Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 769

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா?

37

நிதீஷ்குமாரின் பீகார் சாதனை: இரகசியம் தெரியுமா? “பீகார் மாநிலத்தை லல்லு பிரசாத் யாதவ் ஆண்டதால்தான் சீரழிந்து கிடந்தது. 15 ஆண்டுகளாக அவர் நேரடியாகவும், அவரது மனைவி ராப்ரி தேவி மூலமாகவும் புரிந்த கொடுங்கோலாட்சியின் மூலம் ஒற்றை மனிதராக  பீகார் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியிருங்கச் செய்தார். 2005-ல் முதல்வரான நிதீஷ் குமாரின் தலைமையிலான நிர்வாகத்தில் மாநிலம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே வளர்ச்சி வீதம் அதிகமான மாநிலமாக பீகார் மாறியிருக்கிறது….” என்றெல்லாம் பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. அந்த அலையில் மிதந்து 2010-ல் நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் இரண்டாவது முறையாக கூடுதல் பெரும்பான்மையுடன் முதலமைச்சரானார்.

அப்படி லல்லுவிடம் இல்லாதது, நிதீஷ் குமாரிடம் என்னதான் இருக்கிறது? அவர் கை வைத்தவுடன் பீகார் எப்படி மாறி விட்டது? அவரிடமிருந்து மற்ற மாநில முதலமைச்சர்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கு பலர் பல விதமாக விடை காண முயற்சித்தார்கள். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தல், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல, சொத்து குவித்த அரசு அதிகாரிகளிடமிருந்து சொத்துக்களைப் பிடுங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்படியான ஆட்சியை நிறுவினார். ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசத்தை இரும்புக் கரத்துடன் ஒடுக்கி சட்ட ஒழுங்கை மேம்படுத்தினார். எனில் பீகார் எப்போது சிங்கப்பூர் போல முன்னேறிய மாநிலமாக மாறப் போகிறது என்ற ஒரே கேள்விதான் எஞ்சியிருக்கிறது

இந்த முன்னேறங்களுக்கு உண்மையில் என்ன அடிப்படை என்ற மர்மம் சமீபத்தில் வெளியானது. முதலமைச்சர் நிதீஷ் குமாரே முன் வந்து அந்த ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேதிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டதுதான் அவரது ‘சாதனை’களின் ரகசியம்.

11.11.11 அன்று 11 மணி 11 நிமிடத்துக்கு தவறுகள் செய்த 11 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையைப் பிறப்பித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 2001 முதலே தனது அரசியல் வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை இது போன்று  வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதிகளில்தான் தான் எடுத்ததாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1-1-2001, 2-2-2002, 3-3-2003, 6-6-2006, 7-7-2007, 8-8-2008, 9-9-2009, 10-10-2010 தேதிகளில் முக்கிய முடிவுகளை எடுத்து ஆவணங்களில் கையொப்பமிட்டாராம். 2004-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதாலும், 2005-ல் கையொப்பமிட பொருத்தமாக எதுவும் கிடைக்காததால் அந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் தவற விடப்பட்ட வாய்ப்பையும் பயன்படுத்தியிருந்தால் பீகார் இதற்குள் வல்லரசின் வல் மாநிலம் ஆகியிருந்திருக்கும். பாழாய்ப் போன ஜனநாயக முறைகள் அதை தவிர்த்து விட்டன.

3-3-2003ம் 1-1-2011ம் அவருக்கு மிகவும் லாபகரமான நாட்களாக அமைந்த நாட்களாம்.

நிதீஷ் குமார் 11 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கோப்பில் கையெழுத்து இட்ட அதே நேரத்தில் 11.11 மணிக்கு தீர்ஹூத் வனப்பகுதி ஆணையர் எஸ் என் ராஜூ அந்த ஊர் விளையாட்டு அரங்கத்தில் ஒரு ஆலமரக் கன்றை நட்டார். “அந்த மரக் கன்றிலிருந்து வளரும் மரம் 400 முதல் 500 ஆண்டுகள் உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் நிதீஷ் குமார் கூறினார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த நாளாக அது அமைந்து விட்டது.

பீகார் மக்கள் மூச்சு விட மறந்து அற்புதங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி சவுபே இன்னும் ஒரு படி மேலே போய் 11.11.11 அன்று 11.11 மணிக்கு பீகாரில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் 18 வயது வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான சிறப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த நேரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும், திருமண நிதி உதவியும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில முதலமைச்சர்களை பின்பற்றி நிதீஷ் குமாரும் பீகாருக்கு திறமையான தலைமையை வழங்கியிருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது.

— பச்சை நிறம்தான் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை என்று அடையாளம் கண்டு பச்சை நிற உடைகளை உடுத்த ஆரம்பித்து கட்சியினரையும், அரசு துறைகளையும் பச்சை நிறத்துக்கு முதலிடம் கொடுக்க வைத்து

— யானைகளுக்கு கஜபூஜை நடத்தினால் நாடு சுபிட்சம் பெறும் என்று நாடெங்கிலும் உள்ள கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று யானை முகாம் நடத்தி

— அன்னதானம் அளித்தால் கடவுளரின் மனம் குளிர்ந்து மக்கள் எல்லோரும் உழைக்காமலேயே கற்பக விருட்சத்தின் கீழ் தமக்கு வேண்டியவற்றை எல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நாடெங்கிலும் கோயில்களில் இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்து

தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்திய புரட்சித்தலைவி அம்மாவின் உதாரணத்தையும்

— ஆட்சியைப் பிடிப்பதற்கு 13 வயது குழந்தையுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சோதிடம் பார்த்து நடந்து கொண்ட மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என் டி ராமாராவின் வழியையும்

— பல விதமான யாகங்கள், வழிபாடுகள், விரதங்கள் மூலம் தேவர்களின் ஆசீர்வாதம் பெற்று தென் மாநிலங்களில் முதன் முறையாக தனது கூட்டணி கட்சி பாஜகவை கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவின் எடுத்துக்காட்டையும்

— தேய்பிறையாகப் போனதால் முதலமைச்சராக பதவி ஏற்பதையே 10 நாட்கள் தள்ளிப் போட்ட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் முன் உதாரணத்தையும்

கவனமாக ஆராய்ச்சி செய்து நிதீஷ் குமார் இந்த வழிமுறையை தேர்ந்தெடுத்திருப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.

இனிமேல் பீகாரின் முன்னேற்றத்தை ஆயிரம் லாலுக்கள் வந்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது, இன்னும் 12-12-2012 என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தேதி வரவிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டு நிதீஷ் குமார் பீகாரை உலகிலேயே முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

ஒரு மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நடத்திக் காட்டுவது என்பது கடைசியில் ஜோசியத்தின் கையில்தான் இருக்கிறது என்றான பிறகு இனி இந்தியாவுக்கு ஏது தோல்வி!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை!

பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.சார்பாக  22.11.2011 அன்று காலை 10 மணியளவில் ரயில்வே ஜங்சன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

முதலில் ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை கண்டித்து விண்ணதிர முழக்கமிடப்பட்டது. பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் தலைமை வகித்தார். அடுத்த நிகழ்வாக ஒரு சிறு நாடகம்.  ஜெயலலிதா வேடமணிந்து வந்த பெண் தோழர் ” நான் தான் ஜெயலலிதா,  தமிழகத்தின் முதல்வர்,  விலைவாசி ஏற்றம் கடுமையாகத்தான் இருக்கும், மருந்து கசப்பாகத்தான் இருக்கும், பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறியவுடன் பொதுமக்கள் அவரை நோக்கி வந்து  “உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ! உனக்கெல்லாம் நாலு சாத்து வச்சாதான் சரிபடும்” என்று கூறிக்கொண்டே தாக்க ஆரம்பித்தனர்.

இந்த காட்சியை  கவனித்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கூட்டத்தினுள் புகுந்து “ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம்”  என்று மிரட்ட தோழர்கள் “அனுமதி பெற்றுத்தானே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம், ஏன் கைது செய்கிறீர்கள்?” என கேட்க ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை போல் வேடமணிந்து அவரை தாக்கி அவமானப் படுத்தியதுதான் தவறு என்று அழாத குறையாக விளக்கம் சொன்னது போலீசு.

தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றி இறுதியில் மூன்று வேன்களும் 50க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 7 குழந்தைகள், பெண்கள் உட்பட 70பேரை கைது செய்தனர்.

அன்று மாலையே அதில் பத்து பேரைத் தவிர மற்றவர் அனைவரும் 60 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

பாசிச ஜெயாவின் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைக்கூட போலீசு விரும்பவில்லை. அதிலும் ஜெயாவின் வேடமணிந்து நடித்ததை ஏதோ மாபெரும் தீவிரவாத நடவடிக்கை போல சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீசு.

பேயாட்சி நடந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பாசிச ஜெயாவின் ஆட்சிக்கு பொருத்தமாகவே இருக்கிறது. எனினும் புரட்சிகர அமைப்புகள் பேயாட்சியை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள். சிறை, மிரட்டலெல்லாம் அவர்களை அச்சுறுத்தாது. தற்போது திருச்சி சிறையில் சிறைவாசிகள் மத்தியில் பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளையை அம்பலப்படுத்தி தோழர்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதற்கு காவல் துறை என்ன செய்யும்? ஒருவேளை வழியிருந்தால் செவ்வாய் கிரகத்துக்கு நாடு கடத்துவார்களோ?

_____________________________________________________________

–    மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி!

வால் ஸ்டிரீட் முற்றுகை : முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி !

கடும் குளிரையும் பனிப்பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு  அஞ்சவில்லை.  முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.

கண்டங்கள், நாடுகள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், குறுக்கு நெடுக்காக உலகம் முழுவதும் மக்களின் கோபத் தீக்கு எண்ணெய் வார்த்திருக்கிறது முதலாளித்துவம். முபாரக்கின் சர்வாதிகாரம், கிரீஸ் அரசின் சிக்கன நடவடிக்கைகள், ஒபாமாவின் வரிகள், வேலையின்மை, கல்வி  மருத்துவ மானிய வெட்டு, சுற்றுச்சூழல் அழிவு என்று ஆயிரம் பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டாலும், அவை அனைத்தின் மூல காரணம் உலக முதலாளித்துவம்தான்.

போராடும் மக்களுக்கு இது தெரியாமல் இல்லை. “”முதலாளித்துவம் ஒழிக!, வங்கி முதலாளிகளைக் கைது செய்!” என்று அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்குகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், வேலை, பொழுதுபோக்கு, நுகர்பொருட்கள், கல்வி, சுகாதாரம், போலீசு, இராணுவம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். தனி மனித முயற்சியின் மூலம் யாரும் வெற்றி பெற முடியும்மென்ற “அமெரிக்க கனவும்’ அமெரிக்க ஜனநாயகமும் பொய் என்பதை அவர்கள் தம் சொந்த அனுபவத்தில் பட்டு உணர்ந்திருக்கிறார்கள்.

எனினும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்று ஒப்புக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கமிருக்கிறது. தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற முடியவில்லை. எனினும், பல பத்தாண்டுகளாக விடாப்பிடியாக நடத்திய அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் அது உயிர் வாழ்கிறது. கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், தனிநபர் ஊக்கம் மற்றும் உரிமை மறுப்பு, அதிகாரவர்க்க ஆட்சி என்ற பொய்களை மக்கள் மனதில் நிலைநாட்டி பீதியூட்டியிருக்கிறது. ரசிய, சீன சோசலிசங்களின் சீரழிவு இந்தப் பொய்களுக்கு புனுகு தடவிவிட்டது. அவற்றின் தோல்வியோ ஊனமுற்ற முதலாளித்துவத்துக்கு ஊன்றுகோலாகப் பயன்படுகிறது.

முதலாளித்துவத்தின் பேராசை, கொள்ளை, பித்தலாட்டம், போர்வெறி ஆகியவற்றை அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். எனினும், திட்டவட்டமான மாற்று ஒன்றை முன்வைத்துப் போராடாதவரை,  இவையெல்லாம் ஆற்றாமை தோற்றுவிக்கும் புலம்பல்களாகவே முடிகின்றன. சியாட்டிலில் தொடங்கி கடந்த பத்து ஆண்டுகளாக அடுத்தடுத்து பல முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்குலகில் நடந்த போதும், அவை முன்னேற முடியாமல் தேங்குவதற்கு இதுதான் காரணம். இந்தத் தேக்கம் தொடருமாயின், அது சோர்வையும் அவநம்பிக்கையையுமே மக்களிடம் பரப்பும். அவ்வகையில் அராஜகவாதிகள், பின் நவீனத்துவவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பலரும் முதலாளித்துவத்தின் கையாட்களாக இருந்து மக்களைச் சிதறடிக்கிறார்கள். விரக்திக்குத் தள்ளுகிறார்கள். முதலாளித்துவத்திடம் சரணடையச் செய்கிறார்கள்.

வால் ஸ்டிரீட் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பு. அதனை சோசலிசத்தின் மீதான விருப்பமாக மாற்றுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்தியமாகவும், மேல்நிலை வல்லரசுகளாகவும், ஒற்றைத்துருவ மேலாதிக்கமாகவும், உலக வர்த்தகக் கழகமாகவும் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு கொடிய வன்முறை எந்திரமாக மாறிவரும் உலக முதலாளித்துவத்தை உதிரியான கட்சிகளும், கலவையான முழக்கங்களும், தொளதொளப்பான அமைப்பும் வீழ்த்த முடியாது.

முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய  லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள்  இவையில்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை வீழ்த்த இயலாது. மக்களின் கோபம் ஒரு சுனாமியைப் போன்ற ஆற்றலுடன் மேலெழுந்தாலும், ஆளும் வர்க்கம் அந்த சுனாமிக்கும் ஒரு வடிகாலைத் தயாரித்துவிடும். வீரம் செறிந்த எகிப்து மக்களின் போராட்டம் எப்படி மடைமாற்றப்பட்டதென்பது நம் கண்முன் தெரியும் சமகாலச் சான்று.

முதலாளித்துவத்துக்கு எதிரான கம்யூனிசத்தின் சித்தாந்தப் போர், போல்ஷ்விக் உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட கட்சி  இவ்விரண்டு அவசரத் தேவைகளையும் நிறைவு செய்யக் கோருகின்றன உலகெங்கும் எழுந்து வரும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள்.

_________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!

_______________________________________________

 கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

 இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

_____________________________________________

அன்பார்ந்த பொதுமக்களே!

தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் நடத்தி வரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையைில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர், விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிலுந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது.

புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனியில் அணுமின் உலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அணுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

ஆனால் மன்மோகன்சிங் அரசு இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகளை அமெரிக்க, ரசிய பிரான்ஸ் நிறுவனங்களிடம் வாங்கி இந்திய கடற்கரைகள் முழுவதும் நிறுவும் முடிவிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது.

அணு உலைகள் பாதுகாப்பானது, மின்சார தட்டுப்பாட்டை நீக்கக் கூடியது, நாட்டின் வளர்ச்சிக்கு  அவசியமானது, அணு உலைக்கு எதிராகப்போராடுவோர் தேச விரோதிகள், அந்நிய கைக்கூலிகள் என்று தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், அப்துல் கலாம் போன்ற நபர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சிவசேனா, காங்கிரஸ், சாதி சங்கங்கள் போன்ற மக்கள் விரோத கும்பல் பன்னாட்டு அணு உலை முதலாளிகளுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை விஷமாக மக்கள் மத்தியில் கக்குகின்றன.

இரத்தம் சிந்திய மக்கள் போராட்டத்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அணு உலை கட்டும் திட்டத்தை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். கேரளாவில் மக்களும் அனைத்து கட்சிகளும் அணு உலைகளை எதிர்த்துப் போராடி தடுத்துள்ளனர். இந்த உரிமை தமிழக மக்களுக்கு இல்லையா? மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிர் இழப்பு, நோய்கள் அணுக் கழிவுகளை பாதுகாப்பது, விவசாய  நிலங்கள், கடல் வளம் பாழாவது, காற்று மாசு படுவது, என பல்வேறு இழப்புக்களை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தக்கரை  மக்கள் போராடக்கூடாதா?

1988-ல் கூடங்களத்தில் நடந்த போராட்டதினால் ராஜுவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியதை மறக்க முடியுமா? மக்கள் கருத்துக் கணிப்பு, சுற்று சூழல் ஆய்வு என அணு உலை அமைப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை.

உறுதியான இடிந்தக்கரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு நாடு முழுவதும் பரவி வருவதை கண்டு அச்சமுற்ற, மத்திய, மாநில அரசுகள் தூதுக்குழு பேச்சு வார்த்தை என்று ஒருபுறம் இழுத்தடிப்பதும், போராடும் மக்களுக்கு பணம் ஏது? என அமைச்சர்  நாராயணசாமி மூலம் வக்கிரமாக பேசி திசை திருப்ப முயற்சிப்பதும், மறுபுறம் தேசியபாதுகாப்புச் சட்டம், முப்படை இராணுவம், போலீசு, பொய்வழக்கு, கைது என மிரட்டி ஒடுக்கிவிடலாம் என முயற்சிக்கின்றன.

1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக்கதிர் வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வி.வி.இ.ஆர்.1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் மட்டுமே, அதன்பின் இயக்க முடியது.

ரஷ்ய சுற்றுசூழல் விஞ்ஞானிகள் இவ்வாண்டில் ரஷ்ய பிரதமர் மெத்வதேயிடம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்ப அணு உலைகளில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். அணு  உலை கழிவுகளை 3000 அடிக்கு கீழ் புதைக்கு குறைந்தது 24000ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் கதிர்வீச்சின் தாக்கம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும்.

இன்று நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% மக்களுக்குப் பாதிப்பின்றி அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, குப்பையிலிருந்து எடுக்கப்படுகிறது. யூனிட்டுக்கு 2 ரூபாய்  மட்டுமே உற்பத்தி செலவாகிறது. அணு உலைதான் ஒரேவழி என்பது போல பேசுவது மோசடியானது. பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஷாப்பிங் மால்கள், தொழில் நுட்ப பூங்காக்களுக்கு, 24 மணி நேர ஏ.சிக்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற மின்சாரத்தை, சிக்கனப்படுத்தினாலே அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை ஈடுகட்ட முடியம். இலவசங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் சி.எப்.எல் பல்புகள் கொடுத்து மின் பயனீட்டு அளவை  குறைக்கலாம்.

அணு உலையை இயக்க யுரேனியம் வெளிநாடுகளில் தான் வாங்க வேண்டும். பெட்ரோல் விலை போல அதுவும் உயரும். இதனால் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேலாகும். ஒருவேளை வெளிநாடுகள் யுரேனிய விற்பனையை நிறுத்தினால் அணு உலைகள் என்னவாகும்? இந்திய மொத்த மின்சார தேவையில் தற்போது இயங்கி வருகின்ற 18 அணு உலைகள் மூலம் 2.8%  மட்டுமே கிடைக்கிறது. 2005-ல் 3310 மெ.வா உற்பத்தி செய்ய அணு உலைகளை இயக்க பயன்படுத்த பட்ட மின்சாரம் 4000 மெகாவாட் என்கிறார்   பேராசிரியர் தீரேந்திர சர்மா. ஆனால் காற்றாலைகளால் மட்டும் ஆண்டுக்கு தமிழகத்திற்கு 2040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

அணு மின் உலையினால் ஏற்படும் தலைமுறைகள் கடந்த மிகப் பெரிய அபாயம் அணுகழிவுகளைப் பாதுகாப்பது. ஏற்கனவே தாராப்பூர் அணு உலைக் கழிவை திரும்ப பெறும் பொறுப்பை அமெரிக்கா நிராகரித்ததால், 20 ஆண்டுகளாக இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அதை பாதுகாத்து வருகிறது. தற்போது கூடங்குளம் அணு கழிவுகளை எடுத்துச்செல்ல ரசிய அரசு மறுத்துள்ளது.

பொதுவாக அணு உலைகள், அணு குண்டு தயாரிப்புடன் பிணைக்கப்பட்டு, இராணுவம், பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுவதால் இதில் நடக்கும் விபத்துகள், ஊழல்கள், தொழில் நுட்ப தோல்விகள், துரோகம், இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அணுசக்தி துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் விவாதிக்க நீதிமன்றத்தில் வழக்குப்போட உரிமைகள் மறுக்கப்படுகிறது.

இதனால் இந்திய மக்களின் 3 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம், லட்சகணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க – இந்திய முதலாளிகள், சில அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்யும் அவலம் உள்ளது.

அணு உலை விபத்து இழப்பீட்டு சட்டத்தின்படி விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அணு உலைகளை விற்ற, பன்னாட்டு நிறுவனம் ரூபாய் 1,500 கோடி கொடுத்தால் போதும். மீதி பணத்தை இந்திய அரசே மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அமெரிக்காவில் பிரைஸ் ஆன்டர்சன் சட்டத்தின் படி அதே அணு உலை நிறுவனங்கள் ரூ.49266 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்கன் உயிரைவிட இந்திய உயிர் 33 மடங்கு கீழானது. அணு சக்தி ஒழுங்கு வாரியம் – அணு உலை விபத்தை முக்கியத்துவம் இல்லாத விபத்து என அறிவித்தால் நட்ட ஈடு வழங்க தேவையில்லை.

24000 ஆண்டுகள் கதிர் வீச்சு உள்ள விபத்திற்கு 10ஆண்டுகளில் இழப்பீடு கோராவிட்டால் அதன் பின் சட்டப்படி கோர முடியாது. சுனாமி, நிலநடுக்கம், போர், பயங்கரவாத நடவடிக்கைகளால் விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு நட்ட ஈடு வழங்க வேண்டியதில்லை.

அணு உலையில் விபத்தே ஏற்படாது 100% பாதுகாப்பானது என்று  சொல்லும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வல்லரசு கனவு காணும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரசு என அணு உலையை ஆதரிக்கும் நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறார். பல மாதங்களாக போராடும் மக்களை சந்திக்க அஞ்சுகிறார். பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என நினைத்தால் காவேரி ஆற்றில் கரிகாலன் கல்லணையை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டு தஞ்சை பெரியகோவில் இருக்காது என லூசு தனமாக நம்மிடம் பேசுகிறார்.

இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி அனைத்து அணு உலைகளும் இயங்கினால் கூட இன்னும் 15 வருடங்களுக்குப் பின்பும் இந்திய மின்  தேவையில் 7% மட்டுமே அணு மின்சாரத்தால் கிடைக்கும். பன்னாட்டு அணு உலை முதலாளிகளை பாதுகாக்கும் அணு சக்தி இழப்பீட்டு சட்டத்தை நீக்குவதற்கு மன்மோகன்சிங்கிடம் பேசுவாரா? மின் தேவைக்கு அணு உலைதான் ஒரே வழியா? என கேட்பாரா?

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு ரசாயன தொழிற்சாலை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டு 1984ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரே இரவில் 20 ஆயிரம் மக்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இன்றளவும் அதன் பாதிப்பு தொடர்கிறது. விசக்கழிவுகள் அகற்றப்படவில்லை. முறையாக இழப்பீடும் வழங்கப்படவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி ஆன்டர்சன் மீது இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. மற்ற குற்றவாளிகளுக்கு டி.வி.எஸ். 50 இடித்தால் என்ன தண்டனையோ அதுதான் வழங்கப்பட்டது. அன்றைய தினமே ஜாமீனில் விடப்பட்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் மீதான வழக்கில் இந்திய அரசு நீதிமன்றங்களின் யோக்கியதை இதுதான். ஆனால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கே தொடுக்க முடியாத படி இந்திய அரசுக்கும் ரசிய அரசுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அணு உலைகளை கட்டுவது மக்களின் மின்சாரத் தேவையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய-பிரான்ஸ், இந்திய-ரஷ்ய வர்த்தக உடன்பாடுகள் இந்திய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

இதில் மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு, துளியுமில்லை. விவசாயம், பொது விநியோகம், கல்வி, சுகாதாரம், சமூக நல திட்டங்கள், சுயசார்பு விஞ்ஞான வளர்ச்சி, சுற்று சூழலை பாதிக்காத மின்சார தயாரிப்பிற்கென தேவையான நிதியை ஒதுக்காமல், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காகவும், இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் வல்லரசு கனவுகளுக்காகவும் லட்சக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணத்தை பல ஆண்டுகளுக்குபின் கிடைப்பதாக கூறும் 7% அணு சக்தி மின்சாரத்திற்காக முதலீடு செய்வதன் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை. 40 ஆண்டுகள் கூட ஆயுளற்ற அணு உலைகளுக்கு, 400 தலைமுறை மக்களின் உயிரை, வாழ்க்கையை பணையம் வைக்கம் இக்கொடூரத்தை நாம் அனுமதிக்கலாமா?

அறிவார்ந்த, தேசப்பற்றார்களே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் அணு குண்டு-அணு உலை அரசியல், ஆதிக்க வல்லரசுக் கனவு-அமெரிக்க அடியாள் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம் மட்டுமல்ல இப்புவிப்பரப்பிலிருந்தே மனித குலத்திற்கு எதிரான அனைத்து அணு உலைகளையும் அகற்றும் வரை போராடுவோம். வாரீர்!

 

மத்திய, மாநில அரசுகளே!

பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடாதே!

அனல், நீர், காற்று, கடல் அலை, சூரியஒளி போன்ற சுயசார்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

இந்திய அரசு, .ர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ், சிவசேனா, கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!

நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!

மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்!.

 

கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

வரவேற்புரை :
திரு.சிவராச பூபதி, வழக்கறிஞர்
மாவட்டச் செயலர், ம.உ.பா.மையம். மதுரை

தலைமை :
திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்
மா.துணைச்செயலர், ம.உ.பா.மையம். மதுரை.

முன்னிலை :
திரு.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர்

கருத்துரை :
கூடங்குளம் அணு உலையும் இடிந்தகரை மக்கள் போராட்டமும்.
முனைவர்.சுப.உதயகுமார்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

அணு மின்சாரம் பாதுகாப்பனது, அவசியமானது – பொய்யும் புரட்டும்
திரு..முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை.

அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் ஓர் அடிமைச்சாசனம்
திரு.தி.லஜபதிராய், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

பன்னாட்டு அணு உலை அரசியலும் – காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பியின் வல்லரசுக் கனவும்
தோழர்.காளியப்பன், இணை பொதுச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

இடிந்தகரை மக்கள் போராட்டம் இந்தியா முழுவதும் பரவட்டும்
திரு.சி.ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்.
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழச்சி நடைபெறும்.

நன்றியுரை : திரு.சு.ப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்
மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம். தூத்துக்குடி.

அனைவரும் வருக!

_________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்ட கிளை
18ஆ, 2-வது தளம்,தங்கையா கட்டிடம் பொதுப்பணித்துறை சாலை நாகர்கோவில்.

தொடர்பு : 9486643116,9443527613.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!

11

கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!

‘இராமேஸ்வரம் என்றால் ராமர் பூசை செய்த இடம்-கோவில்-பாம்பன் பாலம், மெரீனா கடற்கரை என்றால் உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை, அதை அழகுபடுத்தினால் நன்றாக இருக்கும்’ என்ற பிம்பங்கள்தான் நமக்கு இருக்கின்றன. ‘கடற்கரைக்குப் போனால் மணலில் விளையாட, கடலில் கால் நனைக்க வசதிகள்  இருக்க வேண்டும், படகில் உல்லாச பயணம் போய் வர ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஓரிரு முறை சுற்றுலா போய் வருவதற்கு தயாராக கடற்கரை இருக்க வேண்டும்’ என்பதுதான் நமது எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

கன்னியாகுமரி என்றால், ‘பகவதி அம்மன் கோவில், மூன்று கடல்களும் சந்திக்கும் முனை, காந்தி நினைவு மண்டபம், அங்கு போனால் படகில் போய் விவேகானந்தர் பாறைக்குப் போகலாம்’ என்றுதான் பள்ளியில் படித்திருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் சிலையை அருகில் இருக்கும் பாறையில் நிறுவ, அது இன்னொரு சுற்றுலா சின்னமாக இருக்கிறது. இவ்வளவுதானா கன்னியாகுமரி? கன்னியாகுமரி மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? கடற்கரை, கடல் சார் பழங்குடியினரான மீனவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? கடலும் கடற்கரையும் அவர்கள் வாழ்க்கையுடன் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேட எண்ணி கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு இதோ.

சாலையிலிருந்து இறங்கி வரும் போது வலது புறம் திரும்பினால் விவேகானந்தர் பாறை படகுத் துறை, இடது புறம் திரும்பினால் வாவுத்துறை. ‘வாவுத்துறை உங்களை வரவேற்கிறது’ என்ற பலகையைத் தாண்டி படகுகளுக்கு அருகில் மீனவர்களின் வள்ளங்கள் மிதக்கும் கடற்பகுதி விவேகானந்தா பாறை படகு குழாமுக்குப் போகும் பயணிகள் வரிசையாக அனுப்பப்படும் கூண்டு போன்ற கட்டிடத்தை ஒட்டியிருக்கிறது. படகில் ஏற வரிசையில் நிற்கும் போது சன்னல் வழியாக இந்த வள்ளங்களையும் மீனவர்களையும் பார்க்க முடியும்.

நாலைந்து பேர் இரண்டு மூன்று குழுக்களாக சீட்டாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். சுமார் 30-40 வள்ளங்கள் கடலிலும், கரையிலுமாக நிலை கொண்டிருக்க அவற்றைச் சுற்றி சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படகுக்கு அருகில் மூன்று பேர் நின்று வலை பிரித்துக் கொண்டிருந்தார்கள். அதிகாலை 3 மணி போல கடலுக்கு மீன் பிடிக்கப் போவதற்கான  தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

‘என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? சொல்கிறோம்’ என்று மூன்று பேரில் இளைஞராக தெரிந்தவர் முன்வந்தார். பெயர் ராஜா என்று சொன்னார். மற்ற இருவரில் ஒருவர் வயதானவர் இடையிடையே சில கருத்துக்களைச் சொன்னார். மூன்றாமவர் வாய் திறக்கவே இல்லை. வாயில் வெற்றிலை அடக்கியிருந்தார் என்று தோன்றியது. அவர் பெயர் யாகப்பன் என்று பின்னர் தெரிந்தது.

அவர்கள் பயன்படுத்துவது வள்ளம் எனப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள். சுனாமிக்குப் பிறகு கட்டுமரங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களது வாவுத்துறை, அதை அடுத்த கன்னியாகுமரி இரண்டு இடங்களிலும் வள்ளங்களில்தான் மீன் பிடிக்கப் போகிறார்கள்.

கன்னியாகுமரி கிராமத்துக்கு கிழக்கே சின்ன முட்டம் கிராமத்தில் படகுத் துறை இருக்கிறது. அங்கு ஸ்டீம் லாஞ்சுகளில் மீன்பிடிப்புக்குப் போவார்கள். நாகப்பட்டினம் துறையில் பார்த்தது போன்று பெரிய படகுகளில் ஏழெட்டு பேர் போய், 3 நாட்கள் முதல் 10-15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன் பிடித்து வருவார்கள். அதற்கேற்ற மீன் சேமிப்புக் கிடங்கு, குளிர் பெட்டி வசதி, உணவு சமைக்க அடுப்பு, உணவு பொருட்கள், பல நூறு லிட்டர் டீசல் என்று எடுத்துப் போவார்கள். இழுவலை பயன்படுத்தி பெரும் அளவிலான மீன்களை அள்ளி வந்து விடுவார்கள்.

அவர்களது முதலீடும் அதிகம் வருமானமும் அதிகம். வள்ளத்தில் போகும் மீனவர்களுக்கு கிட்டத்தட்ட அன்றாடங் காய்ச்சி பிழைப்புதான்.

ஒரு வள்ளத்தில் 4 பேர் போவார்கள். ஒரு சில மணி நேரங்கள் கடலுக்குப் போய் மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து மீனை விற்று விட்டு மீண்டும் அடுத்த நாள் கடலுக்குப் போவதுதான் வாழ்க்கை. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப் போவார்கள். பெரிய நீராவிப் படகுகளுக்கு இருக்கும் 45 நாட்கள் தடை இவர்களுக்குக் கிடையாது.

வாவுத் துறையில் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டுப் போய் 7 மணி முதல் திரும்பி வர ஆரம்பிப்பார்கள், வெயில் ஏறுவதற்கு முன்பு மீன் விற்றுத் தீர்த்திருக்க வேண்டும். மதியம் சாப்பிட்டு ஓய்வெடுத்து விட்டு, மாலையில் வலையை ரிப்பேர் செய்வது, அடுத்த நாள் தொழிலுக்கு தயாரித்தல் என்று மீண்டும் படகுக்கு வந்து விடுகிறார்கள்.

ஆண்டின் ஒவ்வொரு சீசனிலும் மீன் பிடிப்பு மாறலாம். எந்த வகை மீன் பிடிப்பது என்ற திட்டத்துக்கேற்ப வலையும் மாறும். வலையின் விலை 1 லட்ச ரூபாய் வரை ஆகும். தினமும் பழுதுகளை செப்பனிட்டுக் கொண்டே இருந்தால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். இப்போது அவர்கள் பிடிப்பது கொயிலு குட்டி, பாறை குட்டி போன்ற சிறு மீன்கள்தான்.

நவீன கருவிகளை வாங்கினால் மீன்பிடிப்பு மேம்பட முடியும். ஜிபிஎஸ், காம்பஸ் போன்வற்றை பல ஆயிரம் கொடுத்து எல்லோராலும் வாங்க முடிவதில்லை. பரம்பரை பரம்பரையாக வரும் அறிவிலும் அனுபவத்திலும் எந்த பகுதியில் மீன் கிடைக்கும் என்று உணர்ந்து, மீன் பிடிக்கப் போகும் போது நீரோட்டத்தைப் பின் தொடர்ந்து மீன் கூட்டத்தைக் கண்டறிவதும், கடலுக்குள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்வதுமாக தொழில் செய்கிறார்கள்.

எக்கோ கருவிகள் மூலம் மீன்களின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது, ஆனால் தேவையில்லை, வாங்கவில்லை.

கன்னியாகுமரியிலிருந்து தெற்கு நோக்கி போனால் இந்திய பெருங்கடல், மேற்கே போனால் அரபிக் கடல், கிழக்கே வங்காள கடல். திட்டத்தின்படி எங்கு அதிக வாய்ப்போ அங்கு போகிறார்கள். இறால் போன்ற விலை உயர்ந்த மீன்கள் கேரளா கடற்கரைக்கு அருகிலான கடலில் நிறைய கிடைக்கின்றன. அங்கு காயல்கள் அதிகமாதலால் இறால் வளரும் சேற்றுப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. கன்னியாகுமரி பகுதியில் கல் இடுக்குகளில் வளரும் கல் இறால்தான் கிடைக்கிறது. இங்கு ஆண்டுக்கு மூன்று  மாதங்கள்தான் இறால் பிடிக்க முடியும். மற்ற மாதங்களில் கிடைப்பதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தனாறு கடலில் கலக்கும் மணக்குடி காயல் பகுதியில் இறால் கிடைக்கிறது.

வாவுத்துறையில் வசிக்கும் முக்குவ சாதி மீனவர்களுக்கும், அருகில் இருக்கும் கன்னியாகுமரியில் வசிக்கும் பரவர் சாதி மீனவர்களுக்கும் பிணக்குகள் ஏற்பட்டு சமரசம் செய்து கொண்டு தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படுகிறார்கள். வாவுத்துறையினர் அதிகாலையில் போய் முற்பகலில் திரும்பி விட, கன்னியாகுமரி மீனவர்கள் பிற்பகல் 3-4 மணிக்குப் புறப்பட்டு போய், நட்சத்திரம் தோன்றும் நேரத்தில் வலை விரித்து, நட்சத்திர ஒளியில் மேல் வரும் மீன் பிடித்து பின்னிரவில் கரை திரும்பி மீன் விற்கிறார்கள்.

இரு தரப்பு மீனவர்களும் கத்தோலிக்க மடத்தைச் சேர்ந்தவர்கள்தான். கோட்டாறு மறை மாவட்டத்தின் கீழ் வருபவர்கள். இந்து மதத்தின் எச்சங்களாக பீடித்திருக்கும் சாதிப் பிரிவினை உடைந்து போகாமல் சின்னச் சின்னதாக பல தகராறுகள் ஏற்பட்டன. வீணாக எதற்கு சச்சரவு என்று பிரிந்து விட்டார்கள். வாவுத்துறையினர் கடந்த ஒரு ஆண்டுக்குள் தங்களுக்குள் பணத் திரட்டி தனியாக சர்ச் கட்டிக் கொண்டார்கள். ஆனால், மீன் விற்கும் சந்தை இரண்டு பிரிவிற்கும் பொதுவாக வாவுத்துறையில்தான் இருக்கிறது.

கன்னியாகுமரி கிராமத்தில் சுமார் 600-700 வீடுகள் இருக்கின்றன. சுமார் 400-500 படகுகள் இயங்குகின்றன. கன்னியாகுமரிக்கு கிழக்கே, சின்ன முட்டம், தொடர்ந்து புது கிராமம். மேற்கு பக்கம் குளச்சல்.

வாவுத்துறையிலிருந்து வலது பக்கம் பார்த்தால் விவேகானந்தர் பாறைக்குப் போகும் படகு குழாம், கடிகார சுழற்சிக்கு எதிர் திசையில் பார்வையைத் திருப்பினால், முதலில் திருவள்ளுவர் பாறை, அடுத்து விவேகானந்தர் பாறை, கடல், பார்வை எல்லையின் வலது முனையில் கூடங்குளம் அணுமின் நிலையம், அதை அடுத்து சின்னமுட்டம் மீனவர் கிராமம், தொடர்ந்து கன்னியாகுமரி என்று ஊர்கள். சின்ன முட்டம் மீனவர் கிராமத்துக்கும் கன்னியாகுமரி கிராமத்துக்கும் நடுவில் இருக்கிறது விவேகானந்தபுரம் என்று தமிழிலும் விவேகானந்தா கேந்திரா என்று அமைப்பினராலும் அழைக்கப்படும் இடம். இது ஆர்.எஸ்.எஸ் இன் பினாமி அமைப்பு.

கன்னியாகுமரியில் வந்து முடியும் தேசிய நெடுஞ்சாலை தாண்டி சிறிது தூரத்திலேயே ஊருக்குள் நுழையும் போது வலது பக்கம் இருக்கிறது அதன் நுழைவாயில். ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஏகநாத் ரானடே என்பவர் 1970களின் தொடக்கத்தில் கன்னியாகுமரிக்கு வந்து இந்த இடத்தை வளைத்துப் போட்டு ஏற்படுத்திய அமைப்பு. அதே நேரத்தில்தான் கடலுக்கு சில மீட்டர் தொலைவில் இருக்கும் பாறையை விவேகானந்தர் பாறை என்று மாற்றி இன்று ஒரு சுற்றுலா தலமாக மாற்றியிருப்பது.

ஒரு லாட்ஜ் போல போய் தங்கிக் கொள்ள அறைகள் வாடகைக்கு விடுகிறார்கள். இந்தியா முழுவதும் இருந்து பலர் வந்து தங்குகிறார்கள். பல ஏக்கர்கள் நிலத்தை கடற்கரைக்கு அருகில் வளைத்திருக்கிறார். அன்றைய மத்திய அரசு ஆதரவுடன் இந்துத்வவாதிகள் இதை நிறைவேற்றியிருக்கின்றனர். அப்போதைய அரசுகளும், கேரளாவில் இயங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பும் திட்டமிட்டு செய்தது என்று யாகப்பன் சொன்னார்.

இந்த விவேகானந்தர் பாறையும் விவேகானந்தபுரமும் அமைக்கப்பட்ட வரலாற்றைச் சொன்னார். அவருக்கு 54 வயதாகிறது, 1958ல் பிறந்தவர். அவருக்கு நினைவு தெரிந்தது முதல் “இப்போது விவேகானந்தர் பாறை இருக்கும் இடம் செடிகள், மரங்கள் வளரக் கூடிய இடம். ஆடு மாடுகள் மேயப் போகும். அப்போது கடலும் உள்வாங்கிதான் இருந்தது. கரை வரை வந்திருக்கவில்லை. பெண்கள் சாணி வறட்டி தட்டி உலர்த்தும் இடம். அந்தப் பாறையில் ஒரு குருசு வைக்கப்பட்டது.”

“ஆர் எஸ் எஸ் காரன்கள் கேரளாவிலிருந்து வந்து ஒரு நாள் குருசை பிடுங்கி எறிந்து விட்டு அதில் விவேகானந்தர் சிலையை வைத்து விட்டார்கள். ஒரு மீன் பிடி படகு போன்ற படகில்தான் போனார்கள்.  மீனவர்கள் பொதுவாக வெளி உலக விவகாரங்களில் வித்தகம் பெற்றவர்கள் கிடையாது. மீன் பிடிப்பதும், விற்பதுமாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்துபவர்கள்.  இதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது என்ற நுணுக்கமாக யோசிக்காமல் வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டுவார்கள். மீனவர்கள் எல்லாம் போராட ஆரம்பித்து, எதிர்வினையாக போலீசைக் கொண்டு குவித்து தாக்க ஆரம்பித்தார்கள்.”

“மீனவர்கள் எங்கே போவார்கள், கடலுக்குள்தான் படகில் ஏறி தப்பிக்க முடியும். நான் அப்ப சின்ன பையன், மூணாங்கிளாசோ என்னவோ படிச்சுக்கிட்டிருந்தேன்.  விபரம் தெரியாது. ஆனால் போலீசிடமிருந்து தப்பிக்க எங்க அப்பா என்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்கு படகில் போனதும் திரும்பி அந்த பாறையைத் தாண்டி ஊருக்குள் அழைத்துப் போனதும் இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு என்ன என்று விபரம் புரியவில்லை”

“கொஞ்ச கொஞ்சமாக அந்த பாறையில் மரம் செடிகளை அழைத்து கட்டிடங்களை கட்டினார்கள். சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துப் போய் காட்டி சுற்றுலா இடமாக வளர்த்தார்கள். அதன் பிறகு பெரிய போட் விட ஆரம்பித்தார்கள். இந்த இடங்கள் எல்லாம் எங்க இடம்தான். ஆக்கிரமித்து கட்டினார்கள். படகு போவதற்கு இடையூறாக மணல் குவிவதால் மணலைத் தோண்டிக் குவிக்க ஆரம்பித்தார்கள். மணல் தோண்டத் தோண்ட கடல் அரிப்பு அதிகமாக கரைக்குள் கடல் வர ஆரம்பித்தது. அதை எதிர்த்து மீனவர்கள் குரல் கொடுத்து விண்ணப்பம் கொடுத்தார்கள்.

“1980களில் எம்ஜிஆர் ஆட்சியில் முத்துசாமி போக்குவரத்து அமைச்சராக இருக்கும் போது படகு போக்குவரத்தை அரசாங்க நிறுவனமாக மாற்றிக் கொண்டார்கள். அதன் பிறகு இப்படியே தொடர்கிறது.”

கிருத்தவ மத போதகர்களுக்கும் இந்த ஏகநாத் ரானடேவுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் இடையேயான வேறுபாடு பளிச்சென உறைத்தது. கிருத்துவ மதம் பரப்ப வந்தவர்கள், மீனவ மக்களுக்கு மத்தியில் சர்ச் அமைத்து அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள். மீனவர்களுக்கு கல்வி வசதி, மருத்துவ வசதி, அரசியல் வழிகாட்டல் என்று அவர்களோடு இணைபிரியாமல் ஒன்று கலந்து விட்டார்கள். அவர்களுக்குப் போட்டியாக, இந்து மதத்தைப் பரப்ப வந்த ஒரு காவித் துறவியின் மனம் எப்படிப் போயிருக்கிறது!

கன்னியாகுமரி மீனவர் கிராமத்துக்கும் சின்ன முட்டம் கிராமத்துக்கும் நடுவில் மீனவர் மக்கள் சமூகம் வளர வேண்டிய அவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக உரிமையுள்ள ஒரு பெரும் பரப்பை வளைத்து வேலி கட்டி, அதற்குள் உள்ளூர் மக்கள் வருவதற்கு தடை செய்து இந்தியா முழுவதுமிருந்து வரும் மக்களுக்கு தங்க வசதி செய்து கொடுத்து பாரத தேசத்தைக் கட்டி அமைக்கிறார்கள். விவேகானந்தர் பாறையும் உள்ளூர் மக்களிடமிருந்து தனிப்பட்டு சுற்றுலா சின்னமாக பராமரிக்கப்படுகிறது. ஏகநாத் ரானடே மீனவர்களுக்கு நடுவே வாழப் போயிருந்தால் ஒருவேளை அவரது இந்து மத புனிதம் கெட்டுப் போயிருக்கலாம். விவேகானந்தபுரத்துக்குள்ளும் விவேகானந்தா பாறைக்கும் உள்ளூர் மக்களுக்கு சென்று வர உரிமை இல்லை.

விவேகானந்தா கேந்திரம் என்பது வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு லாட்ஜாகவும், இந்துத்துவா இயக்கங்களுக்கு ஒரு செயல் களமாகவும் பயன்படுகிறது. இந்து மதம் உழைக்கும் மக்களின் மத்தியில் இழைக்கும் அநியாயத்துக்கு இது ஒரு வலுவான வாழும் எடுத்துக்காட்டு.

“சுனாமியின் போது பெரிய பாதிப்பு இங்கு இல்லை. இந்தப் பகுதி நிலம், கடல் மட்டத்திலிருந்து உயரமாக இருப்பதால், புயல் சுனாமி போன்ற பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. சுனாமியின் போது கடற்கரை ஓரமாக இருந்த சில குடிசைகள் அடித்துப் போகப்பட்டன. சர்ச்சுக்குள் வெள்ளம் புகுந்தத்து. மற்றபடி பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை. சுனாமி வீடு கட்டித் தருகிறோம் என்று ஊருக்கு உள்ளே கடலிலிருந்து தள்ளி இருக்கும் இடத்தில் வீடு கட்டிப் போகச் சொன்னார்கள். சில பேர் அதற்கு மயங்கி ஒப்புதலும் கொடுத்தார்கள். கடலிலிருந்து விலகி மீனவர்கள் வாழ முடியாது என்று நாங்கள் எல்லோரும் மறுத்து விட்டோம்.”

இன்றைய தலைமுறையிலும் பல இளைஞர்கள் மீன்பிடித்தொழிலில் இறங்குகிறார்கள். யாகப்பனின் மூன்று மகன்களில் இரண்டு பேர் படித்து நிறுவனங்களுக்கு வேலைக்குப் போயிருக்கிறார்கள். மூத்த மகன் கடல் தொழிலில் இறங்கி விட்டான். அவரது அண்ணன் கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார். அவருக்கு படகில் போவது சின்ன வயதிலிருந்தே ஒத்துக் கொள்ளவில்லை. வாந்தி வருவது என்ற ஒவ்வாமைகள். படித்து கொஞ்ச நாள் பல்லவன் போக்குவரத்து கழகத்தில் சென்னை, வேலூரில் வேலை பார்த்தார். திருமணத்துக்குப் பிறகு கன்னியாகுமரி பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றாராம்.

இதற்குள் இருட்டி விட்டிருந்தது. தூரத்தில் தெரிந்த விளக்குகள்தான் கூடங்குளம் அணுமின்நிலையம் என்று சுட்டிக் காட்டினார். கடலுக்குள் சில கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். அப்படியே சர்ச்சைச் சுற்றிக் கட்டியிருந்த நடைபாதையில் நடந்து போய் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு விடை பெற்று முடித்துக் கொண்டோம். திரும்பும் போது கிராமத்துக்குள் நுழைந்து முடிந்தால் பரவர் பகுதியையும் பார்த்து விடலாம் என்று நடந்தேன்.

புதிதாகக் கட்டப்பட்ட சர்ச்சுக்கு முன்னர் இரண்டு சாதியினரும் பொதுவில் பயன்படுத்திய பழைய சர்ச் இப்போது புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிராமத்தில் வீடுகள் எல்லாமே நல்ல கான்கிரீட் கூரைகளுடன், தொலைக்காட்சி, வசதிகளுடன் இருந்தன. தெருக்களில் தார் அல்லது சிமென்டு தளம் போட்டிருந்தார்கள். குப்பை கூழங்கள், சாக்கடைகள் எல்லாம் முறையாக பராமரிக்கப்படுவது புரிந்தது. பெண்களும், குழந்தைகளும் நவீன உடை உடுத்து உலாவிக் கொண்டிருந்தார்கள். இரு சக்கர வண்டிகளில் இளைஞர்கள்  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அலங்கார மாதா சர்ச் முன்பு திரும்பி சாலைக்கு வந்தேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும் போது மணி 4.30. பல் தேய்த்து விட்டு சூரிய உதயம் பார்க்கப் போகலாம் என்று திட்டம். விவேகானந்தா கேந்திரத்துக்குள்ளே நடந்து கடற்கரைக்குப் போக முடியும். பெரிய இடம், நிறைய மரங்கள். அங்கங்கு சில கட்டிடங்கள். இந்துத்துவா சக்திகளின் கேந்திரமாக இயங்கும் இடம்.

சுமார் கால் மணி நேர நடைக்குப் பிறகு கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். கடலில் எப்படி வேலி போட்டிருப்பார்கள்? கடற்கரைக்கு சில மீட்டர்கள் முன்னதாக சுவர் கட்டிச் சுற்றுச் சுவரை மூடியிருந்தார்கள். கடற்கரைக்குப் போக ஒரு கேட். அந்த கேட்டை காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் மட்டும், சுற்றுலா பயணிகள் சூரிய உதயம், மறைவு பார்க்க வசதியாக திறக்கிறார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் ஒரு சீருடை அணிந்த பாதுகாவலர் வந்து கதவைத் திறந்து விட்டு விட்டு காவலுக்கு நின்று கொண்டார். மீனவர்கள் உள்ளே வந்து விட்டால்?

வெளியே போனால், மணலில் ஷீட் விரித்து சங்கு, சிப்பி விற்பவர்கள், காபி டீ விற்பவர்கள் தயாராக காத்திருந்தார்கள். கிராமத்திலிருந்து கடற்கரையோரமாக வந்திருந்தார்கள். இங்கிருந்து கடற்கரையோரமாக நடந்து கிராமத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

சூரியன் உதிக்கும் வரை கடல் அலையில் கால் நனைத்து விட்டு புறப்பட்டேன். மணல் மெத்தென்றிருக்கும் கரு மணல். நடந்து கேந்திரம் சுற்றுச் சுவரை தாண்டியதுமே வள்ளங்கள், கிராமங்கள் கண்ணில் பட்டன. அதிகாலையில் மலம் கழிப்பவர்களை தொந்தரவு செய்யாமல் போக வேண்டும். அப்படியும் ஒரு படகின் மறைவில் இருந்தவர் முன்பு வந்து விட்டேன். மற்றபடி தவிர்த்துக் கொண்டு வள்ளங்களின் ஊடாக நடந்தேன்.

மாலையில் மீன் பிடிக்கப் போவதற்கு தயாராக, அதிகாலையிலேயே வலைகளை பிரித்துக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். கல்லால் கட்டப்பட்ட அணை ஒன்றில் கல் கல்லாகத் தாண்டி படகுகள் நிறைய நின்றிருந்த துறைக்கு வந்தேன். முந்தைய நாள் பேசியவர்கள் சொன்ன விபரங்களை இந்தப் பகுதியில் ஒருவரிடம் பேசி உறுதி செய்யலாம் என்று பார்த்தேன். மூன்று பேர் ஒரு வள்ளத்தின் முனையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“கடலுக்குப் போய் விட்டு வந்தாச்சா, இனிமேல்தான் போகப் போறாங்களா” என்று கேள்வி போட்டேன்.

“மதியம் 3, 4 மணிக்குப் போகணும். இப்பவே தயாரிச்சு வைத்துக் கொள்வாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வெயில் ஏறி விடும். அதற்கு முன்பு இந்த வேலைகளை முடித்து விடுவோம்”

இவர்கள் பிற்பகல் கடலுக்குப் போய் இரவு திரும்புபவர்கள்.  சூசை மரியான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஊரில் ரட்சகர் தெரு, அலங்கார மாதா தெரு, சூசையப்பர் தெரு, அந்தோணியார் தெரு, சகாயமாதா தெரு தொடர்ந்து சின்ன முட்டம் இருப்பதாக விபரம் சொன்னார். இவரும் வாவுத்துறை மீனவர்களுடனான பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னார். அவர்களுடன் இவர்களுக்கு ஒத்துப் போவதில்லை.

கூடங்குளம் பற்றி பேசினார்.

“கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். ஒரு விபத்து நடந்தால் மேற்கே திருவனந்தபுரம் வரை, கிழக்கே திண்டுக்கல் வரையில் மக்களை வேறு இடத்துக்குக் கொண்டு போகணும். அதை எப்படிச் செய்வீங்க? வாழ்வதற்கு கரெண்ட் வேணும் என்று சொல்கிறான். வாழ்வே இல்லை என்றால் கரண்ட் எதுக்கு?” என்று பல எளிமையான கேள்விகளை கோபமாக முன் வைத்தார்.

“கடற்கரை காரங்க என்றால் அவங்களுக்கு எல்லாம் இளக்காரம். இவங்க வச்சிருக்கிற கருவிகள், இன்டர்நெட் இல்லாமலேயே நாங்க கடலில் வழி கண்டு பிடித்து தொழில் செய்கிறோம். இவங்க சொல்கிற ஓட்சும், புரோட்டீனும் இல்லாமலேயே உடல் உறுதியாக இருக்கிறோம். படிச்சவனுங்க என்று பைத்தியக்காரன் ஆக்கப் பார்க்கிறான்”

“போராட்டத்துக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்கிறான். கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு 14,000 கோடி எங்கிருந்து வந்தது? என்று நீ முதலில் சொல்லு. 10-15 வருஷம் முன்னால மதக் கலவரம் நடந்தது. அப்போ புத்தி கெட்டு நடந்தது (இப்போ எல்லாம் இல்லை). அப்போ அந்தப் பக்க ஊரில் எல்லாம் மக்கள் தெருவுக்கு வர வேண்டி ஆனது. சாப்பாடு கிடையாது. இங்க இருந்த மீனவர்கள் படகில் அரிசியையும், பருப்பையும், எடுத்துக் கொண்டு போய் அவங்களுக்குக் கொடுத்து உதவி செய்தாங்க? அதுக்கெல்லாம் கணக்கு எவன் சொல்ல முடியும்?”

“கன்னியாகுமரியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவா ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 3 நாள் மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்து மக்கள் வந்தாங்க. தாய் வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவது எங்க கடமை. மூணு நாளும் காலைல காபி, டிபன், மத்தியானம் சாப்பாடு, சாயங்காலம் காபி, ராத்திரி சாப்பாடு எல்லாம் நாஙகதான் போட்டோம். எத்தனை லச்சம் செலவாச்சின்னு கணக்கு வச்சா போடுவோம்.”

“எவனாவது கணக்குன்னு கேட்டுக்கிட்டு கிராமத்துக்குள்ள வந்தான்னா திருப்பிப் போக மாட்டான். எப்படிப் போட்டோம்னு தெரியணுமா?, ‘டேய், சார் நல்ல சட்டை எல்லாம் போட்டிருக்காருடே, உள்ளே கூட்டிட்டுப் போ’ என்று போய் ரச வடையும், இட்லியும் கொடுத்தா தெரியும் கணக்கு!”

“இடிந்த கரையில மக்கள் மீது எவனாவது கை வச்சான்னா, கன்னியாகுமரியில வந்திருக்கும் டூரிஸ்டு ஒருத்தன் கூட வெளிய போக முடியாதபடி செய்து போடுவோம்”

“கடற்கரை மக்களுக்கு அறிவில்லை, அணு உலை பாதுகாப்புதான்னு சொல்றானுங்க? அப்ப ஏன் கடற்கரையில் அணுஉலையை வைக்கிற? அப்படி சொல்லக் கூடியவன் ஊரில, அவங்க வீடுகளுக்கு நடுவில வைக்க வேண்டியதுதானே” என்று பொரிந்து தள்ளி விட்டார்.

“அப்படி ஏதாவது விபத்து நடந்தால் நம்ம காலத்திலேயே நடக்கணும் என்றுதான் எனக்கு ஆசை. அத்தோடு நாமும் சாவோம், எல்லாவனும் சாவான். எதிர்காலத்தில நம்ம புள்ள குட்டிகளுக்கு என்ன ஆகும் என்று நமக்கு பதைக்காமல் இருக்கும் அல்லவா!”

“இந்த டூரிஸ்டுகளுக்கு எங்கள பார்த்தா இளக்காரம். இவ்வளவு பெரிய லாட்ஜூகள் கட்டியிருக்கான். அவ்வளவிலிருந்தும் சாக்கடை எல்லாம் அன்னா தெரியுதே கண்வாய் அது வழியாக கடலுக்குள்ளதான் வந்து சேருகிறது. அத மாதிரி 3 இருக்கு. நாங்க ஏதாவது சொல்றோமா. கடலுக்கு வந்து விட்டு வீட்டுக்குப் போனா, காலை டெட்டால் சோப்பு போட்டு கழுவா விட்டால் நோய் வந்து விடும். இந்த லாட்ஜுகள் எல்லாம் மணி முதலாளிக்கு சொந்தம். ஒரு டூரிஸ்ட் கன்னியாகுமரிக்கு 1 லட்ச ரூபாயோடு வந்தா, 70,000 ரூபாய் மணி முதலாளிக்குத்தான் போகும், 30,000 ரூபாய்தான் மற்றவங்களுக்கு பிரிச்சுக்கும்.”

“பகவதி அம்மன் கோவிலச் சுற்றி பிராமணனுங்க வீடுதான் இருந்தது. அவங்க எல்லாம் லாட்ஜூகளுக்கு வித்து விட்டு பஞ்சலிங்கபுரத்துக்குப் போய் விட்டாங்க. கன்னியாகுமரி ஊரில் மீனவர்கள் மட்டும்தான் இன்னுமும் ஊராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீதி எல்லாம் டூரிஸ்டு தொழிலுக்குப் போய் விட்டது.”

பேசி முடித்து விட்டு எழுந்து கரையோரமாகவே நடந்து வாவுத்துறையில் காலையில் மீன் பிடிக்கப் போனவர்கள் திரும்பி வரும் சந்தைப் பகுதிக்கு வந்தேன். சூரியன் நன்கு மேலே ஏறியிருந்தது. படகுகள் மீன் சுமையுடன் திரும்பிக் கொண்டிருந்தன. மீன் சந்தையும் சூடுபிடித்திருந்தது. கன்னியா குமரி எனும் புகழ் பெற்ற சுற்றுலா மையத்தின் மண்ணின் மைந்தர்கள் அந்த சுற்றுலாவோடு தொடர்பில்லாமல் தங்களது அன்றாட வாழ்வை சுறுசுறுப்புடன் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

_____________________________________________________

வினவு செய்தியாளர்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளின் விலை இரண்டு மூன்று மடங்கு என ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிப்பதாக உள்ளது. தினசரி வருமானம் சராசரியாக 20 ரூபாய்க்கு கீழே உள்ள 80 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் அடிக்கடி உயர்த்தப்படும் விலைவாசி என்பது மக்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ளது.

உழைக்கும் மக்களின் வருமானத்தை, வாழ்வாதாராத்தை உயர்த்தாமால் திட்டமிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பது போல் உள்ள இந்த விலையேற்றம் தனியார் முதலாளிகள் லாப நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வினை தனியார் பேருந்து முதலாளிகள் வரவேற்பதிலிருந்தே இந்த அரசு தனியார் முதலாளிகளுக்காக செயல்பட்டது நிரூபணமாகி உள்ளது.

இந்த அரசின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தினசரி பேருந்திற்கு மட்டும் 50 ரூபாயக்குமேல் மக்களிடம் பறிக்கும் ஜெயலலிதாவின் தடாலடி அறிவிப்பினை கண்டித்தும்,

திங்கள் 21.11.2011 அன்று காலை 10.30 மணியளவில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை முதல் நூற்றுக்கணக்கான போலீசார், தி.நகரை சுற்றி வளைத்து அந்த சாலைகளில் இருந்த அனைவரையும் விசாரித்து விரட்டியபடி இருந்தனர். தி.நகர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றவர்களை கூட போலீசு விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த சில சிவப்பு சட்டைகளை பார்த்தவுடன் சமரசம் பேசியது போலீசு.

பால் விலை, பேருந்து கட்டணம், மின்சாரம் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு விசம் போல ஏறி உழைக்கும் மக்களை கொன்று கொண்டு இருக்கும் சூழலில் இதற்கு காரணமான தனியார் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த அரசு உழைக்கும் மக்களுக்காக போராடும் தோழர்களிடம் பேசும் சமரசம்  எடுபடுமா என்ன?

தனியார் முதலாளிகளுக்கு அவர்களின் லாபத்திற்கு விலை போகின்ற இந்த அரசும், அதன் அடியாள் படையான போலீசையும் எதிர்த்து கண்டன முழக்கமிட்டபடி, இந்த விலைவாசி உயர்விற்கு காரணமான தனியார் முதலாளிகளை அம்பலப்படுத்தும் விதமாக சுமார் 300க்கும் மேற்பட்ட தோழர்கள் சீறிபாய்ந்து பேருந்து நிலையத்தின் முன் குவிந்தனர்.

15 நிமிடங்களுக்கு மேல் தோழர்களை முழக்கமிடவோ, ஆர்ப்பாட்டம் நட்த்தவோ அனுமதிக்காத போலீசு அனைவரையும் இழுத்து வண்டியில் ஏற்றிய சிறிது நேரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பரித்து கண்டன முழக்கமிட்டனர். அப்போது அவர்களை பெண் போலீசார் சுற்றி வளைத்து கொண்டு இருந்தபோது குறிக்கிட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்து கொண்டு இருந்த செய்தியாளர்களை பார்த்து, ’நீங்கள் கொஞ்சம் கேமராக்களை நிறுத்துங்கள், இவர்களை நாங்கள் எப்படி வண்டியில் ஏத்துகிறோம் என்று பாருங்கள்’ என காட்டுமிராண்டிதனமாக பேசினார். இதனை பொருட்படுத்தாமல் தோழர்கள் முழக்கமிட்டபடியே இருந்தனர்.

பின்னர் அனைவரையும் கைது செய்து தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விலைவாசி பலமடங்கு ஏற்றி உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிக்கும் இந்த பாசிச பேய் ஜெயலலிதாவை பார்த்து பம்மி பதுங்கும் கருணாநிதி முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்லும் விஜயகாந்த், புலம்பிக் கொண்டு இருக்கும் போலிகள் வரை செய்வதறியாது திகைத்து நிற்கும் போது மக்களிடம் போராட்ட குணத்தை தூண்டும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த விலை ஏற்றத்தை வெறுமனே அரசு அறிவிப்பாக பார்க்காமல் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் மயத்திற்கும் விலைபேசும் நடவடிக்கையாக புரிந்து கொள்வதும், மக்களிடையே அதை பரப்பவும் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்தோடு மக்களை அணி திரட்டி போராடி வருகின்றன.

ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்:

சென்னை தி.நகர்:

கடலூர்:

தரும்புரி:

மதுரை:

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர்!

436

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர். ”நான் இசுலாமியமதத்தை இம்மியளவும் பிசகாமல் கடைபிடிப்பவன்” என்று கூறிக்கொண்டு, வெளியூரிலிருந்து TNTJ காரர்களை கூட்டிவந்து தனது வீட்டில் மத சொற்ப்பொழிவு நடத்துவது, அதிலும் குறிப்பாக பெண்களுக்காக அதிகம் நடத்துவது, தனியாக தொழுகை நடத்துவது (சுன்னத் ஜமாத்துடன் சேராமல்), TNTJ பொதுக்கூட்டம் நடத்துவது  என்று இவரின் செயல்களை கூறிக்கொண்டே போகலாம்.

” இசுலாத்திற்கு எதிராக கருத்துக்களை கூறிக்கொண்டும் வெள்ளிக்கிழமை கூட தொழுகைக்கு வராமல் நாத்திகம் பேசுபவனை அடித்தால் அல்லது கொன்றால் மறுமையில் அல்லா சுவர்க்கம் கொடுப்பான்” என்றும், அதற்கு ஆதாரமாக இசுலாமிய அரசியல் போர் வரலாற்றை கூறி இளைஞர்களை உசுப்பேற்றுவது அவருடைய பொழுதுபோக்கு. அதோடு மட்டுமல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு, தனியாக கார் எடுத்து மைக்கு கட்டி ஒவ்வொரு முசுலீம் ஊரிலும் ”திமுகவிற்கு வாக்களியுங்கள், கருணாநிதியிடம் பெரியவர் PJ இடஒதுக்கீடு மற்றும் இசுலாமிய நலன்களைப் பற்றியெல்லாம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்” என்று தனது வீட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்கு நேர் எதிராக அதிமுக-விற்க்கு (பாசிச ஜெயாவிற்கு) ஆதரவாக பாசித்தும் TNTJ வும் செயல் பட்டனர். இதில் வினோதம் என்ன? ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி தலைவருக்கு பண செல்வாக்கு இல்லாத ஒரு முசுலீம் உட்பட பலர் போட்டியிட்டனர். இவர்களில் சக்திவேல் என்ற வேட்பாளரைப் பற்றி சின்ன பிள்ளையைக் கேட்டாலும் தெரியும், இந்துத்துவ வெறியனென்று. இந்த ஊரில் நடந்த பல இந்து முஸ்லீம் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணகர்த்தா மேற்கண்ட சக்திவேல்தான்.

இப்படிப்பட்டவரிடம் பாசித்தும் TNTJ ஊர்க்கிளையும் சந்தித்து சக்திவேலுக்கு ஆதரவளிக்க ரூபாய் 60 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு, அவ்வேட்பாளர் வெற்றி பெற்றால் தவ்ஹீது பள்ளிவாசல் கட்டித்தரவேண்டுமென நிபந்தனையும் விதித்தனர். பின்பு அவருக்காக பிரச்சாரம் வாக்குவேட்டை என தூள் கிளப்பினர். மசூதியை இடித்தவர்களிடமே மசூதியை கட்டி தரச் சொல்வது பெரிய வெற்றியல்லவா?.

இந்த யோக்கிய சிகாமணியான அக்மார்க் முஸ்லீம் பாசித்தின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஊருக்குதான் உபதேசம், எனக்கு இதெல்லாம் பொருந்தாது என்பதும் இஸ்லாமிய மதத்தின் பெண்ணடிமைத்தனமும் பாசித்தின் குடும்ப வாழ்க்கையில் இருந்து வெட்ட வெளிச்சமாக தெரியும்.

அதாவது இவருக்கு திருமணமாகி _____________ என்ற மனைவியும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் சில ஆண்டுகளாக தனது மனைவி ஒல்லியாக இருப்பதாகவும், அழகாக இல்லையென்றும் கூறி மற்ற பெண்களிடம் அவர்கள் அழகை வருணித்து தனது மனைவியின் அழகை இகழ்ந்து கூறியும் தனது காம இச்சையை அவர்களிடம் தீர்த்து வந்துள்ளார். இந்த செயலை நியாயப்படுத்த அந்த பெண்களிடம் இஸ்லாமிய வரலாற்றை கூறி அதாவது ‘வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்’ அல்லாவிற்கு ஏற்ற செயல்தான் என சமூகம் காறி உமிழும் இந்த செயலுக்கு புனிதம் வேறு கற்ப்பித்துள்ளார்.

அவரது அக்காவின் மகளை திருமணம் செய்திருக்கும் கணவனின் தங்கை தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கும் நம்மாள் பாசித் கொக்கி போட்டுள்ளார். ஆனால் ‘மகர்’ கொடுக்காமல் கொக்கி போட்டதால் ரொம்பநாள் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இவ்வூரை சேர்ந்த ‘நூர்’ என்ற ஒருவன் அப்பெண்ணுக்கு ‘மகர்’ செய்து கவர்ந்துவிட்டான். இதனால் பாசித் அப்பெண்ணால் கழட்டிவிடப்படவே பொறுமையின் உச்சகட்டத்தை இழந்து அப்பெண்ணின் வீட்டில் நூர் இருக்கும்பொழுது ”விபச்சாரமா செய்கிறீர்கள் இது இஸ்லாத்திற்கு விரோதம்” என கூறி அவனிடம் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.

பாசித்தின் காம விளையாட்டுகள் இப்படி போய்க்கொண்டு இருக்கையில், கிளைமேக்ஸாக கும்பகோணத்தில் ஏழை முஸ்லீம் குடும்பத்தின் வறுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அக்குடும்பத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு TNTJ விடம் முதல்மணம் போன்று திருமணம் நடத்திவைக்க கோரியுள்ளார். TNTJ அப்படி சான்றிதழ் கொடுத்தால் பெண்களால் துடைப்பத்தால் அடித்தே துரத்தப்படுவோம் என்பதை உணர்ந்து சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் திருமணம் செய்ய சூப்பரான ஒரு ஐடியா கொடுத்தனர். நாகூர் போன்ற இடங்களில்  முதல்மணம் என போலியாக திருமணம் செய்ய ரகசியமாக ஏற்பாடு செய்தனர் (எங்கு நடத்த்து என்று நமக்கு சரியாக தெரியவில்லை).

இந்நிலையில் பாசித் இரண்டாவது திருமணம் செய்வதை அறிந்த அவரின் முதல் மனைவி  வடக்கு அம்மாபட்டினம் ஜாமத்தில் புகார் அளித்ததன் பெயரில், பாசித் 18-11-11 அன்று நேரில் ஆஜரானார்.
ஆஜராவதற்கு முன்பே ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை கவனித்துவிட்டார். அதிலும் ஜமாத்தலைவராக இருக்கும் அஹமது ஜலாலுதீன் TNTJ ஆதரவாளர் என்பதோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மருமகளை (மூத்த மகனின் மனைவி) வரதட்சணை கேட்டு கொடுமை செய்தவர். மேலும் பாலியல் தொந்தரவும் செய்தவர். அக்கொடுமை தாங்காமல் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை போலிசு கேசாக மாற்றினால் தனது பணபலத்தின் மூலம் சமாளிப்பேன் என்று இரு ஜமாத்தார்களை (அப்பெண்ணின் ஜமாத் உட்பட) மிரட்டியவர். அப்பெண்ணின் குடும்பத்திடமும் ஒரு தொகையை குடுத்து தற்கொலையை மூடிமறைத்த பலே கில்லாடிதான் இந்த ஜமாத் தலைவர். இவர்தான் இப்பிரச்சனையை விசாரிக்கிறார்.

சில இளைஞர்கள் மேற்கண்ட பாசித்தின் செயலைக்கண்டு கொதித்தனர். டென்சனான ஜாமாத் தலைவர் ”அவரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு இனியொன்னும் செய்யமுடியாது அதனால ரெண்டு பெண்ணும் நமது ஜமாத்தின் இரு கண்கள். அதனால நிர்வாகிகள் நாங்கள் உள்ள தனியா போய் ஒரு முடிவெடுத்திட்டு வரும் வரை எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறினார். ஆனால் பாசித்திடம் ஏன் இரண்டாம் கல்யாணம் செய்தாய் என விளக்கம் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என நடுநிலையான ஜமாத்தார்கள் கூறவே, விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்க்கு பாசித் ”எனது முத்த பொண்டாட்டி தவுஹீது முறைப்படி நடக்க மாட்டேங்குறா; படிப்பறிவில்ல; அழகில்ல; எனக்கும் உணர்ச்சியெல்லாம் இருக்கு. நான் இசுலாத்தின் முறைப்படிதான் கல்யாணம் செய்திருக்கிறேன். ரசூலுல்லாவுக்கு கூட 7 பொண்டாட்டி. ஒரு இஸ்லாமியன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கல்யாணம் பண்ணிகிட்டா அது தப்பில்ல” என்று தத்துவம் பேசவே ஜமாத்தில் சிலர் கொந்தளித்தனர். வாக்குவாதம் கடுமையானது. இறுதியில் நமது நாட்டாமை (ஜமாத் தலைவர்) தலைமையில் நிர்வாகிகள் உள்ளே சென்று முடிவெடுத்து வந்தனர்.

முடிவின் விபரம் என்னவென்றால். பாசித் ரெண்டு கல்யாணம் பண்ணுவதற்கு சொன்ன காரணத்தை ஜமாத் ஏற்றுக்கொண்டது. “அவர் நமது ஜமாத்திற்கு திருமண கட்டணம் ரூவாய் ஐயாயிரம் செலுத்த வேண்டும்; முதல் மனைவியின் பெயரில் இரண்டாண்டுகள் கழித்து ரூவாய் இரண்டு லட்சம் deposit செய்யவேண்டும்; இரண்டு மனைவிகளையும் வாழவைக்கவேண்டும்” என்று ஜமாத் தலைவர் தீர்ப்பை வாசித்த     மறுநிமிடமே பாசித் தயாராக வைத்திருந்த 5,000 ரூபாயை  கொடுத்தார்.  பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜாமத் தலைவர் பாசித்தை  பார்த்து  சத்தமாக  ”நீங்க  கவுரவமான  மரைக்கா  வீட்டு பிள்ள;  நீங்க  நாலு  பேருக்கு  புத்தி சொல்ல  வேண்டியவர்  அதனால ரெண்டு பொண்டாட்டியையும் சந்தோசமா வச்சிருங்க” என்று advice செய்தார். கவுரவம் என்பது காமத்தில்தான் இருக்கு என்பதை ஜமாத்  தலைவர் உணர்த்தினார்

இஸ்லாத்தில் ஜாதியில்லை பிரிவு இல்லை என்று TNTJ தப்பட்டம் அடிக்கிறது.  ஆனால் ஜமாத் தலைவர் மரைக்கா  வீட்டு பிள்ளை என்று கூறும்பொழுது அங்கே இருந்த TNTJ வினரும்  பாசித்தும் மவுனமாக  ஆமோதித்து சிரித்தனர். பின்னே  எப்படிங்க  எதிர்க்க  முடியும்? ஜமாத் தலைவர் அவர்களுக்காக எவ்வளவு செய்திருக்கார் இப்படிப்பட்ட தீர்ப்பு எங்கும் கிடைக்காதில்லையா!
பாசித்தின் இந்த நடவடிக்கையை TNTJ தலைமைக்கு நெருக்கமாக உள்ள அன்வர் என்பவரிடம் இவ்வூர் இளைஞர்கள் தொலைப்பேசியில் கூறியுள்ளனர். அவர் பிரச்சனையை கேட்டுவிட்டு பொறுமையாக ”இதுபோல இருவது புகார் நம்ம (பிற)சகோதரர்கள் மேல இருக்கு. அதனால நீங்களும் புகாரனுப்புங்க பரிசீலிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

பாசித்தின் முதல் மனைவியிடம் இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சொன்னபொழுது, அவர் ”நாங்க மொத்தம் 5 பொம்பளபுள்ளைங்க 4 பேருக்குதான் கல்யாணம் நடந்திருக்கு நான் கம்ளைண்டு கொடுத்தா என்னை எம்புருசன் விவாகரத்து பண்ணிருவேன்னு சொல்லிட்டாரு. அப்படி நடந்தா என்னால ஒண்ணுமே செய்யமுடியாது. எனக்கு அத்தா (அப்பா)  இல்லை அதனால பாவம் அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க. இன்னம் – தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செய்துவைக்கணும், என் தலையெழுத்து இப்படியே இருந்துட்டு போறேன்” என தனது இயலாமையை பதிலாக கூறினார்.

பெண்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறைபடுத்த துடிக்கும் இவர்கள், ஆண்கள் விபச்சாரம் செய்தால் நான்கு மனைவி, வலது கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள் போன்ற சட்டப் போர்வைக்குள் புகுந்து கொள்கின்றனர். பெண்ணடிமையை போதிக்கும் இஸ்லாத்திடம் நிச்சயம் இதற்கு தீர்வு தேடமுடியாது. இந்திய நீதிமன்றங்கள் நிர்வாக சிக்கல் நிறைந்ததும் ஊழல் மலிந்தும் காணப்படுவதால் இவரைப் போன்ற ஏழைப்பெண்கள் நீதி பெறுவதென்பது கடினமான பாதை. இதற்கு தீர்வுதான் என்ன?

இஸ்லாம் போற்றும் அரபு பாதையிலேயே தீர்வை குடுக்கலாமா? திருடினால் கையை வெட்டலாம். பெண் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்து கொல்லலாம். ஆண் விபச்சாரம் செய்தால்……..ஆண் உறுப்பை அறுத்து நாய்க்கு போடும்படி இஸ்லாமிய சட்டத்தை திருத்தலாமா? சம்மதிக்குமா TNTJ?

தமிழகம் முழுவதும் இவர்கள் போட்டு வந்த புனித வேடங்கள் இப்போது ஒவ்வொன்றாக  கலைகிறது. ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை இரக்கமின்றி சீரழித்திருக்கும் இந்தக் கயவர்கள்தான் மதத்தின் புனிதத்தை காக்கும் புண்ணியவான்களாக காட்டிக்கொள்கிறார்கள். மட்டுமல்ல தேர்தல் என்று வந்தால் இந்து மதவெறியருக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள். இத்தகைய பொறுக்கி தளபதிகளைக் கொண்டுதான் தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் சீரும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

உண்மையில் சமூக அநீதிகளுக்கெதிராகவும், சொந்த சமூகத்தில் பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்படும் நிலை கொண்டும் கொதிக்கும் இசுலாமிய இளைஞர்கள் தவ்கீத் போன்ற இத்தகைய மதவாதிகளின் மாயவலையிலிருந்து துண்டித்துக் கொள்ளவேண்டும். இசுலாமிய உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் சேர்வதினூடாகத்தான் தங்களது சொந்த விடுதலையை சாதிக்க முடியும்.

கயவர்களுக்கு பாடம் புகட்ட களம் காணுவோம்!

____________________________________________________________________

–       ஜமால்

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ரா ஒன்: ஷாருக்கான் ஒரு கலைஞனா, முதலாளியா?

7

தொழில் முறையில் பணிபுரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், எஞ்சினியர்கள், திரைப்படக் கலைஞர்கள் போன்றவர்கள தமது துறையில் முழுக் கவனத்தைச் செலுத்தி துறைசார் அறிவையும் திறமைகளையும் தொடர்ந்து  மேம்படுத்திக் கொண்டே இருந்தால்,  வாய்ப்புகள் கிடைத்து சமூககொண்டேத்தில் முன்னேறி பெரிய பதவிகளையும் செல்வாக்கையும் அடையலாம் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் free market என்று அதியமான்கள் கொண்டாடும் முதலாளித்துவத்தின் சந்தை ஆதிக்கம் நுழைந்து விட, ஒருவர் வளச்சி பெறுவதற்கு துறை சார்ந்த அறிவையும், திறமைகளையும் தாண்டி  தமது திறமைகளை சந்தைப்படுத்தும் வியாபார சாதுர்யமும் அலுவலக அரசியல் மூலம் நிறுவனத்துக்குள் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் சாமர்த்தியமும்தான் பெருமளவில் தேவைப்படுகின்றன.

அதாவது திறமைகள் கொண்ட ஒரு மருத்துவருக்கு மருத்துவமனை எனும் பெரும் முதலீடு பிடிக்கும் நிறுவனம் தேவைப்படுகிறது. அதன்றி அவரது திறமை இல்லை. அது போல திரைப்பட நடிகர்களுக்கும் திரையுலகம் என்ற மாபெரும் முதலீட்டு துறை இருந்தால் போதும், நொடியில் அவர்கள் நட்சத்திரமாகவோ இல்லை தயாரிப்பாளராகவோ உருவெடுக்க முடியும்.

திரைப்படத் துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் திருப்பம் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படம். இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்துக்கும் ‘தமிழர் பெருமை’யை தூக்கிப் பிடித்த ஏழாம் அறிவு படத்துக்கும் இடையிலான போட்டி பரபரப்பிற்கு நடுவில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியானது.

திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு சூப்பர் ஸ்டார்கள் என்று குறிப்பிட்ட நடிகரைச் சுற்றிய பிம்பத்தை உருவாக்கும் தேவை 1960களுக்கு பின்பு திரை உலகத்திற்கு ஏற்பட்டது. திரைப்படத்திற்கு பெரிய அளவு நிதி ஏற்பாடு (பைனான்ஸ்) செய்வது, படம் வெளியாகும் நாள் அன்றே பல திரையரங்குகளில் வெளியிடச் செய்வது போன்ற வணிக நோக்கங்களுக்காக, நடிப்புத் திறமை வாய்ந்த, குறிப்பிடத்தக்க திரை ஆளுமை உடைய நடிகர்களை அவர்களது ஒத்துழைப்புடன் நட்சத்திரங்களாக வளர்த்தெடுப்பது திரைப்பட துறையின் செயல்பாட்டுக்கு தேவையானதாக ஆகியது.

தமிழ் திரையுலகில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என்று அத்தகைய ஸ்டார்கள் உருவாக்கப்பட்டார்கள். அவர்களும் தமது ரசிகர் மன்றங்கள், பொது நலச் செயல்பாடுகள், பத்திரிகை பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு என்று தமது பிம்பங்களை பராமரித்துக் கொள்வதில் ஒத்துழைத்தார்கள்.

இந்தி திரையுலகில் அமிதாப் பச்சன், ராஜ்கபூர், ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் என்று ஸ்டார்களில் சாரூக் கான் குறிப்பிடத் தகுந்தவர்.

இந்தி திரைப்படங்கள் பிற இந்திய மொழித் திரைப்படங்களூடன் ஒப்பிடும் போது உயர்தட்டு மக்களின் வாழ்க்கையைக் காட்டுவதாகவே இருக்கின்றன. உபி அல்லது பீகாரைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைப் பற்றிய படம் ஒன்றை பாலிவுட்டில் எடுப்பது அரிதானதாகவே இருக்கிறது. ஏக்தா கபூர் முன்னெடுத்து உருவாக்கிய மெகா சீரியல் டெம்ப்ளேட்டின்படி இன்று உருவாகும் தமிழ் நெடுந்தொடர்களின் முன்னோடி இந்தி திரைப்படங்கள்தான். உயர்குடி மக்களின் வாழ்க்கை, பளபளக்கும் பங்களா வீடுகள், அதில் வசிக்கும் மனிதர்களுக்கிடையேயான காதல், கல்யாணம், குடும்ப பிரச்சனைகள், அல்லது மேல் குடி மக்கள் செய்யும் கிரைம்கள் என்று மாய உலகிலேயே மிதந்து கொண்டிருக்கும் இந்தி திரையுலகின் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவாக்கப்பட்டவர் ஷாருக் கான்.

தில்லி ஸ்கூல் ஆப் டிராமாவில் நடிப்பு பயின்று தொலைக்காட்சி டிராமாக்களில் நடித்து படிப்படியாக திரைப்படத்துறையில் வளர்ந்தவர் ஷாரூக் கான். அமிதாப் பச்சன் தனது திரைப்படங்களில் வெளிப்படுத்திய கோபமான இளைஞன் பிம்பம் 1970-80களின் இந்திய மக்களின் ஆதங்கங்களை பிரதிநிதிப்படுத்தியது போல 1990களுக்குப் பிறகான முன்னேறிச் சொல்லும், செருக்கு மிகுந்த, ஒளிரும் இந்திய நடுத்தரவர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதன் மூலம் ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ஆனார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்தியில் ஷாரூக் கான் பிரபலமான பிராண்டாக உருவெடுத்தார்.

அப்துல் கலாம் போன்று ‘இந்துத்வ தேசியவாத’ முஸ்லீம்களின் சின்னமாக பார்க்கப்படுபவர் ஷாரூக் கான். மை நேம் ஈஸ் கான் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லீம்கள் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அமெரிக்காவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று நல்வழி காட்டிய ஆதர்ச முஸ்லீம் அவர்.

கடந்த 10 ஆண்டுகளில், நுகர்வு கலாச்சாரத்தில் ஊறிப் போய் விட்ட இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு நுகர்வை தூண்டுவதற்கு என்று சிறப்பாக ஒரு ஹீரோ தேவைப்படவில்லை. அவர்களாகவே புதிது புதிதாக இன்பங்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஷாரூக் கான் போன்றவர்களின் தேவை குறைந்து போக ஆரம்பித்தது. அவர் தம்மை மறு வார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஷாரூக் கான் ஒரு வணிக பிராண்டாக தன்னை உருவாக்கிக் கொண்டதைப் பற்றி அவுட்லுக்கில் வெளியான கட்டுரை இப்படி சொல்கிறது:

“அவர் இருபது ஆண்டுகளாக உருவாக்கி பிரபலப்படுத்திய பிராண்ட் எஸ்ஆர்கே, வேறு எந்த பிராண்டுடனும் ஒப்பிடும் போது மிகச் சிறந்த பெயர் அடையாளத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது. அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இன்றைய நிலைமைகளுக்கேற்ப மறுவரையறை செய்துள்ளார்.  படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல், விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட தோன்றுகிறார். பல வகையான பொருட்களை சிபாரிசு செய்கிறார். திருமண விழாக்களில் பாட்டுப் பாடி ஆடுவதற்கும் ஒத்துக் கொள்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகவும் இருக்கிறார். எஸ்ஆர்கே ஒரு நடிகர் மட்டுமில்லாமல், தயாரிப்பாளர்-பிஸினஸ்மேன் ஆக விளங்குகிறார்.”

இந்த முயற்சிகளின் அடுத்தக் கட்டம் ரா ஒன் என்ற திரைப்படம்.

ரா ஒன் படத்தைத் தயாரித்தது ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம். அதே நிறுவனம் ரஜினி குழுமத்தின் அடுத்த படமான ராணா படத்துக்கும் தயாரிப்பாளர். ரஜினா காந்த் ரா ஒன்னில் தலை காட்ட மும்பை போனது எந்த பாசத்தால் என்று புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.

ரா ஒன் படம் எடுக்க தயாரிப்பு செலவாக 125 கோடி முதல் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று பலவிதமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன. VFX studio என்ற நிறுவனம் மூலம் படத்துக்கான சிறப்பு காட்சிகள் (special effects) உருவாக்கப்பட்டன. படத்தின் செலவுகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி ரூபாய் முதல் 65 கோடி ரூபாய் வரை) இதற்காக செலவிடப்பட்டது. ரா ஒன் படத்தில் 3,500 காட்சிகள் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன. ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் 2,700 காட்சிகள்தான் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன என்று ஊடகங்கள் பீற்றுவதை வைத்து ரா ஒன் எனும் உலக மகா மொக்கையின் அபத்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ரா ஒன் படம் எடுப்பதற்காக VFX Studio உருவானதா, VFX Studio தடம் பதிக்கும் பொருட்டு ரா ஒன் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு சரியான விடை தேடுவது எளிதான வேலை இல்லை. படத்தின் வெற்றியின் மூலம் இந்த நிறுவனம் இந்திய திரைப்பட உலகில் தனது வணிக செயல்பாடுகளை நிலைநாட்டிக் கொள்வது ரா ஒன் படத் தயாரிப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று மட்டும் ஊகிக்கலாம்.

சோனி பிளே ஸ்டேசன் என்ற பன்னாட்டு வீடியோ கேமிங் நிறுவனம், இந்தப் படத் தயாரிப்புடன் இணைந்து RA ஒன் – த கேம் என்ற விளையாட்டுக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை உருவாக்குவதற்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 4.5 கோடி ரூபாய்) செலவானதாக சொல்லப்படுகிறது. ரா ஒன் என்ற பிராண்ட் பிளேஸ்டாசனுடன் கூட்டாக முதலீடு செய்யப்பட்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளியீடு மற்றும் தொடர்ந்த சோனி பிளே ஸ்டேசன் சந்தை விரிவாக்கத்தின் வெற்றி/தோல்விகள் ரா ஒன் பெறும் வரவேற்பை சார்ந்துள்ளன. சோனி குழுமத்தின் நிறுவனங்கள் ரா ஒன்னை தூக்கிப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

திரைப்படங்களில் பொருத்தமான இடங்களில் வணிக நிறுவனங்களின் பிராண்டுகளை காட்டுவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது, திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளை வாங்கிய நிறுவனத்தை திரைப்படத்தில் விளம்பரப்படுத்துவது என்பவை பணம் கொண்டு வரும் இன்னொரு வழி.

இன்று போய் நாளை வா திரைப்படத்தில் வீட்டுக்கு வரும் இந்தி வாத்தியாரை துரத்தி அனுப்ப நாய்க்கு கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து பழக்குவார் ஒருவர், அதே கிராக்ஜாக் பிஸ்கட் கொடுத்து வாத்தியார் முறியடிப்பார். இப்படி இந்திய திரைப்படங்களில் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த திரைப்படங்களில் பிராண்ட் பொசிஷனிங், இப்போது தவிர்க்க முடியாமல் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுடன் வணிக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் படத் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் அம்பா ஸ்கைவால்க் மால், காட்பரீஸ் சாக்கலேட், வோடபோன், HTC, ஏர்செல் முதலிய பல பிராண்டுகள் இடம் பெற்றன.

ரா ஒன் படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் தொலைக்காட்சி 35 கோடி ரூபாய்க்கு வாங்கியது. படம் வெற்றி பெற்றால், மெஹாஹிட் திரைப்படம் என்று தொலைக்காட்சியில் சில மாதங்களுக்குப் பிறகு திரையிட்டு விளம்பரங்களின் மூலம் கல்லா கட்ட முடியும். அதனால் படம் வெளியாகும் முன்பே அதைப்பற்றி saturation கவரேஜ் கொடுக்கும் பொறுப்பு ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இயல்பாகவே வந்து விட்டது. தமிழில் சன் குழுமம், கருணாநிதி குடும்பத்தினர் திரைப்படங்களுக்கு சன் தொலைக்காட்சிகளும், கலைஞர் தொலைக்காட்சிகளும் அளிக்கும் கவரேஜ் இதே நோக்கத்துடன் அளிக்கப்படுபவைதான்.

ரா ஒன் படத்தின் ஏரியா உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மதிப்பில் விற்கப்பட்டன. உதாரணமாக, நாக்பூர், ஜபல்பூர் பகுதி உரிமை 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது, இதற்கு முந்தைய உயர் மதிப்பு விற்பனையான பாடிகார்ட் படம் 2.7 கோடி ரூபாய்க்குத்தான் விற்கப்பட்டது என்பதைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட எல்லோரும் ரா ஒன், பாடி கார்டை விட இரண்டு மடங்கு பிரபலம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லைதான்.

அப்படி படம் பிரபலம் அடைவதற்கும் பண வசூலுக்கும் படத்தின் தரத்தையும், பார்வையாளர்களின் வரவேற்பையும் மட்டும் நம்பி இருந்து விட முடியாது.

முன்பெல்லாம் திரைப்படங்கள் ஊருக்கு ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள், வெள்ளி விழா என்று பல வாரங்கள் தொடர்ந்து ஓடி வசூலைக் குவித்தன. சாருக் கான் 1990களில் நடித்த தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே (267 கோடி ரூபாய்), குச் குச் ஹோதா ஹை (182 கோடி ரூபாய்) போன்ற திரைப்படங்கள் இது போன்று பல நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தவை.

ரா ஒன் படம் அந்த சாதனைகளை முறியடித்து வசூலை ஈட்டினால்தான் கட்டுப்படி ஆகும். இவ்வளவு செலவழித்து எடுக்கப்பட்ட ரா ஒன் போன்ற படங்களுக்கு அந்த மாதிரி ரிஸ்க் எடுக்க முடியாது. படம் வெளியாவதற்கு முன்பு பெருமளவில் விளம்பரங்கள், பத்திரிகை கட்டுரைகள் மூலம் ரசிகர்களை தயார்படுத்தி, படத்தை ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியிட்டு படம் பற்றிய விமர்சனம் பரவலாக போய்ச் சேரும் முன் எல்லோரையும் தியேட்டருக்குக் கொண்டு வந்து பணத்தை திரட்டி விட வேண்டும் என்ற வணிக உத்தி பயன்படுத்தப்படுகிறது.

பாலிவுட் படங்களில் இதுவரை வந்த எந்த படத்தையும் விட அதிகமாக இந்தியாவில் 3,000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 50 திரையரங்குகளிலும் ரா ஒன் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவிலும் ஓபனிங் கிடைக்க ரஜினிகாந்தை இரண்டு நிமிடங்கள் நடிக்க வைத்து ஒரு காட்சியை சேர்த்திருந்தார்கள். படம் நன்றாக இல்லை என்று யாராவது சொல்லி கேட்பதற்கு முன்பு நீங்கள் அந்த படத்தை பார்த்து விட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தயாரித்தவரும், வினியோக உரிமையை வாங்கியவர்களும் போட்ட காசை எடுக்க முடியும். படம் எப்படி இருந்தாலும் பார்த்தே தீர வேண்டும் என்பது ரசிகர்களின் பொறுப்பு.

தியேட்டரில் அனுமதிச் சீட்டுகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டால் பல ஆண்டுகள் ஓடினால்தான் போட்ட பணம் வசூல் ஆகும். அதனால் அதிகாரபூர்வமில்லாமல் தியேட்டர் நிர்வாகமே கறுப்புச் சந்தையில் டிக்கெட்டுகளை விற்பதும் இந்த முதல் இரண்டு வார பரபரப்பில் சகஜமாகிப் போய் விட்ட ஒன்று.

ரா ஒன் பிராண்ட் பொறித்த நுகர்வு பொருட்களை விற்பனை செய்ய ஒரு வணிக நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், பள்ளி பயன்பாட்டு பொருட்கள், உடைகள், தொப்பிகள் என்ற வரிசையில்  செல்பேசி மின்னூட்டிகள், கைப் படப்பெட்டிகள், நெட்புக் கணினிகள், டேப்லட் கணினிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களின் விற்பனையும் படத்தின் வெற்றி தோல்வியுடன் பிணைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தின் பாபா பட வெளியீடை ஒட்டி பாபா பிராண்ட் பொறித்த பொருட்களை அவரது மனைவி லதா ரஜினிகாந்த சந்தைப் படுத்த முயன்று, அந்தப் படம் ஊத்திக் கொண்டதோடு அது முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு விரிவான வணிக சுமைகளை சுமந்து வெளியாகும் முதல் படம் ரா ஒன் என்று சொல்லலாம். ஈராஸ் இன்டர்நேஷனலுக்கும், VFX Studioக்கும், சோனி பிளே ஸ்டேஷனுக்கும், ஸ்டார் தொலைக்காட்சிக்கும், ரா ஒன் பிராண்ட் பொருட்கள் விற்கும் வியாபாரத்துக்கும் தரகு வியாபாரியாக இருந்து ரசிகர்களை டெலிவர் செய்ய வேண்டியதுதான் ஷாரூக் கானின் முதன்மை பணி. நடிப்பும் கதையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளப்பட வேண்டியவைதான்.

சாருக்கான் எனும் தரகு முதலாளியின் இந்த படத்தில் ரசிகர்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? பணத்தை கொடுத்து விட்டு கைதட்ட வேண்டியது மட்டும்தான்.

___________________________________________________

– அப்துல்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி!

“”அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது.  அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது.  அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.”  இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள்.  ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.

இச்சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  இப்பதினைந்து ஆண்டுகளில் இவ்வழக்கை நடத்திய / நடத்திவரும் நீதிமன்றங்களை மயிருக்குச் சமமாகக்கூட ஜெயா மதித்து நடந்ததில்லை.  இந்தியக் குடிமகனைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டதிட்டத்துக்கும் தான் கட்டுப்பட்டு நடக்க மாட்டேன் என்ற அகங்காரத்தோடும், திமிரோடும் நடந்துவரும் ஜெயாவிற்கு, சட்டப்படியான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

1991ஆம் ஆண்டு ஜெயா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய்  (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ஜெயாவின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருப்பதை அசாதாரணமானது என்ற வார்த்தைக்குள்கூட அடக்கிவிட முடியாது.  இத்துணைக்கும் அந்த ஐந்து ஆண்டுகளில் “”தான் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழக முதல்வர் என்ற கடமையை ஆற்றியதாக”ப் பீற்றிக் கொண்டவர், ஜெயா.  எனவே, அவர் முதல்வராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்காமல், கிம்பளம் வாங்காமல் அவரது சொத்து மதிப்பு 33 மடங்கு அதிகரித்திருக்க முடியாது.  இதுதான் இச்சொத்துக் குவிப்பு வழக்கின் சாரம்.

இதன் அடிப்படையில் 1996, டிசம்பரில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடுத்த அன்றைய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு இவ்வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றத்தையும் அமைத்தது.  தமிழகத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஜெயா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார்.  அச்சமயத்தில் தனி நீதிமன்றம் சாட்சிகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிட்டு, ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.  “”தனக்குத் தொண்டை கட்டிக் கொண்டுவிட்ட காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது” என்ற நகைக்கத்தக்க, அலட்சியமான காரணத்தை முன்வைத்துக் கூண்டில் ஏறிநிற்க மறுத்துவிட்ட ஜெயா, “”நீதிமன்றம் தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்தால் பதில் எழுதித் தருவதாக”க் கூறினார்.  ஜெயாவின் கூற்றுக்குப் பொருள் என்னவென்று அறிந்திருந்த நீதிபதி, தனது பெஞ்ச் கிளார்க்கை கேள்விகளோடு போயஸ் தோட்டத்து பங்களாவிற்கு அனுப்பி வைத்தார்.  இல்லையென்றால், அ.தி.மு.க. மகளிர் அணியின் ஆபாச ஆர்ப்பாட்டமோ, உருட்டுக்கட்டையோ, கஞ்சா வழக்கோ அவரைத் தேடி வந்திருக்கும்.

ஜெயாவின் விளையாட்டுப் பொம்மை போலத் தனி நீதிமன்றமும், சாட்சிகளும் உருட்டப்பட்டதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகன் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கை விசாரிக்க பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

இதன் பின் இந்த வழக்கில் தாம் நேரடியாக ஆஜராகாமல் தப்பித்துக் கொள்வதற்கும், வாய்தா கேட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைப்பதற்கும், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கும், வழக்கையே அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கும் எனக் கடந்த ஏழாண்டுகளில் 130க்கும் மேற்பட்ட மனுக்களையும், வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி தொடுத்தது, ஜெயா கும்பல்.  அக்கும்பல் இதற்காக முன்வைத்த வாதங்கள் விசித்திரமானவையாகவும், வினோதமானவையாகவும் இருந்ததோடு மட்டுமின்றி, சட்டம், நீதித்துறையைக் கேலிக்குரியதாக்கி ஆட்டுவித்தன.  இந்நீதிமன்றங்கள் பல நேரங்களில் ஜெயா கும்பல் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தலையாட்டித் தம்மைத்தாமே கோமாளிகளாகவும் காட்டிக் கொண்டன.

ஜெயாவின் காண்வென்ட் ஆங்கிலத் திமிர் ஊர் அறிந்த ஒன்று.  அப்படிபட்ட ஜெயா வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு குற்றப்பத்திரிகையைத் தமிழில் மொழி பெயர்த்துத் தர வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  சிறப்பு நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.

குற்றப்பத்திரிகைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட பின், “”அதனைப் படிக்கத் தமக்கு கால அவகாசம் தர வேண்டும்; அதுவரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்” என ஜெயா கும்பல் அடுத்த மனுவைத் தாக்கல் செய்ய, அதன்படி அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.  இக்கால அவகாசம் முடிந்த பின், “”குற்றப்பத்திரிகையில் பிழைகள் உள்ளன; அதைத் திருத்தம் செய்துதர வேண்டும்” என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, ஜெயா கும்பல்.   “”வழக்கு விசாரணை நடக்கும்பொழுது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” எனத் தீர்ப்பளித்து விசாரணையைத் தொடங்குமாறு உத்தரவிட்டது, கர்நாடகா உயர் நீதிமன்றம்.

இச்சமயத்தில் இவ்வழக்கை காலவரையறையின்றி இழுத்தடிக்கும் நோக்கத்தோடு ஜெயா கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும், இலண்டன் அருகேயுள்ள தீவு ஒன்றில் உல்லாச விடுதி வாங்கிப் போட்ட வழக்கையும் ஒன்றாக இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய, அதனைச் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இரண்டு வழக்குகளையும் இணைத்து உத்தரவிட்டது.  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விதித்த இந்தத் தடையை நான்கு ஆண்டுகள் வரை சவ்வாக இழுத்து, அதன் மூலம் ஜெயா கும்பலுக்கு மனு போடும் வேலையைக் கணிசமாகக் குறைத்து வைத்தது.  எனினும், 2009இல் சொத்துக் குவிப்பு வழக்கும் இலண்டன் உல்லாச விடுதி வழக்கும் இணைக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

இடைக்கால தடை நீக்கப்பட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியவுடனேயே, “”சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை” எனக் கூறி, வழக்கை அதன் தொடக்கப் புள்ளிக்கே இழுத்துச் செல்ல முயன்றது, ஜெயா கும்பல்.  இம்மனு தள்ளபடி செய்யப்பட்ட பின், “”தமக்கு அளிக்கப்பட்ட சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும்; சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; குற்றப்பத்திரிகை நகலின் 3 பிரதிகளைத் தர வேண்டும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும்; மொழி பெயர்ப்பாளரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்” என உப்புசப்பில்லாத பல காரணங்களை முன்வைத்து 2010ஆம் ஆண்டில் மட்டும் 30 மனுக்களைச் சிறப்பு நீதிமன்றத்திலும், அதன் பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது, ஜெயா கும்பல்.

2011ஆம் ஆண்டில் முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் ஜெயா கும்பலால் தாக்கல் செய்யப்பட்டன.  குறிப்பாக, குற்றவாளிகளுள் ஒருவரான சுதாகரன், “”தனது வழக்குரைஞரின் தந்தை காலமாகிவிட்டதால் வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என விசித்திரமான கோரிக்கையோடு மனு தாக்கல் செய்தார்.  வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, “”குற்றப்பத்திரிக்கையில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணையை ஆறு மாத காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்தார்.  இம்மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரினார், ஜெயா.

ஆடிக்காற்றில் குப்பை பறந்துபோய் கோபுரத்தில் ஒட்டிக் கொள்வதைப் போல, தமிழக மக்களால் மீண்டும் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட ஜெயா, இந்த வாய்ப்பை சொத்துக் குவிப்பு வழக்கை ஒழித்துக் கட்டும் முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  குறிப்பாக, தமிழக அரசின் சார்பாக வழக்கை நடத்தி வந்த இலஞ்ச ஒழிப்புத் துறை, “”இவ்வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கோரி, இவ்வழக்கின் அரசு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்குத் தெரியாமலேயே சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  சிறப்பு நீதிமன்றத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசே வழக்குத் தொடுத்தது.  “”கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யாவைத் தவிர்த்து வேறுயாரும் இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது; தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது” என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இத்துணை தடைகளையும் தாண்டி சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிப் பதில் அளிக்கும்படி சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஜெயா கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  முதல் குற்றவாளியான ஜெயா, தான் தமிழக முதல்வராக இருப்பதையும் பாதுகாப்புக் காரணங்களையும்  காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்றார்.  “”கோயில் குளத்திற்கெல்லாம் போக முடிந்தவருக்கு நீதிமன்றத்துக்கு வர முடியாதோ?” என அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கேள்வி எழுப்பி, ஜெயாவின் தகிடுதத்தத்தை அம்பலப்படுத்தினார்.  சசிகலாவும், இளவரசியும், “”தாம் பெண் என்ற காரணத்தை” முன்வைத்துத் தப்பித்துக் கொள்ள முயன்றனர்.  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி பெண் என்ற காரணத்தைக் கூறி பிணை கோரியபொழுது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாதத்தை முன்வைத்து கனிமொழியைக் கடுமையாகக் கண்டித்த தமிழகப் பார்ப்பனக் கும்பல், இப்பொழுதோ வாய் மூடிக் கிடந்தது.

இந்தச் சொத்தை வாதங்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகினார், ஜெயா.  “”எனது கட்சிக்காரருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன.  பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.  அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுத்துபூர்வமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ பதில் அளிக்கிறேன் எனச் சொல்வதில் என்ன தவறு?” எனத் தனது வழக்குரைஞர் மூலம் திமிராக வாதம் புரிந்தார், ஜெயா.  இதற்கு, “”குற்றவாளிகள் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளித்தாலும், “”அவருக்கு வசதியான தேதியில் ஆஜராகும்படி” ஜெயாவிற்கு சலுகை அளித்தனர்.  டான்சி நில மோசடி வழக்கில் ஜெயாவைத் தண்டிக்காமல், அவர் தனது மனசாட்சிபடி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திடம் இதற்கு மேல் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த அடிப்படையில்தான் ஜெயாவிற்கு வசதியான அக்டோபர் 20 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு நீதிபதியிடம் பதில் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதனையும் முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைக் காட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராவதைத் தள்ளிப் போடக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார், ஜெயா.  உச்ச நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு, வேறு வழியின்றி, அக்.20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, பெரும்பாலான கேள்விகளுக்கு, “”தெரியாது”, “”நினைவில் இல்லை” என்றே பதில் அளித்திருக்கிறார், ஜெயா.  நவம்பர் 8 அன்று விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென ஜெயா விற்குச் சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டவுடன், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.

இந்த வழக்கில் ஜெயா தண்டிக்கப்படுவாரா, மாட்டாரா என்பதைவிடக் கவனிக்கத்தக்க முக்கிய விசயம் வேறொன்று உள்ளது.  ஜெயா பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும்.  இப்படிபட்ட நபரை, தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கைக் காக்க வந்த அவதாரமாக தமிழக மக்களின் முன் தமிழகப் பார்ப்பனக் கும்பல் நிறுத்தியிருப்பது எத்துணை பெரிய மோசடி!

ஜெயாவின் இந்தக் கல்யாண குணங்கள் தெரிந்திருந்தும், உச்ச நீதிமன்றம்கூட, “”உங்கள் கட்சிக்காரர் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்” என்பதற்கு மேல் இந்த வழக்கு விசாரணையின்பொழுது அவரை வேறுவிதமாகக் கடிந்து கொண்டதில்லை.  ஜெயா திருந்திவிட்டார், மாறிவிட்டாரென்று கூப்பாடு போட்ட பத்திரிக்கைகள் அனைத்தும், அவரது இந்த இழுத்தடிப்புப் பற்றி மட்டுமல்ல, அவர் சொத்து குவித்த விதம் குறித்தும் வாய்மூடியே கிடந்தன.  குறிப்பாக, ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட சுப்பிரமணிய சுவாமியோ சட்டமன்றத் தேர்தலில் ஜெயாவோடு கூட்டணி கட்டிக் கொள்ள போயசு பங்களா வாசலில் தவம் கிடந்தார்.  மற்ற செல்வாக்குகளைவிட, ஜெயாவின் சாதி அரசியல் செல்வாக்குதான் அவருக்குக் கேடயமாக இருந்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசாவிற்கும், கனிமொழிக்கும் கிடைக்க வாய்ப்பேயில்லாத செல்வாக்கல்லவா, இது?

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011
_________________________________________________

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!

அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் – இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்  எனக்கோரி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் – இடிந்தகரையில் அமைந்துள்ள அணு உலையை மூட வேண்டுமெனக் கோரி கடந்த 1988லிருந்து போராடி வரும் அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டங்களை தீவிரப்படுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், அணு உலை முற்றுகை என வீரியத்தோடு போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கையை நேர்மையாகப் பரிசீலிக்க மறுக்கும் மத்திய அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பல தவறான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதற்கு ஆதரவாக கைக்கூலி எதிர்போராட்டக்காரக் குழுவினர், மக்கள் ஆதரவின்றி வாய்ச்சவடால் அடித்து வருகின்றனர். காங்கிரசு, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., அப்துல் கலாம், துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி, சேதுராமன், கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு துணை நிற்கின்றனர். கூடுதலாக போராட்டக் குழுவினர் மீது 66 வழக்குகள், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும், முப்படை பாதுகாப்பு என மிரட்டுகிறார்கள்.

மத்திய அரசின் மிரட்டல்களும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், சட்ட மற்றும் தார்மீக ரீதியாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்த நாங்கள் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.

1. மக்களின் மின்சாரத் தேவைக்காக அணுஉலை என்பது பொய். நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி மக்களையும், சுற்றுச் சுழலையும் பாதிக்காத நமது நாட்டில் அதிகம் கிடைக்கக் கூடிய சூரியஒளி மூலம் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியும். இதே போல் காற்று, நீர், கடல்அலை என சுயசார்பு மின் திட்டங்களை உருவாக்கலாம்.

2. அணு உலைகள் கட்டுவதென்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க, ரசிய, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை இந்திய அரசு தாரை வார்ப்பதாகும்.

3. இந்திய அணுசக்தித் துறை 1970ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை 2000மாவது ஆண்டில் அணு உலைகள் மூலம் 43,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமென்றது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் கூட 2720 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 1970ல் சொன்னது போன்ற தவறான தகவல்களை இந்திய அணு சக்தித்துறை பரப்புகிறது.

4. வெளிநாடுகளில் வாங்கப்படும் யுரேனியத்தைச் சார்ந்தே இந்திய அணுஉலைகள் செயல்படும் என்ற நிலையில் 2008ல் போடப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி 36 அணுஉலைகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்சாரத்தின் விலையும், பெட்ரோல் விலை போல உயரும். மின்சாரத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியது வரும். நாட்டின் சுயசார்பு அழியும்.

5. இயற்கைச் சீற்றங்கள் தவிர சாதாரணமாக மனிதத் தவறினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால் கூட தமிழகத்தின் தென்பகுதி அழியும் அபாயம் உள்ளது.

6. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் அணு உலையை மூட முடிவெடுத்துள்ளனர். மேற்குவங்கம், கேரள மக்கள் அணு உலைகளை தங்கள் மாநிலத்தில் அமைக்கவிடாமல் தடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் சுகாதாரமாக வாழும் உரிமை மக்களின் அடிப்படை உரிமை. என அங்கீகரித்துள்ள நிலையில் தமிழக மக்களுக்கும் அரசியல் சட்டப்படி அணு உலையை மூடக் கோரும் உரிமை உண்டு. இடிந்தகரையில் பெண்களும், குழந்தைகளும், முதியோரும் வெயில், மழை பாராது தொடர்ந்து போராடி வருவது பொழுதுபோக்குக்கு அல்ல. போபால் விபத்து போல அணு உலையால் தங்கள் வாழ்க்கை அழிக்கப்படும் எனக் கருதி மக்கள் போராடுகிறார்கள்.

7. அணு உலை கழிவுகளைப் பாதுகாப்பதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே திணறிவரும் நிலையில் இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அணுக் கழிவுகளை பாதுகாக்கும் செலவையும் அணுமின் உற்பத்தியோடு சேர்த்தால் யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.25- வரும். பொதுமக்கள் தான் இத்தொகையை செலுத்த வேண்டி வரும். அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் செலவுகளை அணுமின் உற்பத்தி செலவுடன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமூகப் பொருளாதார வளர்ச்சியடைந்தவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கூட அதற்கு எதிராக மேல் தட்டு வர்க்கத்தினர் போராடும் சூழலில் அணுமின் கதிரியக்க பேராபத்தின் நடுவே வாழும் உழைக்கும் மக்கள் தங்கள் நியாயமான எதிர்ப்பை காட்டுவதைக் கூட வெளிநாட்டு சதி, மத அமைப்புகளின் பணம் எனக் கொச்சைப்படுத்துவது ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதாகும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை.

மேற்குறிப்பிட்ட காரணங்களோடு இன்னும் பல காரணங்களால் இடிந்தகரை சுற்றுப்புற மக்களின் போராட்டம் சரியானது எனக் கருதுகிறோம். ஆகவே மக்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்க முயலும் மத்திய அரசின் சதிகளை முறியடிக்க, போராடும் மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளைச் செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் கீழ்க்காணும் வழக்கறிஞர் குழு அமைக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்கள்:

திருவாளர்கள். தி. லஜபதி ராய், எம். திருநாவுக்கரசு, எம். இமாம் உசேன், எஸ். தமிழரசன், ஆர். காந்தி, ஜி. பகத்சிங், எஸ். அருணாச்சலம், எம்.எம். இக்பால், அ. ஜான் வின்சென்ட், வி. ராஜீவ் ரூபஸ், ஆர். அழகுமணி, எஸ்.எம்.ஏ. ஜின்னா,. சே.வாஞ்சி நாதன், வி. ராஜேந்திரன், எஸ். லூயிஸ், டி. அன்பரசு, டி.எஸ். மெல்ட்யூ, ஜெ.லாரன்ஸ், இ.ராபர்ட், ஆர்.கருணாநிதி, தி. திருமுருகன், ஆர். விஜயலட்சுமி, இ.பினேகாஸ், அ. வல்லரசு, எம். மாறன், எஸ். சதீஸ்

ஒருங்கிணைப்பாளர்: சே.வாஞ்சி நாதன்

மேற்க்கண்ட வழக்கறிஞர் குழு சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு 17.11.2011 காலை 10 மணிக்கு கடும் மழை பெய்து கொண்டிருந்தபோதும் மனித குல விரோத கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், தொடர்ந்து அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்களின் மீது ஏராளமான பொய் வழக்குகள் போட்டு வருவதுடன், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயுமென மத்திய, மாநில அரசுகள் மிரட்டி வருவதைக் கண்டித்தும், அரசின் அவதூறுப் பிரச்சாரங்களை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருநாவுக்கரசு,தமிழரசன், சுப்புராஜ், ஜான் வின்சென்ட், பகத்சிங், அருணாசலம், வாஞ்சிநாதன், ராஜேந்திரன், ஜின்னா, புனிததேவகுமார், வெங்கடேசன், இராபர்ட், திருமுருகன், கருணாநிதி, விஜயலட்சுமி, இனியன், வல்லரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுச்சி முழக்கங்கள்:

இழுத்து மூடு! இழுத்து மூடு!
மக்கள் விரோத அணு உலையை
கூடங்குளம் அணு உலையை
மத்திய அரசே இழுத்து மூடு!
மின்தேவைக்கு அணு உலை
என்பது மோசடி

இத்தாலி ஜெர்மனியெல்லாம்
அணு உலய மூடுறான்!
திறக்கிறான்! திறக்கிறான்!
36 அணு உலைய
மன்மோகன் திறக்கிறான்!
பன்னாட்டு கம்பனிக்கு
ஆதரவாத் திறக்கிறான்!
3 லட்சம் கோடிகொடுத்து
அணு உலையத் திறக்கிறான்!

மானக்கேடு வெட்கக்கேடு
மன்மோகனே வெட்கக்கேடு

விற்காதே விற்காதே
பன்னாட்டு முதலாளிகளுக்கு
தாய் நாட்டை விற்காதே
அமெரிக்க வல்லரசிற்க்கு
ரசிய வல்லரசிற்க்கு
நாட்டை விற்காதே

மிரட்டாதே மிரட்டாதே
போராடும் மக்களை
என்.எஸ்.ஏ என்றுசொல்லி
மிரட்டாதே மிரட்டாதே
மத்திய அரசே மிரட்டாதே

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
போராடும் மக்களை
கொச்சைப்படுத்தும் நாராயணசாமியை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
மத்திய அரசுக்கு துணைபோகும்
துக்ளக் சோ,சு.சாமி
ஆர்.எஸ்.எஸ். காங்கிரசு
அப்துல்கலாம் கும்பலை
மக்கள் விரோத கும்பலை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்

உரிமை உண்டு உரிமை உண்டு
அணு உலைக்கு எதிராக
போராட உரிமை உண்டு
இடிந்தகரை மக்களுக்கு
போராட உரிமை உண்டு
அரசியல் சட்டப்படி
போராட உரிமை உண்டு

ஆதரிப்போம் ஆதரிப்போம்
இடிந்தகரை மக்களின்
போராட்டத்தை ஆதரிப்போம்
தமிழக மக்கள் ஆதரிப்போம்

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
மனித குல விரோத
மக்கள் விரோத
அணு உலைகளை விரட்டியடிப்போம்
உலகை விட்டே விரட்டியடிப்போம்

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 21.11.2011 மாலை 5 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் கேரள விஞ்ஞானி திரு.வி.டி.பத்மநாபன் அவர்கள் அணுமின்சக்தி தொடர்பாக உரை நிகழ்த்த உள்ளார்.இவ்வாறாக தொடர்ந்து அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வழக்கறிஞர் குழு எடுத்துச் செல்ல உள்ளது.

_________________________________________________________________________

வழக்கறிஞர் குழுவிற்காக

சே.வாஞ்சி நாதன், ஒருங்கிணைப்பாளர், மதுரை உயர்நீதிமன்றம்

தொடர்புக்கு.9865348163.

__________________________________________________________________________

 

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 16-11-11 புதன் காலை 10-00 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் குணசேகர் தலைமை தாங்கினார். எழுத்தாளர் கரிகாலன், புலவர் கருப்பையா, வழக்கறிஞர் புஷ்பதேவன், செல்வக்குமார், கதிர்வேல், பாலாஜி, செந்தாமரைக்கந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜீ சிறப்புரையாற்றினார்.

3 சதவீத அணுஉலை மின்சாரத்திற்கு எதிர்கால சந்ததியினரின் உயிரை பணயம் வைக்கவேண்டுமா? 35 ஆண்டுகள் ஆயுட்கால அணு உலையை மூடியபின் எத்தனை தலைமுறைக்கு செலவு செய்து பாதுகாக்கவேண்டும். 3 லட்சம் கோடியில் இந்திய கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை கட்டியே தீருவேன் என மன்மோகன்சிங் அரசு கர்ஜிக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்காக அணு ஒப்பந்தம் போட்டு நாட்டை திவாலாக்க பார்க்கிறது. அணுகுண்டு வல்லரசு கனவிற்கு சொந்த நாட்டு மக்களை பணயம் வைக்க மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.? என பல்வேறு விஷயங்களை விளக்கி பேசியதை மக்கள் கவனமாக கேட்டனர்.

–    மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

– 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!

அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.

உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள். மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.

மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.

இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.

இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.

———-

குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை ! ”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…

இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.

குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.

————–

குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை ! ”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.

இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.

ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.

இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.

திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

குடி : கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை ! இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.

குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”  என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.

குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.

_________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!

மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம் !           அனுபவம் பெறுவோம் முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம் !

அன்பார்ந்த தோழர்களே !

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி ஆலையின் தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் போராடி நிர்வாகத்தை பணிய வைத்துள்ளனர். துவக்கத்தில் சங்கம் அமைத்தற்காக வேலை பறிப்பு – அடக்குமுறைக்கு ஆளான முன்னணியாளர்களுக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம். முதலில் பணிந்து போவதாக நடித்தது நிர்வாகம். பின்னர் கொத்தடிமை பத்திரம் ஒன்றில் கையெழுத்து போட்டால் தான் வேலை என்றது. அதற்கு பின்னர் 1200 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று அடிமடியிலேயே கை வைத்தது.

சங்கம் வைத்ததால் தானே பிரச்சினை என்று சங்கத்தை கலைத்திருக்கலாம், முன்னணியாளர்களுக்கு தானே வேலை போனது, நாம் தப்பித்து விடலாம் என்று மற்றவர்கள் பதுங்கியிருக்கலாம், நிபந்தனை பத்திரத்தில் கையெழுத்து போட்டால் குடி முழுகிவிடாது என்று அலட்சியமாக கையெழுத்து போட்டிருக்கலாம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தானே வேலை போய் விட்டது என்று நிரந்தரத் தொழிலாளர்கள் கரையேறியிருக்கலாம். ஆனால், இதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. அப்படி செய்வது இழிவு என்று கருதினார்கள். மாறாக சங்கம் அமைப்பது எனது பிறப்புரிமை என்று சங்கநாதம் செய்தார்கள். நிரத்தரத்தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி என்பதெல்லாம் முதலாளி ஏற்படுத்திய பிரிவினை ! நாங்கள் எல்லோரும் தொழிலாளர்கள் தான் என்று கைகோர்த்து நின்றார்கள். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர்.

மனேசார் என்கிற தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தி பிரிவில் தொடங்கிய இந்த போராட்டம், மாருதி நிர்வாகத்தின் ஏனைய இரண்டு ஆலைகளுக்கும் பரவியது. ஆலைகள், தொழிற்பேட்டைகள், சங்கங்கள் என்ற பேதத்தையெல்லாம் கடந்து வீறு நடைபோட்டது போராட்டம் ! ஏறக்குரைய வடமாநில ஆட்டோ மொபைல் துறையே ஸ்தம்பித்து போனது. பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்தது முதலாளி வர்க்கம் ! தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கண்டு குலைநடுங்கி போனது, கார்ப்பரேட் களவானி கும்பல் ! முதலாளிகளுக்கு பாதபூசை செய்வதே வேலையாகக் கிடந்த அரியானா மாநில அரசு, காட்டுத்தீயாக பரவிய தொழிலாளர்கள் போராட்டங்களால் பொசுங்கிப் போனது. முன்னணியாளர்கள், ஒப்பந்தத்தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இழந்த வேலையை மீண்டும் பெற்றார்கள்.

முதலாளிகளையும் அரசு அடியாட்களையும் பணிய வைத்த மாருதி தொழிலாளர்களின் போராட்டம் பத்தோடு பதினொன்றாவது ரகமல்ல. கடந்த பத்தாண்டில் இந்திய தொழிலாளர் வர்க்கம் பெற்றிருக்கின்ற அபூர்வமான வெற்றிகளில் ஒன்று. தொழிலாளி வர்க்கம் எப்படி போராட வேண்டும் என்று கற்றுத் தந்த போராட்டம். இந்த போராட்ட அணுபவங்களை நாம் தெரிந்து கொண்டு முன்னேறுவோம்.

மாருதி போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்து வந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவ லாபவெறியை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. முதலாளித்துவத்தின் சொர்க்க பூமி என்று சொல்லப்பட்ட அமெரிக்காவில் அதன் கருவறையான வால்ஸ்ட்ரீட் என்ற பகுதியில் லட்சக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை அவர்கள் ஆதரித்த முதலாளித்துவம் அவர்களது வீட்டையும் வேலையையும் பறித்து சோற்றுக்கு கையேந்த வைத்துள்ளது. “முதலாளித்துவம் ஒழிக” என்று உலகம் முழுவதும் பல நூறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் கொடூரமானது, இழிவானது. மனித குலத்துக்கே விரோதமானது. அந்த கொடூரனை வீழ்த்தக்கூடிய சக்தி தொழிலாளர் வர்க்கத்திடம் தான் உள்ளது. மாருதி சுசுகி போன்ற பல நூறு போராட்டங்களில் நாம் வெற்றி பெறும் போது தான் முதலாளித்துவத்துக்கு எதிரான நமது எழுச்சி பல லட்சம் தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும், நம்பிக்கையை உருவாக்கும். போராட்டங்களை வெல்வதற்கு முன்பாக, முந்தைய போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வது அவசியமானதாகும். எனவே, மாருதி தொழிலாளார்களின் வெற்றியிலிருந்து கற்போம். முதலாளித்துவத்துக்கு சவக்குழி தோண்ட பிறந்தது தான் தொழிலாளி வர்க்கம் என்கிற நமது கடமையை நிறைவேற்றுவோம்.

கருத்தரங்கம்

நாள் : 20.11.2011

இடம் : ஞாயிறு காலை 10.00 மணி

சீனிவாசா திருமண மண்டபம்
கல்லறை பேருந்து நிலையம் அருகில்
பூந்தமல்லி, சென்னை.
*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் சி.வெற்றிவேல் செழியன்
அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

சிறப்புரை:
மாருதி தொழிலாளர்களின் வெற்றி;
அனுபவம் கற்போம் !

தோழர் பா.விஜயகுமார்
பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

வால்ஸ்ட்ரீட் முற்றுகை;
திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம் !

தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

நன்றிரை:

தோழர் இரா.ஜெயராமன்
இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.
**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி – தமிழ்நாடு.

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

58

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் போலீசு கயவாளிகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி ஏழு தலித்துக்களை கொன்று குவித்த பிசாசு ஆட்சி; மாதம் இரண்டு லாக்கப் கொலைகளைச் செய்யும் போலீசுத் துறைக்கு அளவிலா சலுகைகள்.

ஆனாலும் ஜெயலலிதா விடுவதாக இல்லை. முந்தைய முறை தன்னை முதலமைச்சராக தெரிவு செய்யாத மக்களை இந்த முறை வேறு வழியின்றி தெரிவு செய்திருந்தாலும் பழிவாங்க நினைக்கிறார் போலும்.

பால், மின்சாரம், பேருந்து என்று அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் ஒரு மூச்சிலேயே விலையையும், கட்டணத்தையும் உயர்த்தி தான் ஒரு பாசிஸ்ட் என்று ஓங்கி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும், மாநிலமும் செய்திராத முன்னுதாரணமிது.

சுருங்கக் கூறின் இந்த விலை உயர்வினால் ஆவின், அரசுப் போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் ஆகியவை கடும் கடன் சுமையிலிருந்து விடுபடும் என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு தெரிவிக்கப்படும் சாக்கு. உண்மையில் இவற்றை ஒழித்து தனியார் துறையை விரிவுபடுத்தி கொள்ளையடிப்பதற்குத்தான் இவை உதவப் போகின்றன.

ஆவின் பால் தரமானது, சீக்கிரம் கெட்டுப் போகாது, சத்து விவரம் அறிவிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும். தனியார் பால் இவைகளுக்கு நேரெதிரானது. பொது மக்கள் அனைவரும் ஆவின் பாலையே விரும்புகின்றனர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பால் முதலாளிகள் பெருகி வருவதற்கு அரசே மறைமுகமாக உதவி செய்கிறது. ஆவின் வலைப்பின்னலை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் முதலாளிகள் கைப்பற்றி வருகின்றனர். ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.

தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள். ஆவினுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளையும் தனியார் பால் முதலாளிகள் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து கைப்பற்றுவதும் நடக்கிறது. ஆவின் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடப்பட்டாலோ, இல்லை கணிசமான சந்தையை இழந்தாலோ கொள்முதல் விலை என்பது தனியார் முதலாளிகள் நிர்ணயிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சிறு அளவில் கால்நடை வைத்து பராமரிக்கும் விவசாயிகளை ஒழித்து விட்டு பணக்கார விவசாயிகள் பெரும் பண்ணைகளை வைத்து நடத்துவதையே தனியார் பால் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன்மூலம் பல இலட்சம் சிறு விவசாயிகள் ஒழிக்கப்படுவார்கள். இது ஒரு தனிக் கதை.

இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது தனியார் முதலாளிகளை நோக்கி மக்கள் திரும்பவதையே நீண்ட கால நோக்கில் செய்யும். மேலும் ஆவின் முகவர்களுக்கும் குறைவான கழிவு வருமானம், பால் பொருட்கள் போதிய அளவில் தராமல் இருப்பது என்ற பிரச்சினையும் தமிழகம் முழுவதும் உண்டு. இறுதியில் ஆவின் பாலை வைத்து தனது  குடும்ப பட்ஜெட்டை போடும் சாதாரண மக்கள் அனைவரும், இனி மாதம் 200 முதல் 400 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அது போல பேருந்து கட்டண உயர்வு. தற்போதைய கட்டண உயர்வு மூலம் விரைவுப் பேருந்துகளின் கட்டணம் என்பது ஏறக்குறைய ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்களால் விரும்பப்பட்டு வந்தன. இப்போது அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். இலாபகரமான பேருந்துப் பாதைகள் முழுவதும் தனியாருக்கு திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் இலாபம் இல்லாத பாதைகளுக்கு சேவை அளிப்பது அரசு பேருந்துகள் மட்டும்தான்.

ஆனால் இலாபம் தரும் பாதைகளை வைத்து தனியார் முதலாளிகள் சம்பாதிப்பதால் அந்த பணம் அரசுக்கு வருவதில்லை. ஆகையினால் மொத்தத்தில் நட்டம் ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தை பொதுத்துறை அதிகாரவர்க்க முதலாளிகளும், அமைச்சர் பெருச்சாளிகளும் 90களில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே கொள்ளையடித்து வருகின்றனர். பாடி கட்டுவது, உதிரிப் பாகங்கள் வாங்குவது, ஏன் பயணச்சீட்டு அடிப்பது வரை இந்தக் கொள்ளை விருட்சமாய் வேர் விட்டிருக்கிறது.

இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, கேப் முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. விரைவுப் பேருந்து மட்டுமல்ல, நகரப் பேருந்துகளின் கட்டண உயர்வும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கிறது. ஆவடி, பூந்தமல்லியிலிருந்து பாரிமுனைக்கும், பாரி முனையிலிருந்து தாம்பரத்திற்கும் வேலை நிமித்தமாக சென்று வரும் மக்கள் இனி கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். தோராயமாக 500 முதல் 1000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

5000, 10,000 ரூபாய் சம்பளத்தில் வாழும் மக்களின் மொத்த செலவு திட்டத்தில் போக்குவரத்து மட்டும் 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அல்லறும் மக்களுக்கு இது பேரிடியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு டீசல் விலையேற்றத்தினால் நட்டம் என்பதில் ஒரு உண்மையை மறைத்து வருகிறார்கள். மொத்த விலையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வரியாகச் செல்கிறது. இது மாநிலங்களுக்குத்தான் செல்கிறது என்றாலும் அதை குறைக்க யாரும் தயாரில்லை.

மேலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் அழிக்கப்பட்டு வேறு வழியின்றி மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இந்த செயற்கையான நகரமயமாக்கத்தின் விளைவுதான் எல்லா இடங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் இந்த அரசுதான் காரணம். கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் வாழ வைத்திருந்தால் இந்த அசுர போக்குவரத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இனி பேருந்து கட்டண உயர்வால் மக்கள் ரயில்களை மொய்க்கப் போவது உறுதி. ஏற்கனவே அப்படித்தான் நடந்து வருகிறது. ஆக ரயில்வே நிறுத்தங்களில் இனி வன்முறை, சண்டையில்லாமல் மக்களை திணிப்பதற்கு ஏகப்பட்ட போலீசு தேவைப்படும். அல்லது ரயில் கட்டணங்களையும் ஆம்னி பேருந்து அளவு உயர்த்தி விட்டால் பிரச்சினை இல்லை. அதையும் செய்தாலும் செய்வார்கள்.

அடுத்து மின்சார கட்டண உயர்வை அரசு அறிவிக்காது, ஒழுங்குமுறை ஆணையமே அறிவிக்கும் என்று தனக்கு சம்பந்தமில்லாதது போல ஜெயலலிதா தெரிவிக்கிறார். ஏற்கனவே கிராமங்களில் 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, நகரங்களில் 3 மணி நேரத்திற்கு குறையாத மின்வெட்டு, மின்சாரமில்லாமல் ஓட முடியாத விவசாயிகளின் பம்பு செட்டுக்கள், சிறு – நடுத்தர தொழில்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போது பட்ட காலிலே படும் என்பது போல கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வும் ஏறத்தாழ 30 முதல் 40 சதவீதம் இருக்குமென்று தெரிகிறது. அதன்படி 500 ரூபாய் கட்டியவர்கள் இனி 700 ரூபாய் கட்ட வேண்டும். 1000 ரூபாய் கட்டியவர்கள் இனி 1400 ரூபாய் கட்ட வேண்டும்.

பெரு நகர குடித்தன வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 7, 8 ரூபாய் வைத்து வாடகைக்கு விடுபவர்கள் இனி பத்து ரூபாய் என்று மாற்றப் போவது உறுதி. அதன்படி 100 யூனிட் மட்டும் பயன்படுத்தும் மக்கள் அதற்கென ரூ.1000 கட்ட வேண்டும். இது வீடுகளில்லாமல் வாடகைக்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு எத்தகைய துயரமென்பது விளக்காமலேயே புரியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தடையின்றி சலுகை விலையில் கொடுக்கப்படுவதும், ஷாப்பிங் மால்கள் முதலான பேரங்காடிகளுக்கு விரயமாக்கப்படும் மின்சாரமும்தான் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம்.

இவர்களுக்கு உரிய விலை வைத்தாலே மின்சார வாரியம் நட்டமின்றி செயல்பட முடியும். இது போக ஆளும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கும், கோவில் விழாக்களுக்கும் கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வசூலிக்க முடியும். இதையெல்லாம் விடுத்து சாதாரண மக்களது மடியில் கை வைக்கிறார் ஜெயலலிதா.

தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று நாடகமாடும் ஜெயலலிதாவின் நரித்தனத்திற்கு தினமலர், தினமணி, ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடக மாமக்கள் விளம்பரம் கொடுத்து அது உண்மை போல செய்திகளை வெளியடுகின்றனர். இலவச லாப் டாப், மிக்சி, பேன், கிரைண்டர், ஆடு மாடு போன்றவை கொடுப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டுமாம்.

எனில் இதை தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே? இத்தகைய இலவச திட்டங்களை மத்திய அரசு நிதி கொடுத்தால் மட்டும் அமல்படுத்துவோம் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்? தி.மு.கவிற்கு போட்டியாக ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாசிச ஜெயாவின் திட்டம். உண்மையில் இத்தகைய இலவசத் திட்டங்களெல்லாம் கொடுக்க கூடாது என்பதுதான் அவரது உட்கிடை. முதலாளிகளின் உலகில் வாழும் அவருக்கு சாதாரண மக்களது நலனைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? உண்மையில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னால் எதுவும் பிடுங்க முடியாது என்று ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டியதுதானே?

நட்டமடையும் பொதுத்துறைகளுக்காக கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக கூறும் ஜெயா அது போல ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித் தரும் மற்றொரு ‘பொதுத்துறையான’ டாஸ்மாக்கிற்கு கட்டண  குறைப்பை அறிவிப்பாரா? இல்லை அந்த வருமானத்தைக் கொண்டு பால், பேருந்து விலை உயர்வை செய்யமாட்டோம் என்றுதான் சொல்லுவாரா? முக்கியமாக அவரது பல இலவசத் திட்டங்களுக்கு அமுத சுரபி இந்த டாஸ்மாக்தான். அதனால்தான் ஏழை குடிகாரர்களின் வாந்திகளுக்கிடையே குடிக்க விரும்பாத பணக்காரர்களுக்காக எலைட் டாஸ்மாக்கை திறக்கப் போகிறார்.

அரசு வரிவருவாயைப் பெருக்க வேண்டுமானால் கார்களை வைத்திருப்போருக்கு வரி உயர்த்த வேண்டும், மாளிகைகளில் குடியிருப்போருக்கு வரி விதிக்க வேண்டும், பன்னாட்டு முதலாளிகள், தரகு  முதலாளிகள் இவர்களுக்களல்லவா அதிகம் வரி விதிக்க வேண்டும்? இத்தகைய வசதிகளெதுவும் இல்லாத வாழ்வை நடத்துவதற்கே அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மடியில் கை வைக்க வேண்டுமென்றால் என்ன காரணம்?

கல்வி, போக்குவரத்து, மருத்தவம் என அனைத்து துறைகளிலும் அரசை ஒழித்து விட்டால் அளப்பறிய பணம் தனியார் முதலாளிகளுக்கு போகும். அதற்காகத்தான் இந்த விலை உயர்வு. இது பாசிச ஜெயா மட்டுமல்ல, கருணாநிதி இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். என்ன தி.மு.க ஆட்சியிலிருந்தால் அது சத்தமில்லாமல் நடந்திருக்கும். பாசிச ஜெயா என்பதால் ஊரறிய பறையடித்து அறிவித்திருக்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இனி உழைக்கும் மக்கள் தமது மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த சுமையை அவர்கள் அடிமைகளைப் போல சுமந்து கழிக்கப் போகிறார்களா? இல்லை தளையை அறுத்து போராடப் போகிறார்களா?

ஓட்டுப் போடாதீர்கள், அதில் தீர்வில்லை, இந்த சமூக அமைப்பை மாற்ற புரட்சி நடத்த வேண்டுமென்று பேசினால் இதெல்லாம் வேலைக்காகாது என்று எல்லாம் அறிந்தவர் போல புறந்தள்ளும் நடுத்தர வர்க்கம் இனியாவது தனது முட்டாள்தனத்தை உணருமா?

பாசிச ஜெயா அறிவித்திருக்கும் இந்த உத்திரவுகள் ஒரு முன்னோட்டம்தான். நாடும், மக்களும் மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசப்படும் அங்கமாகத்தான் இந்த அறிவிப்புகள் பட்டவர்த்தனமாக வருகின்றன. என்ன செய்யப் போகிறோம்?

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

‘அக்லே காடி…. ஜானே வாலே…‘

அவைகளை பயணிகள் இரயில்
என்றுதான் சொல்கிறார்கள்.

திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து
பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே,
வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன.
இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில்
எந்தத் திசை என்று தெரியாமல்
கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.

பாட்னா எக்ஸ்பிரசில்
பாதுகாப்புடன் இறக்கப்படும் சுமைகளை
ஏக்கத்துடன் பார்த்தபடி
இடறி விழுந்து கால் உதறி நெளியும் முகங்கள்.

கோணியால் இறுக்கப்பட்ட பொதிகளில்
போய்ச் சேரும் முகவரி
தெளிவாய் இருக்கிறது.

தோலினால் போர்த்தப்பட்ட
தொழிலாளர்களின் உடம்பு
போய்ச்சேருமிடம் அறியாது
சுவரோரம் காத்துக் கிடக்குது.
வந்தவேகத்தில் அனைத்தையும்
வாரிப்போட்டது போல்
சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வெளியே
தலைகள் சரக்காய் குவிந்து கிடக்கிறது.

கூறுபோட்டு அனைத்துக் குரலையும்
திரும்பவும்,
பேருந்துக் கொன்றாய் திணிப்பதைப் பார்க்கையில்,
துடுப்பென கைகளை விலக்கி
‘ஒத்து… ஒத்து… அடுத்து
ஒரிசா புவனேஸ்வர் இரயில் வந்துருச்சு‘ – என
ஓடும் போர்ட்டர்களின் தீவிரத்தைப் பார்க்கையில்,
யாரிடம் கேட்பது என் சந்தேகத்தை
வந்தது சரக்கு ரயிலா? பயணிகள் இரயிலா?

___________________________________________________________

 – துரை.சண்முகம்.
புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

___________________________________________________________

சமகால அரசியலில் கருப்புப் பணம்!

43

து 2009-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நேரம்; அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டு நாட்டை அடகு வைக்கும் துரோகத்தனத்துக்கு ஆதரவாக அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டுகளை வினியோகித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்ட மன்மோகன்சிங் – சோனியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம் மத்தியிலும். ஈழத்தில் பச்சைத் துரோகம் இழைத்து லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை காவு கொண்ட  சோனியா-சிதம்பரம் + கருணாநிதி-மாறன்கள்-ஸ்டாலின்கள் கூட்டணி தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தன.

‘மக்கள் மத்தியில் இவ்வளவு குமுறலும் கொந்தளிப்பும் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை நிலவும், கொள்ளை அடிப்பதற்கான நமது முறை அடுத்து வரும்’ என்று மனப்பால் குடித்தபடி அகில இந்தியா அளவில் ‘ஊழல் எதிர்ப்பு போராளிகளாக’ பாரதீய ஜனதா கட்சியும், தமிழ்நாட்டில் ‘திடீர் ஈழத்தாயாக’ ஜெயலலிதாவும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு களத்தில் குதித்திருந்தார்கள்.

ஆனால், இவர்கள் எதிர்பாராத புரிந்து கொள்ள முடியாத, இன்னொரு உள்நீரோட்டம் மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது. இது வரை நாடு கண்டிராத புரட்சிப் புனலாகிய கரன்சி பாய்ச்சல்தான் அது.

அழகிரி பார்முலா என்று திமுக கச்சிதப்படுத்திக் கொண்ட ‘வோட்டுக்கு நோட்டு’ நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருந்தது. கரன்சி நோட்டு வெள்ளத்தின் தாக்கத்தைக் கண்ட அத்வானிக்கு வயிற்றைக் கலக்கியது. எங்கிருந்து இந்த பணம் வருகிறது என்று மோப்பம் பிடிக்கும் போதுதான் சிக்கியது வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடி ரூபாய்கள் விபரம். ‘அந்த பணம்தான் தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் மக்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக் கொடுக்க வந்து குதித்திருக்கிறது’ என்பதை பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெருச்சாளியான அவர் உணர்ந்து கொண்டார்.

அதிலிருந்து உதித்ததுதான் ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம், இந்தியாவை வளப்படுத்துவோம்’ என்ற அவரது முழக்கம். முழக்கங்களை விட கையில் உரசும் பச்சை நோட்டுக்கு என்றுமே மதிப்பு அதிகம். தமிழ்நாட்டில் உளவுத் துறை புலி ஜாபர் சேட்டைத் தவிர, மற்ற எல்லோருமே ஆச்சரியப்படும் வகையில் திமுக+காங்கிரசு கூட்டாளிகள் பல இடங்களில் கரை சேர்ந்தார்கள். மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடைசி நேரத்தில் சிறப்பு ஆபரேசன் மூலம் கரை ஏற்றி விடப்பட்டார். அந்த நன்றிக் கடன் அவருக்கு இன்றும் இருப்பதை அரசியலை கூர்மையாக அவதானிப்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

வெற்றிகரமாக ஐக்கிய முன்னணி – 2 அரசு அமைந்தது. வலது/இடது போலிகளின் முனுமுனுப்பு கூட இல்லாமல், அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்களின் முற்போக்கு ஆதரவுடன், தன்னை விஞ்ச ஆளில்லை என்று காங்கிரஸ் ஆளும் கட்சியாக இறுமாந்து அரசாங்கத்தை அமைத்தது.

ஆனால் பூதங்களை வெகுநாட்களுக்கு மூட்டைக்குள் கட்டி வைத்திருப்பது நடைமுறையில் சிரமமாகவே இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் பத்திரிகைகளிலும், நீதிமன்றங்களிலும்,  மக்கள் மத்தியிலும் பேசப்பட ஆரம்பிக்க மத்திய அரசின் அதிகார மையங்களுக்கும் பேச்சளவிலாவது அதில் ஆர்வம் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஜெர்மனி லிச்டன்ஸ்டெயின் நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை விலை கொடுத்து வாங்கி தொடர்புடைய நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதில் இந்தியர்களின் பட்டியல் இந்திய அரசு விரும்பாமலேயே அதனிடம் வந்து சேர்ந்தது. ‘விவரங்களை பொதுவில் வெளியிட்டால், உலக அரங்கில் நமது பெயர் கெட்டு போகும்’ என்று இல்லாத நல்ல பேருக்கு சோனியாவின் வழிகாட்டலில் நடக்கும் காங்கிரசு அரசு வக்காலத்து வாங்கியது.

பொருளாதார நெருக்கடியால் திணறிக் கொண்டிருந்த அமெரிக்க அரசு சுவிஸ் வங்கிகளின் கைகளை முறுக்கி அந்நாட்டு சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அங்கு கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டது. அதே போன்று சுவிஸ் வங்கியில் இருக்கும் கணக்கு விவரங்களை கேட்டு வாங்குவதற்கான தைரியத்தையாவது கடன் வாங்கவும் மனம் வரவில்லை மன்மோகன் சிங் என்ற ‘நல்லவரின்’ தலைமையில் இயங்கும் அரசுக்கு.  இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு, நீதிபதிகளின் கிடுக்குப்பிடி கேள்விகள் என்று அரசாங்கமும், பணமுதலைகளும் வயிறு கலங்கி கொண்டிருந்த நேரம்.

இரண்டாவது இடி இன்னொரு திசையிலிருந்து வந்தது. ‘எந்த துறையில் யார் அறுவடை செய்வது’ என்ற திமுக உள்கட்சி போட்டியில் தயாநிதி மாறனுக்கு தொலைதொடர்பு துறை என்ற கறவைப் பசுவின் மடி மறுக்கப்பட்டு ஆ ராசா பால் கறக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அதனாலோ, அல்லது 1.7 லட்சம் கோடி ரூபாய் வளத்தை கொள்ளை அடித்துக் கொண்ட நிறுவனங்களிடையே இருந்த காய்ச்சலினாலோ, நீரா ராடியா என்ற கார்ப்பரேட்  தரகர் அரசியல் தலைவர்களுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், கார்ப்பரேட் பத்திரிகையாளர்களுடனும் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுக் கேட்பு பதிவுகளில் சில வெளியாயின. திமுக தொடர்பான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் தொடர்புள்ள உரையாடல்கள் மட்டும் கசிய விடப்பட்டன. (இது எப்படி கசிந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது). நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் மற்ற உரையாடல்களில் என்னென்ன ‘போர்த் தந்திரங்கள்’ வகுக்கப்பட்டன என்பதெல்லாம் தில்லியின் ஏதோ ஒரு நீதிமன்றத்தின் பாதுகாப்பான கோப்பு அறைகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையில் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை மூலம் 2G ஊழல் விவகாரம் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உள்ளானது. 2010-ன் இறுதியில் ஆ ராசா அமைச்சர் பதவி இழந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு சில அரசு அதிகாரிகளும், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளும், கனிமொழியும் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் திடீரென்று மாயத்தினால் கடமையை உணர்ந்து  செயல்பட்டதில், நோட்டு வெள்ள ஓட்டத்துக்கு தடுப்பணைகள் போடப்பட்டு கருணாநிதியும் அழகிரியும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு 5 ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஊழல் ராணி ஜெயலலிதா அதிகாரத்துக்கு வருவதற்கான பாதை வகுக்கப்பட்டது.

இப்படி பாரத தேசத்தில் தருமம் கெட்டு அதர்மம் தலை விரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தேசிய வானில் தோன்றியது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் புரட்சி நடத்தி பூலோக சொர்க்கத்தை நிறுவி விட்டு அதே முறைகளைக் கையாண்டு பாரத தேசம் முழுவதும் காந்தியின் ராமராஜ்யம் நிறுவ முன் வந்தார் அண்ணா ஹசாரே.

2011 ஏப்ரல் மாதம் அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல்லி தில்லி வந்ததுமே உயர்நிலைக் குழுவில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அணி வகுத்தனர். (10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளாவுக்கு அத்தகைய கௌரவம் கிடைக்கவில்லை, என்ன இருந்தாலும் அண்ணா நம்ம ஆள் இல்லையா!) பேச்சு வார்த்தை பரபரப்புகளுக்கிடையே இடி முழக்கமென அண்ணா வெளியிட்ட அச்சுறுத்தல்களில் நாடே அதிர்ந்தது. ‘நான் சொன்னபடி கேட்கவில்லைன்னா அழுதுருவேன், ஆமா! ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் நிறைவேத்தலைன்னா சாப்பிடாம இருந்துருவேன்!’ போன்ற அவரது தர்ம ஆவேசங்களில் மக்கள் நெக்குருகிப் போனார்கள்.

அண்ணா உண்ணாவிரதம் – சீசன் 1 வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, சீசன் 2-வுக்கு ஆகஸ்டு 15 என்று நாள் குறிக்கப்பட்டது. சீசன் 1-ன் வெற்றியின் மூலம் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்காக அண்ணா குழுவினரும் அரசாங்க குழுவினருமான ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. (அப்படி ஒரு சட்டம் இல்லாமலேயே நடந்து கொண்டிருந்த 2G வழக்கும், கறுப்புப் பண வழக்குகளும் இந்த உண்ணாவிரத பரபரப்புகளில் மறக்கடிக்கப்பட்டன). 2G ஊழலில் பெரும் பணம் சம்பாதித்த பன்னாட்டுக் கம்பெனிகள் பற்றியோ, உள்நாட்டுத் தரகு முதலாளிகள் பற்றியோ, இதன் மூலம் அடித்த தேட்டையை வெளிநாட்டில் கறுப்புப் பணமாக பதுக்கிய முதலைகள் பற்றியோ அண்ணாவுக்கோ அவரது குழுவினருக்கோ கவலையே இல்லை போல் தோன்றியது. அதைப்பற்றி அவர்கள் பேசவே இல்லை.

இதற்கிடையே அண்ணாவின் மேடையில் போதிய அளவுக்கு ‘போகஸ்’ கிடைக்காத காரணத்தால் கறுப்புப் பண ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பித்த ‘கறுப்புப் பண திலகம்’ பாபா ராம்தேவ் கூட பிரச்சினையைப் பற்றி குறிப்பாக பேசாமால் பொதுவாக பேசி கிச்சு கிச்சு மூட்டினார். கடைசியில் சில போலீசுகாரர்களை ராம்லீலா மைதானம் பக்கமாக காங்கிரசு அனுப்பியதும் ராம்தேவ் சுடிதார் அணிந்து ‘சீதாதேவாக’ உருமாறி க்ரேட் எஸ்காப்பானவர் தான் – இப்போது வரை போன இடமும் தெரியவில்லை மறைந்த தடமும் தெரியவில்லை.

மக்களின் கவனம் அண்ணா அண்ட் கோவின் குணச்சித்திர நடிப்பில் இருந்த இந்த நேரத்தில் இன்னொரு தளத்தில் அதிசயப்படும் இன்னொரு சாதனை நடந்து கொண்டிருந்தது.

1.)     2010-11-ல் எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்தது ($30 பில்லியன் – 1,35,000 ரூபாய்கள்). ஆனால் BSE-500 நிறுவனங்களின் எஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 11% மட்டும்தான் அதிகரித்திருந்தது ($1.38 பில்லியன் – 6,100 கோடி ரூபாய்கள்).

அதாவது சுமார் 1,29,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி அதிகரிப்பு சிறு-நடுத்தர நிறுவனங்களின் சாதனையால் நடந்து அதற்கான அன்னிய செலாவணியும் நாட்டுக்குள் பாய்ந்து வந்திருந்தது.

2.)     2010-11-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு $22 பில்லியன் (99,000 கோடி ரூபாய்) என்று அரசாங்க புள்ளி விவரங்கள் சொல்ல, உலகளாவிய நிதி பாய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரங்கள் $4.5 பில்லியன் (18,000 கோடி ரூபாய்) மட்டுமே இந்தியாவுக்குள் வந்ததாக சொல்லின.

அதாவது சுமார் 81,000 கோடி ரூபாய் அளவுக்கான ஓட்டை கணக்குகளில் தெரிகின்றது அல்லது புள்ளிவிவரங்கள் பொய் சொல்கின்றன.

3.)  2010-11ல் உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $13 பில்லியனிலிருந்து (71,000 கோடி ரூபாய்) $29 பில்லியன் (1,36,000 கோடி ரூபாய்) ஆக அதிகரித்தது. இதிலும் BSE 500ல் வரும் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு $1 பில்லியனுக்கும் குறைவு (3,700 கோடி) என்று தெரிய வருகிறது. மீதி $15 பில்லியன் (68,000 கோடி அதிகரிப்பு எங்கிருந்து வந்தது?)

4.)  2010-11-ல் தாமிர உபகரணங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் 8,500 கோடி ரூபாய்களிலிருந்து 36,700 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 2011-12-க்கான ஏற்றுமதியில்  ஏற்பட்ட இந்த வீக்கத்தைக் காட்டி மன்மோகன் கும்பல் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தனர். 2011 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஏற்றுமதி 53% அதிகரித்தது, ஜூலை மாதம் மட்டும் 81% அதிகரித்திருந்தது (அன்னா சீசன் 1க்கும் அன்னா சீசன் 2க்கும் இடைப்பட்ட காலம் இது).

வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளால் இந்த பண மழையை நம்ப முடியவில்லை. ‘ஏற்றுமதி எந்த நேரத்தில் குறைந்து விடும். ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 20%ஐ தாண்டாது’ என்று வர்த்தக அமைச்சக செயலர் ராஜீவ் குல்லார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஏற்றுமதி மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் – ஏறக்குறைய புதைமணலில் சிக்குண்டு கிடக்கும் நிலையில் ஆளே இல்லாத டீக்கடையில் இந்திய தரகு முதலாளிகள் மிகப் பொறுப்புடன் டீ ஆற்றியுள்ள சாதனையைக் கண்டு வர்த்தகத் துறை அமைச்சகமே அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறது.

இப்படி கடந்த 18 மாதங்களாக இந்திய பொருட்களை வாங்குவதிலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் வெளிநாட்டு மக்களுக்கு எப்படி திடீர் ஆர்வம் ஏற்பட்டு விட்டது? இதற்கும் தில்லியில் நடக்கும் அண்ணா-ராம்தேவ் சர்க்கஸூக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

2G ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், எஸ்பேண்ட் ஊழல், கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளை என்று பல்வேறு வகைகளில் சுருட்டப்பட்டு கைமாறிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பதுங்கிக் கிடப்பதாக  மதிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி நமது வலையுலக பொருளாதார புலிகள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

சதுர அடி 1000 ரூபாய் வீதம் 2,400 சதுர அடி நிலம் வாங்கும் போது, மொத்த தொகையான 24 லட்சம் ரூபாய்களில் 10 லட்சம் காசோலையாக, வெள்ளைப் பணமாக கொடுக்கப்பட்டு, அதற்கேற்ற முத்திரைத்தாள் வரி, வருமான வரியும் செலுத்தி விட்டு, மீதி 14 லட்சம் ரூபாயைக் கணக்கில் காட்டாமல் கைமாற்றிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமான இந்தப் 14 லட்சத்தை 1000 ரூபாய் கட்டுகளாக ஒரு மஞ்சப் பைக்குள் போட்டு கக்கத்தில் அடக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். இது தான் கருப்புப் பணம்.

மேலே உள்ளதைப் போல் மிக எளிமையாகவும் மொக்கையாகவும் – சரியாகச் சொல்வதானால் ஷங்கர் பட திரைக்கதை பாணியிலும் – தான் ஐடி துறையில் வேலை செய்யும், பேஸ்புக்கில் இயங்கும், அண்ணா ஷோக்குகள் புரிந்து கொள்கிறார்கள். இது தான் மெழுகுவர்த்தி பிடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் டக்கு.

ஆனால் இது எதார்த்தத்தில் சிக்கலான பல முடிச்சுகள் கொண்டது. ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்,

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை சதுர அடிக்கு 5 காசு என்ற சலுகை  விலையில் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒதுக்குகிறது அம்பிகளின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் குஜராத் அரசு. ஒரு சில மாதங்களுக்குள் அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலத்தை சதுர அடிக்கு 120 ரூபாய் என்ற வீதத்தில் “சட்டப்பூர்வமாகவே” விற்று வளத்தைப் பெருக்குகிறது அந்த நிறுவனம். இதற்குப் பெயர் என்னவென்று கேட்டாள் துக்ளக் சோ ‘வளர்ச்சி’ என்பார். நாம் கொள்ளை என்கிறோம். போகட்டும். பல லட்சம் சதுர அடிகள் நிலம் கைமாறும் போது ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் கருப்பில் வாங்கப்பட்டாலும் பணம் பல நூறு கோடி ரூபாய்கள் வரும். இவ்வளவு பணத்தை ரொக்கமாக மஞ்சப் பைக்குள் வைத்தா கையாள்கிறார்கள்? இல்லை.

இங்குதான் வருகின்றன வெளிநாட்டு கருப்புப் பண வங்கிகளின் சேவை. விரல் நுனியில் அழுக்கு படாமல், வாங்குபவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணிலிருந்து விற்பவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.

இப்படி வெளிநாட்டில், கணக்கில் காட்டாமல், நாட்டு அரசுக்கு தெரியாமல் பணம் வைத்துக் கொள்பவர்கள் அடுத்தடுத்த கார்ப்பரேட் வளர்ச்சிக்கு அந்த பணத்தை சுழற்சியில் விட்டுக் கொள்வார்கள்.

இந்தியாவிலிருந்து உப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அரசு உப்பு ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 20% ஊக்கம் என்று ஒரு திட்டம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம்ம கருப்புப் பணக்காரர் உப்பு நிறுவனம் ஒன்றில் பங்காளியாக சேர்ந்து கொள்வார்.

வெளிநாட்டில் உப்பு வாங்குபவருக்கு ஒரு டன் உப்பு $100க்குப் பதிலாக $500 என்று இன்வாய்ஸ் செய்து 1000 டன் ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டுக்காரருக்கு கூடுதல் தொகையான $4,00,000ஐ தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி விடுவார். $5,00,000 அன்னிய செலவாணி ஏற்றுமதி வருமானமாக நாட்டுக்குள் வருகிறது.

அதற்கான $1,00,000 ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்வார். ஏற்றுமதி வருமானம் என்பதால் வருமான வரியும் கட்ட வேண்டாம். உப்பு நிறுவனத்துக்கு மற்ற செலவுகள் ஏதும் இல்லாததால் பெரும்பாலும் லாபமாக இந்திய வங்கிக் கணக்கில் சேர்ந்து வெள்ளை ஆகி விடும். அந்தப் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு, நிலம் வாங்குவதற்கு என்று நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரி விடுப்பு, நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று ஒரு திட்டம் வந்ததும், அந்த திட்டத்திற்கு தனது சுவிஸ் பணத்தை மொரீசியசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் வெளிநாட்டு முதலீடாக கொண்டு வருவார். ஒரே கல்லில் பல மாங்காய்கள்.

கொஞ்சம் திரைப்பட பாணியில் உதாரணம் சொல்லப் போனால், தனது எதிரியைத் தீர்த்துக் கட்ட வாடகைக்குக் கொலையாளியை அமர்த்தி அவருக்கு பணமாக சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தி தன் மீது சுட்டும் தடயங்களை மறைத்துக் கொள்ளலாம்.

இப்படி சட்ட விரோதமாக நாட்டை ஏய்ப்பதற்கு நூற்றுக் கணக்கான கதவுகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் பணம் திறந்து விடுகிறது. இந்த பணம் அனைத்தும் சுவிஸ் வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகங்களில் கரன்சியாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள் இல்லை. இந்த பணம் சுழன்று கொண்டே இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான இணை பொருளாதார நடவடிக்கைகளை செலுத்துகிறது.

இந்தியாவின் இணைப் பொருளாதாரத்தின் அளவு மட்டுமே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கு இருக்குமென்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 – 40 லட்சம் கோடிகள் இதில் புரள்வதாகவும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண் குமார் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் அப்படியே ஒரு இரகசிய நிலவறைக்குள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்ட பச்சை நோட்டுகள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இதுவொரு இணைப் பொருளாதாரம். நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆப்சைட்டில், ஆண்டுக்கு சில மாதங்கள் ஆன் சைட், மனதை உழப்பும் அலுவலக அரசியல் என்றெல்லாம் போராடி ஒரு ஐடி துறை ஊழியர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதை  சிறுத்துப் போகச் செய்து விடும் சித்து விளையாட்டு இந்த இணை (parallel) நிதி பாய்ச்சல். 40 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கலாம் என்று திட்டம் போட்டால் மேற்படி கருப்புப் பணத்தில் மிதக்கும் ஸ்கார்பியோவில் பறக்கும் அழகிரி பார்முலா அரசியல் வாதிகள் அந்த பிளாட்டின் விலையை 80 லட்சத்துக்கு ஏற்றி விடும் பணப் பாய்ச்சலைக் கொண்டு வந்திருப்பார்கள்.

ஐடி துறையினருக்கே இந்த கதி என்றால் மாதம் முழுவதும் போராடி 6,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த கடலில் எப்படி நீந்தி கௌரவத்துடன் வாழ முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கடந்த 18 மாதங்களில் ஸ்விஸ் பாதுகாப்பு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த கணக்குகள் இடம் மாற்றப்படும் பேரலைகளின் தெறிப்புகள்தான் நாம் பார்த்த ஏற்றுமதி அதிகரிப்புகளும், முதலீட்டு அதிகரிப்புகளும். அந்த பெரு வெள்ளத்தின் சில துளிகள் கடந்த 18 மாதங்களில் போர்வைகள் போர்த்துக் கொண்டு சுவிஸ் வங்கிகளிலிருந்தும், மற்ற வரி ஏய்ப்பு மையங்களிலிருந்தும் விடுபட்டு வந்திருக்கின்றன.

அதற்கு ஒரு புகை மூட்ட மறைப்புதான் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் நடத்தி வரும் நாடு தழுவிய ஊழலுக்கு எதிரான போராட்டங்கள். அவற்றில் பெரும்பகுதி இடம் மாற்றப்பட்டு விடுவது வரை அண்ணா சீசன் -2, சீசன் – 3 என்று தொலைக்காட்சி மகிழ்வூட்டல்கள் தொடரும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

ஆக, இந்த முகமூடிகளின் பின்னே கைகட்டி வாய் பொத்தி மெழுகுவர்த்தி ஏந்திச் செல்வதல்ல தீர்வு. மொத்த அமைப்பு முறையையும் மாற்றி அமைக்க உளிகளை கையில் ஏந்துவதே தேவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! உலகமும் அந்த திசையில்தான் செல்கிறது. ரோம், கிரீஸ், அமெரிக்காவென்று உலகெங்கும் இழப்பதற்கேதுமில்லாத மக்கள் தெருவில் இறங்கியிருக்கிருக்கிறார்கள். நாம் எப்போது இறங்கப் போகிறோம்?

______________________________________________________

–              அப்துல்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]