காட்டியது போல போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் எதிர்வினை பெருமளவிலான பன்னாட்டு பிரச்சாரமும் அனைத்து எதிர்ப்பு குரல்களையும் இரக்கமில்லாமல் ஒடுக்கும் முயற்சியுமாக இருந்தது.
இலங்கையின் உள் நாட்டுப் போரின் முடிவைப் பற்றிய உண்மைகள் வெளியாகும் போது உலகம் அவற்றை எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடை ரகசிய பன்னாட்டு வெளியுறவுகளுக்கான உலகில் இருக்கிறது.
வடக்கில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஏப்ரல் 29, 2009 அன்று அன்றைய பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்ட் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரொஹீதா பகலகாமாவுடன் பேச்சு நடத்த இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்தார். சூழல் இணக்கமாகவே தென்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட ஆதாரம் மிலிபேண்ட் உண்மையில் இலங்கை அரசைப் பற்றி என்ன நினைத்தார் என்று காட்டுகின்றது.
“அவர்கள் பொய்யர்கள்” என்று அவர் சொல்லியிருந்தார். அவரது சொற்கள் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனில் இருக்கும் வெளியுறவுத் துறைக்கு அனுப்பபட்ட கேபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கருத்து முறையானதாக இல்லாமல் இருந்தாலும் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுவது போல துல்லியமானதாக இருந்தது. அவர் சொல்ல முயற்சித்த பொய்க்கு ஒரு கணக்கிடப்பட்ட நோக்கம் இருந்தது.
டேவிட் மில்லிபண்ட்
“தெளிவாக, ஒரு பிரச்சார யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ராஜபக்சே அரசாங்கத்தின் அணுகுமுறை முழுக்க முழுக்க தூய்மையானது என்று வலியுறுத்த வேண்டிய அவசியம் இருந்தது. போரின் இறுதி வாரங்கள், இறுதி நாட்களை நடத்திச் செல்வதற்கு அது தேவையாக இருந்தது”
உலகத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லி, எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும் சொல்லி, வேண்டிய அவகாசத்தை ஈட்டுவதற்கு பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருந்தது. ஆதாரங்கள் சுட்டுவது போல விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டு தமிழ் பொதுமக்களை குறி வைக்கவும் அந்த அவகாசம் தேவைப்பட்டது.
ஜனாதிபதி ராஜபக்சேவை கொழும்பில் சந்திக்கும் ஜான் ஹோம்ஸ் அப்போது ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான தலைவராக இருந்தார்.
“ராஜபக்சே அரசு உண்மையில்லாத உறுதிகளை அளித்தது, பொய்களை சொன்னது, ஆனால் செய்து கொண்டிருந்ததை தொடர்ந்து செய்தது என்பதுதான் ஐநாவுக்கும் பன்னாட்டு சமூகத்துக்கும் எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு.”
சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010
“அது பெருமளவில் உண்மை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பிறகு அவற்றை காப்பாற்றவில்லை. அவர்கள் செய்ய நினைத்திருந்ததை இறுதி வரை செய்து முடித்தார்கள். அதாவது பொதுமக்கள் உட்பட எத்தனை உயிர்கள் போனாலும் சரி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது அவர்களது நோக்கமாக இருந்தது. பன்னாட்டு சமூகத்தில் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த தயாராக இருக்கவில்லை என்று அவர்கள் நம்பினார்கள், அதுதான் நடந்தது”
அச்சுறுத்தப்பட்ட பொது மக்கள் மீது அனுதாபம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மீது போர் என்ற முழக்கத்தின் ஆதிக்கத்தில் இருந்த உலகில் அவர்களுக்காக எதையும் செய்ய யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை.
“பெரும் அளவிலான தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் அரசு உட்பட பல அரசுகள், மக்கள் மீது தமது அக்கறையை காட்ட விரும்பிய போதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை அரசுக்கு மறைமுகமான பச்சை விளக்கு காட்டிக் கொண்டிருந்தன”
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை :
“விடுதலைப் புலிகள் தீர்த்துக் கொட்டப்படுவதை கண்களை மூடிக் கொண்டு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள பல பேர், பல நாடுகள் உலகெங்கிலும் இருந்தனர்”
சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010
“இதைச் சுற்றி ஒரு வகையான இராஜதந்திர நடனம் நடைபெற்றது. இதன் முடிவு இலங்கை அரசின் தவிர்க்க முடியாத இராணுவ வெற்றியாகவும், விடுதலைப் புலிகளின் தவிர்க்க முடியாத தோல்வியாகவும் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அது நடப்பதற்காக காத்திருப்பதுதான் தேவையானதாக இருந்தது. முடிந்த வரை சீக்கிரமாக முடிந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையும், குறைந்த அளவு உயிரிழப்புடன் நடந்து விட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. கொஞ்சம் கோணலான எண்ணமாக இருந்தாலும், நான் அவதானித்த நிதர்சனம் அதுதான்.”
போரில் வெற்றி பெற்று விட்ட பிறகு இலங்கை அரசு உலகின் பிற நாடுகள் இலங்கை விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எச்சரித்தது. நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நிகழ்த்திய ஒரு முக்கிய உரையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே தனது சொந்த வழியில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாக வலியுறுத்தினார்.
“வரலாறு நமக்கு ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கிறது. வெளியிலிருந்து தீர்வுகளை சுமத்துவது துயரத்தையும், கோபத்தையும் கொண்டு வந்து இறுதியாக தோல்வியில் கொண்டு விடுகின்றது. இதற்கு மாறாக எங்களுடையது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முறை ஆகும்
இருப்பினும் தனது செய்தியை கொண்டு சேர்க்க ராஜபக்சே வெளிநாட்டு உதவியை மகிழ்ச்சியாக தேடிக் கொண்டார். ரகசியமாக பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பொது உறவு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவருடனான இந்த உரையாடல் அதை வெளிப்படுத்துகிறது
“எங்கள் ஒரு அணி ஜனாதிபதி அலுவலகத்தில் வேலை செய்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ராஜபக்சேவின் ஐநா உரையை நாங்கள்தான் எழுதினோம், அது நல்ல முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.”
ஜனாதிபதி இராஜபக்சேவின் அந்த உரை சர்வதேச விமர்சனங்களை தவிர்த்து விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரும் பிரச்சார தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்தது. எங்களது முந்தைய ஆவணப்படம், இலங்கையின் கொலைக்களங்கள், உலகம் முழுவதும் காட்டப்பட்டது. இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலளிக்க தனது சொந்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. “ஒப்புக் கொள்ளப்பட்ட பொய்கள்” என்று அழைக்கப்பட்ட ஒரு மணி நேர ஆவணப்படம்
மினோலி ரத்னாயகே :
“மோசடி செய்யப்பட்ட காட்சிகள், வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்கள், உண்மையானவையாக காட்டப்படுகின்றன. வெற்றிடத்திலிருந்து எண்ணிக்கைகள் உருவாக்கப்பட்டு உண்மையாக காட்டப்படுகின்றன. தகவல்களுக்கான ஆதாரம் சொல்லப்படவில்லை, முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன, குரல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.”
போர்ப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை மனதை உருக்கும் வகையில் வெளிப்படுத்திய அரசு மருத்துவர்களின் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மையை உடைப்பது இந்த ஆவணப் படத்தின் முக்கிய முயற்சியாக இருந்தது. உயிரிழப்பு விபரங்களை மிகைப்படுத்தி சொல்லும்படி விடுதலைப் புலிகளால் மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று இலங்கை அரசாங்கத்தின் படம் குற்றம் சாட்டுகிறது. போரின் முடிவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் வெளிப்படையாக தமது வாக்குமூலங்களை திரும்ப பெற்றதாக ஒரு படத்தை காட்டுகிறார்கள்.
“அவர்கள் இப்போது பயமில்லாமல் பேச முடிகிறது. வாருங்கள் கேட்கலாம்”
“நாங்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தோம். விடுதலைப் புலிகள் எங்களிடம் பொய்களை சொன்னால் அதை நாங்கள் சொல்ல வேண்டியிருந்தது. சில சமயம் அவர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் வந்து அதை வெளியிடச் சொன்னார்கள்”
சரி, இந்த மருத்துவர்கள் எப்படி இந்த மறுப்பை வந்தடைந்தார்கள்? இந்த அமெரிக்க கேபிள் ஒரு துப்பு கொடுக்கிறது. போருக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் என்று கொண்டாடப்படாமல் இந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கொழும்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவில் தடுப்பு ஆணையில் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.
அங்கே என்ன நடந்தது என்பதற்கான ஒரு நேரடி சாட்சியை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம். அவர்கள் சொன்னதை திரும்பப் பெறாவிட்டால், இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டு அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு பல ஆண்டு சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. அரசாங்க பத்திரிகையாளர்கள் என்ன கேள்விகள் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டு அவற்றுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்றும் சொல்லித் தரப்பட்டது. செய்தியாளர் கூட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் மீண்டும் பல வாரங்கள் காவலில் வைக்கப்பட்டார்கள்.
உள்நாட்டில் விமர்சகர்களை அடக்குவதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு விமர்சகர்களின் நம்பகத்தன்மையை தாக்கும் இயக்கமும் நடத்தப்பட்டது. அரசு சார்பு இலங்கை ஊடங்களை சந்தித்த போது எங்கள் குழுவினர் நேரடியாக அனுபவித்ததை இங்கு குறிப்பிடலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் அரசு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வின் போது. ஜனாதிபதி ராஜபக்சேவின் ஊடக ஆலோசகர் உள்ளிட்ட அரசு சார்பு ஊடகவியலாளர்களை நாங்கள் எதிர் கொண்டோம்.
“தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உங்களுக்கு நிதி அளிக்கிறார்கள்”
“இது முழுமையான திரித்தல், பத்திரிகை தொழிலுக்கு அவமானம். இது நெறிமுறைக்கு மாறானது.
“நீங்கள் அந்த வீடியோக்களை உண்மை என்று மறுக்கிறீர்களா?”
“நிச்சயமாக நான் மறுக்கிறேன். நான் அனைத்தையும் மறுக்கிறேன். நீங்கள் பேசுபவர்களை நிழலில் காட்டினீர்கள், சரிதானே? நீங்கள் சொல்வது .. ”
“ஆமாம், அவர்கள் தமது உயிருக்கு பயப்பட்டதால் நிழலில் காட்டினோம்”
“நீங்க எல்லாம் நிஜம்தானா, நீங்க நிஜமானவங்களா”
அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுத்தல் மிகவும் நிதர்சனமானது. நாடு கடத்தப்பட்ட இந்த சிங்கள பத்திரிகையாளருக்கு அது நன்கு தெரிய வந்தது.
பஷானா அபயவர்தனே, இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்
“உண்மையில் நீங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க விரும்பினால் கொல்லப்படும் ஆபத்தை சந்திக்க அல்லது சிறையிடப்பட தயாராக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் இது வரை 60 க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். 2005 ஆம் ஆண்டு முதல், 26க்கும் அதிகமான ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்”
தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள். தமது வீடுகளுக்கு போகக் கூட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இராணுவம் அவர்களின் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
“இதை போருக்கு பிந்தைய நிலைமை என்று சொன்னாலும் போர் கொள்கை இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தேசிய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டும், தமிழ் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் போர்க் கொள்கை.”
ஜனாதிபதி நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று ராஜபக்சே அரசு எப்போதுமே வலியுறுத்தி வந்தது. அது அவ்வாறு செய்யவில்லை.
பொதுமக்கள் கணிசமான அளவில் இறந்தார்கள் என்பதையும் மனிதாபிமான உதவிகள் பற்றாக்குறையாக இருந்தன என்பதையும் பலர் காணாமல் போனார்கள் என்பதையும் குழு ஏற்றுக் கொண்ட போதிலும் அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று சொல்கிறது. கொலை செய்யப்படுவதை காட்டும் வீடியோ ஆதாரங்கள் மீதான முடிவை தவிர்த்ததோடு பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது போன்ற குறிப்பான நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யவில்லை. எந்த இடத்திலும் நாம் இந்த ஆவணப்படத்தில் விளக்கியுள்ளவை உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கான அதிகாரப் பொறுப்பு பற்றி அது விவாதிக்கவில்லை
கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று இலங்கை அரசு சொன்னது. அப்படி சமாதானப்படுத்தி விட்டதா?
டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)
“தனது உருவாக்கம் அல்லது அமைப்பு அல்லது முடிவுகளில் அந்தக் குழு இதை சாதித்து விட்டதாக நான் நம்பவில்லை. இது ஐ.நா. பொது செயலாளரும் நானும் இன்னும் பலரும் கேட்டதை நிறைவு செய்வதற்கு போதுமானதாக இல்லை. குற்றச்சாட்டுகளை பற்றிய சுதந்திரமான மதிப்பீடு தேவை”
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை
“போரின் இறுதிக் கட்டங்களில் என்ன நடந்தது என்று விசாரிப்பதாக இலங்கை அரசு பன்னாட்டு சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்தது. LLRC அந்த விசாரணைக்கான களமாக இருக்கும் என்றும் அதன் மூலம் இந்த கடும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாகவும் சொன்னது. இப்போது LLRCன் இறுதி அறிக்கை வெளியான பிறகு இலங்கை அரசாங்கம் அப்படி எதுவும் செய்யவில்லை என்று நமக்குத் தெரிகிறது.
இந்த அச்சம் தரும் இரத்தம் தோய்ந்த போரின் சண்டை நடவடிக்கை இறுதியாக 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த நாசமாக்கப்பட்ட நிலப்பரப்பில் எத்தனை பேர் உயிழந்தார்கள் என்று யாருக்கும் சரியாக தெரியாது. இதறகு பொறுப்பான சிலர் யார் என்று நமக்குத் தெரியும். ஜனாதிபதி ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே இருவரும் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பு பகுதியில் இருந்த புதுமாங்குளத்தின் மீது இரத்த தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர்கள் வெளியுறவு பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஜெனரல் சுரேந்திர சில்வா, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிறார். போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் சில காலத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் உடைய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான மூத்த ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இராணுவ தூதராக இருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோருக்கு வழக்கு தொடரப்படுவதிலிருந்து வெளியுறவுத் துறை சட்ட பாதுகாப்பு இருக்கிறது.
எனவே, இலங்கை அரசாங்கம் இதிலிருந்து தப்பி விட்டதா? அல்லது உலகம் இன்னமும் நீதி கேட்குமா?
டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)
“அந்த குற்றச்சாட்டுக்கள் இன்னும் அடுக்குகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இது பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகளின் மற்றும் ஐநா மனித உரிமைகள் குழுவின் பொறுப்பு. வெறும் சொற்களில் மட்டுமில்லாமல் செயலிலும் குற்றங்களுக்கான பொறுப்பு நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்”
சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை
“ரத்தக் களறியை சரிவர விசாரிக்காத ஐநாவின் தோல்வியும், இலங்கையில் நடந்த துன்பியல் நிகழ்வுகளும் ஐநாவின் நம்பகத்தன்மையை பெரிதளவு பாதிக்கும். இது போன்ற மனித துயரங்களை தவிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்ட நிறுவனம் ஐநா.”
கடந்த வாரம், லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட “துர் நோக்கமுடனான குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிப்பதாகவும்” , “சேனல் 4 ஒளிபரப்புக்கு முன்பாகவே ஒளிபரப்புக்கு ஆதாரமான வீடியோன பதிவுகளையும் பிற ஆவணங்களையும் தம்முடன் பகிர்ந்து கொள்ளாததை எண்ணி” வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்கள். “சேனல் 4ன் இலங்கை பற்றிய அறிக்கைகளில் தெரியும் தொடர்ச்சியான பகைமை உணர்வும் பக்க சார்புடனுமான கருத்துக்களை” எண்ணி வருந்துவதாகவும், நாங்கள் “மிகவும் போலியான வீடியோக்கள், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மூலம் முழுக்க முழுக்க பொய்யாக இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டுவதில்” கவனம் செலுத்துவதாகவும் சொன்னார்கள். சேனல் 4, “போருக்கு பின்னர் இப்போது நாட்டில் நடக்கும் பல நேர்மறையான முன்னேற்றங்களை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் அத்தகைய அணுகுமுறை இப்போது நடந்து கொண்டிருக்கும் முழுமையான சமரச பாதையை பாதிக்கும்” என்றும் இலங்கை தூதரகம் சொன்னது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே மற்றும் அரசு குழுவினர் ஆஸ்திரேலியாவில் கூடிய 2011 காமன்வெல்த் அரசு தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். ஷாம்பெயின் குடித்துக் கொண்டு நொறுக்குத் தீனிகளை மென்று கொண்டே உலக தலைவர்களுடனும் பிரிட்டிஷ் ராணியுடனும் உறவாடிக் கொண்டிருந்த போது, தமது மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டு விட்டதாகஅவர்கள் நினைத்திருக்க வேண்டும். அடுத்த காமன்வெல்த் அரசு தலைவர்களின் சந்திப்பு 2013-ல் இலங்கையில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்ட போது 40,000 தமிழர்களின் உயிரை வாங்கிய போரின் நினைவுகள் ஒரு தொலைதூர நினைவாக தோன்றியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகமும்தான் அவை மறக்கப்படவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.
“பரம் வைபன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தினசரி காலையில் பாடும் பஜனையில் வரும் ஒரு வரி. இதற்கு, ‘பரம வைபவமான நிலையில் உன்னை வைத்திருப்பேன் என் ஸ்வராஷ்ட்ரமே’ என்று பாரதத் தாயைப் பார்த்து பாடுவதாகப் பொருள் சொல்லிக் கொள்கிறார்கள். பாரதத் தாய் பரம வைபவமான நிலைக்குப் போனாளோ என்னவோ – காக்கி டவுசர் கும்பல் பரம வைபவத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக தினசரி செய்தித் தாள்களின் பக்கங்கள் கோலாகலமாக அறிவிக்கின்றன.
ஒழுக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ் – ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒழுக்கம் என்பது தான் அவர்களின் பாரம்பரிய மார்க்கெட்டிங் தந்திரம். இந்த தந்திர மந்திரத்தை தமிழகத்தில் துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் தவறாமல் ஓதுவது நாம் அறிந்த செய்திதான். ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் போய் ‘இந்த முக்கு முக்குறீங்களே… அப்டி இன்னா தான் சாதிக்கப் போறீங்கபா’ என்று கேட்டுப் பாருங்கள், “நாங்கள் ஒழுக்கமான கட்டுப்பாடான மனிதர்களை உண்டாக்குகிறோம்; அவர்கள் பல்வேறு துறைகளுக்கும் சென்று தமது நேர்மையான ஒழுக்கமான நடவடிக்கைகளால் தேசத்துக்கு சேவையாற்றுவார்கள்” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.
இப்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒழுக்கப் பல்கலைக்கழகத்தில் கடுமையாக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பயின்று பட்டம் பெற்று அரசியல் துறைக்கு அனுப்பப் பட்டவர்களைக் கொண்ட கட்சி தான் பாரதிய ஜனதா. சங்கப் பரிவாரத்தின் அரசியல் முகம். இந்தியாவில் மேற்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக பெரிய மாநிலங்களான குஜராத்திலும் கருநாடகத்திலும் அவர்களின் நல்லொழுக்க ராமனாட்சி நடந்து வருவதாக அவர்கள் மட்டுமல்ல – தினமலரும் கூட சொல்கிறது. தினமலருக்கு பார்த்தசாரதிகள் எழுதும் கடிதங்களில் ‘என்னயிருந்தாலும் குஜராத் மாதிரி வருமா.. மோடி போல வருமா… தல போல வருமா’ என்கிற புலம்பல்களைத் தவறாமல் பார்க்க முடியும்.
இவ்வாறாக ‘நல்லொழுக்க ராமராஜ்ஜியம்’ நடந்து வருவதாக சொல்லப்பட்ட இவ்விரு மாநிலங்களிலும் உண்மையில் நடப்பது ‘ஜொள்ளொழுகும் காமராஜ்ஜியம்’ தான் என்கிற உண்மை சமீபத்திய செய்திகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடகத்தைச் சேர்ந்த மூன்று பாரதிய ஜனதா அமைச்சர்கள் பிட்டுப் படம் பார்த்து கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கு நாடே காறித்துப்பி அந்த எச்சிலின் ஈரம் கூட காயும் முன் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இதே காரியத்தைச் செய்துள்ள விவகாரம் வெடித்துள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம் ‘சூடாக’ நடந்து கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சவுத்ரி மற்றும் பார்வாத் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் கையில் உள்ள ஐ.பேடில் எதையோ பார்த்து தமக்குள் ‘சூடாக’ விவாதிப்பதை அவதானித்த பத்திரிகையாளர் ஜனக் தாவே, மக்கள் நலன் பற்றித் தான் ஏதோ பார்த்துக் கொண்டிருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துள்ளார். முதலில் விவேகானந்தரின் படங்களைப் பார்த்து மகிழ்ந்த காவி வேட்டி ராம பக்தர்கள், அதைத் தொடர்ந்து நிர்வாணப் படங்களைக் கண்டுகளித்து காவிக்குள் பதுங்குவது ராமபக்தியல்ல – காமபக்தி தான் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர். பட்ஜெட் சூட்டுக்கு இதமான குளிராக அந்த குஜால் மேட்டர் இருந்தவிதம் இந்தியாவுக்கே தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த ஜனக் தாவே, விஷயத்தை சபாநாயகர் கன்பத் வாஸ்வாவின் காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். விஷயத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்த சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சபா நாயகரின் ‘கொதிப்பை’ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன் – “இது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்வதற்கில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இப்படி ஊடகங்களால் குறிவைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாவதை சகித்துக் கொள்ளவே முடியாது. இது பற்றி உண்மையறிய ‘ப்ளா ப்ளா ப்ளா’ சட்டப்பிரிவுகளின் படி விசாரணை செய்வோம்”
கடமை-கண்ணியம்-பிட்டுப்பாடு - ஜெய் ஸ்ரீ ராம்
இனி இந்த விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தனியே வேறு எழுத வேண்டுமா என்ன? இப்படி கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொள்ளும் கன்பத் வாஸ்வாவின் அறிவுக்கூர்மை கருநாடக சபாநாயகருக்கு இல்லாமல் போனதை நினைத்து ‘நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்’ என்று தலைமேல் கைவைத்து அமர்ந்துள்ளார் அம்மாநில பாரதிய ஜனதா முதல்வர் சதானந்த கவுடா. கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொள்ளும் விஷயத்தில் கருநாடக பாரதிய ஜனதா வேண்டுமானால் தத்திகளாக இருக்கலாம், ஆனால் அம்மாநில நீதித் துறையோ இந்த விசயத்தில் கப்பென்று பற்றிக் கொள்ளும் பெட்ரோலில் ஊறிய கற்பூரமாய் இருக்கிறது.
கருநாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே அம்மாநிலத்தில் நடந்த சுரங்க ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணை அறிக்கை ஒன்றை முன்பு தாக்கல் செய்திருந்தது. அதில், ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் லஞ்சம் கொடுத்தது என்கிற விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ம் அத்தியாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மேல் முதல் தகவலறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடந்த கோமாளிக் கூத்துகளைத் தொடர்ந்து எடியூரப்பா தனது விசுவாசியான சதானந்த கவுடாவை ஒப்புக்குச் சப்பானியாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு பதவியிலிருந்து இறங்கினார். சிறைக்குப் போனார் – ஜாமீனிலும் வந்தார்.
தற்போது இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஆலமரத்தடி பஞ்சாயத்துக் கூட்டத்தார், லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் இருக்கிறது – ஆனால், அதை வாங்கிக் கொண்டு தான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு எங்கே ஆதாரம் – அதனால் ‘செல்லாது செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், காசு வாங்கித் தான் சலுகை காட்டப்பட்டது என்றால் அதைப் பற்றி எடியூரப்பாவின் கருத்தைக் கேட்கவில்லையே – அப்படிக் கேட்பது தானே இயற்கையான நீதிமுறை என்று அங்கலாய்த்துள்ளது. இதே பஞ்சாயத்து தீர்ப்பை அப்படியே விரிவாக்கிப் பாருங்கள் – கலைஞர் டீவிக்கு காசு வந்தது என்னவோ சரிதான் – ஆனால், அது சலுகை காட்டப் பட்டதற்காகத் தான் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் அப்படியே இருந்தாலும் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப் படாதா என்று ஆ.ராசா மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது கேட்கிறதா?.
வலது கை தான் தின்றது – இடது கை தான் கழுவியது ஆனாலும் ரெண்டும் வேற வேற கையாச்சே? என்று கூட இந்தத் தீர்ப்பை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்தத் ‘தீர்ப்பை’ விளங்கிக் கொள்ள பல்வேறு வகைகளிலும் முயன்று பார்த்தோம்.. நாராசமான உதாரணங்களே நினைவுக்கு வருவதால், நீதிமன்ற ‘மாண்பையும்’ ‘புனிதத்தையும்’ கணக்கில் கொண்டு இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். இத்தீர்ப்பில் உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரச பதவியில் இருக்கும் ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமில்லை என்று சொல்லியிருக்கிறது.
புகழெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் – வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த முசுலீம்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்? முசுலீம்கள் என்பதலேயே சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? க்ரோசின் மாத்திரை வைத்திருப்பதாலேயே நக்சலைட் என்று சந்தேகப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்தியாவின் மொத்த ஆலமரத்தடி பஞ்சாயத்து கும்பல்களுக்கும் எடியூரப்பாக்களின் புகழின் மேல் இருக்கும் விசுவாசமும் கவலையும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மேலும் உயிரின் மீதும் என்றாவது தோன்றியிருக்குமா?
எப்பூடி!!!
இது ஒருபக்கமிருக்க, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் ‘பாத்தீங்களா நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னோம்ல’ என்று பாரதிய ஜனதாவின் மேலிடம் சட்டையின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் போதே கீழே வேட்டியை உருவி விட்டார் எடியூரப்பா. தனக்கு விசுவாசமான 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் ஓட்டிக் கொண்டு போய் பெங்களூரு நகரத்துக்கு வெளியே இருக்கும் ஐந்து நட்சத்திர ஆட்டுப் பட்டி ஒன்றில் அடைத்த எடியூரப்பா, ‘சரி சரி கிளம்பு காத்து வரட்டும்’ என்று சதானந்த கவுடாவுக்கு கெடு விதித்து விட்டார். ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குப் பேர் போன காவி கும்பலின் கட்டுப்பாடு ‘பிட்’டுப்பாடாகிக் கிழிந்து கந்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் எடியூரப்பா அவிழ்த்தெறிந்து விடுவாறோ என்று அஞ்சிய பாரதிய ஜனதா டவுசர் பாண்டிகளின் மேலிடம் களத்தில் இறங்குகிறது.
தொடர்ந்து நடந்து வரும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் இன்று வரை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே தில்லியை நோக்கி ஒரு படையெடுப்பையும் நடத்தி முடித்துள்ளார் எடியூரப்பா. பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்காரியில் இருந்து அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஸ்வயம் சேவகத் தலைவர்களுக்கு இரண்டு பக்கமும் இடி – ஒன்று, எடியூரப்பாவைப் பகைத்துக் கொள்வது உடனடியாக ஆட்சிக்கு ஆப்பு வைத்து விடும் என்பதோடு நீண்ட கால நோக்கில் அவருக்கு விசுவாசமான சாதி ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம், அவரை முதல்வராக்கினால் அகில இந்திய ரீதியில் ஊழல் ‘ஒழிப்பை’ முன்வைத்து தாம் போட்டு வரும் சீனின் திரை கிழிந்து விடும். இனி என்ன கிழிவதற்கு? ஏற்கனவே நார் நாராய் தொங்குவது வேறு விசயம்.
கழுதை முன்னே போனா கடிக்கும் பின்னே போனா உதைக்கும் என்கிற இந்த இக்கட்டான நிலையில் கடிவாங்கலாமா உதை வாங்கலாமா என்பது பற்றி முடிவெடுப்பதற்காகக் கூடிய பாரதிய ஜனதா உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடந்து எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது – அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும் போது நிதின் கட்காரின் மூஞ்சில் ஒரு சங்கடமான புன்னகையொன்று தோன்றியதை செய்திச் சேனல்களில் காண முடிந்தது. அடேங்கப்பா.. ஆர்.எஸ்.எஸ் காரவுக என்னமா டிரெய்னிங் குடுக்கறாங்கபா!
கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும்
அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள்
அரசுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முழக்கங்கள்
சென்னை:
சென்னையல் உயர் நீதிமன்றம் அருகில் 22.3.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன் சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள். குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர் தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”
பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும், அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி:
தருமபுரியில் 22.3.2012 அன்று பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், இராஜகோபால் பூங்கா பின்புறம், பூங்கா முன்புறம் ஆகிய 4 இடங்களில் விவசாய விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோபிநாத் (வட்டச் செயலர், பென்னாகரம் வட்டம்) தலைமை தாங்கினார். போலீஸ் அனுமதியை மீறி இந்த நான்கு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. ஒரு சமயத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் நூற்றுக்கணக்கில் மக்களிடையே பிரச்சாரம் சென்று சேர்ந்தது. திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி:
திருச்சியில் பேருந்து நிலையம் காதிகிராஃப்ட் அருகில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பாசிச ஜெயாவின் அடக்குமுறை இடிந்த கரையில் இறக்கிவிடப்பட்டதை கண்டித்து உடனே நடந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மக்களிடையே பிரச்சாரத்தை வீச்சாக கொண்டு சென்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் சேகர் கண்டன உரையாற்றினார். ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்பு தலைவர் தோழர். தர்மராஜ் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியாக பெண்கள் விடுதலை முன்னணி தோழர் நிர்மலா நன்றியுறை ஆற்றினார்.
விழுப்புரம்:
கூடங்குளத்தில் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து பு.மா.இ.மு வும், வி.வி.மு வும் சேர்ந்து விழுப்புரத்தில் 22 .03 .12 அன்று மாலை 4 .00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை மறுத்து அனுமதி தரமுடியாது என விழுப்புரம் DSP கைப்பட மறுப்பு எழுதி தந்தார். அதையும் மீறி அன்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. 250 சுவரொட்டிகள் விழுப்புரம் முழுக்க ஒட்டி வலுவான பிரச்சாரம் குறுகிய நாட்களில் எடுத்து செல்லப்பட்டது. அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி சேனல்களும் செய்தி சேகரித்தனர். மக்கள் தொலைக்கட்சியில் செய்தியும் வந்துவிட்டது. 50 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் குவிப்பை மறுத்து வெற்றிகரமாக நடந்தது! காவல் துறை கெஞ்சாத குறையாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர்.
வி.வி.மு தோழர் மனோகரன் தலைமையில், பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர்.செல்வகுமார் விளக்கி பேசினார். வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.அம்பேத்கர் முழக்கங்கள் எழுப்ப திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரையில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் விரிவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் மின்சாரம் வேண்டும், ஆபத்தான அணு உலை வேண்டாம் என்றும், கூடங்குளத்தில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்குமாறும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.
ஓசூர்:
ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் உயிருக்கும், நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அனு உலையை இழுத்துமூடு! கூடங்குளம் மற்றும் இடிந்தக் கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெரும் போலிசு படையை திரும்பப் பெறு! மக்கள் போராளிகளின்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை நீக்கு! கைது செய்யப்பட்ட முன்னணியாளர்கள் மற்றும் பொதுமக்களை உடனே விடுவி! என்ற முழக்கங்களின் அடிப்படையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே 22.03.2012 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றி பேசினார். சிறப்புரையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் அணுஉலையை கொண்டுவருவதற்கான அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியலை அம்பலப்படுத்திப்பேசினார். இறுதியாக, நாட்டின் இறையான்மைக்கும், மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை விடுவி! கூடங்குளம் பிரச்சினையை தமிழக மக்களின் பிரச்சினையாக பாவித்துப் போராடுவோம். என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். ஏறக்குறைய 1.30 மணிநேரம் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொது மக்கள் திரளாக திரண்டு கவனித்துச் சென்றனர்.
கடலூர்:
கூடங்களம் போராட்ட முன்னணியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் கடலூரில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தியது. திரளான மக்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
கூடங்குளம் அணுஉலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவைக் கண்டித்தும், போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள், கைதுகளைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 21.3.2012 அன்று தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் தலைமையில் நடைபெற்றது. ம.க.இ.க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.
“ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கும் முடிவைத்தான் எடுப்பார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. தனக்கு ஆதாயம் தரும் வகையில் எப்படி காய் நகர்த்துவது என்பதில்தான் இவ்வளவு நாள் காலம் கடத்தினார். போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் போக்குகாட்டிக் கொண்டே அவர்கள் மீது 156 வழக்குகளைப் பதிவு செய்தபோதே கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவார் என்பதும் உறுதியாயிற்று. அடித்தட்டு மக்களின் நலனை ஜெயலலிதா பாதுகாப்பார் என நம்புவது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பதை உதயக்குமார் போன்ற அறிஞர்களுக்கும் புரியவைத்துவிட்டார்.” என்று தோழர் பேசினார்.
மேலும், “5000க்கும் மேற்பட்ட போலீசு துணை ராணுவப்படைகளை குவித்துள்ளதோடு வான்வழிக்கண்காணிப்பு கடலோரக்காவல்படை கண்காணிப்பு என கூடங்குளம் சுற்றுவட்டாரமே யுத்தகளம்போல் மாற்றி மக்களை அச்சுறுத்துகிறார்கள். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை வீடு வீடாகச்சென்று அச்சுறுத்தும் வேலையை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இப்பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு மக்கள் நடமாட்டமே முடங்கியுள்ளது. வழக்குரைஞர்களைக்கூட அப்பகுதியில் அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை. இடிந்தகரை பகுதிக்கு குடிநீர் மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.”
“மக்கள் விரோத ஜனநாயக விரோத இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்றார் தோழர் காளியப்பன்.
இவ்வார்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டாரச் செயலாளர் தோழர் மாரிமுத்து,பேராசிரியர் அரங்க சுப்பையா ஆகியோர் கண்டண உரையாற்றினார்.
மேலும் பல ஊர்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.